Category: செப்டம்பர்

கலைஞரின் மதம்! – கோவி.லெனின்

”அவர் ஏன் இந்துப் பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்லவில்லை. முஸ்லிம்களின் ரம்ஜான் மாதத்து இஃப்தார் நோன்பில் கலந்துகொள்கிறாரே, கிறிஸ்தவர்களின் கிறிஸ்துமஸ் விழாக்களில் பங்கெடுக்கிறாரே, வெளிநாட்டு மதங்களை ஆதரிப்பவர், இந்து மதத்திற்கு மட்டும் விரோதியாக செயல்படுவதுதான் பகுத்தறிவா?”

-கலைஞர் உயிருடன் இருந்தபோதும், இப்போதும் அவரை நோக்கி எழுப்பப்படுகின்ற கேள்வி இது. அதற்கான விடை மிகவும் எளிமையானது.

இஸ்லாமும், கிறிஸ்தவமும் அந்நிய நாட்டு வந்த மதங்களாக இருக்கலாம். ஆனால் அந்த மதங்களைச் சார்ந்த அப்துல்லாவும் ஆபிரகாமும் தமிழ்நாட்டுக்காரர்கள். தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளைக் கொண்டாடுபவர்கள் தமிழ்நாட்டுக்காரர்களாக இருக்கலாம். ஆனால், அந்தப் பண்டிகையை முன்னிறுத்தும் இந்து மதம் என்பது இந்த மண்ணுக்கு அந்நியமானது. அதற்காக சொல்லப்படும் புராணக் கதை என்பது தமிழ் பண்பாட்டுக்கு விரோதமானது. இதைத்தான் கலைஞர் சொல்லாமல் சொன்னார், ரம்ஜான்-கிறிஸ்துமஸ் பண்டிகைகளுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதன் மூலமாகவும், தீபாவளி உள்ளிட்ட இந்துப் பண்டிகைகளுக்கு அமைதியாக இருந்ததன் மூலமாகவும்!

பெரியாரின் குருகுலத்தில் அவர் பெற்ற பயிற்சி இது. திராவிட இன அடையாளம் தொடர்பான ஆய்வுகளின் விளைவு. இந்து மத புராண கதாபாத்திரங்கள் பேசுகின்ற நுட்பமான அரசியலை, பொதுமக்களின் முன் வெளிப்படையாகப் போட்டு உடைத்தவர் பெரியார். அதனை அழகு தமிழில் பண்டிதரும் பாமரரும் உணரும்படி செய்தவர் அண்ணா. அரசியல்களத்தின் சவால்களுக்கிடையிலும் அதனைக் கடைப்பிடித்தவர் கலைஞர்.

இந்தியாவின் ஏனைய பகுதிகளில் இராம லீலா கொண்டாடப்பட்ட நேரத்தில், தமிழ்நாட்டில் இராவண லீலா என்ற எதிர்க்குரலுடன் புதிய விழா நடத்திக் காட்டியவர் பெரியாருக்குப் பின் திராவிடர் கழகத்திற்குத் தலைமையேற்ற மணியம்மையார். அரசியல்-பண்பாட்டுத் தளங்களில் அது பெரும் அதிர்வை ஏற்படுத்தியது. ஆனால், டெல்லியில் இராமலீலா கொண்டாடப்படும் இன்றைய சூழலிலும் பக்கத்தில் உள்ள மத்தியபிரதேசம், ஜார்கண்டு மாநிலங்களில் உள்ள பழங்குடியினர் இராவணனைக் கொண்டாடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அது பல ஆண்டுகளாக அவர்கள் கடைப்பிடிக்கும் பண்பாடு. இராவணன் எங்கள் மன்னன்-மண்ணின் மைந்தன்-எங்கள் ஊர் மருமகன் என்ற பல கோணங்களில் அந்தப் பழங்குடி இனத்தவர் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். அதன் மீது அரசியல் வெளிச்சம் படாமல் இருட்டடிப்பு செய்யப்படுகிறது.

முன்தோன்றிய மூத்த குடி என்ற பெருமை கொண்ட தமிழ்ப் பண்பாட்டிற்கும் இராவணன் மன்னன்தான். அவர்களின் பாட்டன்தான். அவன் திராவிட இனத்தவன் என்பதால் அரக்கனாக, அசுரனாக சித்தரிக்கின்ற ஆரியப் பண்பாட்டு படையெடுப்புக்கான எதிர்வினையே திராவிட இயக்கம் அளித்த மாற்றுப் படைப்புகளாக புலவர் குழந்தையின் இராவண காவியம், அறிஞர் அண்ணாவின் நீதிதேவன் மயக்கம், ’தென்திசையைப் பார்க்கின்றேன்’ எனப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எழுதிய இராவணன் பற்றிய கவிதை ஆகியவற்றின் தொடர்ச்சியாகக் கலைஞர் படைத்திட்டார் ‘தென்னவன் காதை’

இருண்டுவிட்ட தென்புலத்தில் ஏற்றிவிட்ட விளக்குபோல

எழுந்து நின்றான் இலங்கை வேந்தன்

…… …… ….

…… …… ….

திசையெட்டும் புகழ் சேர்த்த

தென்னிலங்கை கோமான், திராவிடரின் மூதாதை!

பழந்தமிழின்பால் பற்றுதலை வைத்த நம் பாட்டன்

கண்ணுக்குள் பாவை போல இலங்கைத் தீவு

கருவிழிதான் ஆழ்கடல்கள்.

இமைக்கதவு உண்டே எழில் விழியைக் காப்பதற்கு

அப்படித்தான்-இலங்கைக்கு இராவணன்.

-எனச் சொல்லோவியம் தீட்டுகிறார் கலைஞர்.

இராமருக்கு கோவில் கட்டுவோம் என்பதையே கொள்கையாகக் கொண்டோருக்கும், இராவணன் எங்கள் மூதாதை என்போருக்கும் நடப்பது வெறும் அரசியல் போட்டியல்ல. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நீடிக்கும் ஆரிய-திராவிட பண்பாட்டுப் போர். ஆயுதம் ஏந்தாமல் அதனை வெற்றிகரமாக நிகழ்த்தியவர் கலைஞர். அதனை அவரது அரசியல்-இன எதிரிகள் சரியாகப் புரிந்துகொண்டதால்தான், இந்து மத விரோதியாகவே கலைஞரை சித்திரித்தார்கள்.

நரகாசுரனைக் கொன்றதை மகிழ்வுடன் கொண்டாடும் தீபாவளிக்கும், புத்தரின் சிந்தனைகள் பரவாமல் தடுக்க வாதாபியிலிருந்து தமிழ்நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்ட பிள்ளையாரின் சதுர்த்திக்கும், பழந்ததமிழ் இலக்கிய ஓலைச் சுவடிகளை ஆற்று நீரில் வீசச் செய்து பண்பாட்டுப் பேரழிவை உண்டாக்கிய சரஸ்வதி பூசைக்கும் வாழ்த்து சொல்லாதவர்தான் கலைஞர். ஆனால், இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் ‘இந்து’க்கள் போலவே, புராணக் கதையின் அடிப்படையில் ஓணம் திருநாளைக் கொண்டாடும் கேரள மாநில இந்துக்களுக்கு வாழ்த்துச் சொன்னதுடன், அந்தத் திருநாளுக்குத் தமிழ்நாட்டிலும் விடுமுறை வழங்கினார் கலைஞர்.

புராணத்தின்படி, மூன்றடி நிலம் கேட்டு வந்த வாமனன், விஸ்வரூபம் என்கிற பேருரு எடுத்து, வானுக்கும் பூமிக்குமாக இரண்டு அடியை அளந்துவிட்டு, மூன்றாவது அடிக்காக திராவிட மன்னன் மாவலி (மகாபலி) சக்கரவர்த்தியின் தலையில் கால்வைத்து அவனை மண்ணோடு மண்ணாகப் புதைத்துக் கொல்கிறான். அந்த திராவிட மன்னன் ஆண்டுக்கொரு முறை தங்கள் வீடு தேடி வருவதாகக் கருதி பூக்கோலமிட்டு, பெருவிருந்து படைக்கிறார்கள் மக்கள்.

நரகாசுரனைக் கொன்றதைக் கோலாகலமாகக் கொண்டாடும் இந்துக்களுக்கு கலைஞர் வாழ்த்துச் சொல்லவில்லைதான். ஆனால், மாவலியை மகிழ்வுடன் வரவேற்கின்ற இந்துக்களுக்கு வாழ்த்துச் சொன்னார். அதுதான் வருணாசிரம-சனாதனத்தின் ஆணிவேரை ஆட்டுகின்ற அரசியல். அந்த நுட்பமான அரசியலை கலைஞரைச் சார்ந்தவர்கள்கூட சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. கலைஞரின் எதிரிகள் தெளிவாகப் புரிந்து கொண்ட காரணத்தால்தான், அவரை ‘இந்து மத விரோதி’ என முன்னிறுத்தினார்கள்.

கலைஞர் என்பவர் திராவிட இன அடையாள மீட்புப் போராளி. தமிழ்ப் பண்பாட்டின் காவல் அரண். வசவு சொற்களுக்காக அவர் வருத்தப்பட்டு முடங்கி விடுபவரல்லர். வம்புச் சண்டைக்கு வருபவர்களைத் தெம்புடன் எதிர்கொண்டு, தன் இலக்கு நோக்கியப் பயணத்தைத் தெளிவாக நடத்தியவர். தன்னை சந்திக்க வந்த இந்து முன்னணி இராமகோபாலன் பகவத் கீதையை பரிசாக அளித்த வேகத்தில் அவருக்கு ஆசிரியர் கி.வீரமணியின் கீதையின் மறுபக்கம் நூலை பதில்பரிசாக கொடுத்தாரே அதுதான் கலைஞரின் அடையாளம்.

கீதையும் அதன் சாரமும் எங்களுக்கானவையல்ல. எங்களுக்குத் திருக்குறள் இருக்கிறது எனக் குறளோவியம் தீட்டினார். எங்களுக்கு சிலப்பதிகாரம் இருக்கிறது என பூம்புகார் படைத்தார். எங்களுக்கு சங்கத்தமிழ் இருக்கிறது, தொல்காப்பியம் இருக்கிறது என பழந்தமிழ் இலக்கிய-இலக்கணங்களைப் புது நடையில் எடுத்துரைத்தார் கலைஞர்.

ஒன்றை நிராகரிக்கும்போது இன்னொன்றை மாற்றாக வைக்க வேண்டியது இயற்கையின் விதி. அதனால்தான் இந்து மத புராணங்களின் அடிப்படையிலான பண்டிகைகள் திராவிட இனத்திற்கும்-தமிழ்ப் பண்பாட்டிற்கும் எதிரானது என்று சொன்ன பெரியார், தமிழர் திருநாளாகப் பொங்கலை முன்வைத்தார். அத்தனை இந்துக்களும் கொண்டாடுகின்ற பண்டிகைதானே அது! அதை ஏன் இன்றுவரை இந்துத்வா சக்திகளால் தங்கள் திருநாளாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்பதில் இருக்கிறது பெரியார் முன்வைத்த மாற்றுப் பண்பாடு. அரசியல் காரணங்களுக்காக எதிர்காலத்தில் இந்துத்வாவும் பொங்கல் திருநாளுக்குள் புகுந்திட முனைந்தால் அதுவும்கூட திராவிட இயக்கத்தின் பண்பாட்டு வெற்றியாகவே அமையும்.

தீபாவளி மலர்களை பல நாளேடுகளும் வெளியிட்டு வந்த சூழலில், ’அவாள் ஏடுகளுக்கு சவால்’ எனப் பொங்கல் மலரை வெளியிட்டது கலைஞரின் முரசொலி. பிள்ளையார் சதுர்த்தி-சரஸ்வதி பூசை-தீபாவளி இந்த மூன்றுக்கும் வாழ்த்து சொல்லாத கலைஞர்தான், தமிழர் திருநாளாம் பொங்கலை 3 நாளும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என அறிவித்து, அரசு அலுவலகங்களையும் மின்னொளியால் கோலாகலமாக்கினார். அதன் அருமை புரியாதவர்கள், அடுத்த வந்த ஆட்சியாளர்கள் காழ்ப்புணர்வினாலும் ஆரியப் பண்பாட்டின் வழி வந்தவர்கள் என்பதாலும் சித்திரையே தமிழ் வருஷப் பிறப்பு என்றாக்கினார்கள். ஆனாலும், இன்றளவும் தையா-சித்திரையா என்ற பட்டிமன்றம் பண்பாட்டுத் தளத்தில் நடக்கிறது என்றால் அதுதான் கலைஞரின் வெற்றி.

