Category: நவம்பர்

நந்தி ( சிறுகதை ) / ப.மதியழகன்

அளவில் சிறிய கோவில் தான் சிலசமயம் அர்ச்சகரையும், கைலாசநாதரையும் தவிர வேறு யாரும் இருக்கமாட்டார்கள். சிறிய பிரகாரம், நவகிரக சந்நதி, பைரவர் எல்லாம் உண்டு. அம்மன் பெரியநாயகி, லோகத்துக்கும் அவள் தான் பெரியநாயகி. நாயகன் யாரென்று என் வாயால் சொல்ல வேண்டுமா? கோயிலுக்கென்று நுழைவு வாயில் இடது பக்கத்தில் சிறிய தோட்டம் உண்டு. சொல்லிக் கொள்கிற மாதிரி பெரிய வரும்படி எதுவுமில்லை.

கிழக்கு நோக்கியிருக்கும் வாயிலில் பாமிணி ஆறு ஓடுகிறது. தெற்கு நோக்கி இருக்கும் வாயிலில் தான் வெகுஜனம் புழங்குகிறது. சிவனுக்கு ஏன் சொத்து நாலுமுழ வேஷ்டி போதாதா? போதும் போதும் ஆனால் அர்ச்சகருக்கு, அவருக்கு குடும்பத்தைக் காவந்து பண்ணும் பொறுப்பிருக்கிறதே. ஏதோ ஒருவேளை நமசிவாய என்று சொல்லி ஈரத் துணியை வயிற்றில் கட்டிக் கொள்ளலாம்.

வேளா வேளைக்கு ஆகாரத்துக்கு மனம் அலைபாயாதா? ஏதோ பிரதோஷம், தேய்பிறை அஷ்டமின்னா தட்டுல அஞ்சோ பத்தோ விழும் மத்த நாள்ல. நாலு காலத்தையும் முணுமுணுக்காமல் மாசானம் தான் பண்ணி வைக்கிறார். அவர் போஜனத்துக்கு ஊர்ல யார்கிட்ட போய் கையேந்துவார் சொல்லுங்க.

மன்னார்குடியில் வசிக்கும் கைலாசநாதரையே ஊர்மக்களுக்கு தெரியாமல் போகும் போது ஜெயராமனையா தெரியப் போகிறது. எல்லாருடைய வாழ்க்கையும் ஒரு கதை தானே. ஜெயராமன் வாழ்க்கையைப் பத்தி இங்கு அதிகமாக பிரஸ்தாபிக்கப் போவதில்லை. அவர் தொழில் பேருந்து நிலையத்தில் சுண்டல், வேர்க்கடலை விற்பது. இப்போதுமா என்று நீங்கள் கேட்டால் நான் என்ன சொல்வது.

யார் வாழ்க்கையில் தான் சிவன் விளையாடவில்லை. ஜெயராமன் தற்போது கோயில் பூந்தோட்டத்தைப் பராமரிப்பதும் பூஜை வேளையில் மணியடிக்கும் வேளையும்தான் செய்து வருகிறார். வயது அறுபதை நெருங்கிக் கொண்டிருக்கிறது. நேரா சிவனைப் பார்த்தேன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் நீங்கள் நம்புவீர்களா? பார்த்திருப்பாரோ என நமக்கும் சந்தேகம் வரத்தான் செய்கிறது. ஏன்னா குடும்பத்தையும், சொந்த பந்தத்தையும் உதறிவிட்டு இங்கு வந்து ஏன் சம்போ மகாதேவான்ட்டு உட்காரணும்.

அர்ச்சகருக்கும் ஜெயராமனுக்கும் ஏழாம் பொருத்தம். கோயிலே கதின்னு கிடக்கிற என்னைய உட்டுபுட்டு மனக்கோயில் கட்டுன பூசலார் மாதிரி அவருக்கு ஈசன் தரிசனம் தந்துட்டான்னோன்னு மனசுல ஒரு முள் தைச்சிருச்சி. இந்த முள்ளை பிடுங்கி தூர எறிஞ்சிட்டுப் போக அர்ச்சகருக்கு மனசில்லை.

இந்த ராகவனை எந்த லிஸ்ட்டில் சேர்க்கறதுன்னு நீங்களே முடிவு பண்ணிக்கீங்க. இவன் வயசுல்ல இளவட்டப் பசங்க எல்லாம் என்னத்த தேடறாங்க? சாக்கடையில விழுந்துட்டு நாரக் கூடாதுன்னா எப்படிங்க? உலகம் எங்கங்க போயிட்டு இருக்குது. கூட்டிக் கொடுத்தவன் காசில நாமளும் பங்கு கேட்டா கேவலம் இல்லீங்களா? இந்த வயசுல ரமணரை பிடிச்சிப் போச்சின்னா வாழ்க்கை சர்க்கரையாவாங்க இனிக்கும்.

எல்லாத்துக்கும் துணிஞ்சவனாலதான் வாழ்க்கையில கொடி நாட்ட முடியுது. நான் நல்லவன்னு சொல்லிகிட்டு நின்னா அரசாங்க ஆபீஸ்ல காரியம் ஆவுமாங்க. துட்டுக்கு தானேங்க மகுடிப்பாம்பா மயங்கறாங்க. மனுசப் பொம்மைகளுக்கு யாருங்க கீ கொடுத்து உட்டுருக்கிறது. ஒருத்தன் தங்கத்தட்டுல சாப்பிடுறதுக்கும் இன்னொருத்தன் எச்சில் இலை பொறுக்கிறதுக்கும் என்னங்க காரணமா இருக்க முடியும். ராகவன் படிப்புல, காதல்ல, வேலைல மூணுத்துலையும் கோட்டைவிட்டவங்க. ஏங்க ஏட்டுப்படிப்பு மட்டுந்தான் படிப்பாங்க? அனுபவம் படிப்பில்லையா? வாழ்க்கையே கறாரான வாத்தியார் தானுங்களே.

பள்ளத்துல விழுந்துட்டா காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு கத்திப் பார்ப்போம் யாரும் வரலைனா நாமே முயற்சி பண்ணி மேலேறப் பார்ப்போமேங்க. வாழ்க்கையில ஏதோவொரு பிடிப்பை வைச்சித்தானே வாழவேண்டியிருக்கு. அந்த நம்பிக்கை தானுங்க ராகவனுக்கு இந்த கைலாசநாதர். அவரே அள்ளிக்கொடுக்க ஆசைப்பட்டாலும் விதி உடணும் இல்லீங்களா? எப்படியும் வாழ்றவனை உட்டுட்டு உண்மையைத் தேடி ஓடுறவனை சோதிக்கிறதுதான் சாமிங்களா? மந்தையிலேர்ந்து பிரிஞ்சு போறது ஆட்டுக்கு நல்லதா, கெட்டதாங்க? எல்லாரும் ஓடுறதை ஒதுக்குப்புறமா நின்னு பார்க்கறதுக்கு ஒருசிலராகத்தாங்க முடியும். ராகவனால எவன் சொத்தையும் அடிச்சி பிடுங்க முடியாது. எவளையும் மயக்கி வழிக்கு கொண்டுவர மெனக்கடவும் முடியாதுங்க.

சூழ்நிலையை விதிதான் நிர்ணயிக்கிறது என்பதை நம்பத்தான் வேண்டியிருக்கு. ஏன்னா சென்னையிலேர்ந்து வந்த கையோடு ராகவன் ஏன் கோயிலுக்கு ஓடுவானேன். குகைக்குள்ள மான் வந்தா சிங்கம் சும்மா உடுமாங்க அப்படித்தாங்க ஜெயராமனும். பிரகாரத்தை சுற்றி வந்து அமர்ந்த ராகவனிடம் ஜெயராமன் “எந்த ஊரு” என்று பேச்சை ஆரம்பிக்க. ராகவன் “சென்னை” என்றான்.

வந்திருக்கிறது மான்தான்னு சிங்கத்துக்கு தெரிஞ்சிப்போச்சிங்க சமயம் பார்த்து பாயப் போவுதுங்க. “சிவனைப் பார்த்தாச்சா?” என்றார் ஜெயராமன்.

“பார்த்தேன் சந்நதிக்கு போயிட்டுத்தான் வந்தேன்” என்றான் வெகுளித்தனமாக ராகவன்.

“அது லிங்கத்திருமேனி நான் கேட்கிறது சிவனை” என்றார் ஜெயராமன் அவனை உற்றுப் பார்த்தபடி.

“நீங்க கனவுல பாக்குறதை சொல்றீங்களா?” என்றான் ராகவன் அப்பாவித்தனமாக.

“அப்ப பாத்ததில்லை” என்றார் ஜெயராமன் ஏளனமாக.

“…………………………..”

“நான் பாத்திருக்கேன் என் இரண்டு கண்ணாலேயும் பார்த்து இருக்கேன். அவன் எப்படி கோயிலைவிட்டுட்டு மயானமே கதின்னு கிடக்கானோ அது மாதிரி என்னை எல்லாத்தைவிட்டும் ஒதுங்க வைச்சிட்டான். கோயில்ல கூலிக்கு மாரடிக்கிற நாயாத்தான் என்னைப்பத்தி வெளியில தெரியும்.

ஒரு நாள் மாசானம் கையேந்துற உனக்கே இவ்வுளவு திமிறான்னு கேட்டான் தெரியுமா? அடுத்த நாளே சைக்கிள்லேந்து விழுந்து கையை உடைச்சிட்டு வந்து நின்னான் தெரியுமா? ஆளைப் பார்த்தாலே ஜாதகத்தையே கண்டுபிடிச்சிருவேன் தெரியுமா? உன்னைப் பத்தி சிவன்ட்ட நான் சொன்னாத்தான் உண்டு. இல்லாட்டி விதியிலேர்ந்து நீ தப்ப முடியாது. அப்புறம் எல்லாரையும் போல நீயும் பிறந்து வறர்ந்து இறந்து, பிறந்து வளர்ந்து இறந்து தான் புரிஞ்சிக்க. எம்பேர் ஜெயராமன் பேர்ல மட்டும் நீ ராமன் இல்ல நிஜத்துலேயும் நீ ஸ்ரீராமன் தான்னு எங்க ஆத்தாவே சொல்லிச்சி தெரியுமா?”

ஜெயராமன் பேச்சைக் கவனித்துக் கொண்டிருந்த மாசானம் அருகே வந்து, “எல்லாருக்கும் கொள்ளி வைக்கிற சிவன் இவன் நேர்ல வந்தான்னு சொல்றானா? இந்தக் கோயில்ல காலம் காலமா கைங்கர்யம் பண்ற நானெல்லாம் விளக்கமாத்துகட்டை இவன் மட்டும் பட்டுப் பீதாம்பரமா. சிவனை கட்டி ஆள்றேன்கிறான்னே படுக்க ஒரு வீடு இருக்கான்னு கேளு. போட்டுக்க மாத்து துணி இருக்கா? ஊர் உலத்துல யாராச்சும் மதிக்கிறான்னா இவனை பேச்சுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. நல்லா வாய்ல வருது. இந்தக் கிறுக்கன தர்மகர்த்தா எந்தலையில கட்டிட்டு போயிட்டார் பாரு என்றார்.

“வழிச்சிட்டு போறவனுவனுவோ சொல்லுறானுங்கன்னா நான் பாத்தது இல்லன்னு ஆயிடும்மா” என்றார் ஜெயராமன் ஆதங்கத்துடன்.

“இந்தக் காலத்துல போய் சிவனைப் பார்த்தேன் எமனைப் பார்த்தேன்னு சொன்னா பைத்தியம்னு தான் சொல்வாங்க என்ன தம்பி நான் சொல்றது” என்றார் மாசானம்.

“அவன் எங்கூட பேசுறாங்கிறேன்” என்றார் ஆவேசத்துடன் ஜெயராமன்.

“மூளை குழம்பிப் போச்சின்னா சிவன் மட்டுமில்லை செத்தவன் கூட எங்கூட பேசுறான்னுதான் சொல்லிகிட்டு திரிவே” என்றார் தன் பங்குக்கு மாசானம்.

“நான் சொல்றது உண்மையா இல்லையான்னு நான் செத்ததுக்கப்புறம் தெரிஞ்சிப் போயிடும்ல” என்றார் விரக்தியுடன் ஜெயராமன்.

“உனக்கு கிரகம் புடிச்சி ஆட்டுது. இல்லைனா இப்படி சொல்லிகிட்டுத் திரிவியா” என்றார் மாசானம் தலையிலடித்தபடி.

“கும்புட்டு போறவனுக்கெல்லாம் கல்லா தெரியிறவன் எனக்கு மட்டும் ஏன் சிவனாத் தெரியறான்” என்றார் ஜெயராமன்.

“கல்லோ, கடவுளோ அந்த ஆராய்ச்சியெல்லாம் நமக்கெதுக்கு குழந்தை குட்டின்னு ஆனதுக்கப்புறம்” என்றார் தீர்க்கமாக மாசானம்.

“நாயன்மார்கள் வாழ்க்கையில அவன் விளையாடலையா” என்றார் விசனத்துடன் ஜெயராமன்.

“எந்தக் காலத்து கதை அது. அதுக்கும் இதுக்கும் ஏன் இப்ப முடிச்சிப் போட்டு பேசுற” என்றார் மாசானம்.

“பட்டினத்தாருக்கு நுனிக் கரும்பு எப்படி இனிச்சிதுன்னு கேட்பீங்களா” என்றார் ஜெயராமன்.

“வரும்படி வர்ற கோயில்ல தானே ஜனங்க ஈ மாதிரி மொய்க்கிறாங்க. இங்க யாராவது வந்து எட்டிப் பார்க்குறாங்களா. சிவனுக்கு நாலு முழ வேட்டி சாத்திட்டிப் போறேன். காப்பு உண்டா, கவசம் உண்டா இங்க” என்றார் ஆதங்கத்துடன் மாசானம்

“சித்தன் போக்கு சிவன் போக்கு” என்றார் எங்கோ பார்த்தபடி ஜெயராமன்

“உன்னையெல்லாம் திருத்த முடியாது அகல் விளக்கையெல்லாம் எடுத்து கிணத்து கிட்ட போட்டுட்டு பூட்டி சாவியை வீட்ல வந்து கொடுத்துட்டு கூலியை வாங்கிட்டுப் போ” என்று கிளம்பினார் மாசானம்.

ஜெயராமன் ராகவனிடம் “பித்தா, பிறைசூடி அவன். யாருக்கு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளனும்னு அவன் தான் முடிவு பண்ணுவான். உன்னோட விதி வேலை செய்ய ஆரம்பிச்சிடிச்சி. அடுத்த தடவை வரும் போது என்னைய தேடாத நான் இங்கன்னு இல்ல எங்கயும் இருக்க மாட்டேன் பிரகாரத்தை மூணு தடவை சுத்திட்டு திரும்பிப் பார்க்காம போ” என்றார்.

எழுத்து தன் தொழிலாக ஆனதுக்கப்புறம் எத்தனையோ தடவை கோயில்ல வந்து ஜெயராமனை தேடி இருக்கிறான் ராகவன். ஆனால் அவர் இவன் கண்ணுக்குத் தென்படவே இல்லை.

