Category: தொடர்

சமீபத்தில் படித்த புத்தகங்கள் – 1 – பி.கே. சிவகுமார்

முன்னுரை:

பொதுவில் விரிவாகப் பகிர்கிற, எழுதுகிற, பெயர் வாங்குகிற மனநிலை முதலில் இப்போதெல்லாம் வாய்ப்பதில்லை. இது வரமா, சாபமா எனத் தெரியாது. என் வசதிக்கு வரமென நினைத்துக் கொள்கிறேன். மனநிலை வாய்த்தால் நேரம் எப்படியும் கிடைத்துவிடும். ஆனாலும் ஒத்த ஆர்வம் உடைய நட்புகள் மிகச் சிலர் கொண்ட சிறு வாட்சப் குழுமங்களில் படித்தவை என்ன, பார்த்தவை என்ன என்ற பெயர்களையேனும் தொடர்ந்து பகிர்ந்துதான் வருகிறேன். இயலும்போதெல்லாம் அவை குறித்த சிற்சில வரிகளையும். அந்தத் திருப்தியில் அடுத்தது நோக்கி நகர்ந்து விடுகிறேன்.

தேடல் இருக்கிறது. அதைப் பொதுவில் சொல்லிக் கொண்டிருக்க வேண்டுமா என்ற எண்ணம் அடிக்கடி தலைதூக்குகிறது. ஒருவிதமான அலுப்பு, உற்சாகமின்மை, என்னவோ நினைத்துக் கொள்ளட்டும் என்ற விட்டேற்றி குணம் உலகத்தைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாய்ப் பரவுகிறது. என்ன சொல்லி என்ன ஆகப் போகிறது என்ற அலுப்பு அல்ல. சொல்லிக் கொள்ள வேண்டியவை முதலில் எனக்கே என வந்த தெளிவு.

வயதாக ஆக எது குறித்தும் இருந்த திட்டவட்டமான கருத்துகள் கேள்விக்குரியதாகின்றன. இது வளர்ச்சியா குழப்பமா எனத் தெரியவில்லை. குழப்பமும் கூட வளர்ச்சிக்கான விரைவான படிக்கல்தான். எல்லாவற்றையும் கேள்விக்குரியதாக்கும் சிந்தனைகளுக்குப் பொதுவில் பெரிய ஊக்கம் கிடைப்பதில்லை. நான் எதிர்பார்ப்பதுமில்லை. எதிர்மறை கருத்துகளும் எதிர்ப்புமே மிகும். அவற்றுக்குப் பதில் சொல்வதில் விரயமாகிற நேரத்தோடு அது நம் சிந்தனையை நம் போக்கில் வளரவிடாது முட்டுக்கட்டை போடுகிறது. இப்போதெல்லாம் எல்லாவற்றைப் பற்றியும் உறுதியிட்டு அறுதியாகக் கூறுகிறவர்களை நான் கவனிப்பதோடு சரி. அப்படிப்பட்ட நிலைகளில் இருந்து நானும் நகர்ந்தவன் என்ற முறையில், மாற்றத்துக்கு உதவாத நிலைப்பாடுகள் எனக்கு அயர்ச்சியளிக்கின்றன. அவை அரசியல், இலக்கியம் , சமூகம் எது குறித்து இருந்தாலும்.

தமிழின் செழுமையான மரபிடம் இருந்தும், அதை எனக்குப் போதித்த இடதுசாரி ஆசான்களிடம் இருந்தும், மகாத்மா காந்தியிடமிருந்தும் நான் பெற்ற மனிதாபிமானமும், ஜனநாயக நம்பிக்கையும், அஹிம்சையும், கோட்பாடுகளுக்குள் முடங்காது திமிறும் சுதந்திரச் சிந்தனையுமே என் ஆதார சுருதிகள். ஆதார சுருதிகளையும் உரசிப் பார்க்கும் சுதந்திரத்தையும் என் ஆசான்களே கொடுத்திருக்கிறார்கள். கீழே விழுந்து கிடக்கிறவர்களும், அடிப்படை அறம் மறுக்கப்படுகிறவர்களுமே என் ஆதரவுக்குரியவர்கள். ஆனாலும் அவர்களின் போராட்டமும் அற விழுமியங்களை மீறக் கூடாது என்ற எதிர்பார்ப்பு எனக்கு இருக்கிறது. எதிரியே நம் ஆயுதத்தைத் தீர்மானிக்கிறார் என்பது போன்ற தத்துவங்களில் எனக்கு இப்போது நம்பிக்கை இல்லை.

என்னுடைய உள்முகமான தேடலின் பொருட்டுப் பொதுவில் நான் எழுதுவதை நிறையக் குறைத்து விட்டேன். இடையில் பொருள் தேடும் உலகின் கடமைகள் பெரிய தடை இல்லை என்றாலும், என்னைப் பின்னிருந்து எழுது எழுது என உலுக்குகிறப் பிரச்னைகள் இல்லை. நான் வேண்டுமானால் பிறருக்குப் பிரச்னையாக இருக்கலாம்.

ஆனாலும் – தனிப்பட்ட அளவில் தொடர்ந்து படித்துக் கொண்டும் திரைப்படங்கள் பார்த்துக் கொண்டும்தான் இருக்கிறேன். சொல்லப்போனால், கடந்த ஒன்றரை வருடங்களாகப் பார்த்ததைவிட நிறைய படித்தேன். இவையெல்லாம் எனக்குள் நான் கொண்டிருக்கிற அலைச்சலின், தேடலின் ஒரு பகுதிதான். இதையே உடற்பயிற்சி அல்லது ஓட்டம் ஆகியவற்றின் மூலமும் என்னால் நிரப்பிக் கொள்ள முடியும். அவற்றையும் முயல்கிறேன்.

எழுத்தும் திரைப்படமும் எனக்கு ஒரு முழுதான கிரியா ஊக்கியாகவோ, மருந்தாகவோ இல்லை. எனக்குள்ளில் இருந்துதான் வாழ்வதற்கான, வாழ்வை நோக்குவதற்கான பார்வைகளும், உறுதியும் எனக்குப் பிறக்கின்றன. எனக்குள்ளில் இருந்துதான் என் தற்கால நம்பிக்கைகளுக்கு வலுவான எதிர்த்தரப்பும் கிடைக்கிறது.

அந்த வாழ்க்கை புரட்டிப் போடுகிற சமயங்களில், பாலையென வெக்கை கக்கும் பொழுதுகளில், பாறையென என்னையாக்கிவிடுமென அச்சுறுத்தும் சந்தர்ப்பங்களில், ஒரு சிறிய இளைப்பாறல் போலவே நான் புத்தகங்கள், திரைப்படம், உடற்பயிற்சி ஆகியன பக்கம் ஒதுங்குகிறேன். இவ்விஷயங்களில் எனக்குள் இருக்கும் ஓர் உள்ளொழுங்கு, தொடர்பயிற்சி காரணமாக இவற்றைத் தொடர்ந்து செய்ய முடிகிற தேர்ச்சி பெற்றிருக்கிறேன். புத்தகங்கள், திரைப்படங்கள் இல்லாமலும் தனக்கான பாதையை ஒருவர் கண்டடைய முடியும். அதனால் வாசிப்பை அளவுக்கு மீறி புனிதப்படுத்துகிற மார்க்கெட்டிங் யுக்திகளை இப்போது நான் நம்புவதில்லை.

வெளிப்பார்வைக்கு நான் கரை தொட்டு ஓடினாலும், மணல் வெளுத்துக் காய்ந்தாலும், உள்ளுக்குள் என் தாகம் மட்டுமேனும் தீர்க்கும் சுனைநீர் எனக்குள் சுரந்து கொண்டேதான் இருக்கிறது. எனக்கு அந்த நீர் போதும். அந்த நீர் அடுத்தவருக்கு ஏற்குமா என்றும் எனக்குத் தெரியாது.

என் வாசிப்பில், ரசனையில், கருத்துகளில் – உடன்பட்டாலும் எதிர்பட்டாலும் – மதிப்பு வைத்திருக்கிற அன்பு நண்பர்கள் சுரேஷ் கண்ணன், வெற்றிவேல், தமிழில் பெண் எழுத்தாளர்களில் எழுத்தின் உச்சம் தொட்ட மிகச் சிலரில் ஒருவர் என நான் நினைக்கும் உமா மகேஸ்வரி ஆகியோர் எனக்குப் பிடித்த 10 புத்தகங்களைப் பட்டியலிட அழைத்திருக்கிறார்கள். அவர்களின் அன்புக்கு முதலில் நன்றி.

இப்படியான “பிடித்த 10 புத்தகங்கள்” விளையாட்டை வலைப்பதிவு காலங்களில் விளையாடிய நினைவு இருக்கிறது. அதனால் அதையே திருப்பிச் செய்யாமல், சமீபத்தில் படித்த புத்தகங்கள் குறித்துச் சிலவரிகளேனும் இத்தொடரில் எழுத ஆசை. இந்த இழை மாற்றத்துக்கு என்னைப் பொறுத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறேன்.

மேலும் நான் இப்போது பெரும்பாலும் மின்னூல்களுக்கு மாறிவிட்டேன். அதனால், இதழின் அட்டைப்படத்தை மின்னூலில் இருந்து எடுத்துப் பகிர இயலாவிட்டால், நூலின் தலைப்பையும் ஆசிரியர் பெயரையும் தர முயல்கிறேன். அதற்கும் பொறுத்துக் கொள்ளவும்.

தமிழ் மின்னச்சைக் கைத்தொலைபேசியில் செய்கிற வழக்கத்துக்கு நான் வந்துவிட்டேன். மடிக்கணினி பயன்பாடு அலுவலகத்துக்கு மட்டும் என்றாகி விட்டது. இப்பதிவைக் கூட நேரடியாகக் கைத்தொலைபேசியில்தான் எழுதுகிறேன். ஆதலால், என் பதிவுகள் தொடர்பற்ற குறிப்புகளாகத் (Bullet Points) தெரியலாம்.

(தொடரும்)

ஐங்குறு நூறு—-1 ( மருதம் ) / வளவ.துரையன்

பனைமட்டை

ஐங்குறு நூறு—-1
மருதம்

எட்டுத் தொகை நூல்களில் மூன்றாவதாக வைத்துச் சிறப்பிக்கப்படுவதுதான் ஐங்குறு நூறு ஆகும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து திணைகளுக்கும் திணைக்கு ஒன்றாக நூறு பாடல்கள் கொண்ட நூல் இது. அந்த நூறு பாக்களும் பத்துப் பத்தாகப் பகுத்து பல்வேறு தலைப்புகளில் அடக்கப்பட்டுள்ளன. அவற்றில் மருதத்திணை மிகவும் முக்கியமானதாகக் கருதப்பட்டு நூலின் முதலில் வைக்கப்பட்டுள்ளது. இதனைப் பாடியவர் ஓரம்போகியார்.

இவர் பாடிய பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை என்னும் நூல்களிலும் இடம் பெற்றுள்ளன. இவர் கொங்கு நாட்டைச் சேர்ந்த ஆதன் அவினி என்னும் சேர மன்னனின் ஆதரவைப் பெற்றவர். வட கொங்கு நாட்டில் கானப்படும் அவினியாறு இவனால் வெட்டப்பட்டதென்பர்.

வயலும் வயல் சார்ந்த பகுதியும் மருதம் ஆகும். இங்கு வாழ்பவர் உழவர் மற்றும் உழத்தியர் ஆவர். உழுதல், நடுதல், களைகட்டல் போன்றன இங்கு நடைபெறும் தொழில்கள் ஆகும். ஊடல் என்பது மருதத்திணையின் பொருளாகும்.

