Category: சிறுகதை

சிறுகதை – கருணாகரன் ( இலங்கை ) – வடகாற்று

சிறுகதை

 

கருணாகரன் ( இலங்கை )

 

வடகாற்று

 

 

 

 

 

 

 

 

 

 

 

பனி அதிகமாக கொட்டிக் கொண்டிருந்த இலையுதிர்கால நாளொன்றின் முன்னிரவில், பாரிஸ் நகரத்தின்Rue De Ponthieu , 08. Champs Elysées பகுதியில் இருக்கும் Beauchamps விடுதியில், எதிர்பாராத விதமாக ஒரு போர்த்துக்கல் நாட்டுக்காரரைச் சந்தித்தான் தேவன். அந்தச் சந்திப்பை இருவரும் எதிர்பார்க்கவில்லை. ஒரு பழுப்பு வெள்ளையருக்கும் ஒரு ஆசியக் கறுப்பனுக்குமிடையிலான சந்திப்பு. ஒரு அகதிக்கும் ஒரு விருந்தாளிக்குமிடையிலான சந்திப்பு அது. எதிர்பாராத சந்திப்பு.

 

அவன் வேiலையை முடித்து தங்குமிடத்துக்கு புறப்பட ஆயத்தமாகியபோது வரவேற்புப் பகுதியில் யாரோ ஒருவர் அவனைப் பார்த்துச் சிரித்தார். முதலில் அவன் அதைச் சரியாகக் கவனிக்கவில்லை. ஒரு கணம்தான். மின்னல்போல யாரோ ஒருவர் தன்னைப் பார்த்துச் சிரிப்பதாகத் தோன்றியது. கூர்ந்து பார்த்தான். ஒரு வெள்ளையர் சிரித்துக் கொண்டிருந்தார். அறிமுகச் சிரிப்பு. சிநேகத் தொனி. அமைதி நிரம்பிய ஆழமான முகம். விரிந்த கண்கள். பருத்த மூக்கு. ஆனால், உயரத்துக்கு ஏற்ற உடலில்லை. மெல்லிய தோற்றம். ஆனால் ஒல்லி அல்ல. யாராக இருக்கும்? வாடிக்கையாளரோ, அல்லது எங்காவது வேலை செய்யும்போது அறிமுகமானவரா என்று ஞாபகத்தில் தேடினான். ம்ஹ_ம். பிடிபடவேயில்லை. எத்தனை இடத்தில் வேலை செய்திருக்கிறான். அந்த இடங்களில் எல்லாம் எத்தனையோ பேரைச் சந்தித்திருக்கிறான். ஒன்றா, இரண்டா நினைவில் வைத்துக் கொள்வதற்கு? எல்லோரையும் அப்படி நினைவில் வைத்திருக்கத்தான் முடியுமா? இதென்ன ஊரா, மணிக் கணக்காகக் கதைத்து மனதில் ஒவ்வொருவரும் கதிரை போட்டு உட்கார்ந்து கொள்வதற்கு?

 

அந்த வெள்ளையரே அவனுடன் பேச்சைத் தொடங்கினார். “நீங்கள், சிறிலங்காவைச் சேர்ந்தவரல்வா?“

 

பொதுவாக வெள்ளையர்கள் அறிமுகமில்லாத வெளியாட்களிடம் தேவையில்லாமல் பேசுவது குறைவு. இப்போது அந்த வெள்ளையர் அவனை விசாரித்தபோது அவனுக்கு முதலில் ஆச்சரியமாக இருந்தது. அவன், “ஆம்” என்று தோள்களைக் குலுக்கித் தலையை அசைத்தான். அப்படி தான் தோள்களைக் குலுக்கியது செயற்கையானதோ என்று உடனே பட்டது. அது தேவையற்றது என்றும் தோன்றியது. அதைவிடத் தேவையில்லாதது, தான் சிறிலங்கன் என்று சம்மதித்தது. வேண்டுமானால் இலங்கையன் என்னறு சொல்லியிருக்கலாம்.

 

“நான் போர்த்துக்கல் நாட்டுக்காரன். ஆனால் அண்மையில்தான் சிறிலங்காவில் இருந்து வந்தேன்” என்றார், அவர். அவன் ஆச்சரியத்தால் தடுமாறினான். இலங்கையிலிருந்து இப்போது வரும் ஆட்கள் குறைவு. திருமணத்துக்கென்று யாராவது மணப்பெண்களாக வந்தால் சரி. அப்படி அங்கேயிருந்து வந்தாலும் அவர்களை சந்திப்பது அபூர்வம். எங்காவது கல்யாண வீட்டில் பார்க்கலாம். அல்லது யாருடையவாவது பிறந்த நாட்கொண்டாட்டங்களில் காணலாம். அதுவும் அரிது. அவன் கொண்டாட்டங்களுக்கு அந்த நேரங்களில் போவதில்லை.  ‘கார்ட்’ கிடைக்காதவனைச் சாதி குறைஞ்சவனைப் பார்க்கிறமாதிரிப் பார்;ப்பார்கள். அதுவும் இவ்வளவு நாளாக ‘கார்ட்’ எடுக்கமாட்டாமல் இருக்கிறதைக் கேள்விப்பட்டால் ஏதோ ஏலாதவாளி எண்டு நினைத்துக் கொண்டு ஆயிரம் கதைகள், ஆலோசனைகள், விசாரணைகள் எல்லாம் நடக்கும். அதனால், எதற்காக இந்த வம்பெல்லாம் என்று ஒதுங்கிக் கொள்வான். இப்படி ஒதுங்கிக் கொண்டால் ஊரிலிருந்து யார் வந்தார்கள், நாட்டிலிருந்து எப்போது வந்தார்கள் என்றெல்லாம் எப்படித்தெரியும்? அதைவிட, யுத்தம் தொடங்கிய பிறகு ஊரிலிருந்து யாரும் வந்ததாகவும் இல்லை.

 

 

 

 

 

 

 

சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோது ஊரில் கீரிமலைக்குக் குளிக்கப் போறது மாதிரி, அல்லது கசூரினா பீச்சுக்குப் போகிறதைப்போல சனங்கள் பிரான்ஸிலிருந்து நாட்டுக்குப் போய்வந்தார்கள். ஊரிலிருந்து அம்மா பயித்தம் பணியாரம் தொடக்கம், மிளகாய்த்தூள், அப்பளம், பருத்தித்துறை வடை, நல்லெண்ணைப் போத்தல், புழுக்கொடியல்மா என்று எல்லாவற்றையும் கொடுத்து விட்டாள். அவனுக்குத்தான் ஊருக்குப் போகும் பாக்கியம் கிடைக்கவில்லையே. மறுபடியும் யுத்தம் தொடங்கிய பிறகு ஊர்ப்புதினத்தை அறியவே கஸ்ரமாகி விட்டது. என்னதான் நூறு பத்திரிகைகள் நாட்டுப் புதினத்தை எழுதிக் குவித்தாலும் அங்கேயிருந்து வருகிறவர்கள் சொல்லும் கதைகளைப் போல வருமா? இப்போது இந்தா வந்திருக்கிறான் இந்தப்  பாவி. கொடுத்து வைத்த பிறவி. சொந்த நாட்டுக்கு அந்த நாட்டுக்காரன் போக முடியாது. ஆனால் யாரோ ஒரு நாட்டுக்காரன் அங்கே போய் வந்திருக்கிறான். இப்போது நினைத்தாலும் போகலாம் வரலாம். யார்கேட்கப்போகிறார்கள்.  வெள்ளையர்கள் அங்கே போனால் இன்னும் தனி மரியாதை அங்கேயுண்டு.

 

என்னதான் சொன்னாலும் இந்த நிலைமை இன்னும் மாறவில்லை. தமிழரும் சிங்களவரும் அடிபடுவார்கள். ஆனால் இரண்டு பேரும் வெள்ளையர்களை மதித்து அவர்களுக்கு கீழே பண்பாக அமைதியோடு நடந்து கொள்வார்கள். அப்படி மதிப்பையும் மரியாதையையும் பெற்றிருப்பார் இவரும் என்று நினைத்தான் தேவன். எப்படியோ இலங்கையிலிருந்து அண்மையில் வந்தவர்களில் கடைசியாகப் பார்க்கும் ஆள் அல்லவா. அவன் “அப்படியா, மிகச் சந்தோசம். எப்போது அங்கிருந்து வந்தீர்கள்” என்று ஆவலோடு  கேட்டான்.

 

“பத்து நாட்கள். மறுபடியும் இரண்டு மாதங்களில் அங்கே திரும்பிச் செல்கிறேன்” என்றார் அவர். அவனால் அவர் சொல்வதை நம்ப முடியவில்லை. ஆனால், அவர் சொல்வது உண்மை. நம்பித்தான் ஆகவேண்டும். “மன்னிக்க வேண்டும். உங்களுடன் பேசலாமா? உங்களுக்கு ஏதும் அவசரமில்லையா?” என்று அவர் மிகத் தயவாகக் கேட்டார்.  அவருடைய பிரெஞ்சு உச்சரிப்பு அவர் பிரெஞ்சுக்காரர் இல்லை என்பதைக் காட்டியது. கண்கள் மிக அமைதியாகவும் தெளிவாகவும் இருந்தன. “ஓ.. தாராளமாக. எனக்கு நிறையச் சந்தோசம். அவசரம் ஏதமில்லை” என்றான் அவன். அவன் எதிர்பார்க்காத சந்திப்பு. அதுவும் வலிய வந்திருக்கிறது. நாட்டுப் புதினம், ஊர்ப்புதினங்களை அறியலாம். அதைவிட ஆள், இன்னும் இரண்டு மாதங்களில் திரும்பவும் இலங்கைக்குப் போகப்போவதாகச் சொல்கிறார். இதை விடலாமா? கையில் அல்லவா வந்து குந்தியிருக்கிறது அதிர்ஸ்ரம்.

 

“ஆட்சேபனை இல்லை என்றால் வாருங்கள், என்னுடைய அறையில் இருந்து பேசலாம்” அவனை அழைத்துக் கொண்டு அவர் மேலே சென்றார்.

 

02

 

தேவன், ஆறு ஆண்டுகள் நிரம்பிய பாரிஸ் வாசி. ஆனால் அகதி. இன்னும் ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்று நிம்மதியோடு தங்குவதற்கு ‘கார்ட்’ கிடைக்கவில்லை. அகதிக் ‘கார்ட்’ கிடைத்தாலே பாதிக்கிணற்றைத் தாண்டிய மாதிரி. ஆனால் அதற்கே வழியில்லை. அதற்காக எத்தனையோ ஏற்பாடுகளைச் செய்து கொண்டேயிருக்கிறான். எத்தனை ஆட்களைப் பிடித்திருக்கிறான். எவ்வளவு கெஞ்சுதல்கள்.  அவர்கள் இன்னும் ஒன்றையும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதாவது அவர்கள் அவனை ஏற்றுக் கொள்ள இன்னும் தயாராகவில்லை. அதற்காக அவன் சும்மா இருந்து விட முடியுமா? சும்மா இருந்தால் ஊரில் பட்ட கடன் தீருமா? ஊரிலிருந்து ஆயிரம் கோரிக்கைகளோடு வரும் தொலைபேசி அழைப்புகள் நின்று விடுமா? அந்த அழைப்புகளில் வரும் காசு என்று குரல்கள் இல்லாமற் போகுமா? அவன் விக்கிரமாதித்தனின் வம்சம். தோற்கவே முடியாது. வேதாளம் தோளில் இருந்தாலென்ன? மடியில் இருந்தாலென்ன? ‘கார்ட்’ கிடைக்கவில்லை என்பதற்காக பிரெஞ்சுக்காரர்ளோடு கோவித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பி விடுவதற்காகவா இங்கே வந்தான்?

 

பாரிஸ_க்கு வருவதற்கிடையில் பட்டபாட்டை விடவும் இப்போது படும் பாடுகள் ஒன்றும் பெரியதில்லை. அதைவிட எத்தனை பேருகக்குத் தண்ணிகாட்டி, எத்தனை தடைகளையெல்லாம் தாண்டி, எத்தைனயோ நாட்டுக்காரரை ஏய்த்து வந்த அவனுக்கு இப்போது மிஞ்சியிருக்கிறது ஒரு ‘கார்ட்’ விவகாரம் மட்டுமே. ஆனால் அது ஆறு ஆண்டுகளாக மிஞ்சியே  இருக்கிறது. ஒரு முடிவையும் தராமல் ஏய்த்துக் கொண்டேயிருக்கிறது. அவனுக்குப் பிறகு வந்தவர்கள் ‘கார்ட்’ எடுத்து, பிறகு சிற்றிஸனையும் பெற்று விட்டார்கள். அவனுடைய சனியன் இன்னும் நீங்கவேயில்லை. அம்மாதான் எவ்வளவு அர்ச்சனைகளை ஊரில் செய்து விட்டாள். கிருஸ்ணன் கோவில் அர்ச்சனையை விட சிவன் கோவிலில் செய்கிற அர்ச்சனைதான் சனீஸ்வரனுக்குப் பொருத்தம் என்று யாரோ சொன்னார்கள். அம்மா சிவன் கோவில்களாகவே திரிந்து அதையும் நிறைவேற்றினாள். ம்ஹ_ம், பலனில்லை. அவனுடைய கிரகபலனில், இப்போது ராகு நன்றாக  இல்லை என்று யாரோ ஒரு சாத்திரி சொன்னான்.  சனீஸ்வரன் முடிந்து இப்போது ராகுவுக்காக என்று அம்மா நடந்தாள். சனி, ராகு, கேது, செவ்வாய், வியாழன் என்று யாருடைய காலைப் பிடித்தாலும் காரியம் நிறைவேறவில்லை. எவருடைய உச்சியில் பாலை வார்த்தாலும் எதுவும் ஆகுவதாக இல்லை. அதற்காக சும்மா இருந்து விட முடியுமா? கூரையைப் பியத்துக் கொண்டு எந்தத் தெய்வமும் எதையும் கொடுக்காது என்று அவனுக்கு நன்றநாகத் தெரியும். இப்படி நாயாய் அலைகிறபோதே கருணையைக் காட்டவோ கண்ணைத் திறக்கவோ தயாராக இல்லாத போது அதெல்லாம் நடக்குமா?

 

பாரிஸில் அவன் எப்படியோ தண்ணி காட்டிக் கொண்டு, ஒரு ரெஸ்ரோரண்டில் கோழி வெட்டினான். பிறகு அங்கே நிற்க முடியாது என்றபோது பதினைந்து நாட் சம்பளத்தையும் விட்டு விட்டு கடையொன்றில் வேலை பார்த்தான். அங்கே சம்பளம் குறைவு.  பதிலாக கோழி மணமில்லை. தினமும் செய்கின்ற கொலை பாதகமும் இல்லை. அதைவிடக் கொஞ்சம் மரியாதையாக நடத்தினான் அந்த வெள்ளையன். வெ;ள்ளையன் என்று சொல்வதை அவன் எப்போதும் விரும்புவதில்லை. அது இனவாதச் சொல் என்று அவனுடைய எண்ணம். சிங்களவன், தமிழன் என்று சொல்லி பிறந்த ஊரையும் சொந்த நாட்டையும் விட்டு வந்ததைப்போல இங்கேயும் வெள்ளை, வெள்ளையன் என்றெல்லாம் சொல்லி இனவாதத்தைப் பரப்ப அவன் விரும்பவில்லை.  தங்களைக் கண்டு வெள்ளைகள் முகஞ்சுழிக்கிறார்கள் என்று பலர் சொல்லியிருக்pறார்கள். சிலருக்கு இது துக்கம். சிலருக்கு இது கோபம். அவனுக்கோ இது சிரிப்புத் தரும் சங்கதி.  அவர்கள் நம்மைப் பார்த்து முகம் சுழிப்பார்கள்தானே. தங்களுடைய இடத்தில் பங்கு போட யார் வந்தாலும் எவனாவது அதை கண்ணை மூடிக் கொண்டு வரவேற்பானா? தன்னுடைய வசதிகளை, வாய்ப்புகளைப் பகிர்ந்தளிக்க யாருக்குச் சம்மதம்?  சொந்த நாட்டிலேயே தரவேண்டிய பங்கைத் தராமல் ஓட ஓட விரட்டியடிக்கிறார்கள். இங்கே, யாருடையதோ நாட்டில் என்ன பூச்செண்டா தந்து வரவேற்பார்கள்? எப்படி இதையெல்லாம்  நம் ஆட்களுக்குச் சொல்லி விளங்கப்படுத்த முடியும்? வந்தோம். பேசாமல் பார்க்க வேண்டியதைப் பார்த்துக் கொண்டு போகிறதை விட்டுவிட்டு, இப்படி அவர்களோடு சட்டம், நியாயம் குற்றச்சாட்டு என்றெல்லாம் பேசிக் கொண்டால் முறைக்காமல் என்ன விருந்தா வைப்பார்கள்? இந்த மண்ணாங்கட்டிக் கதைகளால்தான், தனக்கு இன்னும் ‘கார்ட்’ கிடைக்கவில்லை என்று அவன் நினைத்தான். தன்னைப்போல ஆட்கள் பாதிக்கப்படுகிறதைப் பற்றி யாருக்குக் கவலையிருக்கிறது? இதில் இன்னும் ஆச்சரியம் என்னவென்றால், அவன் இப்படி யாரையும் இனம், மதம் என்று விரோதமாகப் பார்க்கிறதேயில்லை. அவனிடம் அந்தப் போதைகளும் இல்லை. ஆனால் அவனுக்குத்தான் எல்லாக் கொடுமைகளும் நடக்கின்றன. அவன்தான் எல்லாவற்றிலும் பாதிக்கப்படுகிறான். ‘வெள்ளையன், வெள்ளை. வெள்ளையள், அவன் இவன் என்று கதைக்கிறவர்கள் எல்லாம் எப்படியோ காரியத்தைப் பார்த்துக் கொண்டு போகிறார்கள். வெற்றி வாய்ப்புகள் எல்லாம் அவர்களை நோக்கியே குவிந்து கொண்டிருக்கின்றன.

 

கொழும்பில் நின்றபோதும் அவனையே பொலிஸ் கூடுதலான தடவைகள் பிடித்தது. ஒவ்வொரு முறையும் காசு இறைத்துத்தான் வெளியே வந்தான். காசை விட அதிகமாக கண்ணீரை இறைத்தான். ஆனால் காசுக்கிருக்கிற மரியாதையும் மதிப்பும் கண்ணீருக்கு வருமா? யாரும் அவனுடைய கண்ணீரைக் கண்டு கொள்ளவேயில்லை. அவனுடைய கண்ணீர், அவனுடைய குடும்பத்திலும் ஊற்றெடுத்தது. தண்ணீர்ப்பஞ்சமான அந்தக் கோடைகாலத்திலும் கண்ணீருக்கு அங்கே குறைவிருக்கவில்லை. அங்கே அம்மா கண்ணீரோடுதான் சோற்றைச் உண்டாள். அப்படியில்லை என்றால் இன்னும் கொழும்பில் தான் அவன் நின்றிருக்க வேண்டும். அப்படிச் சொல்வதையும் விட அவன் எங்காவது ஒரு சிங்களச் சிறையில் அடைபட்டிருக்க வேண்டும் என்பதே சரி;. எங்காவது சண்டையில் படையினர் கூடுதலாக அடிபட்;டால் அவனும் அடிவாங்கியிருந்திருக்க வேண்டும். எங்காவது குண்டு வெடித்தாலும் அதற்கு அவன் தண்டனையாக எதையாவது வாங்கித்தான் ஆக வேண்டியிருந்திருக்கும். அவன் இதெல்லாவற்றுக்கும் சம்மந்தமேயில்லை என்றாலும் யார் அதையெல்லாம் கேட்கப் போகிறார்கள்?

