Category: பதிப்பக அலமாரி

பதிப்பக அலமாரி – காலச்சுவடு – முனியாண்டி விலாஸ் – ரெங்கையா முருகன்

பதிப்பக அலமாரி

முனியாண்டி விலாஸ்

ரெங்கையா முருகன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

ஒரு காலத்தில் வெளியில் போய்ச் சாப்பிடுவது நடுத்தர வர்க்கத்தினருக்கு அந்தஸ்தின் அடையாளமாகவும் அல்லது பொறுப்பின்மையின் வெளிப்பாடாகவும் இருந்தது. இன்று நிலத்திலிருந்து அன்னியப்பட்ட வாழ்க்கை முறையில் காசு கொடுத்து வாங்கிச் சாப்பிட வேண்டியது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. சின்ன சின்ன குடும்பங்களுக்குப் பொருளாதாரரீதியாகச் சிக்கனமானதாகவும் இருக்கிறது. எனவே சாப்பாட்டுக் கடைகள் பெருகிவிட்டன. மேட்டிமைச் சாதிக்கு ‘ஆர்யபவன்’, ‘உடுப்பி விலாஸ்’ ஊடகப் புகழ் ‘சரவண பவன்’ போன்றவை பரவலாக அறியப்பட்டதாகத் தோன்றினாலும், தமிழ்ச் சமூகத்தில் அனேக மக்களின் பசி தீர்ப்பதில் முக்கிய இடம் வகிப்பது ‘முனியாண்டி விலாஸ்’ ஹோட்டல்.

சிவப்பு வண்ணப் பின்னணியில் வெள்ளை எழுத்துக் கொண்ட முனியாண்டி விலாஸ் பெயர்ப் பலகைத் தட்டி குமரி முதல் வடவேங்கடம் சித்தூர் வரை பரவலாகக் காணப்படுகிறது. வீட்டில் அசைவம் பொருளாதார வளத்தையும், வெளியில் முனியாண்டி விலாசில் சாப்பிடுவது பொருளாதாரச் சிக்கனத்தையும் காட்டும். புதிய ஒரு ஊருக்கு வரும் பயணி அந்த ஊரில் மதுரை ஸ்ரீ முனியாண்டி விலாஸ் ஹோட்டல் எங்குள்ளது எனக் கேட்டுச் சாப்பிடும் வழக்கம் பழக்கத்தில் உள்ளது. முனியாண்டி விலாஸ் சிவப்பு வெள்ளை போர்டைப் பார்த்ததும் கோட்டை மாரியம்மனைப் பார்த்த குதூகலம் மனசுக்குள் நிறைந்துவிடக்கூடும். அபய உணர்வில் சாப்பிடுவதற்கு முன்னரே வயிறு குளிர்ந்துவிடுகிறது. இன்றைய சம்பளக்காரர்களுக்கு முனியாண்டி விலாஸ் அந்நியமாக இருக்கலாம். ஆனால் ஒரு காலத்தில் அவர்கள் படிக்கும்போது, வேலைக்குச் சேர்ந்த தொடக்கத்தில் அதுதான் கைகொடுத்தது. இன்று வருமானமும் நவீனத் தீண்டாமையும் பெருகிக்கொண்டிருக்கிற சமூகச் சூழலில் மூன்றாம் தரமாக ஒதுக்கப்படுகிறது. ஆனால் இன்றும் உணவிற்கான சில நியதிகளை விடாமல் கடைப்பிடிப்பதில் முனியாண்டி விலாஸ்தான் முதல்தரம். நடுத்தட்டு, கீழ் நடுத்தட்டு மக்களை நோக்கி உணவு வியாபாரத்தை நடத்தியது, அதுவும் விரிவாகப் பரப்பியது முனியாண்டி விலாஸ்தான். அதற்குமுன் கும்பகோணம், தஞ்சாவூர் அய்யர்கள்தான் மேல்தட்டு மக்களுக்கான உணவு வியாபாரம் செய்து வந்தார்கள். அது வயிற்றுக்கானதாக இல்லாமல் வாய்க்கானதாகத்தான் இருந்தது.

தமிழகத்தின் அன்றைய பெருநகரங்களில்தான் போக்குவரத்துப் பெருகிவரும் நகரங்களில்தான் பிராமணாள் கடைகள் மையம் கொண்டிருந்தன. ரயில்வே நிர்வாக அதிகார மட்டத்தில் உத்தியோகம் பண்ணுகிறவர்களின் ஆலோசனையின் பேரில் இப்படிப்பட்ட கடைகள் தொடங்கப்பட்டிருந்தன. ‘பிராமணாள் கபே’ என்றும் (மேற்கத்திய தாக்கம்) நாலு பேர் கூடும் இடத்தில் தைரியமாகப் பிராமணாளுக்கு மட்டும் என்றும் போர்டில் எழுதி வைத்திருப்பார்கள். ரயில்வே நடத்தும் கேண்டீன் அட்டூழியத்தைத் தந்தை பெரியார் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் குடியரசு இதழில் ஒரு பிடி பிடித்துவிட்டிருக்கிறார். பிராமணாள் சாப்பாட்டுக் கடைக்குள் சாமான்யர்கள் நுழைய முடியாததையும், காய்ந்துபோன ரொட்டியும் தோசையும் கனக் காசுக்கு விற்பதையும் இடைச் சாதிப் பயணிகள் வெகுதூரம் சென்று சாப்பிடவேண்டி இருப்பதையும் அந்த வியாபாரத்திற்கு ரயில்வே துறையின் அனுசரணையையும் தந்தை பெரியார் கண்டித்திருக்கிறார்.

காபேயைப் பரந்துபட்ட மக்களுக்கான உணவு நிறுவனமாகக் கொள்ள இயலாது. தமிழ்நாட்டில் பொது இடத்தில் உணவு வழங்குவது என்றால் அன்னச் சத்திரம் வைத்துப் பசி தீர்த்த வரலாறு உண்டு. ராணி மங்கம்மாள் ஆட்சிக் காலத்தில் சாலைகள் போடுவது பரவலாகியது. ராணி மங்கம்மாள் சாலைக்குச் சோலை என்ற சொற்கட்டுக்கூட உண்டு. சாலைகளில் யாத்ரீகர்களும் புண்ணிய சேத்திரங்களுக்குப் போவோரும் வியாபாரிகள் தங்கள் தானிய மூட்டைகளை ஏற்றிக்கொண்டு போகும்போதும் இருட்டுக் கட்டிய பின்னர் இரவு தங்கி ஓய்வெடுத்துச் செல்வதற்காகத் தருமச் சத்திரங்கள் கட்டி வைத்தார்கள். இதைப் பெரும் செல்வந்தர்கள் தங்கள் சொத்தைக் கட்டி ஆள முடியாதவர்கள் தமது அந்திமக் காலங்களில் தர்ம சிந்தனையுடன் செய்து வந்தனர். இன்றும் வீடுகளில் ஒருத்தருக்கு இரண்டு மூன்று வேளை தொடர்ந்து சாப்பாடு போட்டால் அது பிடிக்காத பழைய ஆட்கள் ‘இது என்ன தர்ம சத்திரமா வந்தவங்களுக்கெல்லாம் சாப்பாடு போட’ என்று கேட்பார்கள். இந்த அன்னச் சத்திரங்கள் தமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிவரை இருந்தன.