ஞானச்சுடரை தூண்டிவிட்ட அவரது கைகளுக்கு வெறும் எழுதுகோலாகத்தான் இன்றுவரை ராகவன் இருக்கிறான். இவன் தனித்த மண்பானையாகத்தான் இருந்தான். அவருடனான சந்திப்புக்கு பிறகு பானை உடைந்து காற்று வெளியுடன் கலந்துவிட்டது. ஏதோவொன்றுடன் தொடர்பு ஏற்பட்டுவிட்டது. அதுதான் கடவுளா என்றால் இருக்கலாம். அதற்கு நீங்கள் என்னப் பெயர் வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளலாம். இந்த அணையப்போகவிருந்த சுடரை ஏற்றி வைத்த அந்த ஜெயராமன் இப்போது எங்கே இருக்கிறார்.

•••

சஹானா கவிதைகள்

1)
வான் நிலாவை

குழந்தை போல்

வளர்த்து எடுக்கின்றது வானம்

2)

நட்சத்திரங்கள்

தான் மின்னும் அழகை

கடலில் பார்க்கின்றது

3)

ஒரு நட்சத்திரம்

எப்பொழுதும் என் மனசுக்குள்

ஆசையாக மின்னிக்கொண்டே இருக்கிறது

4)

நட்சத்திரமும் இல்லாத

அமாவாசை ராத்திரியில்

தோட்டத்தில் மிளிர்ந்து செல்கிறது

மின்மினி பூச்சி

பள பள பள பள

மினு மினு மினு மினு

5)

வானத்தின் நெற்றியில்

பொட்டாக மினுங்குகிறது

அதிகாலை சூரியன்

6)

சூரியன் உதிக்கலாம்

ஒளி பாய்ச்சலாம்

வெப்பம் பரப்பலாம்

சுட்டெரிக்கலாம்

தீயாகலாம்

அவ்வப்போது

வெயிலில் காயும்

சிவப்பு மிளகாயாகவும் மாறலாம்

•••

பெஷாராவின் டைரி ( வே பாபுவுக்கு அஞ்சலி ) – பெஷாரா

வே பாபு

பெஷாராவின் டைரி 11.11.2018 10.30 pm

வே பாபுவுக்கு அஞ்சலி

கனவில் நிறைந்த நினைவுகளின் சாரல்

கொடுங்கை இருளின் இமைகள் சாய்ந்து

வாழ்வின் புதுப் பக்கம் திறக்கப்படாமலே மூடிக்கொண்டது

ஒரு சோகம் தன்னை அமைதியில் அமிழ்த்திக்கொண்டது

கவலையுற்ற கணங்கள் சிரமத்திலிருந்து விடுவித்துக்கொண்டன

அன்பில் நிறைந்த இதயம் தன் துடிப்பைக் காற்றில் கரைத்துக்கொண்டது

மலர்களின் வாசத்தில் சுவாசம் கலந்துகொண்டது

இழப்பின் சாயலை முகத்தில் ஏந்தி நட்புறவுகள் திகைத்து நிற்க

மீளா உறக்கத்தில் பயணம் பாதை வகுத்துக்கொண்டது

திடுமென ஒருநாள்போல் உயிர் ஒளிந்துகொண்டாலும்

தீபத்தின் ஒளியாய் சுடர்கிறது இன்று

கனவில் நிறைந்த நினைவுகளின் சாரல்

•••

வே. பாபுவுக்கு அஞ்சலி – ஷாஅ

வே. பாபு

இப்படியான பிரதேசத்தில்

மொண்டு வாய் நிறைய குடித்து வைத்தேன்

ஒரு மிடறின் நிழல் மறு

மிடறுக்கில்லை

தேகம் கழற்றி தெப்பமாய் நிற்கிறேன்

மழைப்பாடல்கள் இசைத்து ஒழுகும் துளிகளின் நிழல்

துளிக்கில்லை

முன்பொரு கானகம் மலர்வித்து

ஒருக்களித்தப் பூவின் நிழல்

பூவுக்கில்லை

மடங்கிய விரலென கிடக்கும் நிழல்

தரையில் அதுவாக இல்லை

இறுதியாக

கைகூப்பி முகமன் தந்து சொல்லின்றி செல்கிறேன்

திரும்பிப் பார்க்காத முதல் பார்வையின்

நிழல்

இல்லை

இதைக் காண முடிந்தால் உன் கண்களுக்கு

.

நிழல் தேடும் வெயில் / யாழ்க்கோ லெனின் ( நெய்வேலி )

யாழ்க்கோ லெனின் ( நெய்வேலி )

சென்னை விமான நிலையம் – காலை 5 மணி

” நான் இங்கே 2 வது வாசல் முன் நிற்கிறேன்… எப்ப வருவீங்க…?”

” இதோ 5 நிமிடத்தில் வந்துடறேன்மா…”

ஓலா சீருந்து சாரதாவின் அருகே வர, தன் வளைக் கரங்களை அசைத்தாள்.

” இதோ இங்க இருக்கேன்…”

“வணக்கம்மா… திருமுல்லைவாயில்ல எந்த இடம்மா…?”

” சாய் சமீதி … ”

” சரிங்கம்மா… கிளம்பலாமா…”

“ம்….”

கிளம்பிய சிறிது நேரத்தில் ஓட்டுநர் கதிரின் கைப்பேசி ஒலிக்க துண்டித்தான்.

மீண்டும் ஒலிக்க மறுபடியும் துண்டித்தான்.

” தம்பி, எடுத்து பேசுப்பா… ஏதாவது முக்கிய செய்தியா இருக்கப்போவுது…?!”

“இல்லமா… பொதுவா நான் வண்டி ஓட்டும்போது செல்பேச மாட்டேன் மா…”

மீண்டும் கைப்பேசி ஒலிக்க, ” நல்ல பழக்கந்தான் தம்பி, இருந்தாலும் ஏதோ முக்கியமான செய்தி இருக்கப் போய் தான இத்தனை முறை அழைப்பு வருது… பேசுங்க…”

சீருந்தினைச் சாலையோரமாய் நிறுத்திவிட்டு பேசினான் கதிர். எதிர்முனையில் அவன் மனைவி , ” எத்தன தடவ தான்யா கூப்பிடறது…? எடுக்க மாட்டியா…?” பொறிந்தாள்.

“என்ன புள்ள சேதி… ?நான் சவாரில இருக்கும் போது பேச மாட்டேன்னு தெரியுமில்ல… சரி சரி சீக்கிரமா சொல்லு…”

“ஆமாம் பெரிய கொள்கை வீரரு …! இங்க உன் மவளுக்கு காய்ச்சல் அதிகமாயிடுச்சு… வாந்தி வேற… பக்கத்துல இருக்கிற மருத்துவமனைக்கி தூக்கியாந்திருக்கேன். அத சொல்ல தான் அத்தினி தடவ கூப்பிட்டேன்…”

“ஏன் புள்ள வீட்டில தான இருக்க… பாப்பாவ ஒழுங்கா பாத்துக்கறதுக்கு என்ன…?”

” ஏன்யா சொல்ல மாட்ட… உனக்கு ஆக்கிப் போடுறதுக்கும் உன் மவள பாத்துக்கறதுக்குந் தான் என்னைய பெத்து போட்டுருக்காங்க பாரு…!”

“ஏன்டி அலுத்துக்கற… நான் சவாரிய கொண்டு போய் விட்டுட்டு அரை மணியில வந்திடறேன் … ”

” அது சரி உனக்கு சவாரி தான முக்கியம்… யாருமில்லா அனாதப்பயல என் தலைல கட்டி வச்சிட்டாங்க… எல்லாம் என் தலைவிதி…!” கோபமாய் துண்டித்தாள்.

அவள் அமில வார்த்தைகளால் புழுவாய் துடித்தான் கதிர்.

அவன் முகவாட்டத்தை கவனித்த சாரதா,”தம்பி ! நீங்க கிளம்புங்க… எனக்கு ஒண்ணும் அவசரமில்ல… நான் வேற கார்ல போயிக்கறேன்… ”

“இல்லம்மா… உங்கள கொண்டு போய் விட்டுட்டே போய்கிறேன் மா…”

“வேணாம்பா… உனக்கு தான் ஏதோ பிரச்சினை போலருக்கு …. நீ கிளம்புபா…”

அவன் நிலையை யோசித்தவாறே சாலையைக் கடந்தாள் சாரதா.

சற்றும் எதிர்பாராமல் வேகமாக வந்த இரு சக்கர வாகனம் மோத தூக்கி வீசப்பட்டாள். கைப்பேசியில் மனைவியை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தவன் சத்தம் கேட்டுத் திரும்ப அதிர்ந்தே விட்டான். அருகே ஓடி வந்தான். தலையில் பலத்த அடி. சில விநாடி யோசித்தவன், அவளை அப்படியே தூக்கி தன் சீருந்தின் பின்னிருக்கையில் கிடத்தி அருகிலிருந்த சுகம் மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றான்.

மருத்துவர் கிருபாநிதி, ” தலைல பலத்தஅடி… 24 மணிநேர மேற்பார்வைக்குப் பின் தான் சொல்ல முடியும்… சரி நோயாளிக்கு நீங்க என்ன வேணும்…?”

சில நிமிடம் செலவழித்து நடந்ததை சொல்லி முடித்தான் கதிர். காவல் நிலையத்திற்கு செய்தி அனுப்பினார் மருத்துவர்.”சரி உங்க பேர் என்ன …?”

“கதிர்ங்கய்யா…”

“அப்ப , இவங்கள பத்தி உங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா…? அவங்க ரொம்ப ஆபத்தான கட்டத்தில இருக்காங்க , புரியுதா உங்களுக்கு…?”

” அவங்க பேரு சாரதா… அது மட்டும் தான் எனக்கு தெரியுங்கய்யா… ”

ஏதோ யோசித்த மருத்துவர், ” அவங்க கைப்பையை எடுத்து வாங்க அதுல ஏதாவது கிடைக்கலாம்….!”

கதிர் எடுத்து வந்து கொடுக்க, ” கதிர்! அவங்க செல் இதோ இருக்கு… அதுல எதுனா முக்கியமான நம்பர் இருக்கான்னு பாருங்க… நான் போய் நியூரோ சர்ஜன்ட்ட பேசிட்டு வந்திடறேன்…”

அதில் அவசர அழைப்புப் பதிவில் அவர் கணவரின் எண் இருக்க முகமலர்ந்தான் கதிர். சிறிது நேரத்தில் வந்த மருத்துவரிடம் கைப்பேசியை கொடுக்க அவர் சுருக்கமாக சொல்லி முடித்தார். எதிர்முனையில் அழுகுரல், ” இதோ இன்னும் சில மணிநேரத்தில அங்க இருப்பேன், சாரதாவ பத்திரமா பாத்துக்குங்க டாக்டர்…”

” ஐயா ,அப்ப நான் கிளம்பட்டுமா…?”

” என்ன கதிர் … அவங்க கணவர் வரட்டுமே…!”

“என் மவளுக்கு ரொம்ப காய்ச்சல்ங்கய்யா… போய் பாத்துட்டு சீக்கிரமா வந்திடறேன்…”

“சரி … சீக்கிரமா வந்திடுங்க… அவங்க கணவர் வர்ற வரைக்கும் நீங்க தான் பொறுப்பு… எதுக்கும் உங்க நம்பர ரிசப்ஷன்ல கொடுத்துட்டு போங்க… ”

குழந்தையைக் காண தன் சீருந்தில் கிட்டத்தட்ட பறந்தான். பலமுறை அழைத்தும் துண்டித்தாள் மனைவி மாதவி. வரவேற்பில் விசாரிக்க 201 அறை என்றனர். ஓட்டமும் நடையுமாய் அடைந்தான் 201ஐ.

“மாதவி … மாதவி… பாப்பா எப்படி இருக்கா?”

” வாய்யா… இப்ப தான் நேரங் கிடைச்சதா வர…?”

“இனியா எப்படி இருக்கா…?” கண்களில் நீர் பொங்க கத்தினான்.

“அவ எப்படி இருந்தா உனக்கென்னயா?”

“சரி… முதல்ல புள்ளய பாக்கவிடு… அப்புறமா சத்தம் போடு…!”

” முடியாதுயா… புள்ளய விட சவாரி தான முக்கியம்னு போன… இப்ப எதுக்கு இங்க வந்த… அனாதப் பயதான நீ உனக்கு எங்க அருமை எப்படி தெரியும்…?! ”

கோபத்தின் உச்சிக்கே போன கதிரின் வலது கரம் அவள் கன்னத்தை பதம் பார்த்தது. இதனை சற்றும் எதிர்பாராத வள் மயங்கி சரிந்தாள். அனைவரும் திகைத்துவிட்டனர்.

” நிறுத்துடா கதிரு… எங்க வந்து யாரு மேல கைய வக்கிற… எல்லாரும் எதிர்த்துங்கூட யாருமில்லாத உனக்கு என் பொண்ண கட்டிக் கொடுத்தேன்… எதுக்கு? …. நீ இப்படி போட்டு அடிக்கவா…? மரியாதையா நடந்துக்க, இல்ல இப்படியே அத்துவிட்டுடுவேன்… புரிஞ்சுதா…!”

கலங்கி நின்றான். மனதில் வெறுமை. அப்போது அவன் தோளில் ஆறுதலாய் ஒரு கரம் பட்டது, “நான் உயிரோட இருக்கிற வரைக்கும் எவனும் உன்னை அனாதன்னு சொல்ல முடியாதுடா கதிரு…”

“என்னம்மா வார்த்தை தடிக்குது…?”

” பின்ன என்னய்யா, உங்க பொண்ணு வார்த்தைக்கு வார்த்தை அனாதப்பயம் பா… இப்ப நீங்களும் சொல்றீங்க… என் பேரன் என்னைக்கும் அனாத இல்ல … நீங்க முதல்ல மருமகன மரியாதையா நடத்த கத்துக்குங்க…புரிஞ்சிதா…?!”

கோபமாக கதிரின் கையை பற்றியபடி , “டேய் கதிரு உன் மக உன்னை பாக்க நிச்சயம் வருவா…! அப்ப இவங்க என்ன பண்ணுவாங்க பாத்துக்கலாம் … வாடா….”வெளியேறினார் பாட்டி அமிர்தம்.

” உன் ஆத்தா உன்னை விட்டுட்டு ஓடிப்போகாம இருந்திருந்தா நமக்கு இவ்வளவு சங்கடம் வந்திருக்குமாடா கதிரு…?” முந்தானையில் மூக்கை சிந்தினார் பாட்டி.

“என்ன பாட்டி சொல்ற…? ஆத்தா செத்து போச்சுன்னு சொல்லிட்டு இப்ப இப்படி சொல்ற…?!”

“முதல் வண்டிய எடுடா… இந்த எடுத்த விட்டு கிளம்பு…”

சிறிது நேரம் வரை மெளனமாய் இருந்தவன் , “பாட்டி அம்மாவுக்கு என்ன ஆச்சு…?” மெல்ல வாய் திறந்தான்.

” இப்ப எதுக்கு அதெல்லாம்…? வண்டிய கவனமா ஓட்டுடா… ”

“சும்மா ,கடுப்பேத்தாத பாட்டி… சொல்லு”

“சரி …சொல்றேன்டா… !”

“உங்கம்மா எங்களுக்கு ஒரே பொண்ணு… தாத்தாக்கு அவ மேல கொள்ளை பிரியம். அதனால அவள பக்கத்து ஊர்ல உள்ள தன் அக்கா மவனுக்கே கட்டிக் கொடுத்தார். அவளும் சந்தோசமா தான் இருந்தா. ஒரு நாள் ,அவ மாசமா இருக்கான்னு சேதி கேட்டு அவள பாக்க பலகாரம்லாம் எடுத்துகிட்டு நாங்க போனோம். ஆனா,அங்க அவ அழுதுகிட்டு இருந்தா. நாங்க ஆடிப் போயிட்டோம் அவ சொன்னத கேட்டு ” பொங்கி வந்தக் கண்ணீரை துடைத்தார்.