 

 

கொழும்பை விட்டு  பிரான்சுக்கு வெளிக்கிட்ட அந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தில் சந்தித்த நிகழ்ச்சிகளை எல்லாம் கணக்கில் வைத்தால் அது பெரும்பாயிரமாகவோ காப்பியமாகவோ இருக்கும். பாங்கொக்கொக்கில் பொலிஸ் இவனையே மோந்து பிடித்ததைப்போல கழுத்தில் பிடித்தது. அந்தப் பயணத்தில் அவனோடு பன்னிரண்டு பேர் இருந்தார்கள். அந்தப் பன்னிரண்டு பேரிலும் அவனுக்குத்தான் சனியன் தலைமாட்டடடில் நின்று கையைத்தட்டிக் கொண்டிருந்தது. ஆனால் அந்தக் கைதின் போது  அடியைத் தந்ததோடு பாங்கொக் பொலிஸ்காரர் விட்டு விட்டார்கள். நல்ல வேளையாகக் காசெல்லாம் கேட்கவில்லை. அடியென்றால் ஏதோ சாட்டுப் போக்குக்கு அடித்ததைப்போல அல்ல. ஒரு பரம விரோதியை நடத்துவதைப்போலவே அவர்கள் அடித்தார்கள். அது உலகத்தில் இருக்கும் எந்தப் பொலிஸ்காரனும் அடிக்க முடியாத அடி. இவ்வளவுக்கும் அவனை எதற்காகப் பிடித்தார்கள். எதற்காக அடித்தார்கள் என்றே அவனுக்கு இதுவரையில் தெரியாது. அவனோ அவனுடைய பரம்பரையைச் சேர்ந்த எவருமோ எந்த ஒரு பாங்கொக்காரருக்கும் மனதாலும் தவறிழைத்ததாக இல்லை. ஒரு தடவைகூட அவர்களைப் பகிடியோ மரியாதைக்குறைவாகப் பேசியதோ கூடக் கிடையாது.

 

பிடிக்கும்போது என்னவோ கேட்டார்கள், அல்லது எதையோ சொன்னார்கள். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை. அதையெல்லாம் அறியக்கூடியமாதிரி அவன் என்ன உலக ஞானமெல்லாம் தெரிந்த ஆளா. நாலு ஆறு பாஷைதான் தெரியுமா? ஊரில் சாதாரண ஆங்கிலத்தையே படிக்க முடியாமற் திண்டாடியவன் அவன். அவனுக்கு ஆங்கிலத்தைப் படிப்பிப்பதற்காக அவனுடைய ஐயாவிலிருந்து மாசிலாமணி மாஸ்ரர் வரையில்  எவ்வளவு பாடுபட்டார்கள். பத்தாம் வகுப்பிற்கிடையில் பதினாறு பேர் அவனுடைய ஆங்கிலத்துக்ககாகவே கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ராசையா மாமா கொழும்பில் சிங்களவர்களிடம்  அடிவாங்கிக் கொண்டு எழுபத்தேழுக் கலவரத்தில் ஊருக்கு வந்தபோது ஆங்கிலத்தோடு சிங்களமும் படிக்க வாய்ச்சிருக்கு என்று ஐயா நினைத்துக்கொண்டு, அவரிடம் கொண்டு போய்ச் சேர்த்தார். ஆங்கிலத்தை மண்டைக்குள் ஏற்றுவதற்கே பெரும்பாடாக இருந்தபோது இப்ப, இன்னொரு பாரமாய் சிங்களத்தையும் அதற்குள் தள்ளிவிடலாம் என்று முனைந்தார் ஐயா. ‘தனியே ராசையா மாமாவிடம் படிக்க முடியாது, யாராவது துணைக்கிருந்தாற்தான் சேர்ந்து படிக்கலாம்’ என்று அம்மாவை ஒரு மாதிரி சாதகப் படுத்தி அந்த வகுப்பில் இன்னும் ஐந்து பேராக, யோகன், அப்பன், கணேசலிங்கம்,  மனோ ஆகியோரையும் சேர்த்துக் கொண்டு கும்மாளம் போட்டான். அம்மா இதை அறிந்து ஒரு நாள் பேசியபோது ‘சிங்களம், இங்கிலிஸ் எல்லாம் தெரிஞ்சதால் என்ன, கொழும்பில சிங்களவர்களிடம் அடிவாங்காமலா ராசையா மாமா வந்தார்?’ என்று கேட்டு அம்மாவை மடக்கினான். தன்னுடைய அண்ணனை இப்படி கொஞ்சம் இளக்காரமாகச் சொன்னது அம்மாவுக்கு சற்று மன வருத்தமாக இருந்தாலும் அதை மறுத்துப் பேச அவளால் முடியவில்லை. அம்மாவை மடக்கி விட்டோம் என்ற பெருமையோடு அப்போது தப்பியிருந்தான்.

 

ஆனால் இதையெல்லாம் கொழும்பில் நின்றபோதே அவன் உணரத்தொடங்கினான். சிங்களம் தெரிந்திருந்தால் அவன் எவ்வளவு விளையாட்டுக் காட்டியிருப்பான். பொலிஸ்காரருக்குச்  சுத்தியிருக்கலாம். சிங்களப் பெட்டையளுடள் நட்புக் கொண்டாடியிருக்கலாம்.  சிலரை மடக்கியிருக்கலாம். ஆகக் குறைஞ்சது அவர்களோட எதையாவது பேசிப் பொழுதைப் போக்கியிருக்கலாம். அவர்களில் பலர் மிக நல்லவார்கள் என்று அவனே பார்த்திருக்கிறான். உண்மையாகவே பழகினால் நன்றாக உதவுவார்கள். அதைக்கூட அவர்களிடம் சொல்வதற்கு பாஷை தெரியாமற்போய்விட்டதே. சிங்களம் தெரிந்த பெடியள் அப்படி அவர்களை மடக்கிக் காரியம் பார்ப்பார்கள். பொலிஸ_க்கும் எதையோ சொல்லித் தப்புவார்கள். அப்போது தான் மட்டும் எதுவும் செய்ய முடியாமல் திணறித் திண்டாடுவதை கண்ணீரோடு உணர்ந்தான். ஆனால் என்ன செய்ய முடியும்? என்ன நாசமோ தெரியாது இந்தக் கண்ணீர் மட்டும் தொண்டையை அடைத்துக் கொண்டு எங்கிருந்தோ வந்து விடும். யாரும் மதிக்காத கண்ணீர். அது உண்மையில் தொண்டைக்குள்ளிருந்தா வருகிறது என்று கூட ஒரு தடவை யோசித்தான். இல்லையென்றால் எப்படி துக்கம் வரும்போது தொண்டை அடைத்து பேச்சே வரமாட்டேன் என்கிறது?

 

சொந்த நாட்டில் ஆங்கிலத்தையும் சிங்களத்தையும் படிக்கமுடியாமல் விட்;டவனுக்கு பாங்கொக் பொலிஸின் பாஷையா தெரியப்போகிறது? ஆனால் எல்லாப் பொலிஸ_க்கும் தெரிந்த உலகப்பொதுப் பாஷை ஒன்றிருக்கிறது அல்லவா. அந்தப் பாஷையினால் அவர்கள் பேசினார்கள். அவன் அதைச் செவிகளுக்குப் பதிலாக தன்னுடலால் வாங்கினான். அடியை வாங்கிக் கொண்டு வந்தபோது ஏஜென்ஸிக்காரன் சொன்னான் “அவங்கள் இந்த அளவில உன்னை விட்டிருக்கிறாங்கள். பாங்கொக் பொலிஸைப் பற்றி உனக்குத் தெரியேல்லை. பிடிச்சால் ஆளை எலும்பும் தோலும் வேறாக்கிப் போடுவாங்கள்” என்று. எதற்காக அவர்கள் அப்படியெல்லாம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அதைத் தெரிந்துதான் என்ன ஆகப் போகிறது?

 

இப்படி வழிநெடுகப் பிரச்சினைப்பட்டு,  ஆயிரந் துன்பப் பட்டு, ஏனடா ஊரை விட்டுக் கிளம்பினோம் என்ற ஞானம் பிறந்தவேளையில் எப்படியோ பாரிஸ் வந்து சேர்ந்தான். அதை விடவா இந்தக் ‘கார்ட்’ பெரிய சமாச்சாரம். ‘பார்க்கலாம், என்ன வாய்க்காமலா போகும்’ என்ற நம்பிக்கையோடு இன்னும் எத்தனையோ வேலைகளுக்குப் போக ஆயத்தமாக இருக்கிறான். சரி, எங்கே விட்டேன், அவன் வேலை செய்த கதையில் அல்லவா.

 

ஆனாலும் அங்கே- கடையில்- ஆறு மாதம் சுமாராகப் போனது. அப்படியே போனால் பரவாயில்லை என்று இருந்தபோது அந்தக் கடைக்காரன் ஏதோ பிரச்சினையில் சிக்கினான் என்று கடையைப் பூட்டினார்கள். கேட்டபோது பங்குப் பிரச்சினையென்றார்கள். வெள்ளைக்காரர்களும் இந்தமாதிரி சிக்கல்களில் எல்லாம் சம்மந்தப் படுவார்கள் என்று அவனால் நம்பவே முடியவில்லை. நம்பினால் என்ன விட்டால் என்ன, அவனுடைய வேலை போய்விட்டது. பிறகு வேறு வேலை. இப்படியே எங்கெல்லாமோ மாறிமாறி இப்போது இங்கே வந்து நிற்கிறான்.

 

03

 

போர்த்துக்கல்காரர் பாரிஸ_க்கு ஒரு நண்பரிடம் வந்திருக்கிறார். வந்தவர் அப்படியே அங்கே  ஒரு வாரம் தங்கியிருக்கிறார்;. அப்போதே அந்தச் சந்திப்பு நடந்தது. ஆனால், அவர்கள் அப்படி அகதியாகவும் விருந்தாளியாகவும் சந்திக்கவில்லை.

 

அந்த அறையில் அவன் வேறொரு நிலையில் நுழைந்தான். இதற்கு முன் அங்கே ஒரு பணியாளாகவே நுழைந்திருக்கிறான். பெரிய, விசாலமான அந்த அறையில், அவருக்கு எதிரில், மிக ஆயாசமாக உட்கார்ந்தான். அங்கே அவன் இப்போது விருந்தாளியாகவோ அல்லது விருந்தாளியின் நண்பராகவோ இருந்தான். அது அவனுக்கே வியப்பளித்தது. இதெல்லாம் நடக்கக் கூடிய காரியமா? எதுவோ நடக்கப்போகிறது? நல்லகாலம் ஏதாவது பிறக்கப் போகிறதோ என்று கூட ஒரு எண்ணம் வந்தது.

 

அவர் சிரித்தார். நட்பான  சிரிப்பு. ஈரம் மிகுந்திருந்தது அதில். அனுதாபமா என்றொரு பொறி தட்டியது. ஈழத்தமிழர் என்றால், அதுவும் இலங்கைக்குப் போய், அங்கே நிலைமையைப் பார்த்து வந்தபடியால், தன்னைப் பார்த்ததும் ஏதோ இரக்கம் தோன்றியிருக்கக் கூடுமோ. அப்படியிருக்காது, இவரைப் பார்த்தால் கண்ணியமானவரைப் போல தெரிகிறார். தவிர, அப்படியெல்லாம் இரக்கப்படவேண்டிய தேவை தன்னைப் பொறுத்து என்ன இருக்கு? “ஓகே, ப்ளீஸ், உங்கள் பெயரை அறியலாமா?”

 

“தேவன்”

 

அவர் தலையை ஆட்டினார். அவரிடம் நாட்டுப் புதினங்களைக் கேட்கவேண்டும் போல மனம் துடித்தது. அவர் இலங்கையில் எங்கே இருந்தார்? அங்கே எதற்காக இருந்தார்? அநேகமாக ஏதாவது ஒரு சர்வதேசத் தொண்டு நிறுவனப்பணியாகத்தான் இருந்திருப்பார். யுத்தம் தொடங்கியபிறகு கடந்த இருபது ஆண்டுகளாக  இந்த மாதிரி வெள்ளையர்கள் அல்லது வெளிநாட்டுக்காரர்கள் அங்கே தொண்டு நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.  அப்படியென்றால் எப்படியும் தமிழ்ப்பகுதிகளில்தான் இருந்திருப்பார். தமிழ்ப்பகுதியில் என்றால் வடக்கிலா, கிழக்கிலா? வடக்கிலென்றால் வன்னியிலா? வன்னியில் எங்கே? பரபரக்கும் மனதைக் கட்டுப்படுத்துவது எவ்வளவு சிரமம் என்பதை அப்போது உணர்ந்தான். அது பல முனைகளில் பல்லாயிரங்குதிரை வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தது. இல்லைத் தாவிக் கொண்டிருந்தது.

 

“என்னுடைய பெயர், ஜக்காற்ஸ் மன்றோலிற்ஸ். நான் இலங்கையின் வடக்கில் தொண்டு நிறுவனமொன்றில் இரண்டு ஆண்டுகளாக சேவைசெய்கிறேன். துயரம் நிரம்பிய நாட்களோடு அங்கே சனங்கள் அலைகிறார்கள்;. மன்னிக்க வேண்டும். அங்கே வாழ்க்கை இல்லை. அலைச்சல்தான் உண்டு. என் மனசிலும் இந்தத் துக்கமே நிரம்பியிருக்கிறது. கடவுளே..!”

 

அவர் பெருமூச்சு விட்டார். கண்கள் துக்கத்தில் தாழ்ந்திருந்தன. சற்று முன் அந்த முகத்திலிருந்த மலர்ச்சி எங்கோ பின்னகர்ந்து துயரத்தின் படலம் மெல்லிய நிழலாக அதில் படிந்திருந்தது. தேவன் தலையை ஆமென்பது போல அசைத்தான். ‘தேவையில்லாத யுத்தம். ஆனால் இதை யார் கேட்கப்போகிறார்கள்?’ என்று நினைத்தான் அவன்.

 

“ஏதாவது சாப்பிடுகிறீர்களா? மன்னிக்க வேண்டும். உங்களை நான் சிரமப்படுத்துகிறேனா?” என்றார் வெள்ளையர். குடிப்பதற்கான பானங்களை முன்னே வைத்தார். சாப்பிடுவதற்கான வறுவல்கள், பொரியல் எல்லாம் பெரிய தட்டில் வைக்கப்பட்டிருந்தன.  அவன் விருந்தாளியல்லவா. இந்த ஒரு நாளில், அதுவும் இதே இடத்தில், அவன் எந்தப் பதற்றமுமில்லாமல் இருக்கையில் முதுகைச் சாய்த்து இருப்பதென்றால் சும்மாவா? பானத்தை எடுத்துப் பருகினான். அது அவ்வளவாக அவனுக்கு ஒத்துக் கொள்வதில்லை. என்றாலும் அதில் அவனுக்கு விருப்பம். சமாளிக்கலாம் என்று நினைத்தான். இதைப்போல வாய்ப்பு இனி எப்போது வருமோ.  நான்கு ஆண்டுகளுக்கு முன்னர், இதேபோல ஒரு பிரெஞ்சுக்காரனின் எதிர்பாராத நட்புக் கிடைத்தது. அவனோடு சேர்ந்து …. தைக் குடித்திருந்தான். குடிக்கக் குடிக்க மிக நன்றாகவும் உற்சாகமாகவும் இருந்தது. ஆனால் அறைக்குப் போகவே முடியாதவாறு அது அவனைப் படாத பாடெல்லாம் படுத்தியது. வாந்தி எடுத்தே களைத்திருந்தான். ஆனாலும் அந்தப் பிரெஞ்சுக்காரனோடு நட்பு உள்ளவரையும் அவன் அதையே குடித்தான். அப்படியே வாந்தி எடுத்தும் களைத்தான். என்றாலும் அந்தத் தவனம் தீரவில்லை. இப்போது மீண்டும் அதைக் கண்டவுடன் இந்த அது நாக்கில் எழுந்து கூத்தாடுகிறது.

 

குடித்துக் கொண்டே தேவன் சொன்னான், “இல்லை, இல்லை. உங்களுடைய துக்கந்தான் எனக்கும். ஆனால் என்ன செய்ய முடியும்? நாங்கள் அங்கே மட்டுமல்ல, இங்கே வந்தும் அலைகிறோம். ஒன்றேயொன்றுதான், இங்கே உயிருக்குப் பாதுகாப்பிருக்கிறது. அங்கே அதுவும் இல்லை”

 

“உண்மைதான். உங்களுடைய துயரங்களின் கதையை நான் பதிவு செய்யவும் வெளியுலகில் அதைப்பேசவும் விரும்புகிறேன். என்னுடைய கடமைக்கு இது பொருந்தாது என்றபோதும் இதைச் செய்ய விரும்புகிறேன். விரும்பினால் நீங்களும் இதில் உதவலாம், உங்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால்..” என்றார் அவர். அவனால் என்ன  சொல்ல முடியும்? அவன் அகதி அந்தஸ்தைப் பெறுவற்காகவே எவ்வளவோ பாடுபட்டுக் கொண்டிருக்கிறான். இந்த நிலையில் இவர் இப்படிக் கேட்டால் என்ன செய்யமுடியும்? ஆனால் அவர் யாருக்காக உதவ விரும்புகிறார்? எங்களுடைய துயரங்களுக்காக தன்னுடைய சிரமங்களைப் பொருட்படுத்தாமல் உழைக்கவிரும்பும் ஒருவருக்கு எப்படி மறுப்புச் சொல்ல முடியும்? அதுவும் உலகெங்கும் சிதறி அகதியாக துயரக்கிடங்குகளில் உழன்று கொண்டிருக்கும் நமக்கு, யாருமே கவனிக்காமல் கை விடப்பட்டவர்களாக அலைந்து கொண்டிருக்கும் எங்களுக்கு இப்படித் தானாகவே உதவ யார்தான் வருவார்கள்? தன்னால் முடிந்த அளவுக்கு உதவலாம் என்று எண்ணினான். ஆனால், எப்படி?

 

“முடிந்த அளவுக்கு உதவலாம். எனக்கு இங்கே அகதிக் கார்ட் கூட இன்னும் கிடைக்கவில்லை. ஆறு ஆண்டுகளாக கேட்டுக் கொண்டேயிருக்கிறேன்”

 

“பிரச்சினையே இல்லை. உங்களுடைய இந்தமாதிரிக் கதைகளும் துயரமும் பிரச்சினைகளும்தான் எனக்குத் தேவை. நீங்கள் அதிகம் சிரமப்படத்தேவையில்லை. உங்களுடைய பிரச்சினைகளையும் அனுபவங்களையும் சொல்லுங்கள். ஆனால் உண்மையைப் பேசவேணும். அதுதான் முக்கியம்” அவர் இதைச் சற்று அழுத்திச் சொன்னார். அதிலும் அந்த இறுதி வாக்கியங்களை சற்று அழுத்திச்சொன்ன விதம் அவனுக்கு சற்றுச் சங்கடத்தைத் தந்தது.