சுதந்திரப் போராட்டம் தீவிரமடைந்த காலங்களில் பிரிட்டீஷ் சர்க்காரின் இடையூறு, சத்திரங்களையொட்டிய முறையற்ற நில அபகரிப்பு போன்றவை சத்திர நிர்வாகம் சீர்குலையக் காரணமாக அமைந்தன. மோட்டார் வாகனம் பெருகிய காலத்தில் அன்னச் சத்திரங்களுக்கு அவ்வளவாக அவசியம் இல்லாமல் போயிற்று. சத்திரங்களின் சிதைவுக்கு அடுத்தடுத்து நிகழ்ந்த பஞ்சங்களும் முக்கியக் காரணமாக இருந்திருக்கக்கூடும். இப்படியான காலத்தில் உணவு கொடுத்து அடுத்து வருபவருக்கு உணவு தர வேண்டும் என்றால் என்ன செய்வது என்ற நிலையில் ‘கண்ணீரோடு வயிற்றுக்குப் போட்ட சோற்றுக்குக் காசு வாங்க வேண்டிய அதர்மக் காலம் வந்து போச்சுதே’ என்ற சொல் வழக்கும் உண்டு. அந்தக் கண்ணீரின் சூடு ஆறாது இன்றும் உணவைப் பரிமாறுவது அனேக முனியாண்டி விலாஸ்கள். அதனால்தான் இன்றும் தனக்கான கடையைத் தேடி அலையும் கண்கள் முனியாண்டி விலாஸ் போர்டு கண்டதும் ஆசுவாசம் அடைகின்றன.

முனியாண்டி விலாஸ் உணவகங்களின் தோற்றுவாய் என்று சிறப்பிக்கப்படும் முக்கியக் கிராமம் வடக்கம்பட்டி ஆகும். இக்கிராமம் மதுரை – விருதுநகர் பிரதான சாலையில் திருமங்கலம் அடுத்து கள்ளிக்குடி என்ற கிராமத்தினுள்ளே சற்றே உள்ளடங்கிய அமைதியான சூழலில் அமைந்துள்ளது. வானம் பார்த்த பூமியாக மானாவாரி விவசாயத்தை நம்பி வாழ்கின்ற கிராமம் இது. இக்கிராமத்தில் பெரும்பான்மை மக்கள் ரெட்டியார், வெலம நாயுடு சமூகத்தவர்கள். விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் தேவர், யாதவர், செட்டியார், பிற சமூகத்தவர்கள் வாழ்கின்றனர்.

வடக்கம்பட்டி கிராமக் காவல் தெய்வம் முனியாண்டி. வனமாக இருந்த பகுதியை அழித்து நாயுடு, ரெட்டியார் சமூகத்தினர் வசித்துவந்தனர். இக்கிராம முனியாண்டி கோவில் முன் ரெட்டியார் வகையறாக்களால் கட்டப்பட்டது.

கிருஷ்ண தேவராயர் காலத்தில் பெரிய பதவி வகித்த மூத்தாராம் வகையைச் சார்ந்த நாகம நாயக்கர் தலைமையில் பெரும்படை வந்து மதுரையைக் கைப்பற்றியது. நாகம நாயக்கரின் தொடர்ச்சியாக ஏழாவது மன்னராகத் திருமலை நாயக்கர் ஆண்டபோது படை வீரர்கள் காலப்போக்கில் குடும்பத்துடன் மதுரைக்கு அருகில் உள்ள திருமங்கலம் தாலுகாவைச் சுற்றி நாற்பத்தெட்டுக் கிராமங்களில் வெலம நாயுடு சமூகத்தவர்கள் தங்கலாயினர். வெலம நாயுடு சமூகத்தைப் பொறுத்தவரை பெண் எடுப்பதும் கொடுப்பதும் இந்தக் கிராமங்களுக்குள்ளே தான்.

தமிழகம் முழுமையும் பரவியுள்ள முனியாண்டி விலாஸ் ஹோட்டல் உரிமையாளர்கள் மேற்குறித்த நாற்பத்தெட்டுக் கிராமங்களைச் சார்ந்தவர்களே. வடக்கம்பட்டி கிராமத்தைச் சுற்றிலும் வசிக்கின்ற வெலம நாயுடு, ரெட்டியார், கம்பளத்தார், தேவர் ஆகிய சமூகத்தவர்கள் முனியாண்டி விலாஸ் உரிமை யாளர்கள். வடக்கம்பட்டி, அச்சம்பட்டி, புதுப்பட்டி, கள்ளிக்குடி, S. கோபாலபுரம், நெடுங்குளம், ஆண்டிப்பட்டி போன்ற முக்கிய ஊர்களிலிந்து கிளம்பியவர்களே முனியாண்டி விலாஸ் உரிமைதாரர்கள்.

பொதுவாக வடக்கம்பட்டி கிராமத்தைச் சுற்றிலும் காக்கும் காவல் தெய்வமாக முனியாண்டி சுவாமி இருப்பதால் எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் முனியாண்டி பெயரில் தொடங்குகிறார்கள்.

ஆரம்பக் காலங்களில் கிராமங்களில் நடக்கும் கல்யாணம் போன்ற விசேஷங்களில் சமையல் வேலைக்குச் செல்வதுண்டு. அக்காலத்தில் வெலம நாயுடுக்களால் நடத்தப்பட்ட குன்னத்தூர் அசைவ ஹோட்டல் பிரசித்தி பெற்றது. இந்த உணவகம் முனியாண்டி விலாசுக்கு முந்தையது என்று கூறலாம். இந்த உணவகம் 1920-1930க்கும் இடைப்பட்ட காலத்தில் இருக்கும். வடக்கம்பட்டி கிராமத்தைச் சுற்றி 1930களில் கடுமையான வறட்சி ஏற்பட்டு விவசாயம் முழுமையாகப் பொய்க்க ஆரம்பித்தது. வெலம நாயுடுகள் முழுமையாக விவசாயத்தை மட்டும் நம்பி வாழ்ந்தனர். ரெட்டியார்கள் பருத்தி, பஞ்சு வியாபாரம் செய்து வந்தார்கள். பஞ்சத்தின் காரணமாக வாழ்வாதாரத்துக்காக வேறு வேலை தேட ஆரம்பித்தனர். அச்சமயத்தில் வாழ்வாதாரத்திற்கான தொழிலாக ஹோட்டல் வியாபாரம் இருந்தது.

