Category: பிப்ரவரி

ப.மதியழகன் கவிதைகள்

பரசு

1

பேருந்து புறப்பட்டுவிட்டது

எனது உறவுகள்

இனி நினைவுகளில் தான்

நடமாடுவார்கள்

கவலை ரேகைகள்

எனது நெற்றியில்

படர ஆரம்பிக்கிறது

கடல் கடந்து பயணப்படுகிறவர்களுக்கு

பொருளாதார நிர்ப்பந்தமின்றி

வேறு என்ன காரணங்கள்

இருக்க முடியும்

இரவு வானம்

மேகங்களின்றி

தெளிவாக இருந்தது

எனது மனவெளியில்

கருங்குயில் சோககீதம்

பாடியபடியே அங்குமிங்கும்

பறந்து கொண்டிருந்தது

இப்போது யோசிக்கிறேன்

எனது தகப்பன்

குடும்ப பாரத்தை எப்படித்

தாங்கியிருப்பான் என்று

பேருந்து மாநகரை

நெருங்கிக் கொண்டிருக்கிறது

எனது நினைவுகள் மட்டும்

பால்ய நதியின்

கரையில் அமர்ந்து கொண்டு

பிடிவாதம் பிடிக்கிறது

பசி நெருப்பு

மனிதனைத் துரத்தும்போது

ஓடித்தானே ஆகவேண்டும்

அந்நிய மண்ணில்

இறங்குவதற்கு முன்பே

திரும்பும்போது வாங்கி

வரவேண்டிய பட்டியலை

என்னிடம் தந்துவிட்டார்கள்

நான் என்ன சுமந்து

வருகிறேன் என்று

எதிர்பார்க்காது

வாசலில் மங்கிய வெளிச்சத்தில்

பார்வைத்திறனை பறிகொடுத்துவிட்டு

நிற்கும் எனது தாயின்

கண்ணீருக்கு ஈடாகாது

நான் சுமந்து வரும்

கரன்சி நோட்டுக்கள்.

2

இந்த விடியலை காணும் பாக்கியம்

சிலருக்கு வாய்த்திருக்காது

இந்த பூமியானது மரண ஊரை

நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறது

அலட்சியப்படுத்திவிட்டேன்

கதவை தட்டுவதில் யாரேனும் ஒருவர்

கடவுளாகக் கூட இருந்திருக்கலாம்

வாழ்க்கைப் பாதை எத்துடன்

முடிவுறும் என்பதை

உங்களால் அனுமானிக்க முடியுமா

அவதாரங்களே முயற்சி

செய்து தான் முக்தி நிலையை

அடைய வேண்டியிருந்தது

கொலை பட்டினி கிடக்கும் ஒருவன்

ஒரு கவளம் சோற்றுக்காக

எதையும் செய்வான் அல்லவா

பந்தயத்தில் பங்கேற்காமல்

வேடிக்கைப் பார்ப்பவனை

ஊர் வெட்டிஆபிசர் என்று

தானே அழைக்கும்

கடற்கரை மணலில்

கடவுளின் காலடியை

கண்டறிய முடியுமா

ஆக்ரோஷமாக மோதும்

ஆண் அலைகளுக்கு பின்பு

மெல்லக் கால்களை வருடிச்

செல்வதுதானே பெண் அலைகள்

தன்னை கடவுள் என்று

சொல்லிக் கொள்பவர்களும்

இறக்கத்தானே செய்கிறார்கள்

ஒவ்வொரு இரவுப்பொழுதிலும்

கனவு ஒரு நீண்ட

தொடர்கதையானால்

சுவாரஸ்யம் இருக்குமா

கைபேசியில் எதிர்முனையில்

பெண் பேசினால் மனது

அழகான சித்திரம் ஒன்று

வரைகிறதல்லவா

கண்ணாடி தோலின்

சுருக்கங்களைக் காட்டினால்

பெண்கள் நிலைக்கண்ணாடியைத்தானே

குறை சொல்வார்கள்

ஒரே ஒரு நாள்

வீதியுலா வரும் சாமிக்காக

ஜனங்கள் வருடம் முழுவதும்

காத்துக் கிடப்பதில்லையா

நெல்மணிகளைக் கொறிக்கும்

வெண்புறாக்கள் வீசியவர்

யாரெனத் தேடுமா

சாய்ந்து விழுந்த மரத்தில்

கூடும், சில முட்டைகளும்

திரும்பி வரும் பறவைக்கு

மரம் என்ன பதில் சொல்லும்

காயம்பட்ட மனதிற்கே

அன்பின் மகத்துவம் தெரியும்

துயரப்படகில் ஏறுகிறேன்

ஆளில்லா தீவில்

அடைக்கலம் புகலாமென்று

அடிமைகளின் தேசம்

இன்னும் தூங்கிக் கொண்டிருக்கிறது

எனது கருத்தில்

முரண்பாடுகள் இருக்கலாம்

ஒவ்வொரு நாளும் நான்

வெவ்வேறு மனிதன்

ஓய்வான நேரங்களில்

சிறிது கண்மூடினால்

மனம் கடந்த காலக்

குப்பைகளைக்

கிளறத் தொடங்கிவிடுகிறது

எனது ஆன்மா பண்

இசைத்துக் கொண்டிருக்கிறது

அது உங்களுக்கு வெற்றுப்

புலம்பலாக தெரியலாம்

மனிதர்களிடம் சிநேகிதம்

கொள்ளாமல் கடவுள்

தொலைவிலேயே இருக்கட்டும்

அப்போதுதான் எல்லா

செயல்களுக்கும் விதி என்ற

பெயரில் நாம்

அவன் மீது பழிபோடலாம்.

3

பால்யத்தில் இரவை மனம்

எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிராது

கனவுகள் தும்பியைத் துரத்துபவைகளாகவே

அமையும்

ஆரஞ்சு சுளை மிட்டாயை வாயில்

போட்டால் அமிர்தம் போல் இருக்கும்

அப்பா சம்பாதிக்க எவ்வளவு

சிரமப்படுகிறாரென்றும்,

அம்மாவுக்கு என்ன நோவு என்றும்

சிறுவயதில் கேட்டதே இல்லை

வேளா வேளைக்கு உணவு

கிடைத்துவிடுவதால் மனம்

படிப்பைத் தவிர வேறுசில

ஊசலாட்டத்திற்கும் இடமளிக்கும்

புரியாத வயதில்

பக்கத்து பென்ஞ்ச் கமலா

வலிய வந்து பேசும்போது

மனதில் பட்படாம்பூச்சி சிறகடிக்கும்

ஆடிக்காற்றில் ஓலைக் காற்றாடியும்,

அதற்கடுத்து பம்பரமும் கையுமாக

தெருவில் நிற்போம்

திரைநாயகர்கள், நிஜநாயகர்களல்ல

என்று அப்போது எங்களுக்குத்

தெரியாது

என்னிடம் கதை கேட்கும் ஆவலில்

கூட்டமொன்று வாசலில்

தவங்கிடக்கும்

மரக்கட்டை பேட்டை கையில்

பிடித்தவுடன் மனதில்

சச்சினாயிட்டோம் என்ற

நினைப்பு தானாகவே வரும்

பட்டாசுக்கென்றே தீபாவளி

எப்போது வருமென்று

காத்துக் கிடப்போம்

காணும் பொங்கலுக்கு

கன்னிப் பெண்கள்

வீடுதேடி வந்து அம்மாவின்

காலில் விழுந்து

சமத்து என்று என்

கன்னத்தையும் கிள்ளிச் செல்வார்கள்

சுயமாக பட்டம் செய்து

அது மேல்காற்றில் பறப்பதைப்

பார்க்கும் சுகம் அலாதியானது

பட்டம் விடும்போது தெரியவில்லை

நம்மால் படித்து பட்டம் வாங்க

முடியாதென்று

எனக்கு கணக்கும் வரவில்லை

வாழ்க்கை கணக்கும் புரியவில்லை

வேலை தேடும் போதுதான்

என் தகுதி என்னவென்று

எனக்கே புரியவந்தது

பணம் சம்பாதிக்க

முதலாளி குட்டிக்கரணம்

போடச் சொன்னால்

போட்டுத் தானே ஆகவேண்டும்

திறமையை வைத்து தான்

சமூகத்தில் மனிதனை எடை

போடுகிறார்கள் என்று விளங்கியது

படிப்பில் கோட்டைவிட்ட எனக்கு

இயற்கை கறாராக

வாழ்க்கைப் பாடத்தைக் கற்றுக்

கொடுத்துவிட்டது

வாழ்க்கை இறைவன் அளிக்கும்

ஒரு வாய்ப்பு என்று

இப்போது தான் எனக்குத் தெரிகிறது

இருளில் கற்கள் என்று கருதி

வைரத்தை நதியில் எறிந்து

கொண்டு இருந்துவிட்டேன்

நான் என்ன செய்ய

என்னிடம் இரக்கம் காட்டாமல்

விதி என்னை முடமாக்கிவிட்டது

இரத்தத் திமிரில் நான்

செய்ததெல்லாம் நினைவுக்கு

வந்து என்னை அம்புப்படுக்கையில்

படுக்க வைத்துவிட்டது

ஒரு விஷயம் என்னை

உறங்கவிடாமல் செய்கிறது

கடவுள் பெண்ணாக இருந்துவிட்டால்

நான் என் தலையை

எங்கே போய் முட்டிக் கொள்வது.

•••

அன்பழகன் செந்தில்வேல் கவிதைகள் ( அறிமுகப் படைப்பாளி )

புற்கள் களைகையில்
கருவேப்பிலைக் கன்றை தவறுதலாக வெட்டி விட்ட
பகல் முடிந்து வந்த இரவு அது
தூங்கிக் கொண்டிருந்தவனின் கண்களின் வழியே
கருவேப்பிலைச் செடி முளைத்து வருவது போல கனவு வர
திடுக்கிட்டு எழுந்தான்
வீட்டு வரவேற்பறையில் படுத்திருந்த பூனையை
தவறுதலாக மிதித்து விட்ட ஒரு நாளில்
ஆயிரம் பூனைகள் நகங்களால் தன்உடலை கிழிப்பது போல கனவு வர திடுக்கிட்டு எழுந்தான்
சாலையை கடந்த நத்தையை
இரு சக்கர வாகனத்தின் முன் சக்கரத்தால்
முதுகுக் கூட்டுடன் நொறுக்கி விட்ட ஒரு நாளில்
வீடு இடிந்து தன் மேல் விழுவது போல கனவு வர
கட்டிலில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்தான் ஆயிரம் பறவைகள் இரவில் தங்கும் மரத்தை
குடியிருப்பு கட்டுவதற்கு வெட்டிய நாளில்
ஆயிரம் ஆயிரம் பறவைகள் துரத்த தூக்கத்தில் எழுந்து ஓடத் தொடங்கினான்
அதன் பிறகு மனச்சாட்சி அவனை விட்டு வெளியேறிய நாளில்
அவன் ஒரு கொலை செய்தான்
அன்று இரவும் அடுத்தடுத்த இரவுகளும்
கனவுகளே வரவில்லை அவனுக்கு

அந்த கண்ணாடித் தொட்டியை
கடலாகவோ ஆறாகவோ மாற்ற முயற்சித்தேன்
ஆற்றில் இருந்து கூழாங்கற்களை எடுத்து வந்து
தொட்டியின் அடிப்பரப்பில் பரப்பினேன்
கடலில் இருந்து கொஞ்சம் சிப்பிகள் பொறுக்கி வந்து தூவினேன்
பிளாஸ்டிக்கினால் செய்த ஆழ்கடல் ஆராய்ச்சியாளன்
பொம்மைக் கப்பல் கடற்தாவரங்கள் மரம் போன்றவற்றை
தண்ணீர் நிரம்பிய கண்ணாடித் தொட்டிக்குள் இட்டேன்
சூரியனை நினைவுபடுத்த விளக்குகளும் பொருத்தினேன்
இருந்தும் நீந்துகையில்
கண்ணாடிச் சுவற்றில் மோதும் போது
தொட்டி மீன்களுக்கு தெரிந்து விடுகிறது
தாங்கள் வசிப்பது ஆறோ கடலோ அல்லவென்று
————————————————————————-
அய்யாக்கண்ணு சித்தப்பா தான்
ஊரின் எல்லாமுமாக இருந்தார்
சுப நிகழ்ச்சிகளில் அவர்தான்
பந்தலில் வாழை கட்டுவார்
எழவு வீடுகளில் பிணம் குளிப்பாட்டுவார்
நாய்களுடன் முயல் வேட்டைக்குச் சென்று
இறைச்சி தருவார்
நிறைகுளத்தினுள் நீந்திச் சென்று
தாமரைப் பூக்கள் பறித்து
சிறு பிள்ளைகளுக்கு கொடுப்பார்
இடுப்பில் கயிறு கட்டி
சிறுவர்களை நீச்சல் பழக்குவார்
விடலைப் பையன்களுக்கு
கபடி சொல்லித் தருவார்
மதினிமார்களை கிண்டல் செய்வார்
காதல் முறிவினால் துயருற்று
கிணற்றில் விழுந்து தற்சாவினை நேர்ந்து கொண்ட
பொன்னுக் கிளி அத்தையை
அவர்தான் கட்டில் கட்டி தூக்கினார்
வைக்கோல் படப்பில் இருந்த
சாரைப் பாம்பின் வாலைப்பிடித்து
தரையில் மாறி மாறி அடித்து
அவர்தான் கொன்றார்
கோவில் திருவிழாக்களில்
16 எம் எம் திரையை அவர்தான் கட்டுவார்
முன்பெல்லாம் ஊரில்
நிறைய அய்யாக்கண்ணு சித்தப்பாக்கள் இருந்தனர்
ஒரு அய்யாக் கண்ணு சித்தப்பா கூட இல்லாத
பெரு நகரில் வாழ்வது
வேற்று கிரகத்தில் வசிப்பது போல் உள்ளது

•••

திலக்கியா ( சிறுகதை ) / பிரவின் குமார்

அழுகை ஓலங்கள் என் உடலை சுற்றி மொய்த்துக்கொண்டிருக்கிறது நிமிடத்திற்கு ஒரு முறை பூமாலைகள் என் சடலத்தின் மீது போர்தப்படுகின்றன, தலைவிரி கோலத்துடன் என் தாயின் கதறல்கள், துண்டின் துணையோடு தூணில் சாய்ந்துகொண்டிருக்கும் என் அப்பா இவை எதுவும் என் இறப்பை மீட்டெடுக்க போவதில்லை. அவள் விழிகள் உயிரற்ற என் உடலை சந்திக்கும் தருணம் ஒன்று வாய்த்தால் இறந்த பின்பும் மீளுவேன். அவளின் வருகையை எதிர்பார்த்தபடி தெரு முனையில் அமைந்துள்ள கட்சிக்கொடி கம்பத்தின் படியில் அமர்ந்துகொண்டு போவோர் வருவோரை வெறித்து பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

சூரியன் சாயும் நேரம் மனிதர்களும் அவரவர் இருப்பிடத்தை தத்தம் அடைகிறார்கள். பள்ளி முடிந்து தனது பாட்டியின் விரலை பிடித்துகொண்டு வீட்டிற்கு விரையும் அந்த மழலை, மொபெட்டில் தனது காதலியை அமர்த்திக்கொண்டு உல்லாசமாய் வளம் வரும் அந்த இளைஞன். துப்பாக்கியை தோளில் சுமந்து பராக் பார்த்து கொண்டே தன் மனைவியுடன் செல்லும் அந்த குறவன். என் வீட்டு வாசலின் வழியே எனக்கு காட்சியளிக்கிறார்கள். நான் வேண்டுவது அவளின் முகம்… அவளை தவிர வேறு யாரையும் சிந்திக்க மனது ஒப்பவில்லை. நடந்தே அவள் கிராமத்திற்கு சென்றால் என்ன? இரண்டு வருடத்திற்கு முன்பு பொங்கல் பண்டிகையையொட்டி அந்த கிராமத்திற்கு சென்று வந்த ஞாபகம் அத்தெருவின் வீடுகளும், சாணத்தின் வாசமும் இப்பொழுதும் கூட நினைவலைகளில் தடம் பதித்துகொண்டிருக்கிறது. ப்ச்… நவீன உலகத்தில் மனிதர்களுக்கான சிறகை மட்டும் ஏன் உருவாக்க ஒருவரும் முயற்சி செய்யவில்லை… அப்பிடி ஒன்று அமைந்திருந்தால் இந்நேரம் அவள் கோலமிட வாசலுக்கு வரும் முன்பே என் வருகையை பதிவுசெய்திருப்பேன்.

படிப்பிற்காக நகர வாழ்க்கைக்குள் படி எடுத்து வைத்தாயிற்று புழங்கிக்கொண்டிருக்கும் இன்னல்களை மனதுக்குள்ளோ இல்லை உடலுக்குள்ளோ பதுக்கிவைக்கவேண்டும். பிறரின் சிநேகம் கிடைத்திருந்தால் என்னை நானே பாதுகாத்துகொள்ளும் தேவை இருந்திருக்காது. கல்லூரிக்கு வந்து சேர்ந்து பத்து நாட்களுக்கு மேல் கடந்தும் கூட என் அருகில் அமர்வதற்கு ஒருவரும் பிராயத்தனப்படவில்லை. ஜடை பின்னிய என் கேசமும், மை பூசிய என் சதையும் பிறரை என் வசம் திருப்பாமல் இருந்திருக்கலாம். அவளை பார்க்கும் வரையில் அப்பிடி தான் நிச்சயித்துக்கொண்டேன். இரண்டாம் பாடத்திற்கு மணி அடித்த பொழுது வகுப்பறைக்குள் பிவேசித்தவளின் விழி தேடல் என் இருப்பை தேர்வு செய்தது. எந்த சலணுமுமின்றி என் அருகில் வந்து அமர்ந்தாள். அவள் உடலில் இருந்து வெளிப்பட்ட வாசம் இயற்கையின் நறுமணமா…? இல்லை தேகத்தின் மேல் அப்பியிருந்த செயற்கையின் நறுமணா…? என்று எனக்கு தெரியவில்லை ஆனாலும் எனக்கு பிடித்திருந்தது.

அன்று கல்லூரிக்கு சென்ற முதல் நாள் அவள் அருகில் தான் அமர்ந்தேன். ஏதோ ஒரு உந்துதல் அவள் அருகிலான இருப்பிடத்தை தேர்வு செய்ய தூண்டியது. என்னை பார்த்தாளா என்று தெரியவில்லை நானாகவே அறிமுகம் செய்துகொண்டேன். “ஹாய்… ஐ யம் திலா..” மணிக்கட்டில் சுற்றிக்கொண்டிருந்த கயிறு மட்டுமல்ல அவள் தேகமும் கருப்பு தான். நெற்றியில் பதிந்திருந்த விபுதி அவள் கருமையை அலங்கரித்தது. மௌனத்தில் பதுங்கிக்கொண்டிருந்த பற்கள் சிரிப்பின் வழியே தலைகாட்டியது.

அவள் அணிந்திருந்த கம்மிஸ் எத்தனை விலையோ…! உடையின் சிகப்பும் அவள் மேனியின் சிகப்பும் போட்டிபோட்டுக்கொண்டிருந்தது. அவள் அந்தஸ்த்தை ஒத்திய பெண்கள் கல்லூரியில் பலர் இருந்தும் கூட என்னிடம் தான் அதிகமாக உரையாடிக்கொண்டிருந்தாள். என் பெயரை சொல்லி அறிமுகபடுத்திய நாளிலிருந்து நிமிடத்திற்கு நிமிடம் இலக்கியா… என்னும் நான் அவள் நாவிலிருந்து உதிர்ந்துகொண்டே இருந்தேன். எங்கெங்கோ அழைத்து சென்றாள் என் கரம் அவள் பிடியில் தான் அந்நகரத்தை வளம் வந்து கொண்டிருந்தது.