“என்ன பாட்டி சொன்னாங்க…?”

” சொல்றேன் டா…”

“” என்னா நான் தப்பா சொல்லிப்புட்டேன்னு உன்மவ கோவிச்சுக்கறா..? என் மவள கட்டிக் கொடுத்து வருசம் மூணாவுது, அவ இன்னும் மாசமாவுல, உன் மவ ரொம்பச் சின்னவ தானே ,அதுக்குள்ள என்ன அவசரம்… கொஞ்ச நாள் போகட்டும் கலச்சிடுன்னு சொன்னேன் அதுல என்ன தப்பு…?!”

” என்ன தப்பா…! குழந்தங்கறது ஆண்டவன் கொடுக்கிற வரப்பிரசாதம் , அத கலைக்கச் சொல்றது எவ்வளவு பாவம். எப்படிக்கா உன்னால முடியுது…?!”

” அதெல்லாம் எனக்கு தெரியாது… சொன்னத செஞ்சா இங்க இருக்கலாம், இல்லைனா …”

” இல்லைனா …?”

” … வீட்ட விட்டு வெளிய தான் போகணும்!”

” என்ன மாப்ள இப்படி பேசுற…?”

” பர்வதம், இப்படிலாம் பேசாத. இது ஆண்டவனுக்கே அடுக்காது. பாவம்டி உன் தம்பி… ”

” நீங்க வாய மூடிட்டு சும்மா இருங்க… உங்களுக்கு புரியாது…”

“இப்படி சொல்லியே ,இத்தன வருசமா என் வாய மூடிட்டிங்க. இந்த விசயத்த என்னால பொறுத்துக்க முடியாது…”

” அப்படின்னா, நீயும் சேர்ந்து வெளியே போப்பா… உன்ன யாரு இங்க இருக்கச் சொன்னா…” வெளியே தள்ளினான் சேது.

“மாப்ள… நீ செய்றது கொஞ்சங்கூட சரியில்ல… அக்கா, சொந்தம் விட்டுப் போகக் கூடாதுன்னு என் பொண்ண உன் பையனுக்கு கட்டிக் கொடுத்தா, இப்படி அசிங்கப் படுத்திறீங்களே… !”

” ஆமாம்… நாங்க அப்படித்தான்டா… சொல்றது செய்… இல்லன்னா உன் பொண்ண கூட்டிட்டு வெளியே போடா… ”

“என்னப்பா நீங்க ,நெஞ்சில ஈரமே இல்லாத ஜந்துக்கள் கிட்ட போய் கெஞ்சிட்டு இருக்கீங்க… இன்னைக்கி புள்ளய கலைக்க சொன்னவங்க நாளைக்கே என்னையும் கொல்ல திட்டம் போட மாட்டாங்கன்னு என்னப்பா நிச்சயம்..?வாங்கப்பா போகலாம்… !”

“என்னடி சொன்ன…?!” பாய்ந்து வந்தவன் அறைந்தே விட்டிருந்தான்.

“என் முன்னாலயே என் பொண்ண அடிக்கிறியாடா…!” பதிலுக்கு அறைந்தார் உங்க தாத்தா. பஞ்சாயத்தாயிடுச்சு, உங்கம்மாவ வீட்டுக்கே கூட்டி வந்துட்டார். மாசம் ஓடுச்சு… நிறை மாசம்… அப்பதான் ஒரு நாள் நாங்க வீட்டில இல்லாத நேரத்திலே உங்கப்பன் குடிச்சிட்டு வந்து , ” என் பேச்ச மதிக்காம புள்ள பெத்துக்கப் போறியா… பாக்கறேன்டி…” கத்திட்டுப் போனான். கொஞ்ச நாள்ல நீயும் பிறந்த. உன்னை பாராட்டி சீராட்டி நல்லாதான் வளர்த்தா. என்ன ஆச்சுனே தெரியல, ஒரு நாள் ராத்திரி” என்ன தேட வேணாம், நான் தொலைஞ்சு போயிடறேன்… அது தான் என் மவனுக்கு பாதுகாப்பு “னு எழுதி வச்சிட்டு எங்கேயோ போயிட்டா.மக போன கவலைலயே உன் தாத்தா வும் போய் சேந்துட்டார்.”

“எனக்காகவா பாட்டி…! அம்மா காணாம போனது எனக்காகவா?!” கண்கள் கலங்கின.

” மகராசி, இப்ப எங்க இருக்கான்னே தெரியலயே…?”

” பாட்டி, காலைல ஒரு அம்மா இந்த வண்டில வந்தாங்க. அவங்க ரோட்ட தாண்டும் போது எதிர்ல வந்த வண்டி மோதிடுச்சு, போய் ஒரு எட்டு பாத்திட்டு போவோமா…?”

“சரி கதிரு…”

உள்ளே அவன் நுழைய, மருத்துவர் யாரிடமோ , ” ரொம்ப அவசரம் பாம்பே “O” பாஸிடிவ் ரத்தம் தேவைப்படுது… சீக்கிரமா வேணும். மூளைல ரத்தக் கசிவு இருக்கு, உடனே ஆபரேசன் பண்ணியாகணும்…”

“வணக்கம்… இப்ப எப்படி இருக்காங்க…?”

“உடனே ஆபரேசன் பண்ணியே ஆகணும்… ஆபத்தான நிலைல தான் இருக்காங்க…”

” பாம்பே “O” பாஸிடிவ்னு சொன்னீங்களே… !!”

“ஆமாம் கதிர், அது ரொம்ப அரிய வகை ரத்தம்… அதான் ரத்த வங்கில கேட்டிட்டுருந்தேன்… ”

” என் ரத்த வகையும் அதே தான், நான் தரலாங்களா…?” குதூகலித்தான்.

” தாரளமா … இது என்ன கேள்வி…?”

“கடவுள் மாதிரி எல்லா நேரத்திலும் நீங்க தான் தம்பி என் சாரதாவ காப்பாத்தறீங்க… உங்களுக்கு எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல தம்பி…!” சிலாகித்தார் கணவர் பரந்தாமன்.

” என்ன பேர் சொன்னீங்கய்யா…?” கேட்டார் பாட்டி .

” சாரதா…ஏன்மா கேட்கறீங்க?”

“ஒண்ணுமில்ல…” பாட்டி யோசிக்க,

” உங்க பேரு அமிர்தமா…? ஊரு கடலூரா..?”

“ஆமாம்… உங்களுக்கு எப்படித் தெரியும்…?”

” உங்கள பத்தி சாரதா பேசாத நாளே இல்லம்மா…!”

“நிஜமாவா சொல்றீங்க…?”

” இவ்வளவு நாளா என் பொண்ணு எங்க இருந்தா…?நீங்க … ?”

” கவலையே படாதீங்கம்மா… சாரதா என் மனைவி…!”

“மனைவி…?!” முகத்தில் இருவருக்கும் குழப்ப ரேகைகள்.

“சுருக்கமா சொல்லிடறேன்மா… நான் சில வருடங்களுக்கு முன்ன ,ஒரு இரவு நேரத்தில கடற்கரைல சும்மா காத்து வாங்கிட்டு படுத்திருந்தேன்… அந்த நேரத்தில ஒரு பொண்ணு கடலுக்குள்ள இறங்கிட்டு இருந்தா, நான் ஓடிப்போய் காப்பாத்தினேன். அந்த பொண்ணு , “என்ன சாகவிடுங்க…. நான் இருந்தா என் மவன அவன் வாழவிடமாட்டான்…!” என கெஞ்சினாள். அவளை ஆசுவாசப்படுத்தி வீட்டுக்கு கூட்டி வந்தேன். அம்மா கிட்ட நடந்த அத்தனையும் சொல்லிட்டு அழுதா, அவங்களும் நல்லா பாத்துகிட்டாங்க. நாளடைவில், கவலைகள மறந்து நிம்மதியா இருந்தா. சில மாதங்களில் எனக்கு மும்பைக்கு மாற்றலாயிடுச்சு. அவளையும் கூடவே கூட்டிட்டு போயிடலாம்னு அம்மா சொல்ல, சாரதாவும் தலையாட்டினாள்.

அங்கே அவளுக்கும் வேலை கிடைத்தது. சுயசம்பாத்தியம் அவளை மகிழ்வித்தது. ஒரு நாள்அம்மா, “ஏன்மா சாரதா, கேட்கறேன்னு தப்பா எடுத்துக்காத… எவ்வளவு காலந்தான் இப்படி தனிமரமா இருக்கப் போற…?”கேட்டார்.

விரக்தி சிரிப்போடு, “நான் பட்ட மரம்மா… என் வாழ்க்கை அவ்வளவுதான்… இனிமே என்ன பண்ணமுடியும்…?”என்றாள்.

“ஏன் சாரதா, அப்படி சொல்றீங்க? உங்களுக்கு ஆட்சேபணை இல்லைனா நானே உங்கள திருமணம் பண்ணிக்கிறேன்…! என்ன சொல்றீங்க…?”எனறேன்.

செய்வதறியாது விழித்தவள், என் காலில் விழுந்தே விட்டாள். விழிநீர் காலில் பட நான் “என்ன இது…?! எழுந்திருமா… இனி நீ தான் எனக்கு எல்லாமேடா… “என்றேன். நெஞ்சில் சாய்ந்து கொண்டாள்.

எங்களுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் . ஆனால் என்னைப் பொறுத்தவரை நீ தான் எங்கள் மூத்த மகன் கதிர்.” சொல்லி முடிக்க இருவர் கன்னங்களிலும் கண்ணீர் அருவி.

“பாட்டி, இனிமே என்னை யாரும் அனாத பயன்னு சொல்ல மாட்டாங்கள்ள…”

“யாரு எங்க மகன அனாதன்னு சொன்னது…?” கோபத்தில் அனலைக் கக்கின அவரின் விழிகள்.

அதற்குள் டாக்டர், ” கதிர், வாங்க ரத்தம் எடுக்கலாம்… ஆபரேசனுக்கு நேரமாச்சு….”

“இதோ வந்துட்டேன் டாக்டர்… போயிட்டு வந்துடறேங்கய்யா… ”

“அப்பான்னு சொல்லு கதிர்…”

முதன் முறையாக “அப்பா” என அழைக்க ஆனந்தக் கடலில் மிதந்தான் கதிர்.

அமிர்தம் அவன் வலிகளை சொன்னார். வலித்தது அவருக்குந்தான்.

சிறிது நேரத்தில் கதிர் வந்து சேர , “வாங்க அத்தை, கதிர் நாம போய் இனியாவ பார்க்கலாம்… நான் 4 வார்த்த அவங்கள நல்லா கேட்டா தான் என் மனசு ஆறும்.”

பவித்ரா மருத்துவமனை –

“இனியா எப்படி இருக்கா?”

“ஏதோ வரவே மாட்டன்னு முறுக்கிக் கிட்டு போன இப்ப எதுக்குடா வந்த…?”

” வார்த்தைய அளந்து பேசுங்க பார்த்தீபன்…!”

கேட்ட குரலாக இருக்க திரும்பிப் பார்த்தவர் சற்றே இமைக்க மறந்தார் , எதிரே நிற்பவர் “சாரதா இன்ஃபோ டெக்கான் ” ஐ.டி கம்பெனியின் தாளாளர் லயன்.பரந்தாமன்.

“நீங்க எப்படி இங்க….?”

“என் மகன அறிமுகப்படுத்த வந்தேன்… ”

” நான் தான் அவர ஏற்கனவே பார்த்திருக்கேனே… ”

“இல்ல… நானே இன்னைக்கி தான் பாத்தேன்… ”

யாரு என்பது போல் பார்க்க எதிரில் வந்தான் கதிர். “ஆமாம், கதிர் தான் என் மூத்த மகன்… அவன் என்றும் அனாதை இல்லை… புரிஞ்சிதா பார்த்தீபன். உனக்கும் தான்மா சொல்றேன் என் மகன தரக்குறைவா பேசறத இத்தோடு நிறுத்திக்கோ….”

அவர்கள் அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள், “அப்பா “என ஓடி வந்த இனியாவை தூக்கிக் கொண்டு வெளியே நடையைக் கட்டினான் கதிர்.

சாரதாவுக்கு அறுவை சிகிச்சை சிறப்பாக நடந்து முடிந்தது.

மறுநாள் மாலை –

“சாரதா… எப்படி இருக்க?”

“நல்லா இருக்கேங்க… என்னங்க நீங்க எப்ப வந்தீங்க…? எனக்கு என்ன ஆச்சு…?”

“அதெல்லாம் அப்புறம் சொல்றேன்… இப்ப உனக்கு ஒரு பொக்கிஷத்த கொண்டு வந்திருக்கேன்மா. என்னன்னு சொல்லு பாப்போம். அத பாத்தீன்னா துள்ளி எழுந்து உட்கார்ந்திடுவ…”

“சும்மா புதிர் போடாம சொல்றீங்களா…?”

கதிர் முன்னே வந்து நின்றான்.

“நன்றி தம்பி… நீங்க தான் என்னை இங்க கொண்டு வந்து சேர்த்தீங்கன்னு சொன்னாங்க…”

” ” மகனே” ன்னு கூப்பிடு சாரதா… அது தான் சரியா இருக்கும்….இவன் தான் உன புள்ள கதிர்” முன்னே வந்தார் பாட்டி.

“அம்மா” என அழுதாள் சாரதா. அமிர்தம் மெதுவாக தலையசைக்க கதிரை கை நீட்டி அருகில் அழைத்தாள் சாரதா…”

” நோயாளிய அழ வைக்காதீங்க… உணர்ச்சி வசபட்டா ஆபத்து… ”

” இத்தன வருடம் கழித்து என் மகன பாக்கறேன் … இது தான் எனக்கு பெரும் பாக்கியம்… இது நாள் வரை என் கதிரோட பாசங்கற நிழலுக்காக எவ்வளவு ஏங்கி இருப்பேன்… இப்ப தான் கிடைச்சிருக்கு டாக்டர்… இந்த சந்தோசமே போதும் எனக்கு…!”

“அம்மா, நானும் இது வரை அனாதன்ற வெயில்லயே நொந்து கிடந்தேன்… இனிமே உங்க பாசம் மட்டுமே போதும்மா எனக்கு…” கட்டியணைத்து அழுதான்.

” கதிர் ,நீ என்னைக்குமே எங்க பிள்ளை தான்… அழாதேடா ” சிலாகித்தார் பரந்தாமன் .

அனைவரின் கண்களிலும் நெஞ்சிலும் மாமழை.

மனுசங்கடா – வெளி ரங்கராஜன்

மனுசங்கடா

அண்மையில் சென்னையில் குறிப்பிட்ட சில திரையரங்குகளில் மட்டுமே திரையிட வாய்ப்புகள் பெற்ற அம்ஷன்குமாரின்
மனுசங்கடா திரைப்படம் இன்றைய தமிழ் சமூகத்தின் முக்கிய பிரச்னையான சாதிய கட்டுமான இறுக்கத்தை ஒரு நேரிடையான மிகையற்ற யதார்த்த மொழியில் அதற்குரிய தீவிரத்தன்மையுடன் தோலுரித்துக்காட்டிய ஒரு சிறப்பான திரைப்படம்.

