Category: மொழிபெயர்ப்பு

நாங்கள் பிழைவடிவங்கள் ( பாவோ ஹாவிக்கோ கவிதைகள் ) / ஃபின்னிஷ் கவிதைகள் – ஆங்கிலத்தில்: அன்செல்ம் ஹால்லோ – தமிழில்: சமயவேல்.

பாவோ ஹாவிக்கோ

நாங்கள் பிழைவடிவங்கள்:
கவிதைகள்

1
ஒருமலர்ப்பாடல்

ஃபிர்மரங்கள்ஆட்டத்தில்;
ஊசியிலைமரக் காய்கள் பெய்கின்றன கீழே
முடிவே யில்லாமல்;
ஓ நீ, மரம்வெட்டுபவனின் மகள்,
மலைகளைப் போன்ற செங்குத்து,
கரகரப்பாகவும் படோடோபமாகவும்
கேள்,
நீ ஒருபோதும் காதலித்திருக்கா விட்டால், நான்
ஒருபோதும் காதலிக்கவில்லை (உனது
கசப்பான வார்த்தைகள்
நாம் பிரிந்தபோது), ஓகேள்-
ஊசியிலைமரக் காய்கள், உன் மீது பெய்கின்றன
எக்கச்சக்கமாக, முடிவேயில்லாமல்,
இரக்கமே இல்லாமல்.

000

குழந்தைகள் என்னுடைய இந்த முகத்தைப் பெறுகிறார்கள்
நான் ஒரு புது வாழ்வைத் தொடங்கும் போது
மண், தாவரங்கள் போல,
கவிதைகளிடமிருந்து ஓய்வு பெறுதல்.
ஆனால் பிறகுஎங்கே போகும் என் சுவாசம் ?
மற்றும் நான் எவ்வாறு மகிழ்ச்சியோடு இருக்க முடியும்
பன்றிகள் குளம்புகள் முளைக்கிறதைப் பார்க்காமல்,
தோட்டத்தில் கீரை பழுத்தவாறு, பொன்னான…ஓ,
தாமதமாகி விட்டது,
என் தாத்தாவின் தலைவிதி,
ஒரு பயங்கரமான உதாரணம்,
மிக மந்தம் அவர், எல்லா நாற்பத்து-நான்கு
(மற்றும் அது
மிக மோசமான மந்தம்) அவர் ஓய்வுபெற்ற போது,
ஓ அது எடுத்துக் கொள்கிறது முழு மனிதனையும்
சும்மா காற்றின் ஓசையைக் கேட்பதற்காக
சூரிய உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை
மற்றும் நீண்ட இரவு முழுக்க,
ஓ அது உங்கள் பலம் முழுவதையும் எடுத்துக் கொள்கிறது
மெய்யாக ஓய்வில் இருக்க:
அங்கே நடைபாதை கிடையாது
கடவுள்களுக்கு.

000000

2
பிறந்த இடம்

இன்னும், மகிழ்ச்சியுடன் நாம் ஒரு வார்த்தை பேசியாக வேண்டும்,
சூரிய ஒளியைக் கைப்பற்ற ஒரு வீட்டைக் கட்டு,
பள்ளத்தாக்கின் மேல் இருக்கும் உன் ஜன்னல்களைத் திற;
ஆகையால் மரத்துக்குக் கீழே உட்கார் மற்றும் அது சொல்வதைக் கேள்,
நகைச்சுவைகளைப் பரிமாறு, அதனிடம் பேசு,

எல்லா வெறுப்பையும் விட்டுவிடு, ஃபிர் வளர்வதைப் பார், மற்றும் ரோஜா
அங்கே எவ்வாறு பூக்கிறது, வயலோரம்,

ஏரி உறைவதற்கு முன்பு நீ குதிரைக்காரனின் குளம்படியைக் கேட்கிறாய்
அவர்கள் காட்டுக்குச் செல்லும் வழியில், மலைகள் பொஹிமியாவை இருளடையச்
செய்வதற்கு முன்பு,
பொஹிமிய மலைகள், பொஹிமியக் காடுகள்,
பால்கன் காடுகளின் வெகு ஆழத்துக்குள்,
பால்கன் தூசிப்புயலின் வெகு ஆழத்துக்குள்
பைனும் வில்லோவும் மணலுக்கு மேலே எழும்பும் அங்கே. ஒருவெள்ளைப்
பறவை உட்கார்ந்திருக்கிறது தாழ் கிளையில்
தானுபி நதியின் அந்தக் கரையில், ஒரு பரிதாபகரமான அழுகை முழுமையடைகிறது.

000

ஆனால் என்ன, நல்ல நாட்கள் நம்மைத் தாக்கி ஊமைகளாக்கும் என்றால்,
எவ்வாறு நாம் பொறுத்துக் கொள்ளமுடியும் மௌனமாய் வீழ்ந்துவிடாமல்,
எவ்வாறு நாம் பொறுத்துக் கொள்ளமுடியும் மௌனமாய் வீழ்ந்துவிடாமல் கவிதைகள்
எதையும் அர்த்தப்படுத்தாமல் காண்பிக்கப்படும் போது,
இது, இக்காலத் தலைமுறையின் புகழ்ச்சிக்காக:
நாம் அதை எழுதினோம், அந்தக் கவிதை, பிறகு நாம் அமைதியாக வீழ்கிறோம், கேள்:
இது இப்பொழுது பறைகளின் காலம்.

இது பறைகளின் காலம்,
மற்றும் ஒரு சப்தத்தைப் பறையடிப்பது ஊமை இருட்டு அதை முந்திச் செல்லும்போது,
அடர்ந்த இருட்டு, அது ஒரு குரலைச் சுமக்கமுடியாது,
இருமுறை, இல்லை,
ஏழுமுறைகள் இங்கே குழுமியிருந்தது கரும்படைப் பிரிவு,
கருப்புக் கொடிகளின் கீழ்,
மற்றும் இது அது மாதிரி இல்லை, இங்கே அது குழுமியிருந்தது, ஆனால் இது
இப்பொழுது
மற்றும் இப்பொழுது மட்டுமே பறையொலி இதைக் கூறவிருக்கிறது:

இப்பொழுது தான் நேரம், மரணத்திற்கு முன்பு இப்பொழுது தான் நேரம்,
மரங்கள் மலர்களால் நிறைவதற்கு முன்பு,
மற்றும் இவ்வாறாக, இந்தத் தங்கப் பத்தாண்டுகள் தொடங்கிவிட்ட போதும்
ஒரு முடிவை நோக்கி ஈர்க்கப்படுகிறது,
அபூர்வ நட்பும் தீர்ந்து போகத் தொடங்குகிறது, தங்கம் மாற்றப்படுகிறது
இரும்புக்காக.

000

பைன்மரக் காடுகள், பெருங்கவனத்துடன் பயன்படுத்தப்படுகின்றன,
பால்கன் காடுகளிலிருந்து இந்த மரநிலங்கள் வரையிலும் வழிநெடுக,
இங்கு
கவனத்துடன், ஈரமானவைகள் அந்திக்கு முன்பே மூடப்படுகின்றன
அடுப்பு சூடாக இருப்பதற்காக
எவ்வளவு மாற்றவே முடியாதது இந்த உலகம், அச்சுறுத்துகிறது, அது இங்கே, எப்போதும்
இங்கு,
நாங்கள் மட்டுமே நகர்கிறோம்,
என்ன செய்வதென நான் என் மனதைத் தேற்றிக் கொள்ள, எதைத்
தொடங்குவது
வரப்போகாத கடிதத்திற்காகக் காத்துக் கொண்டு,

முனைகளில் தங்கம் பூசிய இறந்த மனிதனின் கடிதத்தைக் கொண்டு வாருங்கள்
காட்டு வழியாக
இது ஒரு பெருங்காடு, அதன் பெரும் பெருமை பால்கனிலிருந்து இந்தக் காட்டை
வந்தடைகிறது,
இது தலைமுறைகளின் பரம்பரைச் சொத்து, கவிஞர்களும் கூட ஓய்வெடுக்கிறார்கள்,
அங்கே,
ஓ, இறுதியாக நான் இதைக் கூறமுடியும், அவர்கள்அங்கே ஓய்வெடுக்கிறார்கள்,
கீழே தோண்டினால், பெரும் முயற்சியுடன் அழுத்தி நசுக்கப்பட்டு
புதைமேட்டுப் புல்லுக்கு அடியில்,
அது உண்மை: அவர்கள் ஓய்வெடுக்கிறார்கள்,
இந்த மாபெரும் காடு, நான்அவைகளிடம் பொறாமை கொள்கிறேன், காற்று என்னை
வளைக்கிறது முன்னோக்கி
மற்றும் எனது கைத்தடியைப் பறித்துக் கொண்டது முடிவற்ற புயலில்,
அவர்களது புதைகுழிக்குக் குறுக்கே காற்று வீசுகிறது,

ஆனால் விடியல், விடியல், அனைத்திலும் மிக முக்கியமானது: மெல்லிய
மின்னல் மரவுச்சிகளின் மேல்,
நாம், நாமாகவே உறைந்த ஏரியின் குறுக்கே நகர்கையில், போகிறோம்
எங்கே? ஒரு மலர்தலுக்காக.

000

கனமானது, ஈரவானம், ஆனால் இங்கே பூமி கனமானதில்லை,
லேசாக இருக்கிறது பூமி,
ஒளி இந்த மகனின் மேல் பொய் சொல்கிறது ஈர பூமியிடம்,
அவனது முடி மட்டும் ஃபிர் மரங்கள் கொண்ட ஒரு மொத்தக் காட்டின் மதிப்புடையது,
அவனது குரல் தரைக்கு வெளியே கேட்கிறது, ஒரு வேர் தருகிற
குரல்
பூமியிலிருந்து அது கிழிக்கப்படும் பொழுது.

கவிதை ஓ கவிதை, எனது ஒரே பிறந்த இடம், நான் பேசுகிறேன் அதை,
அது என் காதலுக்குரியது, பாடலுக்குள்ளே மலர்ந்து கொண்டிருக்கிறது,
ஆனால் நானும் கூட எனக்காக ஏங்குகிறேன், நான் இருக்கும் அந்த இடத்திற்காக, ஒரு
வெட்டவெளி,
ஒரு மலர்களின் வயலில் ஓர்ஆத்மா,

ஓ மாறுதலின் ஒரு முடிவுக்காக நான் ஏங்குகிறேன், நான் இருக்குமிடத்தில் நிற்பதற்காக,
ஆத்மா ஒரு வெட்டவெளி,
மிக அதிக உழவாலும் அறுவடையாலும் ஒருவயல் மலடாக மாறுகிறது;

எங்களில் பன்னிரண்டு பேர் இருக்கிறோம் இங்கே, அவர்களில் ஒருவர் ஓர் அரை
மனிதன் மட்டுமே
மற்றும் எங்களில் ஒருவர் ஒரு துப்பாக்கியுடன் கூடிய ஒரு ஜோடிக் கைகள் மட்டுமே;
நாங்கள், பிழைவடிவங்கள், யுத்தநடையைத் தொடங்கினோம் மற்றும் நடந்து வெளியேறினோம்
அந்திக்குள்
இப்பொழுது எங்கள் தொலைந்த நிழல்கள் இனிமேலும் அழப் போவதில்லை
பூமிக்குள்ளிருந்து,

இப்பொழுது சூரியகாந்திகளுக்கு நடுவில் நிற்கும் எங்களைப் பார், அந்திப்
பொழுதிற்குள்,
கறுத்த உடைந்த தண்டுகளுக்கு நடுவில்,
எங்களைப் பார், நாங்கள் நிற்கும் இடத்தில் பன்னிரண்டு வெட்டவெளிகள்
மலர்களின் வயலில்.

000

நீ நிலவை மணந்துகொள்
மற்றும் கடல் மற்றும் நிலவு மற்றும் பெண்: எல்லாம்,காதுகளற்றவை,
அவர்களது குரல்களை நீ கேட்பாய், நீ அவர்களிடம் பேசுவாய்
மற்றும் அவர்கள் சொல்கிறார்கள்
இது ஒரு விளையாட்டு.

000000

ஃபின்னிஷ் கவிதைகள் – ஆங்கிலத்தில்: அன்செல்ம் ஹால்லோ – தமிழில்: சமயவேல்.

சாண்பிள்ளை ( சிறுகதை ) – ஆலிஸ் மன்ரோ (கனடா) – தமிழில் – எஸ். சங்கரநாராயணன்

ஆலிஸ் மன்ரோ

ஆலிஸ் மன்ரோ

ஆலிஸ் மன்ரோ விமரிசகர்களால் கனடா நாட்டு ஆன்டன் செகாவ் என அன்புடன் கொண்டாடப்படுகிறார். தனது கிராமத்தின் எளிய மனிதர்களை, அதன் பழமை வாசனையோடு அவர் கொண்டாடுகிறார். 2013ம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு அவரது ‘டியர் லைஃப்’ (அட கடவுளே!) சிறுகதைத் தொகுதிக்கு வழங்கப்பட்டது.

***
அப்பா நரிப் பண்ணை வைத்திருந்தார். அதாவது, ‘வெள்ளி’ நரிகள். வெண்திட்டுகள் கொண்ட செந்தாய்கள். நீள் முற்ற வெளியில் வரிசையாய் நரிக் கூண்டுகள். இலையுதிர் காலத்திலும், குளிர்காலத் துவக்கத்திலும் அவற்றின் தோல் திரட்சியடைந்திருக்கும். அப்பா அவற்றைக் கொன்று, தோலுரித்து, தொலிகளை ஹட்சன்ஸ் பே கம்பெனிக்கோ, மான்ட்ரியல் தோல் வியாபாரிகளுக்கோ தருவார். வருடம் பிறந்தால் இந்தக் கம்பெனிகளில் இருந்து எங்களுக்கு சாகசப்படங்களுடன் காலண்டர்கள் வந்தன. சமையல் அறைக் கதவில் தொங்கவிட்டு அவைகளை நாங்கள் அழகு பார்ப்போம். குளுமையான நீல மேகப் பின்னணியில் கருப்பான பைன்மரக் காடு. வடபுலத்தின் ஆபத்தான காட்டாறுகள். அத்தனை உயரமேறி நாட்டிய ஆங்கில, அல்லது பிரெஞ்சுக் கொடிகள். மலையேறிகள் முதுகு பாரத்தில் ஙப்போல் வளைந்திருப்பார்கள்.

கிறிஸ்துமஸ்சுக்கு பல வாரங்கள் முன்னிருந்தே அப்பாவுக்கு ராத்திரிஉணவு கொண்டபின் கூட, நிலவறையில் வேலையிருக்கும். நிலவறை வெள்ளையடித்த கீழறை. மேஜைக்கு வாகாக வயரில் தாழத் தொங்கும் நூறு வாட் பல்பு. தம்பி லெயர்துவுடன் நான் நிலவறையின் மேற்படியில் அமர்ந்து வேடிக்கை பார்ப்பேன்.

அப்பா நரியின் தொலியை உரித்து அதன் உட்புறத்தைப் பிதுக்கி வெளித் திருப்பும்போது அது ஆச்சர்யப் படும்படி இத்துனூண்டாய்க் காணும். நரியா இது, பாவம், குட்டி எலி என்பதாய்க் காணும். இந்தத் தோல்தான் அதன் எடை, உள்ளே மத்ததெல்லாம் ஜுஜுபி, என்று தோன்றும். வழுவழுப்பான அவற்றின் வெற்றுடல்களை ஒரு சாக்குப்பையில் கொட்டி புதைத்து விடுவோம். எடுபிடி வேலை செய்கிற ஹென்ரி பெய்லி ஒருமுறை இந்தச் சாக்கை எடுத்துப்போகையில் என்னை அதால் ஒரு உரசு உரசிச் சென்றான். கிறிஸ்துமஸ் பரிசாக்கும் உனக்கு, என்கிற நக்கல் வேறு. அம்மாவுக்கு அவன் செய்தது வேடிக்கையாயில்லை.

வாஸ்தவத்தில் அவளுக்கு இந்த மொத்தக் கச்சடாவுமே, சாவடிப்பது, தோலை உரிப்பது, சீர்ப்படுத்துவது… அதுவும் வீட்டில் வைத்து இதையெல்லாம் செய்வது பிடிக்கவேயில்லை. என்ன ஒரு வாடை! தொலியை உரித்துத் திருப்பி பலகையில் போட்டு அப்பா அதை நறுவிசாகச் சுரண்டி தொலியின் உட்பக்கமாய் ஒட்டிக்கொண்டிருக்கும் இரத்த நாள திரட்சிகளை, சிறு சதைக் கதுப்புகளை நீக்குவார். இரத்தமும் மிருக ஊனுமாய் ஒரு வாடை. அத்தோடு நரிகளுக்கே இருக்கிற அந்த வாடையும் கிளம்பும். மொத்த வீட்டையுமே ஆக்கிரமித்து நெடிதுயர்ந்த நெடி. தோலுரிக்கிறதுக்கும் ஒரு பருவம் இருந்ததால், பைன் குச்சிகளின் தாவரநெடியைப் போல, ஆரஞ்சுப் பழ வாசனை போல, அந்த நெடியும் ஒரு பருவகாலத்தை நினைவூட்டும்.

பெய்லிக்கு மூச்சிழுப்பு இருந்தது. முடிவே இல்லாமல் முகத்தில் சிவப்பு கொப்பளிக்க இருமி, வெறுப்பைச்சொல்கிற வெளிர்நீலக் கண்களில் ஜலம் ததும்பும். சற்று எட்ட நின்று கணப்பில் ஒரு கொத்து சளியைக் காறி உமிழ்வான். நினைத்த மாத்திரத்தில் இப்படி அடிவயிற்றில் இருந்து புரட்டி அவன் உமிழ்வதே ஆச்சர்யம். அவன் சிரிப்பே விநோதமானது. நெஞ்சுக்கூட்டின் உள்ளே சளிச் சதங்கை. லொடலொடத்த மிஷின் சத்தங்கள். அவன்பாட்டுக்குச் சிரிப்பான் அடிக்கடி. என்ன காரணம் தெரியாது. ஒருவேளை எங்களை நக்கலடிக்கிற எதும் யோசனையோ என்னவோ!

நாங்கள் படுக்க அனுப்பப் பட்ட பிறகும் அந்த வாடையும், அவனது சிரிப்பும் எங்கள் கூடவே இருக்கும். என்றாலும் மேலே இங்கே இருக்கும் கூதல்காற்றைக் காட்டிலும் கீழே நிலவறையின் கதகதப்பும் வெளிச்சமும் பாதுகாப்புணர்வும் தேவலாம்.

குளிர்கால இரவுகளில் எங்களுக்கு பயமாய் இருக்கும். பனிப்பொழிவான காற்று எங்கள் வீட்டை உறங்கும் சுறாபோல சுற்றிப் படரும். ராப்பூராவும் வீட்டுக்குவெளியே இடுகாட்டில் இருந்தும், சதுப்பு நிலங்களில் இருந்தும் காற்று சீழ்க்கையடித்துச் சுற்றி வரும். போதாக்குறைக்கு துயரமும் மிரட்டலுமாய் பூச்சியிரைச்சல்கள்… ஆனால் இப்படி வெளி உபத்திரவங்களால் அல்ல, வீட்டுக்கு ‘உள்ளே’ இரவு கலவரப்படுத்தியது எங்களை. நாங்கள் அப்போது மேலே மாடி கட்டிக்கொண்டிருந்தோம். வேலைகள் இன்னும் முடிந்தபாடில்லை. ஒரு சுவர் உயரம் செங்கல் புகைபோக்கி. தரையின் நடுப்புறத்தில் பெரும் துவாரம். மரப்பிடியுடன் அங்கே மாடிப்படிகள். இந்தக் குழியோடு ஒரு பக்கமாய், யாரும் பயன்படுத்தாத தட்டுமுட்டுச் சாமான்கள் கிடந்தன. லினோலியத் தகடுபோர்த்திய குதிர். சுள்ளி அள்ளிவரும் பல்லக்கு, பாசி சேகரிக்கும் கூடை. கீறல் விட்ட பீங்கான் பாத்திரங்களும் ஜாடிகளும். பலாக்லவா யுத்தக்காட்சியுடன் சித்திரம் ஒன்று, அதைப் பார்க்கவே துக்கமாய் இருக்கும்.

லெயர்து கொஞ்சம் விவரப்பட்ட நாளில் நான் சொன்னேன் அவனிடம். மேலே வௌவால்களும் எலும்புக்கூடுகளும் வசிக்கின்றன அப்பா. கிராமத்து சிறைச்சாலையில் இருந்து யாராவது கைதி தப்பித்ததாகத் தெரிந்தால், எப்படியோ அவன் எங்கள்வீட்டு ஜன்னல்வழியே உள்ளே புகுந்து அந்தக் குதிருக்குள் பதுங்கிக்கொண்டிருப்பதாக எனக்கு பிரமை.

ஆனால் எப்படி எங்களைக் காபந்து பண்ணிக்கொள்வது என்கிற தீர்மானங்கள் எங்களிடம் இருந்தன. வெளிச்சம் இருந்தால் அதுவே எங்களுக்குப் பாதுகாப்பு. படுக்கையறையை அடையாளப்படுத்தும் இந்த கிழிந்த தரைக்கம்பளம், அதைத்தாண்டி நாங்கள் போகக்கூடாது. விளக்கு மட்டும் அணைஞ்சதோ, இந்தப் படுக்கை, இதைத் தவிர வேறு எந்த இடமும் பத்திரம் கிடையாது. படுக்கையில் தவழ்ந்தபடி கையை நீளவிட்டு வயர்வரை அலைந்து விளக்கை அணைப்பது என் வேலை. அவன் தம்பியாச்சே.

இருட்டு. நாங்கள் எங்கள் படுக்கையில் படுத்துக் கிடக்கிறோம். இரவைக் கடக்கும் லைஃப் போட்டுகள் அவை, எங்கள் படுக்கைகள். மேல்கூரையின் மாடிப்படி துவாரத்தில் இருந்து கிணற்றுக்குள் போல வரும் மிதமான வெளிச்சம். எங்கள் கண் அங்கே. மெல்ல வாயில் பாடல்கள் கிளம்பின. லெயர்து, ஜிங்கிள் பெல்ஸ், எனப் பாடினான். கிளிஸ்துமஸ் என்றில்லை எப்ப வேணாலும் நாங்கள் அந்தப் பாடலைப் பாடுகிறது உண்டு. டேனி பாய், என்று நான் பாடினேன்.
என் குரல் எனக்கே பிடித்திருந்தது. கரகரப்பான பணிந்த குரல் இருட்டில் எழும்பி வளையவந்தது. உயரமான பனிப்படலமான வெண்மைநிற ஜன்னல்கள். அந்தப் பாடலின் ஒரு வரி, நான் இறந்துவிட்டால்… என் சப்தம் அடங்கி, சப்தநாடியும் ஒடுங்கிவிட்டால்… உடம்பில் சிறு நடுக்கம். போர்வைக்குள் குளிரால் வந்த நடுக்கம் இல்லை. வார்த்தைகளின் உணர்ச்சித் தீவிரம் என் வாயை அடைத்துவிட்டது. பாடலின் அடுத்த வரி… நீ மண்டியிட்டு, என்மேல் ஒரு ‘ஏவ்’ பிரார்த்தனை வைப்பாய் – என்ன பிரார்த்தனை அது? ஒவ்வொருநாளும் யோசிக்கிறேன். தெரியவே இல்லை.

லெய்ர்து பாடி முடிச்ச ஜோரில் தூங்கிவிடுவான். உறிஞ்சி இழுத்த திருப்தியான அவனது ஈர மூச்சுகளைக் கேட்டபடி நான் படுத்திருப்பேன். அந்த கணங்கள். இப்போது நினைத்துப் பார்க்கிறேன். எனக்கு மிக நெருக்கமான கணங்கள் அவை. அந்த முழு நாளின் அற்புதமான கணம் அதுவே. இறுக்கமாய்ப் போர்த்திக்கொண்டு இப்படிக் கிடக்கிறேன். ராத்திரிக்கு ராத்திரி இக்கணங்களில் நான் எனக்குள் எத்தனையோ கதைகள் பின்னிக்கொண்டிருப்பேன். என்னைப் பற்றியதான கதைகள். ஆனால் அந்தக் கதைகளில் நான் இன்னும் பெரிய பெண்! அது எனக்கேயான, எனக்குப் பிடித்த உலகம். அதில் நான் தைரியமாய் காரியங்கள் செய்ய முடிந்தது. சாகசங்கள். வீரதீர பராக்கிரமங்கள். தியாகம் நிரம்பியவளாய் நான் இருந்தேன்.

வெடி விபத்தான கட்டடத்தில் இருந்து சனங்களை நான் மீட்டேன். (அப்போது எங்கள் பகுதி அமைதிப்பட்டு யுத்தம் வேறொங்கோ நடந்து கொண்டிருந்தது. எனக்கு வருத்தம் தந்தது அது. இங்கே இல்லையே!) வெறிபிடித்துத் திரிந்த இரு நரிகளை என் பள்ளி வளாகத்தில் நான் சுட்டுக் கொன்றேன். என் முதுகுக்குப் பின் பம்மிய, பயந்த வாத்திமார்!) ஜுபிளியின் பிரதான சாலையில் நான் குதிரையேறி ஓட்டிவந்தேன். ஜனங்கள் என்னை வாயைப் பிளந்து பார்க்கிறாப் போலாச்சு. (யாரும் பெருவீதியில் அப்படி குதிரை ஓட்டி பார்க்க முடியாது. ஆரஞ்சுமனித திருநாள்ப் பேரணியில் மாத்திரம், அரசர் பில்லி மாத்திரம் அப்படி குதிரையில் வருவாராக்கும். அதற்கு அடுத்த நபர்… நானே!)

என் கதைகள் பூராவிலும் இப்படி நிறைய குதிரைப் பாய்ச்சலும், டுமீல்களும் இருந்தன. வாஸ்தவத்தில் நான் குதிரையில் ஏறியதே ரெண்டே முறை தான். எங்கள் வீட்டில் குதிரைமேல் போட்டு அமர சேணம் எதுவும் இல்லை. அதிலும் ரெண்டாம் தடவை நான் குதிரை மேலிருந்து வழுக்கி நேரே குதிரையின் காலடியிலேயே தொபீரென்று விழுந்தேன். என் மேல் குதிரையின் கால் பட்டது. நல்லவேளை அது மிதித்துவிடவில்லை. அப்போது நான் சுடவும் பழகிக்கொண்டிருந்தேன். வேலிக்குச்சிகளில் காலி டின்களை தொப்பிபோல் தொங்கவிட்டு, குறிபார்த்து, ஒண்ணைக்கூட சரியாய்ச் சுடவில்லை!

சரி. விஷயத்துக்கு வருவோம். அப்பா அமைத்துக்கொடுத்த கூண்டுகளில் அந்த நரிகள் ஒரு ஒழுங்கில் வாழ்ந்தன. கடுமையான காவல் போடப்பட்ட சுற்று வேலி. ராத்திரி அரண்களைப் பூட்டிவிடுகிற கோட்டைகளைப் போன்ற களம். உள்ளே பாத்திகளாகப் பிரிக்கப்பட்டு இரு மருங்கும் வலிமையான நரிக் கூண்டுகள். அந்தக் கூண்டு கதவுவழியே பெரியாள் ஒருத்தன் குனியாமல் நுழையலாம். நரிகள் ஓடித் திரிய உள்ளே ஓரமாய் மரத்தில் சாய்தளம். தவிர தனி சிற்றறையும். சிறு காற்று துவாரங்களுடன், துணிமணி வைக்கிற அளவிலான சிற்றறைகள் அவை.

அவற்றில்தான் நரிகள் குடித்தனம் பண்ணி குழந்தைகள் பெற்றன. வெளியில் இருந்து தண்ணீரோ உணவோ வைக்க, திரும்ப தட்டை எடுக்க, சுத்தம் செய்ய என கூண்டில் சிறு கதவுத்திறப்பு. பழைய தகர டின்னில் செய்த தட்டுகள். பழைய மர மிச்சத்திலும் ஓட்டை உடைசலை வைத்தும் அமைத்த சாய்தள மேடை. எல்லாமே சுத்தமாகவும் சமத்காரமாகவும் அப்பாவால் கையாளப்பட்டன. அப்பா அடிக்கடி எதாவது பயனுள்ள மாற்றங்களைச் செய்கிறவராக, ஓய்வில்லாமல் அதையே சிந்திக்கிறவராக இருந்தார். அவருக்குப் பிடித்த புத்தகம் ராபின்சன் குரூசோ.

தகர டிரம் ஒன்றில் சக்கரப்பலகை மாட்டி கூண்டுகளுக்கு தண்ணீர் எடுத்து வருவார். கோடையில் தண்ணீர் எடுத்துவரும் வேலை என்னுடையது. கோடையில் நரிகள் நாளைக்கு ரெண்டுமுறை நீர் அருந்தும். காலை ஒன்பது, பத்து மணி வாக்கில் ஒருதரம். ராத்திரி உணவுக்குப் பின் இன்னொரு தரம். குழாயடியில் இருந்து தண்ணீர் சுமந்து கூண்டுகளுக்கு எடுத்து வருவேன். அந்தப் பக்கம்தான் தண்ணீர் வண்டியை விட்டிருந்தேன்.

பெரிய தகரப் பாத்திரத்தை நான் எடுத்துவந்தால், கூட லெயர்து, சின்ன டப்பாவில் அவனும் தண்ணீர் மொண்டுவருவான். டப்பா வழிய வழிய நீரை நிரைத்து சிந்தச் சிந்த ஷுவை நனைத்துக்கொண்டு வருவான். என் தண்ணீர் கேன் பெரியது. அப்பா அதில்தான் தண்ணீர் சேந்தி வருவார். என்னால் அதன் முக்கால் பங்குதான் தூக்க முடிந்தது.

நரிகள் ஒவ்வொண்ணுத்துக்கும் பேர் தனித்தனியே உண்டு. தகரத்தில் பேர் எழுதி கூண்டு உள்ளே தொங்கவிட்டிருந்தது. பிறந்தபோது அவைகளுக்குப் பெயர் வைக்கிறது இல்லை. முதல் வருடத்தில் நரிகள் தோலுரிபடும் போது அவை தப்பித்த பின், உடல் தேறித் திரள, அவைகளுக்குப் பெயர் அமையும். அப்பா வைக்கும் பெயர்கள், பிரின்ஸ், பாப், வாலி, பெட்டி… இப்படி. செல்லமாய் அழைக்கிற பெயர்கள். நான் வைத்த பெயர்கள், ஸ்டார், தர்க், மௌரீன், டயானா… இப்படி. கொஞ்சம் படிப்பு வாசனை தட்டின.

எங்கள் லெயர்து, அவனும் பெயர் வைத்தான். மாத். அவன் குழந்தையாக இருந்தபோது எங்களிடம் வேலைக்கு இருந்த சிறுமியின் பெயர் அது. ஹெரால்ட். அது அவனது பள்ளிக்கூட சிநேகிதன். மெக்சிகோ என்று கூட ஒரு பெயர். அதை எப்படி வைத்தான் அவனுக்கே தெரியவில்லை.

பெயர் வைப்பதால் அந்த மிருகங்களோடு பிரியங் கொண்டாடுவது, அது மாதிரியெல்லாங் கிடையாது. சொல்லப்போனால் அப்பா மாத்திரமே அந்தக் கூண்டுகளுக்குள் போவார். நரி கடித்து ரெண்டுமுறை அவர் ரத்தத்தில் விஷமேறி அவஸ்தைப்பட்டார். கூண்டுகள் பக்கமாய் நான் தண்ணீர் கொண்டுபோகும் போது அவை உள்ளே சாய்தளத்தில் இங்குமங்குமாய் ஓடியபடி என்னையே பார்த்தன. கூம்பெடுத்த முகத்தில் அந்தக் கண்கள் சொக்கத் தங்கமாய் ஒளிர்ந்தன.

உருமல் கிருமல் இல்லை. (ராத்திரிகளில் தான் அவை ஒட்டுமொத்தமாய் ஒரு ஊளை எடுத்தன.) மெலிந்த அழகான கால்கள். அடர் குஞ்சம் வைத்த வால். வெண்புள்ளி தெரித்த பளிச்சென்ற முதுகுத் தோல். அதனால் தான் அவற்றுக்கு வெள்ளி நரி என்று பெயர். குறிப்பாக அந்த செதுக்கினாப் போன்ற கூரிய முரட்டுத்தனமான முகமே அழகு. ஆ அந்தப் பொன்னிறக் கண்கள்.

தண்ணீர் எடுத்து வருவது மாத்திரம் அல்ல. அப்பாவுக்கு புல் வெட்டவும் நான் உதவி செய்வேன். கூண்டுகளின் இடைப்பகுதிகளில் அழகான பூச்செடிகள். அவற்றுக்கும் தண்ணீர் ஊற்றுவது என் வேலை. அப்பா புல்வெட்டியால் புல்லை சர்ரக் சர்ரக் என்று வெட்ட நான் அவற்றை கோபுரமாய்க் குவிப்பேன். அப்பா ஒரு புல்வாரியால் அந்தப் புற்களை அள்ளி கூண்டுகளின் கூரைமேல் பரசிப் போடுவார். உள்ளே குளிர்ச்சியாய் இருக்கும். அதேசமயம் நரிகளின் மேல்தோலுக்கும் சூடுதட்டாது நிழல் கிடைக்கும். இல்லையோ அதிகப்படியான வெயிலில் அவை ஒருமாதிரி பழுப்பாய் ஆகிவிடும்.

வேலை தவிர வேறு பேச்சு அப்பா என்னிடம் பேச மாட்டார். அம்மா அப்படியில்லை. அம்மாவுக்கு உற்சாகம் வந்துவிட்டால், வாய் ஓயவே மாட்டாள். எல்லா விஷயமும் அவள் பேச்சில் கலந்துகட்டும். அவளது சிறுவயதில் அவளோடு இருந்த நாய். கொஞ்சம் பெரியாளாய் ஆனதும் அவளோடு பழகிய பையன்கள். அவளிடம் இருந்த அழகான உடைகள்.

அவையெல்லாம் எங்கே எப்படிப் போச்சு என்றே தெரியலைடி, என்பாள் அம்மா. அப்பாவின் எண்ணங்களோ, அவர்பற்றிய கதைகளோ என்னிடம் பகிர முடியாத அளவு அவருடைமையாக இருந்தன. அவரிடம் கதைபேச எனக்குக் கூச்சம். அவரைப்பற்றி நான் அவரிடம் பேச்சு கொடுத்ததே இல்லை. ஆனால் அவர்பார்வையில் வேலைசெய்ய எனக்கு ரொம்பப் பெருமிதம் உண்டு.

ஒருசமயம் தீவனக்காரன் ஒருவன் வந்தபோது அப்பா அவனிடம், பாரப்பா, எங்கவீட்டின் புதிய வேலைக்காரி. நீ பாத்ததில்லை இல்லையா? சட்டென முகம் திருப்பிக் கொண்டேன். முகத்தில் ஜிவுஜிவுத்த கோபம். ஆனால் நான் வேலை செய்கிறவளாக, என்னை அவர் சொன்னதில் சந்தோஷமும் இருந்தது.

இவளா? பண்ணைவேலை தெரிஞ்சவளா? சின்னப்பொண்ணுன்னில்ல நினைச்சேன், என்றான் அவன்.

புல்லை வெட்டியதும் அந்தப் பிரதேசத்தின் முகமே மாறி வேறு பருவத்துக்கு வந்துவிட்டாப் போலிருந்தது. அந்தி மயங்குகிற வேளை. புல் கழித்த கூளத்தில் நடந்தேன். மேல வானம் சிவந்து கொண்டிருந்தது. சப்தங்கள் அடங்க ஆரம்பித்திருந்தன. இலையுதிர் காலம். தண்ணீர் வண்டியை படலுக்கு வெளியே ஓட்டியபடி, நாதங்கியைப் போட்டேன். இருட்டு நன்றாகக் கவிந்திருந்தது இப்போது. இப்படியொரு நாளில் முற்றத்தின் எதிர்வாடையில் சிறிய மண்மேட்டில் அப்பாவும் அம்மாவும் நின்று எதோ பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்தேன். அப்பா கசாப்புக்கூடத்தில் இருந்து அப்பதான் திரும்பியிருந்தார். இரத்தம் உறைந்து விரைத்த அழுக்கு மேல்துணி. கையில் வாளியில் மாமிசம்.

அம்மா முற்றம் வரை வருவதே அபூர்வம். அநேகமாய் அவள் வீட்டைவிட்டே வெளியே வருவது கிடையாது. தோய்த்த துணிகளைக் காயப்பபோட என்றோ, தோட்டத்தில் உருளைக்கிழங்கு தோண்ட என்றோ தான் வெளியே வருவாள். காலில் எப்பவும் செருப்பு வேண்டும் அவளுக்கு. சூரியன் படாத, மொத்தையான அவள் கால்கள் செருப்பு இல்லாமல் பார்க்க என்னவோ போலிருக்கும். அவளுக்கு அப்படித் தோணியது. வீட்டுவேலை யுடையைக் கழற்றாமல் இருந்தாள்.

வயிற்றுப் பக்கம் அவள் பற்றுப் பாத்திரங் கழுவிய ஈரம். தலைமுடியை கைக்குட்டை கட்டி மூடியிருந்தாள். என்றாலும் அந்த அந்தியில் அந்த முடிப் பிசிர்கள் தெரிந்தன. காலைகளில் கூந்தலை இம்மாதிரி அள்ளி முடிவது உண்டு. ஒழுங்கா வாரிக்க நேரம் எங்கே என்பாள். பகல் பூராவும் தலையை சீர் பண்ண அவளுக்கு ஒழியவே ஒழியாது. அந்தத் தலையின் முடி(ச்சு) அப்படியே தான் காணும்.

இந்நாட்களில் எங்கள் பின்கட்டில் பீச் பழங்கள், திராட்சை. பியர் பழங்கள் என்று கூடை கூடையாய் இருக்கும். நகரத்தில் இருந்து வாங்கி வந்தவை அவை. வெங்காயம், தக்காளி, வெள்ளரி எல்லாம் வீட்டில் விளைந்தவை. எல்லாத்தையும் குழைய அடித்து, ஜெல்லியாக, ஜாமாக ஆக்குவோம். கார சாஸ், ஊறுகாய் மற்றும் சிரப் செய்வோம். சமையல் கூடத்தில் எப்பவும் நெருப்பு அணையாது. கெட்டிலில் நீர் கொதித்தபடி யிருக்கும். திராட்சை வடிகட்டிய துணி சிலசமயம் நாற்காலி மேல் அப்படியே கிடக்கும்.

சமையல்கட்டில் எனக்கு வேலைகள் இருந்தன. வேக வைத்த பீச் பழங்களை நான் தோலுரித்துத் தருவேன். வெங்காயம் நறுக்கிக் கொடுப்பேன். கண்ணே அப்போது பெரிதாகி வீங்கி நீர்பொங்கும். வேலை முடிந்து நான் வீட்டை விட்டு வெளியே ஓடிவிடுவேன். இருந்தால் அம்மா அடுத்த வேலை வைப்பாள். ஐய கோடைகாலங்களில் அந்த சமையல்க்கூட இருட்டை நான் வெறுத்தேன். சன்னல் பச்சைவண்ணத் தட்டிகள். பூச்சி ஒட்டிக்கொள்கிற எண்ணெய்க் காகிதம். எண்ணெய்ப் பிசுக்கான மேசைத் துணி. ரசம் போன கண்ணாடி. அறையில் பதித்த லினோலியம் அநேக இடங்களில் ஆணி உருவி பொம்மித் தெரிந்தது.

அந்நாட்களில் அம்மா ரொம்ப அலுப்பாய் இருப்பாள். என்கூட பேசக்கூட தெம்பு இருக்காது அவளிடம். பள்ளி ஆண்டுவிழா நடன நிகழ்ச்சிகள் பற்றியோ, இன்ன பிறவோ பேசமாட்டாள். எப்பவும் அவள் முகம் வியர்த்து கசகசத்துக் கிடக்கும். மூச்சிரைக்கிற அளவு பரபரப்பாய், பழ எசன்ஸ், சிரப் செய்கிற மும்முரத்தில் இருப்பாள். வேலை ஆக ஆக, வேண்டிய சர்க்கரை, வேண்டிய ஜாடிகளை எண்ணிக்கொண்டிருப்பாள். ஐய இந்தவீட்டு வேலை, இதற்கு முடிவே இல்லையோ என்றிருக்கும். ஓய்வு ஒழிச்சல் இல்லாத கடுப்பான வேலைகள். வீட்டுக்கு வெளியேயான வேலைகள். ஆனால் அப்பாவைப் பொறுத்தவரை இதெல்லாம் அத்தனை ஒழுங்காக சடங்காகச் செய்ய வேண்டியிருந்தது.

தண்ணீர் வண்டியை முற்றத்தில் வழக்கமான இடத்தில் விட்டேன். அம்மா பேசுகிறது கேட்டது. லெயர்து கொஞ்சம் பெரியவனாகட்டும். அதுவரை பார்க்கலாம். அப்ப அவன் உமக்கு உதவிகரமா இருப்பான்…

அதற்கு அப்பா என்ன சொன்னார் எனக்குக் கேட்கவில்லை. அம்மாபேச்சை அவர் கேட்டபடி அப்படி நின்றதே எனக்குப் பிடித்திருந்தது. வியாபாரியிடமோ, புதிய நபரிடமோ அவர் அப்படித்தான் பவ்யம் பேணுவார். தலைபாட்டுக்கு ஆட, வேலை பாட்டுக்கு ஓடும். இங்க இப்ப அம்மாவுக்கு வேலை எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை. அப்பா அம்மாவை அனுப்பிவிடலாமாய் நான் நினைத்தேன். லெயர்து பத்தி என்ன சொல்ல வருகிறாள்? யாருக்கும் அவன் என்ன உதவியும் கிடையாது.

இப்ப எங்க என்ன பண்ணிட்டிருக்கானோ. தட்டாமாலை தாமரைப்பூ சுத்திச் சுத்தி சுண்ணாம்புன்னு ஆடிட்டிருப்பான். காடுகளில் புழுப் பூச்சிகளைப் பிடித்துக்கொண்டிருப்பான். உதவின்றாப்போல என்னுடன் வந்தாலும் கடைசிவரை இருக்க மாட்டான். அதற்குள்ளே கவனம் மாறி வேறெங்கோ ஓடிவிடுவான்.

அதுக்கப்புறம் இவளை நான் வீட்டு வேலைக்குன்னு அதிகமா கூட்டிக்குவேன், என்கிறாள் அம்மா. என்னைப் பற்றி எப்பவுமே அப்படித்தான் சிறிது தொண்டையடங்கிய தொனியில் அவள் பேசுகிறாள். என்னையிட்டு அவளுக்கு உற்சாகம் இல்லையோ என நினைக்க எனக்கு என்னவோ போலிருக்கும். அம்மா தொடர்கிறாள்… உள்வேலையில் நான் சித்த இப்பிடித் திரும்பக் கூடாது, அவ வெளிய ஓடிர்றா. நம்ம வீட்ல எந்தப் பொண்ணுமே இப்பிடி இருந்ததே கிடையாது…

மூலையில் கிடந்த தீவனச் சாக்கில் போய் அமர்ந்துகொண்டேன். அவர்கள் பேசும்போது எந்த நேரத்தில் நான் உள்ளேநுழைந்து கலந்துகொள்ளலாம் என்று காத்திருந்தேன். ஹ அம்மா என்னை நம்பவில்லை. அப்படித்தான் இருந்தது. அப்பாவை விட அம்மா என்னிடம் பிரியமானவள். அம்மாவை டபாய்த்துவிடலாம். என்றாலும் ஒரு அமயஞ் சமயத்துக்கு அவள் நம்மை அனுசரிப்பாள் என்று சொல்லேலாது. என்னைப்பத்தி இப்ப எதுக்கு அப்பாவாண்ட இந்த வத்தி, அதன் அவசியம் என்ன காரணம் என்ன தெரியவில்லை.

அம்மாவுக்கு என்னைப் பிடித்திருந்தது. நான் பிரியப்பட்ட மாதிரி எல்லாம் ராத்திரி தூக்கம் முழித்து எனக்கு உடைகள் தைக்கிறாள். அதைப் போட்டுக்கொண்டு பள்ளிக்குப் போகிறது அம்சமாய்த் தான் இருக்கிறது. இன்னாலும் அவளுக்கும் எனக்கும் ஆகவில்லை. என்னை எப்பவுமே அவள் அதிகாரம் செய்கிறவளாய் இருந்தாள். இப்பகூட என்னை வீட்டோடு இருத்திக்கொள்வதாக ஒரு திட்டம். எனக்கு வீட்டுள் முடங்க இஷ்டங் கிடையாது என்பது தெரியும் அவளுக்கு. நல்லாவே தெரியும். நான் அப்பாவோட வேலைசெய்யாமல் அவளோடு வைத்துக்கொள்ள நினைக்கிறாள்.

ஏன் அவள் அப்படிச் செய்கிறாள்? வக்ரம் தான். அதிகாரம் செய்ய அவளுக்குக் கீழே ஆள் வேண்டும். இதற்கு அவள் தனிமையோ, பொறாமை உணர்வோ காரணமாய் இருக்குமா? சேச்சே. பெரியவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இப்படி விஷயஙகள் அவர்களை அண்டுவது இல்லை, என்றே பட்டது. காலை உதைத்ததில் தீவனத் தவிடு புகையாய்ப் பொங்கியது. அம்மா போகும்வரை நான் எழுந்துபோகவே இல்லை.

அம்மா சொல்றதை இந்தக் காதில வாங்கி அந்தக் காதில அப்பா விட்டுறணுமாய் இருந்தது. என் வேலையை லெயர்து செய்வதை என்னால் நினைத்தே பார்க்க முடியவில்லை. வேலி நாதங்கியைப் போடவே அவனுக்கு எட்டாது. எதும் மரக்குச்சியை இலையோடு ஒடித்து எட்டிப்போட வேண்டும். தண்ணீர் ஊற்றவேண்டும். சிந்தாமல் அந்த வண்டியைத் தள்ளிவர அவனுக்கு எப்படி முடியும். இதெல்லாம் அத்தனை சுலபமான வேலைன்னு அம்மா நினைக்கிறாப் போலிருக்கிறது. அவளுக்குத் தெரிஞ்சது அவ்வளவுதான்.

