Category: முதன்மை 3

முரண் – கோமகனின் புதிய சிறுகதைத்தொகுதி குறித்து. – கே.எஸ்.சுதாகர்

இந்த வருடம் (2019) `எதிர்’ வெளியீடாக வந்திருக்கும், கோமகனின் ‘முரண்’ சிறுகதைத்தொகுதியை ஆர்வமாக வாசித்தேன். சில கதைகள் புதிய அனுபவத்தைத் தந்தன. சில கதைகள் பழகிய தடத்திலே ஓடிச் சென்றன. சுற்றுப்புறச் சூழல் மாசடைதல்,

சமுதாயச் சீர்கேடு, ஆண்-பெண் மற்றும் ஒருபால் உறவுகள், அகதி வாழ்வு எனப் பல வகைப்பாடுகளில் கதைகள் அமைந்திருந்தன. மனிதர்களுடன் அஃறிணைகளும் கதைகள் பேசின.

முதலாவது கதை ‘அகதி’ ஒரு புறாக்கதை எனப்பிடிபட சற்று நேரமாகிவிட்டது. ‘நான் எனது மனைவி மற்றும் எமக்குப் பிறந்த 10 மக்களும்…’ என்று முன்கூட்டியே சொல்லியிருந்தாலும், ‘ஒருநாள் பல்கனியில் எனது சகதர்மினி முட்டை போடுவதற்காக அந்தரப்பட்டு சரியான இடம் தேடி திரிந்து கொண்டிருந்தாள்’ என்ற பத்தி வந்தபோதுதான் புரிந்துகொள்ள முடிந்தது. புறா ஒரு நேரத்தில் ஆகக்கூடியது எத்தனை முட்டைகள் இடும்? கதையில் நான்கு முட்டைகள் எனக்குறிப்பிடுகின்றார் ஆசிரியர். ஆமை புகுந்த வீடு (கல்லாமை, பொறாமை, இயலாமை, முடியாமை) உருப்படாது என்று சொல்வார்கள். இந்தக்கதையில் புறாக்கள். கதையில் ‘ஒர்லியன்’ என்ற பிரான்ஸ் தேசத்து நகரம் பற்றியதொரு குறிப்பு வருகின்றது. ‘வன்னிப்பெருநிலம் எப்படி சரத் பொன்சேகாவின் தலைமையிலான படையணிகளால் மீட்கப்பட்டதோ, அவ்வாறே இந்த ஒர்லியன் நகரை நாஸிகளின் பிடியில் இருந்து மீட்டெடுத்த பெருமை ஜெனரல் பத்தோன் தலைமையிலான படையணியையே சார்ந்ததாக வரலாற்றுக்குறிப்பேடுகள் சொல்கின்றன’. இந்த ஒப்பீட்டை – கதையாசிரியர் கொஞ்சம் கவனித்துப் பார்க்க வேண்டும். இந்த ஒப்பீடு கண்டனத்துக்குரியது என்பது எனது கருத்தாகும். மற்றும் இந்தக்கதைக்கான தலைப்பு ‘அகதி’ என்பது அவ்வளவு பொருத்தமானதாகத் தெரியவில்லை. நகரமயமாக்கலினால் – விலங்குகள், பறவைகள் தமது வாழ்விடங்களை விட்டு அல்லல்பட்டு அகதிகளாக்கப்படுவதை அறிவோம். சொல்லவந்த விடயம் என்னைக் குழப்பத்தில் ஆழ்த்திவிட்டது.

கதைக்குள் முரண்கள் இருக்கலாம். கதையே முரணாக இருக்கலாமோ? `முரண்’ கதை அதைத்தான் சொல்கின்றது. ஒருபால் உறவு கொண்டதால்தான் அவருக்குப் பிள்ளை பிறக்கவில்லை என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதன்று. ஒருபால் உறவும் சுயமைதுனம் செய்வதும் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தாது என வைத்தியர்கள் சொல்கின்றார்கள். மலட்டுத்தன்மைக்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றுள் சிலவற்றைச் சொல்லியிருக்கலாம்.

‘தகனம்’ – இது ஒரு சுடலை சொல்லும் கதை. காலாதிகாலமாக நடைபெறும் சுடலை விவகாரம். பிறப்புமுதல் இறப்புவரை, வழிபாட்டிடங்கள் ஈறாகத் தொடரும் அவலம். எள்ளல் நடையுடன் கூடிய கதை. நல்லதொரு முடிவு.

`டிலிப் டிடியே’ – அழகாக தெளிந்த நீரோடை போன்று ஓடிசென்ற கதை, திடீரென்று என்ன நடந்ததோ வழிமாறி சுருண்டு படுத்துவிட்டது. பின்பகுதி தேவையிலாத கற்பனை. ஒரு அருமையான படைப்பாக வந்திருக்க வேண்டியது, குறைப் பிரசவமாகிவிட்டது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவில் `ஏறுதழுவுதல்’ மிகவும் சர்ச்சையாகிப் போனது. அந்த நேரத்தில் எழுதப்பட்ட கதையாக இது இருக்கலாம். மாடுகளுக்கு நேரும் அவலங்களை சொல்லிச் செல்லும் சுவையான கதை, விலங்கினங்களுக்கான அவலங்களை `எள்ளல்’ நடையுடன் நகர்த்திச் செல்கின்றார் ஆசிரியர். மனிதர்களால் தங்களுக்கு ஏற்படும் அவலங்களை ஒவ்வொன்றாக மாடுகள் அடுக்குகின்றன. இந்தக் கதையில் முரணின் உச்சத்தை நாம் பார்க்கலாம். ‘ஒரு புறத்தில் எம்மை வணங்கியவாறே எம்மை சித்திரவதை செய்கின்றார்கள் மனிதர்கள்’ என அவை ஓலம் எழுப்புகின்றன. கரணம் தப்பினால் மரணம் என்பது போல, இது ஒரு கட்டுரையாகிப் போய்விடுமோ என நினைத்தேன். நல்லவேளை சுவையான கதையாக்கிவிட்டார்.

ஒரு காலத்தில் நாம் இந்த வாழ்க்கையை அனுபவித்திருக்கின்றோம். `ஆக்காட்டி’ என்பது நரகத்தின் முள். ஒரு தலையாட்டிலில் எத்தனை பேரின் வாழ்க்கை கவிழ்ந்து போய் இருக்கின்றது. அடி அகோரத்தில், ஆக்காட்டிகள் தவறான மனிதர்களையும் தலையாட்டியிருக்கின்றார்கள். இயக்கம் அல்லாது, தமக்குப் பிடிக்காத மனிதர்களையும் ஆக்காட்டிகள் தலை ஆட்டியிருகின்றார்கள்.

`வெடிப்பு’ சிறுகதை சரியாக அமையப் பெறவில்லை.

`மாதுமை’ சிறுகதையில் வரும் சம்பவங்கள் போல, பல நம்மவர்களிடையே புதைந்து உள்ளன. அகதியாக பல இன்னல்கள் பட்டு வந்து சேரும் ஒவ்வொருவருக்கும் தமது குடும்பத்துடன் இணைந்து கொள்வதற்கு படும் பாடு சொல்லமுடியாதது. ‘ஆளுக்கொரு தேதி வைத்து ஆண்டவன் அழைப்பான்; அங்கே யாரழுதால் அவனுக்கென்ன காரியம் முடிப்பான்’ என்பதைப் போல தயவுதாட்சண்யமின்றி எவ்வளவோ நடந்திருக்கின்றன. அல்ஜீரியா, இத்தாலி ஊடாக பிரான்ஸ் செல்வதற்கு முனையும் ஒரு தாயினதும் மகளினதும் உயிரோட்டமான விறுவிறுப்பான கதை இது.

காலம் மனிதனை எப்படி எல்லாம் கட்டிப் போட்டுவிடும் என்பதற்கு உதாரணமாக `பருப்பு’ என்ற கதை. இந்திய அமைதிகாக்கும் படையினரின் அட்டூழியங்கள் எல்லாம் சேர்ந்து `பருப்பை’ விரட்டியடித்து பிரான்ஸ் செல்ல வைக்கின்றன. அங்கும் அவனுக்கு வாழ்க்கை சரியாக அமையவில்லை என்பதைச் சொல்கின்றது இந்தக்கதை..

`சுந்தரி’ சீட்டை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை. முடிவு என்னவோ வலிந்த முடிவாகத் திணிக்கப்பட்டுள்ளது.

தொகுப்பில் `மாதுமை’, ‘பருப்பு’, `சுந்தரி’ போன்ற சில கதைகள் – கதை கொண்டிருக்கும் கருவுக்கு, முடிவுகள் தொடர்பற்று இருக்கின்றன. சரியான தீர்வுகள் கிட்டவில்லை. சும்மா எழுந்தமான முடிவுகளைத் தந்து விடுகின்றார். வித்தியாசமான உத்திகளுடன் எழுதப்பட்டுள்ள கதைகளை வாசித்துக் கொண்டுவந்த எனக்கு, இந்த மூன்று கதைகளும் ஏமாற்றத்தைக் தந்தன. இந்தக் கதைகளின் ஆரம்பம் ஒரே மாதிரி அமைந்ததுடன் சொல்லும் முறைமையும் ஒரே மாதிரி அமைந்தது கண்டேன். தலைப்பு முதல் கொண்டு இவை மூன்றிலும் புதுமையே இல்லை.

வாழ்க்கையின் முரண்களை கருப்பொருளாக வைத்துக்கொண்டு, மேய்க்க முடியாத சங்கதிகளையெல்லாம் ஒரு நுகத்தடியில் கட்டி, வண்டிலில் போட்டு மேய்ந்திருக்கின்றார் கோமகன். சொல்வதற்கு தயங்கும்/அச்சப்படும்/ கூசும் விடயங்களை சாவதானமாக எடுத்துக்கொண்டு ஒரு அலசு அலசியிருக்கின்றார். வித்தியாசமான முயற்சி.

•••

பி.கே. சிவகுமார் கவிதைகள்

தூசி படிந்த புகைப்படச் சட்டகம் மாதிரி
புகைக் கருமை மடிந்த சமையலறை புகைபோக்கி மாதிரி
உன் சுவாசக் குழாய்களை அடைக்கும்
துயர நினைவுகளின் சுமை
கடந்த காலத்தை ஆராய்வது
நிகழ்கால பொழுதுபோக்கு
நான் மட்டும் காரணமில்லை என்றாலும்
குற்றவாளிக் கூண்டில் ஏற்ற உனக்கும்
குற்றமென்ன எனக் கேட்க எனக்கும்
அலுக்காத பிராதுகள் தொடர்கிறபோது
உன் ஆரோக்கியத்துக்காகவாவது
தூசி படிந்த புகைப்படச் சட்டகத்தையும்
புகை மடிந்த புகைபோக்கியையும்
கழட்டிவீசி விடேன் எனச் சொல்வது எனக்கும்
கழட்டி வீசுவது என முடிவெடுப்பது உனக்கும்
கடினமாக இல்லாத போதும்
ஒன்றும் செய்யாமல் இருந்துகொண்டு
இருவருக்குமிடையில்
பிரிகிற பாதையில்
இருக்கிற மரங்களின்
நிழல்களையும் கவனியாதவர்களாகி விட்டோம்

ஜனவரி 7, 2019

*****

இந்தப் ப்ரியத்தை
ஒருநாள்
குதறத்தான் போகிறேன்
அதனால் வேண்டாம்

அதனால் என்ன?
குதறுகிற வரை
ப்ரியம் வைப்போம்

குதறிய பிறகு?

பதிலுக்கு
நானும் குதறுவேன்

அப்புறம்?

மறுபடியும்
புதிதாய்ப்
ப்ரியம் வைக்கத் தொடங்கலாம்

எத்தனை முறை
இப்படிச் செய்ய முடியும்?

காயங்களுக்குப்
ப்ரியமே மருந்தாகிற வரை

குதறுவதை
நிறுத்தச் சொல்ல மாட்டாயா?

மாட்டேன்

ஏன்?

ப்ரியத்தில்
நாம்
நம்மையும்தானே
குதறிக் கொள்கிறோம்

– பிப்ரவரி 16, 2019

*****

பனிப்பொழிவில் உறையும்
கோடைக்காய்ச்சலில் சுடும்
போர்வை போர்த்திய பிறகு குளிரும்
உடைகள் களைந்த பின் எரியும்
சமநிலைகளைப் பராமரிக்க முடியுமா
உபகரணங்களால் எப்போதும்
கோடைக்காலத்தில் எறும்புகள்
குளிர்காலத்தில் கொசுக்கள்
எப்போதும் சிலந்திகள்
வாரமொருமுறை குடிக்கும்
தொட்டிச் செடிகள் வானம் பார்க்காமல்
வெப்பச் சமநிலை ஒளியும்
இயற்கை ரசாயன உரமும் திகட்டி
வளர்ச்சியை நிறுத்திக் கொண்ட
கறிவேறிப்பிலை காத்திருக்கிறது
பூஜையறையில் கடவுள் கண் திறக்க
மைக்ரோ ஓவனின் முனகலுக்கு
அமைதி காக்கும் கேஸ் அடுப்புகள்
தானியங்கி விளக்குகள் எரியும்
அணையும் நேரம் காட்டி
பின்னிரவுகளில் விழித்திருக்கும் தொலைகாட்சி
விழிக்கும்போது வருவது இரவு
தூங்கும்போது தெரிவது பகல்
சன்னல் மரத்துக் குஞ்சுகள்
கூட்டை விட்டுப் பறந்து விட்டன
தேடலும் பதட்டமும் இல்லாத
பறவைக்குப் பொழுதுபோக
மண்புழுக்கள் விளையாட்டுத் துணை
நிலாவற்ற இரவுகளின் துணைக்கு
கூட்டுக்குள் வெளிச்சம் கொணரும்
மின்மினிப் பூச்சிகளின் சுடர்
ஈரப்பதமும் வெக்கையும்
வியர்வையாய் வழியும் மண்ணில்
மழை பொய்த்த வானத்தின் கீழே
தண்ணீர்க் கஷ்டம் இருப்பதே தெரியாமல்
பூத்துக் குலுங்குகிறது ஓர் அக்னிக் கொன்றை
அதனடியில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்
சிறுவர்கள்
பூக்கள் போர்த்திய உடல்களுடன்
எங்கிருந்து கொண்டு
எதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்

மார்ச் 10, 2019

*****

நீராகத் திரளுமொன்றை
விரும்பிய பாத்திரத்தில் நிரப்பலாம்
பாட்டிலில் குடிக்க நிறைக்கலாம்
நீராடி மகிழப் பயன்படுத்தலாம்
விருந்துண்ட வாய் கழுவ
கொப்பளித்து எச்சிலாய்த் துப்பலாம்
கொடுக்கப்படுகிற ஆணைகளேற்று
விருப்பப்படி மாறுவதற்காகவே
பிறந்ததொன்று
உன் கைகளில்
அமுதமாகும் சாக்கடையாகும்
ஆட்சேபணையின்றி

ஆயிரம் விளையாட்டுகள்
இப்படி
ஆடுவதை விட்டுவிட்டுக்
கல்லைத் தூக்கி
உள்ளே போட்டுக்
கரை என்று சொன்னால்
என்ன செய்யும்
கடல் என்றாலும்

மார்ச் 12, 2019

*****

நகுலனுக்கு சுசிலா
கலாப்ரியாவுக்கு சசி
கல்யாண்ஜிக்கு அபிதா
கண்டராதித்தனுக்கு நித்யா
வரி துலக்கி
பெயர் மாற்றி
தன்னழகி
முகம் பார்க்கும் வாசகர்
முணுமுணுக்கிறார்
பெயரில் என்ன இருக்கிறது

ஜனவரி 7, 2019

*****

ஃபெய் யெ – ( மூடுபனிக் கவிகள்-6 ) – ஆங்கிலம் வழியாகத் தமிழில்: சமயவேல்

கவிஞர் ஃபெய் யெ சீனத்தின் வட கடைசிப் பிராந்தியமான ஹீலாங்ஜியாங்கில் ஹர்பின் என்னும் இடத்தில் 1962ல் பிறந்தார். இது கருப்பு டிராகன் நதிப் பிரதேசத்தில் உள்ளது.

சீன ஜனநாயக இயக்கத்தில் பங்கு பெற்றவர். இவர் அடிக்கடி மூடுபனிக் கவிகளோடு தொடர்பு கொண்டிருந்த போதும் தன்னை ஒரு இளம் தலைமுறைக் கவிஞர் என்றும் மூடுபனிக் கவி என்று அழைக்கப்படுவதில் விருப்பமில்லை என்றும் கூறுகிறார். ஃபெய் யெ தலைமறைவாக இருந்த போது நான்கு கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டிருக்கிறார். ருஷ்யக் கவிதைகளின் தொகை நூல் ஒன்றையும் ஓசிஃப் மண்டல்ஷ்டாமின் கவிதைத் தொகுப்பு ஒன்றையும் சீனத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளார்.

ஃபெய் யெ, ‘தனிப் படை’ என்னும் தலைமறைவு இலக்கிய இதழின் ஆசிரியராக இருந்திருக்கிறார். 1983ல் இவர் ‘தனிப் படை’ இதழை ஒரு பள்ளியில் அச்சுத் திருத்தும் போது கண்டுபிடிக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார். ஆனால் ஃபெய் யெ, கட்சி சித்தாந்தத்தைப் புகழ்ந்து ஒரு மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்ததால் இரண்டு வாரங்களில் விடுதலை செய்யப்படுகிறார்.

பிறகு பீகிங்கில் டோர்லீ ஃபாங் என்னும் ஒரு சீன-அமெரிக்க ஆங்கில ஆசிரியை ஒருவரைச் சந்தித்து காதலித்து திருமணமும் செய்து கொள்கிறார். சீனாவை விட்டுச் செல்வதற்காக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் செய்த போது காவல்துறை மீண்டும் அவரைச் சிறையில் போடுவோம் என்று மிரட்டியது. அமெரிக்க தூதரகத்தின் உதவியோடு 1986ல் இவரும் இவரது மனைவியும் கலிஃபோர்னியாவுக்கு அகதிகளாகச் சென்றார்கள். இப்போது பெர்க்லியில் வசித்து வருகிறார். 1989ல் பெர்க்லியில் “நாடு கடத்தப்பட்ட சீன எழுத்தாளர்கள்” என்னும் அமைப்பை நிறுவினார். இவரது ‘சாபம்’ ‘அமெரிக்காவில் கவி’ ஆகிய புகழ் பெற்ற கவிதைகள் அமெரிக்கா சென்ற பிறகு எழுதியவை. பெர்க்லியில் ஒரு அடிதடி வழக்கில் சிறை சென்றுவிட்டதால் இப்போதைய அவரது நிலை பற்றித் தெரியவில்லை. இவரது கவிதைத் தொகுப்புகள் எதுவும் ஆங்கிலத்தில் இருப்பதாகவும் தெரியவில்லை.

ஃபெய் யே கவிதைகள்

சாபம்

நான் எழுந்து கொண்ட கணத்தில், நான் ஒரு கனவின் உட்புறம் இருக்கிறேன்:
படுக்கை அடியாட்களால் சூழப்பட்டிருக்கிறது.
கண்ணாடியில் இருந்து பற்கள் என்னைப் பிடுங்குகிறது
ஒவ்வொரு பகலும் இரவும் நரகத்தில் ஒரு பருவம்,
எனது திறந்த கண்கள் சுவர் வழியாக துளைத்துச் சென்று பார்க்கிகிறது
நோய்ப்படுக்கைகளால் விரிக்கப்பட்ட பூமியை.
ஒரு புதிதாய்ப் பிறந்த முகத்தில் உங்களால் நூற்றாண்டின் அபத்தத்தைக் காண முடியும்—
அடியாட்களும் பலியானவர்களும் ஒருவரையொருவர் சார்ந்திருக்கிறார்கள்
கடந்த காலத்திற்குச் செல்ல அங்கு எந்த சாலையும் இல்லை, எப்போதும் இருந்ததில்லை.
நான் எழுந்து கொண்ட அந்தக் கணத்திலேயே நான் நினைவுகூரத் தொடங்கினேன்,
மனதின் நதியில் படகு நிலை தடுமாறி அலைகிறது,
இந்தப் பரிசுத்தமான தண்ணீர் எங்கே செல்கிறது?
அதில் உனது பிம்பத்தைக் கூட உன்னால் பிடிக்க முடியாது.
பகலின் இறுதியில் முடிவு தெளிவாகிவிடும்.
அமைதி, மாபெரும் ஆயுதம், தாங்கிக் கொள்வதற்காகக் கொண்டு வரப்படுகிறது:
சொற்கள் இல்லை, பாடல்கள் இல்லை, அழுகை இல்லை.
மினுக்கிடும் விளக்கு தூங்கும் நேரத்தில் அணையும் வேகத்தில்
பூமி ஆதிகால அமைதிக்குத் திரும்பட்டும்
நட்சத்திரங்கள் தங்களது புராதன விளையாட்டுக்களை ஆடுகையில்
மீன்களைப் போல வாய் பிளந்து, மக்கள் மரணத்திற்காகக் காத்திருப்பார்கள்.

அமெரிக்காவில் கவிஞர்

ஓ கவியே, ஏன் துயரமுறுகிறாய்?
ஓ பாடகனே ஏன் உனது குரல் உடைகிறது?

அமெரிக்கா, நான் உன்னைப் பார்க்க முடியாது.
உனது சேரிகளில் இருந்து ஒருபோதும் நான் வெளியே வரமாட்டேன்;
அந்த வான்முட்டும் கட்டிடங்களுக்கு அப்பாலுள்ள உனது முகத்தை நான் பார்க்கமாட்டேன்
அமெரிக்கா உனக்குத் தெரியுமா
ஃபெய் யெவின் தலைக்கு மேலே சரியாக காஃப்கா இருக்கிறான்
இன்றைய அரண்மனைக் கோட்டையைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்பது?
முன்னேறுவதற்கான நம்பிக்கையை எனக்கு அவன் தருகிறான்,
மேலும் இளம் உதவாக்கரைகளை எனது சகோதர சகோதரிகள் ஆக்குகிறான்.

அமெரிக்காவில் வாழ்க்கை என்பது அறிவியல் புனைவு போன்றது,
கவசமணிந்த வண்டுகள் போல கார்கள் ஊர்ந்து செல்லும் அமெரிக்கா,
அங்கு நிலையில்லாத தட்டான்கள் போலச் சுற்றும் விமானங்கள்,
மேலும் மக்களின் முகங்கள் நாய்களுடையதைப் போல தொங்கிக் கொண்டிருக்கும்.