அவர் பிறப்பால்-சான்றிதழால் இந்து மதத்தைச் சேர்ந்தவர். இந்திய அரசியல் சட்டம் அப்படித்தான் குறிப்பிடச் செய்கிறது. ஆனால் நினைப்பால்-செய்கையால் அவர் திராவிடர்-தமிழர். இந்து மதத்தின் விரோதியல்ல. தன்னையும் தன்னைப்போன்ற கோடிக்கணக்கான சூத்திர-பஞ்சம மக்களையும் காலங்காலமாக ஒடுக்கி வைத்த வருணாசிரம-சனாதனத்தின் விரோதி. அரசியல் வழியாகப் பெற்ற வாய்ப்புகளால் அதன் ஆணிவேரை ஆட்டங்காணச் செய்த சமத்துவபுரத்தார்.

சாதி மறுப்பு சுய மரியாதை – கலைஞர் – சல்மா

கலைஞர் எனும் மனிதரை அவரது அளப்பரிய சாதனைகளை பற்றி பேச நினைக்கும் போதெல்லாம் மனதின் ஓரத்தில் ஒரு விதமான சோகமும், பிரமிப்பும் ஒரே சமயத்தில் தோன்றாமல் போனதில்லை. காரணம் அந்த மனிதனுடைய இழப்பை இன்னும் ஏற்க மறுக்கும் .மனம். கூடவே அவரை பற்றி விலக மறுக்கும் பிரமிப்பு.

நாம் ஒரு தலைவனை கொண்டாடுவதும் பிரமிப்பதும் நமது அரசியல் சார்புகுட்பட்டது. ஆனால் அதே அரசியல் தலைவன் மக்களது மனதினில் வைத்து கொண்டாடபடுவதன் பின்னணியில் இயங்கும் நன்றி யுணர்வு மிக முக்கியமானது.
தலைவன் மக்களுக்கு பணியாற்றுவது சட்டங்களை இயற்றுவது கடமை .அதற்கான நன்றி உணர்வு தேவைதானா என்று கேட்டோமேன்றால் நிச்சயமாக தேவை இல்லை என்று சொல்லலாம், ஆனால் அதையும் தாண்டி தனது வாழ்வின் மாற்றத்திற்கு சமூக மாற்றத்திற்கு வித்திட்ட ஒரு மனிதனை தலைவனை மக்கள் கொண்டாடாமல் இருப்பது சாத்தியமும் இல்லை அல்லவா..

அப்படிதான் தலைவர் கலைஞர் குறித்து மக்களுடைய உணர்வு நிலைப்பாடு இன்று ஓங்கி இருப்பதாக நான் பார்க்கிறேன்.

இன்று அவர் இல்லை என்று ஆகி ஒரு மாதத்தை கடந்து விட்டோம். காலம் எதற்காகவும் நிற்பதில்லை..ஆனால் அவரில்லை என்கிற இந்த தருணத்தில் தான் அவரை பற்றியும் அவரது சாதனைகள் குறித்தும் பேச துவங்கியிருக்கிறது இந்த சமூகம்…

அவர் தனது வாழ்நாளெல்லாம் எதாவது ஒரு வகையில் சமூகத்தினை சமநிலைபடுதுவதர்கான முயற்சிகளை செய்வதற்கான செயல்திட்டங்களை யோசித்தபடியே இருந்தார்.

ஏற்ற தாழ்வுகளை களைவதற்கான அதீத கனவுகளை தனது இதயத்தில் பெரும் கனலாய் வைத்திருந்தார்..அவரது ஒட்டுமொத்த ஆட்சிகளமும் ஆட்சிகாலமும் சமூக நீதிக்கான பயணத்தின் நீட்சிதானே அன்றி வேறாக இல்லை.

இன்றைக்கு மத்திய அரசு வீடுகள் தோறும் மின்சாரம் என்று இலக்கை அறிவித்த போது தமிழ்நாட்டில் எப்போதோ முப்பது வருடங்களுக்கு முன்னால் அத்திட்டத்தை அவர் செயல்படுத்தி முடித்திருந்தார்

அதே போல விவசாயிகளது வாழ்க்கை அழிந்து விடக்கூடாது என்பதற்காக இலவச மின்சாரம் தந்தார்…குடிசை மாற்று வாரிய வீடுகளை உருவாக்கினார். உழைக்கும் விவசாயியின் வாழ்வாதாரத்தை உயர்த்த உழவர் சந்தைகளை உருவாக்கினார்`…தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் அவர் `சமூக உயர்வுக்கான அத்தனை சாத்தியங்களையும் நிகழ்த்தி காட்டினார்.

பசியெனும் உணர்வினை படியரிசி வழங்கி இல்லாமல் செய்தார்..

கல்வியை அனைவருமனதாக மாற்றினார். பெண் கல்விக்கு திருமண உதவித்தொகை என்று ஒரு இலக்கை வைத்து கல்வி தந்தார் சமசீர் கல்விக்கு தானே வித்திட்டார். ஒரே சமூகம் ஒரே கல்வி ,ஏற்ற தாழ்வுக்கு அப்பாற்பட்டு அதனை செயலபாட்டில் கொண்டு வந்தார். முதல் தலைமுறை பட்டதாரிகளை உருவாக்கும் எண்ணற்ற கல்லூரிகளை, துவக்கியதும் அவரே, தகவல் தொழில் நுட்பத்தை அறிமுகம் செய்து தொழில் துறைகளில் மாபெரும்
இளைங்கர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கினார்.

சாதி மறுப்பு சுய மரியாதை திருமணத்தில் துவங்கி அனைத்து சாதியனரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதாக மாபெரும் சமூக மாற்றத்தை உருவாக்கினார்.

அவரை பற்றி சொல்வதென்பது நிச்சயமாக இந்த இனத்தை இந்த மொழியை இந்த மாநிலத்தை இந்த வளர்ச்சியை நாம் பெற்றிருக்கும் சுயமரியாதையை பற்றி பெசுவதகதான் இருக்குமே தவிர வேறொன்றாக இருக்க முடியாது. தந்தை பெரியாரின் அறிஞர் அண்ணாவின் தம்பியாக , அவர்களது சிந்தனைக்கு செயல் வடிவம் தந்தவராக அவர் இருந்தார்.. உழைத்தார். அதற்காக தன் வாழ்வையே அர்பணித்தார். எண்பதாண்டு கால உழைப்பென்பது மிக நீண்டதொரு காலம்..

தலைவர்கள் எப்போதும் சில சமரசங்களோடு தங்களது பயணத்தை தொடர்வார்கள் காரணம் பதவியில் இருப்பது என்பது அவர்களுக்கு வடலடுக்கொடுக்கவியலாத்தொரு
விசயம் . ஆனால் தலைவர் கலைஞர் அவரது காலம் முழுக்க சமரசங்களற்ற கொள்கை உறுதியை பேணனார். தனது பதவிக்கு ஆபத்தெனும் போது கூட அவர் பதவியினை இழந்தாரே தவிர தனது கொள்கையில் விட்டுத்தந்தவரல்ல.
வரலாற்றில் அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருக்க அதுவே மிக முக்கிய காரணம்.

அவரது நினைவிடத்திற்கு சில முறை சென்றேன் . அவரது அன்புக்குரிய அண்ணனோடு அவரது பயணத்தை இணைத்து இன்று முடித்துக்கொண்டவராக
ஓய்வு கொண்டிருக்கிற அவரது நினைவிடத்தை காண்பதற்காக ஆயரமாயிரம் மக்கள் வந்தபடி இருக்கிறார்கள்.
தங்களது தலை எழுத்தை தனது சட்டங்களால் மாற்றித்தந்த அந்த தலைவரை காண்பதாகவே அவர்கள் எட்ணிக்கொள்கிறார்கள் வணங்கிச்செல்கிறார்கள் . கலங்கி நிற்கும் எனக்கு மனம் துக்கத்தால் நிறைகிற அதே சமயம்
பெருமித்த்தால் கர்வத்தால் நிரம்புகிறது மனம் . அத்தனை பேரின் அன்புக்கும் போற்றுதலுக்கும் உரிய மாபெரும் தலைவரை நான் பார்த்தருந்திருக்கிறேன்.

அப்படிப்பட்டதொரு தலைவன் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தோம் அவரை சந்தித்தோம், பேசினோம் எனும் மாபெரும் பெருமிதம் அது.

அந்த தலைவன இந்த இயக்கத்தின் வீழாத நம்பிகையை எங்களிடம் உண்டாக்கி இருக்கிறார்.. அவரது நம்பிக்கையின் வழி நடந்து அவரை எப்போதும் நினைவூட்டிக்கொள்ளும் இந்த இனமும் , மக்களும்…

மேற்கில் உதித்த சூரியன் / பெ.சிவசுப்ரமானியம் ( ஆத்தூர் )

கலைஞர் மு.கருணாநிதி.

அரசியல், சினிமா, விளையாட்டு, ஆன்மிகம் என இந்த நான்கு துறைகளில் ஏதாவது ஒன்றி ஈடுபாடு கொள்ளாத ஒரு தமிழக இளைஞரை நீங்கள் காணவே முடியாது.

நானும் அப்படித்தான் படிக்கின்ற காலத்திலேயே கழக அரசியலில் ஈடுபட்டவன். இயல், இசை, நாடகம் என முத்தமிழ் வித்தகராக இருந்த கலைஞர் அவர்களின் பேச்சாலும், எழுத்தாலும் அவர்பால் காதல் கொண்டவன் நான்.

பிற்காலத்தில் அவர் சார்ந்திருந்த இதழியல் துறைக்கு நானும் வேலைக்கு வந்தபோது கலைஞர் மீதான ஈர்ப்பும், பற்றும் இன்னும் அதிகமானது.

1997-இல் கர்நாடக வனத்துறை ஊழியர்கள் ஒன்பது பேரை வீரப்பன் கடத்திக் கொண்டு போனபோதும், 2௦௦௦-த்தில், கன்னட திரைப்பட நடிகர் திரு. இராஜ்குமார் அவர்களை வீரப்பன் கடத்திக்கொண்டு போனபோதும் அரசின் தூதுக்குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன்.

இதன் பயனாக அப்போது முதல்வராக இருந்த கலைஞர் அவர்களை சில முறை நேரிலும், பலமுறை செல்பேசி வாயிலாக பேசியுள்ளேன்.

சந்தன வீரப்பனால், கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டு காட்டில் சிறை வைக்கப்பட்டிருந்த நேரத்தில், நாட்டிற்கும்-காட்டிற்கும் தகவலாளியாக நான் பயணம் செய்து வந்தேன்.

கலைஞரின் உற்ற தோழனாக, கட்சியின் மேலிடத் தொடர்பாளராக, இன்னும் சொல்லப் போனால் அவரின் மனச்சாட்சியாக இருந்த மத்திய அமைச்சர் முரசொலி மாறன், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார்.

மீண்டெழுந்து வரமுடியாத நிலையில் இருந்த முரசொலி மாறனின் உடல்நிலை குறித்து அறிந்துகொள்ள ஒவ்வொருநாள் இரவுவும் எட்டு மணிக்கு மேலே தலமைச் செயலகத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் கலைஞர் இரவு 11.00-மனை வரை மாறனுடன் தான் இருப்பர்.

அந்த நேரத்தில் சத்தியமங்கலம் காட்டிலிருந்து வெளியே வரும் நான், இணை ஆசிரியர் காமராஜ் அண்ணனிடம் பேசி, கலைஞர் எங்குள்ளார் என்ற விவரத்தை தெரிந்துகொண்டு அவர் கொடுக்கும் செல்பேசி எண்ணுக்குப் பேசுவேன்.

காட்டில் உள்ள நிலைமைகளை கலைஞரிடம் சொல்வேன். சொல்லுகின்ற குறைகளை அதிகமாக கேட்டு உள்வாங்கி, குறைவாக பதில் சொல்லும் திறமைக்கு சொந்தக்காரர் கலைஞர்.

இருபது நிமிடம் நான் சொல்லும் பிரச்சனைகளை எல்லாம் கேட்டுத் தெரிந்துகொண்டு, நான்கே சொல்லில் அதற்கான பதில்களை சொல்லி விடுவார்.

ஒவ்வொருமுறை நான் பேசும்போதும் கலைஞர் கேட்கும் முதல் கேள்வியே “நீங்க சாப்பிட்டாச்சா…”? என்பதுதான். ஒரு முறை இரவு 1௦.3௦-க்கு பேசும்போது, “இன்னும் சாப்பிடவில்லை ஐயா…” என்றேன்.

“பக்கத்தில் எங்கே உணவகம் உள்ளது…?” என்று கேட்டார்.

“இன்னும் முக்கால் மணி நேர பயணம் செய்து கோபிச்செட்டிபாளையம் வந்துதான் சாப்பிட வேண்டும்…” என்று சொன்னேன்.

