Category: நிகழ்வுகள்

ரிசானாவிவகாரம்குறித்துமரணதண்டனைக்குஎதிரான தமிழ்நாடுமற்றும்இலங்கைஇஸ்லாமியஎழுத்தாளர்கள், கலைஞர்கள், பத்திரிகையாளர்கள்மற்றும்மனிதஉரிமைஆர்வலர்களின்கூட்டறிக்கை.

 

download (12)

 

இலங்கை இஸ்லாமிய பெண்ணான ரிசானா நபீக் சவூதி அரேபியாவுக்கு வீட்டு வேலைக்கு சென்ற நிலையில் அந்த வீட்டில் இருந்த நான்கு மாத குழந்தையை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டு அவளுக்கு ஜனவரி 9ம்தேதி மரணதண்டனை விதிக்கப்பட்டது. கொலைக்குற்றங்களுக்கு தலை வெட்டு (Behead) தண்டனை வழக்கில் இருக்கும் ஒரு நாட்டில்   அதன் தண்டனை முறைகள் அதற்கான நியாயப்பாடோடு இருக்கும் சூழலில் அதைத்தாண்டிய மனித உரிமைகள், குற்றத்தன்மை , குற்றத்தின் தர்க்கம் மற்றும் குற்றம் உருவாகும் சூழல் இவை ஆராயப்பட வேண்டும். மேலும் இஸ்லாம் போதிக்கும் ஆரம்பகால குற்றவியல் சட்டங்கள் தற்காலிக பரிகாரம் தான். குற்றத்தை தடுப்பதற்கான ஒரு தற்காலிக தீர்வு தான். அதை விட நிரந்தரமான ஒன்று  கருணையும், மன்னிப்பும் தான். மன்னிப்பு என்பதன் எதிரிணையாக தான் அது குற்றத்தை பார்க்கிறது. இஸ்லாம் இதை பல சந்தர்ப்பங்களில் வலியுறுத்தி இருக்கிறது. ஆரம்பகால இஸ்லாமிய சட்டங்கள் அதற்கு முந்தைய பாபிலோனிய, சுமேரிய நாகரீகங்களின் தொடர்ச்சியே. மேலும் முறைப்படுத்தப்பட்ட நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் இல்லாத அந்த காலகட்டத்தில்  நிச்சயமாக அது அப்போதைய சமூக இயங்கியலாக (Social Dialectics)தான் இருந்திருக்க முடியும். அதனால் தான் உலகின் பெரும்பாலான    இஸ்லாமிய நாடுகள் அந்த சட்டங்களை பின்பற்றுவதில்லை. சில அரபு நாடுகள் ஐ.நா மனித உரிமை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளன. சவூதியில் அடிக்கடி இம்மாதிரியான நிகழ்வுகள் நடக்கின்றன. அவையெல்லாம் இம்மாதிரி  சர்வதேச அரங்குகளில் விவாதப்பொருளாவதில்லை. சில தருணங்களில் மேற்கத்தியவர்கள் குற்றங்களை செய்து விட்டு பணம் செலுத்தி தப்பிய நிகழ்வுகளும் உண்டு. ஜார்ஜ் புஷ் காலத்தில் இதுபோன்ற நிகழ்வு ஒன்று நடந்தது.மேலும் ரிசானா விஷயத்தில் சவூதிய சட்டம் சரியான முறையில் செயல்படவில்லை. விசாரணை, குற்றத்தின் உறுதித்தன்மை பரிசோதிக்கப்படவில்லை. அவளுக்கு மொழிபெயர்ப்பு உதவிகள் மற்றும் வழக்கறிஞர் உதவிகள் சரியான முறையில் செய்யப்படவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறது. மேலும் அவளிடம் ஒப்புதல் வாக்குமூலத்தில் கட்டாய கையெழுத்து பெறப்பட்டிருக்கிறது. இதை அவளின் கடித வரிகள் தெரிவிக்கின்றன. அவள் நான் அந்த குழந்தையை கொலை செய்யவில்லை என்றே கடைசி நிமிடம் வரை தெரிவித்துக்கொண்டிருந்தாள். (கடிதம் இணைக்கப்பட்டுள்ளது) மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு சற்று நேரத்திற்கு முன்பு வரை அவளுக்கு தன் தலைவெட்டப்பட போகிறது என்பது தெரியாது. மேலும் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களை  தான் பணிப்பெண்ணாக அமர்த்தப்பட வேண்டும் என்ற விதி கடைபிடிக்கப்படவில்லை.அவளின் வயதை உறுதி செய்வதற்கான பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும். வெறும் பாஸ்போர்ட் வயது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டது தவறு. வெளிநாட்டினர் குற்றச்செயல்களில் ஈடுபடும் போது அவர்களின் வயது கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். அதற்காக தடயவியல் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும். ஆனால் ரிசானா விஷயத்தில் இவை எதுவும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. மேலும் பிறந்த குழந்தைக்கு இரண்டு வயது வரை தாய்ப்பால் ஊட்ட வேண்டும் என்பது இஸ்லாமிய விதி. இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றுவதாக சொல்லப்படும் சவூதி அரேபிய அரசு புட்டிப்பால் ஊட்டப்பட்டதற்கான மருத்துவ காரணத்தை தெரிவிக்கவில்லை. குற்றம் நடந்த போது அவளின் வயது 17. வெளிநாட்டினர் சம்பந்தப்பட்ட வழக்குகளில் இம்மாதிரியான அம்சங்கள் கணக்கில் எடுக்கப்பட வேண்டும். சவூதியில் கொலைவழக்குகள் விரைந்து விசாரிக்கப்பட்டு உடனடியாக தண்டனை அளிக்கப்படுவது வழக்கம். ஆனால் ரிசானா விஷயத்தில் அது ஏழு வருடங்கள் தள்ளிப்போனது இவ்வழக்கில் மனித நியாயத்தை மேலும் வலுப்படுத்தவதாக உள்ளது. குற்றத்திற்கு ஈடாக ரத்தப்பணம் (Blood money)கொடுக்க அங்கிருந்தவர்கள் தயாராக இருந்தும் இறந்த குழந்தையின் தாய் சம்மதிக்காத காரணத்தால் இது மேலும் தள்ளிப்போனது. சவூதிய சட்டங்கள் சாசுவதமானதன் விளைவு இது… மேலும் தண்டனைக்குள்ளாக்கப்பட்டது இலங்கை பெண் என்ற நிலையில் இலங்கை அரசு இதற்கான சரியான, உறுதியான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும். ஆனால் வெறும் சம்பிராயத அளவிலே இருந்தது ராஜபக்ஷே அரசின் நடவடிக்கைகள். ஏற்கனவே போரில் லட்சக்கணக்கான தமிழர்களை குண்டு வீசி கொலை செய்து , சர்வதேச அரங்கில் குற்றவாளியாக இருக்கும் ராஜபக்ஷே எப்படி இதை கவனிப்பார்? மொழிபெயர்ப்பில் தவறு நடந்து விட்டது என்று இலங்கை அரசின் வழக்கறிஞரே குறிப்பிட்டார். ரிசானாவிற்கு தண்டனை உறுதி  செய்யப்பட்ட தருணத்தில் அது வலுவாக மேல்முறையீடு செய்திருக்க வேண்டும். அதுவும் நிராகரிக்கப்படும் போது சர்வதேச அளவில் இந்த பிரச்சினையை கொண்டு சென்றிருக்க வேண்டும். தன் மீதான குற்ற கறையை போக்க சர்வதேச உதவியை நாடும் ராஜபக்ஷே இதற்கு தேடாமல் இருந்தது மிகப்பெரும் அவலம். இந்த தருணத்தில் மரணதண்டனை விதிக்கப்பட்ட ரிசானாவிற்கு ஆழ்ந்த அனுதாபங்களை இந்த கூட்டறிக்கை தெரிவித்துக்கொள்கிறது. அவளின் இழப்பால் வாடும் குடும்பத்திற்கும் அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது. வஹ்ஹாபிய மரபுகளை பின்தொடரும் சவூதிய நிலப்பிரபுத்துவ அரசிற்கும், அவளை காப்பாற்ற உரிய நடவடிக்கைகளை எடுக்காத ராஜபக்ஷேவிற்கும் கடும் கண்டனத்தை இந்த அறிக்கை பதிவு செய்கிறது.