விட்மன், பழைய சதிகாரன் நீ,
டிவி ஆண்டனாக்கள் உனது மாபெரும் தாடியைக் கத்தரித்துவிட்டன.
உனது பிள்ளைகளிடமும் பேரப்பிள்ளைகளிடமும்
வறுமையின் வலி மட்டுமே இருக்கிறது.
கொலை, தற்கொலை, எதுவுமே புதிதில்லை
நீ பாடும் அமெரிக்காவில்.
ஓ கவியே, விரைவாக, எனக்கு உதவுங்கள் இந்த ஏவுகணையைக் குறிபார்க்க—
ஒரு கடைசி முறையாக, நான் விலைகளைப் பரிசீலிக்கத்தான் வேண்டுமா
இந்த மனித மாமிசச் சந்தைகளில்?

ஒரு சிறிய கிரகத்தின் சிறிய உயிர்ப்பிராணிகள் நாங்கள்

ஒரு சிறிய கிரகத்தின் சிறிய உயிர்ப்பிராணிகள் நாங்கள்
பகலைத் தாண்டி எங்களுக்காகத் தூக்கம் காத்திருக்கிறது.
சூரியன் எங்களிடம் விடைபெறாமலே போய்விடுவதால்,
இரவுச் சாப்பாடு வயிற்றுக்குள் புளித்துப் போகிறது
அறைக்குள் வெளிச்சம் மங்கலாகவும் உறுத்தலாகவும் இருக்கிறது,
நிழல்கள் வாத்துகளாலும் ஆடுகளாலும் நிரம்பிக் காணப்படுகிறது.
நாங்கள் சின்னஞ்சிறிய பிராணிகள், எங்களது புலன்கள் மரத்துவிட்டன,
கீழ்வானம் எவ்வாறு பற்றி எரிகிறது என்று எங்களால் பார்க்க முடியாது
நாங்கள் படுக்கையின் ஒரு மூலையில் வெறுமனே குவிந்து கிடக்கிறோம்,
நாங்கள் இனி ஒருபோதும் சந்திக்க முடியாத எங்களது குழந்தைப்பருவ நண்பர்கள் பற்றிய
கனவுகள் வழியாக எங்களது பயம் எங்களைத் தாக்குகிறது.
தூரத்தில் இருண்ட இடிமேகங்கள் கர்ஜிக்கின்றன,
ஒரு தூரத்து நட்சத்திரத்தில் வசிக்கும் ஒரு கடவுளால்
ஒரு சின்னஞ் சிறிய கிரகத்திற்கு தற்செயலாக அனுப்பப்பட்ட செய்தி.
அடர்கருப்பு மேகங்களின் இந்தக் கூடாரத்துக்குக் கீழே
நாங்கள் நடுங்குகிறோம் மற்றும் குலுங்குகிறோம்.

ஒரு சிவப்பு நூற்றாண்டில் பாடகர்

ஒரு இமை வேகத்தில்
கடவுளின் விந்து பூமியெங்கும் சிதறுகிறது
பூக்கள் மலர்கின்றன, பழம் பழுக்கிறது, மனிதம் நிலைக்கிறது:
கொடூரமான கருஞ்சிவப்புப் பேரரசர் கட்டளைகளைப் பிறப்பிக்கிறார்
நாள் முழுவதும் வீடு முழுக்க மொஸார்ட் எதிரொலிக்கிறார்,
மேலும் நீ அந்தியில் பாடுபவன்
உனது கரகரப்பான சோர்வடைந்த குரல் முடிவற்று அழைத்துக்கொண்டே இருக்கிறது
உரத்து, உரத்து மற்றும் கூடுதல் கரகரப்புடன்.

வெற்று அறையில் நீ பஞ்ச் வகை மதுவருந்தி நிற்கிறாய்;
அங்கு பாடுவதைத் தவிர செய்வதற்கு ஒன்றுமில்லை.
காட்டு ஸ்ட்ராபெர்ரிகள் மௌனத்தின் பரவசத்தை ஒப்பிக்கின்றன
மேலும் விஸ்வாசத்தின் வடிவங்களில் இருந்து விடுவிக்கப்பட்டதால்
கடைசியாக நாக்கு விடுதலை அடைந்தது,
எனினும் காப்பாற்றப்பட்ட நாக்கு எதையும் சொல்வதே இல்லை
போய்க் கொண்டே இரு, தெருக்களை முட்டு, அங்கு நீ இறக்கும் போதிலும்
ஒரு சிவந்த நூற்றாண்டின் பாடகனே, அக்கிரமத்தின் சாட்சியே,
பயங்கர அமைதி நிலவும் நள்ளிரவில் உனது மௌனம் வெடிக்கும்
அமைதி என்றால் என்ன என்று உலகிற்கு ஒருபோதும் தெரியாமலே போகும்.

சம்பிரதாயமான போற்றுதல்

ஒரு பச்சை பீர் பாட்டிலின் அடியில் உள்ள சூரியன்
அதன் வீட்டைக் கண்டுபிடித்தது

நோக்கமற்றுப் பாயும் ரத்தம்
விரல்களையும் இலைகளையும் சேர்ந்து நடுங்க வைக்கிறது

ஒரு காலைக் கனவில் இருந்த ஆள்
வாசல் தெளிப்பதற்கு முன்பே கிளம்பிப் போனான்

நான்கு ஒளிவீசும் கண்களின் பறவைமனிதன்
ஆழ்ந்த துக்கத்துடன் இனி எப்போதும் பாடுவதில்லை

ஒரு பெரிய தங்கக் கடிகாரம்
உனது இதயத்தில் என்றென்றும் தொங்குகிறது
மெண்டல்ஷ்டாமின் கண்ணீர்

மெண்டல்ஷ்டாமின் கண்ணீர் எனது முகத்தின் மேல் சொட்டுகிறது,
ஃபெய் யெவின் கண்கள் இறந்தவனின் கண்கள் போல இருக்கின்றன
கோபமுற்ற காற்று எழும்புகிறது, பீத்தோவனின் புயல் கூரையின் தோலை உரிக்கிறது,
எனது இறந்த தலைக்குள் ருஷ்ய சித்ரவதை முகாம்களின் தீவுகள் மிதக்கின்றன.

மெண்டல்ஷ்டாமின் கண்ணீர் எனது முகத்தின் மேல் சொட்டுகிறது,
ஷுமனின் நரம்புகள் கூரையிலிருந்து தரைக்குப் பரவுகிறது,
மெண்டல்ஷ்டாம், நாடு கடத்தப்படுதலின் குளிரை எனது உடலுக்குள் செலுத்துகிறான்,
எனது இறந்த தலைக்குள் அமெரிக்க சித்ரவதை முகாம்களின் தீவுகள் நொண்டுகின்றன.

மெண்டல்ஷ்டாமின் கண்ணீர் எனது முகத்தின் மேல் சொட்டுகிறது,
ஆகாயத்தில் நட்சத்திரங்கள் ஓநாய்களின் கண்களைப் போலப் பிரகாசிக்கின்றன,
புராதனக் குகைகளில் இருந்து மானுடக் கொடூரத்தின் காற்று வீசுகிறது,
செங்குத்துப்பாறைகள் நிறைந்த சித்ரவதை முகாம்களின் தீவுகள் மிதமாகக் குலுங்குகின்றன.

***

உயிர்வாசனை விரும்பும் உயர்நேசம் / இரா. தமிழரசி

அன்பாதவனின் ‘உயிர்மழை பொழிய வா’ எனும் கவிதைத் தொகுதியில் மிகப்பரவலாய்ப் பேசப்பெற்றுள்ள உள்ளீடுகள் காதல், காமம், பிரிவு இவையே.. சக்திஜோதியின் முன்னுரை இந்நூலுக்கு அணிசேர்ப்பதாக அமைந்துள்ளது பாராட்டத்தக்கது. அகவாழ்வில் ஆணின் நிலை, பெண்ணைச் சார்ந்து இயங்குவதை நூறு விழுக்காடு ஒத்துக்கொள்கிற கவிஞரின் நேர்மைக்குக் கரம்குலுக்கியே தீரவேண்டும்.
இத்தொகுப்பில் சங்கச் சாயலோடு பொருத்தப்பாடு கொண்ட கவிதைகள் மிக்கிருப்பதைக் காண்கையில், பன்னெடுங்கால இலக்கிய நெடும்பரப்பில் வடிவத்தில் வேற்றுமை இருப்பினும், மாறா மனித உணர்வுகளே கவிதைகளாக முகிழ்க்கின்றன என்பதை அறியமுடிகிறது.
1. பருவத்தைப் பிறழ உணரும் காதல்
மன உணர்வுகளுக்கு ஏற்பப் பருவங்களைப் பிறழ உணருகிற போக்கு ஆண் பெண் இருசாரார்க்குமே உண்டு. இணையற்ற இரவுகளின் நடுக்கத்தை,
“பனிப்பொழிவைக் கண்டதில்லை
கடுங்குளிரை உணர்கிறேன்
தூரதேசத்தில் நீ”

எனும் வரிகளால் அறியமுடிகிறது. தூரதேசத்தில் இருப்பினும் மனத்தை நனைத்து நடுங்கும் குளிரை உணரச்செய்யும் ஆற்றல் அன்புக்கு உண்டு. தலைவனுக்குத்தான் இந்நிலை என்றில்லை, தலைவியும் இதற்கு மாற்றுக்குறையாத நேசத்தோடு பிரிவை ஆற்றியிருக்கும் நிலையை,

“கானம் காரெனக் கூறினும்
யானோ தேறேன் அவர் பொய்வழங்கலாறே”
என்கிறது குறுந்தொகை. இடித்து, மின்னி, தூறி இது கார்காலம்தான் என்பதை வானம் மெய்ப்பித்தாலும், அவளின் காதலன் பொய் சொல்லமாட்டான் என நம்பியிருந்த காதலிகள் வாழ்ந்த நாடு இது. இவ்வாறு பருவங்களைப் பிறழ உணருகிற போக்கு இருபாலருக்குமே பொதுவானதாக அமைகின்றது.

2. பஞ்சபூதங்களாகவும் உணர்தல்

சேரமான் பெருஞ்சோற்று உதியஞ்சேரலாதன், பாரதப்போரின் இருபெரும் படையினருக்கும் குறைவின்றி உணவு வழங்கினான். எதுவரை என்றால் போரின் முடிவில் நூற்றுவரும் மடியும்வரைப் பாகுபாடின்றி அத்தனை அக்ரோனி சேனைகளும் பசியாறுமாறு உணவளித்தான். அவனின் ஆற்றலைப் போற்றியும், அவனுக்கு அறிவுரை வழங்கியும், நீடூழி வாழியென வாழ்த்தியும் முரஞ்சியூர் முடிநாகராயர் பாடிய பாடலொன்று புறநானூற்றில் இடம்பெற்றுள்ளது.

“மண்திணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித்தலைஇய தீயும்
தீமுரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கைபோல
போற்றார் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்
வலியும் தெறலும் அளியும் உடையோய்”

என விளிக்கிறார். இப்பாடலில் ஐம்பெரும் பூதங்களின் தன்மைகளையும் ஒருங்கே பெற்றவன் சேரமான் என்கிறார். நிலத்தையொத்த பொறுமையும், விசும்பையொத்த ஆராய்ச்சி அறிவும், காற்றையொத்த வலிமையும், தீயையொத்த ஆற்றலும், நீரையொத்த இரக்கமும் கொண்டவன் என்கிறார். இவ்வாறே அன்பாதவனின் ‘யாதுமாகி’ எனும்
தலைப்பிலான கவிதையில், தனக்கு எல்லாமுமாகப் பெண்ணொருத்தி இருப்பதை,

“ ஆழ்ந்த அமைதியும்
அலையென இயக்கமும் கூடிய
நீராலானவள் நீ……
…………………………………………………………
வெடித்த பாளமான சோகங்கள் தாண்டி
நீளும் வேர்களுக்கு
உணவூட்டி உயிரளிக்கும் பரிவில்
நிலமாயானவள் நீ…

சூரிய சந்திரனைச் சமமாய்ப் பாவித்துப் பயணிக்கும்
வானமாயானவள் நீ”

என்கிறார். பஞ்சபூதங்களின் தன்மைகளைப் பெண்ணிடம் கண்டுணர்ந்த
கவிஞரின் நுண்ணுணர்வே படைப்புவெளியை கவிதையால் நிரப்புகிறது. சுடும் இயல்புடைய சூரியனையும், குளிர்ந்த இயல்புடைய சந்திரனையும் இயல்பறிந்து உள்ளவாறே ஏற்கும் வானத்தைப்போன்ற, பரந்தபட்ட இதயக்களம் வாய்த்த யதார்த்தத்தின் ஒட்டுமொத்த பிம்பமாய்ப். பெண்ணொருத்தியைக் கண்ணுறுகிறார் கவிஞர்.

3. தூது விடுதல்

ஆண் பெண் பேதமின்றிக் காமம் மிக்க தருணங்களில் கழிபடர் கிளவிகளால் மரம், செடி கொடிகளிடமோ, பறவைகளிடமோ, விலங்குகளிடமோ, மனசிடமோ தூது சொல்லிவர வேண்டுவதும் காதலில் ஒருபடிநிலை. தமிழ்விடு தூது, அழகர் கிள்ளைவிடு தூது போன்று தனிநூல்களும், சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், தனிப்பாடல் போன்ற தனித்த பாடல்களும் தமிழில் காணக்கிடைக்கின்றன. அந்தவகையில் பறவையிடம் தூது சொல்லி வருமாறு வேண்டுகிறான் தலைவன் ஒருவன்.

“நானிருப்பது பாலை
நீயிருப்பதோ மருதம்
நீண்டதூரம் பறக்குமோ
இந்நாள் பட்சிகள்
மருந்து தெளித்த கனிகள்
நஞ்சுகலந்த விதைகள்
சந்தேகத்திற்குரியது
சிறகுகளின் சக்தி…”
எனத் தனது காரியம் நிறைவுறாது போய்விடுமோ என்னும் கவலை ஒருபுறமிருக்க, மாசற்ற சுற்றுச்சூழலால் பறவையின் உயிர்க்கு ஏது நேருமோ எனும் கவியின் வருத்தமே அன்பாதவனின் கவிதைக்கான பலம். இதே பொருண்மையில்,

“கானலும் கழறாது கழியும் கூறாது
தேனிமிர் நறுமலர் புன்னையும் மொழியாது
ஒருநின் அல்லது பிறிதுயாதும் இலனே
சொல்லல் வேண்டுமால் அலவ”
எனும் நற்றிணை பாடல் அலவனைத் தூது விடுகிறது.

“செங்கால் மடநாராய் தென்னுறைந்தை சேறியேல்
நின்கால்மேல வைப்பன் என்கையிரண்டும்- நன்பால்
கரையுறிஞ்சி மீன்பிறழும் காவிரிநீர் நாடற்கு
உரையாயோ யானுற்ற நோய்”
எனும் முத்தொள்ளாயிரப் பாடல் தலைவி நாரையைத் தூது விடுகிறாள்.

“நீயலையே சிறுபூவாய் நெடுமாலார்க்கு என்தூதாய்”

எனும் நம்மாழ்வாரின் தலைவி பூவையைத் தூது விடுகிறாள். முன்னோர் மொழிப்பொருளைப் பொன்னேபோல் போற்றும் இயல்பும், பேதலித்த மனத்திற்கான ஆறுதலைத் தேடும் முன்னையோரின் பாதையில் மாறாமல் பயணிக்கும் கவிஞரின் இயல்பையும் இவரின் கவிதைகளில் காணமுடிகிறது.

4. பொருள்வயின் பிரிதல்

உள்ளம் பிணிக்கொண்டோள் இடத்து உடனே செல்லல்வேண்டும் எனப் பொருள்வயின் பிரிந்த தலைவனின் நெஞ்சம் அடம் பிடிக்கிறது.
வந்தவேளை முற்ற முடியாது திரும்பிச் சென்றால், செயல்திறன் இல்லாதவன் என உலகம் தூற்றும், எனவே வினையில் கவனம் செலுத்து என அறிவு அறிவுறுத்துகிறது. நெஞ்சம் ஒருபுறம் செலுத்த அறிவு மறுபுறம் பற்றியீர்க்க வலிமைகொண்ட இருயானைகளால் இழுக்கப்படும் நைந்த கயிறுபோல உயிரானது அல்லலுறுகிறது என்கிறார் தேய்புரிப்பழங்கயிற்றினார் எனும் சங்கப்புலவர்.

“ஔிறு ஏந்து மருப்பின் களிறுமாறு பற்றிய
தேய்புரிப் பழங்கயிறு போல
வீவதுகொல் என் வருந்திய உயிரே”
எனும் பாடலை அடியொற்றியதாக,

“மலையிலிருந்து விடுபட முடியாமல்
கடலோடு தொடர்ந்திட விளையாட
நொடிகள்தோறும் அல்லாடும் நதி”

எனும் படிமத்தின் வழி, கடமைகளிலிருந்து விடுபட முடியாமலும், வாழ்வின் இன்பங்களை நுகர்ந்திட இயலாமலும் படும் உயிரின் வாதையைப் புலப்படுத்துகிறது கவிஞரின் கவிதை.

5. நோயும் மருந்துமாய் ஆதல்

பெண்ணின் பார்வையே நோயாகவும் மருந்தாகவும் இருப்பதைப் புலப்படுத்துகிறது வள்ளுவரின் காமத்துப்பால் குறளொன்று.

“இருநோக்கு இவளுண்கண் உள்ளது ஒருநோக்கு
நோய்நோக்கு ஒன்றந்நோய் மருந்து”
எனும் இதே கருத்தமைந்த பதிவாய்,

“மருந்தாக வா என்றாய்!
வில்லையெனில் விழுங்கிவிடலாம்
திரவமெனில் கரைந்து விடலாம்
ஒத்தடமெனில் ஒத்தி மலரலாம்
……………………………….
நோயே மருந்தாகும் விசித்திர சிகிச்சை
என்ன பெயரில் அழைக்கலாம்
ப்ரியமே!”
என்கிறான் கவிதைக் காதலன். தனக்கான நோயைத்தந்த ஒருத்தியே அதற்கான மருந்துமாக இருக்கும் விசித்திர சிகிச்சைக்குப் பெயர் வைக்கும் ஆராய்ச்சி நடக்கிறது இவரின் கவிதையில். இவரின் மற்றொரு கவிதையிலும்,

“கனப்புத் தணலாய்
நீறுபூத்த உணர்வுகளோடு
தீண்ட இயலாத அனலாய்
அணைத்தால் எரிகிற புதுநெருப்பாய்
தீயாலானவள் நீ”

என்கிறார். தீண்ட இயலாத அனலைத் துணிந்து அணைக்க, எரியும் புதுநெருப்பை உணர்வதாகக் காட்டுகிறது கவிதை.

“நீங்கின் தெறூஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்”

என்னும் திருவள்ளுவரின் கவியுணர்வோடு ஒருங்குவைத்து எண்ணத்தக்கதாய் அமைகிறது அன்பாதவனின் கவிதை.

6. உயிரின் தேவை

குறிஞ்சிப்பாட்டின் தலைவன் தினைப்புனத்தில் மதயானையிடமிருந்து தலைவியைக் காப்பாற்றி அவளின் அச்சத்தையும் நடுக்கத்தையும் போக்கிவிட்டத் தன் விருப்பத்தைக் கூறுகிறான். திருவிழா நாளன்று சமைப்பது போன்று மிகப்பெரிய மிடாவில் சோறாக்கி அகலத்திறந்த வாயிற்புறத்திலிருந்து, மிகப்பெரிய அம்மாளிகை பொலிவுறுமாறு, வரும் விருந்தினர் அனைவருக்கும் விருப்பத்தோடு உணவூட்டி, அதன்பின்னர் ஊன்கலந்து சமைத்த அவ்வுணவை மிகப்பெரிய சுற்றம்சூழ உண்டபின்னர், மிஞ்சியிருப்பதை உன்னோடு உண்ணும் மகிழ்விற்கு ஈடேது என்கிறான் தலைவன்.

“சாற அயர்ந்தன்ன மிடாச் சொன்றி
வருநர்க்கு வரையா வளநகர் பொற்ப
மலரத்திறந்த வாயில் பலர்உண
பைந்நிணம் மெழுகிய நெய்ம்மலி அடிசில்
வசையில் வான்திணைப் புரையோர் கடும்பொடு
விருந்துண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னொடு உண்டலும் புரைவது”

என்பதே அப்பாடல். அத்தகையதொரு உடனுறையும் விருப்பத்தை,

“ என் விருப்பம்
படுக்கையோ தொடுகையோ அல்ல
உன் கையால் கிடைக்குமோ
ஒருவேளை உணவு
ஒருவேளை இதுவுமோர் கனவோ”

எனும் கவிதைவழிக் கடத்துகிறார். மனமொத்த வாழ்க்கைப் பயணத்தின் தேடலாய்த் திகட்டத் திகட்டக் கிடைக்கின்றன கவிதைகள். கோடிட்ட இடங்களை நிரப்புவதாய்த்தான் கிளர்ந்தெழுகின்றன படைப்புகள். சொல்லிமுடித்த நிறைவில் ஆற்றமுடிகின்றது பணிகளை.. பெண்ணிடமிருந்து பெருகும் தாய்மையைத் துய்ப்பதற்கான தவிப்போடு நிறைவுறுகிறது தொகுதி. கனமான நுண்ணுணர்வுகளையும் இலகுவாகக் கடத்தும் மென்மையான மொழிநடையோடு விரியட்டும் இவரின் படைப்புவெளி இனிவரும் காலங்களிலும்…

***

மூடுபனிக் கவிகள்-4: கூ செங் – தமிழில் சமயவேல்

கூ செங்

கூ செங்
(1956-1993)

மூடுபனிக் கவிகளில் மிக முக்கியமான கவி கூ செங். அவரது
வாழ்க்கை ஒரு அதிபுனைவைப் போல இருக்கிறது. குழந்தைத்தனமாக
பூச்சிகளின் உலகில் வாழ்ந்த இவரது வாழ்க்கை ஒரு கொடூரமான
புனைவாக இருக்கிறது. பைத்தியம், கவிஞன் என்ற போர்வையில்
வாழ்ந்த கூ செங் ஒரு ஆணாதிக்கக் கொலையாளி என்றும் எழுதினார்கள்.
பல எதிரும் புதிருமான பதிவுகளே காணக் கிடைப்பதால், கூ செங்கையும்
அவரது மனைவி ஸீ யேவையும் நேரடியாக அறிந்த எலியட் வெய்ன்பெர்ஹர்
எழுதிய “அடுத்த நிறுத்தம், விலக்கப்பட்ட நகரம்” என்னும் கட்டுரையின் சில
பகுதிகளின் தமிழாக்கத்தை இங்கு வாசிப்போம்.