“எவ்வளவு நேரமானாலும் சரி, சாப்பிட்டுவிட்டு பிறகு பேசுங்கள். நான் காத்திருக்கிறேன் தம்பி….” என்றார்.

இரவு 11.45-மணிக்கு மீண்டும் என்னுடைய எண்ணுக்கு அவரே கூப்பிட்டுப் பேசினார். அப்போதும் அவர் கேட்ட முதல் கேள்வி “சாப்பிட்டாச்சா…” என்பதுதான்.

ஐந்துமுறை ஆட்சி செய்த இவரது ஆட்சிக்காலம் தமிழக வரலாற்றில் ஒரு பொற்காலமாகும். தமிழக மக்கள் மேம்பாட்டுக்கு மிக முக்கியமானது என வகைப்படுத்தப்பட்ட ஏழை மக்களின் கல்வி, பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் முன்னேற்றம், கல்வி, போக்குவரத்து, மின்சாரம், குடிநீர் மற்றும் பொதுசுகாதாரம் போன்ற துறைகளின் வளர்ச்சியில் கலைஞர் அவர்கள் தீவிர ஆர்வம் காட்டினார்.

1972-சேலம் இரும்பாலை கொண்டுவர காரணமாக இருந்தார். 1997-இல், சேலம் மாவட்டத்தில் இருந்து நாமக்கல் மாவட்டம் தனியாக பிரித்து அப்பகுதி மக்களின் வளர்ச்சிக்கு வழி வகுத்தார். ஆத்தூர், திருச்செங்கோடு புதிய வருவாய் கோட்டங்கள் உருவானது.

பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், சென்னை பல்கலைக்கழகம் என மூன்று பல்கலைக்கழகத்தின் நிர்வாக ஆளுமையின் கீழ் இருந்த சேலம், நாமக்கல், தருமபுரி மாவட்ட கல்லூரிகளின் தரத்தை மேம்படுத்தவும், கிராமப்புற இளைஞர் எல்லோரும் உயர்கல்வி கிடைத்திட வேண்டுமென்ற நோக்கில், சேலத்தை தலைமையிடமாகக் கொண்டு பெரியார் பல்கலைக் கழகத்தை உருவாக்கினார்.

மூன்று மாவட்டத்திலும் சேர்ந்தே பத்து கல்லூரிகள் என்றிருந்த நிலை மாறி, இப்போது பத்து கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு கல்லூரி என்ற நிலை உருவாகியுள்ளது.

கொங்கு மண்டலத்தில் புகழ்பெற்ற ஈரோடு, திருப்பூர் என் இரு தொழில் நகரங்களையும் மக்கள் முன்னேற்றம், மற்றும் தொழில் மேம்பாட்டுக்காக மாநகராட்சியாக மாற்றியமைத்தார்.

கோவை மாவட்டம் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் இருந்து சில பகுதிகளை பிரித்து திருப்பூர் என்ற தனி மாவட்டத்தை உருவாக்கினார்.

தென்னகத்தின் மான்செஸ்டர் என்ற புகழ் பெற்ற கோவை நகரின் மேம்பாட்டுக்காக, சிறுவாணி கூட்டு குடிநீர் திட்டம், அத்திக்கடவு குடிநீர் திட்டம் என பல திட்டங்களையும், வறட்சிப்பகுதியான திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட கிராமப்புற மக்களுக்காக அமராவதி மற்றும் காவேரி ஆற்றிலிருந்து குடிநீர் கொண்டுவந்து கொடுத்தார்.

காவேரி ஆற்றின் குறுக்கே கதவணைகள் பல கட்டவும், இதன் மூலம் ஆற்றின் இருபக்கமும் போக்குவரத்து வசதிகள் ஏற்படவும் வழிவகை செய்தார்.

நாமக்கல், இராசிபுரம், ஆத்தூர் மற்றும் இதை ஒட்டியுள்ள நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கும் காவேரி ஆற்றிலிருந்து பாதுகாப்பான குடிநீர் கிடைக்க கூட்டுக்குடிநீர் திட்டங்களையும், காவேரி ஆற்றின் குறுக்கே மோகனூரில் புதிய பாலத்தையும் கொண்டுவந்தார்.

தனியார் பள்ளிகள் அதிகரித்து வரும் நேரத்தில், அரசு பள்ளிகள் மாணாவர்கள் இல்லாமல் மூடவேண்டிய சூழல் இருந்த போதும், 2௦௦6-2௦11 காலகட்டத்தில் சேலம் நாமக்கல் மாவட்டங்களில் இருபதுக்கும் அதிகமான புதிய மேல்நிலைப்பள்ளிகளை திறந்து கிராமப்புற மாணவர்களுக்கு கல்வி கிடைக்க வழிவகை செய்தார்.

சேலம் மாவட்ட மக்களுக்கு என அவர் செய்யவேண்டும் என்று எண்ணியிருந்தும், செய்ய முடியாமல் விட்டுச் சென்ற முக்கியமான பணிகள் சில உள்ளது.

தமிழகத்தின் நீர் ஆதாரமான மேட்டூர் அணை சேலம் மாவட்டத்தில் இருந்தாலும், அந்த அணையின் நீர் சேலம் மாவட்ட விவசாயிகளுக்குப் பயன்படுவதில்லை.

மழை காலத்தில் மேட்டூர் அணையில் இருந்து உபரி நீராக கடலுக்குப்போகும் தண்ணீரை ஓமலூர் அருகிலுள்ள சரபங்கா நதியுடனும், பிறகு சேலம் திருமணிமுத்து ஆற்றுடனும், அதன் பின் வசிஷ்ட நதியுடனும் இணைக்கும் திட்டத்தை கலைஞர் செயல்படுத்துவார் என மக்கள் எதிர்பார்த்தனர்.

கொல்லிமலையில் இருந்து வழிந்தோடிவரும் மழைநீரை தேக்க சேந்தமங்கலம் அருகில் புதிய அணைக்கட்டு, காவேரி ஆற்றின் குறுக்கே உள்ள காரணாம்பாளையம், ஜேடர்பாளையம், மாயனூர் தடுப்பணைகளின் உயரத்தை அதிகப்படுத்தி அந்த இடங்களில் இருந்து செல்லும் வாய்க்கால்களின் அகலத்தையும், நீளத்தையும் அதிகப்படுத்துவார் என்ற இப்பகுதி விவசாயிகளின் எதிர்பார்ப்புகள் நிறைவு செய்யாமலே உள்ளது.

சேலத்தில் இருந்து எடப்பாடி, சத்தியமங்கலம் வழியாக மைசூர் வரை பதிய சாலை அமைக்கும் திட்டம் செயல் படுத்தப்படவில்லை. இந்த சாலை அமைந்தால், சேலம் மாவட்டம் பூலாம்பட்டிக்கும், ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டைக்கும் இடைய காவேரி ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் அமையும்.

இந்த பாலமும், சாலையும் அமைந்தால் மிகவும் பின்தங்கியுள்ள எடப்பாடி தொகுதிக்கு உட்பட்ட பல கிராமங்கள் நல்ல முன்னேற்றம் பெரும். இரண்டு ,மாவட்ட மக்கள் மட்டுமில்லை, இரண்டு மாநிலத்தை சேர்ந்த மக்களுக்கும் பலவகையில் நன்மை ஏற்படும்.

மறைந்த தலைவருடைய கொள்கை வழி அடுத்த ஆட்சிப் பொறுப்பை மேற்கொள்வோர் இந்த பணிகளை செய்து தலைவரின் புகழுக்கு பெருமை சேர்ப்பார்கள் என்ற நம்புகிறேன்.

••••

காளிமுத்து மெஸ் (1987) ( நடைவழி சித்திரங்கள் ) / சரவணகணேசன் ( ஆட்டையாம்பட்டி )

கோவையின் முகப்பான ஹோப் காலேஜிலிருந்து கோவையை இரண்டாக பிரித்துச் செல்லும் நேர்கோடான அவிநாசி சாலை கடைசியில் முட்டிக் கொள்ள முடியாது எழுந்திருக்கும் மேம்பாலத்திற்கு முன் இடது பக்கம் இருக்கும் தண்டுமாரி அம்மன் கோவிலை ஒட்டிய சந்துக்குள் நுழைந்தீர்களேயானால் வழி நெடுகிலும் நிறைய மின்சாதனக் கடைகள் இருக்கும். அவைகள் இருக்கிற தெருவை ஒட்டி இடது கைப்பக்கமாக செல்லும் எநத ஒரு சந்திலும் பயணித்துப் போனீர்களே ஆனால் ஒரு முட்டு சந்து வரும். அந்த சந்தின் முடிவில் வர்ணமற்ற மர முக்காலியின் மீது ஒரு நீர் நிறைந்த நெகிளி வாளியும் ஒரு டம்ளரும் இருந்தால் அது தான் காளி முத்து மெஸ். இப்படி சிஎஸ்ஐ சர்ச் எதிர் கனரா வங்கி வழியாக சென்றால் நாய் கடிக்கும் என்று பலகையைப் பார்த்து பயப்படாமல் கீழே எழுதியதையும் சேர்த்து வாசிக்க வேண்டும். ஒற்றைத் தலை வலிக்கும் சித்த மருந்துகள் கிடைக்கும் என சின்னதாக எழுதியிருக்கும் வழியில் தொடர்ந்து சென்றால்; அதுவும் இந்த காளிமுத்து மெஸ்சில் உங்களைக் கொண்டு சேர்க்கும்.

அந்த மெஸ் உரிமையாளர் பெயர் காளிமுத்து. சொந்த ஊர் உடுமலைப் பேட்டை. மனைவி மகளோடு தான் வசித்து வந்த வீட்டில் அந்த சிறிய மெஸ்சை நடத்தி வந்தார். வீட்டின் முன் அறையில் இரண்டு டேபிள்¸ 8 சேர்களும் இருக்கும். உணவுப் ;பொருட்கள் வைக்க ஒரு டேபிள். அதன் மீது டம்ளர்களும்¸ கரண்டிகளும் அடுக்காமல் இருக்கும். அவருக்கு 40 வயது இருக்கலாம். ஒல்லியான தேகம். கண் கண்ணாடி. கொஞ்சம் தடித்த தொங்கிய மீசை. சுறுசுறுப்பான மனிதர். ஒரே மகன் கல்லூரி விடுதியில் தங்கிப் படித்துக்கொண்டிருந்தான். அப்போது அதிமுக கட்சி ஆட்சி செய்து கொண்டிருந்தது. திரு.காளிமுத்து அமைச்சராக இருந்தார். எனவே அந்த உணவகத்தை அமைச்சர் மெஸ் என நகைப்புக்காக அழைத்தவர்களும் உண்டு.

எல்லா நாட்களும் அந்த உணவகத்தில் நாங்கள் சாப்பிடப் போக மாட்டோம். பெரும் பாலும் எங்கள் அலுவலகம் பாதி நாட்கள் இயங்கும் சனிக்கிழமை நாட்களில் மதியம் வேலை நேரத்தைத் தாண்டியும் வேலை இருக்குமானால் சாப்பிடச் செல்வோம். நான்¸ நாகராஜ்¸ இரத்தினமூர்த்தி¸ செல்வராஜ்¸ சம்பத¸ பாலு; என ஒரு கூட்டமாகச்; செல்வோம். அ;ப்போது முழு சாப்பாடு ரூ15 லிருந்து ரூ20 இருந்திருக்கும்.

நண்பர்களில் இரத்தினமூர்த்தியைப் பற்றி சொல்லியே தீர வேண்டும். இரத்தினமூர்த்தியின் சொந்த ஊர் இராமநாதபுரம். மதுரை வழக்குத் தமிழில் நகைச்சுவையாக ஆனால் கண்னியமாக பேசுவான். கொங்குத் தமிழ் பேசும் கூட்டத்தின் நடுவில் அவனின் மதுரைத் தமிழ் கேட்பதற்கு சுகமாக இருக்கும். எனவே வெளியில் சாப்பிட செல்லும் நாட்களினல் அவனில்லாமல் நாங்கள் செல்லமாட்டோம்.

அந்த உணவகத்தில் வார நாட்களில் பெரும்பாலும் சைவ உணவே தான் இருக்கும். சாப்பாடு¸ சாம்பார்¸ ரசம்¸ பொரியல் எனும்படியான சாதாரண முழுச் சாப்பாடு கிடைக்கும். முட்டை ஆம்லெட் எல்லா நாட்களும் கிடைக்கும். புதன் கிழமை மட்டும் ஆட்டிறைச்சி குழம்பு மற்றும் வருவல். ஞாயிறு வழக்கம் போல் விடுமுறை.