 

 

 

இவண்

தமிழ்நாடு மற்றும் இலங்கை முஸ்லிம் எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கலைஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கூட்டமைப்பு

 

 

கவிஞர் ரியாஸ் குரானா (இலங்கை)

 

 

கவிஞர் பைசல்  (இலங்கை)

 

 

கவிஞர் அஸ்மின் (இலங்கை)

 

 

இம்தாத் (இலங்கை)

 

 

மஜீத்  (இலங்கை)

 

 

கவிஞர் ரிஷான் செரீப் (இலங்கை)

 

 

கவிஞர் பஹீமா ஜஹான் (இலங்கை)

 

 

கவிஞர் லறீனா ஹக்  (இலங்கை)

 

 

எ.பௌசர் (ஆசிரியர் எதுவரை இணைய இதழ்,  லண்டன்)

 

 

கவிஞர் ஏ.ஆர். பர்ஸான் – (இலங்கை)

 

 

ஏ.பி.எம். இத்ரீஸ் (இலங்கை)

 

 

அப்துல் ரசாக் (எழுத்தாளர், இலங்கை)

 

 

கவிஞர் சல்மா (சென்னை)

 

 

கவிஞர் ஹெச்.ஜி. ரசூல் (தக்கலை)

 

 

பேராசிரியர் ஹாமீம் முஸ்தபா (தக்கலை)

 

 

எழுத்தாளர் முஜிபு ரஹ்மான் (தக்கலை)

 

 

நாவலாசிரியர் மீரான் மைதீன் (நாகர்கோவில்)

 

 

இடலாக்குடி ஹசன் (எழுத்தாளர்)

 

 

குளச்சல் மு.யூசுப் (மொழிபெயர்ப்பாளர்)

 

 

அகமது கபீர் (இலைகள் இலக்கிய  இயக்கம் , இடலாக்குடி)

 

 

சம்சுதீன் (இலைகள் இலக்கிய இயக்கம், இடலாக்குடி)

 

 

கவிஞர் பைசல்  (தக்கலை)

 

 

எச்.பீர்முஹம்மது (எழுத்தாளர் , வேலூர்)

 

 

நதீம் (மனித உரிமை ஆர்வலர், வாணியம்பாடி)

 

 

ஆபிதீன் (எழுத்தாளர் , நாகூர்)

 

 

சதக்கத்துல்லா ஹசனீ (பதிப்பாசிரியர் அல் ஹிந்த் மாத இதழ், மதுரை)

 

 

அன்வர் பாலசிங்கம் (எழுத்தாளர், புதுக்கோட்டை)

 

 

பீர்முகமது (செய்தியாளர், சென்னை)

 

 

ரபீக் இஸ்மாயில் (திரைப்பட இயக்குநர், சென்னை)

 

 

வழக்கறிஞர் உமர் (இன அழிப்புக்கு எதிரன இஸ்லாமிய இளைஞர் இயக்கம், திருப்பூர்)

 

 

கவிஞர் சாகிப் கிரான் (சேலம்)

 

 

தாஜ் (எழுத்தாளர், சீர்காழி)

 

 

வஹீதா பானு (கரூர்)

 

 

சபீலா தஸ்னீன் (மென்பொருள் பொறியாளர், சென்னை)

 

 

முனைவர் லைலா பானு (நாகர்கோவில்)

 

 

அனுஷ் கான் (பதிப்பாளர், பொள்ளாச்சி)

 

 

பைசல் மசூத் (பத்திரிகையாளர் , சென்னை)

 

 

களந்தை பீர்முஹம்மது (எழுத்தாளர், சென்னை)

 

 

கீரனூர் ஜாகிர் ராஜா (எழுத்தாளர், சென்னை)

 

 

சிராஜுதீன் (புத்தகம் பேசுது இதழ், சென்னை)

 

 

அர்ஷியா (எழுத்தாளர், மதுரை)

 

 

