Category: அறிமுகப் படைப்பாளிகள்

கவிதைகள் – மதுமிதா கவிதைகள்

  

மதுமிதா கவிதைகள்

 

 

 

 

 

 

 

 

 

 

 

1. வன ராணி

 

மலர் பறித்துச் சூடாது

மரத்திலேயே அழகுபார்க்கும்

குளிர் இரவைப் பிடித்துக்கட்டி

குழல் கற்றையாய் விரித்துப்போட்டு

விழிகளில் நளின மௌனமொழி பேசும்

வன ராணி நான்

 

 

 

நட்ட நடு வனத்தில்

மலரின் மகரந்தம் சுமக்கும் மாருதத்துக்கு இசைந்து

இலைகள் அசைந்து இன்னிசை இசைக்க

எதையும் உணராது

இரு வாலின் நுனிகள் மட்டுமே புள்ளியாய் மண்ணில் ஊன்றி

இணைபிரியா நாக நடனம் ஆடிக் கிடந்தோம்

வேடிக்கை பார்க்கும் விழிகளில்

அச்சம் ஆச்சர்யம் ஆனந்தம்

 

விழிகள் மயங்கிட ஒரு அழுத்தமான முத்தம்

வார்த்தை இழந்து கிடக்க ஒரு இறுக்கமான தழுவல்

மோனநிலையில் காதல் மகிழ்வில் காமனின் வசத்தில்

மலையில் மேகங்களை உரசி

ஜோடிப்புறாக்களாய் பறந்த நினைவும் வருமோ உனக்கு

பட்டால் கொழுந்தாய் எரியும் நெருப்பெனக் கொதித்துக் கிடந்த வெம்மையைச் சிறு தீண்டலால்

மலையில் கீழ் நோக்கிப் பாயும் அருவியில் பெருகும்

புதுவெள்ளமாய் குளிர்வித்தாய்

ஆடிக்கிடந்தோம் காற்றில் குதித்து ஆடும் இணைமான்களாய்

துள்ளிக் குதித்தோடிய நாட்களின் நினைவையும்

ஒருசேரப் பறித்துச் சென்றுவிடும் திறனை

எங்கு கற்று பேரலையில் அதிர்ந்து துவளும்படி சிற்றிலையாய் தனியே விடுத்து எங்கே சென்றாய்

 

கனிந்த மாம்பழத்தின் மணத்துடன்

புது மாந்தளிரின் வாசம்

மூலிகைகளின் மணத்துடன்

புது வசந்தத்தின் வாசம்

 

கோட்டை இன்றி ராஜாங்கம் இன்றி

அரச உடைகளும் இன்றி

உயிர் காத்திட நம்பிக்கையை இறுகப் பற்றி

உனக்கென காத்திருக்கையில்

விழிகளில் காதல் தீபம் மட்டும் ஏந்தும்

வன ராணி நான்

 

 

 

 

2. வாசிக்கும் தாகத்தில்

 

இதழ்களால் அளவெடுத்தாய்

விழிகள் கிறங்க உன்மத்தமாகி

வண்ணங்களின் வாசங்களின் போதையில்

சாவி கொடுத்த பொம்மையாய் இயங்கி

முற்றிலும் என்வசமானாய்

என்னவானோம் காமனின் வசம் சேர்ந்தோம்

 

முன்கோபத்திற்கும் சமாதானத்திற்கும் இடையே

சட்டென ஒளிர்ந்த வானவில்லாய்

அனிச்சையாய் இணைய நேர்ந்தது

முன்னேற்பாடோ முன்னெச்சரிக்கையோ இன்றி

 

நதியாய் கடலைச் சேர பயணித்துக்கொண்டிருந்தாய்

படகாய் உன்னுள் பயணிக்கச் செய்தாய்

நதிவலம் முடிந்ததும்

நலமாய் கரைசேர்த்து பயணம் தொடர்வேன் என்றாய்

முற்றுமாய் மூழ்கிவிடவேண்டும் என்னும் வேட்கை அறியாது

 

சேகரித்த மடல்களனைத்தும் இல்லை

வாசிக்கும் தாகத்தில் இப்போது உழன்று கிடக்கிறேன்

 

 

எப்போதும் உனக்கென காத்திருக்கிறேன்

 

எப்போதும் ஏன் மூடிய கதவின்முன் காத்திருக்கிறேன்

அங்கிருந்து எந்த பதிலும் இல்லை

 

நீ வருகிறாய் நீ பார்க்கிறாய்

தேர்ந்த மந்திரவாதிபோல்

மந்திரக்கோல் உயர்த்தி என்னைத் தொட்டு

பொன் கல் ஆக்கினாய்

உடன் பொன் மலரானேன்

குளிர்த் தென்றலில் மிதந்தபடி

உன் இதயத்தை நெருங்கினேன்

நீ எடுத்துக்கொள்ள மறுத்தாய் தயங்கினாய்

அது உன் தோள்களில் தவழ்ந்து

தரையில் வீழ்ந்தது உன் பாதங்களைத் தீண்ட

முழு சரணாகதி

 

ஒலிகளில்லை

அமைதி மட்டுமே

 

மலரை ஏந்தினாய்

மணம் நுகர்ந்தாய்

புதுநறுமணத்தைக் கண்டுகொண்டாய்

முத்தமிட்டுத் தூக்கி எறிந்தாய்

 

எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறேன்

மறுபடியும் நீ என்னை ஏந்திக்கொள்ள

எப்போதும் நீ இங்கேயே இருக்கிறாய் என்பதை அறியாது

எப்போதும் காத்துக்கொண்டிருக்கிறேன்

 

 

 

3. வேறு வழியில்லை

 

எங்கு சென்றாலும் உன்னுடன்

எடுத்துச் சென்றுவிடுகிறாய் என்னை

எங்கு சென்றாலும்

வாசம் சுமந்து செல்லும் காற்றாய்

 

நினைக்காமல் இருக்கிறேன் என்று சொல்

நினைவிலிருந்து நீக்கப் பார்க்கிறேன்

நீங்கி விடுகிறேன்

 

பேசவேண்டாம்

பேசிக்கொண்டிருக்கிறாயே நினைவில் அதை நிறுத்தி விடு

நீங்கி விடுகிறேன்

 

நினைவுகளை அழித்திட

இயலுமா உனக்கு சொல்

நீங்கி விடுகிறேன்

 

ருசி கண்ட பூனை

அன்பை ருசிக்காமல் நீங்க இயலுமா

பசியோ ருசியும் அறியாதே

அன்பால் நிறைத்த உன்னை நீங்குவது எப்படி

 

உயிர் நீங்கும்பொழுது முற்றிலும் நீங்கியிருப்பேன்

உண்மை வேறு வழியில்லை

 

 

 

4. அடம் பிடிக்கும் குழந்தை நீ… 

 

கண்ணனின் லீலைகளாய்

மிஞ்சும் குழந்தையின் அடம்

 

கெஞ்சும் மிரட்டல்

கொஞ்சும் பாவனையில்

 

வஞ்சம் நிறையுலகில்

தஞ்சமடைந்தேன் உன்னை

பஞ்சாய் பற்றிக்கொண்டாய்

 

உன்னுயர் குணங்கள்

உன் பலவீனங்கள்

உன் சோதனைகள்

அனைத்தையும் கடந்து

 

நான் நானாக இருப்பேனென

அடம் பிடிக்கும் குழந்தையுனை

ஒதுங்கிச் சென்றாலும்

இழுத்து இறுக

அரவணைத்துக் கொண்டேன்

அன்பின் மிகுதியில்

 

ஆண்டுகள்

ஜென்மாந்தர தேடலுக்குப் பின்

அடங்கி என்னுள்

அமைதியின் சொரூபமானாய்

 

**

கவிதை – ரத்திகா கவிதை

ரத்திகா கவிதை

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

என் மரத்து முதல்பறவை எழுவதற்கு முன்பே

நானெழுந்துவிடும் மரபணு

என்னில் பதியமிடப்பட்டிருக்கிறது

 

மேலும் சில மரபணுக்கள்

உங்களுக்கு உபாதைகள் ஏற்படுத்தாப் பதியன்கள்

 

அவைகள்

என்னை உங்களுக்கு முன்பே எழச் சொல்லும்

உங்கள் நாக்கோணாமல் சமைக்கச் சொல்லும்

மனங்கோணாமல் படியச் சொல்லும்

என் மகளிலும் அவற்றை பதியமிடச் சொல்லும்

 

வேறொன்றும் அறியாதபடிக்கு வாழ்வேன்

ஒருநாள் மாய்ந்தும் போவேன்

 

இப்படியாகத்தான் போனது

நேற்றுவரை

என் நேர்க்கோட்டுத் தக்கை வாழ்வு

 

கைகள் புறம் கட்டப்பட்டு

மார்பகங்கள் அறுக்கப்பட்ட

நிர்வாணப் பெண்ணொருத்தி

என்னுள் ஓரிரவு கூடு பாய்ந்தாள்

 

இப்போது மேலும் சில பெண்கள்

உறவுகளை இழந்த ஈராக்கியப் பெண்கள்

சவுக்கடிகளால் உடல் பிளந்துபோன ஆப்கானியப் பெண்கள்

மனம் பிறழ்ந்த

புலம் பெயர்ந்த பெண்கள்…

 

ஆயிரமாயிரம் மயானங்களின் ஓலங்கள்

கேட்கிறதா

கேட்கிறதா

 

அவர்களை ஒன்றிணைக்கிறாள் ஒருத்தி

கூடுபாய்ந்து ஒருத்தியாகிறாள்

 

புனைவுகள் சில சமயம் பொய்ப்பதில்லை

என் மார்பைப் பிளந்து வெளியேறப் போகிறாள்

 

நீள்துயிலிலிருந்து விழித்தெழுகிறேன்.

 

**

 

 

 

 

கோடையின் தீ நாவுகளைத் துண்டிக்க

வழி தெரியமல் சபித்தபடி உறங்கிப் போனவளின்

பின்னனிரவுக் கனவில்

பெருமழை பெய்தது

 

காட்டறுகள் படுக்கையைச் சுழற்றித் தாலாட்டின

மரங்களை உலுக்கி தேவதைகள்

அவள் மீது பூக்களைச் சொரிந்தனர்

ஒரு பூவென ஆகிவிட்ட உடலைக் கண்டு பூரித்து

ஒருக்களித்துப் படுக்க எண்ணியவள்

மெல்லக் கண் மலர்ந்த பொழுதில்தான் கவனித்தாள்

விரித்த குடையுடன் ஒருவன்

முழுக்க நனைந்தபடி

தன் வெகு அண்மையில் நிற்பதை

திடுக்கிட்டு  எழுந்து ஆடைகளை சரிசெய்து கொண்டிருந்தவளிடம்

ஐந்து பிறவிகளிலும் அவளைத் தொடர்ந்து

வந்து கொண்டிருப்பதாகசச் சொன்னான்

 

தூக்கமும் கனவும் கலைந்த துயரத்திலிருந்து

விடுபட முடியாது போனவள்

இன்னும்

இரண்டே இரண்டு பிறவிகள் காத்திருக்குமாறு அகன்று போனாள்

 

அவள் வாசலின் புங்கை மரத்தின்கீழ்

காத்திருக்கத் தொடங்கினான் அவன்.

***

கவிதைகள் – வ.ஐ.ச.ஜெயபாலன் – கவிதைகள்

”காலச்சுவடான ஒற்றையடிப்பாதை”

1968 – 2012

– வ.ஐ.ச.ஜெயபாலன் fகவிதைகள்

 

 

 

 

 

 

 

1

பாலி ஆறு நகர்கிறது

 

அங்கும் இங்குமாய்

இடையிடையே வயல் வெளியில்

உழவு நடக்கிறது

இயந்திரங்கள் ஆங்காங்கு

இயங்கு கின்ற ஓசை

இருந்தாலும்

எங்கும் ஒரே அமைதி

 

ஏது மொரு ஆர்ப்பாட்டம்

இல்லாமல் முன் நோக்கி

பாலி ஆறு நகர்கிறது.

ஆங்காங்கே நாணல்

அடங்காமல் காற்றோடு

இரகசியம் பேசி

ஏதேதோ சலசலக்கும்.

எண்ணற்ற வகைப் பறவை

எழுப்பும் சங்கீதங்கள்.