வாங்க சார் வாங்க சார் என அன்போடு வரவேற்பார். உணவு தயாரானதை உறுதிப்படுத்தும் விதமாக எந்த வாசனையும் சாப்பிடும் அறையில் இருக்காது. ஆனால் அவரோ எல்லாம் ரெடி உட்காருங்க என உட்காரவைத்து இலையைப் போட்டு தண்ணீர் வைப்பார். இதில் 5 நிமிடம் போயிறும். சார் ஏதாவது ஸ்பெசல் அயிட்டம் என இழுப்பார்.

உடனே ரத்தினமூர்த்தி சார் சில்லி கோபி ஒரு பிளேட் கிடைக்குமா?.. என்பான்

சார் அதெல்லாம் இல்லைங்க சார் எனச் n;சால்லிவிட்டு சாருக்கு எப்பவும் கிண்டல் மெல்ல நகைப்பார்

அப்பறம் ஏன் சார் ஸ்பெசல்ங்கிறேங்க. சரி இலையைப் போட்டாச்சு சாப்பாடு போடுங்க..

இதோ.. ஆயிருச்சு சார்..

எப்படியும் பத்து நிமிடம் ஆயிடும். கொதிக்க கொதிக்க சாப்பாட்டை எடுத்து வரும் போது தான் சாம்பாருக்கு தாளிச்சு விடும் சத்தம் கேட்டும். சாம்பார் இலைக்கு வந்ததும் ஐந்து நிமிடம் அனைவரும் மௌனமாக இருப்போம். அந்த அறையில் மெதுவாக ஓடும் மின்விசிறியில் உணவு கொஞ்சம் ஆறும் வரை.. அதற்குள் மெஸ் ஓனர் ஆர்டர் பிடிப்பார். சார் எல்லாருக்கும் ஆம்லெட் சொல்லாமா என்பார். என்ன கணேஷ் உங்களுக்கு ஆம்லெட் வேணாம்தானே.. என சொல்லிட்டு சார் பச்சை மிளகா கம்மியா 4 ஆம்லெட் போடுங்க என்பான் ரத்தினமூர்த்தி.

லைனுக்கு 4 ஆம்லெட் எனச் சொன்ன பிறகு தான் ஆம்லெட்டுக்கு பெரிய வெங்காயம் அறியும் சத்தம் துல்லியமாகக் கேட்கும். எல்லாரும் தயிர் சாதம் சாப்பிட ஆரம்பித்து விடுவார்கள். ஆனால் ஆம்லெட் வாசனை வருமே ஒழிய இலைக்கு வர தாமதம் ஆகும். ரத்தின மூர்த்தி நகைச்சுவையாக சார் ஆம்லெட்டை கேன்சல் பண்ண வாய்ப்பிருக்கா என்பான்.

சார் ஆம்லெட் ஆயிருச்சு. எடுத்துட்டு வர்றதுதான் பாக்கி என ஓடுவார் காளிமுத்து. பாவம் அந்த அரைக்கல் சுவரைத் தாண்டி அவருடைய மகள் ஒருத்திதான் ஆம்லெட் வேலையைப் பாத்திருப்பாள். ஒரு ஆள் உட்கார்ந்து சமைக்கும் அளவுக்கே உள்ள சமையல் அறை அது. பாத்திரங்கள் கழுவ அதே போல் இடம் இருக்கும் இன்னொரு அறையில் அவர் மனைவி நின்று கொண்டிருப்பார்.

மணக்க மணக்க ஆம்லெட் இலையில் விழும். சாப்பிட்டு விட்டு கையை வெளியில் வைத்திருக்கும் வாளியில் கழுவிக் கொள்வதற்குள் பணம் வாங்குவதற்காய் தலையை சொரிந்து கொண்டு காளிமுத்து நிற்பார். பெரும் பாலும் உணவுப்பணம் போக தர வேண்டிய மீதியை அடுத்த சனிக்கிழமை கழித்துக் கொள்ள வேண்டியதாய் இருக்கும். ஒரு புதன் கிழமை அவர் மெஸ்சில் கறிச் சோறும் சாப்பிட்டு பார்த்தோம். சுவையாகத் தான் இருந்தது. ஆனாலும் ரத்தின மூர்த்திக்கு சாப்பிட்ட பின் லேசாக வயிற்று வலி வர அவனே அவரிடம் கேட்டான்.

சார் சாதத்திலே வேகும் போது எதாவது சுண்ணாம்பு சேர்ப்பிங்களா.. நிறத்துக்காக

அப்படியெல்லம் இல்லைங்க சார் என்றார். ஆனாலும் வயிற்று வலி தொடர்ந்தது. மெஸ்சுக்கு வருவர்களில் பெரும்பாலும் இளைஞர்கள் தான். சாப்பிடுகிற வயது உள்ளவர்கள் கொஞ்சம் அதிகமாகத் தான் சாப்பிடுவார்கள். சுண்ணாம்பு சேர்த்தால் சாப்பிடும் அளவு குறைந்து கொஞ்சம் சாப்பிட்டாலே வயிறு டும் என ஆகிவிடும். சாப்பிட்ட திருப்தி ஆகிவிடும்¸ ஆனால் சாதம் மெஸ்சுக்கு மீதம் ஆகும். பிழைப்புக்காக ஊரு விட்டு ஊரு வந்து¸ அறைக்கு வாடகையைக் கொடு;த்து. மெஸ்சை நடத்தி மூன்று பேர் வயிறு கழுவ தொழிலில் ஏதாவது குளறு படி செய்தாகத் தான் வேண்டும்.

ரத்தினமூர்த்தி கேட்டானே ஒழிய வழக்கம் போல் சாப்பிடுவது என்றால் காளிமுத்து மெஸ் தான். (கணேஷ் இங்கனையாவது கேட்கலாம்¸ பெரிய ஹோட்டலில் கேட்க முடியுமா¸ ஏழை¸ பாளை எதையோ செஞ்சு பொளைக்கறாங்க. டாக்டர் வேணாம்னு சொல்லறவரை சாப்பிடுவோம்). குறை இருந்தாலும வீட்டுச் சமையலின் சுவை மதியத்திற்கு 20 – 30 சாப்பாட்டை ஓட வைத்தது. எத்தனை பேர் சாப்பிட்டாலும்¸ ஓரே சமையத்தில் நிறைய வேலை வந்தாலும் ஒற்றை ஆளாகவே காளிமுத்து சமாளிப்பார். மனைவியையோ.. மகளையோ.. பரிமாற துணைக்கு அழைக்க மாட்டார். உணவகத்திற்கான பொருட்களை வாங்கி வருவது¸ கனிவுடன் பறிமாறி¸ கணக்குப் பார்த்து பணம் பெறுவது எல்லாம் அவர் வேலை தான். மனைவி¸ மகளின் பெயரைச் சொல்லி அழைத்தது இல்லை. அதிக பட்சம் பேபி ரெண்டு ஆம்லெட் என்ற அடைமொழி மட்டுமே கேட்டிருக்கிறோம்.

டாஸ்மார்க் இல்லாத காலம் அது. ஆனாலும் அந்த மெஸ் ஓனர் பந்தையச் சாலையின் இந்தப்பக்கம் இருந்த ஒரு பாரின் வாசலில் சில முறை அவரைப் பார்த்திருக்கிறேன். பார்க்காதது போல வந்திருக்கிறேன். வாரத்தின் அலுப்பைப் போக்க அந்த பார் அவருக்கு உதவியிருக்கலாம். வாடிக்கையாளர்கள் யாராவது பார்ப்பதற்கு முன் தன் கோட்டாவை வாங்கிக் கொண்டு வீ;ட்டிற்கு கிளம்பி விடுவார்.

பிறகு அலுவலகத்தில் அவரவர் திருமணமாகி செட்டிலாகி விட்டோம்.

————————–

கோவையில் 2003-ல் இருந்த போது நானும் மனைவியும் ஞாயிற்றுக் கிழமை மாலை நேரத்தில் பந்தயச் சாலையில் சிறிது நேரம் நடப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். அப்படி ஒரு ஞாயிறு நடந்து கொண்டிருந்த போது எதிரே ஒருவர் மெல்லிய தேகத்துடன் ரே பார்ன் கருப்புக் கண்ணாடியுடன் மேற்குப் பக்கம் வேகமாக நடந்து எங்களைக் கடந்து சென்றார். அவரின் உருவ அமைப்பு என் மனதில் சில ஞாபகங்களைக் கிளர¸ மூளை உடனே மனத்திரையில் அவரின் முகத்தை கோட்டோவியமாக வரையத் துவங்கியது. அடுத்த வட்ட நடையில் அவர் தென்பட்டால் அவரைக் கேட்டு விடுவது எனத் தயாராக இருந்தேன். அடுத்த 20 நிமிடங்களில் அவர் எதிரே நடந்து வந்தார்.

சார் நீங்க காளிமுத்து மெஸ் ஓனர்.. இழுத்தேன்.

சார் சார் நான் தான். நல்லாயிருக்கீங்களா.. சார்.; பையன் வெளிநாட்டிலே வேலை பார்க்குறான் சார். பொண்ணை கல்யாணம் பண்ணிக்குடுத்துட்டேன். நானும்¸ பொண்ணாட்டியும் சார். இப்ப காந்திபுரத்திலே இருக்குகிறோம். அன்னமிட்ட கையால் என் கையைப் பிடித்துக் கொண்டு பேசினார்.

சந்தோசம் சார்.. நல்லா இருங்க.. பார்க்கலாம் என நான் வலது கையை உயர்த்தி அவரை விஷ் பண்ணினேன். என்னை விட்டு நகர்ந்த அவர் உடனே திரும்பி சார் அந்த தம்பி ரத்தினமூர்த்தி எப்படியிருக்கார் சார்.. கேட்டேன்னு சொல்லுங்க.. நகர்ந்து மறைந்தார். எத்தனை ஆண்டுகள்.. எத்தனை வாடிக்கையாளர்கள். ஆனாலும் ரத்தினமூர்த்தியை அவர் மறக்க வில்லை. உணவிலே இருந்த குறையைக் கண்டு கொண்டும்¸ ஒரு குடும்பத்தின் பிழைப்பு என்பதால் அதை பெரிது படுத்தாமல் தொடர்ந்து வாடிக்கையாளராக இருந்த ரத்தினமூர்த்தியை அவர் மறக்காது இருந்தது எனக்கு ஆச்சிரியமளிக்கவில்லை.

கை நிறைய டாலர் / இதயா ஏசுராஜ்

சிட்னி நகரில் நடைபெறும் சர்வதேச எழுத்தாளருக்கான ஐந்து நாள் மாநாட்டில் மூன்றாவது நாளன்று மாலையில் அம்மனிதர் என்னை வந்து சந்தித்தார். எனது வாசகரென அறிமுகப்படுத்திக் கொண்டதும் நான் வியந்து போனேன். அதை விட பன்மடங்கு ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக இருந்தது அடுத்து அவர் சொன்ன செய்தி.

மெல்போனைச்சேர்ந்த எழுத்தாளரொருவர் தனது ஒரே நாவலை எனக்கு சமர்ப்பணம் செய்ததோடு என்னைப் பற்றி மிக சிறப்பாக குறிப்பிட்டுள்ளார் என்பதேயது. முதலில் இதை நான் நம்பவில்லை. வேடிக்கைக்காக அம்மனிதர் சொல்கிற பொய்யென்றே ஒதுங்கிட முயன்றதும் அவர் தனது லெதர் பேக்கில் பாதுகாப்பாக வைத்திருந்த அந்நாவலை எடுத்து கொடுத்தார்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த அந்த நாவல் சென்ற ஆண்டு வெளியிடப்பட்டிருந்தது. என்னுடைய வாசகர் என்று சொல்லிக் கொண்ட அந்த நீல்கணேஷ் சொன்னது போலவே நாவல் என் பெயருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டிருந்தது. மேலும் நான் எழுதியிருந்த நான்கு நாவல்களையும், ஐந்து சிறுகதைத் தொகுப்புகளையும், இன்னும் கட்டுரை கவிதை நூல்களையும் உயர்வாக சொல்லியிருந்ததோடு தான் இந்த நாவலை எழுதுவதற்கு உந்து சக்தியாக இருந்ததே நாந்தான் என்று சொல்லியிருந்தார்.

வெஸ்டின் சீரியன் என்ற அந்நாவலாசிரியரின் பெயரை சத்தியமாக இதுவரை நான் கேள்விப்பட்டதே இல்லை. ஆயினும் என்மீது அவர் காட்டும் அபிமானம் மெய்சிலிர்க்க வைத்தது. புகழ் போதையில் சுழன்று விழக்கூடியவனல்ல நான். இருப்பினும் அவரின் உளமாற உரைத்திடும் வார்த்தைகளில் பெரிதும் ஈர்க்கப்பட்டேன். இத்தகைய தீவிரமான வாசகரை சந்திக்க வேண்டுமென்ற ஆவல் அடிமனதில் எழும்பியது.