நகர வாழ்க்கை பழகியும் கூட இலக்கியாவின் வாழ்வு தன் பெற்றோக்கு அனுப்பும் கடிதத்தில் தான் சுவாசித்துகொண்டிருந்தது. எப்பொழுதும் கடிதம் கல்லூரியைபற்றி, நகரத்தைபற்றி குறிப்பாக என்னைபற்றி இலக்கியாவின் எழுத்துக்கள் என்னை ஆராதிக்க தவறியதே இல்லை. ஒரு முறை அவள் ஹாஸ்டல் அறைக்கு செல்லும் பொழுது அனுப்புவதற்கு தயாராக மேசையின் மேல் வைத்திருந்த கடிதத்தை படிக்க நேர்ந்தது அதில் “திலா எனக்கு தெரியாமலே என்னை தத்தெடுத்துகொண்டாள் அப்பா… அவளை போல் இவ்வுலகில் சினேகிதி இருக்கபோவதில்லை, தயங்காமல் சொல்லுவேன் நீங்கள் எனக்கு பெற்றோர்களாக கிடைத்ததைவிட திலா எனக்கு சினேகிதியாக கிடைத்தது தான் என் வாழ்வில் நான் கொண்ட பெரும் பாக்கியம் கூடியவிரைவில் அவளை நம் கிராமத்திற்கு அழைத்து வருகிறேன்” நீண்டுகொண்டே போனது என்னைபற்றிய புராணமும் இதிகாசமும். அவள் எழுதத் தெரிந்தவள் எழுத்தின் வாயிலாக சொல்லிவிட்டாள் நான் எப்படி நிருபிப்பேன் அவள் என்னுள் கலந்த குருதி என்று.

கல்லூரியில் எங்களுக்கு பெயரும் வைத்தாயிற்று நாங்கள் ஜோடி புறாக்கலாம். நிதர்சனம் அதுவே… எங்களை போல் இல்லை என்று பொறாமைபடும் மாணவிகளும் இருக்கத்தான் செய்தார்கள். சில பொழுது என்னை மாற்றுவிக்கும் தூரிகையாக திலா செயல்பட தொடங்கினாள். அவளை போலவே ஒப்பனைகளை எனக்கும் தோற்றுவித்தாள், ஆங்கிலம் பழக கற்றுக்கொடுத்தாள், துணிவோடு நகர மனிதர்களை எதிர்கொள்ளும் வீரியத்தை என்னுள் விதைத்தவளும் அவளே. என்னை நானே இழக்க தொடங்கிய நாட்கள் நகர்ந்துகொண்டிருந்தது. மெல்ல… மெல்ல… திலாவின் ஆக்கிரமிப்புகள் பெருகிக்கொண்டே போனது.

இலக்கியாவுடன் சேர்ந்து நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் கானும் இடங்களில் எல்லாம் என் வீட்டு சுவற்றில் பளிச்சிடும். கல்லூரி மட்டுமல்லாது வீட்டிலும் அவள் முகத்தை தேடியே என் மனம் அலைந்துகொண்டிருந்தது. படிப்பு, லட்சியம், எதிர்காலம் எதைபற்றி சிந்தித்தாலும் இலக்கியாவின்றி அது முழுமை பெறாது என்றே நம்பதொடங்கினேன். தனிமையில் அவளை நினைத்து சிந்திக்கும் பொழுதுகளில் ரோமங்கள் தலை தூக்கி அதில் நீர் வழிவது போல் என் தேகம் அவஸ்த்தைபட்டது. கோவிலுக்கு செல்ல அவளுக்கு பிடிக்கும் இமை மூடி உதடுகள் துடிக்கும் முனகல்களை கூட ஒற்றை பார்வையில் அவ்வழகை ரசித்துகொண்டிருப்பேன். என்ன வேண்டிக்கொள்வாளோ… பல தடவை கேட்டிருக்கிறேன் “என் வேண்டுதல் கடவுளுக்கு தெரியும்” என்று சொல்லிவிட்டு நகர்ந்துவிடுவாள். என்னுடைய புலம்பல்கள் அந்த கடவுளுக்கு தெரிந்திருக்குமோ… இல்லையோ…

என் புத்தக இடுக்குகளில் திலாவின் புகைப்படங்கள் மூச்சின்றி உறங்கிக்கொண்டிருக்கும். திலா என்னுடன் இருக்கும் நேரத்திற்க்காகவே கல்லூரி நாட்களை அதிகம் விரும்பினேன். அவளுக்கு கடற்கரை செல்ல பிடிக்கும் தொலைவில் அமர்ந்து கொண்டே அவள் அலைகளுடன் ஓடி பிடித்து விளையாடும் அழகை ரசித்துகொண்டிருப்பேன். எங்கள் இருவரின் பெயரையும் கடற்கரை மணலில் எழுதி எழுதி அலைகளுக்கு பசியாற்றிகொண்டிருப்பாள். அழியும் என தெரிந்தும் அவளது விரல் கடல் மணலோடு போராடிக்கொண்டிருக்கும். “அழிஞ்சிடுச்சிடி இலக்கியா” முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு மீண்டும் எழுதுவாள் தள்ளிநின்று அதை அழகு பார்க்கும் முன் கடல் அலைகள் முந்திக்கொள்ளும். அவளுடைய விரல் வலி தாங்காதே… திலாவை ஏமாற்றிக்கொண்டிருக்கும் இந்த கடல் வற்றி போனால் என்ன…? மனதுக்குள் அலைகளையும் அவைகளை தூது அனுப்பும் கடலையும் சபித்துக்கொண்டே இருப்பேன். சீற்றம் கொண்டு “அவைகளுடன் போராடாதே திலா..! உன் விரல் பாவம்… காலத்திற்கும் அழியாத சுவடு என் மார்பில் பதிந்திருக்கிறதடி” என் மார்பில் குத்திய அவள் பெயரை காட்டவேண்டும் என்று பல பொழுது தவித்திருக்கிறேன்.

திலா என்னும் பிம்பம் ஏன் இலக்கியாவாக உருபெற கூடாது பல பொழுதுகள் திலா என்னை இம்சித்தாள். கண்ணாடியில் எனதுருவம் மறைந்து அவள் உருவம் பிரதிபலிக்க தொடங்கியது. கல்லூரியில் மட்டுமல்லாது கனவிலும் என்னை தொடர்ந்துகொண்டிருக்கிறாள். அவள் நினைவாகவே கருமையை அதிகம் உடுத்த ஆயுத்தமானேன். பொங்கல் பண்டிகை, திருவிழா, செமஸ்டர் விடுமுறை எல்லாமே இலக்கியாவின் கிராமத்தில் தான். தலைவிரி கோலமாய் சுற்றிக்கொண்டிருந்த என்னை ஜடை பின்னலெடுத்து மல்லி வைத்து அழகு பார்த்தாள், அவளை போலவே பாவாடை தாவணி கட்டுவித்தாள், நான் கோலமிடும் வளைவுகளெல்லாம் அவள் கரம் பிடித்தே, ஏன் சப்பணமிட்டு சாப்பிட கற்றுகொடுத்தவளும் அவள் தான். இப்பொழுதெல்லாம் திலா-இலக்கியா என்று எழுதியே அழகு பார்க்கிறேன். சில உணர்வுகள் என் எதிரில் நின்று வினாவுகிறது இலக்கியா உன் தோழி மட்டும் தானா?

கல்லூரியின் வருகை பதிவேடு புத்தகத்தை இருவருக்கும் தனித்தனியே புரட்டி பார்க்க வேண்டிய அவசியம் இருக்காது. இருவரின் விடுமுறையும் வேறுபட வாய்ப்பில்லை. விடுமுறை எடுக்கும் திட்டம் இருந்தால் முன்னமே திட்டமிட்டுகொள்வது எங்கள் இருவரின் வழக்கம். அன்று ஒரு நாள் கல்லூரி வாசலில் நீண்ட நேரம் காத்திருந்தும் கூட திலாவின் வருகை தென்படவில்லை. உள்மனதிலும் கூட வியர்க்க தொடங்கியது. கல்லூரியை விட்டு வெளியே வந்து டெலிபோன் பூத் வாயிலாக திலாவின் வீட்டை அணுகிய பொழுது தான் அவள் வீட்டு வேலைக்காரியின் மூலமாக விசயம் கசிந்தது படியில் இருந்து தவறி விழுந்த திலா கையை உடைத்துக்கொண்டாளாம். டாக்சி ஒன்றை பிடித்து மருத்துவமனையை சேரும் வரையில் என் உயிர் நாடி இரயிலின் சக்கரங்களாக சுழல தொடங்கியது. ஓவென்று…. அழுகை குரல்கள் நான் அமர்ந்திருந்த கட்சிக்கொடி படியை நோக்கி வந்தது திரும்பி பார்தேன்.. தென்ன ஓலையில் பின்னப்பட்ட பாடையில் என் உடலை கிடத்த என் பெற்றோர்களும் உறவினர்களும் தாயராகிகொண்டிருந்தார்கள்… சீக்கிரம் வந்துவிடு திலா…

உள்ளே பிரவேசித்தவள் நான் சகஜ நிலையில் அமர்ந்திருப்பதை பார்த்தும் கூட அழுதுகொண்டே இருந்தாள். “ஒன்னும் இல்லடி லேசா தான் அடிபட்டிருக்கு நார்மலா தான் இருக்கேன்” அவளை சமாதானம் செய்ய நான் மேற்கொண்ட முயற்சிகளெல்லாம் அவள் கண்ணீரில் தான் நனைந்துகொண்டிருந்தன. திடிரென்று கண்ணீரை துடைத்துவிட்டு என்னை கண்டபடி திட்ட தொடங்கினாள். அவளை பார்த்து புண்முறுவல் செய்துகொண்டே அவள் திட்டுவதை ரசித்துக்கொண்டிருந்தேன். திட்டுவதிலும் சினத்திற்கு பதிலாக கொஞ்சல்களே அதீதமாக கலந்திருக்கும் அவளது பேச்சில். இலக்கியாவின் பொய்மை கலந்த சினத்தை ரசிப்பதற்க்காக வேண்டுமென்றே பலமுறை அவளை சீண்டியிருக்கிறேன். அன்றைய நாளிலிருந்து இலக்கியா கணப்பொழுதும் என்னைவிட்டு விலகி இருக்க விரும்பவில்லை. என்னை கவனித்துகொள்வதற்காகவே என் வீட்டின் அறையை என்னுடன் பகிர்ந்துகொண்டாள்.

திலா அப்பாவிற்கு என் சமையல் பிடிக்கும் அவரிடமிருந்து பாராட்டுதலை பெறுவதற்காக அவ்வப்போது நான் திலாவின் வீட்டிற்க்கு விரைவேன். என்னை ஓயாது சீண்டுவதில் தான் அவளின் பொழுதுபோக்கு சமைத்துகொண்டிருக்கும் போது உப்பையோ காரத்தையோ கொட்டிவிட்டு ஓடிவிடுவாள். குழந்தை பாவனையில் அவள் செய்யும் புன்முறுவல் கோடி அழகு. விசாலமான அவ்வீட்டில் சிறுபிள்ளைகளாய் இருவரும் விளையாடிக்கொண்டிருப்போம். அவளால் நடக்க முடியாது என தெரிந்தும் அவளின் சீண்டுதளுக்காக ஏங்கிக்கொண்டு சமயலறையில் இருந்து நிமிடத்திற்கு ஒரு முறை எட்டி பார்த்துகொண்டிருப்பேன். பாத்ரூமில் குளித்துகொண்டிருக்கும் போது திலா பயன்படுத்திய மேலாடை தொங்கிக்கொண்டிருந்தது. அவளுடைய வாசம் அதில் கலந்திருக்குமோ…! நுகர வேண்டும் போல் இருந்தது திலாவின் வாசம் முழுவதும் அதில் வியாபித்திருந்தது. நாசியின் வழியே திலா என்னை ஊடுருவினாள். கேட்டு அணிந்தாலும் அவள் மறுப்பு ஏதும் சொல்லப்போவதில்லை ஆனாலும் மனது சஞ்சலப்பட்டது. அவள் மேலாடையை அணிந்துகொண்டேன் திலா என்னை ஆரத்தழுவிக்கொண்டதாக ஒர் உணர்வு கண்கள் மெல்ல செருகி புலம்பினேன். இப்படியே என்னை அணைத்துக்கொண்டிரு திலா…

உடல் தேறியபொழுதும் இலக்கியா என்னை குழந்தையாக தான் பாவித்தாள். அவள் உதவியின்றி சாப்பிட முடியும் ஆனால் அவள் விரல் என் பற்களில் உரசும் அந்த ஸ்பரிசம் வேண்டும். அவள் உதவியின்றி நடக்க முடியும் ஆனால் என் தோள்களை அரவணைக்கும் அந்த பிடிப்பு வேண்டும். அவள் பிரித்துகொடுக்கையில் சாப்பிடும் மாத்திரைகள் கூட தொண்டை குழியில் இனிப்பாய் தான் இறங்குகிறது. எல்லா வேலைகளையும் செய்துவிட்டு என்னை நெருங்கிய பொழுது அவள் உடலில் இருந்து பரவும் அந்த வியர்வை வாசம்… கழுத்திலும் நிற்றியிலும் இடையிலும் பிசுப்பிசுப்பை ஒப்பிய அந்த ஈரம் பூரித்த சருமம் முழுவதும் எனக்கு வேண்டும்… என்னை நெருங்காதே இலக்கியா போதையூட்டும் உந்தன் வாசம் ஏதோ செய்கிறதடி… அவள் மூவாயை பிடித்து என் பார்வையே நீயாக வேண்டும் இலக்கியா என்று சொல்லவேண்டும் போல் இருந்தது. மதிய பொழுதில் இலக்கியா சோபாவின் மேல் உறங்கிக்கொண்டிருந்தாள் சாளரத்தின் வழியே வந்த சூரிய கதிர் அவள் மூக்குத்தியின் கற்கள் மீது மோதிக்கொண்டு மின்னியது. இந்த கருப்பு தேவதையை அள்ளிக்கொண்டால் என்ன… அவள் உதடுகளில் படர்ந்த காந்த விசை ஈர்ப்பு என் உதட்டோடு அவள் உதட்டை நெருங்க செய்தது… இது என்ன மாதிரியான உணர்வு மூளைக்குள் இடித்த அலார ஒலி சுதாகரித்துக்கொண்டு பாத்ரூமிற்கு விரைந்தேன். அழுதுகொண்டே இருந்தேன் மனப்புழுக்கத்திலிருந்து விடுபட இனி நான் என்ன செய்ய வேண்டும்…

என்னை கடந்து என் உடல் மயானத்திற்கு போய்கொண்டிருக்கிறது சங்கின் ஓசையும் சேமங்குல மணியும் என் இறப்பை அறிவித்துகொண்டிருக்க சிதறிய பூக்கள் மீது பாதம் பதித்துக்கொண்டு கிராம மக்கள் என் உடலை பின்தொடர்கிறார்கள். கடைசி நபராய் அவர்களை நான் பின்தொடர்கிறேன் இன்னும் ஏன் திலா வரவில்லை…? என் சித்தப்பா மகன் ஊர் தலைவரின் வீட்லிருந்த டெலிபோன் வாயிலாக என் இறப்பை திலா வீட்டிற்கு தெரிவித்ததை நான் பார்த்தேனே… வரும் வரையில் ஏதேனும் பிரச்சனையா..? சீக்கிரம் வந்துவிடு திலா இன்னும் சிறிது நேரத்தில் என் உடல் நெருப்பிற்கு காணிக்கையாக்கப்படும். கானும் முகங்களிளெல்லாம் உன் உருவத்தை தான் தேடிக்கொண்டிருக்கிறேன் என்னை ஏமாற்றிவிடதே திலா சீக்கிரம் வந்துவிடு.

தூரத்திலிருந்து வந்துகொண்டிருப்பது என் அப்பாவின் கார் தான். நான் நின்றிருப்பதை கவனித்தாரா என்று தெரியவில்லை அதிவிரைவாக வீட்டின் உள்ளே நுழைந்தது. சில பொழுதுகள் இலக்கியாவுடன் நெருங்கியும் தள்ளியும் இருந்தேன். அவள் என் இலக்கியா என்று ஓயாது என் மனம் உரிமைகொண்டாடியது. யாருக்காக பிறந்தவள் அவள்… அவளே சொன்னாளே நான் அவளை தத்தெடுத்துவிட்டேன் என்று நானும் உனக்காக பிறந்தவள் தான் இலக்கியா… இதை எப்படி அவளுக்கு உணரச்செய்வேன். கல்லூரி முடியும் நேரமும் நெருங்கியது. இந்த நான்கு வருடத்தில் தள்ளி வைத்தே பார்த்து பழக்கப்பட்ட பிரிவு எங்கள் இருவரையும் தள்ளி வைக்க முந்திக்கொண்டு வந்தது. இலக்கியாவை இழக்க நான் விரும்பவில்லை வாழ்க்கையின் தேடலுக்காக அல்லாமல் அவளை என்னுடன் தக்கவைத்து கொள்வதற்காகவே மேற்படிப்பிற்க்கு டெல்லியில் உள்ள கல்லூரியில் இருவருக்கும் சேர்த்து விண்ணப்பித்திருந்தேன். இலக்கியாவின் பெற்றோரை சமரசம் செய்து அவளை என்னுடன் டெல்லிக்கு அழைத்து செல்வதே என் திட்டம். இல்லக்கியாவை கடத்தி செல்லும் மனநிலையில் தான் என் மூளையும் இயங்கிக்கொண்டிருந்தது. இல்லகியா என்னுடன் இருந்தால் போதும் அதற்கான வேளையிலும் ஆயுத்தமானேன். அவள் ஊருக்கு சென்ற ஓரிரு வாரங்களில் அவளிடம் வந்த கடிதம் தான் நான் தீட்டி வைத்திருந்த திட்டத்திற்கு முழுவதுமாக முழுக்கு போட்டது.

உள்ளே நுழைவதற்கு முன்பே இடுகாட்டின் வாசம் வா… வா… வென்று வரவேற்றது. பேருந்தில் ஏறுவதற்கு முன் அவள் கொடுத்த அரவணைப்பும், என் தோள்களில் படிந்த அவளது கண்ணீரும் ஊருக்கு வந்து சேர்ந்த பொழுதும் கூட என்னை விட்டு விலகவில்லை. அவள் கொடுத்த வாக்குறுதி இன்னும் இரண்டு வருடம் நீடிக்க செய்யும் என்னும் நம்பிக்கையில் அவளுக்காக காத்திருந்தேன். எங்கிருந்தோ வந்த ஆள் அடையாளம் தெரியாத உறவுமுறை திருமணம் என்னும் சுழிக்குள் என்னை மூழ்க வைக்கும் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தன. என் அனுமதியின்று எப்போதோ நிச்சயிக்கப்பட்ட விஷயமாம்… அவளுடன் இருந்த நாட்கள் இனி வரப்போகும் நாட்களில் கிடைக்குமா…? என் வீட்டு அந்நியர்கள் என் வாழ்க்கை வடிவத்தை வரைந்து கொண்டிருக்கும் அனைத்து விஷயங்களையும் அவளுக்கு கடிதம் எழுதினேன் நான் தற்கொலை செய்யவிருக்கும் விஷயத்தை தவிர…

அப்பாவின் காரை தொடர்ந்து சிறிது நேரத்தில் போலீஸ் ஜீப்பும் அதை தொடர்ந்து ஆம்புலன்ஸ் வண்டியும் என் வீட்டு வாசலில் முன் வந்து நின்றது. வெள்ளை சீருடை அணிந்து ஆம்புலன்ஸிலிருந்து குதித்தவர்கள் வீட்டினுள் பிரவேசித்து அவர்தம் வேளைகளில் ஈடுபட்டார்கள். வீட்டு வாசலில் சலசலப்புடன் பரிட்சயமான அக்கம் பக்கத்து முகங்கள் தென்பட தொடங்கின. கை குட்டையால் கண்களை துடைத்துக்கொண்டு மூக்கு கண்ணாடியை கையில் பிடித்தபடி தேம்பியவாறு வெளியே வந்துகொண்டிருந்தார் என் அப்பா. தன் முந்தானையால் முகத்தை பொத்திக்கொண்டு அழுதுகொண்டே வெளிவந்தாள் வேலைக்காரி. உச்சுக்கொட்டிகொண்டு காற்றோடு கலந்துவந்த புலம்பல்கள் வீட்டு வாசலில் முன் பரவியது. கருப்பு உடை அணிந்து ஸ்ட்ரெக்சரில் தூக்கிசெல்லப்பட்ட ஓர் உடல் அருகில் சென்று பார்த்தேன் இமை மூடிய எனதுருவம் தெரிந்தது.