துள்ளி விழுந்து

‘துழும்’ என்னும் வரால்மீன்கள்.

 

என்றாலும் அமைதியை

ஏதோ பராமரிக்கும்

அந்த வளைவை அடுத்து

கருங்கல் மறைப்பில்

அடர்ந்துள்ள நாணல் அருகே

மணற் கரையில் ஒரு மருங்கம்

ஓங்கி முகடு கட்டி

ஒளி வடிக்கும்

மருத மர நிழலில்

எங்கள் கிராமத்து

எழில் மிகுந்த சிறு பெண்கள்

அக்குவேறு ஆணிவேறாய்

ஊரின் புதினங்கள்

ஒவ்வொன்றாய் ஆராய்ந்து

சிரித்து

கேலி செய்து

சினந்து

வாய்ச் சண்டை யிட்டு

துவைத்து

நீராடிக் களிக்கின்றார்.

 

ஆனாலும்

அமைதியாய்ப்

பாலி ஆறு நகர்கிறது

 

அந் நாளில்

பண்டார வன்னியனின்*

படை நடந்த அடிச் சுவடு

இந்நாளும் இம்மணலில்

இருக்கவே செய்யும்

அவன்

தங்கி இளைப்பாறி

தானைத் தலைவருடன்

தாக்கு தலைத் திட்டமிட்டு

புழுதி படிந்திருந்த

கால்கள் கழுவி

கைகளினால் நீரருந்தி

வெள்ளையர்கள் பின் வாங்கும்

வெற்றிகளின் நிம்மதியில்

சந்றே கண்ணயர்ந்த

தரை மீது அதே மருது

இன்றும் நிழல் பரப்பும்

அந்த வளைவுக்கு அப்பால்

அதே மறைப்பில்

இன்னும் குளிக்கின்றார்

எங்களது ஊர்ப் பெண்கள்

 

ஏது மொரு

ஆர்ப்பாட்டம் இல்லாமல்

பாலி ஆறு நகர்கிறது.

1968

* பண்டார வன்னியன் -ஈழத்து தமிழ் வன்னிப் பகுதியைப் பரிபாலித்த குறுநில மன்னன். 1803இல் கச்சிலை மடு போரில் வெள்ளையரால் கொல்லப் பட்டவன்.

 

 

 

 

2

 

இளவேனிலும் உழவனும்

 

 

காட்டை வகிடுபிரிக்கும்

காலச்சுவடான

ஒற்றையடிப்பாதை.

வீடுதிரும்ப

விழைகின்ற காளைகளை

ஏழை ஒருவன்

தோளில்

கலப்பை சுமந்து

தொடர்கிறான்.

 

தொட்டதெல்லாம் பொன்னாக

தேவதையின் வரம்பெற்ற

மாலைவெய்யில்

மஞ்சட்பொன் சரிகையிட்ட

நிலபாவாடை

நீளவிரிக்கிறது:

இதயத்தைக் கொள்ளையிட

வண்ணத்துப் பூச்சிகள்

வழிமறிக்கும்

காட்டுமல்லிகைகள்

காற்றையே தூதனப்பி

கண்சிமிட்டும்.

 

அழகில்

கால்கள் தரிக்கும்.

முன்நடக்கும் எருதுகளோ,

தரிக்கா.

 

ஏழையவன்

ஏகும்வழி நெடுந்தூரம்.

 

-1970

 

 

 

3

 

நெடுந்தீவு ஆச்சிக்கு

 

 

அலைகளின்மீது பனைக்கரம் உயர

எப்போதும் இருக்கிற

என்னுடைய ஆச்சி

 

காலம் காலமாய் உன்னைப் பிடித்த

பிசாசுகள் எல்லாம் தோற்றுப் போயின

போத்துக்கீசரின் எலும்புகள் மீதும்

தென்னம் தோப்பு

நானும் என் தோழரும்

செவ்விளநீர் திருடிய தென்னந் தோப்பு.

 

தருணங்களை யார் வென்றாலும்

அவர்களுடைய புதை குழிகளின்மேல்

காலத்தை வெல்லுவாள் எனது ஆச்சி.

 

என்ன இது ஆச்சி

மீண்டும் உன் கரைகளில்

நாங்கள் என்றோ விரட்டி அடித்த

போத்துக்கீசரா ?

தோல் நிறம் பற்றியும்

கண் நிறம் பற்றியும்

ஒன்றும் பேசாதே

அவர்கள் போத்துக்கீசரே

 

எந்த அன்னியருக்கும் நிலை இல்லை

எனது ஊர் நிலைக்கும் என்பதைத்தவிர

எதனை எண்ணி நான் ஆறுதல் அடைவேன்.

நாளை இந்தப் போத்துக்கீசரும் புதைய அங்கு

கரும்பனைத் தோப்பெழும் என்பதைத் தவிர

எதனை எண்ணி நான் ஆறுதல் அடைவேன்.

 

ஆச்சி

என் இளமை நாள் பூராக

ஆடியும் பாடியும் கூடியும் வாடியும்

தேடிய வாழ்வெலாம்

ஆமை நான், உனது கரைகள் நீழ

புதைத்து வந்தேனே.

என்னுடன் இளநீர் திருட

தென்னையில் ஏறிய நிலவையும்

என்னுடன் நீர் விழையாட

மழை வெள்ளத்துள் குதித்த சூரியனையும்

உனது கரைகளில் விட்டுவந்தேனே

என் சந்ததிக்காக.

 

திசகாட்டியையும் சுக்கானையும்

பறிகொடுத்த மாலுமி நான்

நீர்ப் பாலைகளில்

கனவுகாண்பதுன் கரைகளே ஆச்சி

 

நீ நிலைத்திருப்பாய் என்பதைத் தவிர

எதனைக் கொண்டுநான்

மனம் ஆற என் ஆச்சி

 

*நெடுந்தீவு (Delft) எனது மூதாதையரின் தீவு. இன்று இரணுவத்தின்

பிடியில் சிக்கியுள்ளது. விட்டு விடுதலையாகி நின்ற இந்த தனித்த தீவு

பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் போத்துக்கீசரால் கைப்பற்றப்பட்டது.

 

5

பூவால் குருவி

 

நெஞ்சுக்குள் தொலையாதிருந்து

ஒரு சிற்றாறாய் ஊருகின்ற

என் முதல் காதல் பெட்டை

ஒரு வழியாய் உன்சேதி அறிந்தேனடி.

பேய்கள் கிழித்தெரிக்கும் எம்முடைய தேசத்தில்

வன்னிக் கிராமத் தெருவொன்றில்

வெள்ளிச் சருகை மினுங்கும் தலையும்

பொன் சருகை கலையா முகமும்

இன்னும் ஓயாமல் முந்தானை திருத்த எழும் கையுமாய்

போனாயாம் உந்தன் பூப்படைந்த பெண்ணோடு

போட்டிச் சிறு நடையில்.

அது என்ன போட்டி.

 

காவலிலே உன் அன்னை தோற்றதறிவாய்.

அவளிடத்தில் உன்பாட்டி தோற்றதையும் நீ அறிவாய்.

என்றாலும் வாழ்வின் சுழற் தடத்தில்

இன்று நீ அன்னை.

 

நீ தோற்க்க வாழ்வு மேலும் ஒரு வெற்றி பெறும்.

ஆனாலும் நீ எனக்கு இன்னும் சிறுக்கிதான்.

இன்னும் விடாயும் அச்சமுமாய் மிரண்டடிக்கும்

குளக்கரையின் மான் குட்டி.

 

நானுமுன் நெஞ்சத்தில் சிற்றாறா.

இன்னும் காலில் விழுந்து கையேந்தி இரக்கின்ற

திருட்டுச் சிறு பயலா.

அஞ்சி அஞ்சி நாங்கள் அன்று

உடற் கடலில் கை நனைத்து கால் நனைத்து

நீந்த முயன்றதெல்லாம் எண்ணில்

மேனி இன்பத் துணுக்குறுதே.

 

எறிகுண்டாய் வானத்தியமன்

கூரை பிரித்துன் பின்வீட்டில் இறங்கிய நாள்

உன் முன்வீட்டுப் பிள்ளை தொலைந்தாளாம்.

பின் ஒருநாள் ஊர் காண

காக்கி உடையோடு வந்து காட்டோரம் பூப்பறித்து

கூந்தலிலே சூடி நடந்தாளாம்.

தெருவெல்லாம்

நீ உனது பூப்படைந்த பெண்ணின் காவலிலே

நிழலாய் திரிகிறியாம்.

இது பெருங்காவல்.

எல்லாம் அறிந்தேன்.

 

எங்கிருந்தோ வந்து

நம் தெருவோர மரக்கிளையில் குந்தி

தேவதையின் கூந்தலெனத் தன் பூவால் அசைத்த

அந்தக் குருவியைப் போல்

காணாமல் போனதடி காலங்கள்.

1996?

 

6

 

அம்மா

 

 

போர் நாட்களிலும் கதவடையா நம்

 

காட்டுவழி வீட்டின் வனதேவதையே

 

வாழிய அம்மா.

 

உன் விரல் பற்றிக் குறு குறு நடந்து

 

அன்றுநான் நாட்டிய விதைகள்

 

வானளாவத் தோகை விரித்த

 

முன்றிலில் நின்று எனை நினைத்தாயா

 

தும்மினேன் அம்மா.

 

அன்றி என்னை வடதுருவத்தில்

 

மனைவியும் மைந்தரும் நினைந்திருப்பாரோ?

 

 

 

அம்மா

 

அழிந்ததென்றிருந்த பச்சைப் புறாக்கள்

 

நம் முற்றத்து மரங்களில்

 

மீண்டு வந்து பாடுதாம் உண்மையா?

 

தம்பி எழுதினான்.

 

வலியது அம்மா நம்மண்.

 

கொலை பாதகரின் வேட்டைக் கழுகுகள்

 

வானில் ஒலித்த போதெலாம்

 

உயிர் நடுங்கினையாம்.

 

நெடுநாளில்லை இக் கொடியவர் ஆட்டம்.

 

 

 

இருளர் சிறுமிகள்

 

மேற்ககுத் தொடர்ச்சி மலையே அதிர

 

நீர் விளையாடும் ஆர்ப்பாட்டத்தில்

 

கன்னிமாங்கனி வாடையில் வந்த

 

கரடிக் கடுவன் மிரண்டடிக்கின்ற

 

கொடுங்கரை ஆற்றம் கரை வருகையிலே

 

எங்கள் ஆற்றை எங்கள் காட்டை

 

உன்னை நினைந்து உடைந்தேன் அம்மா.

 

 

 

என்னரும் தோழமைக் கவிஞன் புதுவை

 

உன்னை வந்து பார்க்கலையாமே.

 

போகட்டும் விடம்மா.

 

அவனும் அவனது

 

பாட்டுடைத் தலைவனும் மட்டுமல்ல

 

உன்னைக் காக்க

 

யானையின் மதநீர் உண்டு செளித்த நம்

 

காடும் உளதே

 

*கொடுங்கரை ஆறு தமிழகம் கோயம்புத்தூர் மாவட்டதில் உள்ள சிற்றாறு

 

 

7

 

நீலம்

 

 

தோழி

காலமாய் நுரைகள் உடைகிற மணலில்

சுவடுகள் கரைய

சிப்பிகள் தேடிய உலா நினைவிருக்கிறதா?

கடலிலிலும் வானிலும் தொடர்கிற நீலமாய்

நம்மிலும் எதோ படர்கிற தென்றேன்.

மீன்கொத்திய நாரையாய் நிமிர்ந்தாய்

உன் கண்களில் எனது பிம்பம் அசையும்.

 

ஆண்டு பலவாகினும்

நரையிலா மனசடா உனக்கென்றாய்.

தோழி

இளமை என்பது வாழும் ஆசை.

இளமை என்பது கற்றிடும் வேட்கை.

இளமை என்பது முடிவிலா தேடல்;

இளமை பிறரைக் கேட்டலும் நயத்தலும்.

இளமை என்பது வற்றாத ரசனை

இளமை என்பது நித்திய காதல்.

இளமை என்பது

அயராத ஆடலும் பாடலும் கூடலும் என்றேன்.

 

தோழா உனக்கு எத்தனை வயசு?

தோழி எனக்கு

சாகிற வரைக்கும் வாழ்கிற வயசு.