அண்மைக்காலங்களில் விளிம்புநிலை வாழ்வியல் பற்றிய சித்தரிப்புகள் குறித்த ஆர்வங்கள் தமிழ் சினிமாவில்பெருகத் துவங்கியிருக்கிற ஒரு சூழலில் தமிழ் சினிமாவின் வழமையான ரொமாண்டிசிஸத்தையும்,குரூரத்தையும் தவிர்த்துதீவிரத்தன்மை கெடாத ஒரு யதார்த்த சூழலை வடிவமைத்திருப்பது ஒரு சிறப்பான உத்தி.

அண்மைக்காலங்களில் தீண்டாமைச் சுவர்களும்,ஆணவக் கொலைகளும்தமிழ் சமூகத்தின் மனசாட்சியை உலுக்கிக்கொண்டிருக்கிற ஒரு காலகட்டத்தில்தலைநகரத்திலிருந்து நூறு கிலோமீட்டர் தூரமே உள்ள ஒருகிராமத்தில் இன்றும் நிலவிவரும் ஒரு தீண்டாமை நடைமுறையை திரைமொழியின் வீச்சுடன் அம்பலப்படுத்தியிருப்பது ஒரு சமூக நோக்கம்கொண்ட துணிச்சலான முயற்சி.

இன்றைய ஜனநாயக அமைப்பில் தங்களுடைய அடிப்படை உரிமைகளைப் பெற நீதிமன்றம் மற்றும் ஊடகங்களை நாடுவதற்கு வாய்ப்பு பெற்றுள்ள கல்வி அறிவு பெற்ற தலித் இளைஞர்கள் கூட சாதியக் கட்டுமானம் ஆழமாக ஊடுருவியுள்ள கிராமிய அடிமட்ட அமைப்புகளை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாத அவல நிலைதான் இத்திரைப்ப டத்தில் காட்சிகளாக வடிவம் பெறுகிறது.

நகரத்தில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒரு தலித் இளைஞன் கிராமத்திலுள்ள தன்னுடைய தந்தையின் திடீர் மரணச் செய்தி கேட்டு துக்கத்துடன் கிராமத்துக்கு விரைகிறான்.அங்கு பொதுவழியில் தந்தையை மயானத்துக்கு எடுத்துச் செல்லமுடியாத சூழல் நிலவுகிறது.அவர்களுக்கென்று உள்ள முட்கள் நிறைந்த பாதை உபயோகிக்க பயனற்றதாக இருக்கிறது. பொதுவழியை உபயோகிக்கும் தங்கள் உரிமையை நிலைநாட்ட நீதிமன்றத்தை அணுகி உத்தரவுபெற்ற பிறகும் கூட கிராமிய அதிகாரிகளும் காவல்துறையும் ஆதிக்க சக்திகளுக்கு துணைநின்று பிணத்தைப் பறித்து தாங்களே எடுத்துச்சென்று புதைக்கின்றனர்.தந்தையின் புதைக்கப்பட்ட இடத்தைக்கூட அடையாளம் கண்டுபிடிக்க முடியாதஅவலத்தையேயே தலித் எதிர்கொள்கிறான். .மரணத்துக்குப்பிறகும்ஒரு தலித் உடல் அவமானத்துக்குரிய பொருளாகவேஇருக்கிறது. மூன்று நாட்களில் நடைபெறும் இச்சம்பவங்களின் மூலமாக இன்றைய கிராமிய
யதார்த்தம் ஒரு வலுவான அழகியல் ஆவணமாக முன்நிறுத்தப்படுகிறது.

எந்தவிதமான செயற்கைத்தன்மையும் அற்று ஒரு இயல்பான உயிரோட்டம் கொண்ட பாத்திரங்களாக நடிகர்கள் இயங்குகின்றனர்.ஹீரோதன்மை அற்ற ஆனால் இயல்பான கோபம் கொண்ட தலித் இளைஞன்,கூட வேலை பார்க்கும் அவன் சுக துக்கங்களில் பங்குகொள்ளும் சகதோழி,நிலைமைகள் குறித்த புரிதலும் அணுகுமுறையும் கொண்ட தலித் தலைவர்,விரைந்து செயலாற்றி நீதிபெற்றுத்தர உறுதிபூணும் வக்கீல்,நிலைமைகளை உணர்ந்து தெளிவான தீர்ப்பு வழங்கும் நீதிபதி,கணவன் இறந்த துக்கத்தை ஒப்பாரிப்பாடல்களால் அரற்றித் தீர்க்கும் வேளையிலும் தன் மகனுக்கு மனைவியாகப் போகிறவளை வாஞ்சையுடன் தடவிப் பார்க்கும் தாய்எனபாத்திரங்கள்மிகவும்உயிர்ப்புடன்வெளிப்படுகின்றன.பிணத்தைவீட்டுக்குள்எடுத்துச்சென்றுதாழிட்டுக்கொள்வது,காவல்துறைஅச்சுறுத்தல்களுக்கிடையிலும் பிணத்தை தர மறுப்பது,இறுதியில் காவல்துறை வன்முறையை பிரயோகித்து பிணத்தை பறித்துப் புதைப்பது என இறுதிக்காட்சிகள் ஒரு அதிகபட்ச நாடக உயிர்ப்புடன் வெளிப்படுகின்றன.

இத்தகைய மிகைத்தன்மையோ குரூரங்களோ அற்ற ஒரு இயல்பான காட்சிமொழி க்கு நம் பொது தமிழ்சினிமா மனநிலை அதிகம் பழக்கப்படாததால் இது ஒரு நவீன நாடகம் போன்றும் ஆவணப்படம் போன்றும் நகர்வதாக நம் சூழலில் தயக்கங்கள் நிலவுகின்றன.ஆனால் மாற்று சினிமா குறித்த அறிவும்,ஆவணப்பட அனுபவமும்,நவீன நாடக நடிகர்களை தன்னுடைய படைப்புகளில் தொடர்ந்து உபயோகப்படுத்தியும்வரும் இயக்குனர் அம்ஷன்குமார் இத்துறைகளின் ஊடாட்டத்தை ஒரு செறிவான காட்சிமொழியாக இத்திரைப்படத்தில் உருமாற்றி இருப்பதை பல காட்சிகளில் காண முடிகிறது.

முக்கியமாக பிணத்தை எடுப்பதற்கு முன்பாக அந்த தலித் இளைஞர்கள் ஆடும்பறையாட்டமும்,தான் குழியில் தள்ளப்பட்டு மண்வீசப்படுவதாக அந்த தலித் இளைஞன் காணும் முடிவற்ற கனவும் காலம்காலமான கூக்குரலின் குறியீடுகளாக உள்ளன.

வெற்று முழக்கங்களோ,உரத்த குரல்களோ இன்றி ஒரு படைப்புக்கலைஞன்செய்யத்துணியும்இத்தகைய ஆதிக்கத்துக்கு எதிரானஅழகியல் பதிவுகள் தான். இப்பிரச்னை குறித்த அதிகபட்ச கவனத்தை வேண்டுவதாக இருக்கின்றன.

—–

அரவிந்தனின் சிறுகதைகள் : ஒரு பார்வை மறதியற்ற மனதின் சுமைகள் / இமையம்

தொலைக்காட்சி, இணையம், முகநூல், பிளாக், தினசரி, வார மாத இதழ்கள் மனிதனின் நேரத்தையும் மூளையையும் ஆக்கிரமித்துவிட்ட இன்றைய வாழ்க்கையில் எதுவும், எல்லாமும் உடனுக்குடன் என்றாகிவிட்ட நிலையில், எதையும் கேளிக்கையான பொருளாக மாற்றலாம், மாற்ற முடியும் என்ற சமூகச் சூழலில் கதைகளைப் படிப்பது, விவாதிப்பது சாத்தியம்தானா என்ற கேள்விகள் அதிகரித்துவரும் நிலையில் – எல்லாவற்றையும் மீறிக் கதைகள் எழுதப்படுகின்றன. கதைகள் படிக்கப்படுகின்றன. விநோதம்தான். எந்த மாதிரியான கதைகளைப் படிக்கிறோம்?

வார, மாத இதழ்கள் போய் தினசரிகளும் இன்று கதைகளை வெளியிடுகின்றன. வாரத்திற்குத் தமிழ்மொழியில் எத்தனை சிறுகதைகள் வெளியிடப்படுகின்றன? மாதத்திற்கு எவ்வளவு? ஆண்டுக்கு? மலைப்பாக இருக்கிறது. மலைமலையாகக் குவிக்கப்படும் கதைகளில் எதைப் படிப்பது, எப்படி படிப்பது, ஏன் படிக்க வேண்டும் என்ற கேள்விகளுக்கு ஒவ்வொருவரிடமும் ஒரு பதில் இருக்கிறது. மலைபோன்று குவியும் இந்தக் கதைகளில் எது நம்மைப் பாதிக்கிறது, எது நம்மை அலைக்கழிக்கிறது, நினைவில் நிற்கும் கதைகள் எவை, மற்றவர்களும் கட்டாயம் படிக்க வேண்டும் என்று நாம் விரும்பும் கதை எது என்று பார்த்தால் மலைபோல் குவிந்திருக்கும் கதைகளில் ஒரு கடுகு அளவு தேறும்.

இந்தக் கடுகு அளவுக் கதைகளில்தான் மனித வாழ்வு எதிர்கொள்ளும் அவலங்கள் நேர்மையாகப் பேசப்படுகின்றன. சமூகம் குறித்த உண்மையான அக்கறைகள் இருக்கின்றன. நேர்மையாகவும் உண்மையாகவும் அக்கறையுடனும் இருப்பதால் இந்தக் கதைகளைப் படிக்க வேண்டியிருக்கிறது. இந்தக் கடுகு அளவு கதைகளில் அரவிந்தனின் கதைகளும் இருக்கின்றன.

‘கடைசியாக ஒரு முறை’ தொகுப்பைப் படித்து முடித்தபோது தோன்றியது, அரவிந்தன் கற்பிப்பதற்காக எழுதவில்லை; கற்பதற்காக எழுதியிருக்கிறார் என்று. இலக்கியப் படைப்பின் அடிப்படை கற்பதுதானே. இக்கதைகளில் வாசகர்கள் அவரவர் திறனுக்கேற்பக் கற்றுக்கொள்ள இருக்கிறது. இது எதனால் சாத்தியமாகிறது என்றால் கதையைச் சொன்ன விதம், கதையைச் சொல்லத் தேர்ந்தெடுத்த மொழி, வடிவம், வாழ்க்கையைப் பார்த்த விதம்.

அரவிந்தனின் கதைகளில் வரும் மனிதர்கள் சென்னை வாசிகள். குறிப்பாகப் பல்லாவரம், சேத்துப்பட்டு, மாம்பலம், குரோம்பேட்டைக்காரர்கள்; நடுத்தரக் குடும்பத்து மனிதர்கள். நகரத்து மனிதர்கள் இயந்திரத்தனமாக இருப்பார்கள் என்பதைப் பொய் என இக்கதைகள் நிரூபிக்கின்றன. நிறையவே காதலிக்கிறார்கள். மனைவியை, குழந்தைகளை, முக்கியமாக நண்பர்களை. மனித உறவுகளைப் பொக்கிஷமாக மனதிற்குள் வைத்திருக்கிறார்கள். அன்பை, நட்பைத் தேவைப்படும் இடங்களில்கூட மறைத்தே வைத்திருக்கிறார்கள். அன்பின் வெளிப்பாடு, மரியாதையின் வெளிப்பாடு மௌனமாக இருக்கிறது. ஒரு சொல் கூடுதலாகப் பேசினால் உறவுகள் உதிர்ந்துவிடும் என்பது மாதிரி இருக்கிறார்கள். நகரம் குறித்த, நகரத்து மனிதர்கள் குறித்த நமது நம்பிக்கைகள் பொய் என்று இக்கதைகள் நிரூபிக்கின்றன. கிராமப்புறங்களில்தான் தன்னைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலைப்படுவார்கள் என்பதெல்லாம் கற்பனை. மாநகரத்து மனிதர்களுக்கும் அதுதான் பெரும் கவலை.

இத்தொகுப்பில் மலையும் மரணமும் முக்கியப் பாத்திரங்களாக இருக்கின்றன. மலையைப் பற்றி, மரணத்தைப் பற்றிச் சொல்வதற்காகவே இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன என்பதுதான் உண்மை. மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்களா? செத்துக்கொண்டிருக்கிறார்களா? வாழ்ந்தபடியே செத்துக்கொண்டிருக்கிறார்கள், செத்துக்கொண்டே வாழ்கிறார்கள். இது எப்படி நிகழ்கிறது என்பதுதான் இக்கதைகள். மரணம்குறித்துப் பலபேர் எழுதியிருக்கிறார்கள். அரவிந்தன் சற்று வித்தியாசமாக மரணத்தை எதிர்கொண்டிருக்கிறார். மரணம் எப்போது, யாருக்கு வரும்? அதைப் பற்றி கவலைப்படாதவர்கள் உலகில் உண்டா? வாழ்வதற்காக எடுக்கப்படும் முயற்சிகளைவிடச் சாகாமல் இருப்பதற்காக எடுக்கப்படும் முயற்சிகள்தான் அதிகம். இயற்கைகுறித்த அறிவு அற்றவர்கள்தான் மனிதர்கள். மரணம்பற்றிய அரவிந்தனின் கதைகளில் ஒரு துளிக் கண்ணீர் சிந்தப்படவில்லை. கண்ணீருக்கு வலிமை உண்டு. அதைவிட அறிவுக்கு.

அரவிந்தனுடைய மனிதர்கள் பேச வேண்டியதைக்கூடப் பேச மாட்டார்கள். சந்தர்ப்பம் வந்தாலும் பேச மாட்டார்கள். பேசுவார்கள். மனதிற்குள். பேசிப்பேசிக் களைத்துப்போய்விடுவார்கள். ‘உருமாற்றம்’ கதையில் வரும் இளைஞன், ‘மலையும் மலைசார்ந்த வாழ்வும்’ கதையில் வரும் நந்தினியின் புருஷன், ‘கடைசியாக ஒரு முறை’ கதையில் வரும் சாம்பசிவன், ‘குமிழி’ கதையில் வரும் ஹயக்ரீவன் எல்லாருமே மனதிற்குள்ளேயே பேசி, விவாதித்து, தர்க்கம் செய்து ஒரு முடிவுக்கும் வரமாட்டார்கள். காரியங்கள் அதன் போக்கில் நடந்துவிடும். நடந்து முடிந்த காரியம், நடக்கிற காரியம், நடக்க இருக்கிற காரியம் எல்லாவற்றையும் பற்றி மனதிற்குள்ளேயே ஆராய்ந்துஆராய்ந்து பார்த்துவிட்டு ஒடுங்கிப்போவார்கள். இவர்கள் மனநோயாளிகளா என்றால் அதுவும் இல்லை. தர்க்கம் செய்கிறவர்கள்.