முகவரி கைவசமிருப்பதால் தாராளமாக பார்த்துவிடலாமென நீல்கணேஷ் சொன்னார். தூர தேசத்தில் இப்படியொரு தமிழர் நண்பராக கிடைத்தது எனது அதிஷ்டமே. இரண்டு நாட்களுக்குள் கனமான அந்நாவலை முழுதாக படித்து விட்டேன். நாவலின் நடையும், காட்சி விவரிப்பும் நெஞ்சையள்ளிப் போவதால் மிக நெருக்கமான படைப்பு என்கிற விதத்தில் அது என்னுள்ளே நீக்கமற நிறைந்து விட்டது.

செமினார் முடிந்ததும், கடல் மீது பல பறவைகள் றெக்கை விரித்து நிற்பது போன்று அழகூட்டிய ஓபரா அவுஸை விட்டு உலகெங்கிலுமிருந்து வந்திருந்த எழுத்தாளர்கள் அனைவரும் கிளம்பி போய்விட நான் மட்டும் அவ்வூரில்

நீல்கணேஷின் உதவியுடன் ஒரு மலிவான விடுதியொன்றில் தங்கிவிட்டேன்.

நானும் அவரும் மஞ்சள் நிற வாடகைக் காரொன்றில் மெல்போனுக்கு புறப்பட்டோம். நாங்கள் தமிழர் என்பதால் அக்காரோட்டி வானொலியை இயக்கி சிட்னியிலிருந்து ஒலிப்பரப்பாகும் தமிழ் ஒலியை வைத்து எங்களை களிப்படைய செய்தார். சாலையின் இரு பக்கங்களிலும் அடர்ந்திருந்த ஜகராண்டா விருட்சங்களும், அவற்றின் ஆரஞ்சு நிற இலைகளும், நீல வண்ண பூக்களும் விநோத அழகைக் கொட்டி மனதிற்கு பெரும் விருந்தாய் அமைந்திருந்தன

சந்தடி மிகுந்த போக்குவரத்தைக் கடந்து தி கிரேட் ஓசன் என்னும் சாலை வழியே வாகனம் வேகமெடுத்ததும் கண்களை மூடி சற்று ஓய்வெடுக்க நினைத்த என்னை தோள் தட்டி எழுப்பிய நீல்கணேஷ் அது சொர்க்க பிரதேசமென்பதால் காண்த்தவறாதீர்கள் என்று வலியுறுத்தவே விழிகளைத் தேய்த்தபடியே நிமிர்ந்து உட்கார்ந்தேன். அவர் சொன்னது நிஜமே. அது சொர்க்கம் என்பதில் துளியும் ஐயமில்லை. பச்சை பசேலென்ற மலையும், ஆர்பரிக்கும் கடலும் ஒன்றோடொன்று இணைந்து பயணிக்கும் கண் கொள்ளா காட்சி. வலது புறம் மலையிருக்க இடது புறம் மிக அருகாமையில் கடலிருந்தது.

கார் கண்ணாடியை இறக்கி விட்டிருந்ததால் சில்லென்ற ஈரக்காற்று ஓடிவந்து உடலைத் தழுவிக்கொள்ள இதுவரை அனுபவித்திடாத புதுவித சுகமுண்டானது. அப்பாதை முடியுறும் வரை எனை மறந்து உட்கார்ந்திருந்தேன். தொடர்ந்து வரும் புள் வெளிகளில் மேய்ந்த ஒட்டகங்களையும், கங்காருகளையும், கோலா கரடிகளையும் ஒரு சிறு பிள்ளையின் குதுகலத்தோடு கண்டு மகிழ்ந்தேன். தூரத்தில் தெரிகிற வெண்ணிற லைட் அவுஸ்கள் மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றின.

புத்தகத்தில் குறிப்பிட்டிருந்த 12 அபோஸ்டில் பகுதிக்கு வந்ததும் வீட்டு இலக்கத்தை கவனித்தவாறே செல்ல அதிர்ந்து போகும்படியாயிற்று. A l w 107 ஐ தேடிய போது 104 வுடன் அந்த அப்பாட்மெண்ட் முடிந்திருந்தது. அடுத்து வேறு இடம் வேறு எண் இருந்ததே தவிர 107 காணப்படவே இல்லை. இதென்ன குழப்பமென்ற அயர்ச்சியுண்டானது. என்னை அங்கேயே நிற்க செய்து விட்டு நீல்கணேஷ் சுற்றியலைந்து பார்த்தார். நாவலாசிரியரின் முகவரியை கண்டுபிடிக்கவே முடியவில்லை.

கூட்டம் குறைவாயிருந்த சின்ன உணவு விடுதியொன்றில் சூப்பைக் குடித்தபடியே சிந்திக்கையில் பதிப்பகத்தாரை சந்திக்கலாமென்ற பயனுள்ள யோசனையை நீல்கணேஷே சொன்னார். கையோடு கொண்டு போயிருந்த புத்தகத்தையெடுத்து பார்த்ததும் எல்தாம் என்னுமிடத்தில் அப்பதிப்பகம் இருப்பது தெரியவர காரோட்டியிடம் அவ்விடத்தை சொல்லி இருவரும் ஏறிக்கொண்டோம்.

நகரத்தின் மையத்தில் ஒரு அட்டை பூச்சியாக மீண்டும் அந்த கார் ஊர்ந்தது. பழங்காலத்து டிராம் வண்டிகள் அங்கே ஓடுவதை அதிசயமாக வேடிக்கைப் பார்த்தபடியே மிகுதியான போக்குவரத்தை ஒருவழியாக கடந்து கிளைப்பாதையில் திரும்பிய பின்னரே நிம்மதியான பெருமூச்சு வெளிப்பட்டது. நீண்ட பயணத்திற்கு பிறகு யெர்ரா நதியின் மீது போடப்பட்டிருக்கும் இரும்பு பாலத்தில் ஏறி இறங்கிய கொஞ்ச நேரத்துக்குள் நாங்கள் தேடிவந்த பதிபகத்தின் முன்பாக வந்து சேர்ந்திருந்தோம். பதிப்பகம் அமைந்திருந்த கட்டிடம் முழுவதும் மரத்தினாலானது. சுவர்களும், அறைகளாகத் தடுக்கப்பட்ட மரப்பலகைகளின் வடிவமைப்பும் மிக நேர்த்தியாயிருந்தன. தரைப்பகுதியும் மரத்தினாலாக்கப்பட்டிருந்தது வியப்பளிக்கும் விதமாகவே காணப்பட்டது. மேற் கூரையானது வளைந்த சாம்பல் நிற ஓடுகளால் வேய்யப்பட்டிருக்க அருகாமையில் நதியோடுகிற காரணத்தால் திறந்திருந்த கண்ணாடி சாளரங்களின் வழியே மெங்காற்று உட்புகுந்து ஆனந்தமாய் விளையாடியது.

பதிப்பகத்தாரை சந்திக்கையில் பிரமிக்க வேண்டியதாயிற்று. இவ்வளவு உயரமான ஒரு மனிதரை நான் என் வாழ்நாளில் கண்டதேயில்லை. அவரை அண்ணாந்து பார்த்தே கழுத்து வலி வந்து விட்டது. வெஸ்டின் சீரியனைப் பற்றி விபரமறிய வந்துள்ளதாக சொன்னதும் அவர் புருவம் தூக்கி யோசித்தார். நாவலின் பெயரை நினைவூட்டியதும், தனக்கும் அவருக்கும் அதிக பழக்கமில்லை என்றவர், நாவல் நன்றாக இருந்ததால் பொட்டதாகவும் ஐயாயிரம் காப்பியும் விற்று தற்போது மறுபதிப்புக்கு தயாரான நிலையில் அம்மனிதர் கண்ணில் படவேயில்லை எனக்கூறி மேலும் பேச்சை வளர்க்க இஷ்டப்படாதிருந்தவரிடம், வெஸ்டின் சீரியன் குறிப்பிட்ட இந்தியாவைச்சேர்ந்த தமிழ்நாட்டு எழுத்தாளர் இவர்தானென்று நீல்கணேஷ் என்னை அறிமுகப்படுத்தியதும் ஆச்சரியப்பார்வையொன்றை என் மீது வீசினார்.

அதன் பிறகு அவரது தொனி மாறி அதில் உபசரிப்பும் உற்சாகமும் கூடியிருந்தது. என்னைப் பற்றி அந்நாவலாசிரியர் மிக பெருமையாக பேசியபோது அதில் அவருக்கு ஈடுபாடு தோன்றாமல் போனதாகவும் பின்னர் கூகுளிள் தேடியதும் பிரமிப்படைந்ததாகவும், ஆங்கிலத்தில் மொழிப்பெயர்க்கப்பட்டிருந்த எனது ஒரு சில சிறுகதைகளையும் நாவல்களையும் படித்ததும் அதீத விருப்பம் கொண்டதாகவும் மனதார பாராட்டிய அவரின் ஆங்கில உச்சரிப்புத்தான் சற்று கரடு முரடாக இருந்தது.

வெஸ்டின் சீரியனைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே நான் என் பயண திட்டத்தை மாற்றியமைத்துள்ளதாக கூறி, புத்தகத்திலிருக்கும் முகவரி போலியானது என ஆதங்கப்பட்டதும் எழுத்தாளரின் போன் நம்பரை வாங்கி வைத்துக் கொள்ளாமல் போனதற்காக வருத்தம் தெரிவித்தார்.

அடுத்த கணம் பளீச்சென அவர் முகம் மலர்ந்தது. ஸ்டீபன் என்ற தன்னுடைய நண்பரொருவர் எழுத்தாளரின் தீவிர வாசகரென்றும், ஒருமுறை மூவரும் சந்தித்தபோது நண்பரின் செல்போனில் செல்பி எடுத்து கொண்டதாகவும், அவரை சந்தித்தால் அப்படம் கிடைக்கக்கூடும், அத்தோடு எழுத்தாளரின் சரியான முகவரியும் தெரிந்திட வாய்புண்டு என்றவர், தன் செல்போனையெடுத்து அந்நண்பரைத் தொடர்பு கொள்ள முயன்றார். அவரது அம்முயற்சி பயனின்றிப் போனது.

செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருப்பதாக வியந்து, ஒருபோதும் அவர் அப்படி செய்யக்கூடியவரல்லவென புலம்பினார். இருப்பினும் அவருடைய முகவரி தன்னிடமிருப்பதாகவும் அவரைக் காண தானும் வருவதாக சொல்லி புறப்பட முயல, அந்நேரம் பதிப்பகத்தாரின் பரபரப்பான சூழ்நிலையை நேரில் கண்டதால் மேலும் தொந்தரவு செய்ய வேண்டாமென்ற நோக்கில் நாங்களே சென்று வருகிறோமென

முகவரியையும், ஸ்டீபனின் புகைப்படம் ஒன்றையும் வாங்கிக்கொண்டோம்.

கிளம்பிட யத்தனிக்கையில் எங்களை சிறிது காத்திருக்க சொல்லிவிட்டு அறையினுள்ளே சென்று வந்தவர், எழுத்தாளர் முதன் முதலில் தன்னை சந்திக்க வந்தபோது நம்பிக்கை ஏற்படவேண்டும் என்பதற்காக ஆஸ்திரேலியாவின் முக்கிய இலக்கிய இதழ்களில் வெளிவந்த அவருடைய மூன்று சிறுகதைகளைத் தந்ததாகவும் அவை எனக்கு பயன்படக்கூடும் என்றே கொடுத்தபோது பெரும் புதையல் கிடைத்தது போல் அகமகிழ்ந்து வாங்கிக்கொண்டேன். மறுபடியும் மறுபடியும் நன்றி சொல்லி விட்டு அங்கிருந்து புறப்பட்டோம்.

இம்முறை பெர்த் நகரிலிருந்த அம்முகவரி மிக சரியாக இருந்தும் பிரயோசனமில்லாமல் போனது. கதவில் தொங்கிய பெரிய பூட்டு ஏளனமாக

என்னைப் பார்த்து சிரிக்கவே அதிக சோர்வுடன் அவ்வீட்டின் படிக்கட்டில் உட்கார்ந்து விட்டேன். நெடுநேரம் எழுந்திருக்க சிந்தையில்லை. நீல்கணேஷ் தவிப்புடன் அருகில் நின்றிருக்க காரோட்டி பலமுறை ஹாரன் அடித்ததுமே தொய்வுடன் எழுந்து நடந்தேன்.