நரிகளுக்கு என்ன தீவனம், அதைச் சொல்ல விட்டுவிட்டது. அப்பாவின் அந்த ரத்தம் தோய்ந்த வேலையுடை எனக்கு அதை ஞாபகப்படுத்தி விட்டது. அவைகளுக்கு குதிரை மாமிசம் தான் உணவு. இந்தக் காலங்களில் எல்லா பண்ணையாட்களிடமும் குதிரைகள் இருந்தன. அவற்றுக்கு மூப்பாகி வேலைசெய்யக் கொள்ளவில்லை என்றாலோ, காலை கீலை (கால் முட்டியின் கீலை) ஒடித்துக்கொண்டாலோ, விழுந்துவாரி எழுந்து நிற்கவே நொண்டினாலோ, சில சமயம் அப்படி ஆகிப்போகிறது அவைகளுக்கு… அவர்கள் அப்பாவைக் கூப்பிட்டனுப்புவார்கள். அப்பாவும் ஹென்ரியுமாய் வண்டி யெடுத்துக்கொண்டு போவார்கள். பொதுவாக அந்தக் குதிரையை அங்கேயே சுட்டு, கூறு போட்டு, ஒரு அஞ்சு முதல் பன்னெண்டு டாலருக்கு அவற்றை வாங்கி எடுத்து வருவார்கள். ஆனால் கைவசம் ஏற்கனவே மாமிசம் நிறைய இருந்தால், அந்தக் குதிரைகளை அப்படியே உயிரோடு ஏற்றிவருவதும் உண்டு. அவை சில நாட்களோ வாரங்களோ எங்கள் லாயத்தில் இருக்கும். அதன் மாமிசம் தேவைப்படும் வரை.

யுத்தத்திற்குப் பிறகே, சம்சாரிகள் டிராக்டர் வாங்க, குதிரைகளை ஏறக்கட்ட ஆரம்பித்திருந்த காலம் அது. அவைகளுக்கு வேலை இல்லை, அவைகள் தேவை இல்லை என்றான நிலை. குதிரைகள் குளிர்கால அளவில் இங்கே வந்தால் சில சமயம் வசந்த காலம் வரை கூட எங்கள் லாயத்தில் இருக்கும். வெளியே கடும் பனி. எங்களிடமும் காய்ந்த புல்லும் வைக்கோலும் தாராளமாய் இருந்தது. தெருக்களில் பனியைச் சுரண்ட தோண்ட அத்தனை சலபமாய் முடியாது. குதிரையை அப்படியே பட்டணத்துக்கோ, கறிபோடவோ அழைததுப் போக வேண்டியிருந்தது.

எனக்கு பதினோரு வயசாய் இருக்கையில், அப்ப எங்கள் லாயத்தில் ரெண்டு குதிரைகள் இருந்தன. இங்க வந்தடையு முன்னால் அவற்றுக்கு என்ன பெயர் தெரியாது. இப்ப அவற்றுக்கு மேக் என்றும் ஃப்ளோரா என்றும் பெயர் நாங்கள் வைத்திருந்தோம். வயசான கருத்த, சவாரிக் குதிரை மேக். கரிக்கருப்பு. முரடு. பழுப்பு நிற பெண் குதிரை ஃப்ளோரா துடிப்பு மிக்கது. மேக் சாவகாசமானது. அதைக் கையாள எளிது. ஃப்ளோரா தான் உள்பதட்டமாய் உடல் நடுங்கியது. கடக்கும் வண்டிகளை, பிற குதிரைகளைப் பார்த்து அலைபாய்ந்தது. என்றாலும் அதன் பாத வீச்சையும் வேகத்தையும் நாங்கள் ரசித்தோம். இயல்பான அதன் துள்ளல் துடுக்கும் கயிறுஉதறி ஓடுவதும் நன்றாய்த் தான் இருந்தது.

சனிக்கிழமை யானால் நாங்கள் லாயத்துக்குப் போவோம். புல்லும் மிருக நெடியுமான அறையைத் திறக்கையிலேயே ஃப்ளோரா துள்ளி மூக்கை நீட்டும். கண்ணால் பெரு முழி முழிக்கும். அதற்கேயான புர்ர் பெருமூச்சு ஓசை. அதன் மொத்த உடம்புமே பயந்து ஒரு சிலிர்ப்பு ஓடும். அப்படியே அவளது கொட்டடியில் நுழைந்துவிட முடியாது.
சவட்டி விடும்.

அந்தக் குளிர்காலத்தில், அப்பாவிடம் அம்மா பொழுதன்னிக்கும் வலியுறுத்தி வந்தாளே, அதே எண்ணத்தினை இன்னும் தீவிரமாகவே கேட்க நேர்ந்தது. இதற்கு விமோசனம் தான் என்ன தெரியவில்லை. இங்கே சனங்களுக்கு எப்பவுமே உள்ளூற யோசனை ஒரே மாதிரியே இருக்கிறது. அவர்களின் எதிர்பார்ப்பு அது. அதை யாரும் மீறி தாண்டி வெளியே நழுவ முடியாது. சிறுமி என்கிற வார்த்தை, எத்தனை மாசு மருவற்ற சுத்தமான வார்த்தை என நினைத்திருந்தேன். குழந்தை என்கிறாப் போல. சுமை அறியாத வார்த்தை. இப்ப, அப்டில்லாம் இல்லையாய்ப் படடது.

பெண் என்றால், நான் நினைத்து வைத்திருந்தேனே, அதுமாதிரியான விஷயம் அல்லவாக்கும் அது. அது முன்தீர்மானம் கொண்டது. அந்த முன் தீர்மானம் என் தீரமானம் அல்ல. பந்தம் செய்த நிர்ப்பந்தமாக அது இருந்தது. சமுதாயத்தில் பெண் என்பதற்கு ஒரு வகைமாதிரி, அச்சு இருக்கிறது. உன்னை அழுத்தக் கூடிய வருத்தக் கூடிய ஏமாற்றக் கூடிய பிம்பம் அது. அந்த பிம்பம் நிசமான உன்னை கேலிக் கூத்தாக்கி விடுகிறது. அவ்வாறன்றி, நீ அபத்தமாகிப் போகிறாய்.

லெயர்துவும் நானும் ஒருமுறை கைகலந்தோம். என் பலம் அனைத்தும் திரட்டி நான் அவனை எதிர்கொண்டேன். என்றாலும் என்னை அவன் மேலமுக்கி என் கையை ஒருவிநாடி தரையோடு அழுத்திவிட்டான். ச். என்னால் தாளவே முடியவில்லை அதை. ஹென்ரி இதைப் பார்த்துவிட்டான். சிரிச்சிகிகிட்டே அவன் சொன்னான். ஏய் போகப்போக உனக்குத் தெரியும். ஆம்பளைங்க எவ்வளவு முரடுன்னு நீயே தெரிஞ்சிக்குவே. லெயர்து உருத் திரண்டு பெரியாளாகி வந்தான். நானும் தான்.

சில வாரங்கள் எங்களோடு பாட்டி வந்து இருந்தாள். அவள் தொணதொணப்பு தனி மாதிரி. பொம்பளையாட்கள் அப்படி அறைந்து கதவைச் சாத்துவாங்களா? பொட்டைப்பிள்ளையா லெட்சணமா காலை ஒடுக்கி உட்காருடி. இதுல ரொம்ப மோசமான விஷயம், நான் எதாவது கேள்வி கேட்டுறக் கூடாது அவளிடம். பொட்டச்சிக்கு அதெல்லாம் தேவை இல்லை! எனக்கு ஆத்திரம். நான்பாட்டுக்கு கதவுகளை அப்படி அடித்துச் சாத்திவிட்டுத் தான் போவேன். கன்னாபின்னான்னு தான் உட்கார்வேன். என் இஷ்டம் அது. யார் கேட்கிறது?

வசந்த காலத்தில் குதிரைகளைக் களத்து வெளியில் விட்டுவிடுவோம். மேக் சற்றுச் சுவரில் கழுத்தை முதுகை தொடையை உரசி சொறிந்துகொள்ளும். ஃப்ளோரா தான் அங்குமிங்கும் வேலி வரை அலைந்து திரியும். வேலி பட்டைகளைக் குளம்புகளால் அசைக்கும்.

பனி விழுதல் அடங்கி தரை இளகி இப்போது மண் அதன் இறுக்கத்துடனும் பழுப்பு நிறத்துடனும் தெரிய ஆரம்பித்தது. குளிர்கால அழகுகள் விலகி இப்போது, அந்தப் பிரதேசமே மேடு பள்ளம் சமவெளி என்பதான இயல்புக்கு மீண்டன. கட்டுத்தளர்ந்த ஆசுவாசம் எங்கும். இப்போது ரப்பர் நடையன்கள். கால்கள் எத்தனை லேசாய் உணர்கின்றன!

சனிக்கிழமை லாயத்துக்குப் போனோம். எல்லா கதவுமே சன்னல்கள் உட்பட பப்பரக்கா! உள்ளே நல்ல காற்று. வெளிச்சம். ஹென்ரி இருந்தான். அவனிடம் இருந்த காலண்டர்களை எடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தான். லாயத்தின் பின்பக்கப் பொந்துகளில் அவற்றை அவன் அம்மாவுக்குத் தெரியாமல் பதுக்கி வைத்திருப்பான்,

”ஏய் உன் பழைய சிநேகிதன் மேக், அவனுக்கு குட்பை சொல்ல வந்தியா?” என்று கேட்டான் தம்பியிடம். ஒரு கொத்து ஓட்ஸ் அள்ளிக் கொடுத்தான். ”உன் கையால மேக்குக்குக் கொடு.” லெயர்து மேக்கிடம் போனான். மேக்கின் பற்கள் மகா மொண்ணை. சாவகாசமாய் மேக் அதைத் தின்றது. அதன் வாயில் இங்கும் அங்குமாக தானியங்கள் புரண்டன. அதை அரைக்க சிரமப்பட்டது மேக்.

”மேக் பாவம்” என்றான் ஹென்ரி. ”ஒரு குதிரைக்குப் பல்லு போனால் எல்லாமே போனாப் போலத்தான்.” ஹென்ரியிடம் நான் கேட்டேன். ”இவனை இன்னிக்குச் சுட்டுருவீங்களா?” ரொம்ப காலமாக ரெண்டுமே அங்கே இருந்ததில் அவைகளைச் சுடும் வேளையே எங்களுக்கு ஞபாகத்தில் தட்டவில்லை.

ஹென்ரி பதில் சொல்லவில்லை. அவன்பாட்டுக்கு நடுங்கும் குரலில் போலி துக்கத்துடன் பாட்டெடுத்தான். ஐயகோ நெத் மாமாவுக்கு இல்லே சோலி. பாரு இனி அவர் ஆளே காலி… மேக்குடைய கருத்த கெட்டியான நாக்கு லெயர்துவின் கைகளை நக்கித் துழாவியது. அவன் பாட்டு முடியுமுன்னால் நான் லாயத்துக்கு வெளியே வந்துவிட்டேன்.

குதிரை எப்படி சுடப்படுகிறது நான் பார்த்ததே இல்லை. ஆனால் குதிரைகள் சுடப்படும் இடம் தெரியும். போன கோடை. நானும் லெயர்துவும் குதிரையின் மிச்சங்களை புதைக்கு முன் பார்க்க வாய்த்தது. பெரிய கருத்த பாம்பு போல் வெயிலில் சுருண்டு. கிடந்தது. களத்துப் பின்பக்க வெளி அது. லாயத்தில் இருந்து எதுவும் குறுக்குப் பலகையில் கீறலோ துவாரமோ இருந்தால் அதுவழியே துப்பாக்கி சூட்டை எங்களால் ஒருவேளை பார்க்க முடியும். பார்க்க விரும்பும் காட்சி அல்ல அது. ஆனால் ஒண்ணு நடந்தால், அதை எப்படி நடக்கிறதுன்னு தெரிஞ்சிக்காம எப்படி?

வீட்டுக்குள்ளிருந்து வெளியே வரும் அப்பா. அவர் கையில்… துப்பாக்கி. ”இங்க என்ன பண்ணிட்டிருக்க?” என்று கேட்டார். ”சும்மா.” ”போ. வீட்டுப் பக்கமா போய் விளையாடு. போ.” லெயர்துவை லாயத்துக்கு வெளியே அனுப்பிவிட்டார். ஏய் மேக்கை எப்பிடி சுடறாங்க, நீ பாக்கணுமா?… என்று லெயர்துவை நான் கேட்டேன். கேட்டபடியே அவனை அப்படியே களத்தின் முன்வாசல் பக்கமாக இழுத்துப் போனேன். மெல்ல நாதங்கியை நீக்கினேன். ஷ். சத்தம் வரப்டாது. அவங்க காதுல விழுந்துரும், என்று எச்சரித்தேன். லாயத்தின் உள்ளே ஹென்ரியும் அப்பாவும். பேச்சுக்குரல். வெளியே மேக் இழுத்து வரப்படும் சத்தம்.

கொட்டகை மேல்பலகை. ஜில்லென்று இருட்டாய்க் கிடந்தது. குறுக்குப் பட்டைகள் வழியே வெளிச்சக் கீற்றுகள் குறுக்கு மறுக்காக விழுந்திருந்தன. சுற்றுச் சுவரைத் தடவியபடியே தவழ்ந்து போனோம். சுவரில் நிறைய பொத்தல்கள், எனக்கு வாகாய் ஒன்று. முற்ற ஓரம், கதவு அருகே. தளவாட மூலை. லெயர்து பார்க்கத் தோதாக துவாரம் கிடைக்கவில்லை. அவன் முரண்டு பிடிக்க ஆரம்பித்தான். ரெண்டு பலகைகளின் இடைவெளியை அவனுக்குக் காட்டினேன். ஷ். சத்தம் போடாமப் பொறுமையாப் பாரு. அவங்களுக்கு உன் சத்தம் கேட்டால் நாம ரெண்டு பேருமே மாட்டிக்குவோம்.

அப்பா. கையில் துப்பாக்கி. ஹென்ரி கயிறைப் பிடித்து மேக்கை இழுத்து வருகிறான். கயிறை விட்டுவிட்டு பெட்டியைத் திறந்து சிகெரெட் சுருள் காகிதத்தையும் புகையிலையையும் எடுத்தான். தனக்கும் அப்பாவுக்கும் சிகெரெட் அடைத்தான். இதுபாட்டுக்கு நடக்கிறது. மேக் காய்ந்த புல்லை குனிந்து முகர்ந்து கொண்டிருந்தது. திடல்பக்கக் கதவை அப்பா திறந்து மேக்கை வெளியே விட்டார். மேக் வெளியே போய் ஈரமான புதுப் புல்லை மேய ஹென்ரி வெளியே அனுப்பினான். அப்பாவும் அவனும் எதோ பேசிக்கொள்கிறார்கள். எங்களுக்கு என்ன பேசுகிறார்கள் கேட்கவில்லை. குனிந்தபடி ஈரப் புல்லைத் தேடியபடி மேக்.

ஒரு நேர்கோட்டில் போல அப்பா நடந்து வசம் பார்த்து நின்றுகொண்டார். ஹென்ரி மேக்கின் பக்கவாட்டில் நகர்ந்து தள்ளிப் போனான். கையில் இன்னும் குதிரைக் கயிறு. தளர்வாய்ப் பிடித்திருந்தான். அப்பா துப்பாக்கியை உயர்த்தினார். மேக் எதையோ கவனித்து தலையை உயர்த்தியது. அப்பா சுட்டார்.

அப்படியே மேக் அடங்கிவிடவில்லை. லேசான தள்ளாட்டம். ஒரு பக்கமாய்ச் சரிந்து பக்கவசத்தில் விழுந்து, அப்படியே உருண்டு, ஆகா, காற்றை அப்படியே உதைத்தது. பெரிய சர்க்கஸ் காட்சிபோல அதைப் ரசித்து ஹென்ரி சிரித்தான். துப்பாக்கியின் டுமீல் சத்தத்தைக் கேட்டதுமே லெயர்து ஹா என நீளமாய் மூச்செடுத்தான். அது சாகல்ல, என்று கத்திவிட்டான். எனக்கும் அது சரி என்றுதான் பட்டது. ஆனால் அந்தக் கால்கள் அப்படியே நின்றன. அப்படியே திரும்ப பக்கவசத்தில் சரிந்தது. உடம்பெங்கும் நடுக்கம் குதிரை துவண்டு அடங்கியது. அவர்கள் இரண்டு பேரும் அதன் கிட்டேபோய் நிலவரம் பார்த்தார்கள். வருத்தம் கிருத்தம் எதுவும் இல்லை அதில். குனிந்து அதன் நெற்றியைப் பார்த்தார்கள். குண்டு பாய்ந்தது அங்கே தான். இப்போது அதில் இருந்து காய்ந்த புல்லில் குபுக்கியது ரத்தம்.

இப்ப அதைத் தோலுரித்து மாமிசத்தைத் கூறுபோடப் போறாங்க, என்றேன். வா, நாம போலாம். என் கால்கள் வெடவெடத்துக் கொண்டிருந்தன. மெத்தென்ற வைக்கோல் புடைப்பில் குதித்தேன். இப்ப நீ குதிரையைச் சுடறதைப் பாத்தாச்சி இல்லியா? அவனை ஊக்கப்படுத்த இப்படிச் சொன்னேன். என்னவோ நான் இதைப் பலமுறை பார்த்திருக்கிறாப் போல. புல்வெளியில் பூனையோ அதோட குட்டிகளோ இருக்குதா தேடுவோம், என்றேன். அவனும் கூளத்தில் குதித்தான். திரும்பவும் சிறு பையனாக அடங்கி ஒடுங்கி என்னுடன் வந்தான்.

சின்ன வயசில் அவனைக் கூட்டிவந்து ஏணி வழியாக உத்திரம் வரை ஏறுவதை அவனுக்கு நான்தானே சொல்லிக் கொடுத்தேன் என்று சட்டென்று ஞாபகம் வந்தது. அதுவும் வசந்த காலம்தான். அப்பவும் புல் அடர்த்தியற்று தான் இருந்தது. அந்த வயசில் எதாவது சுவாரஸ்யமா வேண்டியிருந்தது எனக்கு. எதையாவது நான் செய்து நாலு பேரிடம் அதைச் சொல்லி சந்தோஷப்படும் துறுதுறுப்பு. பழுப்பும் வெளுப்புமான கட்டங்களுடன் புஸ்சென்ற கோட் அணிந்திருந்தான் அவன். என்னுடைய பழைய கோட்டை வெட்டி அவனுக்குப் பொருத்தமாக்கியது. நான¢ சொல்லித்தந்து ஊக்கப்படுத்தினேன். அவன் மேலே மேலே ஏறி மேல் கட்டையில் போய் உட்கார்ந்துகொண்டான். கீழே ஆழத்தில் புல்தரை. மத்த பக்கத்தில் வைக்கோல் போருக்கான களம், கூட தளவாட தோட்டவேலை சாமான்கள். அப்படியே திரும்பி உற்சாகமாய் அப்பாவிடம் ஓடினேன். அப்பா, நம்ம லெயர்து பாருங்க, மேல் பலகை வரை ஏறியாச்!

அப்பா வந்தார். அம்மாவும் ஓடிவந்தாள். அப்பா தணிந்த குரலில் பேச்சு கொடுத்தபடியே ஏணியில் ஏறி அப்படியே லெயர்துவைக் கையில் ஏந்தி கீழே கொண்டுவந்தார். அம்மா அப்படியே ஏணியில் சாய்ந்தபடி அலறினாள். ஏட்டி, அவன் என்ன காரியம் பண்ணீர்க்கான்? என்ன பாத்துக்கறே நீ?

அவர்கள் யாருக்குமே உண்மை தெரியாது. நான்தான் அவனை மேலே ஏற்றிவிட்டேன், என்பதே தெரியாது. லெயர்துவுக்கும் அத்தனை சுத்தமா தெளிவா எதையும் சொல்கிற வயது வந்திருக்கவில்லை. ஆனால் அன்னிலேர்ந்து இன்னிவரை அந்த பழுப்பு வெள்ளை கட்டம்போட்ட கோட், ஆணியில் தொங்கும்போதோ, பழந்துணி பெட்டியிலோ எப்ப அதைப் பார்த்தாலும், என அடிவயிறு கனக்கும். எனக்கு மட்டுமே தெரிந்த, நான் பண்ணிய ஏடாகூடம் அல்லவா அது! மனதைவிட்டு வெளியே துப்ப முடியாத தப்பு.

லெயர்து, என்னுடன் வந்துகொண்டிருந்தவனைப் பார்த்தேன். பழைய அந்த நிகழ்ச்சி அவன் மனதில் இல்லை. இந்தக்காட்சி, குதிரை சுடப்பட்டதை அவன் தாளவில்லை. அவன் முகம் சத்தற்று வெளிறியிருந்தது. கலவரமாகவோ, திகைத்தாப் போலவோ அது இல்லை. ஆனால் உள்ளே அவனில் அது வேலைசெய்து கொண்டிருந்தது. பார்றா, என்றேன் உற்சாகமும் சிநேகமும் த்வனிக்க. நாம பார்த்தோம்ன்றதை நீ யாராண்டையும் சொல்லாதே. சொல்லமாட்டே, இல்லே?

”மாட்டேன்” என்றான் சுரத்தில்லாமல். ”சத்தியமா?” ”சத்தியம்” என்றான். அவன் கையை அப்படியே முதுகோடு பிடித்துக்கொண்டேன். சட்டென கை விரல்களை மாத்தி மடித்து பொய் சத்தியம் பண்ணிவிடுவானோ, என்று பயம். ஆனாலும் ராத்திரி தூககத்தில் அலறி கிலறி குட்டை உடைத்துவிடக் கூடும்!

எப்படியாவது, அவன் என்ன பார்த்தானோ, அதை அவன் மனதில் இருந்து வெளிய தள்ளிவிட்டால் நல்லது. சட்டுனு அவன் கவனத்தை வேற எங்காவது மாத்திட்டால் இதை மறந்துருவான். சினன மனசு. நிறைய விஷயத்தை அது ஞாபகம் வெச்சிக்காது, என்றிருந்தது. கொஞ்சம் பணம் சேர்த்து வெச்சிருந்தேன் ஏற்கனவே. ஜுபிலிக்குப் போய் ஒரு நிகழ்ச்சி பார்த்தோம். ஜுடி கனோவாவோட அதில் ஒரே சிரிப்பு. அத்தோட இதெல்லாம் அவனுக்கு மறந்துரும்னு எனக்கு இருந்தது.

ரெண்டு வாரமாயிற்று. இப்ப அவர்கள் ஃப்ளோராவை சுடப்போகிறார்கள் என்று தெரியும் எனக்கு. போதிய அளவு புல் இருக்குதா, என்று அம்மா கேட்டதும், அதற்கு அப்பா, போதும். நாளைக்கு அப்புறம் பசு மட்டும் தான்… அடுத்த வாரம் அதை வெளிய மேய விடலாம், என்று பதில் சொன்னார். நான் புரிந்துகொண்டேன். அதாக்கும் சங்கதி. ஃப்ளோராவை காலையில் சுடப் போகிறார்கள்.

இப்ப நான் அதைப் பார்க்கலாம் என்று யோசிக்கவில்லை. திரும்ப வேடிக்கை பார்க்கிற சமாச்சாரம் இல்லை அது. நிசத்தில் அதை நான் அடிக்கடி நினைக்கிறது கிடையாது. ஆனால் சில சமயம் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கையில், அல்லது கண்ணாடி முன்னால் தலை வாரியபடி பெரிய பெண்ணாய் ஆனால் நான் எத்தனை அழகாய் இருப்பேன் என்கிற கனவில் மிதக்கும் போதும், சட்டென அந்தத் திகில் முன்வந்து குதிக்கும். அப்பா எத்தனை சகஜபாவனையோட அந்தத் துப்பாக்கியை உயர்த்துகிறார். மேக் காற்றில் காலை உதைக்கிறபோது ஹென்ரி இளிக்கிறான். இதில் எனக்கு திகிலோ, எதிர்ப்பு உணர்வோ கூட இல்லை.

பட்டணத்துப் பெண்ணைப் போலவே நான் இதனால் பெரியதாய் பாதிக்கப் படாமலேயே தான் இருந்தேன். மிருகங்களின் மரணத்தை வைத்து தான் எங்கள் வாழ்க்கைப் பாடே ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் இதுசார்ந்து எனக்கு லேசான குற்றவுணர்வு இருந்தது. அப்பாவும், அவர் பண்ணும் காரியங்களும் பற்றி ஒரு சங்கடம் இருந்தது.

அழகான நாள். கூதல் பெருங்காற்றில் ஒடிந்து விழுந்த சுள்ளிகளை பண்ணையில் பொறுக்கி சிறு விறகுக்கூம்புகளாக அங்கங்கே குவித்து வைக்கிறதும் எங்கள் வேலைதான். ஃப்ளோராவின் சிணுக்கம் கேட்டது. கூடவே அப்பாவின் குரல். ஹென்ரி சத்தம் போடுகிறதும் கேட்டது. என்ன நடக்கிறது என்று பார்க்க, தடதடவென்று ஓடினோம்.

லாயத்தின் கதவு திறந்து கிடந்தது. ஹென்ரி அப்போதுதான் ஃப்ளோராவை வெளியே நடத்தி வந்தான். குதிரை முற்றத்தில் அதுபாட்டுக்கு இங்குமங்குமாய்த் திரிந்து கொண்டிருந்தது. நாங்கள் வேலி ஏறினோம். குதிரை ஓடுவது பார்க்க ஜோராய் இருந்தது. அவ்வப்போது கனைப்பு. முன்காலைத் தூக்கி ஜிங்குஜக்கா அசைவுகள். மேற்கத்திய சினிமா போல. உடல் சேதாரம் எதுவும் இல்லாத பட்டிக் குதிரை. மேய்ந்து திரியும் வயசான பழுப்பு சவாரிக்குதிரை..

அப்பாவும் ஹென்ரியும் அதன்பின்னால் ஓடி அதன் கயிறைப் பிடித்து ஒருமாதிரி ஒரங்கட்ட முயற்சி செய்தார்கள். கிட்டத்தட்ட செய்தாகிவிட்ட நிலையில் திடுதிப்பென்று அது அவர்கள் நடுவே புகுந்து கண்தெரிக்க பண்ணையின் முடுக்கு எங்கோ மறைந்துவிட்டது. வேலிப்பக்கமாக அது வந்து மோதியபோது பட்டைகள் அதிர்ந்து கிறீச்சிட்டன. ஹென்ரி கத்தினான். அது கரடு பக்கமா போயிட்டது.

வீட்டைத் தாண்டி வெளியே ஒரு எல் வடிவ கட்டாந்தரை. அதன் நடுப்பகுதிக்கு அது வந்திட்டால், வாயில் திறந்துதான் இருக்கிறது. காலையில் சரக்குவண்டி உள்ளேவர திறந்ததை அடைக்கவில்லை. நான் வேலியின் வெளிப் பக்கமாய் இருந்தேன். அப்பா என்னைப் பார்த்துக் கத்தினார். ஏய் போ வாசல் கதவைச் சாத்து.

நான் சூப்பரா ஓடுவேன். தோட்டத்துள் ஓடி ஊஞ்சல் கட்டியிருந்த மரத்தைத் தாண்டி, சிறு பள்ளம். அதையும் ஒரே தாவு, பாதைக்கு வந்தாச். குதிரை இன்னுமாய் பாதையில் தட்டுப்படவில்லை. வேறு பக்கம் எங்கும் ஒடியிருக்குமா. (அந்தப்பக்கம் இதைவிட கனமான கிராதிக்கதவு.) கதவு தரையோடு அழுந்திக்கிடந்ததைத் தூக்கி தெருவுக்குத் தள்ளி நகர்த்தினேன். பாதி திறந்திருப்பேன். ஆ அதோ குதிரை. என்னைப் பார்த்து ஓடிவந்தது அது. கதவைச் சாத்தி சங்கிலி போட வேண்டியிருந்தது. அப்பதான் அந்தக் குழியைத் தாண்ட முடியாமல் தாண்டி தள்ளாடி லெயர்து வந்தான்.

கதவை அடைக்கவில்லை நான். விரியத் திறந்து விட்டேன். அதுபத்தி பெரிய யோசனை யெல்லாம் இல்லை. அட சட்டென அதைச் செய்தேன். ஃப்ளோரா ஓரே ஓட்டமாய் ஓடிவந்தது. என்னைத் தாண்டி.. லெயர்துவானால், கதவைச் சாத்து, சாத்து, என்று குதித்தான். அது அவன் கத்தி முடிக்குமுன் ஓடிவிட்டது. அப்பாவும் ஹென்ரியும் அதற்கு அப்புறமாகத் தான் பாதையில் தட்டுப்பட்டார்கள். ஃப்ளோரா நகரச் சாலையில் ஓடிக்கொண்டிருந்ததை அவர்கள் பார்த்தார்கள். நான் கதவருகே வருமுன் அது தப்பித்திருக்க வேண்டும், என்றுதான் அவர்களுக்குப் பட்டிருக்கும்.

விசாரிக்க நேரம் இல்லை. திரும்ப உள்ளேபோய் துப்பாக்கியும், கத்தி கபடாக்களும் எடுத்து வண்டியில் அள்ளிப்போட்டு, ஒரு உருமலான சுற்று அடித்து கிளம்பி கதவை நோக்கி வந்தார்கள். நானும் வரேன். நானும்… என லெயர்து கத்தினான். ஹென்ரி வண்டியை நிறுத்தி அவனையும் ஏற்றிக்கொண்டான். அவர்கள் போனதும் நான் கதவைச் சாத்தினேன்.

லெயர்து நடந்ததைச் சொல்லிருவான் என்றிருந்தது. என் கதி என்ன தெரியவில்லை. ஃப்ளோரா கதி என்ன, தெரியும். வண்டிக்கு அது எப்படி தப்பிக்க முடியும்? அட இவங்க கண்ணுக்கு அது தப்பினாலும், அதை வழியில் பார்க்கிற யாராவது மதியமோ காலையிலோ தொலைபேசியில் தகவல் சொல்லி விடுவார்கள். ஒளிந்து அது தப்பிக்க அடர் புதர்கள் இநதப் பக்கங்களில் இல்லை.

அதன் மாமிசம் எங்களுக்கு வேண்டும், நரிகளுக்குப் போட. நரிகள் வேண்டும், எங்கள் பிழைபபே அதை நம்பித்தான். நான் செய்தது என்ன? அப்பாவுக்கு அதிக சிரமம் வைத்துவிட்டேன். ஏற்கனவே அவர் கடுமையாய் உழைக்கிறார். நடந்ததை அவர் கேள்விப்பட்டால், இனி அவர் என்னை நம்புவாரா? மாட்டார். நான¢ அவர்கட்சி அல்ல. ஃப்ளோரா கட்சி, என அவர் உணர்வார். அதனால் யாருக்கும் எந்த பிரயோசனமும் இல்லை, அந்த ஃப்ளோரா உட்பட. எல்லாம் ஒண்ணுதான். ஆனால், எனக்கு நான் செய்த காரியத்தையிட்டு வருத்தம் இல்லை. அது என்னைப் பார்த்து ஓடிவந்தது. அபயம். நான், எனக்கு வேறு வழியில்லை, நான் கதவை திற்ந்து விட்டுவிட்டேன் அதை.

வீட்டுக்கு வந்தேன். அம்மா கேட்டாள். அங்க என்ன கலாட்டா? நான் சொன்னேன். அம்மா, ஃப்ளோரா வேலியை மிதிச்சி தாண்டிப் போயிட்டது. பாவண்டி உங்க அப்பா, எனற்£ள் அவள். பட்டி தொட்டியெல்லாம் இப்ப அவர் அதைத் தேடிப் போகணும். அவங்க ஒருமணிக்குள்ளாற வருவாங்களா சந்தேகம். சாப்பாட்டுக்கு இப்பவே மெனக்கெட வேண்டியது இல்லை.

ரொம்ப சமத்தாக நான் வீட்டுக்காரியங்களில் இறங்கினேன். கரையிட்ட பழைய திரைச்சீலைகளை படுக்கைமீது விரித்தேன். எனக்கான அலங்கார மேஜை தயார் செய்தேன். பாவாடை தைத்த மிச்ச ஜரிகையெல்லாம் வைத்து அதை அழகுபடுத்திக் கொண்டேன். என் படுக்கைக்கும், லெயர்துவின் படுக்கைக்கும் இடையே சிறு தடுப்பு மறைப்பு வைக்கலாமாய்ப் பட்டது.

வெளி வெளிச்சத்தில் அந்த திரைச்சீலை லேஸ்கள் லாலி பீலி என்று அசிங்கமாய்த் தெரிந்தன. இனி ராத்திரி ஒண்ணா அவனோடு நான் பாடமாட்டேன். ஒருநாள் நான் பாடும்போது லெயர்து சொன்னான். கண்றாவியா இருக்குடி. நான் பாட்டுக்கு அன்னிக்கு தொடர்ந்து பாடித்தான் முடிச்சேன். ஆனால் அடுத்தநாள் நான் பாடவே இல்லை.

ஆனால் பாட்டு கீட்டுல்லாம் இப்ப தேவையும் இல்லை. எங்களுக்கு பயம் போயாச்சி. மேல பழைய மர சாமான்கள் தான் இருக்கு. ஓட்ட உடசல் அடசல். ஒழுங்கா அதை அடுக்குவார் இல்லை. லெயர்து தூங்கட்டும் என நான் அதுவரை படுக்கைக்கு வரவேயில்லை. இப்ப எனக்கே எனக்காய் நான் கதைகள் சொல்லிக்கொண்டேன். ஆனால் இந்தக் கதைகளிலும் என்னென்னவோ நடந்தன.

திடுக் திருப்பங்கள். அது வழக்கம்போல ஆரம்பித்து, அதில் ஒரு ஆபத்து கணம், நெருப்பு, காட்டு விலங்கு… நான் சனங்களைக் காப்பாற்றி… அத்தோடு விஷயம் மாறிவிடுகிறது. ஐயோ இப்ப என்னை யாரோ காப்பாத்துகிறார்கள். என் வகுப்பில் அல்லது பள்ளியில் என்னோடு படிக்கும் பையன், பெண்பிள்ளைகளை முட்டிக்குக் கீழ் கிள்ளுவாரே அந்த காம்ப்பெல் சாராகக் கூட இருக்கலாம். அந்தக் கட்டத்தில் அந்தக் கதை, நிசத்தில் என்னைப் பத்தி எனக்கு உணர்த்தியதாகப் பட்டது. அதோ நான். என் கூந்தல் நீளத்தை கவனிக்கிறேன். என் உடைகளை கவனிக்கிறேன். இதெல்லாம் தெரிய ஆரம்பித்தபோது, அந்தக் கதையின் சுவாரஸ்யம் அடிபட்டே போனது.

வண்டி திரும்பிவர ஒருமணிக்கு மேலேயே ஆகிவிட்டது. பின்பகுதியை தார்ப்பாலின் ஏற்றி மறைப்பு. உள்ளே மாமிசம் இருக்கிறது என்பது புரிகிறது. அம்மா உணவை திரும்ப சுடவைக்க வேண்டும். ஹென்ரியும் அப்பாவும், ரத்த மேலாடைகளை மாற்றி, வேலைக்கான வேறு மேலாடைகளில் வந்தார்கள். கை கால் கழுத்து முகம் எங்குமான கறைகளை அவர்கள் கழுவிக் கொண்டார்கள். தலையில் தண்ணீரடித்து படிய வாரிக்கொண்டார்கள். லெயர்து தன் கையை உயர்த்தி ரத்தக்கறையைக் காட்டினான். கிழட்டுக்குதிரை ஃப்ளோராவை சுட்டாச், எனற்£ன் அவன். அதை அப்படியே 50 துண்டா போட்டோம்.

அதெல்£ம் எனக்குக் கேட்க வேண்டாம், என்றாள் அம்மா. அடேய், கையக் கழுவாமல் கொள்ளாமல் சாப்பிட வந்து உட்காராதே. அப்பா அவனை அழைத்துப்போய் அலம்பி விட்£ர்.

அப்பா சாப்பிட உட்கார்ந்து, கடவுளின் கருணை, என்றார். ஹென்ரி முள்கரண்டியில் தனது சூயிங்கம்மை அப்பினான். அதை அவன் உரித்தெடுக்கும்போது என்னமாச்சும் உருவம் போலத் தெரியும். நாங்கள் ஆச்சர்யப்படுவோம், என்கிற அவன் விளையாட்டு அது. கிண்ணங் கிண்ணமாய் குழைந்த காய்கறிக் கூட்டுகள், கொதியுடன் ஆவிபறந்தன அவற்றில் இருந்து, கைமாறின

லெயர்து என் கண்ணை நேராகப் பார்த்தான். பெருமிதமான அழுத்தமான குரலில் அவன் பேசினான். ச், அப்பா, இவளால ஃப்ளோரா ஓடிட்டது. ம்?… என்றார் அப்பா. ஆமாப்பா, அக்கா, கதவை மூடியிருக்கலாம். அவள் செய்யவில்லை. இவள் என்ன பண்ணினாள், கதவை பப்பரக்கான்னு திறந்து விட்டாள், ஃப்ளோரா ஓடிட்டது.

என்னடி? அப்பிடியா, என்று கேட்டார் அப்பா. மேஜையில் எல்லாருமே என்னைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நான் என்ன சொல்ல? மெல்ல தலையாட்டினேன். தொண்டைக்குள் சண்டித்தனம் செய்யும் உணவு. இறங்க மறுத்தது. அவமானமாய் இருந்தது. கண்ணில் கண்ணீர் பொங்கி வழிந்தது.

ஹ்ரும், என்கிற மாதிரி கனைத்தார் அப்பா. ஏண்டி அப்பிடிப் பண்ணினே? எனக்கு பதில்சொல்ல முடியவில்லை. கரண்டியை நழுவ விட்டேன். இதோ என்னை வெளிய அனுப்பி விடுவார்கள், என எதிர்பார்த்தேன். தலை தாழ்ந்தே யிருந்தது. ஆனால் அது நடக்கவில்லை. யாருமே கொஞ்சநேரம் எதுவும் பேசவில்லை. அப்பா, அவ அழறா, என்றான் லெயர்து. அதில் ஈவு பச்சாதாபம் எதுவும் இல்லை.

அழட்டும், என்றார் அப்பா. கசப்பான குரல். எகத்தாளமாய் அவர் என்னை எள்ளியதாய்க் கூட இருக்கலாம். பொட்டைப்பிள்ளை தானேடா அவள், என்றார் அப்பா.

நான் ஆட்சேபிக்கவில்லை. அது நிசந்தானோ என்னவோ.

***

உறங்காத கனவு (தெலுங்குச் சிறுகதை) – எழுதியவர் Dr.V.V.B. ராமாராவ் ( தெலுங்கிலிருந்து ஆங்கிலம் ) ஆங்கிலத்திலிருந்து தமிழில் : S.R. தேவிகா

Dr.V.V.B. ராமாராவ் (1938 _ ) தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட எழுத்தாளர். ஆங்கிலத்திலும் எழுதிவருகிறார். ஆந்திரப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆங்கிலம் கற்பிக்கும் பணியை மேற்கொண்டவர். 50 புத்தகங்களுக்கு மேல் ஆங்கிலத்திலும் தெலுங்கிலுமாக இதுவரை எழுதியுள்ளார். இன்றளவும் எழுதிக்கொண்டிருக்கிறார். புதினம், சிறுகதை, இலக்கியத் திறனாய்வு என நிறைய கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறார். தவிர, ஆங்கிலத்திலிருந்து தெலுங்கிலும், தெலுங்கிலிருந்து ஆங்கிலத்திலும் நிறைய மொழிபெயர்த்திருக்கிறார்.

இவருடைய சிறுகதைத் தொகுதி FOR OLD’S SAKE– நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டவையும், முதலில் தெலுங்கில் எழுதி பின்னர் டாக்டர் வி.வி.பி.ராவ் அவர்களே ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருப்ப்பவையுமாக 22 சிறுகதைகள் அடங்கிய நூலிலிருந்து(2010இல் ஆதர்ஸ்பிரஸ் மூலம் வெளியிடப்பட்டது) ஒருகதை இங்கே இடம்பெற்றுள்ளது.

S.R.தேவிகா. இக்கதையை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர். கல்லூரியில் ஆங்கில இலக்கியம் பயின்றவர். P&T Audit-இல் ஆக Senior Audit Officerஆக இருந்து விருப்ப ஓய்வு பெற்ற பின் இப்போது ஆர்வத்துடன் மொழிபெயர்ப்புப் பணியை மேற்கொண்டிருப்பவர்.

”காலம் பொன்னானது; விலை மதிப்பற்றது என்பது உண்மையாக இருக்கலாம். நாம் எவ்வளவுதான் முதிர்ச்சியடைந்தவர்களாக, பக்குவம் அடைந்தவர்களாக, எல்லாம் தெரிந்தவர்களாக இருந்தாலும், நம்மால் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடிவதில்லை; ஏனென்றால், நாம் மனிதப் பிறவிகள். நான் ஒரே ஒரு தடவை அவரைப் பார்க்க விரும்புகிறேன்….”

தாராவிற்கு, தான் சுயநினைவை இழந்துவீட்டோம் என்ற உணர்வு இல்லை. ஆனால், தபால்காரர் வந்தது அவளுக்கு லேசாக நினைவிற்கு வந்தது.

‘அதிர்ச்சியைத் தொடர்ந்து ஏற்பட்ட சிறு மயக்கநிலை போன்று தோன்றுகிறது. அரைமணி நேரத்தில் அவள் சரியாகக் கூடும்.

மருத்துவர், தாராவின் கணவர், சுகுநாகரை அவருடைய ஆபீஸிற்கு அழைத்து அவருக்கு தைரியமளித்தார்.

சுகுநாகர் வீட்டிற்கு திரும்பிய போது, அவர்களுடைய மகள் பங்கஜம், தனது தாய்க்கு ஹார்லிக்ஸ் நிறைந்த தம்ளரைக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

சுகுநாகர் எந்த கேள்வியும் கேட்கத் தொடங்காமல், ஆனால், நாற்காலியை படுக்கையின் அருகில் இழுத்துப் போட்டுக்கொண்டு அமர்ந்தார். அவர் அமைதியாக காணப்பட்டார்.

பங்கஜத்திற்கு ஏறக்குறைய இருபது வயதிருக்கும். அவருக்கு படிப்பில் மிகுந்த ஆர்வம் உண்டு. ஆங்கில இலக்கியத்தில்பட்டப்படிப்பை முடித்தவுடன் அவள் பத்திரிக்கைத்துறையில் சேர விரும்பினாள். அதற்கான புத்தகங்களையும் படிக்கத்தொடங்கினாள். அவள் பல்கலைக் கழகத்தில் சேருவதற்காக விண்ணப்பித்தும் இருந்தாள்.

தாரா பதினைந்து வருடங்களாக மருத்துவராக பயிற்சி செய்துகொண்டுவருகிறாள்; மனித உளவியலின் பல்வேறு அம்சங்களையும் அவள் அறிந்திருந்தாள். இளைஞர்கள் சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்வார்கள் என்பதை அறிந்திருந்தாள்; எதுவுமே அவளை வியப்பில் ஆழ்த்தியது இல்லை.அவளுக்கு, அவளுடைய மகளின் உளவியலைப் பற்றி அறிந்திருந்தாள். அதனால் முதலில் அவளை ஆங்கில இலக்கியத்தில் பட்ட மேற்படிப்பு படிக்குமாறு ஆலோசனை கூறினாள்.

ஆனால், பங்கஜம் பத்திரிக்கைத்துறையில் சேருவதற்காக விண்ணப்பம் அனுப்பியிருந்தாள். அம்மாவின் அறிவுரையைக் கேட்பதற்காக, ஆங்கில இலக்கியத்தின் சேருவதற்கும் ஒரு விண்ணப்பம் அனுப்பியிருந்தாள்.

‘இரண்டு துறைகளில் ஏதாவது ஒன்றில் நிச்சயமாக உனக்கு இடம் கிடைக்கும் என்பது எனக்கு ஆணித்தரமாக தெரியும். ஆனால் இலக்கியப்படிப்பும் உளவியல்படிப்பும் பத்திரிக்கைத் துறையில் சேருவதற்கு அதிகத் தகுதியை அளிக்கும். நமது தாய்மொழியில் ஒரு சொல்வழக்கு உண்டு. தங்கத்திற்கும் மணம்உண்டு. எனக்கு உன்னைப் பற்றித் தெரியும். நான், உன்னைத் திருமணம் செய்துகொள் என்று கூறமாட்டேன்.

திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நீ எண்ணும்போதுமட்டும், நாம் உன் திருமணத்தைப்பற்றி யோசிக்கலாம்; எனது ஆணைகளுக்காக நீ எந்த முடிவும் எடுக்க வேண்டாம். பத்திரிக்கைத்துறைக்கு மனமுதிர்ச்சி முக்கிய தேவையாகும். இலக்கியம், மனமுதிர்ச்சியை அடைய வழிவகுக்கிறது.நான் மற்றவர்களுக்கெல்லாம் மருத்துவராக இருந்தாலும், நான் உனக்கு அம்மாவாக இருப்பதால் நான் இதைக் கூறுகிறேன். இது என்னுடைய கருத்து மட்டும் அல்ல. உன் அப்பாவும் அதையே எண்ணுகிறார்.’

அவருடைய மனைவி இவ்வாறு விளக்கிக்கொண்டிருக்கும் போது, சுகுநாகர் தன் மகளையேப் பார்த்துக் கொண்டிருந்தார் முக்கியமான விஷயங்களை பேசுவதென்றால், தாரா ஆங்கிலத்திலேயே பேசுவது வழக்கம். ஆங்கிலத்தில் பேசினால், மக்களை எளிதாக நம்பவைக்கலாம் என்பதாய் ஓர் எண்ணம் அவளிடம் இருந்தது.

‘இப்பொழுது எப்படி இருக்கிறாய்? சுகுநாகர் கேட்டார்.

‘வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிக நன்றாக இருக்கிறேன்.’

சுகநாகர், அவள் கண்களில் தோன்றிய மின்னலைக்கண்டு ஈர்க்கப்பட்டார். அந்த கண்களின் மின்னொளி, அவளுடைய சந்தோஷத்தையும் உற்சாகத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை, ஒரு சிறிய மர்மத்தையும் வெளிப்படுத்தியது அவளின் அந்த மனநிலையில், அவளது கண்கள் ஒரு வசியக்காரியின் அழகை வெளிப்படுததுவதைப் போல் தோன்றியது.