தொகுப்பின் எல்லாக் கதைகளும் ஒரே நேர்க்கோட்டில் இணைகின்றன. மரணம்தான் அந்த நேர்க்கோடு. மரணத்தை முன்னிறுத்தி அதன் வழியாகக் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. மனிதர்களின் ஆசைகளுக்கு, விருப்பங்களுக்கு, கனவுகளுக்குப் பின்னால் என்ன இருக்கிறது? மரணம். நான் இல்லாவிட்டால் வீடு, சொந்தம், உறவு, கணவன், மனைவி, அலுவலகம், நண்பர்கள் என்ன ஆவார்கள்? இதற்குப் பின்னால் இருப்பது மரணம். நான் இல்லை என்றால் எல்லாம் சீர்குலைந்துவிடும் –

இதற்குப் பின்னாலும் மரணம்தான் இருக்கிறது. மலையைப் பார்க்கும்போது, கடலைப் பார்க்கும்போது மனிதனுக்கு ‘தான் ஒன்றுமில்லை’ என்பது ஏன் தோன்ற மறுக்கிறது? சிறுமைப்படாத மனம் மனிதனுக்கு எப்போது வந்தது? தான் இல்லாத உலகம், தான் இல்லாத வீடு, தான் இல்லாத வாழ்க்கை பற்றிய பயம் மனிதனை அச்சுறுத்திக்கொண்டே இருக்கிறது. அந்தப் பயத்தில் அலறும் மனதின் அவஸ்தைகள்தான் இக்கதைகள். மறதியற்ற மனதின் சுமைகள்.

‘மயான நகரம்’ அரசியல் கதை. சமூகக் கதை. கடந்த காலக் கதை மட்டுமல்ல, நிகழ்காலக் கதையும்தான். சக்தி ராஜ்ஜியத்தின், பெரும்திரளான மக்கள் கூட்டத்தின் கதை. அதிகாரம், கீழ்ப்படிதல், சுரணையற்ற மக்கள் கூட்டம் ஆகியவற்றின் கதை.

அதிகாரம் என்பது என்ன? அதிகாரத்தை அடைவதற்கு, அதிகாரத்தைக் காப்பாற்றிகொள்வதற்காக மனிதர்கள் என்னவெல்லாம் செய்கிறார்கள்? கவிஞர்கள், சிந்தனாவாதிகள், உயர்குலத்தைச் சேர்ந்த பிராமணர்கள், குடிமக்கள் என எல்லாரும் எப்படி அதிகாரத்தின் முன் மண்டியிடுகிறார்கள், மண்டியிட எப்படி போட்டிபோடுகிறார்கள், மண்டியிடுவதைப் பிறவிப் பயனாக எப்படிக் கருதுகிறார்கள் என்பதுதான் கதை. மர்மம். புதிர்.

நாமே நமக்காக உருவாக்கிய அதிகார அமைப்புகள் எப்படிப்பட்டவை? அது மனிதர்களை எப்படி நடத்துகிறது? மண்டியிடுதல் எப்படி நாகரிகமாக, ஒழுக்கமாக, பெருமையாக மாறியது? அதிகாரத்தைத் துறந்த மனம், அதிகாரத்திற்காக விழையாத மனம் யாருக்கு வாய்த்திருக்கிறது? சூழ்ச்சிகள், தந்திரங்கள், கபட நாடகங்கள், துரோகங்கள், கொலைகள், சுரண்டல், வன்முறை இவற்றால் அதிகாரம் உருவாக்கப்படுகிறது. இத்தனையும் நடப்பதால்தான் சக்தி ராஜ்ஜியத்தில் இளவரசன் கொல்லப்பட்டு ரகசியத்தின் கூடாரமாக இருந்த – பிறப்பு விவரம் அறியாத ஓர் இளம்பெண் இளவரசியாக்கப்படுகிறாள். அதிகாரம் வேண்டி எதையும் செய்வார்கள் மனிதர்கள். மனிதர்களுக்கு மட்டும்தான் அதிகாரம் வேண்டியிருக்கிறது. முதலமைச்சர், பிரதமர், கவர்னர், மந்திரி வேண்டியிருக்கிறது. பூனைக்கு, நாய்க்கு, பன்றிக்குப் பிரதமர், முதல்வர் தேவையில்லை. முதல்வர், பிரதமருக்கு அவை பயப்படாது என்பதை ‘மயான நகரம்’ கதையில் பார்க்க முடியும். கதை புதிது. கதை சொன்ன விதம் புதிது. கதை சொல்லத் தேர்ந்தெடுத்த சொற்கள் புதியவை. சின்னச் சின்ன செறிவான வாக்கியங்கள் ஈர்ப்பைத் தருகின்றன.

அரவிந்தனுடைய மனிதர்கள் ஒரு நிலையில் பார்த்தால் மன நோயாளிகள்தான். ஒரு சமயத்தில் ஒருவரைப் பிடித்திருக்கிறது. அதே நபரை மற்றொரு சமயத்தில் பிடிக்காமல் போகிறது. ஏன்? காரணம் தெரியாது. காரணம் இல்லை. நாம் செய்கிற பல காரியங்களும் அப்படித்தான் இருக்கின்றன. தோன்றியது, செய்தேன். காரணம் இல்லை. தெரியாது என்று சொல்கிற மனிதர்கள். அப்படியான ஒரு நபர்தான் ‘உருமாற்றம்’ கதையில் வரும் இளைஞன். சுயசரிதைத் தன்மைகொண்ட கதை. குற்றவுணர்ச்சியால் பேசப்படும் கதை. கதைசொல்லிக்கும் கே. ராமமூர்த்தி என்ற மனிதருக்குமான கதை. இவன் குழப்பமான பேர்வழி. அவர் அவனுக்குப் பல புதிய கதவுகளைத் திறந்துவிடுகிறார்.

அவர் திறந்துவிட்ட கதவு ஒன்று புத்தகம். அவன் தன் கஷ்டங்களை, சிரமங்களை, ஏன் மகிழ்ச்சியைக்கூடக் கொட்டித் தீர்க்கிற இடமாக இருக்கிறார் ராமமூர்த்தி. அவரைப் போன்ற மனிதர்களை அடையாளம் காணவும், நட்புறவைப் பேணவும் சிலருக்கு வாய்க்கிறது. பலருக்கு அப்படி நிகழ்வதில்லை. எல்லாருக்குமே கொட்டித் தீர்ப்பதற்கு மலை போன்று விஷயங்கள் குவிந்திருக்கின்றன. இறக்கிவைக்க, கொட்டித் தீர்க்க. அதற்கான இடம் வேண்டும். இடம் கிடைக்காதவர்கள் பாவப்பட்டவர்கள்.

கதையின் கேள்வி மனித உறவுகள் உண்மையில் மேம்பட்டதுதானா என்பதுதான். இல்லையென்ற பதில் கதைக்குள்ளேயே இருக்கிறது என்று கருதலாம். மனிதர்கள் ஏன் ஒரே மாதிரி இருப்பதில்லை? இருக்க முடிவதில்லை? புனிதர்களைத் தேடி மனித மனம் ஓயாமல் அலைந்துகொண்டிருக்கிறது. அதனால்தான் கல்லின் மீது, மரத்துண்டின் மீது, பாம்புப் புற்றின் மீது, நம்பிக்கைகளின் மீது புனிதத் தன்மையை ஏற்றுகிறது. ‘உருமாற்ற’த்தின் கதைசொல்லிக்கு ராமமூர்த்தி.

பல நேரங்களில் நாம் ஏற்றிவைத்த புனிதங்களே நம்மைப் பார்த்துக் கேலி செய்யும். ‘உருமாற்றம்’ கதையில் நிகழ்வது அதுதான். மனிதர்கள் மாறுகிறார்கள். ஏன், எப்படி, எதனால்? தெரியாது. சூழல், சந்தர்ப்பம். புனிதங்கள் நிறமிழக்கும்போது புனிதத்தை ஏற்றிய மனம் நிஜத்தை ஏற்க மறுக்கிறது. மறுபக்கம் புனிதத்தை ஏற்றியவனும் கயமைத்தனம் கொண்டவன்தான். தனக்கான நியாயத்தைக் கற்பித்துக்கொண்டே கடைசிவரை உட்கார்ந்தே இருக்கிறான். புலம்புவதால் பலன் உண்டா? உருமாற்றம் யாருக்கு? கதைசொல்லிக்கா, ராமமூர்த்திக்கா? மனித மனத்தின் விசித்திரங்களை இக்கதை நிகழ்த்திக் காட்டுகிறது.

‘மலையும் மலைசார்ந்த வாழ்வும்’ கதையில் மலைதான் பிரதானப் பாத்திரம். மலை பேசுவதில்லை. எதையும் வெளிப்படுத்துவதில்லை. உணர்ச்சிகளைக் கொட்டுவதில்லை. ஆனால் இதற்கெல்லாம் காரணமாக இருக்கிறது. மலை ஒவ்வொரு நிமிடமும் மனிதர்களுக்கு ரகசியமாக ஒன்றைச் சொல்லிக்கொண்டேயிருக்கிறது. நாம்தான் அதைக் கேட்பதில்லை. மனிதன் எவ்வளவு அற்பமானவன். மனைவி, கணவன், நண்பர்கள், குழந்தைகள் என்று இருந்தாலும் ஒருபோதும் ஒன்றாக இருந்ததே இல்லை. அப்படி இருப்பதாக நடிக்கிறார்கள். மலை நடிப்பதில்லை.

மனிதர்கள் மாறக்கூடியவர்கள். பிரிந்து போகக்கூடியவர்கள். நந்தினி இறந்துபோகிறாள். அவள் நேற்று மனைவி நந்தினி. இன்று பிணம். எது உண்மை? எது சரி? எது நித்தியம்? எது அநித்தியம்? வாழ்வின் விநோதம் இது. வாழ்வின் பிரம்மாண்டத்தைப் பார்த்துப் பரிதவிக்கும் மனித மனதின் அவஸ்தை இந்தக் கதை. இயற்கையின் பிரம்மாண்டத்தையும் மனிதனின் நிலையாமையையும் அழகாகத் தனக்கான மொழியில் அரவிந்தன் எழுதியிருக்கிறார். தற்காலத் தமிழ் படிப்பதற்குச் சுவையாகத்தான் இருக்கிறது.

மரணத்தை முன்னிறுத்திப் பேசும் மற்றொரு கதை ‘கடைசியாக ஒரு முறை’. மரணம் நிகழவில்லை. நிகழ்ந்தால் என்னாகும் என்பதுதான் கதை. விபத்து நடக்கிறது. அந்த விபத்தின் வழியே வாழ்வின் நிஜத்தன்மையை உணர்கிறான் சாம்பசிவன். தனிமனித வாழ்க்கை, குடும்ப, சமூக வாழ்க்கையில் ஒரு மனிதனின் இடம் என்ன? கணவன், மனைவி, குழந்தைகள், நண்பர்கள் எல்லாருமே கொடுக்கல் வாங்கல் உறவால் பின்னப்பட்டவர்கள். கொடுக்கல் வாங்கலில் சிறு பிசிறு ஏற்பட்டால் அத்தனை உறவுகளும் விரிசல்கள் காண்கின்றன. இந்த விரிசல்களை மேலும் பெரிதாக்குவது போலவே காரியங்கள் நடக்கின்றன. எந்த உறவாக இருந்தாலும் மனிதர்கள் கண்ணாடி போன்றவர்கள். கைதவறினால் கண்ணாடி உடையத்தானே செய்யும்? இதுதான் கதையின் மையம். இரவில் தூங்கிக்கொண்டிருக்கும் மனைவி பிணமாகத் தெரிகிறாள். குழந்தைகள் பிணமாகத் தெரிகிறார்கள்.

சற்றுச் சிந்திக்கும் திறனுள்ள, தூக்கத்தில் திடீரென்று விழிப்புக் கொள்ளும் மனிதனுக்குத் தோன்றுவது இது. இன்றைய நவீன குடும்ப அமைப்பு, உறவுகள் எப்படி இருக்கின்றன என்பதைப் போதனையில்லாமல் சொல்கிறது ‘கடைசியாக ஒரு முறை’ கதை. பவித்ராவுக்குச் சாவு பற்றிய பயம் இல்லை. பவித்ராவுக்கு மட்டுமில்லை, அரவிந்தனுடைய பெண்களில் யாருக்கும் அந்தப் பயம் இல்லை. ஆனால் எல்லா ஆண்களுக்கும் இருக்கிறது. மரண பயத்தில் தூங்காமல் கிடக்கிறார்கள்.

அரவிந்தனின் பாத்திரங்கள் அதிர்ந்து பேசாதவர்கள் மட்டுமல்ல. அன்பைச் சொல்லத் தெரியாதவர்களும்கூட. ஒருவகையில் தங்களுக்குள்ளேயே சுருங்கிப் போனவர்கள். குறிப்பாக ஆண்கள். பெண்கள் துணிச்சல் மிக்கவர்களாக இருக்கிறார்கள். சக்தி ராஜ்ஜியத்தின் ராணி, பவித்ரா, ஸ்ரீமதி என்று. ‘குமிழி’ கதையில் ஸ்ரீமதிதான் பலகாரம் கொடுக்கிறாள். அவனைப் பற்றி வீட்டில் சொல்கிறாள். கல்யாணத்தைத் தைரியமாக எதிர்கொள்கிறாள். அதே மாதிரி தன் குழந்தைக்குக் காதலனின் பெயரை வைக்கும் தைரியம் அவளிடம் உண்டு.

ஹயக்ரீவனுக்கு ஒன்று மட்டும்தான் தெரியும். அது என்னவென்றால் புலம்புவது. ‘குமிழி’ கதையின் நாயகன் மட்டும் இப்படியில்லை. அரவிந்தனுடைய எல்லா ஆண்களுமே அப்படித்தான். கிருஷ்ணா, நந்தினியின் புருஷன், சாம்பசிவன் என்று பலரும் புலம்புகிறவர்கள். ஆண்களின் வீராப்பு, திறமை எல்லாம் மனதிற்குள் புலம்புவதில்தான் இருக்கிறது. ஆண்கள் எப்போதும் இப்படித்தான் இருக்கிறார்கள். ‘குமிழி’ காதல் கதை. தமிழ் சினிமாவில் வருவது மாதிரி காதல்ன்னா என்னா தெரியுமா என்று கேட்டு பக்கம்பக்கமாக வசனம் இல்லை. பிரிவு இருக்கிறது. ஆனால் ஒரு சொட்டுக் கண்ணீர் இல்லை. கூடுதலாக ஒரு வார்த்தை இல்லை.

தொகுப்பின் கடைசிக் கதையான ‘தனியாக ஒரு வீடு’ மற்ற கதைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. நடைமுறை வாழ்க்கைச் சிக்கலைப் பேசுகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் இன்று மனிதனை இயற்கையிடமிருந்து பிரித்துவிட்டன. அதே மாதிரி இயற்கையான வாழ்க்கை முறையிலிருந்தும் மாற்றிவிட்டன. விவசாயம் இன்று இழிவான தொழில். அதைச் செய்வதற்கு யாருக்கும் விருப்பமில்லை. கம்ப்யூட்டரின் கான்பிகரேசன் தெரிந்தவனே மேதை. மென்பொருள் தயாரிப்புக் கம்பெனியில் வேலை பார்ப்பவனே மனிதன். எல்லாருக்குமே வெள்ளைக்கார துரைமார்களாக மாற வேண்டும் என்பதே லட்சியம். ஏரி, குளங்கள் மண் மேடாக்கப்பட்டு வீடுகள் கட்டப்படுகின்றன. பன்னாட்டு நிறுவனங்களுக்குக் கொடுத்ததுபோக எஞ்சிய விவசாய நிலங்கள் வீட்டு மனைவிரிவுகளாக மாற்றப்படுகின்றன. எல்லாம் சரி, மனிதர்கள் எதைச் சாப்பிடுவார்கள்? கம்ப்யூட்டரின் உதிரி பாகங்களையா? இதுதான் இக்கதையின் கேள்வி. கம்ப்யூட்டர், இணையம், மின்சாரம் ஏன் உடைகூட இல்லாமல் மனிதனால் இருக்க முடியும். உணவு இல்லாமல் இருக்க முடியுமா? இது ஏன் மெத்தப் படித்தவர்களுக்குத் தெரியவில்லை என்பதுதான் அரவிந்தனின் ஆதங்கம். நாகரிகம், வளர்ச்சி என்று நாம் வாழ்வின் ஆதாரத்தையே இழந்துவிட்டோம்.