அடுத்த நிறுத்தம், விலக்கப்பட்ட நகரம்
எலியட் வெய்ன்பெர்ஹர்

1956ல் பீகிங் நகரில் நன்கு அறியப்பட்ட கவிஞரும் ராணுவ அதிகாரியுமான கூ ஹாங்கின் மகன் கூ செங், அவரது 12ம் வயதில் ஒரு இரண்டு வரிக் கவிதை எழுதிப் பிரபலம் ஆனார். அந்தக் கவிதை:

“கருத்த இரவின் ஒரு கொடை, இந்த இருண்ட கண்களைக் கொண்டு கூட
நான் பிரகாசிக்கும் ஒளியைத் தேடிப் போகிறேன்.”

1969ல், கலாச்சாரப் புரட்சி கூ செங்கையும் அவரது குடும்பத்தையும் ஷான்டோங் மாகாணத்தின் உப்புப் பாலைவனத்திற்குப் பன்றிகள் மேய்க்க அனுப்பியது. அந்தப் பகுதி மக்கள், கூ செங் புரிந்து கொள்ள முடியாத வட்டார மொழியில் பேசினார்கள். தனிமை காரணமாக அவர் இயற்கையின் உலகில் லயிக்க ஆரம்பித்தார்: “இயற்கையின் குரல் எனது இதயத்தின் மொழி ஆகியது. அதுவே ஆனந்தம்” என்றார்.

அவருக்கு மிக விருப்பமான புத்தகம் 19ம் நூற்றாண்டைச் சேர்ந்த ழான் ஹென்றி ஃபேப்ரெயின் “பூச்சியியல் குறிப்புகளும் வரைபடங்களு”மே. பூச்சிகளைச் சேகரிக்க ஆரம்பித்தார். பறவைகளைக் கூர்ந்து கவனித்தார். மணலில் மரக்குச்சிகளைக் கொண்டு “பெயர் இல்லாத சிறு மலர்கள்” “வெள்ளை மேகத்தின் கனவு” போன்ற கவிதைகளை எழுதினார். ஜான் க்ளேர் போல அவரது கவிதைகளை வயல்களில் கண்டெடுத்து எழுதிக் கொண்டார். “இயற்கையிடம் நான் ஒரு மாய ஒலியைக் கேட்டேன். அந்த ஒலியே எனது வாழ்வின் கவிதை ஆகியது.” என்கிறார். அவரது முதற் பருவக் கவிதையின் இயல்பு ஒரு மழைத்துளியாக இருந்தது. அவரது குழந்தைப் பருவம் சொர்க்கத்தின் ஒரு காட்சியைப் போல இருந்தது. அதிலிருந்து அவர் ஒருபோதும் மீளவே இல்லை.

1974ல் அவர் பீகிங்குக்குத் திரும்பினார். ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்தார். பேய்த்தனமாக எழுத ஆரம்பித்தார். அவரது அறையின் சுவர்களில் எல்லாம் எழுதி வைத்தார். அவரை “ஒரு பலகையில் குத்தப்பட்டு கால்களை உதைத்துக் கொண்டிருக்கும் ஒரு பூச்சியைப் போல” அவர் உணர்ந்தார். ஆனால் அவரை விட ஏழு முதல் பத்து வயது வரை மூத்த கவிகளான பெய் தவோ, துவோ துவோ, யாங் லியான், மாங் கே, ஷூ திங் முதலிய கவிகளின் குழுவுடன் இணைந்து கொண்டார். இந்தக் குழு சோஷலிச யதார்த்தவாதத்தையும் அதன் புரட்சிகரமான கதாநாயகர்களையும் நிராகரித்தது. தன்னையே விசாரிக்கும் உள்நோக்கிய படிமவகைப் பாடல்களையும் கவிதைகளையும் எழுதியது.

“சாம்பல் வானம்
சாம்பல் சாலை
சாம்பல் கட்டிடங்கள்
சாம்பல் மழையில்
இந்த இறந்து பரந்த சாம்பற்மை வழியாக
இரண்டு குழந்தைகள் நடக்கிறார்கள்
ஒருவர் பிரகாசமான சிவப்பு
ஒருவர் வெளுத்த பச்சை”

இது கூ செங்கின் முதற் பருவக் கவிதைகளில் ஒன்று. இதை அரசுத் தரப்பில் ஒருவர் ‘மெங்க்லாங்’ கவிதை என்றார். ‘மெங்க்லாங்’ என்னும் சீனச் சொல்லின் பொருள் “இருண்மை” அல்லது “மூடுபனி” என்பதாகும். பெய் தவோ, அவர்களது தலைமறைவு இதழின் பெயரைக் கொண்டு “இன்று (ஜிண்டியாங்) குழு”வினர் என அழைத்தால் போதும் என்றார். ஆனால் மூடுபனிக் கவிகள் என்ற பிரயோகமே பரவிவிட்டது. கூ செங், “மூடுபனியே இல்லை. உண்மையில் இவை எதையோ தெளிவு படுத்தும் கவிதைகள்” என்றார்.

கூ செங்கின் படைப்புகள் 1981ல் ஒரு பித்தவெறித் தாவலில் “பலினின் கோப்பு” என்ற தலைப்பிலான கீதக் (லிரிகல்) கவிதைகளாக இருந்தன. இதுவே அவரது முதல் கவிதைத் தொடர். “மேற்கை நோக்கிய பயணம்” என்னும் சீன செவ்வியல் நாவலில் வரும் குரங்கு ராஜாவை ஒத்த ஏமாற்றுப் பேர்வழியே பலினும்–கூ செங்கும் குரங்கு ஆண்டில் பிறந்தவர் தான்–தெரியாத்தனமாக உன்மத்தக் காளான்களை சாப்பிட்டுவிட்ட குழந்தையால் எழுதப்பட்ட சிதறிய வடிவம் கொண்ட நர்சரிப் பாடல்களைப் போன்றும் முட்டாள்தனமான தேவதைக் கதைகள் போன்றும் இருக்கும் ஒரு அடுக்குக் கவிதைகளே “பலினின் கோப்பு.” சீனத்தில் இதற்கு முன்பு ஒரு போதும் எழுதப்படாத ஒரு புதிய வகைக் கவிதைகளே இந்த பலின் கவிதைத் தொடர்.

1983ல் ஒரு ரயிலில் சந்தித்த ஸீ யே என்னும் ஒரு அழகிய மாணவக் கவியைக் காதலித்துத் திருமணம் செய்து கொண்டார். திருமண நாளிலேயே “நாம் இருவரும் இணைந்து தற்கொலை செய்து கொள்வோம்” என்று கூறினார். ஸீ யே உற்சாகமானவராகவும் நடைமுறை அறிந்தவராகவும் இருந்தார். ஆனால் கூ செங்கோ ஒரு கனவுக்காரர். அடிக்கடி மனச்சோர்வு அடைபவர்.

1985ல் அவருக்கு ஒரு தரிசனம் கிடைத்தது. முன்பு அவர் ‘ஒரு மனித உயிரியாக இருக்க முயற்சி செய்தேன்’, ஆனால் இப்போது உலகம் ஒரு மாயை என்று அறிந்து கொண்டேன். தனது சுயத்தைப் பின்னால் விட்டுவிட்டு ஒரு நிழல் இருப்பை இருப்பிடமாக்கிக் கொள்ள அவர் கற்றுக் கொண்டார். முன்பு, அவர் எழுதியவை ‘முக்கியமாக லிரிகல் வகைக் கவிதை’. இப்பொழுது அவர் ‘ஒரு வினோதமான ஒப்பற்ற அதிசயத்தைக் கண்டுபிடித்தார்: திரவப் பாதரசம் தெறித்தோடி, எந்தத் திசையிலும் நகர்வதைப் போல சொற்கள், தாமாகவே செயல்பட்டன’. அவரது நீண்ட தொடர் கவிதை ஒன்றை ‘திரவப் பாதரசம்’ என்றே அழைத்தார். ‘எந்த சொல்லும் அடக்குமுறைகள் அற்று சுதந்திரமாக இருக்கும் வரை தண்ணீரைப் போன்றே அழகாக இருக்கலாம்,’ என்று அவர் எழுதினார்.

1988ல் கூ செங்கும் ஸீ யேவும் நியூசிலாந்துக்குப் புலம் பெயர்ந்தார்கள். முதலில் அவருக்கு ஆக்லேண்ட் பல்கலைக் கழகத்தில் சீனமொழி கற்பிக்கும் வேலை கிடைத்தது. வகுப்பில் மாணவர்கள் ஏதாவது பேசட்டும் என கூ செங் உட்கார்ந்து கொண்டிருப்பாராம். மாணவர்களோ ஆசிரியர் ஏதாவது சொல்லட்டும் என மௌனமாக இருப்பார்களாம். விரைவில் மாணவர்கள் வகுப்புக்கு வருவதை நிறுத்திக் கொண்டார்கள். இது நிர்வாகத்துக்குத் தெரிய வந்து அவர் வேலையிலிருந்து நீக்கப்பட்டார்.

தம்பதியர் ஆக்லேண்ட் வளைகுடாவில் உள்ள ஒரு தீவில் வைஹேக்கே என்னும் இடத்தில் உள்ள, மின்சாரமும் தண்ணீரும் இல்லாத ஒரு பாழடைந்த பங்களாவில் குடியேறினார்கள். அங்கு கூ செங் அவரது குழந்தைப் பருவ சொர்க்கத்தை மீட்டெடுக்க முயற்சி செய்தார்.

அவர்கள் சிப்பிமீன்களையும் கிழங்குகளையும் இலந்தைப் பழங்களையும் சேகரித்தார்கள். கூ செங் மனைவியை சமையல் செய்ய அனுமதிப்பதில்லை. தவறான உணவுகளால் நோய்மை அடைந்தார்கள். அவர்கள் ஸ்பிரிங் ரோல்களையும் மட்பாண்டங்களையும் செய்து உள்ளூர் சந்தையில் விற்க எண்ணினார்கள். அவர்களுக்கு ‘மூயர்’ ( மரக் காது-இது ஒரு பூஞ்சைக் காளான் பெயர் ) என்று ஒரு மகன் இருந்தான். கூ செங்கின் எல்லாக் கையெழுத்துப் பிரதிகளையும் ஸீ யே தட்டச்சு செய்தார். அதற்குக் கட்டணமாக அவரே வரைந்த வெள்ளி மற்றும் தங்க விளையாட்டுப் பணங்களை கூ செங் கொடுத்தார். ஆங்கிலத்தையோ அல்லது வேறு எந்த மொழியையும் கற்க அவர் மறுத்துவிட்டார்.

ஒரு சீனன் வேற்று மொழிகளைக் கற்க ஆரம்பித்தால் அவனது தானின், இருத்தலின் சுயவுணர்வைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிடுவான் என்றார். நீல ஜீன்ஸின் கால்களை வெட்டிச் செய்த ஒரு உயரமான உருளைத் தொப்பியை அவர் எப்போதும் அணிந்திருப்பார். இந்தத் தொப்பி எதற்காக எனக் கேட்ட போது அவரது சிந்தனைகளில் எதுவும் தலையை விட்டுத் தப்பிவிடாதவாறு தொப்பி காக்கிறது என்றாராம்.

அனேகமாக இந்த சமயத்தில் தான் நான் அவர்களை சந்தித்தேன்.அப்போது பெர்லினில் அவர் இருந்தார். நான், கூ செங், ஸீ யே மூவரும் ஒரு சீன உணவகத்துக்குச் சாப்பிடப் போனோம். எனது முதல் கேள்வியே அவரது தொப்பியைப் பற்றியதாக இருந்தது. கூ செங் தூங்கும்போது கூட அதை அணிவதாகவும் அவரது கனவுகள் எதையும் அவர் இழக்க விரும்பாததே காரணம் என்றும் ஸீ யே கூறினார்.

நாங்கள் மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் எனக்கு மிகக் கொஞ்சமே புரிந்தது. ஒவ்வொரு விஷயமும் ஒரு விரிவான விவாதத்திற்கும் பிரபஞ்ச சக்திகளுக்கும் இட்டுச் சென்றது: சீனப் புராணங்களில் வரும் படைப்புக்கு முந்தைய, பொருட்கள் யின்–யாங் என இரண்டாகப் பிரிவதற்கு முந்தைய குழப்ப நிலை போன்றதே கலாச்சாரப் புரட்சி, மேலும் அதன் தொடர்ச்சியான பதட்ட நிலையே தியானமன் சதுக்கம்; செயல்-அற்ற-அற்ற தாவோயிசம். கூ செங் பேசிக் கொண்டிருந்த நேரம் முழுவதும் அவரை ஸீ யே ஆராதிப்பது போலப் பார்த்துக் கொண்டே இருந்தார். இருவரிடமிருந்தும் ஒரு களங்கமற்ற இனிமையான ஒளி பரவிக் கொண்டிருந்தது. நான் சீன மரபில் வரும் அந்தப் பித்துப்பிடித்த மலைத் துறவிகளில் ஒருவர் முன் உட்கார்ந்திருப்பதைப் போல உணர்ந்தேன்.

மாலைப் பொழுது நெருங்கும் போது கூ செங் குளியலறைப் பக்கம் சென்றார். அவரது உருவம் மறைந்தவுடனே ஸீ யே எனது பக்கம் திரும்பிப் புன்னகைத்து விட்டுக் கூறினார்: ‘இவர் இறந்து கொண்டிருக்கிறார் என நம்புகிறேன்’ அவர் அதை விவரித்தார். நியுசிலாந்தில் இருந்தபோது அவரது மகனை ஒரு மவோரி தம்பதியர்க்கு தத்துக் கொடுத்துவிடலாம் என்றாராம். மகன் இருப்பதால் அவரைக் கவனிப்பது குறைகிறது என்றும் வீட்டில் ஒரு ஆண் தான் இருக்க வேண்டும் என்றும் கூறினாராம். ‘நான் எனது மகனை, அவர் இறந்தால் ஒழியத் திரும்பப் பெற முடியாது’ என்று அவர் கூறினார்.

அவர்களது தனிப்பட்ட வாழ்க்கையின் கஷ்டங்கள் பின்னர் பொதுவெளிக்குத் தெரிய வந்தது. நியுசிலாந்துக்குச் செல்வதற்கு முன்பு கூ செங், இன்னொரு மாணவி, யிங்கர் என்னும் லி யிங்கின் மேல் காதல் வயப்பட்டார்—ஆனால் உறவு தொடங்கவில்லை. ஸீ யே ஒரு திட்டம் வகுத்தார். யிங்கரை வைஹேகே தீவுக்கு வரவழைப்பது, ஸீ யேவுக்குப் பதிலாக அவரை கூ செங்கின் மனைவி ஆக்குவது, பிறகு அவர் நியூசிலாந்தில் உள்ள மகனுடன் இணைவது–இதுவே அவரது திட்டம்.

யிங்கரின் பயணச்சீட்டுக்கான கட்டணத்தை ஸீ யேவே ஏற்றுக் கொண்டார். ஆனால் கூ செங் காதலிகள் புடை சூழ ஒரு ஆனந்தத் தோட்டத்தில் கவிதை எழுதிக் கொண்டிருக்கவே விரும்பினார். (பெண்கள் எதுவும் செய்யாமல் இருக்கும் போது தான் அழகாக இருக்கிறார்கள் என்று ஒருமுறை அவர் கூறியிருந்தார்). யிங்கர், கூ செங்கின் காதலியாக மாறாத போதிலும் இவர்களது வாழ்நிலையைக் கண்டு பயந்துவிட்டார். கூ செங்கும் ஸீ யேவும் வீட்டைப் பழுது பார்ப்பதற்கான பணத்தைத் திரட்ட பெர்லின் சென்றிருந்த சமயத்தில் யிங்கர், ஒரு வயது முதிர்ந்த யுத்தக்கலைப் பயிற்சியாளருடன் காணாமல் போனார்.

அதே சமயம், கூ செங் அவரது மிகச்சிறந்த கவிதைகளை எழுதிக்கொண்டு இருந்தார், அவரது கடைசித் தொடர் கவிதையான ‘நகரம்’, அவர் வெறுத்த ஆனால் இழந்த பீகிங் நகரம் பற்றிய ஒரே சமயத்தில் கொட்டும் பல்வர்ண உணர்வெழுச்சிகளாக இருந்தது. (அந்தக் கோடையின் ஒரு பூங்காவில் செஸ்ட்நட் மரங்களுக்கடியில், கூ செங் அவருக்குள்ளேயே மீண்டும் மீண்டும் ‘நான் ஆச்சர்யம் கொள்கிறேன், சீனா இப்பொழுது எப்படி இருக்கும்’ என்று முணுமுணுத்துக் கொண்டே இருந்தார்.)’.

இந்தக் கவிதை முழுவதும் வெளிப்படைத் தன்மையுடன் இல்லாத போதும் சுயசரிதைத் தன்மை கொண்டிருந்தது. கவிதைத் தொடரின் தலைப்பாகிய ‘செங்’ அவரது பெயராகவும் ‘நகரம்’ என்னும் பொருள் தரக்கூடியதாகவும் இருந்தது. ஒரு பொதுவிடக் கவிதை வாசிப்பின் போது அவரது “பீகிங்கின் குறுக்காக அவர் செய்த பேருந்துப் பயணங்களின் கொடூரம், நடத்துனர் சத்தம் போட்டுக் கத்துவார், ‘அடுத்த நிறுத்தம், விலக்கப்பட்ட நகரம் (கூகாங்).’ அது அவரது அப்பாவின் பெயர் கூ காங் போலவே ஒலிக்கும். (அவர் ஒருமுறை எழுதினார், அழிவு தொடங்கும் இடம், குடும்பம், என்று. மேலும் கூ செங் எழுதினார், “எனது கவிதையில் நகரம் மறைகிறது, பதிலாக அந்த இடத்தில் ஒரு துண்டு மேய்ச்சல் நிலம் தோன்றுகிறது.”

எல்லா வகையிலும், மேலும் மேலும் கூ செங்கின் பேராசையும் வெறியும் மூர்க்கமும் வளர்ந்து கொண்டே இருந்தன. சுவாங் சூவின் அதிகதைகளில் வருவதை அப்படியே எடுத்துக் கொண்டு, ‘அதிமனிதனுக்கு எல்லாமும் அனுமதிக்கப்பட்டுள்ளது’ என்னும் நீட்சேயிசமாக மாற்றிக் கொண்டார். ஃபிராங்ஃபார்ட்டில் ஒரு கூட்டத்தில் “தாவோயிசந்தைப் பின்பற்றுபவர்கள் கொல்வதற்கு, தன்னைக் கொள்வதற்கு உரிமையுள்ளவர்கள், உண்மையில் எதையும் செய்யக் கூடியவர்கள், ஏனெனில் எதையுமே செய்யாதிருப்பதில் அவன் ஈடுபட்டிருக்கிறான்” என்றார்.

புத்த மதம் பற்றிய நேர்காணலில், “எதுவும் தெரியாதவர்களுக்குத் தான் புத்த மதம் தேவை, ஏற்கனவே நீங்கள் அறிந்தவர் என்றால் உங்களுக்கு இந்த மதமே தேவையில்லை. ஆனால் எல்லாமே உங்களுடையது” என்றார். எழுதுவதை நிறுத்திவிட்டதாகவும் அவரது நேரத்தில் பெரும்பகுதியைத் தூங்கிக் கழிப்பதாகவும், அது தான் உண்மையான வேலை என்றும் கூறினார். ‘தூங்கி எழும்போது மட்டுமே மனித இதயம் எவ்வளவு குளிர்ந்து இருக்கிறது என்று எனக்குத் தெரிகிறது.’ என்று எழுதினார்.

இந்த சமயத்தில் அவருக்குப் பிடித்த புத்தகமாக ஒத்தல்லோவைக் குறிப்பிட்டார். ஒரு துப்பாக்கி வாங்குவது பற்றி பேசிக் கொண்டு இருந்தார். ஒருமுறை ஸீ யேவை கழுத்தை நெரிக்க முயற்சி செய்து மனநலக் காப்பகத்தில் சேர்க்கப்பட்டார். ஆனால் அவரது மனைவியோ குற்றம் பதிவு செய்ய மறுத்து அவரைக் கவனிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு, அவரை காப்பகத்திலிருந்து வீட்டுக்குக் கூட்டி வந்தார்.

ஸீ யே அவரைக் கொல்வது அவருக்கு மாபெரும் மகிழ்ச்சி அளிக்கும் என்று கூ செங் குறிப்பிட்டார்.
அவர்கள் டஹிடி வழியாக நியுசிலாந்து வந்து சேர்ந்தார்கள். அங்கு அவர்கள் ஓவியர் பால் காகினின் புதைகுழியைப் பார்வையிட்டார்கள். கூ செங்கின் 37வது பிறந்த நாளான, 1993 செப்டம்பர் 24ல் அவர்கள் வைஹேக்கே தீவுக்குத் திரும்பினார்கள். அக்டோபர் எட்டாம் நாள் அவர் ஸீ யேவை ஒரு கோடரியால் கொலை செய்து விட்டுத் தானும் தூக்கிட்டுக் கொண்டு இறந்தார்.
இது ஒரு தாவோயிச தோற்றமுரண் மெய்.

கூ செங்கைப் பற்றி மறந்தால் மட்டுமே நாம் அவரது கவிதைகளை வாசிக்க இயலும். ஆங்கில மொழிபெயர்ப்பில் அவரது ஐந்து நூல்கள் கிடைக்கின்றன. பெயரற்ற பூக்கள் (Nameless Flowers), கனவுகளின் கடல் (Sea of Dreams) ஆகியவை அண்மையில் வெளியாகிய தொகுப்புகள்.

அவரது கடைசிக் கடிதங்கள் ஒன்றில் எழுதினார், ‘என்னுடைய புத்தகங்களைப் படித்தால் நான் ஒரு முழுப் பைத்தியம் என்பதை நீங்கள் அறிந்து கொள்வீர்கள். எனது கைகள் மட்டுமே இயல்பாக இருக்கின்றன’.

மேலும் அவர் எழுதினார், “சொர்க்கத்துக்கும் பூமிக்கும் நடுவில் நான் கற்பனையில் நடந்து கொண்டிருந்த போது அங்கே நானும் ஒரு வகை மென்பச்சைப் புற்கள் மட்டுமே இருந்தோம்.”
—-

கூ செங் கவிதைகள்:

1
பனி மனிதன்

நான் ஒரு பனிமனிதனைச் செய்தேன்
உன் வீட்டுக் கதவு முன்பு
எனக்குப் பதிலாக நிற்பதற்கு, அங்கு காத்துக் கொண்டு
அதன் அனைத்து மடத்தனங்களில்.

பிறகு நீ உனது லாளிபாப்பைப் புதைத்தாய்
அதன் உறைபனி இதயத்தின் ஆழத்தில்,
இந்தச் சிறிய இனிமை அதை
உயிர்ப்பித்து எழுப்பிவிடும் என்று கூறுகிறாய்.