‘பங்கஜத்தின் வருங்காலக் கல்வியைப் பற்றி…’

நீங்கள் என்னிடம் சொல்லாவிட்டால் எனக்கு என்ன தெரியும்? எனக்கு பத்திரிக்கைத்துறையைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆண்களின் சொல்தான் வேதவாக்கு, பெண் எவ்வளவுதான் படித்தவளாக இருந்தாலும் அவளுடைய சொல் ஏற்றுக்கொள்ளப்படாது. பத்திரிக்கைத்துறைக்கு மனித இயல்புகளைப் பற்றி ஒரு புரிதலும், மனித மனங்கள் எப்படியெல்லாம் வேலை செய்யும் என்பதைபற்றி உள்ளுணர்வும் அவசியம். ஒருவர் உளவியல் கோட்பாடுகளை மட்டும் அறிந்திருத்தல் சரியல்ல; அவற்றின் உண்மைத்தன்மையையும் அறிந்திருக்கவேண்டும் தத்துவார்த்த உளவியலைக் காட்டிலும், இலக்கியம் ஒரு விஷயத்தில் முழுப்பொருளையும் அறிய உதவும். என்னுடைய மகள், ஒரு சர்வதேச பத்திரிக்கையின் பதிப்பாசிரியராக உயர வேண்டும் என்பது உங்களுடைய இலட்சியம்.’

அவளது கண்களில் தெரிந்த பளபளப்பு அதிகரித்துக்கொண்டே வந்தது சுகுநாகர் மௌனமாக இருந்தார்.

பங்கஜம், தன் வலது கையில் கோப்பையையும் இடது கையில் கோப்பை வைக்கும் தட்டையும் வைத்துக்கொண்டு தனது தந்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

‘முதலில் உனது காப்பியை குடித்து முடி’ & தாரா மகளுக்கு நினைவூட்டினாள்.

‘இப்பொழுது எப்படி உணர்கிறாய், அஸ்வினி?’

‘அவள் தனது கணவனை, வேறு வழியில்லாமல் பரிதாபமாகப் பார்த்தாள் அவள் தான் மூர்ச்சையாகியதை நினைவூட்டப்பட்டாள். ஆபத்துக் காலங்களில், பேச்சில், தோற்றத்தில் போடும் முகமூடியை அகற்றி வெளிப்புறப் போர்வையை அசட்டை செய்தல் மிகவும் இயற்கையே.

‘தாரா’ என்பது அவளது கணவன் அஸ்வினிக்கு இட்ட பெயராகும். அது அவளுடைய ஈர்ப்புத் தன்மையைத் தெரிவிக்கும், அன்பைத் தெரிவிக்கும் செல்லமாக அழைக்கும் ஒரு பட்டப் பெயர். அவள், தன் கணவனுடன் கல்கத்தாவில்வசிக்கச் சென்றபோது அவன் கூப்பிட்ட பெயராகும் தனது மனதில் பெரிய எழுத்துக்களால் எழுதப்பட்ட அந்த நிகழ்ச்சியை நினைவுகூர்ந்தாள்.

‘அஸ்வினி, நீ அந்த வான்மண்டலத்தில் உள்ள நட்சத்திரம்போல் இருக்கிறாய். நி நடப்பதைப் பார்க்கும்போது நட்சத்திரங்களின் அசைவை நம் நிலத்தில் காண்பது போல் உள்ளது. நட்சத்திரங்கள் உன் மனதில் உள்ள மர்மங்கள் எல்லாம் உனது கண்களில் ஒளியில் தென்படுகிறது. அது மிகவும் நெருக்கத்தில் இருப்பது போலும், மிகவும் தொலைவில் இருப்பதுபோலும் தோன்றுகிறது. நீ அருகில் இருந்தாலும் உன்னை நெருங்கமுடியாது என்பது போல் தோற்றமளிக்கிறாய்.’

‘கவிதை! நீங்கள் கவிதையைப் படிக்கிறீர்களா அல்லது நீங்களே சில கவிதைகளை எழுதுகிறீர்களா?’

‘அந்தக் கண்கள்! வானுலகில் உள்ள நட்சத்திரங்கள்! நீ எனக்கு ஒரு தாரகைதான்! இன்றிலிருந்து நான் மட்டுமே உபயோகப்படுத்தும் தாராவாக மாற்றப்போகிறேன்.’

‘அரசாங்க ஆணையை வெளியிடுவீர்களா?’

‘ரசனையில்லாமல் பேசாதே.’ அவர், அவளுடைய முகத்தை தன் கைகளில் ஏந்தி, அவளுடைய அகன்ற விழிகளையே, ஏதோ நட்சத்திரங்களின் நடுவே வீதி உலா வருவதைப் போல பார்த்துக் கொண்டிருந்தார்.

’பின், உங்களுடைய பெயரையும் நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும் – சுதாகர் என்று” அவள் வெட்கத்துடன் கூறியபடியே அவருடன் மேலும் இணைந்து கொண்டாள்.

‘என்னிடம் கவித்துவமாக எதுவும் இல்லை.’

ஒருசில சந்நதர்ப்பங்களைத் தவிர, மிக அசாதாரணமான சூழ்நிலைகளில், அவர் எப்பொழுதும் அஸ்வினி என்று அழைத்தது இல்லை. அவளுக்கு நினைவு தெரிந்த வரையில், பங்கஜத்தை பெற்றெடுப்பதற்காக, ஆஸ்பத்திரியில் அறுவைச் சிகிச்சை செய்வதற்காக படுக்கையில் இருந்தபோது, அவர் அவளை எப்படி இருக்கிறாய் என்று கேட்பதற்காக அஸ்வினி என்று அழைத்திருக்கிறார்.


கண்களை பாதி மூடியபடியே அவள், அவரை ஏறிட்டுப் பார்த்தாள்.

‘என்ன நடந்தது?’

பங்கஜம், தனது உதட்டின் மீது விரலை வைத்து அமைதியாக இருக்கும்படி சைகை செய்வதவாறே தனது தந்தையை பக்கத்தில் உள்ள அறைக்கு அழைத்துச் சென்றாள். அவள் விரைவாக என்ன நடந்தது என்பதைக் கூறினாள். வழக்கம்போல், தன் நண்பர்களைப் பார்த்துவிட்டு மாலை நான்கு மணிக்கு வீட்டிற்குத் திரும்பி வந்தாள். கதவு திறந்திருந்தது. அவள் நேராக உள்ளே நுழைந்து, தனது தாய், நாற்காலியில் சுயநினைவின்றி அமர்ந்திருப்பதைக் கண்டாள். உடனே மருத்துவரை அழைத்தாள். மருத்துவர் வருவதற்கு முன்பாக, மேஜையின் மேல்ஒரு சிறிய பார்சல் இருப்பதைக் கண்டாள்.

அதில் ஒரு சிறிய மரப்பெட்டி டப்பா ஒன்று இருந்தது. அதில் ஒரு தங்க மோதிரம் இருந்தது. மருத்துவர், தாய்க்கு தொழில் ரீதியாக தெரிந்தவராதலால் பத்து நிமிடங்களுக்குள் வந்து சேர்ந்தார். அவர் ஒருஊசி மருந்து கொடுத்துவிட்டு அரைமணி நேரத்திற்குள் அவள் சரியாகி¤ விடுவார் என கூறினார். ஆபத்து எதுவுமில்லை என்று அவளை தைரியப்படுத்திவிட்டு, மேலும் ஏதாவது தேவை ஏற்பட்டால் தன்னை அழைக்குமாறு கூறிவிட்டுச் சென்றார்.

மருத்துவர் கூறியதைப்போல், தாரா தன் சுயநினைவிற்கு வந்தாள்; சிறிதுநேரம் கழிந்தபின், அவள் எப்ப்பொழுதும் போல் தன் சாதாரண நிலையை அடைந்தாள்.

‘நான் ரயிலைப் பிடிக்கவேண்டும்’- அறைக்குள் நுழைந்தவாறே அவள் கூறினாள்.

சுகுநாகர், எங்கு அல்லது ஏன் என்று அவளைக் கேட்கவில்லை.

‘இந்த நிலைமையிலா?’ இதுதான் அவர் சொன்ன வார்த்தைகள்.

‘பங்கஜம் ட்ராவல் ஏஜெண்ட்டைக் கூப்பிட்டு, விசாகப்பட்டிணத்திற்கு இரண்டு டிக்கெட்டுகள் நமக்காக முன்பதிவு செய்யச் சொல். பயணசீட்டுகளை, இன்றிரவு கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பிளாட்பாரத்திற்கு வந்து என்னிடம் கொடுக்கச் சொல்.’

‘அஸ்வினி இதெல்லாம் என்ன?’

‘நான் உங்களை எப்பொழுதும் எதைப்பற்றியும் கேட்டதில்லை.’

‘இது கணவனின் கௌரவம் பற்றிய விஷயமோ அல்லது பணத்தைப் பற்றிய கவலையோ…’

‘நீங்கள் என்னைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். நான் விரும்பியது எல்லாம் உங்கள் அன்பும், எல்லாவற்றையும்விட என்னைப் புரிந்துகொள்ளும் தன்மையையும்தான். தயவுசெய்து என்னை மன்னித்துவிடுங்கள். என்னை தடுத்து நிறுத்த முயற்சி செய்யாதீர்கள். என்னுடைய உடல்நலத்தைப் பற்றிக் கவலைப்படவேண்டாம். நான் மிகவும் நன்றாக இருக்கிறேன். தவிர, பங்கஜம் என்னுடன் வருகிறாள்.’

‘நானும்கூட வரட்டுமா?’

‘வேண்டாம். பங்கஜத்திற்கு இது மிகவும்நல்ல வாய்ப்பாக இருக்கும்.’

‘என்ன இது?’ அவரால் கேட்காமல் இருக்க முடியவில்லை.

‘நான் கூறுகிறேன். நம்மிடையே எந்த இரகசியமும் இல்லை என்று உங்களுக்குத் தெரியும். பங்கஜம், நமது பெட்டிகளை தயார் செய்.’

‘நான் மருத்துவரை அழைக்கிறேன்…’ சுகுநாகர் அவளைப் பார்த்தார். பின்னர் பேசுவதை நிறுத்திவிட்டார்.

பயணச் சீட்டுகள் நடைமேடையில் கொண்டுவந்து தரப்பட்டன. ரயிலில் ஏறி நீண்டநேரம் காத்திருந்த போதிலும், அவருடைய தாய் பயணத்தைப் பற்றி அவளிடம் ஒன்றும் கூறவில்லை. அவர்கள் 400 கிலோமீட்டர் தொலைவு பயணத்தை முடித்த பின்பும் எந்தவித விளக்கமும் கொடுக்கவில்லை.

ரயில், புவனேஸ்வரில் நின்றபோது, தாரா ரயிலிலிருந்த உரிய அதிகாரியிடம் பேசினாள். பங்கஜம், அந்த அதிகாரி தன் தாயின் அருகில் வருவதைப் பார்த்தாள்; ஆனால் அவர்கள் இருவரும் என்ன பேசினார்கள் என்று தெரியவில்லை.

‘எந்தவித அசம்பாவித நிகழ்ச்சிகள் நடந்தாலும், நான் அதற்கு முழுப் பொறுப்பு ஏற்றுக்கொள்கிறேன் சரியான தருணத்தில் எனக்கு நினைவூட்டினால் மட்டும் போதுமானது. அவரிடம் சிறிது பணத்தைக் கொடுத்துக்கொண்டே அவள் கூறினாள்.

பங்கஜம் கண் விழித்து பார்த்தபோது விடிகாலைப் பொழுதாகி இருந்தது. அவளுடைய கைக் கடிகாரம் ஐந்து முப்பது என்று நேரத்தைக் காட்டியது.

‘சீக்கிரம் தயாராகு இன்னும் ஓரிரு நிமிடத்தில் நாம் இறங்கவேண்டும் நாம் எவ்வாறு தோற்றமளிக்கிறோம் என்பது முக்கியமல்ல.’
தனது தாயார் அபாயச் சங்கிலியை இழுத்ததைக் கண்டு பங்கஜம் அதிர்ச்சியடைந்தாள்.

அங்கு நடைமேடையே அல்ல; ஆனால் இருவரும் ரயிலை விட்டு இறங்கினார்கள்.

சிறிதுதொலைவில், நடைமேடையில் இருந்த பெரிய மஞ்சள் நிறப் பலகையில் எழுதியிருந்ததைப் படித்தாள் பஞ்கஜம்:

. ‘விஜயநகரம் சந்திப்பு.’

‘நாம் விசாகப்பட்டினத்திற்க சென்றிருக்கவேண்டும். அந்தப் பார்சல் விசாகாவில் இருந்து வந்தது. நாம் ஏன்…’

‘ராவ்ஜீ எப்பொழுதும் குறும்புக்காரராக இருந்தார்.’

‘யார் அவர்?’

‘உனக்கு அதிர்ஷ்டம் இருந்தால், நீ அவரைப் பார்ப்பாய்.’

‘எனக்கும் ஒன்றும் புரியவில்லை.’

‘அவர் தனது வாழ்வில் எல்லயில் இருக்கக்கூடும் அதாவது அவரின் கண்ணோட்டத்தில். ஆனால் ஏதோ ஒன்று எனக்குச் சொல்கிறது – அவர் அபாயகட்டத்தை தாண்டிவிட்டார் என்று. உனக்கு கடவுளிடம் நம்பிக்கை இருந்தால், அவர் உயிருடன் இருக்கவேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொள்.’

பங்கஜம் ஆச்சரியப்படவில்லை ஆனால் அவள் குழப்பமடைந்திருந்தாள். அந்தப் பார்சலுக்கும், மயக்கத்திற்கும் இந்த பயணத்திற்கும் ஏதாவது ஒரு தொடர்பு இருக்கவேண்டும். ஆனால் அந்தப் பார்சல் விஜயநகரத்தில் இருந்து வரவில்லை. அந்த பார்சலில் அனுப்புநரின் பெயர், ராகவராவ் என்றிருந்தது.

ரயில்நிலையத்தின் வெளியே ஆட்டோ ரிக்ஷாக்கள் எதுவும் இல்லை. அவர்கள் ஒரு சைக்கிள்ரிக்ஷாவில் பயணித்தார்கள் ரிக்ஷாக்காரர் அவர்கள் வண்டியில் ஏறுவதற்காக காத்துக் கொண்டிருக்கையில், தாரா கூறினாள். ‘நான் வயதானவளாகிவிட்டேன்; ஆனால் ராகவ் இப்பொழுதும் ஒரு இளமையான, குறும்புக்கார இளைஞனாக இருக்கிறார். அவர் எப்பொழுதும் அப்படித்தான் இருப்பார். எனக்குத் திருமணம் ஆவதற்கு முன்பு, நாங்கள் ஒரு திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது,அவர் விரலில் நான் அணிவித்த மோதிரம் இது. அந்தத் திரைப்படம்கூட ’தி ஸவுண்ட் ஆஃப் மியூஸிக்’ என்று நினைக்கின்றேன்.’

ரிக்ஷா ஒரு பள்ளத்தில் இறங்கி ஏறியபோது அதிகமாகக் குலுங்கியது.

தாரா மூச்சுவிட சிரமப்பட்டுக்கொண்டிருந்தாள்; பங்கஜம் ஒன்றும் பேசாமல் மௌனமாக இருந்தாள்.
தன் அசௌகரியம் சரியாகும் முன்பே, தாரா பேசத்தொடங்கினாள். ‘பங்கஜம் நீ இப்பொழுது எனது தோழி – மகள் அல்ல. நான் உன்னிடம் எல்லாவற்றையும் கூறுகிறேன். சிறு குழந்தைகள் தாயின் அன்பான அணைப்பை விரும்புவதைப் போல், வயதுக்குவந்த இளம்பெண்கள் காதலனின் சீராட்டுதலைப் பெற ஏங்குகின்றனர். நிறைய பெற்றோர்கள் இதை உணர்ந்துகொள்வது இல்லை…’ அவள் ஆழ்ந்த, நெடிய மூச்சினை இழுத்தாள். ‘அந்தரங்க உணர்ச்சிகளில் என்னை உன் தோழியாக நினைத்துக்கொண்டால் உனக்கு சங்கோஜ உணர்வு ஏற்படாது. பெரியதோ அல்லது சிறியதோ,உனக்கு என்ன பாதிப்பு நிகழ்ந்தாலும், தயவுசெய்து என்னிடம் கூறு.’

‘அம்மா, கடந்த காலத்தை நினைத்து நீங்கள் வருந்துகிறீர்களா?’ தாயின் மூச்சுவிட முடியாத நிலைக்குப் பின்னால் உள்ள உணர்ச்சிகளைப் பங்கஜத்தால் யூகிக்க முடிந்தது.

‘இல்லை, என்னை நம்பு. என் கண்ணே!

‘அப்பா… உங்களுடன்.. நீங்கள். அப்பா…’ தன் சந்தேகத்தை எப்படி வார்த்தைகளில் கொண்டு வருவது என்பது புரியாமல் அவள் தடுமாறினாள்.

உரையாடல் ஆங்கிலத்தில்தொடர்ந்து கொண்டிருந்தது.

தாரா தன் கண்களை மூடிக்கொண்டாள்.

ரிக்ஷா ஒரு மாடி வீட்டின் முன் நின்றது கதவில் ஒரு பெயர் பலகை இருந்தது. டாக்டர். ராமச்சந்திரராவ், மனவியல் துறை.

தாரா, ரிக்ஷாவில் இருந்துஇறங்கி, அழைபபு மணியை அழுத்தினாள்.

ஒரு இளைஞன் கதவைத் திறந்தான்.

‘நீ மதுவாக இருக்க வேண்டும்.’

‘நீங்கள் சொன்னது சரியே. தயவுசெய்து உள்ளே வாருங்கள்.’

‘நான் உன்னை எப்பொழுதும் கொஞ்சிக்கொண்டிருப்பது வழக்கம். அந்த நாட்களில், நீ சிறு குழந்தையாக இருந்தபோது உன்னைவிட்டு விட்டு என்னால் இருக்கவே முடியாது.’

‘நீங்கள்…’

‘அஸ்வினி. எங்கே உன் அப்பா?”’

‘மருத்துவமனையில் அதிதீவிர சிகிச்சைப் பிரிவல் இருக்கிறார்.”

‘நான் அவ்வாறு தான் யூகித்தேன்.. உன் அம்மா?’

‘இரண்டு வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்கள்.’

‘ஐயோ – மிகவும் வருந்துகிறேன்.’

தாரா வெளியே வந்து, ரிக்ஷாவில் அமர்ந்து, ரிக்ஷாக்காரரிடம் தங்களை ஏதாவது ஒரு நல்ல தங்கும் விடுதிக்கு அழைத்துச் செல்லுமாறு கூறினாள்.

‘அம்மா, அவர் நலமாக இருக்கிறாரா?’

‘ஆமாம். அவர் நலமாகிவிடுவார்.’

தங்கும் விடுதியின் அறையில் பங்கஜத்திடம் கூறினாள். ‘நான் ஒரு மருத்துவர். அவருடைய நிலைமையில், அவரால் என்னைப் பார்க்கக்கூட முடியாமல் இருக்கலாம். என்னால்கூட எந்த ஒரு அதிர்ச்சியையும் தாங்கிக்கொள்ள முடியாது உனக்குத் தெரியும். நான் எப்படி மயங்கிவிழுந்தேன் என்று…. ஆனால் நாம் பொறுத்திருந்துபார்க்கலாம்.’

‘நீங்கள் பதட்டமடைந்துள்ளீர்கள்.. மிகவும் உணர்ச்சிவசப்படுகிறீர்கள்’ பங்கஜம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு கூறினாள்.

‘நீ இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாது.’

‘விஷயங்களை, செய்திகளை தெரிந்துகொள்வதற்கு கேள்விகளை எப்படி கேட்பது என்று நினைப்பதைக் காட்டிலும் தனது கண்களையும், காதுகளையும் அதிகம் பயன்படுத்த ஒரு பத்திரிக்கை நிருபர் முயன்றால் வெற்றி நிச்சயம் என்ற சொற்றொடரை எங்கோ படித்ததை பங்கஜம் ஞாபகப்படுத்திக் கொண்டாள்.

‘எனக்கு இப்போது என்ன வயதாகிறது என்று நீ நினைக்கிறாய்?’

‘நாற்பத்தி எட்டுஅல்லது ஐம்பது இருக்கலாம்.’

‘நான், இப்படிதான் எல்லாப் பொழுதும் இருந்தேன் என்று நீ நினைக்கின்றாயா?’

தன் தாய், தன்னிடம் எதைப் பற்றியோ விளக்குவதற்காக தயார்ப்படுத்துகிறாள் என்பதைப் பங்கஜத்தால் புரிந்துகொள்ள முடிந்தது.

‘காலத்தின் சக்கரங்கள் தவிர்க்க முடியாமல் ஓடிக்கொண்டேயிருக்கின்றன. முடிவில்லாமல் அது போய்கொண்டே இருக்கின்றது. ஆனால் காலம் ஒன்றினால் மட்டும்தான் நமக்குள்ள ஒரு நொடியை நீண்ட நேரம் இருக்கக்கூடியதாக நம்மை நம்ப வைக்க முடியும். உன்னுடைய தாயும் ஒரு காலத்தில், இளமையுடனும், அழகுடனும் எந்த கவலையுமற்று, சுதந்திரமாக, பிடிவாதக்காரியாக இருந்தாள்.’

“நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுகிறீர்கள் என்று தோன்றுகிறது அம்மா…. அமைதியாயிருங்கள். குடிக்க காபிஅல்லது வேறு ஏதாவது கொண்டுவரச் சொல்லவா?”

“நான் சொல்வதை கவனமாகக் கேள். நான் இப்போது மகிழ்ச்சியாக, சுதந்திரமாக, மனநிறைவோடு இல்லையென்ற முடிவுக்கு வந்துவிடாதே. எப்பொழுதுமே நான் விரும்பியமாதிரிதான் இருந்திருக்கிறேன். சுதந்திரமாகவே வாழ்ந்திருக்கிறேன். அதேசமயம், உள்ளத்தில் எப்பொதுமே சீறிக்கொணிட்ருக்கும், கொதித்துக்கொண்டிருக்கும், வெடித்துச் சிதறிக்கொண்டிருக்கும் ஓர் எரிமலையைச் சுமந்துகொண்டிருப்பது எத்தனை கடினமானது என்பதும் எனக்குத் தெரியும்….”

என்னால் புரிந்துகொள்ள முடிகிறது’ – பங்கஜம் சிறிது யோசனைக்குப் பின் கூறினாள்.

‘பேதைப்பெண்ணே! அது அவ்வளவு எளிமையானதோ அல்லது சுலபமானதோ அல்ல. அப்பொழுது எனக்கு இருபத்திரண்டு வயது எப்பொழுதும் துள்ளிக் கொண்டும், குதித்துக்கொண்டும், ஆடிக் கொண்டும் இருந்தேன். நான் ஒரு முழுநேர மருத்துவராக இருந்தேன். எப்பொழுதும் நிலத்தை விட்டு ஒரு அடி உயரத்திலேயே நடந்துகொண்டிருந்தேன். நான் வாழ்க்கையை பல வண்ணங்கள் கொண்ட மாயக் கண்காட்சியைப்போல் பார்த்தேன். அந்த காலங்களில், நான் ஒரு சுதந்திரப் பறவையாக பறந்துகொண்டிருந்த காலத்தில், நான் ராமமச்சந்திர ராவை – அவர் தன்னை ராகவ ராவ் என்று அழைத்துக்கொண்டார், தன்னுடைய அடையாளத்தை மறைப்பதற்காக – சந்தித்தேன்.’

‘நீங்கள் அவரைத் திருமணம் செய்ய விரும்பினீர்கள்.’

‘இல்லை நீ தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறாய். அவருக்கு அப்போதே திருமணம் ஆகி ஒரு மகனும், நீ தொலைவில் இருந்து இன்று பார்த்தாயே- அந்த மதுவும் இருந்தான்.’

‘எனக்குப் புரிகிறது.’

‘இல்லை, உனக்குப் புரியாது. நீ புரிந்துகொண்டதாக நினைக்கும் எதுவும் அத்தனை எளிதாகப் புரிந்து கொள்ளக்கூடியது அல்ல. அது என்னுடைய மன உளைச்சலாக இருந்தது. உடல் உறவு மட்டுமே எல்லாம் அல்ல. திருமணம் என்பது மட்டும் ஒரே குறிக்கோள் அல்ல. அனுபவம்… நிரந்தரமானவை…. தற்காலிகமானவை…..ஒருவர் எளிதாக வருமானவரியைத் தவிர்ப்பதுபோல திருமணத்தையும் எளிதாகத் தவிர்த்துவிடலாம் என நான் நினைத்தேன்.

ராவ்ஜிதான் எனக்கு எல்லாமாக இருந்தார்; எல்லவாற்றிற்கும் அவர்தான். திருமணம் என்பது கட்டாயமற்ற சம்பிரதாயம் என்று நான் நினைத்தேன். என்னுடைய அப்பா ஒருஉண்மையான சந்நியாசி; எதுவுமே அவரை பாதித்ததில்லை. ராவ்ஜி எங்களுடைய இடத்துக்கு வருவார்; ஆனால் என் அப்பா அதைப்பற்றி கவலைகொண்டதே இல்லை. என்றுமே சந்தேகப்பட்டதும் இல்லை. அவர் ஒரு சிறந்த மனிதர்; சிறந்த அறிவாளி; கீதையை கரைத்துக் குடித்தவர். அவர் எப்பொழுதும்..எல்லாவற்றையும் விலகிய பார்வையில் சமமாகப் பார்க்கக்கூடியவர். என்னுடைய தீர்ப்பிற்கு விட்டுவிட்டார். எனக்குத் தெரியும் – நான் அதற்காக இப்பொழுது வருத்தப்படவில்லை.’

‘அந்த நாட்கள் மீண்டும் வரவேண்டும் என்று நீங்கள் விரும்புகிறீர்களா?’

‘மிகவும் வேகமாக வளர்ச்சியடைந்துகொண்டிருக்கிறாய் நீ முதிர்ச்சி அடைந்துவிட்டாய். ஆமாம், அதுதான் உண்மை. அந்த நாட்கள் திரும்பி வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன். காலம் அப்படியே அங்கேயே நின்றுவிடவேண்டும் என்று விரும்புகிறேன். எப்படியோ, எனக்கு அழுவது என்பது பிடிக்காத ஒன்றாகும். நான் அவரை விரும்பினேன், இன்றும் அதிக மனமுதிர்ச்சியுடன், மிகுந்த புரிதலுடன் நான் அவரைக் காதலிக்கின்றேன். எங்களுடைய பாதைகள் வேறு வேறு திசையில் சென்றன, நான் அவரை மறந்துவிட்டதாக நினைத்துக்கொள்ள முடிந்தது. ஆனால் எத்தனை கடினமாக முயற்சி செய்ய வேண்டியிருந்தது. கடவுளுக்கு மட்டுமே தெரியும்’ தாராவின் குரல் கரகரப்பாகி அவள் அழத் தொடங்கினாள்.

பங்கஜம் எதுவும் செய்வதற்கு முயற்சிக்கவில்லை. அவள் காத்திருந்தாள். தாரா மீண்டும் மிகுந்த பிரயத்தனத்தோடு தன்னைச் சமாதானப்படுத்திக்கொண்டு, பேச்சைத் தொடர்ந்தாள். ‘காலம் பொன்னானது; விலை மதிப்பற்றது என்பது உண்மையாக இருக்கலாம். நாம் எவ்வளவுதான் முதிர்ச்சியடைந்தவர்களாக, பக்குவம் அடைந்தவர்களாக, எல்லாம் தெரிந்தவர்களாக இருந்தாலும், நம்மால் உணர்ச்சிவசப்படாமல் இருக்க முடிவதில்லை; ஏனென்றால், நாம் மனிதப் பிறவிகள். நான் ஒரே ஒரு தடவை அவரைப் பார்க்க விரும்புகிறேன். நீ என்னுடன் வருவாயா? நிதர்சன உண்மைநிலையை உன்னால் எதிர்கொள்ள முடியுமா? ஒரு சிறந்த பத்திரிகையாளராக உருவாவதற்கு அந்த குணமும் மிகவும் தேவை.’

‘நான் ஒரு மருத்துவரின் மகள்.’

‘நல்லது. அப்படியானால், என்னுடன் வா.’
மருத்துவமனை, கிருமிநாசினிகள், வலியின் வேதனையின் வாசனை, மணம், பாதிப்புகள், துன்பங்கள் போராட்டங்களின் மௌனநிலை மரணத்தை எதிர்த்துப் போராடும் தன்மை. பங்கஜம் எல்லாவற்றையும் விட்டு விலகிவிடவேண்டும்போல், வீசியெறிந்துவிடவேண்டும்போல் உணர்ந்தாள். என்ன ஒரு விசித்திரமான அனுபவம்!

‘நான் கல்கத்தாவில் இருந்து வந்திருக்கும் டாக்டர். தாரா. இங்கு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள என் நண்பரைப் பார்க்க விரும்புகிறேன். அவருடைய பெயர் ராமச்சந்திர ராவ்.’

‘அவர் ஆபத்தான நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.’

‘நீங்கள், நான் சொன்னதை சரியாக கேட்கவில்லை என நினைக்கிறேன் நான் ஒரு மருத்துவர்.’

‘மன்னிக்கவும், தயவுசெய்து உள்ளே வாருங்கள்’ அவர் இருவரையும் வழி நடத்தியபடி கூறினார்.

ராவ்ஜி விட்டத்தை மேல் கூரையைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் தலைக்கு மேல் இருந்த உத்திரம் மிகவும் பழுதடைந்திருந்தது. மேலே பூசியுள்ள வர்ணத்தால் அதை மறைக்க முடியவில்லை.

‘மார்னிங்…. ஓ, நீ அஸ்வினி தானே?’

இவள் என்னுடைய மகள்’ தாரா தனது மகளை அறிமுகப்படுத்தினாள்.

உங்கள் இருவரையும் காண்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நாம் இருவரும் மிகச் சிறந்த காலங்களைக் கழித்திருக்கிறோம். ஆனால் நான் இதைவிட்டு இப்பொழுது செல்லவேண்டும் என்று பயமாக இருக்கிறது. குழந்தை என்னவாயிற்று?

‘ஆறாவது மாதத்தில் இறந்துவிட்டது. ‘வைரல் நிமோனியா’. என்னால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை.”

‘கவலைப்படாதே. இருபத்தைந்து வருடங்கள் அல்லது இருபத்தி எட்டு வருடங்களா? நேற்று போல் தோன்றுகிறது.”

‘நான் என் இதயத்திற்குள் மறைத்துவைத்திருந்தேன். என்னுடைய நோயாளியான, ஒரு கன்னியாஸ்திரியிடம் என் மனத்தை வெளிப்படுத்தினேன். நான், உங்களைப் பற்றி நினைக்கவோ, உங்களை அழைக்கவோ உங்களுக்கு எழுதவோ கூடாது என்று கேட்டுக்கொள்ளப்பட்டேன். முதல் விஷயம், அதாவது நினைக்காமல் இருப்பது என்பது மிக மிகக் கடினமானது. அவள் எனக்காகப் பிரார்த்திப்பதாகக் கூறினாள். எனக்கு நீங்கள் அனுப்பிய தகவல் கிடைத்தது. அதனால் நான், இப்போது இங்கே என் மகளுடன் வந்து விட்டேன்.’

‘கன்னியாஸ்திரியிடம் என்ன சொல்வாய்?’

‘பாவம் செய்யும் அறியாமையில் நாம் இப்போது இல்லை. புரிந்துகொள்வது, கருணைகாட்டுவது என்று நாம் பக்குவப்பட்டுவிட்டோம்.எப்போதும்போல் இளமையாகவும் குறும்புத்தனத்துடனும் இருக்கிறீர்கள். நான், உங்களைப் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன்.’

‘நான் இவ்வுலகத்தைவிட்டு செல்வதற்கு முன்பு. ஆமாம், நீ சரியாகக் கூறினாய். நான் உன் வெளிப்படைத்தன்மையை மிகவும் விரும்புகிறேன். ஒருவேளை அது உன்னுடைய பயிற்சியினால் இருக்கக்கூடும். நாம் முதியவர்களாக ஆகக்கூடாது. பழம் புதைபடிவங்களாகிவிடக்கூடாது.. வாழும் கலையில் இது இரண்டறக் கலந்த அம்சம். வண்ணச்சக்கரத்தில் இருந்து ஏதாவது ஒரு வண்ணத்தை எடுத்துவிட்டால், அது முழுமையற்றதாகவும், பூரணமாகாததாகவும் ஆகிவிடும். மூப்பெய்துவது என்பது இயற்கை, தவிர்க்க முடியாதது; ஆனால் உன் இளமையை நீ இங்கே தக்க வைத்துக் கொள்ளலாம்’ – தன் நெஞ்சுப் பகுதியைக் காண்பித்தார் ராவ்.

‘நீ புது மலர்ச்சியுடன் காணப்படுகின்றாய்’ சிறிதுநேரத்திற்குப் பிறகு கூறினார்.

‘ஆனால் அது உங்களுடைய பார்வையில் உள்ள குறையாகும்.’

‘மற்றவர்களின் உடல்நலத்தில் உள்ள ஓட்டைகளைக் கண்டுபிடிப்பதற்கு உனக்கு பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது. நான் உயிருடன் இருப்பதற்கு அதிர்ஷ்டம் செய்துள்ளேன். ராஜம் என்னை விட்டுச்சென்றுவிட்டாள்.
இரண்டாவதும் என்னை இரங்கத்தக்க மனிதனாக விட்டுவிட்டுப் பறிபோய்விட்டது.” அவருடைய கண்களில் கண்ணீர்வழிந்தது. அவள் குனிந்து அவருடைய கைகளை தன் கைகளுக்குள் எடுத்துக்கொண்டாள்.

”உன்னுடைய கணவன்?’ ராவ்ஜீ கேட்டார்,அவருடைய முகம் ஒருவித தெய்வீகக் களையுடன் இருந்தது.

அந்த கேள்வியில் வெறுப்போ, கெட்ட எண்ணமோ வஞ்சப் புகழ்ச்சியோ இல்லை. அதில்ஆழ்ந்த அன்பும், அக்கறையும் வெளிப்பட்டது.

பங்கஜம், கல்லூரியில் ஒருகன்னியாஸ்திரி படிக்கச்சொன்னதால், தான் படித்த ஸெயிண்ட் ஜூலியானா ஆஃப் நார்விச்-ஐ நினைவு கூர்ந்தாள். அவள் மேற்கோள் காட்டிய ஒரு வாக்கியத்தை ஞாபகப்படுத்திக்கொண்டாள். ‘பாவம் ஏற்புடையதாகும். எல்லாம் நலமே. நலமாகவே இருக்கட்டும்.”

இவை எல்லாம் ஒருவரின் புரிந்து கொள்ளும் தன்மையைப் பொறுத்து உள்ளது. பங்கஜம்,தனது பெற்றோர்களை எப்பொழுதும் அர்ப்பணிப்பு மிக்க, பாசமுள்ள, அன்புள்ள, புரிந்துணர்தல் உள்ள தபம்திகளாகவே பார்த்திருக்கிறாள்.
ராவ்ஜீ, தாராவை இன்னும் சற்று அருகில் வரும்படி கூறினார். பங்கஜம் விலகி, சற்று தள்ளியுள்ள, சுவரிலிருந்த நிழற்படத்தை பார்ககச் சென்றாள்.

‘சுகுநாகர், ராஜத்தின் மரணத்தைக் கேள்விப்பட்டு என்னைப் பார்க்க இங்கு வந்திருந்தார்.’

‘அவர் வந்திருந்தாரா? என்னிடம் அவர் என்றுமே கூறியதில்லை.’

‘நம்மைப்பற்றி அவருக்கு எப்பொழுதோ தெரியும். மிகவும் உயர்ந்த மனிதன் உயர்ந்த பெண்மணியின் கணவன்.’

எப்படி அவர் ஒருமுறைகூட என்னிடம் அதைப்பற்றி கூறவில்லை? சில மனிதர்கள் எத்தனை உயர்ந்த நிலைக்குச் செல்வார்கள் என்று நம்மால் அனுமானிக்கவே முடியாது. தாரா வியப்பில்ஆழ்ந்து போயிருந்தாள்.

மது ஒரு சிறு புன்னகையுடன் உள்ளே வந்தான். “உங்களுடைய நேரம் முடிந்துவிட்டதாக மருத்துவர் கூறுகிறார்.’

தாரா, ராவ்ஜியின் கண்களையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அது நன்றாக ஒளியூட்டப்பட்ட கருவறையில் உள்ள தெய்வச்சிலையின் கண்களை பார்த்துக் கொண்டிருப்பதைப்போல் இருந்தது.

‘மருத்துவர் நோயாளிகளைப் மேற்பார்வையிட வருகிறார்’ செவிலி அறிவித்து விட்டுச் சென்றாள்.

‘கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும். என் குழந்தாய்! கடவுள் உன்னை ஆசிர்வதிக்கட்டும் என் கண்ணே’-ஒரு சிறு புன்னகை ராவ்ஜியின் முகத்தில், சுவற்றில் உள்ள படத்தில் போட்டிருந்த பூமாலையைப் போன்று,படர்ந்தது.

தாரர், தன் கைப்பையில் இருந்துஅந்த மோதிரத்தை எடுத்து, ராவ்ஜியின் விரலில் அணிவித்தாள்.

மகிழ்ச்சியில் முகமெங்கும் ஒளிவீச, கண்களைத் திறந்து பார்த்தார் ராவ்ஜி.

நிகனார் பார்ரா கவிதைகள் / தமிழில்: சமயவேல்

1 நவீன காலங்கள்

நாம் பயங்கரமான காலத்தின் ஊடே வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
உனக்குள்ளேயே முரண்படாமல் எதைக் கூறுவதும் சாத்தியமில்லை
பென்டகனின் ஒரு கையாளாக இருக்காமல் உங்கள் நாக்கை நிறுத்துதல்
முடியாதது.
அங்கே வேறு எந்தத் தேர்வும் இயலாதது என்பது எல்லோருக்கும் தெரியும்
எல்லாச் சாலைகளும் க்யூபாவுக்கே செல்கின்றன
ஆனால் காற்று அசிங்கமாக இருக்கிறது
சுவாசித்தல் கால விரயம்.
பகைவர் கூறுகிறார்
நாடுகளே குற்றவாளிகள்
நாடுகளே தனிமனிதர்கள் என்பதால்.
பரிதாபகரமான மேகங்கள் பரிதாபகரமான எரிமலைகளைச் சுற்றிச் சுழல்கின்றன
சபிக்கப்பட்ட கப்பல்கள் நம்பிக்கையற்ற பயணங்களை மேற்கொள்கின்றன
பரிதாபகரமான மரங்கள் பரிதாபகரமான பறவைகளாகக் கரைந்து மறைகின்றன
தொடக்கத்திலிருந்தே எல்லாமும் கெட்டுப்போய்விட்டன.
(டாவிட் உங்கெர்)

2 பண வீக்கம்

ரொட்டி விலை உயர்ந்தது எனவே ரொட்டி விலை உயர்ந்தது மீண்டும்
வாடகைகள் உயர்ந்தன
இது உடனடியாக எல்லா வாடகைகளையும் இரட்டிப்பாக்கின
துணிகள் விலை உயர்கிறது
எனவே துணிகள் விலை மீண்டும் உயர்கிறது
வேறு வழியெதுவும் இல்லை
ஒரு விஷ வட்டத்துக்குள் நாம் சிக்கியிருக்கிறோம்.
அங்கே கூண்டுக்குள் இருக்கிறது உணவு.
அதிகமில்லை. ஆனால் அங்கு உணவிருக்கிறது.
வெளியில் மட்டுமே சுதந்திரத்தின் பெரும்பரப்பு இருக்கிறது.

(மில்லர் வில்லியம்ஸ்)

3 சூழல் பலவீனமடைந்து வருகிறது

நீங்கள் தான் சூரியனைப் பார்க்க வேண்டும்
ஒரு புகைக் கண்ணாடி வழியாக
விஷயங்கள் மோசமாக இருக்கின்றன என்பதை அறிய.
அல்லது எல்லாமே அருமையாக இருக்கின்றன என நீங்கள் நினைக்கலாம்.
நான் சொல்கிறேன் நாம் பின்னாடிப் போய்த்தான் ஆகவேண்டும்
குதிரைகளால் இழுக்கப்படும் கார்களுக்கு
நீராவியில் ஓடும் விமானங்களுக்கு
அல்லது கல்லில் செதுக்கிய டீவிப் பெட்டிகளுக்கு.

கிழடுகள் கூறியது சரிதான்:
நாம் பின்னாடிப் போய் விறகில் சமைக்க வேண்டும் மீண்டும்.

(மில்லர் வில்லியம்ஸ்)

4 சிலுவை

விரைவில் அல்லது பின்னர், நான் அழுதுகொண்டே வருவேன்
சிலுவையின் திறந்த கரங்களுக்கு.

பின்னரை விட விரைவில் நான் விழுவேன்
சிலுவையின் காலடியில் எனது முழந்தாளிட்டு.
என்னை நான் தடுத்துக் கொள்ள வேண்டும்
சிலுவையை நிச்சயதார்த்தம் செய்து கொள்வதிலிருந்து:
பாருங்கள்! அவளது கைகளை என்னிடம் எப்படி நீட்டுகிறாள்?

இது இன்றைக்காக இருக்காது
அல்லது நாளைக்கு
அல்லது நாளை
மறுநாளில்
ஆனால் அது நடக்கும் அது நடந்தே ஆகும் என்பதால்.

இப்போதைக்கு சிலுவை ஒரு ஆகாய விமானம்
விரிந்த கால்களுடன் கூடிய ஒரு பெண்.
(ஜ்யார்ஜ் குவாஸா)

5 உதவி!

இங்கு நான் எப்படி வந்து சேர்ந்தேன் என்று எனக்குத் தெரியவில்லை:

எனது தொப்பியை எனது வலது கையில் பிடித்தவாறு
ஆனந்தத்தால் என்னைப் பித்துப் பிடிக்க வைத்த ஒரு
ஒளிரும் வண்ணத்துப் பூச்சியைத் துரத்தியவாறு
நான் மகிழ்ச்சியாக கால் தெறிக்க ஓடிக் கொண்டிருந்தேன்

திடீரென ஒரு அடி- அம்மா! தலைகுப்புற நான் விழுந்தேன்
தோட்டத்திற்கு என்ன ஆனது என எனக்குத் தெரியாது
முழுமையாக மாறியது காட்சி:
எனது வாயிலும் மூக்கிலும் ரத்தம் கொட்டுகிறது

உண்மையைச் சொல்கிறேன், என்ன நடக்கிறதென எனக்குத் தெரியவில்லை:
இறுதியாக இந்த ஒரே ஒரு முறை என்னைக் காப்பாற்றுங்கள்
அல்லது எனது தலைக்குள் ஒரு குண்டைச் செலுத்துங்கள்.
(டாவிட் உங்கெர்)

ஸ்பானிஷில் இருந்து ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்கள் பெயர்கள் கவிதைகளின் முடிவில் அடைப்புக் குறிகளுக்குள் உள்ளன.

நண்பர்கள் ( Friends ) – ஆங்கிலம் : லூசியா பெர்லின், ( அமெரிக்கா.) Lucia Berlin – தமிழில் : ச. ஆறுமுகம்.

லூசியா பெர்லின் (1936 – 2004)

1960, 70, 80களில் மிகவும் அறிவு பூர்வமாகப் புனைவுகளைப் படைத்த லூசியா பெர்லினுக்கு மிகச் சிறிய வாசகர் வட்டமே அமைந்திருந்தது. அவர் இறந்து பதிபொரு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது கதைகள் பிரபலமடைந்துள்ளன. லூசியாவின் படைப்புகள் கனடாவின் ஆலிஸ் மன்றோ, ருசியாவின் செகாவ் போன்றோரின் படைப்புகளுக்கு இணையான இடத்தில் வைத்துப் பார்க்கப்படவேண்டியவையெனத் தெரிவித்துள்ளார்.

தற்போது தமிழாக்கம் செய்யப்பட்டுள்ள `நண்பர்கள்` கதை, புதுமைப்பித்தனின் செல்லம்மாள், ஆலிஸ் மன்றோவின் `மலைமேல் வந்தது, கரடி` கதைகளோடு இணைத்துச் சிந்திக்கத் தூண்டுவதாக உள்ளது.

*****

சாமின் உயிரைக் காப்பாற்றிய நாளில்தான் அன்னாவையும் சாமையும் லொரேட்டா சந்தித்தாள்.

அன்னாவும் சாமும் முதியவர்கள். அவளுக்கு 80, அவரோ 89. பக்கத்து வீட்டு எலெயினின் நீச்சல் குளத்துக்கு லொரேட்டா நீச்சலுக்குச் செல்லும் நாட்களில் அவ்வப்போது அன்னாவைப் பார்த்திருக்கிறாள். ஒருநாள் இரண்டு பெண்கள் சேர்ந்து ஒரு வயதான முதியவரை நீச்சலுக்கு இணங்கவைக்க முயலும்போது அவள் நின்று கவனித்தாள். கடைசியில் அவர் ஒப்புக்கொண்டு, இறுக்கமான முகத்தோடு நாய் நீச்சலில் கைகளைத் தப்படித்தபோது கைகால்கள் இழுத்துக்கொண்டன. குளத்தின் ஆழமற்ற முடிவுப் பகுதியில் நின்ற அந்த இரண்டு பெண்களும் இதைக் கவனிக்கவில்லை.

லொரேட்டா, காலணிகளைக்கூடக் கழற்றாமல் அப்படியே குளத்தில் குதித்து அவரைப் படிக்கட்டுக்கு இழுத்து, குளத்துக்கு வெளியேயும் கொண்டுவந்தாள். அவருக்கு இதய மீளுயிர்ப்புச் சிகிச்சை எதுவும் தேவைப்படவில்லை; பயத்தில் கைகால்கள் ஓடவில்லை; அவ்வளவுதான். வலிப்பு நோய்க்கான சில மருந்துகளை அவர் உட்கொள்ளவேண்டியிருந்தது.