 

2011

 

 

8

 

 

 

சதுரங்கம்

 

 

சிருஸ்ட்டி வேட்கையில்

ஆனைமலைக் காடுகள் பாடுகிற

அந்தி மாலை.

அங்கு உயிர்க்கிற மந்திரக் கம்பளத்தில்

உன்னையே சுற்றுதடி மனசு.

 

இது தீராத காதலடி

நீதான் கண்டு கொள்ளவில்லை.

அதோ புல்லின்கீழ் கட்டெறும்பாய்

தொலை கீழ் மூங்கிற் காடுகளுள் ஊரும்

யானைபோல

உண்மையில் என் காதலும் பெரியதடி.

 

காமத்தில் சூரியன்

பொன்சிந்த இறங்கி வர.

நாணிப் புவிமகள்

முந்தானையாக முகிலை இழுக்கின்றாள்..

ஆகா அப்பன் குதிருக்குள் இல்லை என்கின்ற

உனது நாடகம் அல்லவா இது.

 

ஆண் பெண்ணுக்கிடையில்

ஒரு கண்ணுக்குத் தெரியாத சதுரங்கப் பலகை

எப்போதும் விரிகிறது.

என்னோடு இன்னும் சிலரை

பந்துகளாய் எறிந்து ஏந்தி ஆடும்

வித்தைக்காரியில்தான் காதலானேன்.

அதனால் என்ன.

கீழே காட்டில் .

ஒரு மூங்கில் புதரை மட்டுமே மேய்ந்த

யானையும் இல்லை

ஒரு யானை மட்டுமே மேய்ந்த

மூங்கில் புதரும் இல்லை.

.

எதுவும் செய்..

ஆனால்

இறுதியில் நாம் மட்டுமே மிஞ்சவேண்டும்.

நம் மரபணுக்களில் கவிதை கோர்க்க.

 

2012

 

9

 

நெய்தல் பாடல்

 

வாழிய தோழி

கடலின்மேல் அடிவானில்

கரும்புள்ளியாய் எழுதப்படும்

புயற் சின்னம்போல

உன் முகத்தில் பொற்கோலமாய்

தாய்மை எழுதப்பட்டு விட்டது.

 

உனக்கு நான் இருக்கிறேனடி.

இனியுமுன் ஆம்பல் கேணிக் கண்களை

உப்புக் கடலாக்காதே.

புராதன பட்டினங்களையே மூடிய

மணல் மேடுதான் ஆனாலும்

தேர்ந்த கள்ளியான ஆமையால்க்கூட

இங்கு தன் முட்டைகள

நெடுநாள் மறைக்க முடியாதடி.

 

விரைவில் எல்லாம்

அறியபடா திருந்த திமிங்கிலம்

கரை ஒதுங்கியநாள் போலாகிவிடும்

அதனால் என்னடி

இது நம் முதுகரைக்குப் புதிசல்லவே.

 

அஞ்சாதே தோழி

முன்பு நாம் நொந்தழ

மணல் வீடுகளை  ச் சிதைத்த பயல்தான்.

ஆனாலும் காதல் அவனை

உன் காலில் விழ வைத்ததல்லவா.

ஆளரவமுள்ள சவுக்குத் தோப்புக்குள்

முதல் முயக்கத்தின்போதுகூட அவனிடம்

குஞ்சுக்கு மீன் ஊட்டும் தாய்ப் பறவையின்

கரிசனை இருந்ததல்லவா.

 

ஆறலைக் கள்வர்போல

சிங்களர் திரியும் கடற்பாலைதான் எனினும்

நீர்ப் பறவைகள் எங்கே போவது.

 

இனிச் சோழர்காலம் திரும்பாது என்பதுபோல

அவன் நகரக்கூலி ஆகான் என்பதும்

உண்மைதான் தோழி.

ஆனாலும் அஞ்சாதே

அவன் நீருக்குள் நெருப்பையே

எடுத்துச் செல்லவல்ல பரதவன்.

 

அதோ மணல் வெளியில்

முள்ளம் பன்றிகளாய் உருழும்

இராவணன்மீசையை

சிங்களக் கடற்படையென்று

மீனவச் சிறுவர்கள் துரத்துகிறார்கள்.

 

இனிக் கரைமாறும் கடல்மாறும்

காலங்களும் மாறுமடி.

 

2012

 

10

 

 

 

 

பாலைப் பாட்டு

 

வேட்டையாடும்

பின்பனி இரவு அகல

புலரும் காலையில்

உன்னையே நினைந்து உருகிக் கிடந்தேன்.

 

அன்பே

மஞ்சத்தில் தனித்த என்மீதுன்

பஞ்சு விரல்களாய்

சன்னல் வேம்பின்

பொற் சருகுகள் புரள்கிறது.

இனி வசந்தம் உன்போல

பூவும் மகரந்தப் பொட்டுமாய் வரும்.

 

 

கண்னே நீ பறை ஒலித்து

ஆட்டம் பயிலும் முன்றிலிலும்

வேம்பு உதிருதா?

உன் மனசிலும் நானா?

இதோ காகம் விழிக்க முழங்குமுன் கைப்பறை

இனி இளவேனில் முதற் குயிலையும்

துயில் எழுப்புமடி.

 

 

இடியாய்ப் பறை அதிர

கொடி மின்னலாய் படருவாய் என்

முகில் வண்ணத் தேவதை.

உன் பறையின் சொற்படிக்கு

பிரபஞ்சத் தட்டாமாலையாய்

சிவ நடனம் தொடரும்.

 

 

காத்தவராயன் ஆரியமாலா

மதுரை வீரன் பொம்மியென்று

பிறபொக்கும் மானுடம் பாடி

காதலிலும் இருளிலும்

ஆண் பெண்ணன்றி

சாதி ஏதென மேடையை உதைத்து

அதிரும் பறையுடன்

ஆயிரம் கதைகள் பறைவாள் என் சதுரி.

 

 

என் காதல் பாடினி

திராவிட அழகின் விஸ்வரூபியாய்

நீ ஆட்டம் பயிலுதல் காண

உன் உறவினர் வீடுகள்

சிறுத்தைக் குகைகளாய் நெரியும் தெருவில்

எப்படி வருவேன்?

 

 

வேம்பு உதிரட்டும் நீ உதிராதே

ஏனெனில் உதிராத மனிதர்களுக்கும்

உதிந்த வேம்புகளுக்குமே

தளிர்த்தலும் பூத்தலும்.

 

 

நாளை நான் கிளை பற்றி வளைக்க

உன்னோடு சேர்ந்து ஊரும் கொய்து

கூந்தல்களில் சூடும் அளவுக்கு

பூப்பூவாய் குலுக்குமடி அந்த மொட்டை வேம்பு.

 

 

தேன் சிந்துமே வாழ்வு.

 

2012

 

11

 

 

குறிஞ்சிப் பாடல்

 

 

கரும் திரை அசையும் தோற்பாவைகளாய்

நெளியும் நீல மலைத்தொடர்களின் மேல்

முலை சிந்தச் சிந்த நிலா

நட்சதிரக் கன்றுகளைத் தேடுது.

 

சொட்டும் நிலாப் பாலில்

கரையும் இருளில்

பேய்களே கால்வைக்க அஞ்சும்

வழுக்கு மலைப் பாதை

பாம்பொடு பாம்பாய் நெளிகிறது.

 

மின்மினிகள் துளை போடும்

இருள் போர்த்த காட்டின் வழி நீழ

கமழும் நாவல்மரங்கள் உதிர்க்கும் கனிக்கு

கரடிகள் அலையும் இரவில்

பூத்துக் குலுங்குது முல்லை.

 

ஆதிவாசிகளே அஞ்சும் வன இருளில்

வண்ணத்துப் பூச்சிகளும் உறங்கும்

இந்தக் கொடிய நள்ளிரவில்

ஏன் பூத்தாய் காட்டு முல்லை.

 

நான் மண்ணுக்கு பழசு கவிஞா

பொறுத்திரு என்று நகைத்த

முது முல்லை சுட்டும் திசையில்

ஆளரவம் தெரிகிறது.

என்ன பிரமையா இல்லை ஆவியா

இருக்காது பின்னே குறிஞ்சி முருகனா

துணுக்குற்றேன்.

 

வேல் இல்லை

கானமயில் இல்லை

காற்ச்சட்டை சேட்டு

கையில் சிணுங்கி ஒளிருகிற செல்பேசி.

வருகிறது மனிதன்தான்.

 

அவன் மேகம் உறங்கும் மேலூரான்

பகலில் காட்டு யானைகள் நடுங்க

குமுக்கியில் பவனிவரும் பாகன்.

இரவெல்லாம் காதலன்.

 

கீழே சிறு குடியில்

தூங்காது விரகத்திலே புரண்டு

குறுஞ்சேதி தட்டுகிற ஒருத்திக்காய்

புலி விலகி கரடி ஒதுங்கி

பாம்புகள் கடந்து வருகின்ற இருளன்

போகும் வழியில்

பூ பறிப்பான் குழலிக்கு’

 

கொட்டும் பனியிலும்

பெருமூச்சில் கனன்றபடி

வாடா வந்திரென ஓயாமல்

குறும்சேதி தட்டுகிற பாதகத்தி

பகலில்கூட இப்பாதை வரத் துணிவாளோ

 

கபிலன் இல்லையே இன்று

உயிரினும் காதல் இனிதென்னும்

இந்தக் காமுகனைப் பாடுதற்கு.

2012

 

.

 

 

 

 

 

 

 

 

 

 

புதிய படைப்பாளி – கவிதைகள் – ப.மதியழகன் கவிதைகள்

 

 

 

ப.மதியழகன்

கவிதைகள்

 

நொடி நிமிடம் மணி

ஞாயிற்றுக்கிழமை

ஓய்வு நாள்

பழைய ஏற்பாடு

பிரகடனப்படுத்தி உள்ளது

சாலையில் போக்குவரத்து

நெரிசல் குறைவு

சேனல்களில்

அண்மையில் வெளியான

திரைப்படங்கள்

மதுபாட்டிலை

காலிசெய்து கொண்டே

விலைமாதர்களோடு உறங்கலாம்

ஃபேஸ்புக், கூகுள்பிளஸ்ல்

மூழ்கிக் கிடக்கலாம்

படுக்கையிலிருந்து எழுந்து

நிதானமாக நாளைத் தொடங்கலாம்

பழைய புத்தகக் கடையில்

தஸ்தயேவ்ஸ்கி நாவல் தேடலாம்

இசையில் நீந்தியபடியே

மதியத்தில் குளிக்கலாம்

பத்திரிகைகளில் வெளிவந்திருக்கும்

கவர்ச்சிப் படங்களை

நிர்வாணப்படுத்தி ரசிக்கலாம்

ஆனால்

இயேசு போல்

ஞாயிற்றுக்கிழமை அற்புதங்கள் செய்து

நாம் மாட்டிக் கொள்ள வேண்டாம்.

*

கேடயம்

சிநேகிதர்களுடைய இல்லத்தரசிகளின்

கண் பார்த்து பேசுவதை

தவிர்த்தே வருகிறேன்

அவர்களுடைய குழந்தைகள்

அங்கிள் என்றழைப்பதை

நூலிழை சிரிப்போடு ஏற்றுக்கொள்கிறேன்

வீட்டின் நிலைமை

என்னவென்று அறியாமல்

உள்ளே நுழைந்ததற்கு

வெட்கப்படுகிறேன்

என்னைக் கேட்காமலேயே

காபி எடுத்து வந்ததை

பெரிதுபடுத்தாமல்

அவர்களின் ப்ரியத்துக்காக

சிறிது சுவைக்கிறேன்

கடன் வாங்கியிருக்கவே கூடாது

வீடு வரை வந்துவிட்டான்

என்று கலவரப்படுவார்கள் என்றெண்ணி

யாருக்கும் கடன் கொடுப்பதில்லை

எல்லா சிநேகிதர் வீட்டிலும்

பார்க்கிறேன்

தாழிடப்பட்ட படுக்கையறையை

எனது பலகீனத்தை எண்ணி

சிநேகிதர்கள் இல்லாத சமயங்களில்

அவர்கள் வீட்டிற்குள் நுழைவதை

தவிர்க்கிறேன்.