பனிமனிதன் புன்னகைக்கவில்லை
ஒரு சப்தமும் எழுப்பவில்லை,
பிறகு வந்தது பிரகாசமான வசந்த சூரியன்
அவனை உருக்கி வெளியேற்ற…

இப்பொழுது அவன் எங்கிருக்கிறான்?
அந்தக் கபடமற்ற இதயம் எங்கே?
ஒரு தேனீ ரீங்கரிக்கிறது
அருகில் ஒரு சிறிய கண்ணீர்க் குட்டை.

2

எல்லாம் தவிர்த்தல்

பூக்களைப் பயிரிட நீ விரும்புவதில்லை
ஏனெனில் நீ கூறுகிறாய், “அவை வாடி உதிர்ந்து மறைவதைப்
பார்க்க நான் விரும்பவில்லை.”

ஆக
பொருட்களின் முடிவுகளைத் தவிர்ப்பதற்காக
எல்லாத் தொடக்கங்களையும் நீ தவிர்க்கிறாய்.

3

ஒரு விளையாட்டு

அது நேற்றா? அல்லது முந்தா நாளா?
நல்லது, அது கடந்த காலத்தில், அது நிச்சயம்
நாம் ஒரு கல்லைக் கைக்குட்டைக்குள் சுற்றிப் பொதிந்தோம்
உயரே நீல வானத்துக்குள் அவை இரண்டையும் எறிந்தோம்–

என்ன ஒரு பயங்கரமான கிறுகிறுப்பூட்டும் உணர்வு
வானமும் பூமியும் சுற்றிச் சுழல்கிறது
எங்களது நடுங்கும் கைகளால் அவற்றைப் போக விடுகிறோம்
மேலும் கடவுளின் கடுமையான தீர்ப்புக்காகக் காத்திருந்தோம்

அங்கே இடியும் இல்லை, மின்னலும் இல்லை
கல் மட்டும் அமைதியாகத் திரும்பி பூமியில் விழுந்து கொண்டிருந்தது
மேலும் துணைக்குச் சென்ற கைக்குட்டை என்ன ஆனது?
அங்கே, உயரே மரங்களின் உச்சியில் சிக்கி இருந்தது

அதற்குப் பிறகு, நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளவே இல்லை
பயணத்தில் இருந்து கொண்டிருப்பதாக, மேலும் மேலும் தொடர்ந்து
அந்தத் தனித்த, நம்பிக்கைக்குரிய கல் மட்டும் தொடர்ந்து பின்னால் இருக்கிறது
அமைதியாக, அதன் தோழமைக்காக ஏங்கிக் கொண்டு.

4

அந்தியின் ஒளிர்வில்
மாலைப் பொழுது ஒளிர்கையில்,
உனது உதடுகள் இறுக மூடிக்கொண்டன,
நீ கூறுகிறாய், “இங்கு பதினைந்து நிமிடங்கள் மட்டுமே மீந்திருக்கின்றன,”
அதன் பொருள், துயரம் ஏற்கனவே தொடங்கிவிட்டது.

“நாம் பத்து அல்லது ஒரு நூறு ஆண்டுகள் பிரிந்திருக்க நேரலாம்;
நாம் ஆயிரம், பத்தாயிரம் மைல்கள் பிரித்திருக்க வேண்டும்”
ஆனால் பிறகு நீ விளையாட்டாகச் சிரிக்கிறாய்
உனது நிஜமான வயதைக் காட்டிக் கொண்டு.

நீ கூறுகிறாய், “ஒரு வாக்கியத்தைச் சொல்லக்கூட நான் மறந்துவிட்டேன்”
நான் சொல்கிறேன், “ஆமாம், அந்த ஒரு வாக்கியத்தையும் நீ மறந்துவிட்டாய்”
மாலைப்பொழுது முழுவதும் அந்த ஒரு வாக்கியத்தை நாம் நெருங்கினோமில்லை
ஆனால் நாம் பார்ப்பதற்கு முன்பே, எவ்வகையிலோ சூரியன் மௌனமாய் மறைந்தான்.

5

வான்வழித் தாக்குதல் முடிந்த பிறகு

வான்வழித் தாக்குதல் முடிந்த பிறகு
நாம் மீண்டும் கவிதையைப் பற்றிப் பேசத் தொடங்கினோம்
தரை நனைந்து ஊறிக் கொண்டிருக்கிறது
எல்லா இடங்களிலும் பானைகள் சிதறிக் கிடக்கின்றன

பிறகு நீ உள்ளே நுழைந்தாய்
ஒரு கனமான கூடையைத் தூக்கிக்கொண்டு
எனக்காக நீ கொண்டு வந்த சாப்பாடு
ரொட்டியும் தங்கத் தேனும்

நீ இறந்து இரண்டு வாரங்களுக்குப் பிறகு
நானும் கூட போரில் இறந்தேன்
பசும் பச்சைப் புற்கள்
இப்பொழுது இந்தப் பதுங்கு குழியை மூடியிருக்கிறது.

௦௦௦

.

”வாழ்வின் பசியம் தேடும் அறிவியல் கதைகள்” சந்தோஷ் நாராயணன் எழுதிய அஞ்ஞானச் சிறுகதைகள் குறித்து பாலகுமார் விஜயராமன்

சந்தோஷ் நாராயணன்

நூறு அஞ்ஞானச் சிறுகதைகளையும், கதை குறித்து இணையத்தில் வந்த ஒருவரி கருத்துக்களையும் தொகுத்து உருவாகியிருக்கும் இந்த புத்தகத்தின் கடைசி வரி – “எப்போ புத்தகமா போடுவீங்க?”. அதேபோல கடவுளிடம் சவால்விட்டு, சந்தோஷ் நாராயணன் எழுதாத நூறாவது கதையுடன் தான் நூறு கதைகள் முடிகின்றன. இப்படி உணர்வுப்பூர்வமாக புத்தகத்தின் ஒவ்வொரு வார்த்தையிலும் ஏதாவது சித்து விளையாட்டு காட்டி, அறிவியல் புனை கதைகளில் வாழ்வியலைப் பேசியிருக்கிறார் சந்தோஷ்.

கதைகளில் வரும் பாத்திரங்களின் பெயர்கள் அர்த்தப்பூர்வமானவை. படைப்பின் இயந்திரத்துக்குள் ப்ரம் மற்றும் விஷ் ஆகியோரை உள்ளிட்டு எண்ணிக்கையில்லா பிரதியெடுக்கும் ஷிவ், வெற்றியின்மையையும், தோல்வியின்மையையும் குறிக்கும் அவிக்டர் அஃபெயில், காஸ்மிக் எனர்ஜியை அடையத் துணியும் நந்தன், துவக்கத்தையும் முடிவையும் குறிக்கும் ஆதன் அந்தன், வன அரசி மெர்குரி திரவமாய்க் கண்ணீர் சிந்துவதைக் காணும் பாண்ட்ஸ்… இப்படி இதிகாசங்களையும், தத்துவங்களையும், சமகால நிகழ்வுகளையும் அறிவியலுக்குள் உள்ளீடு செய்து, வினையூக்கியாக செழுமையான புனைவைச் செலுத்திக் கிடைக்கும் அற்புதமான விளைபொருளாக இருக்கின்றன இந்த அஞ்ஞானச் சிறுகதைகள்.

அறிவியல் புனைகதைகள் யார் எழுதினாலும், எழுத்தாளர் சுஜாதாவுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் எண்ணம் பொதுவாகவே பலருக்கும் எழுவதுண்டு. சுஜாதாவின் எழுத்துகள் சென்றடைந்த வீச்சு அத்தகையது. சுஜாதாவின் கதைகள், பெரும்பாலும் விஞ்ஞானத்தின் வளர்ச்சியை, அதன் மூலம் சாதிக்கும் அதிசயங்களை, அது சாத்தியப்படுத்த வாய்ப்பிருக்கும் மாயாஜாலங்களை ஆச்சரியத்துடன் வியந்து ரசிக்கக்கூடிய வகையில் அமையப்பெற்றிருக்கும். ஆனால் சந்தோஷின் கதைகள் அநேகமாக அதற்கு நேர் எதிரானவை. அவை அறிவியலின் பூதாகர வளர்ச்சியைப் பகடி செய்பவை. எளிய வாழ்வுக்கு மனிதனைத் திருப்ப முடியாதா என்ற ஏக்கம் கொண்டிருப்பவை. எதிர்காலத்தில் வரவாய்ப்பிருக்கும் இயந்தரகதியான வாழ்வை, உணர்ச்சிகளற்ற உறவுகளை, வளங்களின் பற்றாக்குறைகளை அங்கதத்துடன் ஏகடியம் செய்யக்கூடியவை. சந்தோஷின் குறுங்கதைகளில் பாறை ஓவியம் வரையும் பழங்காலத்தவனும், சஞ்சீவி மூலியை இமைகளின் அடியில் பதுக்கியிருக்கும் ஆதிவாசியும் தான் நாயகர்களே தவிர காலங்கள் பின்சென்று ஓவியனை அழைத்துவரும் விஞ்ஞானியோ, ஆதிவாசியை ஆராயும் ஆய்வாளர்களோ அல்ல. அவ்வகையில் இந்த அஞ்ஞானச்சிறுகதைகள் அறிவியல் மீபுனைவு தோற்றம் கொண்டிருந்தாலும், இயற்கையை நேசிக்கும், எளிமையில் வாழ விரும்பும், மண்ணையும், மனதையும் மாசுபடுத்த விரும்பாத ஒரு அறிவியல் ஆய்வாளனின் மனப்பதிவாகவே தோன்றுகின்றன.

ஹிட்லரின் சாம்பலை விலைக்கு வாங்கி வைத்திருக்கும் இந்திய, இலங்கை அரசியல் பிரமுகர்கள், எழுத்தாளனைக் கொல்லக் கொல்ல முளைக்கும் லட்சம் மூளைகள், லட்சம் உடல்கள், பிரதேசங்கள் எத்தனை துண்டுகளானாலும், அத்தனை துண்டுகளிலும் துளிர்க்கும் பொதுவுடைமை என்று சமகால அரசியலையும் பேசியிருக்கின்றன இக்கதைகள்.

மிதிலையின் பெரிய விளையாடு மைதானத்தில் சீறிவரும் காளையை அடக்கக் காத்திருக்கிறான் மாயன். ஏறுதழுவல் விளையாட்டுக்கான திடீர் தடையால் கொதித்தெழுவது மாயன் மட்டுமல்ல, விளையாடக் காத்திருக்கும் காளையும் தான். அதேபோல, தனது மகனான நரகாசுரன் கொல்லப்பட்ட கோபத்தை, தன்னை லெட்சுமி வெடியாக்கி வெடித்துத் தீர்க்கிறாள் பூமாதேவி. இன்னொறுபுறம்,பெட்ரோலுக்காக சண்டையிட்டு பூமியின் மொத்த மனிதர்களும் அழிந்த பிறகு, மடிந்த உயிரிகளின் படிமங்களில் இருந்து உருவாகியிருக்கும் எரிபொருளை ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கழித்துக் கண்டுபிடிக்கிறார்கள் வேற்றுகிரக அறிவுஜீவிகள். இப்படி இன்றைய எதார்த்த நடைமுறைகளையும், பிரச்சனைகளையும், சிக்கல்களையும் நாம் யோசிக்காத இன்னொரு கோணத்தில் சொல்லி, நம்மை ஒரு நொடி அதிர்ச்சியடையவோ, வியப்படையவோ வைக்கின்றன அஞ்ஞானக்கதைகள். சந்தோஷ் இந்தக் குறுங்கதைகளுக்காக எடுத்திருக்கும் கருக்கள் நாம் அன்றாடம் புழங்கும் விஷயங்கள் தாம். ஆனால் அவர் அவற்றை பிராஸஸ் செய்து கதையாக வடிக்கும் கலை தனித்துவமானதாக இருக்கின்றது.

சில கதைகள், பாதியில் நிறுத்தியவை போல ஏமாற்றமளித்தன. இன்னும் சில, கதையே இல்லை என்று தோற்றமளித்தன (நமக்குத்தான் புரியவில்லையோ!). ஆனாலும் நூறு என்ற எண்ணிக்கை நிறைவானதாக இருந்தது. சந்தோஷ் இயல்பில் ஒவியர் என்பதனால் அத்தனை கதைகளுக்கும் மிகப்பொருத்தமான ஓவியங்களை வரைந்திருக்கிறார். அவை நன்றாகவும் இருக்கின்றன. ஆனால் அவை கதைகளின் வாசிப்புக்கு செய்த மதிப்புக்கூட்டல் மிகக்குறைவே. ஓவியங்கள் இல்லாமல் இருந்தாலும், இக்கதைகள் இதே உணர்வைத்தான் தந்திருக்கும் என்று தோன்றுகிறது.

இன்றைய இணைய உலகில் புதிய வாசகர்களைக் கவர, கதைகளையும் கேப்சூல் வடிவில் கொடுக்கவேண்டியிருக்கிறது. நவீன யுகத்தின் தற்போதைய புதிய இலக்கிய வடிவம் குறுங்கதைகள். அறிவியல் புனைகதைகளை குறுகத் தரித்துக் கொடுத்திருந்தாலும், தன் வேர்களையும் வாழ்வியலையும் மறக்காமல் அதை இந்தப் புதிய இலக்கித வகைமைக்குள் பொருத்தியிருக்கும் நண்பர் சந்தோஷ் நாராயணனுக்கும், புத்தகத்தை வெளியிட்ட உயிர்மை பதிப்பகத்துக்கும் வாழ்த்துகள். இன்றைய கல்லூரி மாணவர்களிடம் இந்த புத்தகம் பரவலாகச் சென்றுசேர வேண்டுமென்று விரும்புகிறேன். கல்லூரி ஆசிரியராக இருக்கும் நண்பர்கள், கல்லூரிகளில் சிறப்புரை ஆற்றச் செல்லும் நண்பர்கள் இந்த புத்தகத்தை மாணவர்களிடம் அறிமுகப்படுத்துங்கள். அறிவியலில் இன்றைய வாழ்வியலைக் கலந்த சுவாரஸ்யமான ஒருபக்கக் கதைகள் என்ற வகையில் இளைஞர்களை இந்தப் புத்தகம் நிச்சயம் ஈர்க்கும்.

******
அஞ்ஞானச் சிறுகதைகள்
சந்தோஷ் நாராயணன்
உயிர்மை வெளியீடு
பக்கங்கள்: 224
விலை: ரூ. 200
******

கனவுகளைக் கட்டுடைத்தல் ( கவிதைகள் ) / நர்மதா குப்புசாமி

நர்மதா குப்புசாமி


படிமம் 1

பனிபடர்ந்த நிலையத்தில்

ஏறவோ இறங்கவோ கதவுகளற்ற

இரயில் பெட்டியில்

புகைச்சித்திரமாய் நீ அமர்ந்திருக்கிறாய்.

நடைமேடையில் பதற்றத்துடன் நான்

நிலைத்த உனது பார்வையில்

எனையும் கடந்து

காலத்தை ஊடுருவுகிறாய்.

நானோ உதிர்ந்த இலையின்

பரிமாணத்தில் அளைந்தபடி

தொடர்கிறேன் உன்னை

இரயில் விரைகிறது.

இருவருக்குமான இடைவெளியில்

பச்சையமற்ற தாவரங்களாய்

ஞாபகங்கள் துவள்கின்றன.


படிமம் 2

பொட்டல்வெளி , இருள் மசி பூசிய

பாதையில் ஈர நதியின் மினுமினுப்பு

பேரிரைச்சலின் அதிர்வும்

பேரமைதியின் உறைவும்

ஒருங்கே ஒழுகும்

ஓட்டைக் குடமாய் காலம்

கூகை போல இருண்மையைக் கிழித்து

உன் பறத்தல் இரா வானமெங்கும்

இழுக்கிறாய் உன் போக்கில் எனை

நீண்டுகிடக்கிறது சாம்பல் நிற சர்ப்பமென

இரவின் வெளி.

வெளிச்சப்புள்ளிகளின் துவக்கக் கோட்டில்

மிகத்துல்லியமாய்

புகையாகக் கலக்கிறாய் மேகத்துணுக்குகளில்.

பாதைதிரும்புகிறேன் தனியாய் மறுபடியும்.

படிமம் 3

எனக்கான ஏகாந்தவெளியில்

ஒளி நிரம்பிய உனதிருப்பு .

உயிர்திரவம் ததும்பும்

தீர்ந்துவிடாத அதே புன்னகையுடன்

எனக்கான மன்னிப்புகளை

கையளிக்கிறாய் தேவதையைப் போல் .

காற்றையே சிறகாய் அணிந்த

ஒரு பறவைக்கு

உனது சாயல்கள் .

யாக்கையில் உவர்ப்பாய்

படிந்துக் கிடக்கின்றன

கதைக்கவேண்டிய கனவுத்துகள்கள் .

நீர்மை கோர்த்த நினைவுமணிகள்

புலரியின் மடியில் பனித்திவலையாய்

படர்ந்து மிதக்கின்றன.

உனக்கான ஒரு கவிதையை

எப்போதும்

அந்தத் துளியிலிருந்தே

துவங்கச் சொல்கிறாய்.

•••

எட்டு கவிதைகைள் – பி.கே. சிவகுமார் ( அமெரிக்கா )

பி.கே. சிவகுமார்தனிமரத்துக்குத்
தன்னிழல் போதும்
தன்னிழல் துணையல்ல
தன்னிருப்பின் அடையாளம்
தனக்காகத்தான் நிற்கிறது
வேருண்டு கனியுண்டு என்பது
கிளிகள் அறிந்த ரகசியம்
கிளிகள் தேடியமரும் நேரம்
தோப்பாகிறது தனிமரம் என்பது
இரண்டுமே அறியாதவை
தன்னைக் குடைவிரிக்கும் தனிமரத்தில்
எப்போதோ அமரும் கிளிகளைத்
தொலைவிலிருந்து பார்க்கிறீர்கள்
ஆச்சரியத்துடன்
அசைக்கிற இலையிசையில்
துய்க்கிற தனிமரத்துக்கு
மொட்டை மாடியில் நின்று
வேடிக்கை பார்க்கிற
தனிமரத்தின் மேல்
ஏன்
ஒருமுறை கூட
கிளிகள் அமர்வதில்லையென்ற
அனுதாபத்துடன் அது
உங்களைப் பார்க்கிறது

*****

தனிமரமாக நிற்கிறவர்
விரைவில்
ஒன்று
வீணையாகிறார்
அல்லது
விறகாகிறார்
அப்போது அறிகிறார்
வீணைக்கும் விறகுக்கும்
வித்தியாசம் இல்லை

****

தனிமரத்துக்குத் துணை
கிளைகளில் தலைவிரித்தாடும் பேய்கள்
முதல் பேய் குடியேறியபோது பயமாக இருந்தது
போகப் போகப் பழகிவிட்டது
பேய்களுக்கிடையே
எல்லைப் பிரச்னை எழும்போதெல்லாம்
ஜாக்கிரதையாக எத்தரப்பும் எடுப்பதில்லை அது
எந்தப் பேய் எந்நேரத்தில்
கோடாலி எடுக்குமோ என்ற கவலையுண்டு
இரவுகளில் காற்றின் வருடலை
பேய்களின் அன்பென எடுத்துக் கொள்ளப் பழகிவிட்டது
எப்போதும் ஒரு பேய்
பூர்வீக
வாழ்க்கையையோ
காதலையோ
துரோகத்தையோ
சொல்லிப் புலம்பிக் கொண்டே இருக்கிறது
அலுக்காமல் ஆறுதல் சொல்வதே
அமைதிக்கு வழியென அறிந்தது கொண்டது மரம்
சீக்கிரமே
பேய்களின் பிரச்னைகள் கேட்டுக் கேட்டு
தன் பிரச்னைகள் மறந்தது தனிமரம்
ராஜா மாதிரி தனியாக நிற்கும்
மரத்துக்கென்ன பிரச்னை எனக் கேட்டுக்
கிண்டல் செய்தன பேய்கள்
பேய்கள்
அறையும்போதும் உலுக்கும்போதும்
நடுங்கியது மரம்
அவை அணைத்துக் கொள்ளும்
அரிதான சந்தர்ப்பத்துக்கு ஏக்கப்பட ஆரம்பித்தது
நெருப்பும் பனியும் கலந்து இறுக்கும்
பேய்களின் அணைப்பு பிடித்துப் போனது
நான் நீ யெனத் தனக்காகப் பேய்கள்
போட்டியிட வேண்டுமென்ற
கிளுகிளுப்புக் கனவு மட்டும்
இன்றுவரை நிறைவேறவில்லை
தனிமரத்துக்கு
ஒரு பேய் உடனிருந்தால்
அடுத்த பேய் வழிவிடும் நாகரீகம்
கொண்டிருந்தது பேய்ச்சமூகம்
ஆளில்லா வீடுகளில் பேய்கள்
அடைக்கலமாகும் புயல் மழையில்
தனியாக நிற்கும்போது மட்டும்
இப்போதெல்லாம்
பயப்படுகிறது தனிமரம்

*****

தனிமரத்தைப் பற்றி
அதன்
நிழலைப் பற்றி
வேர்களைப் பற்றி
கனிகளைப் பற்றி
எப்போதேனும்
வந்தமரும் கிளிகள் பற்றி
இசைக்கிற அதனிலைகள் பற்றி
எழுதுகிறேன்
அதன் பட்டைகளில் படர்ந்து நிறைந்து
அருவருக்கச் செய்யும்
கம்பளிப் பூச்சிகள் பற்றி
ஏன் எழுதுவதில்லை என்கிறாய்

மருந்தடித்துக் கொல்லப்படாமல் இருந்தால்
வண்ணத்துப் பூச்சிகளாய்
அவை மாறுவதை யெழுதக்
காத்திருக்கிறேன் கண்ணே

*****

தனிமரமென்று எதுவுமில்லை
என்றறிந்தது தனிமரம்
என்றெழுதிய கவிஞருக்கு
வந்த வாசகர் கடிதத்தில்

“அட பைத்தியக்காரா
சீக்கிரம் கிளம்பி வா
அடுத்த குழி பட்டுவிட்டது

இப்படிக்கு
தனிமரமென உணர்ந்த தோப்பு”

என்று எழுதியிருந்தது

*****

தலையில்
மரத்துடன் நடந்து கொண்டிருந்த
நண்பரைப் பார்த்தேன்
என்ன இது என்றேன்
நல்ல இடம் தேடிக் கடைசியில்
தலையில் நட்டுக் கொண்டதாகச் சொன்னார்