முதன் முதலில் மா.வெ.சு. சுப்பாநாயுடு அவர்கள் வறட்சியின் காரணமாக வயிற்றுப்பாட்டுக்கே உணவின்றிக் கஷ்டப்படும்போது குறைந்த விலையில் வயிறாரச் சாப்பாடு போட்டால் எப்படி இருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்தார். சுப்பா நாயுடுவிற்குப் பழக்கப்பட்ட காரைக்குடிப் பகுதியில் வடக்கம்பட்டி கிராமக் காவல் தெய்வம் முனியாண்டி பெயரில் முதல் உணவக விடுதியை 1935 வாக்கில் ஆரம்பித்தார். சுப்பா நாயுடு இப்பெயரில் உணவகம் தொடங்குவதற்கு முன்பாகவே ரங்கவிலாஸ் என்ற பெயரில் வெலம நாயுடு சமூகத்தவர் 1925ஆம் ஆண்டுவாக்கில் அசைவ ஹோட்டல் நடத்தியுள்ளனர்.

தெலுங்கைத் தாய்மொழியாகக்கொண்ட ரெட்டியார், நாயுடு, ராஜு போன்றவர்கள் தங்களது வியாபாரத் தலத்தை ‘விலாஸ்’ என்ற பின்னொட்டுடன் குறிப்பிடுவர். விலாஸ் என்ற சொற் பிரயோகம் விலாசம் என்ற மராட்டிய மூலச் சொல்லிலிருந்து மருவியது. விலாசம் என்றால் நாடகத்தனத்தைக் குறிக்கும் சொல். விலாஸ் என்பது அனைத்துத் தரப்பட்ட மக்களும் சங்கமிக்கும் இடமாகும்.

முதலாவதாக சுப்பாநாயுடு முனியாண்டி விலாஸ் ஹோட்டலை ஆரம்பிக்கும்போது குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே வேலை செய்து குடும்பத் தொழிலாக ஹோட்டலை நடத்தினார். சுப்பாநாயுடுவைத் தொடர்ந்து விழுப்புரம் வெங்கடாசலம் நாயுடு, புதுக்கோட்டை அயோத்தி நாயுடு, பாண்டிச்சேரி சீனிவாசன் நாயுடு, திருவாரூர் ரெங்கசாமி நாயுடு, பட்டுக்கோட்டை அழகர்சாமி நாயுடு, திருச்சி அய்யப்பன் நாயுடு, மன்னார்குடி அழகர்சாமி நாயுடு, திருத்துறைப்பூண்டி சுருளி நாராயணசாமி நாயுடு, கும்பகோணம் அழகர்சாமி நாயுடு, காஞ்சிபுரம் M.S.R. நாயுடு, புதுக்கோட்டை திருவேங்கடம் நாயுடு, தாராபுரம் கிருஷ்ணன் நாயுடு மற்றும் ராமசாமி ரெட்டியார் காரைக்குடியில் உணவகத்தை ஆரம்பித்துத் தொடர்ச்சியாக ரெட்டியார் சமூகத்தினர் நாகப்பட்டினம், பாண்டிச்சேரி, அரக்கோணம், சென்னை ஆகிய இடங்களில் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்தினார்கள். வடக்கம்பட்டி கிராமத்திலிருந்து வேலை பார்க்கச் சென்றவர்கள் தொழிலை நன்றாகக் கற்றுக்கொண்டு வேலை பார்த்த ஒவ்வொருவரும் வெவ்வேறு இடங்களில் முனியாண்டி விலாஸ் உணவகங்களை ஆரம்பித்தார்கள்.

இன்றைக்குத் தமிழகம் முழுவதும் மதுரை முனியாண்டி விலாஸ் என்ற பெயரிட்டுக் கடை நடத்துகிற இன்றைய தலைமுறைகளுக்கு முன்னோடிகள் சுப்பாநாயுடு, ராமசாமி ரெட்டியார் ஆகிய இருவரே.

சென்னையில் 1955 வாக்கில் முதல் முனியாண்டி விலாஸ் உணவகம் B.சீனிவாசன் என்பவரால் தியாகராய நகரில் வைக்கப்பட்டது. வியாபாரம் சரியாக எடுபடாததால் 1958 வாக்கில் உணவகத்தை எடுத்துவிட்டார். அப்பகுதி பிராமணர்கள் அதிகமாக வாழ்ந்த இடமாதலால் அச்சமயத்தில் சரியாக ஓடவில்லை. அதே சமயம் B. சீனிவாசன் பாண்டிச்சேரியில் 1952 வாக்கில் ஆரம்பித்த வியாபாரம் வெற்றிகரமாக நடந்தது. இரண்டாவது முனியாண்டி விலாஸ் உணவகம் விழுப்புரத்தில் வெங்கடாசல நாயுடு என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. ராமு ரெட்டியார் சென்னையில் ராஜாபாதர் தெருவில் ஆரம்பித்தார். இவ்வாறாகத் தமிழகம் முழுவதும் முனியாண்டி உணவகங்கள் விரிந்து பரவியது. ம.பொ.சி. தமிழ்த் தேசியக் கட்சி ஆரம்பித்த போது திமுக பேச்சாளர்கள் தமிழ்நாட்டில் முனியாண்டி விலாஸ் கடைகள் இருந்த அளவுக்குக்கூடக் தமிழ்த் தேசிய கட்சியில் ஆட்கள் இல்லை என்று கிண்டலடிப்பார்கள். நாயுடுகளும் ரெட்டியார்களும் ஒரு பகுதியில் மட்டுமே கடை வைத்தார்கள் என்றெல்லாம் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. சொந்த பந்தங்களுக்குள்ளாகவே எதிர்ப்பு வந்த பிறகு அந்தக் கடைக்கு எதிராகவே கடைவைக்க ஆரம்பித்ததால் தொழில் போட்டி வரக் காரணமாகிவிட்டது.

கடலூர்ப் பக்கம் அஸ்தம்பட்டி நாயுடுகள் அதிகம் உணவகத் தொழில் நடத்திவருகிறார்கள். ரெட்டியார்கள் திருச்சியிலிருந்து சென்னைவரை அநேக கடைகளை நடத்தி வருகிறார்கள். ஆந்திராவில் சித்தூர், நகரி, திருப்பதி ஆரம்பித்துத் தென் தமிழ்ப் பகுதி சாத்தூர்வரை முனியாண்டி விலாஸ் கடைகள் இருக்கின்றன. திருநெல்வேலி, தென்காசி போன்ற இடங்களில் முன்பு கடை வைக்கப்பட்டுச் சாப்பாட்டுப் பக்குவம் அந்த ஊர்களில் எடுபடவில்லை.