மூன்று பெண்களுமாக அவருக்கு உடல் துவர்த்தவும் ஆடைமாற்றவும் உதவிசெய்தனர். அவர் நல்லநிலைக்குத் திரும்பி, அந்தக் கட்டிடத் தொகுதியின் அருகாகவேயிருந்த அவர்களுடைய வீட்டுக்கு நடந்துசெல்லமுடிகிற வரையில் அவர்கள் எல்லோரும் அங்கேயே அமரவேண்டியிருந்தது. லொரேட்டா, அவரது உயிரைக் காப்பாற்றியதற்காக, அன்னாவும் சாமும் நன்றி கூறிக்கொண்டேயிருந்ததுடன் மறுநாள் மதிய உணவுக்கு அவர்கள் வீட்டுக்கு வந்தேயாகவேண்டுமென்றும் வற்புறுத்தினார்கள்.

அடுத்த சில நாட்களுக்கு அவள் வேலைக்குச் செல்லமுடியாதபடியாக இருந்தது. கண்டிப்பாகச் செய்தேயாகவேண்டிய சில விஷயங்கள் இருந்ததால், அவள் மூன்று நாட்கள் ஊதியமில்லாத விடுப்பு எடுத்தாள். அவர்களுடனான மதிய உணவு என்பது நகரத்திலிருந்து பெர்க்கிலி சென்று திரும்பும் தூரத்தை உள்ளடக்கியதென்பதோடு திட்டமிட்ட நாளில் எல்லாவற்றையும் செய்துமுடிக்கமுடியாமலுமாகும்

இது போன்ற நிலைமைகளில் அவள் கையற்றுப் போவதாக உணர்கிறாள். நீங்கள் ஐயோ என உங்களுக்குள்ளாகவே புலம்பிக்கொள்வீர்களே அதைத்தான் அவளும் செய்துகொள்ளமுடியும், அது அவ்வளவு நல்லது. நீங்கள் அதைச்செய்யவில்லையெனில் குற்றவுணர்வுகொள்வீர்கள்; அதைச் செய்தாலோ பலவீனமாக உணர்வீர்கள்.

அவர்களின் குடியிருப்புக்குள் நுழைந்த கணத்திலேயே அவள், அவநோக்கு மனநிலையை மாற்றிக்கொண்டாள். வாழ்க்கையின் பெரும்பகுதியை அவர்கள் வாழ்ந்த பழங்கால மெக்சிகோ வீட்டைப் போலவே, அந்த வீடும் விரியத் திறந்ததாக நல்ல வெளிச்சத்துடனிருந்தது. அன்னா தொல்லியலாளராகவும் சாம் பொறியாளராகவும் இருந்தனர். டியோட்டிஹ்யாகன் மற்றும் பிற தொல்லியல் தளங்களில் அவர்கள் இணைந்தே பணியாற்றியிருந்தனர்.

அவர்களின் குடியிருப்பு, அருமையான ஒரு நூலகத்துடன் அழகிய மண்கலங்கள், புகைப்படங்கள் நிறைந்து விளங்கியது. படிக்கட்டில் இறங்கியதும் பின்புறப் பகுதியில் ஒரு பெரிய காய்கறித் தோட்டம், பலவகைப் பழ மரங்கள் மற்றும் பேரிவகைத் தாவரங்கள். லொரேட்டாவுக்கு ஒரே வியப்பு; பறவைகளைப்போல மென்மைகொண்ட அந்த இருவரும் அவர்களின் வேலைகளை அவர்களாகவே செய்துகொள்கின்றனர். இருவருமே கைத்தடி கொண்டு, மிகவும் சிரமத்துடனேயே நடந்தார்கள்.

மதிய உணவுக்கு வதக்கிய பாலாடைக்கட்டி பொதியப்பம், சௌசௌ சூப் மற்றும் அவர்களின் தோட்டத்துக் காய்களைக் கொண்டு ஒரு கலவை. அன்னாவும் சாமும் இருவருமாகவே சேர்ந்து உணவு தயாரித்து, மேசையை அழகுபடுத்தியிருந்ததோடு, அவர்களாகவே பரிமாறினர்.

ஐம்பது ஆண்டுகளாகவே, இருவரும் இணைந்தே எல்லாக் காரியங்களையும் செய்துவருகின்றனர். இரட்டைக் குழந்தைகளைப் போல, அவர்கள் ஒருவரையொருவர் எதிரொலித்தார்கள் அல்லது ஒருவர் தொடங்கும் வாக்கியத்தை மற்றவர் முடித்தனர். மதிய உணவு மகிழ்வாக நிகழ்ந்தது; அவர்கள் மெக்சிகோவிலுள்ள பிரமிடுவிலும் பிற அகழாய்வுத் தளங்களிலும் பணியாற்றிய அனுபவங்கள் சிலவற்றை ஒருசேர ஸ்டீரியோ ஒலிபெருக்கி போல அவளுக்குச் சொன்னார்கள். அந்த இரு முதியவர்களால், அவர்கள் பகிர்ந்துகொண்ட இசை மற்றும் தோட்டக்கலை ரசனையால், அவர்கள் ஒருவர் மீதொருவர் கண்டுகொண்ட இன்ப அனுபவத்தால், லொரேட்டா முழுவதுமாக அவர்கள்பால் ஈர்க்கப்பட்டாள்.

அவர்கள் இருவரும் உள்ளூர் மற்றும் தேசிய அரசியலில் முழுவதுமாகக் கலந்துகொண்டு, ஊர்வலங்கள் மற்றும் எதிர்ப்பு நிகழ்வுகளுக்குச் செல்வதும், நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் ஊடகச் செய்தியாளர்களுக்கு அஞ்சல்கள் எழுதுவதும், தொலைபேசியில் பேசுவதுமாக இருப்பதைக் கண்டு அவள் வியப்புகொண்டாள். ஒவ்வொரு நாளும் மூன்று அல்லது நான்கு செய்தித்தாள்களை அவர்கள் வாசித்தனர்; இரவுகளில் ஒருவருக்கொருவர் நாவல்கள் அல்லது வரலாற்று நூல்களை வாசித்துக் காட்டினர்.

நடுங்கும் கைகளோடு சாம் மேசையைச் சுத்தம்செய்யும்போது, லொரேட்டா, அன்னாவிடம் இப்படியொரு நெருக்கமான வாழ்க்கைத் துணை அமைந்திருப்பது எத்துணை பொறாமைகொள்ளச்செய்கிறதென்றாள். ஆமாம், என்ற அன்னா, ஆனால், சீக்கிரமே எங்களில் ஒருவர் போய்விடுவோம் போலிருக்கிறதென்றாள்.

அந்த அறிக்கைச் சொற்றொடரை லொரேட்டா நிரம்ப நாட்களுக்கு நினைவுவைத்து, அவர்களில் ஒருவர் மரணிக்கும் காலத்துக்கு எதிராக ஒரு ஆயுள் காப்பீடு போல அன்னா அவளோடு ஒரு நட்பினை வளர்த்துக்கொள்ளத் தொடங்கினாளோவென வியந்தாள். ஆனால், அது அப்படியில்லையென்றும், அது இன்னும் மிக எளிய ஒன்று என்றும் அவள் நினைத்தாள். அவர்கள் இருவருமே போதிய தற்சார்பு மற்றும் தன்னிறைவு கொண்டவர்களாகவும் வாழ்க்கை முழுவதுமே ஒருவர் மற்றவருக்காகப் போதுமான அளவுக்கு ஈடுகொடுப்பவர்களாகவும் இருந்துவந்திருக்கின்றன்; ஆனால் சாம் இப்போதெல்லாம் அடிக்கடி கனவுவயப்படுவதுடன் தொடர்பற்றுப் பேசுபவராகவும் மாறிக்கொண்டிருக்கிறார்.

ஒரே கதையை மீண்டும் மீண்டுமாகச் சொல்கிறார்; அன்னா எப்போதுமே அவரிடம் பொறுமையோடுதானிருக்கிறாளென்றாலும் பேச்சுத் துணையாக இன்னுமொருவர் இருந்தால் அன்னா மகிழ்ச்சிகொள்வாளென லொரேட்டா உணர்ந்தாள்.
காரணம் எதுவாக இருந்தாலும், சாம் மற்றும் அன்னாவின் வாழ்க்கையில் மேலும் மேலுமான ஒரு ஈடுபாடு ஏற்பட்டிருப்பதை அவள் உணர்ந்தாள். அவர்களால் மேற்கொண்டு கார் ஓட்டமுடியவில்லை.

லொரேட்டா வேலையிலிருக்கும்போது, தொலைபேசியில் அன்னா, தோட்டத்திற்கான நார்க்கழிவு வாங்கிவருமாறோ, சாமை கண் மருத்துவரிடம் அழைத்துச் செல்லுமாறோ கூறுகிறாள். சிலநேரங்களில் அவர்கள் இருவருமே கடைக்குச் செல்ல முடியாதது போல் உணர்ந்ததால், அவர்களுக்காக லொரேட்டா பொருட்கள் வாங்கிவரவேண்டியிருந்தது. அவர்கள் இருவரையும் அவள் விரும்பியதோடு அவர்களை நினைத்து வியந்து பாராட்டவும் செய்தாள். அவர்கள் துணைக்கு ஏங்குவதாகத் தோன்றியதால், அவள் வாரம் ஒருமுறையோ மிகவும் அதிகபட்சம் இரண்டு வாரத்துக்கொருமுறையோ அவர்கள் வீட்டு இரவு உணவுக்குச் சென்றுவிடுவாள்.

சிலவேளைகளில் அவர்களைத் தன் வீட்டுக்கு இரவு உணவுக்கு வருமாறு அழைத்தாள்; ஆனால், அவள் வீட்டுக்கு அதிகம் படியேறவேண்டியிருந்ததோடு, மேலே வந்ததும் அவர்கள் முழுவதுமாகச் சோர்ந்துவிட்டதால் அவள் அதை நிறுத்திக்கொண்டாள். அதனால் அவள், அவர்கள் வீட்டுக்கு மீன், கோழி அல்லது பாஸ்தா உணவு எதையாவது கொண்டுசெல்வாள். இரவு உணவோடு சேர்த்து அருந்துவதற்காக, அவர்கள் காய்கறிக் கலவை தயாரித்து, தோட்டத்துப் பேரிவகைகளுடன் பரிமாறுவார்கள்.
இரவு உணவுக்குப் பின்னர், கோப்பை கோப்பைகளாக, புதினா அல்லது ஜமைக்கா தேநீருடன் மேசையில் சுற்றி அமர, சாம் கதைகள் சொல்வார்.

யுகேட்டான் காட்டுக்குள் அகழப்பட்ட தளம் ஒன்றிலிருக்கையில் அன்னாவை வாத நோய் தாக்கியபோது அவளை எப்படி மருத்துவமனைக்குக் கொண்டுசென்றார்கள், அங்கிருந்த மக்கள் எவ்வளவு அன்பும் இரக்கமும் நிறைந்தவர்களாயிருந்தார்கள் என்பது பற்றியது. க்சாலப்பாவில் அவர்கள் கட்டிய வீட்டைப் பற்றித்தான் அநேகக் கதைகள். மேயரின் மனைவி, பார்வையாளர் ஒருவரைத் தவிர்ப்பதற்காக சாளரம் ஒன்றிலேறிக் குதித்ததில் காலை உடைத்துக்கொண்டாராம். சாமின் கதைகள் எப்போதுமே “ அது எனக்கு அந்தக் காலத்தை நினைவுபடுத்துகிறது……” எனத் தொடங்கின.
சிறிது சிறிதாக, அவர்களின் வாழ்க்கைக் கதை முழுவதும் லொரேட்டாவுக்கு மனப்பாடமாயிற்று.

டாம் சிகரத்தில் அவர்களின் பிணைப்பு. அவர்கள் பொதுவுடைமைவாதிகளாக இருந்தபோது நியூயார்க்கில் ஏற்பட்ட காதல். பாவத்திலேயே வாழ்ந்தது. அவர்கள் திருமணம் செய்துகொள்ளவேயில்லை. அந்த மரபுமீறிய தன்மைக்காக அவர்கள் அப்போதும் பெருமிதமும் நிறைவும் கொண்டார்கள். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள். இருவரும் தூரத்து நகரங்களில் இருந்தனர். குழந்தைகள் சிறியவர்களாக இருந்தபோது கலிபோர்னியக் கடற்கரையான பெரிய சூர் அருகிருந்த கால்நடைப் பண்ணை பற்றியும் கதைகள் இருந்தன. ஒரு கதை முடியும் போது லொரேட்டா சொல்வாள், “ எனக்கு இங்குவிட்டுப் போவதற்கு வெறுப்பாகத் தானிருக்கிறது. ஆனால், நாளை காலை சீக்கிரமாகவே வேலைக்குப் போக வேண்டியிருக்கிறது.” அப்படியே புறப்பட்டுவிடுவாள்தான்.

இருந்தாலும் சாம் சொல்வார், “ கையால் சுற்றும் கிராமபோனுக்கு என்ன நிகழ்ந்ததென்று சொல்கிறேன், கேட்டுவிட்டுப் போயேன்.” நேரம் பிந்தி, ஓக்லாந்திலுள்ள அவள் வீட்டுக்கு காரோட்டிச் செல்லும்போது, இப்படியே போய்க்கொண்டிருக்க முடியாதென அவள் தனக்குள் சொல்லிக்கொள்வாள். அப்படியே அங்கு சென்றுவந்தாலும் அதற்கொரு குறிப்பிட்ட கால வரையறை நிர்ணயித்துக் கொள்ளவேண்டும்.

அவர்கள் ஒருபோதும் சலிப்புறவோ அல்லது ஆர்வமற்றுப்போகவோ இல்லை. மாறாக, அந்த இணையர்கள் இருவரும் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் மனதறிந்த தெளிவுடனும் முழுமையான ஒரு வாழ்க்கையினை வளத்தோடு வாழ்ந்தனர். கடந்துசென்ற அவர்களது உலகத்தின் மீது அவர்கள் அதீத ஆர்வத்துடன் விளங்கினார்கள். ஒருவருக்கொருவர் கூடுதல் விளக்கங்கள் அளிப்பதும் நாள் மற்றும் விவரங்கள் பற்றி விவாதிப்பதுமாக அப்படியொரு நல்ல பொழுது அவர்களுக்கு அமைந்தநிலையில், அவர்களுக்கிடையில் புகுந்து தடைப்படுத்தவோ அல்லது அவர்களை அப்படியே விட்டுவிட்டுக் கிளம்பவோ லொரேட்டாவுக்கு மனமில்லை.

அதுவே அவள் அங்கு செல்வதை நல்லதென உணரவும் செய்தது. ஏனெனில் அவளைப் பார்ப்பதில் அந்த இருவரும் அவ்வளவு மகிழ்ச்சி கொண்டார்களே! ஆனாலும் சில வேளைகளில், மிகுதியாக க் களைப்புற்றிருக்கும்போதோ அல்லது வேறு ஏதேனும் செய்யவேண்டியதிருக்கும்போதோ அங்கு போகாமலிருக்கலாமேயென உணர்வாள். கடைசியில் அவள், மறுநாள் காலையில் மிகவும் கடினமாயிருப்பதால், அவ்வளவு பின்னேரத்துக்கு அவள் தங்கமுடியாதெனக் கூறுவாள். ஞாயிற்றுக்கிழமை காலைக்கும் மதியத்துக்கும் இடைப்பட்ட பிரஞ்சுக்கு வா என்றாள்.

காலநிலை நல்லதாயிருக்கும்போது, அவர்களின் முன்பக்கத் தாழ்வாரத்தில் செடிகளும் பூக்களுமாகச் சூழ்ந்திருக்க, மேசை அமைத்து அதில் உண்டனர். பறவை உண்கலங்களில் அவர்கள் உணவினை இடுவதால் நூற்றுக்கணக்கான பறவைகள் அங்கு நேராகவே வந்தமர்ந்தன.

குளிர் அதிகமாகும்போது அவர்கள் உள்ளுக்குள்ளேயே இரும்பு அடுப்பில் சமைத்து அங்கேயே உண்டனர். அடுப்புக்குத் தேவையான விறகினை சாம், அவராகவே கீறியெடுத்து நெருப்பினைக் கவனித்துக்கொண்டார். அவர்கள் சிறுவகை அப்பம் அல்லது சாமின் சிறப்பு ஆம்லெட் சாப்பிட்டார்கள்; சிலவேளைகளில் மாவைக் கொதிக்கவைத்துச் செய்யும் பேகல் ரொட்டியும் அதனுடன் சல்மான் மீனின் வயிற்றுப்பகுதி மென்தசையோடு சேர்த்துண்ணும் லாக்சும் கொண்டுவருவாள்.

சாம் கதைகள் சொல்லச் சொல்ல, அன்னா அவற்றுக்குத் திருத்தமும் விளக்கங்களும் அளிக்க, ஒவ்வொரு மணி நேரமும் செல்லச் செல்ல, நாளும் கடந்துபோகும். சிலநேரங்களில் முன்பக்கத் தாழ்வார வெயிலில் அல்லது அடுப்பின் இதமான வெம்மையில் விழித்திருப்பது மிகவும் கடினமாகிவிடும்.

அவர்களின் மெக்சிகோ வீடு கான்கிரீட் செங்கல்களால் கட்டப்பட்டது; ஆனால், உத்தரங்களும் முன்பக்கக் கொடுக்கல் வாங்கல் இடங்களும் நிலையடுக்குகளும் தேவதாரு வகை செடார் மரத்தாலானவை. முதலாவதாக பெரிய அறை – அடுக்களை மற்றும் வசிப்பறை – கட்டப்பட்டது. அவர்கள் கட்டிடம் கட்டும் முன்பாகவே செடிகள், மரங்கள் நடத்தொடங்கியிருந்தனர். வாழை, இலந்தை வகைப் பிளம், ஜகரண்டா மரங்கள். அடுத்த ஆண்டு படுக்கையறை ஒன்றினைக் கட்டிப் பின் பல ஆண்டுகள் கழித்து மற்றொரு படுக்கையறையும் அன்னாவுக்காக ஒரு ஓவிய அறையும் அமைத்தனர்.

படுக்கைக் கட்டில்கள், வேலைசெய்வதற்கான விசுப்பலகைகள் மற்றும் மேசைகள் அனைத்தும் செடார் மரங்கள். மெக்சிகோவின் மற்றொரு மாநிலத்தின் களங்களில் பணியாற்றிய பின்னர் அவர்கள் அந்தச் சிறிய வீட்டிற்கு வந்தனர். வீடு எப்போதும் தண்மையாகவும் செடார் வாசனையோடும் ஒரு பெரிய செடார் பெட்டியைப் போலிருந்தது.

அன்னாவுக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டதில் அவள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவேண்டியதாயிற்று. நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், அவள் இல்லாமல் சாம் எப்படிச் சமாளிப்பாரென்று, அவள் நினைவு முழுவதும் சாம் மீதுதானிருந்தது. வேலைக்குச் செல்லும் முன்பாகச் சென்று, சாம் மாத்திரை மற்றும் காலை உணவு சாப்பிடுவதைக் கவனித்துக்கொள்வதாகவும் வேலை முடிந்து வந்த பின்னர் இரவு உணவு சமைத்துக்கொடுப்பதாகவும், அவரை மருத்துவமனைக்கு அவளைப் பார்க்க அழைத்து வருவதாகவும் லொரேட்டா அன்னாவுக்கு உறுதிகூறினாள்.
இதில் அநியாயம் என்னவெனில், சாம் பேசவேயில்லை. லொரேட்டா அவருக்கு உடைமாற்ற உதவும்போது அவர் படுக்கையின் ஒரு ஓரமாக நடுங்கிக்கொண்டு அமர்ந்திருந்தார்.

எந்திரத்தனமாக அவர், காலை உணவுக்குப் பின் மாத்திரையை விழுங்கி, அன்னாசிச் சாற்றினைக் குடித்துவிட்டு கவனமாக வாயைத் துடைத்துக்கொண்டார். மாலையில் அவள் வரும்போது முன்பக்கத் தாழ்வாரத்தில் நின்று அவளுக்காகக் காத்துக்கொண்டிருந்தார்; முதலில் மருத்துவமனைக்குப் போய் அன்னாவைப் பார்த்துவிட்டுப் பிறகு இரவு உணவினை உண்ணலாமென்றார்.

அவர்கள் மருத்துவமனைக்குச் சென்றபோது, அன்னா, அவளது நீண்ட வெள்ளைத் தலைமுடி ஒரு சிறுமியினுடையதைப் போல் இரட்டைச் சடையாகத் தொங்க, வெளிறிக் கிடந்தாள். நரம்பு வழியாகக் குளுகோசும் மருந்தும் ஏறிக்கொண்டிருக்க, உயிர்வளியும் செலுத்தப்பட்டுக்கொண்டிருந்தது.

அவள் பேசவில்லை; ஆனால், புன்னகைத்தாள். சாம், ஒரு சுமை துணி துவைத்ததாகவும், தக்காளிக்குத் தண்ணீர் பாய்ச்சியதாகவும், பீன்ஸ் செடிகளுக்கு மண் அணைத்ததாகவும், சமையல் பாத்திரங்களைக் கழுவி வைத்ததாகவும் லெமனேடு தயாரித்ததாகவும் சொல்லிக்கொண்டிருந்தபோது, அவள் சாமின் கையைப் பற்றிக்கொண்டாள். அவர் மூச்சுவிடாமல் ஒவ்வொரு மணித்துளியும் என்ன செய்தாரென்று பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் கிளம்பும் போது, அவர் தடுக்கித் தள்ளாடவே, லொரேட்டா, அவரை இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள வேண்டியிருந்தது.

காரில் வீட்டுக்குச் செல்லும்போது, அவர் மிகவும் கவலைப்பட்டு அழுதார். ஆனால், அன்னா வீட்டுக்கு நல்லபடியாகத் திரும்பி வந்தாள்; தோட்டத்தில்தான் வேலைகள் நிறைய இருந்தன. அடுத்த ஞாயிறு அன்று பிரஞ்ச் முடித்தபின்பு லொரேட்டா தோட்டத்தில் களையெடுத்து, கறுப்புப் பேரிக்கொடிகளை வெட்டினாள். உண்மையிலேயே அன்னா நோய்வாய்ப்பட்டுவிட்டால், என்னவாகுமென லொரேட்டா கவலைப்பட்டாள்.

இந்த நட்பில் அவளின் இடம் எது? அந்த இணையர் ஒருவரையொருவர் சார்ந்திருப்பதும், அவர்கள் பாதிப்புக்குள்ளாகும் பெரும் அபாயத்திலிருப்பதும் அவளை துயர்கொள்ளச் செய்ததுடன் அவள் நெஞ்சை உருக்கவும் செய்தது.

அவள் வேலைசெய்துகொண்டிருக்கும்போதே இந்தச் சிந்தனைகள் அவள் மண்டைக்குள் ஓடிக்கொண்டிருந்தன; குளிர்ந்த கறுப்பு மண்ணும் அவள் முதுகில் பட்ட வெயிலும் அவளுக்கு இதமாக இருந்தன. பக்கத்துப் பாத்தியில் களையெடுத்துக்கொண்டிருந்த சாம் அவருடைய கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தார்.

அடுத்த ஞாயிற்றுக் கிழமை லொரேட்டா அவர்களுடைய வீட்டுக்குத் தாமதமாகச் சென்றாள். அவள் அதிகாலையிலேயே எழுந்துவிட்டிருந்தாள் தான், இருந்தாலும் அவள் முடிக்கவேண்டிய வேலைகள் நிறைய இருந்தன. அவள் உண்மையில் வீட்டிலேயே இருக்க விரும்பினாள்; ஆனால், அவர்களை அழைத்து அவர்களிடம் அங்குசெல்வதை ரத்துசெய்வதாகக் கூறுகின்ற இதயம் அவளுக்கில்லை.

வழக்கம்போல் முன் வாயிற் கதவு தாழிடப்பட்டிருக்கவே, அவள் பின்பக்கப் படிக்கட்டு வழியாகச் செல்ல தோட்டத்திற்குள் நுழைந்தாள். தோட்டத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காக உட்புறமாக நடந்துசென்றாள். தக்காளி, மஞ்சள் பூசணி, பனிக்காலப் பட்டாணியாகப் பசுமை நிறைந்து விளங்கியது. மயக்கத்தில் கிடந்த பட்டாணி.

அன்னாவும் சாமும் மேல்மாடி முன்மாடத்தில் வெளிப்புறமாக அமர்ந்திருந்தனர். லொரேட்டா அவர்களை அழைக்கலாமென எண்ணினாள்; ஆனால் அவர்கள் தீவிர உரையாடலிலிருந்ததாக அவளுக்குத் தோன்றியது.

”அவள் இதற்குமுன் இதுபோல் பிந்தியதே இல்லை. ஒருவேளை வரமாட்டாளோ.”

“ ஓஹ், வருவாள்,…இந்த காலை நேரங்கள் அவளுக்கு மிக முக்கியமானவை.”

“ ஐயோ பாவம். அவள் தனிமையில் தவிக்கிறாள். அவளுக்கு நாம் தேவைப்படுகிறோம். நாம்தான் அவளுடைய ஒரே குடும்பம்.”
”நிச்சயம் அவள் என் கதைகளை ரசிக்கிறாள். அன்பே, இன்றைக்குப் பார்த்து அவளுக்குச் சொல்வதற்கென எந்த ஒரு ஒற்றைக்கதைகூட நினைவிற்கு வரமாட்டேனென்கிறது.”

“எதாவது வரும்……”

“ஹல்லோ! வீட்டில் யாராவது இருக்கிறீர்களா?” என அழைத்தாள், லொரேட்டா.

***

அழகைப் போல, உண்மை உருவாக்கப்படுவதுமில்லை; தொலைந்து போவதுமில்லை – நிகானோர் பர்ரா ( நேர்காணல் ) / ஸ்பானிய மூலம் : லைலா குர்ரிரோ [ Leila Guerriero ] ஆங்கிலம் : பிரான்சிஸ் ரிடில் [ Frances Riddle ] / தமிழில் : தி.இரா.மீனா

நிகானோர் பர்ரா

நிகானோர் பர்ரா

“Singer Without a Name” என்ற படைப்புடன் அறிமுகமான நிகானோர் பர்ரா பிரளயம், கர்ஜனை,காற்று என்று இலக்கிய உலகில் பல சித்தரிப்புகளுக்கு ஆளான பெருமை கொண்டவர். கம்பளியால் சுற்றப்பட்ட ஒரு சாய்வு நாற்காலியில் உட்கார்ந்திருக்கிறார்.டெனிம் சட்டை, ஸ்வெட்டர் ,பாண்ட் அணிந்து. அவருக் குப் பின்னால் ஒரு நகரும் கதவுடைய பால்கனி .அதில் இரண்டு நாற்காலி கள். அப்பகுதி செடிகளாலும் ,புதர் போன்ற அமைப்பாலும் மூடப்பட்டிருக்கி றது. பிறகு பசிபிக்கடல் அலைகளுடன்.
மேலே , மேலே …

அவர் ஒரு மனிதன்.ஆனால் வேதாளமாக ,கதிகலக்கும் எரிமலையின் பேரொ லியாக ,.எரிமலை ஏற்படுவதற்கு முன்னதான இறுக்கமாக இருக்கலாம். பார்த்தவுடன் கையில் கம்பளிக் குல்லாயுடன் எழுந்து நின்று..
மேலே ..மேலே.. தொடர்ந்து
சான்டியாகோவிலிருந்து 200 கிமீ தொலைவிலுள்ள லாஸ்க்ரூஸ் லிங்கன் தெருவிலுள்ள நிகனார் பர்ராவின் வீட்டிற்குப் போவது அப்படியொன்றும் கஷ் டமாயில்லை.எது கடினமானது என்றால் அவரை அடைவதுதான்..

மேலே ..மேலே ..
அவருடைய முடி கந்தகத்தின் வெள்ளையாயிருந்தது.மீசையும் நீண்ட கிருதா வும். பூமியின் உருவாக்கமான பாறை, கிளைகள் போல எந்தச் சுருக்கமு மில்லாததாக அவர் முகத்தின் உருவாக்கம். தண்ணீரால் சுத்தம் செய்யப் பட்ட உறுதியான இரண்டு வேர்கள் போலக் கைகள்.

நிகானோர் பர்ரா:

இரண்டாம் உலகப் போர் தொடக்கதின் போது இருபத்தி ஐந்து வயது, அவர்கள் ஜான் லென்னனைக் கொன்றபோது அறுபத்தி ஆறு வயது,விமானங்கள் வர்த்தக மையத்தைத் தாக்கிய போது எண்பத்தியேழு வயது.

பசிபிக் கடல் துறைமுகம் அருகே உள்ளடங்கிய சில நகரங்களில் லாஸ் க்ரூஸஸ் ஒன்று.இரண்டு மாடிகளைக் கொண்ட நிகானோர் பர்ராவின் வீடு கடலை எதிர் கொண்ட அமைப்புடையது.யாரும் எளிதாய் தொட்டுவிட முடியாதபடி வீட்டின் முன்பகுதியில் ஏராளமான செடிகள் அடர்த்தியாய் வளர்ந்திருக்க, “Antipoetry ” என்பது சுவரடி ஓவிய ஒப்பனையாகப் பதிக்கப் பட்டிருக்கிறது..

“ஆமென்,ஆமென்” என்று சிலுவைக் குறியிட்டு சொல்கிறார்.மேஜையில் Complete Works இருக்கிறது. எண்பதுகளின் பிற்பட்ட காலகட்டத்தில் அவர் பேட்டிகள் கொடுப்பதை நிறுத்திவிட்டார்.சிறிதும் எதிர்பார்க்காத நகர்வை நோக்கி உரையாடல் போய் விடுமளவிற்கு மிக நேரான கேள்விகளை எதிர்நோக்குவார்.தலைப்புகள் மீண்டும் மீண்டும் விவாதிக்கப்படும் அல்லது எங்கிருந்தோ வந்து விழும்.பேச்சுப் பொருள் வியப்பூட்டும் வகையில் இணையும்; அவராகவே தொடங்கும் பேச்சு..

’தெற்குப் பகுதிமக்கள்.அவர்களை எப்படி அழைப்பீர்கள்? சைலியின் தெற்குப் பகுதி மக்களை எப்படி அழைப்பீர்கள்?”தலையை அசைத்துக் கொண்டு மீண்டும் ”சைலியின் தெற்குப் பகுதி மக்களை எப்படி அழைப்பீர்கள்?”என்று கேட்கிறார்.முன்பு ஓனஸ் அலாகால்ஸ் மற்றும் யகனேஸ் என்று அழைக்கப்பட்டனர்…”

செல்க்நம் ? [ Selk’nam? ]

“ஆமாம் அது செல்க்நம். ஒரு வரியிருக்கிறது.நிலத்தின் நெருப்பு வெளியேறிக் கொண்டிருக்கிறது.ஆசிரியர் Francisco Coloane.அவரைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? யாரென்று தெரியுமா?”

சிலி எழுத்தாளர்?

மிகச்சிறந்த வரி.ஆனால் அவர் அன்பில்லாத வகை மனிதர். பொறுக்க முடி யாதவர். மோசமான எழுத்தாளரும் கூட”
Tierra del Fuego விற்கு எப்போதாவது போனதுண்டா?

“என்பேரன் கிறிஸ்டோபல் டோலோவுடன் அங்குபோயிருக்கிறேன்.அவனுக்குப் பதினெட்டு வயதிருக்கலாம்.வியப்பிற்குரிய சில வரிகளின் ஆசிரியர் அவன். ஒருமுறை அவன் பள்ளியின் முதல்வர் அவன் தாயை அவசரமாக அழைத் திருந்தார்.ஏன்?வருகைப் பதிவேட்டின் போது கிறிஸ்டோபல் பெயரை அழைத்தபோது அவன் பதில் சொல்லவில்லையாம்.”நான் அழைத்தபோது நீ ஏன் பதில் சொல்லவில்லை “?”என்று ஆசிரியை கேட்டாராம்.”நான் சொல்ல முடியாது.ஏனெனில் இனிமேல் என் பெயர் கிறிஸ்டோபல் இல்லை.இப்போது என் பெயர் ஹாம்லெட் “என்றானாம்.ஒரு நாள் அவன் இங்கு வந்தான்.” நான் ஹாம்லெட்”என்றேன். பதிலில்லை.” ஹாம்லெட் ,நான் உன்னை கூப்பிட்டுக் கொண்டேயிருக்கிறேன்.பதிலேயில்லையே”என்றேன். “என் பெயர் இனிமேல் ஹாம்லெட் இல்லை.என் பெயர் லேரட்ஸ் “என்றான்.அதற்குப் பிறகு நான் இலக்கியம் எழுதுவதை விட்டுவிட்டேன்.குழந்தைகள் சொல்லும் விஷயத்தை மட்டும் எழுதுகிறேன்”

இது நகைச்சுவை போலத் தெரியலாம். ஆனால் இல்லை.தனது பேரக் குழந் தைகள் அல்லது தன் வீட்டைப் பலகாலம் கவனித்து வந்த ரோசிட்டா அவந் தனோ சொல்வதைக் குறித்துக் கொண்டு எழுதுகிறார்;அல்லது தன்னைச் சந்திக்கிறவர்கள் சொல்வதை.அவைதான் எளிமையான கவிதைகளாக உருவா கின்றன.

“எனக்கு டோலோவின் வரிகள் பிடித்துள்ளது.நான் சொல்வது அடியூடு.. அடி யூடு. அது மீத்திறனான தன்முனைப்பல்ல. தன்முனைப்புமல்ல. மீத்திறனல்ல.. அடியூடு என்பதை எப்படிச் சொல்வீர்கள்?”

“அடையாளம்?

“ஆமாம்.அதுதான்.அடையாளம் என்று கூட சொல்லமுடியாது..ஆனால் கேளுங் கள்.ஊர்வன வகைக்கு நீங்கள் செல்ல வேண்டியதில்லை.பல நாடுகளில் ஊர் வன வகையேயில்லை.இந்தியாவிற்குப் போயிருக்கிறீர்களா? குழந்தைகள் கூட முதலைகள் போல இருப்பார்கள்.அங்கு மேற்கத்தியப் பார்வையில்லை. நான் பத்து தினங்கள் அங்கிருந்தேன்.எனக்கு மனுவின் சட்டங்கள் தெரியாது. எனக்கு மனுவின் விதிகள் தெரிந்திருந்தால் நான் அங்கு தங்கியிருப்பேன். ஏனெனில் மனுவின் விதிகளைத் தாண்டி எதுவுமில்லை.மனுவிதியின் கடைசி வரி இப்படி அமைகிறது ஏன் என்று ஒருவர் தன்னைக் கேட்டுக் கொள்ள வேண்டும்?இருப்பை விடத் தன்னைத் கீழ்ப்படுத்திக் கொள்வது எதுவுமில்லை”

அவர் அண்ணாந்து உத்தரத்தைப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தார்.” மனுவின் விதிகள் சொல்வது :மனிதனின் வாழ்வு இரண்டு மூன்று நிலைகளில்லை, நான்கு நிலைகளில்.பிரம்மசர்யம்,கிரகஸ்தம்,வானப்பிரஸ்தம்.வானப்பிரஸ்தம்.. அதன் பொருள் என்ன?முதல் பேரக்குழந்தை பிறந்தவுடன் மனிதன் உலக வாழ்விலிருந்து ஓய்வு பெறுகிறான்.உலகத்தைத் துறக்க வேண்டுமென்பது முதலில் பெண்ணைத் துறப்பது,பெண்ணில்லாத நிலை. குடும்பமில்லாத நிலை. பருப்பொருள் இல்லாத நிலை,புகழைத் தேடாத நிலை”

download

“நான்காவது பருவமென்பது?

ஓ.. நான்காவது பருவம்.சந்நியாசம்.இந்த பருவங்களைக் கடந்தவர்கள் இறக் கும் போது சன்மானம் பெறுவார்கள்.யார் கடக்கவில்லையோ அவர்கள் தண்ட னைக்குள்ளாவார்கள்.அவர்கள் கரப்பான் பூச்சியாகவோ எலியாகவோ மீண்டும் பிறப்பார்கள்.சன்னியாசிகள் மீண்டும் பிறக்க மாட்ட்டார்கள்.ஏனெனில் இருப்பை விட தன்னைக் கீழ்ப்படுத்திக் கொள்வது எதுவுமில்லை.மிகச் சிறந்த சன்மானமென்பது வரைபடத்திலிருந்து அகற்றப்படுவதுதான்.அதன் பிறகு இந்தியாவை விட்டு வெளியேறி லாக்ரூஸ்ஸ் வாருங்கள்”

“உங்கள் வீட்டின் தோற்றம் மிக அழகாக இருக்கிறது!”

“மோசமாயில்லை.இது இடையனின் [ huaso] பதில்.பொதுவாக வீட்டின் சொந்தக்காரரை அறிய வேண்டுமென்றால் நல்லதாக ஏதாவது சொல்ல வேண்டும். அவர் பதிலுக்கு வழக்கமாக என்ன சொல்வார்?”ஆமாம்.மிக அழகாக இருக்கிறது. ஆனால் மாடியிலிருந்து பார்த்தால் இன்னும் அழகாக இருக்கும் என்பார். “இது மோசமாயில்லை “என்று இடையன் சொல்வான். ஹைனாவின் கதையை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேனா?மலைகளில் இருக்கும் காட்டுப் பூனை”
நான் காட்டுகிறேன்” பர்ரா பால்கனியின் கதவைத் திறந்து காட்டுகிறார். பின்புறத் தோட்டம் தெரிகிறது.” என் தோட்டமுறை மிக எளிமையானது.

எதையும் தொடாத உள்ளடக்கம் அதனுடையது.எல்லாமும் கிளைகளாலும், செடிகளாலும் நிரம்பியிருக்கிறது.ஆங்கிலேயர்கள் இப்படித்தான் வைப்பார் கள்.இதற்கு மாறாக ஸ்பானியர்கள்”இங்கு ஒரு தோட்டத்தை உருவாக்கப் போகிறோம்”என்பார்கள்.இயற்கையின் அற்புதத்தை நீக்கிவிட்டு சிறுபாதை களை உருவாக்குவார்கள். அங்கு தெரியும் ஹைனாவைப் பாருங்கள்.மூர்க்கம், பகைமை,நம்பிக்கையின்மை என்று எல்லாம் உடையவளாக அவள் இருந்த தால் நெருக்கமாக வராமலிருந்தாள்.ஆனால் ஒருநாள் நான் அவளுடைய நண்பன் என்று முடிவு செய்து,எனக்கு மிக அருகில் வந்தாள் .நான் அவளைத் தொட முடிந்தது.அடுத்தநாள் அவள் இறந்து போனாள்.நான் தொட்டது அவ ளைத் தொந்தரவுக்குள்ளாகியது.தான் கற்பழிக்கப்பட்டதாக நினைத்தாள். நாங் கள் அவளுக்கு இறுதிக்கடன்கள் செய்தோம்.அவள் அங்கு புதைக்கப்பட்டிருக்கி றாள்.” அவர் நிலத்தின் ஒரு பகுதியைக் காட்டினார். நெருக்கமாக. நம்பிக்கை யாக உலகின் உள்பகுதிக்குப் போவதால் உண்டாகும் அபாயங்களை எச்சரிப்பது போல.

Buenos Aires சென்றிருக்கிறீர்களா?

“நான் Buenos Aires எத்தனை முறை சென்றிருக்கிறேன் என்று எனக்குத் தெரி யாது.ஆனால் எப்போதும் அதிர்ஷ்டமற்றவனாகவே இருந்திருக்கிறேன்.ஒரே ஒரு முறை அதிர்ஷ்டம் என் பக்கமிருந்தது.ஒரு புத்தகக் கடைக்குப் போயி ருந்தேன்.குவியல் போலப் புத்தகங்களை எடுத்தேன்.அவற்றிற்கு எவ்வளவு பணம் தரவேண்டுமென்று கேட்டபோது “எதுவும் தரவேண்டாம். நிக்கனோர் பர்ராவிடம் எப்படி பணம் கேட்கமுடியும்?”என்று பதில் தந்தார்கள்.ஒரு முறை Borges இடம் சிலியன் கவிதைகள் பற்றிய அவரது அபிபிராயத்தைக் கேட்ட னர். ”சிலியன் கவிதையா?அது என்ன?”என்று பதில் தந்தவர். நிகானோர் பர்ராவைப் பற்றிக் கேட்ட போது” மோசமான அந்தப் பெயரில் ஒரு கவிஞன் இருக்கமுடியாது “என்றார்.

“உங்களின் Complete Works திருப்தி தருவதாக உள்ளதா?”

“எனக்கு வியப்பாக இருக்கிறது.நான் அந்தக் கவிதைகளைப் படிக்கிறேன்.அதன் படைப்பாளியாக என்னை உணரவில்லை.நான் எதனுடைய ஆசிரியராகவும் என்னை நினைக்கவில்லை.ஏனெனில் நான்காற்றில் மீன் பிடிப்பவனாகவே இருந்திருக்கிறேன்.அவர்கள்ஆப்படித்தான் சொன்னார்கள;”காற்றில் கலந்த பொருட்கள்” மென்மையான வெளிச்சத்தில் பைனுக்கும்[ pines ]கடலுக்கும் இடையில் கருங்காரை மென்மையாக நழுவுகிறது. “அது மிக அழகு. இல்லையா?”

நீங்கள் வாழவேண்டும் என்ற விருப்பத்தை ஏற்படுத்துவது?”
அல்லது,” மாறாக சாகும் விருப்பத்தை ஏற்படுத்துவது.” தூங்கும் விலங்கின் அமைதியான சுவாசம் மாலை நேரத்தில். அவர்களால் எல்லாவற்ரையும் செய்ய முடிந்த்து.இந்தச் சிக்கலைத் தீர்க்கமுடியவில்லை”

“என்ன சிக்கல்?”

“இறப்பு என்னும் சிக்கல்.அவர்கள் மற்ற சிக்கல்களைத் தீர்த்து விட்டனர்.ஆனால் அவர்கள் ஏன் அதில் கவனம் காட்டக் கூடாது?”

எதிர்க்கவிதைகள் –பர்ராவின் பார்வை

கவிதைகளும் ,எதிர்க் கவிதைகளும் – நகைப்பிற்கிடமான நவீன வாழ்க்கை யின் காரணமற்ற போக்குகளை நகைச்சுவை பாணியில் மிகத் தெளிவான மொழியில் விளக்குவதாக அமைந்தன. எதிர்க்கவிதை என்பது- தன்னையும் ,மனிதத்தையும் வேடிக்கைக்குள்ளாக்கிக் கொண்டு கவிஞன் நகைச்சுவை, முரண்,கேலி ஆகியவற்றை வெளிப்படுத்துவது,கவிஞன் அங்கு பாடுவதில்லை ஆனால் கதை சொல்கிறான்—அதுதான் எதிர்க் கவிதை எதிர்க்கவிதையின் உத்தி என்பது அவரைப் பொறுத்தவரை சிரிப்பும் கண்ணீரும்- தான்

“நான் கவிதையை எப்போதும் சொற்பொழிவு மேடையில் பேசும் பாதிரியின் குரலோடு தொடர்பு படுத்துகிறேன். மனிதர்கள் பேசுகிறபோது கவிஞர்கள் இசைக்கின்றனர் “”பறவைகள் பாடிக் கொண்டிருக்கட்டும்”என்று ஒருமுறை சொன்னார்.

வாசகனுடனான உறவைப் பற்றிச் சொல்லும் போது ”நகைச்சுவை தொடர்பை எளிமைப்படுத்துகிறது.நீங்கள் நகைச்சுவை உணர்வை இழக்கும்போது உங்கள் கைத்துப்பாக்கியை ஏந்தத் தொடங்குபவராகிறீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கட்டும்” என்கிறார்.