 

எங்களுடைய ஆக்கள் தங்களுடைய காரியத்தைப் பார்க்க வேணும் என்பதற்காக ஏத்தி இறக்கியே எல்லாவற்றையும் சொல்வார்கள். இப்படிச் சொல்லி சொல்லி இப்போது உண்மையான நிலையையே விளங்க வைக்க முடியாத நிலைமைதான் எங்கும் என்றாகிவிட்டது. இதை அவன் அகதிக் கார்ட் எடுக்கப் போகும் இடத்திலிருந்து வேலை செய்யும் இடம்வரையிலும் உணர்ந்திருக்கிறான். பாதிக்கப்பட்ட இனமென்றால் இந்த மாதிரிக் குணமெல்லாம் வந்து விடும் போலிருக்கிறது. ஏறக்குறைய லிபியர்களும், பலஸ்தீனியர்களும் குர்திஸ்களும் இந்தமாதிரித்தான் நடந்து கொள்கிறார்கள்.

 

“நிச்சயமாக. உங்களுக்கு உண்மையாக நான் உதவுவேன்” அவன் உற்சாகமாகச் சொன்னான். சரக்கு அவனுக்குள்  தன்னுடைய வேலையை மெல்லக் காட்ட ஆரம்பித்திருந்தது. அந்த வெள்ளையர் அவனுடன் நட்பாகப் பேசினார்.

 

அவர் அவனை ஆழ்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். “நல்லது. உலகம் எவ்வளவுதான் அறிவு மயப்பட்டாலும் பிரச்சினைகள் பெருகியபடியேதானிருக்கு. பார்த்தீர்களா, நீங்களும் சொந்த நாட்டில் இல்லை. நானும் சொந்த நாட்டில் இல்லை. காரணங்கள் என்னவாகவும் இருக்கலாம். ஆனால், உண்மை அதுதான்”

 

“நீங்கள் சொல்வது மிகச் சரி. ஆனால் நீங்கள் எங்கே போனாலும் அதிகாரிகளாகவோ  மேலாளர்களாகவோதானிருக்கிறீர்கள். நாங்கள் அப்படியல்ல. எங்கள் நாட்டிலும் நாங்கள்  உங்களுக்குக் கீழே அடிமைகள்தான். இங்கேயும் நாங்கள் அடிமைகள்தான். அங்கேயும் நாங்கள் அப்படித்தான். நான் பார்த்திருக்கிறேன், உங்களை இன்னும் ஏதோ ரட்சகர்களைப்போலவே எங்களுடைய சனங்கள் பார்க்கிறார்கள். அதிகம் ஏன், அங்கே உங்களுடைய வாகனம் செல்லும்போது எங்களுடைய சனங்கள் தூசியைக் குடிக்கிறார்கள். ஆனால் நீங்கள் ஏஸியோடு போகிறீர்கள். எங்களுடைய ஒரு கவிஞன் சொன்னதைப்போல ‘முன்னூறு ஆண்டுகளுக்கு முன் ‘எங்கள் நிலத்தில் அவர்களுக்காய் உழுதோம் இன்று அவர்கள் நிலத்தில் அவர்களுக்காய் உழுகிறோம்’ என்று.  இதுதான் கதை”

 

அவர் நிமிர்ந்து உட்கார்ந்தார். புருவங்களை உயர்த்தி வாயைக் கோணி இறுக்கமாக வைத்துக் கொண்டு ஆச்சரியமாக அவனைப் பார்த்தார். அவனுக்குள் எரிமலைகள் குமுறத்தொடங்குவதை அவர் புரிந்திருக்க வேண்டும். “உண்மைதான்.  சொல்லுங்கள்” அவர் அவனை உற்சாகப்படுத்தினார்.

 

“இதற்குமேல் என்ன சொல்ல முடியும்?”

 

“அப்படியென்றால் யாரைக் குற்றம் சொல்கிறீர்கள்? அல்லது யாரில் தவறிருக்கிறது?”

 

“யாரில் குற்றம் சொல்வது என்பது முக்கியமில்லை. இதுதான் உண்மை. இதையே நீங்கள் அறிய வேணும். நீங்கள் மட்டுமல்ல எல்லோரும் அறிய வேண்டும். இந்த உண்மைக்குப்பின்னாலுள்ள கதை என்ன என்று பாருங்கள். அதற்குள்ளே இருக்கிற நீதியின்மையை, துயரத்தை, அலைச்சலை, கொடுமையை எல்லாம் பாருங்கள். அப்போது யாரெல்லாம் காரணம், என்னவெல்லாம் நடந்திருக்கின்றன என்றெல்லாம் புரியும்”

 

அவர் திடுக்குற்றார். இதைப்போல ஒரு தடவை அவரோடு கிழக்கில் ஒரு முதியவர் வாதிட்டார். அப்போது அவர் கிழக்கில்- மட்டக்களப்பில் சேவையாற்றினார். அங்கே இருந்த அகதி முகாமொன்றில் மன்றோலிற்ஸ் தன்னுடைய குழுவினரோடு உதவிப் பொருட்களை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது சனங்கள் பொருட்களைப் பெறுவதற்காக முண்டியடித்துக் கொண்டிருந்தனர்;. சனங்களின் குரல் இரைச்சலாகிக் கனத்திருந்தது. அந்தக் கனதியை எல்லாம் விட்டு தூரத்தில் மரநிழலில் ஒதுங்கியிருந்தார் ஒரு முதியவர். மன்றோலிற்ஸ் தன்னுடைய உதவியாளர் மூலமாக அவரை விசாரித்தார்.

 

“சொந்த நாட்டிலேயே பிச்சை எடுக்கிற மாதிரி இருக்கு. என்னால இதைத்தாங்கேலாது. அதுவும் வெள்ளைக்காரர்களாலதான் நாங்கள் இந்த நிலைமைக்கு வந்திருக்கிறம். இதுக்குப் பிறகு இப்பவும்  அவையிட்டையே கையேந்திறதெண்டால்…” என்று முதியவர் சொன்னார்.

 

இதை அறிந்தபோது, சற்றுக் கோபம் வந்தது மன்றோலிற்ஸ்க்கு.  ஆனால், அவர் நிலைமையைப் புரிந்து  கொண்டார். கிழவர்; சொல்வதில் உண்மையுண்டு. மன்றோலிற்ஸ் இலங்கைக்கு புறப்பட முன்னர், இலங்கையைப் பற்றிப் படிக்கும்போது அவருக்கு ஆச்சரியமான சங்கதிகள் தெரிந்தன. அதிலும் அவருடைய அப்பா வழி பாட்டன் ஒருவர் நானூறு ஆண்டுகளுக்கு முன்னர் போர்த்துக்கல் படை அதிகாரியாக இலங்கையில் இருந்திருக்கிறார். பிறகு அதைப்பற்றி தன் குடும்பத்தில் விசாரித்து இன்னும் தகவல்களையும் அறிந்தார்.

 

இப்போது இந்தக் கிழவர் அந்த நிகழ்ச்சிகளையே நினைவூட்டுகிறார்;. கிழவரின் துயரம் அவருடைய பூர்வீக ஞாபகங்களைக் கிளப்பியுள்ளது என்று தோன்றியது மன்றோலிற்ஸ_க்கு. ஒருவர் அதிகம் துன்பப் படும்போதும் இந்த மாதிரி பூர்வீக விசயங்களை நோக்கி மனம் திரும்புகிறது. அதிகமதிகம் மகிழ்ச்சியிலும் புகழிலும் இருக்கும்போதும் பழைய சுவடுகளையோ காலத்தையோ தேடிப்போகுது. அந்தரங்கமாகவேனும் இது நடக்கிறது.

 

கிழவரின் வாடிய அந்த முகத்தில் இருந்த உறுதியையும் தெளிவையும் கோபத்தையும் மதிப்பையும் மன்றோலிற்ஸ் அவதானித்தார். கிழவரை நெருங்கி வணக்கம் சொன்னார் மன்றோலிற்ஸ். கிழவர் தலையை அசைத்து பதிலுக்கு அவருக்கு மரியாதை செய்தார். “உங்களைப் புரிந்து கொள்கிறேன்” என்றார் கிழவர். மன்றோலிற்ஸ் ஒரு கணம் தடுமாறிவிட்டார். கிழவர் என்ன சொல்கிறார்? அன்று கிழவருடன் இரண்டு மூன்று நிமிடங்கள் மட்டும் மன்றோலிற்ஸ் பேசியிருப்பார். ஆனால்; கிழவருடன் தொடர்ந்து பேச வேண்டும் என்று விரும்பினார். அதன்பிறகு அவருடன் அவ்வப்பொழுது பேசினார் மன்றோலிற்ஸ். சரளமான ஆங்கிலத்தில்  வரலாற்றுக் கதைகளைச் சொன்னார் கிழவர்.  கிழவரின் துயரக் கதைகள் மன்றோலிற்ஸை உலுக்கியது. அதைவிட அவர் சொன்ன வரலாற்றுக்கதைகள் திடுக்கிடுத்தின.

 

தலைமுறை தலைமுறையாக இந்த எண்ணங்களும் துயரங்களும் இவர்களை உலுக்கிக் கொண்டிருக்கிறது என்று மன்றோலிற்ஸ்க்குப் பட்டது. தான் இதற்கெல்லாம் நேரடியாகப் பொறுப்பாளி இல்லை என்றாலும் வரலாற்றில் தனக்கும் ஏதோ ஒரு பங்கிருப்பதாக அருக்குத் தோன்றியது. அதற்காகத்தான் இந்தக் காரியங்களையெல்லாம் செய்யத் தொடங்கியிருக்கிறார்.

 

ஆனால் அவர் இந்த வேலையைச் செய்வதற்கிடையில் ஏகப்பட்ட எரிமலைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. இப்போது தேவன். இன்னும் இதுமாதிரி எத்தனை எரிமலைகளையும் துயரக்கடல்களையும் கடக்கவேண்டும்? பாவமன்னிப்புக்காக மன்றாடுபவன்  எல்லா வேதனைகளையும் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டும் என்று நினைத்தார் மன்றோலிற்ஸ். எதுவும் சமனிலையில் இருந்தாற்தான் அதன் இலக்குத் தவறாது. தன்னுடைய வேதனைகளும் இந்த மனிதர்களின் வேதனைகளும் இப்போது ஏதோ ஒரு சமனிலையில் இருப்பதாகப் பட்டது. வௌ;வேறு கோணங்களில் என்றாலும் சந்திக்கும் புள்ளி ஏறக்குறைய ஒன்றாகவே இருக்கிறது. அந்த வகையில் அவருக்கு உள்ளே ஆறுதலும் நம்பிக்கையும் ஏற்பட்டது. ஆனாலும் சில எதிர்;கொள்ளல்களை சந்திக்கவே வேண்டும். அவை எத்தனைதான் கடுமையாக இருந்தாலும்.

 

அவர் தேவனுடன் விவாதிக்க வேண்டும். அப்படி விவாதித்தால்தான் பல விசயங்கள் வெளிவரும். அவர் அறியக்கூடிய சங்கதிகள் அப்போதுதான் கிடைக்கும். ஆனால் இந்த விவாதத்தை மிக அவதானமாகக் கிளப்ப வேணும். எல்லை மீறினால் அது கோணங்கள் மாறி வேறி திசைகளுக்கு நகர்ந்து சிதைந்து விடும். எனவே நிதானமாக அவனுடன் பேசினார்.

 

“நீங்கள் வைத்திருக்கும் உண்மையை எப்படி எல்லோருக்கும் கொடுக்கப்போகிறீர்கள்? அப்படி உண்மையை வாங்கக் கூடிய உலகமா இருக்கிறது? ஆகக் குறைந்தது இந்த உண்மைகளைப் புரிந்து கொள்ளக் கூடத் தயாரா? என்னதான் வெயில் உன்னதமாகவும் அடிப்படையாகவும் இருந்தாலும் நிழலை விரும்பும் மனமா, வெயிலை விரும்பும்  மனமா எல்லோருக்கும் உண்டு?”

 

அவன் ஏளனமாகச் சிரித்தான். எதற்காக இந்த வம்பில் விவாதித்துக் கொண்டிருக்க வேணும்? பேசாமல் வேலை முடிந்தவுடன் தங்குமிடத்துக்குப் போயிருக்கலாம். இதனால் தனக்கு என் பலன் கிடைக்கப்போகிறது என்ற எண்ணம் வந்தது. சலிப்பும் எரிச்சலும் மேலோங்கி அயர்ச்சியானது உடலும் மனமும். பார்வையைத் திருப்பி சுவர்களைப் பார்த்தான். அழகிய மலைக் காட்சியுடைய ஓவியம் பெரிதாக மாட்டப்பட்டிருந்தது. எண்ணெய் வர்ணத்தில் தீட்டப்பட்டது. யார் வரைந்திருப்பார்கள்? பெயரை அறிய வேண்டும் போலத் தோன்றினாலும் மனம் அதற்குமெல் தூண்டப் பெறவில்லை.

 

“சரியாகச் சொன்னால் யாருக்கும் உண்மையை அறியும் ஆர்வம் இல்லை என்றே சொல்வேன். உண்மைதான் அதிகம் சங்கடந்தரும் பொருள். அதை எதிர்கொள்வது அவ்வளவு சாதாரணமானதல்ல. அதனால்தான்  அதை எவரும் விரும்பவேயில்லை. ஆனால் ஆச்சரியம் என்ன வென்றால் பாதிக்கப்பட்ட சனங்கள் எப்பொழும் உண்மையை மட்டுமே கையில் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். யாரும் விரும்பாத உண்மை”

 

“அப்படியென்றால் நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள்?”

 

“நானும் உண்மையையே சொல்கிறேன். நீங்கள் சொல்வதைப் போல உண்மை.”

 

“என்றால், நாங்கள் எதையுமே செய்ய முடியாது என்கீறீர்களா? அப்படியென்றால் நாங்கள் தொடர்ந்தும் இப்படியே அலைந்து கொண்டேயிருக்க வேண்டியதுதானா?” அவனுடைய முகம் கோபத்தில் கொதித்தது. அவர் இப்போது மேலும் ஊற்றிக் குடித்தார். அவனை சற்று அமைதியாக இருக்கும்படி கையால் சைகை காட்டினார். விசயம் இன்னுமிருக்கிறது என்பதைப்போலிருந்தது அவருடைய அந்தச் சைகையின் தொனி.

 

“ நண்பரே இது மிகச் சவாரஷ்யமான சங்கதி. ஆனால் மிகக் கொடுமையானது”

 

“அதற்காக”

 

“என்ன செய்ய முடியும். ஏற்கத்தான் வேண்டும். ஏற்றுத்தான் ஆகவேண்டும். வேறு வழி கிடையாது. ஆனால் ஒன்று, இந்த உண்மைச் சுடரை அணைய விடாமற் காத்துக் கொள்வதில்தானிருக்கிறது வெற்றி. அதை காத்துக் கொள்வது ஒன்றும் சாதாரண காரியமில்லை. அதைப் பாதுகாத்தால் மட்டும் போதாது. அதைக் கொண்டு போக வேண்டிய இடத்துக்கும் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும்”

 

“என்ன போதனையா? எனக்குச் சலிப்பூட்டுகிறது. இதையெல்லாம் நாங்கள் செய்யவில்லையா என்ன?” அவன் எரிச்சலோடு கேட்டான். முகத்தில் கடுமை தொனித்துக் கொப்பளித்தது. அவரை ஊன்றிக் கவனித்தான்.

 

அவர் சிரித்தார். ஆனால், மிக எச்சரிக்கையாக. இந்த மாதிரி நிலைமைகளில், இந்தமாதிரி ஆட்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதில் தேர்ந்தவர் என்பதை அந்தச் சிரிப்பும் அவருடைய அமைதியும் காட்டியது.

 

“எங்களால் இதற்கு மேலும் தாங்க முடியாது. ஆனால் தாங்கிக் கொண்டுதானிருக்கிறோம். வெல்வதற்கு தாங்கும் சக்தியும் முக்கியமானது. எல்லோராலேயும் தாங்கமுடியாது, அதுவும் எதையும்.  நாங்கள் தாங்கிக் கொள்கிறோம் எல்லாவற்றையும் எல்லாவற்றையும்”

 

“இருக்கலாம். ஆனால் தாங்கும் சக்தி மட்டும் போதாது. அது அடிமையாக்கிவிடும். தாங்கிக் கொண்டிருப்பதால் மட்டும் வயிற்றில் ஏறியிருக்கும் பசி போய்விடுமா? தலையில் சுமத்தப்பட்டிருக்கும் பாறை கரைந்து காற்றாகிவிடுமா? ஏன், உங்களிடம் இருக்கும் சாதி விவகாரங்களைப் பாருங்கள். தாழ்த்தப்பட்டவர்கள் என்ற சாதியினர் எத்தனை காலமாக எதையெல்லாம் தாங்கிக் கொண்டிருந்திருக்கிறார்கள். ஆனால், என்ன நடந்தது. அவர்கள் மெல்ல அசையத் தொடங்கியபோதே சலனமும் பாய்ச்சலும் நடந்திருக்கிறது. மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. அதுதான் உண்மை” அவர் நிதானத்தைக் கூட்ட முயன்றார். நள்ளிரவைக் கடந்திருந்தது அந்த அறை. அவருக்கு இதெல்லாம் தெரிந்திருக்கிறது என்பதில் அவனுக்கு ஆச்சரியம். மனதில் எண்ணங்கள் பொங்கி வந்தன. அவன் தலையை அசைத்தான். அவரே சொன்னார்: “நாங்கள் எதையாவது செய்வது முக்கியமல்ல. அதைப் புத்திபூர்வமாகச் செய்ய வேணும். அதுதான் முக்கியம்”

 

“நாங்கள் என்னதான் செய்யவில்லை? எவ்வளவு போராட்டங்கள்? ஐயா, அம்பது வருசமாகப் போராடுகிறோம். என்னமாதிரியான போராட்டம். எவ்வளவு தியாகங்கள்? இதற்கு மேல் எப்படிப் போராட முடியும். அல்லது எப்படிப் போராட வேண்டும்? சொல்லுங்கள்! நீங்கள்தான் யுத்தம் நடக்கிற எங்கள் மண்ணில் இருந்து எல்லாவற்றையும் பார்த்திருப்பீர்களே. சொல்லுங்கள், இதற்கு மேல் என்ன செய்ய வேணும்? எந்தக் குற்றமும் செய்யாமலே இந்தமாதிரி எதற்காக வதையெல்லாம் பட வேணும்?”