***

சிறுகதை – இப்படி ஒரு தர்க்கம் – வைதீஸ்வரன்

இப்படி ஒரு தர்க்கம்

வைதீஸ்வரன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

இரண்டு பேர் கரிய புகைக் கூண்டு வழியாக வேலையை முடித்து விட்டு இறங்கி வருகிறார்கள்.. இறங்கி வந்தவர்களில் ஒருவன் முகம் மட்டும்  கரிபடிந்து அழுக்காக இருக்கிறது.   இன்னொருவன் முகம் சுத்தமாக இருக்கிறது.

குரு கேட்டார்..   இரண்டு பேர்களில் யார் முகத்தைக் கழுவிக் கொள்வார்கள்?

சிஷ்யன் சொன்னான் –  சந்தேகமென்ன?  அழுக்கு முகக்காரன் தான்  முகங் கழுவிக் கொள்வான்.

குரு – இல்லை..யோசித்துப் பார்த்தாயா?  அழுக்கு முகக் காரன் சுத்தமான முகக்காரனைப் பார்ப்பான்.  ஓ! தன்னுடைய முகமும் அப்படித்தான் சுத்தமாக இருக்கிறது  என்று நினைத்துக் கொள்வான் .முகம் கழுவிக் கொள்ள மாட்டான்.

சிஷ்யன் —  ஆமாம்  அது தான் சரி  இப்போது  தெரிந்து கொண்டேன்.

குரு – சிஷ்யா….அது எப்படி சரியாகும்?  தவறு … இப்படி யோசித்துப் பாரேன்!..

சுத்தமான முகமுடையவன்   அழுக்கு முகக்காரனைப் பார்த்து  தன் முகமும்  அழுக்காக இருப்பதாக நினைத்துக் கொள்வான்.  அதனால்  தன் முகத்தைக் கழுவிக் கொள்வான்  சுத்தமான முகமுடையவன்  தன் முகத்தைக் கழுவிக் கொள்வதால்  அழுக்கு முகக்காரனும் தன் முகத்தைக் கழுவிக் கொள்வான்,

ஆக  இரண்டு பேரும் முகம் கழுவிக் கொள்வார்கள் அல்லவா?

சிஷ்யன் – ஆமாம் குருவே!  நான் இப்படி சிந்திக்கத் தவறி விட்டேன் அது தான் சரியான  விடை.

குரு –  இல்லை சிஷ்யா!  அதுவும்  ஏன் தவறாக இருக்க்க் கூடாது? இப்படி யோசித்துப் பார்.

இரண்டு பேருமே  முகம் கழுவிக் கொள்ள மாட்டார்கள்

அழுக்கான முகக்காரன் சுத்தமான முகத்தைப் பார்த்து தன் முகமும் சுத்தமாக  இருப்பதாக எண்ணிக் கொள்வான். அதனால் கழுவிக் கொள்ள மாட்டான்.  இதைப் பார்த்த சுத்தமான முகம் உடையவன் அழுக்கு முகம் கொண்டவன்  கழுவிக் கொள்ளாததால் தானும் ஏன் கழுவிக் கொள்ள வேண்டும் என்று சும்மா இருந்து விட லாம் இல்லையா?

சிஷ்யன் –  ஆ..ஹா..ஹா..  அது தான் மனித சுபாவம்! குருவே  இது தான் மிகச் சரியான விடை.  நான் இப்போது அறிந்து கொண்டு விட்டேன்.

குரு——   அட   சிஷ்யனே!!  எதையுமே  நீ  யோசிக்கமாட்டாயா?  எத்தனை நாள் நான் உனக்காக யோசிக்க வேண்டும்.  ..

சிஷ்யன் –  மன்னிக்க வேண்டும் குருவே   யோசித்துப் பார்த்தபோது நீங்கள் கடைசியாக சொன்ன பதில்  மிகச் சரியானதாக நினைக்கிறேன்.

குரு- அட மடையனே!  அதுவும் சரியான  விடை அல்ல… தவறு.

இரண்டு பேர்  கரிய புகைக் கூண்டிலிருந்து  பணியை முடித்து விட்டு கீழே இறங்குகிறார்கள். அதெப்படி ஒருவன் முகம் மட்டும் கரிபடாமல் சுத்தமாக இருக்க முடியும்?

சிஷ்யன் —   ………ஓ……………………………………………

 

***

கட்டுரை நாகரத்தினம் கிருஷ்ணா மேடையேற்றப்படாத ஒரு விவாதம்

மேடையேற்றப்படாத ஒரு விவாதம்.

நாகரத்தினம் கிருஷ்ணா

எழுத்தாளனை அடையாளப்படுத்துதெது படைப்பா, கொள்கைத்தேர்வா?  -ஒரு பிரெஞ்சு படைப்புலக அண்மைக்கால சர்ச்சை

Polémique என்ற பிரெஞ்சு சொல்லுக்கு மூலம் கிரேக்கமொழி: பட்டிமன்றம், தருக்கம், வாய்ச்சண்டை, சொற்போர், வாதம் கொஞ்சம் கதவைத் திறந்தால் அனல் வாதம், புனல்வாதமெனஅவ்வளவையும் சேர்த்துக்கொள்ளலாம். பக்கவாதம் இதிலடங்காதது.  ஒட்டிய சமயத்து உறுபொருள் வாதிகள்/பட்டிமண்டபத்துப் பாங்கறிந்து ஏறுமின்’ என்கிறது மணிமேகலை. இலக்கியசர்ச்சைக்கும் இப்படியொரு விதியை வைக்கலாம். ‘சர்ச்சை’ மேடையேற்றப்படாத ஒரு விவாதம். மணிமேகலையும் சிலப்பதிகாரமும் எழுதிய விதிமுறைக்குள் அதுவும் வரக்கூடியது.பெரும்பாலும் அரைவேக்காட்டுத்தனமாகவிருக்கிற இன்றைய பட்டிமன்றங்களை நாம் கணக்கிற்கொள்ளகூடாது. அங்கே வைக்கப்படும் வாதம், மறுப்பு அனைத்தும் கொடுக்கப்பட்டகாலக்கெடுவிற்குள் மேடையேற்றப்படும் நாடகம் -பம்மாத்துகள் -பாசாங்குகள். போலியான குரல்கள் ‘சர்ச்சைக்குள்’ ஒலிக்காதென்பது ஆறுதலான செய்தி. பொதுவாகக் கலகக்குரல்கள்அல்லது எதிர்ப்புக்குரல்களுக்குச் சொந்தக்காரர்கள் தங்கள் தரப்பில் நியாயம் இருப்பதாக நம்புகிறார்கள், கோபத்துடன் தங்கள் எதிர்ப்பை பதிவுசெய்கிறார்கள். சர்ச்சையின் முடிவில் தங்கள்எழுப்பும் வினாவிற்கு தெளிவான விடைகிடைக்கவேண்டுமென்ற எதிர்பார்ப்பு அவர்களிடத்தில் இருக்கிறது. தமிழ்மண்ணில் பாங்கறிந்து சர்ச்சையில் இறங்குகிறார்களோ இல்லையோபிரெஞ்சு மண்ணில் மணிமேகலையில் கூறப்பட்டுள்ள விதியை நன்கு உள்வாங்கிக்கொண்டு சர்ச்சையில் இறங்குவதாகவே நினைக்கிறேன்.

இனம், மொழி, நாடு என உழைத்த மக்களை நினைவு கூர்வதென்பது இன்றைக்கு ஒரு சடங்காகவே மாறிவிட்டது. பிரான்சு நாடும் அதற்கு விதிவிலக்கல்ல. வருடம் தோறும் அவ்வருடத்தில்யார் யாரையெல்லாம் நினைவு கூர்தல்வேண்டும், அரசு சார்பில் செய்யப்படவேண்டியவையென்ன என்பது பற்றி அது தொடர்பான அமைச்சும் அதிகாரிகளும், இதற்கென நியமிக்கப்பட்டிருந்தகுழுவினரும் கலந்து பேசுவர். 2011ம் ஆண்டும் அப்படி கலந்து பேசிய பின் பட்டியலொன்றை தயார் செய்தனர். அப்பட்டியலில் இடம்பெற்றவர்களுள் செலின் என்று அழைக்கபடும் லூயிஸ்·பெர்டினாண் செலின் (Louis-Ferdinand Céline) என்பவரும் ஒருவர். நவீன இலக்கியத்தைக்குறித்த விவாதமோ, கலந்துரையாடலோ பகுப்பாய்வோ நடைபெற்றாகவேண்டுமெனில் செலின்தவிர்க்க முடியாத நபர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் உலகில் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பிரெஞ்சு படைப்பாளிகள் இருவர்: ஒருவர் மர்செல் ப்ரூஸ்டு (Marcel Proust), மற்றவர் செலின். Journey to the End of the Night மிக முக்கியமானதொரு படைப்பு. சொற்களை அதிகம் விரயம் செய்யக்கூடாதென்பவர். கொச்சை சொற்களை படைப்புகளில் கணிசமாகக்கையாண்டு அப்படியொரு முறைமைக்கு வழிகோலியவர். பிரெஞ்சு இலக்கியம் ஒரு தேர்ந்த படைப்பாளியென்கிற வகையில் அவருக்குப் பெரிதும் கடன்பட்டிருக்கிறது.  செலின் இறந்து (1961ம்ஆண்டு ஜூலையில் இறந்திருந்தார்)  ஐம்பதாவது நினைவஞ்சலியென்பதால் அதனை ஓர் அரசுவிழாவாக, மிகச்சிறந்த முறையில் கொண்டாடவும் திட்டமிட்டார்கள். அரசுவிழாபொறுப்பாளராக தேசிய ஆவணக் காப்பகத்தின் தலைவர் நியமிக்கப்பட்டார். புகழஞ்சலி மலரும் தயாரானது. மலருக்கு முன்னுரை வழங்கியவர் ‘அலென் கொர்பன்’ என்ற வரலாற்றிஞர்.மலருக்கு நாட்டின் கலை, இலக்கிய பண்பாட்டு துறை அமைச்சரால் அக்கறையுடன் எழுதப்பட்ட அணிந்துரையும் இடம்பெற்றது. ஆசியருக்குப் புகழஞ்சலி செலுத்தும் வகையிற் சில பக்கங்கள்ஒதுக்கப்பட்டன. செலின் படைப்புளில் அதிக ஈடுபாடுகொண்டவரும், விற்பன்னருமான ஹாரி கொதார் (Henri godard) எழுதிய வரிகள் வியப்பில் ஆழ்த்துபவை. வழக்கமான புகழஞ்சலிக்குரியசொற்கள் அங்கில்லை, வேறு தொனியிலிருந்தன. சில ஐயப்பாடுகளை எழுப்பின:

“செலினுக்கு விழா எடுக்கத்தான் வேண்டுமா?பிரெஞ்சு இலக்கியத்திற்கு அவரளித்துள்ள பங்களிப்பை மறுக்கவியலாத அதேவேளை கேள்விக்குச் சாதகமானதொரு பதிலைத் தருவதற்குத்தயங்க வேண்டியவர்களாகவுள்ளோம். நினைவாஞ்சலி கூடாதென்பதற்கு காரணங்கள் தெளிவாக உள்ளன. யூதர்கள்மீது தீராத வெறுப்பையும் கசப்பையும் வைத்திருந்தார். ப்ரூஸ்டுடன்பிரெஞ்சிலக்கிய வெளியை பகிர்ந்துகொண்டு இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் அவர் பிரெஞ்சு படைப்புலகில் நிகழ்த்திய சாதனைகளும் மறக்ககூடியல்ல” என்றெழுதி சர்ச்சையை ஹாரிகொதார் துவக்கி வைத்தாரெனலாம்.