மௌலவி முஹம்மது ரபீக் மிஸ்பாஹி (மதுரை)

 

 

முனைவர் அன்வர் பாஷா (திருப்பத்தூர்)

 

 

அனார்கலி (முனைவர் பட்ட ஆய்வாளர், டெல்லி பல்கலைகழகம்)

 

 

அமீர் அப்பாஸ் (திரைப்பட உதவி இயக்குநர், சென்னை)

 

 

பப்பு சிராஜ் (மனித உரிமை ஆர்வலர் , தக்கலை)

 

 

அஷ்ரப்தீன் (மானுட விடுதலைக் கழகம், அருப்புக்கோட்டை)

 

 

அமீர் (வழக்கறிஞர், மதுரை உயர்நீதிமன்றம்)

மலைகள் இணைய இதழ் பற்றிய அறிவிப்பு

வணக்கம்

நண்பர்களே

மலைகள் இணைய இதழ்

தன்னுடைய 18 ஆவது இதழிலிருந்து ஒரு டாட் காமாகத் தனித்து இயங்கத் தொடங்கியிருக்கிறது.

இலக்கிய படைப்பாளிகள் மற்றும் வாசகர்களின் ஒத்துழைப்பில்லாமல் இது சாத்தியமில்லை.

தொடர்ந்து மலைகள் இதழுக்கு உங்களுடைய ஒத்துழைப்பாக நான் எதிர்பார்ப்பது

உங்களுடைய சிறந்த சிறுகதைகள்,கவிதைகள்,கட்டுரைகள்,மொழிபெயர்ப்புகள்,இசை பற்றிய கட்டுரைகள்,இலக்கிய நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புகள் போன்றவற்றை அனுப்புங்கள்

மலைகள் தொடர்ந்து உற்சாகமாக இயங்க உங்களடைய சிறந்த விமர்சன கருத்துகளையும் எழுதி அனுப்புங்கள். குறைகள் இருப்பின் சொன்னால் அவற்றை சரி செய்துகொண்டு மேலும் இதழை செழுமையாக்கலாம்.

ஆக்கபூர்வமான பணிகளுக்கு உங்களுடைய எல்லாவகையான ஒத்துழைப்புகளையும் நல்குங்குள்

தொடர்புகளுக்கு

 

சிபிச்செல்வன்

மலைகள்.காம்

இணைய இதழ் ஆசிரியர்

0892 555 44 67

sibichelvan@gmail.com

 

 

நூல்கள் வெளியீட்டு விழா

   

* திருப்பூர் படைப்பாளிகளின்  தொகுப்பு

“ பனியன் நகரம்“ 2013

 * சுப்ரபாரதிமணியனின் “ மாலு “ புது நாவல்

 

27/1/2013 ஞாயிறுகாலை 12.30 மணி* டி ஆர் ஜி ஹோட்டல், பல்லடம் சாலை, * தலைமை:     அரிமா கேபிகே செல்வராஜ்

* முன்னிலை: நேசனல் அருணாசலம்,டாப்லைட் வேலுசாமி,

சி.சுப்ரமணியன், சுதாமா  கோபாலகிருஷ்ணன்

சிறப்புரை:

கலாப்ரியா, வண்ணதாசன், ஞாநி, செல்வி,  சுப்ரபாரதிமணியன், சாமக்கோடாங்கி .ரவி,

            வருக என வரவேற்கும் திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்

 

சுப்ரபாரதிமணியன் – மாலு (  நாவல் )     : ( உயிர்மை, ரூ 80)

திருப்பூர் படைப்பாளிகளின் 2013ம் ஆண்டுத் தொகுப்பு “ பனியன் நகரம் “ ,

( கனவு , ரூ 75)  * விழாவில் சலுகை விலையில் கிடைக்கும் ,

திருப்பூர் புத்தகக் கண்காட்சியின் ( ஜனவரி 25 –பிப்ரவரி 3 ) முக்கிய அரங்குகளில் கிடைக்கும்.( கனவு, 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602 * 9486101003 )

முன்னதாக திருப்பூர் ஜோதிஜியின் “ டாலர் நகரம் “ நூல் வெளியீடு:விலை ரூ 200

திருப்பூர் அரிமா விருதுகள் 2013

திருப்பூர்  மத்திய அரிமா சங்கம்

 

 

திருப்பூர் அரிமா விருதுகள் 2013

      *    ரூ 25,000 பரிசு

 

ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருது, பெண் எழுத்தாளர்களுக்கான ”சக்தி விருது” ஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் வெளிவந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களின் நூல்கள், திரைப்படம், குறும்படம் குறித்த புத்தகங்களை இரு பிரதிகள் அனுப்பலாம்.கடைசி தேதி ஏபரல் 15,2013 :

 

முகவரி: ( தலைவர், மத்திய அரிமா சங்கம், 38 ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 601 * 9443559215 * )

 

 

நிகழ்வு எச்.பீர்முஹம்மது ஆழி பதிப்பகப் புத்தக வெளியீடு

நிகழ்வு
எச்.பீர்முஹம்மது

 

download (4)

 

எச்.பீர்முஹம்மதின் குர்து தேசிய இனப்போராட்டம் ஓர் அறிமுகம் என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த 4 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை சென்னை டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெற்றது. வெளி ரங்கராஜன் தொடக்க உரை நிகழ்த்தினார். பேராசிரியர் முத்துமோகன் நூலை வெளியிட புதியதலைமுறை தொலைக்காட்சி நிகழ்ச்சித்தொகுப்பாளர் வெங்கட பிரகாஷ் முதல் பிரதியை பெற்றுக்கொண்டார். இரண்டாம் பிரதியை கோ.வி. லெனின் வெளியிட பெங்களூர் பாலா பெற்றுக்கொண்டார். நிகழ்ச்சியை இந்த புத்தகத்தை வெளியிட்ட ஆழி பதிப்பகத்தின் செந்தில் நாதன் தொகுத்து வழங்கினார். பேராசிரியர் முத்துமோகன் ” தேசியம் இனம் என்பதை மார்க்சியம் எவ்வாறு பார்க்கிறது. அதன் கோட்பாடு சார்ந்த புரிதல் என்ன? லெனின் எவ்வாறு இந்த விஷயத்தை அணுகினார். அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்தியகிழக்கை எவ்வாறு பார்க்கிறது மற்றும் குர்துகளின் வாழ்வியல் போராட்டம் என்பதை குறித்த பல விஷயங்களை எடுத்துரைத்தார். இது சார்ந்த விவாதங்கள், உரையாடல்கள் நடைபெற்றன. பங்கேற்பாளர்களின் கேள்விகளுக்கு முத்துமோகன் பதில் அளித்தார். ஆழி பதிப்பகம் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தது.