 

“ஓ கடவுளே!” அவர் ஆழமாகத் தலையை அசைத்தார். எழுந்து சுவரோரமாகச் சென்று எங்கோ வெறித்தார்.  கண்கள் கூர்மையாகின. அவனை வேதனைப்படுத்துகிறேனோ என்று யோசித்தார். இல்லை. பேச வேண்டியதைப் பேசித்தானாக வேண்டும். திரும்பி “சொல்லுங்கள் தேவன்” என்றார் மீண்டும்.

 

“நான் எதையும் சொல்ல விரும்பவில்லை. போதும். சொல்வதால் எந்தப் பலனுமில்லை. இது புலம்பல். புலம்புவதால் எந்தப் பலனுமில்லை. மன்னிக்க வேணும். நான் புறப்பட விரும்புகிறேன்”

 

அவர் ஆமென்பது போலவும் வேண்டாம் என்பதைப் போலவும் தலையை அசைத்தார். எதற்கும் உனக்கு சுதந்திரமும் உரிமையும் உண்டென்பதைப்போல அது இருந்தது. அவனருகே வந்து தோள்களில் கை வைத்தார். அது ஒரு புதிய நிலையாகத் தோன்றியது தேவனுக்கு. இந்த மாதிரித் தருணங்கள் அபூர்வமானவை. அதை அவன் முழுமையாக உணர்ந்தான். அவனுடைய நரம்புகளில் ரத்தம் குத்தித்தோடுவது அவனுக்குத் தெரிந்தது.

 

“மன்னிக்க வேணும். உங்களை அதிகம் சிரமப்படுத்தி விட்டேனா” கேட்டார். “தேவன், ஒரு வகையில் நீங்கள் சொன்னதைப்போல இதுவும் ஒரு வகையில் தாங்குவதுதான். ஆனால் தனியே தாங்குவது மட்டும் இதற்குள் இல்லை. அதற்கு மேல் வேறு விசயங்கள் உண்டு. எல்லாம் கலந்த ஒரு கலவை. பிரச்சினைகள் எப்படியோ அதற்கேற்றமாதிரியான எதிர்வடிவங்கள்”

 

அவன் ஊன்றிக் கவனித்தான். “அதைத்தான் நாம் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது நாம் ஒன்றாகச் சிந்திக்கலாம். அப்போது நாம் புதிய பிரதேசங்களுக்குள் பிரவேசிக்கலாம்”

 

“நானும் நீங்களும் எப்போதும் ஒன்றாகச் சிந்திக்க முடியாது. இதோ பாருங்கள். இந்த அறையில் நாங்கள் இரண்டு பேரும் ஒன்றாக இருக்கிறோம் என்பது உண்மையே. இப்போது இருவரும் ஒன்றாக, ஒரு நிலையில் இருப்பது போல இருக்கலாம். ஆனால், அது உண்மையல்ல. வெறும்  தோற்றம் மட்டுமே. நான் இதே விடுதியில் ஒரு வேலையாள். உங்கள் முன்னிலையில் இந்தக் கணத்தில் விருந்தாளியாகவோ நட்புடனோ சமனாக இருந்தாலும் உண்மையில் அப்படியல்ல. இப்போதும் நீங்கள் விருந்தாளி. பின்னரும் நீங்கள் இதே வசதியோடும் தரத்தோடும்தான். எப்போதும் வசதிகளோடு, எந்தப் பிரச்சினைகளுமில்லாமல் இருக்கலாம். எதற்கும் உத்தரவாதமுள்ள வாழ்க்கை உங்களுடையது. ஆனால், நான் வெளியே போனபின்னர் அப்படியல்ல. உண்மையில் இப்போதும் நான் அகதி. பரதேசி. அலைந்து கொண்டிருப்பவன். நாடற்றவன். எதையும் நிர்ணயிக்க முடியாத வாழ்க்கை என்னுடையது. எப்படி நாங்கள் ஒன்றாகச் சிந்திக்க முடியும்? முடியாது, முடியவே முடியாது” பெரும் உணர்ச்சிச் சுழிப்பில் திணறியது அந்த அறை. வரலாற்றில் அதற்கு முன்னர் அந்த அறையில் இதைப்போல ஒரு நிலை இருந்திருக்குமா? வேண்டுமானால் காதலில், பெருங்கூடலில் எல்லாம் அது திளைத்திருக்கலாம்.  ஆனால், இதைப்போல இத்தனை கொந்தளிப்பான உணர்ச்சிச் சுழிப்பில்  இருந்திருக்க  வாய்ப்பில்லை.

 

அவனுக்கு மூச்சுத் திணறியது. தன் குரலில் வினோத ஒலியும் உற்சாகமும் துளர்த்திருப்பதை உணர்ந்தான். சொற்கள் பெருகிக்கொண்டேயிருந்தன. முடிவற்ற சொற்கள். அவ்வளவும் ஆழ்மனதிலிருந்து ஊற்றெடுத்து வரும் சொல் நதிப் பிரவாகம். அவர் அமைதியாக இருந்தார். அமைதியாகவே எரிந்து கொண்டிருந்தன விளக்குகள். மதுவின் வாடை விளக்கொளியில் கலந்து கொண்டிருப்பதாக தேவனுக்குத் தேன்றியது. அவன் சொன்னான்: “தயவு செய்து என்னை விட்டு விடுங்கள். அதாவது எங்களை விட்டுவிடுங்கள். தயவு செய்து”

 

அவர் இப்போதும் எதுவும் பேசவில்லை. பேச முடியாதென்றல்ல, பேச விரும்பவில்லை. அமைதியாகக் கேட்பதையும் என்ன நடக்கிறது என்பதையும் அறியவே அவர் விரும்புகிறார். உண்மையை அவர் தேடிக் கொண்டிருக்கிறார். அதை இப்போது கண்டடைந்து கொண்டிருக்கிறார்;. இதைத்தான் அவர் எதிர்பார்த்தார். இதையே அவர் கிழக்கில், அகதிமுகாமில் அந்தக் கிழவரிடமும் கண்டார்.

 

அவன் சட்டென்று அமைதியானான். எல்லாம் தீர்ந்து போனதைப்போல அவனுடைய முகம் வெறிச்சென்றிருந்தது. அவரைக் கூர்ந்து பார்த்தான். பிறகு தலையைக் கவிழ்ந்து கொண்டு சற்று நேரம் இருந்தான்.ள

 

“உங்களை நான் புரிந்து கொள்கிறேன்” அவர் அவனுடைய கைகளை இறுகப் பற்றினார். அதில் இணையற்ற ஒரு நெருக்கத்தை அவன் கண்டான். ஆனாலும் உள்ளே கொதித்துக் கொண்டிருந்தது மனம்.  அது ரணங்களில் பற்றிய தீயல்லவா. எனவே அணைந்து விடாது. முடிவற்று அது தகித்துக் கொண்டிருக்கும்.

 

“என்னால் இனிக் காயங்களைத் தாங்க முடியாது. என்றபோதும் காயங்களாகவே எனக்குப் பரிசளிக்கப்படுகின்றன. நான் விரும்பாத காயங்கள். எங்களுக்குத் தேவையற்ற பரிசுகள். பாருங்கள் எங்களில் எவ்வளவு காயங்கள். நீங்கள் குத்திய காயங்கள். நீங்கள், நிச்சயமாக நீங்கள் குத்திய காயங்கள். அப்படி ஒவ்வொருவராக எங்கள் மீது குத்திய காயங்கள். ஏராளம் காயங்கள். முடியவில்லை, எங்களால் தாங்கிக் கொள்ள  முடியவில்லையென்றபோதும் குத்திக்கொண்டேயிருக்கிறீர்கள். எப்படி இதைத்தாங்க முடியும்? சொல்லுங்கள், எதற்காக இந்தத் தண்டனைகள்? எதற்காக இந்தப் பழிவாங்குதல்கள்? ஒவ்வொருவரும் குத்திய கத்திகள் இதோ என்னுடலில் குருதியொழுகும்படியே இருக்கின்றன” அவர் அதிர்;ந்தார். இதை எதிர்பார்த்திருந்தாலும் அது இத்தனை கூராக அவரை நோக்கி வரும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்தக் குற்றச் சாட்டு  அவரால்  புறக்கணிக்கக்கூடியதுமில்லை. தான் பங்காளி இல்லை என்றாலும் பங்காளி நிலையிலிருந்து  தப்ப முடியாது.

 

நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய மூதாதைகள் செய்த பழி. அந்தப் பழியே நான்கு நூற்றாண்டுகளாக இந்த மனிதர்களின் பழியாகியுமுள்ளது.  அன்று அவர்கள் செய்த பழியெல்லாம் இப்போது உருத்திரண்டு இந்த வடிவங்களில் நின்றாடுகின்றன. இதற்கெல்லாம் சாபவிமோசனம் எப்போது? அது எப்படி நிகழும்? “எங்களின் மீது ஏற்றிய கத்தியை இழுக்காமலே போய்விட்டீர்கள். அப்படியே பிறகு வந்த ஒவ்வொருவரும். பாருங்கள், போர்த்துக்கீசக் கத்தியை, ஒல்லாந்தக் கத்தியை, பிரித்தானியக்கத்தியை, சிங்களக் கத்தியை, இந்தியக் கத்தியை…” அவன் மீண்டும் குமுறினான். “அதுமட்டுமல்ல, சீனக் கத்தி, அமெரிக்கக்கத்தி, இஸ்ரேலியக் கத்தி, பாகிஸ்தானியக் கத்தி, ஈரானியக் கத்தி… சில கத்திகள் நேரடியானவை. சிலவோ மறைமுகமானவை. ஆனால் எல்லாம் எங்கள் மீதே பாய்ச்சப்படுகின்றன. எல்லாக் காயங்சகளும் எங்களுக்குத்தான்”

 

அவனுடைய குரலில் எந்தத் தளர்வுமில்லை. அது அவனுடைய உறுதியைக் காட்டியது. அதையிட்டு அவர் திகைத்தார். இல்லையென்றால் இந்த மாதிரி நிலைமையில் அவன் அழுதிருக்க வேண்டும். வலிகளைத் தாங்கியே மரத்துவிட்டானா? அல்லது அவனே சொன்னதைப்போல தாங்கும் சக்தியின் ஆற்றலா? இல்லையென்றால் இந்த யுத்தத்தை, ஐந்து நூற்றாண்டுகளான அவலத்தை எல்லாம் எப்படித் தாங்கிக் கொள்ள அவர்களால் முடியும்? என்று அவர் நினைத்தார்.

 

“நான் உங்களையோ யாரையுமோ குற்றஞ்சாட்டவில்லை. ஆனால் நீங்கள் விரும்பிய உண்மை இப்படித்தான் உள்ளது. இதை ஏற்றுக் கொள்ளத்தயாரா? சொல்லுங்கள்! தயவு செய்து மௌனத்தைக் கலையுங்கள். உங்கள் மௌனமே எங்களை அச்சப்படுத்துகிறது. ஏன், உங்களுடைய இந்தக் கனத்த மௌனமே எங்களை இன்று இந்த நிலைக்குக் கொண்டு வந்திருக்கிறது. கத்திகள் பாய்ச்சப்படும்போது கடைப்பிடிக்கின்ற பாராமுகத்தில் கலந்திருக்கும் மௌனம். வேண்டாம் அது. பேசுங்கள். அதுவே கலகமாகட்டும். முதற்கலகம், அதைச் செய்யுங்கள்”

 

அந்த நிலையில் அவன் உருக் கொண்டிருந்தான். அவர் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தார். ஆனால் அவருள்ளும் இதேமாதிரி உருவேறியது. உள்ளுக்குள்ளே  நிகழ்ந்தது பெருஞ் சந்தம். கண்கள் சிவந்திருந்தன. அது தூக்கக் கலக்கமா இல்லை, எல்லாவற்றின் மீதும் நிகழ்ந்து கொண்டிருக்கும் சினத்தின் ஊற்றா? அவனுக்கும் அது புரியவில்லை. அவருக்கும் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் பல புள்ளிகள் ஒன்றிணைந்திருப்பதாக இருவரும் உணர்;ந்தனர். இந்தப் புள்ளிகளை இணைத்தால் ஏதோ வடிவங்கள் வரலாம். இணைக்காது விட்டாலும் விடிவங்கள் அதிலிருக்கும். அவர் ஆமென்று தலையசைத்தார். “உண்மைதான். உண்மையேதான்” சந்நதங்கொண்டொலித்தது அவருடைய குரல். அதில் அன்பையும் இரக்கத்தையும் உண்மையையும் வலிமையையும் தேவன் கண்டான். ஒரு வகையான ஏற்றுக்கொள்ளல், அங்கீகரித்தல் அதிலிருந்தது. உரிமையின் தொனியோடு அது ஒலித்தது.

 

. அறையில், விளக்குகள் எரிந்து கொண்டேயிருந்தன. அவர்கள் அறைக்குள்  நுளைந்தபோதிருந்த அதே நிலையிலேயே எந்தத் தளர்வுமின்றி எரிந்து கொண்டிருந்தன. விடைபெறும்போது அவர் தன்னுடன் தொடர்பு கொள்ளுவதற்கான ‘விஸிற்றிங் கார்ட்’டைக் கொடுத்தார். ‘வன்னியின் நிலைமைகள் எப்படியிருக்கு’ என்று அவன் கேட்க விரும்பினான். ஆனால் அதை மனம் மறுத்தது. ஆனால், அவரின் புருவங்கள் உயர்ந்து சுருங்கின. அவர் சற்று அமைதியாக இருந்தார்.

 

மெதுவான கதகதப்பான குளிர் அந்த அறையில் நிரம்பியிருந்தது. சுவர்களில் ஒட்டியதைப்போல மெதுவாகச் சுடர்ந்து கொண்டிருந்தது ஒளி.  சற்று நேரத்துக்குப் பின்னர் எழுந்து தன்னுடைய பையைத் திறந்து ஒரு டைரியை எடுத்தார். பக்கங்களைப் பிரித்துப் பார்த்தவர், அவனிடம் அதைக் கொடுத்தார். அதில் வன்னியின் கதைகள் எழுதப்பட்டிருந்தன.

 

அவன் விடைபெற்ற போது அவர் வெளியே வந்து அன்போடு விடை தந்தார்.  விடுதியை விட்டு அவன் வெளியே போய்க் கொண்டிருப்பதை அவர் பார்த்துக் கொண்டிருந்தார்.

 

அவன் அந்தக் காலையொளியில் துலங்கியபடியே நடந்து தூரமாகிக் கொண்டிருந்தான். ஒரு முடிவற்ற புள்ளியாய்.

 

*

இளம் படைப்பாளிகள் – சிறுகதை – தூரன் குணா – இருளில் மறைபவர்கள்

இருளில் மறைபவர்கள்

. தூரன் குணா

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

அவனுடைய தூரநிலத்துக் கிராமத்திலிருந்து ஏராளமானவர்கள் இந்த நகரத்திற்கு பிழைக்க வந்திருந்தார்கள். முழுக்காற்சட்டை அணியத்துவங்கும்,மீசை முளைக்கும் பருவத்தில் அவர்களின் தடத்தில் இவனும் வந்தான்.உழைப்பவனை இந்த ஊர் கைவிடுவதில்லை என்ற பேச்சு இவனுக்கும் உண்மையானது.எத்தனையோ பொறுப்புகளை சுமந்துகொண்டு ஏராளமான மனசஞ்சலங்களோடு இங்கே வந்த விடலைப் பையன் இப்போது பொறுப்புகளை நிறைவேற்றும் முதிர் இளைஞனாகி விட்டான்.

வெகுகாலம் நண்பர்களோடு வெவ்வேறு அறைகளில் வசித்திருந்தவன் சில வருடங்களாக தனியாகத்தான் தங்கியிருக்கிறான்.புறநகர்ப்பகுதியில் அமைந்த லைன் வீடுகளில் கடைசி வீடு. ஏதோ ஒரு கணத்தில் தனியாக வசிக்க வேண்டும் என்று தோன்றிய ஆசையின் காரணமாக இந்த வீட்டை தேடிப்பிடித்தான். வீடு குகைதான்.ஆனாலும் ஒருவனுக்கு போதுமானதாக இருந்தது.சிறிய முன்னறை,பத்துக்கு பனிரெண்டில் ஒரு படுக்கையறை.முன்னறையின் பக்கவாட்டில் குளியல் கழிவறை.பசிக்கும் நேரத்தில் எதிர்படும் கடைகளில் சாப்பாடு.அவனிடம் பழைய யமாஹா பைக் இருந்தது.சனிக்கிழமை மாலை சம்பளம் ஆனதும் மிதமான குடி.ஞாயிறுகளில் தூக்கம், சினிமா மறுபடியும் மிதமான குடி.விசேஷ நாட்களில் ஊருக்குப் போவான்.

கொஞ்சகாலமாக சஞ்சலமொன்றிக்கு ஆட்பட்டுத் தவிக்கிறான்.இயல்பிலேயே கூச்ச சுபாவம் கொண்டவனுக்கு அதைக் கடப்பது மேலும் சிக்கலானதாக மாறிவிட்டது.இரவு தன் ஒவ்வொரு கணத்திலும் உடல் மேல் தாங்கொண்ணா அவஸ்தையை இறக்குகிறது.ஏற்கனவே இந்த நகரம் இரவுகளிலும் வெக்கை வடியாமல் கனலக்கூடியது.தூக்கமின்மை காரணமாக நிறைய புகைக்கத் துவங்கியிருந்தான்.மேலும் காதோரம் துவங்கிவிட்ட நரை காலம் கடந்துகொண்டிருப்பதை உணர்த்தியது.

வேலை செய்யுமிடத்தில் மிகச் சுவாரசியாமான பொழுதுபோக்கு பேச்சு பெண்களைப் பற்றியும் அவர்களை அடைவதற்காக செய்த சாகசங்கள்,அதற்கான முன் முயற்சிகள்,அதன் வெற்றிகள் தோல்விகள்  இவற்றைச் சுற்றியே இருந்ததால் அந்தக் கண்ணி அவனை மேலும் இறுக்கியது.சர்வசாதரணமாக ஒரு இருபது வயதுக்காரன் தன் சாகசங்களை விவரிக்கும்போது இவனால் செய்ய முடிவதெல்லாம் இரவுகளில் அவன் சொன்னவற்றை கற்பனையாக மனதில் திரும்ப திரைப்படம் போல் ஓட்டிக்கொண்டு அவனிடத்தில் தன்னை இடம் மாற்றிக்கொள்வதுதான்.

மிதமான காமம் கொண்டவனாகத்தானிருந்தான்.சாலையில் போகும் வனப்பான பெண்ணைக் காண்பதோ, திரையரங்குக்குச் சென்று நீலப்படம் பார்ப்பதோ அல்லது அதுபோன்ற கதைப்புத்தகங்கள் படிப்பதோ அவனுடைய மிதமான உணர்ச்சிக்கு இதுவரை வடிகாலாக இருந்தன. சீரான இடைவெளியில் சுயமைதுனமும் செய்துகொள்வான்.மேலும் வேலைசெய்யுமிடங்களில் பல வருடங்களாக கிளுகிளுப்பூட்டும் கதைகளையும் கேட்டே வந்திருக்கிறான். பின்னிரவு நேரங்களில் சிலவற்றை அரசல் புரசலாக கட்டிடங்களின் இருளடைந்த பின்புறங்களிலும் கழிவறையோரங்களிலும் பார்த்திருக்கிறான்.இத்தனை நாளாய் பெண் இல்லாமல் தன் காமத்துடன் வாழ்ந்துவிட முடிந்திருந்தது.ஆனால் இப்போது அது அவனிடம் தன் பசிக்கு இன்னும் நிறைய கோருகிறது.