ஒரு குடும்பத்திற்கு ஒரு நாளைக்குத் தேவைப்படும் உணவுக்கான செலவைவிட ஒரு மனிதனுக்கு ஒரு நாளுக்கான தண்ணீருக்காகச் செலவிடப்படும் தொகை அதிகம். ஒரு லிட்டர் தண்ணீரின் விலை இருபது ரூபாய். ஒரு லிட்டர் பால் விலை நாற்பது ரூபாய். நாம் எப்படிப்பட்ட சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? வாட்டர் பாட்டில் பெருமையின் அடையாளமாக, நாகரிகத்தின் அடையாளமாக மாறியது, மாற்றியது யாருடைய குற்றம்? இதுகுறித்த குற்ற உணர்ச்சி யாரிடம் இருக்கிறது என்ற கவலை அரவிந்தனுக்கு மட்டுமே உரியதல்ல என்று சொல்கிறது ‘தனியாக ஒரு வீடு’ கதை.

எங்கோ கேட்டோம், எங்கோ படித்தோம், இன்னாருடைய சாயல் இருக்கிறது என்றெல்லாம் இல்லாமல் இருப்பது நல்ல படைப்புக்கான அடையாளம். அந்த அடையாளம் இத்தொகுப்பில் இருக்கிறது.

இலக்கியம் என்பது வெறும் கதை அல்ல. படிப்பு. வாழ்க்கை. வருங்கால சந்ததியினருக்கான சொத்து என்று சொல்கிறது அரவிந்தனுடைய ‘கடைசியாக ஒரு முறை’ கதைத் தொகுப்பு.

••••

கடைசியாக ஒரு முறை (சிறுகதைகள்)
அரவிந்தன்
காலச்சுவடு பதிப்பக வெளியீடு
விலை ரூ: 100

பாராட்டு பத்திரம் வாசிப்பதல்ல விமர்சனம் – இமையம்

இமையம்

அக்டோபர் 21,2018 – வல்லினம் யாவரும் கூட்டுப் பதிப்பகத்தின் சார்பில் மலேசிய எழுத்தாளர்களின் மூன்று நூல்கள் வெளியிட்டு நிகழ்ச்சி நடைப்பெற்றது. மா.சண்முகசிவா எழுதிய சிறுகதை நூலினை வெளியிட்டு எழுத்தாளர் இமையம் பேசியது:

தமிழ்நாட்டில் தற்போது எழுதப்படுகின்ற விமர்சனங்கள் என்பது அரசாங்க ஊழியர் ஒருவர் ஓய்வுப்பெறும்போது ‘பணிநிறைவு பாராட்டு விழா’ பத்திரம் வாசித்து அளிப்பது போல்தான் இருக்கிறது. நூல் வெளியிட்டு விழாவில் பேசப்படும் உரைகள், உரை வீச்சுகள் எல்லாம் புகழ் உரைகளே.

பாராட்டு பத்திரம் வாசிப்பவர் விமர்சகன் அல்ல. பாராட்டுப் பத்திரம் வாசிப்பதை ரசிப்பவன் எழுத்தாளன் அல்ல. படைப்பு குறித்து பேசாமல், படைப்பை எழுதிய எழுத்தாளன் குறித்து பேசுவதை புகழ்வதைதான் விமர்சனம் என்று கூறுகிறார்கள். நவீன நாவல், சிறுகதை, கவிதை என்று பேசுகிறார்கள். ஆனால் நவீன விமர்சனம் குறித்துப் பேசுவதில்லை. நான் தொகுப்பில் இருக்கும் சிறுகதைகளைப்பற்றி மட்டுமே பேச விரும்புகிறேன். கதைகளை எழுதிய மா.சுண்முகசிவாவைபற்றி அல்ல. சிறு பத்திரிக்கை எழுத்தாளர்கள், நவீன எழுத்தாளர்கள் எழுதிய படைப்புகள் எல்லாம் அரசியல் நீக்கம் செய்யப்பட்டவையே.

மா.சண்முகசிவா ‘சாமி குத்தம்’ என்று ஒரு கதை எழுதியிருக்கிறார். அரசியல் கதை. சாமிகுத்தம் கதையில் நடக்கும் அரசியல் குறித்துத்தான் தமிழ்நாட்டில் நூற்றாண்டுகளுக்கு மேல் பேசப்பட்டிருக்கிறது. அந்த ஒற்றைப் புள்ளியை வைத்துத்தான் தமிழ்நாட்டு அரசியலே நடந்துக்கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் அரசியல் விஷயங்கள் கதையாகியிருக்கிறது. ஆனால் இலக்கியமாகவில்லை. மா.சண்முகசிவாவின் சாமிக்குத்தம் கதை இலக்கியமாகியிருக்கிறது.

‘மலேசியா குறித்தும், மலேசிய இலக்கியம் குறித்தும் தமிழக மக்களும், தமிழக வாசகர்களும் வைத்திருக்கும் மனக்கற்பனைக்கு எதிரானதாகவே மா.சண்முகசிவாவின் சிறுகதைகள் இருக்கின்றன. மலேசியா என்றாலே இரட்டை கோபுரத்தின் பிரமாண்டம்தான் நினைவுக்கு வரும். ஆனால் மா.சண்முகசிவாவின் சிறுகதைகள் அந்த இரட்டை கோபுரத்தின் பின்னால் இருக்கும் இருளைக் காட்டுவதாக இருக்கிறது. தொகுப்பில் உள்ள எட்டு கதைகளில் 5 கதைகள் குழந்தைகளைப் பற்றியது.. எல்லாம் சரி தான் என்ற கதை மனிதர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய அன்பைப் பற்றி சொல்கிறது.

மா.சண்முகசிவாவிற்கு குழந்தைகள் மன உலகமும், சமூக அரசியல், உளவியல் உலகமும் தெளிவாக தெரிந்திருக்கிறது. செய்திகளை, தகவல்களை எப்படி ஒரு கதையாக மாற்றுவது என்ற நுட்பம் தெரிந்திருக்கிறது’

1998ல் வீடும் விழுதுகளும் என்ற சிறுகதைத்தொகுப்பினை வெளியிட்டிருக்கிறார். 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு தொகுப்பு வெளியிடுகிறார். இது ஆச்சரியமாக இருக்கிறது. ஆண்டுக்கு பத்து புத்தகங்கள் என்று கொத்தாக வெளியிடுகிற தமிழ்ச்சூழலில் 20ஆண்டுகள் கழித்து தனது இரண்டாவது சிறுகதைத்தொகுப்பை வெளியிடுகிறார் என்பதிலிருந்தே அவர் தனித்துவம் மிக்கவர் என்று தெரியவருகிறது.


சண்முகசிவாவின் சிறுகதைகளில் ஆர்ப்பாட்டம் இல்லை. கூச்சல் இல்லை. தன்முனைப்பு இல்லை. எதை சொல்லவேண்டும் என்று விரும்புகிறாரோ அதை நல்ல தமிழில் தெளிவாக எழுதிருக்கிறார்.

கதாசிரியர் நகைச்சுவை உணர்வு உள்ளவர் என்பது கதைகளை படிக்கும்போது தெரியும். சமயம் சார்ந்த சடங்குகள் மீது ஓயாமல் கேள்விகளையும், கிண்டல்களையும் வைத்தபடியே இருக்கிறார். தமிழ் மொழியை புதுப்பிக்க வந்தேன். மீட்டெடுக்க வந்தேன். என்னால்தான் நவீன தமிழ் இலக்கியம் செழித்திருக்கிறது என்ற ஆணவப்பேச்செல்லாம் கதையாசிரியரிடம் இல்லை.

’மலேசியாவில் வாழக்கூடிய தமிழர்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பதை முழுமையாக புரிந்து கொள்வதற்கு இந்த சிறுகதைகள் நிச்சயமாக உதவும். அதோடு இந்த தொகுப்பை படிக்கும்போது நல்ல சிறுகதைகளைப் படித்த உணர்வு ஏற்படும்.’ என்று தொகுப்பில் உள்ள எட்டு சிறுகதைகள் குறித்தும். விரிவாகப் பேசினார்.

*****

“தளை மீறும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகள்…” – சம்பு.

சம்பு

சம்பு

இதுகாறுமான கெட்டிதட்டிப்போன பத்தாம்பசலித்தனமான சமூக அபிப்ராயங்களின்மீது சம்மட்டி வீசும் தீர்ப்புகளை சமீபத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
இந்தியா போன்ற பன்முகப்பட்ட கலாச்சாரம் பண்பாட்டு அசைவுகளை உள்ளடக்கிய ஒரு நாட்டில் சரியுந்தவறுமான அரையுங்குறையுமான புரிதல்களுடன் வாழ்கிற மக்கள் திரள் அதிகம்.

நீண்டகாலச் சட்டப் போராட்டங்கள் வழி பெறப்பட்ட இத்தீர்ப்புகள் இன்று சமூகவெளியில் உண்டாக்கியிருக்கும் விளைவுகள் பாரதூரமானவையாகும்.நமது கற்பிக்கப்பட்ட திணிக்கப்பட்ட பிரித்தறிய இயலாமல் வெகுமக்கள் பின்பற்றும் கலாச்சார மற்றும் பண்பாட்டு அரசியல் இதற்குப் பின்புலக் காரணிகளாகும்.இந்தத் தளைகளிலிருந்து ஒரு தனி நபர் சுலபமாக எந்த விதிமீறலையும் நிகழ்த்தவியலாவண்ணம் அவர் மனம் பூஞ்சைச் சிந்தனைகளால் வனையப்பட்டிருக்கிறது.

தனிமனித விருப்பம் மற்றும் சுதந்திரம் ஆகியவற்றைப் புரிந்து கொள்வதில் இந்திய சமூகம் அவ்வளவு சிக்கலான கட்டமைப்பைக் கொண்டது. குடும்ப அமைப்பு, குழந்தை வளர்ப்பு, கல்வி, சுகாதாரம், பொதுச்சூழல் கலாச்சார மற்றும் மரபார்ந்த நம்பிக்கைகள் என அது விரிவான தளங்களில் பல்லாயிரம் இண்டு இணுக்குகளுடனே கூடிய கருத்துருவாக்கங்களைப் பெற்றிருக்கிறது. இதிலிருந்து மீளவோ புதிய விடியலை கற்பிதங்கொள்ளவோ அது ஒருபோதுமே தானாக முயல்வதில்லை.கற்பிக்கப்பட்ட பிற்போக்குக் கருத்துகளின் வழிநின்றே எல்லாப் பிரச்சனைகளையும் பண்பாட்டு அசைவுகளையும் அது அணுக முயல்கிறது.

இப் பின்புலத்திதான் இந்திய உச்ச நீதிமன்றத்தின் 3 முக்கியத் தீர்ப்புகள் வெளிவந்திருக்கின்றன. இதனை நம்பிக்கை மற்றும் மதப் பின்னணியில் வைத்து எதிர்த்துப் போராடுகிற அரசியல் சாரா தனி அமைப்புகள் மற்றும் ஆதாயத்தின் கனிகளைக் கொய்யக் காத்திருக்கும் அரசியல் கட்சிகள் அனைத்தும் இந்தச் சமூகத்தை இன்னுமொரு நூற்றாண்டு பின்னோக்கி இழுக்கிற கெடுவேலையை அவ்வளவு குதியாளமிட்டபடி செய்து வருகின்றன.தவிர அதை அவ்வளவு உணர்வுப்பூர்வமாகவும் அணுகிக் கொண்டிருக்கின்றன.எவ்வித சிறு நெருடலுமின்றி சட்ட மதிப்புமின்றி மாபாதகமாக இந்தத் தீர்ப்புகளைச் சித்தரித்து அதிலிருந்து இச்சமூக மக்களை மீட்பதற்கான தூதர்களாக தம்மை முன்னிருத்தித் தெருவிலிறங்குகின்றன.

தவிர, கலவையான மனநிலையில் குழம்பிக் கிடக்கிற இம்மக்களைப் பெரிதும் நம்பி அவர்களிடம் உணர்வு ரீதியான தூண்டலை எளிதில் உண்டாக்கி அதன்மூலம் தமக்குத் தேவையான அரசியலதிகாரத்தை வென்றெடுக்கும் மலினமான யுக்தியை சில ஓட்டுக்கட்சிகள் கைக்கொண்டிருக்கின்றன.

இந்தச் சூழலை இயன்றவரை குரூர யுக்தியுடன் சரியாகப்பயன்படுத்திக் கொண்டு தமது எதிர்காலத்தை அக்கட்சிகள்
திட்டமிடுகின்றன.வேறு எவ்வகையான முற்போக்கு அம்சங்கூடிய மாற்றங்களுக்கு சமூகத்தை தயார்செய்வதை விடவும் சகமனித வெறுப்பை பல்வேறு காரணிகளை முன்வைத்து விதைப்பதன் வழி பெரும்பான்மையான மக்கள் திரளை ஒருங்கிணைக்க முடியுமெனவும் அவைகள் நம்புகின்றன.
சில நேரங்களில் அதில் வெற்றியடையவும் செய்கின்றன.

இவ்வளவு குளறுபடியான ஒரு பின்புலத்தில் இம்மண்ணில்
மக்கள் தாம் விரும்பிய வாழ்வினை சுதந்திரமாக வாழவும் தம் கருத்துக்களை கலாச்சார பண்பாட்டுத் தளத்தில் வைத்து உரையாடவும் விவாதிக்கவுமான அரசியல் சாசன உரிமைகளையும்
நாம் பெற்றே இருப்பதையும் ஞாபகங்கொள்ள வேண்டியிருக்கிறது.

ஓர் சுதந்திர வழிப்பட்ட சமூகத்திற்கான முன்மொழிதலை உச்சநீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புகள் உறுதிப்படுத்துகின்றன.

தீர்ப்பு: 1.

நமது உச்சநீதிமன்றம் IPC 377ல் உள்ள பிரிட்டிஷ் காலத்திய கடும் விதிமுறைகளின் சில ஷரத்துகளை சிறிய அளவு ரத்து செய்து ஓரினச்சேர்க்கையை குற்றவிலக்குடைய நடவடிக்கை என அங்கீகரிக்கிறது.

இதன்படி ஓரினச்சேர்க்கையாளர்கள்,பெண்களிடையே பாலுறவு கொள்பவர்கள் மற்றும் மாறிய பாலினத்தவரிடையே ஒப்புதலுடன் ஏற்படும் தன்பாலின நடவடிக்கைகளுக்கு இந்த ஷரத்தின் கடுமை பொருந்தாதெனக் குறிப்பிட்டிருக்கிறது.

இதைக் குற்றவிலக்குடைய ஒன்றாகக் கருதும் 125வது நாடாகத் திகழ்கிறது இந்தியா.எனினும் விலங்குகள் அல்லது சகமனித ஒப்புதலின்றி யாரோடும் மேற்கொள்ளும் பாலியல் செயல்களை IPC377 ,வழமைபோல் கட்டுப்படுத்தவே செய்கிறது.