மரம் என்ன சொல்கிறது என்றேன்
அதற்கென்ன குறைச்சல்
தனக்குத்தான் சுமையென்றார்
சுகமான சுமையென்றும்
சொல்லத் தவறவில்லை

எனக்கென்னவோ
அவர் பார்க்காதபடிக்கு
மரம்
நமட்டுச் சிரிப்பு செய்ததாய்த் தோன்றியது

அடுத்த மரம் நட
எங்கே போவீர்கள் என்றேன்
இதைவிட நல்ல மரமென்றால்
இதைப் பிடுங்கி எறிந்து விட
வேண்டியதுதான் என்றார்

ஐயோ அப்போ தலை என்றேன்

ஒவ்வொரு மரமும்
ஒரு தலையுடன் வருகிறதே என்றார்

தலையுடன் வரும் மரங்களா என்றேன்
ஒன்றுமில்லாமல் வருவதற்கு
மரத்துடன் வருகிற தலை மேல்தானே என்றார்

மரத்துக்குக்
காபி குடிக்கிற நேரமாகிவிட்டது
என்றபடியே கிளம்பிப் போனவருடன்
பேசிவிட்டுத் திரும்பும்போது கவனித்தேன்
அவர் கவிதைக்கான வரிகளை
அவர் மரம்
அவர் காதில் சொல்லுவதை

என் தலை வலிக்கத் தொட்டுப் பார்த்தேன்
மரத்துக்குத் தோண்டிய குழி தெரிந்தது

*****

பெருவழியில் எதிர்ப்படும்
தனிமரத்தைப் பார்க்கும்போது
நட்டவர் யாரென்று கேட்க வேண்டாம்
வளர்த்தவர் யாரென்று கேட்க வேண்டாம்
துணைக்கு யாரென்று கேட்க வேண்டாம்
பதிலறிந்து
மாறப்போவது ஒன்றுமில்லை
கேள்விக்குறி போல் நிற்கும்
தனிமரம் சொல்ல வருவது
கேள்விகளின் அபத்தத்தைத் தான்

*****

காலை எழுந்தபோது
நேற்று பார்த்த
தனிமரம் இல்லை
என்னாயிற்று என்றேன்
அதன் பொந்தில் வசித்த பாம்பிடம்
அதோ போகிறார் பார்
அவர்தான் வெட்டினார் என்றது
அவரைக் கேட்டேன்
நின்று கொண்டே இருப்பது அலுத்துக்
கொஞ்ச நேரம் மனிதர் போல்
கால் நீட்டிப் படுக்க ஆசைப்பட்டது
அதனால் வெட்டினேன் என்றார்
அவர் போன பிறகு பாம்பு சொன்னது
அவர் பொய் சொல்கிறார்
நின்று கொண்டே புணர்கிற குறை தவிர
தனிமரத்துக்குக் குறை எதுவும் இல்லை
நானும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன்
ம்ம்ம்ம்
நீ என்ன சொன்னாய் என்றேன்
எப்படிப் புணர்ந்தால் என்ன
புணர்வதும் புணரப்படுவதும் தான் முக்கியம்
மரமென்ன சொன்னது என்றேன்
புணர்ச்சி போதும்
உணர்ச்சிகளே தேவையென்றது
அப்புறம் என்றேன்
அப்புறமென்ன
அதோ போனாரே
அந்த மனிதரைக் காதலித்தது

*****

குற்ற வாசனை ( சிறுகதை ) / செந்தூரன் ஈஸ்வரநாதன்

பெரு நகரங்கள் இரவுகளில் முழித்துக்கொள்கின்றன. கண்களில் வெறிசரியக் காத்திருக்கின்றன; அச்சத்தையும் உலைச்சலையும் ஒருசேர உண்டாக்கும். பரிமாணமடையும் இரவுகள். ஒவ்வொரு இரவும் மாற்றமடைகின்றன.

மாநகரப் பேருந்து நிறுத்தங்கள்; பிரபல மதுபானக் கடைகள்; இருளடர்ந்த சில அபூர்வமான திருப்பங்கள்; ஆள்நடமாட்டமற்ற ஆற்றுப் பகுதிகள், சாக்கடைகள்; எல்லாவற்றிலும் வன்முறை தூங்கிக் கிடந்தது. அகலக் கண்களை அது விரிக்கிறபோது மனிதர்கள் அதில் சிக்கினார்கள். இடம் மாறி இடம் மனிதர்களே அந்த வன்முறைகளை உருவாக்கினார்கள். அவர்களே அதன் தோற்றுவாய். இரவுக் காவலர்கள் பெரும் போதையுடன் உலவித் திரிந்தார்கள். வோக்கியில் ஒலிக்கும் கட்டைளைகள் எந்தப் பரபரப்பையும் உண்டாக்காமல் உறைய வைத்துவிடுகின்றன. ஒரு நடு இரவில் அந்தக் குரல் ஒலித்தது. ஆணும் ஆணுமாக இரு காதலர்கள் சிக்கிக்கொண்டார்கள்; கெக்கலிப்புடன் அயர்ச்சியாக அது அலறியது.

துயரமே, கேளுங்கள். மன்றாடுவதைத் தவிர என்னிடம் வேறு வழிகள் இல்லை. உங்களிடம் தவிர அந்த அல்பினிச வியாதிக்காரனான விசாரணையாளனிடமும் சிறை அதிகாரியிடமும் – அவர் குற்ற நுண்ணறிவுப் பிரிவில் இருந்தவர், தவறாக நிகழ்த்திய எண்கவுண்டருக்காக சிறை அதிகாரியாக மாற்றப்பட்டிருந்தார் – உளறிக்கொண்டியிருக்கிறேன். மிகுந்த அச்சத்தை உண்டுபண்ணும் உயர்ந்து நெடிந்த அந்த அதிகாரி சில்லறைத்தனங்களை மட்டும்தான் பெறுமதியான குணங்களாகக் கொண்டிருந்தார்.

சிறையில் இருப்பவர்களுக்கென கிறித்தவச் சபைகளிலிருந்து எடுத்து வரப்படும் பொருட்களையும் திருடிக்கொள்வார். பாகுபாடெல்லாம் பார்த்து அவர் எதையும் எடுத்துக்கொள்வதில்லை. பள்ளிகளிலிருந்து சிறைக் கைதிகளுக்கு கடிதங்களும் வாழ்த்து அட்டைகளும் குட்டிக்குட்டி எழுத்துக்களிலும் வண்ணவண்ண நிறங்களிலும் வந்து சேரும். சாரைக் கண் வர்ணத்தில் பொம்மைப்படம் வரைந்து ஒரு குழந்தை அனுப்பியிருந்தது. சிலவேளை கடிதங்களோடு எழுதுபொருட்களும் வந்துசேரும். வருபவற்றை ஏமான் எடுத்துக்கொண்டு மிஞ்சியதுசொஞ்சியதெல்லாம் கைதிகளிடமும் கையளிக்கப்பார். அதிலும் அந்த அதிகாரிக்கு வேண்டப்பட்ட கைதிககளிடமே அவற்றை அவர் கையளிப்பார்.

எல்லோருக்கும் ஒரேவிதமான முறைதான் அவரது சிறப்பம்சம். அவரின் ஆடைகளைக் கைதிகள் சீரான முறையில் துவைத்து உலர்த்திக் கொடுத்தோம். சிறை அதிகாரியை; அச்சத்தை உருவாக்கும் இங்கு, கைதிப் பெண்ணொருத்தி காதலித்தார் என்பது எங்களிடையே உண்மையில் ஒருவித அதிர்ச்சியையும் விடுப்புப் பிடுங்கும் உணர்வையும் உருவாக்கியது. யாராவது ஒருவர் ஏதாவது ஒரு செய்திக்காக வாயை அகலத் திறந்து மூடியபடியும்; துணிகளை நீரில் அமிழ்த்தி எடுக்கும்போதும் வெண்ணிறச் காற்சட்டைக்குள் கைகளை நுழைத்து ஒரு பாட்டம் உணவுக்குக் காத்திருக்கிறபோது, சிறைத் தொழிலாளிகளின் முடையப்பட்ட பாய்களை ஏற்றும்போதும் எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

அவர் கவர்ச்சிகரமான மனிதரொன்றும் இல்லை.. ஆனால் அவரிடம் சிறைகுறித்த சுவாரசியமான கதைகள் இருந்திருக்கலாம். அந்தப் பெண் துயரம் நிரம்பிய கண்களோடு சோகத்துடன் கிழிந்துபோன வழிதெரியாக் கருமையான ஒரு வரைபடத்தைப் பார்ப்பதாக கண்ணைத் தின்கிற இரவுகளில் கற்பனை செய்தேன். வெகு விரைவிலேயே எனது சதத்திற்குதவாக் கற்பனைக்குள் நீரேறி அது இற்றுப் போய்க்கொண்டிருந்தது.

விசாரணை : 1: ஹெல்த் லைன் முதலாம் மாடி

ஐயா, அந்த உயிர்கொல்லி உங்களை மிகக் கவர்ந்தவன். அவனுக்காக இந்தச் சிறையில் நீங்கள் உருவாக்கிய வசதிகளைப் பற்றியும் தெரிந்திருக்கிறேன். ஆனால் அவன் உங்களை மதிப்பதே இல்லை. ஏன்? திரும்பிக்கூடப் பார்ப்பதுமில்லை; ஐயா, என் உருவத்தைப் பார்த்து என்னால் பயனில்லை என்ற முடிவுக்கு வந்துவிடக்கூடாது. நான் மிகத் திறமையானவன். ஆளில்லாக் கட்டடங்களில் ஏறி இறங்குவேன். மிக உயர்ந்த சுவர்களை மிக இலகுவாக என்னால் தாண்டிவிட முடியும். ஆனால் உங்கள் பாதுகாப்பில் இருக்கும் வரைதான் பாதுகாக்கப்படுவேன்.
விஷமமான அந்தக் கைதி திறமைசாலி அவனை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன்.

அவனது கண்கள்; என்றென்றைக்குமாக அதில் பூத்துக் கிடக்கும் மஞ்சளும் சாம்பலும் அவனை மிகுந்த கவர்ச்சிகரமானவனாக ஆக்கியிருந்தன. உறங்குகிற நேரங்களில் அவன் உறுமல், ஒடுக்கமான அறைக்குள் பட்டுத் தெறித்து அடங்கும். பசிகொண்ட ஒரு விலங்கின் அமைதியற்ற கண்கள். சரியாகச் சொன்னால் தீப்பற்றியெரியும் ஒருசோடிக் கண்கள்; உறக்கத்தைக் கெடுத்து இல்லாமலாக்கிவிடும்.

விசாரணை:2 : சவுத் எக்ஷ்டென்ஷன் ஹர்

அன்று அறைக்கு வீரக்குட்டியார் வந்திருந்தார்; கைகளில் பயணப் பொதியும் ஒரு சோடாப் போத்தலும். அவர் குறித்து அப்போதே ஐமித்திருந்தேன். அவர் நெருங்கப்படக்கூடாதவர் என்ற எண்ணம் காரணமின்றியே எனக்குள் படர்ந்திருந்தது. அவரின் உடல்; மிக லேசானதாகத் தோன்றவில்லை. மிகுந்த ஒல்லியான தோள்கள்; குறுகின கஜூப்பழத்தை ஒத்த ஒடுக்கமான அந்த மனிதரின் வளவளப்பான கறுத்த முகத்தில் தொக்கையாகக் கத்து முடிகள் ஒட்டப்பட்டிருந்தன. கரிய ஆழமான அந்த முகத்தில் சிரிக்கும்போது குழைவு தெரியும். அறைக்கு வந்தவுடனேயே புறுபுறுக்கத் தொடங்கியிருந்தார். பழைய சோகம் நிரம்பிய பாடலைப் புனையும் பாணன்.

‘அழிவான்’ என ஆரம்பித்துப் பச்சைத் தூஷணத்தோடு அவர் முடித்துக் கொள்வார். நானும் வேலையின்றி யாரைத் திட்டித் தீர்க்கிறார் என்று ஆராய்ச்சியும் செய்துகொண்டிருந்தேன். பதில்கள்; குறுகின வட்டாரங்களிருந்தே கிடைத்துவிடும். 360 பாகையிலிருந்து 180 பாகைக்கு வர முன்னரே எதிரிலிருப்பவரின் ஆடை அவிழ்க்கப்பட்டிருக்கும். நிறுத்தல் குறிகளைக் கூட அச்சமயத்தில் மட்டும்தான் பயன்படுத்திக் கொள்வார். ‘‘ஏன் சாமி இப்படி கத்திக்கொண்டிருக்கிறீங்கள்?‘ என்றால் அவரிடமிருந்து எவ்விதப் பதில்களும் வராது. ஒரு சிரிப்புடன் ஆடைகளை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள்ளோ அல்லது மேற் தளத்திற்கோ கடமையுணர்வுடன் விரைந்து வெளியேறிச் செல்வார்.

ஒரு மாலை நேரம்; சூரியன் பதிந்து இறந்ங்கிக்கொண்டிருந்தது. அழுத்தம் நிறை மாலை. மூலையில் சுழன்றாடிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் அறை பச்சை ஏறிப்போயிருந்தது. தொளதொளத்துப் போன ஆடைகளை ஒவ்வொன்றாய் கழற்றி அவர் எறிந்தார். அப்போது அவரின் செய்கைகள் எனக்கு எவ்வளவு அருவெறுப்பை உண்டாக்கின? அவரது வழமையான சுற்றாடல் அன்றைக்கு இல்லாது போய்விட்டதைப்போல் எதையும் அண்டாமல் அங்குமிங்குமாக அலைந்தார்.

அவர் என்னைப் பார்த்தபோதும்கூட தன் புலம்பலை நிறுத்திக் கொள்ளவில்லை. நீர்மையான வன அலரிகளாய் அப்போது என் கண்கள் பூத்துப் பீழை தள்ளின; உண்மையில் அவ்வாறுதான் எண்ணிக்கொண்டேன். எங்கள் கண்கள் ஈரலிப்புடன் சந்தித்துத் திரும்பின. அப்போதே அங்கிருந்து வெளியேறிவிடமேண்டுமெனத் தவித்தேன், உள்ளங்கால்கள் வியர்த்தன. குடலைப் புரட்டியது. கண்ணீருடன் வெளியேறிப் போனேன்.

அவரிடம் சொல்லிக்கொள்ளாமல் ஏறத்தாழ ஓடினேன். அன்றைக்கு நான் வெளியேறாமல் இருந்திருந்தால் இன்றைக்கு நீங்கள் இந்த முடுக்கில் வைத்து என்னைக் கேள்வியெழுப்பியிருந்திருக்க முடியாது ஐயா.
விசாரணை: 3 : மஹாராஷ்ட்ரா டெஸ்க்
இதற்குமேல் அறையை வெறிக்க முடியாது. மூன்றாம் இலக்க ஜில்ஜில்லே வழி. வீரக்குட்டி இன்றைய இரவை புதிய தன் இளம் நண்பர்களுடன் ஆரம்பித்திருந்தார். கொண்டாட்ட நாளொன்றை அவர் தயாரித்துக்கொண்டிருந்தார். தொந்தி பெருத்த மனிதர்; வேகமான அந்த மனிதரின் கைகளில் ஏதாவதொன்று உழன்றுகொண்டேயிருக்கும்.

வீட்டுச் சாவி, கைபேசி, மெழுகுவர்த்தி, சிகரெட், சாராய கிளாஸ், பிளாஸ்டிக் கிளாஸ், சாகஸக் கதைப் புத்தகம், பாஸ்போர்ட், அடகுச் செயின், திருட்டு மோதிரம் இன்ன பிற திருட்டுச் சாமானுகள் இப்படி எதையாவது ஒன்றை வைத்து கதையளந்துகொண்டிருப்பார். புதியவர்கள் அவரைக் கூடி இருப்பார்கள். ஏதாவது ஒரு கதையை உழப்ப ஆரம்பிப்பார். ஆனால் அவருடைய புதிய இளம் நண்பர்கள் அதைக் கண்டுகொள்ள மாட்டார்கள். அவர்கள் அவரை ஒரு பெரிய அதியமாகப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு அந்த மனிதர் அற்புதம்.

விசாரணை: 4 : ஔரா மேல் பாலம்

வீரக்குட்டி வீடு நிரம்பிப் போயிருந்தது. எனக்குத் தெரிந்து வீரக்குட்டியை அந்த வீட்டின் டீ மாஸ்டராகத்தான் அறிந்திருந்தேன். யாராகினும் சம்பளம் கொடுப்பார்கள்; என்றாலும் அதற்கும் வாய்ப்பு அரிதுதான். தாமதமாகத்தான் அந்த வீடு வீரக்குட்டியுடையதுதான் என்பதை அறிந்துகொண்டேன். அதேபோல் இந்த ஆள் பெயர் வீரக்குட்டி தானா? இல்லையென்றால் வேறு யாரிடமாவது கேட்கலாம். ஆனால் அங்கிருந்த மூத்த இளம் தலைமுறையினர் எல்லோருமே இயக்கத்தில் இருந்திருந்தார்கள். மேஜர். கப்டன், சென்றி, ரவுண்ஸ், சொரியன்கள், அட்டை, துண்டு, வெளிநாடு, துரோகி, வெஸ்ச, புண்டயாண்டிகள் என்ற மாதிரியே குழப்பமாகவே திரும்பத்திரும்பக் கதைத்தார்கள்.

வீரக்குட்டியிடம் இரண்டு முறையான பொருட்கள் இருந்தன. ஒன்று, அவரின் டமாரம் ஏறின வாய்; முழங்கும். இரண்டு, அவர் கையில் என்றென்றைக்குமாக தங்கி நின்ற ஃபைல்.
அந்த ஃபைலை அவரிடமிருந்து திருடிக்கொள்ளும் ஆண்டவரே என்று ஊளைச் சத்தமிட்டு அலறிக் கெஞ்சுமளவிற்கு மோசமான ஆனால் வீரக்குட்டியின் சத்துள்ள சாமான். ‘‘எல்லாம் ஃபைல்லதான் இருக்கு. அவாவிட்ட சொல்லு’’ நிறைபோதையில் தெரு முழுக்க இரைச்சலிட்டுக் கோடு கீறுவார். வீரக்குட்டியின் ஃபைலில் என்ன இருந்தன என்பது புதிர். கொத்துக் கடைகளில் வீரக்குட்டி ஃபைல் பற்றி சில புராணக் கதைகளும் சேர்ந்துகொண்டன. ‘வீரக்குட்டி கிசுகிசுக்கள்’ எழுதுமளவிற்குத் தகவல்கள் பரம்பலடைந்துகொண்டே இருந்தன.

வீரக்குட்டி ஜிம்மிலிருந்துகொண்டு ப்ரான்ஸ் போய்விட்டேன் என்று ஸ்கைப்பில் சொல்லுமட்டும் ஏதோ ஒரு வதந்தி சுடுதீயைப்போல் வளர்ந்திருக்கும். அவருக்கு நகரைப் பற்றி அலையும் வேடிக்கையான மனிதர்கள் கடும் தோழர்களாயிருந்தார்கள். அவரது உணவுப் பழக்கமும் மூன்றிலிருந்து இரண்டாக மாறிப்போனது. உணவிலும் வித்தியாசமான மனிதர்தான்.

வீரக்குட்டியின் ‘எல்லாம்’ ஃபைலில் சில ஆவணங்களைத்தான் அவர் வைத்திருந்தார். அரசிடம் மன்னிப்புக்கோரி, தண்டனையின் அடிப்படையில் நாடு கடத்தக் கேட்டு எட்டுத் துண்டாய் மடிக்கப்பட்ட கி-4 தாள்; அவற்றைப் பிரதிகளெடுத்து குடியேற்ற – குடியகல்வுத் துறை, நாடாளுமன்ற உறுப்பினர்கள், கவுன்சிலர்கள் என யார் யாருக்கோ அனுப்பி அவர்கள் புரிந்தும் புரியாத மாதியும் சில கடிதங்களை அனுப்புவார்கள். அவர் அவற்றையும் சேர்த்து வைத்திருந்தார். ஒரு முறை இவரின் கடிதம் வீகேஎஸ் என்ற ஆள்பிடிக் கம்பெனிக்குப் போய் அவர்கள் இவரைக் கடத்தாத குறை மட்டும்தான். அதேபோல் கொஞ்சம் சேர்டிபிக்கேடுகள்; இலங்கை போலீஸ் ஐசி, ஆர்மி ஐசி, நேவி ஐசி, உள்ளூர் பொலிஸ் நிலையப் பதிவு அவரிடம் கைக்காவலாக இருந்தன.

அதையும் விட மனிதர் விளையாட்டுப் போட்டிகளில் வென்ற சில சான்றிதழ்களையும் வைத்திருந்தார். பொலிஸ் நிலையத்தில் அவர் அடையாள அட்டைகள் தொடங்கி பல்வேறு ஆவணங்களையும் காண்பிக்கும் வேளையில் தன் விளையாட்டுச் சான்றிதழ்களையும் காண்பிப்பார். முக்கியமாக, அந்த ஃபைலின் ஓரத்தில் கங்காருப் பை அடுக்கில் தன் வயதுவாரிப் படங்களையும் அவர் பாதுகாத்து வைத்திருக்கிறார்.

பழுப்பு, கறுப்பு – வெள்ளை, கொஞ்சம் சாயம் போன கலர் படங்கள். ஒரு ஐந்தாறு வகைப் படங்கள். அவற்றின் பின்புறங்களில் திகதிகள் காலக்கிரமமாக எழுதப்பட்டிருக்கும். இலகுவாகச் சொன்னால் அவர் ஒரு தகவல் மய்யம். அவரிடம் ‘பன்னிரெண்டாம் தேதி அறுபத்தேழாம் ஆண்டு என்ன நடந்தது?’ என்று கேட்டால், ‘சிவராசன் பாம்பு கடிச்சு கண் பொட்டையாகிச் செத்துப் போனான்; இதில ரெண்டு சிவராசன்கள் இருக்கிறாங்கள். ஒருவன் ஊரிலேயே செத்துப் போனான். இன்னொருத்தன் நாயில அடிபட்டு வண்டியேறிச் செத்தான். உதில நீ ஆரைக் கேக்கிறாய்’ என அதிர்ச்சியளிக்கக்கூடிய மனிதர்.

விசாரணை: 5 : பெங்களூர் சிவா இண்டஸ்ரியல்

மூன்று நாட்கள் கழித்து முத்துக்குமார் இறந்தபோது பனகல் பார்க் மூலையில் ஏதோவொரு அமைப்புக்காரர்களோடு நின்று கத்திக்கொண்டிருந்தாகச் சொன்னார். சில பதாகைகள் தயார் செய்யப்பட்டதாம். அமைப்பு மூத்த உறுப்பினர்கள் பாடல்களைப் பாடினார்களாம்; கோஷங்கள் எழுப்பப்பட்டதாம். ‘‘கூட்டம் ஒன்றுபோல் எழுந்து கூவியது. போர் முழக்கம்; நாங்கள் கூவிக்கொண்டிருந்தோம்.