திருநெல்வேலியிலிருந்து நாகர்கோவில்வரை சைவ உணவு கலாச்சாரம் மேலோங்கியிருப்பதால் முனியாண்டி உணவகங்கள் அந்தப் பகுதிகளில் பெரும்பாலும் காணப்படுவ தில்லை. சேலம் பகுதிகளில் மாட்டுக் கறியை அதிகமாக விரும்புவதால் முனியாண்டி சுவாமிக்கு மாட்டுக்கறி ஆகாது என்ற காரணத்தால் சேலம் முதல் மேட்டூர் வரைக்கும் முனியாண்டி விலாஸ் உணவகங்கள் எடுபடவில்லை. சிலர் வெளியில் மாட்டுக்கறி வாங்கி வந்து சாப்பிடுவதற்குக்கூட முனியாண்டி விலாஸ் உணவகங்களில் அனுமதிப்பதில்லை. பழனி, பொள்ளாச்சி, திருப்பூர், ஒட்டன்சத்திரம், தஞ்சைப் பகுதி முழுவதுமாக முனியாண்டி விலாஸ் கடைகள் சிறப்பாக இயங்குகின்றன. முனியாண்டி விலாஸ் ஹோட்டலின் தாரக மந்திரங்கள் என்னவெனில் உணவகத்தை ஆரம்பித்த முன்னோடிகள் விவசாயக் குடும்பப் பின்னணியிலிருந்து வந்த காரணத்தால் நடுத்தர மற்றும் அடித்தட்டு வாடிக்கையாளர்களுக்குக் குறைந்த விலையில் வயிறாரச் சாப்பாடு போடுவது, வீட்டு முறைப்படி உணவைத் தயாரிப்பது, வியாபாரத்தைத் தாண்டி ஊருக்குச் செய்கிற சேவையாக நினைப்பது, சுவைக்காக எதையும் சேர்க்காமல் வயிற்றுக்கு உபாதை ஏற்படுத்தாத கலப்படமற்ற உணவை அளிப்பது, முனியாண்டி சுவாமிக்கு மாட்டுக்கறி ஆகாது என்ற காரணத்தால் மட்டன் குழம்பில் ஆட்டுக்கறி மட்டும் பயன்படுத்துவது என்ற அறக்கட்டுப்பாட்டைக் காப்பாற்றி வருவது என்பவையே.

முனியாண்டி பெயரில் உணவகங்கள் தொடங்கும் முன்பு தங்களது உறவுக்காரர்கள் கடையில் வேலையாளாகச் சேர்ந்து சப்ளையர், மாஸ்டர் என்று படிப்படியாக முன்னேறித் தொழிலைக் கற்றுக்கொண்ட பிறகு தனியாக ஹோட்டல் தொடங்குவார்கள். தொடங்க முடிவுசெய்த பின்பு முனியாண்டி சுவாமியிடம் பூப்போட்டுக் கடை வைக்கலாமா என்று பார்ப்பார்கள். வெள்ளைப் பூ வந்தால் உத்தரவு கொடுத்துவிட்டார் என்று அர்த்தப்படுத்திக்கொண்டு கடைக்கு ஆவன செய்யத் தொடங்குவர். தொழில் தொடங்குவதற்கு முன்பாக வைக்கப் போகும் இடத்தில் போலீஸ் ஸ்டேஷன், பத்திர அலுவலகம், பல்வேறு வியாபாரிகள் கிராமத்துக்கு வருகிறார்களா என்று சரியாகச் சோதனையிட்ட பின்னரே செயலில் இறங்குவார்கள். புதிதாகக் கடை வைக்கும் நபர் தங்களது சொந்தச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கும்பொழுது கடைக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான எல்லாச் சரக்குகளையும் பெற உதவுவார்கள். ஏற்கெனவே தங்களது வியாபாரத்தின் மூலம் தொடர்புகொண்ட மளிகைக்கடை, காய்கறிக்கடை, கறிக்கடை உரிமையாளர்களிடம் எடுத்துச் சொல்லித் தொடர்பு ஏற்படுத்திவிடுவார்கள். நீண்டநாள் வேலைசெய்த நபராக இருக்கும்போது கடை வைப்பதற்குத் தேவையான பண உதவியும் செய்வார்கள். இவ்வாறாகச் சொந்தச் சமூகத்தார் வியாபாரம் மூலமாக வளர்ந்து விருட்சம் ஆனதே முனியாண்டி உணவகக் கடைகள். அக்காலத்தில் தொழில் தெரியாதவர்கள் கடைவைக்க முன்வர மாட்டார்கள்.

அந்தக் காலங்களில் துணி வியாபாரிகள் கிராமந்தோறும் வருவார்கள். அவர்களை ஆக்கர் வியாபாரம் செய்பவர்கள் என்று கூறுவதுண்டு. தஞ்சைப் பகுதிகளில் குறிப்பாக மாயவரம் மாபடுகை என்ற ஊரிருந்து குறைந்தது ஐம்பதிலிருந்து நூறு வியாபாரிகள் அப்பகுதி முழுவதும் வியாபாரம் செய்ய வருவார்கள். இவ்வாறு வரும் வியாபாரிகளுக்கு முனியாண்டி உணவகத்திலேயே இலவசமாகத் தங்குவதற்கு இடம் கொடுக்க வேண்டும். பெரும்பாலும் ஓட்டலின் மேல்மாடியில் வியாபாரிகள் தங்குவர். இதற்கு அக்காலங்களில் ஜாகை என்று கூறுவர். பல வாரங்கள் தங்கி முனியாண்டி உணவகங்களில் சாப்பிட்டு அவர்களது பொருட்களை முனியாண்டி விலாஸ் வளாகத்திலேயே நம்பிக்கையின் பெயரில் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் வைத்துக்கொள்வார்கள். தினசரி வியாபாரம் ஆகும் பணத்தை ஹோட்டல் முதலாளிகளிடம் கொடுத்துவிட்டு வியாபாரம் முடித்துவிட்டு ஊருக்குச் செல்கையில் கொடுத்த பணத்தை வாங்கிச் செல்வார்கள்.

இந்த வியாபாரிகள்தாம் முனியாண்டி விலாஸ் உணவகங்களுக்குத் தமிழகம் முழுவதும் இலவசமாக விளம்பரம் தேடித்தந்து ஓட்டல் தொழிலை முன்னேற்றியவர்கள். இந்த வியாபாரிகளை மனத்தில்கொண்டுதான் பெரிய பரப்பளவு கொண்ட நீண்ட இடவசதியுடைய ஓட்டல் கடைகளை ஆரம்பித்தார்கள். வியாபாரிகளுக்கும் முனியாண்டி விலாசைக் கண்டதும் நம்ம கடை என்ற ஆத்மார்த்த உணர்வு வந்துவிடும். இவர்கள் தவிர வியாபாரிகளுக்கு ஒரு சலுகை, மாணவர்களுக்கு ஒரு சலுகை, உத்தியோகஸ்தர்களுக்கு ஒரு சலுகை என்று கடைப்பிடிப்பதுண்டு. ஹோட்டல் முதலாளிகளே ‘அவர் மாதச் சம்பளத்துக்காரர் பாத்துக் கொடுங்கப்பா’ என்று கூறுவதுண்டு. சொந்தக்காரங்க மாதிரியேதான் வியாபாரம் பண்ணுவார்கள். முனியாண்டி விலாஸ் உணவகங்கள் தமிழகத்தின் எந்தப் பகுதிகளில் வைத்திருந்தாலும் தென் மாவட்டப் பகுதியைச் சார்ந்த உத்தியோகஸ்தர்கள், வியாபாரிகள், மாணவர்கள் தேடிவந்து சாப்பிடுவார்கள்.