ஒரு அரைமணி நேர பயணத்திற்கு பிறகு குளிர்பானம் அருந்தலாமென ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி விட்டு இறங்கியபோது இன்ப அதிர்ச்சியாக நாங்கள் தேடிவந்த ஸ்டீபனை அங்கு கண்டோம். எங்களை அறிமுகப்படுத்தியவாறு

வெஸ்டின் சீரியனைக் குறித்து கேட்டதற்கு, தான் அதிஷ்டமில்லாதவனென அவன் பதிலளித்தான்.

நாங்கள் மிக சமீபத்தில் ஓடிய ஸ்வான் நதியின் கரையோரமிருந்த கிங்ஸ் பூந்தோட்டத்திற்கு சென்று அமர்ந்தவாறு பேச்சைத் தொடர்ந்தோம். அன்று எழுத்தாளரோடு படம் பிடித்த பின் வீடு திரும்பும் போது தன்னுடைய செல்போனை ஒரு திருடன் அபகரித்து போய்விட்டானென்றும், விலையுயர்ந்த அப்போன் போனலும் பரவாயில்லை, தான் பொக்கிஷமாக நினைக்கும் எழுத்தாளரின் படம் கிடைக்காமல் போய்விட்டதேவென்று அவன் துயருற்றான்.

அதன் பிறகு, தான் அவரை எங்கெங்கோ தேடி பார்த்தும் அகப்படவில்லை என்றும், எங்கே போனார் என்பது பெரும் மர்மமாக இருக்கிறது என்றே என்னை அதிரவைத்தான். இதோ கிடைத்து விடுவார்… இப்பொழுது பார்த்துவிடலாம் என்று நெருங்கி நெருங்கி வந்தும் அவ்வெழுத்தாளர் எங்கோ விலகி மாயமாகி விடுவதைக் கண்டு மனம் வேதனையுற்றது. தொடர்ந்து ஸ்டீபனிடம் பேசுவதற்கு எதுவும் இருப்பதாக தோன்றாமல் போகவே உள்ளம் கசிந்து ஒரு புன்னகையை உதிர்த்து விட்டு அவனிடமிருந்து விடைபெற முயன்றபோது, எழுத்தாளரின் மூன்று சிறுகதைகளைத் தேடி சேகரித்து வைத்திருப்பதாகவும் அவை வேண்டுமாவென அவன் கேட்டதும் சட்டென்று துள்ளல் பிறந்தது.

அவனுடைய புதிய செல்போனிலிருந்து அந்த மூன்று கதைகளையும் என்னுடைய லேப் டாப்புக்கு ஏற்றிவிட்டான். நான் கதைகளை ஆராய்ந்தேன். மூன்றில் ஒன்று பதிப்பகத்தார் கொடுத்த கதையாக இருக்க மற்ற இரண்டும் புத்தம் புதியதாக இருந்தது பெரும் மகிழ்வையளித்தது. எங்கள் வண்டி வரை வந்து ஸ்டீபன் விடை கொடுத்து அனுப்பியபோது அவன் மீதான மதிப்பு அதிகரிக்கவே செய்தது.

பத்து நாட்களுக்கு மேலாகிப்போகியும் தேடுதலில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாத காரணத்தால் பெருத்த ஏமாற்றத்திற்கு ஆளாகியிருந்த நான், போதும் ஊருக்கு கிளம்பிவிடலாம் என்ற முடிவுக்கு வந்து சாமாங்களை பேக் பண்ணத்தொடங்கினேன். நீல்கணேஷ் வந்ததும் மனமார்ந்த நன்றிகளை சொல்லி பர்ஸைத் திறந்து கணிசமான டாலர்களை எடுத்து கொடுத்தபோது, பிடிவாதமாய் மறுத்து விட்டார். அத்தோடு என்னால் முடிந்தது என்றவாறு, வெஸ்டின் சீரியனின் இன்னுமிரண்டு புத்தம் புதிய சிறுகதைகளின் பிரதிகளைக் கொடுத்தபோது திணறிப்போய்விட்டேன். அவரின் தீவிர தேடுதலையெண்ணி பூரித்து, அன்பொழுக கட்டியணைத்து விடைபெற்றேன்.

……

இதற்கு முன் பல புத்தகங்களின் வெளியீட்டு விழாக்களை நிகழ்த்தியிருந்தபோதிலும் இன்றைய தினம் எனக்கு புதிதாகவே தோன்றியது. வெஸ்டின் சீரியனின் நாவலையும், ஏழு சிறுகதைகளையும் நானே தமிழில் மொழிபெயர்த்து அவை இரண்டு தொகுதிகளோடு, எனது ஆஸ்திரேலிய பயண கட்டுரையும் சேர்த்து மூன்று நூல்களின் பிறந்த நாள் இன்று.

சத்திரம் பேருந்து நிறுத்தத்திற்கு அருகேயிருந்த நட்சத்திர ஹோட்டலொன்றில்

இம்மாலை நேர நிகழ்வுக்கு இலக்கிய அன்பர்களும், நண்பர்களும் பெருவாரியாக வரத்தொடங்கி விட்டார்கள். இன்முகத்தோடு அவர்களை வரவேற்று உபசரித்தேன். சரியாக ஆறு மணியளவில் விழாத் தொடங்கியது.

என் இனிய நண்பர் புதுகை சஞ்சீவி வரவேற்புரை நிகழ்த்தியதும், ஆங்கரை பைரவி தொகுப்புரையாற்றினார். விஜய மகேந்திரன், சுரேஷ் மான்யா ,வ.இளங்கோ, யாழி ஆகியோர் பேசியதும் நான் பெரிதாக மதிக்கும் தேவிபாரதி அவர்கள் நூல்களை வெளியிட்டு அவை குறித்து மிக சிறப்பாக எடுத்துரைத்தார். ஏற்புரையில் நான் இம்மூன்று நூல்கள் உருவான பின்ணணியை விவரித்தேன். இருதயசாமி நன்றியுரை கூற விழா இனிதாக முடிவுற்றது. விழாவுக்கு முகம் தெரியாத நிறைய மனிதர்கள் வந்திருந்தார்கள். பெரிய பெரிய தொழிலதிபர்களாகிய அவர்களை தனிதனியே பார்த்து நன்றி தெரிவித்து மகிழ்சியடைந்தபோது அவர்கள் தங்களின் விஸிட்டிங் கார்டுகளைக் கொடுத்து நேரம் கிடைக்கும் போது வந்து சந்திக்குமாறு சொல்லி போனார்கள்.

வீடு வந்து சேர்ந்தபோது இரவு பதினொரு மணிக்கு மேலாகியிருந்தது. நண்பர்களுடன் வெளியில் சாப்பிட்டு விட்டதால் அசதியுடன் படுக்கையில் விழுந்தேன். உடல் களைத்திருந்தாலும் மனம் விழிப்புடன் எதையோ தேடும் பாவனையில் சதா ஊர்ந்து கொண்டிருந்தது. சாதாரணமாக கதை தோன்றிடும் சூழலைவிட இது மேம்பட்டதாக இருந்திடவே படபடப்புடன் எழுந்து உட்கார்ந்தேன். புதிய கதையின் முதல் வரி உதயமாகி சடசடவென்று உள்ளே மழையாக பெய்ந்தது. போர்வையை உதறியெறிந்து விட்டு எழுதுமிடம் சென்றேன்.

காகிதத்தின் பக்கங்கள் சரசரவென்று பூர்த்தியாகி விழ, நான் சிறுகதையாக நினைத்திருந்தது குறுநாவலாக சென்று முடிந்தது. கடைசி வரியை எழுதிவிட்டு திருப்தியுடன் தலை நிமிர்ந்து சுவர்கடிகாரத்தை பார்க்க அது விடியற்காலை மூன்றரையைக் காட்டியது. இதுவரை எழுதுதிடாத மிக சிறந்த கதையை எழுதிய ஆனந்தத்தில் உடலெல்லாம் மெல்லிய மின்சாரம் பரவியது. கண்மூடி அந்த சுகத்தை அனுபவித்திட முயன்றபோது ஹாங்கரில் மாட்டியிருந்த, நான் விழாவுக்கு அணிந்து போயிருந்த மேகவண்ண கோட் சத்தத்துடன் கீழே விழுந்து பாக்கெட்டில் வைத்திருந்த பொருள்கள் அனைத்தும் வெளியே சிதறின.

ஒருவித உந்துதலோடு விரைந்து சென்று அவற்றை கைகளில் அள்ளி விதவிதமான அந்த விஸிட்டிங் கார்டுகளை கண்ணுற்றேன். அவற்றிலொன்றில் வெஸ்டின் சீரியன் என்ற பெயரைக் கண்டதும் வெலவெலத்து போனேன்.

பலவீனமடைந்த இதயத்துடன் அவர் நம் விழாவுக்கு வந்திருந்தாரா என்ற வியப்போடு, அவரூரில் சல்லடைப்போட்டு தேடியும் கிடைக்காத மனிதர் இங்கெப்படி வந்தாரென்று குழப்பமுண்டானது. பேராச்சரியம் பொங்கியெழ கார்டை உற்று நோக்கிட, அவரது பெயருக்கு கீழே முகவரியேதும் இல்லாமல் ஒரு செல்போன் எண் மட்டும் தரப்பட்டிருந்தது.

படபடப்புடன் எனது செல்போனையெடுத்து அந்த எண்ணையழுத்தி காதில் வைத்து காத்திருக்கையில் என் மனசின் தடதடப்பு துல்லியமாக எதிரொலித்தது. ஏதோ அம்மானுஷிய பிடியில் அகப்பட்டவனாக நான்மாறி பேசிட வார்த்தைகளின்றி தடுமாறி நின்றிருக்க, என்ன எழுத்தாளர் சார்… நலமாவென அவர் கேட்டார். மேலும் தன்னுடைய புத்தகங்களின் விழாவுக்கு வந்திருக்கும் போது நேரில் பார்க்கையில் ஒரு நன்றிக்கூட சொல்லவில்லையேவென கேலியுடன் வினவவும் செய்தார். பிரக்ஞை கலங்கிட இப்பொழுதும் என்னிடமிருந்து சொற்களேதும் வெளிப்படவேயில்லை. அவர் பேச்சை நீடிக்க, அக்குரல் எனக்கு மிக பழக்கப்பட்டதாகவே தோன்றியது. ஞாபகத்திரையில் மின்னலென ஒவ்வொரு பிம்பமாய் சுடர்விட்டு மறைந்தன.

இதன் பிறகான அவரது பேச்சின் பிரமிப்பை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. விழாமுடிந்து இருப்பிடம் சென்ற அவருக்கு தூக்கம் வரவில்லையாம். எழுது எழுதுவென மனசு அடம்பிடிக்கவே சிறுகதையாக எழுத நினைத்து ஒரு குறுநாவலை ஒரே மூச்சில் எழுதிமுடித்து விட்டாராம். அந்த நாவலைக் குறித்து அவர் சொல்ல சொல்ல அது தற்போது நானெழுதி முடித்த கதையாகவே இருந்தது.

சார்…. சார் என்று நான் பிதற்றிக்கொண்டிருக்க இப்பொழுது எதிர்முனையில் அழைப்பு துண்டிக்கப்பட்டிருந்தது.

….

.

கருப்பன் கவிதைகள் ( பின் நவீன கவிதைகள் )

கருப்பன் கவிதைகள்
( பின் நவீன கவிதைகள் )

•••

முட்டைகோஸ் 3
மூணு கிலோ
கத்திரிக்காய் கால்கிலோ
வெண்டைக்காய் ஊசிப் போனது
பேரிக்காய்
பெருங்காயம்
வெங்காயம்
போ
போ
டூபாக்கூர்

புடலங்காய் கூட்டு
ஆமைவடை
புட்டு
டூபுக்கு

•••
ஏலக்காய்
முந்திரி
பனைகிழங்கு
ஆமணக்கு
கொட்டமுத்து
ஆனைமுத்து
யானை விட்டை
போட்ட
குதிரை முட்ட
போ
போ
பொறுக்கிப் பயலே
எங்க தேடுகிறாய்
உன் கவிதை
ரசனையை
•••
3
உன் வழக்கமான காதல் கதையல்ல இது
கூட்டுக் குடும்ப வாழ்வுமல்ல
மைக்ரோ குடும்பமும் அல்ல
உறவுகளில்லா உறவுமில்லை
ஆனால்
உறவு கொள்ளவே சார்ந்திப்போம்
இணைவோம்
இதற்குப்பெயர்
லிவிங்டுகெதர் அல்ல
பின் நவீன காதல் என்பது இதன் மற்றொரு பெயர்
உன் பழைய காதலை கடாசி எறி
குப்பையில்
அதன் கெட்ட நாற்றம் மூக்கைப் பிடிக்கிறது
•••

காவி பயங்கரவாதிகளும் கலாச்சார போராளிகளும் – இமையம்

மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி என்று ஆட்சிக்கு வந்ததோ அதிலிருந்து அறிவுத்துறையினர் மீது தாக்குதல் கொடுப்பது என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. எதிர்க்கட்சிகளிடம்கூட பா.ஜ.க பயப்படுவதில்லை. ஆனால் அறிவுத்துறையினரைக் கண்டு அதிகம் அஞ்சுகிறது. தன்னுடைய அச்சத்தை போக்க அது கொலை செய்யவும் தயங்குவதில்லை. கோவிந் பன்சாரே, கல்பூர்கி போன்ற எழுத்தாளர்களை சுட்டுக்கொன்றது. கெளரி லங்கேஷ் என்ற பத்திரிக்கையாளரையும் சுட்டுக்கொன்றது. காவி பயங்கரவாத்தின் உச்ச செயல்பாடுகள் இவை.