இயல்பில் கோழை மனம் கொண்டவனுக்கு மரபின் பிடி இன்னும் இளகாத இதுபோன்ற விஷயங்களில் அதைத் தாண்டி தனக்குத் தேவையானதை எடுத்துக்கொள்ளும் திண்மை இல்லாமலிருந்தது.திருமணம் செய்துகொள்ளலாமென்று நினைத்தால் இன்னும் ஓரிரு ஆண்டுகளுக்கு அதைப் பற்றி யோசிக்கவே முடியாதவாறு பொறுப்புகளின் பிடியிலிருந்தான்.மற்றவர்களுக்கு எல்லாம் பல்துலக்குவது தலைசீவிக்கொள்வது போன்ற எளிய செய்கைகளைப் போலத்தான் இதுவும் இருக்கிறது என்றும் தன்னுடைய கோழைத்தனம்தான் தனக்கு சிக்கலாக இருக்கிறது என்பதையும் உணர்ந்தேயிருந்தான்.

லைன் வீடுகளின் மனிதர்கள் இவனுக்கு உறவினர்களை போல் மாறிவிட்டனர்.விஷேச நாட்களில் பலகாரம் கொடுப்பது,இவன் இல்லாத போது இரண்டு குடம் நீர் பிடித்து வைப்பது என்பது போன்ற எளிய உதவிகளை இவனுக்குச் செய்வதும், கைம்மாறாக அவர்களுக்காக இவன் மின்கட்டணம் கட்டச்செல்வது போன்றவற்றை செய்பவனாகவும் இருந்தான். ஆகவே யாரேனும் ஒரு விலைமாதை தன் அறைக்கு அழைத்துவரலாமென்று நினைத்தாலும் இரவுகளிலும் சந்தடிமிக்க அந்தத் தெருவில் அது சாத்தியமில்லாததாகவே தோன்றியது.லாட்ஜ் போன்ற இடங்களுக்கு ஒரு பெண்ணை அழைத்துச் செல்லும் துணிவையெல்லாம் அவனால் கற்பனை செய்யக்கூட இயலவில்லை.செய்தித்தாள்களில் எத்தனை சம்பவங்களை படித்திருக்கிறான்.தனக்கு அவமானத்தை தாங்கும் வலுவில்லை என்பதையும் அவன் உணர்ந்தேயிருந்தான்.

அவன் கேட்கும் அனுபவக் கதைகளில் எல்லாம் நிகழ்விடம் பற்றிய தகவல்களில் அதிக கவனம் செலுத்தினான்.ஆனால் அவை சந்தடிமிக்க தெருக்களிலுள்ள வீடுகள், நகரத்தின் ஓரங்களில் இருக்கும் இருளடைந்த புதர்கள்,தொழிற்கூடங்களின் இருளடைந்த பின்புறக் கழிவறைகள் என மனிதர்கள்  புழங்கும் இதே உலகத்தில் நிகழ்ந்திருப்பதை அறிந்தவனுக்கு ஏமாற்றமாக இருந்தது. இத்தனை காலம் உரையாடல்களில் விஷயங்களை கேட்டுக்கொண்டிருப்பவனாக மட்டுமிருந்தவன் மன உந்துதலின் காரணமாக மெல்ல அந்த உரையாடல்களில் கலந்து கொள்ளத் துவங்கினான்.இவனுடன் தைக்கும் நண்பன் ஒருவனோடு நெருக்கமானது அதன் பொருட்டுதான்.அவன் இந்த விஷயங்களில் சூரன் என்று பெயர் பெற்றிருந்தான்.வாயைத் திறந்தாலே பெண்களைப் பற்றியே பேசுபவன் என்பதால் இவனுடைய புதிய அபிலாஷைகளை அவனுக்கு உறுத்தலானதாக தெரியவில்லை.சமீபகாலமாக அந்த நண்பனோடுதான் சேர்ந்து குடித்துக்கொண்டிருக்கிறான். பெரும்பாலான நேரங்களில் செலவும் செய்கிறான். அவன் பேசுவதில் நிறைய சுவாரசியங்கள் இருந்தன.

ஒரு சனிக்கிழமை மாலைநேரக்குடியொன்றில்தான் அவனிடம் தன் சிக்கலை பற்றியும் தன் பயத்தையும் சொன்னான்.அவன் எவ்வித உணர்ச்சியையும் முகத்தில் காட்டாமல் கேட்டுக்கொண்டான்.பேசிக்கொண்டிருக்கும் போதே இவனுக்கு கழிவிரக்கத்தில் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.விடுங்கண்ணே பாத்துக்கலாம் நான் இருக்கேன் உங்களுக்கு என்று அவன் சொன்னான்.அன்றைக்கு போதை அதிகமாகிவிட அவனே கொண்டு வந்து வீட்டில் விட்டுவிட்டுப் போனான்.அதற்குப் பின் அவனிடம் நெருக்கம் அதிகமாகிவிட்டது.மறுவாரம் ஒரு முற்பகல் தேனீர் அருந்தப்போகும்போது நண்பன் அவனிடம் சொன்னதைக் கேட்டவுடன் பரபரப்பாகிவிட்டான்.

தன்னுடைய தோழியொருத்தியை அறிமுகப்படுத்தி வைப்பதாகவும் எவ்வித கூச்சமுமின்றி அவளோடு இவன் சிலபொழுதுகளை கழிக்கலாம் என்றும் பாந்தமும் இனிமையும் கொண்டவள் என்பதால் எந்தத் தயக்கமும் தேவையில்லை,ஒரு நியாயமான தொகையை கொடுத்தால் போதும் என்றும் சொன்னான். நாவில் ஊறிய எச்சிலை விழுங்கிக்கொண்டே இடத்திற்கு என்ன செய்வது என்று கேட்டான்.சிறிய யோசனைக்குப் பின் நகரத்திலிருந்து பத்து கிலோமீட்டர் தாண்டி ஒரு சிறிய டவுன் வரும் என்றும் அதைத்தாண்டி இன்னுமொரு ஐந்து கிலோமீட்டர் போனால் வெறும் காடுகளாக இருக்குமென்றும் சொன்னான்.மேலும் அந்த இடத்திலிருந்து பிரியும் சிறிய மண்பாதையில் போனால் உள்ளடங்கிய பகுதியில் ஒரு சிறு குன்று போன்ற இடம் இருப்பதாகவும் அது மிகப் பொருத்தமாகவே இருக்குமென்றும் சொன்னான்.பாதுகாப்பு குறித்து எவ்வித பயங்களும் தேவையில்லை என்றும் அது சாயுங்கால நேரத்திற்குப் பின் ஆட்களே நடமாடாத பகுதியென்றும் இருமுறை தானே அவளோடு போயிருப்பதாகவும் சொன்னான்.அந்தக் குன்றைச் சுற்றி நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு எந்த கிராமமும் இல்லாததால் அது மிகத் தோதான இடம் என்றும் சொன்னான்.தான் அவளிடம் ஒருமுறை பேசிவிட்டு அவளுடைய செல்போன் எண்ணைத் தருவதாகவும் இந்த வார இறுதியிலேயே போய்விட்டு வரும்படியும் சொன்னான்.சொன்னதுபோலவே மறு நாள் அவளுடைய எண்ணைக் கொடுத்தான்.அன்று முழுக்கவும் ஒரு விதமான பரபரப்பு இருந்தது.கூடவே பயமும்.இருந்தாலும் கடைசியில் எண்ணித் துணிந்து அவளுடைய எண்ணுக்கு அழைத்து அறிமுகப்படுத்திக்கொண்டான்.அவள் வெகு கலகலப்பானவளாக இருந்தாள்.வாகனம் இருக்கிறதா என்று கேட்டவள் ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சொல்லி சனிக்கிழமை மாலை ஆறரை மணிக்கு வந்து அழைத்துக்கொள்ளும்படியும் சொன்னாள்.இன்னும் இரண்டு நாட்கள் இருக்க சதா அதே யோசனையில் தனக்குள் புகைந்துகொண்டான்.அவளிடம் பேசியதை தன் நண்பனிடமும் சொன்னான்.ஒரு சின்னச் சிரிப்போடு அவன் தலையசைத்துக்கொண்டான்.முன்னேற்பாடுகள் ஏதாவது செய்துகொள்ள வேண்டுமா என்று கேட்டவனிடம் அதெல்லாம் அவளே பார்த்துக்கொள்வாள் என்றான்.

சனிக்கிழமை மாலை அவள் குறிப்பிட்ட இடத்தை அடையும்போது அவனுக்கு முன்பே அவள் அங்கே காத்திருந்தாள்.அவனுடைய வயது மதிக்கத்தக்கவளாய் மாநிறமாய் ஒல்லியான உடல்வாகோடு உயரமாய் இருந்தாள்.ஹெல்மெட்டைக் கழற்றி அவளிடம் அறிமுகப்படுத்திக்கொண்டு திரும்பவும் மாட்டிக்கொண்டான்.புன்சிரிப்போடு ஏறிக்கொண்டவள் தோள்மேல் கைகளை வைத்து சாய்ந்துகொள்ள மயிர்க்கூச்செறிந்தான்.பார்பவர்கள் அவர்களை கணவன் மனைவியாய் எண்ணுமளவு அந்த அந்நியோன்யம் இருந்தது.அவள் கழுத்தில் தாலிக்கயிறு இருந்ததையும் கவனித்திருந்தான்.அவள் காதோரமாய் வெகு சகஜமாய் பேசிக்கொண்டு வர மிதமான வேகத்தில் வாகனத்தை செலுத்திக்கொண்டே அவளுக்கு பதில் சொல்லிக்கொண்டு வந்தான்.அந்த டவுனைத் தாண்டும்போது முழுக்கவும் இருட்டிவிட்டது.மேற்கு வானில் அரைநிலா மெலிதாக ஒளிரத்துவங்கியது.

உடல் லேசாக முறுக்கிக்கொண்டு வியர்ப்பது போல் தோன்றியது.மூச்சு சூடாக வருவது போலும் காது நுனிகள் ஜிவ்வென்று எரிவதுபோலும் உணர்ந்தான்.அவளது உடல் இவன் மேல் முழுக்க சாய்ந்திருக்க அவள் கரங்கள் அவன் வயிற்றை வருடிக்கொடுக்க வாகனத்தைச் செலுத்த மிகவும் சிரமப்பட்டான்.ஏராளமாய் எச்சில் சுரந்தது. சாலையின் இருபுறமும் வெறும் மேய்ச்சல் நிலங்களான காடுகள் இருந்தன.ஒரு குறிப்பிட்ட இடத்தில் சாலைக்கு கிழக்கும் மேற்கும் பாதை வாய்க்காலை ஒட்டிப்போனது.அவள் வாகனத்தை கிழக்கே திருப்பச் சொன்னாள்.கான்க்ரீட் போடப்பட்டிருந்த வாய்க்காலில் அது தூர்ந்து நிறைய இடங்களில் குத்து குத்தாய் செடிகள் முளைத்திருந்தன.அந்த மண்பாதை வளைந்தும் நெளிந்தும் போனது.சில இடங்களில் மேடும் பள்ளமுமாய் இருந்ததால் மிக மெதுவாக வாகனத்தை செலுத்தினான்.

அவனுக்கு ஏனோ அந்தப் பிரதேசம் பயமூட்டியது.அரை நிலவின் ஒளியில் காடுகளுக்குள் மரங்கள் காற்றுக்கு அசைந்துகொண்டிருந்தன.வேலிகளில் விதவிதமான வண்டுகள் இரைந்துகொண்டிருக்க காற்றில் அந்தப் பிரதேசத்திற்கேயுரிய தனித்த வாசனை வீசியது.ஒரிடத்தில் பாதை தெற்கே திரும்ப அவள் வாகனத்தை நிறுத்தச் சொன்னாள்.இவன் தெற்கே பார்த்தான்.கொஞ்ச தூரத்திற்கு அப்பால் பாதையின் கிழக்குப்புறம் குத்துக்குத்தாய் இரண்டாள் உயரத்திற்கு நட்டு வைத்ததுபோல் ஏராளமான பாறைகள்  நிலவொளியில் வெளிர்கருப்பாய் தெரிந்தன.மணல்பாதை என்பதால் வாகனத்தை உருட்டிக்கொண்டு போக வேண்டியிருந்தது.அந்த இடத்தைப் பார்த்ததும் அவனுக்கு திருப்தியாய் இருந்தது.மெல்ல உருட்டிக்கொண்டு தென்புறத்தில் இருந்த பாறைப்பகுதிக்கு வந்தார்கள். வாகனத்தை பாறையின் ஓரத்தில் மறைவாக நிறுத்தச்சொல்லி மெல்லிய குரலில் சொன்னவள் உரத்துப்பேச வேண்டாம் என்றும் சொன்னாள்.வண்டியை  நிறுத்தி சாவியை எடுத்துக்கொண்டவன் அவளைத் தொடர்ந்தான்.வண்டி நிறுத்திய பாறை மறைவிலிருந்து ஓராள் போகுமளவிற்கு சந்திருக்க உட்பகுதியில் நான்கு குத்துப்பாறைகளிடையே மெல்லிய கோரைப்புற்கள் அரைப்பசுமையாய் இருந்தன.படபடப்பைத் தாண்டி அந்த இடத்தைப் பார்க்க ஆச்சரியமாய் இருந்தது.

தரையில் அமர்ந்தவள் இவனை பக்கத்தில் அமரச் சொன்னாள்.கைப்பையில் இருந்த சிறிய தண்ணீர் பாட்டிலை எடுத்து ஒரு மிடறு குடித்தவள் இவனிடம் நீட்ட இவன் வேண்டாமென்றான்.சிகரெட் புகைக்க வேண்டும் போலிருந்தது.இவன் சிகரெட்டை பற்ற வைக்கும்போது அவள் உடைகளை தளர்த்திக்கொண்டு புற்தரையில் படுத்துக்கொண்டாள்.இவன் வானில் தெரிந்த அரைவட்ட நிலவை வெறித்துக்கொண்டே புகைத்தான். நெஞ்சுக்குள் இன்னதென்று தெரியாத ஒரு சலனம் ஊடாட அதன்மேல் சிகரெட் புகையை பரவவிட்டு ஆற்றுப்படுத்தினான்.இரத்தம் உடலுக்குள் வேகவேகமாக பாய்வதை அவனால் உணர்ந்துகொள்ள முடிந்தது.ஓரக்கண்ணால் அவளைப் பார்த்தான்.உடலையும் மனதையும் தளர்த்திக்கொண்ட பாவனையில் அவள் இவனைப்பார்த்து மெலிதாக சிரித்தாள். நிலவின் ஒளி மயக்கிய இருளில் அவள் உடலின் மீப்பெரும் வசீகரம் ஒளிர்ந்தது.

சிகரெட்டை நிலத்தில் நசுக்கி அணைத்துவிட்டு அவளின் புறத்தில் இவன் சரியும்போது வெகு குளிர்மை கொண்ட சிறுகாற்றொன்று அவர்களை நனைத்து பாறைகளின் மேலேறிப்போனது.இருந்தாலும் அவனுக்கு லேசாக வியர்ப்பது போலிருந்தது.ஒரு கணம் கண்களை இறுக்கி மூடிக்கொண்டான்.இவன் விசித்திரமான படபடப்பை உணர்ந்துகொண்டவளாய் அவளே இவன் மீது சரிய அவளை இறுக்கிக்கொண்டான்.எத்தனையோ நீலப்படங்களில் பார்த்திருந்த காட்சிகளும் கதைப்புத்தகங்களில் படித்திருந்தததும் தற்கணத்தில் கைவிட்டுவிட அவளை மேலும் மேலும் இறுக்கிக்கொள்வதைத் தவிர அவனால் ஒன்றும் செய்யவியலவில்லை.அவள் உடலிலிருந்த எழுந்த வாசனை மிக வினோதமானதாக இருந்தது.அது சீயக்காய் மற்றும் வாசனை சோப்பின் மணங்கள் கலந்த கலவையாயிருந்தது.அந்த உடலின் மென்மையோ மட்பாண்டங்கள் செய்வதற்காக குழைத்துப் பதப்படுப்பட்ட ஈரமண்ணைப் போலிருந்தது.

அவன் கரங்கள் அந்த உடலின் முடிவற்ற பாதையில் அலைந்தன. அவனுடைய கண்கள் அந்த உடலை சல்லடையாக சலித்துவிடும் வேட்கையோடு திரிந்தன.அதீத பசியோடிருந்தவனுக்கு ஏனோ உண்ண முடியாத தவிப்பு பரவியது.கண்களை இறுக்கி மூடியிருந்தவன் அவள் முகத்தின் பக்கவாட்டில் கண்ணைத் திறந்தபோது பளீரென்று சில நட்சத்திரங்கள் அவன் கண்களுக்கு மேலே வெகுதூரத்தில் மின்னின.ஒரு நட்சத்திரம் மெல்ல நகர்ந்துபோய் நின்றது.அவன் பிடியிலிருந்த விலகிக்கொண்டவள் அவனை மெதுவாக ஆற்றுப்படுத்தி இதுதான் முதல் தடவையா என்று கிசுகிசுப்பாக கேட்டாள்.அவன் வெட்கியவனாய் தலையசைத்தான்.ஒண்ணும் பிரச்சனையில்ல நான் சொல்றபடி செய்யுங்க என்றாள்.வழிமுறைகளை சொன்னவள் தன் உடலை முழுக்கவும் அவனுக்காக திறந்தபோது அதன் பூரண ஒளியில் அவன் கண்கூசி ஒரு கணம் பார்வை இருளோடு மயங்கியது.வேட்கையோடு அந்த உடலின் மேல் அவன் முழுக்க பாவிய அதே கணத்தில் தளர்ந்து பக்கவாட்டில் சரிந்தான்.அவனிடமிருந்து  நீண்டதொரு இயலாமை பெருமூச்சு கிளம்பியது.அவள் தண்ணீர் புட்டியை திறந்து நீட்டினாள்.அவனுக்கு வெகு தாகமாக இருந்தது.ஒரே மிடறாய் குடித்தவன் ஒரு சிகரெட்டைப் பற்றவைத்துக் கொண்டு மல்லாந்து அவள் பக்கத்தில் படுத்துக்கொண்டான்.அவன் சிகரெட்டை ஆழந்து இழுத்து புகையை வான் நோக்கி செலுத்தினான்.மேற்கே விழுந்து கொண்டிருந்த நிலவால் பாறை நிழல் தரையில் கவிழ்ந்துகொண்டிருந்தது.