தஞ்சைப் பகுதிகளில் 1950வாக்கில் புயல்காற்று அதிகமாக வீசி நிறைய சேதாரங்களை ஏற்படுத்தியதால் குறைவான விலைக்கு நீண்ட பெரிய பரப்பளவு கொண்ட இடங்கள் முனியாண்டி உணவகங்களுக்குக் கிடைத்தன. மேலும் கடலோரப் பகுதி என்பதால் நல்ல மீன்கள் குறைந்த விலைக்கு நிறையக் கிடைத்தன. வயல்களில் அறுவடைக் காலத்தில் வேலை செய்வதற்காகத் தாழ்த்தப்பட்ட சாதியார் ஏராளமாக வந்து குழுமிவிடுவார்கள்.

தஞ்சாவூர், திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நீடாமங்கலம் போன்ற பல்வேறு பகுதிகளில் அக்காலங்களில் முனியாண்டி விலாஸ் உணவக வியாபாரம் வெற்றியடைந்ததற்கு மிக முக்கியக் காரணம் உழைப்பவர்களான தாழ்த்தப்பட்ட வகுப்பினர்களே. 1950களில் மாமிசம் வீசம் (ஒரு வீசை என்றால் 1.400 கிலோ) அளவில்தான் விற்பார்கள். அரை வீசம் அளவுக்குக் கூட நடுத்தரச் சாமான்ய மக்களால் மாமிசக்கறி வாங்க முடியாத நிலை இருந்தது. மாமிசம் சாப்பிட வேண்டும் என்றால் முனியாண்டி விலாசுக்குதான் வர வேண்டும். அன்றைய காலங்களில் ஆறு அணாச் சாப்பாட்டில் கறித் துண்டும் கோளா உருண்டையும் இலவசமாக வைப்பதுண்டு. தினசரி இரவு உணவு வேளைகளின்போது மீன்துண்டு இலவசமாக வைப்பதுண்டு. பெரும்பான்மையான தாழ்த்தப்பட்ட மக்கள் அனைவரும் சாப்பிடுவதற்கு முனியாண்டி விலாசைத் தவிர வேறு வழி இல்லை. அவர்களது வீட்டு விஷேசங்களில் ஐம்பது சாப்பாடு வேண்டும் என்று ஆர்டர் கொடுப்பதுண்டு. பல்வேறு பருவ கால அறுவடைகளின்போது வியாபாரம் அமோகமாக இருக்கும்.

முனியாண்டி விலாஸ் கடைகள் நெடுஞ்சாலை அருகில் எப்போதும் வைப்பதில்லை. ஊருக்குள்ளேதான் வைப்பார்கள். நெடுஞ்சாலை ஓரமாக வியாபாரம் நடத்துபவர்களுக்கு டிபன் சாப்பாட்டுக்கு மட்டுமே சிறந்தது. முனியாண்டி விலாஸ் உரிமையாளர்கள் சாப்பாட்டு வியாபாரத்தைத்தான் பெரும் பாலும் விரும்புவார்கள். டிபன் வியாபாரத்தைவிடச் சாப்பாடு வியாபாரம் ஏன் விரும்புகிறார்கள் என்றால் அந்த ஊரில் சாப்பாடு நன்றாக இருக்கிறது என்று சாப்பிட்ட வாடிக்கை யாளர்கள் விளம்பரப்படுத்துவார்கள். டிபன் சாப்பிடுபவர்கள் இப்படிச் சொல்லமாட்டார்கள். நடுத்தர வர்க்கத்தினருக்குக் குறைந்த விலையில் போதுமான சாப்பாடு கொடுக்க வேண்டும். உழைப்பு அதிகமாகவே இருக்கும். லாபம் குறைவாகவே இருக்கும். மேல் தட்டு வர்க்கத்தினர் எங்கு வேண்டுமானாலும் போய்ச் சாப்பிடுவார்கள். அடித்தட்டு மக்கள் சாதாரண ஹோட்டலைத்தான் விரும்புவார்கள். நடுத்தர, அடித்தட்டு வாடிக்கையாளர்கள் வந்தாலே பெரிய அளவில் வியாபாரம் சாத்தியமாகிவிடுகிறது.

சைவ ஹோட்டலுக்குச் சைவம், அசைவம் சாப்பிடுகிற இரண்டு பிரிவினரும் போவார்கள். ஆனால் அசைவ ஹோட்டலுக்கு சைவ உணவு சாப்பிடுபவர்கள் மருந்துக்குக்கூட ஒதுங்கமாட்டார்கள். அசைவம் சாப்பிடுபவர்கள்கூடச் சில நாட்களில் அசைவம் சாப்பிடமாட்டார்கள். இதையெல்லாம் மனத்தில்கொண்டு வியாபாரத்தில் ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணமும் முனியாண்டி உணவகங்களில் இருந்தது.

சாப்பாட்டு வியாபாரத்தை மட்டுமே நம்பியிருந்த முனியாண்டி உணவகங்களில் கடந்த இருபத்தைந்து வருடங்களாக இரவில் சாப்பிடும் பழக்கம் வெகுவாகக் குறைய ஆரம்பித்தது. உடல் உழைப்பு வேலை வெகுவாகக் குறைய வாடிக்கையாளர்கள் டிபன் சாப்பிடுவதையே விரும்புகிறார்கள். நிறைய ஹோட்டல்களில் சாப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் டிபனுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார்கள். ஆகையால் புரோட்டா, தோசை போட ஆரம்பித்தார்கள். முனியாண்டி விலாஸ் மாஸ்டர்கள் மலையாள முஸ்லிம்களிடம் புரோட்டா செய்வதற்குக் கற்றுக்கொண்டனர். 1950களில் புரோட்டாவுக்குப் பால் ஊற்றிச் சாப்பிட்டார்கள். 1965களில் பெரும்பாலான கடைகளில் புரோட்டா வந்துவிட்டது. முனியாண்டி உணவகங்களைப் பொறுத்தவரை ஒரு மாதக் கடை வாடகை ரூ. 500 கொடுப்பதாக இருந்தால் அன்றைய வியாபாரம் ரு. 500க்கு நடக்க வேண்டும். அப்படியானால் கடையில் வியாபாரம் ஆகிறது என்று பொருள். உதாரணமாக மதியச் சாப்பாடு ரூ. 300க்கு விற்கிறது. இரவு 200 ரூபாய்க்கு சாப்பாடு ஓடவில்லை என்றால் அதற்கு என்ன வழி என்று யோசிக்கும்போது டிபன் அயிட்டத்திற்கு வரவேண்டியதாயிற்று. டிபன் அயிட்டம் கொண்டுவந்ததற்கு முக்கியக் காரணம் டாக்டர்கள் மூன்று வேளையும் அரிசி உணவு சாப்பிடாதீர்கள் என்று சொல்ல ஆரம்பித்துவிட்டதே.