“பாக்குரவங்க… கடைசியா முகத்த பாத்துக்கலாம்…” கையில் வரட்டியை வைத்துகொண்டு வெட்டியான் ஏலம் விட்டுக்கொண்டிருந்தான். எவரிடமிருந்தும் மறுமொழி வராமல் இருக்கவே அந்த சொர சொரப்பான வரட்டியை என் முகத்தில் போர்த்தி என் அப்பாவிடம் கொள்ளியை கொடுத்து அவரை ஆழுதப்படுத்தினான். உடலோடு சேர்ந்து என் ஆசைகள் எரிந்துகொண்டிருந்தது தொலைவில் நின்றவாறே நான் சாம்பலாகிக்கொண்டிருப்பதை பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

ஒவ்வொரு வண்டியும் கண்ணில் இருந்து மறைய தொடங்கின… வாசலில் நின்றுகொண்டிருந்த முகங்கள் அவரவர் வீட்டிற்கு சென்றன… நான் இன்னமும் என் வீட்டு வாசலிலே நின்றுகொண்டிருக்கிறேன்.

திலா அவள் அம்மாவின் இறப்பைபற்றி பேசியிருக்கிறாள், இலக்கியா ஜாதி கலவரத்தில் அவன் அண்ணன் இறந்ததைபற்றி பேசியிருக்கிறாள், திலா தன் பள்ளிபருவத்தைபற்றி பேசியிருக்கிறாள், இலக்கியா தன் கிராமத்தைபற்றி பேசியிருக்கிறாள், திலா தனக்கு பிடித்த நடிகரை பற்றி பேசியிருக்கிறாள், இலக்கியா தனக்கு பிடித்த பாடலை பற்றி பேசியிருக்கிறாள். ஏதேதோ விஷயங்களை பேசியிருக்கிறோம் ஆனால் காதலைபற்றி இதுநாள்வரையில் நாங்கள் பேசியதே இல்லை.

வாசிப்பில் தீரா மோகமும் இலக்கியத்தின் மீது அதீத ஆர்வமும் கொண்ட நண்பர்களால் உருவானது தான் வாசகசாலை…. தனக்கு பிடித்த, தன் நண்பர்க்கு பிடித்த அல்லது வாசிப்பில் தவறிவிட்டு போன நூலினை குறித்து அவ்வபோது சந்திக்கும் தேநீர் கடையில் தான் அரங்கேறியது ஆரம்ப காலத்தின் இலக்கிய நிகழ்வுகள். எத்தனை நாட்களுக்கு இந்த தேநீர் கடை என்னும் கேள்வியைவிட இது ஏன் வாசிப்பாளர்கள் ஒன்றிணையும் நிகழ்வாக மாற கூடாது என்னும் கேள்வி தான் அனைவரின் மனதிலும் தோன்றிக்கொண்டிருந்தது. அதன் முதன்படியாக குறிப்பிட்ட ஒரு இடத்தை அதாவது நண்பர்களுக்குள் ஒருவர் வசிக்கும் குறுகிய அறையை தேர்வு செய்து மாதம் ஒரு இலக்கிய கலந்துரையாடல் என்னும் அடிப்படையில் நிகழ்வு நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பல இலக்கிய வாசகர்கள் நண்பரின் நண்பர் என்ற முறையில் அறிமுகமாகி இணைய துடங்கினர்.

இலக்கிய உலகில் வாசகர்களை கண்டெடுக்க வேண்டிய அவசியம் இல்லை களம் ஒன்று இருந்தால் எங்கேனும் இருந்து பறந்து வருவார்கள். வாசகர்களின் தொடர் வருகைக்காவே ஓர் குழுமம் துடங்கும் திட்டத்தை அருண், கார்த்திக் வெங்கடராமன், கிருபா சங்கர், பார்த்திபன் நெடுஞ்செழியன் இன்னும் சில நண்பர்களால் பேசி. முடிவு செய்யப்பட்டது இவர்களின் முயற்சியால் தொடங்கப்பட்டது வாசகசாலை என்னும் குழுமம்.

முதல் நிகழ்வாக எழுத்தாளர் க.சுதாகர் (சுதாகர் கஸ்தூரி) அவர்களின் இரண்டாவது நாவலான 7.83 ஹெர்ட்ஸ் எனும் அறிவியல் புனைவு நாவலை வாசகசாலையின் முதல் நிகழ்வுக்குத் தேர்வு செய்யப்பட்டது. கனிந்த அந்த நாள் 14 டிசம்பர் 2014. ஒரு பொன்னான ஞாயிறு காலை. திருவான்மியூர் பனுவல் நூல் நிலைய சிற்றரங்கில் வாசகர்களுடைய பேராதரவுடன், அரங்கு நிறைந்த கூட்டமாய் நிகழ்ந்தது முதல் வாசகசாலையின் கூட்டம். எழுத்தாளர் மனோஜ் அவர்கள் வாசகசாலை இலட்சினையை வெளியிட்டு, அறிமுக உரையை ஆற்றித் தொடங்கி வைக்க, வாசகப் பார்வையில் தோழர் தமிழ் பிரபாவும், பாரதி செல்வாவும் நல்லுரை தந்தனர். எழுத்தாளுமை மிக்க இரா.முருகன் சிறப்புரை நல்கினார். அறிவியல் கட்டுரைகள் மற்றும் பலருக்கும் தெரியாத உலக மர்மங்கள் பற்றி தொடர்ந்து கட்டுரைகள் எழுதிவரும் திரு.ராஜ்சிவா அவர்கள் காணொளிக் காட்சியின் மூலம் வாழ்த்தும், ஆசியும் வழங்கினார்.

இவ்வாறாக முதல் கூட்டம் மிக வெற்றிகரமாக நடந்து முடிந்தது. ஆனால் அடுத்த மாதக் கூட்டத்தை இன்னமும் சிறப்பாகவும், செவ்வியல் தன்மை கொண்ட படைப்பு அல்லது படைப்பாளி பற்றி பேச வேண்டும் என்றும் வாசகசாலை குழுமம் முடிவு செய்தது. அதுவரை குறிப்பிட்ட நூலினை மட்டும் தேர்வு செய்து நிகழ்வுகள் நடத்திக்கொண்டிருந்த வாசகசாலை மேலும் ஒரு சிறப்பம்சமாக மாதந்தோறும் வெளியாகும் உயிர்மை, காலச்சுவடு, கணையாழி, அம்ருதா, தடம், தீராநதி, காக்கைச் சிறகினிலே, போன்ற சிற்றிதழ்களிலிருந்து வெளியாகும் சிறுகதைகளை “கதையாடல்” என்கிற தலைப்பில் தொடர் நிகழ்வுகளை நடத்த துடங்கியது.

அடுத்த பரிமாணமாக ‘ஈழத் தமிழ் எழுத்தாளர்கள் வரிசை’ என்கிற தலைப்பில் ஈழ எழுத்தாளர்களுக்காக, அவர்களின் படைப்புகளுக்கு மட்டும் நிகழ்வு நடத்துவது என்று தீர்மானித்து அதன்படி முதல் நிகழ்வாக, எழுத்தாளர் தமிழ்நதி அவர்களின் பார்த்தினீயம் எனும் நாவலை ஆகஸ்ட் 2016 அன்று வடபழனி ப்யூர் சினிமா புத்தக அரங்கில் வைத்து வாசகசாலை நிகழ்த்தியது அதன் தொடர்ச்சியாக அக்டோபரில் இரண்டாவது நிகழ்வாக எழுத்தாளர் சயந்தன் அவர்களின் ஆறா வடு நூலினை குறித்தும் நிகழ்வு நடத்தப்பட்டது.

ஒரு குழுமத்தின் நோக்கம் சிதையாமல், அதை எப்படி வெற்றிகரமாக செயலாக்குவது என்கிற நேர்த்தியை இவர்களிடம்தான் கற்க நேர்ந்தது. பலவிதமான இலக்கிய கள அனுபவங்களை இவர்களால் இலகுவாக பெற நேர்ந்தது.

அந்த அனுபங்கள் ஒன்றை மட்டுமே மூலதனமாக்கி 2012 ல், முகநூலில் ’வாசகசாலை ’ எனும் குழுமத்தை ஆரம்பித்தோம். இலக்கியத்தின் பால் அதிக ஆர்வம் கொண்டோரை நாங்களே தேடியும் இணைத்தோம், காலப்போக்கில் பல இலக்கிய ஆர்வலர்களும் அவர்களாகவே தேடி வந்து தங்களை எங்களது குழுமத்தில் இணைத்தும் கொண்டனர்.

இலக்கிய விழாக்கள் பற்றிய அறிவிப்புகள், புது நூல்களைப் பற்றிய அறிமுகங்கள், வாசித்த நூல்களைப் பற்றிய விமர்சனங்கள், விவாதங்கள், இன்ன நூல்கள் எங்கு கிட்டும் என்கிற விவரங்களை தரும் ஒரு குழுமமாக அது வளர்ந்த வண்ணமிருந்தது.

இருந்தும் எங்களின் கனவு, வாசகசாலை குழுமமென்பது தமிழ் இலக்கியத்தை வெறும் கணினித் திரைகளில் வாசிக்கச் செய்வதோடு ஓய்ந்துவிடக் கூடாது, மாறாக நேரடிக் களத்தில் குதித்து, பல இலக்கிய விழாக்களையும் முன்னெடுத்து நடத்திக் காட்ட வேண்டுமென்பதாகவே இருந்தது, அதற்கான நாளும் கனிந்தது.

அதற்கு முன்னதாக எங்களுக்குள் நாங்கள், வாசகசாலை இலக்கியக் கூட்டங்கள் நடத்துவது தொடர்பாக, சில நெறிமுறைகளையும், கட்டுப்பாடுகளையும், நோக்கங்களையும் விவாதித்து, மூளையில் பதிந்து வைத்துக் கொண்டோம். இன்றுவரை அதிலிருந்து சிறிதும் நெகிழ்ந்து விடாமலேயே கூட்டங்கள் நடத்திக் கொண்டும் வருகிறோம்.

அதன்படி, எழுத்தாளர் க.சுதாகர் (சுதாகர் கஸ்தூரி) அவர்களின் இரண்டாவது நாவலான ‘ 7.83 ஹெர்ட்ஸ் ‘ எனும் அறிவியல் புனைவு நாவலை எங்களின் வாசகசாலையின் முதல் நிகழ்வுக்குத் தேர்வு செய்தோம்.

“பதினான்கு முத்தங்கள்” / பாலகுமார் விஜயராமன்

தொலைக்காட்சித் தொடர்களின் வசனகர்த்தாவாக, பாசக்காரத் தேனிக்காரராக, வளர்ப்புப் பிராணிகளிடமும் தீராப்பிரியம் கொண்டவராக, இயற்கையை நேசிப்பவராக, , களத்தில் செயலாற்றுபவராக, திரைப்பட ஆர்வலராக, பொறுப்புள்ள குடும்பஸ்தராக அறியப்படும் நண்பர், எழுத்தாளர் நந்தன் ஸ்ரீதரனின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான “நந்தலாலா” வாசித்தேன். நேரடிப் பழக்கம் ஏற்படுவதற்கு முன்பாகவே, முகநூலின் மூலமாக நந்தன் ஸ்ரீதரன் குறித்து ஒரு சித்திரம் எழுந்திருந்தது. அதில் இரண்டு விஷயங்கள் முதன்மையாகத் தோன்றின.

ஒன்று வளர்ப்பு நாய்கள் மீது அவரும் அவர் மனைவியும் வைத்திருக்கும் பாசம். அதன் தொடர்ச்சியாகவோ அல்லது அதன் மூலம் தூண்டப்பட்டோ, ஒரு சிறுமியையும் ஒரு நாயையும் மையமாக வைத்து அவர் எடுக்க நினைத்திருக்கும் திரைப்படம். இரண்டாவது, ஒரு பயணத்தின் போது, அது நாள் வரை எழுதி வைத்திருந்த அத்தனை எழுத்துக்களையும், லேப்டாப்போடு பறிகொடுத்ததும், வேறு பிரதிகள் இல்லாததால் அனைத்தையும் இனி முதலில் இருந்து துவங்க வேண்டும் என்றும் அவர் எழுதியிருந்த ஒரு பதிவு. நந்தன் ஸ்ரீதரன் என்பவரின் சித்திரம் இந்த இரண்டு நிகழ்வுகளின் கலவையாகத் தான் என் மனதில் பதிந்திருந்தது. இத்தொகுப்பை படித்த மாத்திரத்தில் அந்த சித்திரம் இன்னும் துலக்கமாகத் தெரிகிறது.

கறாரான அப்பாவுக்கும், பாசம் கொடுத்து நண்பர்களைப் போல வளர்க்கும் மகன்களுக்கும் இடையே அவதியுறும் நடுத்தர வர்த்தகவன், சிறுவயது முதல் இளைஞனானது வரை, சதா பசி கொண்ட வயிறோடு அவதியுறும் தொலைக்காட்சித் தொடர் வசனகர்த்தா, அப்பழுக்கற்ற பாசம் வைத்த உறவுகளை அழவைத்து, அவர்களைப் பாடாய்படுத்தி சாவின் முனை வரை தள்ளிவிட்டுவிட்டு,

அதனைத் தன்னிரக்கமாய் கதை சொல்லி குடிக்கு காசு பறிக்க நினைப்பவனை துரத்தும் சக குடிகாரன், தற்கொலையைப் பயமுறுத்தும் ஆயுதமாய் மாற்றி தன் காரியங்களை சாதிக்கும் சொந்தக்காரனின் இருப்பை தவிர்க்கவும் முடியாமல் அதனை அவனிடம் நேரில் சொல்ல தைரியமும் இல்லாமல் தவிக்கும் உதவி இயக்குநன், ஊரின் தேவதையான தேவமலர் அக்காவின் பிரியத்துக்குரிய வளர் இளம் பருவத்து சிறுவன், முன்னாள் காதலியின் கணவர், சினிமா தயாரிப்பாளராய் முன் நிற்க, அவரிடம் கதை சொல்ல வரும் புதிய இயக்குநன், ஊரறிந்த விலைமகள் பொத்திப் பொத்தி வளர்க்கும் மனவளர்ச்சி குன்றிய மகளை யாருக்கு தெரியாமல் தூக்கிச் செல்லும் ஊதாரிகள், மனவளம் குன்றிய மகளுக்கு ஆதுரமாய் இருக்கும் தந்தை, ஒரு விலைமகளுக்குப் பிறந்து, சிறுவயதில் பாலியல் சுரண்டல்களுக்கு ஆளான, ஒரு சிறு கொம்பு கிடைத்ததும் அதைப் பற்றி மேலேறிப் படரத்துடிக்கும் எளிய இளைஞன்… இப்படி நந்தன் ஸ்ரீதரின் கதை மாந்தர்கள் வழமையான இயல்புகளில் இருந்து விலகியவர்களாய், பசியோடும் ஆற்றாமையோடும் அலைகிறவர்களாய், அன்றாடம் வாழ்க்கைப் பாட்டை பூர்த்தி செய்ய முடியாதவர்களாய். காதலையும் அன்பையும் தொலைத்தவர்களாய, சுருக்கமாக உலகின் வழக்கில் சொன்னால் தோற்றுப்போனவர்களாய் இருக்கிறார்கள்.

ஆனால் இவர்கள் அனைவரிடமும் ஒரு அறம் இருக்கிறது. லௌகீகங்களுக்கு மயங்காமல், தான் தோற்றாலும் தான் கொண்ட அறம் வென்ற பெருமிதத்தோடு தோல்வியை மனதார ஏற்றுக் கொள்ளும் மனப்பக்குவம் கொண்டவர்கள்.

இந்த அறம், தனக்கு சம்பளம் கொடுக்காத இயக்குநரைப் பழி வாங்க வாய்ப்பு கிடைத்தும், “என் புலி பசித்தாலும் மனிதர்களைத் தின்னாது” என்று சொல்லி வேலையை உதறிவிட்டுச் செல்ல வைக்கிறது. கால ஓட்டத்தில் தொலைந்து போன தேவதையை, அம்மா என்று அழைக்க வைக்கிறது. இழந்த காதலி மூலம் கிடைக்கும் பெரிய வாய்ப்பை புறந்தள்ளி விட்டு வெளியேற் வைக்கிறது.

தொகுப்பை வாசித்து முடித்த பிறகு, இதில் உள்ள ஒன்பது கதைகளிலும் வரும் ஆண்கள் ஒருவனே என்று எண்ணமும் தோன்றுகிறது. அவ்வகையில் ஒரு நாவலின் ஒன்பது அத்தியாயங்களாகவும் இத்தொகுப்பை வாசிக்கலாம். ஆனால் இந்தப் பெரும்பான்மையையும் தாண்டி மனதில் நிற்பது, இத்தொகுப்பில் நந்தன் ஸ்ரீதரன் காட்சிப்படுத்தி இருக்கும் பெண்களின் வார்ப்பு. இவர்களைப் பற்றிய சித்தரிப்பு அதிகமாக இல்லாவிட்டாலும், இவர்களே அதிகம் மனதில் பதிந்திருக்கிறார்கள்.

புத்தி கூர்மை மட்டுப்பட்ட ஒரு இளம் பெண்ணின் அக உலகைப் பேசும் அற்புதமான கதை “ நந்தலாலா”. அன்றன்றைக்குத் தனக்குக் கொடுக்கப்பட்ட சொல்லை, நினைவில் கொள்ள பிரயத்தனப்பட்டு எப்பொழுதும் அதில் தோல்வியுறும் பேதையின் வாழ்க்கையை, ஒரு வார்த்தை கூடக் குறைய இல்லாமல் வெகு இயல்பாகச் சொல்லி இருக்கிறார். அவள், தன்னிடமுள்ள மந்திரக்கோல் மூலம் தனக்கான உலகை படைத்துக் கொள்கிறாள். விலங்குகளுடனும் பறவைகளுடனும் எந்த முரணும் இல்லாமல் பழகக் கூடியவளுக்கு மனிதர்கள் மட்டும் தான் ஏறுக்கு மாறாக நடந்து கொள்பவர்களாகத் தோன்றுகிறார்கள். அது குறித்து அவளுக்குக் குழப்பங்கள் இருந்தாலும், பெரிதாய் புகார்கள் எதுவுமில்லை. ஏனெனில் அவளை உணர்ந்து பழக நாயும், காக்கையும், மற்ற விலங்குகளும் பறவைகளும், பிரத்யேக மந்திரக்கோலும் இருக்கின்றன.

இன்னொருவர் “பதினான்கு முத்தங்கள்” கதையில் வரும் சரசக்கா. தான் கட்டிய சேலையை அவழ்த்து மறைப்பாக்கி, ஊருக்கு நடுவே அத்தனை ஜனத்திரள் மத்தியில் கைவிடப்பட்ட பிச்சிக்கு பிரசவம் பார்ப்பவர். மொழுமொழுவென திரவமும், ரத்தமும் சொட்ட, வீறிட்டழும் பச்சிளம் குழந்தையை அவர் ஏந்தியிருக்கும் காட்சி கண்முன் விரிகிறது.

வாசகன் கதைக்குள் நுழைய தடையாய் இருக்கும் எந்தவித ஆடம்பரமும் இன்றி நேரடியாக கதைக்களத்தை காட்சிப்படுத்தும் பாணி, நந்தனுடையது. வாசிப்பதற்கு மிக எளிமையாகவும் அதே நேரம் கதை சொல்லியாய் வாசிப்பவனை உருவகித்துக் கொள்ளவும் மிக உதவியாய் இருக்கின்றன அவரது எழுத்துக்கள். தொகுப்பு முழுவதும் எளிய நடையில் இருந்தாலும், ஆங்காங்கே விழும் தெறிப்பு வரிகள், யதார்த்தத்தோடு கொஞ்சம் புனைவுத் தன்மையையும் சேர்க்கின்றன. ”எனது அறையில் ஓர் உடும்பு இருக்கிறது”, “தேவமலர் அக்காவும் பெர்ட்ரண்ட் ரசல் அண்ணனும்”, “பதினான்கு முத்தங்கள்” ஆகிய கதைகளில் புனைவும் யதார்த்தமும் இரண்டறக் கலந்து இனிய வாசிப்பு அனுபவத்தைத் தந்தது. எளிய வார்த்தைகளில் உண்மைக்கு மிக அருகாமையில் உள்ள படைப்பை வழங்கியிருக்கும் நந்தன் ஸ்ரீதரனுக்கும், தொகுப்பைப் பதிப்பித்த “யாவரும் பதிப்பகத்திற்கும்” வாழ்த்துகள்.

•••

நந்தலாலா – சிறுகதைகள்

நந்தன் ஸ்ரீதரன்

யாவரும் பதிப்பகம் வெளியீடு

பக்கங்கள்: 124

விலை: ரூ 120

தைப்பின் விசைகூடும் மாலதி மைத்ரி கவிதைகள் / பாரதி நிவேதன்

1.கருவிழைந்த மொழியுரு

“………………………………………………..