ஹாரி கொதார் உபயோகித்த சொற்களை இரண்டாவது முறையாக வாசிப்பீர்களெனில், ‘செலினை’ ஒரு படைப்பாளியாக ஏற்றுக்கொண்டிருக்கும் அதே வேளையில், அவரை ஒருஇனவெறியாளராக தயக்கமின்றி அவர்  சுட்டுவதைப் புரிந்துகொண்டிருப்பீர்கள். இதற்கு செலினைப்பற்றி கூடுதலாக சில செய்திகளை நீங்கள் தெரிந்துகொள்ளுதல் வேண்டும். 1930களின்இறுதியில் இனவெறியாளர்களுடன் கைகோர்த்துக்கொண்டு யூத இன எதிர்ப்பு பிரச்சாரத்தில் செலின் ஈடுபட்டாரென்ற செய்தியை இங்கே கோடிட்டுக்காட்டினால் செலின் என்றஎழுத்தாளனுக்குள்ள எதிர்ப்புகளை புரிந்துகொள்ளக்கூடும்.  “யூத இன எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஈடுபட எனக்குத் தயக்கங்களில்லை; யூதர்களின் முதல் எதிரியாக என்னைக் காட்டிக்கொள்வதில்பெருமிதம் அடைகிறேன்”, என்று வெளிப்படையாகவே தெரிவித்தவர் செலின். பிரான்சு நாட்டை ஜெர்மன் ஆக்ரமித்திருந்தபோது பிரான்சிலிருந்த நாஜி அபிமானிகள் நடத்திய இதழுக்குத்தொடர்ந்து எழுதிவந்தார். அப்பத்திகளில் யூதர்களின் இருத்தலைக் கடுமையாக விமர்சித்திருந்தார். செலின் யார் என்பது ஓரளவு உங்களுக்குப் புரிந்திருக்கும்.

ஹாரி கொதார் எழுப்பிய ஐயங்களைக் கையிலெடுத்துக்கோண்டு செர்ழ் கிளார்பெல்டு (Serge Klarsfeld) கிளர்ந்தெழுந்தார். கிளார்பெல்டு வழக்கறிஞர், எழுத்தாளர், அவரது படைப்புகள்முற்றுமுதலாக நாஜிகளுக்கு எதிரானது. பிரெஞ்சு மொழியில் நாஜிகளைப்பற்றிய கொடூரமான பிம்பத்தை உரிய சாட்சியங்களுடன் கட்டமைத்திருக்கிறார். தம் பெற்றோர்களைகொலைமுகாமில் பலிகொடுத்தவர். எல்லாவற்றிர்க்கும் மேலாக நாஜிகளின் வதை முகாம்களிலிருந்தும், கொலைமுகாம்களிலிருந்தும் உயிர் பிழைத்தவர்களைக்கொண்டு ஏற்படுத்தியஅமைப்பொன்றின் தற்போதைய தலைவர்.

செர்ழ் கிளார்பெல்டு இதற்கெனவே காத்திருந்திருந்ததுபோல அரசாங்கத்தின் முடிவினை உடனடியாகக் கண்டித்தார்: “யூதர்களை தமது ஊத்தைபிடித்த எழுத்துக்களால் கண்டித்து எழுதியன்பலனாக பல்லாயிரக் கணக்கான யூதர்கள் கொல்லப்பட காரணமாகவிருந்த படைப்பாளரொருவரின் (செலின்) ஐம்பதாவது இறப்பு ஆண்டைக் கொண்டாடுவது அவருக்கு நாம் செலுத்தும்மரியாதையென்ற நினைப்பே அவமானத்திற்குரியது. செலினைக் கொண்டாடுகிறபோது அப்பாவி யூதர்கள் பல்லாயிரக் கணக்கில் வயது பேதமின்றி வதைமுகாம்களுக்கும், கொலைகிடங்குகளுக்கும் கொண்டு செல்லப்பட்டதும், அவர்களில் குறைந்த எண்ணிக்கையினரே உயிர்பிழைத்தார்கள் என்பதும் நினைவுக்கு வரக்கூடுமேயண்றி செலினுடைய படைப்புகள் வாராது,எனவே உடனடியாக அமைச்சர் செய்யவேண்டியது 2011ம் ஆண்டு கொண்டாட்டப் பட்டியலிலிருந்து செலினை நீக்குவதாகும்”, என்பது போல அவரது அறிக்கை இருந்தது. இவ்வறிக்கை Le Figaro, Le nouvel Observateur போன்ற பிரெஞ்சு இதழ்களின் இணைய தளங்களிலும் இடம்பெற்றது.

அமைச்சரின் எதிர்வினை என்னவாக இருக்கும், என்பதற்கு முன்பாக பிரெஞ்சு மொழி அகாதமியைசேர்ந்த மொழியிலறிஞர் பிரெடெரிக் வித்து (Frளூdளூric Vitoux),என்பவரின் கூற்றும்அலட்சியப்படுத்தக்கூடியல்ல: “இங்கே பிரச்சினை செலின் என்ற படைப்பாளியல்ல ‘கொண்டாட்டம்’ என்கிற  சொல்லே. அவரது 50வது நினைவஞ்சலி ஆண்டை ஏதோ செலினுக்குஇப்போதுதான் மகுடம் சூட்டப்போவதுபோல நினைத்துக்கொண்டார்கள். அவர் வாழ்ந்த காலத்திலும் இன்றுவரையிலும் அவருக்குள்ள இடம் உறுதியாகவே இருக்கிறது. இந்த ஆண்டில்அவரது எழுத்துக்களை மீண்டும் நினைவஞ்சலி என்ற பெயரில் மறு வாசிப்புக்கு உட்படுத்தியிருக்கமுடியும். அவருடைய களங்கம் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கின்ற பகுதியைக்கூடசார்பற்ற விவாதத்திற்கு உட்படுத்தியிருக்கலாம்.” என்றார் அவர். இதற்கு ஆதரவாகவும் மறுதலிக்கும் வகையிலும் கருத்துகள் குவிந்தன.

இந்தப்பிரச்சினையில் இன்னொன்றையும் விருப்பு வெறுப்பின்றி சொல்லவேண்டியிருக்கிறது. நாஜிகளின் பேரழிவுக்குள்ளான இனம் யூதரினம் என்பதை ஒருவரும் மறுக்க முடியாது. அதற்கானநீதி வழங்கப்படவேண்டியதுதான், வழங்கியும் விட்டார்கள். ஆனால் அதையே காரணமாக வைத்து எதிர் தரப்பினரின் குரல்வளையை இவர்கள் இன்னும் எத்தனைகாலத்திற்குநெறித்துக்கொண்டிருக்கப்போகிறார்கள். இன்றைய தேதியில் உலப்பொருளாதாரமும் அரசியலும் இந்த இனத்தின் கையில்தான் உள்ளது. பிரெஞ்சு கலை இலக்கிய பண்பாட்டுத்துறைஅமைச்சர் செலின் நினைவுதினத்தை அனுசரிப்பது தொடர்பாக என்ன முடிவு எடுத்திருப்பாரென நினைக்கிறீர்கள்? பிரான்சு நாட்டின் அதிபர் ஒரு யூதர், பிரதமர் யூதர், அமைச்சர்களில்பாதிக்குமேல் யூதர்கள். எதிர்கட்சி தலைவர் ஒரு யூதர் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள்கூட யூதர்களாக இருக்கலாம். இந்நிலையில் முடிவு நீங்கள் நினைப்பதுபோலத்தான் அமைந்தது. செலினை யூதரின துரோகியாகப்பாவித்து அரசு அவருக்கான விழாவை பட்டியலிலிருந்து நீக்கியது. எனக்கு ஒரு படைப்பாளியை படைப்பை மட்டுமேவைத்து பார்க்கவேண்டும். படைப்பில் ஒன்றிரண்டு யூத எதிர்ப்புக்கூட இருந்துபோகட்டுமே அதனாலென்ன? சுதந்திரம் சுதந்திரமென்று வாய்கிழிய பேசுகிறநாட்டில் அதற்குவாய்ப்பில்லையானால் எப்படி?

—–

ரவிஉதயன் கவிதைகள்

ரவிஉதயன்


1

கடைசிச்சதரைக்கு வீழ்கிற
இலையைப்  போன்றே
கணித நுட்பம்

தவிப்பு மனிதர்களின்
தந்திர வழி என்கிறார்கள் ?

தீர வலிக்குச்செய்து கொள்ளும்
நித்தியப்பணிவிடை என்கிறார்கள் ?

காதல் ஜோடிகளின்
கைகளிலிருக்க

கடைசி துருப்புச்சீட்டுஎன்கிறார்கள் ?

போதுமான தொரு
வாழ்விலிருந்து மீளும்
சுய விலகல் என்கிறான் ஞானி
ஒரு வேளை

துடித்தடங்கும்
இக்கயிற்றை அறுத்து
தரையிறக்குகையில்
உடைந்த என் குரல்வளையில்
எஞ்சியிருக்கலாம்

ஒரு தற்கொலையின்
காரணத்திற்கான
கடைசிச்சொல்.

2

ரேகைகளை வாசிப்பவன்

விரிந்த
உள்ளங்கையில்
ரேகைகளின்தடங்களைப்பார்க்கிறான்

மேடுகளை நீவி
பள்ளங்களில் நிரப்புகிறான்

செடிவேர்கள்ப்போல
கிளைபிரிந்து செல்லும்
ரேகைகளின் பாதைகளில்
ஒரு சிற்றெம்பைப்போல்
ஊர்கிறான்

உள்ளங்கைக்கதவைத்திறந்து
உள்ளே இருப்பவனிடம்
யாசிக்கிறான்
தனது
ஒருகவளச்சோற்றுப்பசிக்கு.

3

இரையின் பசி

உலைகொதிக்கும் இதயம்
வளைக்கரம்பற்றி  இழுத்து
ருசித்த உதடுகளில்
ஒருவகை ருசி.

திமிரும் உடலோடு,
முனகல் குரலோடு
சேர்த்தணைத்து
உதடுகள் பதித்து
உறைந்த
மின்னற்ப்பொழுது
சுடர்ந்து திகைத்து
இருவிழிகள்
செருகக்கண்டது
இரையின் பசி

4

மழைப்பாடல்
காற்று வீசுகிறது
மரம் தலையசைக்கிறது
இலைகள் கைத்தட்டிசலசலக்கின்றன
நெடிய சாந்தம்
பிறகுதான் ஆரம்பித்தது
மழை தன்மகத்தான பாடலை

சிறுகதை – எம்.கோபாலகிருஷ்ணன் – தருணம்

சிறுகதை

எம்.கோபாலகிருஷ்ணன்

தருணம்

பாண்டியின் சடலத்தை ஆம்புலன்ஸிலிருந்து இறக்கி வீட்டுக்குள் கிடத்தினார்கள். தலையிலிருந்து பாதம் வரையிலும் வெண்ணிற பாப்லின் துணி மொடமொடப்புடன் சுற்றி கட்டப்பட்டிருக்க பாண்டியின் முகம் வீக்கம் கண்டிருந்தது. பத்துக்கு பத்து அளவில் இருந்த அந்த இடத்தில் ஆளாளுக்கு இடித்துக் கொண்டே எட்டி எட்டி பார்த்தார்கள். வேஸ்ட் குடோன் மாணிக்கம் ஒரு ரோஜா மாலையை அவன் நெஞ்சில் சாத்திவிட்டு நகர்ந்தார். இன்னும் இரண்டு மாலைகள் கால்மாட்டில் போடப்பட்டன. சடலத்தின் மீது இருந்த மருத்துவமனைக்கான வாடையோடு ரோஜாவின் மணம் அபத்தமாய் கலந்தது.

”நா பாக்க மாட்டேன்.. இல்லக்கா.. நா பாக்க மாட்டேன்.. அவரு இல்ல இது.. ” வாசுகியின் தோளில் முகம் புதைத்தபடி ராஜம் குமுறினாள். காலையிலிருந்து கண்ணீரைத் தேக்கி வைத்தபடி வெற்றுப் பார்வையுடன் உட்கார்ந்திருந்தவள் பாண்டியின் உடல் உள்ளே எடுத்து வருவதைக் கண்டதும் பயந்து ஓலமிட்டாள். வாசுகி அவள் முகத்தைத் திருப்பினாள்.

”பாவி.. பொணமாக் கெடக்கறான் அவன்.. நீ அவனில்லை.. அவனில்லைன்னு பைத்தியமாட்ட ஒளர்ற.. பாருடி.. கண்ணத் தொறந்து பாரு.. உன்ன இப்பிடி தெருவுல விட்டுட்டு கெடக்கறான் பாரு..”