முற்றிலுமாகப் போர் முடிந்துபோனது; சனம் இராணுவத்திடம் தஞ்சமடைந்திருந்தார்கள். பாரிய படுகொலைகள் நிகழ்ந்துகொண்டிருந்தன. ’வெளியேறு… வெளியேறு… இந்தியாவே வெளியேறு’ ’புலிகளைக் கொல்வதை நிறுத்து’’‘, தமிழக அரசே மாநில அரசே தமிழ்ஈழ ஆதரவாளர்களைக் கைது செய்வதை நிறுத்து’, ஈழத்தமிழர்கள் மீதான இனவெறிப் போரை நிறுத்து.’’ முழுதாக வீரக்குட்டியார் சொல்லி முடித்தபோது நான் இடியப்பத்துக்கு என்ன கறி என்று யாப்பாணத் றமிழ்ஸ் ஒருவரிடம் படு அக்கறையாக விசாரித்தேன்.

விசாரணை: 6 : திலக் மார்க் ஸி ஸ்கீம்

நான் பொய் சொல்லவில்லை. என் கண்கள் மருட்சியில் இமைக்க மறந்திருந்தன. நம்ப முடிகிறதா? ஆனால் பயமுறுத்தும் பல இரவுகளை அவரோடு ஒடுங்கிய அறையில் கழித்தேன். கோடைகாலங்களில் உணவுண்டு சுருள்கிற பாம்பின் வயிறை ஒத்ததாய் அறை வெப்பமேறியிருக்கும். நான் சாப்பாடு எடுக்கப் போகவில்லை. மூன்றுநாளாகவே அரைபோதையும் அரைப்பட்டினியுமாக பெத்தாய்ச்சிச்சிக் கிழவி வீட்டுக்குப் போகாமலே அறையிலேயே ஒடுங்கினேன். பெத்தாய்ச்சிச்சி அறைக்கே சாப்பாடு எடுத்துக்கொண்டு வந்தார். ‘‘அங்க வாரதுக்கு உமக்கு என்ன ஐசே, வெளிக்கிட்டு வீட்ட வாறீங்கள் என்ன?’’ நான் என்ன சொல்லப் போகிறேன், கேட்காமலேயே வெளியேறிப் போனார்.

பெத்தாய்ச்சிச்சிக் கிழவி ஆடித் தொங்குகிற திரைச்சீலைகளை தைத்துத் அறையில் தொங்க விட்டிருந்தார். அம்பரல்லாக் காய்களின் நிறத்தில் தூய்மையாக இருந்த திரைச்சீலைகள். அவை அந்தக் கிழமைக்கானது. தேந்தெடுத்துக் கொழுவியிருந்தார். மஞ்சள் வெளிச்சத்தில் தகரங்கள் பளபளக்கும் சமையலறையை அவர் நித்திரைக்குப் பயன்படுத்தினார். அவருக்காக மட்டுமே அந்த அறை உருவாக்கப்பட்டிருக்கும். நாலுக்குப் பத்தடி அறையில் அவர் எப்போதையும் போல சமைத்துத் துவைத்து வாழ்ந்துகொண்டிருந்தார்.

பெத்தாய்ச்சிச்சிக் கிழவி பாக்கோவனுக்கு வீடுமாறிப் பல ஆண்டுகள் ஆகியிருந்தன. ஒரே வீட்டில் அவர் பல காலம் வாழ்ந்தார் என்பது எனக்கு அப்போது பெரிய ஆச்சரியத்தையே ஏற்படுத்தியிருந்தது; ஒரு வருடத்தில் 14 வீடுகள் மாறினேன். ஏறத்தாழ என்னிடமிருந்த வீட்டு முன்பணத்தில் பாதியை வீட்டு உரிமையாளர்களிடம் கொஞ்சம்கொஞ்சமாக இழந்திருந்தேன். பெத்தாய்ச்சிச்சி இங்கே வந்து 17 வருடங்கள் ஆகியிருந்தன. நீண்ட குன்றுகளையும் பவளம் நிறைந்த கடற்கரைகளையும் தாண்டி அவர் வந்து சேர்ந்திருந்தார்.

‘‘தனியவா வந்தனீங்கள்?‘‘

அவரின் புன்னகையான முகம் ஒருமுறை ஒளிர்ந்து அடங்கியது.
‘‘இல்லை.’’

விசாரணை: 7 : சௌவக், ராய்பூர்

அறைக்குள் வேண்டா விருந்தாளியாய் ஒரு பெண் நுழைந்தாள். அரை மண்டைத் தலை அவளுக்கு நரையேறிக் கிடந்தது. பார்வைக்கு பெத்தாய்ச்சிச்சியைப் போலவும் இருந்தாள். அது பிரமையாகவும் இருக்கலாம். திடீரென்று கண்களை மூடித் திறந்தபோது என்னைக் கடந்து பெத்தாய்ச்சிச்சிக் கிழவியை அவள் நெருங்கியிருந்தாள். தேன் நிறப் பெண்ணின் கண்கள் பெத்தாய்ச்சிச்சியிடம் கடுமையாக நடந்துகொண்டன. பெத்தாய்ச்சிச்சியை அவர் மிரட்டினாள். பெத்தாய்ச்சி தன் எதிரிலிருந்த மேஜையில் தட்டி சப்தம் எழுப்பிக் கூவினார். அவள் சோர்வுறாமல் பெத்தாய்ச்சிவோடு மல்லுக் கட்டினாள். திட்டியபடி கதவை இழுத்து அறைந்து வெளியேறினாள். பெத்தாய்ச்சி அதிர்ச்சியுற்று அவள் வெளியேறியதை வரவேற்பதைப்போல் கண்களைச் சிமிட்டினார்.

‘அவள் என்னுடைய மகள்’

முகத்தை அவர் தொங்க விட்டிருந்தார். என்னை அழைப்பதற்கும் சிரிப்பதற்கும் பலமுறை முயன்று தோற்றுக் கொண்டிருந்தார். நான் அவரைப் பார்ப்பதற்கோ அவரை நோக்கித் திரும்புவதற்கு தைரியமற்று அமர்ந்திருந்தேன்.

அறையில் பெத்தாய்ச்சிவும் நானும் தனித்திருந்தோம். பெத்தாய்ச்சி பூக்கும் மலரைப் பார்க்கக் காத்திருக்கும் சிறுமியாக ஏக்கமடைந்திருந்தார். நான் குளத்தின் கரையில் அமர்ந்திருந்து பார்க்கும் செங்காந்தள் நிறக் கண்களைக் கொண்ட சிறுவனாயிருந்தேன்.

இரு சிறுவர்களுக்கும் பேசிக்கொள்வதற்கு ஒன்றுமிருக்கவில்லை. “அன்றிரவு இவளின் அப்பா விவாகரத்தினை உறுதி செய்வதற்கான ஆவணங்களுடன் வந்திருந்தான். என்னைப் போலவே அவன் முகமும் இறுக்கமடைந்து கிடந்தது. அவனிடம் எதைப் பேசினாலும் எரிந்து விழுவதற்குத் தயாரானவனாயிருந்தான். அன்றைக்கு அவன் கொஞ்சம் வெளுத்தும்தான் போயிருந்தான்.’’

பெத்தாய்ச்சிவை அவன் ஏச ஆரம்பித்தான். ‘‘உன் அகதி ஆவணங்களைத் தாரை வார்த்துவிட்டு இரவுகளில் வருகிறாய். ஒருநாள் இரவு திடீரென திருடியைப்போல் நுழைந்தாய். அன்று என்ன கோலத்தில் இருந்தாயென உனக்கு நினைவில் இருக்கிறதா?’’ மெல்லிய ஆடைகளை அன்று அவன் அணிந்திருந்தான்.

அவரை அவன் உருக்கினான். பெத்தாய்ச்சிவின் கண்கள் நிறைந்து கிடந்தன. ஆவேசமாய் கையிலிருந்த ஆவணங்களைப் பெத்தாய்ச்சிமீது எறிந்தான். பெத்தாய்ச்சி அவனைச் சமாதானப்படுத்த முயன்றார். அவன் செய்கைகள் அவருக்கு பயத்தையே உருவாக்கியிருந்தன.

‘‘அன்றிரவு அவனைக் கொல்வதென தீர்மானித்தேன். உண்மையில் என்றைக்கும்விட அன்றைக்கு அவன் பேசியவை தெளிவாய் இருந்தன. அவன் உயிர்ப்பாய் இருந்தான், ஒரு நீல மலரைப்போல. அவன் அவசரத்தில் அச்சம் இருப்பதாய்த் தென்படவில்லை. ஆச்சர்ய வளைவுடன் முதுகோடு ஒட்டி, செவிமடல் ரோமங்கள் சிலிர்க்கும் ஒரு கணம் அருகிலேயே நின்றிருந்தான். அவனுக்குப் பூராய்ந்து பார்க்கிற குணம் உண்டு.’’

விசாரணை: 8 : ராஜ்பவன் மூன்றாம் மாடி

அவன் பரபரப்பாய் இயங்கும் நாட்கள், வேதனையோடு ஒரு புன்னகையில் அல்லது பெரிய கத்தலோடு பெத்தாய்ச்சிஅவனைக் கடந்துகொண்டிருந்தார். ஆடைகளை எறிந்தான்; கிழித்து நடமாட்டமற்ற தெருக்களில் வீசினான். கட்டிலில் பெத்தாய்ச்சி ஆடைகளைக் காணவில்லை; இவன்தான் கிழித்தான் என்பதை அறிந்தேயிருந்தார்.

பெத்தாய்ச்சிவின் காதுகளில் அவன் கிசுகிசுப்பான். மிக நெடிய நீண்ட மௌனமான இரைச்சலற்ற இரவுகளில் அவர்கள் இருவரும் கூடினார்கள். பெத்தாய்ச்சி பரந்த மூச்சோடு வெளியேறிப் போவார். ஆனாலும் மீண்டும்மீண்டும் அவனை அவர் சீண்டிப் பார்க்கவே விரும்பினார். தொடர்ந்து அவனைப் புணர்ச்சிக்கு வற்புறுத்தினார். அவன் சோர்ந்து விழுகிற நேரங்களில் முகத்தைக் கோணலாக்கி அவனை அவமானமடையச் செய்தார்.
‘‘அந்த நாள் எனக்குத் தெளிவாக நினைவில் இருக்கிறது. அவன் ஆடைகளைக் களைந்து கழிப்பறை சென்று வெளியேறிய ஒரு தருணத்தில் அவனை இல்லாமலாக்குவதென முடிவு செய்தேன். கழிப்பறையிலிருந்து வெளியே வந்து தன் ஆடைகளைப் போட்டுக்கொண்டான். நாற்சதுரமான மெல்லிய என் கண்ணாடி முன்நின்றான். மூன்றாம்தரமான பளிங்குகளாலும் அரிக்கப்பட்ட சிப்பிகளாலும் அமைக்கப்பட்டிருந்தது அந்தக் கண்ணாடி. நான் அவனைப் பார்த்துச் சிரிப்பதற்கு தயாரித்துக்கொண்டிருந்தேன். தொலைவிலிருந்தே கத்தினான். மூன்று தெருக்களைத் தாண்டியும் அந்தக் குரல் அன்றிரவு ஒலித்தது மகன். அவன் கத்தினான். ‘வேசையாடப் போ.’’
றெக்கைகள் அடிபட கழுத்தறுந்த தவிப்புடன் வெளியேறினேன்.

விசாரணை: 9 : ACB போபால் சதுக்கம்

அவன் உடல் பிரேதக்குழியில் வீழ்த்தப்பட்டபோது எந்த வருத்தமுமின்றி நுழைந்தேன். காவலதிகாரி நல்லவனாக இருந்தான். என்னிடம் சமத்தான ஒரு தொகையை பெற்றுக்கொண்டான். அவனிடம் வழக்குக்கான பத்திரம் எப்போதும் கூடவே இருந்தது. புழுத்த அவன் உடல் விரைவிலேயே அழிந்தது. அவனை சந்திரன் நாயரின் லாட்ஜில் ஒழிப்பது என்ற எனது எண்ணம் நிறைவேறாமலேயே அழிந்துபோனான். ‘சமாதானத்தின் விடுதலை’ என உச்சரித்து அந்தச் சவத்தின் படுகுழியை மூடினார்கள்.

பருவங்கள் மாறிக்கொண்டிருந்தன, கூதிர்காலத்தின் இரவொன்றில் அந்தச் சங்கடங்களை எல்லாம் மறந்திருந்தேன் மகன்.’’

நான் மறுத்தபோது அவன் எந்தச் சிந்தனையுமின்றி நிற்பவனைப்போல, தன் கையிலிருந்து அந்த மொபைலை தூக்கிப் பிடித்து விளையாடினான்; அல்லது அதை அவன் விளையாட்டாக விளையாடினான். ஒற்றை, இரட்டை எண்கள் பற்றிய நம்பிக்கை ஒன்று அவனிடம் இருந்தது. அது சுவாரசியமான எண் விளையாட்டு; அவனைப் பரிசோதித்துக் கொள்வதற்காகவும் சாரல் மழையோ பேருந்துகள் வருகிற நேரத்தைக் கணிப்பதற்காகவும் அவன் முயல்வான். மகன் இந்த நாட்டிலிருந்து, கனம்பொருந்திய மூன்றாம் உலக நாட்டிலிருந்து நான் வெளியேற்றப்படுவேனாம்; அந்த நேரங்களிலெல்லாம் அவனது கண்களிலும் எச்சில் தெறித்த உதடுகளிலும் வன்மம் பிசாசாய் அமரும்.

இறுக்கம் குலையாமல் என்னைக் கூராய்வான். அந்த இறுக்கத்தை இன்றைக்கு வரையும் எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடிந்ததில்லை மகன். அவன் கண்களில் வெண்மைபோல ஏதோவொன்று அடர்ந்து பரவும். அவன் உருவம் முன்னும்பின்னுமாய் நகர்ந்து கன்னங்கள் உப்பியும் உள்நோக்கி நடுங்குவதைப் போலவும் மாறும். அவனைத் தள்ளினேன்.

“உனக்குப் பைத்தியமா? எங்கே ஓடுகிறாய்?”.

‘‘அவன் பதற்றத்துடன் அன்றிரவு முழுக்க முழித்திருந்திருப்பான். அவனுடன் இரவும் கூடவே விழித்துக்கொண்டிருந்திருக்கும். அப்போது முழுமையாக அறையை விட்டு நீங்கியிருந்தேன்.’’
பெத்தாய்ச்சி சொல்லி முடித்துத் தன் தலையை சிலுப்பிக்கொண்டு மெதுவாக தன் இருக்கையைப் பிடித்தபடி எழுந்து நின்றார். கால்கள் நடுங்க கடந்துபோனார். ”உண்மையில் இப்போது நேரம் என்ன?.”

’இரவில் மணிக்கு அவசியம் இருக்கிறது மகன். ’

நான் புரியாது அந்தக் குடிகாரக் கிழவியை மருண்டு பார்த்தேன்.
கண்களைச் சிமிட்டிச் சிரித்து, மீண்டும் இரண்டு குவளைகளிலும் ஊற்றினார். மூன்றாவது குவளையிலும் அவர் ஊற்றினார்.

சுழன்றுகொண்டிருந்தார். சில வேளைகளில் திடீர்திடீரென்று அறைக்குள் நுழைந்தார். “நான் இதை மறந்துவிட்டேன்” எனச் சிரித்தபடி அறைக் கதைவை அடிக்கடி திறந்தும் மூடிக்கொண்டும் இருந்தார். அறை நீலமாய் ஆகியிருந்தது. தூசு படிந்திருந்த மேசை, நீல ஒளியில் புராதனப் பேரெழில் சிற்பமாய் ஒளிர்ந்தது. அதனுடன் கூடவே பொருத்தமான இருக்கையொன்றும்.

பெத்தாய்ச்சி அதுக்கும் ஒரு கதை சொல்லாமலிருக்க வேண்டும். ‘‘தோடம் பழத்தைப் பிழிந்துகொள்” அவர் எதைஎதையோ அலுமாரிக்கு அடியிலும் கதிரைக்குக் கீழும் கிளறிக்கொண்டிருந்தார். அகப்படவில்லையென்ற புன்னகை. அவர் ப்லோவா கைக்கடிகாரத்தை அவசரஅவசரமாக அணிந்துகொண்டு அருகே வந்தார்.

உடலுக்கு மேலே தலை கனத்தது. என் தலை பெரிய பொதியாக ஆகியிருந்தது.

விசாரணை: 10 : ஹஸார்டகன் தெரு, கைவிடப்பட்ட மாளிகை.

நகரம் எப்போதுமே முழிப்பாய்த்தான் இருக்கிறது. பரபரப்பாக மின்னிமறைகின்றன வாகன வெளிச்சம் பட்டு மனிதர்களின் கண்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன. நகரத்துள் அச்சத்துடன் அலைகிற சில மனிதர்கள் மட்டும் கொக்குகளாய் நின்று கிடந்தார்கள். நகரத்தின் ஓட்டத்திற்குத் தேவையில்லாத லும்பன்கள் மட்டுமே அந்த நகரத்தை திரும்பித் திரும்பி ஆர்வத்துடன் பார்த்தார்கள்.

“இவையெல்லாம் தேவையா?”

“ஐயா, விசாரனை என்ற் வந்துவிட்டால் அனைத்தையும் தெரிவிக்க வேண்டுமென்றூம் அப்படித் தெரிவித்தால்தான் நான் குற்றமற்றவன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள முடியும். அந்தப் பெத்தாய்ச்சிக் கிழவியும் எதற்கும் உதவாத அந்த அசட்டுக் கிழவ்னும் என்னைத் தெருவில் அந்தரிக்க வைத்துவிட்டுச் சென்றுவிட்டார்கள். நீங்கள்தான் இப்போது எனது ஆபத்தாந்தவர். நான் கூறுகிறேன் கேளுங்கள்.”
கறுப்பிலிருந்து பழுப்பு நிறமடைந்துவிட்ட தன் முடிகளைக் குறித்து சில குறைபாடுகள் பெத்தாய்ச்சியிடம் எப்போதுமிருக்கும். ஆனால் தன் ஆடைகள் குறித்துத்தான் மிகுந்த அக்கறை எடுத்துக்கொண்டிருந்தார்.

தன்னைப் பற்றிய எவ்விதமான சந்தேகங்களும் மற்றையவர்களுக்கு (குண்டுப் பெண்ணின் குடியிருப்பில் பெத்தாய்ச்சியோடு சேர்த்து 13பெண்கள் இருந்தார்கள். அவர்கள் நகரச் சதுக்கத் தொழிற்சாலையொன்றில் பணிபுரிபவர்களாய் இருந்தார்கள்.) ஏற்பட்டு விடக்கூடாதென்பதில் படு அக்கறையுடனிருந்தார். அதற்கு காரணங்கள் சிலது இருந்தன அவரிடம்.

’நான் இங்கேயே இருந்துவிடப் போகிறேன். போலிச் சான்றிதழ்களை உருவாக்கிவிடலாம். என்ன சொல்கிறாய்?’ எனக் கண்களைப் பெத்தாய்ச்சி சிமிட்டியபோதும் எனக்கு எதுவும் சொல்வதற்கிருக்கவில்லை. அந்த இரவில் தேவையில்லாத விருந்தாளியைப்போல் அங்கு அமர்ந்திருந்தேன்.

இருவருக்குமாகச் சேர்த்து பெத்தாய்ச்சிச்சி தேநீரைச் சூடாக்கிக் கொண்டிருந்தார். ஜன்னல்களைத் தாண்டி எப்போதாவது ஒரு சிறு வெளிச்சம் கடந்து போகும். அதைத் தவிர மாநகரத்தில் இதைப் போன்றதொரு அபூர்வமான தொல்லைகள் அற்ற இயல்பான வீதிகள் அரிது. இரவுகளில் போக்கிரிகளைத் அனாதரவானவர்களை, உதிரிகளைத் தேடித்திரிகிற காவலர்களின் வாகனத்தை எங்கள் குடியிறுப்புப் பகுதியின் முன் நிறுத்தியிருப்பார்கள். அவலமான சிரிப்புகள், சன்னதம் வந்தாடும் சில எதிர்ப்புக் குரல்கள், பச்சாதாபத்துடன் ஏறிஇறங்கும் குரல்கள் என்று நிச்சாமத்தில் மட்டும் அந்தத் தெரு குரல்களின் தெருவாகிவிடும் மாயம் அடிக்கடி நிகழ்ந்துகொண்டிருக்கும். இரவுகளில் ஜன்னல்களில் சிவப்பு நீல விளக்கு மின்னும்போது பெத்தாய்ச்சி முற்றாக, ஏறத்தாழ நம்மை விட்டால் அவருக்கு வேறு வழியே இல்லை என்பதுபோல கழிவிரக்கத்தில் மூடுண்டுபோவார்.

அவரின் முகத்திலும் கைகால்களிலும் இருக்கும் பூனை மயிர்கள் குத்தி சிலிர்த்து அவரின் உடல் ஒருமுறை துள்ளலெடுத்து அடங்கும். அந்நேரங்களிலெல்லாம் குடியிருப்புப் பெண்கள் யாராவது அருகே வந்தால் அவரின் உடல் கூச்சமெடுத்து நடுங்க ஆரம்பிக்கும். பதைபதைப்பில் அவர் நீர்முட்டியைத் தேடுவார். அந்தப் பகுதி கட்ட்டப்பட்டதிலிருந்தே மாற்றப்படாத, ஒரு இடத்தைவிட்டு அகற்றப்படாத அதே நீர்முட்டியை அவர் தேடிக்கொண்டிருப்பார். அவரின் மூளை ஒரேடியாக எல்லாவற்றையும் மறந்துபோயிருக்கும். அவரையும் சேர்த்து, உண்மையில். இது மிகையில்லை.

வண்டி இரவுகளில் அங்கு நிற்கும்போது அவரது வாய் முணுமுணுக்கும். அந்த உரையாடலை வேறு ஒன்றின் மூலம் ஆரம்பித்தாலும் அது இறுதியில் காவலர்களிடம் வந்து முடிந்தன. ஆனால் அடர்மழை பொழிகிற நேரங்கள் அவருக்கு மிகுந்த இலகுவான தருணங்கள் போல் தொடர்ந்து அமைந்தன. அப்போது அவர் என்றைக்கும் இருப்பதைப்போலன்றிச் சற்றும் பதற்றமும் இல்லாமல் இருப்பதையும் நீர்க்குடத்தைத் தேடாமலிருப்பதையும் கவனித்திருக்கிறேன்.