முனியாண்டி விலாஸ் உணவகங்களில் கூட்டு, பொரியல், முட்டை, சுக்கா வறுவல் போன்ற மெனுவை மாற்றி மாற்றிப் போடுவதுண்டு. மாலை அல்லது காலையில் வாங்கும் காய்கறிகளைப் பொறுத்து அன்றைய மெனுவை முடிவு செய்வதுண்டு. பொதுவாகக் காய்கறிக் கூட்டுப் பொரியல் சுமாராகத்தான் செய்வார்கள். ஏனெனில் அசைவம் என்பதால் மட்டன் அயிட்டங்கள் நன்றாக ஓட வேண்டும் என்பதற்கு இந்த உத்தி. அனைத்து முனியாண்டி உணவகங்களிலும் என்ன வேண்டும் என்று வாடிக்கையாளர்களைக் கேட்பதில்லை. பெரிய தட்டில் தலைக்கறி, மீன்கறி, மீன்குருமா, சுக்கா வறுவல், காடை, நண்டு, முட்டை போன்ற எல்லா மட்டன் அயிட்டங்களையும் ஒருங்கே சேர்த்துக்கொண்டு வந்து என்ன வேண்டும் என்று கேட்பார்கள்.

முனியாண்டி உணவகங்களில் மிக முக்கியமாக வத்தக் குழம்பு, ரசம் பிரத்யேகமானது. முனியாண்டி விலாஸ் மாஸ்டர்கள் தவிர்த்து வேறு எந்த மாஸ்டர்களுக்கும் ரசம் வைக்கும் பக்குவம் கைகூடுவதில்லை.

ஆட்டுக்கறியின் எலும்பில் மசால் சேர்த்து அநேக ஹோட்டலில் விற்றுவிடுவர். முனியாண்டி விலாஸ் உணவகங்களில் மட்டும் எலும்புகளை நன்றாகக் கொத்திப் போட்டு நொறுக்கித் தண்ணீரில் ஊறப் போட்டு நன்கு கொதிக்க வைத்து வடிகட்டுவார்கள். வடிகட்டிய மஜ்ஜை கலந்த தண்ணீருடன் தக்காளியை அதிகமாகச் சேர்த்து ஈயம் பூசிய சட்டியில் ரசம் வைப்பார்கள். இந்த ரசத்தை மட்டுமே தினமும் பார்சல் வாங்கிச் செல்லும் வாடிக்கையாளர்கள் ஏராளம்.

சென்னை நகரில் முனியாண்டி விலாஸ்  உணவகங்களின் வியாபாரம் சிறப்பாகச் செல்வதைக் கண்டு சில புகழ்பெற்ற அசைவ ஓட்டல் முதலாளிகள் முனியாண்டி விலாஸ் ஓட்டல் உரிமையாளர்களிடம் வந்து பிளாட்பாரத்தில் சாப்பிடுகிறவனை யெல்லாம் டேபிள், சேர் போட்டுச் சமபந்தி போஜனம் போன்று சாப்பிட வைக்கிறீர்களே என்று வந்து திட்டுவார்களாம்.

சென்னை நகரில் இரவுச் சாப்பாட்டில் எலும்பு இலவச மாக வைப்பார்கள். பார்சல் உணவு வாங்கிக்கொண்டு போய் விடுவார்கள். இதிலும் எலும்பு வைக்கப்படும். உயர்தர வர்க்கத் தினரும் அசைவ உணவு சாப்பிடுகிறவர்கள் பார்சல் வாங்கிக் கொள்வதுண்டு.

முனியாண்டி உணவகங்களில் கடைகளைப் பொறுத்து வேலையாட்கள் இருப்பர். மேலிருந்து கீழாகத் தலைமை மாஸ்டர் குக்கர், மாஸ்டர் குக்கருக்கு உதவி செய்ய அசிஸ்டென்ட் இருப்பார். அசிஸ்டென்ட் மாஸ்டருக்கு அரிசி களைய, பாத்திரம் கழுவ ஒரு நபர், டேபிளுக்குத் தகுந்த மாதிரி ஆட்கள், கேஷியர் ஆகியோர் இடம்பெறுவர். பெரும்பாலும் தமது சமூகத்தைச் சார்ந்த உறவுக்காரர்கள் மட்டுமே இருப்பார்கள். சொந்தங்கள் தவிர இராமநாதபுரம், அரியலூர், ஜெயங்கொண்டம், பெரம்பலூர் பகுதிகளிலிருந்து வருபவர்கள் பாத்திரங்கள் கழுவ, சுத்தப்படுத்துவதற்கும் அமர்த்தப்படுவ துண்டு. டேபிள் துடைப்பவர் அடுத்ததாக சப்ளைக்கு வந்து, பின்பு ஸ்டால், அடுத்ததாக அரிசி களைவது அசிஸ்டென்ட் மாஸ்டராக உயர்ந்துவிடுவர். மாஸ்டர் குக்கர் முதலாளிக்குச் சமமானவராகக் கருதப்படுவார். மாஸ்டருக்குக் கூடுதல் சம்பளம். அடுத்ததாக அசிஸ்டென்ட் மாஸ்டர். மாதச் சம்பளம்தான். ஊருக்குப் போகும்போது மொத்தச் சம்பளத்தை யும் வாங்கிக்கொள்வார்கள். வேலை பார்ப்பவர்களுக்குச் சாப்பாடு உண்டு. என்றாலும் எக்ஸ்ட்ரா அயிட்டம் கிடையாது. வார விடுமுறையன்று எல்லா மட்டன் எக்ஸ்ட்ரா அயிட்டங்களும் சாப்பிடலாம். மற்றவர்கள் சாப்பிடக் கூடாது. முனியாண்டி ஹோட்டல்களில் வாடிக்கையாளர்களுக்கு என்ன உணவோ அதே உணவைத்தான் வேலை பார்ப்பவர்களும் சாப்பிடுவார்கள். ஆனால் மற்ற அசைவ ஹோட்டலில் வேலை செய்யும் பணியாளர்களுக்குத் தனிச் சமையல் சாப்பாடுதான்.

நவீனத் தொழில்நுட்பத்திற்குத் தகுந்தவாறு தங்களை மாற்றிக்கொள்வதில் முனியாண்டி விலாஸ் உணவகங்கள் தயக்கம் காட்டுவதை நோக்க முடிகிறது. முதன்முதலாக கிரைண்டர் மிஷின் வரும்போது இட்லி மாவை மட்டுமே அரைக்க வேண்டும். தேங்காய் ஆட்டினால் நன்றாக இருக்காது என்று நம்பினார்கள். கேஸ் அடுப்புப் பயன்பாட்டுக்கு வந்தாலும் விறகு அடுப்பில் வெந்தால் மட்டுமே மட்டன் குழம்பில் சாறு கறியோடு ஒட்டும் என நினைத்தனர். இந்த உணவகங் களின் மாஸ்டர்களுக்கு கேஸ் அடுப்பில் சமைத்தால் சரியான பக்குவம் கைகூடுவதில் சிக்கல் இருக்கிறது. விறகு அடுப்பில் மட்டுமே கோழியை நல்லெண்ணெயில் வறுக்கும்போது கொழுப்புகள் பக்குவமாக மிதந்து வரும். அதைச் சோற்றில் கலந்து சாப்பிடும்போது அவ்வளவு ருசியாக இருக்கும். இந்தப் பக்குவம் கேஸ் அடுப்பில் வருவதில்லை.

