Category: அஞ்சலி

அஞ்சலி சினுவா ஆச்சிபி (நைரீய எழுத்தாளர் )

6
Chinua Achebe
சினுவா ஆச்சிபி ( நைஜீரியா எழுத்தாளர் )
காலமானார்
அவருக்கு 82 வயது
1930 நவம்பர் 16 இல் பிறந்தவர்
மான் புக்கர் பரிசைப் பெற்றவர்
அவருடைய சிதைவுகள் புத்தகத்தைத் தமிழில் மகாலிங்கம் அவர்கள் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்
அதில் அந்த மாடுகா பாத்திரத்தின் பெயர் இன்னும் என் நினைவில்
இப்போது சினுவா ஆச்சிபியும் நினைவில்
(விரிவான குறிப்புகள் பிறுகு வரும் )

அஞ்சலி – உலக இலக்கிய எழுத்தாளர் கார்லோஸ், ஃப்யென்டஸுக்கு அஞ்சலி.

உலக இலக்கிய எழுத்தாளர்

கார்லோஸ், ஃப்யென்டஸுக்கு அஞ்சலி.

( 11. 11. 1928 -15. 5. 2012 )

ச. ஆறுமுகம்.

 

 

 

 

 

ஃப்யென்டஸ் என அறியப்படும் மெக்சிகோவின்  83 வயதான லத்தீன் அமெரிக்க

எழுத்தாளர் கார்லோஸ் ஃப்யென்டஸ் மாஸியா, இலக்கிய உலகத்தால் நல்லதொரு புனைகதைப் படைப்பாளராகவும் கட்டுரையாளராகவும் கொண்டாடப்படுபவர்.

15 5 2012 செவ்வாய்க்கிழமை மெக்ஸிகன் இதழான `ரிஃபார்மா`வில் அவர் எழுதிய பிரெஞ்சு நாட்டின் அண்மைய அதிகார மாற்றம் குறித்த கட்டுரை வெளியானது. அதே நாளில் தெற்கு மெக்ஸிகோவின் ஏஞ்சல்ஸ் டெல் பெட்ரீகல் மருத்துவமனையில் கடுமையான குருதிப்போக்கின் காரணமாக அவர் மரணமடைந்ததாக கலை மற்றும் பண்பாட்டு தேசியக் கவுன்சில் தலைவரான கான்சுயூலோ சாய்சார்  அதிகாரபூர்வாமாக அறிவித்தார்.

••

 

ஃப்யென்டஸ் பனாமா நகரில் 11.11.1928ல் பிறந்தவர். அப்போது இவரது தந்தை மெக்ஸிகோவின் அயல்நாட்டுத் தூதராகப் பனாமா நாட்டில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அதன் பிறகும் பல நாடுகளுக்கும் அவர் தூதராக மாற்றப்பட்டதால் ஃப்யென்டஸின் குழந்தைப்பருவம் முழுவதும் மான்ட்டிவீடியோ, ரியோ-டி-ஜெனிரா, வாஷிங்டன், சான்டியாகோ, குயிட்டோ மற்றும் போனஸ் எயர்ஸ் போன்ற பல நாட்டுத்தலைநகரங்களிலேயே கழிந்தது. இளம்பிராயத்தினராக மெக்ஸிகோவுக்கு வந்த ஃப்யென்டஸ் 1965 வரையிலும் அங்கேயே வசித்தார். அங்கேயே சட்டக்கல்வியும் பெற்றார். அதைத் தொடர்ந்து அவர் தந்தையைப் போலவே மெக்ஸிகோவின் தூதராகப் பணியேற்று லண்டன், பாரீஸ் மற்றும் பல நகரங்களில் வாழ்ந்தார். மெக்ஸிகோவின் முன்னாள் குடியரசுத்தலைவர் குஸ்தவோ டியாஸ் ஆர்டாஸ் ஸ்பானிஷ் தூதராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தனது பிரான்ஸ் நாட்டுத்தூதர் பதவியைத் துறந்தார். பிரௌன், ப்ரிஸ்டன், ஹார்வர்டு, பென்சில்வேனியா, கொலம்பியா, காம்ப்ரிட்ஜ் மற்றும் ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார்.