 

 

download (5)

 

 

 

 

 

 

 

 

வெளியீடு

ஆழி பதிப்பகம்
1 ஏ, திலகர் தெரு
ஸ்ரீபாலாஜி நகர்
அய்யப்பன்தாங்கல்
சென்னை – 600077
தொலைபேசி: 91-44-26791474
அலைபேசி: 91-9940147473

**

 

நிகழ்வு மணற்கேணி நடத்திய 50 ஆண்டுகளின் தமிழ்த் தொல்லியல் வரலாற்று ஆய்வரங்கம் ரவிக்குமார்

மணற்கேணி நடத்திய 50 ஆண்டுகளின் தமிழ்த் தொல்லியல் வரலாற்று ஆய்வரங்கம்
ரவிக்குமார்

 

 

 

 

download (7)

தமிழ்நாட்டில் வெளிவரும் சிறந்த தமிழாய்விதழ்களில் ஒன்றான மணற்கேணி நேற்று (24-11-2012) புதுச்சேரியில் நடத்திய ஆய்வரங்கத்தில் கலந்து கொள்ளும் வாய்ப்பமைந்தது.

சுமார் 125-150 பேர் கலந்துகொண்ட நல்ல அரங்கமாக அது அமைந்திருந்தது.

1952ல் திரு.டி.என்.இராமச்சந்திரன் அவர்களால் துவக்கப்பட்டு, பின்னர் திரு.நாகசாமி, திரு.நடனகாசிநாதன், தற்போது திருவாட்டி வசந்தி ஆகியோரின் தலைமைகளில் தொடரும் தமிழகத் தொல்லியல் ஆய்வுகளின் பரப்பு, ஆழம், சாதனைகள், சோதனைகள் என்ற பல்வேறு கோணங்களை ஒரே நேரத்தில் அறியத்தரும் அரங்கமாக சிறப்புற அமைந்திருந்தது.

கல்வெட்டாய்வு, நாணயவாய்வு, அகழ்வாய்வு என்ற மூன்று ஆய்வுகளும் அரங்கில் முகன்மை பெற்று இருந்தது மிகப்பயனாக இருந்தது.

ஏடுகளிலும், இதழ்களிலும் படித்திருந்த தொல்லியல் கண்டுபிடிப்புகளை மேலும் ஆழமாக, அந்த ஆய்வுகளைச் செய்த அறிஞர்களாலேயே விளக்கப் பெறுமாறு அமைந்திருந்தது சிறப்பு.

கி.மு 2000 என்று கருதப்படுகிற, சிந்துவெளி எழுத்துகள் தாங்கிய செம்பியன் கண்டியன் கல்வெட்டு, கி.மு 1000 என்றளவில் மட்டும் பேசப்பட்டு, ஆனால் கி.மு 2000ஐக்கும் முன்னால் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிற ஆதிச்சநல்லூர்
அகழ்வாய்வுகள், கி.மு 490 காலத்திய பொருந்தல் கல்வெட்டு, கி.மு 330க்கு சற்றும்
குறையாத ஆனால் வருங்கால ஆய்வுகளால் இன்னும் முற்காலம் என்று சொல்ல
வாய்ப்பிருக்கிற கொடுமணல் அகழ்வாய்வு, இரண்டு எழுத்துமுறைகளைக் (தமிழி+சிந்துவெளி) கொண்ட கி.மு400-300 காலத்திய திசமகரம (தென்னீழம்) கல்வெட்டு ஆகியவற்றை உள்ளிட்ட நடனகாசிநாதனின் பரத்தீடு (presentation) சிந்தைக்கு விருந்தாக இருந்தது.

தொன்மங்களாக அறியப்பட்டவற்றைப் பேணுகின்ற பணியில் இந்திய அளவிலே உயர்நிலையில், உயர்ந்த புகழுடன் விளங்கும் திரு.தயாளன், தாசுமகாலை
அரசியலிடம் இருந்தும் துரு, கிருமிகள் போன்றவற்றிடம் இருந்தும் காப்பாற்றிய செய்திகளை மிக விளக்கமாகப் பேசியதும், எல்லோரா ஓவியங்கள், சிற்பங்கள்
ஆகியவற்றைப் பேணுகின்ற, சிதைவில் இருந்து காக்கின்ற முறைகளை படங்கள் வழியே விளக்கியதும் நல்ல பாடமாக அமைந்தது. அவரிடம், சிதைந்து
கொண்டிருக்கும் சித்தன்னவாசலைக் காக்க வேண்டும் என்ற வேண்டுகோளை
நிகழ்ச்சியை அமைத்த திரு.இரவிக்குமார் மேடையில் வைத்தது மிகவும் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.

அழகர்குளம், மாங்குடி தொல்லியல் ஆய்வுகளுடன், சுமார் 50-60 ஆண்டுகள் தொல்லியற்றுறை வரலாற்றினூடே இருந்திருக்கின்ற சிக்கல்களைப் பற்றி விளக்கிய திரு.வேதாச்சலம் நிறையவே சிந்திக்க வைத்தது. கடிகைக்கோ என்று அறியப்பட்ட சொல்லில் இருந்து விளைந்தது, இளையான்புத்தூர் பிரமதேயச் செப்பேடு சொல்வது உள்ளிட்டவற்றை அவர் விளக்கிய போது, அதில் இருந்த
செய்திகள் “எல்லை அரசியல்”, “உரிமை அரசியல்/போர்”, “ஆதிக்க அரசியல்” ஆகியவற்றை உணர்த்துவதாய், தொல்லியல் ஆய்வுகளின் பிறகோணங்களை விளக்குவதாய் அமைந்தது.