மருதத்திணைப் பாடல்களை எழுதியவர் ஓரம்போகியார் என்பவராவார். இவர் பாடிய பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களிலும் உள்ளன. இவர் ஆதன் அவினி என்னும் சேர மன்னனின் ஆதரவு பெற்றவர். வட கொங்கு நாட்டில் காணப்படும் அவினியாறு இந்த மன்னனால் வெட்டப்பட்டதாகும்.

வேட்கைப் பத்து

முதல் பத்துப் பாக்களும் “வேட்கைப்பத்து” எனும் தலைப்பில் அடங்குவனவாகும். வேட்கை என்பது விருப்பத்தைக் குறிக்கும். எதன்மேல் விருப்பமெனில் பொருள் செல்வத்தின் மீதுதான். தலைவனும் தலைவியும் சந்தித்தாயிற்று. இனி குடும்பம் நடத்தப் பொருள் வேண்டும் அல்லவா? எனவே அதன் மேல் பற்று வைக்கிறார்கள்
=
வேட்கைப் பத்து–1
”வாழி ஆதன் வாழி அவினி
நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க
எனவேட் டோளே யாயே யாமே
நனைய காஞ்சிச் சினைய சிறுமீன்
யாணர் ஊரன் வாழ்க
பாணனும் வாழ்க என வேட்டேமே”

அந்தக் காலத்துல ஆம்பளைங்களுக்கு ஒரு வழக்கம் உண்டுல்ல; அதுபோல அவன் பரத்தை ஊட்டுக்குப் போயிட்டு வந்தான்; வந்தவன் சும்மா இருக்காம அவ தோழிகிட்ட போயி “நான் அங்க இருந்தப்போ நீங்க என்னா நெனச்சிக்கிட்டிருந்தீங்க?”ன்னு கேக்கறான். அந்தத் தோழி பதில் சொல்றா;

”நாட்டை ஆளற ராஜா நல்லா இருக்கணும்; நெல்லு நல்லா வெளயணும்; பொன்னு நெறய கெடைக்கணும்; காஞ்சிப்பூவும், செனையாயிருக்கற சின்ன மீனும் இருக்கற ஊர்க்காரனான நீ நல்லா இருக்கணும்; அத்தோட ஒன் தோழனும் நல்லா இருக்கணும்” னுதான் நாங்க நெனச்சிக்கிட்டிருந்தோம்.

இதுலேந்து என்னா தெரியுது? வந்தவன தோழி நல்லா குத்திக் காட்டறா; ஒனக்கு வாசனையான காஞ்சிப் பூவும் ஒண்ணுதான்; சென மீனும் ஒண்ணுதான்; அதாவது பொண்டாட்டியும் ஒண்ணுதான்; பரத்தையும் ஒண்ணுதான்னு அரசல் புரசலா சொல்லிக் காட்டறா

வேட்கைப்பத்து—2

”வாழி ஆதன் வாழி அவினி
விளைக வயலே வருக இரவலர்
எனவேட் டோளே யாயே யாமே
பல்லிதழ் நீலமொடு நெய்தல் நிகர்க்குத்
தண்டுறை ஊரன் கேண்மை
வழிவழிச் சிறக்க எனவேட் டேமே”

ரெண்டாவது பாட்டும் அதேபோலதாங்க; மொதல்ல ராஜா நல்லா இருக்கணும்னு சொல்றாங்க; இதுவும் தோழி பேசறாப்லதான்; அங்க போய்ட்டு வந்தவன்கிட்ட அவ சொல்றா, “நீ அங்க இருந்தப்போ வீட்டுக்குப் பணம் வரணும்ல; அதுக்காக வயல் நல்லா வெளயணும்; வந்த பொருளை வாங்கிட்டுப் போகறதுக்குப் பிச்சை கேக்கறவங்க வரணும்; இதையேதான் அவ நெனச்சிக்கிட்டிருந்தா”

ரெண்டுபேரும் சேர்ந்து என்னா நெனச்சோம் தெரியுமா? ’நீலநிறமான கருங்குவளையோடு நெய்தலும் இருக்கற குளமுள்ள ஊரை உடைய நீ எல்லாப் பொறப்புலயும் சேர்ந்திருக்கணும்னு நெனச்சோம்”

இதுலயும் சிறப்பான கருங்குவளை குலப்பொண்ணையும், நெய்தல் பரத்தையையும் காட்டுது; அதோட ”நீ அங்க போறதால ஒன் அன்பு இவகிட்ட சுருங்குது; அது கூடாதுன்னு சொல்றாப்பலதான் எல்லாப் பொறப்புலயும் நீ இருக்கணும்னு நெனச்சோம்”னும் சொல்றா.
=

வேட்கைப்பத்து—3

”வாழி ஆதன் வாழி அவினி
பால்பல ஊறுக பகடுபல சிறக்க
எனவேட் டோளே யாயே யாமே
வித்திய உழவர் நெல்லொடு பெயரும்
பூக்கஞ லூரன் தன்மனை
வாழ்க்கை பொலிக எனவேட் டேமே”

இது மூணாவது பாட்டு; மொத அடியில ஆதன்னு சொல்றது சேர மன்னனோட குடிப்பெயரு; அவினின்னு சொல்லப்படறது சேர மன்னனாம். இது எல்லாப்பாட்டுலயும் இருக்கும்; இதுல மொத மூணு அடியெல்லாம் தலைவி நெனச்சுது. ஆனா சொல்றதெல்லாம் தோழிதான்; யாய்னா தலைவி; “நீ அங்க போயி இருந்தபோது அவ ராஜாவெல்லாம் நல்லா இருக்கணும்; பசுவெல்லாம் நெறய பால் கறக்கணும்; எருமைமாடு எல்லாம் நெறய இருக்கணும்”னு நெனச்சா.

அடுத்த மூணுஅடி ரெண்டு பேரும் சேந்து நெனச்சத சொல்றா; அதாவது, “ஒன் ஊர்ல ஒழவங்க நெலத்துக்கு வெதைவெதக்கப் போவாங்க; அப்படிப் போறவங்க அங்க முன்னமே வெளஞ்சிருக்கற நெல்லை எடுத்துக்கிட்டு வருவாங்கன்னு நெனச்சிக்கிட்டு இருந்தோம்”

வீட்டுக்கு வர்றவங்களுக்குத் தர்றதுக்குப் பால் நெறய வேணும்; செல்வம் பெருக எருமை நெறய வேணும்; பகடுன்னா எருமன்னு கூட வச்சுக்கலாம்; வெதைக்கப்போனவங்க வெளஞ்சத எடுத்துக்கிட்டு வருவாங்கன்னு சொல்றதுல என்னா மறஞ்சிருக்கு தெரியுமா? ”நீ வரப்போற பரத்தைக்கு வருவாயும் தேடற; இப்ப இருக்கறவளோட இன்பமாயும் இருக்கற” இதுதான் அவ நெனக்கறது.

அவன் செய்யறது குத்தந்தாம்; ஆனா இவ ஒழுக்கமா இருக்கல்ல; அதால குடும்பம் நல்லா இருக்கும்னு சொல்ற பாட்டு இது.

=

வேட்கைப்பத்து–4

”வாழி ஆதன் வாழி அவினி
பகைவர் புல்லார்க பார்ப்பார் ஓதுக
எனவேட் டோளே யாயே யாமே
பூத்த கரும்பிற் காய்த்த நெல்லிற்
கழனி ஊரன் மார்பு
பழன மாகற்க எனவேட் டேமே”

நாலாவது பாட்டுலயும் மொதல்ல “வாழி ஆதன் வாழி அவினிதான்”; நாடு நல்லா இருக்கணும்னா ஆளறவங்க நல்லா இருக்கணும்ல; அதனாலதான் “எங்க தலைவி, “எப்பவும் ஆதனும் அவினியும் நல்லா இருக்கணும்; அவங்களோட எதிரிங்க சாப்பாட்டுக்கே வழி இல்லாம புல்லத் தின்னணும்; மழை பொழியணும்; அதுக்காக பார்ப்பார் வேதம் ஓதணும்”னு நெனச்சிருந்தாங்க;

நீ அங்க இருக்கேன்னு எங்களுக்கு நல்லாவே தெரியும்; அப்ப நாங்க என்னா நெனச்சிருந்தோம் தெரியுமா? ஒன்னைப் பத்திப், ”பூத்துப் பயன்படாத கரும்பையும், காய்த்துப் பயன்படும் நெல்லையும் உடைய ஊரைச் சேர்ந்தவன் நீன்னு நெனச்சிருந்தோம்;” இப்படி சொல்றது வழியா அந்தத் தோழி பயன்படாத பூத்த கரும்பு போலப் பரத்தையர்னும், பயன்படும் நெல்லுபோல குலமகளிர்னும் குறிப்பா சொல்லிக் கட்டறா; மேலும் சொல்றா,” சில ஊர்ல எல்லாருக்கும் பொதுவான பொறம்போக்கு நெலம் இருக்கும்ல; அதுபோல ஒன் மார்பு எல்லா மகளிர்க்கும் பொதுவா இருக்கக் கூடாது”
=

வேட்கைப்பத்து—5

”வாழி ஆதன் வாழி அவினி
பசியில் லாகுக பிணிசேண் நீங்குக
எனவேட் டோளே யாயே யாமே
முதலைப் போத்து முழுமீன் ஆரும்
தண்டுறை ஊரன் தேரெம்
முன்கடை நிற்க எனவேட் டேமே”

அஞ்சாவது பாட்டுலயும் தோழி சொல்றா, ”நீ அங்க அவங்க வீட்ல இருக்கச்சே என்தலைவி குடும்பம் நல்லா இருக்கணும்னு நெனச்சா; அதுக்காக பசி இல்லாம இருக்கணும்; நோய் இல்லாம இருக்கணும்னு நெனச்சா; பசியும், நோயும் இல்லாம இருந்தாத்தானே குடும்பம் நல்லா இருக்கும்”

நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து, ”ஒன் ஊரைத்தான் நெனச்சோம்; ஒன் ஊர்ல தண்ணியில இருக்கற நல்ல முதிர்ந்த மீனையெல்லாம் அங்க இருக்கற முதலை தின்னுடும்; அப்படிப்பட்ட ஊரைச் சேர்ந்த ஒன்னோட தேர் எங்க ஊட்டு முன்னாலதான் நிக்கணும்; வேற பொம்பளங்க ஊட்டு முன்னால நிக்கக் கூடாதுன்னு நெனச்சோம்”

முதிர்ந்த மீனத் தின்ற முதலன்னு தோழி சொல்றது அவனைத்தான். இவளப் பாக்காம அங்க போறயேன்னு மறைச்சு
சொல்றா.

=

வேட்கைப்பத்து—6

”வாழி ஆதன் வாழி அவினி
வேந்துபகை தணிக ஆண்டுபல நந்துக
எனவேட் டோளே யாயே யாமே
மலர்ந்த பொய்கை முகைந்த தாமரைத்
தண்டுரை ஊரன் வரைக
எந்தையும் கொடுக்க எனவேட் டேமே”

ஆறாவது பாட்லயும் தோழி பேசறா, “ நீ அங்க அவ ஊட்ல இருக்கச்ச என் தலைவி என்ன நெனச்சா தெரியுமா? நாட்டை ஆளறவங்க நல்லா இருக்கணும்; அவங்களோட பகைவரெல்லாம் அழியணும்னு நெனச்சா; ஏன்தெரியுமா?