செந்தமிழர்கள் இன்னும்

தொப்புளுக்குகோயில் கட்டிக்

குடமுழுக்கு எடுக்காதது

அதிசயத்திலும் அதிசயமானதென்று

சீன யாத்ரீகன் குறிப்பிடுகிறான்” (எனது மதுக்குடுவை,ப.31)

கவிதைகளை உணர்வதும் அவற்றைப் பற்றி உரையாடுவதும் விமர்சிப்பதும் கவிதையின் தளத்தை நெருங்கிவிட்டதாக அறுதியிட முடியாது. கவிதைக்கென்று விசேட மனநிலையைக் குறித்துச் சிந்திப்பதை விட அதன் அனுபவப்புலம் – சூழலமைவு எழுதியதுடன் கடந்ததாகிறது. மீண்டுமதை அணுக அம்மனநிலை வசியமே கூடுமென்பதையும் உறுதிப்படுத்த முடியாது. நேரடிக் கவிதைகளிலும் அதன் அழுத்தம் இதற்கு ஒத்திசைவு கொண்டதுதான். வாசிப்பு, வெட்டி, ஒட்டி தன்பாங்கில் அலைவுறுகிற போது கவிதை மேலும் திசுவளர்ச்சி அடைவதை கவிதை எழுதியவர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பதைத் தவிர வேறு வழியில்லை. இந்த லயத்தை முன்னுணர்வது கவிதையின் சாகசத்தைக் கூடுதலாக்குகிறது. மாலதி மைத்ரியும் நேரடியாகச் சுட்டியழுத்துகின்ற பொருளினையும், சுட்ட நழுவியலையும் பொருளினையும், சுட்டுதலுக்கு மறுபக்கம் பாய்கிற பொருளினையும் ஒப்புக்கொடுத்துவிட்டு நகர்கிறார்.

வாசிப்பின் தளத்தைப் பாதிப்புறச் செய்வதில் மொழியின் உருகல் முக்கியமான அரூபக்கண்ணி. பொருள், திசையினைப் பரவ ஏகுவதும் அதன் முனைதொட கூர்மையாவதும் ஏற்கெனவே நிகழ்ந்ததை உடைத்துச் செல்வதும் மொழிவளப்பம் இறுகாமல் வேரொன்றாகிச் செல்வதும் அதனோடு இணைந்தவை. மாலதி மைத்ரி கவிதைகளில் இதுவும் இடுபொருளாகிவிடுகிறது.

மிகவும் நேரடியான, சாந்தமடையாத கோபத்தின் வேர்களை மொழியில் பூட்டிவிடுகிற கவிதைகள் கூட பூடகத்தின் சுவாரஸ்யத்தை மென்று பார்த்துச் செல்கின்றன. மீண்டும் மீண்டும் மாலதி மைத்ரி கவிதைகளை வாசிக்கிற போது – அல்லது வாசித்து முடித்துவிட்டு மீண்டும் அக்கவிதைகளில் கரைகிறபோது அவரது கவிதைகளின் தோற்றுமைப் புள்ளிகள் மிகமிக அசலான எதார்த்தத்தை மிக லாவகமாகத் தோலுரித்துப் பார்த்துவிடுவதுதான் முதன்மையாகிறது. தோலுரித்துப் பார்ப்பது எப்படி பூடகமாகிறது என்றால் அது மனமொழியின் தனிப்பெருங்கருணை. இங்கு தன்னுணர்வும் சமூகவுணர்வுமான உணர்ச்சிமிக்க கவிதைகளில் நுழையலாம்; விளையாடலாம்; வெளியேறலாம். நிகழும் அரசியல் அதன்பாற்பட்டது. மாலதி மைத்ரி கவிதைகளில் உணர்வின் மொழி இத்தகைய அரசியல் மட்டுமல்ல பேசவேண்டிய பொருளை பேசாமலாகிவிட்ட மௌனதர்க்கத்தின் கதவுகளில் மோதியதிரக்கூடியவை. பார்க்காமல் தேராமல் கண்டுகொள்ளாமல் விவாதத்திற்கு தயங்குகின்ற கவைக்கு உதவாது என்று மறுதலித்தவைகளை, இதனைத் தாண்டி எப்படிச் செல்கிறீர்கள் எப்படி முடிகிறது என்ற கண்காணிப்பை வைத்துவிடுகிற கவிதைகள்.

வாசிப்பின் உணர்வுத்தளம் கூடவோ, மொழிபரப்பின் விகாசம் நெருங்க முடிவதோ இல்லையோ – ஒடுக்கப்படும் உடல்களை – யதார்த்த வாழ்வியலென்று மூழ்கடிக்கப்படும் முகங்களைக் கொண்ட இக்கவிதைகள் சூழலின் பேறு என்று வரவேற்கக்கூடியவை. இவை, கருப்பொருள் தேர்வு என்பதற்கப்பால் தைந்த என்பதுடன் பிணைப்புறுபவை. சொல், கருவை விளையாடுவதைவிட கருவின் விசை மொழியை இசையாக்குவது என்றும் சொல்லலாம். தோய்ப்புற மணலாகிக் கரையும் மொழியும் பிடியாகி வலுவுறும் கருவும் உணர்வால் விளைந்திருப்பவைகள். கவிதைகளை ஊடாடி நிற்கின்றபொழுது மொழி மீதான பற்றுதல் தாண்டி தேநீர்க்குவளையில் மீந்து நிற்கும் எச்சத்தைப்போல் மீந்து நம்மை நம்மைப் பார்த்துக்கொண்டிருப்பது உணர்வுகள்தாம். கவிதை என்ற பிரமிப்பை நடிப்பை அழித்துவிட்டு உறைந்தபடி உந்தும் வல்வினை கொண்ட உணர்வுகள். அவை இறைஞ்சுகிறது. நடிப்புக்காகிவிட்ட மனிதாயத்திடம் நடிப்பாகி பழுத்துவிட்ட எதார்த்தத்திடம் இறைஞ்சுவதாகவும் ஆகலாம்.

அதன் தேடல் நடிப்பற்ற பாசாங்கற்ற மிகத் தொன்மையான மிகத் துல்லியமான பேரன்பின் ஒரு திவலை. எல்லாவகையான அதிகாரத்தின் பின்பும் தஞ்சமாகிவிட்ட மனித எச்சத்தின் மீது அதுவே உமிழும் சாத்தியமிருக்கிறது என்ற எச்சரிக்கையான இறைஞ்சுதல். இப்படி, ஆன்மாவினை அலசிக்கொள்ள – உலகத்தையோ கண்களையோ துடைத்துப்பார்க்க மொழிவழிச் சோதனைகளின் உபரிகளை நிரப்பிக்கொள்ளவென கவிதைக்குணம் கிளைகளைப் பல்குகையில் உன்மத்தத்தின் மேலாடை அவசியத்தையும் கழற்றச் செய்வது இவரது கவிதைகள்.

வெற்றுணவு – வெற்றுறவு – வெற்றரசியல் – என்பனவற்றுள் வெற்றுக்கலை – கவிதை. எல்லாவற்றுக்கும் பின்னால் ஓர் அரசியல் என்பதையும் மூலதனமாக்கி மாதிரிகளை மந்தைகளை உருவாக்கிவிட்ட பின்காலனிய உலகத்தில் இவற்றின் மீதெல்லாம் வெற்றற்ற ஒன்றை பற்றுடையதாக்கி பாவிச்செல்ல பேரன்போ உன்னதமோ உள்ளைக்காட்டி வெளியின் போக்கை பாரிக்கச் செல்ல சிலபல தேவை என்றால் அதனுள் மாலதிமைத்ரி கவிதைகளும் அடங்கும்.

2.புனைவுச் சாத்தியம்

“நெடுஞ்சாலை நடனம்

இரவின் கண்ணீரென வழிந்தோடும்

நெடுஞ்சாலை ஆளரவமற்ற திசையில் கிடக்க

கனவின்

ரூபமாய்த் திரண்டவள் அசையத் துவங்குகிறாள்

தனது சிவப்பு முந்தானையை

காலடியில் புரளவிட்டுச் சுழல்கிறாள்

கலவையான ஆட்ட அசைவுகளின் பாவங்கள்

வழியற்றுக் குவிந்த வாகனவாசிகளை

மிரளவைக்கின்றன

ஊரற்ற சாலையில் யாரிவள் இவளை அகற்றுவது இயலுமாவென

ஒருவக்கொருவர் புலம்பித் தீர்க்க

அவளின் சுழற்சியிலிருந்தே பெருகும் காற்று

அவளையொரு சருகென அடித்துச் செல்ல

சாலை வெறுமையில் தொங்குகிறது” (நீரின்.அமை.உல.2005.ப.30)

புனைவின் தந்திரம் மெய்மையை அல்லது இருப்பை, வேண்டுமானால் வாசிப்பின் யதார்த்த மனவுடலை சற்றுநேரம் அழித்துவிட்டு மீண்டும் பொருத்தி அதனாலாகும் வேதிமைகளைச் சுவைக்கத் தந்துவிடுவதும்தான். பாலபாடமாக நிகழோடு அது கொள்ளும் உறவினை உராய்த்துக் கொள்வதும்தான்.

கவிதையைப் பொருத்தமட்டில் சொற்களில் உவமை தலையாயதாகக் கருதப்பட்டு அதன்பின் உவமஉருபுகள் வலுவிழந்து உருவகமாக்கப்பட்டு குறியீடு படிமமென இறுகிப் பின்னர் புனைவையே மேலெடுத்து அதாவது உவமையையே மேலெடுத்துச் செல்லும் இடத்தையும் கடந்துவிட்டோம். புனைவைத் தேற்றிச் செல்வதற்குக் குறைந்த வடிவத்தினால் மிக அதிகப் பலனைத் தருவதில் கவிதை ஈடுகொடுக்கும் வலிமைப் பெற்றிருக்கிறது. இவையெல்லாம் ஓர்மையின் பகுதியாகி மேலேறிச் செல்ல வாசிப்பும் எழுத்தும் பிரயத்தனம் கூட்டும். வாசிப்பில் கவிதை என்ற சொற்களின் மன ஆயாசப் புடைப்பு உருவம் உள்ளடக்கமாக மெய்சிலிர்த்து விடைக்காமல் கரைந்து உள்ளுக்குள் சுவையேற்றி எழுந்து நிற்பது அசைபோட வைப்பது பகட்டுத்தனமற்றது எனக் கணக்கிடலாம். மாலதிமைத்ரி கவிதைகளில் அண்ட சராசரம் இழைய ஊஞ்சலாடுவது – வலையில் நிலவை அள்ளுவது போன்றவை விடுதலையையும் குழந்தைமையையும் இயற்கையின் துலங்கலையும் எதார்த்தத்தில் உராய்ப்பவை. இன்னும் பொருளடர்த்திகள் நீடிப்பவை. புனைவின் தளங்களுக்குப் பஞ்சமற்றிருப்பவை. அதனைக் கொண்டே எதார்த்தத்தைச் சம்மட்டியற்றுச் சொற்களால் அடிப்பவை. இப்புனைவுகள் மிகரசமாக அடவுபிடித்து எழுவதை பின்வருமாறும் சொல்லலாம்.

கலைவுகளை ஒழுங்குணர்த்துவதின் சூட்சுமம் கவிதையில் கூடுதல் பலம். கவிதைக்கான மிக எளிய விதியும் ஆகச்சிறந்த அதுவாகலாம். சங்கராபரணி முதல் தொகுப்பின் முதல் கவிதையிலிருந்து துவங்குகிறது எளிய விதி. “மனம் அறியும் மழை! உணரும் மனம் மழை”(2013,ப.11). புனைவிங்கு சொல்லாகவா பொருளாகவா என்ற அடவு அல்லது இந்நுண் மென்விதி ‘சுழல்’ (சங்க,ப.13) கவிதையில் மழைக்கு ‘அறை மிதந்து’ செல்வதில் பெரிய புனைவாகிறது. பிறகு “ஓவியத்தின் காதறுந்த நாய்க்குட்டி/ என் மடிமீது ஏறிச் சோகமாய் அமர்ந்து கொண்டது” (சங்க,ப.62), “இரவில் எனது அறை/ சாரலில் நனைந்து/ உதடுகள்/ உப்புக்கரிப்பதெப்படி” என்றுமாகியும் தொடர்கிறது.

இவை மென்விதி மீவிசைகொள்ளும் காட்சிக்கு அழகு சேர்க்கின்றன. இவை வலிய இழுத்துப்போட்ட சொற்களின் புலமையை நிரூபிக்காமல் உணர்வில் உருகிய சொற்களின் வடிவமாகக் கரைகின்றன. கவிதை பொருளமைதியோடு – உத்தியோடு – மொழியின் தீவிரத்தோடு அடங்குவதில்லை. கருப்பொருளின் பன்மையோடு – காலத்தை வரைவாக்குவதோடு மனிதாயத்தை எழுப்புவதோடு கவிதையாக இறுகுவதில்லை. பிசகிப்போன உணர்வின் கதி மற்றும் பிசகவைக்கும் உணர்வின் கதியோடு அது தாளகதி அடைவதில் இருக்கிறது. அங்கு சொற்களும் கரைந்துவிடலாம்.

ஆற்றுப்பரப்பின் வகிடும் நீரின் வரத்தும் நீர்ச்சுழிகளை உண்டாக்கிச் சுழித்து அழித்துச் செல்கிறது. எளிமையா இறுக்கமா மனமா புறமா மொழியா கருவா என்பதைக் கவிதை சுழித்துச் சென்று விடுகிறது. போக்கின் வேகத்தில் திளைத்தபடி மீளுதலும் மடிகட்டிக்கொண்டு கரையேறுதலும் அசைபோடுதலில் தழும்பாகிவிடுதலும் கவிதையாக இருப்பதென்பது கொடுப்பினைதான்.

வெற்றரசியலற்ற வாசிப்பின் வாகும் கொடுப்பினைதான் என்பதற்கு இப்புனைவுகளின் சாரம் உரம். இப்படி, கடலும் வீடும் உப்பும் காதறுந்த நாய்க்குட்டி பொம்மையும் ஓவிய அறையில் வைக்கப்பட்ட உண்மைப்பந்துகளுமாக மீமெய்யியல் பொருண்மைகளுக்கான மிக எளிய கச்சாப் பொருளும் மிகச் சுலபமான வனைவுகளும் இறக்கிவைத்துவிடுகிற அதிர்வு ஆழங்கூடியவைகள். ‘சுவரில் தளும்பும் கடல்’ (நீலி,2016, ப.26) கவிதையில் கிளற்றப்படும் உணர்வு, அதிர்வை நிறுத்தமுடியாத ஒன்றாகிறது. மழை-நிலம்-உடல் தொன்ம வேர்களை கனவின் அதீதங்களாகத் தன்னைக் கணிக்கும் இடங்களில் படைப்பரசியல் வாசிப்பரசியலுக்கு விட்டுச் செல்வதில் கையறுநிலையைத் தவிர வேறொன்றும் மிஞ்சுவதில்லை. மொழி, வெறும் உடலல்ல நிலமல்ல மொழியல்ல கருவியல்ல என்பதற்குப் போதுமான உருவகங்களும் குறியீடுகளும் இக்கவிதையிலிருந்து பெயர்த்து அடுக்கலாம். அப்படி ‘காலமற்ற என் உடலுக்குள்’ (சங்க,ப.38) கவிதைக் கொண்டுச் செல்லும் வெளி நுட்பமானது. ‘நெடுஞ்சாலை நடனம்’ அரூபக்கொற்றவை. ஊரில்லாத இடத்திலும் அவளின் நடனம் கொற்றவையிலிருந்து வேறொன்றாகிறாள். இதனால் இப்புனைவின் சுழற்சி வட்டமாகி, சுழற்சியையும் நிறுத்தமுடிவதில்லை.

கவிதையில் புனைவுகள் காப்பிய (நாவல்-சிறுகதை) வரைகோடாக மீந்துகிறது. இது புனைவெல்லையின் சாத்தியத்தை குறுகத் தரிக்கிறது. காப்பியங்களில் கதை வளர்ச்சிப் படலங்களாக, காதைகளாக, சருக்கங்களாக விரிகின்றன. இத்தகைய மாதிரிகளை நவீன கவிதைகளில் காண்கிறோம். அவை ஒரு தலைப்பின் கீழ் அல்லது தலைப்பற்று எண்ணிடப்பட்டு தொகையாக ஒரு தொடர்ச்சியின் முழுமையாகக் காண்கிறோம். மேலும் தற்போது கவிதைத் தொகுப்பிலேயே தனித்தனி இயல்களைக் கணமுடிகின்றது. இதனையும் தாண்டி கவிதையிலேயே சிறுகதை நாவலுக்கான வித்தினைக் காணமுடியும்.

ஒரு சொல்லின் – வாக்கியத்தின் பொருள் மண்டல விரிவில் அதன் துல்லியத்தைக் கைப்பற்றிவிடுவது இயலுவதுதானா என்பதும் கேள்விக்குறி. மாலதி மைத்ரி கவிதைகளில் தாய்-மகள், ஈழம், இனம், காதல், சூழல் பொருளமைவுகள் நாவலுக்கான களங்களைக் கொண்டிருப்பவை. ஆணின் சபலம்-காதல்-அதிகாரம் இவையாவுமே சிறுகதையாகிடும் களத்தைக் கொண்டவை. கவிதைக்கான சலனத்தில் குறையில்லாத அவை, கதைக்களம் கூடிய சுவையை மேலும் ஊட்டக்கூடியது என்பது வாசிப்பில் அமையும் எதிர்பார்ப்பன்றி வேறல்ல. இங்கு, ‘குழந்தையின் கண்ணீர்’ (சங்க, பக்.69-69) கவிதையில், கடல்-பாலைவனம் இதற்கிடையில் கப்பல், அம்மா-மகள் இதற்கிடையில் கப்பல், அம்மா-மகள்-வீடு இதற்கிடையில் கடல் என்று ஒவ்வொரு பத்தியிலும் கப்பல் சவ்வூடும் வேறொன்றாகிறது. இக்கப்பல் காலனியத்தின் குறியீடாக, கடல் மீனவர்களாக, தமிழ் -சிங்கள இன முரண் பகையாக, கடல் பிரிவின் குறியீடாக, பிரிதலின் வடுவாக முன்பின்னான கவிதைகளிலும் ஒட்டிக்கொள்வதுடன், மாலதி மைத்ரியின் ‘நீர்’ மீதான அழுத்தம் அல்லது அதைப்பற்றியதான மீட்டல் சங்கராபரணியில் மட்டுமல்லாது மழை, கடல் தன்னைக் கரைத்தல் வீடு மிதத்தலென பீடிகைத் தொடர்வதுடன் ‘நீரின்றி அமையாது உலகு’ வரை -இன்னும் தொகுப்புகள் தாண்டி காப்பியச் சுவையின் ஓரிழையை நெய்தபடிச் செல்கிறது.

பஞ்சபூதம் உடலை எழுதவைப்பதின் மொழியாக இவ்வெழுத்தின் மனம். நொய்மை வடியாத, சபலப்படுத்தாத, ஓலமிடாத புனைவுகளின் வழி எழுதப்படும் பெண்ணுடலின் காயங்கள் கோபங்கள் வலிகள் தங்கள் கைகளை ஆயுதமாக்கும் நியாயமான அரசியலை காதலைப் புரிதலை வேண்டி நிற்கும் மனிதாயமாகின்றன. அதே சமயம் மாற்றம் அதன் சோரம் இயற்கையாகவும் மனிதப்பண்புகளாகவும் பதிவு செய்யத் தவறவில்லை. ‘மரபு’ என்பதைக் காயடிக்கவும் பழுக்க வைக்கவும் பெண் எழுத்தின் பார்வை இங்கு கட்டவிழ்ப்புகளாக மீட்டுருவாக்கமாக நிற்பது கவிதைத் திரட்சியோடு முடிவதில்லை. எதிர்காலத்தின் முன் தன்னை சமர்பிக்கவும் விடுதலையை எழுதுதலுமாகிறது.