முழுக்கவும் பதட்டம் தணிந்திருக்காவிட்டாலும் இப்போது சற்றே நிதானப்பட்டிருந்தவனுக்கு ஒரு வினோதமான சப்தம் கேட்டது.அவர்களின் கண்கள் ஒரு கணத்தில் சந்தித்துக்கொண்டன.மிக மெதுவாக அவன் அவளிடமிருந்து விலகியபோது மீண்டும் அந்த சப்தம் கேட்டது.அதுவொரு கமறல்..பெண்குரலின் கமறல்..ஏதோவொன்றை வெளியேற்ற முயலும் பிரயத்தனம் கொண்டது.அவன் பரபரப்போடு ஆடைகளை சரிசெய்து கொண்டு அவளைப் பார்த்தான்.அவள் உதட்டில் விரல் வைத்து பேச வேண்டாம் என்று சைகை செய்தவாறு ஆடைகளை அணிந்துகொண்டாள்.மேற்கு வானில் நிலவு கீழிறிங்கிக் கொண்டிருக்க அந்தப் பிரதேசம் வேறு எவ்வித ஓசைகளுமற்றிருந்தது.ஒரு ஓணான் பாறையில் ஒட்டியவாறு தலையசைத்துக் கொண்டிருந்தது.

சப்தம் இன்னும் தீவிரமாக கேட்டது.உயிர்க்குலையை நடுங்க வைக்கும் சப்தம்.அவள் மெதுவாக அதன் திசை நோக்கி நடக்க அவளைத் தொடர்ந்தான்.மூன்று நான்கு பாறைகளை கடந்தபின்பு அந்த ஓசை தீவிரமாக கேட்டது.ஒவ்வொரு பாறையை கடக்கும்போதும் அவள் எட்டி எட்டிப் பார்த்துவிட்டு நடந்தாள்.இப்போது அந்த சப்தம் நின்றுபோயிருக்க மெல்லிய முனகல் கேட்டது.சற்றே நிதானித்தவள் முனகல் கேட்ட திசையில் இருந்த இடைவெளியில் மெலிதாய் எட்டிப்பார்த்தாள்.அவள் தோளின் பின்புறமாய் இவனும் எட்டிப்பார்த்தான்.

கண்ட காட்சியில் குலை நடுங்கிப் போனான். பாறை மறைவில் இளைஞன் ஒருவன் சலனமற்றுக் கிடக்க அவன் பக்கத்தில் இளம்பெண்ணின் உடல் தரையில் துடித்துக்கொண்டிருந்தது.இருவரும் அவர்களுடைய செல்போனில் இருந்த டார்ச்சை இயக்கிப்பார்க்க தரையில் கிடந்தவளுக்கும் அசைவின்றிக் கிடந்தவனுக்கும் இடையில் சில குப்பிகள் கிடந்தன.அதை எடுத்து முகர்ந்து பார்த்தவள் முகத்தைச் சுருக்கியவாறே குப்பியை தவறவிட்டாள்.அவன் செல்போன் டார்ச் ஒலியை அந்தப் புட்டிகளின் மீது செலுத்தும்போது அவை பூச்சிமருந்துக் குப்பிகளென தெரிந்தது.

உடல் வெலவெலத்து ஓரடி பின் வாங்கியவன் இவள் கைகளை இழுத்துப் பிடித்து போய்விடலாம் என்பது போல் சைகை செய்தான்.இவனை முறைத்த கண்களின் உக்கிரத்தில் தாக்குண்டு அமைதியாகிவிட்டான்.தரையில் கிடந்தவளின் கண்கள் மிக மெலிதாக திறந்திருக்க அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது.அவள் கடைவாயினோரம் வழிந்திருந்த வாந்தி தரையிலும் சிதறியிருக்க இவள் மெதுவாக அவள் தலையை எடுத்து தன் மடியில் வைத்துக்கொள்ளும் போது இவன் குனிந்து தன் ஆட்காட்டி விரலால் அசைவின்றிக் கிடந்தவனின் உடலைத் தொட்டான்.அது குளிர்ந்துகொண்டிருப்பது போல் தோன்ற விரல்களை மூக்கு நுனியில் வைத்துப் பார்த்தான்.எவ்வித சலன்ங்களும் இல்லை.அந்த உடலில் சட்டையும் சாயம் போயிருந்த லுங்கியும் இருந்தன. அசைவின்றி நிலைகுத்தியிருந்த கண்கள் வானெங்கும் இறைந்து கிடந்த நட்சத்திரங்களை நோக்கியிருந்தன.அவ்வளவு கருப்பாய் அடர்த்தியாய் யாருடைய தலைமுடியையும் இதுவரை அவன் பார்த்ததேயில்லை.அந்த உடல் முழுக்க டார்ச் வெளிச்சத்தை செலுத்திப் பார்த்தவன் பதட்டமாய் இவளைப் பார்த்து உயிர் போயிடுச்சு போலிருக்கு என்றான்.

மெதுவாக நகர்ந்து இவள் பின்புறம் குத்துக்காலிட்டு அமர்ந்தவன் தரையில் கிடந்தவளின் முகத்தின் மீது டார்ச்சை அடித்தான்.அந்தக் கண்களில் இன்னும் உயிர்ப்பு இருக்க இமைகள் கொஞ்சமாய் அசைவதும் தளர்வதுமாய் இருந்தன.அவளின் இடக்கரம் மண்ணை இறுக்கியிருந்தது.இவள் இவனிடம் பக்கத்தில் கிடந்த கைப்பையிலிருந்து நீர்ப்புட்டியை எடுக்கச் சொன்னாள்.கொஞ்சமாய் அவள் முகத்தின் மீது தெளித்தவள் அவள் கடைவாயினோரம்  நீர்ப்புட்டியை சரிக்க தரையில் கிடந்தவள் அவசரமாய் இரண்டு மிடறுகள் விழுங்கினாள்.மூன்றாவது மிடறுக்கு நீர் கடைவாயினோரம் வழிந்தது.இவன் இன்னும் பயமாய் எட்டிப்பார்த்துக் கொண்டிருந்தான்.அவள் உடலில் ஆடைகள் விலகியிருக்க அவள் கழுத்தும் காதும் எவ்வித அணிகலகன்களுமற்றிருந்தன. இவன் பார்வை அந்தப் பெண்ணின் ஸ்தனங்களின் மேலேயே திரும்பத் திரும்ப நிலைகுத்த குற்றவுணர்வில் முகத்தை திருப்பிக்கொண்டான்.

இவள் அவனிடம் ஏதாவது செல்போன் கிடக்கிறதா என்று தேடச்சொன்னாள்.சிதறிக்கிடந்த பூச்சி மருந்துக்குப்பிகளைத் தவிர வேறொன்றும் கிடைக்கவில்லை.மெதுவாக நுனிவிரலால அவன் சட்டைப்பையை தடவிப்பார்த்தான்.அதுவும் வெறுமையாகவே இருந்தது.தன் மடியிலிருந்த அந்தப் பெண்ணின் தலையை எடுத்து மீண்டும் மண்ணில் கிடத்தியவள் எழுந்தவாறே இவனிடம் என்ன பண்றது என்று கேட்டாள்.போகலாம் என்று முனகினான்.இவள் மீண்டும் டார்ச்சை அந்தப் பெண்னின் முகத்தில் அடித்தவாறே குனிந்து பார்த்தாள்.அந்தக் கண்கள் இவளிடம் ஏதோ சொல்ல முயன்றன.வேதனை தாளாமல் அவள் கைகள் மண்ணைக் கிளறிக்கொண்டிருந்தன.இன்னும் உயிர் இருக்கு…எப்படீங்க விட்டுட்டுப் போறது என்றாள் இவனிடம்.

பதிலெதுவும் சொல்லாமல் அவள் கைகளை பிடித்து இழுத்துக்கொண்டு முன்னே நடந்தான்.இவள் திரும்பித் திரும்பிப் பார்த்தவாறே இவன் பின்னால் நடந்தாள்.இது சூசைட் கேசு..அதிலயும் அந்த ஆள் செத்துப்போயிட்டான்…பேசாம போயிடலாம்..இல்லேன்னா தேவையில்லாத சிக்கல மாட்டிக்குவோம் என்றவாறு அவன் வண்டியை விடுவித்து மணற்பாதையில் தள்ளிக்கொண்டு நடந்தான்.இவள் எதுவும் பேசாமல் மெளனமாய் அவன் பின்னால் நடந்தாள்.வாய்க்கால் பாதை வந்தவுடன் வண்டியை அவசர அவசரமாக கிளப்பினான்.மேற்கே நிலவு விழுந்துகொண்டிருக்க நிலவின் ஒளி மங்கி மெல்ல இருள் இன்னும் அடர்த்தியாய் கவிந்துகொண்டிருந்தது.அவள் வண்டியின் பின்புறத்தில் அமைதியாய் அவனுடன் ஒட்டாமல் உட்கார்ந்திருந்தாள்.சீக்கிரம் மெயின்ரோட்டுக்குப் போய்விட்டால் தேவலாம் போல் இவனுக்குத் தோன்றியது.வேகமாக போய்க்கொண்டிருந்தவன் சடாரென வண்டியை பிரேக் பிடிக்க கீழே விழப்போனவள் சுதாரித்து அவன் தோளை பிடித்துக்கொண்டாள்.வண்டியின் விளக்கொளியில் வீம்சான சாரைப்பாம்பொன்று வடக்கிருந்து தெற்கே வேகமாக போனது.அவள் பயத்தில் இவன் தோளை இன்னும் இறுக்கிக்கொண்டாள்.

மெயின் ரோடு வந்தபின்பே நிம்மதியடைந்தவனுக்கு அடையாளமற்ற ஒன்றிற்குள் கரைந்துவிடுவதின் பாதுகாப்புணர்வு தோன்றியது.அவர்கள் சிறிய டவுனை நெருங்கும்போது டீ வேண்டுமா என்று கேட்க அவள் வேண்டாமென்றாள்.அவள் ஏற்றிக்கொண்ட இடம் வரும்வரை அவள் எதுவுமே பேசவில்லை.இடம்  நெருங்கியவுடன் சற்றே இருளான பகுதியில் நிறுத்தச் சொல்லி இறங்கிகொண்டாள்.அவன் அனிச்சையாக பர்ஸைத் திறந்து அவளுக்காக தனியாக வைத்திருந்த பணத்தை எடுத்து  நீட்டியவாறே அங்க நடந்ததை வெளியே எங்கேயும் சொல்ல வேண்டாமென்றான்.தலையசைத்தவாறே பணத்தை வாங்கிகொண்டவள் எண்ணிப்பார்க்காமல் அப்படியே தன் கைப்பையில் வைத்துக்கொண்டு இருளில்  நடந்து மறைந்தாள்.மணி ஒன்பதாகியிருக்க வீட்டிற்குப் போனவன் விளக்குகளை அணைத்துவிட்டு ஒவ்வொரு சிகரெட்டுகளாய் நெடு நேரம் புகைத்துக்கொண்டிருந்தான். அவன் உறக்கத்தில் வந்து மூள்வதற்காக துர்க்கனவுகள் கதவுக்கு வெளியே காத்திருக்க்கத் துவங்கின

**

சிறுகதை – அதி – இந்த இனிய மாலை வேளையில்

சிறுகதை

அதி

 

 

 

இந்த இனிய மாலை வேளையில் 

 

மாலை நான்கு மணிக்கு கூட்டம் ஆரம்பிப்பதாக அறிவித்து இருந்தாலும் காலையிலிருந்தே விழா ஏற்பாடுகள் சீக்கிரமாகவே துவங்கி விட்டன. பத்து மணிக்கு சாமியானா போடுபவர் வந்து

ஒரு மணி நேரத்தில் தன் வேலையை முடித்து விட்டார். அதற்குள் அரங்க மேடை அமைப்பவரும் வந்து தன் பணியை பணியாட்கள் சிலருடன் ஆரம்பித்து விட்டார். அப்பொழுது  பார்வையாளர்கள் அமர்வதற்காக இருக்கைகளும் வந்து சேர்ந்துவிட்டன. இன்னும் ஒலிபெருக்கி, டியூப்லைட் மற்றும் மின்சார வேலையும் ஏற்பாடானது. தவிர தண்ணீர், மேடை அலங்காரம் இத்யாதி விஷயங்கள் நடந்தேறின. மேடையின் முன்புறம் கீழே சிவப்பு வர்ணத்தில் ஒரு நீண்ட சமுக்காளம் அரங்கத்தின் முகப்புவரை போட்டுவிட்டனர். இருபுறமும் அமர இருக்கைகள். ஆக விழா நடக்க எல்லாம் தயார்.

சாலையில் போவோர் வருவோர் திரும்பிப் பார்த்தவாறு சென்றனர். என்ன நடக்கப்போவுது இங்கே என்ற கேள்வியையும் சிலர் கேட்டு வைத்தனர். தள்ளு வண்டியில் பேரிச்சை ஆப்பிள் சாத்துக்குடி போன்ற பழங்கள் வைத்து விற்பவர் முகப்புக்கு அருகே வந்து நின்று கொண்டார். இவரைப்போலவே சைக்கிளில் டீ காபி விற்பவர் வந்து அவ்வப்போது உள்ளே எட்டிப் பார்த்துக் கொண்டார். ஒரு பெட்டியில் விதவிதமான சிகரட் வைத்திருந்தார். பானிபூரி சாட் மசாலா வண்டியும் எதிரில் நின்றுகொண்டது.

நாலேகால் மணி அளவில் இரண்டுபேர் வந்து மேடையின் பின்புறம் ஒரு ஃபிளக்ஸ் பேனரை இழுத்துக் கட்டினர். அதில் சாதனை விருது வழங்கும் விழா எனப் பெரிதாக நீல வர்ணத்தில் அச்சிடப்பட்டு இருந்தது. சிறிது நேரம் கழித்து மூன்று நபர்கள் வந்து வெறுமனே சுற்றிப்பார்த்தனர். எப்போ ஆரம்பிக்கலாம் என்றார் ஒருவர். ஆளுங்க வந்து விடுவாங்க. வந்ததும் ஆரம்பிச்சுடலாம். மெல்ல ஒவ்வொருவராக மற்றும் நண்பர்கள் சகிதம் வந்தனர்.  கூட்டம் இன்னும் ஆரம்பிக்க நேரமாகும் என ஊகித்த சிலர் உள்ளே வராமல் வெளியே கூடிப் பேசிக்கொண்டு இருந்தனர். சிலர் டீ சிகரட் கையுமாக நின்றிருந்தனர். கொஞ்சம் கொஞ்சமாக ஆட்கள் வந்ததும் ஓரளவுக்கு அரங்கம் நிரம்ப ஆரம்பித்தது. சரி நேரமாயிட்டே போவுது. ஐந்தரை மணி. வாங்க எல்லோரும் என ஒருவர் கை அசைத்து உள்ளே சென்ற சில நிமிடங்களில் கூட்டம் துவங்கியது ஒருவழியாக.

மேடையில் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் விழா நடத்தும்  அமைப்பைச் சேர்ந்தவர்களில் முக்கியமானவர்கள் என கருதப்படுபவர்கள் அமர்ந்துகொண்டனர். தலைவர் செயலாளர் பொருளாளர் போன்ற பொறுப்பில் இருப்பவர்கள் அவர்கள். இவர்களுடன் விழாவிற்கான பெரும் செலவை ஏற்றுக்கொண்ட உள்ளூர் பிரமுகருக்கும் மேடையில் இடம் தரப்பட்டிருந்தது. மேடையில் அமர்ந்திருப்பவர்களில் நடுநாயகமாக சிறப்புப் பேச்சாளரையும் அவருக்கு வலது புறத்தில் விருது பெற வந்த சிறப்பு விருந்தினரையும் அமரச் செய்திருந்தனர். இதே வரிசையில் ஓரமாக ஒரு மடக்கு நாற்காலி போட்டு அதில் அமர்ந்திருந்தவர் எழுந்து மைக் எதிரில் நின்று தமிழ்த்தாய் வாழ்த்து இப்பொழுது என்றதும் எல்லோரும் எழுந்து நின்றனர்.

அரங்கத்தில் சில நாற்காலிகள் நகர்த்தப்படும் ஓசை எழுந்தது. ஒலிநாடா வாழ்த்துப் பாடலை பாடி முடித்ததும் நாற்காலிகளில் அமர்ந்து கொண்டனர். சிலர் பார்வைக்கு ஏற்றாற்போல் நாற்காலிகளை தள்ளிப் போட்டு அமர்ந்தனர். சிறப்பு விருந்தினரின் குடும்பத்தினரை பார்வையாளர்களின் வலப்பக்க முன் வரிசையில் அமர வைத்தனர். வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பவர்கள் மேடையின்கீழ் நின்றுகொண்டனர். மேடையில் இருக்கும் ஒவ்வொரு தலையும் தங்களுக்குள்ளாகவே மாற்றி மாற்றி பொன்னாடை அணிவித்துக் கொண்டனர். இவருக்கு அவர் அவருக்கு இவர் என சந்தன மாலையும் அணிந்து கொண்டனர். புகைப்படம் எடுப்பவர் கேட்டுக் கொண்டபடி சிலசமயம் பொன்னாடை போர்த்துவதுபோலவும் மாலை அணிவிப்பதுபோலவும் மீண்டும் மீண்டும் ஒத்திகை நடத்தி வீடியோவிலும் புகைப்படத்திலும் பதிவு செய்துகொண்டனர்.

வரவேற்பு, அறிமுகம் மற்றும் கௌரவப்படுத்திக்கொள்ளும் செயல்கள் முடிந்த பின் விழாத்தலைவர் எழுந்து மைக்கைப் பிடித்து பேசத் துவங்கினார். அப்பொழுது வெள்ளை ஆடையில் ஒருவர் அரங்கில் நுழைந்து பார்வையாளர்களுக்காக போடப்பட்ட நாற்காலிகளின் முன்வரிசை நடுவில் அமர இடம் தேடினார். இடம் காலி இல்லை என அறிந்து சில வரிசை பின் சென்று அமரப் போனார். அதற்குள் மேடையில் ஓரமாக அமர்ந்து இருந்தவர் கீழே இறங்கி வந்து முன் வரிசை நடுவில் ஏற்கனவே அமர்ந்திருந்தவரிடம் காதில் ஏதோ சொன்னதும் அவர் விருப்பமில்லாமல் எழுந்து கடைசி சில வரிசைகள் ஒன்றில் போய் அமர்ந்து கொண்டார். பிறகு மேடையில் இருந்தவர் அந்த வெள்ளைஆடை நபர் கையைப் பற்றி இழுத்து வந்து முன் வரிசை நடுவில் அமரச் செய்து மேடை ஏறிக் கொண்டார்.  முன் வரிசையில் தன்னை அமரச் செய்த மகிழ்ச்சியை பற்கள் தெரிய அவர் தலை அசைத்துக் கொண்டார். பற்களில் இரண்டு தங்க நிறத்தில் வெற்றிலைக் கறையுடன் பளிச்சிட்டன.