மதுரையை அதிமுக்கிய தொன்மமாகக் கருதுகிற தமிழகத்தில், “மதுரையில் தொல்லியல் ஆய்வுகள் செய்ய இடமே இல்லை, அவ்விடங்கள் எல்லாம் மக்களால்
நிறைந்துவிட்டது” என்ற செய்தி அதிர்வை ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும். வளர்ச்சி என்பது தொன்மங்களை மூடுகின்ற சூழல் ஏற்பட்டிருப்பதையும், இது தொடரும் என்பதால் தொன்மங்களின் முக்கியத்துவம் காக்கப்படவேண்டிய அவசரத்தை விளங்கிக் கொள்ள முடிந்தது.

தொல்லியல் ஆய்வுகள் முன்னேற்றங்களைக் கண்டிருப்பினும், செய்திருப்பவை நூற்றில் ஒருபங்குதான் என்றும், செய்யவேண்டியவை மலையன குவிந்துகிடக்கும் காட்சிகளையும் விவரிப்பதாய் ஆய்வரங்கின் பல்வேறு
உரைகளும் உணர்த்தின.

கொடுமணல் அகாழய்வின் தலைவர் க.இராசன் அவர்களின் ஆய்வுகளை அவர் உரையால் கேட்கும் வாய்ப்பு மகிழ்ச்சி அளித்தது. கொடுமணல் பற்றி படித்திருந்தவர்களுக்கும் அவரின் நேரடி உரை, இராசனின் அயராத உழைப்பையும்,
திறத்தையும் உணர்த்தியது. இதற்காக 15 ஆண்டுகள் உழைத்திருக்கிறார். கொடுமணல் போன்று ஏறத்தாழ 3000 அகழாய்வு செய்ய வேண்டிய இடங்கள்
தமிழகத்தில் இருக்கின்றன என்பதை அவர் சொன்னபோது தமிழகம் செயல்படவேண்டிய வேகம், திறன் கண்ணில் ஆடியது.

“இலக்கியங்களுக்கும் தொல்லியற் செய்திகளுக்கும் இருக்கவேண்டிய ஒருங்கிணைப்பு” பற்றி அவர் பேசியது “அடிப்படையிலேயே இருக்க வேண்டிய
ஒன்று இன்னும் இல்லாதிருக்கிறதே” என்ற கவலை ஏற்பட்டது.

கொடுமணல் அகழாய்வு அல்ல – அது தமிழ்நாட்டிற்குக் கிடைத்த புதையல்.

வீ.செல்வக்குமார் அவர்களின் பழங்கற்கால ஆய்வுகள் மற்றொரு பரிமாணத்தைக் காட்டின. தமிழகத்தில் 15 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் நிலை
பெற்று விட்டனர் என்று ஐயம் திரிபற நிறுவிய அதிராம்பாக்க ஆய்வுகளில் இவரும் பங்கேற்று ஆற்றிய பணிகள் குறிப்பிடத்தக்கவையாய் மனதை ஈர்த்தன.

தொல்லியற் களப்பணிகளில் இன்றைக்கு ஏற்பட்டிருக்கூடிய தொய்வு,
தொல்லியற்றுறையின் சுருங்கிவிட்ட நிலை, தொன்மங்களைக் காப்பதில் தமிழ்க் குமுகத்திற்கு இருக்கக்கூடிய அறிதல், ஆவணப்படுத்தலில் சுணங்கிய நிலை, இழந்து போன தொல்பொருள்கள், களவு போன தொல்பொருள்கள், களவு போய்
கடினமாக உழைத்து மீட்டவைகளை தமிழகம் பாதுகாக்கும் நிலை போன்றவற்றை
பரந்து பட்ட பார்வைகளில் திரு.விசய வேணுகோபால் விளக்கிய விதமும் அது ஏற்படுத்திய சிந்தனைத் தாக்கமும் முக முக்கியமானவை.

தொன்மங்களைப் பண்பாட்டுச் செல்வங்களாக உலகம் போற்றிக்கொண்டிருப்பதை விளக்குவதாக வீ.செல்வக்குமார் உரை அமைய, அப்படிக் கருதாமல் தமிழகம் எவ்வளவு தள்ளியிருக்கிறது என்பதைச் சொல்வதாய் விசயவேணுகோபாலின் உரை அமைந்திருந்தது.

இவ்வறிஞர்களின் உரைகள் பல்வேறு செய்திகளைச் சிந்திக்கக் கொடுக்குமாறு ஆய்வரங்கத்தினை அமைத்திருந்தது மணற்கேணி

அறிவிப்பு சி.சு.செல்லப்பாவின் நூற்றாண்டு நிறைவுச் சிறப்பிதழாக வெளி வருகிறது தளம் முதல் இதழ்

சி.சு.செல்லப்பாவின் நூற்றாண்டு நிறைவுச் சிறப்பிதழாக வெளி வருகிறது தளம் முதல் இதழ் 

 

 

 

 

 

 

 

 

எழுத்தாளர்கள் பாரவி(பிரக்ஞை), சாமிநாதன்(சாம்),கவிஞர் தேவகோட்டை வா.மூர்த்தி ஆகியோரின் தீவிர முயற்சியின் பயனாய்த் ‘தளம்’ என்னும் பெயரில் ஒரு கலை இலக்கியக் காலாண்டிதழ் தொடங்கப் பட்டிருக்கிறது. இதன் முதல் இதழ் அக்டோபர் மாத இறுதியில் வெளிவரும்.

தளம் முதல் இதழில் அம்பை, எஸ்.பொ., சுப்ரபாரதி மணியன், பெருந்தேவி, சித்தன்(யுகமாயினி),முருகபூபதி,ந.முத்துசாமி,சார்வாகன்,வே.சபாநாயகம், ஆறுமுகம் ரவிச்சந்திரன், வீ.விஜயராகவன். தீபப்பிரகாசன், ஜி.தெய்வசிகாமணி, சிவகுமார்(இந்து நாளிதழ் இசை விமரிசகர்), எஸ்.எம்.ஏ.ராம் ஆகியோரின் படைப்புகள் இடம்பெறுகின்றன. இவை தவிர ஓவியர்கள் விஸ்வம்,ஜெயகுமார் ஆகியோரின் நவீன ஓவியங்களும் கோட்டோவியங்களும் படைப்புகளுக்கு அழகும் அர்த்தமும் சேர்க்கின்றன.