‘தலைவி பிரிவு’ (எனது, ப.44), ‘கல்லறை வீடு’ (ப.32), ‘பூமி தன்னைத்தானே ஒரு முறை சுற்றிக் கொள்கிறது’ (நீலி.ப.32) , ‘ஆயிரத்து இரு இரவுகள்’ (எனது.ப.50) கவிதைகள் நாவலின் களங்கள். இவை எப்படி வளையங்களாக கவிதையில் பொருந்தியிருக்கின்றது என்பது தொடர்ச்சியை மீண்டும் அசைபோடுதலில் கிடைக்கும் ரகசியம். இதனோடு ஒட்டிக்கொண்டிருக்கும் ‘பெரும் படையல்’ (எனது,ப.52) யதார்த்தம் எப்படி ;மாயம்’ என்பதில் சிக்கிக் கொள்வதைக் காட்டும் விந்தை. நாவலின் இறுதிப்பகுதியை ‘நாடோடிக் கூற்று’ கவிதையில் நிறைவடையலாம்.

3.பெண்ணுடல்- நிலம் மொழி

“சிறு சுடரான யோனி

கொழுத்த களி நண்டுகள்

அலையும் அலையாத்திக்காட்டில்

செம்பவளச் சில்லென

ஒளிர்ந்து கொண்டிருக்கிறதென் யோனி

காமத்தின் பேரலையை

ஆத்திக்கொண்டிருக்கும் விழுதுகளின்

மேலே கூடமைக்கின்றன

தூரதேசப் பறவைகள்

நட்சத்திரங்களின் புதைந்துபோன

சதுப்பு நிலத்தின்

கூதிர்கால இரவொன்றில்

இளம் குஞ்சுகளுக்கு ஒளியேற்ற

கொத்திக்கொண்டு பறக்கிறது

கருங்கால் நாரை

அதன் அலகில்

சிறுசுடரென எரிகிறதென் யோனி

கரும்திரையென நிற்கும் வானில்

சிலாக்கோல்கள் போன்ற

சுரபுன்னைக்காய்கள் நீரைக்கிழித்து

சேற்றில் விழும் சத்தம்

மிகமிகச் சன்னமாகக் கேட்கிறது

அப்போது” (எனது,ப.63)

தாய்வழிச் சமூகம் தலைகீழாகப் புரட்டிப்போட ஆண்களால் உருவாக்கப்பட்ட கற்பிப்புகளின் வகைதொகை என்ன என்பதை நிமிண்டவும் ஆண் அதிகாரம் நிலைபெற்று உலைத் துருத்தியாகிவிட்டதான இன்றைய நிலையில் இன்னும் எதன் படிவாகப் பொறாமை வஞ்சம் பகை என்பதற்குச் சிலபல துலங்கல்கள் பெண்கள் கவிதையில் குறிப்பாக மாலதிமைத்ரியிடம் உருக்கொண்டிருகின்றன.

இப்படி உடல், மனக்கூறுகளின் பிரிவும் இழையும் அதனதன் உலகங்களில் வாசிப்பை ஆட்கொள்கின்றன. பிரிவு, தனிமை, மோகம், ஏக்கம், விடாய், சினம், கலவி, கிறக்கம் என்பனவெல்லாம் வேதிமைத் திரிக்கின்றன. காலம், கனவு, நிகழ் அதன் உபரிகள் வண்ணமாற்றங்களை, மொட்டவிழும் கணங்களை, தீண்டப்படாத இருப்புகளை, தீண்டலின் தீவிரங்களை ஒரு போதும் மட்டுப்படுத்தாமல் அலைபாய்க்கின்றன. வாழ்தல் உய்க்கவே உடல் மனம் கண்டடையும் விதிகள். அதன் பொருண்மைகள் அளக்கப்படுவதற்கு மாறாக அறியப்பட வேண்டியவை. அதனால் இக்கவிதைகள் பல்வேறு உலகங்களில் திளைக்கவிடுகிறது. வயிறுக்கும் உறுப்புக்குமான வாழ்வை கணக்கிட்டு முடிச்சிட்டு முறுக்கி அமிழ்த்தும் முதலாளியத்தின் முன் சுயத்தை எழுதிப்பார்த்தல் அதன் தீராக் கணக்கில் முக்குளித்தல் இயலும் என வரைவதுமாகிறது. அதன் ஒரு படி ‘தரையெல்லாம் தாமரை மொட்டவிழும்’ (சங்க, ப.57) உடலைக் கொண்டாடுதலின் விளைச்சல் திறப்பு.

4.நிகழ்

“……………………….

உடலே பெரும் பிச்சைப் பாத்திரமாக

வாய்பிளந்து நிற்கிறோம்

எல்லாக் காலங்களுக்குள்ளும்

எல்லாத் தர்மங்களும்

நமது பாத்திரத்தில்

இடப்படுகின்றன

அவை ஒரு பழகிய

விலங்கெனப் படுத்திருக்கிறது” (நீரின்,ப.38)

பெண்மையைப் புளங்காகிதப்படுத்துவதின் மூலம் ஆண்மையின் இயலாமை திரைப்படுத்தப்படும் மரபினை உடைக்கும் பெண்கள் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாகி மாலதி மைத்ரி கவிதையில் கட்டவிழ்ந்து உலவுகிறார்கள். தங்களின் தொன்மத் தாதினை மீட்டுருவாக்கம் செய்கிறார்கள். அதற்காக அவர்கள் தங்களை அடகுவைக்கிறார்கள். கட்டளைக்கு அடங்காத குதிரையாகத் திமிறுகிறார்கள். திமிறுதலுக்கான வெகுமதியைத் துடைத்தபடி கடக்கிறார்கள். இயல்பான பெண்ணின் நடைமுறை பதுமைக்குச் சுட்டப்பட்டதல்ல என்னும் வகையில் கொடுவாளை அவர்கள் நெடுவழிக்கு வைத்திருக்கிறார்கள். கள்வெறியில் உன்மத்தம் களிக்கிறார்கள். ஆறு, குளம் அவர்களைப் புரிந்து கொண்ட தன்னியற்கையின் கடத்துதலில் அரவணைத்துக்கொள்கிறது. விளையாட்டுகள் எல்லாமே பிரபஞ்ச அழகியலை அவர்களோடு இழைத்துவிடுகிறது. இயற்கை அவர்கள் கண்ணுக்கு மிகத்துல்லியமாக இருப்பதால் பிணைந்து கொள்கிறது. இந்தப் பிம்பத்தைப் புரிந்து கொள்ளாதவர்கள் சோரம்போகிறார்கள். சற்றுப் பிதுங்கி ஆணுலகு வந்துவிட்டவர்கள் ஸ்தம்பித்து தங்களையே மூழ்கடித்துக் கொள்கிறார்கள். இயற்கையழிவை பெண்களால் ஒப்புக்கொள்ள முடிவதில்லை, போராடுகிறார்கள். மரணத்தால் தங்களை மிச்ச இயற்கையுடன் ஒப்படைத்துக்கொள்கிறார்கள். பெண்களின் உடலியல் விதி மகாபிரபஞ்சம். இதற்குள் ஆண்களை எவ்வகையில் புரிந்துகொள்ள என்பதற்கு அங்கு பதிலில்லை…

தாய்க்கு ஏங்கித் தாயாகி தாய்மை மிளிர்த்தும் கவிதைகள் மனதைவிட்டு அகலாதவை. தன்னோடு தனது தாயின் நிழல் முழுவதும் கவிந்து விடாத புள்ளியும் தனது குழந்தையைத் தாயன்பில் பாரிக்க வேண்டிய புள்ளியும் இருவேறு உலகுக்கிடையில் தாய்மை என்ற சரடை வைத்துப் பயணப்படுவதில் மழையும் பச்சையமும் செழிக்கின்றன. பச்சைய நெடியின் கண்ணீரில் உப்பும் கலந்திருக்கின்றது. உப்பு, தாயை நினைத்து உருகுகிற, தாயன்பில் மூழ்கிக் கரையேறிவிடாத தவிப்பிலிருந்து உருவாகிறது. எல்லாத் தொகுப்புகளும் தாய்மைக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டுள்ளன. இத்தாயன்பே விஞ்சுகிற காதலுக்கும் மதர்க்கின்ற காமத்திற்கும் நிலங்கொள்ளாது கிளைக்கின்றன. காதலைத் தள்ளிவைத்து கடக்கிற இருப்பும் காதலின் எல்லையற்ற முடிவின்மைக்கு இட்டுச்செல்கிறது.

அடக்குமுறைகளைத் தாங்கிக் கொள்ள முடியாத தகிப்புகள் கவிதைகளில் உலையாகிக் கொதிக்கிறது. அவலங்களை எதிர்கொள்ள முடியாதத் தவிப்புகள் கரைகின்றன. வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றவைகளின் பின்னாலான அரசியலைச் சோதிக்கின்றன. இவையெல்லாம் கவிதைகளில் நுழையும் பலன் வேறானது என்பதையும் சொல்லவேண்டும். நொய்மைகளைத் தரிக்காமல் யதார்த்தங்களை மனித வாழ்க்கையை மெருகூட்ட வேண்டும் என்பதை பயன் ஊழியாக வசமாக்கும் இம்மொழி தைப்பின் விசைகூடுதலை உணர்வுமொழியாக்குவதில் உவகை மேம்படுத்துகிறது.

•••

நாங்கள் பிழைவடிவங்கள் ( பாவோ ஹாவிக்கோ கவிதைகள் ) / ஃபின்னிஷ் கவிதைகள் – ஆங்கிலத்தில்: அன்செல்ம் ஹால்லோ – தமிழில்: சமயவேல்.

பாவோ ஹாவிக்கோ

நாங்கள் பிழைவடிவங்கள்:
கவிதைகள்

1
ஒருமலர்ப்பாடல்

ஃபிர்மரங்கள்ஆட்டத்தில்;
ஊசியிலைமரக் காய்கள் பெய்கின்றன கீழே
முடிவே யில்லாமல்;
ஓ நீ, மரம்வெட்டுபவனின் மகள்,
மலைகளைப் போன்ற செங்குத்து,
கரகரப்பாகவும் படோடோபமாகவும்
கேள்,
நீ ஒருபோதும் காதலித்திருக்கா விட்டால், நான்
ஒருபோதும் காதலிக்கவில்லை (உனது
கசப்பான வார்த்தைகள்
நாம் பிரிந்தபோது), ஓகேள்-
ஊசியிலைமரக் காய்கள், உன் மீது பெய்கின்றன
எக்கச்சக்கமாக, முடிவேயில்லாமல்,
இரக்கமே இல்லாமல்.

000

குழந்தைகள் என்னுடைய இந்த முகத்தைப் பெறுகிறார்கள்
நான் ஒரு புது வாழ்வைத் தொடங்கும் போது
மண், தாவரங்கள் போல,
கவிதைகளிடமிருந்து ஓய்வு பெறுதல்.
ஆனால் பிறகுஎங்கே போகும் என் சுவாசம் ?
மற்றும் நான் எவ்வாறு மகிழ்ச்சியோடு இருக்க முடியும்
பன்றிகள் குளம்புகள் முளைக்கிறதைப் பார்க்காமல்,
தோட்டத்தில் கீரை பழுத்தவாறு, பொன்னான…ஓ,
தாமதமாகி விட்டது,
என் தாத்தாவின் தலைவிதி,
ஒரு பயங்கரமான உதாரணம்,
மிக மந்தம் அவர், எல்லா நாற்பத்து-நான்கு
(மற்றும் அது
மிக மோசமான மந்தம்) அவர் ஓய்வுபெற்ற போது,
ஓ அது எடுத்துக் கொள்கிறது முழு மனிதனையும்
சும்மா காற்றின் ஓசையைக் கேட்பதற்காக
சூரிய உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை
மற்றும் நீண்ட இரவு முழுக்க,
ஓ அது உங்கள் பலம் முழுவதையும் எடுத்துக் கொள்கிறது
மெய்யாக ஓய்வில் இருக்க:
அங்கே நடைபாதை கிடையாது
கடவுள்களுக்கு.

000000

2
பிறந்த இடம்

இன்னும், மகிழ்ச்சியுடன் நாம் ஒரு வார்த்தை பேசியாக வேண்டும்,
சூரிய ஒளியைக் கைப்பற்ற ஒரு வீட்டைக் கட்டு,
பள்ளத்தாக்கின் மேல் இருக்கும் உன் ஜன்னல்களைத் திற;
ஆகையால் மரத்துக்குக் கீழே உட்கார் மற்றும் அது சொல்வதைக் கேள்,
நகைச்சுவைகளைப் பரிமாறு, அதனிடம் பேசு,

எல்லா வெறுப்பையும் விட்டுவிடு, ஃபிர் வளர்வதைப் பார், மற்றும் ரோஜா
அங்கே எவ்வாறு பூக்கிறது, வயலோரம்,

ஏரி உறைவதற்கு முன்பு நீ குதிரைக்காரனின் குளம்படியைக் கேட்கிறாய்
அவர்கள் காட்டுக்குச் செல்லும் வழியில், மலைகள் பொஹிமியாவை இருளடையச்
செய்வதற்கு முன்பு,
பொஹிமிய மலைகள், பொஹிமியக் காடுகள்,
பால்கன் காடுகளின் வெகு ஆழத்துக்குள்,
பால்கன் தூசிப்புயலின் வெகு ஆழத்துக்குள்
பைனும் வில்லோவும் மணலுக்கு மேலே எழும்பும் அங்கே. ஒருவெள்ளைப்
பறவை உட்கார்ந்திருக்கிறது தாழ் கிளையில்
தானுபி நதியின் அந்தக் கரையில், ஒரு பரிதாபகரமான அழுகை முழுமையடைகிறது.

000

ஆனால் என்ன, நல்ல நாட்கள் நம்மைத் தாக்கி ஊமைகளாக்கும் என்றால்,
எவ்வாறு நாம் பொறுத்துக் கொள்ளமுடியும் மௌனமாய் வீழ்ந்துவிடாமல்,
எவ்வாறு நாம் பொறுத்துக் கொள்ளமுடியும் மௌனமாய் வீழ்ந்துவிடாமல் கவிதைகள்
எதையும் அர்த்தப்படுத்தாமல் காண்பிக்கப்படும் போது,
இது, இக்காலத் தலைமுறையின் புகழ்ச்சிக்காக:
நாம் அதை எழுதினோம், அந்தக் கவிதை, பிறகு நாம் அமைதியாக வீழ்கிறோம், கேள்:
இது இப்பொழுது பறைகளின் காலம்.

இது பறைகளின் காலம்,
மற்றும் ஒரு சப்தத்தைப் பறையடிப்பது ஊமை இருட்டு அதை முந்திச் செல்லும்போது,
அடர்ந்த இருட்டு, அது ஒரு குரலைச் சுமக்கமுடியாது,
இருமுறை, இல்லை,
ஏழுமுறைகள் இங்கே குழுமியிருந்தது கரும்படைப் பிரிவு,
கருப்புக் கொடிகளின் கீழ்,
மற்றும் இது அது மாதிரி இல்லை, இங்கே அது குழுமியிருந்தது, ஆனால் இது
இப்பொழுது
மற்றும் இப்பொழுது மட்டுமே பறையொலி இதைக் கூறவிருக்கிறது:

இப்பொழுது தான் நேரம், மரணத்திற்கு முன்பு இப்பொழுது தான் நேரம்,
மரங்கள் மலர்களால் நிறைவதற்கு முன்பு,
மற்றும் இவ்வாறாக, இந்தத் தங்கப் பத்தாண்டுகள் தொடங்கிவிட்ட போதும்
ஒரு முடிவை நோக்கி ஈர்க்கப்படுகிறது,
அபூர்வ நட்பும் தீர்ந்து போகத் தொடங்குகிறது, தங்கம் மாற்றப்படுகிறது
இரும்புக்காக.

000

பைன்மரக் காடுகள், பெருங்கவனத்துடன் பயன்படுத்தப்படுகின்றன,
பால்கன் காடுகளிலிருந்து இந்த மரநிலங்கள் வரையிலும் வழிநெடுக,
இங்கு
கவனத்துடன், ஈரமானவைகள் அந்திக்கு முன்பே மூடப்படுகின்றன
அடுப்பு சூடாக இருப்பதற்காக
எவ்வளவு மாற்றவே முடியாதது இந்த உலகம், அச்சுறுத்துகிறது, அது இங்கே, எப்போதும்
இங்கு,
நாங்கள் மட்டுமே நகர்கிறோம்,
என்ன செய்வதென நான் என் மனதைத் தேற்றிக் கொள்ள, எதைத்
தொடங்குவது
வரப்போகாத கடிதத்திற்காகக் காத்துக் கொண்டு,

முனைகளில் தங்கம் பூசிய இறந்த மனிதனின் கடிதத்தைக் கொண்டு வாருங்கள்
காட்டு வழியாக
இது ஒரு பெருங்காடு, அதன் பெரும் பெருமை பால்கனிலிருந்து இந்தக் காட்டை
வந்தடைகிறது,
இது தலைமுறைகளின் பரம்பரைச் சொத்து, கவிஞர்களும் கூட ஓய்வெடுக்கிறார்கள்,
அங்கே,
ஓ, இறுதியாக நான் இதைக் கூறமுடியும், அவர்கள்அங்கே ஓய்வெடுக்கிறார்கள்,
கீழே தோண்டினால், பெரும் முயற்சியுடன் அழுத்தி நசுக்கப்பட்டு
புதைமேட்டுப் புல்லுக்கு அடியில்,
அது உண்மை: அவர்கள் ஓய்வெடுக்கிறார்கள்,
இந்த மாபெரும் காடு, நான்அவைகளிடம் பொறாமை கொள்கிறேன், காற்று என்னை
வளைக்கிறது முன்னோக்கி
மற்றும் எனது கைத்தடியைப் பறித்துக் கொண்டது முடிவற்ற புயலில்,
அவர்களது புதைகுழிக்குக் குறுக்கே காற்று வீசுகிறது,

ஆனால் விடியல், விடியல், அனைத்திலும் மிக முக்கியமானது: மெல்லிய
மின்னல் மரவுச்சிகளின் மேல்,
நாம், நாமாகவே உறைந்த ஏரியின் குறுக்கே நகர்கையில், போகிறோம்
எங்கே? ஒரு மலர்தலுக்காக.

000

கனமானது, ஈரவானம், ஆனால் இங்கே பூமி கனமானதில்லை,
லேசாக இருக்கிறது பூமி,
ஒளி இந்த மகனின் மேல் பொய் சொல்கிறது ஈர பூமியிடம்,
அவனது முடி மட்டும் ஃபிர் மரங்கள் கொண்ட ஒரு மொத்தக் காட்டின் மதிப்புடையது,
அவனது குரல் தரைக்கு வெளியே கேட்கிறது, ஒரு வேர் தருகிற
குரல்
பூமியிலிருந்து அது கிழிக்கப்படும் பொழுது.

கவிதை ஓ கவிதை, எனது ஒரே பிறந்த இடம், நான் பேசுகிறேன் அதை,
அது என் காதலுக்குரியது, பாடலுக்குள்ளே மலர்ந்து கொண்டிருக்கிறது,
ஆனால் நானும் கூட எனக்காக ஏங்குகிறேன், நான் இருக்கும் அந்த இடத்திற்காக, ஒரு
வெட்டவெளி,
ஒரு மலர்களின் வயலில் ஓர்ஆத்மா,

ஓ மாறுதலின் ஒரு முடிவுக்காக நான் ஏங்குகிறேன், நான் இருக்குமிடத்தில் நிற்பதற்காக,
ஆத்மா ஒரு வெட்டவெளி,
மிக அதிக உழவாலும் அறுவடையாலும் ஒருவயல் மலடாக மாறுகிறது;

எங்களில் பன்னிரண்டு பேர் இருக்கிறோம் இங்கே, அவர்களில் ஒருவர் ஓர் அரை
மனிதன் மட்டுமே
மற்றும் எங்களில் ஒருவர் ஒரு துப்பாக்கியுடன் கூடிய ஒரு ஜோடிக் கைகள் மட்டுமே;
நாங்கள், பிழைவடிவங்கள், யுத்தநடையைத் தொடங்கினோம் மற்றும் நடந்து வெளியேறினோம்
அந்திக்குள்
இப்பொழுது எங்கள் தொலைந்த நிழல்கள் இனிமேலும் அழப் போவதில்லை
பூமிக்குள்ளிருந்து,

இப்பொழுது சூரியகாந்திகளுக்கு நடுவில் நிற்கும் எங்களைப் பார், அந்திப்
பொழுதிற்குள்,
கறுத்த உடைந்த தண்டுகளுக்கு நடுவில்,
எங்களைப் பார், நாங்கள் நிற்கும் இடத்தில் பன்னிரண்டு வெட்டவெளிகள்
மலர்களின் வயலில்.