பகைவருங்க இருந்து போர் வந்தா நீ சண்டைக்குப் போய்விடுவேல்ல; அதாலதான் பகை ஒழியணும்னு நெனச்சா; சரி, போனாலும் நீ திரும்பி வந்து பல்லாண்டு வாழணும்னு நெனச்சா.
நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்னா நெனச்சோம் தெரியுமா? ஊர்ல எல்லாருக்கும் பழக்கம் தெரிஞ்சு போச்சு; அதால தாமரைப் பூ இருக்கற குளங்கள் உள்ள ஊர்க்காரனான நீ சீக்கிரம் வந்து இவளப் பொண்ணு கேக்கணும்; இவங்க ரெண்டு பேரும் மொதல்லயே ஒருத்தரை ஒருத்தரு நெனச்சு நல்லா பழகிட்டாங்க; அதால இவங்க அப்பா தவறாம இவள அவனுக்கே கொடுக்கணும்”னு நெனச்சோம்”.
=

வேட்கைப்பத்து—7

”வாழி ஆதன் வாழி அவினி
அறநனி சிறக்க அல்லது கெடுக
எனவேட் டோளெ யாயே யாமே
உளைப்பூ மருதத் துக்கிளை குருகிருக்கும்
தண்டுறை ஊரன் தன்னூர்க்
கொண்டனன் செல்க எனவேட் டேமே”
இது ஏழாவது பாட்டு; தலைவன் நான் அவ ஊட்ல போயிருக்கச்ச நீங்க எல்லாரும் என்ன நெனச்சீங்கன்னு கேக்கறதுக்குப் பதில்தான் இதுவும்; தோழி சொல்றா, “ஒன்னை மொதமொத பாத்தபோதே என் தலைவி ஒன்னக் கல்யாணம் செஞ்சுக்கிட்டதாய் நெனச்சா; ஊட்ல அறம் நல்லா நடக்கணும். அதால பாவம் கெடணும்” னுநெனச்சா. ஏன்னா அவ இல்லறமே பெரிசுன்னு நெனக்கறவ;.

நாங்க எல்லாரும் என்ன நெனச்சோம் தெரியுமா? உளைப்பூக்களெல்லாம் இருக்கற மருதமரத்துல குருகு வந்து சொந்தங்களோட தங்கியிருக்குமாம். அப்படிப்பட்ட தண்ணித்துறை இருக்கற ஊர்க்காரனான நீ சீக்கிரம் வந்து இவளைக் கொண்டு போவணும்னு நெனச்சோம்”

இந்தப்பாட்டுல வர்ற உளைப்பூன்றதுக்கு உரை எழுதறங்க “மேலே துய்யினிடைய பூ”ன்னுன் எழுதிட்டுப் போயிட்டாங்க; துய்னா என்னான்னு அகராதியில பாத்தேன். அதாவது ’நூற்கும் பஞ்சின் தொடர் நுனி’ ன்னு போட்டிருக்குது. அது வேற ஒண்ணும் இல்ல; ரொம்ப மெலீசா இருக்கற மகரந்தத்தாளுதான் அது. மருதமரம் குருகு தங்கறதுக்கு ஆதாரம். அதேபோல இவள் உயிர் வாழறதுக்கு நீதான் ஆதாரம்னு மறைவா தோழி சொல்றா.

வேட்கைப்பத்து—8

”வாழி ஆதன் வாழி அவினி
அரசுமுறை செய்க களவில் லாகுக
எனவேட் டோளே யாயே யாமே
அலங்குசினை மாஅத் தணிமயி லிருக்கும்
பூக்கஞ லூரன் சூளிவண்
வாய்ப்ப தாக எனவேட் டேமே

இந்தப்பாட்டும் தலைவன்கிட்ட தோழி சொல்றதுதான். ”நான் அங்க போயிருந்தபோது நீங்க என்ன நெனச்சீங்க” ன்னு அவன் கேட்டதுக்கு பதிலா தோழி பேசறா; “என் தலைவி வீட்டோட ஒழுக்கமா இருக்கறவ; குடும்பம் நல்லா நடக்கணும்; அதுக்கு நாட்டை ஆளறவங்க நல்லா இருக்கணும்; நாட்ல களவு போன்ற குற்றங்கள் இல்லாம இருக்கணும்”னுதான் அவ எப்பவும் நெனச்சா”

நாங்க என்ன நெனச்சோம் தெரியுமா? ”ஒன் ஊர்ல சோலையில இளந்தளிரெல்லாம் இருக்கற மாமரத்துல மயில் வந்து இருக்கும்; அப்படிப்பட்ட ஊரைச் சேர்ந்த நீ இவள அன்னிக்கு வந்து சந்திச்சபோது சொன்னியே அந்த உறுதி வார்த்தைய மறந்து போகாம இருக்கணும்”

ஏன் அப்படி சொல்றா? அவளுக்குச் சந்தேகம் இத்தினி நாளா காணலியே மறந்துட்டானான்னு.
=
வேட்கைப்பத்து—9

”வாழி ஆதன் வாழி அவினி
நன்று பெரிது சிறக்க தீதில் லாகுக
எனவேட் டோளே யாயே யாமே
கயலார் நாரை போர்விற் சேக்கும்
தண்டுறை ஊரன் கேண்மை
அம்பலா கற்க எனவேட் டேமே”

இந்த 9-ஆம் பாட்டு அருமையான பாட்டு;

தோழி சொல்றா, “நாரை ஒண்ணு நல்லா மீனையெல்லாம் தின்னுது; அப்புறம் போயி வைக்கப்போருல தங்குது. அப்படிப்பட்ட ஊரைச் சேர்ந்தவன்தான நீ; உன்னோட கொண்ட தொடர்பு நீ இன்னும் வராம இருந்தா கொஞ்சம் கொஞ்சமா வெளியில வந்துடும். எனவே நீ அப்படியெல்லாம் செய்யக்கூடாது”ன்னு நாங்க ரெண்டு பேரும் நெனச்சோம்.

ஆனா இவ என்னா நெனச்சா தெரியுமா? உன்னைப் பாத்தபோதே ஒன்னோட கல்யாணம் ஆனதுன்னு நெனச்சா; அதாலே குடும்பத்துல நல்லது நடக்கட்டும்; கெடுதல் வராம இருக்கட்டும்னு நெனச்சா”

ஒங்க ஊர் நாரையைப்போல தங்கிடாதேன்றது மறைபொருளாம்; இந்த நாரை வைக்கபோர்ல தங்குறது, “கயலார் நாரை போர்விற் சேர்க்கும்”னு புறநானூறுலயும் [24] வருது; அதே மாதிரி புறநானூறுல ‘பொய்கை நாரை போர்விற் சேர்க்கும் நெய்தலங் கழனி”ன்னு இன்னொரு பாட்டுலயும் [209] இருக்குது

=
வேட்கைப்பத்து—10

”வாழி ஆதன் வாழி அவினி
மாரி வாய்க்க வளநனி சிறக்க
எனவேட் டோளே யாயே யாமே
பூத்த மாஅத்துப் புலாலஞ் சிறுமீன்
தண்டுறை ஊரன் தன்னொடு
கொண்டன

இதுவும் தோழி சொல்றதுதான். போனபாட்டுல சொன்னதுதான்; “இவ ஒன்னைப்பாத்த அன்னிக்கே கல்யாணம் நடந்துட்டுதுன்னு நெனச்சுட்டா; குடும்பம் நல்லா நடக்க, நாட்டை ஆளற ஆதனும் அவினியும் நல்லா இருக்கணும்; மழை நல்லா தப்பாம பேஞ்சாத்தான எல்லா வளமும் கிடைக்கும்; அதால மழை பெய்யணும்; செல்வம் சேரணும்னு நெனச்சா;

ரெண்டு பேரும் என்னா நெனச்சோம் திரியுமா? ஒன் ஊர்ல குளிர்ச்சியான சோலை உண்டு; அங்க கொளம் உண்டு; அதுல நாத்தம் கொடுக்கற மீனுங்க நெறய இருக்கும்; அந்த சோலையில வாசனை கொடுக்கற பூ பூக்கற மாமரங்கள் நெறய இருக்கு: அதேபோல ஒங்கிட்ட ரெண்டு கொணமும் இருக்கு; இவ ஒன்னையே நெனச்சிட்டிருக்கா; எல்லாருக்கும் தெரிஞ்சிடும்; அதால நீ இவள கட்டிக்கறதா இருந்தா கட்டிக்க; இல்ல இப்படியே இருந்துடலாம்னு நெனச்சா வந்து ஒன்னோட கூட்டிக்கிட்டுபோயிடு”

•••

விருட்சம் நினைவுகள் 10 – அழகியசிங்கர்

சிறு பத்திரிகையோடு தொலைந்து போன எழுத்தாளர்களைப் பற்றி குறிப்பிட்டிருந்தேன். ஆனால் சிறு பத்திரிகையுடன் தொலைந்து போகாத எழுத்தாளர்களும் உண்டு.

அதேபோல் சிறுபத்திரிகையில் எழுதியவர்கள் பெரிய பத்திரிகைகக்கு மட்டும் மாறுபவர்களாகப் பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள்.

சுஜாதா, பாலகுமாரன் சிறுபத்திரிகையில் எழுதியவர்கள். சுஜாதாவின் ஒரு கதை தனிமை கொண்டு முதன் முதலில் நகுலன் தயாரித்த குருஷேத்ரம் இலக்கியத் தொகுப்பில் வெளிவந்தது.

க.நா.சுவுடன் ஒரு கட்டுரை வாங்கிப் போட வேண்டுமென்று நினைத்து மைலாப்பூரில் உள்ள க நா சு வீட்டிற்குச் சென்று பார்த்தேன். அவர் உடனே எழுதி வைத்த ஒரு கட்டுரையைக் கொடுத்தார்.

அந்தக் கட்டுரையின் பெயர் புதுக்கவிதையின் எல்லைகள் என்று. விருட்சத்திற்காக க நா சு கொடுத்த அக் கட்டுரையை இப்போது எடுத்துப் படிக்கிறேன். அதை ஏன் பிரசுரம் செய்யாமல் விட்டுவிட்டேன் என்று இப்போது யோசித்துப் பார்க்கிறேன். இரண்டாவது இதழிலிருந்து கோபிகிருஷ்ணன் விலகினாலும், மற்றவர்களுடன் சேர்ந்து படைப்புகளைத் தேர்ந்தெடுத்தேன். அதில் க நா சு கட்டுரையையே மற்றவர்கள் வேண்டாம் என்றார்கள்.

ஞானக்கூத்தனுக்கு அக் கட்டுரை விருட்சத்தில் பிரசுரம் ஆகவில்லை என்பதில் வருத்தம். அதன்பின் அவர் அக் கட்டுரையை ழவின் கடைகி இதழான 28 ல் பிரசுரம் செய்தார். இது சிறு பத்திரிகையில் பெரிய பிரச்சினை. பலர் சேர்ந்து முடிவெடுக்கும்போது பல நல்ல படைப்புகளை நாம் விட்டுவிட வேண்டும்.

ஒன்றிரண்டு இதழ்களுக்குப் பிறகு விருட்சம் என் பொறுப்பில் வரத் துவங்கியது. இன்று தனி மனிதனாக நவீன விருட்சம் இதழைக் கொண்டு வந்துகொண்டிருக்கிறேன்.

அக் கட்டுரையில், ‘புதுக்கவிதை என்று சொல்லும்போது ஷண்முகசுப்பையால, நகுலன், ஞானக்கூத்தன், இவர்களோடு மயன் (நான்) ஏற்படுத்தித் தந்த ஒரு மரபு சோதனைக்கட்டத்தைத் தாண்டி கவிதை என்கிற கட்டத்தை எட்டி விட்டது,’ என்கிறார்.