சி.சு. செல்லப்பாவின் நூற்றாண்டு நிறைவினைக் கொண்டாடும் வகையில் தளத்தின் முதல் இதழ் சி.சு. செல்லப்பாவுக்கு அஞ்சலியாக சமர்ப்பிக்கப் படுகிறது. அவரது ‘எழுத்து’ பத்திரிகை, அயராத இலக்கியப்பணி, மற்றும் போராட்டம் நிறைந்த வாழ்க்கை இவற்றை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப் படுத்தும் விதமாய் இடம்பெறும் ஒரு விமர்சனக் கட்டுரை இதழின் சிறப்பு அம்சமாக இருக்கும். ஓவியர் ஜெயகுமார் தத்ரூபமாக வரைந்திருக்கும் சி.சு.செல்லப்பாவின் கோட்டோவியம் இதழின் அட்டையை அலங்கரிக்கும்.

தளம் முதல் இதழைப் பெற விரும்பும் நண்பர்கள் தங்கள் தபால் முகவரிகளை thalam.base@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்பி வைத்தால், இதழ் வெளி வந்தவுடன் அவர்களுக்குப் பிரதிகள் தபாலில் இலவசமாக அனுப்பி வைக்கப் படும். இந்த முயற்சி வெற்றி பெற அனைத்து இலக்கிய ஆர்வலர்களின் ஒத்துழைப்பையும் அன்போடு கோருகிறோம்.

தளத்துக்காக,
எஸ்.எம்.ஏ.ராம்.

அறிவிப்பு பிரதிகள்/காலம் மீதான வாசிப்பு முழு நாள் உரையாடல் அரங்கு

பிரதிகள்/காலம் மீதான வாசிப்பு

முழு நாள் உரையாடல் அரங்கு!

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

பிரதிகள்/காலம் மீதான வாசிப்பு
முழு நாள் உரையாடல் அரங்கு!

25 நவம்பர் 2012 (ஞாயிறு)
லண்டன்

தோழமை மிகு நண்பர்களே!

இரண்டு விரிந்த தலைப்புகளில் இந்த உரையாடல் அரங்கினை நடாத்த ஆலோசிக்கிறோம்.

1. இலங்கை இனப்பிரச்சினை பின்புலத் தளத்தில் ஆயுதப் போராட்ட காலகட்டத்தினையொட்டி வெளிவந்துள்ள சிறுகதை, நாவல் தொகுதிகள், அனுபவக் குறிப்புகள்,வரலாற்றுப்பதிவுகளை,முன்னிறுத்தி, இதுவரை அச்சில் பதிவான பிரதிகள் மீதான பன்முக வாசிப்பினைக் கோரும் உரையாடலாகவும்…

புனைவுகள்
,
1. லங்கா ராணி – அருளர்
2ஒரு கோடை விடுமுறை-ராஜேஸ்வரி பாலசுப்ரமணியம்
3. புதியதோர் உலகம் – கோவிந்தன்
4. ம், கொரில்லா – ஷோபாசக்தி
5. யுத்தத்தின் இரண்டாம் பாகம் – சக்கரவர்த்தி
6. கசகறணம் – விமல் குழந்தை வேல்
7. ஆறாவடு – சயந்தன்
8. யுத்தத்தின் முதலாம் அதிகாரம்- தேவகாந்தன் 
9. ஓட்டமாவடி அரபாத்தின் சிறுகதைகள்
10. யோ.கர்ணனின் இரு தொகுதிகள்

பதிவுகள் / அனுபவங்கள்

1. ஈழப்போராட்டத்தில் எனது சாட்சியம் – புஸ்பராசா
2. வானத்தைப் பிளந்த கதை – செழியன்
3. ஈழப்போராட்டத்தில் எனது பதிவுகள் – கணேச ஐயர்
4. அகாலம் – புஷ்பராணி
5. முறிந்தபனை
6. சுதந்திர வேட்கை- அடேல் பாலசிங்கம்
7. போருலா – மலரவன் 
8. மரணத்தின் வாசனை -த. அகிலன்
9. வரலாறு யாரையும் விடுதலை செய்ததில்லை-ஜீவமுரளி

ஆங்கிலப் பதிவுகள்
1. Funny Boy – Shyam Selvadurai
2. When Memory Dies – A. Sivanandan
3. Love Marriage – Vasuki Ganeshananthan
4. Whirl Wind – A. Santhan

*(மேற்காணும் பட்டியல் முழுமையானது அல்ல)மேற்கூறப்பட்ட பட்டியலில் விடுபட்ட அச்சில் இதுவரை வெளிவந்தபிரதிகளை முன்வைத்தும் முதலாவது தலைப்பிற்கான கட்டுரையை முன்வைக்க முடியும்.
பிரதிகள் மீதானஒப்பிட்டு பார்வையாகவோ, தனித்தனி ஆய்வாகவோ கட்டுரைகள் இருக்கலாம்.

௦௦௦

2.போருக்குப்பிந்திய இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல்,சமூக மாற்றங்களும் விளைவுகளும் தொடர்பான பல்வேறுபட்ட பார்வைகளைப் பேசுவதற்கான காலம் மீதான உரையாடலாகவும்…. 

மேலே கூறப்பட்ட இரு தலைப்பு பேசு பொருளில் இந்த அரங்கு இருப்பது பயனுள்ளதாக இருக்கும் எனக் கருதுகிறோம்.


எழுத்தாளர்கள்,ஆய்வாளர்கள்,கருத்தாளர்களிடமிருந்து இவ்விரு தலைப்பிற்குற்பட்ட கட்டுரைகளை எழுத்து மூலம் கோருவதுடன்,புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்றவர்கள் அமர்வுக்கு நேரடியாக சமூகம் தந்து தங்களது கருத்தினை முன் வைத்து பேச அழைக்கிறோம்.