சில கவிதைகள்;

சோதனை
எதிர்க்கவிஞன் என்பவன் யார்?
சவப்பெட்டியையும் அஸ்திப் பேழையையும் கையாள்பவனா?
தன்னைப் பற்றி நிச்சயமாக அறியாத ஒரு படைத்தளபதியா?
எதையும் நம்பாத ஒரு பூசாரியா?
எதையும் வேடிக்கையாக ,முதுமையையும் சாவையும் கூட
வினோதமாகப் பார்க்கும் நோக்குதையவனா?
உங்களால் நம்பமுடியாத ஒரு பேச்சாளனா?
பாறையின் முகட்டிலான ஒரு நாட்டியக் கலைஞனா?
எல்லோரையும் நேசிக்கும் ஒரு தற்பூசனைவாதியா?
நாற்காலியில் உறங்கும் ஒரு கவிஞனா?
ஒரு நவீனகால ரசவாதியா?
ஒரு வெளியறிவற்ற புரட்சியாளனா?
ஒரு சிறிய முதலாளித்துவனா?
ஒரு போலியானவன்?
ஒரு கடவுள்?
ஓர் அப்பாவி மனிதன்?
சைல் சான்டிக்கோவின் விவசாயி?
சரியான பதிலில் அடிக்கோடிடவும்
எதிர்க்கவிதை என்பதென்ன?
தேநீர் கோப்பையிலிருக்கும் கொந்தளிப்பா?
பாறையின் மேலிருக்கும் ஒரு பனித்துளியா?
தந்தை சால்வட்டிரா நம்புவது போல
தட்டில் குவிக்கப்படும் மனிதக் கழிவின் குவியலா?
பொய்க்காத ஒரு கண்ணாடியா?
எழுத்தாளர் சங்கத்தலைவரின் முகத்தில் விழும் ஓர் அறையா?
(கடவுள் அவரைக் காப்பாற்றட்டும்)
இளங்கவிஞர்களுக்கு ஓர் எச்சரிக்கையா?
உந்துதலில் இயங்கும் சவப்பெட்டியா?
வட்டத்தின் மையத்திலிருந்து தள்ளப்படும் ஒரு சவப்பெட்டியா?
மண்ணெண்ணையில் இயங்கும் சவப்பெட்டியா?
பிணமின்றி இருக்கும் இறுதிச்சடங்கு இடமா?
சரியான பதிலில் எக்ஸ் குறியிடுங்கள்.
கடவுளின் பிரார்த்தனை
சொர்க்கத்திலிருக்கும் எங்கள் பிதாவுக்கு
பலவிதமான பிரச்னைகள்.
தனது புருவ நெரிப்புகளுடன்
அவர் சாதாரண மனிதர்தான்.
எங்களைப் பற்றி அதிகம் கவலைப்பட வேண்டாம்.
உங்களிடத்தை சரியாக வைக்க முடியவில்லையென்று
நீங்கள் வருந்துவது எங்களுக்குத் தெரியும்.
நீங்கள் உருவாக்கும் ஒவ்வொன்றையும்
சாத்தான் அழித்து உங்கள் அமைதியைக் குலைக்கும் என்றறிவோம்
அது உங்களைப் பார்த்துச் சிரிக்கும்
ஆனால் நாங்கள் உங்களுடன் அழுகிறோம்.
பிதாவே கேடான தேவதைகளால்
சூழப்பட்டு உள்ளீர்கள்
உண்மையில்
எங்களுக்காக அதிகம் துன்புற வேண்டியதில்லை
கடவுளர்கள் பிழைசெய்யாதவர்களில்லை என்பதை
நாங்கள் அனைவரையும் மன்னிப்போம்

உண்மையில்
எங்களுக்காக அதிகம் துன்புற வேண்டியதில்லை
கடவுளர்கள் பிழைசெய்யாதவர்களில்லை என்பதைக் கருத்திலிறுத்துங்கள்
நாங்கள் அனைவரையும் மன்னிப்போம்.
ஆரவாரக் கூச்சல் [ Lullabaloo]
பூங்காவில் ஒருநாள்
நான் நடந்து கொண்டிருந்த போது
ஒரு தேவதையைச் சந்திக்க நேர்ந்த்து.
கைகுலுக்க முயன்றபோது
தேவதை தன் காலைக் கொடுத்தது.
நீ ஓர் அற்பமான அன்னம் போல
உணர்ச்சியற்ற கடப்பாரை போல
பருத்த ஒரு வாத்துபோல
அழகற்று உன்னைப் போல என்று சொல்ல
தேவதை வாளால் வெட்ட முயன்றது.
நீ உன் வழியில் செல்
உன் நாள் நன்றாக இருக்கட்டும்
கார் மோதி இறந்து போ
ரயில் அடித்து ஒழி
இதுதான் தேவதையின் கதை முடிவு

உதவி
“எப்படி நான் இங்கு வந்தேனென்று தெரியவில்லை;
என் தொப்பி என் வலதுகையிலிருந்தது
நீங்கள் விரும்பியதுபோல் நான் மகிழ்ச்சியாக ஓடிக்கொண்டிருந்தேன்
என்னை சந்தோஷப் பித்தனாக்கிக் கொண்டிருக்கும்
மின்னுகிற ஒரு பட்டாம்பூச்சியைப் பின்தொடர்ந்தபடி.

திடீரென்று வேகம்! நான் இடறினேன்
தோட்டத்திற்கு என்ன ஆனதென்று எனக்குத் தெரியவில்லை
முழுவதும் துண்டுகளாகிப் போனது.
என் மூக்கிலும் வாயிலும் இரத்தம் கசிந்தது.
என்ன நடக்கிறதென்று நிஜமாகவே எனக்குத் தெரியவில்லை
எனக்கு ஏதாவது உதவி செய்யுங்கள்
அல்லது என் தலையை குண்டால் கொய்யுங்கள்.
ரோசிட்டா அவென்தனோ [ Rosita Avendaño ]
“அவர்கள் என்னைப் பள்ளிக்கு அனுப்ப முயன்றனர்
அங்கு நோயாளிக் குழந்தைகள்
ஆனால் என்னால் அவர்களைப் பொறுக்க முடியாது
ஏனெனில் நான் நோயாளிச் சிறுமியில்லை
என்னால் தெளிவாகப் பேசமுடியாது
ஆனால் நான் நோயாளிப் பெண்ணில்லை”
எதிர்க் கவிதை
மிகத் தாமதமாவதற்கு முன்பே
உலகின்
முதலாளிகளும் சமதர்மவாதிகளும் இணைந்துவிடுகின்றனர்.

••

இந்த வகையான கவிதைகள் அரசியல் நடுவுநிலை தவறாத பாங்குடைய வையாக அமைவதால் அவரை கேட்டிற்கு ஆட்படுத்த முடியாத சுயாதீன மானவர் என்று பர்ராவை Chilean poet Raul Zurita, குறிப்பிடுகிறார்.

•••

நன்றி: Searching for Nicanor என்ற தலைப்பில் இப்பேட்டி Berfrois இணைய
இதழில் November 3, 2014 இடம் பெற்றுள்ளது.

•••••

ஒரு மொழிபெயர்ப்பாளரின் வாக்குமூலம் – லதா ராமகிருஷ்ணன்

download (21)

வணக்கம். அமெரிக்க எழுத்தாளர் JACK LONDON எழுதிய A PIECE OF STEAK என்ற சிறுகதை (குறுநாவல் என்றும் சொல்லலாம்) என் மொழிபெயர்ப்பில் புதுப்புனல் வெளியீடாக விரைவில் பிரசுரமாக உள்ளது. பல வருடங்களுக்கு முன்பு இந்தக் கதையை கவிஞர் வைதீஸ்வரன் கொடுத்து என்னை மொழிபெயர்க்கச் சொன்னார். மொழிபெயர்த்து முடித்து ஒரு சிற்றிதழாளரிடம் அனுப்பிவைத்தேன். அது வெளியாகவேயில்லை. அதற்குப் பின், வீடு மாற்றும்போது தொலைந்துவிட்டது என்று அந்த இதழின் ஆசிரியர்─உரிமையாளரிடமிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. என் மொழிபெயர்ப்புப் பகுதியை நகலெடுத்துவைக்கவில்லை. இப்போது மீண்டும் மொழிபெயர்த்து முடித்தேன். ஒருவகையில் இதுவும் நன்மைக்கே என்று தோன்றுகிறது.

குத்துச்சண்டைக் களத்தில் சாம்பியனாக விளங்கிய ஒருவர், அந்த நாட்கள் போய்விட்ட நிலையில், அந்த இளமை போய்விட்ட நிலையில், இன்று பந்தயத்தில் தோற்போம் என்று நிச்சயமாகத் தெரிந்தும் தோற்பவனுக்குக் கிடைக்கும் சிறு தொகைக்காக குத்துச்சண்டைப் பந்தயத்தில் கலந்துகொள்வார். பந்தயத்தின் போதும், அதற்கு முன்பும் பின்பும் அந்த குத்துச்சண்டை வீரரின் மனவோட்டத்தை பிரதிபலிக்கும் கதை இது. இதைப் படித்தபோதும், மொழிபெயர்த்தபோதும் எனக்குப் பிடிபடாத பல வாழ்க்கைத்தத்துவங்களை கதையிலிருந்து கவிஞர் வைதீஸ்வரன் அடையாளங்காட்டியபோது பிரமிப்பாக இருந்தது.

வரவிருக்கும் இந்தச் சிறு மொழிபெயர்ப்பு நூலுக்கு நான் எழுதியுள்ள சிறு ‘என்னுரை’ இது. வழக்கமாக ‘சொல்லவேண்டிய சில’ என்று தலைப்பிடுவது வழக்கம். ஒரு மொழிபெயர்ப் பாளரின் வாக்குமூலம் என்றும் இதைச் சொல்லலாம் என்று தோன்றுகிறது.

1980களில் அநாமிகா என்ற பெயரில் சிறுகதைகளும், ரிஷி என்ற பெயரில் கவிதைகளும், ல.ரா என்ற பெயரில் கட்டுரைகளும் எழுத ஆரம்பித்தவள் தற்செயலாகத்தான் மொழிபெயர்ப்பாளராக மாறினேன். நான் ஆங்கில இலக்கிய படித்திருந்ததும் இலக்கிய ரசனை கொஞ்சம் இருப்பதாக அடையாளங்காணப்பட்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். நான் பணி செய்துவந்த அலுவலகத்தில் சமூகப் பிரக்ஞை மிக்க தொழிற்சங்கத்தினர் புதிதாகப் பணிக்கு சேருபவர்களில் சிந்திக்கத் தெரிந்தவர்களை, எழுத்தாற்றல் மிக்கவர்களை எல்லாம் எளிதில் அடையாளங்கண்டுவிடுவார்கள். அவர்களிடம் தாம் நம்பும் சித்தாந்தங்களி னூடாய் சமூகப் பிரக்ஞையை விதைக்கத் தொடங்குவார்கள். நட்பு பாராட்டுவார்கள். அதே சமயம், அவர்களுடைய சிந்தனைப்போக்கிலிருந்து சற்றே விலகி சிந்தித்தால் உடனே ‘அமெரிக்க அடிவருடி’ என்ற பட்டம் கிடைத்துவிடும்! அப்படி ஆத்மார்த்தமாகவே நம்புகிறார்களா, அல்லது ஆளை ஒடுக்கும் ஆயுதமாக அந்த அடைமொழியைப் பயன்படுத்து கிறார்களா என்பது இன்றுவரை தொடரும் கேள்வி. அதையெல்லாம் மீறி நட்பு பாராட்டு வதும் அக்கறை காட்டுவதும் இயல்பாக நடந்துகொண்டிருக்கும்.

1990களில் பாட்னாவில் பெண்களுக்காக நடத்தப்பட்ட மாநாட்டில் பார்வையாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. மொழிபெயர்ப்பின் தேவையை உணரச்செய்த தருணங்களில் அதுவும் ஒன்று. பெண் முன்னேற்றத்திற்காகக் களப்பணியாற்றிவரும் எழுத்தறிவற்ற பெண்கள் தங்கள் அனுபவங்களை இந்தியிலும் தமிழிலும் மலையாளத்திலும் கன்னடத்திலும் எடுத்துச்சொல்ல அவற்றை சம்பந்தப்பட்ட பிராந்திய மொழிகளும் இந்தியும் ஆங்கிலமும் தெரிந்தவர்கள் அமர்வுகளின் இடைவேளைகளின் போது மொழிபெயர்த்து (முக்கியமாக சாராம்சத்தை எளிய மொழிவழக்கில்) மற்றவர்களுக்கு எடுத்துரைக்கவேண்டும். அங்குதான் மொழிபெயர்ப்பின் சமூகரீதியான பயனைப் புரிந்துகொள்ள முடிந்தது. (அத்தகைய மொழிபெயர்ப்புப் பணியே அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொள்வதாகச் சிலரிடம் செயல்படுவதையும் பின்னர் பலமுறை பார்க்க நேர்ந்திருக்கிறது.)

இலக்கியத்திலும் அப்படித்தான். நான் மதிக்கும் நட்பினர் தமிழில் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய எழுத்தாக்கங்களாக, புனைவு─–புனைவல்லாதது என இரண்டு பிரிவிலும் தருவதை அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க நான் தமிழில் மொழிபெயர்த்துத் தர ஆரம்பித்தேன். எழுத்தாளர்கள் கோபிகிருஷ்ணனும் ஸஃபியும் ANTI-PSYCHIATRYஐப் பற்றி என்னிடம் கொடுத்த மொழிபெயர்ப்புப் பிரதிகளை மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறேன். அவர்கள் மூலம்தான், அவர்கள் தந்த பிரதிகளின் மூலம்தான் உளவியல் சார்ந்த விஷயங்கள், அரசியலை நான் தெரிந்துகொண்டேன்.

அப்படித்தான், சில நண்பர்கள் மூலம் உலக இலக்கியப் படைப்புகள், போக்குகள் சிலவும் அறிமுகமாயின. அப்படி ஒருவர் மூலம் அறியக் கிடைத்த உலகத்தரமான படைப்பை இன்னொருவர் மொழிபெயர்க்கச் சொல்லும்போது அதை ஆர்வத்துடன் செய்திருக்கிறேன். ஆனால் அப்படிச் செய்தது முதலில் அந்தப் படைப்பாளியை எனக்கு அறிமுகப்படுத்திய நட்பினருக்கு உவப்பாக இருப்பதில்லை என்பதை (சம்பந்தப்பட்ட படைப்பை, படைப்பாளியைப் பற்றி அவர்களால் எழுதப்படும் கட்டுரைகளில் என் மொழிபெயர்ப்பைப் பற்றி எந்தக் குறிப்பும் இருக்காது!) போகப்போகப் புரிந்துகொள்ள நேர்ந்திருக்கிறது.

ஒரு படைப்பாளியின் படைப்புவெளியை முழுவதும் வாசித்து அறிந்திருந்தால் மட்டுமே அந்தப் படைப்பாளியின் எழுத்தாக்கங்களை செம்மையாகமொழிபெயர்க்க முடியும் என்ற கருத்து சிலரால் முன்வைக்கப்படும்போது, ‘அப்படியெனில் என்னிடம் ஏன் அந்த மொழிபெயர்ப்புப் பணியைத் தந்தார்கள், அந்த உலகத்தரமான படைப்பாளியை முழுவதுமாக நான் வாசித்திருப்பதான பாவனையை நான் கைக்கொள்ளவேண்டும், கைக்கொள்வேன் என்று எதிர்பார்த்தார்களா அல்லது என்னை sort of errand boy(or girl, to be more precise!) என்ற ரீதியில் மட்டுமே பணித்தார்களா என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை.

சிலர் தாங்கள் அறிமுகப்படுத்தும் உலகத்தரம் வாய்ந்த படைப்புகள், படைப்பாளிகள் மேல் அத்தனை உடைமையுணர்வோடு நடந்துகொள்வதையும் பார்த்திருக்கிறேன்.

வேறு சிலர் அந்நியமொழியிலிருந்து நேரடியாக தமிழில் மொழிபெயர்க்கப்படும்போது மட்டுமே மூலமொழிப் படைப்புக்கு நியாயம் செய்ய முடியும் என்று மேடைக்கு மேடை முழங்கக் கேட்டிருக்கிறேன். ஒருவகையில் அது உண்மையே என்றாலும் இன்னொரு வகையில் அதுவோர் reductionist theory ஆகச் செயல்படுவதையும் காணமுடிகிறது.

என்னளவில், மொழிபெயர்ப்பின் மூலம் நான் கற்றுக்கொள்கிறேன் என்பதே உண்மை. நான் மதிக்கும் சிலர் தமிழில் மொழிபெயர்க்கப்படவேண்டியதாக ஒரு பிரதியை என்னிடம் தரும்போது அப்படித் தருபவர்மேல் எனக்குள்ள நம்பிக்கை, அபிமானம் காரணமாக அந்தப் பணியை மேற்கொள்வது வழக்கம்.

சில பிரதிகளை மொழிபெயர்க்க மறுத்ததும் உண்டு. பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகும் பெண் ஒருத்தி அதில் ஆழ்மனதில் பரவசமடைகிறாள் என்பதாய் விரியும் ஒரு பிரதியை மொழிபெயர்த்துத்தரும்படி என்னிடம் கேட்கப்பட்டபோது அதைப் படிக்காமலேயே மறுத்திருக்கிறேன். ஒரு பெண்ணின் ஒழுக்கத்தைக் கொச்சைப்படுத்துவதாய் அமையும் வசைச்சொல், மாற்றுத்திறனாளியை மதிப்பழிக்கும் வசைச்சொல்லை அப்படியே மூலமொழியிலிருந்து மொழிபெயர்ப்பதை கூடுமானவரை தவிர்த்திருக்கிறேன். அது சரியா, தவறா என்ற கேள்வி மனதில் எழுந்துகொண்டேயிருந்தாலும்.

மொழிபெயர்ப்பாளர் சங்கத்தில் அங்கம் வகித்தபோது மொழிபெயர்ப்பின் அரசியல் குறித்து நிறைய விவரங்களை அறிந்துகொள்ள முடிந்தது. போலவே, அத்தகைய ‘அரசியல்’ அங்கும் நிலவியதையும் பார்க்கமுடிந்தது.

ஒரூமுறை தமிழின் குறிப்பிடத்தக்க திரைப்பட இயக்குனர் ஒருவர் இளம் நடிகை ஒருவர் மேடையில் ஆங்கிலத்தில் பேசியதற்கு மிகக் கடுமையாக அந்தப் பெண்ணைக் கண்டித்தார். ஆனால், அந்த மனிதர் எல்லா மேடைகளிலும் தப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசாமல் இருக்கவேமாட்டார். ஆங்கிலம் என்பதுகூட அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ளும் தந்திரமாக மற்றவர்களுக்கு மறுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் நிலையையும் அதிலுள்ள அரசியலையும் (both literal and symbolic) நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய, கவனப்படுத்த வேண்டிய தேவையிருக்கிறது என்றே எண்ணுகிறேன்.

நம்முடைய கண்ணோட்டங்கள், கோட்பாடுகளை கணக்கிலெடுத்துக்கொள்ளாமல் ‘பீச்சாங்கை வீச்சாக’ப் புறக்கணித்து, கேலியாகப் பார்த்து, எள்ளிநகையாடி ‘ஆனால், இவர்களின் உழைப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்’ என்ற உத்தியோடு எனக்கு மொழிபெயர்ப்புப் பணிகளைத் தருபவர்களையும், என் மொழிபெயர்ப்புகளை வெளியிடக் கேட்பவர்களையும் உரிய நேரத்திலோ, அல்லது காலதாமதமாகவோ அடையாளங்கண்டு அவர்களுக்கு என் மொழிபெயர்ப்புகளைத் தர மறுத்திருக்கிறேன்.

சிறுபத்திரிகை ஒன்றில் மொழிபெயர்ப்புக்கென தரப்பட்ட பிரதிகளையெல்லாம் செய்து கொடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த நிலையில் ஒருமுறை அதன் ஆசிரியர் முன்வைத்த கருத்து ஒன்றை மறுதலித்து நான் அனுப்பிய எதிர்வினை பிரசுரிக்கப் படவில்லை. (அதைப் பிரசுரித்து என் நிலைப்பாடு சரியில்லை என்று அம்பலப்படுத்தி யிருந்தால் அது வேறு விஷயம்.) மீண்டும் அதே கேள்வி எனக்குள் – Am I an errand boy?(or errand girl, to be more precise?) அதற்குப் பிறகு அதே சிற்றிதழ்க்காரர் சில பிரதிகளை மொழிபெயர்த்துத் தரும்படி கேட்டபோது “நான் உங்கள் எடுபிடியல்ல” என்று காட்டமாகக் கூறி காலத்திற்கும் அவருடைய விரோதியானேன். (அது குறித்து கவலை ஏதுமில்லை.)

கவிஞராக இருப்பதை விட, கதாசிரியராக இருப்பதை விட மொழிபெயர்ப்பாளராக இயங்குவதில் சீரான வருமானம் கிடைக்க வழியுண்டு என்று தெரிந்துகொள்ள நேர்ந்ததெல்லாம் சமீபகாலமாகத்தான். 2005இல் அரசுவேலையை விட்ட பிறகு, பணியிலிருந்தபோதே நிறைய விடுப்பு எடுத்திருந்ததால் முழு ஓய்வூதியம் கிடைக்காதுபோக, கிடைத்தது வீட்டுவாடகைக்கே போதாது என்ற உண்மையின் பின்னணியில் இலக்கியமல்லாத நிறைய பிரதிகளை தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து வருமானமீட்டுவது தொடங்கியது. இலக்கு வாசகர்களையும், கையிலுள்ள பிரதியில் இலக்குவாசகர்களிடம் எதை முதன்மையாகக் கொண்டுசெல்லவேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டே நம் மொழிநடை அமையவேண்டும் (குறிப்பாக, புனைவல்லாத பிரதிகளை மொழிபெயர்ப்பதில்) என்பது புரிந்தது.

1980களின் பிற்பகுதியில் எழுத்தாளர் க.நா.சுவின் குறிப்பொன்றை குமுதம் இதழில் பார்த்து அவருடைய கையெழுத்துப்பிரதிகளை எழுதித்தருவதிலும், அவர் சொல்லச் சொல்ல எழுதுவதிலும் என்னாலான உதவிகளைச் செய்துதரும் ஆர்வத்துடன் அவரைப் போய்ப் பார்த்தேன். அப்போது மயிலையில் தங்கியிருந்ததால் முடிந்தபோதெல்லாம் இரவுப்பணி முடித்த கையோடு காலையில் அவருடைய வீட்டிற்கும் செல்வேன். அவர் ஆங்கிலத்தில் எழுதியிருந்த புதினம் அவதூதரை தமிழில் மொழிபெயர்க்குமாறு என்னிடம் கொடுத்தபோது என் மொழித்திறனைப் பார்ப்பதற்காக அப்படிச் செய்கிறார் என்று நினைத்துக்கொண்டேன். என் மொழிபெயர்ப்பை செம்மை செய்து தன் பெயரில் வெளியிட்டுக்கொள்ளப்போகிறார் என்றே நினைத்தேன். சரியாக மொழிபெயர்க்க வராத வார்த்தைகளை முடிந்த அளவு தமிழில் மொழிபெயர்த்து மூல வார்த்தைகளை அவற்றின் அருகிலேயே அடைப்புக்குறி களுக்குள் தந்தேன். ஆனால் அந்த மொழிபெயர்ப்பை என் பெயரிலேயே நான் தந்த மாதிரியே பிரசுரித்துவிட்டார் க.நா.சு. அடைப்புக்குறிகளுக்குள் ஆங்கில வார்த்தைகள் தரப்பட்டிருந்தது அரிசியில் நெல் நெரடுவதுபோல் இருப்பதாக திரு.கோவை ஞானி அவர்கள் குறிப்பிட்டது சரியே என்று உணர்ந்தேன். மேலும், இப்படி சரிவரத் தெரியாத வார்த்தைகளையும் அடைப்புக்குறிகளுக்குள் தருவதன் மூலம் மொத்த புத்தகமுமே இப்படித்தான் தோராயமாக மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது போலும் என்ற எண்ணம் வாசக மனங்களில் ஏற்பட்டுவிடும். ’இனி நம் மொழிபெயர்ப்பை இறுதிவடிவமாகத்தான் எவரிடமும் தரவேண்டும் என்று எண்ணிக்கொண்டேன்.

சிறந்த படைப்பு என்று நண்பர்களால் பரிந்துரைக்கப்பட்டு மொழிபெயர்ப்புக்குத் தரப்பட்ட பிரதிகள் எனக்கு ஒரு வாசகராக ஏமாற்றமளித்த தருணங்களும் நிறையவே உண்டு. இருந்தும், முடித்துக்கொடுத்துவிடுவேன்.

ஒரு படைப்பின் மிகத் தரமான இரண்டு மொழிபெயர்ப்புகள் எதிரெதிர் அர்த்தங்களைத் தருவதாக அமையக்கூடுமென்பதை அன்னா அக்மதோவாவின் ஒரு கவிதைக்கான இரண்டு ஆங்கில மொழிபெயர்ப்புகள் உணர்த்தின. அது குறித்து என் அன்னா அக்மதோவா கவிதை மொழிபெயர்ப்பு நூலில் எழுதியிருக்கிறேன்.

சில சமயம் ஒருவருக்கு ஒரு விஷயம் குறித்த ஆழ்ந்த அறிவு இருக்கும். அதை மொழிபெயர்ப்பதற்கான போதிய மொழிப்புலமை இருக்காது. எனக்கு சம்பந்தப்பட்ட விஷயம் குறித்து எதுவுமே தெரியாது. அம்மாதிரி சமயங்களில் மொழிபெயர்த்தவர் நான் என்று குறிப்பிடாமல் அந்தப் பிரதிகளை தமிழ் அல்லது ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்ததுண்டு. சிநேகத்திற்காகவும், சன்மானத்திற்காகவும்.

ஆனால், ஒரு சமயம் தன் பெயரைக் குறிப்பிட்டு ஒரு பதிப்பகம்(அந்தப் பெயரை மறந்துவிட்டேனே என்று பின்னர் பலமுறை வருந்தியிருக்கிறேன்) முனைவர் பட்ட ஆய்வேட்டை செய்துதரச் சொல்லி கேட்டபோது மேற்குறிப்பிட்ட மாதிரி மொழிபெயர்க்கச் சொல்வதாய் எண்ணினேன். அடுத்து, ஆய்வு சம்பந்தமான புத்தகங்களையெல்லா அனுப்பித்தருவதாக மறுமுனை கூறியபோதுதான் அந்த ஆய்வேட்டையே தயாரித்துத் தரச் சொல்கிறார்கள் என்பது புரிந்தது. அதிர்ந்துபோய், ’அது தவறல்லவா. இப்படி முனைவர் பட்டம் வாங்குகிறவர் மாணாக்கர்களுக்கு எப்படி சீரிய முறையில் பாடம் கற்பிக்க முடியும் என்று கேட்டதற்கு ‘இத்தகைய தார்மீக நியாயக் கேள்விகளையெல்லாம் கேட்கக்கூடாது” என்று எனக்கு அறிவுரை சொன்னார்கள்! அந்த வேலையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அதில் எனக்கும் நஷ்டமில்லை, அவர்களுக்கும் நஷ்டமிருந்திருக்காது!

தமிழ்க்கலாச்சாரத்தை உலக அரங்கில் பீடமேற்றப்போவதாக சொல்லிக்கொள்ளும் வெளிநாட்டுக்காரர் ஒருவர் அவ்வப்போது தரும் அ-புனைவுப் பிரதிகளை ஆங்கிலத்தில் செய்துதருவேன். ஆரம்பத்தில் நான் கேட்கும் நியாயமான ஊதியத்தைத் தந்தவர் ஷார்ட்ஸ் அணிந்த தமிழ்ப்பெண்ணை மணந்துகொண்ட பிறகு நான் அதிகமாக சன்மானம் கேட்கிறேன் என்று தொடர்ந்து சொல்ல ஆரம்பித்தார். தமிழ்ப்பெண் ஷார்ட்ஸ் அணிவது பற்றி எனக்கு ஒன்றுமில்லை. ஆனால், தனக்குத் தெரிந்த அரைகுறை தமிழில் அந்தப் பெண் என் மொழிபெயர்ப்பைக் குதறுவது தாளமுடியாமல் போயிற்று. அதைவிட மோசம், ஒரு நாள் முழுக்க அவர்கள் வீட்டில் மொழிபெயர்த்தபடி, மொழிபெயர்ப்பதை கணினியில் தட்டச்சு செய்தபடி இருந்த என்னிடம் ‘தமிழ்க்கலாச்சாரக் காவல’ரான அந்தப் பெண் ஒரு வாய் தண்ணீர் வேண்டுமாவெனக் கேட்கவில்லை. பிறகொரு சமயம் மொழிபெயர்ப்புக்கு நான் கேட்பது அதிகம் என்று சொன்னபோது, ’என் வேலைக்கான ஊதியத்தை நான் தான் நிர்ணயம் செய்யவேண்டும், நீங்களல்ல, அந்நியநாட்டு நன்கொடைகள், மான்யத்தொகை எல்லாம் வாங்குவது போதாதென்று உங்களிடம் பயில வருபவர்களிடம் இத்தனை அதிகக் கட்டணத்தொகை வாங்குவது நியாயமா என்று என்னாலும் கேட்கமுடியும்” என்று கூறி என்றைக்குமாய் அவர்களிடமிருந்து விலகிக்கொண்டேன்.

ஒருமுறை இறக்குமதி செய்யப்பட்ட பிரம்மாண்டமான காரில் வந்திறங்கிய அரசியல் பிரமுகர் எனக்குப் பரிச்சயமான எழுத்தாளர் பரிந்துரைத்ததாகச் சொல்லி அவர்களுடைய கட்சிசார் கையேடு ஒன்றை ஆங்கிலத்தில் செய்துதரச் சொன்னபோது மரியாதை நிமித்தம் முதலில் செய்துகொடுத்து பின் ‘நான் அரசியல் கட்சிசார்ந்த மொழிபெயர்ப்புவேலைகளை தொடர்ச்சியாக செய்ய இயலாது’ என்று தெரிவித்துவிட்டேன். கோடியில் புரள்பவர்களிட மிருந்து எனக்கான மீதித்தொகை ரூ.2000 இன்றுவரை வந்தபாடில்லை.

இலக்கிய நண்பரொருவரின் பெயரைச் சொல்லி (அந்த நண்பருக்கு இந்த ஆசாமியைத் தெரியவே தெரியாது என்று பின்னர் தெரியவந்தது) குழந்தைகளுக்காகத் தான் எழுதிய கதைகளடங்கிய நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துத் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார் ஒருவர். மொத்தம் ஆறாயிரம் ரூபாய் கேட்டு ரூ.3000 முன்பணமாகப் பெற்று மொழிபெயர்க்கத் தொடங்கினேன். வெகு சாதாரணமான கதைகள். ‘நகைச்சுவை என்ற பெயரில் ‘குழந்தை மூத்திரம் குடித்தது, பீயைத் தின்றது’ என்றெல்லாம் எழுதியிருக்கிறீர் களே, இது Hygiene senseக்கு எதிரானதல்லவா என்று அவரிடம் கேட்காமலிருக்க முடியவில்லை. ”எப்படி மாத்தினா நல்லாயிருக்கும்னு நினைக்கிறீர்களோ அப்படியே செய்யுங்கள் அம்மா” என்று சொன்னார். அப்படி வெகு சில மாற்றங்களை மட்டுமே செய்தேன். மின்னஞ்சலில் மொத்தக் கதைகளையும் மொழிபெயர்த்து அனுப்பிவைத்த பின் மீதி மூவாயிரத்தைக் கேட்டால் ‘உங்கள் மொழிபெயர்ப்பை என் பப்ளிஷர் பிரசுரிக்க மாட்டேனென்கிறார்” என்றார். நீங்கள் கேட்டீர்கள், நான் மொழிபெயர்த்துக்கொடுத்தேன். இதில் பப்ளிஷர் எங்கிருந்து வந்தார்?” என்று கேட்டதற்கு “நீங்க என்னம்மா என் கதைகளை மொத்தமா மாத்திப்பிட்டீங்களே” என்று மீதிப் பணத்தை தர மனமில்லாத தன் கயமையை மறைக்க நீதிமானாய் என்னைக் குற்றஞ்சாட்டினார்!

சக எழுத்தாளர் ஒருவர் கேட்டுக்கொண்டதற்கிணங்க மருத்துவ நூல் ஒன்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக்கொடுத்தேன். நான் கேட்ட தொகை ரூ 8000. மருத்துவர் ரூ 5000 தந்தார் என்று அந்த சக எழுத்தாளர் கூறியபோது அவர் யார் என் வேலைக்கான ஊதியத்தை நிர்ணயிக்க, ரூ.8000ற்கு அவர் ஒப்புக்கொண்டதால்தானே செய்தேன் என்று சொன்னபோது “நான் வேறுமாதிரி மொழிபெயர்த்திருப்பேன்” என்றவிதமாய் அந்த சக எழுத்தாளர் கூறக்கேட்டு திகைப்பாயிருந்தது. அந்த மருத்துவரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது நீங்கள் நேரில் வந்து என்னோடு அமர்ந்து மொழிபெயர்ப்பில் திருத்தம் மேற்கொள்ளவில்லையே என்றார். ”நான் உங்கள் செயலாளரல்ல, மொழிபெயர்ப் பாளர்” என்று சொல்லி அழைப்பைத் துண்டித்தேன்.

நூறு புத்தகங்களுக்கு மேல் எழுதியும், மொழிபெயர்த்தும் இருக்கும் திரு. பசுமைக்குமார் என்னை அழைத்துக்கொண்டுபோய் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தில் சேர்த்துவிட்டார். கடந்த எட்டுவருடங்களுக்கும் மேலாக வீட்டிலிருந்தபடியே அந்த நிறுவனத்திற்கு மொழிபெயர்ப்பு, பிழைபார்ப்பு, சுயமாய் குழந்தைக்கதைகள் எழுதுதல் ஆகிய பணிகளில் ஈடுபட்டுவந்தேன். உரிய ஊதியமும் மரியாதையும் கொடுத்து என்னை நடத்திய அந்த நிறுவனத்திற்கு என் நன்றி என்றும் உரியது. இப்போது அதிலிருந்தும் விலகிவிட்டேன். வீட்டிலிருந்தபடியே மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட எண்ணம். பார்க்கலாம்.

தமிழிலிருந்து ஆங்கிலத்தில் எழுத்தாளர் ஜெயகாந்தனின் 20க்கு மேற்பட்ட நூல்களை மொழிபெயர்த்துள்ள, நவீன தமிழ்க்கவிதைகளை மூன்று தொகுப்புகளாக ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ள, சங்கப் பெண்கவிஞர்களின் கவிதைகளை, பாரதியாருடைய கவிதைகளின் பெரும்பகுதியை ஆங்கிலத்தில் வெளியிட்டுள்ள, சமூக-இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் ஏழெட்டுத் தொகுப்புகள் வெளியிட்டுள்ள, உலகப்புகழ் பெற்ற நூலான டாக்ரர் மணி பௌமிக்கின் THE CODE NAME GODஐ மிக நேர்த்தியாக தமிழில் மொழிபெயர்த்துள்ள டாக்டர் கே.எஸ்.சுப்பிரமணியனிடம். அவருடைய படைப்புகளை பிரதியெடுக்கும், கணினியில் தட்டச்சு செய்துதரும் பணியில் இயங்கிவருகிறேன். உரிய சன்மானமும் மரியாதையும் கிடைக்கிறது. ஒவ்வொரு சொல்லையும் பார்த்துப்பார்த்துச் செதுக்கி அயராது மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும், தன் ஆங்கில மொழிபெயர்ப்புக்குக் கிடைக்கும் சன்மானத்தை மூல ஆசிரியருக்கே தந்துவிடும், வலது கை தருவது இடது கைக்குத் தெரியாத அளவில் பலபேருக்கு பலவிதங்களில் உதவிவரும் டாக்டர். கே.எஸ்-இன் சமூகம் சார், இலக்கியம் சார், மொழி சார் பங்களிப்பு மிகவும் குறிப்பிடத்தக்கது.

வேறு சில நிறுவனங்களுக்கும் சிறுவர்களுக்கான புத்தகங்கள் எழுதிக்கொடுத்திருக்கிறேன்; மொழிபெயர்த்துக்கொடுத்திருக்கிறேன்,. குழந்தைகளுக்கு எழுதப்படும், மொழிபெயர்க்கப்படும் கதைகள், பிற எழுத்தாக்கங்களில் மொழிப்பிரயோகம் சார்ந்து, கருத்து சார்ந்து நிறைய மாற்றங்கள் தேவை என்பதை உணரமுடிந்தது. எடுத்துக்காட்டாக, எழுபது வயதான பணியாளரும் பெரும்பாலான சிறுவர் கதைகளில் ’அவன்’, ’நீ’ என்பதாக ஒருமையிலேயே குறிப்பிடப்படுகிறார். மாற்றுத்திறனாளிகள் நகைச்சுவைப்பொருளாக்கப்படுகிறார்கள், தலை யில் வலிக்க வலிக்கக் குட்டுதல், தடுக்கிவிழச் செய்தல் போன்ற வன்முறையார்ந்த செயல் களெல்லாம் வேடிக்கையான நிகழ்வுகளாக முன்வைக்கப்படுகின்றன.

எட்டு, பத்து வருடங்களுக்கு முன்பு சென்னையிலுள்ள கல்லூரி ஒன்றில் ஆங்கில இலக்கிய மாணவிகளுக்கு மொழிபெயர்ப்புக்கான பட்டயப்படிப்பு வகுப்புகள் ஒரு வருடகாலம் எடுக்க நேர்ந்தது. சரளமாக ஆங்கிலத்தில் பேசவேண்டும், அதற்கு நான் உதவ வேண்டும் என்பதே அந்த மாணவிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால், துறை ஆசிரியர்கள் அப்படிச் செய்தால் அது தங்கள் பணியை விமர்சனத்துக்குள்ளாக்கும் என்று கூறினர். நான் வைத்த தேர்வில் ஒரு மாணவி இருபது பக்கங்கள் விடைகள் அளித்திருந்தாள். அந்த அளவுக்கு அவளுக்கு பாடங்கள் புரிந்திருந்தன. ஆனால் ஒரு வாக்கியம் கூட விளங்கிக்கொள்ளக்கூடிய சரியான ஆங்கிலத்தில் அமையவில்லை என்பதைக் கண்டு அதிர்ச்சியாக இருந்தது. நான் அப்பழுக்கற்ற ஆங்கிலப் புலியொன்றும் அல்ல. இருந்தும் மொழிபெயர்ப்போடு ஒவ்வொரு வகுப்பிலும் ஆரம்பத்தில் 20 நிமிடங்கள் போல் ஆங்கில மொழியைப் பேசுவதற்கும் அவர்களுக்கு என்னாலான அளவு கற்றுத்தந்தேன்.

அந்தக் கல்லூரியில் பணிபுரிந்த ஒரு வருடத்தில் மொழிபெயர்ப்பு தொடர்பான ஏராளமான நூல்கள் ஆங்கிலத்தில் படிக்கக் கிடைத்தன. வெளிநாட்டவர்களும், வட நாட்டவர்களும் எழுதியவை. அவற்றில் தரப்பட்டிருக்கும் எடுத்துக்காட்டுகள்கூட நமக்குப் பிடிபடாம லிருக்கும் வாய்ப்புகள் அதிகம். அந்த நூல்களில் விவாதிக்கப்பட்டிருந்த மொழிபெயர்ப்பு சார்ந்த பல கருத்தியல்கள், கோட்பாடுகள் மொழிபெயர்க்கும் சமயம் என் மனதிலும் ஏற்பட்டவையே. ஆனால், அவை மொழிபெயர்ப்புக் கோட்பாடுகளாக ஆவணப்படுத்தப் பட்டுள்ள விவரம் தெரிந்திருக்கவில்லை. மொழிபெயர்ப்பு வழிமுறைகள் ஒன்றிற்கு மேற்பட்டவைகள் இருப்பதையும் அறிந்துகொள்ள முடிந்தது.

தமிழைப் பொறுத்தவரை மொழிபெயர்ப்பு, மொழிபெயர்ப்பாளர்களின் அணுகுமுறைகள், இயங்குமுறைகள் போன்றவற்றைப் பேசும் நூல்கள் வெகு சிலவே உள்ளன. எழுத்தாளர்-மொழிபெயர்ப்பாளர் அமர்ந்த்தாவின் முயற்சியில் தமிழில் மொழிபெயர்ப்புப் பணியில் ஈடுபட்டுவரும் சிலர் அது குறித்த தங்கள் அனுபவங்களைப் பற்றி எடுத்துரைக்கும் கட்டுரைகளடங்கிய தொகுப்புகள் இரண்டு – மொழிபெயர்ப்புக் கலை – இன்று, மொழிபெயர்ப்பு – தற்காலப் பார்வைகள் – நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்) வெளியாகியுள்ளன. பூரணச்சந்திரன் அவர்களுடைய நூல் ஒன்று வெளியாகியுள்ளது. நானும் நான் சார்ந்துள்ள பார்வையற்றோர் நன்னல நிறுவனமான வெல்ஃபேர் ஃபவுண்டேஷன் ஆஃப் தி ப்ளைண்ட் அமைப்பின் நிறுவனத் தலைவர் அமரர் ஜெயராமன் (பார்வையிழப்பை மீறி கல்வி பயின்று பல வருடங்கள் தாம்பரம் கிறித்துவக் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணிபுரிந்தவர்) அவர்களும் இணைந்து மொழிபெயர்த்த இணைய இதழ் மியூஸ் இந்தியாவின் மொழிபெயர்ப்புச் சிறப்பிதழில் வெளிவந்த கட்டுரைகளின் தமிழாக்கம் (மொழிபெயர்ப்பின் சவால்கள் – சந்தியா பதிப்பகம்). இன்னும் சில வெளிவந்திருக்கக்கூடும். எனில், இதுபோன்ற கட்டுரைத் தொகுப்புகள் இன்னும் பல வரவேண்டும்.

கோட்பாடுகளின் அடிப்படையில் மொழிபெயர்க்கவியலாது என்பதும் போகப்போகத் தெரிந்தது. ஒவ்வொரு பிரதிக்கேற்பவும் நம் மொழிபெயர்ப்பு அணுகுமுறை மாறுவதும் உண்டு. ஒரு பிரதியை மொழிபெயர்த்து முடிக்க கைவசமுள்ள கால அவகாசத்தைப் பொறுத்தும், ஒரு பிரதியை மொழிபெயர்ப்பதன் நோக்கம், மற்றும் இலக்குவாசகர்களைப் பொறுத்துகூட மாறும்.

புனைவிலக்கியங்களைப் பொறுத்தவரை, மூலப்பிரதியில் மொழிநடைக்கு முக்கியத்துவம் தரப்பட்டிருந்தால், அல்லது மூலப்பிரதி ‘complex’ நடையில் எழுதப்பட்டிருந்தால் மொழிபெயர்ப்பில் அந்த நுட்பத்தைக் கொண்டுவர முயற்சி செய்வேன். பிரதியை ஒரேயடியாக எளிமைப்படுத்திவிடமாட்டேன். மேலும், சிலர் மூலப்பிரதி சாதாரணமான நடையில் எழுதப்பட்டிருக்க மொழிபெயர்ப்பில் அதை மேம்படுத்தவேண்டும் என்று எதிர்பார்ப்பார்ப்பதும், அது மொழிபெயர்ப்பாளரின் பொறுப்பு என்பதாய் கோருவதும் உண்டு. என்னளவில், வட்டார வழக்குகள் அதிகமாக உள்ள பிரதியை மொழிபெயர்ப்பது மிக மிகக் கடினமானது. அதேபோல், உரையாடல்களையும், அவற்றிற்குரியதாக தமிழிலிருந்து எந்தப் பேச்சுவழக்கை அது மொழிபெயர்ப்பாளரின் வேலையல்ல. அதேபோல், உரையாடல்க ளையும் அவற்றிற்குரியதாக தமிழிலிருந்து எந்தப் பேச்சுவழக்கை எடுத்தாள்வதுஎன்று பிடிபடாமல் செந்தமிழிலேயே (வழக்கமாகக் கையாளும் வரிவடிவத் தமிழில்) மொழிபெயர்க்க நேர்கிறது.

ஒரு மொழிபெயர்ப்பாளராக மூல ஆசிரியரிடம் எனக்கு ஒருவித love-hate relationsip தான் நிலவும். மூலப்பிரதி மிக நன்றாக இருந்தால், அடப்பாவி மனுஷா (அல்லது மனுஷீ!) என்னமா எழுதியிருக்கிறார் – நம்மாலெல்லாம் இப்படி எழுத முடிவதேயில்லையே’ என்ற பொறாமை. அல்லது, சாதாரண எழுத்தாகப் புலப்பட்டால், ‘சே, வருமானத்திற்காக, அல்லது, நண்பர்கள் கேட்டுக் கொண்டார்களேயென்று இந்த ‘திராபை’ எழுத்தையெல்லாம் மொழிபெயர்க்க வேண்டியிருக்கிறதே’ என்ற எரிச்சல். அதேசமயம், மொழிபெயர்க்கும்போது மூலப்பிரதியிலிருந்து கொஞ்சம் விலகியே இயங்கவேண்டியிருக்கும். அதிலேயே அமிழ்ந்துவிட்டால் வேலை நடக்காது!

மூலப்பிரதியை மொழிபெயர்ப்பதில் மொழிபெயர்ப்பாளர் தன் விருப்பம்போல் liberty எடுத்துக்கொள்வது மிகவும் தவறு. அதேசமயம், சில இடங்களில் மொழிபெயர்ப்பாளர் தன் discretionஐ பயன்படுத்தவேண்டியதும் அவசியமாகிறது. மூலப்பிரதியில் ஒரு வரி தரும் உட்பொருளை அழுத்தமாக எடுத்துக்காட்ட மொழிபெயர்ப்பாளர் தனது மொழியாக்கத்தில் ஓரிரு வார்த்தைகளைக் கூடுதலாகச் சேர்க்கவேண்டிவரலாம். வாக்கிய அமைப்புகளை இலக்குமொழிக்கேற்ப மாற்றவேண்டிவரலாம். இதையெல்லாம் குற்றமாகப் பேசினால் எந்த மொழிபெயர்ப்பாளரும் இயங்கவே முடியாது. எடுத்துக்காட்டாக, இந்தக் கதையில் Youth will be served என்ற வரி முத்திரை வாசகமாக வரும். இதை ‘இளமைக்கே எல்லாம்’ என்று மொழிபெயர்த்திருக்கிறேன். இது சரியில்லை என்று இந்த வாசகத்திற்கான தங்கள் மொழிபெயர்ப்பை முன்வைப்பவர்கள் உண்டு. அத்தகையோரிடம் வாதாடிப் பயனில்லை. நான் ஏற்கெனவே குறிப்பிட்டதுபோல் வார்த்தைத் தேர்வும், அவற்றை வரிசைப்படுத்தலும் தான் ஒரு மொழிபெயர்ப்பாளரின் தனி அடையாளம். அதில் அர்த்தப்பிழை இருந்தால் சுட்டிக்காட்டலாம்.. ஆனால் ‘நான் சொல்லும் வார்த்தைகளை, நான் சொல்லும் விதமாய் வரிசைப்படுத்தினால்தான் நீங்கள் நல்ல மொழிபெயர்ப்பாளர் என்று சிலர் கூறுவதைக் கேட்கநேரும்போது வேடிக்கையாகவுமிருக்கும்; வருத்தமாகவும் இருக்கும்.

பழமொழிகள், ஒரு மொழியில் புழங்கும் சொற்றொடர்கள் ஆகியவற்றை இன்னொரு மொழிக்குக் கொண்டுவரும்போது அவற்றின் உள்ளர்த்தம், குறிப்பைப் புரிந்துகொண்டு அவற்றையே சரியாக இலக்குமொழியில் தரவேண்டும் என்ற ஒரு பார்வையும், நம் மண்ணுக்குஏர்றதான பழமொழிகள், சொற்றொடர்களைப் பயன்படுத்தவேண்டும் என்றும் இருவேறு பார்வைகள் புழக்கத்திலிருக்கின்றன. உமர் கயாம் (ஆங்கில மொழிபெயர்ப்பில்) A Book Of Verse என்று சொல்லியிருந்ததை ‘கையில் கம்பன் கவியுண்டு’ என்று கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையின் மொழிபெயர்ப்பில் படித்தபோது, கம்பன் மீது அன்பும் மரியாதையும் இருந்தாலும், ‘எனக்குப் பிடித்த கவிதைத்தொகுப்பைத் தீர்மானிக்க இவர் யார்?’ என்று கோபம் வந்தது.