இதை அவர் சொல்வதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என்ற ரீதியில் நாங்கள் யோசித்து இக் கட்டுரையைப் போடக்கூடாது என்று முடிவெடுத்தோம்.

இதை ஞானக்கூத்தனிடம் தெரிவித்தபோது, அவருக்கு என் மீது கோபம். அவர் கட்டுரையில் அவருடைய கருத்தைத் தெரிவிக்கிறார். அதைப் பிரசுரம் செய்யாமல் விடுவது தவறு,ý உண்மையில் இந்தத் தவற்றை நான் செய்திதக்கக் கூடாது. க.நா.சு எவ்வளவு பெரிய எழுத்தாளர். . ஆனால் என் தவற்றை ழ பத்திரிகையில் பிரசுரம் செய்ததிலிருந்து சரி செய்து விட்டார்.

ஒரு துயரமான நிகழ்ச்சி நடக்காமலில்லை. க நா சு அந்தத் தருணத்தில் தில்லியில் இறந்து போனதுதான் அந்தத் துயரமான நிகழ்ச்சி. இந்தக் கட்டுரையைப் பிரசுரம் செய்யாமல் போய்விட்டேனே என்ற வருத்தத்துடன் க நா சு ஓவியத்தை வெளியிட்டு 3வது இதழ் விருட்சம் கொண்டு வந்தேன்.

க நா சு தன் கட்டுரையில் ஒரு இடத்தில், ‘பிச்சமூர்த்தி, கண்ணதாஸன் இருவரும் விஷய எல்லைகளைப் பழைய அளவில் ஏற்றக்கொண்டதாலேயே கவிதை என்று செய்தாலும் அவர்களுக்குக் கவிதை கை வரவில்லை என்று சொல்ல வேண்டும்,’ என்று குறிப்பிடுகிறார்.

என்றெல்லாம் க நா சு எழுதியிருப்பதால், அக் கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்று சொன்னாலும், க நா சு என்ற மூத்த எழுத்தாளர் கொடுத்த ஒரு கட்டுரையைப் பிரசுரம் செய்யாமல் விட்டது தவறு என்று இப்போதும் உணருகிறேன். அதை நிவர்த்திச் செய்யும் விதமாக ழ பத்திரிகையில் வெளிவந்ததை மீள் பிரசுரமாக விருட்சம் இதழில் வெளிவந்ததை இப்போது திரும்பவும் பிரசுரம் செய்யலாமென்று நினைக்கிறேன். இதோ 107வது இதழ் விருட்சத்தில் பிரசுரம் செய்ய உள்ளேன்.

(இன்னும் வரும்)

விருட்சம் நினைவுகள் = 9 / அழகியசிங்கர்

சிறு பத்திரிகை எப்படி ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு வந்து நின்று விடுகிறதோ அதேபோல் சிறுபத்திரிகையில் எழுதும் எழுத்தாளர்களும் தொலைந்து போய்விடுகிறார்கள்.

விதிவிலக்காக ஒரு சில எழுத்தாளர்கள் மட்டும் அதிலிருந்து தப்பிப்பார்கள்.

கசடதபற இதழில் எழுதி எத்தனையோ எழுத்தாளர்கள் தொடர்ந்து எழுதினார்களா என்ன ஆனார்கள் என்பதெல்லாம் தெரியவில்லை. பத்திரிகையில் எழுதுவதோடு சரி அதன்பின் அவருடைய படைப்புகள் புத்தகமாக வர வாய்ப்பில்லாமல் போய்விடும்.

ஏன் இப்படி நடக்கிறது? எழுதுபவர்களுக்கு அவர்களுடைய படைப்புகள் வெளிவந்த பிறகு அவர்களுடைய படைப்பு மனநிலை வேறு திக்கை நோக்கிப் போய்விடுகிறதா? அதனால் அவர்கள் தொடர்ந்து எழுதாமல் போய்விடுகிறார்களா?

இப்படி எத்தனையோ படைப்பாளிகளை நாம் தவற விட்டிருக்கிறோம். இதற்குக் காரணம் என்ன?

பொதுவாக சிறுபத்திரிகைகள் நடத்துபவர்கள் ஒரு வங்கியிலோ அரசாங்கத்திலேயோ பணி புரிந்து கொண்டிருப்பார்கள். அவர்களுடைய உபரி நேரத்தில்தான் கை காசு செலவழித்து பத்திரிகைக் கொண்டு வருவார்கள். இப்படிப் பத்திரிகைகளைக் கொண்டு வருபவர்கள் தங்கள் கைவசம் எந்தப் பத்திரிகையையும் வைத்துக்கொள்வதில்லை. அந்தப் பத்திரிகைகள் காலப்போக்கில் காணாமல் போய்விடும். இதைத் தவிர்க்க முடியாது. மேலும் அவர்களுடைய பத்திரிகைகளை இலவசமாகவே எல்லோருக்கும் அனுப்புவார்கள். சிறு பத்திரிகைகளைப் பொருட்படுத்தாத எத்தனையோ பேர்களுக்கு அந்தப் பத்திரிகைகள் போய்ச் சேரும்.

கசடதபற 24வது இதழில் (செப்டம்பர் 1972) வெளிவந்த ஜரதுஷ்டன் என்பவரின் கவிதையை இங்கே அளிக்க விரும்புகிறேன்.

பரிணாமம் என்பது கவிதையின் பெயர்.

நாலு வயதில்
நர்ஸரிக் கவிதையும்
பின்னர் சில நாள்
ஆத்திச் சூடியும்
கோனார் நோட்ஸில்
கம்பனும் கபிலனும்
படித்துக் குழம்பி
பாட்டு எழுத
பேப்பரும் பென்ஸிலும்
எடுத்த வேளை
குட்டிச் சுவராய்
போவாய் நீயென
பெற்றதுகளிடம்
பாட்டுக் கேட்டேன்.

யார் இந்த ஜரதுஷ்டரன். அவர் இப்போது எங்கே இருக்கிறார்? இருக்கிறாரா இல்லையா? இது மாதிரியான கேள்விகளுக்கெல்லாம் பதிலில்லை. இவருடைய கவிதைகள் இதுமாதியான கசடதபற இதழக்களிலேயே நின்று போய் விட்டது.

பொன் விஜயன் என்ற ஒரு நண்பர். அவர் ஆரம்பித்த பத்திரிகையின் பெயர் புதிய நம்பிக்கை. எப்படியோ கொண்டு வந்து விடுவார். இப்போது அவரும் இல்லை. அந்தப் பத்திரிகையும் இல்லை.

வீட்டிலேயே அச்சுக் கோர்க்கும் இயந்திரங்களை வைத்துக்கொண்டு பத்திரிகைக் கொண்டு வருவார். உண்மையில் அச்சுக் கோர்ப்பவர்களுக்கு வாரம் வாரம் கூலி கொடுக்கச் சிரமப்படுவார். பொருளாதாரத்தில் அச்சுக் கோர்ப்பவர்கள் பொன்விஜயனைவிட பரவாயில்லை ரகத்தில் இருப்பார்கள்.

சரி ஒரு சிறுபத்திரிகை நடத்த ஒருவருக்கு என்ன தகுதி இருக்க வேண்டும். யார் சிறுபத்திரிகை நடத்துவது? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் ஒரே பதில். எந்தத் தகுதியும் இருக்க வேண்டாம் என்பதுதான். யாருக்குத் திறமை இருக்கிறதோ அவர்கள் பத்திரிகைகள் நடத்தலாம். ஆனால் எல்லாச் சிறுபத்திரிகைகளுக்கும் வாசகர்கள் வேண்டும். வாசகர்கள் இல்லாவிட்டால் ஒன்றுமில்லை.

(இன்னும் வரும்)

விருட்சம் நினைவுகள் 7 – அழகியசிங்கர்

1988 ஆம் ஆண்டு ஜøலை மாதம்தான் நான் விருட்சம் முதல் இதழைக்கொண்டு வந்தேன். இதோ 30 ஆண்டுகள் விருட்சம் ஆரம்பத்து முடிந்து விட்டன. இதை ஆரம்பிக்கும்போது என்னிடம் காணப்பட்ட பரபரப்பு இப்போது இல்லை.

இதில் எழுதிய பலர் காணாமல் போய்விட்டார்கள். ஞானக்கூத்தன் முதல் இதழிலிருந்து கவிதை எழுதியவர். என்னிடம் ஒரு முறை அவர் சொன்னது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. üஉங்கக் கையில் தங்கக் காப்பு போடவேண்டும்,ý என்று.

1988ஆம் ஆண்டு இருந்ததுபோல் இன்றைய நிலை இல்லை. இன்று ஒரு சிறுபத்திரிகை தேவையில்லை. ஏன் எந்தப் பத்திரிகையும் தேவை இல்லை. எழுதுபவர்கள் எல்லோரும் நேரிடையாக தன் எழுத்தை முகநூலில் பதிவு செய்கிறார்கள். தோன்றும்போதெல்லாம் முகநூலில் கவிதைகள் எழுதுகிறார்கள். அவர்கள் எழுதுவதுதான் கவிதை. யாரும் அது குறித்து விமர்சனம் செய்ய முடியாது. முன்பு அப்படி இல்லை. வரும் கவிதைகளைப் படித்து அவை பிரசுரம் செய்யத் தகுதியானதுதானா என்ற தேர்வு இருக்கும்.

புதிய நம்பிக்கை ஆசிரியர் பொன்விஜயன் அவர் பத்திரிகையில் விருட்சம் பற்றி எழுதியது இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது. கறாரான பத்திரிகை என்று. எனக்கு ஆச்சரியம். ஏன் அப்படி எழுதினார்?

பத்திரிகை நடத்திக்கொண்டிருக்கும் எனக்கு அப்படித் தோன்றவில்லை. ஆனால் அவருக்குத் தோன்றியது. ஏன்?

பெரிய பத்திரிகைகளில் கவிதைகள் வராத தருணம் அது. சிறுபத்திரிகைகளில்தான் வரும். அதனால் சிறுபத்திரிகைகளுக்கு ஒரு முக்கியத்துவம் இருந்தது. ஆனால் இப்போது இல்லை. ஏன்? அப்படி சொல்வது சரியா? இந்தக் கருத்தை என்னால் நம்ப முடியவில்லை.

என் மனதில் ஒரு சிறுபத்திரிகை ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணம் பல காலமாய் குடிக்கொண்டிருந்தது. இதற்கு சிறுபத்திரிகைகளை நடத்தும் நண்பர்கள்தான் காரணம். அவர்களுடன் ஏற்பட்ட பழக்கம்தான் காரணம்.

ழ பத்திரிகையை ஆத்மாநாமிற்குப் பிறகு தொடர முடியாமல் நிறுத்தியே விட்டார் அதன் இணை ஆசிரியர். நினைத்தால் அவரால் தொடர்ந்து கொண்டு வர முடியும். ஏன் அவர் ஆர்வம் காட்டவில்லை என்பதற்கெல்லாம் காரணம் அறிய முடியவில்லை.

நாங்கள் ஒரு கூட்டம் போட்டோம். நாங்கள் என்றால்? கோபிகிருஷ்ணன், ரா ஸ்ரீனிவாஸன், கண்ணன் எம், இளம்பரிதி போன்ற நாங்கள்.

கூட்டம் நடந்த இடம் மெரீனா கடற்கரை கண்ணகி சிலை அருகில். பத்திரிகைக்கு என்ன பெயர் வைப்பதுபற்றி பேசினோம். ஒரு பத்து பெயர்களைக் குறிப்பிட்டு அதை ஒரு டைரியில் எழுதினேன்.