ஃப்யென்டஸ் தனது படைப்புகளுக்காக செர்வான்டிஸ் விருது உட்பட இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். நெதர்லாந்து, பேச்சு மற்றும் எண்ணங்களின் உரிமைக்கான நான்கு உரிமைகள் விருதும் 2006ல் அவருக்கு வழங்கப்பட்டது. அவரது எண்பதாவது பிறந்தநாள் மெக்ஸிகோ நாட்டின் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. நோபல் பரிசுக்கான பட்டியலுக்குப் பலமுறை அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டும் இறுதி வரை அவருக்கு வழங்கப்படவில்லை.

அவரது படைப்புகள் வரலாறு, அரசியல் மற்றும் புனைவுகள் கலந்து வாசகர்களை ஈர்த்துக்கொள்ளும் நடையில் அமைந்தவை.

ஃப்யென்டஸ் படைப்புகள் குறித்து வர்கஸ் லோசாவின் ஃப்யென்டஸ்-ஒரு மார்க்ஸீய வாசிப்பு உட்பட 19 நூல்கள் ஆங்கிலத்திலும் மற்றும் ஒரு 19 நூல்கள் ஸ்பானிய மொழியிலும் வெளியாகியுள்ளன.

இலக்கியப்பேட்டி ஒன்றில் எழுதுவதும் வாசிப்பதும் ஒரு சொர்க்கப் பேரின்பம் என்ற ஃப்யென்டஸ் வாழ்க்கையின் அனைத்தும் செக்ஸ் உட்பட இலக்கியத்திலேயே முடிவடைகின்றன எனக் குறிப்பிடுகிறார். தன்னை ஒரு அரசியல் மிருகம் என அழைத்துக்கொள்ளத் தயங்காத அவர் அரசியல் கலக்காத படைப்பு என்று எதுவும் இல்லையென்றும் மொழி என்றாலே அரசியலும் உள்ளடங்கியதே என்கிறார்.

மார்க்வெஸ், பாப்லோ நெருடா போன்றவர்களுடன் நட்பு கொண்டிருந்த ஃப்யென்டஸ் அரசியலில் விமர்சனத்துடனான எதிர்நிலை மற்றும் நிறுவனமயமாக்கப்பட்ட மரபுகளை எதிர்க்கும் இளம் எழுத்தாளர்கள் இயங்கிய `லத்தீன் அமெரிக்கன் பூம்` என்ற இயக்கத்தோடு இனம் காணப்பட்டார். காஸ்ட்ரோ புரட்சி, மற்றும் ஃப்யென்டஸின் இடதுசாரி அரசியல் நிலைபாடு காரணமாக 1963ல் தன் நாட்டுக்குள் நுழைய அமெரிக்கா அனுமதி மறுத்தபோது ஃப்யென்டஸ், ‘’ உண்மையான வெடிகுண்டுகள் எனது புத்தகங்கள்தாம்; நான் அல்ல. அமெரிக்காவின் எந்த அஞ்சலகத்திலும் நான் குண்டு போட்டுவிடப் போவதில்லை. என்னை விடவும் என் புத்தகங்கள் அபாயகரமானவை.’’   எனக் கூறிய அவர், உலக அரசியல் நிகழ்வுகள் குறித்துக் கூர்மையான விமரிசனங்களை வெளியிட்டார். அமெரிக்கநாடு குறித்து, ‘’ அது எப்போதும் தன்னைச் சரியாகப் புரிந்து கொள்கிறது; ஆனால் இதர நாடுகளைச் சரியாகப் புரிந்துகொள்வதில்லை’’ என்று கருத்து தெரிவித்தார்.