பிறமொழிப் படைப்புகளைத் தமிழில் கொண்டுவரும்போது, ’அதைத் தமிழ்ச்சூழல் மயமாக்கவேண்டும்’ என்றவொரு கருத்தும், ’அப்படிச் செய்யலாகாது, அந்தப் படைப்புகளில் புனைகதையம்சங்களோடு அந்நிய மண் சார்ந்த வாழ்வியல் விவரங்களையும் நாம் தெரிந்துகொள்கிறோம் – மொழிபெயர்ப்பைத் தமிழ்ச்சுழல்மயமாக்கினால் அது முடியாமலாகி விடும், அதற்கு நாம் தமிழில் எழுதப்பட்ட புனைவிலக்கியங்களைப் படித்தால் போதுமே’ என்ற பார்வையும் உண்டு.என்னைப் பொறுத்தவரை இந்தப் பார்வைபொருள்பொதிந்ததே. அதே சமயம், புனைவிலக்கியம் என்பதே பிரதானமாக மானுட வாழ்க்கைக்கூறுகளை- Unity in Diversity and Diversity in Unityஐ அடிக்கோடிட்டுக் காட்டுவன என்பதால், வெறும் அந்நிய மண் சார்ந்த விவரக்குறிப்புகள் நிரம்பியதாக மட்டும் ஒரு மொழியாக்கம் இலக்குமொழியில் அணுகப்படலாகாது; நின்றுவிடலாகாது. அதைத் தாண்டி, ‘வாழ்வோட்டம்’ இயல்பாக விரவியிருப்பதும் அவசியம்.

பிறமொழியிலான ஒரு புனைவிலக்கியத்தை அது முன்வைக்கும் வாழ்வீர்ப்பு காரணமாய் நான் (அல்லது என் நட்பினர்) தமிழில் மொழிபெயர்க்க விரும்பும்போது (மொழிபெயர்க்கும்படி என்னைக் கேட்டுக்கொள்ளும்போது) அந்தப் பிரதியில் சில பொருட்கள், தின்பண்டங்கள் அன்னபிற எனக்குத் தெரியாதவையாக இருந்தால், அவை பிரதியின் கதையோட்டத்திற்கு அத்தியாவசியமானதாய் அமைந்திருந்தால் அவற்றிற்கான சரியான தமிழ்வார்த்தையை பல்வேறு வழிகளில் கண்டுபிடிக்கப் பிரயத்தனப்பட்டு, அவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட சரியான தமிழ்ப்பதத்தைப் பயன்படுத்துவேன். அப்படியில் லாமல் வெறுமே வந்துபோகிறதென்றால் அத்தனை மெனக்கெட மாட்டேன். எடுத்துக் காட்டாக, மூலப்பிரதியில் ஒரு இனிப்புப் பண்டம் குறித்த பெயர் அல்லது குறிப்பு இடம்பெறுகிறதெனில், அதைத் தின்று கதாநாயகன் இறந்துபோகிறான் என்பதுபோல் அது கதைநகர்வுக்கு முக்கியக்காரணியாக இருந்தால் அது என்ன மாவில், என்ன எண்ணெய்யில் செய்யப்பட்ட தின்பண்டம், வெல்லத்தில் செய்யப்பட்டதா, சர்க்கரையில் செய்யப்பட்டதா என்றெல்லாம் பார்த்துப் பார்த்து மொழிபெயர்ப்பேன். கதாநாயகனும் அவனுடைய காதலியும் ஒரு சிற்றுண்டிசாலையில் அதை சாப்பிட்டுவிட்டுப் போவதாக போகிறபோக்கில் சொல்லப்பட்டிருந்தால், வெறுமே ‘ஒருவகை இனிப்புப்பண்டத்தைச் சாப்பிட்டார்கள்’ என்று எழுதிவிடுவேன். இந்த discretion ஒரு மொழிபெயர்ப்பாளருக்குத் தேவை என்று நினைக்கிறேன்.

என் மொழிபெயர்ப்பில் நம்பிக்கை வைத்து சிலர் தந்திருக்கும் ஐந்தாறு நூல்களை மொழிபெயர்த்து முடிக்கவேண்டும். பின், தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதை மட்டுமே மேற்கொள்ளவேண்டும் என்று எண்ணியிருக்கிறேன். இதில் வாழ்க்கைச்சூழல் சார், உரையாடல் சார் மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் குறைவு என்று தோன்றுகிறது.

ஒரு மொழிபெயர்ப்பில் தவறிருந்தால் சுட்டிக்காட்டுவதில் தவறில்லை. ஆனால், மூல ஆசிரியரை மதிப்பழிப்பதில் மொழிபெயர்ப்பாளருக்கு ஏதோ ஆதாயம் கிடைப்பதுபோல், மொழிபெயர்ப்பாளருக்கு உள்நோக்கம் கற்பித்துப் பேசுவது சரியில்லை. ஒருவருடைய மொழிபெயர்ப்பில் குறை காண்பதற்கு வாசகருக்கும் ஒரு தகுதி வேண்டும். அப்படியில்லாமல் சிலர் சகட்டுமேனிக்கு மொழிபெயர்ப்பாளர்களை மட்டந்தட்டுவதும், மதிப்பழிப்பதும் வருத்தமளிக்கிறது. இத்தகையோர், பெரும்பாலும், பெருந்தொகையை மான்யமாக, நன்கொடையாகப் பெற்று உலக இலக்கியங்களை மொழிபெயர்ப்பவர்கள், தங்களுடைய மொழிபெயர்ப்பே அப்பழுக்கற்றது என்று வலியுறுத்துபவர்கள், பெரிய பதவிகளில் இருக்கும் எழுத்தாளர்கள் – மொழிபெயர்ப்பாளர்கள், பிறர் கைகளால் மொழிபெயர்ப்பு செய்பவர்கள், போன்றவர்களிடம் ‘வேலை காட்டுவதில்லை. அவர்களுடைய மொழிபெயர்ப்பைத் தங்கள் திறனாய்வுக்குட்படுத்த முன்வருவதில்லை என்பதையும் பார்க்க முடிகிறது.

நான் மொழிபெயர்த்திருக்கும் படைப்புகளைப் பொறுத்தவரை, நானறிந்தவரையில் அவற்றின் தமிழ்வெளியீட்டுரிமையை இன்னும் யாரும் வாங்கவில்லை. எனவே, யார் வேண்டுமானாலும் அவற்றை மொழிபெயர்ப்பு செய்து வெளியிடலாம். அதேசமயம், அவர்கள் சரிபார்த்துக்கொள்ளவும், மேம்படுத்தவும் ஏற்கனவே ஒரு மொழிபெயர்ப்பு இருக்கிறது என்பதும் மறுக்கமுடியாத உண்மை. இவ்வாறு ஒருவரின் மொழிபெயர்ப்புப் பிரதியை ஓராண்டுகாலம் கையில் வைத்திருந்து பின் அதை அடிப்படையாகக்கொண்டு வேறொருவர் மொழிபெயர்த்த அதே கதைகளை வெளியிட்ட கதைகளும் தெரிந்ததே. தனிநபர் integrity இல்லையென்றால் என்னவேண்டுமானாலும் அக்கிரமம் செய்து மனசாட்சி உறுத்தலில்லாமல் வாழமுடியும்.

சில மாதங்களுக்கு முன் ஃபேஸ்புக்-இல் நான் மொழிபெயர்த்த THE ROYAL GAME என்ற குறுநாவலின் மொழிபெயர்ப்பு குறித்து ஒருவர் கிசுகிசு பாணியில் மதிப்பழித்துப் பேசியிருந்தார். சதுரங்க விளையாட்டு குறித்த தனது ஆய்வின்(?) ஒரு பகுதியாக இலக்கியத்தில் அது குறித்து எழுதப்பட்டிருப்பதைத் தேடியபோது என்’சொதப்பலான’ மொழிபெயர்ப்பைப் படிக்க நேர்ந்ததாகவும், சதுரங்க விளையாட்டின் அரிச்சுவடி கூட தெரியாதவர்கள் ஆங்கிலம் ஒரே காரணத்திற்காக இத்தகைய இலக்கியப் படைப்புகளை மொழிபெயர்க்க முற்படுவது அராஜகம் என்றவிதமாகவும் கருத்துரைத்திருந்தார். அவர் மேற்கோளாகக் காட்டியிருந்த பத்தி என் மொழிபெயர்ப்பே மோசமானது என்பதை உட்குறிப்பாகச் சுட்டுவதாக இருந்தது. ஆனால், அவர் மேற்கோள் காட்டியிருந்த ஆங்கில மொழிபெயர்ப்பும் நான் மொழிபெயர்க்க எடுத்துக்கொண்ட ஆங்கில மொழிபெயர்ப்பும் வேறுவேறு. அதை நான் சுட்டிக்காட்டியபோது தன் தவறுக்காக வருத்தம் தெரிவிக்க மனமில்லாமல் ‘இந்த ஒரு சொற்றொடரை நீங்கள் சரியாக மொழிபெயர்த்திருக்கிறீர்களா என்பதைச் சொல்லுங்கள், பிறகு மேற்கொண்டு பேசலாமே” என்று (ஏதோ நான் அவருடைய அங்கீகாரத்திற்காகக் காத்துக்கொண்டிருப்பதைப்போல்) அவர் எழுதியிருந்ததைக் கண்டு what an abject insolence என்று எண்ணிக்கொண்டேன். மொழிபெயர்த்து பத்து வருடங்களுக்கு மேலான நிலையில் என் கையெழுத்து பிரதி கைவசமில்லாத நிலை. தவிர, இத்தகையோரை ‘ஊக்குவிக்கும்’ பெருந்தலைகளும் இங்கே உண்டு என்பதை நான் அறிந்தேயிருக்கிறேன்.

என்னுடைய மொழிபெயர்ப்பு அப்பழுக்கற்றது என்று நான் ஒருபோதும் பறையறிவித்துக் கொண்டதில்லை. ஏனெனில் அதில் உண்மையிருக்க வழியில்லை. He என்ற எளிய வார்த்தை அவனா, அவரா என்று திக்குமுக்காடவைக்கும் தருணங்களே அதிகம். சில வார்த்தைகளின் குறிப்பர்த்தம் தெரியாதுபோய்விடும். விபூதி அல்லது திருநீறு என்றே எனக்குத் தெரிந்திருந்த நிலையில் ஒருவர் நீறு என்று எழுதியிருந்ததை, அது அச்சுப்பிழை போலும் என்று நானாக எண்ணிக்கொண்டு நீரு என்பதாய் Water என்று மொழிபெயர்த்துவிட்டேன்!

ஒரு உலகத்தரமான இலக்கியப்படைப்பை மொழிபெயர்க்கும் உரிமையை வாங்கும் நிறுவனங்கள் அதன் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிபெயர்ப்புகளையும் கொண்டுவர முன்வரலாம். அப்படிச் செய்தால் மொழிபெயர்ப்பு தொடர்பான தெளிவு, ஒப்புநோக்கல் வாசகருக்கு வாய்க்க வழியுண்டு.

உலகக்கவிதைகள் குறித்து உரையாற்ற நான் அழைக்கப்பட்டபோதெல்லாம் எனக்கு உலக இலக்கிய அறிவு கிடையாது என்று மறுத்தேயிருக்கிறேன். இல்லாததை இருப்பதாகச் சொல்வதும், அந்த ‘பாவ்லா’வையே சதாசர்வகாலமும் நடை உடை பாவனைகளில் தரித்துக்கொண்டிருப்பதும் மிகவும் கொடுமையான விஷயம்; அது எனக்கு அவசியமுமில்லை.

சிற்றிதழாளர் ஒருவரிடம் ஒருமுறை ‘உங்கள் பத்திரிகையில் நீங்கள் வெளியிடும் உலக இலக்கியங்களைத் தெரிவுசெய்வதில் யார் உங்களுக்கு உதவுகிறார்கள் என்று கேட்டபோது, ”எனக்கு ஆங்கிலம் தெரியாது என்று பழிக்கிறீர்களா” என்று கடுங்கோபத்துடன் கேட்டார். “எனக்கு ஆங்கிலம் தெரியும். ஆனால், உலக இலக்கியம் தெரியாதே” என்றேன். ஒரு பத்திரிகையை நல்ல முறையில் நடத்த உதவும் நண்பர்கள், சக இலக்கியவாதிகளை அடையாளங்காட்டுவதில் எதற்குத் தயக்கம் என்று இன்றளவும் எனக்கு விளங்கவில்லை.

மொழிபெயர்ப்பு ஒரு கூட்டுமுயற்சி என்று சிலர் சொல்லக் கேட்டதுண்டு. அதில் உண்மையும் இருக்கலாம். எனில், என்னளவில் மொழிபெயர்ப்பைத் தனியாகத்தான் செய்கிறேன். ஓரிரு வார்த்தைகளில் உதவிய ஒருவர் வேறொருவரிடம் ‘லதாவுக்கு நான் தான் முழுக்க முழுக்க மொழிபெயர்த்துக்கொடுத்தேன் என்று கூறியதாகவும் கேள்விப் பட்டிருக்கிறேன்!

மொழிபெயர்ப்புப் பிரதிகளுக்கு சீரிய முறையில் Editing தேவை என்று சிலர் சொல்வதிலும் உண்மை இருக்கலாம். அதேசமயம், அந்த ‘எடிட்டர்’ அதற்கான தகுதிவாய்ந்தவரா என்பதும் கணக்கிலெடுத்துக்கொள்ளப்படவேண்டியது. ஒருமுறை நான் மொழிபெயர்த்த பிரதியை (அந்த நூல் இன்னும் வெளிவரவில்லை) ‘எடிட்’ செய்தவர் ஒரு திருத்தமாய் ’ஓர்மை’ என்ற வார்த்தையை என் பிரதியில் இடம்பெறச் செய்திருந்தார். ஆனால், நான் அந்த சொல்லைப் பயன்படுத்தியதேயில்லை என் மொழிபெயர்ப்புகளில். அது என்னை என் மொழிபெயர்ப்பி லிருந்தே அந்நியமாக உணரச் செய்தது.

ஒவ்வொரு படைப்பையும் போதிய கால அவகாசம் எடுத்துக்கொண்டு (இரண்டு மூன்று வருடங்கள் அல்லது எட்டு பத்து வருடங்கள்) மொழிபெயர்க்கும்போது மட்டுமே மூலப்படைப்புக்கு நியாயம் செய்ய முடியும் என்ற பார்வையும் முன்வைக்கப்படுவதுண்டு. (நல்ல மொழிபெயர்ப்பு வரவேண்டும் என்ற அக்கறையோடும், ஒரு வித reductionist approach ஆகவும்). அத்தனை நேரமெடுத்துக்கொண்டு செய்யும் வசதிவாய்ப்புகள் எல்லா மொழிபெயர்ப்பாளர்களுக்கும் அமைவதில்லை. அந்த அளவு நேரமெடுத்துக்கொள்வதா லேயே ஒரு மொழிபெயர்ப்பு தரமானதாக அமைந்துவிடும் என்று உறுதியாகச் சொல்வதற்கு மில்லை. ஒவ்வொருவரின் வேலைசார் ஒழுங்குமுறையும், தேவைகளும் ஒவ்வொரு மாதிரி. சில சமயம் ஒரு வேகமும் உத்வேகமுமாய் ஒரேவீச்சில் செய்துமுடித்தால்தான் உண்டு என்ற நிலை ஏற்படும். ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் ஒரு மொழிபெயர்ப்பாளரின் இருமொழிப் புலமையோடு அவருடைய தனிநபர் சார் integrityயும் சேர்ந்தே அவருடைய மொழிபெயர்ப்பின் தரத்தை உறுதிசெய்கிறது.

என்னுடைய தமிழ்மொழிபெயர்ப்புகளை மீள்பிரசுரம் செய்வதில்லை என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன். பத்து பதினைந்து வருட இடைவெளியில் அவற்றை மீண்டும் வாசிக்கும்போது மொழிபெயர்ப்பு இன்னும் மேம்பட்டிருக்கலாமே என்று தோன்றுகிறது. அதற்காக, அவற்றின் மொழிபெயர்ப்பையோ, மொழிபெயர்ப்பு மேம்படுத்தல் பணியையோ மீண்டும் மேற்கொள்ளும் மனநிலையுமில்லை. ஆங்கிலத்தில் தமிழ்ப் படைப்புகளை மொழியாக்கம் செய்வதில் முனைப்பாக ஈடுபட விருப்பம். அதில் சூழல் சார், உரையாடல் சார் மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைவாக இருப்பதாகத் தோன்றுகிறது. சமீபகாலமாக ஃபேஸ்புக் நட்பினரின் கவிதைகளை ஒரு வாசகராகத் தெரிவுசெய்து அவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து என் முகநூல் பக்கத்தில் பதிவேற்றிவருகிறேன். நிறைவாக இருக்கிறது. இங்கும் ‘மூலப் பிரதியின் உயிரை மொழிபெயர்ப்பு கொண்டுவரவில்லை’ என்று ஒற்றை வரியில் கருத்துரைத்து (அந்த வரியையும் ஆங்கிலத்தில் தப்பும்தவறுமாக எழுதுபவர்களும் உண்டு!) மொழிபெயர்ப்பாளரை விட தம்மை பெரிதாகக் காண்பிக்கப் பிரயத்தனப்படுகிறவர்கள் உண்டுதான். ஆனால், ஒப்பீட்டளவில் அத்தகையோர் குறைவு என்று தோன்றுகிறது.

மொழிபெயர்ப்பாளர் மேல் குறைந்தபட்ச மரியாதையும், மொழிபெயர்ப்பு நன்றாக அமையவேண்டும் என்ற அக்கறையும் கொண்டு ஒரு மொழிபெயர்ப்பிலுள்ள குறைகளை அடையாளங்காட்டுபவரின் தொனி வேறு; மொழிபெயர்ப்பாளரை மட்டந்தட்டுவதே குறியாக குறைகளைச் சுட்டிக்காட்டுபவரின் தொனி வேறு. எனவே, இந்த இரண்டிற்குமான மொழிபெயர்ப்பாளரின் எதிர்வினையும் வேறாக இருப்பதே இயல்பு.

நான் மொழிபெயர்த்து புதுப்புனல் வெளியிட்ட ராஜ விளையாட்டு குறுநாவலில் சதுரங்க விளையாட்டு கதைப்போக்கோடு இரண்டறக் கலந்த அம்சமல்ல. ஆனால், A PIECE OF STEAK என்ற இக்கதையில் குத்துச்சண்டை கதையோட்டத்தோடு இரண்டறக் கலந்த அம்சம்.எனக்கு குத்துச்சண்டை பற்றி எதுவுமே தெரியாது. தொலைக்காட்சிப்பெட்டி வழியே அதைக் காணநேரும்போதெல்லாம் கண்ணைத் திருப்பிக்கொண்டு விடுவேன். ஆனாலும் இந்தக் கதையை மொழிபெயர்க்க விரும்பினேன். மொழிபெயர்த்தேன். குத்துச்சண்டை தொடர்பான என்னை நிறையவே தடுமாறவைத்தன. அவற்றையெல்லாம் தாண்டி, அல்லது, அவற்றினூடாக இந்தக் கதை நம் முன் விரிக்கும் வாழ்க்கையின் தான் அதற்குக் காரணம். குத்துச்சண்டை வீரர்களை நகமும் சதையுமான சக மனிதர்களாய் நம் கண்முன் நிறுத்தும் கதை இது.

இந்தக் கதையின் கதாநாயகன் குத்துச்சண்டைவீரன். குத்துச்சண்டைக்களத்தில் அவன் எப்படி இயங்குகிறான் என்பது இதில் விவரிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதுவல்ல கதையின் அடிநாதம். குத்துச்சண்டை நகர்வுகளைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக இந்தக் கதையைப் படிக்கவேண்டிய தேவையில்லை. அதற்கு எத்தனையோ அ-புனைவு நூல்கள் உள்ளன. எனக்கு குத்துச்சண்டை பற்றி எதுவுமே தெரியாது. ஆனாலும் இந்தக் கதையை என்னால் ரசித்துப் படிக்க முடிந்தது. இந்தக் கதை எனக்குப் பிடித்தது. எனக்குத் தெரியாத, நான் முரடனாக மட்டுமே பார்த்திருந்த குத்துச்சண்டைவீரர்களின் வாழ்வை, அதன் சோகங்களை, சிரமங்களை என்னால் இந்தப் புனைவிலக்கியத்திலிருந்து அறியமுடிந்தது. பல வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைதீஸ்வரன் இந்தக் கதையைப் பற்றி எடுத்துக்கூறி மொழிபெயர்க்கும்படி கேட்டுக்கொண்டதற்கிணங்க இதை மொழிபெயர்த்தது எனக்கு மனநிறைவைத் தருகிறது. ஜாக் லண்டனின் பிற படைப்புகளை நான் படித்ததில்லை; குத்துச்சண்டை வீரர் யாரையேனும் சந்தித்து குத்துச்சண்டை குறித்த எல்லா விவரங்களையும் அறிந்துகொள்ளவேண்டும் என்று தோன்றவில்லை. அதைச் செய்ய முயலவில்லை.

‘A Piece of Steak கதை’ நேரடியாக ஆங்கிலத்தில் எழுதப்பட்டது. Googleஇல் படிக்கக் கிடைக்கிறது. ஆங்கிலம் அறிந்தவர்கள் ஆங்கிலத்திலேயே படித்துக்கொள்வதே மேல். மொழிபெயர்ப்பில் குறைகாணவேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் ஆங்கில மூலத்தை அருகில் வைத்துக்கொண்டு என் தமிழ் மொழிபெயர்ப்பை அலசியாராய முற்படும் அறிவுசாலிகளிடம் (பலநேரங்களில் இத்தகையோர் வேறு சில இலக்கியம்-மொழி சார் பெருந்தகைகளின் விசுவாசிகளாக இந்த ‘அகழ்வாராய்ச்சி’யனைய அலசல்பணியை மேற்கொள்வதும் நடக்கிறது.)

நான் வேண்டிக்கொள்வதெல்லாம் இதுதான்: இந்தக் கதையை நான் சரியாக மொழிபெயர்க்கவில்லை என்று தோன்றினால் யார் வேண்டுமானாலும் இதை இன்னும் திறம்பட மொழிபெயர்க்கலாம். இதுவரை யாரும் இந்தக் கதையி மொழிபெயர்பு உரிமையை வாங்கியதாகத் தெரியவில்லை. ஒரு பிரதிக்கு இரு மொழிபெயர்ப்புகள் இருப்பதில் தவறில்லை. அதன் மூலம் மொழிபெயர்ப்பு சார்ந்த ஒப்புநோக்கல், புதிய பார்வைகளைப் பெற வழிகிடைக்கும். அதே சமயம், ஏற்கெனவே மொழிபெயர்ப்பு பிரதி இருக்கும் மூலப்படைப்பின் இரண்டாம் மொழிபெயர்ப்பு முதல் மொழிபெயர்ப்பை அடிப்படையாகக்கொண்டு அதைவிட மேம்பட்டதாய் அமையும் வாய்ப்புகள் அதிகம் என்பதையும் நாம் மறக்கலாகாது.

Stefan Zweigஇன் Amok என்ற குறுநாவலுக்கு என் தமிழ் மொழிபெயர்ப்பில் ஆட்கொள்ளப் பட்டவன் என்று தலைப்பிட்டேன். அதற்கான காரணங்களை நூலின் ‘சொல்லவேண்டிய சில’ பகுதியில் விளக்கியிருக்கிறேன். இதை தவறு என்றும் அத்துமீறல் என்றும் சொல்பவர்களிடம் என்ன சொல்வது? எதற்குச் சொல்வது என்ற ஆயாசமே மிஞ்சுகிறது.

A PIECE OF STEAK என்ற தலைப்பை ஒரேயொரு இறைச்சித்துண்டு என்று தமிழில் குறிப்பிட்டிருக்கிறேன். ஒரேயொரு என்பது தவறு என்று சிலர் வாதிடக்கூடும். குத்துச் சண்டைக்குப் போகுமுன் ஒரு இறைச்சித்துண்டு சாப்பிடக்கிடைத்தால் நன்றாயிருக்குமே என்று ஏங்கும் கதாநாயகனுக்கு அது கிடைக்காமல் போகும் மனவலியை அழுத்தமாக எடுத்துக்காட்ட ஒரேயொரு என்ற வார்த்தையே பொருத்தமானது என்று தோன்றியது. A PIECE OF STEAK என்பதில் மாட்டு இறைச்சியையும் குறிக்கும், வேறுவகை இறைச்சியையும் குறிக்கும்(எலும்புத்துண்டோடு இணைந்த தசை) என்று ஆங்கில அகராதியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதை அடிப்படையாகக் கொண்டு இறைச்சித்துண்டு என்று தமிழ்ப்படுத்தினேன். ஒருவேளை குத்துச்சண்டை வீரர்கள் மாட்டிறைச்சியை சாப்பிட்டுத் தங்கள் உடல்வலுவை உறுதிப்படுத்திக்கொள்வது வழக்கமாக இருக்கலாம். எனக்குத் தெரியாது. இந்தக் கதையின் நாயகன் டாம் கிங் முன்னாள் குத்துச்சண்டை சாம்பியன். முன்னாள் சாம்பியன் என்றால் என்னவென்று சொல்வது – அவரா, அவனா? முன்னாள் சாம்பியன்களுக்கு இப்போது என்ன வயதிருக்கும்? முப்பதுகளில் இருப்பார்களா? நாற்பதுகளில்? அல்லது ஐம்பதுகளில்? முன்னாள் சாம்பியன் என்பதால் ‘அவர்’ என்று குறிப்பிடுவது டாம் கிங்கை அதிக வயதானவராகக் காட்டிவிடுமோ? கதையின் நாயகனான அவர் மீது நாம் கொள்ளும் அன்பையும், அன்பின் வழியான உரிமையையும் மட்டுப்படுத்துவதாகிவிடுமோ? என்ற கேள்வி மொழிபெயர்ப்பை முடிக்கும் வரையில் தொடர்ந்துகொண்டேயிருந்தது.

இந்தச் சிறுகதை (பெரிய சிறுகதை!) மொழிபெயர்ப்பில் இன்னும் எத்தனையோ கேள்விகள், சந்தேகங்கள், சவால்களை எதிர்கொள்ளும்படியாயிற்று. என்னால் முடிந்தவரை – ஒரு வாசகர் நிலையில் என்னைப் பொருத்திப் பார்த்தும் –அவற்றை நேர்மையாய், நேர்த்தியாய் அணுகியிருக்கிறேன் என்று மட்டுமே சொல்லத் தோன்றுகிறது.

வார்த்தைத் தேர்வுகளில்தான் ஒரு மொழிபெயர்ப்பாளரின் தனி அடையாளம் இருக்கிறது என்று தோன்றுகிறது. மொழிபெயர்ப்பை STANDARDIZE (ஒருபடித்தானதாக) ஆக்குவது அபத்தம், அசாத்தியம் என்று தோன்றுகிறது. அடுத்தடுத்து மொழிபெயர்க்க நேரும் ஒரே கவிதையின் இரண்டு மொழிபெயர்ப்புகள் ஒன்றாக இருப்பதில்லை. ஒரு சமயத்தில் ஒரு கவிதையை அல்லது சில வரிகளை ஒருவிதமாக மொழிபெயர்த்துக்கொண்டிருக்கும்போதே அவற்றின் வேறுவகையான மொழிபெயர்ப்புவடிவங்களும் மனதில் தோன்றியவண்ண மேயிருக்கும். மனசில்லா மனசோடு ஒரு மொழிபெயர்ப்பை மட்டும் வைத்துக்கொண்டு மனதிலோடும் மற்ற மொழிபெயர்ப்புகளைப் புறக்கணித்து முன்னேறியாகவேண்டும்.

விருதுக்கு அனுப்பலாகாது என்ற என் வேண்டுகோளையும் ஏற்றுக்கொண்டு என் மொழிபெயர்ப்புகளை தொடர்ந்து வெளியிட்டுவரும் புதுப்புனல் பதிப்பக நிறுவனர்கள் ரவிச்சந்திரன் – சாந்திக்கு என் என்றுமான நன்றி உரித்தாகிறது.

மொழிபெயர்ப்புகளைப் படிக்க விரும்பும், முன்வரும் வாசகர்களுக்கு என் பணிவான வேண்டுகோள் இதுதான்: மூலமொழி தெரிந்தால் அதிலேயே படிப்பதே மேல். ஆங்கிலம் தெரிந்தால் ஆங்கிலத்திலேயே படிப்பதே மேல். அவ்வாறில்லாமல், தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட ஒரு படைப்பை வாசிப்பவர்கள், மொழிபெயர்ப்பாளர்களிடம் குறைகாண்பதையே நோக்கமாகக் கொண்டு அதை அணுகவேண்டாம், அப்படி அணுகுபவர்களின் அடியொற்றி அந்தப் படைப்பை வாசிக்க முற்படாதீர்கள். இதன் மறுமுனையாக, மொழிதெரியாத வாசகர்கள் தானே என்ற அலட்சியத்தோடு மூலப்படைப்பை தன் மனம்போன போக்கில் ஒரு மொழிபெயர்ப்பாளர் கையாளக்கூடாது என்பதையும் குறிப்பிட வேண்டும். குறைந்தபட்ச நம்பிக்கையுடனாவது ஒரு மொழிபெயர்ப் பாளரை அணுகுங்கள். அதற்கு அவர் உரியவராக இருக்கவேண்டும் என்பதும் இங்கே உட்குறிப்பு.

ஒரு மொழிபெயர்ப்பாலருக்கு அவசியம் இருக்கவேண்டிய அடிப்படை integrityயோடு இந்த மொழிபெயர்ப்பைச் செய்திருக்கிறேன். என் மொழிபெயர்ப்பு வாசகர்களுக்கு நிறைவைத் தந்தால் அதற்கு மூலப்படைப்பின் தரமும் ஆழமுமே காரணம். நிறைவான வாசிப்பனுபவத்தைத் தரவில்லையென்றால் அதற்குக் காரணம் மொழிபெயர்ப்பாளராகிய எனது போதாமையே என்று தெரிவித்துக்கொள்கிறேன். இது தன்னடக்கமல்ல என்றும் தெளிவுபடுத்திவிடுகிறேன்.

நன்றி

தோழமையுடன்

லதா ராமகிருஷ்ணன்

11.1.2018

சொர்க்கம் தொலைத்தவள் / யாவுஸ் எகின்சி (துருக்கி) / தமிழில் எஸ். சங்கரநாராயணன்

 யாவுஸ் எகின்சி

யாவுஸ் எகின்சி

ஆரம், நானொரு ஏப்பை சாப்பையான சோப்ளாங்கி, அசடு தான். எனக்கு யாருமே இல்லை. என் பேரன் பேத்திகள் என்னைக் கேலியடிக்கிறார்கள். என்னைப் பார்க்க வருகிறாட்கள் என்னைப் பற்றி குசுகுசுத்துக் கொள்வதும் எனக்குத் தெரியும். ‘கிழவி ரொம்ப காலம் வாழ்ந்தாச்சி. செத்துப் போகலாம் அவள். அவள் இனி சாவில் தான் அமைதி காண முடியும்.’ நான் ஒரு அதிர்ஷ்டக் கட்டை. சோம்பேறி. தனிக்கட்டை. துடைப்பக்கட்டை. இனி வாழ்வதில் எனக்கு என்ன சந்தோஷம் கிடைத்துவிடப் போகிறது. வெறுப்பும் வெறுமையும் கடுப்புமாய்க் கழிகிறது என் காலம்.

ஆரம், இப்ப என் இந்த நொந்த வாழ்க்கையை நீ பார்த்தால் உனக்கு எப்படி இருக்கும்? எப்பவும் உன்னிடம் இருக்குமே, அந்தத் துப்பாக்கியால் என்னை சுடுவாயா? ஹ… ஆரம், என் அத்தனை கேள்விக்கும் ஒரே விடை. மரணம். நான் இறந்துபோக விரும்புகிறேன். சாவுக்கு ஏங்குகிறேன் ஆரம் நான். ஆனால் சாவு தான் வரமாட்டேன் என்கிறது. செத்துப்போக நானே எடுத்த முயற்சி… சைமன் மாமா அதைத் தடுத்துவிட்டார். ‘ஏசப்பாவை நினைச்சிக்கோ’ என்றார் அவர். ஏசப்பா பட்ட பாடுகளை நினைத்தபடியே தான் இத்தனை வருடங்களாக நான் அல்லாடிக் கொண்டிருக்கிறேன்.

ஆகா சாவு. அது வருகிறாப் போலவே இல்லை. நான் நினைச்சது எதுதான் நடந்திருக்கிறது. அதுவும் சாவு… ஆரம், அதை ஆசைப்படும் போது அது கிட்ட அண்டாதா? அப்படித்தானா? நமக்கு ரொம்ப அசௌகர்யப்பட்ட எதிர்பாராத நேரம் சடாரென்று அது புகுகிறது. இவர்… ஹசன்! அவர் மரணம்… இப்ப அவர் துக்கத்தில் இருப்பாரா தெரியவில்லை. இப்ப அவர் நரகத்தில் எரிஞ்சிட்டிருப்பார்னு நினைக்கிறேன். ஹசன், நீர் பண்ணின அக்கிரமம் கொஞ்சமா நஞ்சமா, அத்தனை பாவத்துக்கும் பிராயச்சித்தம் பண்ணி தொலைக்க முடியுமா அவற்றையெல்லாம்? நடக்கிற கதையா அது?

ஏய் மிர்சா, நீ தயவுசெஞ்சி என்னை அந்தாளு பக்கத்தில் புதைச்சிறப்டாது. உன்னை வேண்டி விரும்பிக் கேட்டுக்கறேன். டேய் கேட்டியா. நீ என்னை மல்பெரி மரத்தடியில், ஆரம் உறங்குகிறானே, அவன் பக்கத்தில் அடக்கம் செய். ஆரம், அவனே என் பிரச்னைகளுக்கெல்லாம் தீர்வானவன், என் சூரியன்… என் கண்ணீரைத் துடைப்பவன்… நான் உன்னாண்ட வந்துவிடுகிறேன் ஆரம்.

நான் இப்பிடி சாவு வராதான்னு அல்லாடிட்டிருக்கிறேன். ஹசன், அந்தாளு ஆயிரம் வருஷம் வாழணும்னு ஆசைப்பட்டாரு! தினசரி ஒவ்வொரு நாளையும் இதேமாதிரி நாக்கத் தொங்கப்போட்ட ஆசையோடதான் அவர் ஆரம்பித்தார். வீட்டு வெளி முற்றத்தில் இருந்த கல்லை பாறையை யெல்லாம் அப்புறப் படுத்தினார். குன்றுகளையே அவர் திராட்சைத் தோட்டங்களாக மாற்றிவிட ஆவேசப்பட்டார்.

கரடு முரடான பொட்டல்களை வயல்களாக தோட்டங்களாக உருமாற்றம் செய்ய உத்வேகங் கொண்டார். கல்சுவர் அரண்களும், உள்ளே கல்லுவீடுகளும் சமைத்தார். அவையெல்லாம் காலத்தால் கலைக்கப் படாது என்கிறாப் போன்றே அவர் கொண்டாடினார். ஒரு ஆயிரம் வருஷம் அவரே இருந்து எல்லாம் பார்த்து அனுபவிக்கிறாப் போல நினைப்பு அவருக்கு. அந்தக் காலங்களில் சாவோ, அதன்பின்னான போக்கிடமோ பற்றி அவருக்கு யோசனையே இல்லை!

மொல்லா மாஃபஸ் கூட அவரை வேடிக்கையா கிண்டலடிப்பார். ‘யப்பா, மரணமிலாப் பெருவாழ்வு, யாருமே வாழ்ந்ததா சரித்திரமே கிடையாதப்போவ்!’ அந்த நக்கலடிக்கும் குரல் இப்பக்கூட காதில் கேட்கிறது. ‘மகா சுலைமான்… அவங்களே மண்ணோடு மண்ணா ஆயிட்டாரு!’

விதி. அதுவும் ஹசன் நினைச்சதை நடத்த விடவில்லை. அவர் வாழ்க்கை. அவர் தேகம். அவரது அபிலாஷைகள். இஷ்டங்கள்… எல்லாமே அழிந்துபோயின. அவர் நோய்வாய்ப் பட்டார். எல்லா ஆஸ்பத்திரிகளும், மடங்களும், மதகுருமார்களும், ஊழியக்காரர்களும்… ஆளுக்காள் ஒண்ணைச் சொன்னார்கள். அவர் உடம்பு தேறவே இல்லை. நாளுக்கு நாள் அது ஷீணமாயிட்டே வந்தது.

என்ன காத்திரமான தேகம் அது, அதாலயே இத்தனை மருந்தும், இந்த வேதனையையும் தாள முடியாமல் ஆச்சு. மலையத்துவஜன் மாதிரி இருந்தார். பாறைகளையே தம் பிடிச்சி நகர்த்தி வைப்பார். கற்களை அப்படியே பொடியாக்குவார். அந்த உடம்பே சிதிலமாயிட்டது. அட அவரால, தானே எழுந்து உதவியில்லாமல் கால்கழுவி வரவே லாயக்கில்லாமல் போச்சு. படுக்கையிலேயே சில சமயம் ஒண்ணுக்கடிச்சிர்றாரு. தாகம்னால் தானே ஒரு தம்ளர் தண்ணி தன் கையால எடுத்துத் தூக்கி வாயில் தானே விட்டுக்கொள்ளக் கூட துப்புக் கெட்டுப் போயிட்டார். ஒரு தீ விபத்து, ஆத்திர அவசரம்னால் அவரால படுக்கையில் இருந்து சடாரென்று எழுந்து ஓடி தப்பிக்க இயலாது.

அவரைப் பத்தி எனக்கு இரு வேறுபட்ட அபிப்ராயம் இருந்தது. யப்பா அத்தனை பலசாலி இப்பிடி ஒடுங்கிட்டாரேன்னு எனக்கு வருத்தம் இருந்தது. அதேசமயம் உள்ளூற எனக்கு அதில் ஒரு திருப்தி… கடவுள் வெச்ச ஆப்புல்ல அது, என்ன ஆட்டம் ஆடினாரு…

படுத்த படுக்கைன்னு ஆனதும் ஹசனுக்கு மிர்சாவின் பரிவு, உபசாரம் வேண்டியிருந்தது. நல்லா இருந்த வரை அவனை கேவலமா நடத்தி பாடாப் படுத்திய மனுசன். ஒரு பெத்த அப்பனா அவனுக்கு அவர் தன் அன்பையும் பாசத்தையும் தந்ததே கிடையாது. ஆனால் இப்ப அவருக்கு மகனாக, மகானாக அவனிடம் அது வேண்டியிருந்தது. நல்ல பையன் அவன். மிர்சாவுக்கு அப்பாவிடம் அத்தனை வெறுப்பும் ஆத்திரமும் இருந்தது என்றாலும், அப்பாவை அவன் துடைத்து, குளிப்பாட்டி, சவரம் செய்து, உடையுடுத்த உதவி என்று பணிவிடைகள் செய்யத்தான் செய்தான். குண்டூசி அளவு கூட அவன் அவரைக் குத்திக்காட்டிப் பேசவில்லை. அவனது பரிவில் அப்பாதான் வெட்கப்பட்டு திக்கு முக்காடிப் போனார்.

ஆ ஹசன்… என என்னை யறியாமல் சத்தமாய்ப் பேசியிருக்கிறேன் போல. பக்கத்துப் பெண்கள் ஒருத்தரையொருத்தர் இடித்து சாடைகாட்டிக் கொள்கிறார்கள்.

‘பாவப்பட்ட பெண். புருசன் நினைவில் அவர் பெயரை சத்தமா முணுமுணுக்கிறாள். அவர் செத்து இத்தனை வருஷம் ஆகியும் இவ அவரை மறக்கவில்லை. பாவம், அவளுக்கு அந்தாள் மேல என்ன ஒரு இது…’ ஒரு பெருந்தலைப் பெண்மணியின் அனுமானப் பினாத்தல். அவ முகத்தின் சிரிப்பில் குறும்பும் குத்தலும் தெரிந்தது. திரும்பிக்கொண்டு ஜன்னலைப் பார்க்கப் படுத்தேன். அட ஹசன்… அதோ வயலும், திராட்சைத் தோட்டங்களும், கல்லுக் கட்டடங்களும்… அத்தனையும் ஒரு வலியை உணர்த்துகிற நினைவுச் சின்னங்கள். இந்த துக்கப்பட்ட, சந்தடியடங்கிய கிராமத்தில் இப்போது. அவற்றை நினைக்கிற ஒவ்வொரு கணமும் நான் உள்ளேயே லேசாய் செத்துப் போகிறேன்…

நடு நிசி. யாரோ வெளிக் கதவை இடிக்கிறார்கள். சிலீரென்று ஒரு பயம் என்னுள். என்ன கேடு சம்பவிக்கப் போகிறது என்பது எனக்கு முன்பே தெரிந்தாப் போல நடுக்குகிறது. வாரிச் சுருட்டிக்கொண்டு அந்த வீட்டை விட்டு நாங்கள் வெளியேறினோம். மிர்சா அவர்களைத் தடுக்க என முனைந்தபோது, ஆத்திரக் குமுறலுடன் அவனைப் பார்த்து அலறுகிறேன். ஐயோ அவர்கள் அவனைக் கொன்றுவிடுவார்கள், என திகிலெடுக்கிறது. மொல்லா மாஃபசை அவர்கள் அவன்வீட்டில் இருந்து ஒருநாள் அழைத்துப் போனார்கள். பின் அவன் சடலம் ஆற்றங்கரைப் பக்கம் கிடந்தது. மிர்சா, சனியனே, அவர்களோடு முரண்டாதே… வாயை மூடிக்கிட்டு இருடா. ம். நான் அப்படித்தான் உயிர் தப்பித்தேன். அப்படியே வாயைத் திறக்காமல், அவனும் பிழைத்துக்கொள்ள நான் விரும்பினேன். அடங்கினான் மிர்சா.

ஊரே தூக்கக் கலக்கத்துடன் அந்த இரவு எப்படி கொடூரமாக உருவெடுக்கிறது என்று பார்த்தது. ஊரின் மொத்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என திடல் பக்கம் கூடியதும், சிப்பாய்கள் எங்கள் வீடுகளைத் தீயிட்டார்கள். எங்களது உடைமைகள் எல்லாமே உள்ளேயே இருந்தன. எங்களது லாயங்களையும், பிராணிகள் உள்ளேயே அடைந்து கிடந்தன, தீக்கிரை யாக்கினார்கள். வெறுமனே எங்களை வீடுகள், உடைமைகள், சொத்தபத்துக்கள் என்று இல்லை, நாங்கள் எங்கள் கடந்த காலத்தையே, எங்கள் நல் நினைவுகளையே, நம்பிக்கைகளையே அல்லவா இழந்தோம்.
தீயின் நாக்குகள் வீட்டைச் சுவைத்து வானுக்கு எகிறிக் குதிக்கிற சமயம், என் சாபப்பட்ட கல்யாண ராத்திரி ஞாபகம் வந்துதொலைத்தது எனக்கு. மாப்பிள்ளை மரம். அடியில் நான் உட்கார்ந்திருந்தேன்.

அதன் கிளையெல்லாம் கனமாய்ப் பழங்கள், இனிப்புகள், கொட்டையும் பருப்புமாய்த் தொங்கின. கருப்பு சிவப்பு சேவல் ஒன்றை அப்போதுதான் அறுத்து காலில் கட்டி தலைகீழாக மர உச்சியில் தொங்க விட்டிருந்தார்கள். அதன் கழுத்தில் இருந்து சொட்டுச் சொட்டாய் ரத்தம் சொட்… கிளைகள் ரத்தத்தில் நனைந்தன. பார்க்கவே திக்கென்றது. அந்த நேரம் ஹசன், நீ எப்படி சந்தோஷமாய் இருந்தாய். சனங்கள் உன்னைச் சுற்றி ‘ஹாலே’ ஆட்டம் ஆடுகிறார்கள். நான் வீடு சேர, அந்த ஆட்டக்காரர்கள் எல்லாருமே மரத்தின் பழங்களுக்கும், இனிப்புகளுக்கும், கடலை, பருப்புகளுக்கும் முட்டியடித்து சூறை…

பெருஞ்சத்தம். ஆகாயத்துக்கு எகிறும் ஜுவாலைகள். அந்த மாப்பிள்ளை மரமே சடசடவென்று சரிந்தது. மிர்சா கையைப் பற்றிக்கொண்டேன். தீக்கிரையான வீட்டை விட்டுவிட்டு என்பக்கமாக இழுத்தேன். வீடு, அதன் பொக்கிஷங்கள், நினைவுகள் எல்லாவற்றிலும் இருந்து அவனை வெளியே இழுத்தேன். பினவ்ஸ் குட்டி, அவளுடைய மரப்பாச்சி பொம்மையைத் தன்னுடன் எடுத்துக் கொண்டாள். திகுதிகுவென்று எலலாமே பற்றி எரிகிறதைப் பார்த்தபடி அவள் பொம்மையை இறுக்கி அணைத்துக்கொண்டாள். ஒரு சிப்பாய்க்கு அது பொறுக்கவில்லை போல. அவன் வந்து அவள்கையில் இருந்த பொம்மையைப் பிடுங்கினான். அதை அவன் தீயில் வீசுமுன் இன்னொரு சிப்பாய் பாவம்பார்த்து அதை அவனிடம் இருந்து வாங்கி என் மகளிடம் திருப்பித் தந்தான்.

ஃபட்மா என் கையைப் பற்றிக்கொண்டாள். ‘அம்மா, யாரு வந்திருக்கான்னு பாரு.’ வந்தவளை எனக்கு ஞாபகம் இல்லை. ‘இவளைத் தெரியலையா,‘ என்று ஃபட்மா கேட்டாள். ‘திலன். நம்ம பக்கத்து வீடு அப்பாஸ்… அவரோட பொண்ணு. உங்களை ரெண்டு மூணு வாட்டி ஆஸ்பத்திரிக்கு வந்து அவ பாத்துட்டுப் போனாள்… அம்மா, இவளுக்கு இப்பதான் கலயாணம் நிச்சயம் ஆகியிருக்கு.‘ ஃபட்மா அப்படியே ஓரக்கண்ணால் ஜேனப்பைப் பார்த்தாள். அவன்பாட்டுக்கு ‘யாசின்’ உச்சாடனம் செய்துகொண்டிருக்கிறான். அவனைச் சீண்ட ஃபட்மா ஆசைப்பட்டாப் போலிருந்தது. ‘இதெல்லாம் சிலப்ப, அவங்கவங்க அதிர்ஷ்டம்னு ஆயிருது.இல்ல?‘ என்றாள் ஃபட்மா.