அந்தப் பெயர்களில் ஒன்றுதான் விருட்சம். ஆரம்பத்தில் நான் ஆசிரியரானாகவும், கோபிகிருஷ்ணன் துணை ஆசிரியராகவும் இருப்பதற்கு ஒப்புக்கொண்டோம். பின் படைப்புகளை இந்த ஐவர் குழு தீர்மானிப்பதாக திட்டம் தீட்டினோம்.

இப்படித்தான் விருட்சம் ஆரம்பித்தது. அதற்கென எல்லா செலவையும் நான் ஏற்றுக்கொண்டேன். முதல் இதழ் 500 பிரதிகள் அச்சடித்தேன். பத்திரிகையை அனுப்புவதிலிருந்து எல்லாப் பிரச்சினைகளும் அதில் ஏற்பட்டது.

பல படைப்பாளிடமிருந்து படைப்புகள் கேட்டோம். படைப்புகளும் வந்தன. ஆனால் எங்களுக்குள் கருத்து வேறுபாடு. மேலும் படைப்புகள் எல்லாம் ஒரு படைப்பாளியை இன்னொரு படைப்பாளி தாக்கும் படைப்புகளாக இருந்தன.

படைப்பாளிக்ள பலர் ஒருவரை ஒருவர் திட்டுவதற்கு கவிதை முலம் எழுதத் தொடங்கி விட்டார்கள்.

கோபிகிருஷ்ணனால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர் எழுதினார் : நான் துணை ஆசிரியர் பதவியிலிந்து விலகிக்கொள்வதாக. எனக்கோ திகைப்பு. அடுத்த இதழ் கொண்டு வர வேண்டாமென்று நினைத்தேன்.

(இன்னும் வரும்)

விருட்சம் நினைவுகள் 6 / அழகியசிங்கர்

பொதுவாக ஒரு சிறுபத்திரிகை 3 வருடங்கள் தொடர்ந்து வருவது ரொம்ப கடினம். அதுவும் ஒரு குழுவாக நடத்தப்பட்டால் 3 வருடம் தாக்குப்பிடிப்பது பெரிய விஷயம். குழுவில் உள்ள பலுக்குள் கருத்து வேற்றுமை தோன்றி பத்திரிகை நின்று விடும்.
தற்செயலாக எனக்கு ஒரு கசடதபறவின் கடைசி இதழ் கிடைத்தது. ஏன் அந்தப் பத்திரிகையைத் தொடர்ந்து கொண்டு வர முடியவில்லை என்று காரணம் எழுதப்பட்டிருந்தது. அதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். ஜøன் – ஜøலை 1973 கசடதபற இதழில் வெளிவந்த தலையங்கம்.

“மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு அக்டோபர் மாதத்தில் தொடங்கிய கசடதபற இந்த அறிவிப்புடன் தனது வெளியீட்டை நிறுத்திக் கொள்கிறது. இலக்கியச் சிற்றேடுகளின் புறப்பாடும், நிப்பாடும் ஆன வாழ்க்கை அதை இயக்குபவர்களின் உற்சாகத் தைப் பொறுத்தது என்று இந்தியச் சிற்றேடுகளைப் பற்றிக் கூறப்படுவதுண்டு. இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கருத்தைக் கொண்டு வெளியீட்டை நிறுத் திக் கொள்கிறது கசடதப ற. இலக்கியம் என்பதை ஒரு கலைஞனின் அநுபவத் தைக் கொண்டு பார்த்தால் அதற்குத் தொடர்ச்சிதான் குறிப்பே தவிர தொலைதல் இல்லை என்பது தெளிவா கிறது. இலக்கிய முயற்சிகளும் அப்படித்தான். கசடதபறவின் இதழ்கள் வெளிவந்த சமயத்தில் அதனோடு தொடர்பு கொண்டிருந்த அத்தனைப் பேர் களுக்கும் கசடதபற நன்றி தெரிவிக்கிறது.”
கசடதபற பத்தரிகைக்குப் பின் வந்த பிரக்ஞை இதழும் நின்றுவிட்டது. 3 ஆண்டுகள் என்றுதான் நினைக்கிறேன். இப்படி சிறு பத்திரிகை வருவதும் நிற்பதும் வாடிக்கை.
சமிபத்தில் தமிழ் இந்து 14.07.2018 அன்று வந்திருந்த பத்திரிகையின் தலையங்கத்தில் üசிறுபத்திரிகைகள் களம் மாற வேண்டும்,ý என்ற பெயரில் சிறு பத்திரிகையைப் பற்றிய குறிப்பு வந்தது.
இதில் தமிழ் சிறுபத்திரிகை தன் வாசக பலத்தை இழந்து கொண்டிருப்பதாக தமிழ் இந்து புலம்புகிறது. எப்போது சிறுபத்திரிகைக்கு வாசக பலம் இருந்திருக்கிறது. கசடதபற பிரக்ஞை பத்திரிகைகள் வந்த காலத்தில் கூட ஆயிரம் பேர்கள் அந்தப் பத்திரிகைகளைப் படித்திருப்பார்களா என்பது சந்தேகம்.
எனக்குத் தெரிந்து ழ பத்தரிகையை 500 பிரதிகள்தான் அச்சடிப்பது வழக்கம். ஏன் இந்த மாதத்தலிருந்து 30 ஆண்டை நிறைவு செய்யும் விருட்சம் இதழ் 700 பிரதிகள் மேல் தாண்டியது இல்லை. ஒவ்வொரு ஆண்டும் லைப்பரரி ஆர்டர் வாங்குவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். ஒவ்வொரு ஆண்டும் வாசகர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். ஏன் குறைந்துகொண்டே போவார்கள். இதையெல்லாம் உணர்ந்துதான் சிறுபத்தரிகையைக் கொண்டு வர வேண்டி உள்ளது.
சிறு பத்திரிகையைப் பயன்படுத்திக்கொண்டு எழுதும் எழுத்தாளர்கள் மிக மிகக் குறைவு. பெரிய பத்திரிகைகளில் சிறு பத்திரிகை எழுத்தாளர்கள் புகுந்துகொண்ட பின் தீவிர எழுத்தாளர்கள் என்பதே இல்லாமல் பத்தரிகை உலகம் ஜனநாயகப்படுத்தப்பட்டு விட்டது.
ஐராவதம் என்ற என் நண்பர் சொல்வார் : ‘வேற வழி இல்லாதவர்கள்தான் சிறுபத்திரிகையில் எழுதுவார்கள்’ என்று. அது ஓரளவு உண்மை. நான் 1988ஆம் ஆண்டு விருட்சம் ஆரம்பித்தேன். அதன் தொடர்ச்சியாக 30 ஆண்டுகளில் பெரிய வித்தியாசத்தை நான் உணரவே இல்லை.
எப்போதும் போல சிறுபத்திரிகையைப் படிக்காதவர்கள் அப்போதும் உண்டு. இப்போதும் உண்டு. சரி, சிறுபத்திரிகை வர வேண்டுமா? வேண்டாமா? கட்டாயம் வேண்டும்.

•••

ஆத்மநாம் தற்கொலை ( விருட்சம் நினைவுகள் 5 ) – அழகியசிங்கர்

ஆத்மநாம் தற்கொலை அவருடைய நெருங்கிய நண்பர்களிடையே பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. கிட்டத்தட்ட ழ பத்திரிகையைத் திரும்பவும் கொண்டு வரும் மனநிலையில் அவர்கள் யாரும் அப்போது இல்லை.

பின் கொஞ்ச மாதங்கள் கழித்து ஆத்மாநாம் என்ற முதன்மை ஆசிரியர் இல்லாமல் ழ பத்திரிகை தொடர்ந்து வருவதாக ஓர் அறிவிப்புடன் திரும்பவும் ழ பத்திரிகை வெளிவந்தது. இந்த முறை ஞானக்கூத்தன்தான் பத்திரிகையின் ஆசிரியர். மலர்த்தும்பி என்ற பத்திரிகைக்குப் பின், ஆத்மாநாமின் ழ பத்திரிகைக்கும் ஒரு சிறிய பொறுப்பை ஏற்கும்படி இருந்தது.

அப் பத்திரிகையைக் கொண்டுவர உதவும்படி நண்பர்கள் கேட்டுக்கொண்டார்கள். நான் அப்போது வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள வங்கிக் கிளையில் பணிபுரிந்து கொண்டிருந்தேன். ழவின் பெயரில் இல்லாமல், தனியாக ஒரு கணக்கு ஆரம்பித்து, ழ பத்திரிகை வர ஒவ்வொருவரும் தரும் பணத்தைச் சேமித்து வைத்தேன்.

ழ என்ற பத்திரிகையின் 25வது இதழ் நவம்பர் 1986ஆம் ஆண்டு வெளிவந்தது. அந்த இதழில் வெளிவந்த தலையங்கத்தை உங்களுக்கு அளிக்க ல்ரும்புகிறேன்.

“மனித சரித்திரத்தில் எந்த ஒரு வெளிப்பாட்டுச் சாதனமும் கலையுருவமும் சராசரி மனித வாழ்வின் எல்லைகளை மீறி ஒரு ஆக்கப் பூர்வமான மனத்தின் ஆழ்ந்த உள் அவசியத்தின் காரணமாகப் பிறந்தாலும், காலப் போக்கில் பொது மக்களின் கைப்புழக்கத்திற்குப் போய்ச் சேர்ந்தபிறகு சராசரி வாழ்வின் தளத்திற்கு வீழ்ச்சியுறுவது தவிர்க்க முடியாதது. வானொலி, தொலைக்காட்சி, சினிமா, நாடகம் போன்றே கவிதையும் இன்று உன்னதமிழந்த நிலையில் கீழ்த்தளப் பிரக்ஞைக்கு இன்னுமொரு வடிகாலாய்ப் போயிருக்கிறது. அதனால் நல்ல கவிதைகள் எழுதப்படவில்லை, வெளிவருவதில்லை என்பதல்ல உண்மை. எப்போதும் போலவே சிறுபத்திரிகைகளை நம்பியே கவிதை இப்போதும் இருக்கிறது. நல்ல தமிழ்க்கவிதையை அதற்குரிய முக்கியத்துவத்துடன் வெளியிடும் சிறு பத்திரிகை இன்று இல்லை என்று சொல்லிவிடலாம்.

மே 1978 தொடங்கி ஜனவரி 1983 வரையில் ‘ழ’ 24 இதழ்கள் வெளிவந்திருக்கின்றன. மொத்தம் 63 கவிஞர்களின் பல கவிதைகள் இந்த இதழ்களில் வெளியாகியிருக்கின்றன. இதில் முப்பதுக்கும் மேற்பட்ட கவஞர்கள் தம் கவிதைகளை முதன் முறையாக üழý இதழில் தான் பிரசுரித்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது. இது தவிர 16 கட்டுரைகளும் 15க்கும் மேற்பட்டவர்கள் மொழி பெயர்த்த பல அயல் மொழிக் கவிதைகளும் வெளிவந்திருக்கின்றன.”

மேலே ழவின் ஒரு பகுதி தலையங்கத்தை வெளியிட்டுள்ளேன். அந்த இதழில் ஆத்மாநாமை நினைவு படுத்துகிற மாதரி ஆர் ராஜகோபாலன் கவிதை எழுதி உள்ளார்.

6 ஜøலை 1984 என்ற தலைப்பில் ஆர் ராஜகோபாலன் ஒரு கவிதை எழுதி உள்ளார். ஆத்மாநாம் தற்கொலை செய்துகொண்ட 6 ஜøலை 1984ஆம் ஆண்டு. அக் கவிதையை இங்கு வாசிக்க அளிக்கிறேன்.