கலை இலக்கிய முயற்சிகளில் தேசிய இன அடையாளங்கள்- எனும் தலைப்பில்ஆய்வாளர், அ,ராமசாமி ( பேராசிரியர்,வார்சா பல்கலைக்கழகம்) சிறப்புரை ஆற்ற உள்ளார்.

கலந்துகொள்ள விரும்புவோர்கள், கட்டுரைகளை முன்வைக்க விரும்புபவர்கள் , கருத்துக்கள்,ஆலோசனைகளை தெரிவிக்க விரும்புவோர்கள் எதிர்வரும் நவம்பர் 12ம் திகதிக்குமுன் தெரியப்படுத்துமாறு கேட்கிறோம்.

ஏற்பாடு – தமிழ் மொழிச் சமூகங்களின் செயற்பாட்டகம்

தொடர்புகளுக்கு- 

மின்னஞ்சல் – eathuvarai@gmail.com

தொலைபேசி- ( 0044 7817262980) 

 

அஞ்சலி – உலக இலக்கிய எழுத்தாளர் கார்லோஸ், ஃப்யென்டஸுக்கு அஞ்சலி.

உலக இலக்கிய எழுத்தாளர்

கார்லோஸ், ஃப்யென்டஸுக்கு அஞ்சலி.

( 11. 11. 1928 -15. 5. 2012 )

ச. ஆறுமுகம்.

 

 

 

 

 

ஃப்யென்டஸ் என அறியப்படும் மெக்சிகோவின்  83 வயதான லத்தீன் அமெரிக்க

எழுத்தாளர் கார்லோஸ் ஃப்யென்டஸ் மாஸியா, இலக்கிய உலகத்தால் நல்லதொரு புனைகதைப் படைப்பாளராகவும் கட்டுரையாளராகவும் கொண்டாடப்படுபவர்.

15 5 2012 செவ்வாய்க்கிழமை மெக்ஸிகன் இதழான `ரிஃபார்மா`வில் அவர் எழுதிய பிரெஞ்சு நாட்டின் அண்மைய அதிகார மாற்றம் குறித்த கட்டுரை வெளியானது. அதே நாளில் தெற்கு மெக்ஸிகோவின் ஏஞ்சல்ஸ் டெல் பெட்ரீகல் மருத்துவமனையில் கடுமையான குருதிப்போக்கின் காரணமாக அவர் மரணமடைந்ததாக கலை மற்றும் பண்பாட்டு தேசியக் கவுன்சில் தலைவரான கான்சுயூலோ சாய்சார்  அதிகாரபூர்வாமாக அறிவித்தார்.

••

 

ஃப்யென்டஸ் பனாமா நகரில் 11.11.1928ல் பிறந்தவர். அப்போது இவரது தந்தை மெக்ஸிகோவின் அயல்நாட்டுத் தூதராகப் பனாமா நாட்டில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அதன் பிறகும் பல நாடுகளுக்கும் அவர் தூதராக மாற்றப்பட்டதால் ஃப்யென்டஸின் குழந்தைப்பருவம் முழுவதும் மான்ட்டிவீடியோ, ரியோ-டி-ஜெனிரா, வாஷிங்டன், சான்டியாகோ, குயிட்டோ மற்றும் போனஸ் எயர்ஸ் போன்ற பல நாட்டுத்தலைநகரங்களிலேயே கழிந்தது. இளம்பிராயத்தினராக மெக்ஸிகோவுக்கு வந்த ஃப்யென்டஸ் 1965 வரையிலும் அங்கேயே வசித்தார். அங்கேயே சட்டக்கல்வியும் பெற்றார். அதைத் தொடர்ந்து அவர் தந்தையைப் போலவே மெக்ஸிகோவின் தூதராகப் பணியேற்று லண்டன், பாரீஸ் மற்றும் பல நகரங்களில் வாழ்ந்தார். மெக்ஸிகோவின் முன்னாள் குடியரசுத்தலைவர் குஸ்தவோ டியாஸ் ஆர்டாஸ் ஸ்பானிஷ் தூதராக நியமிக்கப்பட்டதை எதிர்த்து தனது பிரான்ஸ் நாட்டுத்தூதர் பதவியைத் துறந்தார். பிரௌன், ப்ரிஸ்டன், ஹார்வர்டு, பென்சில்வேனியா, கொலம்பியா, காம்ப்ரிட்ஜ் மற்றும் ஜார்ஜ் மேசன் பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும் பணிபுரிந்திருக்கிறார்.

ஃப்யென்டஸ் தனது படைப்புகளுக்காக செர்வான்டிஸ் விருது உட்பட இருபதுக்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்றுள்ளார். நெதர்லாந்து, பேச்சு மற்றும் எண்ணங்களின் உரிமைக்கான நான்கு உரிமைகள் விருதும் 2006ல் அவருக்கு வழங்கப்பட்டது. அவரது எண்பதாவது பிறந்தநாள் மெக்ஸிகோ நாட்டின் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டது. நோபல் பரிசுக்கான பட்டியலுக்குப் பலமுறை அவரது பெயர் பரிந்துரைக்கப்பட்டும் இறுதி வரை அவருக்கு வழங்கப்படவில்லை.

அவரது படைப்புகள் வரலாறு, அரசியல் மற்றும் புனைவுகள் கலந்து வாசகர்களை ஈர்த்துக்கொள்ளும் நடையில் அமைந்தவை.

ஃப்யென்டஸ் படைப்புகள் குறித்து வர்கஸ் லோசாவின் ஃப்யென்டஸ்-ஒரு மார்க்ஸீய வாசிப்பு உட்பட 19 நூல்கள் ஆங்கிலத்திலும் மற்றும் ஒரு 19 நூல்கள் ஸ்பானிய மொழியிலும் வெளியாகியுள்ளன.

இலக்கியப்பேட்டி ஒன்றில் எழுதுவதும் வாசிப்பதும் ஒரு சொர்க்கப் பேரின்பம் என்ற ஃப்யென்டஸ் வாழ்க்கையின் அனைத்தும் செக்ஸ் உட்பட இலக்கியத்திலேயே முடிவடைகின்றன எனக் குறிப்பிடுகிறார். தன்னை ஒரு அரசியல் மிருகம் என அழைத்துக்கொள்ளத் தயங்காத அவர் அரசியல் கலக்காத படைப்பு என்று எதுவும் இல்லையென்றும் மொழி என்றாலே அரசியலும் உள்ளடங்கியதே என்கிறார்.