000

நீ நிலவை மணந்துகொள்
மற்றும் கடல் மற்றும் நிலவு மற்றும் பெண்: எல்லாம்,காதுகளற்றவை,
அவர்களது குரல்களை நீ கேட்பாய், நீ அவர்களிடம் பேசுவாய்
மற்றும் அவர்கள் சொல்கிறார்கள்
இது ஒரு விளையாட்டு.

000000

ஃபின்னிஷ் கவிதைகள் – ஆங்கிலத்தில்: அன்செல்ம் ஹால்லோ – தமிழில்: சமயவேல்.

கடவுளின் கையெழுத்து ( டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியம் ) / லதா ராமகிருஷ்ணன்

கடவுளின் கையெழுத்து

Code Name: God: The Spiritual Odyssey of a Man of Science – லேஸர் சிகிச்சைமுறையைக் கண்டுபிடித்த இந்திய விஞ்ஞானி டாக்டர் மணி பௌமிக்கின் உலகப்புகழ் பெற்ற ஆங்கில நூலின் தமிழாக்கம். தமிழில் மொழிபெயர்த்தவர் டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன். கவிதா பதிப்பகம் 2016இல் வெளியிட்ட இந்நூல் பேசப்படவேண்டிய நூல். பேசப்பட்டதா(க), தெரியவில்லை. நூலின் இரண்டாம் அத்தியாயம் (தலைப்பு – மகத்தான எதிர்பார்ப்புகள்) இங்கே தரப்பட்டுள்ளது.

[1968 ஆம் ஆண்டில் கலிஃபோர்னியா பல்கலை கழகத்தின் நார்திராப் கார்பொரேஷன் ரிசர்ச் அண்ட் டெக்னாலஜி சென்டரில் மணி லால் பௌமிக்கும் அவருடன் ஒரு விஞ்ஞானிகள் குழுவும் ஒரு கார்பன்–டையாக்சைடு லேசரை உருவாக்குவதில் வேலை செய்துக்கொண்டிருந்தனர். அவர்களுடைய பணி பிற்பாடு எக்ஸைமர் லேசரென்று அழைக்கப்படும் கருவியாக உருவானது. இவ்வகை லேசரானது ஒளிமுறிவு கண் அறுவை சிகிச்சையின் மூலைக்கல்லாக மாறியது. டாக்டர். பௌமிக் அவருடைய குழுவின் சாதனையை மே மாதம் 1973 ஆம் ஆண்டு கோலராடோவில் உள்ள டென்வரில் நடந்த டென்வர் ஆப்டிக்கல் சொஸைட்டியின் ஒரு கூடுகையில் அறிவித்தார் – விக்கிபீடியா]

டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியம்

முன்னாள் இயக்குநர்,ஆசிய வளர்ச்சி வங்கி

டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியன் தமிழிலக்கியப் படைப்புகளைதமிழிலிருந்து ஆங்கிலத் திற்கு மொழியாக்கம் செய்யும் குறிப்பிடத்தக்க வெகு சில மொழிபெயர்ப்பாளர்களில் ஒருவர். சம கால தமிழ் இலக்கிய உலகிற்கு நன்கு அறிமுகமானவரே. எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஆத்மார்த்தமான நண்பர் என்ற அளவில் அவருடைய பல நாவல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ள திரு.கே.எஸ்.சுப்பிரமணியன் அசோகமித்திரன், திலகவதி, சிற்பி பாலசுப்ரமணியன், உமாமகேஸ்வரி போன்ற படைப்பாளிகளின் நாவல், கவிதை போன்ற எழுத்தாக்கங்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

இவருடைய மொழிபெயர்ப்புப் பணியில் முக்கிய மைல்கற்கள் தமிழின் சமகாலக் கவிதையுலகைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க கவிஞர் களின் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது. கதா வெளியீடாக ஒரு தொகுப்பும், உலகத் தமிழாராய்ச்சி மையத்தின் சார்பில் ஒன்றும்[ அல்லது இரண்டு?] வெளியாகியுள் ளன. பொதுவாக, ஒருவருடைய கவிதையை ஆங்கிலத்தில் மொழிபயர்ப்பதே அந்தக் கவிஞ ருக்குச் செய்யும் சலுகையாகக் கொள்ளப்படும் சூழலில் ஒவ்வொரு கவிஞரையும் தொலைபேசியில் அழைத்து அல்லது கடிதம் மூலம் தொடர்புகொண்டு, அவருடைய கவிதையை மொழிபெயர்ப்பதற்கான அனுமதி பெற்று, தன்னுடைய மொழிபெயர்ப்பை கவிஞருக்கு வாசித்துக்காட்டி திரு. கே.எஸ்.சுப்பிரமணியம் அந்த மொழிபெயர்ப்பு முயற்சிகளை மேற்கொண்ட பாங்கு முன்னுதாரணமான பண்பு.
ஏறத்தாழ நாற்பது நூல்கள் [அல்லது அதற்கும் அதிகமாய்] தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கும் இவர் இலக்கியம் சமூகம் சார்ந்து எழுதிய கட்டுரைகளும் நூல் வரிவில் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் வெளியாகியுள்ள இவருடைய சங்கப் பெண்கவிஞர்களுடைய கவிதைகளின் ஆங்கில மொழியாக்கம்(நியூ செஞ்சுரி புத்தக நிறுவன வெளியீடு, சாகித்ய அகாதெமி வெளியிட்டுள்ள பாரதியாருடைய மொத்தக் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பில் இவருடைய பங்கு மிகவும் குறிப்பிடத்தக்கது. சிந்தனை ஒன்றுடையாள் என்ற தலைப்பில் தமிழ்-சமஸ்கிருதம் ஆகிய இரண்டு மொழிகளில் இடம்பெறும் ஒத்த வரிகள், பாடல்கள், பார்வைகளை ஒரு வாசகராக இரண்டு மொழிகளிலும் உள்ள பல்வேறு புனைவு, அ-புனைவு நூல்களிலிருந்து திரட்டித் தொகுத்திருக்கும் பணியும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டியது. கடவுளின் கையெழுத்து இவருடைய முதல் தமிழ் மொழியாக்க நூல். ஆனால், ஆற்றொழுக்காக அமைந்திருக்கிறது இவருடைய தமிழ் மொழிபெயர்ப்பு

2.
மகத்தான எதிர்பார்ப்புகள்

தன்தாயகத்திலிருந்துபலஆண்டுகள்பிரிந்துவாழும்ஓர்அகதிதன்தாய்மொழியைமறக்கத்தொடங்குவதுபோலும், மற்ற மனிதர்களுடன் தொடர்பு மறுக்கப்பட்ட ஒரு கைதி தன் சமூக ஆற்றல்களை இழப்பது போலும், எனது முன்னிலை-இயற்பியல் ஞானத்தி லிருந்தும் என் ஆன்மிக வேர்களிலிருந்தும் அந்நியப்பட்டுப்போனேன். பல விதங்களில் என் லௌகிக வெற்றியின் பிணைக்கைதியாகவே மாறினேன்.

வங்காளத்திலிருந்து ‘பெல் ஏரு’க்கு என்னை இட்டுவந்த என் மனம், சாமர்த்தியமான பேச்சிலும், மேல்பூச்சுள்ள நட்பு பிம்பத்திலும் தன்னை இழந்தது; சுயதரிசனப் பாதையிலிருந்து தடம் புரண்டது. அது உரு இழந்தது, என் உள்ளார்ந்த சக்தியும் தான். அரூபமாக இருப்பினும், நமது மனமும் உள்ளார்ந்த சக்தியும் ஆரோக்கியமான இதயம் போலவே நமது பலத்துக்கு அத்தியாவசியமானவை என்பதை நாம் மறக்கத் தலைப்படுகிறோம். அவற்றுக்கும் அன்றாடப் பயிற்சி தேவை. ஒரு பருவத்தில் உள்ளுணர்வின் அடிப்படையில் நான் அறிந்திருந்ததை, முதிர்ச்சியான பருவத்தில் மறுபடியும் கற்கத் தொடங்கினேன், ஒரு விஞ்ஞானியின் நிரூபணச் சார்புடன்.

இந்த இலக்கை நிர்ணயிப்பது எளிது, ஆனால் அடைவது கடினம் என்பதை விரைவில் கண்டுபிடித்தேன். இரத்தக்குழாய்கள் போல, மனமும் கெட்டித்தட்டிப்போய்விடுகிறது. அதற்கு எவ்வாறு புத்துயிர் அளிப்பது? நாம் ஒரு தவறான இடத்தில் இருக்கும்போது, நாம் எப்படி இங்கு வந்து சேர்ந்தோம் என்று யோசித்து, ஓரளவு பின்னோக்கிச் சென்று நாம் வழியில் இழந்த சில அம்சங்களை மீட்டெடுக்க முயல்வது பயனுள்ளதாக அமையும். பின்னோக்கியும் முன்னோக்கியும் பார்வையைச் செலுத்துவது, கடந்த காலத்துடனும் எதிர்காலத்துடனும் தொடர்பை அறுத்துவிடாமல் நிகழ்காலத்தை முழுமையாக வாழ்வது, இவை நமது முழுமைக்கு வழிவகுக்கும்.

எனவே, தனிமையான என் மாளிகையை அடையும் வழியில் நான் பயணித்து வந்த பாதையையும், என்னை உருவாக்கிய ஆளுமைகளையும் சக்திகளையும் என் மீள்பார்வைக்கு உள்ளாக்கினேன்.

எனது வெற்றி ஒரே நாளில் நிகழ்ந்ததல்ல. 1973ஆம் ஆண்டு நார்த்ராப் கார்ப்பரேஷன் ஆய்வுக்கூடத்தில் நானும், என் சகாக்களும் ‘எக்ஸிமர் லேஸர் குறித்த வெற்றிகரமான முதல் செய்முறை விளக்கத்தை அரங்கேற்றினோம்; அது ஒரு ‘ஜாக்பாட்’ நிகழ்வுதான். ஆனால், நான் அமெரிக்காவில் பதினான்கு ஆண்டுகள் ஆய்வுத்துறையில் உழன்ற பிறகுதான் இந்த வெற்றி நிகழ்ந்தது. எதைக் கண்டும் ஆச்சரியப்படும் ஒரு குடியேறியாகத் தொடங்கி, ஒரு மத்தியதரத் தளத்திற்கு உயர்ந்து, இறுதியாக பொருளாதாரச் சுதந்திரத்தையும், உறுதியான தன்னம்பிக்கையும் பெற்றேன். தாழ்ந்த சுயமதிப்பு, பாதுகாப்பின்மை என்ற கருநிழலிலிருந்து வெளியேற இது எனக்கு உதவியது.ஸ்லோன் நிறுவனத்தின் படிப்புதவித் தொகையும், லாஸ் ஏஞ்சலிஸ் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் (UCLA) பேராசிரியர் வில்லியம் மாக்மில்லனின் ஆதரவும் அமெரிக்காவின் கதவையும், வளமைக்கான நம்பிக்கை வாயிலையும் எனக்குத் திறந்தன. அமெரிக்காவின் எம்.ஐ.டியின்(MIT) இந்திய இணையான ஐ.ஐ.டியில்(IIT) நான் சமர்ப்பித்திருந்த முனைவர் பட்ட ஆய்வேட்டின் மூலமாக யூ.ஸி.எல்.ஏ பல்கலைக்கழகத்தில் முன்னிலை இயற்பியல்துறையில் முது நிலை ஆய்வாளனாகப் பணிபுரியத் தொடங்கினேன். மின்னணுவியல் சக்தி மாற்றக் களத்தில்நான் மேற்கொண்டிருந்த ஆய்வின் அடிப்படையில், 1961ம் ஆண்டில் ஜெராக்ஸ் நிறுவனத்தின் மின் ஒளியியல் துறைஆய்வுக்குழுவில் சேர்ந்தேன். இங்கு நான் சிலேட் திரவ லேஸர் முயற்சியின் முன்னணி ஆதரவாளனாகச் செயல்பட்டேன்; பொருளாதார வெகுமதியின் முதல் ருசியை நுகர்ந்தேன். 1968இல் நார்த்ராப் நிறுவனத்தின் தலைமையக ஆய்வுக்கூடத்துக்கு மாற்றப்பட்டேன்; பிறகு லேஸர் தொழில்நுட்பத் துறை மேலாளராகப் பதவி உயர்வு பெற்றேன்.

லேஸர் ஒளியைப் பற்றியும், சில ஆன்மிக நிலைகளுடன் அதற்கு உள்ள ஒப்புமை பற்றியும் பிறகு பேசுவோம். என் கதையின் இந்தக் கட்டத்தில் ஒன்று தெரிந்தால் போதும். எக்ஸிமர் லேஸர் தொழில்நுட்பம்தான் எனக்குப் புகழைத் தேடித் தந்தது. இந்தத் தொழில்நுட்பம் விழிவெண்படலச் சீரமைப்பில்முக்கியப் பங்காற்றுகிறது. லாஸிக் (LASIK) மூலமாகப் பிரபலமடைந்த கண் திருத்த அறுவைச் சிகிச்சை முறைதான் இது.

இந்தச் சாதனைகள் என்னை அமெரிக்காவின் ‘செல்வந்தர், புகழ் பெற்றோரின்’ பட்டியலுக்கு உயர்த்தியது உண்மைதான். ஆனால் ஒன்றை மறந்துவிடக்கூடாது. சில பத்தாண்டுகள் உழன்று, திக்கித்திணறி, பல நேரங்களில் பற்றுக்கோடு எதுவுமின்றித்தான், என் இளமைப்பருவத்து இருள் சூழலிலிருந்து மீண்டெழுந்து வந்துள்ளேன்.

எனது கதை கிழக்கு இந்தியாவின் வளம் குன்றிய பகுதியில் தொடங்குகிறது. அங்குதான் நான் பிறந்தேன், வளர்ந்தேன். பிறப்பு வாய்க்கால் வழியாக என் குடிசைவீட்டு மண் தரையைத் தொட்டதிலிருந்தே, நான் அந்த நம்பிக்கையின்மைச் சுழலிலிருந்து எப்படியாவது விடுதலை பெறவேண்டும் என்ற உந்துதல் எனக்கு இருந்ததோ என்று மீள்பார்வையில் எனக்குத் தோன்றுவதுண்டு. குளுமையான பளிங்குத் தரையையும், நேர்த்தியாக நெய்யப்பட்ட கம்பளத்தையும் நான் விரும்பி இருப்பேன். எனினும், ஏழ்மை நெடியால் திணறும் அந்தக் குக்கிராமத்தில் பல அரிய பொக்கிஷங்கள் இருந்தன. இந்தியா முரண்பாடுகளின் உறைவிடம். பிச்சைக்காரர்களின் கந்தல் போர்வைகளில் ரத்தினங்கள் ஒளிந்துகொண்டு இருக்கலாம்.

என்னுடைய கிராமம் பண்டைய புத்தத் தலமான தாம்லுக் அருகில் இருந்தது; வங்காளப் புலிகள் அலையும் பகுதி தூரத்தில் இல்லை. என் தந்தையார் குணாதர் பௌமிக் ஒரு பள்ளி ஆசிரியர். அவருடைய பகல்நேரப் பணி அவரது உண்மையான பேரார்வத்தை மறைத்தது. பிரிட்டிஷாரின் காலனிய ஆதிக்க இரும்புப்பிடியிலிருந்து இந்தியா விடுதலை பெறவேண்டும் என்பதே அந்த ஆவல். அவர் கண்டிப்பான, நெருங்கிப் பழகும் இயல்பில்லாத மனிதர். ஆனால் அவருடைய கொள்கைப்பிடிப்பும், காந்தியின் அகிம்சைப் புரட்சியில் அவருக்கு இருந்த அர்ப்பணிப்பு உணர்வும், அவரை ஒரு மதிப்புள்ள போராளியாக்கி இருந்தது. துரதிருஷ்டவசமாக அடிக்கடி அவரை வீட்டில் இல்லாத தந்தையாகவும் ஆக்கியிருந்தது.

என் தாயார் லோலிதா ஓர் எளிமையான கிராமத்துப் பெண்மணி. தன் பதினொன்றாம் வயதில் என் தந்தையுடன் திருமணத்தால் பிணைக்கப்பட்டார். காலங்காலமாக நிலவிவந்த குடும்ப உறவுகள், திருமணத் தரகர்கள், சோதிடர்கள் என்ற அமைப்புகள் இதில் பங்கு பெற்றன. வெற்றிகரமான உறவுக்கு நட்சத்திரங்களின் ஆசீர்வாதம் உள்ளது என்று சோதிடர்கள் உத்தரவாதம் அளித்தனர். அவர் பருவம் எய்தும்வரை திருமணம் ‘நிறைவடைய’வில்லை. அன்றைய பழக்கத்தின்படி, தக்க நேரம் வாய்த்த பின், இரண்டாவது திருமணச் சடங்கு நடந்தது. அதன் பிறகே அவர்கள் உடலுறவுகொள்ள அனுமதிக்கப்பட்டனர். இவ்வாறு உலகில் என் உதயம் சில ஆண்டுகள் தள்ளிப்போடப் பட்டது.

எனது தந்தைவழிப்பாட்டி சாரதா தான் எங்கள் குடும்பத்தின் அச்சாணி. ஒல்லியான உடல், உறைபனி போன்ற வெண்முடி.அவருடைய அன்பு ததும்பும் குரலும், வங்காள மொழித் தாலாட்டுப் பாடல்களும், அவரது வெள்ளை லினன் புடவையின் சலசலவென்ற ஓசையும் என் செவிகளில் இன்னும் ஒலித்துக்கொண்டு இருக்கின்றன. இந்திய மரபிற்கு ஒத்தவாறு, என்னை வளர்க்கும் விஷயத்தில் என் வாலிபத் தாயார் பாட்டியின் சொல்லை மதித்து நடந்தார். எங்கள் வீட்டில் தங்கியிருக்கவேண்டுமென்றால், என் தாயாருக்கு வேறு வழியே இல்லை.

சாரதா பாட்டி என்னைச் செல்லம் கொடுத்துக் கெடுக்கத் தயங்கவே மாட்டாள். ஏழ்மைப் பிடியில், அரை வயிற்று உணவில் உழலும் குழந்தைக்கு பாட்டி செல்லம் கசக்குமா என்ன? அடிக்கடி தன்னுடைய உணவையும், இனிப்புப் பண்டங்களையும் என்னுடன் பகிர்ந்துகொள்வார். சில ஆண்டுகளுக்குப் பின், எங்கள் குடும்பம் மிகுந்த கஷ்ட நிலையில் தவித்துக்கொண்டிருந்தபோது, தன்னுடைய பரிவார்ந்த செயல்களால், பேரன்பு என்பது பெயர்ச்சொல் அல்ல, வினைச்சொல் என்பதைப் போதித்தார் பாட்டி.

ஆம், நாங்கள் ஏழ்மையில் அவதியுற்றோம். சில நேரங்களில் பட்டினியின் விளிம்பில். ஆனால், பெரும்பாலான அண்டைவீட்டாரின் நிலைமையும் அதுவே.

நான் வசித்த பகுதி எல்லா சக்தியையும் உறிஞ்சித் துப்பும் இடமாகவே இருந்தது. எனக்குத் தெரிந்தவர்கள் அனைவருடைய முகங்களிலும் வெறுமையும், ‘இதுதான் விதி’ என்ற சகிப்புத்தன்மையும் தான் உறைந்திருந்தது. இதுதான் இந்தியா. மனிதத்தை வடுப்படுத்தும் ஏழ்மைச் சூழலிலும், ஆன்மிகம் என்ற பூங்கொத்தின் நறுமணம் அதிகாலையின் ஆவி போல மண்ணிலிருந்து சுருள்சுருளாக எழுந்தது. அனைத்தையும் தழுவிய இறைவனின் பிரசன்னம் வாழ்வின் இணைபிரியாத அங்கமாக இருந்தது.