என்னைப் பார்க்க முத்தமிட குனிந்தாள் ஃபட்மா. அவள் முகம் நாணத்தால் சிவந்தது. அவளது நகையலங்காரம் பார்க்கிறேன். கழுத்து நகை, வளையல்கள், காதணிகள், மோதிரம்… அவளைப் பார்த்துப் புன்னகைக்கிறேன். ‘எப்படி இருக்கீங்க,‘ என சத்தமாய்க் கேட்டாள் அவள். நான் தலையாட்டினேன். அவ்வளவுதான், வந்த வேலை முடிந்தது, என்கிறாப் போல அவள் அவசரமாய் என்னைவிட்டு வெளியே போனாள். எனது மூப்பு, அவளைத் தொத்திக்கும் என்று பயந்தாப் போல. கண்ணை மூடிக்கொண்டேன். அவர்கள் வெளியே கிசுகிசுப்பதும், பேச்சுகளும் எனக்கு வேண்டாம். என் துக்கம் எனக்கு. பேசாமக் கிடந்து தூங்க முடியுமா பார்க்கலாம்.

அன்னிக்கு, ஹசன் முடிவெட்டி, மழுமழுன்னு ஷேவ் எடுத்திருந்தார். அவரது மேல்கோட்டு மகா தொள தொள. ஒருமாதிரி பரவசப் பரபரப்போட இருந்தார். நான் கொட்டகையில் அவர் தந்த எதையோ சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அந்த மனுசன் குனிந்து தன் காலைப் பார்த்தபடி காலாட்டிக் கொண்டிருந்தார். ஒரு கணம் எங்கள் கண்கள் சந்தித்துக்கொண்டன. சட்டென பார்வையை விலக்கிக்கொண்டார். பின் திடீரென என்னை அவர் கண்ணுக்குக் கண்ணாக ஊடுருவுகிறாப் போல உறுத்துப் பார்த்தார். சொன்னார். ‘ஏய் ஹதைஸ், நீ என் பொண்டாட்டியா வரப்போறே. நாம கல்யாணங் கட்டிக்கப் போகிறோம்!‘

எனக்கு உடம்பே லேசாய் அதிர்ந்தது. ஆரமுடைய சிதைக்கப்பட்ட சடலம், மரத்தில் தொங்கிய காட்சி என்னில் பெரிசாய், இன்னும் பெரிசாய் வளர்ந்தாப் போல ஒரு நடுக்கம். அழுகையை மீறிய ஒரு திகைப்பும் திணறுலும். எதைப்பத்தி அழுவேன் நான்? என் பெயர்… அல்மஸ்ட். இப்ப பேர் மாத்தியாச்சி, ஹதைஸ். கிறித்துவச்சி இப்ப துலுக்கச்சி ஆனதையிட்டு அழறதா? எங்க ஐயா, அண்ணன், சகோதரிகள் எல்லாருமே கொல்லப்பட்டு விட்டதை நினைச்சி அழறதா? அவர்கள் எல்லாருடைய சடலங்களுமே மலைப்பகுதியில் அப்படியே அழுக விடப்பட்டதே, அதற்கு அழறதா? அப்புறம், கிஞ்சித்தும் காதலோ, அன்போ இல்லாத இந்த மனுசனுக்கு நான் வாழ்க்கைப்படப் போகிறதை நினைத்து அழறதா? ஏற்கனவே எனக்கு அழுதழுது கண்ணீரே வத்தியாச்சி. தனியே எனக்குள்ளயே நான் அத்தனை அழுது தீர்த்தாச்சி… அப்படியே என் கண்ணுக்குள் பார்த்தபடி எதுவும் பேசாமல் கிடந்தேன்.

அடுத்த நாள் என்னை கொட்டகையை விட்டு வெளியே அழைத்து வந்தார் ஹசன். இடையில் எவ்வளவு காலம் ஆனது என்கிற கணக்கே விட்டுப் போச்சு எனக்கு. மரங்களில் இலைகளின் வண்ணங்கள் மாறி யிருந்தன. சில மரங்கள் இலைகளே இல்லாமல் மொட்டையாய் நின்றன. சுற்றுச் சூழலின் மாற்றங்களை வைத்து இந்த இடைப்பட்ட காலத்தை அளக்க முடியுமா என நான் முயற்சி செய்தேன். அந்த வெளிச்சமே என் கண்ணைக் குத்துவதாய் இருந்தது. என் கண்கள் இருட்டுக்குப் பழகிக்கொண்டிருந்தன. மாடிக்குப் போனோம். ழேசி, ஹசனின் அம்மா, கொட்டகைக்கு அவள் ரெண்டே வாட்டி தான் வந்தாள். அறையின் நடுவில் அவள் உட்கார்ந்திருந்தாள். என்னையே பார்த்த அவள் கண்ணில் அத்தனை ஆங்காரம். ஹா, மாமியார்க்காரியுடன் நான் நட்பு பாராட்டவே முடியாது. அவளைப் பொருத்தமட்டில் நான் வேற்று மதக்காரி. அவங்க சாமியை விட்டு வேற சாமி கும்பிடற பாவி நான். அதை மறக்கவோ மன்னிக்கவோ எப்பிடி முடியும்?

எனக்கு கடைத்தேற்றம், விமோசனம் இல்லை. ஹசன் கல்யாண ஏற்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்தார். என்ன நடக்குதுன்னு எனக்கே தெரியாமல் பல நாள் ஏற்பாடுகள். நான் வீட்டுக்குள்ளே யாரு என்ன வேலை சொல்றாங்களோ அதைத் தட்டாமல் செய்தபடி யிருந்தேன். ஏன் எதுக்கு என்று நான் கேள்வி கேட்கவே இல்லை. எனக்கு ஒரே தீர்மானம்.. நான் வாழ வேண்டும்… எத்தனை சோதனை வந்தாலும், அதையெல்லாம் ஏற்றுக்கொண்டு, கடந்து நான் வாழ்வேன்… என்றாலும் ராத்திரி படுக்கப் போகும்போது, வாழ வேண்டும் என்ற உந்துதலில் நான் தலைவணங்கிய காரியங்கள், எனக்குள் அடக்கி வைத்திருந்த அதன் குமுறல்கள்… எல்லாமே மேலெதுத்து வந்தது. விடியும் வரை நான் அழுது தீர்த்தேன்.

கல்யாண நாள். வீடு நிறைய ஹசனின் உறவினர்கள். அலப்போவில் பழக்கமான நபரின் மகள், என அவர் என்னை எல்லாருக்கும் அறிமுகம் செய்தார். அப்போதைய என் உணர்ச்சிகளை எனக்கே வெளிப்படுத்தத் தெரியாதபடி நான் திகைப்பில் இருந்தேன். மூதாட்டிகள் என்னைப் பார்த்து என் அழகை வியந்தார்கள்.

கண்கள். சிகை, கழுத்து, இடை, உயரம், கைகள், பாதங்கள் என அவர்கள் அளவெடுத்து ஆகா, எனப் பாராட்டினார்கள். என் வதனத்தின் எடுப்பான மச்சங்களை, வரிகளையெல்லாம் சுட்டிக்காட்டிப் பேசினாள் ஒருத்தி. இதோ, இந்தா இது… என எண்ணி எண்ணிக் காட்டி வியந்தாள். என் உதட்டோரத்து ஒரு மச்சத்தை அவள் தொட்டுக்கூட பேசினாள். பிறகு அவர்கள் என்னைவிட்டு முகம் திருப்பி தங்களுக்குள் என்னென்னவோ பேசிக்கொண்டார்கள். ஆரம் எப்பவுமே என் கூந்தலை, கண்களை, அந்த முக மச்சங்களைப் பற்றியெல்லாம் ரசித்துப் பேசுவான்.

ஒருநாள் அவனிடமே கேட்டேன், ‘ஏய் என் பிரிவு உன்னை எந்த அளவு பாதிச்சிருக்கு?‘ அந்தக் கேள்வியே அவனைத் திகைக்க வைத்துவிட்டது. என்னையே உற்றுப் பார்த்தான் அவன். ‘அதை எப்பிடிச் சொல்றது… ம்ஹும். போதாது… இது, இதுவும் பத்துமா என்ன? என் வார்த்தைக்கும் மேலா ரொம்ப, ரொம்ப உன்னை இழந்துவிட்டேனடி…‘

மூதாட்டிகள் உள்ளே என் மாமியாரிடம் போய் என் அழகை அவர்கள் கொண்டாடிப் பேசினார்கள். ஆனால் என் மாமியார், அவ யாரையோ பறிகொடுத்தா மாதிரி உட்கார்ந்திருந்தாள். அவர்களிடம் ஆத்திரப்பட்டாள் அவள். ‘பாருங்க அவளை…‘ என இரைந்தாள். ‘அவ முகம் பூரா புள்ளிகள். அதையா போயி அழகுன்றீங்க?‘ வேணுமென்றே அவள் குத்தலாய்ப் பேசினாள். ‘என் பிள்ளை ஹசன், அவனையும் பாருங்க.

இந்த புள்ளிக்காரி இவளையும் பாருங்க. பாத்திட்டுச் சொல்லுங்க…‘ அவளைக் கேட்டபடி நான் தலையைக் குனிந்துகொண்டேன். இந்த மச்சங்கள்… ஆரம் இவற்றை ரசித்தான். கொண்டாடினான். எனது உடலின் ஒவ்வொரு மச்சத்துக்கும் அவன் தனியே பேரே வைத்திருந்தான்! ஒவ்வொரு மச்சமாய் நான் மெல்ல வருடியபடியே அவற்றின் பெயர்களை, ஆரம் சொன்ன பெயர்களை, உச்சரித்துக் கொண்டேன். ‘மாதுளைமுத்து. ஆலவிதை. இசைப்பொததான். அன்னம். ஆடம். மேரி. நட்சத்திரம். புள். ஆகாயம்…‘

சமையல் ஆகி எல்லாம் தீன்று தீர்த்தார்கள். ‘ஹாலே‘ (சடங்கு) முடிந்தது. ஆக சட்டுப்புட்டென்று கல்யாண வைபவம் முடிவுக்கு வந்தது. விருந்தாளிகள் ஒவ்வொருவராய் அவரவர்வீடு திரும்பினார்கள். என் மாமியார்க்காரி என்னைக் கையைப்பிடித்து தனியறை வரை அழைத்துப்போனாள். என் முகத்தை சிவப்புச் சல்லாவால் மறைத்திருந்தார்கள். அறை நடுவே பெரிய கட்டில். அதில் என்னை அமரப்பண்ணினார்கள். இவள், என் மாமியார்ப் பிசாசு என்னைப்பார்க்க குனிந்து மெல்ல என் சல்லாத்திரையை நீக்கினாள்.

என்னை கண்ணோடு பார்த்தபடி அந்த ராத்திரி நான் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று எடுத்துச்சொன்னாள். என்னவெல்லாம் நடக்கும் என்று விலாவாரியான விளக்கம். பூவேலையிட்ட பருத்தித் துணி ஒன்றை எனக்குத் தந்தாள். இதைப் பயன்படுத்து… என்றபடி திரும்ப என் முகத்திரையைப் போட்டாள். அவள் அறையைவிட்டு வெளியேறியபோது என் உயிரே வெளியே போனாப்போல இழப்பு திக்குமுக்காட்டியது. குரல்களே ஒலிகளே கேட்டாலும் வார்த்தைகள் புரிய மறுத்தன. அந்தத் துணிக்குட்டையைப் பார்த்தபோது ஒரு நடுக்கம் என்னுள் தண்டுவடம் வரை வெட்டியது.

ராணுவம் போல வெளியே இரைச்சல். கூக்குரல்கள். கைதட்டல்கள். அறையைநோக்கி வருகிறார்கள். வாசல் கதவருகே அவர்கள் அப்படியே நின்றார்கள். சத்தக்காடு. பாடல்கள். ஹுங்கரிப்புகள். பகடி… என் தலைக்குள் வெடித்தன அவை. ஒரே குழப்பம். திடுதிப்பென்று கதவு திறக்கப்பட்டு, ஹசனை முதுகில் ஒரு உந்து! ஹா ஹு என சப்த சைரன். வெளியே அந்த வெடிச்சிரிப்பும் கைதட்டல்களும் தொடர்ந்தன.

இந்தப் பகல்கனவை மிர்சாவின் குரல் கலைக்கிறது. ஜேனப் என்னருகே சத்தமாய் குரான் வாசிக்கிறது கேட்கிறது. இனிய குரலில் கண்பனிக்க வாசிக்கிறான். திலன் எல்லாருக்கும் தண்ணீர் விநியோகிக்கிறாள். என் முதுகை நிமிர்த்தி தம்ளரை உதட்டில் பதித்து எனக்கும் சிறிது தண்ணீர் புகட்டுகிறாள். தண்ணீர் என் வாயில் இருந்து கழுத்தில், நெஞ்சில் வழிகிறபோது என் படுக்கையில் அருகே கிடந்த சிறு துண்டுத்துணியை எடுத்து அழுத்தமில்லாமல் துடைக்கிறாள்.

திரும்பவும் என் முதுகைத் தளர்த்தி அவள் படுக்கையில் சரிக்கிறபோது, வெளியே குரல்கள் கேட்டன… குரல்கள்! நடமாடும் காற்று போல மெல்ல அடங்கும் குரல் ஒலிகள். சூழும் நிசப்தம். கதவுப்பக்கமாய் ஹசன். மகா உடைகளுடன். சிவப்பு சல்லாவூடாக அவரைப் பார்க்கிறேன். அவை அவருடைய உடை போலவே இல்லை. வேறு யாரோ ஆஜானுபாகு, வீரபாகுவுடைய உடைகளாய் அத்தனை தொளதொளத்துக் காண்கின்றன. மேல்உடையை உருவியெடுத்தார். தொண்டையைச் செருமிக்கொண்டார். உள்ப்பையில் இருந்து தங்க கழுத்தணி ஒன்றை வெளியே எடுத்தார்.

என் கழுத்தில் அதை அணிவிக்க அவர் என்னை நெருங்கி… திரும்ப வேறொரு ராத்திரி என் நினைவுக்கு வருகிறது. ஆயுதங்களுடன் எங்களைத் தாக்கிய அந்த திருட்டுப் பட்டாளம். பெண்கள் எல்லாரிடமும் இருந்த எல்லா நகைகளையும் அவர்கள் பறித்துக் கொண்டார்கள். கொட்டகையில் பெருச்சாளி ஒன்றை சாவடிக்கிற ஒலியைக் கூடக் கேட்டேன். அந்த ராத்திரி… மெர்யம், அவளுக்கு தன் கழுத்தணியை விட்டுத்தர ஒப்பவில்லை. அவள் முரண்டு பிடித்தாள். ஒரு கொடும்பாவி சட்டென துப்பாக்கியை உயர்த்தி, அவளை… சுட்டே விட்டான். அவளது உடலை அவன் பார்த்த பார்வையில் இருந்த ஆத்திரம். அவளைப்பார்க்க குனிந்து அந்த நகையை வெடுக்கென அறுத்தான்.

என் முகத்தின் சிவப்பு சல்லாவை மெல்ல ஹசன் உயர்த்தினார். வெளி சந்தடிகளும் இரைச்சலும் மங்குவதை நான் கவனித்தவாறிருந்தேன். என்னருகே சிறிது தயக்கத்துடன் குனிந்தவாக்கில் ஹசன். பின் எழுந்து தன் உடைகளைக் களைய ஆரம்பித்தார். மேலுடை. கால்சராய். சட்டை. வேறு யாருடையதோவான உடைகளை விடுவித்தார். என் உடைகளை அவிழ்க்க அவரது வியர்த்த கரங்களில் சிறு நடுக்கம். படுக்கையில் என் இடுப்புக்குக் கீழே மாமியார் தந்த அந்தத் துணியைப் பரப்பிக் கொண்டேன். பார்வை மேல் உத்திரத்தில். என் கண் ரப்பையடியில் பதுக்கி வைத்திருக்கிற ஆரம், அவனைப் பார்க்கக் கூடாது என்கிற தீர்மானம்.

வேணாம் வேணாம் என மறுக்க மறுக்க, அவன் முகமும், குரலும் மேலெழும்பி வருகிறது… கண்ணீர் பெருகி கன்னத்தில் வழிகிறது. என் குடும்பத்தின் ஞாபகம். நிர்வாணப்படுத்தி அவர்களை மிருகங்களைப் போல சுட்டுத் தள்ளினார்கள். அந்த உடைகளை எடுத்துக்கொண்டு போன சிப்பாய்களை நினைத்துக்கொண்டேன். முகங்களும், குரல் இரைச்சல்களுமாய் என்னை மூழ்கடித்தன… ஹசன் விளக்கணைக்க எழுந்துபோனார். பதட்டமான அந்த விளக்குச் சுடர் அமர்ந்து, இருள்… இருள் சுற்றிவளைத்து முற்றுகையிட்ட அந்த ராத்திரி. என் பார்வையை உத்திரத்தில் இருந்து நான் மீட்டுக்கொள்ளவே யில்லை. இருள் கண்ணுக்குப் பழகியிருந்தது. நானும் அடங்கிக் கிடந்தேன்.

***

அட ஆரம், ஆரம், நான் மரணப்படுக்கையில் கிடக்கிறேன். என் மகன், பேரக்குழந்தைகள், மருமகப் பிள்ளைகள், எனது சிநேகிதப் பட்டாளம். எல்லாரும் என்னைச் சூழ்ந்திருக்கிறார்கள். எல்லாரும் என்னைக் கரிசனமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அன்பு, இரக்கம், துக்கம். என் நிலையில் தாங்கள் இல்லையே என அவர்கள் சந்தோஷமும் படலாம். அவர்கள் கண்களைப் பார்த்தேன். சாவுதான் எனக்குத் தோதானது. இப்பவே கூட நான் எங்கே வாழ்கிறேன்… செத்த கணக்குதான் இது, சும்மா மூச்சு போய்வருது, என அவர்கள் நினைத்தார்கள். எல்லாருமே கவலையாய்ச் சவலையாய் இருந்தார்கள்.

ரெண்டு நிமிஷத்துக்கொருதரம் ரஸ்டம் தன் மொபைலைப் பார்த்து, அதில் குறுஞ்செய்தி பரிமாறுகிறான். என் நிலைமை இத்தனை களேபரமாய் இல்லையென்றிருந்தால் அவனைப் பள்ளிக்கூடம் அனுப்பியிருப்பார்கள். இங்கேயே வந்து நாள்க்கணக்கில் தங்கியிருக்கிறாட்கள், இப்ப வந்தாட்கள், எல்லாரும் என் முகத்தையே… ஐய ஏம்மா இவ்வளவு பிடிவாதமா கஷ்டப்படறேன்றாப்ல பார்க்கிறார்கள்.

ஜேனப், தில்பர் நாள்பூரா குரான் வாசிக்கிறார்கள். சீக்கிரம் என் ஆத்மா என் தேகத்தைவிட்டுச் செல்லட்டும்… அவர்கள் அலுத்துக் களைத்திருக்கிறார்கள். கிழவிக்கு இன்னும் அந்த வைராக்கியம் விடுதா பாரு, என அவர்கள் நினைக்கலாம். அவர்களின் பொறுமையின்மை என்மீது காத்துப்போல மோதியது. என் தலை கிர்ரென்றது.

கதவு திறந்தது. பினவ்சின் சின்னப் பெண், என் பேத்தி ஸ்ட்ரான் உள்ளே வந்தாள். வெள்ளை கவுன். கூந்தலைப் பின்னிவிட்டிருந்தாள். பாவம் சிறு குட்டி. பெண்கள் குரான் வாசிக்கிற அந்த அறையே அவளுக்குச் சங்கடமாய் இருந்தது. எனது கனமான மூச்சிறைப்பு வேறு. அவள் முகம் வெளுத்தது.

ரஸ்டம் குறுஞ்செய்தி யனுப்பிய வண்ணம். மிர்சா ஸ்ட்ரானைப் பிரியத்துடன் பார்த்தபடி. நான் ஸ்ட்ரானைப் பார்த்தபோது அவளை அவள்அம்மா தன் மடியில் தூக்கி வைத்துக்கொண்டாள். நான் குழந்தையைப் பார்த்து புன்னகைகாட்ட முயன்றேன். அது முகத்தைத் திருப்பிக்கொண்டது. பேசவேயில்லை. அதற்கு பயமாய் இருந்தது போல. என்னைக் காட்டிவிட்டு அப்படியே அம்மாவை அது இறுக்கிக் கட்டிக்கொண்டது.

பக்கத்துவீட்டுக் குழந்தை பெர்வின். தில்பரின் காதில் என்னவோ சொன்னது. ஓரக்கண்ணால் என்னையே அது பார்த்துக்கொண்டிருந்தது. அவள் உதடு அசைவதையே பார்த்தேன். தில்பர் அவள் பக்கமாய்த் திரும்பிச் சொன்னான். ‘அவங்களுக்கு வயசு நூறாயிட்டது. கூடக் கூட இருக்கும்!‘ பெர்வினுக்கு ஆச்சர்யம்.

என்னையே அது குறிப்பாய்ப் பார்த்தது. ‘அவ்வளவு பெரியவங்களா. மாஷா அல்லா! கடவுள் அவங்களை அழைச்சிக்கிடட்டும். அவங்க அமைதியா ஓய்வு எடுத்துக்கட்டும்…‘ அதைக்கேட்டு தில்பர் தலையாட்டினான். ‘ஆமாம். அவங்க ரொம்ப கஷ்டப்பட்டுட்டாங்க. மரணம்னால் அது அவங்களுக்கு இப்ப இந்த வலியில் இருந்து நிவாரணம். அதைத்தான் விதின்னு சொல்றோம்.‘ தலையைத் திருப்பி அவங்களை உதறுகிறாப்போல கண்ணை இறுக்க மூடிக்கொண்டேன்.

ஆரம்… எல்லாரும் நான் செத்துப்போகப் பயப்படுகிறாப் போல நினைக்கிறார்கள். நான் சீக்கிரம் செத்துட்டா நல்லதுன்றாப் போல நினைக்கிறார்கள். என் கண்ணில் மண்ணைக் கொட்டுவது எனக்கு பயங் கிடையாது. உடலுக்குள்ளே புழுக்கள் துளைக்கிறதிலோ, என் சதையும் எலும்புகளும் அரித்துப் போவதிலோ, என் இதயத்தையும், நுரையீரல்களையும் பூச்சிகள் தின்கிறதிலோ எனக்கு பயம் கியம் எதுவும் இல்லை. எல்லாமே உண்மைக்கு மேலானது இல்லை. இவற்றைத் தவிர்க்க யாரால் முடியும்? இதெல்லாமும் எனக்கு பயம் தரவில்லை. என் யோசனை என்ன, நான் இறந்து போனால்… ஆரம், உன்னிடம் வந்துவிடுவேன்! மரணம் என்னை உனக்கு கல்யாணப்பெண்ணாய்ப் பரிசளித்துவிடும்!

என் கண்ணே, கண்ணின் கருமணியே நீதான். என் விடிவெள்ளி நீயே. என் பிரார்த்தனைகளின் வரம் நீயே. இத்தனை வருஷமாய் நான் ஒரு ரகசியத்தை வைத்திருந்தேன். முதலில் எனக்குள்ளேயே அதை வைத்திருந்தேன், எனக்கே தெரியாமல். தெரிந்தபோது என்னைச் சுற்றியுள்ள எல்லாரிடமும் அதை மறைத்து பாதுகாத்தேன். ஆனால் இந்தவேளையில், அதை என்னோடு சுமந்து போக முடியவில்லை. கல்லறை மண்ணோடு அதைப் புதைத்துக்கொள்ள முடியாது என்னால். அதற்கான வலிமை என்னிடம் இல்லை. அந்த ரகசியமே என் மூச்சைத் திணறடிக்கிறது. நெஞ்சுக்குள் அனலைப் பாய்ச்சுகிறது மூச்சு. என் உயிர்த்துடிப்பு மெல்ல உடலைவிட்டு அகல்வதை என்னால் உணர முடிகிறது. நான் மேலும் மேன்மேலும் எடை இழந்து வருகிறேன். இந்த வரப்பட்டிக்காட்டில் என் சொந்தக்காரர்களும், சிநேகிதர்களுமாய் என்னைச் சுற்றி. எனக்கு விடைதர தயார் நிலையில். ஜேனப் என் பக்கத்தில் அமர்ந்து குரான் ஓதியபடி. ரொம்ப சிரமம் இல்லாமல் என் ஆத்மா உடலைப் பிரியட்டும்.

இருள் மெல்லப் பரவுகிறாப் போலிருந்தது. ம். இவைதான் என் இறுதிக் கணங்கள். என் அறையில் இருக்கிறாட்களை வெளியே போகச் சொல்லி ஜாடை காட்டினேன். தங்களுக்குள் என்னென்னவோ பேசியபடி அவர்கள் எழுந்து வாசலைப் பார்க்க நகர்ந்தார்கள். ‘கடவுள் அந்த பாவப்பட்ட ஆத்மாவை சீக்கிரம் அழைச்சிக்கட்டும். மரணம் தான் அவளுக்கு ஆறுதல். அவளை ஆசுவாசப்படுத்தும் கடவுளுக்கு நன்றி.‘ ஆமாம், ஆரம், எனக்கு மரணத்தை அளித்த கடவுளுக்கு நன்றி. அதிர்ஷ்ட நட்சத்திரங்களுக்கு நன்றி. மரணம்னு ஒன்று இல்லாவிட்டால், ஆரம், நான் எப்பிடி உன்னாண்ட வந்துசேர முடியும்?

இப்போது அறைக்குள் மிர்சாவும் ரஸ்டமும் மாத்திரமே. கொஞ்சம் பதட்டமாகவும் பயமாகவும் அவர்கள் என்னைப் பார்த்தார்கள். என் கடவாய்ப் பற்கள் போன்ற குலக் கொழுந்துகள் அவர்கள். தூரத்து ஆனால் ஒட்டிய உறவுகள் தான். ரஸ்டம் வாசித்துக் கொண்டிருக்கிற புராணக்கதை. கடவுளுக்கு இஸ்மாயிலை தியாகம் செய்யத் தயாராகும் இப்ராகிம்! அவன் இப்ராகிமையே உற்று நோக்கினான். இஸ்மாயில், வெண் பலியாடு. சிறகடிக்கும் தேவதை. நான் அவனையே அசுவாரஸ்யத்துடன் கவனித்தேன். அவனோ என்னைப் பார்ப்பதையே தவிர்த்தான்.
அவர்கள் இருவரையும் என் அருகே அழைத்தேன். என் இடவாக்கில் ரஸ்டம். வலமாய் மிர்சா. மகனையும், பேரனையும் பார்த்தேன். என் கையோடு அவர்கள் கைகளைப் பற்றிக்கொண்டேன். அவற்றை லேசாய் அழுத்தி இன்னும் கிட்டமாய் வரும்படி கூப்பிட்டேன். மிர்சா என் வாயருகே குனிந்து நான் பேசுவதை கிரகிக்க முயன்றான். திடுதிப்பென்று மகா இரைச்சலாய் ரிங்டோன். அலைபேசியை எடுக்கிற ரஸ்டமை மிர்சா கோபமாய்ப் பார்த்தான். ‘ஏய் அதை அணைடா.‘ ஆனால் ரஸ்டம் அழைப்பை செவிமடுத்தான். ‘கண்ணே, நான் அப்பறம் கூப்பிடட்டுமா உன்னை?‘ பிறகு அப்பாவை, உனக்கு இதெல்லாம் புரியாதுப்பா, என்கிறதாய் ஒரு பார்வை. என்னடா இவன், என ஆங்காரமாய் மிர்சா அவனைப் பார்த்தான்.

திரும்ப மிர்சா என்னிடம் நெருங்கிக் குனிந்தான். ‘ஆரம்… ஆரம்‘ என அவன் காதில் நான் பெருமூச்செறித்தேன். அந்தப் பெயரை உச்சரிக்கிற போதே இதமாய் இருந்தது. ஆழ்ந்து மூச்சிழுத்தேன். இன்னுமாய் அவனைக் கிட்டத்தில் வைத்துக்கொண்டேன். ‘என் மகனே. என் மிர்சா… நான் சொல்றதை கவனமாக் கேளு…‘ மேலும் பேசத் திராணியற்று திகைக்கிறது. தொண்டை வறள்கிறது. திரும்ப ஆழ்ந்து மூச்சிழுத்தேன். ‘எய்யா, மிர்சா!‘ அவனுக்குக் கேட்கவில்லை போல. திரும்ப அவன் ‘ஷாகதா‘ வசனங்களை வாசிக்கப் புகுந்தான்.

கையை உயர்த்தி அவனை நிறுத்தினேன். அவனை இன்னுமாய் என் கிட்டத்தில் இழுக்க திணறலாய் இருந்தது. அவன் வாய் என் காதை ஸ்பரிசிக்கிற நெருக்கம். ஹசனைப் பத்தி, ஆரம் பத்தி, எனது கடைசி சடங்கு பத்திப் பேசினேன்.

‘என்னை ‘அங்க‘ புதைச்சிரு, எனன? அதான் என் கடைசி விருப்பம். இதை நீ செஞ்சாகணும். என் ஆசிர்வாதம் வேணுன்னால் அதை நீ எனக்குக் கட்டாயம் செய்யணுண்டா.‘ அவன் முகம் வெளிறியது. தொண்டையில் மயிர சிக்கினாப் போல அவன் திணறினான். என்னவோ பேச வந்தவனை வாயைப் பொத்தி நிறுத்தினேன். ‘என்னோட அருமைப் பிள்ளை நீ, என் வீர மகன் நீ என்றால், என்னை ‘அங்க‘ தான் புதைக்கணும். செய்வியா இவனே? சத்தியம் பண்ணிக்குடு எனக்கு.‘
‘ம். சரி. சத்தியம்…‘ அவன் என் கைகளை அழுத்தினான்.
நடுங்கும் பிம்பங்களை விட்டுப் பிரித்து கண்ணை மூடினேன்.

மிர்சா தன் மகனை ஒரு தீர்மானத்துடன் பார்த்தான். ரஸ்டமுக்கோ என்ன நடந்ததுன்னே தெரியவில்லை. அவன் துக்கமாய் இருந்தான். எனது கடைசி வேண்டுகோள், அவர்களுக்கு அது பெரிய அநியாயச் செயல், குற்றம் அல்லவா? மிர்சா இப்போது அதைத் தேறிவர, அதன் இறுக்கம் ரஸ்டமிடம் வந்து சேர்ந்தாற் போலிருந்தது. மிர்சாவிடம் இப்போது ஒரு உறுதியும், உசுப்பிவிட்ட உக்கிரமும் வந்திருந்தது. எனக்கு நாக்கே உலர்ந்து இறுகிக்கொண்டு வந்தது. பெருமூச்சுகள். ‘ஆரம்! ஆரம்!‘ என் குரல் அப்படியே அந்த அறையில் அந்தரங்கத்தில் தொங்கியது. நான் பார்க்கிற திறனை இழந்தேன்.

•••

The lost lands of Paradise – Yavuz Ekinci –
originally in Turkish –
trs. English by Kardalen Kala
(courtesy Words without borders)

SIBICHELVAN’S POEMS ( தமிழிலிருந்து ஆங்கிலத்தில் ) Rendered in English by Latha Ramakrishnan

download (23)

SIBICHELVAN’S POEMS

Rendered in English by Latha Ramakrishnan

1

JUST AS A CARROT ROLLS

Utterly helpless

Grandma keeps waiting….

Waiting to be far away from her

kith and kin;

Being on her own.

Death is yet to come

She keeps waiting for that too.

Relatives are yet to come

She waits for their arrival too.

Everything

Keeps rolling just as a carrot rolls

So very casually.

ஒரு கேரட் உருண்டு போவதைப் போல

எதுவும் செய்ய இயலாமல் காத்துக்கொண்டிருக்கிறாள் பாட்டி

உறவுகளை விட்டு வெகு தொலைவில்

தனித்து இயங்க வேண்டுமெனக் காத்திருக்கிறாள்

மரணம் வந்தபாடில்லை

அதற்கும் காத்திருக்கிறாள்

உறவுகள் வந்தபாடில்லை

அதற்கும் காத்திருக்கிறாள்

எல்லாமே

ஒரு கேரட் உருண்டு போவதைப் போல

அவ்வளவு இயல்பாக உருண்டுகொண்டிருக்கின்றன.

••••••••

download (24)

2

In the eastern sky

from Northeast to Southeast

an evening rainbow has curved itself

its hues scattered

on the mounts

and a little on the humans also.

கிழக்குவானில்

வடகிழக்கிலிருந்து

தென்கிழக்கிற்கு

தன்னை வளைத்துக்கொண்டிருக்கிறது

ஒரு மாலை நேர வானவில்

அதன் வண்ணங்கள் தெறித்துவிழுந்தது

மலைகள்மீது

மற்றும்

கொஞ்சம் மனிதர்களின் மீதும்

3

I search for

that came searching for

keeping safely under lock and key

in the house

I continue searching for

if any of you see tell me

its you

I came searching for.

தேடிவந்ததை

தேடிக்கொண்டிருக்கிறேன்

தேடிவந்தது

பாதுகாப்பாக வீட்டில் வைத்து பூட்டிவிட்டு

தேடிக்கொண்டிருக்கிறேன்

உங்களில் யாரவது பார்த்தால் சொல்லுங்கள்

தேடிவந்தது

என்னைதான்

4

MOUNTAIN MELODIES

(1)

As breakfast

I ate a piece of mountain rock

Hiccupping when I gasped

I drank Waters of mountain- cataract.

As meals

I sliced from the mount and swallowed

a handful of sand.

Throughout the day

I would carry a hillock on my back

and play leaping from the peak of

this mount to that.

As my supper

I squeeze the mount and drink its juice.

In the interim period

I would munch a few pebbles.

Hence

Forever my name is

Malaisami, the Mountain-God.

•••

மலையை விட்டுச் செல்லுதல் (Leaving the Mountains) கொரியமொழி : கிம் சியாங் டாங் (KIM SEO`NG – DONG), தென்கொரியா ஆங்கிலம் : ஜான் எம். ஃப்ராங்க்ல் (John M Frankl) / தமிழில் ச. ஆறுமுகம்.

download (10)download (10)

எனது முதல் விழிப்புணர்வினை நினைவுகொள்கிறேன்.

ஆம். மலைகளின் நடுவே அந்த ஆழமான பள்ளத்தாக்கு என் நினைவுக்கு வருகிறது. அது இளவேனிற்காலம்; அடர்ந்து வளர்ந்திருந்த மரஞ்செடிகொடிகள் அனைத்துமே ஆழ்ந்த பச்சைநிறத்தை வாரிப் பூசிக்கொண்டிருந்தன. வியப்பின் ஆழப்பெருமூச்சு ஒன்றினை வெளிப்படுத்தி, என்னைக் கட்டுப்படுத்திக்கொள்ளும் முயற்சியில், பரந்த வானத்தைப் பயமுறுத்துவது போல் ஓங்கி வளர்ந்திருந்த அந்த ஓக் மரத்தின் அடிப்பாகத்தை என் இருகரங்களாலும் பற்றிக்கொண்டேன்.

அனைத்தும் நெடுங்காலமாக அப்படிக்கப்படியே இருந்துவருவதான உணர்வு. மலையின் மிக ஆழமான பள்ளத்தாக்கு, பாய்ந்தோடும் கானாறுகள், வண்ண வண்ணமாக, அனைத்து வண்ணங்களிலும் தலைவிரித்து, வேனில் சுமக்கும் மரஞ்செடிகொடிகள், எங்கெங்குமாகக் கேட்கும் வினோதப் பறவையொலிகள்,

மண்ணுலகத்திலிருந்து வேறு எவருமே இல்லை; ஆனாலும் என் இதயத்திற்குள் புத்தரைக் காணமுடியவில்லை. நிலைமையை இன்னும் கடினமாக்கிக் கதிரும் மறைந்துபோக, மீண்டுமொரு இரவு வந்தேவிட்டது; நாளின் அந்த நேரத்தைக் கழிப்பதில் எனக்குக் குறிப்பிட்டதொரு கடும் பிரச்னை இருந்தது. மலைக்கென்ன, அது என்றென்றைக்கும் அமைதிப்புன்னகை வீசும், ஆனால் எனக்குத் தெரியும், அங்கேயே நின்று, அலைந்துதிரியும் ஊசலாட்டத்திலேயே நான் மற்றுமொரு நாளினை வீணாக்கிவிட்டேன். என் இளமைப்பருவத்திலேயே, நான் ஒருநாள் திடீரெனப் போதிமனத்தின் அழகொளியைப் பெறுவேனெனச் சொல்லிக் கொண்டேயிருப்பேன்;

அதனாலேயே துறவியாவதற்காக மலைகளுக்குள் வந்துவிட்டேன். அதிலும் குறிப்பிட்ட இந்த நாளில், நான் எவ்வளவுதான் முயற்சியெடுத்து எவ்வளவு உயரம் ஏறினாலும் மலையின் உச்சி கண்ணுக்குத் தென்படவேயில்லை. அது தென்படாமலிருப்பது என்னை மேலும் மேலும் முயற்சியெடுத்து இன்னும் உயரத்திற்கு ஏறச் செய்யவேண்டியதுதான் நியாயமென்றாலும், மற்றுமொரு பகல்பொழுது வீணாகக் கழிந்ததில், என்னால் செய்யக்கூடியதெல்லாம் இம்மண்ணுலகப் பாவங்களால் கறைபடிந்த இந்த உடலத்தைக் கீழே சாய்க்க ஒரு இடத்தைத் தேடுவதுதான்.

நான் குந்தியமர்ந்து, நாடிக்குத் தாங்கலாகக் கால் மூட்டுகளைக் கொடுத்தேன். பின்பு நான் `குவான் சேயும் போசால்` (கருணை மிக்க போதிசத்துவரே) என அழைத்துப் பழக்க தோஷத்தில் அவரது புனிதப் பெயரை மீண்டுமொருமுறை உச்சரித்தேன். நான் முழுவதுமாக மனச்சோர்வுற்றிருந்தேன்.

நான் துறவியாக இல்லாதிருந்தால், சாதாரண மனிதன் ஒருவனைப் போல வண்ண ஆடைகளும் மழிக்கப்படாத நீண்ட தலைமுடியுமாக இருந்தால், என்னால் ஒரு சிகரெட் புகைக்கமுடியும் என்பதோடு அறியாமையைப் போல அதன் முனையிலிருந்து எழும் புகைச்சுருள்களில் என் துயரம்படிந்த மனத்தினை ஒரு கணமாவது ஆற்றிக்கொள்ளமுடியும்.

ஆனால், மீன், இறைச்சி, மது மற்றும் புகையிலையை பிளேக் நோயைப் போல விலக்கவேண்டிய புத்தத் துறவியாகிய நான், அங்கே அமைதியாக உட்கார்ந்து அனைத்து புத்தர்கள் மற்றும் போதிசத்துவர்களின் பெயர்களை வெறுமனே உச்சரிப்பதில் தான் ஆறுதல் காணமுடியும்.

இருட்டில் அந்தப் பாதையில் ஊர்ந்தாவது சென்றுவிடத்தான் நான் தட்டுத்தடுமாறிக்கொண்டிருந்தேன். அந்த மலைத்தொடரில் எங்கேயோ ஓரிடத்தில் வசிப்பதாகச் சொல்லப்படுகிற மகா குரு ஒருவரைத் தேடிக்கொண்டிருந்தேன். அதற்காகவே மலையேறும் நான் அவரது தோற்றத்தைப் பற்றிச் சிறிது கேள்விப்பட்டிருக்கிறேன்.

முதல் பார்வைக்கே, அவரது தடந்தோள் உடலமைப்பு மற்றும் நிமிர்ந்த பெருநடைப் பாவனை காரணமாக, அவர் மலைகளில் தனித்து ஒதுங்கி வசிக்கும் காவித்துறவி போலன்றிப் பல்லாயிரக்கணக்கான வீரர்களைக் கொண்ட போர்ப்படையினை நடத்தும் தலைமைத்தளபதி போலவே பெரிதும் தோன்றுவார். அப்புறம், அவரது கண்கள் இருக்கவே இருக்கின்றன;

புலியினுடையதைப் போன்ற அவரது கண்களில் தெறிக்கும் நெருப்பொளியினை நோக்கும் எந்த மனிதனானாலும் சரி, தானாகவே தலைகுனிந்து வணங்குவான். அவரது இடியொலிக் குரலின் அதிர்வு சிங்கத்தின் முழக்கத்தை ஒத்து, கேட்பவரின் செவிப்பறையை, வெடிச்சத்தமாகத் துளைத்துக் கிழிக்கும்.

அவரது வயதினைப் பொறுத்தவரையில், சராசரி உலகினரின் கணக்குப்படி அவரது வயது 71. ஆனால், அவர் மிக இளமையிலிருந்தே அவரது முழு வாழ்க்கையினையும் பிரம்மச்சாரியாகவே வாழ்ந்து, பாவக்கறையற்ற அவரது மாமிச உடலினை புத்தர் மற்றும் லாவோஜியின் போதனைகளுக்கே அர்ப்பணித்துள்ளார். அவரது குருவின் போதனைகளின்படி மட்டுமே மனம் மற்றும் உடலினை இயக்குகிறார். இந்த 71 வயதிலுங்கூட அவர் அந்த போதனைகளிலிருந்து ஒரு மயிரளவு அகலம் கூட விலகியதேயில்லை.

யுக, யுகங்களுக்கும் அவரே உண்மையான ஒரு குருவாகத் திகழ்கிறார். அது மட்டுமல்ல. அவர் பெற்றிருக்கிற புத்தொளியறிவு எவ்வளவுக்கு மேம்பட்டதென்றால், இந்த உலகின் அனைத்து வழிமுறைகளும் எல்லையற்ற அண்டப்பெருவெளியின் அனைத்தியக்கக் கொள்கைவிதிகளும் – பிறரால் கணிக்கக்கூட முடியாத, எக்காலத்திற்கும், எல்லா இடம், பொருளுக்கும் பொருந்துவதும் பெரும் புதிர்களாகத் தோற்றமளிப்பவற்றையுங்கூட – அவர் அறிவார்.

ஆனால், ஏதோ ஒரு காரணத்தினால், மேன்மைக்குரியதும் அழகானதுமான அவரது பெயரினை ஒருவர் கேள்விப்படுவதென்பது எப்போதுமே வதந்தி வடிவத்திலேயேயிருக்கிறது. அவரது பேரழகுத் தோற்றத்தைக் கண்ணால் கண்டவரோ அல்லது பிரவாகமாய்ப் பொங்கிவரும் அவரது உரைகளைத் தம் காதால் கேட்டவர்களோ யாருமே இல்லை.

அதுபோலவே அவரது கருணைமிக்க வழிகாட்டுதலில் புத்தொளியறிவினைப் பெற்றவர்கள் எவருமேயில்லை. ஆனாலும், வினோதம் பாருங்கள், அவரது தோற்றம் குறித்த கதைகளும் அவரது போதனைகளும் மலைகளிலிருந்தும் இறங்கி, மக்களை வந்தடைந்துள்ளதுடன் மண்ணுலகின் பாவங்கள் நிறைந்த தெருக்களில் அவற்றை எல்லோராலும் கேட்கமுடிகிறது.

அவரது பெயர் `ஒற்றைவிரல்`. அவரொன்றும் அப்படிக் கூப்பிடுமாறு யாரிடமும் வேண்டிக்கொள்ளவில்லை; சொல்லப்போனால் யாராவது அவரிடம் `நல்வழி` பற்றிக் கேட்கும்போது எதுவும் சொல்லாமல் ஒற்றை விரலை உயர்த்திக் காட்டியதால்தான் அப்படியொரு பெயரைப் பெற்றார். போதாக்குறைக்கு, அவர் ஒரு விரலை வேறு இழந்திருந்தார். அதைப்பற்றி ஒரு கதைகூட இருக்கிறது.

அவர் ஒரு குருவின் வீட்டில் தங்கி, இளம் பயிற்சித் துறவியாகப் பணிவிடைகள் செய்திருந்த போது, வெளியே சென்றிருந்த அவரது குருவைச் சந்தித்து வணக்கம் செலுத்திச் செல்வதற்காக, அலைந்து திரியும் துறவி ஒருவர் வந்திருந்தார். துறவியை வரவேற்ற அவர், என்ன விஷயமாக அவர் வந்திருக்கிறாரென வினவினார். முதிய குருவின் அறிவுரைகளைக் கேட்பதற்காக வெகுதூரம் பயணித்து வந்திருப்பதாக, அவர் தெரிவித்தார்.

குரு எப்போது திரும்பிவருவாரென்று சரியாகச் சொல்வதற்கு எந்த வழியுமில்லையென துறவியிடம் அவர் கூறினார். நேரம் தவறிப் போனதற்கு ஏதோ காரணத்தை முனகிக்கொண்ட துறவி உதட்டைச் சுழித்து, சுச்சுச்சூவென இச்சுக் கொட்டியபோது, அவரது முகம் சோர்விலிருந்து துயரம்மிக்கதாக மாறியது. பயிற்சித்துறவி, விருந்துத் துறவியிடம் ஏன் மிகக் கவலையாகத் தோன்றுகிறீர்களெனக் கேட்க, வானத்தை அண்ணாந்து பார்த்துக்கொண்டு, குருவிடம் `நல்வழி` குறித்துக் கேட்க வந்ததாக, மிகுந்த துயரத்துடன், கூறினார். பயிற்சித்துறவி, பொங்கிவந்த சிரிப்பினை அடக்க மேற்கொண்ட கடினமுயற்சியில் குடற்காற்று ஒன்று அவர் அறியாமலே பறிந்து வெளியேறியது.