1

ஈரமான பச்சைப் புல்வெளியில்
மனம் சிந்தும் பெரியதான மலர்களும்
உடல்சிலிர்த்துப் பறந்து செல்லும் பறவைக் கூட்டமும்
இலேசாய் வெம்மை காட்டும் சிவப்புச் சூரியனுமு;
ஆங்காங்கே பெருகி ஓடும் தண்ணீரும்
சோம்பலுடனே கடல்செல்லும் எருமை ஒன்றும்
என்னை ஒருகணம் ஈர்த்துவிட்டன
சட்டென நினைவு செய்தியதாய் மனதில் படிய
பெருமழை பெய்து ஓய்ந்து விட்டதென்று

2

வாழ்க்கையை எதிர்கொள்ள
கடுமை ரொம்பவும் தேவையாயிருக்கிறது
மனதை சுருக்கிக் கொண்டு
காற்றை அதிகம் வெளியேவிடாமல்

அந்தத் தேக்கு போலவேதான்
வடுக்களைத் தாங்கிக்கொண்டு
கதவாக அப்புறம் படிகளாக
முதலில் மரமாகப் பின் வாசலாக
ஆனால் மலருக்கு மென்மை அதிகம்
இன்றே இற்றுப்போய் விழுந்து விடுகின்றது
இருந்தும் அதற்கென்று ஓர்
அனாதியான அழகும்
அற்புதமான வாசனையும்

3.
இந்த உலகத்தோடு ஈடுகொடுக்க முடியவில்லை
முழங்கால்களைக் கட்டிக்கொண்டு
கைகளை கன்னத்தில் கோர்த்து
ஜன்னல் வழியே பரந்த
வானத்தை வெறித்தபோதும்

உலகம் சலிப்படையச் செய்கிறது
வெளிச்சம் தரும் குழல்விளக்கும்
விளக்கை நாடிச்செல்லும் விட்டில் பூச்சியும்
பூச்சிக்காய் காத்திருக்கும் பெரியபல்லியும்

உலகம் வேண்டவே வேண்டாம்
இன்று செருப்பில் விரல் நுழைக்கும் சிறு குழந்தை
நாளைத் தட்டுத்தடுமாறி கோல் கொள்ளும் கிழவன்

உலகத்தை நான் தள்ளிவிடுகிறேன்
கூட்டம் கூட்டமாய் வண்ணவண்ண மலர்கள்
புயலில் அடியோடு சாய்ந்து கிடக்கும் வாழைத் தோப்புகள்

எப்படியும் காலை புலரும்போது
அமைதியாய் பறந்து செல்லம் கருடன்
ஆர்ப்பரிக்கும் கடல்
ஒளிசிந்தும் நட்சத்திரம்

நான் ஒரு கருடனாக
நான் ஒரு கடலாக
நான் ஒரு நட்சத்திரமாக

அந்த இதழில் ஆர் ராஜகோபலன் கவிதை உருக்கமாக இருந்தது. ஆத்மாநாம் நினைவாகத்தான் அந்தக் கவிதை எழுதப்பட்டிருந்தது. அந்த இதழ் ழ பத்திரிகை என் முயற்சியால் தி நகரில் உள்ள நரேந்திரா பிரிண்டர்ஸ் மூலம் அடிக்கப்பட்டது. அதை அச்சடித்துத் தந்தவர் என் வங்கிக் கிளையில் கணக்கு வைத்திருப்பவர்.

இந்த ‘ழ’ பத்திரிகை தொடர்ந்து வந்திருந்தால் நான் விருட்சம் என்ற பெயரில் உள்ள என் பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தி இருக்க மாட்டேன். விதி வேறு பக்கத்தில் நகரத் தொடங்கி விட்டது.

(இன்னும் வரும்)

விருட்சம் நினைவுகள் = 3 / அழகியசிங்கர்

அசோகமித்திரன்

ஒரு சிறுபத்திரிகை ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணம் சிறுபத்திரிகையுடன் தொடர்புள்ள ஒருவருக்குத்தான் தோன்றும். பல மூத்த எழுத்தாளர்களை நீங்கள் பேட்டி எடுங்கள். அவர்கள் என்ன சொல்வார்கள் என்று நினைக்கிறீர்கள்? நான் எழுத ஆரம்பிப்பதற்கு முன் கையெழுத்துப் பத்திரிகை நடத்தினேன் என்று கூறாமல் இருக்க மாட்டார்கள்.

முதலில் கையெழுத்துப் பத்திரிகை. பின் அச்சில் சிறுபத்திரிகை. எழுத ஆரம்பிக்கிற எல்லோருக்கும் பெரிய பத்திரிகைகளில் இடம் கிடைப்பதில்லை. பெரிய பத்திரிகையின் தரம் அந்த அளவிற்கு உயர்வானது என்பதற்காக அல்ல. உதாரணமாக அசோகமித்திரன் எழுத்து பெரும் பத்திரிகைகளும் பிரசுரம் செய்யக்கூடிய எழுத்துதான். ஆனால் அதே நகுலன் எழுத்தை எந்தப் பெரிய பத்திரிகை பிரசுரம் செய்யும். அசோகமித்திரன் படைப்புகள் பெரும் பத்திரிகைகளில் இடம் பெற்றன. அந்த அதிர்ஷ்டம் அவருக்கு இருந்தது.

1960 ஆண்டு வெளிவந்த üஎழுத்துý இதழில்தான் பிரமிள் படைப்பு வெளிவந்தது. 1939ல் பிறந்த பிரமிள் வயது 20தான் எழுத்து என்ற பத்திரிகையில் முதன் முறையாக எழுத ஆரம்பித்தது.

üசொல்லும் நடையும்ý என்ற பெயரில் எழுத்து பத்திரிகையில் வெளிவந்த பிரமிள் கட்டுரையை இப்போது படிக்கும்போது கொஞ்சம் ஆச்சரியமாக இருக்கிறது. இவ்வளவு திறமையான ஒரு கலைஞனுக்கு வாழ்க்கை என்ன கற்றுக்கொடுத்தது. வறுமையின் பாடத்தைத்தான்.

ஐஏஎஸ் தேர்வு எழுதுகிற ஒருவர் கூட இதுமாதிரியான ஒரு கட்டுரையை எழுத முடியாது. ஆனால் பிரமிள் தன் வாழ்நாள் முழுவதும் üஎழுத்துý என்ற சிறு பத்திரிகையில் எழுத ஆரம்பித்து வறுமையில் கஷ்டப்பட்டார். திறமை இருந்தும் சரியான வழியில் பயன்படுத்திக் கொள்ள முடியாத நிலை.

அதனால்தான் அசோகமித்திரனை யாராவது பார்க்கப் போனால், பார்க்க வந்தவரைப் பற்றி விஜாரிப்பார். கல்லூரியில் படிக்கும் மாணவனாக இருந்தால், எழுதவே வராதே என்று துரத்தி விடுவார். அவரும் எழுத ஆரம்பித்து வறுமையில் திண்டாடி கஷ்டப்பட்டவர்.

ஏன் இந்தச் சிறுபத்திரிகையில் எழுதுவது என்பது சிக்கலாகி விடுகிறது? என் கனவு பெரிய பத்திரிகை என்றாலும் அது நடக்காது என்று எனக்கு ஏனோ தெரிந்துவிட்டது. அதற்கு முன்னால் ஒரு வேலையில் சேர்ந்தபிறகுதான் இது மாதிரியான பத்திரிகை விவகாரத்திற்குள் நுழைவது என்று தீர்மானித்தேன்.

என்னுடன் எழுத வேண்டுமென்ற தாகத்துடன் இருந்தவர் என் பெரியப்பா பையன் சுவாமிநாதன் அவர்கள். அவரும் பெரிய முயற்சி செய்து பெரிய பத்திரிகையில் தன் படைப்புகளைச் சேர்ப்பது என்று முயற்சி செய்தார். ஓரளவு வெற்றியும் பெற்றார்.

எங்கள் இருவருக்கும் வேலைக் கிடைத்தது. அதன்பின்தான் நாங்கள் எழுதுவது பற்றி யோசித்தோம். முடிந்தால் பார்ப்பது இல்லாவிட்டால் விட்டுவிடுவது என்று கூட யோசித்தோம். அவர் ஆரம்பித்தில் தூதுவன் என்ற பெயரில் ஒரு கையெழுத்துப் பத்திரிகை ஆரம்பித்தார். எனக்கு அந்தப் பெயரே பிடிக்கவில்லை. ஏன் அந்தப் பெயரைத் தேர்ந்தெடுத்தார் என்பது தெரியவில்லை. அந்தப் பத்திரிகையில்தான் நான் எழுதிய கதை, கவிதை எல்லாம் தொடரந்து வந்தன. அதில் எழுதிய கதைகூட எனக்கு ஞாபகத்திற்கு வரவில்லை.

இந்தச் சந்தர்ப்பத்தில்தான் அவர் üமலர்த்தும்பிý என்ற பெயரில் ஒரு சிறுபத்திரிகை ஆரம்பித்தார். ஒரு சிறு பத்திரிகை ஆரம்பிக்க முன்னோடியாக சில பத்திரிகைகள் இருக்க வேண்டும். ஆனால் மலர்த்தும்பி என்ற பத்திரிகைக்கு முன்னோடி பெரிய பத்திரிகைகள். அந்த மாதிரியை என் சகோதரர் எடுத்துக்கொண்டார்.
அது எடுபடாது என்பது அவருக்குத் தெரியவில்லை.

உண்மையில் மலர்த்தும்பி பத்திரிகையை ஆரம்பித்து அவர் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளானார். என் திருமணத்தின்போது என் சகோதரரைச் சந்தித்த என் இலக்கிய நண்பர் ஒருவர், என் சகோதரரைக் கிண்டல் செய்ய ஆரம்பித்தார்.

üüநீங்கள் ஏன் மலர்த்தும்பி என்ற பத்திரிகை ஆரம்பித்தீர்கள்?ýýஎன்று சகோதரரை என் இலக்கிய நண்பர் கேள்வி கேட்க, ஏன் அதற்கு என்ன என்று என் சகோதரர் பதில் அளிக்க், இலக்கிய நண்பர் விடாமல், üüநீங்கள் பேசாமல் ஒரு 80 பக்கம் காலி நோட்டை வாங்கிக் கொடுத்து விடலாம், மலர்த் தும்பி பத்திரிகையைக் கொடுப்பதற்குப் பதிலாக,ýý என்றார். என் சகோதரருக்கு உண்மையில் புரியவில்லை.

üüஉண்மையில் உங்கள் பத்திரிகையைப் படிப்பதற்குப் பதில் காலி 80 பக்க நோட்புக்கைக் கொடுத்தால், எல்லோரும் அவரவர் விருப்பப்பட்டத்தை எழுதி வாசிப்பார்கள்,ýýஎன்றார் நண்பர். என் சகோதரர் தொடர்ந்து பேசவிரும்பவில்லை. இந்த நிகழ்ச்சியும் ஒரு காரணமாக இருக்கும் மலர்த்தும்பி என்ற பத்திரிகை நிற்க.

அந்த மலர்த்தும்பியில் வெளிவந்த என் கவிதையை இங்கு தர விரும்புகிறேன் :

பதவி

எத்தனையோ பேர்
எங்கோ போய்
வாழ்ந்து சரித்த
சரித்திரங்கள்
மயான பூமியில்
புதைக்கப் பட்டுள்ளன
பதவி ஆசை
இல்லாமல்…..
ஒரே வரிசையில்
புன்னகைக்கிறார்கள்.

சனங்கள் என்ற என் கதையும் மலர்ததும்பியில் பிரசுரமானது. மலர்த்தும்பி தொடர்ந்து வராமல் நின்று போனாலும், என் மனதில் ஒரு பத்திரிகை ஆரம்பிக்க வேண்டுமென்ற எண்ணம் என்னை அறியாமல் இருந்துகொண்டுதான் இருந்தது.