அன்றாடச் சடங்குகளும், பூஜைகளும், திருவிழாக்களும் ஓர் இனந்தெரியாத சமூக ஒத்திசைவை உருவாக்கி, அவலமான வாழ்க்கைக்கு சோபனத்தை அளித்தது. தன் சக மனிதர்களின் மரியாதையைப் பெறுவது முதன்மையான சமூக இலக்காக விளங்கியது. நாம் அனைவரும் கடவுளின் அங்கம் என்ற உணர்வு, உள்ள ஆழத்தில் பதிக்கப்பட்டிருந்தது; கடவுளுடன் ஒன்றுவது தலையாய ஆன்மிக இலக்காக இருந்தது. பெரும்பாலான மக்கள் கடவுளுடன் இரண்டறக் கலப்பது தங்கள் பிடிக்கு மீறியது என்று நம்பினர். எனவே இவை போன்ற ஆன்மிகப் பாய்ச்சல்களை ரிஷிகள் / ஞானிகள் போன்ற வல்லுநர்களிடம் ஒப்படைத்துவிட்டு, சடங்குகள் / பஜனைகள் ஊடாக இரவல் பரவசத்தை அனுபவித்தனர். தங்களுடைய அன்றாடத் தொழுகைகளில் ஈடுபாட்டுடன் இருந்த என் பெற்றோர்களும் இதுபோன்ற எளிமையான ஆன்மிகப் பாதையிலேயே பயணித்தனர்.

சில சமயங்களில், ஆச்சரியப்படுத்தும் வகையில், இந்தியா சாமானியர்கள் வாழ்விலும் தன் மந்திரசக்தியை செலுத்தும்; பத்து வயதுச் சிறுவனும் இதற்கு விதிவிலக்கல்ல. அவனுடைய இனந்தெரியாத, திக்கு புலப்படாத தேடலுக்கும் கைகொடுத்தது. இதுபோன்ற ஒரு தருணம் 1941-ம் ஆண்டு இலையுதிர்காலத்தில் நிகழ்ந்தது.

சந்திர ஒளி அற்ற ஓர் இரவு. என் தந்தையும் நானும் உள்ளூர்ச் சந்தையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தோம்; உள்ளூர் நெல்வயல்களுக்கு நீர் வழங்கும் ஒரு வாய்க்காலை ஒட்டிய ஈர மண் பாதை அது. கிராமங்களில் மின்வசதி கிடையாது; விளக்குக்கான எண்ணெய் வாங்கக் காசில்லை; எனவே, சூழலைப் போர்த்தியிருந்த இருள் கனமான போர்வையாகக் கவிந்திருந்தது. நல்மணமுள்ள தென்றல் சிற்றலைகளாக நெற்கதிர்களை வருடிச் சென்றுகொண்டிருந்தது; அவை எனக்கு நீர்பூதங்களாக உருவெடுத்தன. அந்த பூதங்களின் நிழலிலும் என் தந்தையின் உடனிருப்பால் நான் பத்திரமாக உணர்ந்தேன்.

சிறிய, மெல்லிய உடல் படைத்திருந்தாலும் என் தந்தையார் வியக்கத்தக்க உள்உறுதியையைப் பெற்றவர்; வங்காளப் புலிகளுக்கு இணையான அச்சுறுத்தும் திண்மைக்குச் சொந்தக்காரர். பத்தாண்டுகளுக்கு முன்பே தன் உடலையும், ஆன்மாவையும் விடுதலை இயக்கத்திற்கு அர்ப்பணித்தவர். எனவே எப்பொழுதும் காலனீய அதிகாரிகளின் சந்தேகப் பார்வைக்கு இலக்கானவர். காவல்துறை தன் குடும்பத்தாரையும் அச்சுறுத்தத் தயங்கமாட்டார்கள் என்பதை உணர்ந்த அவர் வீட்டிற்கு வருவது அரிதாயிருந்தது. அவரது ஒவ்வொரு வருகையும் எனக்கு அளப்பரிய மதிப்புடையதாயிற்று.

அவரது இருப்பின் ஊடாக நான் பெற்ற பாதுகாப்புணர்வு எனக்கு உள்ளத்தெளிவை அளித்தது; நான் என்னைச் சூழ்ந்துள்ள உலகத்தைப் பற்றி ஆழமான பிரக்ஞையைப் பெற்றேன். தவளைகளும், வெட்டுக்கிளிகளும் இசைக்கும் இரவுப்பாடல்கள் ஒரு சேர்ந்திசையாகவே எழுந்து எங்கள் இடையே நிலவிய மௌனத்தை நிரப்பியது. என் தந்தையார் சொற்களிலும் அன்புவெளிப்பாட்டிலும் சிக்கனமானவர்.

தான் பிரிட்டிஷ் அதிகாரிகளின் குண்டுக்கு பலியானால், தன் முனைப்பான அன்பு வெளிப்பாடுகள் தன் குடும்பத்தின் சோகத்தை ஆழப்படுத்திவிடுமோ என்ற அச்சமும் ஒரு காரணமாக இருக்கலாம்; அல்லது, ஆபத்துகளால் சூழப்பட்ட அவரது வாழ்க்கை, பேசுவதைவிட கேட்பதே உயிர்பிழைப்புக்கு உகந்தது என்ற படிப்பினையை அவருக்குக் கொடுத்திருக்கலாம்.

விலகியிருக்கும் அவரது இயல்பு எனக்கு சோகத்தைத் தந்தபோதிலும், என்னிலிருந்து என்னை விடுவித்துக்கொள்ளவும் அது உதவியது. எங்கள் சலனத்தால் பாதிக்கப்பட்ட ஒரு அண்டங்காக்காய் நெல்வயலிலிருந்து எழுந்தது. மேல்நோக்கிப் பறந்த அப்பறவையின் சிறகடிப்பைக் கண்ணுற்ற நான், வானத்தைப் புதுக்கண்களுடன் பார்த்தேன். உடனே என் இதயம் தன்னைத் திறந்துகொண்டு அதனை உள்வாங்கியது.

நட்சத்திரங்கள் எப்போதும்தான் இருந்தன என்பதை நான் அறியாதவனல்ல. ஆனால், அந்த இரவில் அவற்றின் எண்ணற்ற தன்மை என்னைத் திக்குமுக்காடச் செய்தது; என்னுடைய பிரக்ஞையை விவரிக்கமுடியாத ஒற்றுமையுணர்வில் ஆழ்த்தியது. கருப்பு வெல்வெட் விண்ணில் அவை ஒரு முடிவற்ற விதானமாக வியாபித்திருந்தன; அவற்றின் விஸ்தாரமான வியாபகம் புரிதலுக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றியது; அதேநேரத்தில் ஒரு சிறிய பையனின் கைக்கெட்டிய தொலைவில் இருந்தது.

அந்த வயதில் இந்த அற்புதமான வண்ணக் களஞ்சியத்தை உருவாக்கிய பிரமிப்பூட்டும் சக்திகளைப் பற்றி ஒன்றும் அறியேன். போர்(Bohr), போம்(Bohm) போன்ற விஞ்ஞானி களைப் பற்றியோ, இந்தப் பிரபஞ்சத்தைக் கட்டமைத்த சக்தியாக இந்தியர்களால் கருதப்பட்ட பிரம்மனின் இயல்பு பற்றியோ எனக்கு ஒன்றும் தெரியாது. என்னைப் போன்ற, காலணி கூட அணியாத கிராமச் சிறுவன் தேவர்களைப் பற்றியும், கிராமப்புறக் கடவுளர்கள் பற்றியும் ஏதாவது பேசிக்கொண்டிருக்கலாம்.

ஆனால், அந்த மடைமாற்ற இரவுக்கு முன்பு, பெரிய சித்திரம் என் பிரக்ஞைக்கு அப்பாற்பட்ட எங்கேயோ இருந்தது. அருகில் இருந்த என் தந்தையாரும் பரவசத்துடன் நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண் டிருந்தார். அவருடைய மௌனம், எப்போதும்போல் இல்லாமல், ஆழமாகவும் அருகாமை யிலும் இருந்தது. அன்னியோன்னியமும், நம்பிக்கையும் நிறைந்த அந்தத் தருணத்தில் நான் ஒரு கேள்வியை எழுப்பினேன்: “அப்பா, இதுதான் கடவுளா?”

என்னுடைய சந்தேகத்தை அவர் உறுதிசெய்வார் என்று ஒரு கணம் எண்ணினேன். அவர் நெகிழ்ந்துவிட்டார் என்பதை என்னால் உணரமுடிந்தது. ஆனால், ஒரு பத்துவயதுச் சிறுவனிடமிருந்து எழுந்த இந்தக் கேள்வி அவரை பிரமிப்பில் ஆழ்த்தியது. தடுமாற்றம் அவருடைய முகத்தில் நிழலாடியது. இத்துணை பிரம்மாண்டமான கேள்வியைப் பற்றி யோசித்துக்கொண்டிருக்கும் சிறுவனுக்கு என்ன விடை அளிப்பது என்ற தடுமாற்றம்தான் அது. “இதைப் பற்றி உனக்கு ஏன் கவலை?” என்ற கேள்விதான் அவருடைய பதிலாக வெளிவந்தது. அவரால் பதிலளிக்க முடியாத இன்னும் பல கேள்விகளின் பெருக்கை அணை போட முயன்றாரோ?

அவருடைய பதில் எனக்குத் திருப்தியளிக்கவில்லை என்று சொல்லத் தேவை இல்லை. இப்போது எனக்குப் புரிகிறது: அப்பாவின் மனமும் இதயமும் பக்கத்தவர்களின் துயரங் களிலும், தன்னுடைய வாழ்வாதாரப் பிரச்சினைகளிலுமே ஆழ்ந்திருந்தன; அண்டத்தின் புதிர்களில் அல்ல. சிறிது நேர ஆலோசனைக்குப் பின் அவர் சொன்னார்: “இவற்றைப் பற்றி எல்லாம் யோசிக்க எனக்கு நேரம் இல்லை. நீ ஒரு சிறுவன். என்றோ ஒரு நாள் உலகத்தைப் பற்றியும் அதன் அதிசயங்களைப் பற்றியும் அறிந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கலாம். உன் வாழ்வின் இந்தக் கட்டத்தில் இவற்றில் ஆழ்ந்து ஆய முயலாதே. அவற்றின்பால் மரியாதை போதும்”

எல்லாத் தந்தைகள் போல என் தந்தையும் தவறு செய்துவிட்டார். தங்கள் குழந்தை களின் கடினமான கேள்விகளைத் தள்ளிப்போட்டுவிடுகிறார்கள். விண்ணை மண்ணிலி ருந்தும் மனதைப் பொருண்மையிலிருந்தும் பிரிக்கும் எல்லா யதார்த்தவாதிகளும் தவறுதான் செய்கின்றனர். எகிப்தியத் தொன்மத்தில் இடம்பெறும் ஹெர்மஸ் ட்ரிஸ்மெகிஸ்டஸ் என்ற குரு கூறுவாராம்: “மேல் எப்படியோ, அப்படியே கீழ்; நவீன விஞ்ஞானத்தின் ஊடாக நாம் கற்றுக்கொண்டது இதுதான்: எந்த ஈர்ப்புசக்தி ஆப்பிள் பழத்தை நியூட்டனின் தலையில் விழச்செய்ததோ, அதே சக்திதான் அனைத்து அண்டத்தையும் நிலைநிறுத்தி ஒன்றாக இணைத்து இருக்கிறது; பூமியில் நாம் கண்டுபிடிக்கும் எல்லா இயற்கை விதிகளும் அண்டம் முழுவதுக்கும் பொதுவானவை.

எகிப்திய குருவைப் பொலவே நாமும் கூறலாம்: ‘எப்படி சிறிதோ, அப்படியே பெரிதும்;’ கற்பனைக்கு அப்பாற்பட்ட விரிந்த பிரபஞ்சம், நுண்ணியதினும் நுண்ணீய துணை அணுத்துகள் பரிமாணத்திலிருந்துதான் உதித்தது. விஞ்ஞானம் விண்ணை மண்ணிலிருந்தும் உள்ளத்தைப் பொருண்மையிலிருந்தும் துண்டிக்க அனுமதிப்பது இல்லை.

அப்பாவைக் கேட்ட கேள்வி முதல் கேள்விதான்; அந்த கணத்திலிருந்து பல கேள்விகள் சரம் சரமாக என்னுள் எழுந்துகொண்டேயிருந்தன. ஒவ்வொரு இயற்கை நிகழ்வையும் எதிர்கொள்ளும்போது, நான் சிந்தித்தேன், வியப்புற்றேன், அவற்றுள் ஆழ்ந்து, பகுதிகளாகப் பிரித்து ஆய முற்பட்டேன். அதே கேள்வியை ஆயிரம் மாறுபட்ட வழிகளில் எழுப்பிக்கொண்டேன். புகைமூட்டமாகவே அந்த இரவில் நான் எதிர்கொண்ட அனுப்வம் விஞ்ஞான, ஆன்மிக, தரிசனத்தின் முதல் கிறக்கமூட்டும் ருசிதான்; ஆனால் அது இறுதியான அனுபவம் அல்ல.

என் பாட்டி சாரதா, உணர்ச்சிக்களத்தில் என் தந்தையின் எதிர்த்துருவம். என் தந்தை சமூக அரசியல் யதார்த்தங்களில் காலூன்றி அவற்றை மாற்றவேண்டும் என்ற புரட்சியாளனின் உத்வேகம் கொண்டவர்; என் பாட்டியோ மிகவும் இருண்ட சூழல்களுக்குப் பின்னால் ஒளிரும் தங்கமயமான ஒளியை என் கண்களுக்கு அறிமுகப்படுத்தினார்.

ஒருநாள் எங்கள் கிராமத்திலிருந்து மூன்று மைல் தொலைவிலுள்ள புனித கங்கையாற்றின் ஒரு உபநதிக்கு அழைத்துச் சென்றார். கரைமேல் ஏறினோம். மூச்சிறைக்க நான் குனிந்தபோது எங்களுக்கு முன் தகதகத்துக்கொண்டிருந்த நீர்ப்பரப்பைக் காணலுற்றேன். அகண்டு இருந்த அந்த நதி மழைநீரால் பொங்கிவழிந்துகொண்டிருந்தது. அந்த நீரின் மறுகரை தொடுவானத்தையும் தாண்டி வியாபித்திருந்தது. அந்த நதி எல்லையற்று விரிந்ததுபோல் எனக்குத் தோற்றமளித்தது.

மறுபடியும் என் கண் எதிரே காட்சியளித்த அகண்ட பரப்பு எனது பிரக்ஞையை இன்னொரு தளத்திற்கு இட்டுச்சென்றது. என் வாழ்க்கையில் பின்பு அறிந்த உயிர்ப்புள்ள மெய்யுணர்வு அனுபவக் களன் தானோ அது? இயற்கையின் மகாபிரக்ஞை என்னுடைய பிரக்ஞையுள் ஊடுருவி சுகமாகக் கலந்ததோ என்று தோன்றியது.

விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால், இந்த அனுபவங்களின் இயல்புதான் என்ன? என்னுள் இத்தகைய உணர்வுக் கொதிநிலையை அவை எவ்வாறு ஊக்குவித்தன? பல ஆண்டுகளாக நான் ஒன்றைக் கற்றுக்கொண்டேன்; பிரக்ஞையின் சாரம் அண்டம் முழுவதிலும் விரவிக் கிடக்கிறது; நமது மூளைப் புலம் அதனுடன் இயைந்து இயன்றவரை அதை உள்வாங்கும் பாங்கில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒரு தேவை நாம் நமது வெளியை அர்ப்பணிக்கும் பக்குவம் பெற்றிருக்கவேண்டும். நான் குறிப்பிடுவது தனிமைப்பட்ட தனிமனிதப் பிரக்ஞையை அல்ல், அண்டம் தழுவிய ஒரு பிரக்ஞையை. இதைத்தான் என் தாய்நாட்டில் வாழ்ந்த வேதமுனிவர்கள் பிரம்மன் என்று கூறினார்கள்.

இது எளிதில் பிடிபட மறுக்கும் மூலப் பொருளியல் போன்று ஒலித்தால், க்வாண்ட்டம் கருத்தியலின் தந்தையாகப் போற்றப்படும் ‘மாக்ஸ் ப்ளாங்க்’கின் சொற்களைச் செவிமடுப்பது பயனுள்ளதாக இருக்கும். ப்ளாங்க் கூறுவார்: “பிரக்ஞையை நான் முதன்மையாகக் கருதுகிறேன். பொருண்மையை பிரக்ஞையின் துணைக்கூறாகக் காண்கிறேன். (அடிக்கோடு எனது)” புகழ் பெற்ற இயற்பியல் அறிஞரும் வானியலாளருமான ஸர் ஆர்தர் எடிங்க்டன் கூறுவார்: “அனைத்து பௌதிக உலகின் ஊடாக பிரசன்னம் கொண்டிருக்கும் சாரம் நமது பிரக்னையிலிருந்து உருவாக்கப்பட்டதுதான்.”

இப்போது நான் கலிஃபோர்னியாவில் இருக்கிறேன். இங்கேயிருந்து நீல பஸிஃபிக் பெருங்கடலையும், ஆஸ்திரேலியாவையும், தென்கிழக்கு ஆசியாவையும் கடந்து என் பார்வை இந்தியத் துணைக்கண்டத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியிலுள்ள ஒரு குக்கிராமத்திற்குப் பயணிக்கிறது.

கொஞ்சும் நெல்வயல்களிடையேயும் சொதசொதப்பான கங்கைக் கரையிடையேயும் என் வாழ்வின் வரைபடம் மாற்றப்பட்டுவிட்டது என்பதை நான் உணர்ந்தேன். இளமைப் பருவத்தில் நான் அனுபவித்த இந்தப் புலன் காட்சி மாற்றங்கள் எனது எதிர்கால வெற்றிகளுக்கு அடிகோலின என்று என்னால் உறுதியாகக் கூற முடியாது. ஆனால், ஒன்று நிச்சயம்: நமது வெற்றிகளும் வீழ்ச்சிகளும் என்ன செய்கிறோம் என்பதன் அளவுக்கு எப்படி உணர்கிறோம் / பார்க்கிறோம் என்பதாலும் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்தப் படிப்பினையை மீண்டும் கற்றுக்கொள்ள முயற்சி செய்கிறேன்.

எனது எளிய, புராதன பிறப்பிடத்திலிருந்து, பெருஞ்செல்வர்கள் வசிக்கும் அழகாக அலங்கரிக்கப்பட்ட ‘பெல் ஏர்’ குன்றுகள் தொலைதூரம்தான். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது, இந்த அளவு வேறுபட்ட இரண்டு சூழல்கள் இருக்க முடியாது. எனினும் இவற்றிடையே ஒரு பொது அம்சத்தை நான் கண்டேன் – எனது பிரக்ஞை. என் பாட்டி சாரதா எங்கள் வீட்டு மண்தரையை எப்படிப் பேணிப் பாதுகாத்தாரோ, அதைவிட அதிகக் கவனத்தை என் லாஸ் ஏஞ்ஜலிஸ் இல்லத்தின் நேர்த்தியான தரைகளின்பால் நான் செலுத்தவில்லை. ஒவ்வொரு நாள் காலையிலும், அது அரிய பளிங்கு என்ற உணர்வுடன், பாட்டி மண்தரையை ஈரத்துணியால் சிரத்தையுடன் துடைப்பார்கள். அதில்தான் அவருக்கு எத்தகைய பெருமிதம்! அந்த மண்தரையில்தான் நான் பிறந்தேன். அந்தக் கதையைச் சொல்லிவிட்டு இந்த அத்தியாயத்தை முடிக்க விரும்புகிறேன்.

சூரிய அஸ்தமன நேரத்தில் நான் பிறந்தேன். காற்றுச் சலனமே இல்லை. காலங்காலமாக வந்த பழக்கத்தை ஒட்டி, கிராமத்துப் பெண்கள் என் தாயைச் சுற்றிக் குழுமி இருந்தனர். அவருடைய பிரசவ முயற்சியில் உதவி புரிவதற்காக. அதிக சிரமமின்றி விரைவாக நான் வெளியேறியதாகச் சொல்வார்கள். ஆனால், ஒரு பிரச்னை; இந்தியாவில் நிலவிய சாதி அமைப்பு.