மார்க்வெஸ், பாப்லோ நெருடா போன்றவர்களுடன் நட்பு கொண்டிருந்த ஃப்யென்டஸ் அரசியலில் விமர்சனத்துடனான எதிர்நிலை மற்றும் நிறுவனமயமாக்கப்பட்ட மரபுகளை எதிர்க்கும் இளம் எழுத்தாளர்கள் இயங்கிய `லத்தீன் அமெரிக்கன் பூம்` என்ற இயக்கத்தோடு இனம் காணப்பட்டார். காஸ்ட்ரோ புரட்சி, மற்றும் ஃப்யென்டஸின் இடதுசாரி அரசியல் நிலைபாடு காரணமாக 1963ல் தன் நாட்டுக்குள் நுழைய அமெரிக்கா அனுமதி மறுத்தபோது ஃப்யென்டஸ், ‘’ உண்மையான வெடிகுண்டுகள் எனது புத்தகங்கள்தாம்; நான் அல்ல. அமெரிக்காவின் எந்த அஞ்சலகத்திலும் நான் குண்டு போட்டுவிடப் போவதில்லை. என்னை விடவும் என் புத்தகங்கள் அபாயகரமானவை.’’   எனக் கூறிய அவர், உலக அரசியல் நிகழ்வுகள் குறித்துக் கூர்மையான விமரிசனங்களை வெளியிட்டார். அமெரிக்கநாடு குறித்து, ‘’ அது எப்போதும் தன்னைச் சரியாகப் புரிந்து கொள்கிறது; ஆனால் இதர நாடுகளைச் சரியாகப் புரிந்துகொள்வதில்லை’’ என்று கருத்து தெரிவித்தார்.

இருபதாம் நூற்றாண்டின் சிறந்த நாவலாசிரியர்கள் ஐந்து பேர்களைக் குறிப்பிடுமாறு பேட்டியாளர் லிண்டன் வீக்ஸ் கேட்டபோது மறைந்தவர்களையே குறிப்பிட்டார்,

ஃப்ரான்ஸ் காஃப்கா. ‘’ காஃப்காவை வாசிக்காமல் நீங்கள் இருபதாம் நூற்றாண்டினைப் புரிந்துகொள்வது இயலாதது.’’

வில்லியம் ஃபால்க்னர். ‘’ சிறந்த துன்பியல் படைப்பாளர். லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களில் நான் அவரை மட்டுமே குறிப்பிடுவேன்.’’ என்று சொல்லிவிட்டு நகைத்தார்.

ஜேம்ஸ் ஜாய்ஸ். ‘’ அவர் மொழி வழியாக உலகினை மறுபடி கண்டுபிடிக்கும்  மொழியின் அனைத்து வகைப் பயன்பாட்டுக்கான வாய்ப்பு வழிகளைத் திறந்தவர்.’’

தாமஸ் மான். இருபதாம் நூற்றாண்டின் சிறந்த இலக்கியமாக ஜெர்மன் இலக்கியம் திகழ்கிறது. அவர்தாம் ஜெர்மன் இலக்கியத்தின் முழுவதற்குமான சுருக்கம்.

ஐந்தாவது நபர் யார்? எனக் கேட்ட போது ‘’ நான் அதைக் காலியாக விட்டுவிட நினைக்கிறேன்.’’ என்றிருக்கிறார்.

அவரது ஆர்ட்டீமியோ குரூஸின் மரணம் என்ற நாவல், இளம் வயதில் மெக்ஸிகோவின் அடித்தட்டு மக்களுக்காகப் போராடும் புரட்சிவாதியாக இருந்து, பின்னர் பேராசை பிடித்த சுரண்டல்காரனாக மாறிய ஊழல்வாதியின் மரணம் பற்றியது.  அவரது எழுத்துக்கள் அனைத்தும் மெக்ஸிகோவின் முன்னேற்றம் குறித்ததாக, பொதுச்  செல்வம் சமமாகப் பங்கிடப்படாமல் வறுமை ஒழிக்கப்படாமலிருப்பதைக் குறித்தே அமைந்திருந்தன.

காற்று எங்கே சுத்தமாக இருக்கிறதோ அங்கே, ஆர்ட்டீமியோ குரூஸின் மரணம், ஔரா, வயதான கிரிங்கோ, என்ற நாவல்களோடு மொத்தம் இருபது நாவல்கள் படைத்தவர். அவரது கடைசி நாவல் விதியும் விருப்பமும் 2008ல் வெளியானது. ஒன்பது சிறுகதைத் தொகுதிகளும் 15 கட்டுரை நூற்களும் ஐந்து நாடகங்ளும் ஏழு திரைக்கதைகளும் இவரது உழைப்பில் மலர்ந்தவை. இவரது படைப்புகள் 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன

 

•••

லத்தீன் அமெரிக்கச் சிறுகதைகள் என்ற பெயரில் பேராசிரியர் சிவகுமார் தொகுப்பிலும், மீட்சி , கல்குதிரை, இதழ்களில் சில சிறுகதைகள் தமிழில் வெளியாகியுள்ளன.

ஃப்யென்டஸ் நாவல்கள் எதுவும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதாகத் தெரியவில்லை. இரண்டு அமெரிக்காக்கள் என்ற ஒரு குறுநாவல் சா. தேவதாஸ் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு புதுஎழுத்து இதழில் வெளியாகியிருக்கிறது.

இந்த உலகப் படைப்பாளிக்கு அஞ்சலி செலுத்துவோம்.

அஞ்சலி கார்லோஸ் புயன்டோஸ்

அஞ்சலி

எழுத்தாளர் கார்லோஸ் புயன்டோஸ்
பிறந்தது 11 நவம்பர் 1928 இறப்பு 15 மே 2012

தமிழில் அவரின் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

அவருக்கு மலைகள்.காம் இலக்கியத்திற்கான இணைய இதழ் தன் அஞ்சலியைச் செலுத்துகிறது