வெளிப்பதிவு அகதிப் பெண்கள் பலரும் அங்கு தங்கியிருந்தார்கள். அவர்கள் வெளிநாடுகளிற்குச் செல்வதற்காகக் காத்துக்கொண்டு இருந்தார்கள்; அல்லது அவர்களுக்கு பெருமளவில் மேற்கிலிருந்தும் சிறிய மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தும் பணம் வந்துகொண்டிருந்தது. பின்பொரு காலத்தில் பிரபலக் குற்றவாளியின் இடமாக அந்தப் பகுதி முத்திரை குத்தப்பட இருக்கிறது.

விசாரணை: 11 : EVK சம்பத் வீதி, தில்லைராஜன்.

நகரின் அதளபாதாள வீதிகளில் அலைந்துகொண்டிருந்தேன். மம்மல் பொழுதுகளில் அந்தத் தெருவில் பாங்கொலி கேட்கும்; ஒரு சூரிய அஸ்தமனத்தை வரவேற்பதைப்போல். மிக ஆழமான அந்த முகத்தில் இரு கண்கள் உறைந்து போயிருக்க, பள்ளியிலிருந்து குல்லாயைக் கழற்றிச் சட்டையில் செருகியபடி அஹமத் அருகில் வந்தான்.

‘‘இன்னிக்கு நா சொல்லி வுட்றே… நீ போவியா?”

முதலில் அவனுக்கு வலியுறுத்த விரும்பினேன். நேசமான அஹமத் நான் வேலைக்குச் செல்வதில்லை; குறிப்பாக இந்த நாசமத்த நகரத்தைவிட்டு வெளியேற வேண்டும். தப்பித்து வெளியேற வேண்டும். ஒரு குளிர் அங்கியோடு மட்டும் மேல் நகரத் தெருக்களில் அலைந்தாலும் பரவாயில்லை. இங்கு இருக்கவே நான் விரும்பவில்லை. அப்படி இருக்கும்போது லூசன்போல் என்னை பணிக்குத் திரும்ப அனுப்புவதில் குறியாக இருக்கிறான்.

விசாரணை: 12 : பண்ட்ரா கிழக்கு இல்லம்

பெத்தாய்ச்சியிடம் நான் உன்னைப்போல் இங்கே தங்கிக்கொண்டிருக்கப்போவதில்லை. நான் இப்போதே தொலிந்துபோவேன் என்று அவரிடம் உருக்கமான குரலில் தெரிவித்துக்கொண்டிருந்தேன். அவர் என் தலையில் சிநேகமாகக் கைகளை வைத்துத் தடவிக்கொடுத்தார். ஏறத்தாழ அந்தத் தொடுதலில் நான் ஒரு குட்டிநாயாக மாறிப்போயிருந்தேன். பெத்தாய்ச்சியின் வசியமான விரல்கள் என்னிடம் சில கதைகளைச் சொல்ல ஆரம்பித்தன.

”குற்றம் நடக்கத் தயாரான மஞ்சள் ஒளிபொருந்திய நாளை எண்ணிப் பார்க்கிறேன். அவன் ஒன்றும் பெரிதாகக் கத்திக் கொண்டிருக்கவில்லை. மிக ஒடுக்கமான அந்தப் பழைய பொருட்கள் வைக்கக்கூடிய அறையில் ஒளிந்துகொண்டிருந்தான். அவனைப் பார்த்தபோது நிதானத்தை இழந்தேன். அவன் உடலை அப்போது பார்த்ததைப்போல் என்றைக்கும் பார்த்ததாக நினைவுகளிலில்லை. ஆனால் அவனின் உடலைச் சுற்றி கதகதப்பான ஒரு சுகந்தம் பரவியிருந்தது. அழுக்கேறிய கண்ணீர் தாண்டியும் அந்தச் சுகந்தம் வியாபிக்கத் தொடங்கியிருந்தது. அப்போதுதான் அந்தத் துயரார்ந்த சம்பவம் நிகழ்ந்தது.

நாங்கள் இருவர் இருந்த அறையில் நான் மட்டுமே தனித்திருந்ததைப்போல், என் கால்களின் கீழ் நிலம் வழுக்கிக் கொண்டிருந்தது. தலையும் உடலும் மாயக் கைகள் தள்ளி விளையாடுவதைப்போல் முன்னும் பின்னும் ஆடிக் கொண்டிருந்தன. ஆண்டுக் கணக்கில் தன்னிலையற்று நிற்பதைப்போல் என்னைச் சுற்றி ஒரு அவமான உணர்வும் கெக்கெரிப்புச் சப்தங்களும் எழுந்தன. இப்போது நான் என்றென்றைக்குமாகச் சரிந்தேன். அப்போது எனக்கான துயரமும் கண்ணீரும் சேர்ந்த அந்த அதளபாதாளமும் ஆவெனத் திறந்துகொண்டது.”

வீட்டிற்குத் திரும்பினேன். துயரமும் கருணையும் நிரம்பிய பெத்தாய்ச்சிவின் முகம். வஞ்சிப்பின் கோடுகளும் அதில் பரவிக் கிடந்தன. மெல்லிய விசும்பல் அவரிடம் அடிக்கடி வெளியேறும். ஒரு நடு இரவு; அன்று கடுமையான மழை. மஞ்சள் நிரம்பிய எங்கள் அறை வெறிச்சோடிக் கிடந்தது. பகல் புழுக்கம்; அறையை நிறைத்துக் கிடந்தது. கழுத்தில் வடிந்த வியர்வையுடன் எழுந்து வெறித்தேன். மின்சாரம் போயிருந்தது. மழையே பொழிந்தாலும் எங்கள் அறை குளிராது. உள்ளிருக்கும் சூடு வெளியே போகாது; வெளியிலிருந்தும் எதுவும் வராது.

விசாரணை: 13 : CGO விருந்தினர் மாளிகை பின்புறம்

துக்ககரமான இரவில் பாடும் பெண் அவள் பெத்தாய்ச்சி இல்லை. அந்தப் பெண் குரல் மூன்று கடல்களின் தூரத்தில் இருந்து சன்னமாய் வழிவதைப்போல் இருட்டில் கரையும். அவள் அந்த ராவைப் பழிப்பாள். பாரதூரமானவை இரவுகள் எனச் சாபமிடுவாள். உழைவை ஏற்படுத்தும் பாடலில் அவள் கூறுவாள்: என் மகளே, உன் சிறிய விரல்களைப் பற்றி இழுத்துச் சென்றேன். நீ எண்ணியிருக்கமாட்டாய். நான் உன்னை இல்லாமலாக்குவேன் என்று. ஆனாலும் கடவுளின் சாட்சியாய் நிகழ்ந்தது அதுதான். உடைந்துபோன இதயத்தோடு நான் உன்னைத் தேடினேன். நீ என்றென்றைக்குமாக என்னிடம் இருந்து விலகிப் போவாய் என நான் எண்ணியதே இல்லை மகளே.’’

விசாரணை: 14 : SC – II, A பிரிவு இல்லம்

வீரக்குட்டியாரின் யாரோ கூறிய கதைகளையும் பெத்தாய்ச்சி என்னிடம் மட்டும் கூறிய கதைகளையும் மட்டுமே அதுவரை அறிந்திருந்த எனக்கு வீரக்குட்டியார் சொன்ன பெத்தாய்ச்சியின் கதை ஆர்வத்தை தூண்டியது. மேலும் அவரின் வாயையே நான் பார்த்துக் கிடந்தேன். அவர் சொல்ல ஆரம்பித்தார்: ”அந்த நாளில் அந்த ஊரே படபத்திரகாளிக் கோவிலின் முன்பு அமர்த்தி வைக்கப்பட்டிருந்தது. பதினெட்டிலிருந்து இருபது வயதுக்காரர்கள் தனி லைனில வாங்க என்றபோது தக்காளியரோட மூத்த மகன் விசர் முருகன் ‘89ஆம் ஆண்டு பிறந்தவங்க எங்க நிக்கோனும்’, என்று கடைக்காரியைப் பார்த்து ஒரு இளிப்பு இளித்தான். மூன்றாவது நிமிடம் பனை வடலிகளுக்கிடையில் அவன் செருகப்பட்டுக் கிடந்தான்.

மற்றையவர்கள் எந்த மூச்சுப் பேச்சுமின்றி லைனிலேயே புதைந்து போயிருந்தார்கள். ஊரின் ஏழு பிள்ளைக்காரி வீட்டில் பெத்தாய்ச்சி ஏழாவது பிள்ளை. அவரின் தாய் நான்கு பிள்ளைகளைப் பறி கொடுத்திருந்தார். பெத்தாய்ச்சி கடைக்குட்டியென்று இருந்தார். தெத்திப்பற்கள் தெரிய அவர் சிரித்தால் தாய்க் கிழவிக்கு கனிஞ்சு நெஞ்செல்லாம் பூரிச்சுப் போன மாதிரி இருக்கும்.

பெத்தாய்ச்சிச்சிட்ட இருந்து அவள் காசக் களவெடுத்துப் பிள்ளையளோட சேர்ந்து ஐஸ்பழம் வேண்டிக் குடித்துத் திரிந்தாள்.
தாய்க்கும் பிள்ளையெண்டால் ஒரே கொண்டாட்டம். பிள்ளைக்கு ஐஸ்கிரீமும் சொக்லேட்டும் என்று பாத்துப் பாத்துச் செய்தாள். பிள்ளையின் முடி நன்றாகக் கறுப்பாக வளர வேண்டுமென்று ஒலிவொயிலையும் தேங்காயெண்ணெயையும் ஒன்றாகக் கலந்து பிள்ளையின் தலையில் வைத்துவிடுவாள்.

தாய்க்கிழவிக்கு பெருசா யாரோடயும் தொடர்பில்ல சொந்தக் காரங்கள் என்டு நானும் யாரையும் கேள்விப்படேல. ஆனால் கிழவி ஆரோ ஒரு சின்னப் பெடியோட தொடர்பாம். தாயும் மோளும் பெருசா கதை வார்த்தைகளில்ல. அதுவும் அங்க ஊர்ல வச்சாம். அவன் ஏதோ சிப்பித்திடல் பொடியனாம்.”

இப்போது என் மண்டைக்குள் சிப்பித்திடல் (ஊருக்கு ஒதுக்குப் புறமான தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதி) என்ற வார்த்தை கணத்தே கேட்டது.

வீரக்குட்டியார் கதைக்கிறதெல்லாம் ‘ நானும் மனுசன் நீயும் மனுசன் எல்லாரும் மனுசன்தானேயடா?’’. லோ கதையள் கதைக்கிறதெண்டால் இவர அடிக்கிறதுக்கும் ஆளில்லை. விசம். இனிமேல் பெத்தாய்ச்சியைப் பற்றி இந்த வெங்காய மனிசனிடம் கேட்கக் கூடாது என்று முடிவு எடுத்திருந்தேன்.

ரிச்சி ஸ்ரீட்ஸ் தாண்டிப் போயிருந்தேன். அறைக்கு வந்தபோது இருட்டியிருந்தது. முதலில் அறை மாற வேண்டும்; இந்தக் கதைகளைக் கேட்க ஆரம்பித்ததிலிருந்தே கிட்டத்தட்ட ஆறேழு தடவைகள் மாற வேண்டும், மாற வேண்டும் என முடிவெடுத்திருந்தேன்.

விசாரணை: 15 : சீமாட்வார், டெஹ்ரான் சதுக்கம்

பெத்தாய்ச்சிச்சியைப் பற்றி அறிய முயற்சி செய்து ஏறத்தாழ அகழ்வராய்ச்சியின் சாகசத் திகீர் முடிவுகளைத்தான் எதிர்பார்த்தேன். ஆனால் கிழவி கதை சுவாரசியம் அதிகமாகும் பாம்பு வளையாக மாறிவிட்டிருந்தது.

விசாரணை: 16 : ஹபூர் சிங்கி, மூன்றாம் இலக்க வீடு

வீரக்குட்டி சாமானை என்ன மாதிரி சோதிக்கலாம் என யோசித்தேன். இறுதியில் ரூமில் இரண்டு பெரிய ஸ்பீக்கர் பெட்டிகளைப் பொருத்தினேன். அது ஓரளவுக்கு வேலை செய்யவே செய்தன. அந்த அறையில் சோகமான பாடல்களை ஒலிக்க விட்டேன்; நான் நினைத்ததே நடந்தது. இறுதியில் பெத்தாய்ச்சிக் கிழவி சொன்னதால் அந்த ஸ்பீக்கர்களைக் கடன் வாங்கியவனிடமே திருப்பிக் கொடுத்தேன்.

விசாரணை: 17: ஹபூர் சிங்கி, மூன்றாம் இலக்க வீடு

எலிகள் நகருக்குள் புகுந்து அட்டகாசம் செய்திருந்தன. அடுத்த நாள் அதிகாலையில் எலிப் பீதியில் அச்சடிக்கப்பட்டிருந்தன பத்திரிகைகள். ‘எலிகள் அட்டகாசம்-பொதுமக்கள் பீதி‘ திகில் தலைப்புடன் செய்தி வெளியாகியிருந்தது. நகர் முழுக்க பாண்டையான வாசனை எழத் தொடங்கியிருந்தது.

இரவுகள் குளிர்ந்து ஒடுங்கிக் கிடந்தன. பரபரத்துக் கிடந்த நகரம் சிவந்தும் மஞ்சளும் நீலமும் பாரித்து ஒரு விடியாத விநோதமான அமைதியில் துவண்டு கிடந்தது. செய்திப் பேப்பர் விற்கும் ரோஸ் கடைக்காரி மட்டும் அன்றைக்குக் கடையைத் திறந்து வைத்திருந்தாள். அவளும் சிறிது நேரத்தில் கடையை அடைக்கப் போவதாகவும் நகரமே அழியப் போகிறது எனவும் கைகளை ஆட்டி ஆட்டி ஒரு ஒருவனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள். சிகரட்டுகளும் ஒரு தண்ணீர் போத்தலும் வாங்கிக்கொண்டு அறைக்கு வந்தேன். ஊரே ஓடித்திரிகிறது. ஸ்பீக்கர்ப் பெட்டி உதவியால் வெறிக்குட்டியைத் துரத்தியது துரத்தியதுதான். ஆள் இன்று வரைக்கும் இல்லை.

கட்டாயம் கிழவியைப் போய்ப் பார்க்கத்தான் வேண்டும். ஏற்கனவே கிழவிக்கும் எலிக்கும் ஏழாம் பொருத்தம். பெத்தாய்ச்சிச்சி குசினிப் பைப் அடைத்துவிட்டதென்று அதற்குள் கையைவிட உள் சிக்கிக் கிடந்த எலி ஏதோ பெரிய விசக்கிருமிதான் தன்னைக் கொல்லப் போகுதென்டு நினைச்சு ரெண்டு முன்னங்கையாலையும் பிடிச்சு கொய்யாப்பழத்த கடிச்சிப் பிய்ச்சு இழுக்கிற மாதிரி கொரண்டி இழுத்துவிட்டது.

கிழவி நப்பி; ஆசுப்பத்திரிக்கு போனால் செலவெண்டு இங்கயிருந்து நடந்துபோய் எம்ஜிஆர். ஆசுப்பத்திரிக்கு போயிட்டு வந்த கதையை கிழவியே என்னிடம் ஒருநாள் சொல்லியிருக்கிறார்.

ஒரு முறை அவரிடம் வீரக்குட்டியார் பற்றிப் பேச்செடுத்தபோது ‘‘கேட்டிக்கம்பு பிய்யும் ஐசே உமக்கு. அந்தத் தேவாங்கு பற்றி நீர் என்னட்ட ஒண்டும் சொல்லாதயும். விசரன்…’’ என்று புறுபுறுத்தார்.

யாரைத் திட்டுகிறாரெனத் தெரியாமல் முழித்தது மட்டும்தான் மிச்சம்.

நகரில் எலிகள் ஒடுக்கப்பட்ட பிறகு நகரம் சற்றுப் பரபரப்போடு இயக்க ஆரம்பித்திருந்தது. அமைச்சர்மார்கள் மக்கள் கலங்க வேண்டாம்; எலிகள் மட்டுமல்ல கரப்பான்களையும் ஒழிப்பதற்கான டொனிக் ஒன்றும் தயாராகிக் கொண்டிருப்பதாகவும் அதை மனிதர்கள் குடித்தாலே போதுமான கரப்பான்கள் நீங்கள் இருக்கும் பக்கமே நுழையாது என மாறிமாறிச் சேனல்களில் கூவிக் கொண்டிருந்தனர்.

விசாரணை: 18 : நுங்கம்பாக்கம், ராஜ்பவன்

தொப்பிகளையும் தோல்பொருட்களையும் மட்டும் கடிக்கும் எலி குறித்த குறிப்புகளை லிட்டன் எழுதியுள்ளார். 1878இன் லிட்டனின் ‘28நூற்றாண்டுக் கப்பல் பயணக் குறிப்பு’களில் மூன்று வாரங்களுக்கு ஒருமுறை திகதி வாரியாக குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. லிட்டனின் தொப்பியை கடித்த எலியைக் குறித்து அவர் புகார்கூட அளித்திருக்கிறார். தொப்பியை ஒழித்த எலியை ஒழிப்பவர்களுக்கு கம்பனி அரசிலேயே மூன்று தலைமுறைப் பணி உறுதி செய்யப்படும் எனவும் தந்தி அடித்தார். அதன்படி பிரிக்கப்படாத மதுரை ஜில்லாவில் தற்போதிய இராமநாபுரத்திலிருந்து சின்னான் என்கிற விசமுறிவு வைத்தியர் வரவழைக்கப்பட்டார். மூன்றரை அடி உயரமும் கால்களும் கைகளும் வளைந்த அந்த மனிதர் தோம்ஸன் மன்ஹட்டன் கில்லர் என்ற அந்த எலியைக் கொல்ல பாஷாணத்தைத் தயாரித்தார். கடைசியில் சின்னான் டிஎம்கே (சுருக்கப் பெயர்) வைக் கொன்று தன் ஏழு தலைமுறைக்குமான சாபத்தைத் தேடிக்கொண்டதாகவும் கூறப்படுகிறது. சின்னான் நன்கு கறுத்துத் துண்டும் கோவணமும் மட்டும் கட்டியிருந்த அவர் புளித்த வாடையான ஒரு திரவத்தை அடிக்கடி குடித்துக்கொண்டிருந்ததாகவும் அந்தச் சுரைக்குடுவை மிகுந்த கலை ரசனை மிகுந்ததாகக் காணப்பட்டதாகவும் லிட்டன் குறிப்பிடுகிறார்.

இறுதியில் இறந்த எலியைக் காண்பித்து ‘இதுதான் எம்எச்கே என்று எப்படி நம்புவது?’ எனக் கேட்டு சின்னானைத் துரத்தி விட்டதாகவும் லிட்டன் தெரிவிக்கிறார். மூன்று நாட்கள் எதுவும் உண்ணாமல் இருந்த சின்னான் டிஎம்கேவுக்குத் தயாரித்த நீலப் பாஷானத்தை மென்று தின்று இறந்தார். சுத்தநாகமும் சிறிது காலங்களிலேயே இறந்து போனார். சுத்தநாகம் – சின்னான் தம்பதியினரின் இரு குழுந்தைகள்; ஆணும் பெண்ணும், விஷமுறிவு வைத்தியமும் வரலாற்றின் இருள் மூலைக்குள் கருநாகமெனச் சுருண்டு போனது. இன்றும் ஏழரைக்கோயிலில் சின்னானுக்கு வழிபாடும் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மார்கழி மாசமும் நல்ல குளிரான காலையில் சின்னான் இறங்குவதாக ஒரு உபரித் தகவல்: ஏழரைக்கோயில் கல்வெட்டு இந்தியாவின் புகழ்பெற்ற கல்கத்தா அருங்காட்சியகத்தில் இல்லை. அது அடால்ப் ஹிட்லரைப் படையில் இணைத்த மூன்றாம் லுட்வி மன்னனின் நிலச்சுவாந்தார் ஒருவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மூன்று குறிப்புகள்:

வீரக்குட்டியார் : வீரக்குட்டியார் பன்னிரண்டு வருடம் இந்தியாவில் கல்கத்தாவிலும் சென்னையிலுமாக இருந்துவிட்டு தற்போது மனுஸ்தீவு நலன்புரி முகாமில் தொண்டூழியம் செய்துகொண்டிருக்கிறார்.

பெத்தாய்ச்சி : பாகிஸ்தான் அரசுக்கு நேரடியாக துப்புக் கொடுத்ததாக இந்துமுன்னணியின் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். மேலும் அவரிடமிருந்து மூன்று சிம் கார்டுகளும் நோக்கியா உயர்ரகத் தொழிற்நுட்ப செல்போனும், 1200 ரூபாய் ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டது. கிடைத்த மூன்று சிம்மிலும் இருந்த பதினான்கு நபர்களும் விசாரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் மூன்று சிம்மிலும் பொதுவாகப் பதிக்கப்பட்டிருந்த இருவருக்கு பெத்தாய்ச்சிவோடு நெருங்கிய தொடர்பிருந்திருந்திருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. குறித்த நபர்கள் கண்காணிப்பில் சிக்கியுள்ளார்கள்.

‘தினத் தந்தி’ 2014 – செப்டம்பர் – 07

* * * * * * * *

கசப்பு ( சிறுகதை ) / பாலா கருப்பசாமி

பாலா கருப்பசாமி

சாலையில்தான் எத்தனை வாகனங்கள்
இங்கே மின்விசிறி சுழல்கிறது
புத்தக மேலட்டை நடுங்குகிறது
அதைக் கட்டியணைத்து
ஒன்றுமில்லை, ஒன்றுமில்லை
என்று தேற்றவேண்டும்போல
பூமி சுழலும் வேகத்தில்
தலை கிறுகிறுத்து, வியர்த்து
பாதங்கள் நழுவி முடிவற்ற
இருள்வெளியில் தள்ளுகிறது
கொஞ்சம் ஞாபகங்கள்
சில கண்ணீர்த் துளிகள்தவிர
விட்டுச்செல்பவை ஏதுமில்லை

ஒடுக்கமான அந்த நீண்ட நடைக்கூடம் ஒவ்வாமையைத் தந்தது. தான் பார்ப்பவை எல்லாம் ஏன் இப்படி இந்த உலகத்தில் இருக்கத் தகாததாகவே இருக்கின்றன என்று அவன் வியந்துகொண்டான். ‘இதோ, முன்னால் காத்திருக்கும் இருவரில் முதல்பெண் படபடப்புடன் இருக்கிறாள். அப்படியே கொப்பளித்துச் சிந்திவிடுபவள் போல. இரண்டாவது பெரியவர் இருக்கையின் மேல்முனையைத் தாண்டி நீண்டிருக்கும் பின்னந்தலை சுவரில் சாய்ந்திருக்க (வழுக்கைத்தலை) சுவரில் எண்ணெய்த்தடம் தெரிகிறது. உள்ளேயிருந்து கசப்பு எதுக்களித்துக்கொண்டு வருகிறது.