என் திருமணத்திற்குப் பிறகு மலர்த்தும்பி ஆசை நின்று போய்விட்டது. என் சகோதரர் தீவிரமாக பெரிய பத்திரிகைகளில் இடம் முயற்சி செய்து கொண்டிருந்தார். பெரிய பத்திரிகைகளல் இடம் பெற்றால்தான் புகழ் பெற முடியும் என்றெல்லாம் அவர் கற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டார்.

நானோ கணையாழி, தீபம் போன்ற பத்திரிகைகளைப் படிக்க ஆரம்பித்தேன். தீபத்தை விட நான் கணையாழிக்கு நான் அதிகம் முக்கியத்துவம் கொடுத்தேன். ஏன்எனில் மு மேத்தா போன்ற படைப்பாளிகள் படைப்புகள் கணையாழியில் இடம் பெற வில்லை. மேலும் கணையாழி அசோகமித்திரன் ஆசிரியப் பொறுப்பில் வெளிவந்து கொண்டிருந்தது

(இன்னும் வரும்)

விருட்சம் நினைவுகள் / அழகியசிங்கர்

கவிஞர் பிரமிள்

நான் விருட்சம் ஆரம்பித்தபோது இரண்டு பிரிவினர் இருந்தார்கள். ஒன்று ஞானக்கூத்தன் பிரவினர். இரண்டாவது பிரமிள் பிரிவினர். பிரமிள் குழுவினர் ஞானக்கூத்தன் குழுவினரைச் சாடுவார்கள். அதேபோல் ஞானக்கூத்தன் குழுவினர் பிரமிள் குழுவினரைச் சாடுவார்கள். நான் இரண்டு பக்கமும் இருந்தேன். விருட்சம் கொண்டு வரும்போது பிரமிள் பிரிவைச் சார்ந்தவர்களை இழுப்பது என்று முயற்சி செய்வேன். அதனால்தான் என் முதல் இதழில் தேவதேவன் (பிரமிள்), நாராணோ ஜெயராமன் (பிரமிள்) முதலியவர்களின் கவிதைகள் இடம் பெற்றிருக்கும்.
பிரமிளை முதல் இதழ் விருட்சத்தில் கவிதை எழுத வைக்க முடியவில்லை. ஆனால் அவரை நான் போய்ப் பார்த்தேன். தி நகரில் விஷ்ணு நாகராஜன் அலுவலகத்தில் அவர் இருந்தார்.
“பத்திரிகை கொண்டு வருகிறேன்,” என்றேன்.
“ஏன் கொண்டு வருகிறீர்கள்? சும்மா இரும்..”
“இல்லை. முடிவு பண்ணியாச்சு. முதல் இதழில் உங்கள் கவிதை ஒன்றும் இடம் பெற வேண்டும்.” முதிலில் பிரமிள கொஞ்டசம் யோசித்துப் பார்த்தார். அவருக்கு என் மீது சந்தேகம். தான் எழுதித் தருகிற கவிதையை இவன் பத்திரிகையில் போடுவானா என்ற சந்தேகம்தான். அவர் என்னைப் பார்த்துச் சொன்னார் :
“நான் ஒரு கவிதை சொல்கிறேன். எழுதிக்கொள்ளுங்கள்,”என்றார் பிரமிள.
அவர் என்ன சொல்வது நான் என்ன எழுதுவது என்று யோசித்தேன். பின் அவர் ஒரு கவிதையைப் படித்தார்.
கிரணம் என்ற கவிதை ஒன்றைப் படித்தார்.

விடிவுக்கு முன்வேளை
ஆகாயத்தில் மிதக்கின்றன
நாற்காலி மேஜைகள்
ஊஞ்சல் ஒன்று
கடல்மீது மிதக்கிறது
அந்தரத்து மரச் சாமான்களைச்
சுற்றிச் சுற்றிப் பறக்கிறது
அசரீரிக் கூச்சல் ஒன்று
சிறகொடிந்து கிடக்கிறது
ஒரு பெரும் கருடப் பட்சி
கிழக்கு வெளிறிச்
சிவந்து உதித்த மனித மூளைக்குள்
வெறுமை ஒன்றன் இருட்குகை
குகைக்குள் கருடச் சிறகின்
காலை வேளைச் சிலிர்ப்பு.
ஆகாயத்தில்
அலைமேல் அனல்.
மௌனித்தது
அசரீரிக் குரல்.

இந்தக் கவிதை விருட்சம் முதல் இதழில் பிரசுரம் செய்ய நான் விரும்பவில்லை. வேண்டுமென்று கவிதை என்ற பெயரில் ஏதோ சொல்லி என்னைக் கிண்டல் பண்ணுகிறார் என்று நினைத்தேன். ஏன் நாற்காலியும் மேஜைகளும் ஆகாயத்தில் மிதக்க வேண்டுமென்று தோன்றியது.

நான் இக் கவிதையைப் பிரசுரம் செய்ய முடியாது என்று கூறிவிட்டேன். பிரமிளும் அது குறித்து பெரிதும் கவலைப்பட வில்லை. ஆனால் என் முதல் இதழ் விருட்சம் வரும்போது பிரமிள் ஒருமுறை என் வீட்டிற்கு வந்திருந்தார். என் அப்பாவைப் பார்த்து,”உங்கள் பையனை சும்மா இருக்கச் சொல்லுங்கள். ஏன் பத்திரிகையெல்லாம் ஆரம்பிக்கிறான்,” என்று சொன்னார். என் அப்பாவிற்கு ஒன்றும் புரியவில்லை.
நானும் பிரமிள் என் அப்பாவிடம் கூறியதை சீரியஸ்ஸôக எடுத்துக்கொள்ளவில்லை.
அதேபோல் ஞானக்கூத்தன் அணியிலிருந்து ஞானக்கூத்தனிடம் கவிதைக் கேட்டேன். அவர் உடனே ஒரு கவிதையை எழுதிக்கொடுத்து விட்டார். ஞானக்கூத்தன் என்னிடம் பேசும்போது கட்டாயம் விருட்சம் போன்ற பத்திரிகை வருவது அவசியம் என்று கூறினார்.
நான் விருட்சம் பத்திரிகைக் கொண்டு வரும்போது üழý என்ற ஆத்மாநாமின் பத்திரிகை வந்திருந்து நின்று போய்விட்டிருந்தது. கிட்டத்தட்ட üழý என்ற பத்திரிகை வடிவத்திலேயே விருட்சம் பத்திரிகையைக் கொண்டு வந்திருந்தேன்.
ஞானக்கூத்தனிடம் நான் எப்படிப்பட்ட பத்திரிகை கொண்டு வரப் போகிறேன் என்றெல்லாம் குறிப்பிடவில்லை. பிரமிள் அணி ஞானக்கூத்தன் அணி என்றெல்லாம் கூறினால் நான் கிண்டலுக்கு ஆளாவேன் என்றெல்லாம் எனக்குத் தெரியும். ஆனால் ýழý பத்திரிகையில் எழுதிய பல எழுத்தாளர்கள், விருட்சம் இதழுக்கும் தன் பங்களிப்பை செய்யத் தவறவில்லை.
ரா ஸ்ரீனிவாஸன், ஆர் ராஜகோபாலன், ஆனந்த், எஸ் வைத்தியநாதன், ஜெயதேவன், ஆ இளம்பரிதி என்றெல்லாம் ஞானக்கூத்தன் அணியைச் சேர்ந்தவர்கள் கவதைகள் அளித்தார்கள். முதல் இதழ் முழுவதும் கவிதைகள். முதல் பக்கத்தில் ரா ஸ்ரீனிவாஸனும் கடைசிப் பக்கத்தில் நானும் கவிதைகள் எழுதி இருந்தோம்.
எனக்கு ஆரம்பத்திலிருந்து பிரமிளிடம் பழகுவதைவிட ஞானக்கூத்தனிடம் பழகுவது எளிதாக இருக்கும்போல் தோன்றும். காரணம். பிரமிள் என்னுடன் பேசும்போது கிண்டல் செய்வார் என்று எனக்குத் தோன்றிக்கொண்டிருக்கும். மேலும் பிரமிள் கோபக்காரர். எப்போது வேண்டுமானாலும் கோபித்துக்கொண்டு போவார்.
அப்போதெல்லாம் நான் பிரமிளை ஒவ்வொரு சனிக்கிழமை மாலை நேரத்தில் ஜே கிருஷ்ணமூர்த்தி வீடியோ காட்டுமிடமான வஸந்தவிஹாரில் சந்திப்பேன். அதேபோல் ஞானக்கூத்தனை ஞாயிற்றுக்கிழமை மாலை நேரத்தில் கடற்கரையில் உள்ள வள்ளுவர் சிலை அருகில் சந்திப்பேன்.
ஆரம்பத்தில் மேட் இன் இங்கிலாந்து சைக்கிளிலும், பின் லாம்பி ஸ்கூட்டரிலும் நான் சென்னை முழுவதும் சுழன்று சுழன்று வருவேன்.
‘ஓட்டைத் தேவனார்க்கு வாழ்த்துகள்’ என்ற பெயரில் ஞானக்கூத்தன் முதல் இதழில் கவிதை எழுதிக் கொடுத்திருந்தார். அக் கவிதை வருமாறு :

அனைத்து மக்களுக்கும் சரிசம மாக
ஓட்டைகள் வழங்கி யுள்ள
அற்புதப் பொருளே
மும்முறை சொன்னேன் வாழ்த்துகள் உனக்கு

சிறிதென்றாலும் பெரிதென்றாலும்
அவரவர்க்கென்றே ஓட்டைகள்
கிடைக்கும் படிக்குச் செய்தஉன்
கருணைத் திறனை
எவர் மறந்தாலும் நான் மறப்பேனா?

அடுத்தவர் ஓட்டை தன்னதைக் காட்டிலும்
பெரிய தென்று கசந்தவர் தம்மை
நின்னருள் வழங்கிப் பாலிக்க வேண்டும்.

ஓட்டைகட் கெல்லாம் ஆதி ஓட்டையாய்
உன்புனித ஓட்டை என்றும் வாழ
ஓட்டையர் சார்பில் என்தலை வணங்கினேன்

எங்கள் ஓட்டையில் காற்றும் நீரும்
ஒளியும் உட்புகுந்து நலமுற்றிருக்க
ஓட்டைநாலயகனே நீ அருள வேண்டும்.

எங்கள் ஓட்டைகள் நாங்கள் உறங்குங்கால்
யார் ஒருவ ராலும் திருடப் படாமல்
நாங்கள் விழிக்கும் வரைக்கும் எங்களிடம்
இருக்கும் படிக்குன் காவல் விளங்குக.

எங்கள் ஓட்டையில் ஒன்றிரண்டு
கவனக் குறைவாய்த் தவறிவிட்டாலும்
பதிலுக்கு நல்ல ஓட்டைகள் கிடைக்கும்
படிக்கு நீதான் உதவவும் வேண்டும்.

எங்கள் ஓட்டையில் சூரிய சந்திர
சனியாதி சுக்கிர தேவர்கள்
தங்கு தடையின்றி ஊர்வலம் சுற்ற
தயவு செய்த நின்னருள் வாழ்க.

அனைத்து மக்களுக்கும் சரிசம மாக
ஓட்டைகள் வழங்கிய அற்புதப் பொருளே
எனக்கு நீ வழங்கிய ஓட்டைகள் சகிதம்
மும் முறை வாழ்த்தினேன் நன்றி கூற.