கல்லாப்பெட்டியில் பெரும்பாலும் கேசியர்கள் இருக்க மாட்டார்கள். முதலாளிகளே கல்லாவில் இருப்பார்கள். பில் ரசீது புக்கில் அடிக்கட்டை இருக்காது. சில நேரங்களில் பில் இல்லாமல் சப்ளையர் கூறுகின்ற மெனுப் பட்டியலைக் கொண்டு காசு வாங்கிக்கொள்வார்கள். கல்லாப் பெட்டியில் தவிர்க்க முடியாத சமயத்தில் முதலாளிக்கு நம்பிக்கை பெற்ற சொந்தக்காரனை மட்டுமே அனுமதிப்பர். ஏனெனில் வெளிஆள் சாப்பிடுவதற்கு உறவுக்காரன் சாப்பிடட்டும் என்பதற்காக. அதே சமயத்தில் திருமணம் செய்யாத உறவுக்காரப் பையனைக் கல்லாவில் அமர்த்துவர். திருமணம் செய்த ஆண்களது கை தங்களது தவிர்க்க முடியாத தேவைகளுக்காக நீளும் என்று நினைக்கிறார்கள்.

முனியாண்டி உணவகங்களில் கல்லாப்பெட்டி அருகே உண்டியல் இருக்கும். வாடிக்கையாளர் கொடுக்கும் முதல் வியாபாரப் பணத்தில் முடிந்ததை முதல் காணிக்கையாகத் தினமும் செலுத்திவிடுவர். அந்த உண்டியலில் சேரும் பணத்தை வருடந்தோறும் நடைபெறும் முனியாண்டி அன்னதானப் பூஜைக்குச் செலுத்திவிடுவார்கள். உண்டியல் பணத்தை வசூலிப்பதற்காகவே முனியாண்டி விலாஸ் சங்க நிர்வாகிகள் தமிழ்நாடு முழுவதும் சுற்றி வசூலிப்பார்கள். முனியாண்டி அன்னதானப் பூஜையின்போது மூன்று நாட்கள் அனைத்து முனியாண்டி ஹோட்டல்களுக்கும் விடுமுறை. பணியாளர்கள் அனைவரும் வடக்கம்பட்டி முனியாண்டிசுவாமி கோவிலுக்கு வந்து சாமி கும்பிடுவார்கள். வெலம நாயுடு சங்கம் சார்பாகத் தை மாதம் இரண்டாவது வெள்ளிக் கிழமையும், ரெட்டியார் சங்கம் சார்பாக மாசி மாதம் இரண்டாவது வெள்ளிக் கிழமையும் கடந்த 75 வருடங்களாக வடக்கம்பட்டி முனி யாண்டி சுவாமி கோவிலில் அன்னதானப் பூஜை சீரும் சிறப்புமாக நடந்தேறிவருகிறது.

உண்டியல் வசூல் தவிரப் புத்தக வசூல் செய்தும் காணிக்கையாகச் செலுத்துவதுண்டு. புத்தக வசூல் என்பது முனி யாண்டி விலாஸ்காரர்கள் வியாபாரப் பரிவர்த்தனைக்காரர்களான எண்ணெய்க் கடை, மளிகைக் கடை, விறகுக் கடை, காய்கறிக் கடை, வாடிக்கையாளர்கள் போன்றோரிடமும் வசூலித்து முனியாண்டி சுவாமி கோவிலின் பூஜைக்குக் காணிக்கையாக அளித்து விடுவதுண்டு.

முந்தைய காலங்களில் முனியாண்டி சுவாமி கோவிலில் சாமி கும்பிடும்போது பெண்கள் யாரும் வரமாட்டார்கள். சாப்பாடும் கறியும் கலந்து மூன்று கவளங்களாக உருண்டை செய்து கண்மாய்க்குள் பண்டாரம் முன்னிலையில் வானை நோக்கி எறிந்து எறிபூஜை செய்வர். மேலே எறிகின்ற கவள உருண்டை கீழே விழாமல் இருக்கும். வடக்கம்பட்டி கிராமத்தில் ரெட்டியார் மற்றும் வெலம நாயுடு சமூகமும் இணைந்தே 1960கள் வரை முனியாண்டி சுவாமியைக் கும்பிட்டு வந்தார்கள். கிருஷ்ணன் கோவில் உறியடித் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக இரு சமூகத்தாரும் பிரிந்து தனித்தனி யாகப் பூஜை நடத்துகிறார்கள்.

அன்னதானப் பூஜை திருவிழாவின்போது முனியாண்டி கோவிலுக்கு முன்பாக நீண்ட ஓலைப் பாயை விரித்துச் சோற்றை வடித்துக் கொட்டிக் காணிக்கையாக அளிக்கப்பட்ட கிடா, சேவல் ஆகியவற்றைக்கொண்டு தயாரிக்கப்பட்ட மட்டன் குழம்பைச் சோற்றுடன் கலந்து கிளறி முனியாண்டி சுவாமிக்கு அருகில் உள்ள கருப்பசாமிக்குப் பிரசாதமாகப் படையலிடுவர். முனியாண்டி சுவாமி சைவம் என்பதால் சைவச் சாப்பாட்டைப் படையலிடுவர். பின்பு பக்தர்கள் அனைவருக்கும் வெகு விமரிசையாக அன்னதானம் நடத்துவதுண்டு. 1985களுக்குப் பிறகு அன்னதானமாகப் பிரியாணி போட ஆரம்பித்துள்ளார்கள். இதை ‘முனியாண்டி பிரசாதம்’ என்று கூறிக்கொள்கிறார்கள்.

முனியாண்டி விலாஸ் போர்டு மங்களகரமாக இருக்க வேண்டும் என்பதற்காக முந்தைய நாட்களில் மஞ்சள் வண்ணப் பின்னணியில் சிவப்பு எழுத்தில் எழுதப்பட்டிருக்கும். தற்காலங்களில் சிவப்பு வண்ண பின்னணியில் வெள்ளை எழுத்தில் முனியாண்டி விலாஸ் என்று எழுதப்பட்டிருக்கும். போர்டுக்குத் தினமும் பூச்சூட்டுவது, கடைக்குள் தினமும் விளக்கேற்றிக் கடையில் வேலை செய்யும் பணியாளர்கள் அனைவருக்கும் சாம்பிராணிப் புகை காட்டுவது, கடை முன்பு அண்டாவை வைத்து விபூதி பூசுவது போன்ற செயல் களைத் தினமும் தவறாது செய்வார்கள். சில ஊர்களில் சாம்பிராணி போட்டாச்சா என்று கேட்டுவிட்டுச் சாப்பிட வரும் முனியாண்டி விலாஸ் வாடிக்கையாளர்களைக் காணலாம். அன்றைய நாட்களில் இசைத்தட்டு மூலம் பக்திப் பாடல்கள், சினிமா பாடல்கள் கடை ஆரம்பித்தவுடன் போடப் படும். இந்தப் பாட்டைக் கேட்டுத்தான் கடை ஆரம்பித்து விட்டார்கள் என்று சாப்பிட வருவார்கள். சமூகப் பிரச்சினையில் தங்களுக்கும் அக்கறை இருப்பதாகக் காட்டிக்கொள்வதற்காகப் பாகிஸ்தான் சண்டையின்போது யுத்த நிதியாக சென்னை யில் மட்டும் உள்ள ஹோட்டல்களில் பண வசூல் செய்து ரூ. 3000 வழங்கியுள்ளார்கள். எம்ஜிஆர் புரூக்ளின் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது அவர் நீடூழி வாழ வேண்டும் என்பதற்காக மாலை மலரில் முனியாண்டி விலாஸ் சங்கம் சார்பாக ஒரு முழுப்பக்க விளம்பரம் கொடுத்தது பரபரப்பாகப் பேசப்பட்டது. கார்கில் நிதிக்காகச் சங்கம் சார்பில் கலைஞரிடம் நிதி அளித்துள்ளார்கள்.

கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது மாதிரி முனியாண்டி விலாஸ் இல்லாத ஊரில் இருக்க வேண்டாம் என்ற சொல் வழக்கு அக்காலங்களில் புழங்கி வந்தது. முனியாண்டி என்றால் பிரியாணி, பிரியாணி என்றால் முனியாண்டி என்று கலைஞர் கூறுவதைப் பெருமையாகக் கூறிக்கொள்கிறார்கள்.

காலப்போக்கில் கம்பளத்தார், தேவர் சமூகத்தினர் ஆகியோரும் முனியாண்டி விலாஸ் பெயரில் கடை ஆரம்பித்தனர். முனியாண்டி விலாசைச் சேர்ந்தவர்கள் வெவ்வேறு பெயர்களில் கடைகள் நடத்தலாயினர். அப்பெயர்களாவது பாண்டியன் ஓட்டல், அண்ணாச்சி ஓட்டல், எம்.எம்.வி., வடக்கம்பட்டி முனியாண்டி விலாஸ், மதுரை முனியாண்டி விலாஸ், காமாட்சி ஹோட்டல், ராஜ விலாஸ், அன்பகம் ஹோட்டல், வைகை ஹோட்டல், குரு ஹோட்டல், சிந்து ஹோட்டல், புவனா மெஸ் போன்ற பெயர்கள் இதில் அடங்கும். முனியாண்டி விலாஸ் என்று ரிஜிஸ்டர் ஏதும் பண்ணவில்லை. திருவிழாவிற்காக வசூல் செய்யத் தமிழ்நாடு முழுவதும் போகும்போது வடக்கம்பட்டியைச் சுற்றியுள்ள அலங்காபுரம், அகத்தாபட்டி ஊர்களைச் சார்ந்த தேவர் சாதியினர் அன்ன தானப் பூஜைக்குப் பணம் காணிக்கையாகக் கொடுப்பார்கள்.

1935களில் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கிய முனியாண்டி விலாஸ் உணவகங்களின் வளர்ச்சியை மூன்று கட்டங்களாகக் காணலாம். 1960 முதல் 1970 வரை பிளாட்டினம் வருடம், 1970 முதல் 1980 வரை கோல்டன் வருடம். இந்தக் காலத்தில் ஹோட்டல்கள் மிகவும் அதிகமாயின. 1980 முதல் 1990வரை சில்வர் வருடம். இக்காலங்களில் ஹோட்டல் தொழில் குறையத் தொடங்கியது. 1990களுக்குப் பிறகு இளைய தலைமுறையினர் படிப்பைப் பெரிதாக எடுத்துக் கொண்டு மெடிக்கல், என்ஜினியர், லாட்ஜ் தொழில், பைனாஸ் என்று பல்வேறு தொழில்களுக்குள் செல்ல ஆரம்பித்துவிட்டனர். சில புகழ்பெற்ற ஓட்டல் நிறுவனங்களை ஐந்து முதல் பத்து நபர்கள் வரை பங்குதாரர்களாகச் சேர்ந்துகொண்டு நவீன அமைப்புடன் கவர்ச்சிகரமாக நடத்த ஆரம்பித்துவிட்டனர். லாபமோ நட்டமோ பங்குதாரர்கள் பலர் இருப்பதால் சமாளிக்க முடிகிறது. முனியாண்டி விலாசைப் பொறுத்தவரை முதலாளி ஒருவர் மட்டுமே. தலப்பா கட்டுக் கடைகளைக் குன்றத்தூர் நாயுடு ஆரம்பித்தார். அவர்கள் ஒரு எல்லைக்குள் சுருங்கிவிட்டார்கள். ஆனால் முனியாண்டி விலாசில் பத்துப் பேருக்கும் தொழில் கற்றுக் கொடுத்து, அந்தப் பத்து நபர் பல நபர்களுக்குக் கற்றுக் கொடுத்து இருக்கிறார்கள். வீட்டில் சொல்லாமல் ஓடிவரும் பல ஆட்களை முனியாண்டி விலாஸ் தனது அபயக்கரம் நீட்டிக் காப்பாற்றியுள்ளது.

ஒரு காலத்தில் சென்னையில் கடை வைக்க ரூ. 5000 இருந்தால் போதுமானது. ஆனால் இன்று சென்னையில் ஒரு கோடி இருந்தால் மட்டுமே ஆரம்பிக்க முடியும். ஹோட்டல் பிரபலமாகக் குறைந்தது மூன்று மாதங்கள் ஆகும். அந்த மூன்று மாதத்தில் நட்டம் வந்தால் தாங்கிக்கொள்வதற்குப் பின்புலம் வேண்டும். தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் மாதிரி 5000 அல்லது 10,000 ரூபாய் இருந்தாலே கடை வைக்க ஆரம்பித்துவிட்டார்கள். மேலும் தொழில் தெரியவில்லை என்றாலும் ஓட்டல் வேலை தெரிந்த ஆட்களைக்கொண்டு கடை வைக்க ஆரம்பித்தார்கள். பெரிய ஹோட்டல் நிறுவனங்கள் வந்து சேர்ந்ததால் காலச்சூழலுக்குத் தகுந்தவாறு முனியாண்டி விலாஸ் உணவகங்களுக்குக் கொஞ்சம் நவீனம் தேவைப்பட்டது. போட்டி பொறாமை காரணமாக எதிரெதிரே அண்ணன், தம்பிகள்கூடக் கடைவைக்க ஆரம்பித்தார்கள்.

முனியாண்டி விலாசை ஆரம்பிக்க ஒரு காலத்தில் பெரிய மூலதனம் வேண்டியதில்லை. தொழில் தெரிந்தால்போதும் என்ற நிலையில் கடைகள் பெருகின. முனியாண்டி விலாஸ் என்றாலே மூன்றாம் தரம், நான்காம் தரம் என்ற பெயர் வாங்கியபடியால் பெரிதாக விருத்தியடைவதற்கும் வழி இல்லாமல் போய்விட்டது.

••

தமிழர் உணவு நூலின் ஒரு பகுதி

தொகுப்பாசிரியர்: பக்தவத்சல பாரதி

பக்கம்: 416, விலை: ரூ.250

காலச்சுவடு பதிப்பகம்

669, கே.பி.சாலை

நாகர்கோவில் 629 001

Ph: 9677778863, 04652 – 278525

Onlineஇல் வாங்க கிழக்கு பதிப்பகத்தை www.nhm.insupport@nhm.in தொடர்புகொள்ளவும்.

•••