வாந்தியாய் எடுத்துவிட்டால் எத்தனை நிம்மதியாய் இருக்கும். ஒவ்வாமை, ஒவ்வாமை, ஒவ்வாமை. மனிதர்களும், மனிதர்களால் அறிவுறுத்தியும், அறிவுறுத்தாமலும் கடைபிடிக்கப்படும் நாகரீகங்கள், அது கண்டுகொள்ளாது விட்டுச்செல்லும் மனித உணர்வுகளை ஸ்மரணையற்றுப் போகச்செய்யும் மொண்ணைத்தனம், இவையெல்லாம் சேர்ந்து வயிற்றில் சுழன்று சுழன்று மேலேற முடியாது தவிக்கும் அந்தக் கசப்பு.

சுப்புராஜ் சொன்னதுபோல இது செய்வினையாக இருக்கும் என்று வி.கே.புரத்திலிருக்கும் ஒரு சாமியாரைப் போய்ப் பார்த்தான்.
பிரதான சாலையிலிருந்து இடதுபுறம் பிரிந்துசெல்லும் நீண்ட தெருவில், வடிவ ஒழுங்கில்லாத வீடுகளைக் கடந்து, மீண்டும் இடதுபுறம் திரும்பினால் ஒதுக்குப்புறமாய் வரிசையாய் காம்பவுண்டு வீடுகள். காம்பவுண்டுகளை ஒட்டி சின்ன வாய்க்கால் பன்றியின் நிறத்தில் நிலைத்திருந்தது. சின்ன சிமிண்டுப் படிக்கட்டுகளைத் தாண்டி காம்பவுண்டுக்குள் நுழைய இடமும் வலமுமாய் இரண்டிரண்டு வீடுகள். வலதுபுறம் முதல்வீட்டு வாசலில் காவித்துண்டை மேலே போட்டபடி புருவமத்தியில் குங்குமக் கீற்றுடன் சாமியார் டெஸ்கில் ஒரு நோட்டில் ஏதோ கணக்குகள் போட்டுக்கொண்டிருந்தார். சுப்புராஜ் விவரங்கள் சொன்னான். அவர் அவனையே இமைமூடாமல் பார்த்துக்கொண்டிருந்தார். திடீரென்று இங்கு என்ன செய்கிறோம் என்ற உணர்வும், எதற்குமே அர்த்தமோ நோக்கமோ அற்ற வெயில்போல் மரத்த உணர்வு மேலிட, அப்போது அது மீண்டும் நடந்தது. கசப்பு.

பொங்கிப்பொங்கித் திரண்டு, மாதங்களை நொடியில் தாண்டும் குதிரைபோல மனம் ஓட்டமெடுத்து ஓட, அவ்வேகத்தில் வளரும் மரம்போல கசப்பு வளர்ந்து எல்லாவற்றையும் இருளைப்போல மூடிக்கொள்ள, சாகப்போவதுபோல, பிடியில்லாமல், நிற்கமுடியாமல் உட்காரமுடியாமல் தத்தளிக்க, இங்கே இருக்கக்கூடாது, எதுவும் சரியில்லை என்று நினைத்துக்கொண்டிருக்கையிலேயே வாந்தியெடுத்தான். வெறும் எச்சில் மட்டும்தான் வந்தது. ஐந்து நிமிடத்தில் சரியாயிற்று. காற்று வியர்வையில் பட்டு குளிர்ந்தது. மரக்கிளைகள், செடிகள், பளிச்சென்று சிரிக்கும் வெயில் ‘என்ன, இதுக்குப்போயி இத்தனை அமர்க்களமா’ என்று கேலி செய்வதுபோல் இருந்தது. சாமியார் திருநீறை வாயில்போட்டு தண்ணீர் குடிக்கச் சொன்னார்.

இரண்டு அரக்குநிற உருண்டைகளைக் கொடுத்து இரவு படுக்கப்போகுமுன் ஒன்றுவீதம் சாப்பிடக் கொடுத்தார். ‘செய்வினைதான். செய்வினைங்கறது தகடு இல்லை. நீங்க இருக்கதை நினைச்சி, அவங்க முன்னாடி நீங்க இல்லாட்டியும் உங்களை மனசிலே கறுவிக்கிட்டிருக்கவங்களோட, இறந்த ஆத்மாக்களோட கோபம் எல்லாமாச் சேந்து பண்றதாக்கும். மூதாதைகளுக்கு தவறாம திதி குடுங்க. சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு எள்ளு வச்சிக் கும்பிடுங்க. பைரவருக்கு பூசணிக்காயில விளக்கேத்துங்க. எல்லாம் சரியாப் போவும்’
இது நடந்தது போனமாதம். போய் வந்த ஒருவாரத்திலேயே மீண்டும் ஆரம்பமாயிற்று. அவனுக்கு சடங்குகளில் எந்த நம்பிக்கையுமில்லை. ஆனால் மனதுக்குள் வேண்டிக்கொண்டான்.

‘அப்பா, நான் பார்த்திராத என் தந்தைகளே, மூதாதைகளே, உங்களின் ஒரு துளி நான். என் மீது கருணை கொள்ளுங்கள். என்னை இங்கே இருக்க அனுமதியுங்கள். வேரறுத்துவிடாதீர்கள். தெய்வங்களே, என் மனதை எனக்குத் திருப்பித் தாருங்கள்.’ யாருமே இல்லாமல், மனதின் நூற்றுக்கணக்கான குரல்களில் இதுவும் ஒன்றோ என்று தோன்றியது. மிகுந்த மனச்சோர்வை அடைந்தான். இரவுகள் தான் மோசம். பகல் முழுக்க மேலாண்மை பார்த்த புத்தி உறங்கும் நேரம். மனதிலிருந்து அவர்கள் கல்லறை மீட்புப் போல எழுந்து வருவார்கள். தர்க்கமே இல்லாமல் ஓடும் எண்ணங்கள் நெடுநேரம் நீளும்.
சாமியாரைப் பார்த்துவந்த பத்து நாட்களில் மீண்டும் அவனுக்கு ஒவ்வாமை தாக்கியது.

அம்மா, அண்ணன், தங்கை, மனைவி, பிள்ளைகள், நண்பர்கள், தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், பொருட்கள், இடங்கள், கடவுள் எல்லாம் யாரோ கத்தரியால் வெட்டிவிட்டதுபோல் அந்நியமாக அந்தரத்தில் இருளில் மிதக்கும் அனுபவம். வானவீதியில் வெகுதொலைவில் மீண்டும் மனிதர் ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்பு இருக்குமா என்றே தெரியாத நிலையில் ஒருவரை நிறுத்திவைத்தால் எப்படி இருக்குமோ அப்படி ஒரு அனுபவம். பிறரெவரும் உள்ளே நுழையமுடியாத தனிமை. தனிமை. தனி…..மை.

ஏகமனதாக மனோதத்துவ நிபுணரைப் பார்ப்பதுதான் சரியாக இருக்கும் என்று முடிவுக்கு வந்து, டவுணில் மேலரத வீதியில் இருக்கும் கிளினிக்குக்கு வந்தான். அந்தப் பெரியவர் போய் ஒருமணிநேரமாகிறது. மீண்டும் ஒரு தாக்குதல் நிகழ்ந்துவிடுமோ என்று பயமாய் இருந்தது. முன்னெல்லாம், இதைப் போக்க கம்ப்யூட்டரில் கேம் விளையாடினான்.

ஒவ்வொரு குறிக்கோள்களையும் தாண்டிச் செல்வதில் ஆர்வத்துடன் ஈடுபட்டான். ஒருகட்டத்தில் அது அபத்தமாகத் தெரிய ஆரம்பிக்க நிலைமை இன்னும் மோசமானது. யாரோ தன்னை ஏமாற்றுகிறார்கள். அர்த்தமேயில்லாமல், போலியாய் ஒரு அர்த்தத்தை உருவாக்கிக்கொண்டு காலத்தைக் கடத்த இப்படிச் செய்கிறார்கள்.

இந்த வாழ்க்கையும் இதைவிட மோசமான விளையாட்டு. வெற்றி, தோல்வி என்பதெல்லாம் பெரும் பித்தலாட்டம். எந்த அர்த்தங்களுக்கும் பொருளில்லை. அர்த்தங்கள் தனியொருவரிடம் தொடங்கி, அவரிடமே முடிந்துவிடுகிறது. அர்த்தங்கள் குறித்து இந்த உலகுக்கு அக்கறையில்லை. நரகம்.

‘இதோ அருகிலிருக்கும் இவரை என்னால் புரிந்துகொள்ள முடிவதில்லை. சுவரில் அந்தப் பல்லி எதற்கு அரைமணிநேரமாய் நின்றுகொண்டிருக்கிறது? இந்த மருத்துவரைத்தான் புரிந்துகொள்ள முடியுமா? அவருக்கு கொஞ்சமும் மனதளவில் ஒட்டாமல் கேள்விகள் கேட்டு சில தீர்வுகளை, அல்லது மருந்துகளைக் கொடுப்பார். நான் காசு கொடுக்க வேண்டும்.

தொழில். என்னை நானாகவே எடுத்துக்கொள்பவர் யார்? ஒரு நண்பனால் முடியுமா? எத்தனை கழித்தும் மீதமிருக்கிறது வெறுமை’. உள்ளே அந்தப் பெரியவர் அழுவது கேட்கிறது. எல்லோருமே பரிதாபத்துக்குரியவர்கள்.

அவனுக்கு வாலிபவயதில் காதலித்த பெண்ணின் ஞாபகம் வந்தது. அவள் பெயர் தமிழ்ச்செல்வி. ஒளிர் கருமை நிறம். பார்த்துத் தீராத முகம், கோவில் சிலைபோல. அவனுக்கு 2 அக்காவும், ஒரு தம்பியும் உண்டு. 16 வயதில், 11வது படித்துக்கொண்டிருந்தபோது தமிழ்ச்செல்வியை காதலிக்க ஆரம்பித்தான்.

இந்த வயதில் தான் காதலிக்கவேண்டும் என்று முடிவெடுத்து, யாரைக் காதலிக்கலாம் என்று யோசித்து தற்செயலாய் அவளைப் பார்க்கையில் அவளும் அவனைப் பார்த்தாள். சந்தோசமாக இருந்தது. பின்னர் இருவரும் ஒருவரையொருவர் கவனிக்க ஆரம்பித்தார்கள். இருவருக்கும் ஒரே தெருவில்தான் வீடு. குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு தெருக்கோடியைக் காட்டுவதுபோல் அவனை நோக்கி விரல்நீட்டுவாள். குழந்தையை முத்தமிடுவாள். பொங்கிப் படர்ந்துகொண்டிருந்தான். மணம்வீசும் பூப்பூத்த செடியைப் போல வாழ்க்கை நிரம்பி வழிந்தது. ஆனால் கடைசியில் இது ஒத்துவராது வேண்டாம் என்று அவள் விலகிவிட்டாள். காரணம், இருவருக்கும் 1 வயதே வித்தியாசம்.

தனது அக்காக்களுக்கு திருமணம் முடிந்து அவனுக்கு வருவதற்குள் பல வருடங்கள் ஓடிவிடும். அவன் நொறுங்கிப் போனான். எப்படியிருப்பினும் ஏற்றுக்கொள்ளும் தாய்மைக்குப் பிறகு, பால்யகாலம் கடந்து வாலிபத்தை எட்டிப்பிடிக்கையில் ஒரு செடி தானாக வளர முயலும் முயற்சியைப் போலத்தான் காதல். அது உலகில் தன்னைப் பிடித்துவைத்துக்கொள்ள ஆதார சக்தியின் இயக்குவிசை. காதல் மறுக்கப்படும்போது வாழ்க்கை ஒருவகையில் மறுக்கப்படுகிறது. இரண்டு உயிர்களுக்குள் ஏற்படும் தொடர்பும், அதன் நிமித்தம் பூரிக்கும் காதலும் மறுக்கப்படும்போது அவர்கள் அந்நியப்படுகிறார்கள்.

தனிமை. தனிமை. தனி…மை. காதலைத் தவிர்த்து இன்னொரு உயிரிடம், ஒன்றாகிவிடுவதுபோல் கலப்பது எப்படி சாத்தியம்? இந்த அந்நியம் பிறகு உலகோடு ஒட்டவைக்கவே முடியாதபடி அந்தரத்தில், பூமியில் தங்காது தொங்க ஆரம்பிக்கிறது. எந்த உறவும் நெருங்கமுடியாதபடி சுருங்கிக் கொள்கிறது. காதல் நிராகரிக்கப்படுவது குரூரமானது. எவ்வகையிலேனும் மனிதன் காதலிக்க வேண்டும். அவனது தனிமை இந்தக் காதல் நிராகரிப்பிலிருந்துதான் தொடங்கியது என்பது அவனது எண்ணம்.

‘காதல் காதல் காதல், காதல் போயின், சாதல், சாதல், சாதல்.’
இருப்பதற்கான நியாயங்கள் வேண்டும். தான் இங்கே, இவ்விதம் இருப்பதில் மகிழக்கூடிய மனிதர்கள் சூழ இருப்பது வரம். எல்லோரும் சுயநலமிகளாய் இருக்கும் உலகில், இருத்தலுக்கான நியாயம் சுரண்டுவதும், சுரண்டப்படுவதுமாய் அமைந்துவிடுகிறது. எல்லா உறவுகளிலும் அவனால் இப்படியான சுரண்டலை மட்டுமே பார்க்கமுடிகிறது. கண்ணில் வழியும் கண்ணீர் கூட சுயத்தைப் பறைசாற்றியபடி வருவதால், இரக்கமும் மரத்துப் போய்விடுகிறது. அழகான நாய்க்குட்டி வாங்கி வளர்த்துப் பார்த்தான், மீன்தொட்டி, கிளி. எல்லா உயிரினங்களும் தன்னுடைய வாழ்க்கையைக் கொண்டாடுகின்றன.

ஓர் உயிரின் மீது அன்பு செலுத்த என்ன காரணம் தேவை. அது இருக்கிறது அவ்வளவுதான். தொடர்பு எல்லைகளுக்கு அப்பால் இருக்கும் ஒரு மனிதன் எப்படித் தொடர்பு கொள்வது. அவனுக்கு எதிலும், யாரிடமும் ஈடுபாடு இல்லாமல் போய்விட்டது. வாழ்க்கைதான் எத்தனை விசித்திரமானது. இந்த மூன்றாவது மாடியிலிருந்து குதிக்க நினைத்தால் குதித்துவிடலாம். மரணமடைய நிறைய வாய்ப்புண்டு. அல்லது பிளேடால் மணிக்கட்டில் கீறிக்கொள்ளலாம். கயிறு மாட்டிக் தொங்கலாம். அது வலி மிகுந்த சாவு. மரணம் வாழ்க்கைக்கு எத்தனை அருகில் இருக்கிறது. பைனரியின் அடுத்த ஒரு வாய்ப்பாக அதன் கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது. எந்த நியாயமுமே இல்லாமல் உலகில் வாழ்வது பெரும் கோழைத்தனம்.

அவன் டெலி மார்க்கெட்டிங்கில் மூன்றாண்டுகளாக வேலை பார்த்துவருகிறான். பணம் என்ற ஒன்றுக்காக, ஓர் அபத்தமான பொருளை, அபத்தமான மனிதர்களிடம் விற்க, அபத்தமாய்ப் பேசவேண்டியிருப்பதுவும் பெரும் ஆயாசத்தைத் தந்தது. கடந்த ஆறு மாதங்களாக அவனது நாற்காலியில் உட்கார்ந்ததும் இந்தக் கசப்பு பொங்க ஆரம்பித்துவிடுகிறது. பரந்துவிரிந்த புறவுலகு எங்கும் அவனை நெருக்கியடித்தபடி, மூச்சுக்குத் தவிக்கும்படி செய்கிறது. அதே இடம்தான், ஆனால் தொடமுடியாத கிரகத்தின் தூரம். ஒழிந்து போவென்று அழுத்துகிறது.

இம்மாதிரி சமயங்களில் வியர்த்து ஊற்றும். மலம் கழிக்க வேண்டும்போல, சிறுநீரும் முட்டிக்கொண்டு, கையைக்கூட தூக்கமுடியாத பலவீனத்தோடு, அடுத்த நொடி மயங்கிவிழுந்துவிடுவோம் அல்லது இறந்துவிடுவோம் என்ற பீதியைக் கொடுக்கும். ஆனால் உடல் இப்படி அவஸ்தையில் இருக்கையில் மயக்கமடைய முடியுமா என்றும் தோன்றும். அவன் அறிந்தவரை மயக்கம் ஒரு தூக்கத்தைப் போல அவஸ்தையின்றி வருவதாக நினைத்துக் கொண்டிருக்கிறான். மரணம் அவஸ்தையோடு தான் வரும். எப்போது அது வந்தாலும் தன்னால் செய்யக்கூடியது எதுவுமில்லை என்றுதான் அவனுக்குத் தோன்றியது. ஒருவேளை இதுதான் நரகம். இந்தத் தண்டனைகளெல்லாம் முடிந்துவிட்டால், இந்தக் கனவு தெளிந்துவிட்டால் பதற்றமில்லாத, தனக்கே தனக்கான ஓர் உலகத்தில் நுழைந்துவிட முடியும். அதற்கெல்லாம் உத்தரவாதம் தருவது யார்?

இரவைப்போல வெளியை இருளுள் மூழ்கடிக்கும் பகல்களும் இருந்தால் எத்தனை நன்றாயிருக்கும். தான் மட்டுமான நிஜம். கண்ணை மூடிக்கொள்ளும் பூனையுலகம். இதுவும் பொய்யென்று அவனுக்கும் தெரியும். ஆயினும் இருள் அவனுக்குக் கசப்பிலிருந்து சற்று ஆறுதல் அளிக்கிறது. மனைவி இவனை நோக்கி நகர்கையில், ரொம்ப எச்சரிக்கையாய்த் தானியத்தை எடுக்கவா வேண்டாமா என்று தயங்கும் ஒரு குருவி படக்கென்று கொத்தித் திரும்புவதைப் போல ஓடிவிடுகிறான். மற்றவையெல்லாம் ஓர் ஆழ்ந்த கருணை. இரவில் வெளியெங்கும் ஒரே நிறம். வெளிதான் முழுமை போலும். தான் மட்டும் ஊர்ந்துகொண்டே இருக்கும் பூரானைப் போல சதா மனதின் அரிப்பு. தன்னிருப்புதான் இங்கு பிரச்சினை. தானற்ற உலகு முழுமையானது.

ஆனால் அவனுக்கு தற்கொலை செய்யுமளவுக்குத் திராணியில்லை. மரணம் பிறப்பைப்போல அருவாகி, கருவாகி, உருவாகி வந்து பிறப்பதுபோல், இந்த இயக்கம் தானாய் செயல் சுருங்கித் தேய்ந்து ஓய்ந்து இயல்பாய் நிற்கவேண்டும். அந்த மரணம் மட்டுமே ஏற்கத்தக்கது. தன் கட்டுப்பாடின்றி நிகழும் விபத்துக்களுக்கு ஒன்றும் செய்யமுடியாது. ஆனால் இதையெல்லாம் யாரிடம் முறையிடுவது? கடவுள் பேசாமலேயே போனதினால் அறிவியல் கடவுளின் இடத்தைத் தானே எடுத்துக் கொள்கிறது.

நோயென்றால் யாரும் மந்திரிப்பதில்லை. மருத்துவரிடம் போகிறார்கள். அறிவியலும் கடவுளைப் போலத்தான். நோய்முதல் நாடி எல்லாம் அதற்குத் தேவையில்லை. தொந்தரவு தரும் பிரச்சினை எதுவோ அதைச் சரிப்படுத்தும் வரம் தருகிறது. எந்த வரமும் அதற்கு மாற்றான தீதை உள்ளே வைத்துத்தான் இருக்கிறது. எல்லா புராணக் கதைகளிலும் வரம் பெறுபவர் பெரும்பாலும் வரத்தால் தவறு செய்கிறார். அது அவரை அழிவுக்குத்தானே இட்டுச் செல்கிறது. – இப்படி எத்தனை எத்தனை எண்ணங்கள் இரவில் ஓடுகின்றன. எந்த இடத்திற்கும் இட்டுச் செல்லாத வீணான எண்ண ஒழுக்கு. ஆயினும் இரவுகள் ஆறுதலளிப்பவை.

அவனுக்கு ஒரு புத்தகக்கடையில் பார்த்த ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் புத்தகத் தலைப்பு நினைவுக்கு வந்தது: ‘Truth is a Pathless Land’. எல்லோருக்குமா இந்த அவஸ்தை இருக்கிறது? பாதையற்ற பாதை எனில் எப்படிச் செல்வது. அவனுக்கு வரும் துர்கனவுகளில் ஒன்று (இன்னொன்று பாம்புகள்) உயரமான மலையுச்சியில் ஒற்றைப் பிடிமானத்தில் தொங்கிக் கொண்டிருக்க பட்டென்று கைநழுவி கீழே ஆழமறியா இருளுக்குள் விழுவது. ஒவ்வொருமுறையும் அவனை இந்தக் கனவு நடுங்கச் செய்யும்.

உயிர் பயம் அது. அப்படித் தொங்காமல் துணிந்து அந்த இருளுக்குள் குதிக்க வேண்டுமோ? இருள்தான் எத்தனை அழகானது. கண்ணை மூடினால் போதும். உள்ளே வந்துவிடலாம், தன்னுடைய வீட்டுக்குள் நுழைவதுபோல. எப்போதும் இருள், ஆம் அது தான் தீர்வு. கண்களைத் திறந்தான். வாகனங்கள் பரபரப்பாக இடதும் வலதும் பதட்டத்துடன் ஓடிக் கொண்டிருந்தன. கீய்ங் கீய்ங் ஹாரன் இப்போது தொந்தரவாய் இல்லை. சடாரென்று வேகமாய்ப் பாயும் கார் முன்னால் விழுந்தால் போதும். சாலைக்குச் செல்ல 10 நொடிகள். காரையும் நேரத்தையும் கணக்கிட 10 நொடிகள். பாய ஒரே நொடி. 21 நொடிகள். 21 நொடிகளில் மரணம். சாசுவதமான இருள். அவன் எழுந்தபோது பெரியவர் வெளியே வந்தார். அவன் உள்ளே நுழைந்தான்.

••