இந்த இனிய மாலை வேளையிலே என தன் பேச்சைத் துவங்கிய தலைவர் முதலில் தன் பராக்கிரமங்களை அடக்கமாக வெளிப்படுத்திக்கொண்டார். பின் சாதனை விருது ஏன் எதற்காக வழங்குகிறோம் என்ற நீண்ட பட்டியல் ஒரு அரைமணி நேரம்  சொல்லி இவை அனைத்திற்கும் பெற வந்திருக்கும் சாதனையாளர் மிகவும் பொருத்தமானவர் என்பதை எடுத்துக் கூறி பல முக்கிய பணிகளுக்கிடையில் நேரம் ஒதுக்கி இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக குறுகிய கால அவகாசத்தில் அழைப்பை ஏற்று வெகு தொலைவிலிருந்து வந்திருக்கும் சிறப்புப் பேச்சாளரை பேச அழைத்து தன் இருக்கையில் அமர்ந்து கொண்டார். மேடையில் அமர்ந்திருப்பவர்கள் அவ்வப்போது பக்கத்தில் ஒருவரை ஒருவர் பார்த்து எந்தக் காரணமுமின்றி புன்னகைத்துக் கொண்டனர்.

சிறப்புப் பேச்சாளர் சிறிது தண்ணீர் குடித்து மெல்ல எழுந்து மைக் எதிரில் நின்று ஒருமுறை கனைத்துவிட்டு விழாத்தலைவர் அவர்களே என்று ஆரம்பித்து பின் மேடையில் இருக்கும் ஒவ்வொருவரையும் விளித்துத் தன்னைச் சிறப்புப் பேச்சாளராக இருக்க வேண்டும் என்ற அன்பின் அழைப்பை தன்னால் தவிர்க்க முடியாத மன நிலையில் பல சிரமங்கள் ஏற்று வந்திருப்பதாக விவரமாக பேச ஆரம்பித்தார்.   பார்வையாளர்களில் சிலர் எழுந்து வெளியே போக ஆரம்பித்தனர். விழாவுக்கு வந்திருந்த பெண் பார்வையாளர்கள் இரண்டு வரிசைகளில் அமர்ந்திருந்தனர். அவர்கள் யாரும் எங்கும் எழுந்து போகவில்லை. முன் வரிசை நடுவில் அமர்ந்திருந்த தங்கப்பல் வெள்ளை ஆடை உடுத்தியவர் அவ்வப்பொழுது அலைபேசியில் பேசியபடி இருந்தார்.

சிறப்புப் பேச்சாளர் வெகுநேரம் எதை எதையோ பேசியபின் இந்த விழாவில் விருது பெற வந்திருக்கும் சிறப்பு விருந்தினர்மேல் தன் கவனம் பதித்தார். அவருடைய ஆளுமை, அயராத உழைப்பு, நேர்மைக் குணம், சீரிய பண்பு, சமூக சிந்தனை, சொல் ஆற்றல், வற்றாத செயல் திறம், உயர்ந்த இலட்சியம், அளவற்ற அன்பு, நட்பு, பாசம், மனித நேயம் என அனைத்துப் பரிமாணங்களையும் ஒவ்வொன்றாக  சரளமாக விளக்கி அடுக்கிக்கொண்டே போனார். சிறப்பு விருந்தினர் முகத்தில் எவ்வித சலனமும் காட்டிக்கொள்ளாமல் மௌனமாக புகழ் மழையில்  நனைந்து கொண்டிருந்தார். அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் இவரைப் பார்த்து புன்னகைத்தனர். பிறகு தங்களுக்குள்ளாக எதையோ மெல்லிய குரலில் பேசிக்கொண்டு திடீரென பற்கள் தெரிய சத்தமாக சிரித்தனர். உடனே சுதாரித்துக் கொண்டு பலமாக சேர்ந்து கை தட்டினர். பர்வையாளர்களில் பலரும் உடன் கைதட்டினர். தங்கப்பல் வெள்ளைஆடை அலைபேசியில் பேசியபடியே எழுந்து வெளியே போனார். சிறப்புப் பேச்சாளர் சிறப்பு விருந்தினரை நோக்கி சாதனை விருது இவருக்குச் சாலவும் பொருந்தும் அதை வழங்கும் இவ்விழாவில் தான் கலந்துகொள்வது தனக்குப் பெருமை அளிப்பதாக அறிவித்துக் கொண்டார். ஏறத்தாழ ஒருமணி நேரம் நீண்ட சொற்பொழிவை முடித்து இருகைகளையும் உயரே தூக்கி நன்றி வணக்கம் சொல்லியபடி தன் இருக்கையில் சென்று அமர்ந்துகொண்டார். எதிரில் வைக்கப்பட்டுள்ள தண்ணீர் எடுத்து மடமடவென குடித்தார். விருது பெற வந்த சிறப்பு விருந்தினர் இவருடைய இருகைகளையும் இறுகப்பற்றி குலுக்கி தன் நன்றியையும் சந்தோஷத்தையும் தெரிவித்துக்கொண்டார்.

மேடையில் இருப்பவர்களுக்கு பிஸ்கட் டீ போன்றவை பேப்பர் பிளேட்டில் வைத்து உபசரித்தனர் அமைப்பின் இரண்டு உறுப்பினர்கள். முன்பு வெளியே எழுந்து போன பார்வையாளர்கள் வாயில் எதையோ மென்றபடி உள்ளே வந்து ஏற்கனவே அமர்ந்த இடத்தில் இல்லாமல் கிடைத்த வேறு நாற்காலிகளில் அமர்ந்து தங்களுக்குள்ளாக பேசிக்கொண்டிருந்தனர். அவர்களிடமிருந்து சமோசா வாசனை வந்தது. தங்கப்பல் வெள்ளைஆடை அரங்கத்தின் வெளியே நின்று வெகு நேரம் அலை பேசியில் பேசிக்கொண்டிருந்தவர் திரும்பவும் உள்ளே வரவேயில்லை.  எப்பொழுது அந்த இடம்விட்டு நகர்ந்து சென்றார் என்பதிலும் யாரும் கவனம் கொள்ளவில்லை.

விழாத்தலைவர் எழுந்து, வெகு ஆவலாக இதுவரை காத்திருந்த நேரம் வந்துவிட்டது. சாதனை விருது பெற்றுக்கொள்ள நம்முடைய சிறப்பு விருந்தினரை எங்கள் அமைப்பின் சார்பாக அழைக்கிறேன் என்று பலமாகக் கைதட்டினார். சிறப்பு விருந்தினர் எழுந்திருக்கும் அந்த நேரத்தில் அமைப்பின் உறுப்பினர் ஒருவர் ஒரு பெரிய தட்டில் பிஸ்கட்களை வைத்து பார்வையாளர்கள் முன் காண்பித்துக்கொண்டே சென்றார். விரும்பியவர்கள் எடுத்துக் கொண்டனர். அவர்பின் இன்னொரு உறுப்பினர் பேப்பர் கப்பில் டீ தந்து கொண்டே சென்றார்.

மேடையில் விழாத்தலைவரும் உள்ளூர் பிரமுகரும் சிறப்புப் பேச்சாளரும் சேர்ந்து சாதனை விருதை சிறப்பு விருந்தினர் கழுத்தில் அணிவிக்கும் அதேநேரம் செயலாளர் பொருளாளர் இவர்களும் எழுந்து வீடியோவுக்கும் புகைப்படத்திற்கும் போஸ் கொடுத்தபடியே நின்றனர்.  இந்த விருது தங்கமுலாம் பூசப்பட்டு உள்ளங்கை அளவு வட்டமாக இருந்தது. அதில் மேற்புறம் உள்ள  சிறு துளையொன்றில் தங்க நிறத்தில் ஒரு சிறிய சேஃப்டிபின் நுழைத்து வழவழப்பான நீல வர்ண ரிப்பன் ஒன்றுடன் இணைத்திருந்தனர். எதிர்பாராமல் ரிப்பனில் இணைத்த  சேஃப்டிபின் கழன்று, விருது மேடையில் விழுந்து, வட்டமாக இருந்ததினால் உருண்டு மேடைமேலிருந்து கீழே அப்படியே முன்னால் விரித்த சிவப்பு சமுக்காளத்தின்மேல் இன்னும் வேகமாக உருண்டபடியே சென்றது. யாரும் இதைப் பார்க்கவில்லை. விழாத்தலைவர் மட்டும் பார்த்து சிறப்பு விருந்தினரிடம் உங்க விருது உருண்டு கீழே ஓடுது பாருங்க. சீக்கிரம் அதைப் பிடிங்க யாராச்சும் என விரட்டினார்.  விருது பெற்றவரும் மேடையிலிருந்த பொருளாளரும் சிலரும் கீழே இறங்கி ஓடாத குறையாக வேகமாகச் சென்றனர். ஏன் இவர்கள் அவசரமாக வெளியே போகிறார்கள். யாராவது பெரும்புள்ளியை வரவேற்கப் போகிறார்களா என்று பார்வையாளர்களில் சிலர் திரும்பி இவர்களையே பார்த்தபடி அமர்ந்திருந்தனர். அதற்குள் விருது அரங்கம்விட்டு வெளியே உருண்டோடி எங்கோ மறைந்தது.

அரங்கத்தின் முகப்பில் நான்கைந்து டியூப்லைட்கள் போடப்பட்டு நல்ல வெளிச்சமாக இருந்தது. ஆனாலும் உருண்டு வந்து எங்கே போய் விழுந்திருக்கும் எனத் தெரியவில்லை. உள்ளேயிருந்து விருது தேடவந்தவர்களை தள்ளுவண்டிக்காரர் பார்த்ததும் வாங்க சார் ஆப்பிள் ஃப்ரெஷ்ஷா இருக்கு. சிம்லா ஆப்பிள். கிலோ நூத்திஅம்பது ரூபா. நூத்திநாப்பதுக்கு எடுத்துக்குங்க எனக் கூறினார். யாரும் பதில் தரவில்லை. எல்லோர் கண்களும் விருதைத் தேடியபடி இருந்தன. பழக்காரர் விடாமல் இல்லன்னா சாத்துக்குடி வாங்கிக்குங்க நல்லா ஜூஸ் வரும் புளிக்காது நான் கேரண்டி எவ்ளோ சார் வேணும் என்று திரும்பத்திரும்ப நச்சரித்துக்கொண்டேயிருந்தார். அப்பொழுது  விருது சிறப்பு விருந்தினர் பார்வையில் பட்டுவிட்டது. அது பழங்கள் உள்ள தள்ளுவண்டியின் கீழே கொஞ்சம் மண்ணில்  மறைந்து தெரிந்தது. இதோ இங்கிருக்கு என ஆவலாக  தள்ளுவண்டியின் அருகே சென்றார் அவர். உடனே பழக்காரர் வாங்க ஐயா என்னா வேணும் ஒரு கிலோ போடட்டுமா என்று கேட்க அவர் ஒண்ணும் வேண்டாம்ப்பா. இதெ எடுக்கத்தான் வந்தோம் என்று பதில் கொடுத்தபடியே வண்டியின் கீழே குனிந்தார். பழக்காரர் வியாபாரம் செய்வதிலேயே குறியாக இருந்தார். ஐயா இந்த பேரிச்சம் பாக்கெட்டாவது வாங்கிக்குங்க அரகிலோ கால்கிலோ ஏதாச்சும் எடுத்துக்குங்க எனக் கெஞ்சினார். சரி அப்புறம் கூட்டம் முடிஞ்சப் பின்னால் வந்து வாங்கிக்குறோம் என்று பொருளாளர் குரல் கொடுத்தார்.

ஐயா, நீங்க நகருங்க நான் எடுத்துத் தர்றேன் என்று யாரோ உதவ வந்தவருக்கு, பரவாயில்லெ இங்கதான் இருக்கு. எடுத்துட்டேன் என்று மேலும் குனிந்தபோது அவருடைய வேட்டிநுனி தடுக்கி கீழே சாயப்போனவர் சுதாரித்து மண்டியிட்டு சமாளித்துக் கொண்டார். உள்ளே கைவிட்டு மண்ணிலிருந்து விருதை எடுக்கும்பொழுது கன்னத்தில் கொஞ்சமாக மண் ஒட்டிக்கொண்டது. ஐயா, நல்லதாப் போச்சு உங்க கையாலயே திரும்ப எடுத்துக்கிட்டீங்க. வாங்க வாங்க உள்ளே போகலாம் என்று பக்கத்தில் நின்றவர் அழைத்தார். இதுக்கா இவ்ளொ கஷ்டப்பட்டீங்க, சொல்லியிருந்தா நான் எடுத்துத் தந்திருக்கமாட்டேனா என்றார் பழக்காரர். யாரும் கண்டு கொள்ளவில்லை. எல்லோரும் சாகசம் புரிந்த பாவனையில் அரங்கத்தின் உள்ளே போனார்கள். அப்போது உள்ளூர் தொலைக்காட்சி நிருபர் கையளவே இருக்கும் காமிரா ஒன்றையும் பேண்ட் பின் பாக்கெட்டில் பேனாவும் சிறிய நோட்டும் வைத்துக்கொண்டு அரங்கத்திற்குள் வந்தார். ஒருவகையில் நிருபர் தாமதமாக வந்ததும் நல்லதுதான் என்று விழாத்தலைவர் மனசுக்குள் சொல்லிக்கொண்டார். ஐயா வாங்க, மேடையில் இருந்தவங்க எல்லோரும் மேலே வாங்க எனத் தலைவர் அழைத்தார். விருதில் ஒட்டியிருந்த தூசி, அழுக்கு நன்றாகத் துடைத்து சிறப்பு விருந்தினர் கழுத்தில் இருக்கும் நீல வர்ண ரிப்பனுடன் மீண்டும் சேஃப்டிபின் கொண்டு இணைத்து ஒருமுறை இழுத்துப் பார்த்து மேடையில் நின்று கொண்டனர். திரும்ப ஒருமுறை விருது தருவது போலவும் பெறுவது போலவும் தொலைக்காட்சிக்காக ஒத்திகை மேற்கொண்டனர். விழாத்தலைவரிடம் சிறு குறிப்பு ஒன்றையும் பெற்றுக்கொண்டு தொலைக்காட்சி நிருபர் சீக்கிரத்தில் கிளம்பிச் சென்றார். பத்துமணி செய்திகளில் ஒளிபரப்பாகும் என்றார்.

விருது கீழே உருண்டு சென்றது அதைத் தேட விருது பெற்றவர் உட்பட சிலர் வெளியே போனது திரும்பக் கிடைத்தது போன்ற எதுவும் நிறைய பார்வையாளர்களுக்குத் தெரியவில்லை என்றாலும் அவர்கள் மத்தியில் வேறுவேறு வடிவங்களில் புதுப்புதுக் கதைகள் உருவாயின. அங்கங்கே கசமுசா என பேச்சு எழுந்து கூட்டத்தில் சத்தம் கூடியது. விழாத்தலைவர் எழுந்து எல்லோரும் கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டிக்கொள்கிறேன். இப்பொழுது சிறப்பு விருந்தினர் தம்முடைய ஏற்புரையை வழங்க அன்புடன் அழைக்கிறேன் என்று சொல்லி விட்டு செயலாளர் பக்கம் திரும்பி இவர் பேசி முடிச்சதும் நீங்க நன்றியுரை பார்த்துக்குங்க எனக் கையால் சைகை செய்து திரும்பிக்கொண்டார்.

விருதுபெற்ற விருந்தினர் பணிவுடன் அவருக்கு வணக்கம் சொல்லிவிட்டு தன் உரையை வழங்கலானார். தான் எதையும் சாதித்துவிட்டதாக இதுவரை நினைத்ததில்லை. இன்னமும் தான் செய்யவேண்டியது நிறைய இருக்கிறது என்றபோதும் தன்னை இந்த விருதுக்குத் தேர்வு செய்து இருப்பதாக இவ்வமைப்பின் தலைவர் தன்னைத் தொடர்பு கொண்டு அறிவித்தபோது இவர்கள் தன்மீது வைத்திருக்கும் அன்பிற்கும் மரியாதைக்கும் அடிபணிந்து ஏற்றுக்கொள்ள ஒப்புதல் வழங்க முடிந்ததே தவிர தான் போகும் பயணத்தில் விருது வாங்குவதுபற்றிய சிந்தனை எப்பொழுதும் தனக்கு எழுந்ததில்லை என்று ஒரு வாக்குமூலம் தந்தார். மேலும் தன்னைப் பாராட்டிப் பேசிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருப்பதாகக் கூறித் தன் உரையை சுருக்கமாக பதினைந்து நிமிடங்களில் முடித்துக்கொண்டார். மீண்டும் பார்வையாளர்கள் மத்தியில் சிறு சலசலப்பு தோன்றியது. அப்பொழுது தலைவர் செயலாளரைப் பார்த்தார்.

செயலாளர் எழுந்து  மைக் அருகே சென்று நன்றியுரையைத் துவக்கினார். அவர் பேசிக்கொண்டு இருக்கும்பொழுது பார்வையாளர்களில் ஒருவர் எழுந்து கூட்டம் முடிக்கும் முன்பு ஒரு விளக்கம் தர வேண்டுகிறேன் என்றதும்  அருகில் அமர்ந்திருந்தவரும் அவருக்குச் சாதகமாக குரல் எழுப்பினார். பதட்டமில்லாமல் செயலாளர் அவர்களை நோக்கி என்ன விளக்கம் வேண்டும் உங்களுக்கு எனக் கேட்டார். அதற்கு அவர் விருது உருண்டு போனது நிறைய பேருக்குத் தெரியாது. அதுமட்டுமல்ல சிறப்பு விருந்தினரையே இறங்கிச்சென்று எடுக்க வைத்தது தவிர்த்திருக்கலாமே என்றார். செயலாளர் அதற்கு, இது எதிர்பாராமல் நடந்துவிட்டது. இனி வருங்காலத்தில் இதுபோல் நடக்காமல் பார்த்துக்கொள்வோம் என்றார். உடனே பார்வையாளர்கள் நடுவிலிருந்து, வேண்டுமென்றால் இப்படிச் செய்யலாம். முன்கூட்டியே விரித்துப் போட்டிருக்கும் நீண்ட கம்பளத்தின் இருபக்கமும் பத்தடிக்கு ஒருவரை அமரச் செய்து அவரவருடைய எல்லையில் விருதைப்பெற்றவர்க்குப் பதிலாக உருண்டு வரும் விருதைத் தடுத்து அதிக தூரம் உருண்டு போகாமல் இருக்கச் செய்யலாம். இதனால் கூட்டமும் தடைபடாது என ஒருவர் தன் கருத்தை முன்வைத்தார். பின்பக்க மூலையிலிருந்து யாரோ கூச்சலிட்டனர். வேண்டாம் இது. முன் கூட்டியே விருது எந்தத் திசை நோக்கி ஓடும் என முடிவு செய்ய இயலாது. அதனால் விருதைக் கேடய வடிவில் செய்து விடலாம் என்றது கூட்டத்தில் ஒரு குழு. எதிர் திசையிலிருந்து ஒருவர் எழுந்து அதெப்படி, விருது எப்பவும் கழுத்தில்தான் அணிவிக்க வேண்டும். அதனால் உருண்டு ஓடாமல் இருப்பதற்காக கேடயமாய் செய்வதைவிட விருதை சதுரமாகவோ அல்லது செவ்வகமாகவோ அமைத்துவிட்டால் சௌகரியமாக இருக்கும். அப்படியே மேடையிலிருந்து கீழே விழுந்தாலும் தூரமாய் ஓடிப் போகாது. உடனே எடுத்து விடலாம் என்றார். பெண் பார்வையாளர்களில் சிலர் கையால் வாயை மூடிக்கொண்டு தலை குனிந்து சிரித்துக் கொண்டனர்.