இந்த அலைந்து திரியும் துறவிகள் நாள் தவறாமல் வரிசையில் வந்து அதே கேள்வியைக் கேட்கவும், நாளும் அவரது குரு அமைதியே காத்து ஒற்றைவிரலை உயர்த்திக் காட்டுகிறார். `நல்வழி` குறித்த இந்தக் கேள்விக்கு நூறுமுறையென்றாலும் திடமுடன் பதில்சொல்லத் தேவையானதை பயிற்சித்துறவி அறிவார். அமைதியும் மாட்சிமையும் கொண்ட தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பது வெளிப்படையாகவே தெரிய, பயிற்சித்துறவி அவர் பார்த்திருந்த புத்தர் சிலைகளின் பத்மாசனத்தில் கால்களை மடக்கி அமர்ந்து, துறவியிடம் `நல்வழி`

எதுவெனக் கேட்குமாறு கூறினார். துறவி வாயடைத்துப் போனாரென்றாலும் பயிற்சித்துறவியின் சீர்மைத்திறம் அவரை ஆட்கொண்டது. பற்பல முதுநிலைத்துறவியருக்கு ஒரு இளம் விறகுவெட்டியின் இசைக்குழலொலியில் ஏற்பட்ட திடீர் விழிப்புணர்வினை அல்லது மிருகங்களின் விளையாட்டினை லயித்துப் பார்த்திருக்கும்போது ஐயுறவுகளெல்லாம் அற்றுப்போனதை அவர் கேள்விப்பட்டிருக்கிறார்.

`நல்வழி`யைத் தேடி வெகுதூரம் பயணித்து வந்திருந்த அ
வர், பிறரொருவரின் வயதினை வைத்துத் தீர்ப்புகளை உருவாக்கக்கூடாது என்பதை நன்கு அறிவார். தனது முட்டாள்தனத்தை தனக்குத்தானே நொந்துகொண்ட அவர், அவரது காவியுடைகளை நேர்படுத்திச் சீராக்கிக்கொண்டு, இளம் பயிற்சித் துறவியை முதிய குருவாகவே பாவித்து, அவரது முகத்தை ஏறிட்டு நோக்கி, மும்முறை வணக்கத்தினைப் பவ்யமாகச் செலுத்தி,

`நல்வழி எது?` வெனப் பணிந்துகேட்டார். பத்மாசனத்தில் கண்களை மூடி அமைதியாக உட்கார்ந்திருந்த இளம் பயிற்சித்துறவி, வெறுமனே ஒற்றை விரலை உயர்த்திக்காட்ட, அந்த ஊசலாட்டத் துறவி குழப்பத்தில் ஆழ்ந்தாலும், அவருக்கு அங்கிருந்து புறப்படுவதைத் தவிர வேறு வழியில்லாமற்போனது.

முதிய குரு வந்து சிறிதுநேரத்திற்குள்ளாகவே, பயிற்சித்துறவி நிகழ்ந்த கதையை அவரிடம் ஒப்பித்தார். இரு கைகளையும் தட்டி, உரக்கச்சிரித்த குரு, பயிற்சித்துறவியின் முதுகினை மெல்லத் தட்டி, சிங்கக்குருளை ஒன்று என்னிடம் பயிற்சிபெறுவது எனக்குத் தெரியாமற்போயிற்றே, இதை நான் கற்பனையில் கூட நினைத்துப்பார்க்கவில்லையே, என்றார்.

அதைக்கேட்ட பயிற்சித்துறவி, நான் சரியாகச் செய்தேனாவெனக் கேட்க, குருவோ சிங்கங்கள் சிங்கத்தைத்தான் வாரிசாகப் பெறும், மானையல்ல, என்றார். ஆனால், அதன் பின்னர், ”நீ என் வித்தையைக் கற்றுக்கொண்டால், நான் பூவாவுக்கு என்ன செய்வே”னென முனகினார். நீங்கள் என்ன சொல்கிறீர்களென பயிற்சித்துறவி, குருவைக்கேட்க அதொன்றும் முக்கியமில்லையென்றதோடு, நான்தான் உன்னிடம் `நல்வழி` கேட்க வேண்டுமென்றார்.

நீங்கள் விரும்புகிற எதை வேண்டுமானாலும் கேளுங்களெனப் பயிற்சித்துறவி சொல்ல, குரு மும்முறை தலைவணங்கி, `நல்வழி` எதுவெனக் கேட்டார். உடனேயே பயிற்சித்துறவி கண்களை மூடி, ஒற்றைவிரலை உயர்த்திக்காட்டித் திடீரெனக் கையைப் பெரும் வலியுடன் பின்னுக்கிழுத்தார். குரு அவரது உள்ளங்கையில் மறைத்துவைத்திருந்த குறுங்கத்தியால் அந்த ஒற்றைவிரலை வெட்டியெடுத்திருந்தார்.

வலியில் கத்திக்கதறி, இரத்தம் ஒழுகும் கையை மறுகையால் பிடித்துக்கொண்டு, தர்ம கூடத்தைவிட்டு ஓடிய பயிற்சித்துறவி, குருவின் இடியோசைக்குரலைக் கேட்டதும், நின்று, தலையை மட்டும் திருப்ப, ஒற்றை விரலைத் தூக்கிக் காட்டியவாறு வீற்றிருந்த குருவைக் கண்டார். பயிற்சித்துறவி திடீரென, அங்கேயே சுற்றிச்சுற்றி ஆனந்த நடனமாடத் தொடங்கினார். அந்தக் கணத்தில் அவர் புத்தொளியறிவு பெற்றதாக, கதிர், நிலவு, வானம், விண்மீன், மலை, பூமி, கடலென அண்டப் பெருவெளி அனைத்துமே அந்த ஒற்றை விரலுக்குள் சுற்றியதைப் பயிற்சித்துறவி கண்டதாக, பிற்காலத்தில் கூறிக்கொண்டார்கள்.

கோவில்களிலும், மண்ணுலக வீதிகளிலும் நான் சுற்றியலைந்து, அந்த மகா குரு ஒற்றைவிரலை இழந்த கதையாக, இதைத் தான் கேள்விப்படமுடிந்தது. அதுவும் முழுக்க முழுக்க வதந்தியாக, எவ்வித நிரூபணமும் இல்லாமலிருந்ததால் தான், அவரை நான் நேரில் சந்திக்கத் துடித்தேன். அவரைப்பற்றி உறுதியான எந்த ஒரு தகவலும் இல்லாதநிலைதான், அவரைத் தேடுவதைத் தவிர்க்கமுடியாத ஒரு நிலைக்கு என்னை இட்டுச்சென்றதென்பதை நான் சொல்லித்தானாக வேண்டும். அதன் முடிவில்தான்,

குளிர்காலத் தியானக் கூட்டத்தொடர் நிறைவுபெற்ற உடனேயே, நான் அவரை நாடு முழுவதிலும் அலைந்து திரிந்து தேடத் தொடங்கினேன். மலைகளின் ஆழக்குகைகளிலும் சந்தைக் கூடங்களின் மழிப்பகங்களிலும் அவரைத் தேடினேன். வேசிகள் நிறைந்த விபச்சார விடுதிகளிலும், குண்டர்கள் நடத்திய சூதாட்டக் களங்களிலும், பரபரப்பாளர்கள் நிகழ்த்திய களியாட்டக் கூடங்களிலும் அடிமைகளிலும் அடிமைகள் உழன்ற தொழிற்பட்டறைகளிலும் நான் தேடியலைந்தேன். இம்மண்ணுலகத்தின் அருவருப்பு நிறைந்ததும், மட்டத்திலும் மட்டமானதுமான இருட்டுக் குகைகளுக்குள் எனது நற்பெயர், துறவியாடை மற்றும் தூய உடலினைக் கொண்டலைந்ததற்குக் காரணம்,

அந்த மகா குருவினைச் சந்தித்து `நல்வழி` யினைக் கற்றுக்கொள்ளும் தணிக்கமுடியாத எனது ஆவல்தான். ஆனால், அவர் எங்கு சென்றிருந்தாரென்றோ, எங்கே செல்லக்கூடுமென்றோ எந்தவொரு சிறு யூகத்திற்கும் வழியில்லாமல் செய்திருந்தார். இதோ இங்கிருக்கிறாரெனக் கேள்விப்பட்டு அங்கு செல்வதற்குள் அவரது ஆறு வளையக் கைத்தடியை எடுத்துக்கொண்டு அடையாளமற்ற எங்காவது சென்றுவிடுகிறார்.

இம்மண்ணுலகில் நெடுநாட்களாக, அவரைத் தேடியலைந்த நான், ஒருநாள் கடைசியாக, சிவப்பு அல்லது நீலத்தில் ஏதாவதொரு ஒளிவீசும் அரிக்கன் விளக்குகளுடன் வரிசை வரிசையாக விபச்சாரவீடுகள் அமைந்த தெருவுக்குள் வந்துவிட்டதை உணர்ந்தேன். அந்த வீடுகளின் ஒவ்வொரு மூலையிலிருந்தும் வேசிகளும் அவர்களின் வாடிக்கையாளர்களும் உடற்பேரின்பத்தை மகிழ்ந்து அனுபவிக்கும் ஒலிகள் கேட்டுக்கொண்டிருந்தன.

தொங்கிக்கொண்டிருந்த அரிக்கன் விளக்கு ஒன்றின் அடர் சிவப்பு வெளிச்சத்தின் நேர்கீழாக, வேசி ஒருத்தி தனிமையில் நின்றிருந்ததைக் கண்டேன். முடிந்த அளவு வேகத்தோடு அவளைக் கடந்துவிடத்தான், நான் முயன்றேன். ஆனால், அவள் என்னை அழைத்துவிட்டாள்.

”அடிகளே, இங்கு வாருங்கள்”.

அவள் அருகில் சென்றதும்தான், அம்மைத்தழும்புகள் நிறைந்த அவளது முகத்தையும் பன்றியைப் போல் சப்பையான மூக்கினையும் கண்டேன் – நான் அதுவரைப் பார்த்திருந்ததிலேயே மிகமிக அருவருப்பான ஒரு பெண் அவள்தான். அந்தக் கோரத் தோற்றத்தினால்தான் வாடிக்கையாளர் எவரும் கிடைக்காமல், இந்தப் பிந்திய இரவிலும் போவோர்வருவோரை அவள் தீனக்குரலில் வீணாக அழைப்பதாகவும் எனக்குள் நினைத்துக்கொண்டேன்.

“நீங்கள் என்னிடமா பேசினீர்கள்?” என நான் கேட்டேன். அவளோ வாடிக்கை பற்றி நான் பேசாததாலோ, என்னவோ என் சட்டைக்கை ஒன்றினைப் பற்றிக்கொண்டாள்.

”என்ன செய்கிறாய்?’’ எனக்கேட்டுக்கொண்டே, அந்தக் கீழ்மகளின் கையைத் தட்டிவிடுவதற்காக எனது ஆடையைப் பிடித்து வெட்டியிழுத்தேன்.

அவள் என்னைப் பார்த்து அடித்தொண்டைக் குரலில், “நீ பார்க்கிற பார்வையிலேயே சொல்லிவிடுவேனே, பொம்பளைக்காகக் காய்ந்து கிடக்கிறவன் தானென்று, உனக்கு நான் ஏன், என் உடலை அர்ப்பணிப்பாகத் தரக்கூடாதென்றாள்.

நான் வாயடைத்துப்போனெனென்றாலும் சமாளித்து, நீங்கள் ஒரு வேசியாக இருக்கலாம்; ஆனால், அதற்காக இந்த உலகத்தைத் துறந்து, கண்டிப்பான புத்தமதப் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் என்னைப் போன்ற துறவியிடம் நீங்கள் இப்படியாக நடந்துகொள்வது எந்த விதத்திலும் ஏற்கத் தக்கதில்லையென்றேன்.

எந்த வேசியும் அப்படிச்செய்யத் துணியாத ஒரு காரியமாக அவள் என்னைப்பார்த்து, இரண்டு கையையும் விரித்து, அய்யய்ய வென வலிப்புக் காட்டினாள்; . பின்னர், ஒற்றைக்கண்ணை அநேகமாக மூடுமளவுக்குச் சுழித்து, என்னைக் குத்திவிடுவது போல் ஒரு முட்டியை மடக்கிக் காட்டினாள். பின்னர் மீண்டும் அவளாகவே பேசினாள்.

“உனக்கு என்னதான் பிரச்சினை? நான் அசிங்கமாக இருக்கலாம், ஆனால் இங்கே சுற்றுவட்டத்தில் யாரானாலும் என்னைப் போல் குறைந்த தொகைக்கு, வரமாட்டார்கள். என்னோடு ஒருமுறை வந்துபார், மெய் மறக்கும் இன்பத்தில், உன் உடம்பு முழுவதும் அப்படியே உருகிப்போய்விடும்; நீ அப்படியே அழியாவுடல் தாவோயிசனைப் போல் நேரடியாக சொர்க்கத்துக்குப் போய்விடுவாய்.” என்றாள்.

”கருணை மிக்க போதிசத்துவரே!”

போதிசத்துவரை அழைத்த வாயாலேயே நான், அந்த வேசியைத் திட்டத் தொடங்கினேன். ஆனால், அவளோ மீண்டும் முன்பு போலவே பசப்புவார்த்தை பேசத்தொடங்கினாள்.

“கவலைப்படாதீர்கள், நான் உங்களுக்கு அதை இலவசமாகவே தருகிறேன். நான் எவ்வளவுதான் கீழ்த்தரமானவளாக இருந்தாலும், `கொடையளித்தல்` என்பதன் மிகச்சிறந்த வடிவத்தை நானுங்கூட அறிவேன். தாகத்திலிருப்பவருக்கு தண்ணீர் தருவதும், பசியோடிருப்பவருக்கு உணவளிப்பதும், நோயுற்றவருக்கு மருந்து கொடுப்பதும் சரியானதாக, இருக்கும்போது, பெண்ணுடலுக்காக ஏங்கித் தவிக்கும் ஒருவருக்கு என் உடலையளிப்பதற்குப் போய் நீங்கள் எதனால் இவ்வளவு கோபப்படுகிறீர்கள்?” என்றாள்.

புத்தரின் போதனைகளிலிருந்து இந்தத் துண்டு துணுக்குகளை இவள் எப்படித் தெரிந்துகொண்டாளென எனக்குத் தெரியாது. ஆனால், அவற்றை அவள் பேசியவிதம், அவளை அப்படியே அறைந்து நசுக்கிவிட வேண்டுமென என்னைத் தூண்டியது. என்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு அவளிடம் மிகுந்த மரியாதையோடு பேசத் தொடங்கினேன். “ நீங்கள் சொல்வதில் முழுமையான உண்மையில்லையெனச் சொல்லிவிடமுடியாது தானென்றாலும், `நல்வழி` தேடும் பிக்கு ஒருவரிடம் உடலின்ப ஆசை பற்றிப் பேசுவது, முழுக்கமுழுக்கப் பண்பாடற்ற செயல்.” என்றேன்.

”நாக்கால் உதடுகளைத் தடவிக்கொள்ளும் ஒருவரிடம் நான் பசியைக் காண்பது போல், உன்னிடம் நான் காண்பது, ஒரு பாழடைந்த கோவிலின் அழிவுகளைத்தான். பத்து வருட வேசித்தொழிலில் எனக்கு மிஞ்சியது என் புழை விரிந்தகன்றதும், மனிதர்களை முகம் பார்த்தறியும் திறமையை நான் பெற்றதும்தான். நீ மட்டும் பொம்பளைப்பசியோடில்லையென்றால் இந்த இரவுநேரத்தில் வேசிவீடுகளைச் சுற்றிக்கொண்டிருக்கமாட்டாய்.” என்றாள்.

‘ஓ` நான்! – துறவி, அவனது மலையைவிட்டுக் கீழிறங்கினால் இப்படியான நிந்தனைக்குத்தான் ஆளாகவேண்டும். நான் மகாகுரு ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறேன் என்பதை மட்டும் நீங்கள் அறிந்தால் …”

”மகாகுரு என்றா சொன்னீர்கள்?”

“ஆமாம், அவரை உங்களுக்குத் தெரியுமா?”

“என்னைப்பற்றி என்னதான் நினைத்துக்கொண்டிருக்கிறாய்? நான் உடலை விற்பதனாலேயே உங்கள் மகாகுருவைப்பற்றி எனக்கு ஒன்றும் தெரியாதென நினைக்கிறாயா?” அந்த வேசி எள்ளிநகைத்து, அவள் ஆடையைத் திரைத்து மேலேற்றிக்கொண்டே, இருட்டுக்குள் செல்லவிருந்தாள். இப்போது நான் அவள் கையைப்பற்றி இழுக்கவேண்டியதாயிற்று.

“நான் தவறு செய்துவிட்டேன், இல்லை, எனக்கு வேண்டியது அதுவல்ல …. அதாவது நான் சொல்லவருவது, என் மீது கோபப்படாதீர்கள் அல்லது வேறெப்படியும் குறைப்படாதீர்கள், ஆனால் …….., நல்லது, எனக்குத் தெரிய வேண்டியது, நான் சொல்கிற மனிதரைப்பற்றி உங்களுக்குத் தெரியுமா என்பதைத்தான். அதாவது அவரை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா?”

திரைத்த ஆடையை அப்படியே கீழே இறக்கிவிட்டுச் சிரிக்கத் தொடங்கினாள். “ஆமாம், அவரைப் பார்த்திருக்கிறேன்தான். ஏன், நேற்று இரவுகூட அவர் இங்குதான் இருந்தார். இன்றைய இரவுக்கும் கூட மீண்டும் வருவாரென்றுதான் நினைக்கிறேன்.”

‘’நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? அவரைப்போன்ற மனிதர் ஒருவர் இந்த மாதிரி ஆசைகளோடு ….. “ நான் பாதியிலேயே நிறுத்திக்கொண்டு, சட்டென்று என் கேள்வி முறையை மாற்றிக்கொண்டேன்.

“நீங்கள் சொல்வது உண்மையென்றால், தயவுசெய்து எனக்கு அவரைப்பற்றி எனக்குச் சொல்லுங்கள்.”

அவளது கண்கள் தாமாகவே மூடிக்கொண்டன; கடுமையான நடுக்கம்கொண்ட குரலில் பேசத் தொடங்கினாள். “அவர் அடிமட்ட மக்களின் நண்பர். இனியும் உயிர் வாழ்வது முடியாததென்றும் இந்த உலகம் தாங்கமுடியாத அளவுக்கு அருவருப்பானதென்றும் நாங்கள் உணர்கின்ற தருணங்களில் எப்போதுமே மிகச்சரியாக, அவர் வருகிறார்;

ஆனால் உங்களைப் போல பெரிய பெரிய சிக்கல்நிறைந்த வார்த்தைகளில் பேசியதேயில்லை. ஒருமுறை நான், சிபிலிஸ் பெண்குறிநோய் வந்து, படுக்கையிலிருந்து எழுந்திருக்கக்கூட முடியாமல் கிடந்தபோது, என் ஆடைகளை அவர்தான் அலசித் துவைத்துக் கொடுத்தார். அது மட்டுமல்ல. ஒருமுறை எனது தோழி சாம்-வெல் தெரியாத்தனமாக காவல்துறை காவலர் ஒருவரை, தொழிலுக்காகக் கையைப் பிடித்திழுக்கப்போய், காவல் நிலையத்துக்கு இழுத்துச்சென்று, அவள் பின்புறம் முழுதும் இரத்தக்காடாகுமாறு அடித்துத் துவைத்துவிட்டார்கள்; அப்போதும், அவர்தான் வந்து அவளை மீட்டுவந்தார். அவரெல்லாம் …..”

முடிவேயில்லாமல், பேசிக்கொண்டேபோன அவள் ஒருகட்டத்தில் உணர்வற்றுப்போனதுபோல் உளறத்தொடங்கியதும், நான் அவள் கையைப் பிடித்து உலுக்கி நிறுத்தவேண்டியதாயிற்று. ”நீங்கள் உண்மையிலேயே அவரைப் பார்த்திருந்தால், அவர் எப்படியிருப்பாரென்று சொல்லுங்கள்.”

முன்பு போல் கண்களை மூடியவாறே அவள் பேசத் தொடங்கினாள். ‘அவர் நம் எல்லோரையும் போல்தான் இருக்கிறார். அவரது முகம் அழகற்றது. முடிச்சுமுடிச்சான அவரது கைகள் வெயிலில் கறுத்திருக்கும்.

ஆனால், அவர் நாங்கள் புரிந்துகொள்ளமுடியாத கடின வார்த்தைகளை ஒருபோதும் பேசியதேயில்லை.” பெருங்கஷ்டம். முட்டாள்தனமாக அவள் பேசியதிலிருந்து, எனக்கு நன்றாகப் புரிந்தது, அவள் புத்திகெட்டுப்போன ஒரு பைத்தியமென்று. ‘’ஓ, இது பெருங்கஷ்டம், நான் மகாகுருவைக் கண்டுபிடித்த மாதிரித்தான்,” என எனக்குள்ளாகவே முனகிப்பெருமூச்சுவிட்டுத் திரும்பத் தொடங்கினேன்.

ஆனால் அவள் மீண்டும் என் சட்டைக்கையைப் பற்றிக்கொண்டு, என்னைப் போகவிட மறுத்தாள். “என்ன தப்பாகிவிட்டது? நீ பணம் எதுவும் தரவேண்டாமென்று சொல்லிவிட்டேனே! நீ இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு, முகத்தை மறைத்து,

உன் பெயரைக் காப்பாற்றியிருக்கிறாய், போதும், வா, இரவை அனுபவித்துவிடுவோம்.” என்றாள். “என்னைப் போகவிடு! கீழ்த்தரப் பிறவி, விபச்சாரி, நீ, ஒரு புனிதத் துறவியின் ஆடைமீது கைவைக்கிற அளவுக்கு உனக்கு துணிச்சலா?” என்று உண்மையிலேயே கோபத்தில் பொங்கிய நான் கத்திக் கூச்சலிடத் தொடங்கினேன்.

ஆனால் அந்தக் காமப்பிசாசு என்னை விடாதது மட்டுமில்லாமல், அவளது ஒரு கையால் என் இடுப்பைச் சுற்றிப்பிடித்துக்கொண்டு, மறுகையால் என் தொடைகளுக்கிடையே வருடத் தொடங்கினாள். ‘இப்ப என்னை விடப்போகிறாயா, இல்லையா?. தேவடியா நீ, எவ்வளவு கொழுப்புடீ, உனக்கு ….? கருணைமிக்க போதிசத்துவரே. பயிற்சியை அவமதிப்பவர் எல்லாம் கடைசியில் இறந்து மதக்குற்றம் புரிந்தவர்களைப் போல நரகத்துக்குத் தான் போகவேண்டும்.” என் பலம் முழுவதையும் உபயோகித்து அவளை உதறித் தள்ள முயன்றதில், நான் மல்லாந்து விழ,

அழுக்குப் படிந்த என் உள்ளாடைகள் விலகித் தெரியக் கிடக்கவேண்டியதாயிற்று. உடனேயே எம்பிக்குதித்த அவள், என் கழுத்தில் கிடந்த பிரார்த்தனை மாலையைக் முரட்டுத்தனமாகப் பற்றிக்கொண்டு, உச்சக் குரலில் கத்தத் தொடங்கினாள். “நாய்க்குப் பிறந்தவனே, நீதான் இந்த உலகத்திலேயே பெரிய ஏமாற்றுப் பேர்வழி; நீ துறவி கிடையாது, திருடன்தான். என் நல்ல மனதுக்கு, பொம்பளைக்காகக் காய்ந்து கிடக்கிறானெனப் பார்த்தாலே தெரிகிற ஒரு துறவி என்று, நல்ல மனதோடு என் உடம்பை உனக்கு அர்ப்பணிக்கிறேனென்று சொன்னால், என்னைத் திட்டுவதோடில்லாமல் அடிக்கவுமா செய்கிறாய்.”

இந்தக் குழப்பத்தில், எல்லா வேசிகளும் வெறும் உள்ளாடைகளும் கையுமாக ஓடிவர, அவர்கள் பின்னாலேயே காற்சட்டைகளை, இடுப்பில் ஏற்றிக்கொண்டு ஓடிவந்த வாடிக்கையாளர்களும் என்னைப் பார்த்து ஹோவெனச் சிரித்தனர். மிகப்பெரிய அவமானத்தில் சிக்கிவிட்டதை உணர்ந்தாலும் வேறுவழி எதுவும் புரியாமல் புத்தர், போதிசத்துவர்களின் பெயரை

உச்சரித்துக்கொண்டிருந்தேன். இத்தனைக்கும் நடுவில், அந்தப் பழிகாரி மீண்டும் பலத்தையெல்லாம் திரட்டிக்கொண்டு என் மீதான தாக்குதலைத் தொடர்ந்தாள். “ நாய்க்குக் பொறந்த பயல் நீ; திருடன்களிலேயே மோசமான பெரிய திருடன் நீ, என்னை நரகத்துக்குப் போவாயென்கிறாய். இதுதாண்டா நரகம், இதைவிட மோசமான ஒரு நரகம் எங்கேயாவது இருக்குமென்றா நினைக்கிறாய். இப்ப நான் சொல்றண்டா, புத்தர் வழி என்று சொல்லிக்கொண்டு நடிக்கிற உன் நடை, உடை பாவனையால்,

ஒற்றை விரலைக்கூட உன்னால் அசைக்க முடியாது, அடுத்தவன் சாப்பாட்டைத் தாண்டா நீ திருடித் தின்கிறாய், நீ செத்து சொர்க்கம் போவாய், எங்கள் உடம்பையே வித்து, எங்கள் சாப்பாட்டை நாங்களே தேடிக்கொள்கிற நாங்கள் நரகத்துக்குப் போவோமா?” என் கழுத்து மாலை திடீரென அறுந்து மணிகளெல்லாம் சிதறி ஓடின. என் இதயம் வேகவேமாகத் துடித்துக்கொண்டிருந்தது; ஆனால், அவளோ அப்போதும் விடாமல் கத்திக்கொண்டிருந்தாள். “ஓஹோ, அது சரி. நாங்கள் அருவருப்பானவர்கள், கீழிலும் கீழானவர்கள்,

உடம்பை விற்கிற குற்றத்துக்காக, நரகத்துக்குப் போவோம், நல்ல வளர்ப்பும், புத்திசாலியுமான நீ சொர்க்கத்துக்குப் போய் அனுபவிக்கலாமென நினைத்துக்கொண்டிருக்கிறாய்,” நல்லவேளை, இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த, புத்தரின் கருணையை முழுவதுமாகத் தெரிந்த அந்த வயதான பெண்ணுக்குத் தான் நன்றிசொல்ல வேண்டும். அவள் மட்டும் இல்லையென்றால் நான் தப்பி வந்திருக்கவே முடியாது, ஆனால், என்ன, ஒற்றை விரலை நான் கண்டுபிடிக்கமுடியாமல் போனதுடன், வேசி ஒருத்தியிடம் மிகப்பெரிய அவமானத்தைச் சுமக்க

வேண்டியதாயிற்றென்பதால், இனிமேலும் இந்த மண்ணுலகத்தில் நம்மால் அலைந்து திரிவது முடியாததென்று உணர்ந்தேன். ஆனாலும், அதுவுங்கூட, மகா குருவைத் தேடும் எனது ஆர்வத்தைக் கைவிடுவதற்குப் போதுமானதாக இல்லை. அதனால் இந்த மண்ணுலகில் காண்கிற அனைத்துக் கீழான மற்றும் கறைபடிந்த இடங்களிலெல்லாம் அவரைத் தேடும் எனது பெருமுயற்சியைத் தொடர்ந்தேன். ஒவ்வொன்றிலும், அந்த விபச்சார விடுதியில் எனக்கேற்பட்டது போன்ற அவமானத்தையும் ஏமாற்றத்தையுமே சந்தித்தேன்.

உலகின் மிக உன்னதமான `நல்வழி`யைத் தேடுகின்ற ஒரு துறவியாகிய நான், இந்த உலகத்தின் கடுமை நிறைந்த பாழிடங்களிலெல்லாம் நுழைந்து துன்பத்தை மேற்கொள்வதற்கான ஒரே காரணம், மகா குருவான ஒற்றை விரலைச் சந்தித்து `நல்வழி`ப் புத்தொளியறிவினைப் பெற்றேயாக வேண்டுமென்ற தணிக்கமுடியாத தாகத்தினால் தானென்பதைச் சொல்லியேயாகவேண்டும். ஆனால், மாண்புமிக்க அரசவைப் பெண்டிராலும், அரசு அதிகாரிகளாலும் கொடையளிக்கப்பட்ட தங்கம், வெள்ளி மற்றும் விலை மதிப்பற்ற பொக்கிஷங்கள் நிறைந்துள்ள கோவில்களை விட்டுவிட்டு அவர் ஏன், உலகின் மிகவெறுக்கத்தக்க தீமை நிறைந்த இடங்களில் வாழ்வதைத் தேர்ந்தெடுத்திருக்கிறாரென்பதைத் தான் என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.

ஆம். உண்மையிலேயே இது என்னைப் புதிரில் ஆழ்த்துவதாக இருக்கிறது. ஆனால், அதுபோன்ற இடங்களில்தான் மக்கள் அவரைப் பார்த்ததாகக் கூறுகிறார்கள். ஆக, என் தேடுதலால், விபச்சார விடுதிகளின் வேசிகளிடமும், சூதாட்டக்கூடங்களின் குண்டர்களிடமும், களியாட்டக் கூடங்களின் எத்தர்களிடமும், இறுதியில், தொழிற்கூடங்களின் அடிமைகளிலும் அடிமைகளிடமும் மிகமிகக் கேவலமான அவமானங்களைச் சந்திக்கவேண்டியதாயிற்று.

அடிமைகள் அரசனுக்காக புதிய களியாட்ட மாளிகை ஒன்றினைக் கட்டிக்கொண்டிருந்தனர். அவர்களில் சிலரது கழுத்துகளில் மாடுகளைப் போல் நுகம் இருக்க,

வேறுசிலர் வீடுகள் அளவுக்குப் பெரிதாயிருந்த அரவை ஆலைகளை இயக்கிச் சுழற்றிக்கொண்டிருந்தனர். ஆனால் எல்லோருமே என் மீது காறித்துப்புவதாக வேலையை நிறுத்தினர். தலைமுறை, தலைமுறைகளாக, அவர்களின் மூதாதைகளும் அவர்களும் கடினமான உடலுழைப்பின் துன்பங்களிலிருந்து மீள்வதற்கான ஒரே வழியாக மரணம் மட்டுமே உள்ளதென்று அவர்களின் விதியைக் கூறிக் குறைப்பட்டனர். அதைக் கேட்டதும், அவர்கள் மீது கருணை மீதூர, அவர்களுக்காக புத்தரின் அறிவுமொழி ஒன்றினை ”கருணை மிக்க போதிசத்துவரே”

என அறிமுகம் செய்யத் தொடங்கினேன். இப்பிறவியில் நீங்கள் படும் கஷ்டங்களுக்கெல்லாம் இதற்கு முந்தைய பிறவியில் நீங்கள் செய்த பாவமே காரணம். அதனால் நீங்கள், உங்கள் கர்மவினைகள் அல்லாமல் வேறு யாரையும் அல்லது எதனையும் நிந்திப்பதற்கு எதுவுமில்லை. வெறுப்பும் சீற்றமும் பாவத்தின் விதைகள். அதனால், புத்தரிடம் மனமுருகிப் பிரார்த்தனைசெய்வதில் உங்களை அர்ப்பணித்துக்கொள்ளுங்கள்; உலகினை வீணாகச் சபிக்க வேண்டாம்……..”

இதைக் கேட்டார்களோ இல்லையோ எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்துகொண்டு என்மீது காறித்துப்பத் தொடங்கியதோடு, காகங்களின் கூட்டமொன்று கத்துவது போல் என்னைப் பார்த்துப் பெருங் கூச்சலிட்டனர்.

“ சாப்பாடு, துணிமணி, தங்குமிடம் எதற்கும் கவலைப்படாமல் நல்வழியை மட்டும் தேடி, அல்லது மலக்குவியலையோ அல்லது வேறு ஏதோ ஒரு இழவினைத் தேடும் உன்னால் எங்கள் கஷ்டத்தின் அளவினைப் புரிந்து கொள்ளமுடியாதுதான். சாவின் விளிம்பில் நிற்பவர்களிடம், நியாயமிழந்து பசியில் தவிப்போரிடம், நியாயமிழந்து நோய்ப்பட்டோரிடம்,

நியாயமற்ற முறையில் சிறைக்குள் அகப்பட்டோரிடம் போய், அவர்களின் கஷ்டங்களுக்கெல்லாம் அவர்களின் செய்கைகளே காரணமென்றும் நடப்பினை ஏற்றுக்கொள்ளுமாறும் சொல்கிறாய். எதிர்காலத்தில் அவர்கள் சிறிது நல்ல இடத்தில் பிறக்க விரும்பினால், புத்தரைப் பிரார்த்திக்க வேண்டுமென்கிறாய்;

நீ தான் சரியான ஏமாற்றுப்பேர்வழி என்பது நன்றாகவே தெரிகிறது.” அவர்கள் அப்படியே என்னை விழுங்கிவிடுவது போல் பேசி, வெறித்து நோக்கியதில் எனக்குள் தோன்றியதென்னவென்றால் அவர்கள் கண்களில் வெளிறிய நீலநிற ஒளியொன்று வெளிப்படுவதோடு,

அவர்களின் கழுத்தின் பின்புறம் அந்தக் கனமான நுகங்களின் எடை மட்டும் இல்லாமலிருந்தால் என்னை அடித்தே கொன்றிருப்பார்கள் என்பதுதான். எப்படிப்பார்த்தாலும், இந்த மண்ணுலகம் அறியாமை மற்றும் இரக்கமற்ற பிறவிகளால் நிறைந்திருப்பதோடு, உன்னதமான நல்வழியினைத் தேடுவதற்கு என்னைப் போன்ற ஒரு மனிதனுக்கு உகந்ததாக இல்லாமல் கீழானதாகவும் தீமை விளைவிப்பதாகவும் இருக்கிறது.

நான் எழுந்து நின்றதும், எனது உடம்பின் கனத்தால் என் கால் மூட்டுகள் முனகின. மனித மனத்தைப் பீடிக்கின்ற முடிவற்ற மாயத்தோற்றங்களும் வேதனைகளுமாக அவதிப்பட்ட நான் நெடுநேரம் குத்துக்காலிட்டே உட்கார்ந்திருந்ததில், என் கால்கள் தூக்கத்தில் ஆழ்ந்து, உணர்வினை மறந்து போக, மயக்கக் கிறக்கத்திலிருந்த என்னால் நினைக்கமுடிந்ததெல்லாம் எங்காவது விழுந்து உறங்கவேண்டுமென்பதுதான். விரைவிலேயே மையிருள் கவிந்து மிகச்சிறிய தூரம் கூட தெரியாமலாகியது. ஆழ வெடிப்புகள்,

குகைகள் மற்றும் பொந்துகள் ஒவ்வொன்றிலிருந்தும் உயிர்ப்பிராணிகளின் தனிமையும் பசியும் நிறைந்த குரல்கள் எழுந்து எங்கும் பரவ, நான் மகா குருவைக் கண்டுபிடிக்க்கப்போவதில்லையென்பது மட்டுமில்லாமல் இந்தக் காட்டிலேயே இறந்து அடர்ந்த மலைகளுக்குள் அலையும் ஆவியாகத் திரியப் போகிறேனென்று நினைத்தேன். அனைத்து போதிசத்துவர்களையும் நடுங்கும் குரலில் அழைத்து, எனது மூட்டையை இறுகக்கட்டி, என் காலணிக் கட்டைகளையும் அவிழ்த்து மீள இறுக்கிக் கட்டினேன். பின்னர், மரக்கிளைகளை ஒதுக்கித் தள்ளிக்கொண்டு, என் பாதையில் முன்னேசெல்லத் தொடங்கினேன்.

அங்கே நான், ஒரு பாதையைக் கண்டுபிடிப்பதற்காக விழுந்து எழுந்துகொண்டிருந்தாலும், உண்மையில் இலக்கு ஏதுமின்றித் தான் அலைந்துகொண்டிருந்த போதுதான், நேருக்கு நேராக, என் கண் முன்பாகவே, வெளிச்சத்தின் ஒளிமுனை ஒன்றினைக் கண்டேன். அந்த ஒளியின் அளவிலிருந்து, அது ஒரு வீடாகத்தானிருக்கவேண்டுமென்றும், இவ்வளவு ஆழ்ந்து அடர்ந்த மலைகளுக்குள் ஒரு வீடெனில், அது மகா குரு ஒற்றைவிரலுடையதாகத்தானிருக்குமென்றும் நான் நினைத்தேன். அவ்வளவுதான், நான் இடைவெளியே விடாமல் ஒரே ஓட்டமாக ஓடினேன்.

அது, தங்க வேட்டைக்காரர்களோ அல்லது ஜின்செங் கிழங்கு அகழ்வோரோ மலையில் தங்கியிருந்த காலத்தில் கட்டிய சிறுகுடிசை போலத் தோன்றியது. அதன் முன்பாக வெளிப்புறத்தில் ஊசியிலைத் தேவதாருப் பிசின் விளக்கின் வெளிறிய வெளிச்சத்தில் குந்தி அமர்ந்திருந்த வயதான கிழவன் ஒருவன் பரட்டைத் தலையிலிருந்து பேன் எடுத்து நகங்களுக்கிடையில் வைத்துக் குத்திக் கொண்டிருந்தான். அவனுடைய வற்றி உலர்ந்துபோன உடலையும், கிழிந்த ஆடைகளையும் பீளை நிறைந்து சுருங்கிப்போன கண்களையும் பார்க்கும் போதே, அவன்,

சமூகத்தால் துரத்தப்பட்ட ஒரு பிச்சைக்காரன் தானென்பது தெரிந்தது. மகாகுருவைச் சந்திக்கப்போகிறோமென நினைத்த நேரத்தில் இது மாதிரியான ஒரு பிண்டத்தைப் பார்ப்பது தாங்க வியலாததாயிருந்தது. தியானத்திற்காகப் படுக்கலாமென நினைத்தபோது, இவ்வளவு தூரம் வந்துவிட்டோமே, அந்த ஆளிடம் கேட்டுப் பார்க்கலாமேயென நினைத்தேன்.

‘’ஐயா, பெரியவரே, ஒற்றை விரல் என்ற பெயருள்ள மகா குரு ஒருவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” ஆனால், அந்தக் கிழவன், காது கேட்காதவர் போலப் பதில் எதுவும் சொல்லாமல் பேன் குத்துவதே கண்ணாக இருந்தான். அவன் பேன்களை நசுக்கும் போது, பட் பட்டென வெடித்த சப்தம் வித்தியாசமாக இருந்தது. ”எனக்கு நன்கு தெரிந்தவராகத் தான் இருப்பார். மிக உன்னதமான ஒரு மகா குருவைப் பற்றி, நீ என்னென்னவெல்லாம் தெரிந்துகொள்ள விரும்புகிறாய்?” இந்தக் கிழவனிடம் எதுவும் பேசக் கூடாதென்று தீர்மானித்துவிட்டேன். பின், பழக்கத்தினால், தியானத்திற்குப் படுக்கும் முன் புத்த சூத்திரம் ஒன்றை உச்சரிக்கத் தொடங்கினேன். ‘’சர்ஃப் சுரி மகாசுரி சுசுரி சபஹா ஒபங்கனேயேஏ

அன்விஜயேஷின்ஜிரியான்…..” ‘’வாயை மூடுறியா, நான் தூங்கவேண்டும். பிரார்த்தனை செய்ய வேண்டுமென்றால், மனசுக்குள்ளேயே செய்துகொள். சத்தமாகப் பிரார்த்தனை செய்து அடுத்தவன் அமைதியைக் கெடுக்கவேண்டுமென்று சட்டமா இருக்கிறது?’’ இதைக் கேட்டதும் நான் கண்களைத் திறந்தேன்; ஆனால், அந்தக் கிழவன் அதற்கு முன்பாகவே விளக்கை அணைத்துவிட்டான்; அவன் குறட்டையைத் தான் நான் கேட்க முடிந்தது. அந்தக் காலம் முழுவதுமாக மண்ணுலகில் அலைந்து முழுவதுமாகக் களைத்துப் போன நானும், குறிப்பாகப் பிந்திய அந்தக் காலைவேளை வரையில் கூடத் தூங்கியிருக்கிறேன்.

நான் கண்விழித்த போது வெயில் என் தலைக்கு மேலாகவே வந்திருந்தது. அந்தக் கிழவனை எங்கும் காணவில்லை. அரிசியும் பார்லியும் கலந்து அரைத்த மாவை என் மூட்டையிலிருந்து எடுத்துப் பசியை அடக்கிவிட்டு காலணிக்கட்டைகளை இறுகக் கட்டிக்கொண்டு, கனத்த இதயத்தோடு என் முன்னால் நீண்டுகிடந்த வரிசை வரிசையான மலைத் தொடர்களை ஏறிட்டு நோக்கிப் பெருமூச்செறிந்தேன்.

மற்றொரு நாளும் வந்து போய்விட்டது. இப்போது நான் எங்கே போகவேண்டும்? மகாகுருவைச் சந்திக்க எங்கு செல்லவேண்டும்? எனக்குத் தெரியவில்லை; ஆனால் நகர்ந்துகொண்டேயிருக்கவேண்டும். பெரும் பாறை ஒன்றினை நெஞ்சுக்குள் வைத்து அழுத்தியது போன்ற கனத்த இதயத்துடன் நான் வேகமெடுத்து நடக்கத் தொடங்கும்போது, திடீரென்று யாரோ என்னைக் கூப்பிடுவது போன்ற சப்தத்தைக் கேட்டேன்.

“ஓ, மாபெரும் ஆசிரியரே, மாபெரும் ஆசிரியரே,” நான் திசையை மாற்றவில்லை; ஆனாலும் என் தலை மட்டும் திரும்பிய போது அந்தக் கிழவன் அங்கிருந்தான். எதனாலேயோ, அவன் இனிமையாகவென்று கூடச் சொல்லலாம், புன்னகைத்தான். “ஆக, நீ ஒரு `உண்மையான மகா குரு`வைத் தேடிக்கொண்டிருக்கிறாய், ஹூம்? நான் வாயடைத்துப் போய் தலையை மட்டும் ஆட்டினேன். கிழவன் ஏளனமாக வெடித்துச் சிரித்தான். பின்னர் என்னைப் பரிதாபத்திற்குரிய ஜீவனைப் போலப் பார்த்து, என் தோளில் தட்டி, “ முட்டாளே! ஒரு உண்மையான மகா குருவைத் தேடுகிறேனென்று சொல்கிறாய், இல்லையா?” “அப்படித்தான்.” நானும் ஏளனமாகப் பதில் சொன்னதும் கிழவன் ஏமாற்றத்தில் நாக்கை `ப்ச்` கொட்டினான்.

பின்னர், அவன் நீண்ட பெருமூச்சு ஒன்றை வெளியேற்றினான். “ உலகத்தில் இவ்வளவு பிரச்சினைகள் இருக்கும்போது, உண்மையான மகா குரு ஒருவர் இங்கே மலையில் உட்கார்ந்துகொண்டு பேன் குத்திக்கொண்டிருப்பாரென்றா நீ நினைக்கிறாய்?’’ அந்தக் கணத்தில் என் நெஞ்சில் அழுத்திக்கொண்டிருந்த பாறாங்கல் அகன்றுவிட்டதை உணர்ந்தேன்.

அவ்வளவுதான், என்னைச் சுற்றியிருந்த எல்லாமே ஒளிபெற்று மிளிர்ந்தன. நான் மலையை விட்டுச் சென்றாகவேண்டும். அந்த வயது முதிர்ந்த பெரியவரின் வார்த்தைகளில் நான் திடீரென விழித்துக்கொண்டேன். `விழிப்புணர்வு` என்கிறேன், நான்;

ஆனால், அது, வெளிப்படையாகத் தெரிந்த ஏதோ ஒன்று, நான் மலையை விட்டுச் சென்றாக வேண்டுமென்பதுதான். கீழ்மட்டத்துக் கறைபடிந்த மண்ணுலகிற்கு இறங்கிச்சென்று இரத்தமும் சதையுமாக அல்லல்படுவோர் மத்தியில் வாழவேண்டும். புத்தொளியறிவான போதியறிவினைக் களங்கங்களிலிருந்து பிரித்துப் பார்க்கமுடியாதென்றும் பரிசுத்த பூமியும் இந்த உலகமும் வெவ்வேறானதல்ல என்றும் புத்தர் சொன்னதே உண்மை. பிரச்சினைகள் மற்றும் ஆசைகளால் முடிவற்ற பரிணாம மாற்றங்களே நித்தியமான நமது உலகிலிருந்தும் நாம் விடுபடுவோமேயானால், பரிசுத்த பூமியை நாம் ஒருநாளும் அடையமுடியாது.

அந்தப் பாலியல் தொழிலாளி சொன்னதுபோல இந்த உலகில் உயிர்வாழ்வதற்காக, வயிற்றுப் பாட்டுக்காக, உடலை விற்கவேண்டியிருக்கிறதென்றால், உண்மையிலேயே இதுதானே நரகம்; இந்த நரகத்தில் தானே நான் வாழ்வினைக் கண்டுணரவேண்டும்.

நான் , மகா குருவைக் கண்டுபிடித்தேனோ இல்லையோ அல்லது, இந்த ஒளிமிக்க விழிப்புணர்வினை எனக்களித்த அந்த முதியவர் தான் நான் மூச்சைப் பிடித்துத் தேடிக்கொண்டிருந்த மகாகுருவின் புனித வெளிப்பாடோ என்பதெல்லாம் இப்போது பொருளற்றுப்போகின்றன. ஆனால், `விழிப்பு` என நான் கூறுவது உண்மையான அதுதானா என்பது இப்போதுங்கூட எனக்கு நிச்சயமில்லை.

படைப்பாளர் பற்றிய குறிப்பு : கிம் சியாங் டாங் கொரியாவில் 1947 – இல் பிறந்தவர். பத்தொன்பதாவது வயதில் துறவுகொண்டு பத்தாண்டுகள் புத்த மதப் பயிற்சி மேற்கொண்ட பின்னர், துறவினைவிட்டு வெளியேறி இலக்கியம் படைக்கத் தொடங்கினார்.

அவரது முதல் கதை 1975 இல் வெளியானது. இலக்கியப் படைப்புகளுக்காக, பல விருதுகளைப் பெற்றுள்ளார். அவர் படைத்துக்காட்டும் புத்தறிவுபெற்ற மனிதன் மலைகளில் வசிக்கும் துறவிகளையும் சராசரி மனிதர்களையும் அரவணைத்துச் செல்பவனாயிருக்கிறான்

http://www.ekoreajournal.net/issue/view_pop.htm?Idx=2816 .

•••••••