இருபதாம் நூற்றாண்டின் சிறந்த நாவலாசிரியர்கள் ஐந்து பேர்களைக் குறிப்பிடுமாறு பேட்டியாளர் லிண்டன் வீக்ஸ் கேட்டபோது மறைந்தவர்களையே குறிப்பிட்டார்,

ஃப்ரான்ஸ் காஃப்கா. ‘’ காஃப்காவை வாசிக்காமல் நீங்கள் இருபதாம் நூற்றாண்டினைப் புரிந்துகொள்வது இயலாதது.’’

வில்லியம் ஃபால்க்னர். ‘’ சிறந்த துன்பியல் படைப்பாளர். லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களில் நான் அவரை மட்டுமே குறிப்பிடுவேன்.’’ என்று சொல்லிவிட்டு நகைத்தார்.

ஜேம்ஸ் ஜாய்ஸ். ‘’ அவர் மொழி வழியாக உலகினை மறுபடி கண்டுபிடிக்கும்  மொழியின் அனைத்து வகைப் பயன்பாட்டுக்கான வாய்ப்பு வழிகளைத் திறந்தவர்.’’

தாமஸ் மான். இருபதாம் நூற்றாண்டின் சிறந்த இலக்கியமாக ஜெர்மன் இலக்கியம் திகழ்கிறது. அவர்தாம் ஜெர்மன் இலக்கியத்தின் முழுவதற்குமான சுருக்கம்.

ஐந்தாவது நபர் யார்? எனக் கேட்ட போது ‘’ நான் அதைக் காலியாக விட்டுவிட நினைக்கிறேன்.’’ என்றிருக்கிறார்.

அவரது ஆர்ட்டீமியோ குரூஸின் மரணம் என்ற நாவல், இளம் வயதில் மெக்ஸிகோவின் அடித்தட்டு மக்களுக்காகப் போராடும் புரட்சிவாதியாக இருந்து, பின்னர் பேராசை பிடித்த சுரண்டல்காரனாக மாறிய ஊழல்வாதியின் மரணம் பற்றியது.  அவரது எழுத்துக்கள் அனைத்தும் மெக்ஸிகோவின் முன்னேற்றம் குறித்ததாக, பொதுச்  செல்வம் சமமாகப் பங்கிடப்படாமல் வறுமை ஒழிக்கப்படாமலிருப்பதைக் குறித்தே அமைந்திருந்தன.

காற்று எங்கே சுத்தமாக இருக்கிறதோ அங்கே, ஆர்ட்டீமியோ குரூஸின் மரணம், ஔரா, வயதான கிரிங்கோ, என்ற நாவல்களோடு மொத்தம் இருபது நாவல்கள் படைத்தவர். அவரது கடைசி நாவல் விதியும் விருப்பமும் 2008ல் வெளியானது. ஒன்பது சிறுகதைத் தொகுதிகளும் 15 கட்டுரை நூற்களும் ஐந்து நாடகங்ளும் ஏழு திரைக்கதைகளும் இவரது உழைப்பில் மலர்ந்தவை. இவரது படைப்புகள் 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன

 

•••

லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள் என்ற பெயரில் பேராசிரியர் சிவகுமார் தொகுப்பிலும், மீட்சி , கல்குதிரை, இதழ்களில் சில சிறுகதைகள் தமிழில் வெளியாகியுள்ளன.

ஃப்யென்டஸ் நாவல்கள் எதுவும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதாகத் தெரியவில்லை. இரண்டு அமெரிக்காக்கள் என்ற ஒரு குறுநாவல் சா. தேவதாஸ் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு புதுஎழுத்து இதழில் வெளியாகியிருக்கிறது.

இந்த உலகப் படைப்பாளிக்கு அஞ்சலி செலுத்துவோம்.

அஞ்சலி கார்லோஸ் புயன்டோஸ்

அஞ்சலி

எழுத்தாளர் கார்லோஸ் புயன்டோஸ்
பிறந்தது 11 நவம்பர் 1928 இறப்பு 15 மே 2012

தமிழில் அவரின் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

அவருக்கு மலைகள்.காம் இலக்கியத்திற்கான இணைய இதழ் தன் அஞ்சலியைச் செலுத்துகிறது