சிறப்பு விருந்தினர் தள்ளுவண்டியின் கீழ் குனிந்தபோது உதவ முன் வந்த அதே குரல், வேண்டும் என்றால் இப்படிச் செய்தால் என்ன, நவீன பாணியில் விருதை எந்தக் குறிப்பிட்ட வடிவம் என்றில்லாமல் ஒவ்வொருமுறை வழங்கும்போதும் புதுப்புது மாடலில் அமீபா போலச் செய்து அணிவிக்கலாம். தவறி விழுந்தாலும் மேடையின்மீது காலடியில்தான் கிடக்கும். குனிந்து அப்படியே எடுத்துக்கொள்ளலாம். எடுக்கும்பொழுது முக்கியமா மண் ஒட்டாதில்லே எனச் சற்றே தாழ்வான குரலில் ஒரு புதுக் கருத்தை மொழிந்தது. விழாத்தலைவர் பொறுமை இழந்து ஆளாளுக்கு பேசிக்கிட்டே போனா நல்லாவா இருக்கு என்று சொன்னதும் சலசலப்பு அடங்கியது. எந்தக் கருத்தை சொல்வதென்றாலும் இந்தக் கூட்டத்தில் இப்பொ வேண்டாம். அதுக்குன்னு செயற்குழு கூட்டம் இருக்கு. அங்க உங்க கருத்தை பார்வைக்கு கொண்டுவந்து நல்ல முடிவு எடுப்போம். இப்போ கூட்டத்தை நடத்துறதிலே கவனம் குடுங்க. சிறப்புப் பேச்சாளர் இரவு ஒன்பது மணிக்கு ட்ரெயினைப் பிடிக்கணும். இப்பவே மணி எட்டரையாவுது. செயலாளரே, சீக்கிரமா நன்றியுரையை முடிங்க என்று செல்லமாகக் கட்டளையிட்டார் விழாத்தலைவர். அவரும் சில நிமிடங்களில் பேசி முடித்ததும் கூட்டத்தின் ஆரம்பத்தில் மேடையில் மடக்கு நாற்காலியில் அமர்ந்திருந்த நபர் மேடையின் பின்னாலிருந்து ஓடிவந்து மைக் முன்பு நின்று தேசியகீதம் என்றார். சிறிது நேரத்தில் ஒலிநாடா தேசியகீதம் முழங்க எல்லோரும் எழுந்து நின்றனர்.

பி.கு:  விருது பெற்ற விருந்தினர் தம் குடும்ப சகிதம் விழாத் தலைவர், விழாக்குழு மற்றும் எல்லோருக்கும் கைகூப்பி வணக்கம் கூறி பிரியாவிடை பெற்று அரங்கம் வெளியேறினார். அவர் குடும்பத்தினர் கையில், அணிவித்த பொன்னாடையும் மாலையும் ஒரு கேரிபேக்கில் நிறைய ஆப்பிள்களும் பேரிச்சை பாக்கெட் ஒன்றும் இருந்தன. அவர்களை அழைத்துச் செல்ல ஒரு கார் தயார் நிலையில் நின்றிருந்தது. பழங்கள் விற்பவர் புன்னகையுடன் தள்ளு வண்டியை நகர்த்திச் சென்றார்.

*

சிறுகதை – பா.ராஜா – கேளா இசைச்சொல்

பா.ராஜா

 

 

 

 

 

 

 

கேளா இசைச்சொல்

ஓசைகளற்ற வெளியென விடிந்திருக்கிறதவன் உலகம். நிசப்தங்களின் மையத்தில் நின்றுகொண்டிருக்கிறான் அவன். ஒரு குண்டூசி கீழே விழுதல் போலான சத்தத்தை அந்த ஊசியைக்கொண்டே பாதத்தில் குத்திக்குத்தி உணருகிறான். சிறு சிறு ஒலிகளெல்லாம் எவர் அனுமதியுமின்றி அவனுலகத்தினுள்ளிருந்து கடந்த பத்தாண்டுகளில் கொஞ்சங் கொஞ்சமாய் வெளியேறிச்சென்றிருக்கிறது. பேரோசைகள் யாவும் தன்னையொரு சிறுவனென காண்பிக்கும் விதமாய் மெலிந்து போயிருக்கிறது.

கடிகாரத்தின் நடுமுகத்தில் உள்ளங்கை பதித்துத்தான் நொடி முள்ளோசையை உணருகிறான். குழாயிலிருந்து கசிந்தொழுகும் நீர்ச்சொட்டுகள் ஒவ்வொன்றையும் ஓர் எழுத்தென கையிலேந்தி தனக்குப்பிடித்த வாக்கியமொன்றாய் அதனையமைத்து உலகதிர உக்கிரமாய் உரக்கக்கத்துகிறான்.

பேரமைதியால் கட்டமைக்கப்பட்டிருக்கும் இந்த வனாந்தரம் வழக்கமாய் அவன் சுற்றித்திரிவதுதான் என்றாலும் இன்றவனுக்கு அது பெரும் அலுப்பையூட்டின. சிறகடிக்கும் ஓசைகளையும், கீச்சுக்குரல்களையும் ஊதாரித்தனமாய் வேறெங்கோ செலவளித்துவிட்டு ஓய்வெடுக்க மட்டுமே இங்கு வந்து குவியும் பறவைகளை கொன்று குவிக்க வேண்டும் போலிருக்கிறது. எப்போதும் தவத்திலிருப்பதைப்போல் இந்த மரங்களிடம் அமைதி அமைதி மகா அமைதி, அதிலுமிந்த கொன்றை மரம் சரியான கல்லுனி மங்கனாய் இருக்கிறது. எத்தனை நேரம் அவன் பேசினாலும் ஒரு உம் கொட்டுவதில்லை. ஒரு பதில் வார்த்தை பேசுவதில்லை. மௌனங்களையே விரும்பியணிந்துக் கொள்ளும் இந்த மரங்களை வெட்டிவீழ்த்த வேண்டுமென்ற வெறி சூழ்கிறது அவனுக்கு.

புலிகளின் உறுமலில்லை, யானையின் பிளிறல்களில்லை, சிங்கத்தின் கர்ஜனையில்லை, சர்ப்பத்தின் சீற்றலில்லை, ஓநாயின் ஊளையில்லை, இதென்ன வனாந்தரம். ஒலிகளை, ஓசைகளை, துறவிலேற்றிவிட்டு நிர்வாணம் தரித்து நிற்கும் இதென்ன அடர்ந்தக்காடு. கூடாது இனி இங்கே வரவேக்கூடாது. போயும் போயும் என் பெரும்பாலான பொழுதைக்கழிக்க இந்த இடத்தையா நான் தேர்வு செய்திருக்க வேண்டும். தொலை தூரத்தில் தென்படும் அருவிகூட மௌனத்தின் மதகுருவிற்கு கட்டுப்பட்டதைப்போல, கைக்கட்டி உதட்டின் மேல் விரல் வைத்து, சின்னதாய் ஒரு முனகல் கூட இல்லாமல் வானத்தின் வாலென தலைகீழாய்தொங்கிக் கொண்டிருக்கிறது. இனி இங்கு வரக்கூடாது என்று நினைத்தான்.

தானிருக்கும் இடத்தில் ஒரு குட்டிப்பிரளயம் நிகழ்ந்துகொண்டேயிருக்க வேண்டும், ஆலைச்சங்கொலி அலறிக்கொண்டேயிருக்க வேண்டும். அவசர ஊர்திகள் பேரொலியுமிழ்ந்து பிற வாகனங்களை விலக்கிக்கொண்டு விரைந்தோட வேண்டும். ஒரு குட்டி ஹெலிக்காப்டா; மிகவும் தாழப்பறக்க வேண்டும். தன்னோடுப்பேசும் யாவரும் கை ஜாடையே பயன்படுத்தக்கூடாது என்றும். ஒலிகளுக்கும் தனக்குமான இடைவெளிகள் தீரவேண்டும் என்றும் விரும்பினான்.

அவனோடுப்பேசுவதற்கும், அவன் பேசுவதற்கும் ஒருவருமற்றதான உலகமும், வாழ்வும், அடிக்கடியவனை அந்த வனம் நோக்கிச்செல்லுத்தி விளையாடிக்கொண்டிருந்தது. அந்த விளையாட்டும் இன்றோடு முடிவிற்கு வந்திருக்கிறது அவனை தோற்கடித்தபடி. அங்கிருந்து வரும்போது, விஞ்ஞான வளர்ச்சி அந்த நடுக்காட்டில் செல்போன் கோபுரமொன்றை நட்டு வைத்திருப்பதைப்பார்த்து அங்கேயே ஒரு கணம் நின்றான். ஏற்கனவே பார்த்துதான் என்றாலும்கூட இன்றவனுக்கு அது வேறொரு முகத்தைக்காட்டியது. வனத்தை வெறுத்த அவனை அது ஈர்த்தது. கையசைத்து அழைத்தது. அருகில் சென்று பார்த்தவனுக்கு அதன் மீது ஏறவேண்டுமென்ற ஆசையெழுந்தது. தன் செவிதீண்டாமல் புறக்கணிக்கும் ஓசைகளும் சொற்களும், தனக்கெட்டாமல்ப் போகும் சத்தங்களும், வெகு உயரத்தில் காற்றில் மிதந்து கொண்டிருக்கும். வானத்தைதொடும் கூர்மையோடு நிற்கும் இக்கோபுரத்தின் உச்சிப்பகுதிக்குச் சென்றால், நம்மை விட்டுவிலகிப்போன அவைகள் நம் வசப்படலாம் என நினைத்ததும், மேலே ஏறவேண்டுமென்ற ஆசை மேலும் வலுப்பெற்றது.

அண்ணாந்து மேலேப்பார்த்தான். அதன் உயரமவனுக்கு அச்சமூட்டுவதாயிருந்தது. அச்சமயம் அவனைத்தடுக்க யாருமிருக்கவில்லை அங்கு. மனதை திடப்படுத்திக்கொண்டு, அதன் ஒவ்வொரு வளைவுகளையும் படிக்கட்டுகளெனப்பயன்படுத்தி, ஒரு மந்தியைப் போல் ஏறி அதன் பாதி உயரத்தை அடைந்து, அங்கிருந்து கீழே பார்த்தான். அச்சத்தின் அசலை பல நகல்கள் எடுத்ததாய் அதிகரித்திருந்தது.

அத்தனை உயரத்தில் அமர்ந்திருந்தும் கூட அவனைச்சுற்றிலும் ஒரு மயான அமைதி. கோடிக்கணக்கானச் சொற்களையும், லட்சக்கணக்கானவர்களின் உரையாடல்களையும், உள்வாங்கி உரியவருக்குச் சேர்ப்பிக்கும் அலைபேசி கோபுரத்தில் அமர்ந்திருக்கிறான், ஒரு சின்ன சத்தம் கூட, ஒரு வார்த்தைகூட அவனுக்கெட்டவில்லை. இங்கிருந்து குதித்து விடலாம் என்று கூட ஒரு எண்ணம் தோன்றி மறைகிறது. ஒரு பறவை அந்த கோபுரத்தில் அமர்வதும் பின் பறப்பதுமாய் மிக உற்சாகமாய் விளையாடிக் கொண்டிருக்கிறது. ஒரு வேளை அவன் அங்கிருந்து குதித்துவிட தீர்மானித்திருந்தால்கூட, தடுத்து நிறுத்தும் படியான எவ்வித குறிப்பும், செய்கையிலோ அசைவுகளிலோ சிறிதும் வெளிப்படுத்தாதபடி அது விளையாடிக்கொண்டிருக்கிறது. ஏதோவொரு எதிர்பார்ப்பினில் மேலேறி வழக்கம் போலான ஏமாற்றத்தைச் சந்தித்துவிட்டதில் பொழுதும் சோர்வடைந்தவன் கீழிறங்க ஆயத்தமானான். ஒவ்வொரு அடியாய் மிகக்கவனமாய் சறுக்கிவிடாதபடியான ஜாக்கிரதை உணா;வுடன் கீழிறங்கிக் கொண்டிருக்கிறான். ஏறும்போது இத்தனை உயரமாகவா இருந்தது இந்த கோபுரம், என்ற கேள்வி அவனுள் குடைந்து கொண்டே அவனுடன் கீழிறங்கிக்கொண்டிருக்கிறது. உச்சத்திற்கு செல்ல முயன்று மேலேறி, பாதியிலேயே கீழிறங்கிக் கொண்டிருக்கும் அவனது உறுதியற்ற மனநிலையை, அப்பறவை பரிகாசித்து கும்மாளமிடுவது தெரிகிறதே தவிர அதன்குரல் அவனுக்கு அந்நியமாகவே இருக்கிறது.

முன் திட்டமிடலில்லாத அவனது நடை, இலக்கற்ற அவன் பயணம், அடர்ந்த வனாந்திரம், அலைபேசி கோபுரம் என மாறிமாறி இப்போது இந்த ரயில் தணடவாளத்தில் வந்து நிறுத்தியிருக்கிறது. ரயிலின் சத்தம் அவனுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. பாம் என்று முழுங்கும் அதன் பேரோசை அவன் செவிக்கு மிக இதமாய் இருக்கிறது. சிறு வயதில் கேட்டுறங்கிய தாலாட்டுப்பாடலை அது நினைவிற்கு கொண்டு வருகிறது. உயிரை ஒரு உருண்ட வடிவமாக்கி தண்டவாளத்தின் நேர்க்கோட்டில் உருட்டி விளையாடுகிறது வாழ்க்கை. தொலைவில் ஒற்றைக்கண் மிளிர வந்துகொண்டிருக்கும் ரயில், நிரந்தரத்தூக்கமாம் மரணம் அதைக்கொண்டுவந்து தாராதா என ஏங்கினான்.

பின் அங்கிருந்து சாலையை நோக்கி வெகுதூரம் நடந்தவன் ஓரிடத்தில் நின்றான். அந்த இடத்தையே வெறித்தான். முன்பொருநாள் அவனது முகத்திற்கெதிராய் அவனைப்பார்த்து ‘செவுட்டுக்கூதி” என்று உரக்கக்கத்திய ஒருவனோடு சண்டையிட்டு கட்டிப்புரண்ட இடம் அது. பல்லிடுக்கினில் வலுவாய்ச்சிக்கிக்கொண்டு பொழுது முழுவதுமாய் இம்சிக்கும் இறைச்சித்துணுக்கென அச்சொல் அன்றைய தினம் முழுவதும் நினைவினில் மீண்டும் மீண்டும் எதிரொலித்து பெரும் வதையை உண்டாக்கியது. அச்சொல்லில் உறைந்திருந்த வன்மம் நஞ்சு தடவிய கூரியதொரு கத்தியென மாறி நீண்டு படுத்திருக்கும் அவனது நெற்றிப்பொட்டில் சுருக் சுருக்கென சொருகுகிறது. பெண்டுலமொன்றின் பனிரெண்டு மணிக்கானச்சத்தம் இரவின் கன்னத்தில் மாறி மாறி அறைவதைப்போல அச்சொல் அவனை உறங்கவிடாமல் இம்சிக்கிறது. இதுவரை அவனது முதுகு மாத்திரமே சந்தித்துவந்த அச்சொல் முதல்முறையாய் முகத்தில் அறைந்ததும்; அதிர்ந்துபோனவன், உலகத்தையும் உலகத்திலிருக்கும் யாவற்றையும் வெறுத்து ஒதுக்கத்தொடங்கினான்.

அவனுக்கே கேட்டிருக்கிறது என்றால் எத்தனைச்சத்தமாய் திட்டியிருக்க வேண்டும். அந்த இடத்தையே வெறிந்தவன், திட்டியவன் அங்கிருப்பதாய் கற்பனை செய்து கொண்டு, அவனோடு கட்டிப்புரண்டு அன்று நிறைவேறாது போன மிச்சிமிருக்கும் இரண்டு குத்துக்களை அவனது முகத்தில் விட்டான்.

நீண்ட நேரமாய் அங்கேயே நின்று கொண்டிருந்தவனைப்பார்த்து சிரித்தபடி கடந்து போனாள் ஓர் சிறுமி. அது வெறும் சிரிப்பாய் மாத்திரம் அவனுக்குத்தோன்றவில்லை. அவனை ஆசுவாசப்படுத்தும், ஆற்றுப்படுத்தும் ஏதோவொன்றை அதில் கண்டவன், அவனையுமறியாமல் பின் தொடா;ந்து நடந்தான். அச்சிறுமி அருகிலிருந்த கோயிலொன்றினுள் நுழைந்தாள். மீண்டுமொருமுறை அந்தச் சிரிப்பை தனக்கு வழங்குவாளா ? வழங்க வேண்டும் என்று பெரிதும் விரும்பினான். அச்சிறுமி அவனுக்கோ, அம்மனாய்த்தோன்றினாள். மண்ணில் புரண்டு கொண்டிருந்தவனை எடுத்து நிறுத்தி, மேலெங்கும் படிந்திருந்த புழுதியை தட்டிவிட்டு, கலைந்த கேசத்தை கோதிவிடும் படியாய் அச்சிரிப்பை உணர்ந்தவன், மேலும் அத்தலைகோதலை எதிர் நோக்கினான். அச்சிறுமியின் நிழலில் தன் உயிரை கட்டி வைத்துவிடும் முனைப்புடன் தொடர்ந்தவன் தன்னைப்பாh;த்து மீண்டும் சிரிக்க வேண்டுமென வேண்டினான். அச்சிறுமியின் செயல்களையே கவனித்துக்கொண்டிருக்கிறான்.

கோயிலின் பிரகாரத்திலிருக்கும் வெண்கல மணியிலிருந்து இசைச் சொல்லொன்றை விடுவிக்க முயல்கிறாள் சிறுமி. அதில் கட்டப்பட்டிருக்கும் கயிறு கைக்கெட்டாமல்ப்போகவே, தனது எம்பல்களை அங்குலமங்குலமாய் அதிகரிக்கிறாள். கைக்கெட்டாத தூரத்திலும் உயரத்திலும் அவனுக்கானவைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதைப்போல, அச்சிறுமிக்கு ஆலயமணி இருக்கிறது. இன்னும் சிலமுறை முயன்றால் பறத்தல் மறந்து போய் அவள் சட்டையிலேயே வசிக்கும் வண்ணத்துப்பூச்சி அதன் சிறையைத்தகர்த்து பறந்தாலும் பறந்துவிடும் என்று தோன்றியதவனுக்கு. மணியின் நாவில் மர்மங்களால் திரித்துக்கட்டப்பட்டிருக்கும் சரடு அவளுக்கான ஒலியை ஒழுகவிடாமல் தன்னை உள்ளிழுத்துக் கொண்டு அவளிடம் விளையாட்டுக் காட்டுகிறது. இங்கிருக்கும் யாவரும் ஆசிரிவதிக்கப்பட்டவர்கள் என்ற குறிப்பினை இசைச்சொல்லொன்றால் தன்னால் வழங்க முடியுமென்ற முனைப்பில் மேலும் மேலும் முயல்கிறாள் அவள்.

•••