அழுதபடியே ஒடுங்கியவளை இழுத்து வாசுகி அவன் தலைமாட்டில் உட்காரவைத்தாள். முகத்தை மூடிய கைகளை மெல்ல விலக்கி பாண்டியை நிதானமாக பார்த்தாள். அவன் தூங்குவது போலத்தான் இருந்தது. ”மாமா.. மாமா.. என்ன பாரு மாமா? கண்ணத் தொறந்து பாரு மாமா..” என்று கேவல்கள் வெடித்தன. உதடுகள் துடிக்க அவன் தோளில் விழுந்தாள். வாசுகி அவசரமாக அவளை விலக்கினாள். மார்பிலும் முகத்திலும் அய்யோ அய்யோவென உயிர் துடிக்க அழுதவளை சமாதானப்படுத்த முடியாதவளாய் வாசுகியும் அழத் தொடங்கினாள்.

பாண்டியைப் பார்க்க கூட்டம் வந்தபடியே இருந்தது. வீட்டு வாசலில் இருந்த வேப்பமர நிழலிலும் தெருவின் மறுபக்கம் இருந்த பனியன் கம்பெனியின் வாசலிலும் நின்றவர்கள் பாண்டியை பலி வாங்கிய விபத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். கம்பெனியை அடுத்திருந்த கனகுவின் வீட்டு வாசலிலும் ஆட்கள் சேர்ந்திருந்தார்கள். வாசல் திண்ணையில் இருந்த கனகுவை அனைவரும் சூழ்ந்திருந்தார்கள். கலைந்த தலை, சிவந்து களைத்திருந்த கண்களுடன் எந்த கேள்விக்கும் பதில் சொல்லாமல் தலை குனிந்து உட்கார்ந்திருந்தான். விஸ்வமும் காசியும்தான் மின்மயானத்துக்கு போய் ஏற்பாடுகளை செய்திருந்தார்கள்.

”விஜயன் எப்பிடி இருக்கான் கனகு?”

குடோன் மாணிக்கம் கனகுவின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். அவனுக்கு அழுகை கொப்புளித்தது.

0

நேற்று காலை எட்டு மணிக்கு விஜயனும் பாண்டியும்தான் புறப்பட்டுப்போனார்கள். விஜயன் செகணன்டில் யமஹா பைக் வாங்கி இரண்டு வாரம்தான் ஆகியிருந்தது. பைக் வாங்கிய பொழுதிலிருந்து பாண்டியும் விஜயனும் சேர்ந்தேதான் சுற்றிக் கொண்டிருந்தார்கள். கனகு அப்போதுதான் தெருமுனை குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தான். அவனருகில் வந்ததும் வண்டியை வேகம் தணித்தார்கள். பாண்டி வண்டியை ஓட்ட விஜயன் பின்னால் உட்கார்ந்திருந்தான்.

”கனகு.. தென்திருப்பதிக்கு போயிட்டு வரோம்.. சாயங்காலமா சாந்திக் கொட்டாயில டிக்கெட் வாங்கி வெச்சுரு.. வந்தர்றோம்”

வண்டி உறுமியபடி முன்னால் நகர்ந்து மறுபடியும் நின்றது. பாண்டி திரும்பிப் பார்த்து.. ”கனகு.. நாலு டிக்கெட் வாங்கணும்..” என்றான்.

தண்ணீர் குடத்தை முகப்புத் திண்ணையில் வைத்துவிட்டு குனிந்து உள்ளே போன கனகு, மிளகரைத்துக் கொண்டிருந்த வாசுகி அக்காவிடம் கேட்டான்.

”காலங்காத்தாலே வண்டிய எடுத்துட்டு ரெண்டுபேரும் கெளம்பிட்டாங்க.. எதாச்சும் சாப்புட்டாங்களா?”

வாசுகி அக்கா சந்தனப் பதம் வந்துவிட்டதா என்று விரல்களால் சோதித்தபடியே தலையாட்டினாள். ”இந்த பைக்கை வாங்கினதிலிருந்து வீடு தங்க மாட்டேங்கறாங்க. இவன்தான் வளுசுப் பய, திரியறான்னா.. அந்தப் பாண்டி.. கட்டுன பொண்டாட்டியகூட கண்டுக்க மாட்டேங்கறான்”.

வாசுகிக்கு எல்லாவற்றின் மீதும் வெறுப்பு. சலிப்பு. முப்பத்தி ஆறு வயதுக்குள்ளாக வாழ்க்கை அவள் மீது திணித்துவிட்டிருந்த துக்கத்தினாலும் கசப்பினாலும் விளைந்த சலிப்பும் வெறுப்பும். விளையாட்டுப் பிள்ளைகளாய் விஜயனும் கனகுவும் இவளை அண்டிக் கிடந்த காலம் மாறி இன்று தம்பிகள் தயவில் நாட்கள் கழிகின்றன. ஆண்டிப்பட்டியிலிருந்து மணப்பெண்ணாய் அய்யம்பாளையம் போன மூன்றாவது மாதமே வெறுங்கழுத்துடன் திரும்பியவளின் கண்ணீர் காய்வதற்குள் ஆதரவாயிருந்த அப்பாவும் தம்பிகளை கைசேர்த்துவிட்டு கண்ணை மூடிவிட்டார். கதியற்று நின்றவள் தம்பிகளுடன் ஒரு நாள் அதிகாலையில் திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் வந்திறங்கினாள். ஒரு கணம் வாழ்வின் அனைத்து வழிகளும் அடைபட்டு போய்விட்ட மருட்சி அவள் நெஞ்சை அடைத்தது. கண்ணீர் பெருக டீக்கடை வாசலில் தம்பிகளுடன் நின்றாள். பேருந்து நிலையத்துக்கு பக்கத்தில் இருந்த உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க வந்த வேஸ்ட் குடோன் மாணிக்கம் அருகில் வந்து விசாரித்தார். ஆறுதல் சொல்லி குடோனுக்கு அழைத்து வந்தார். அவருக்கு சொந்தமான லைன் வீடுகளில் ஒன்றில் தங்குவதற்கு இடம் கொடுத்தார். குடோனில் வேலையும் கொடுத்தார். இரண்டாம் நாள் இரவில் மண்ணெண்ணை அடுப்பில் சோறு பொங்கி மூவரும் வயிறார சோறு உண்டபோது வாசுகிக்கு பிழைத்துவிடுவோம் என்ற தைரியம் வந்தது. விஜயனும் அடுக்கிக்கட்டுவதில் தொடங்கி கைமடித்து சிங்கர் டெய்லராகிவிட்டான். பள்ளிக்கூடம்தான் போவேன் என்று ஆரம்பத்தில் அடம்பிடித்த கனகுவும் பிறகு சமாதானமாகி கம்பெனிக்குள் கால்வைத்து இப்போது கட்டிங் மாஸ்டராகிவிட்டான்.

ஒண்டிக்கொள்ள நிழலுமின்றி பசியாற வழியுமின்றி பரிதவித்த நாட்கள் போய், நிம்மதிப் பெருமூச்சுவிட்டு நிமிர்ந்தபோது அதுகாறும் பதுங்கிக் கிடந்த வெறுமையும் கசப்பும் வெடித்து வெளிப்பட்டன. இதற்காகவே வேலைகளை இழுத்துப்போட்டுக் கொள்வாள். ஆனாலும் ஒரு சில நாட்களில் திண்ணையில் கவிழ்ந்து படுத்தால் சாயங்காலம் வரைக்கும் கண்ணீர் விட்டபடியே அன்ன ஆகாரம் இல்லாமல் துவண்டு கிடப்பாள். ராஜம் அந்தத் தெருவிற்கு வந்த பிறகு அவளுக்கு ஒரு பெரும் பிடிப்பு ஏற்பட்டது போலொரு உற்சாகமும் வந்தது.

தம்பிகளை அழைத்துக் கொண்டு வாசுகி வந்திறங்கிய அதே நிலையில்தான் பாண்டியும் ராஜத்தோடு திருப்பூர் வந்து சேர்ந்தான். திருச்சுழியில் டூ வீலர் மெக்கானிக். ஒற்றை ஆளாய் இருந்த வரையில் வருமானம் பற்றியோ எதிர்காலம் பற்றியோ திட்டங்கள் எதுவுமில்லாமல் திரிந்தவனுக்கு ராஜத்தை கட்டிக் கொண்டபிறகு கவலைகளும் சேர்ந்தே வந்தன. ராஜத்தின் அண்ணன் மகனும் சித்தப்பா வீட்டு பிள்ளைகளும் சொன்ன அனுபவத்தில் ராஜம்தான் திருப்பூர் போய் பிழைக்கலாம் என்று பாண்டியை சம்மதித்து அழைத்து வந்தாள்.  இரண்டு லெதர் பைகளும் சிறிய கோணிப் பையில் வீட்டுச் சாமான்களுமாக பாண்டியும் ராஜமும் வாசலில் வந்து நின்றார்கள். ”வாடகைக்கு வீடு இருக்கா இங்க?”. வேர்வையும் களைப்புமாய் நின்றவர்களை திண்ணையில் உட்கார வைத்து விசாரித்தாள். சூடான தேநீரைக் குடித்தபடியே பாண்டி விபரம் சொன்னான். வாசுகியின் பரிந்துரையில் மீனாட்சி வாடகைக்கென்று அமைத்திருந்த நான்கு வீடுகளில் முதலாவது, தெருவை ஒட்டிய வீடுதான் பாண்டிக்கு வாய்த்தது. சீமை ஓடுகள் வேய்ந்து நாலாபக்கமும் தென்னை ஓலைகள் அடைத்த தட்டிகளையே சுவராகக் கொண்டது. சிமெண்டு தரை. வட கிழக்கு மூலையில் அடுப்பங்கரைக்கென ஒரு தடுப்பு. தகரத்தாலான கதவு. ஒரே ஆறுதல் வாசல் வேப்பமரம். அன்று மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோதுதான் விஜயன் பாண்டியைப் பார்த்தான். பார்த்தவுடன் பிடித்துப் போய்விட்டது. மெக்கானிக் வேலை பார்க்கப் போகிறேன் என்று இருந்தவனை விஜயன்தான் கம்பெனிக்குள் இழுத்துப்போட்டான்.

சாந்தி தியேட்டரில் டிக்கெட் வாங்க வரிசையில் நின்றிருந்தபோதுதான் கனகுவின் செல்போன் ஒலித்தது. அழைப்பு விஜயனின் எண்ணிலிருந்துதான் வந்தது.

”அலோ.. யார் பேசறதுங்க?” மறுமுனையில் விஜயனின் குரல் ஒலிக்கவில்லை.

”அலோ.. நா கனகுதான் பேசறேன்.. விஜி இல்ல.. நீங்க யாரு?” மனதுக்குள் ஆயிரம் கேள்விகள். போன் எங்கும் கீழே விழுந்துவிட்டதா? ராங் நம்பரா? எண்ணை சரியாக பார்க்கவில்லையா?

”அன்னூர் ஸ்டேஷன் போலிஸ் கான்ஸ்டபிள் பேசறேன். ஒரு ஆக்ஸிடென்ட் இங்க. ஸ்பாட்ல ஒருத்தர்கிட்ட இருந்த போன்ல இருந்துதான் பேசறேன்..” மேலும் அவர் சொல்லியது எதையும் காதில் வாங்கிக் கொள்ள முடியவில்லை கனகுவால். வரிசையிலிருந்து விலகினான். செல்போனை பிடித்திருந்த கை நடுங்கியது. தியேட்டர் வாசலில் இருந்த அனைத்து இயக்கங்களும் ஓசையிழந்து சுழன்றன. செல்போனில் அழைப்பு வந்த எண்ணை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திக் கொண்டான். நேரத்தை சரிபார்த்தான். விஜயனின் போனிலிருந்து அவன் பேசவில்லை. ஒரு போலிஸ்காரர் பேசுகிறார். என்றால் விஜயன் என்ன ஆனான்? பாண்டிக்கு என்ன ஆனது? இருவரையும் 108 ஆம்புலன்ஸில் கோயமுத்தூர் மருத்துவமனைக்கு கொண்டு போகிறோம், நீங்கள் உடனடியாக அங்கே வந்து சேருங்கள் என்று சொல்கிறார். அடுத்து என்ன செய்வது என்பதை கனகுவால் தீர்மானிக்க முடியவில்லை. காசியை அழைத்தான். அடுத்த பத்தாவது நிமிடத்தில் விஸ்வத்தோடு வந்து சேர்ந்தான்.