கோவிந் பன்சாரேவும் கல்பூர்கியும் சுட்டுக்கொல்லப்பட்ட போது இந்தியாவில் இருக்கிற எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஒன்று திரண்டு போராடினார்கள். சிலர் சாகித்ய அகாடமி விருதை திருப்பி அளித்தனர். அப்போதும் பா.ஜ.க. திருந்தவில்லை. தங்களுடைய பயங்கரவாத செயலுக்கு எதிராக யார் குரல் கொடுத்தாலும், குறிப்பாக எழுத்தாளர்கள், கலைஞர்கள், ஊடகவியளார்கள் என்றால் அவர்களை தீர்த்துகட்டுவது, தற்கொலைக்கு தூண்டுவது என்று செயல்படுகிறது பா.ஜ.க. அறிவு செயல்பாட்டின் மீது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதின் மூலம் தன்னுடைய கொடூர முகத்தை காட்டிக்கொண்டே இருக்கிறது. தனிமனிதர்களை மட்டுமல்ல, கூட்டமாக கொல்லவும் தயங்காது என்பதற்கு குஜராத் கலவரமும் கோத்ரா ரயில் சம்பவங்களே உதாரணங்களாக இருக்கிறது. இரண்டு கலவரங்களும் மோடி முதல்வராக இருந்தபோதுதான் நடந்தது. குஜராத்தின் கலவரத்தை இந்தியா முழுவதும் பரப்பிவருகிறார் மோடி.

தமிழகத்தில் பெருமாள்முருகன் எழுதிய ‘மாதொருபாகன்’ நாவலுக்கு எதிராக இந்துத்துவ அமைப்புகள் உருவாக்கிய வன்முறை வெறிச்செயல்களையும், தனிமனித தாக்குதல்களையும் அறிவோம். பெருமாள்முருகனுக்கு நடத்திய கொடூரங்களைவிட பல மடங்கு கொடூரங்களை இப்போது மனுஷ்ய புத்திரனுக்கு ஏற்படுத்திவருகிறது.

மனுஷ்ய புத்திரனின் ‘ஊழியின் நடனம்’ கவிதையை நான் பலமுறை படித்துப்பார்த்தேன். கவிதையில் பெண்களை இழிவு செய்யும் விதத்திலோ மத உணர்வை தூண்டும் விதத்திலோ, மத உணர்வுக்கு எதிரான விதத்திலோ கவிதையில் எதுவும் இல்லை. கவிதையை கவிதையாக படிக்கவேண்டும். உள்நோக்கத்தோடு படிக்கக்கூடாது. அப்படிப் படித்தால் கவிதைக்குறிய நுட்பம் தெரியாது.

கவிதையின் மையம், கேரளாவில் மழை வெள்ளத்தால் ஏற்ப்பட்ட இழப்பு குறித்து மட்டுமே பேசுகிறது. பூமியை நம் எப்போதும் தாயாகவும், பெண்ணாகவும்தான் பார்ப்பதற்கு பழக்கப்பட்டிருக்கிறோம். அந்த வகையில் ஊழியின் நடனம் கவிதை எழுதப்பட்டிருக்கிறது. பாரத மாதா என்று நாம் சொல்லத்தானே செய்கிறோம். இந்தியாவில் எந்த மூலையில் இயற்கை பேரிடர் ஏற்பட்டிருந்தாலும் தேவி என்பதற்குப் பதிலாக பாரத மாதா என்று போட்டு மனுஷ்ய புத்திரன் கவிதை எழுதிருப்பார்.

கேரளாவில் ஏற்பட்ட இயற்கை சீரழவை தாங்கிக்கொள்ளாமல் எழுதபட்ட கவிதை. வேறுவிதமான கற்பித்தால்களுக்காக எழுதப்பட்டதல்ல ஊழியின் நடனம் எந்த ஒரு எழுத்தாளனும் சமுகத்தில் கலவரத்தைத் தூண்டுவதற்காக கவிதை, கதை எழுதவில்லை. இந்த எளிய உண்மைகூட பா.ஜ.க.வினருக்கு ஏன் புரியமாட்டேன்கிறது என்பதுதான் ஆச்சரியம். ஊழியின் நடனம் கவிதை கலவரத்தை தூண்டும்விதமாக இல்லை. கவிதைக்குறித்த ஹெச்.ராஜாவின் பதிவுதான் கலவரத்தை தூண்டும்விதமாக இருக்கிறது.

மனுஷ்ய புத்திரனின் கவிதையில் குற்றம் இருக்கும் பட்சத்தில் அதை சட்டரீதியாகத்தான் அணுகவேண்டுமே ஒழிய, ஊர்ஊராக வழக்குப் பதிவு செய்யசொல்வது, ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்ப சொல்வதும்; அனுப்புவதும் தொலைபேசியில் ஆபாசமாக பேச செய்வது, மிரட்டல் விடுவது நாகரீகமான செயல் ஆல்ல. பெண்களை இழிவுப்படுத்துகிறது, மத உணர்வை புண்படுத்துகிறது என்பதற்கான ஆதாரங்களை தராமல் கெட்டவார்த்தையில் திட்டுவது நாகரீகமா?

30 ஆண்டுகளாக எழுதி கொண்டிருக்கிற மனுஷ்யபுத்திரன் எந்த ஒரு இடத்திலும் அவர் தன்னை மத அடையாளத்தோடு பொருத்திக்கொண்டதில்லை. மதவாதத்திற்கு எதிராக மத பயங்கரவாதத்திற்கு எதிராகத்தான் இதுவரை எழுதி இருக்கிறார். பேசியிருக்கிறார்.

இந்துமதத்திற்கும் அதனுடைய கோவில்களுக்கும் கலங்கத்தை ஏற்படுத்துவது பா.ஜ.க.வினரே. காஷ்மீரில் இந்து மதக் கோவிலுக்குள் வைத்து சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்து கொன்றது யார்?. காஞ்சிபுரம் கோவிலுக்குள் வந்த பெண்களுடன் உறவு கொண்டதும் அதை வீடியோவாக பதிவு செய்ததும் யார்?

மனுஷ்ய புத்திரனின் கவிதை கேரளாவில் ஏற்பட்ட இழப்பைப் பற்றி, துயரத்தை பேசுகிறது. ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் எம்.எல்.ஏ. ஒருவர் ஐயப்பன் கோவிலில் பெண்களை நுழைவதற்கு அனுமதித்ததால்தான் இவ்வளவு பெரிய பேரிழப்பு ஏற்ப்பட்டிருக்கிறது என்று சொல்கிறார். மாட்டு இறைச்சி சாப்பிடுவதால்தான் கேரளாவில் கன மழை பெய்து பேரழிவை ஏற்படுத்தியது என்று பா.ஜ.க.வின் முக்கிய பிரமுகர் கூறியிருக்கிறார்.

உண்மையில் யார் மீது வழக்குப்போட வேண்டும்? ஐயப்பனின் கோபத்தால்தான் இவ்வளவு மழை பெய்திருக்கிறது என்று சொல்கிற பாரதிய ஜனதா கட்சிதான் மத்தியில் ஆள்கிறது. அதனுடைய கட்டுப்பாட்டிளுள்ள இந்தியா வானிலை அய்வு மையம் கனமழை பெய்யும் என்று அறிவித்தது. பா.ஜ.க. மற்றும் அதன் கிளை அமைப்புகளில் உள்ளவர்கள் தொடர்ந்து அறிவியல் உண்மைகளுக்கு எதிராகவே பேசிக்கொண்டிருக்கிறார்கள். இது அவர்களுக்கே ஆச்சரியமாக இல்லையா?

பத்மாவதி திரைபடம் எடுத்த இயக்குநரின் கையை வெட்டுங்கள் என்று சொல்வதும், அந்த படத்தில் நடித்த நடிகையின் மூக்கை அறுப்பேன் என்று சொல்வதும் ஆச்சரியமாக இருக்கிறது.

பா.ஜ.க.வினரும் அதனுடைய கிளை அமைப்பினரும் எந்த நூற்றாண்டில் இருக்கின்றனர். எழுத்தாளர்களையும் , கவிஞர்களையும் கொன்றுவிட்டு பா.ஜ.க. எந்த மாதிரியான சமுகத்தை ஆள விரும்புகிறது. மாயாஜால, மந்திர தந்திர , புராண, இதிகாச கட்டுகதைகளை மட்டுமே அது இலக்கியமாக நம்பிக்கொண்டிருகிறது. நவீன இலக்கியம், நவீன கவிதையின் இயல்பு அறியாமல் பா.ஜ.க. நடந்துகொள்வது, அவர்கள் நடைமுறை சமூகத்தில் வாழவில்லை என்பதையே காட்டுகிறது. ராமனுடைய காலத்திலேயே இந்தியாவில் கணினி பயன்பாட்டில் இருந்தது என்று பா.ஜ.க. மந்திரி சொன்னது வேடிக்கையானது

மனுஷ்ய புத்திரனுக்கு இரவும் பகலும் எந்தெந்த விதத்தில் தொந்தரவு தரமுடியுமோ அந்தந்த விதத்தில் எல்லாம் தொந்தரவு தந்துகொண்டிருக்கிறார்கள். சமுகத்தில் யாரையும்விடவும் எழுத்தாளன்தான் மேம்பட்டவன், முக்கியமானவன். எழுத்தாளனை, கலைஞனை புறக்கணிக்கிற, அவமானப்படுத்துகிற எந்த சமுகமும் கலச்சார ரீதியாக, அறிவு ரீதியாக மேம்பட்ட சமூமமாக இருக்க முடியாது. இன்று மனுஷ்ய புத்திரனுக்கு நேர்ந்திருக்கிற அவலம், அச்சுறுத்தல், நாளை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்; நிகழலாம். அதை அனுமதிக்க முடியாது. காவி பயங்கரவாதத்திற்கு எதிராக ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது.

கடைசியாக வரவர ராவ் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதுபோன்ற கைதுகள் பா.ஜ.க.வினரின் பயத்தையே காட்டுகிறது.

தவறாக பேசுவது, தவறாக புரிந்துகொள்வது; வன்முறைகளை தூண்டிவிடுவது, பா.ஜ.க.வுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை ஆண்டி – இந்தியன் என்று சொல்லி முத்திரை குத்துவது, ஹெச்.ராஜாவின் அரசியல் செயல்பாடாக இருக்கிறது. அவரது அரசியல் ஆரோக்கியமான அரசியலாக தெரியவில்லை. இழிவான அரசியலாகவே தெரிகிறது.

பா.ஜ.க.வும் அதனுடைய கிளை அமைப்புகளும் எழுத்தாளர்கள், கலைஞர்கள் மீதான தாக்குதலை மனுஷ்ய புத்திரன் விஷயத்தோடு நிறுத்திக்கொள்வது நல்லது. கருத்துரிமையை பறிக்கவும், ஒடுக்கவும் நினைப்பது ஜனநாயக நாட்டில் நல்லதல்ல. பா.ஜ.க. வுக்கும் நல்லதல்ல.

எச்.ராஜாவும். அவர் சார்ந்திருக்கிற பா.ஜ.க. அதனுடைய கிளை அமைப்புகளை சேர்ந்தவர்கள் மனுஷ்யபுத்திரனின் ஊழியின் நடனம்-கவிதையை மீண்டும் படிக்க வேண்டுகிறேன்.