தொப்புள்கொடியை அறுப்பது மிகவும் அருவருப்பாகக் கருதப்பட்டது; எனவே ‘தீண்டத்தகாத’ குலத்தைச் சேர்ந்தோரே இந்தக் கீழான பணியைச் செய்யத்தக்கவர்களாகக் கருதப்பட்டனர். பிரச்னை என்னவென்றால், அந்தத் தருணத்தில் சுற்றுவட்டாரத்தில் ‘தீண்டத்தகாதவர்’ ஒருவரும் இல்லை. எனவே, அந்த இரவு முழுவதும் கைகால்களை உதைத்துக்கொண்டு குளிர்ச்சியன மண்ணில் கிடந்தேன். என் இளம்வயது தாயுடன் இணைந்து. அடுத்த நாள் காலையில் என் தந்தையார் ஒரு மூதாட்டியைக்
கண்டுபிடித்தார். அந்தப் பெண்மணி கூர்மையான மூங்கில் செதிலால் தொப்புள்கொடியை அறுத்துவிட்டார். அந்தக் கால வழக்கத்தின்படி, அந்த இரவு முழுவதும் என் அம்மா நேராக நிமிர்ந்து உட்கார்ந்து இருக்கவேண்டியிருந்தது. இதனால் அவரது கர்ப்பப்பை சேதமடைந்தது. அதற்குப் பிறகு பத்தாண்டுகள் அவரால் கருத்தரிக்க முடியவில்லை.

கதை மாறி இருக்கலாம். நானும் என் தாயாரும் அதே இடத்தில், அடுக்களைத் தரையில், அந்த இரவே இறந்திருக்கலாம். எனினும் குழுமியிருந்த ஒருவருக்கும் தொப்புள்கொடியை அறுக்கும் துணிவிருந்திருக்காது. இவ்வளவுக்கும் எங்கள் குடும்பம், எனக்கு விடுதலை அளித்த ‘தீண்டத்தகாத’ மூதாட்டியின் குலத்தை விட இந்து சமூக ஏணியில் ஒரு சிறு படிதான் உயரத்தில் உள்ளது. நம்மிடையே நாமே எழுப்பிக்கொள்ளும் சமூக, சமய வேலிகளின் முட்டாள்தனத்தைச் சித்தரிக்க இது ஒரு பொருத்தமான சான்று.

இந்தச் சிறுகதைதான் எனது இந்திய அனுபவங்களின் சாரம் என்று எடுத்துக்கொண்டால், இந்தக் கதையை மேலும் விவரிக்கத் தேவையில்லை.. ஆனால், இந்திய மக்களை இணைக்கும் அம்சம், அவர்களைப் பிரிக்கும் கூறுகளை வெகுவாக மீறி நிற்கின்றது. இந்த ஒருமையைப் பற்றித்தான் நான் பேச விரும்புகிறேன். ஏனெனில், இதுதான் ஆன்மிக தரிசனத்துக்கும், நவீன இயற்பியலின் வியத்தகு முன்னேற்றத்துக்கும் அடித்தளமாக விரும்புகிறது. க்வாண்ட்டம் இயற்பியல் துறையின் முன்னோடிகளான எர்வின் ஷ்ரோடிங்கரும் வெர்னர் ஹெய்ஸன்பர்கும் தங்கள் முதிர்ச்சியான பருவத்தில் ஆன்மிக தரிசனப் பாதையில் பயணித்தனர் என்பதைச் சுட்டிக் காட்ட விரும்புகிறேன். உண்மையான விஞ்ஞானம் பொருண்மையை ஆன்மாவுக்கு மேலாகக் கருதுவதில்லை, ஒன்றில் மற்றொன்றை இனங்காணுகிறது.

•••

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

பிச்சை

பிச்சைக்காரரின் பூர்வீகம் அறிதல் இயலாத காரியம்.
பரிவோடு கேட்டால் தெரியவரும் கதையும் பாதி உண்மையும்
பாதி பொய்யுமாய்….
அவருடைய மனபாரம் நமக்குள் கூடுபாய்ந்துவிட்டால்
பின் அங்கிருந்து நகரவே முடியாது.
பிச்சைக்காரத் தோற்றத்திலிருப்பார்களெல்லாம் அதுவாக இல்லாமலிருக்கலாம்.
ஒரு உளவாளியாய், தலைமறைவுப் போராளியாய்
உலவப் பிடிக்கும் ஊர்சுற்றியாய்
ஸ்டேட் பாங்க்கில் சேமிப்புடையவராய்
எனக்கு ஆசுவாசமளிக்கக்கூடிய பலராகிறார் அவர்.
இருகால்களும் அற்று அழுக்குத்தரையில் கிடத்தப்பட்டிருக்கும் பிச்சைக்காரரை
என் பார்வை ஒரூ நொடியில் எழுப்பி நடக்கவைத்துவிடுகிறது.
எழும்பூர் சுரங்கப்பாதையில் எதிர்ப்படும் பிச்சைக்காரரின் நசுங்கிய அலுமினியக் குவளையின்
ஒற்றைநாணயக் குலுக்கல் லப்-டப் இதயத்துடிப்பாகிய காதுகளைக் கொண்ட கோபிகிருஷ்ணன்
நான் பார்க்க நேரிடும் ஒவ்வொரு பிச்சைக்காரருடைய நிழலாக நின்றபடி
அவர்களுடைய குவளைகளில் சேரும் காசுகளை
அவ்வப்போது அவர்களுடைய கிழிந்த ஆடைகளுக்குள் பத்திரப்படுத்துகிறார்.
ரயில்நிலைய நடைமேடையில் ஆங்கிலத்தில் பிச்சை கேட்டுக்கொண்டிருந்த பெரியவரிடம் இல்லம் எதிலாவது சேரக்கூடாதா என்று கேட்டதற்கு
’முடிந்தால் காசு போடு இல்லை ஆளைவிடு’ என்று சொல்லி
ரயிலை ரசிக்கத்தொடங்கினார்.
அருவமா உருவமா? வெறும் பருவங்களாலானதா காலம்?
என்னிடம் கையேந்துபவர்களிடமெல்லாம் எப்போதும் நானும் கையேந்தியவாறே.
தருவதும் பெறுவதும் பரஸ்பர தர்மமென்றுணர்த்திக்கொண்டிருக்கும்
புரியாக்கவிதை யொரு பிச்சைக்காரராய்…..

அறம்

தெரிந்தே தலையும் காலும் வெட்டப்பட்டு
முண்டமாக்கப்பட்ட காணொளிக்காட்சி
கவனமாய் நிலைத்தகவலில் பதிவேற்றப்படுகிறது.
கயமையென்றால் குறிபார்த்துக் கல்லெறிய
கைவசமுண்டு சில கச்சடா வார்த்தைகள்.
’சொற்களைக் கொச்சையெனத் தரம்பிரிப்பது உன்
எச்சக்கல புத்தியைத்தான் காட்டுகிறது’
என்று நச்செனச் சொல்லி
தன் ஆய்வின் நபும்சகத்தனங்களை
அலட்டிக்கொள்ளாமல் கடந்துவிட முடிகிறது.
அங்கங்கே கண்ணிவெடிகளை கவனமாய்ப் புதைத்தபடி
ஊரெங்கும் கலவரக்காடாகிக்கொண்டிருப்பதாய்
பதைபதைக்கிறார்கள்
தப்பாமல் தமிழை தொடர்ந்த இடைவெளிகளில் நுழைத்து
இயம், துவம், வெறி, நெறி, இன்ன பிற செர்த்துக் குழைத்து
அன்றாடம் மூன்று மேடை ஆறு சேனல்களில்
கண் சிவக்க தோள் தினவெடுக்க
’பத்திக்கிச்சு பத்திக்கிச்சு’ என்று வத்திக்குச்சியோடு
வழிபார்த்தபடி முழங்கும்
கடிவாளப்பார்வைக் கருத்துரைஞர்களுக்குக்
கிடையாதா அறமெதுவும்?
அட, இது என்ன அக்கப்போர்
அறமென்பதே அடுத்தவர்க்கானதெனக் கொண்டால்
எல்லாம் தன்னால் புரியும் பார்!

••••

முதல் ஏழு மயக்கத்தைப் பரிசீலித்தல் கவிதைகள் ( அறிமுகப் படைப்பாளி ) / மதுரிமா

முதல் ஏழு
மயக்கத்தைப் பரிசீலித்தல்

மதுரிமா

1
நிலாவின் களங்கத்தை
இரு கை விரித்து ஏந்திக்கொள்கிறது
இந்த வாக்கியத்தின்
தன்மை இடத்தில் காதல்
தன்னை மறைத்துக்கொள்கிறது

2
ஐம்புலன்களும் கண்ணாக வேண்டும்
ரதியின் பாவம்
புலன்களின் மடைமாற்றம்

3
நீ நான் எல்லாமே
பெயருக்கு முகாந்திரங்கள்
வாடாப் பூந்தோட்டம் போய்ப்
பூப்போம் வா

4
கலைகள் ஏன் நித்யமாகின்றன
காலம் தன் பைத்தியக் காதலிகளிடம்
பித்தனைப் போல் சரணடைகிறது
எத்தனை பித்தோ அத்தனை பக்தி

5
காளியின் தத்தரிகிட சிவன் நெஞ்சத்தில்
சிவன் மோனத்தில் இருக்கிறான்
காளி வேகத்தைக் கூட்டுகிறாள்
சிவன் சிரிக்கிறான்
காளி ஆட்டத்தை நிறுத்தப் போவதில்லை
நாம் பிரார்த்திப்போம்

6
என் நினைவுகள்
என்னுடையதாக இல்லாதபோது
எதை நான் நினைவுகூர்வது?
கலங்கலற்ற பரிசுத்தமான மீனின் கண்கள்
தாரகைகளையே உண்கின்றன

7
பூட்டிய வீட்டில்
கூட்டிய முற்றத்தில்
தேங்கிய மழைநீரில்
ஒரு முகம்
இன்னொரு முறை

••••

பேப்பே ( சிறுகதை ) / ஹரி சங்கர்

விளையாட ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே தெரிந்துவிட்டது, அவர்கள் என்னைக் கட்டம் கட்டியிருக்கிறார்கள் என்று. நான் இதை முன்பே யோசித்திருக்க வேண்டும். எப்போதும் இதுபோல் தான் நடக்கும் எனத் தெரிந்திருந்தே முட்டாள் தனமாக வந்து சிக்கிவிட்டேன். என்னைப் பந்தால் அடிக்க கிட்ட்தட்ட முப்பது பேர் என்னை வட்டமடிக்கிறார்கள். அடுத்த நாற்பது நிமிடம் இவர்களிடமிருந்து நான் தப்பிக்க வேண்டும். முதல் அடியை வாங்கிவிட்டால் அந்த வலியே நம்மைச் சோர்வடைய செய்திவிடும். வேகமாக ஓட முடியாது. பிறகு அடுத்தடுத்த அடிகள் விழுந்துக் கொண்டேயிருக்கும்.

தப்பிக்க வேண்டும்… தப்பிக்க வேண்டும்… தப்பிக்க வேண்டும்…
தப்பிக்க வேண்டும்… தப்பிக்க வேண்டும்… தப்பிக்க வேண்டும்…
தப்பிக்க வேண்டும்… தப்பிக்க வேண்டும்… தப்பிக்க வேண்டும்…
மனது முழுக்க இதுதான் இப்பொது ஓடுகிறது, நானும்தான் ஓடிக்கொண்டே இருக்கிறேன்.

ஆமாம் உங்களிடம் கேக்க மறந்துவிட்டேன். பேப்பே விளையாட்டை உங்களுக்கு தெரியுமா? சரி சொல்கிறேன். அதுவரை கொஞ்ச நேரம் காலத்தை நிறுத்தி வைக்கிறேன். இல்லையேன்றால் உங்களிடம் பேச முடியாது. முதுகு பழுத்துவிடும்…

இரண்டு அணிகயாகப் பிரிந்து, எதிர் அணியில் இருப்பவர்களைப் பந்தால் அடிப்போம். பந்து என்றால் சாதரண பிளாஸ்டிக் பந்தோ அல்லது டென்னிஸ் பந்தோ அல்ல. ஸ்டெம்பர் (ரப்பர்) பந்து. ஒரு அடி வாங்கினால் முதுகு தண்டில் ஐஸ் வைத்தது போல் இருக்கும். சூடான காய்ச்சியக் கம்பியை காலில் இழுத்ததுப் போல் எரியும். இதில் தப்பிக்க ஒரு வழியுண்டு நம் அருகில் இருப்பவனிடம் பந்து இருந்தால் உடனே அவன் தலையை நாம் தொட வேண்டும். தொட்டுவிட்டால் அவன் அடிக்க மாட்டான்.

இதில் சில விதிமுறைகளும் உண்டு. பள்ளிக் கட்டிட்த்திற்க்குள் நுழையக் கூடாது. மரத்தில் ஏறக் கூடாது. எங்காவதுப் போய் ஓளிந்துக் கொள்ளக் கூடாது. பந்தை வைத்துக்கொண்டு ஓடக்கூடாது. ஒரு தடவைப் பிடிப்பட்டால் மூன்று அடிக்குமேல் அடிக்கக் கூடாது. நாங்கள் எத்தனைப் பேர் இருந்தாலும் அப்படியே இரண்டாகப் பிரிந்துவிடுவோம். எங்கள் வகுப்பில் விடுவோம். எங்கள் வகுப்பில் இரண்டு கோஷ்டி ஓன்று விஜி மற்றொன்று இருதயராஜ்
.
நான் எட்டாம் வகுப்பிலிருந்து ஓன்பதாவது போகும் போது இரண்டு பேருமே பெயிலாகி அங்கேயே அமர்ந்திருந்தார்கள். புதிதாக நாங்கள் போனது சிலர் விருப்பானவரிடம் சென்று இணைந்தனர். சிலர் எப்போதும் விஜியுடனே இருப்பார்கள். சிலர் இருதயராஜுடன். சிலர் எவர் பக்கமும் போகாதவர்கள். நான் முன்றாவது குழு. எங்களுக்கு வாரத்தில் இரண்டு நாள் விளையாட்டு வகுப்பு. செவ்வாய் மற்றும் வெள்ளி மாலைக் கடைசி வகுப்பு. அன்று வெள்ளீக்கிழமை கடைசி வகுப்பு. எல்லோரும் மைதானத்தை நோக்கி வேகமாக வந்தோம்.

வழக்கமாகப் பிரிவதுப் போல் அன்று பிரியவில்லை. தனித்தனியாக ஆடலாம் என்று இருதயராஜ்க் கூறினான். யார் யாரை வேண்டுமானாலும் அடிக்கலாம்.

யாரையாவதுக் கட்டம் கட்டினால் இப்படிதான் செய்வார்கள். அது நான் தான் என எனக்கு அப்போதுத் தோன்றவில்லை. இருதயராஜ் பந்தை எரிந்ததும் விஜி அதைப் பிடித்துப் பக்கத்தில் இருந்தவர்களை எல்லாம் விட்டுவிட்டு நேராக என்னை நோக்கி எறிந்தான். குறித் தவறியது. பின்னால் இருந்த இருசப்பன் பந்தைப் பிடித்து அவனும் என்னையேக் குறி வைத்தான். அப்போதுதான் எனக்குத் தெரிந்தது, இன்று குறி நான் என்று ஓட்டு மொத்த வகுப்பும் என்மேல் ஏன் கோபப்பட வேண்டும் என்று உங்களுக்குக் கேள்வி எழுகிறதா எனக்கும்தான்.

பிறகு நானே அதை ஊகித்து கண்டறிந்தேன், நேற்று அதாவது வியாழக்கிழமை எழுதிமுடித்தக் கணக்கு கிராப் நோட்டை ஆசிரியரின் மேஜையில் வைக்க வேண்டும். ஆனால் இருதயராஜும், விஜியும் யாரும் வைக்கக் கூடாது என்று கூறியிருந்தார்கள் கேட்டால் யாரும் எழுதவில்லை எனக் கூறச் சொல்லியிருந்தார்கள் ஓட்டு மொத்த வகுப்பும் வரையவில்லை என்றால் ஆசிரியர் மறுநாள் வரை அவகாசம் அளிப்பார். ஆனால் நானும், இன்னும் சிலரும் வைத்துவிட்டோம். என்மேல் மட்டும் ஏன் கோபம் என்றால் நான்தான் முதலில் வைத்தேன். என்னைப் பார்த்துதான் மற்றவர்கள் வைத்தார்கள். அதனால் நாந்தான் இப்போது குறி.

இந்த மாதிரி சூழ்நிலையில் நாம் எப்போதும் மைதானத்தில் நடுவில் தான் இருக்க வேண்டும். ஓரமாக எதாவது மரத்தின் அருகில் சென்றுவிட்டால் கண்டிப்பாக மாட்டிவிடுவோம். நேரம் கடந்து கொண்டேயிருந்தது. இன்று நான் அடி வாங்கிவிட்டால் கூடப் பரவாயில்லை. ஒரு வேலை அடியே வாங்காமல் தப்பித்தேன் என்றால் அந்த்த பகை மீண்டும் வளர்ந்துகொண்டேயிருக்கும். இதை இன்றொடு முடிக்க வேண்டும். வேறு யரிடமாவது அடிவாங்கினால் கூடப் பரவாயில்லை. ஆனால் இருதயராஜீடமும், விஜியிடமும் வாங்கக்கூடாது என முடிவெடுத்தேன்.

நழுவிவந்த டவுசரை நன்றாக அரைஞான் கயிற்றில் இருக்கிக் கொண்டேன், பந்து எடுக்க யாரும் என்னை அடிப்பதை விட பந்தை விஜியிடமோ அல்லது இருதயரஜீடமோ ஏறிவதிலேயேக் கூறியாக இருந்தார்கள். வேலுமணிப் பந்தை எடுத்து நேராக விஜியிடம் எறிந்தான். விஜி எனக்குக் கொஞ்ச தூரத்தில்தான் இருந்தான். அந்த தூரத்தில் பலம்கொண்டு அடித்தால் இரண்டு நாட்களுக்கு வலிப் போகாது.

ஓட ஆரம்பித்தேன். சரியாக அவன் அடிக்கும் நேரத்தை கணக்கிட்டுக்கொண்டே ஓடினேன். தீடிரென்று மைதானத்தில் தேய்த்துக் கொண்டே விழுந்தேன். பந்து எனக்கு நேர்மேலே சென்றது. எதிரில் யாரும் இல்லாததால் அது மைதானத்தின் அடுத்த கோடிக்கு ஓடியது. நான் சட்டேண எழுந்து எதிர் திசையில் ஓட ஆரம்பித்தேன், கீழே விழுந்ததில் கால் முட்டியில் தேயித்துக் கொண்டு இரத்தம் வந்தது. இருந்தாலும் அடியில் இருந்து தப்பித்த மகிழ்ச்சி, இன்னும் எத்தனை நேரம். பள்ளிக் கட்டிடத்திற்குள் சென்றால் தப்பித்து விடலாம். ஆனால் அது அவமானம் புறமுதுகிட்டு ஓடுவதிற்கு சமம். மூச்சு இறைத்தது, எப்போது மணி அடிப்பார்கள் என்று தெரியவில்லை.

எதிர்பாராத விதமாக பந்து என்னை நோக்கி ஓடி வந்தது. சதிஷும், குமாரும் ஓடி வந்தார்கள், நானும் பந்தை எடுக்க ஓட ஆரப்பித்தேன். முதலில் பந்தை எடுத்தது குமார்தான், நான் ஓடிவந்த வேகத்தில் குமாரை இடித்ததும் அவன் பந்தை நழுவவிட்டான். எடுக்க வந்த சதிஷை இடறிவிட்டு பந்தை நான் எடுத்தேன். பந்தை நான் எடுத்ததும் குமார் என் தலையைத் தொட்டுவிட்டான். அதனால் அவனை அடிக்க முடியாது. சதிஷை அடிக்க எனக்கு விருப்பமில்லை. யார் எனக்கு இருக்கிறார்கள் என்று கூட எனக்குத் தெரியாவில்லை.

குத்துமதிப்பாக முழுபலத்தைப் பிரயோகித்துப் பந்தை எறிந்தேன். யார் மீதுபட்டாலும் பரவாயில்லை என்று வேகமாகச் சென்றப் பந்து இருதயராஜீன் முகத்திலேயே அடித்தது. முகத்தை பிடித்துக் கொண்டு அப்படியே உட்கார்ந்து விட்டான். மற்றவர்கள் அனைவரும் அவனை சூழ்ந்துக் கொண்டார்கள். பாட்டிலில் தண்ணிர் வந்த்து, அங்கேயே அவன் கண்ணில் அடித்து முகத்தை கழிவினான். அவன் இடது கண் நன்றாக சிவந்து லேசாக வீங்கியிருந்தது. அவன் என்னை முறைத்துப் பார்த்தான். சரியாக அப்போது பள்ளியின் மணியடித்தது. நான் அவனைப் பார்த்துக் கொண்டே என் பையை எடுக்க ஓடினேன்.

பேப்பே முடிந்தது, போர்த் தொடங்கியது…