”அக்காகிட்ட இப்ப எதுவும் சொல்லவேண்டாம் கனகு.. நாம கோயமுத்தூர் போயி பாத்துட்டு அப்பறமா சொல்லலாம்” சாந்தி தியேட்டர் வாசலிலிருந்தே கோயமுத்தூர் பேருந்தில் ஏறிக்கொண்டார்கள். ஒன்றரை மணி நேர பயணம் கனகுவிற்கு பெரும் அவஸ்தையாக இருந்தது. கண்களை திறக்காமல் இறுக மூடிக்கொண்டான். உள்ளுக்குள் ஆயிரம் காட்சிகள். பாண்டியின் முகம். சீறிச் செல்லும் வாகனம். பின்னிருக்கையிலிருந்து கால்களை விரித்துக் கொண்டு மல்லாந்து விழும் விஜயன். தெறிக்கும் ரத்தம். சாலையில் கிரீச்சிட்டு தேயும் பிரேக்கின் நாராசம். காசி அவனை தேற்றுவதற்காக தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தாலும் கனகுவால் கவனத்தை திசைமாற்றிக் கொள்ள முடியவில்லை.

இரவு ஏழரை மணிக்கு அரசு மருத்துவமனை வளாகம் மங்கலான வெளிச்சத்தில் ஓய்ந்திருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் திருச்சி சாலையும் அடங்கியிருந்தது. வளாகத்தினுள் மஞ்சள் ஒளியில் கட்டிடங்கள். கிளை விரித்து ஆடிய தூங்குமூஞ்சி மரங்கள். மருத்துவமனைக்கேயுரிய பிரத்யேகமான நெடி. கனகுவிற்கு உள்ளே வரவே பயமாயிருந்தது. கால்கள் நடுங்கின. மூவரையும் பார்த்து 108 ஆம்புலன்ஸ் டிரைவர் நெருங்கி வந்தான்.

அன்னூரிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தள்ளி ரைஸ் மில் அருகில் பைக்குக்கு பின்னால் வந்த ஒரு செங்கல் லாரி மோதியிருக்கிறது. சற்று தொலைவில் பேருந்துக்காக காத்திருந்தவர்கள் ஓடிவந்து காவல்துறைக்கும் 108 ஆம்புலன்சுக்கும் தகவல் சொல்லியிருக்கிறார்கள். யார் என்ன என்று தெளிவாக தெரியவில்லை. ஒருவர் அவசர சிகிச்சை பிரிவிலும் இன்னொருவர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் இருப்பதாக டிரைவர் வழிகாட்டினான்.

கனகுவிற்கு தலை சுற்றியது. அடிவயிறு கலங்க அப்படியே தரையில் உட்கார்ந்தான். காசி அவசர சிகிச்சைப் பிரிவுக்கு ஓடினான். திரும்பி வந்தவன் கனகுவை எழுப்பினான்.

”டேய்.. வாடா.. விஜயன பாத்துட்டேன்.. ஒண்ணுமில்லடா.. வா.. பாக்கலாம்”

வலது கணுக்காலிலும் முழங்காலிலும் எலும்பு முறிவு. இடது நெற்றியில் பலமான அடி. ரத்த நெடியோடு மயக்கத்தில் கிடந்தான். இரவுப் பணியிலிருந்த டாக்டர் மறுநாள் காலையில் அறுவைச் சிகிச்சை நடைபெறும் என்று சொன்னார். கனகுவுக்கு பெரும் ஆசுவாசமாயிருந்தது. தண்ணீரை முகத்தில் இறைத்து கழுவிக் கொண்டான். கால் நடுக்கம் மட்டுப்பட்டது.

”டேய்.. பாண்டிக்கு என்னாச்சுன்னு பாக்கலாம் வாடா” விஸ்வம் தோள்தொட்டு அழைத்தபோதுதான் அவனுக்கு பாண்டியைப் பற்றிய நினைப்பே வந்தது.

தீவிர சிகிச்சைப் பிரிவு இரண்டு கட்டிடங்கள் தள்ளி சற்றே உள்ளடைந்து நின்றது. வராந்தாவில் இருந்த பிளாஸ்டிக் நாற்காலிகளில் நீண்ட பெஞ்சுகளில் உறவுகள் காத்திருந்தன. தரை விரிப்புகள், போர்வைகள், தண்ணீர் பாட்டில்கள், தட்டு, டம்ளர், பாத்திரங்கள், பிளாஸ்க் ஆகியவை அடங்கிய கட்டை பைகள். இரவுப் படுப்பதற்காக மின் விசிறிக்குக் கீழாக விரிப்பைப் போட்டு சிலர் தயாராகியிருந்தார்கள். திரைச் சீலையுடன் இருந்த கண்ணாடிக் கதவுக்கு வெளியே நீண்ட மேசைக்குப் பின்னாக நின்றிருந்த நர்ஸ் செல்போனில் நிதானமாகப் பேசிக் கொண்டிருந்தாள். மேசையில் சாய்ந்து நின்று அவளையே பார்த்து புன்னகைத்தபடியிருந்த காக்கிச் சீருடை காவலரிடம் காசி விபரம் கேட்டான்.

”அன்னூர் ஆக்சிடெண்ட் கேஸா?.. ஆமாமா.. ஒரு ஆளு இங்கதான் இருக்கறாரு.. பேரு கூட தெரியாது”

நர்ஸ் செல்போனை அவசரமாக அணைத்துவிட்டு கேட்டாள்.

”நீங்க அவருக்கு தெரிஞ்சவங்களா? சொந்தமா?”

கனகுவுக்கு அடிவயிறு மீண்டும் புரட்டியது. தொண்டை வறண்டது. அபாயத்தின் பெரும் இருளுக்குள் அமிழ்த்தப் போகிற முதல் படியாக அந்த கேள்வி நின்றது.

”பிரண்டு.. என்னாச்சு அவருக்கு?..”

ஆட்கள் வந்துவிட்ட நிதானம் அவளிடம் இப்போது. இண்டர்காமை எடுத்துப் பொத்தான்களை அழுத்தி பேசினாள். சில நொடிகளுக்குள்ளாக மருத்துவமனை காவல் மையத்திலிருந்து ஒரு கான்ஸ்டபிளும், ஏட்டும் வந்துவிட்டார்கள். தீவிர சிகிச்சைப் பிரிவின் பணி மருத்துவரும் வெளியில் வந்தார். கனகுவிடம் பாண்டியைப் பற்றி விசாரித்தார்கள். படிவங்களை நிரப்பி கையொப்பமிடச் சொன்னார்கள்.

”தலையிலதான் பலமான அடி. நெறைய ரத்தம் போயிருச்சு.. சர்ஜரி பண்ணவேண்டியிருக்கும். டாக்டர்ஸ் இப்ப வந்து பாத்து முடிவு பண்ணுவாங்க.. இப்ப இருக்கற நெலமையில ஒண்ணும் சொல்ல முடியாது.. அவங்க வீட்ல இருந்து யாராவது இங்க வந்து இருந்தா பார்மாலிட்டீசுக்கு வசதியா இருக்கும்.. அப்பறம்.. பிளட் அரேஞ்ச் பண்ண வேண்டியிருக்கும்..”

பணி மருத்துவர் சொன்ன தகவல்கள் தைரியத்தைக் குலைத்தன. யாராவது ஒருவர் உள்ளே போய் பார்த்துவிட்டு வரலாம் என்று அனுமதித்தபோது கனகு அவசரமாக விலகி நின்றான். காசி தயங்கியபடியே உள்ளே போய்விட்டு வந்தான்.

”இங்கயே இருங்க.. வெளியில எங்கயும் போயிடாதீங்க..” நர்ஸ் செல்போன் நம்பரை வாங்கிக் கொண்டாள்.

வெளியில் வந்தபோது இரவுக் காற்று சிலீரென்று முகத்தில் மோதியது. கனகு ஒன்றுமே பேசாமல் தலையை உலுக்கியபடியே நடந்தான். 108 ஆம்புலன்ஸ் டிரைவரும் அன்னூரிலிருந்து வந்த கான்ஸ்டபிளும் மெல்ல நெருங்கி வந்தனர்.  பாண்டியின் செல்போனை கனகுவிடம் ஒப்படைத்தார்.

”வண்டி அங்கயேதான் கெடந்துது. ஸ்டேஷன்ல கொண்டுவந்து போட்டுருப்பாங்க. இதெல்லாம் முடிஞ்சதுக்கப்பறமா வாங்க.. பாத்துக்கலாம்”

பணத்தை வாங்கிக் கொண்டு இருவரும் நகர்ந்த பிறகு காசி செல்போனை எடுத்தான்.

”கனகு.. அக்காகிட்ட இருந்து நாலைஞ்சு மிஸ்ட் கால் வந்துருக்கு.. விஜயனோட போன்லயும். அவங்கள கூப்பிட்டு விஷயத்தை சொல்லிரலாம்..”

கனகு நிமிர்ந்து பார்த்தான். தீவிர சிகிச்சைப் பிரவுக்குள் சென்று பாண்டியை பார்த்துவிட்டு வந்தபின் காசி சொன்னதுதான் இன்னும் அவன் காதில் ஒலித்தபடியிருந்தது.

”பயமா இருக்குடா கனகு.. தலையில பெரிய கட்டு.. கர்..கர்னு சத்தம்.. என்னால நிக்கவே முடியலை.. பாண்டிதான்னு உத்துப் பாத்துட்டு நகந்து வந்துட்டேன்.. காலையில வரைக்கும் அவன் பொழைச்சுருப்பான்னு எனக்கு நம்பிக்கையில்ல..”

வாசுகி மறுபக்கத்தில் அவசரமாக பேசுவது தெரிந்தது.

”ரெண்டு பேரும் நல்லாத்தான் அக்கா இருக்காங்க.. அன்னூர்கிட்ட ரோட்ல விழுந்துட்டாங்க.. இல்லை.. இன்னிக்கு ஞாயித்துக் கிழமையில்ல.. அதான்.. டாக்டருக இல்லை.. நாளைக்கு பாத்துட்டுத்தான் டிசார்ஜ் பண்ணுவாங்க.. நாங்க பாத்துக்கறோம்.. காலையில போன் பண்றோம்.. வரணும்னா பாண்டி சம்சாரத்த அழைச்சிட்டு வாங்க.. கனகு இதோ.. இங்கதான் இருக்கான்..”

”கனகு.. நீ பேசினாதான் நம்புவாங்க.. தைரியமா பேசு.. அழுது வெச்சறாதே..” சன்னமாக எச்சரித்துவிட்டு செல்போனை நீட்டினான்.

”ஆமாக்கா…. ஒண்ணுமில்லை.. கீழ விழுந்ததுல லேசான அடிதான்.. அதெல்லாம் வேண்டாம்.. காலையில பாத்துக்கலாம்”

ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு செல்போனை துண்டித்தவனிடமிருந்து அழுகை வெடித்தது. மரக் கிளைகளிலிருந்து பறவைகள் சடசடத்து அமைந்தன. அழுகுரல் கேட்டு வராந்தாவில் படுத்துக் கிடந்தவர்கள் எழுந்து பார்த்தார்கள். விஸ்வம் கனகுவை இழுத்து தோளில் புதைத்துக் கொண்டான்.

0

தூங்கிக் கிடந்தவனை காசி உலுக்கி எழுப்பினான். தீவிர சிகிச்சைப் பிரிவின் ஒரு மூலையில் சரிந்து உட்காரந்தபடியே தூங்கிப் போயிருந்தான். இன்னும் விடிந்திருக்கவில்லை. பனியும் குளிருமாக இருள் உறைந்திருந்தது.

கண்களை திறக்கவே முடியாத எரிச்சல். ஒரு கணம் அனைத்துமே தெளிவற்ற காட்சியாக சுழன்றது.

”என்னடா ஆச்சு?”

காசியின் முகம் சுண்டிப்போயிருந்தது. விஸ்வம் தலையில் கைவைத்தபடியே மண்டியிட்டு உட்கார்ந்தான்.

”எல்லாம் முடிஞ்சுபோச்சுடா கனகு.. பாண்டி தலையில கல்லப் போட்டுட்டாண்டா”

கனகு சுவற்றில் சரிந்து உட்கார்ந்தான். பதற்றம் மெல்ல மெல்ல அடங்கியது. மூச்சு சீரானது. கண்ணீர் நிறைந்து தளும்பி வழிய மூச்சை ஆழமாக உள்ளிழுத்தான்.