ஞானக்கூத்தனின் இந்தக் கவிதையைப் படித்து விழுந்து விழுந்து சிரித்தேன். ரொம்ப அற்புதம் உங்கள் கவிதை என்று அவரிடம் கூறினேன். ஆனால் அந்த இதழில் அந்தக் கவிதைதான் எல்லோருடைய கிண்டலுக்கும் ஆளானாது.
அந்த வாரம் தேவி தியேட்டரில் சினிமாப் பார்க்க நானும் பிரமிளும் சென்றிருந்தோம், அவர் கையில் முதல் இதழ் விருட்சம் வந்து விட்டது என்று கூறி இதழ் பிரதியைக் கொடுத்தேன். அதைப் பார்த்த அவர், ஒரு தோசை மாதிரி அதைச் சுருட்டி, ‘வந்துவிட்டதா?’ என்று ஓங்கி தரையில் அடித்தார்.
நானோ திடுக்கிட்டேன்.

(இன்னும் வரும்)

மனுநீதிச் சோழனும், கெளசல்யாவின் நீதியுணர்வும் ஆன்மா ( நெளிக்கோடுகளும், அசையாப் புள்ளிகளும் – 3 ) – பாலசுப்பிரமணியன் பொன்ராஜ்

கௌசல்யா சங்கர்

கௌசல்யா சங்கர்

ஒரு “கலாச்சாரக்” குற்றமான சாதிக்கலப்புத் திருமணத்தின் விளைவாக நிகழ்த்தப்பட்ட கொலை எனும் சட்ட ரீதியான குற்றத்திற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு ஒன்று நம்முள் குடிகொண்டிருக்கும் நீதியைக் குறித்த கருத்துக்களை வெளிக் கொணர்ந்திருக்கிறது.

கொலையுண்டது, ஒரு பெண் அவளது சுய விருப்பால் தேர்ந்தெடுத்துக் கொண்ட கணவன், தீர்ப்பில் தூக்கு தண்டனை வழங்கப்பட்டிருப்பது அவளுடைய தந்தை. சட்டத்தின் மொழியில் கொல்லப்பட்டவர், கொலை செய்தவர் என்று மட்டுமே பிரித்துச் சொல்லப்படும் இவ்விருவரும் ஒரு பெண்ணின் மீது அளவற்ற அதிகாரம் செலுத்தத் தக்கவர்கள் என்று சமூகத்தால் அனுமதிக்கப்பட்டவர்கள்.

அப்பெண் அவளுடைய தந்தையின் விருப்பத்திற்கு எதிராக வேறொரு ஆணை அதுவும் படிநிலையில் தன்னுடைய சாதிக்குக் கீழே வைக்கப்பட்டிருக்கும் ஒரு சாதியைச் சேர்ந்த ஆணைத் தேர்ந்தது கொலை செய்யப்படத்தக்க ஒரு மீறலாகப் பார்த்த அவளுடைய தந்தை, அவர்கள் இழைத்த குற்றத்திற்கு தண்டனையை வழங்கிவிட்டார். நீதியமைப்பின் கண்களில் வராமல் இத்“தண்டனை” வழங்கப்பட்டிருந்தால் அவளுடைய தந்தை, மகளின் கணவனைக் கொன்ற குற்றவுணர்வின் கனம் சிறிதளவு கூட தன் மீது ஏற்றாமல், மகிழ்ந்திருப்பார்.

ஆனால் சாதி ஒழுங்கைக் குலைத்ததனால் எழுந்த தனிப்பட்ட அவமானத்திற்குப் பதிலடியாக, பொதுவாக ஒரு கொலையின் பின்னணியிலுள்ள மறைமுகச் செய்தியை சமூகத்திற்கு உரக்கச் சொல்லும் விதமாக, பகல் வெளிச்சத்தில் அவருடைய தீர்ப்பை ஒரு கொலையின் மூலமாக எழுதினார். கலாச்சாரக் குற்றத்திற்கான அந்தத் தண்டனை ஒரு Spectacle. வழங்கப்பட்ட இந்தத் தண்டனையை எண்ணி மகிழ்ந்த தனிப்பட்ட குடும்பங்களும், திரண்டிருக்கும் ஒரு சில சமூக அமைப்புகளும் இருந்திருக்கும்.

கலாச்சாரத்தின் அடிப்படையில் குற்றத்திற்காக வழங்கப்பட்ட ஒரு தண்டனை, சட்டத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட வேண்டிய குற்றமாகிறது. அதற்கான தீர்ப்பு வெளியான தருணத்தில் இத்தீர்ப்பில் வழங்கப்பட்ட அதிகபட்ச தண்டனையான தூக்கு, பெரும்பாலான தனிப்பட்ட குடும்பங்களுக்கும், ஒரு சில சமூக அமைப்புகளுக்கும் அதிர்ச்சியூட்டியிருக்கும்.

இத்தீர்ப்பில் வேறு எவரையும் விட, கொல்லப்பட்டவரின் மனைவியான கெளசல்யா ஒரு தனிச்சிறப்பான கவனத்தைப் பெறுகிறார். நீதிக்கான போராட்டத்தில் கொல்லப்பட்டவரின் சார்பாக நின்ற அப்பெண், அவளுடைய தந்தைக்கு எதிராக நின்றவள் மட்டுமல்ல சாதி அமைப்பிற்கு எதிராகவும் நின்றிருக்கிறாள். இதில் அவளுடைய தந்தை சாதி அமைப்பின் ஒரு பிரதிநிதிதான். இந்தத் தெளிவே தீர்ப்பை வரவேற்ற அப்பெண்ணிடமிருக்கிறது. இப்படி ஒரு நிலை அதாவது தன்னுடைய கணவன் கொல்லப்பட்டு, அவளுடைய தந்தைக்கு தூக்குத் தண்டனை வழங்கப்பட்ட நெருக்கடி வருமென்று அவளுடைய திருமணத்திற்கு முன்பே ஏதாவதொரு வழியில் எதிர்காலம் காட்டப்பட்டிருந்தால் அவள் நிச்சயமாக காதலையே துறந்திருப்பாள். ஆனால் இன்றோ நிகழ்வுகள் அனைத்துமே ஒரு சமூகத்தின் பார்வைக்கும், சிந்தனைக்கும் வழங்கப்பட்டவை.

தீர்ப்பை ஒரு கொலைக்கு வழங்கப்பட்ட தண்டனை என்பதையும் கடந்து சாதி ஆணவத்திற்குக் கிடைத்த ஓர் அடி என்று பார்க்கும் தனிப்பட்டவர்களும், சமூக அமைப்புகளும் இருக்கின்றன. இத்தீர்ப்பால் சாதி ஆணவக் கொலைகள் குறையும் என்றால் அது அதிகபட்ச எதிர்ப்பார்ப்பு மட்டுமே. இருப்பினும் இந்தத் தீர்ப்பு நீதியுணர்வின் பால் வழங்கபட்டது மட்டுமல்ல, ஒரு ஜனநாயக அமைப்பில் தனிமனிதர் ஒருவருக்கு இருக்கும் விருப்பத் தேர்வெனும் அடிப்படை உரிமைக்கான ஆதரவும் கூட.

ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் எழுந்த குரல்களில் மிக முக்கியமானது ஒரு பெண்ணைப் பெற்று வளர்த்த தந்தைக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை அப்பெண்ணே வரவேற்பதா என்பதே.

நீதி குறித்த சிந்தனைகளை நமக்குக் கட்டியமைத்த தொன்மங்களில் இரண்டை இங்கே ஆராயலாம். ஒன்று கொல்லப்பட்ட பசுவிற்காக தன்னுடைய மகனை தேர்க்காலில் ஏற்றிக் கொன்ற மனுநீதிச் சோழன். இன்னொன்று தன்னுடைய மகனை கர்த்தரின் மீதிருக்கும் பக்தியைக் காட்டுவதற்காக கொலை செய்யத் துணிந்த ஆப்ரகாமினுடையது.

download (16)
அதிகபட்ச நீதியென்பதற்கு உதாரணமாகச் சொல்லப்படும் மனுநீதிச் சோழனின் கதையைக் கேட்கும் ஒருவரும், மரண தண்டனை வழங்கப்பட்ட மனுநீதிச் சோழனுடைய மகனின் மரணத்திற்காக வருத்தப்பட மாட்டார்கள். நீதி கேட்டது பசு என்பதனால் கூட அத்தண்டனை வழங்கப்பட்டிருக்கலாம். கொல்லப்பட்டது ஒரு பன்றியின் குட்டியாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என இப்போது ஊகிப்பது பதிலற்ற ஒன்று. ஆனால் நாம் அக்கதையில் காப்பாற்றப்பட்ட நீதியை எண்ணியும், நீதி வழுவாது தீர்ப்பளித்த மனுநீதிச் சோழன் எனும் தந்தையைக் குறித்து பெருமிதமும் அடைகிறோம்.

ஆபிரகாம் அவனுடைய மகனை பலியிடத் துணிகிறார். இறுதியில் அவன் கழுத்து வெட்டப்படுவதிலிருந்து தவிர்க்கப்பட்டாலும் அதன் பிறகு ஆபிரகாமிற்கு குற்ற உணர்வோ, அவனுடைய மகனிற்கு தன்னுடைய தந்தையே அவனைக் கொல்லத் துணிந்தது தண்டனைக்கு உரியதென்ற கேள்வியோ எழுவதில்லை. குழந்தைகளைப் பலியிடும் உரிமையை இயற்கையாகவே பெற்றோர்கள் பெற்றிருக்கிறார்கள் என்பதனையே இக்கதை சொல்கிறது. எண்ணற்ற பெண் சிசுக் கொலைகளைச் செய்த பெற்றோர்களை நம்மால் நீதியுணர்வால் அணுக முடியாது. கலாச்சாரப் பின்புலத்தில்தான் அணுகுகின்றோம். ஆகையால் அவர்கள் பிள்ளைகளுக்கு எதிராகச் செய்யும் குற்றங்களுக்கு இயற்கையாகவே ஒரு நிரந்தர தண்டனை விலக்கைப் பெற்று விடுகிறார்கள்.

இதன் நீட்சியாகவே பாப்புலர் தளத்தில் தங்கப்பதக்கம் திரைப்படத்தின் கதாபாத்திரமான செளத்ரி, அவருடைய மகன் கதாபாத்திரத்தைக் கொன்றதை நம்மால் கேள்வி கேட்காமல் வர முடிகிறது. செளத்ரி வெறும் தந்தையாக மட்டுமல்ல நீதிக்காகப் போராடுகிற ஒரு போலீஸ்காரரும் கூட. அவர் நீதியைத் தான் காக்க வேண்டியிருக்கிறது.

கெளசல்யாவை எடுத்துக் கொள்வோம், தூக்கு தண்டனை வழங்கப்பட்டது அவளுடைய தந்தையாக இருந்தாலும் அவள் இத்தீர்ப்பை நீதியின் பொருட்டு வரவேற்றிருக்கிறாள் என்பதே இதன் முக்கியத்துவமும், மேற்சொன்ன தொன்மங்களுக்கு ஒரு தலைகீழ் நிகராகவும் இருக்கிறது.

மனுநீதிச் சோழன் கன்றுக்குட்டியின் பொருட்டு தன்னுடைய மகனைக் கொன்றதை நீதியுணர்விற்கான உதாரணமாகச் சொல்லிப் பழகிவிட்ட நமக்கு, இன்னொரு தந்தையின் மகனும், தன்னுடைய கணவனுமான ஒரு மனிதன் கொல்லப்பட்டதற்கான தீர்ப்பில் நீதி உணர்வைக் கண்ட ஒரு மகளை ஏன் ஏற்றுக் கொள்ள முடியவில்லை?.

••••