ஒட்டுமொத்த இந்தியாவின் பாலியல் விழைவுகள் கட்டுப்பெட்டித்தனத்துடன் அடக்கிவைக்கப்பட்ட, சந்தர்ப்பங்களில் மோசமாக அத்துமீறுகிற என்ற எதிரெதிர் கோணங்களில்தான் அணுகப்பட்டு வந்திருக்கின்றன. மட்டுமல்லாமல் பால் மாறுபட்ட மனிதர்களைப் புரிந்து கொள்வதில் மொத்த சமூகமே வெகுவாகப் பின் தங்கியிருக்கிறது.

நாம் வாழும் இதே மண்ணில் சில உயிரிகள் பல்வேறுபட்ட அடிப்படைத் தேவைகளுடன் ஜீவித்துக் கிடக்கின்றன. ஏந்துவார் கரங்களை தவம்போல் எதிர்பார்த்தே கண்ணீருடன் அவர்தம் காலங்களும் கடந்துபோனதைக் கருத்திற்கொண்டு இத்தீர்ப்பு அவர்களை வெகுவாக ஆறுதல்படுத்துகிறது.

தீர்ப்பு:2

விதிக்கப்பட்ட வாழ்வைக் கொண்டாடும் நிர்ப்பந்தத்தை காலம்காலமாய் பெண்களின்மீது திணித்துவைத்திருக்கிறது நம் சமூகம். அதிலிருந்து சிறிய விடுதலையோ அல்லது சிறு விருப்பமோ ஒன்றும் சட்டக்குற்றமாக கருதவேண்டியதில்லையென அறிவிக்கிறது மற்றொரு தீர்ப்பு.(IPC497).
சநாதானத்தின் வழிவந்த ஆகப்பெரும் ஆகிருதி பொருந்திய நம் மூத்தகுடிகளை விக்கித்துப்போகச் செய்யும் வல்லமை கொண்டதுதான் இந்த அறிவிப்பு. எனினும்,நம் புரிதல்களில் தீமை நேர்ந்துவிடக்கூடாது.

மிக அதிகமாக நையாண்டியுடன் உரையாடல்களிலும் சமூக ஊடகங்களிலும் விமர்சிக்கப்பட்ட ஒரு தீர்ப்பாகவுமிது பார்க்கப்பட்டது.
யாரும் யாரோடு வேண்டுமானாலும் போகலாம் வரலாமென்பதைச் சொல்ல உச்சநீதிமன்றம் எதற்கு?
இந்த நீதிபதிகள் நம் கலாச்சாரத்தைப் புரிந்துகொண்டுதான் தீர்ப்புகளைச் சொல்கிறார்களா?
தீர்ப்புக் கொடுத்த நீதிபதியின் மனைவி வேறு ஒருவருடன் தொடர்பிலிருந்தால் மனைவி வரும்போது வந்து சேரட்டும் அதுவரை சற்று தூங்கி எழுந்தால் தேவலையென அவர் நினைப்பாரா?

இந்த நாட்டில் ஆயிரம் பிரச்சனைகள் தலைதூக்கி நிற்கும்போது யார் யாரிடம் ட்ரவுசரைக் கழட்டுவது அல்லது சேலையை அவிழ்ப்பது என்பதுதான் பிரதானப் பிரச்சனயா என்றெல்லாம் வெகுவாக அலசி ஆராயப்பட்டது இந்தத் தீர்ப்புதான்.

ஆனால்,
உண்மையாகவே முறைதவறிய உறவுகளை இத்தீர்ப்பு ஊக்குவிக்கவுமில்லை.தாங்கிப் பிடிக்கவில்லை. ஆனால் அப்படி மட்டுமே பார்க்கும்படி மூளை சுருங்கிய ஆணாதிக்க மனம் கருதுகிறது.

அசந்தர்ப்பமான ஆண் பெண் உறவுகளில் பெண்ணை மட்டும் குற்றவாளியாகக் கருதுகிற சமூகத்தின் குறுகிய புரிதலுக்கும் அபிப்ராயத்துக்கும் இத்தீர்ப்பு முட்டுக்கட்டை போடுகிறது.

பரஸ்பரம் ஆண்/பெண் இருவரும் நற்புரிதலுடன் வாழ்தலின் அவசியத்தையும் ஒழுக்கத்தின் தேவையையும் நிர்ப்பந்திக்கிறது.

பெண்ணை மட்டும் குற்றம் சுமத்தி நிர்ப்பந்திப்பதிலிருந்து விலக்களிப்பதன் மூலம் இந்த உறவிலிருந்து சட்டப்படி ஆண் தப்பித்து வெளியேற இருக்கின்ற வாய்ப்புகளை முற்றிலும் நிராகரிக்கிறது.

எனவே, எல்லோர் வீட்டிலிருந்தும் பெண்களெல்லாம் அடுத்த ஒரு மணி நேரத்தில் வீட்டை விட்டு வெளியேறி அடுத்தவருடன் போய்விட்டால் என்கிற மலினப்பட்ட சிந்தனையை ஆண்மனம் கற்பிதங்கொள்ள வேண்டியதில்லை.

தீர்ப்பு:3

அணிலும், மானும், குரங்கும்,எருமையும், பசுவும், நாயும்கூட கடவுளை வழிபட பெற்றிருக்கும் உரிமையை சற்றே விரிவுபடுத்தி நமது பெண்களுக்கும் அதையளிக்க முன்வருகிறது இன்னொரு தீர்ப்பு. பெண்களுக்கான வழிபாட்டு உரிமையை உறுதிப்படுத்தும் விதமாக சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களும் வழிபடலாம் என்ற உத்தரவுக்குப் பிறகு சகிக்கவியலாத பிற்போக்கு கருத்துகளும் மோசமான எதிர்வினைகளும் இத்தீர்ப்பின் அசல் நோக்கத்தைத் திசைதிருப்பும் வகையில் சமூக மற்றும் அரசியல் ரீதியான இழிநடவடிக்கைகளாக மாறியிருக்கின்றன.

நம் முன்னோர்கள் எதற்காக சிலவழிமுறைகளைக் கடைப்பிடித்தார்களெனச் சாதாரணமாகத் தொடங்கிய உரையாடல் கீழ்த்தரமான கருத்துக்களை முன்வைத்து அடுத்தடுத்த நகர்வுளுக்குச் சென்றது.

பிஜேபி இதில் அவ்வளவு அப்பட்டமாக தீர்ப்பின் எதிர்பலனை அறுவடை செய்யக் களமிறங்கியது.
கேரள இடது முன்னணி அரசு தீர்ப்பை அமல்படுத்தமுயலும்,ஒரு சமத்துவத்திற்கான புதிய திறப்பாக இதனைப் பார்க்குமென்பது நீதிபதி தீர்ப்பு வாசித்து முடித்தவுடனே பிஜேபி கணக்குப்போட்டு விட்டது.

பார்ப்பனீய மயப்பட்ட சடங்குகளிலிருந்து அப்போதே விதிமீறல்களை நடத்திக்காட்டிய ஸ்ரீ நாராயண குரு,அய்யன்காளி, சட்டாம்பி சுவாமிகள் பாரம்பரியத்தின் வழிவந்த கேரளாவில் இன்றைய ஆளும் அரசு முற்போக்கான இத்தீர்ப்பை செயல்படுத்த முனையுமென்பதை வேறு எவரைக்காட்டிலும் முதலில் பிஜேபி யினர்தான் புரிந்து கொண்டார்கள்.

தவிர, 24*7 காவல்துறை பாதுகாப்புடன் பெண்கள் சபரிமலை சென்று தரிசனம் செய்யமுடியாது.நடைமுறைக்கு அவ்வளவாகச் சாத்தியமற்றது என நுணுக்கமாகப் புரிந்துகொண்டதுபோல தமது பிரச்சாரத்தை பிஜேபி அவிழ்த்து விட்டது.

“சபரிமலை இட அமைவு பெண்கள் சென்று வர அவ்வளவு உகந்ததல்ல…” என்ற ரீதியில் பொன்.ராதாகிருஷ்ணன் முனகத் தொடங்கினார்.

இந்தச் சூழலில்தான் 16.10.2018 அன்று திருவனந்தபுரத்தில் நடந்த இடது ஜனநாயக முன்னணி கொள்கை விளக்கப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிணராயி விஜயன் “சமூக சீர்திருத்த மரபுதான் நம்முடைய மகத்தான மரபு.அதுவே நம் அடிப்படை.. எந்தக் காலகட்டங்களில் எல்லாம் சமூக மாற்றக் கருத்துக்கள் உருவெடுத்தனவோ அப்போது அதற்கெதிரான ஒரு பகுதியினரும் களத்திலிறங்கித்தான் இருக்கிறார்கள்.

இதுவொன்றும் புதிதல்ல…சதிக் கொடுமை,விதவை மறுமணம், சிறுமிகளைக் கிழவர்களுக்கு மணமுடித்தல்,மனிதப்பலி சடங்கு,ஈரத்துணியுடன் மட்டுமே கோவில் நுழைதல், மாதவிடாயின் போது தனித்திருத்தல்,பிரசவத் தீட்டு, சாவுத் தீட்டு,பெண்கள் மார்பு மறைக்கத் தடை,பெண்களுக்குச் சொத்து மறுப்பு,பிராமணர்களிடமிருந்து 64 அடிகள் தள்ளி பறையர் நிற்பது என அனைத்து சமூக கீழ்மைகளிலிருந்தும் நாம் ஓர் மேம்பட்ட சமூகத்தை படைக்கவில்லையா…?”
என்று நம்பிக்கையின் வார்த்தைகளை ஆழமாக விதைத்திருக்கிறார்.

சமத்துவத்தை ஏந்திப்பிடிக்கும் எண்ணம் கொண்ட முற்போக்கு சிந்தனையை முன்மொழிகிற
ஓர் சமூகத்தில் பொதுமக்கள்திரளின் மீது சதா இந்த அரசியல் வயப்பட்ட அல்லது சமூக வயப்பட்ட பிற்போக்குத்தனமான கருதுகோள்களை பழமைவாதிகள் ஏவுகின்றனர்.
புதிய வெளிச்சம் நோக்கி மக்கள் நகர்ந்துபோகும் பாதைகள் திரிந்து குழம்புகிறபடி பாசிச சக்திகள் தீர்ப்புகளை கையிலெடுக்காவண்ணம் தடுக்கவேண்டும்.

ஒரு பொதுச்சமூகத்தின் சாதாரண பிரஜை என்கிற வகையில் ஒரு தனிமனிதர் இந்தத் தீர்ப்புகள் குறித்த விரிவான புரிதல்களை உருவாக்கிக் கொள்ளவும், இயல்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்துகொள்ளவும் நாம் துணை நிற்கவேண்டும். தவிர,என்றென்றைக்கும் சமத்துவ சமூகத்தை கனவுகாணவும் உருவாக்கவுமான நகர்வுகளுக்கு நம்மைத் தயார்படுத்திக் கொள்ளவும் பாரபட்சமற்ற உரையாடல்களை மேலும் விரிவான தளங்களில் நாம் முன்னெடுத்துச் செல்லவும் வேண்டியிருக்கிறது.

(((((((((((((())))))))))))

திரும்புதல் ( சிறுகதை ) – ரமேஷ் கண்ணன்


ரமேஷ் கண்ணன்

கணேஷும் நானும் அந்த வீட்டின் முன் நிற்கையில் பிற்பகலாகி விட்டிருந்தது.காலை 9 மணிக்கு பேசுவதற்காக பாய் வீட்டிற்கு நாங்கள் வந்து சேர்ந்ததிலிருந்து இப்போது வரை பேசிக்கொண்டே இருந்தோம் என்று தான் சொல்ல வேண்டும்.ராணி அத்தையும் கோபால் மாமாவும் சண்டை போட்டபடியே இருந்தனர்.உண்மையில் சொல்லப் போனால் கோபால் மாமா எதுவுமே பேசாமல் அமைதியாக இருந்தார்.கோபால் மாமா ரசனையான மனுஷன். அரசு உத்தியோகம்.பேண்ட் சர்ட் மட்டுமே உடுத்துவார்.கையில் எப்போதும் ஒரு லெதர் பேக் இருக்கும்.அதைப் பிடிப்பதிலும் அவருக்கென ஒரு ஸ்டைல் இருந்தது.எங்கள் சொந்த பந்தத்தில் சினிமா,பாட்டு எனப் பேசிக்கொள்ளும் ஒரு சிலரில் அவரும் ஒருவர். ஏதாவது விசேஷ வீடுகளில் பார்த்தவுடன் நலம் விசாரிப்பார்.

அவருக்கும் ராணி அத்தைக்கும் தான் சண்டை. அத்தையும் உத்தியோகஸ்தி நல்ல ஜோடி பொருத்தம் தான்.வீட்டுக்காரரின் பெயரை சத்தமாகவே சொல்லும் அத்தை. சமயத்தில் அது இங்கிட்டு தான் போயிருக்கும் என்று கூடச் சொல்லக்கேட்டிருக்கிறேன்.அப்பா அது என் காதில் விழுந்து விடக்கூடாதென வேறு பேச்சைத் தொடுவார்.எனக்கு அது நன்கு புரிந்து கொண்டதால் நானும் கீழேயோ மேலேயோ பார்த்து சமாளிப்பேன்.

இப்போது எல்லாம் கைமீறி போய் விட்டது. ஆசையாய் வளர்த்த பெண் பிள்ளை யாரையோ விரும்பி உடன்சென்று விட்டாள்.இத்தனைக்கும் பக்கத்திலேயே அக்கா அக்கா என்று குடும்பமாய் பழகிய குடும்பம் தான்.சரிதானே என நினைத்துக் கொண்டேன்.

உறவுக்காரர்கள் கூடி என்ன செய்யலாம் எனப் பேசுவதற்கு அழைத்திருக்கிறார்கள்.நான் கணேஷ் ,குமார் ,ராஜா ,வாசன் எல்லாரும் இளவயதுப்பையன்கள்.நெருக்கடியான சூழல்.அவமானம் பொறுக்கமாட்டாமல் வீட்டைப்பூட்டி விட்டு எங்களது குடும்ப நண்பர் அப்துல் பாய் வீட்டில் இருந்தாள் அத்தை.மாமி காலையிலிருந்து வருபவர்களுக்கும் போகிறவர்களுக்குமாய் டீ போட்டுக்கொண்டே இருந்தார்கள்.

தப்பை வைத்த வீடு அது.எப்போதுமொரு குளிர்ச்சி நிறைந்திருக்கும்.ரோட்டை ஒட்டியபடி இருந்ததால் வேடிக்கை பாக்க நல்ல வசதி.வராந்தாவில் தான் அமர்ந்திருந்தோம்.பக்கச்சுவர் உயரம் அதிகம்.அதனால் நாங்கள் அமர்ந்திருப்பது வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது.சைக்கிள்கள் அதிகம் நிற்பதில் அக்கம் பக்கம் கவனத்திற்குச் சென்று விஷயத்தையும் பேசத்தொடங்கி விட்டார்கள்.பிள்ளையைப் பேசி சமாதானம் செய்து கூப்பிடுவது என முடிவானது.

நாங்கள் இன்று வருவதற்கு முன்பே நேற்று ஒரு முயற்சி நடந்து தோற்றுவிட்டிருந்தார்கள் என்பது எனக்கும் குமாருக்கும் அரை மணி கழித்தே இருந்தது.ஆகப் பிள்ளை கிளம்பி இன்றோடு மூணாவது நாளாகி விட்டது.