அதிகாலையில் ஆபரேஷனுக்கு தயார்படுத்துவதற்கு முன்பே பாண்டி விடைபெற்றுக் கொண்டிருக்கிறான்.

0

”எடுத்தர்லாமா கனகு?” மாணிக்கம் மறுபடியும் அருகில் வந்தார். கனகு மெல்ல எழுந்தான். திண்ணையின் மேற்கு மூலையில் தலை கவிழ்ந்து உட்கார்ந்திருந்தவளைப் பார்த்தான். மெலிதான தேகம். கருத்து நீண்ட தலைமுடி. முகமும் உடலும் தாய்மையின் பொலிவுடன் மின்னின. அடர்பச்சை நிற பருத்திப் புடவையில் உதடு துடிக்க வெற்றுப் பார்வையுடன் பாண்டியின் வீட்டு வாசலையே பார்த்தபடி இருந்தாள். அவளருகில் உட்கார்ந்திருந்த வாசுகி எழுந்தாள். விறுவிறுவென்று பாண்டியின் வீட்டுக்குள் போனாள்.

ராஜம் இன்னும் தலைமாட்டில் முகம் புதைத்து அழுதபடியிருந்தாள். வாசுகி அவளருகில் உட்கார்ந்தாள். ராஜத்தின் முதுகில் கைவைத்து அணைத்தபடியே குனிந்து அவள் காதில் மிக மெதுவாக சொன்னாள்.

”ராஜம்.. போதுண்டா.. போனது போயிட்டான்.. இனி அழுதுட்டே இருந்தா ஆச்சா?”

ராஜம் தலை நிமிர்த்தினாள். வாசுகி இன்னும் ஏதோ சொல்லப் போகிறாள் என்பதுபோல பார்த்தாள். கண்கள் களைத்து முகம் வீங்கியிருந்தது.

”சொல்லுக்கா”

வாசுகிக்கு அழுகை கொப்பளித்தது.

”ஆனது ஆச்சடி.. நா சொல்றத பொறுமையா கேளு.. கோவப்பட்டு கத்தாதே.. என்ன?”

ராஜத்தின் பார்வை கூர்மை பெற்றது. ”சொல்லுக்கா… ”

”அவ வந்து உக்காந்துருக்கா ராஜம்.. ஒரே ஒரு தடவ மொகத்தப் பாத்துட்டு போயிரட்டுமே..”

விலுக்கென்று ஆவேசத்துடன் நிமிர்ந்தாள் ராஜம். தலையை அள்ளி முடிந்து கொண்டவளின் பார்வை வாசுகிக்கு அச்சம் தந்தது.

”இங்கயே வந்துட்டாளா அவ.. விடமாட்டேன் அக்கா.. நா விடமாட்டேன். உசுரோட இருந்தவரைக்கும்தான் பங்குப் போட்டுக் கெடந்தான்னா.. இப்ப பொணத்தையும் பங்கு போட்டுக்க வந்துட்டாளா?  முடியாது.. அவ இங்க இருந்தான்னா பொணத்தை எடுக்கவே விட மாட்டேன்.. மொதல்ல அவள  இந்த எடத்தை விட்டு போகச் சொல்லுங்க.. போச் சொல்லுங்க..”

அவளுடைய கூச்சல் அனைவரது பார்வையையும் வாசுகி வீட்டுத் திண்ணையில் இருந்தவளின் மீது குவிக்கச் செய்தது.

ராஜத்தின் குரல் அவள் காதிலும் விழுந்தது. ராஜத்தின் ஒவ்வொரு சொல்லும் அவளது விசும்பல்களை உக்கிரமாக்கியது. பாண்டியின் சாவும் ராஜத்தின் துக்கமும் மறந்து அனைவரும் இப்போது அந்தப் பெண்ணைப் பற்றிய கற்பனைகளில் சுவாரஸ்யம் கொண்டிருந்தனர்.

வாசுகிக்கு ராஜத்தின் மீது ஆத்திரம் பொங்கியது.

”சொன்ன கேக்க மாட்டியா நீ? பொணத்தக் கட்டிக்கிட்டே எந்நேரம் கெடப்படி.. அவ வயத்துல புள்ளையோட உக்காந்துருக்காடி.. பாவி. அதுக்காகவாவது அவ மொகத்த பாத்துட்டுப் போகட்டுமே..”

ராஜம் வாசுகியின் தோளைத் தொட்டாள். முகம் பார்த்தாள். கண்களில் ஆவேசம் இல்லை. பதற்றம் இல்லை. அவள் கண்களுக்குள் ஒரே ஒரு கேள்விதான் கண்ணீருடன் தளும்பி நின்றது.

வாசுகி ஆமோதிப்பவள்போல் தலை அசைத்தாள். ராஜம் பாண்டியின் முகத்தைப் பார்த்தாள். அவனைப் பார்த்தபடியே மெல்ல நகர்ந்து ஓலைத் தட்டியில் சாய்ந்துகொண்டாள். வயிற்றில் அறைந்தபடியே அழத் தொடங்கினாள்.

”போங்கக்கா.. போங்க.. அவள அழச்சிட்டு வாங்க.. இங்க வெச்சு.. எல்லா சீரையும் அவளுக்கே செய்யுங்க.. இனி நா சொல்றதுக்கு என்ன இருக்கு?.. நியாயமா அவளுக்குத்தான செய்யணும்..போங்க. போய் கூட்டியாங்க..”

வாசுகிக்கு அழுகை பொங்கிக் கொண்டு வந்தது. ராஜத்தை இழுத்து அணைத்துக் கொண்டாள்.

ராஜம் விலகினாள். முகத்தைத் துடைத்துக் கொண்டாள்.

”அக்கா.. நேரமாகுது.. போங்க.. போய் கூட்டியாங்க.. எனக்கொண்ணுமில்லை.. வரட்டும்.. வந்து பாக்கட்டும்.. போங்க..”

கரகரத்த அவள் குரல் உறுதியுடன் ஒலித்தது.

வாசுகி எழுந்து தலைமுடியை அள்ளி முடிந்தபடி வெளியே வந்தாள். இதற்குள் அந்தப் பெண்ணைச் சுற்றி கூட்டம் சேர்ந்து வேடிக்கைப் பார்த்திருந்தது. தலை குனிந்து அழுதுகொண்டிருந்தவளை வாசுகி வீட்டுக்குள் அழைத்துச் சென்றாள்.

”நீ வாம்மா போய் பாத்துட்டு வந்தர்லாம்.. வா”

வாசுகியிடமிருந்து விலகிய அவள் முகத்தைத் துடைத்துக் கொண்டாள். முகத்தில் துக்கத்தை மீறிய நிதானம்.

”அக்கா.. நா அங்க வரலை.. வேண்டாம்.. அந்தக்காவுக்கு பெரிய மனசு.. அவர் மொகத்த இனி நான் பாத்து என்ன ஆவப் போவுது? இப்ப நா அங்கப் போனா அந்தக்காவுக்கு அவரை நெனைக்கும் போதெல்லாம் என்னோட மொகம்தான் நெனப்பு வரும். ஆயுசு முழுக்க உறுத்திட்டே இருக்கும்.. வேண்டாம்.. நா மொகம் தெரியாத ஒருத்தியாவே இருந்துட்டு போறேன்.. நீங்க போய் சொல்லி ஆக வேண்டியதப் பாருங்க.. நா இங்கயே இருக்கேன்.. அவங்க சொன்னதே போதும்… போங்க..”

நகர்ந்து அறை மூலையில் உட்கார்ந்து கொண்டாள். வாசுகி அவள் தலையை வருடினாள். அழுகைப் பொங்கியது. மின் விசிறியை இயக்கிவிட்டு எவர்சில்வர் சொம்பில் தண்ணீரை எடுத்து வைத்தாள்.

கதவை சாத்திக் கொண்டு வெளியே வந்தவள், வாசலில் காத்திருந்த கனகுவிடம் சொன்னாள்.

”எடுத்தார்லாம் தம்பி.. ஏற்பாடு பண்ணச் சொல்லு”

0

இளம்படைப்பாளி அகச்சேரன் கவிதைகள்

அகச்சேரன் கவிதைகள்

கிளிக்கதை

அவள் தன்

செல்லக்கிளியின்

பச்சைச் சிறகால்

தூது விடுத்தாள்

அவன் தன்

வானில் சற்றே

அலைய விட்டு

செக்கச் சிவந்த

அலகை மாத்திரம்

நறுக்கி

பதிலாக அனுப்பி வைத்தான்.

சாம்பல் கவிதை

புண்ணியவதி கைவிட்ட ஒரு ஜோடிக் கண்கள்

சாம்பல் மேட்டையே நோக்குகிறது

சிசு புரண்டழ

சிசுவாகி ஏங்கி

நிறைகிறது கண்ணீர;

ஜோடிக் கண்கள் புனைய

கவிதையோ

கண்களைத் தின்று

கொழுக்கிறது.

மீண்டும்

தொடர்கிறது

இடையில் கேட்டதெல்லாம்

பிரிவின் அற்புத கானம்

சேர்கையில் இட்டேன்

எனக்கே என்ற

உரிமையின்

மானசீக முத்தம்.

•••

இளம்படைப்பாளி சம்பு கவிதைகள்

சம்பு கவிதைகள்

சமாதானம் ஒரு கூழாங்கல்…

இரு சக்கரங்கள் மட்டும் பொருத்தியபடி

இவ்வூருக்குள்

இனியிந்தக் கப்பலை ஓட்டுவது

அசாத்தியம் என்றபோது

ஒரு மரத்தை அவன் முட்டிக்கொண்டு குமுறுகிறான்

ஆறுதலாய் முதுகு நீவப்பட்டு உடனே

அவசரமாய் கூரியரில் வருகிறது ஒரு சமாதானம்

அரிபொருளைக் கையிலெடுத்துக் கொண்டு

இக்கோடையில்

நாக்குத்தள்ள ஓடும்போது

சமாதானம்

திரண்ட ஒரு கூழாங்கல்லாகி விடுகிறது

எவ்வூரின் தென்மேற்கு மூலையில் நின்றும்

பிறகு

எப்படித் திருப்பி நக்கினாலும்

அக் கூழாங்கல்லோ இனிக்கவே மாட்டேன் என்கிறது

சேர்ந்துவிட்ட கற்களைக் கடவாயிலிட்டு அடக்கினால்

பிதுங்கி நகர்ந்து

தொண்டையை அடைக்கிறது முதல் கூழாங்கல்

கண்ணாமுழி திருகி நிலைகுத்துகையில்

கடைசியாக

‘த்தூ’வென்று துப்பிவிட்டு

அவன் ஒரு வெங்காயமும் வேண்டாமென்கிறான்

அவசரமாய் ஒரு வெங்காயம்

வெல்வெட் ரிப்பனிட்ட பார்சலில் வருகிறது…

*

அதிகாலை 4 மணிக்கு நாய் குரைக்கிறது…

அதிகாலை 4 மணிக்கு குரைக்கும்

நாய் குரைக்கிறது

அடுத்த நொடி வரப்போகும் திருடனுக்காக

இல்லாவிடிலும்

குறைந்தபட்சம் குரைக்க வேண்டியிருக்கிறது

ஒரு நாய் என்பதற்காக

மேலும் அது அறிவுறுத்தப்பட்டிருக்கிறது

குரைத்துக்கொண்டே சாப்பிடவும்

குரைத்துக்கொண்டே ஓய்வு கொள்ளவும் கூட

குரைப்பதால் வரும் தொண்டை கமறலுக்கு

ஒரு விக்ஸ் மிட்டாயை

குரைத்துக்கொண்டே நாசூக்காய்

சப்புவதையெல்லாம்

அறியாத அந்நாயிடம்

எஜமானன்

இனிமேல் குரைத்துக்கொண்டே குரைக்க வேண்டும்

என்ற ஓர் நாளில்

அது

‘ஙே’ என்று விழிக்கிறது குரைத்துக்கொண்டே

முக்காமல் முனகாமல்

சாகாமல் சீராக

குரைத்தபடியேயிருக்க வேண்டுமென்ற

கட்டளைக்குப் பிறகே

அது கற்றுக்கொள்கிறது

குரைத்துக்கொண்டே குரைப்பதெப்படியென

அது முதல்

அந்நாய்

அதிகாலை 4 மணிக்கு குரைக்கிறது

அதிகாலை 4 மணிவரை

தினமு ம்…

***