••••

எதிரொலி ( கவிதைகள் ) / தமிழ் உதயா ( லண்டன் )

01

நான் செங்கல்
சுட்டுக் கொண்டிருந்தேன்
அவன் மெழுகுவர்த்தி
செய்து கொண்டிருக்கிறான்
முகங்களில்
சொற்களில்
சுழல் காந்தவழிகளில்
எவனோ விபரிக்கும் நம்மில்
நாம் விடைபெற்றுக் கொள்ள
நமக்குத் தெரியாது
யாரோ ஒருவன் தீர்க்கதரிசி ஆகிறான்
யாரோ ஒருவன் நீதிமான் ஆகிறான்.
இன்று சனிக்கிழமை
எல்லோருக்கும் விடுமுறையாக இருக்கலாம்
என் சந்ததியை ஆளாக்க
நான் பயணப்பட்டுத்தான்
ஆக வேண்டும்

00

பயணத்தின் வழி சேமித்திருக்கிறேன்
நீலமடர்ந்த கடல்
நெடிதுயர்ந்த மலை
அதற்கும் அப்பால் பெயர்ந்து
பறக்கும் ராசாளிப்பறவை
ஆதரவாய் பின் மௌனமாய்
சடையுதிர்த்த மரம்
கிண்ணங்களில் ஏந்தி எடுத்த பிஞ்சுச்சூரியன்
கிடுகு வேய்ந்திருந்த முகங்கள்
சொட்டும் பனித்துளி
கொஞ்சமாய் செவ்வரத்தம் பூந்தளிர்

அத்தனையையும்
இப்போது வரைந்து கொண்டிருந்தேன்
நிறமற்றுப்போன தடாகத்தில்
அம்மா நீலநிறச்சேலையில்
எனக்கொரு தூளி கட்டியிருந்தாள்
என் மகளுக்காக
என்னைக் காணாமல் தேடுகிறேன்.

00

உன் கடிதத்திடம்
ஒரு சிறு சிறகின்
மயில்ப்பீலி நிறச் சருகிருந்தது
உன் பற்றுகோல்களுக்கான கண்களால்
நான் பார்க்கிறேன்
கசடுகள் உருகி ஓட
மீள்கணங்களின் அகராதியில்
பாஷையில் ஊடுருவி
ஒரு மரம் போல்
உருக்குலையாது இருந்திருக்கலாம்
கடல் சிரித்துக் கொண்டே இருக்கிறது
பச்சிலை ஓணானின் பிராணனை இழுத்து
ஒரு நிலாவுக்காக காத்திருந்தேன்
அவ்வேளையில்
பூடகமாக ஒளிப்புழுதியைக்
கிளப்பியபடி நீ வந்தாய்
கரைய மறுத்த நேற்றைய கனவில்
முங்கி எழும்பிய கடற்சங்கு முகத்தில்
அர்த்தம் மிதக்கிறது

00

மாஞ்சோலையிலும்
தென்னந்தோப்புகளிலும்
மர்மப் புத்தன்களுக்காக
போதி மரங்கள் விளைந்திருக்கின்றன

செவியுறா உட்சுடரும் பொன்னொளியில்
எம் நிலத்தில்
தொடை எலும்புகளும் விலாக்கூடுகளும்
உருகி ஒழுகிய தலையோடுகளும்
தளம் பாவும்

பூமி எனும் இக்காற்று
நுழைத்த போதைப்பந்தில்
மனிதர்களால் மட்டுமே
எத்தப்பட்ட எலும்புச் சீசாக்களில்
சேமிக்கப்பட்டதெல்லாம் இரத்தம்
வெறும் பச்சை இரத்தம்

இரு கைகளாலும் நிலத்தைக் கிளறி
நாங்கள் நட்டு வைத்த
எங்கள் பிஞ்சுகளின் குருத்துக்கண்கள்
செவ்விதழ்கள் கொழுந்துடல்கள்
எல்லாம் நினைவன்றி

கஞ்சாச்செடி நட்டு
தீபச்சுடராய் திரட்டி
மீதமுள்ள குழந்தைகளையும்
கரும்புகையின் கந்தக நெடிக்குள்
மண் தின்று செரிக்க மானுடத்துயருக்குள்
உருக்கமான பாடல் ஒன்றைப் புனையவோ நான் ?

00

முன் எப்போதும் பார்த்தேயிராத
அரூப இரயில் ஒன்று
என் வழக்கமான வழித்தடத்தை
கடந்து போகிறது
எப்போதும் நிச்சயமற்ற
பாதைகளின் வழி பயணிக்கும் நான்
அந்த இரயிலை
பிடித்திருக்க வேண்டும்
அது ஒரு பனித்துளி போல
தூரத்தில் உடைந்து மறைகிறது
பழுத்த முந்திரிகளில்
துருத்திக் கொண்டிருக்கும்
விதைகளைப் போல
நினைவுகள் முன் நீள்கின்றன
பறவைகள் மீது பூக்களின் மீது
கந்தகத் தந்திகளை
மீட்டியபடி கிடக்கிறது
அந்த மகரயாழ்
ஆனாலும்
எண்ணற்ற சிகரெட் தழும்புகளும்
காலி மதுப்புட்டிகளுமாய்
காத்துக் கிடக்கிறது
அந்த பேர்மிங்ஹாம்
இரயில் நிலையம்
முன் திட்டமிடல் ஏதுமின்றி.
இருந்தும் நீள்துயிலகன்று

வீழ்ந்தும் எழுந்தும் பறந்தும்

மகரந்தத்துகள் ஞாபகமுளைவிட
நிறைகிறது நேற்றைய மனக்குளம்

00.

அரைப்பைத்திய ருசி மிகுந்த
வைன் குவளைகளை
ஒவ்வொன்றாய் சேகரித்தேன்
அதில்
நிகழ்காலத்தை உடைத்து
எதிர்காலக் கண்ணாடியை வனைந்து
என் விசித்திர அறைக்குள் பொருத்தினேன்
இருள் மூலைகளை
சில கடல்களால் நிறைத்து
ஒளியுறச் செதுக்கினேன்
எதுவாயினும்
எவ்வாறெனினும்
ஏதுமற்றும் துடிக்கும் நாடிச்சுனையில்
கொஞ்சம் வெங்கோடை
கொஞ்சம் பசுந்தரை
கொஞ்சம் வழிந்த அமுதம்
கொஞ்சம் கொய்தவிடம்.
துர்க்கனவுடன்
எதிர்மாடத்தில் இருப்பவன்
தன்னைத் தீட்டிக்கொண்டு
என் கதவுகளை உடைக்கக்கூடும்
பெருமரங்கள்
வனாந்திரங்களில் சேகரமாயிருக்கின்றன
மலைக்கணமொன்றைப் பற்றி
முளைதகவுள்ள விதையொன்றை
உதிர்த்து விடவும் கூடும்
ஆனாலும் பார்
பறந்த பருத்திச்செடி ஒன்றில்
ஊதாப்பூவின் காத்திருப்பில்
வெண்ணிறத்துப் பூவானேன் நான்

00

வெகு நேர்த்தியாக
வெகு வசீகரமாக
விலைமதிப்பற்ற உயிர்களை
மிக விலைமதிப்புமிக்க
துப்பாக்கிகளுள் பொருத்துகிறீர்கள்
அது பாய்வதற்கு முன்
செப்பனிடப்பட்டிருக்கிறது
தூசு தட்டிச் சத்தம்
எழுப்பப்பட்டிருக்கிறது
மிகப் பத்திரமாக விலாக்கூடுகளில்
செருகப்பட்டிருக்கிறது
குழல்களில் இரத்த நெடி பிசுபிசுக்கிறது
பொசுக்கும் மணம் நாசி தின்கிறது
குடிசைகளில் காளியப்பன்களின்
உயிர்கள் சூறையாடப் பட்டிருக்கலாம்
குழந்தைகள் உருக்கு ஆலைகளில்
நையப் புடைத்திருக்கலாம்
சூனியத் துணுக்குகளால்
பெண்களின் குரல்வளைகளை
ஈரல் குலைகளை பிடுங்கி
ஏவுகணைகள் தயாரித்திருக்கலாம்
தீப்பொறி கக்கும்
டிஜிட்டல் கண்களைக் கொய்திருக்கலாம்
ஆனாலும் துர்ப்பாக்கியமான
அத்துப்பாக்கிகள்
ஹிட்லர்களுடையது என்றே
பெயர் சூட்டப்பட்டிருக்கின்றன
அக்கிட்லர்களது கோட்டைகளைத் தகர்க்க
ஒரு பிரபாகரம்
இக்கணமே முளைகட்ட வேண்டும்.

00

இடையறாத இருகணங்களுக்குள்
ஒரு சிறு சலனம்
சமன்குலைவை ஏற்படுத்திவிடுகிறது

எதிர்காலம் வசீகரிக்கிறது
இதோ அருகில் இருக்கிறது
என் முகம்

அழுவதற்கும் சிரிப்பதற்கும்
அக்குழந்தையின் கண்கள்
பனிப்பதைத் தான் செய்கின்றன

ரகசியங்களைக் கவிழ்த்து வைத்து
ஒரு மரத்தை எப்புறம் பார்த்தும்
வரலாற்றை அறிய முடிவதில்லை

கடலடியில் கிடக்கும்
கூர்மையற்ற பாறையும்
உரசியதும் கிழிக்கத்தான் செய்கிறது

எண்ணங்களுக்கு மொழியேது
எந்த மொழியில் மொழிபெயர்ப்பது
உங்கள் எண்ணங்களால்
மொழிபெயர்த்துப் பாருங்கள்

•••

நேற்றைய மதியம் ( குறுங்கதை ) / ந.பெரியசாமி

விடியல்கள் ஒன்றுபோல் இருப்பதில்லை. மகிழ்வு, சோம்பல், துயரம், எரிச்சலென வெவ்வேறு விதமான உணர்வுகளோடுதான் பிறக்கிறது. துவக்க உணர்வே அந்நாளின் தன்மையை தீர்மானிப்பதாகவும் இருந்துவிடுகிறது. நினைவுகளோடு என்னையும் கிளறியவாறு எழுந்தவன், அப்பா இன்னைக்கு குளிக்கமாட்டேன். முகம் மட்டும் கழுவிக்கொண்டு பள்ளிக்கு போகிறேன் என்றான். சரியென தலையாட்டினேன். வற்புறுத்தினால் என்ன நிகழும் என்பதை ஏற்கனவே உணர்த்தி இருப்பதால் அவன் போக்கிலேயே விட்டுவிட்டேன். சிறிது நேரம் கழித்து நான் குளிக்கிறேன் நீதான் குளிப்பாட்டி விடனும் என்றபடி குளியலறைக்குச் சென்றான்.

அவன் மனசு மாறுவதற்குள் சீக்கிரம் குளிப்பாட்டி விடு என்ற இணையாளிடம் சிரிப்பைக் கொடுத்து அவனை குளிப்பாட்டிவிட தொடங்கினேன். இன்று வழக்கமான துறுதுறுப்பு அவனிடம் இல்லாதிருக்க, என்னாச்சுடா சோர்வா இருக்கே, வகுப்பில் யாராவது திட்டினார்களாவென்றேன். அதெல்லாம் ஒன்றுமில்லைப்பா, நேற்றைய மதியத்தை பள்ளியிலேயே விட்டு வந்துட்டேன், அது அங்கேயே இருக்க வேண்டும் என சாமிகிட்ட வேண்டிக்கொண்டிருக்கிறேன் என்றான்.

காலங்கள் குறித்து பேசி, அது கடந்தகால நிகழ்வு இன்று எப்படி இருக்கும் என சமாதானப்படுத்தினேன். சாமியால்கூட கொண்டுவர முடியாதாப்பாவென்றான். யாராலும் கொண்டுவர முடியாது, ஆனால் ஒருவரால் முடியும் என்றேன். யாருப்பா அவரு, சாமியவிட பெரியவரா என்றவனிடம், சிரித்தவாறு நினைவுகளால் கொண்டுவர முடியும் என்றேன். சரி அப்படியென்ன நேற்றைய மதியத்தில் விஷேசம்?

இதற்காகவே காத்திருந்தாற்போல் மிகுந்த துள்ளலோடு எங்க மேக்ஸ் மிஸ் நேற்றுதான்பா நல்லா சத்தமா சிரிச்சாங்க, அப்ப எங்க நாலாம் வகுப்பறைக்கு அணில்வேறு வந்தது என்றான்.

)0(

வண்டி சாலை ( கவிதை ) / ந.பெரியசாமி

*
வாசனை மிதக்கும்
நெல்லித் தோப்பில்
சடைச்சடையாய் காய்ப்பு.
நிலம் புசித்து மீந்தவை
சூரியனுக்கு படையலாக…
ஊடு பயிர்களை மிதித்திடாது
அவ்வை வந்தாள்
தீராத் தாகமென்றபடி.
விரும்பும் மரத்தில்
விரும்பியதை உண்ண பணித்தேன்.
மறுத்து கை நீட்டினாள்
வேலி ஓரம் நீண்டிருந்த பனைகளை நோக்கி.
குடுவை ததும்ப குடித்திட்ட
அவளின் கண்களில்
குளம் தழும்ப அதிர்ந்தேன்.

நெஞ்சறைந்து
ஒப்பாரியிட்டாள்.

•••