குமாருக்கும் எனக்கும் விஷயம் தாமதமாய் தெரிந்ததில் ஒன்றும் வருத்தமில்லை.

அத்தையும் மாமாவும் அரசு உத்தியோகம் என்பதால் நல்ல வருமானம். கோபால் மாமாவுக்கும் எந்த கெட்ட பழக்கமும் இல்லை.அவர்கள் வீடு பெரியதாகக்கட்டி மாடி போர்ஷனை வாடகைக்கும் விட்டிருந்தார்கள்.பெண்ணுக்கு நூறு பவுன் நகையும் பாத்து பாத்து வாங்கி வைத்திருந்தாள் அத்தை.

குமாருக்கும் ,வாசனுக்கும் அவர்கள் வீட்டு மருமகனாகி விட வேண்டுமெனும் ஆசை மனதிற்குள் இருந்தது.

வாசன் நல்ல கலர்.ராணி அத்தையும் பெண்ணை அவனுக்குத்தான் கொடுக்க வேண்டுமென நினைத்திருந்தாள்.குமாருக்கும் இது தெரியும்.இப்போது குமாருக்கு இதில் சின்ன சந்தோஷமிருந்ததை என்னாலும் புரிந்து கொள்ள முடிந்தது.

ஆரம்பத்தில் இருந்தே இதுமாதிரி துளி நெனைப்பு வருவதைப் போல எங்கள் குடும்ப வாழ்க்கையில்லை.

கோபால் மாமா ஓங்கி சத்தம் போட்டார்.கண்டிப்பாக முக்கு பலசரக்கு கடை வரை கேட்டிருக்கும்.எங்களைப் பிரிச்சு விடுங்க முதல்ல பிள்ளையப் பத்தி அப்புறம் பேசுங்க என்றார்.

பாய் தான் முதலில் கோபால் மாமாவை சமாதானப்படுத்தினார்.விடுங்க மாப்ள சின்ன பிள்ளையாட்டமென. இதற்குள் அத்தை கெட்ட வார்த்தைகளைப் பேசத் தொடங்கினாள்.நிலமை கை மீறிக்கொண்டிருந்தது.பெரியவர்களை அமைதியாக இருக்கச்சொல்லிவிட்டு நான் பேசத்துவங்கினேன்.உங்களுக்கு விடுதலை வாங்கி தர்றோம் மாமா.முதல்ல பிள்ளைய பார்க்கனுமா வேணாமா என்றேன்.அத்தை ஓவென அழத்தொடங்கினாள்.அவளை பின்கட்டுக்கு மாமி அழைத்துச் சென்று முகம்கழுவி விட்டு ஆசுவாசப்படுத்தினாள்.பாயின் பேத்திகள் குறுக்கு மறுக்காய் ஓடினார்கள்.நொக்கோ நொக்கோ எனச் செல்ல அதட்டுப் போட்டுக் கொண்டிருந்தார் பாய்.அவர் கண்கள் விரிந்தபடி நாக்கைத் துருத்தி பயமுறுத்தினார்.இப்படித்தானே எல்லா வீடுகளிலும் செய்கிறார்கள்.அதுவொரு அவுட்டேட்டட் வெர்ஷனாகி விட்டது.

பிள்ளைகளை கைக்குள்ளே வைத்துப் பார்த்துக் கொள்ள பல்வேறு யுக்திகளைப் பெற்றோர்கள் செய்கிறார்கள்.அந்த கொடுப்பினையும், திறமையுமில்லாதவர்கள் வீட்டைப் பூட்டி விட்டு யார் வீட்டிலாவது அழுது புலம்ப வேண்டியது தான்.அத்தை என்னமோ தெரியவில்லை கண்ணைத் துடைத்தபடி தன் பெண்ணை வைதபடி “கண்ணுகளா !டீ சாப்பிட்டீகளா ,காலையிலிருந்து வயசு பயக அவ செஞ்சதுக்கு இதுக வேலைய விட்டுட்டு உக்காந்திருக்குக ” என்றாள்.

எங்களுக்கு என்னவோ போலாகி விட்டது. நான் கேட்டேன்.நாங்க வேணாப் போய் பேசி கூப்பிடுறோம் அத்தைனேன்.

வாசன் சொன்னான் அவனுங்க ஒரு குரூப்ல பேசி வச்சிருக்காய்ங்கன்னான்.

எனக்கு ஒன்னும் புரியல அதான் அந்த ஏரியா சிவான்னு ஒரு பய இருக்கான் ல.அவன் தான் பாதுகாப்பாம்.அவன்ட்ட பேசனுமாம்.போலீஸிடம் போவதில்லையென ஏற்கனவே பேசியாகி விட்டது. இதை அவர்களும் தெரிந்து வைத்திருந்தனர்.

சிவா காவல் துறையில் உயர்பொறுப்பில் பணிபுரிபவரின் மகன்.கடந்த சில வருடங்களாக அந்தப்பகுதியில் நடக்கும் அடிதடி கட்டப்பஞ்சாயத்துகளில் அவனுடைய பெயர் தான் அடிபடும்.ஒவ்வொரு பகுதியிலும் சின்ன பெட்டிக்கடைக்கு அருகே அவனுடைய கார் வந்து நிற்கையில் சிறு பதட்டம் தொற்றிக் கொள்ளும்.

நாங்கள் எனது நண்பனின் வீட்டின் வாசலில் நின்று பேசிக்கொண்டிருக்கையில் சைக்கிளில் பாரா வரும் போலீசார் எங்களை இரண்டு மூன்று முறை எச்சரித்து உள்ளே போகச் சொன்னதுண்டு.

ஆனால் சிவா வை ஒருமுறை கூட அவர்கள் நேருக்கு நேராக பார்த்ததோ எச்சரித்ததோ இல்லை.

சிவாவை, சிவா என நான் சொல்லுவதே ஆச்சரியமாய் படும்.ஆனால் அதற்கொரு காரணமுண்டு.நானும் ,அவனும் ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்றாகப் படித்தோம்.சிவா நல்ல உயரம் கை கால்களும் திடகாத்திரமாக உள்ளவன்.இதை விட யாரையும் சடாரென கைநீட்டி அடித்துவிடும் பழக்கம் அவனை எல்லோரும் வியந்து பார்க்க வைத்தது.அது புது ஸ்கூல்.பழைய ஸ்கூலில் இருந்து இளங்கோ மட்டுமே உடன்படித்தவன்.ஆனால் நான் அவனிடம் சரியாகப் பேசியது கூட இல்லை.நூற்றிநாலு மாணவர்கள் ஆறாம் வகுப்பில்.வாத்தியார் பிரம்பெடுத்து அடித்தால் யாருக்கு விழுகுமென்பதே தெரியாது.ஒவ்வொரு நாளும் பயந்தபடியே தான் பள்ளி செல்வேன்.ஐந்தாம் வகுப்பு வரை ஃபர்ஸ்ட் ரேங்க்.டீச்சர்ஸுக்கு செல்லப்பிள்ளை.அதன் பின்பு ஒருபோதும் ஆசிரியர்களுக்கு இணக்கமானவனாக இருக்க முடியவில்லை.

இளங்கோ ஆசிரியர் வராத பாடவேளையில் தனது குறியை டிரவுசரை விலக்கிக் காண்பித்தான்.என்னைப் பார்த்து பழிவாங்குவதைப் போல கொஞ்சம் மிரட்ட ஆரம்பித்தான்.நான் சிவாவை நெருங்க இதுவே போதுமானதாக இருந்தது.நாங்கள் ஐந்தாறு பேர் சேர்ந்து சுத்துவோம்.சிவா பெரியவகுப்பு பையன்களோடு வம்பிழுப்பான்.நாங்கள் கைபாம் ஆனோம்.சிவா செட்டில் சுமாராக படிக்கக்கூடிய பையன் நான்.சிவாவுக்கு இது பிடித்துப்போனது.நான் சிவாவிடம் பாராட்டைப் பெற கணக்குகளை விரைவாக முடித்து ஆசிரியரிடம் காண்பிப்பேன்.என்னுடைய ஒவ்வொரு முயற்சி வெற்றி அடைகையில் சிவா பூரித்து பாராட்டுவான்.

நான் அவனோடு நெருக்கமாவதைத் தடுக்க சாதியைப் பற்றிய பேச்சை இழுத்து விட்டார்கள்.எனக்கு அதுவரை சாதியைப்பற்றி ஒரு மண்ணும் தெரியாது. இன்று வீட்டில் கேட்டு வருகிறேன் சிவா என்றேன்.அந்த சாதியாகவே இருந்து தொலைத்தால் நல்லது என்று வேண்டிக்கொண்டேன்.நான் நினைத்தது போலவே வேறு சாதி.இதை சிவாவிடம் சொல்லவில்லை.பின்பொரு நாள் பேச்சு வருகையில் நீ சத்தியமா எங்காளு இல்லை என்றான் சிவா.அவனுடைய குரலில் ஓர் விலகல் இருந்தது.நான் என்ன செய்ய முடியும்.ஒட்டுதல் குறையத் துவங்கியது.நான் நன்றாக படிக்கும் மாணவர்களோடு பேச ஆரம்பித்தேன்.அவர்களும் அவ்வளவு நெருங்கவில்லை.ஏற்கனவே ஒரு வலைப்பின்னலை உருவாக்கி அதற்குள்ளாகவே புழங்கியபடி இருந்தனர்.

இதற்கிடையில் ஒரு விளையாட்டு பாடவேளையில் இளங்கோவுக்கும் எனக்கும் சண்டை.நான் அவனை நான்கைந்து அடிகள் அடித்திருப்பேன்.என்னை நையப்புடைத்து பனியனையும் கிழித்து விட்டான்.அவமானமாய் போய் விட்டது. சிவா இளங்கோவை இரண்டு அடி அடித்ததாகச் சொன்னார்கள்.ஒரே ஆறுதல். சிவா தேர்வறையில் எனக்கு அடுத்து பின்னால் அமர்ந்திருப்பவன்.இது நல்ல வாய்ப்பானது.எழுதி எழுதி முடித்தவுடன் சிவா போதும் போதுமெனச் சொல்லும் வரை விடைத்தாளைக் கொடுப்பேன்.இதில் எனது மன தைரியம் அவனைக் கவர்ந்தது.சிவா என்னை மனதிற்குள் வைத்து கொண்டாடத் துவங்கி விட்டான்.

எனது சட்டை காலர்கள் மீண்டும் மிடுக்கானது.

ஆனால் எட்டாம் வகுப்பு வரை தான்.பைசல் என்பவனுக்கும், சிவாவுக்கும் பெரிய தகராறு .சைக்கிள் செயின் கத்தியோடு நடந்த சண்டையில் பைசல் பெயில் ஆனான்.சிவா அவுட் பாஸ் வாங்கி கொண்டு கொடைக்கானலில் படித்தான் என்று சொன்னார்கள்.

இப்போது அவனது வீட்டின் முன் தான் நானும் கணேஷும் நின்று கொண்டிருக்கிறோம்.லேசாகந் தூறல் போட ஆரம்பித்திருந்தது.சைக்கிளை அழுத்திக்கொண்டு ஆறு கி.மீ வந்தது போதும் போதுமென்றாகி விட்டது.

சிவா முதலில் ஏரியாவில் செய்த செய்கை மாரியப்பன் எ மாரியை.அவன் தான் சிவாவின் வண்டி பெட்டிக்கடைகளில் வந்து நின்று சென்றபின் தகராறு செய்வான்.ஒருநாள் காலை எட்டு மணியிருக்கும் மாரியை லஷ்மி ஸ்டோர் படிக்கருகில் வெட்டி போட்டிருந்தார்கள்.சிவாவைப் பற்றிய பேச்சுகள் அடங்கி ; சிவாவை பெரிய தாதாவாக்கி விட்டான் மாரி.போலீஸ் வழக்குப்பதிவு செய்து எல்லாம் ஆனது.பிறகு பத்திரிக்கைகளில் அவ்வப்போது பெயர் வெளிவர பெரிய பிரபலமானான்.

இளங்கோவும் பைசலும் கூட அவனுக்காக சில ஏரியாக்களில் வேலை செய்தார்களென நண்பர்கள் கூறினார்கள்.இவன் பக்கமும் சில உயிரிழப்புகள். அவனுக்காக உயிரையே கொடுக்க புதிது புதிதாய் ஆட்கள் வந்து கொண்டே இருந்தார்கள்.தியேட்டர்கள் ஆட்டோ ஸ்டேண்டுகளில் பெரும் செல்வாக்கு சிவாவுக்கு.பெரிய குரூப்புகளோடு மோதுவது வாடிக்கையாகி அவன் ஏரியாக்களைத் தாண்டி நகரின் திருஉருவாய் மாறினான்.

இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கையில் சிவாவின் கனைப்பு சத்தம் கேட்டது.நானும் கணேஷும் வணக்கம் வைத்தோம்.கணேஷ் வேஷ்டியை இறக்கி விட்டதில் சிவாவின் பார்வையை ஈர்த்துக்கொண்டான்.நான் லேசாக சிரித்து வைத்தேன்.என்னப்பா இங்க உனக்கு என்ன வேலை இவரு யாரு என்ன விஷயம் எனக் கேட்டபடி சிகரெட்டை பற்ற வைத்தான்.நான் விஷயத்தை சொல்லத் தொடங்கினேன்.

முதலில் எடுத்த எடுப்பில் சொன்ன வார்த்தை எங்களிருவரையும் தூக்கி வாரிப்போட்டது.இந்நியாரம் எங்காளுகன்னா தொங்க விட்டிருப்போம்.சரி சரி அவனுகளுக்கு நாமதான்னு உறுதி கொடுத்துட்டோம்.நீ நம்ம பிள்ளைன்ற ஒரு வழி இருக்கு. அத வேணாச் செய்யலாமென்றான்.

பேட்டை பயக நம்ம தோஸ்து தான் அவிங்கள விட்டு நம்ம பயலுகள ரெண்டு தட்டு தட்டி பிள்ளையத் தூக்கிருவோம்.ஆனால் அதுக்கு கொஞ்சம் செலவு அதிகமாகும் என்றான்.

சரி சிவா கேட்டுட்டு வந்துடுறேன்னு திரும்புனோம்.அன்பு விலாஸ் டீக்கடைல டீயக்குடிச்சிட்டு சைக்கிள உருட்டிக்கிட்டே பாய் வீட்டிற்கு வந்து விஷயத்தை சொன்னோம்.

அதற்குள் அவர்கள் வேறொரு முடிவை எடுத்திருந்தனர்.

நேற்று நல்ல மழை .மாமா , மழை பெய்து முடிந்த சடுதியில் நீங்கி வெளியேறுபவர்களில் அதே ஸ்டைலோடு புது சினிமாப்பாடலை சீழ்க்கையடித்தபடி பேரப்பிள்ளைகளுக்கு இனிப்பு காரம் வாங்கியபடி லஷ்மி விலாஸ் கடையிலிருந்து வெளியே வந்து கொண்டிருந்தார்.அவர் ஒரு கையை லெதர் பேக்கின் காதுக்குள் விட்டு இறுக்கிப் பிடித்தபடி இருந்தார்.

சிவா அன்று சொன்னது என் காதைத்துளைத்தபடியே இருந்தது.அதைத் தூசாகத் தட்டியபடி எட்டு வைத்துக் கொண்டிருந்தார் வீட்டை நோக்கி கோபால் மாமா.

*********