Category: மொழிபெயர்ப்பு கவிதை

ஷூ திங் கவிதைகள்(“மூடுபனிக் கவிகள்” ) / ( சீனக் கவிதைகள் ) / ஆங்கிலம் வழியாக தமிழில் : சமயவேல்

ஷீ திங்

சீனத்தில் இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப்பகுதியின் முன்னணிக் கவிஞர்களில் ஒருவரான ஹோங் பெய்யுவின் புனை பெயரே ஷூ திங். 1952ல் பிறந்த இவர், சீனத்தின் கலாச்சாரப் புரட்சியின் போது, இவரது அப்பாவின் சித்தாந்த இணக்கமின்மை காரணமாக, இவரது பதின்ம வயதில் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டு கிராமப்புறத்துக்கு அனுப்பப்பட்டார். சிமெண்டுத் தொழிற்சாலையிலும் டெக்ஸ்டைல் மில்லிலும் பணி புரிய வைக்கப்பட்டார். இந்தச் சமயத்தில் அங்கீகாரமற்ற மேற்கத்தியக் கவிதைகளின் தாக்கத்தால், ஷூ திங், கவிதைகள் எழுத ஆரம்பித்தார். கவிதையில், அரசு நிர்ணயித்த “சமூக யதார்த்த”த்திற்குப் புறம்பாக மனித உணர்ச்சிகளையும் பிரக்ஞையையும் சோதனை செய்யும் விதமாக உருவான “மூடுபனிக் கவிகள்” என்று அழைக்கப்பட்ட இளம் கவிகளின், எழுத்தாளர்களின் குழுவில் ஷூ திங்கும் இணைந்தார். “மூடுபனி” இயக்கத்தின் தலைமறைவு இதழான ஜின்டியன் (இன்று) இதழில் 1979லிருந்து இவரது படைப்புகள் வெளிவரத் தொடங்கின. அதிகாரம் ஜின்டியன் இதழை மூடி, சித்தாந்த இணக்கமின்மை விசாரணையைத் தொடங்கியது. கொஞ்ச காலம் ஷூ திங் எழுதாமல் இருந்தார். ஆனால் அதிகாரம் அவரது படைப்புகளில் திருப்தியடைந்து, அவரைச் சீன எழுத்தாளர்கள் கூட்டமைப்பில் உறுப்பினராக்கியது. இவர் 1980களில் இருமுறை தேசியக் கவிதை விருதைப் பெற்றார். இவரது கவிதைகள் சில:


ஒருவேளை—
–ஒரு கவியின் தனிமைக்கான பதில்

ஒருவேளை நமது இதயங்களுக்கு
வாசகர்கள் எவரும் இல்லாமல் போகலாம்
ஒருவேளை நாம் தவறான சாலையில் பயணித்திருக்கலாம்
எனவே நாம் தொலைதலில் முடிகிறோம்.

ஒருவேளை நாம் விளக்குகளை ஒவ்வொன்றாக ஏற்றுகிறோம்
அவற்றைப் புயல்கள் ஒவ்வொன்றாக ஊதி அணைக்கின்றன
ஒருவேளை இருட்டுக்கு எதிராக நாம் நமது உயிர்-மெழுகுவர்த்தியை ஏற்றுகிறோம்
ஆனால் எந்த நெருப்பும் உடலுக்கு வெதுமையூட்டுவதில்லை.

ஒருவேளை நமது கண்ணீர்களை வெளியேற்றியவுடன்
நிலம் உரமிடப்பட்டுவிடும்
ஒருவேளை நாம் சூரியனைத் துதிக்கையில்
நாமும் சூரியனால் துதிக்கப்படுகிறோம்.
ஒருவேளை நமது தோள்களின் மேல் இருக்கும் குரங்கின் கனம் கூடக் கூட
நாம் மேலதிகமாக நம்புகிறோம்.
ஒருவேளை அடுத்தவர்களின் துயரங்களை மட்டுமே நாம் எதிர்க்க இயலும்
நமது சொந்த துரதிர்ஷ்டங்களுக்கு மௌனமாகவே இருக்கிறோம்.

ஒருவேளை
இந்த அழைப்பு மறுக்க முடியாததாக இருப்பதால்
நமக்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை.
௦௦௦


ஒரு தீவின் கனவு

நான் எனது சொந்த அட்சரேகையில் இருக்கிறேன்
எனது புலம்பெயர் கனவுகளுடன்—

வெள்ளை மூடுபனி.
பனிச் சாலைகள்.
ஒரு கனத்துத் தொங்கும் மணி
ஒரு சிவப்பு அரண்மனைச் சுவரின் பின்னால்
அசைவற்ற அந்தியைக் கிழித்துக் கொண்டிருக்கிறது.

ஓ, நான் ஒரு செர்ரி சிற்றோடையைக் காண்கிறேன்
அதன் நடனமிடும் உடையைத் திறந்து கொண்டு
ஒரு பெருமழைக்குப் பிறகு;
நான் இளம் பைன் மரங்களைக் காண்கிறேன்
தங்கள் தலைகளை ஒன்றோடொன்று முட்டிக்கொள்கின்றன
ஓர் உரையாடலை உருவாக்க;
மேலும் மணற்புயலிலும் பாடல்கள் கேட்கின்றன
ஒரு பீச்சியடிக்கும் நீரூற்று போல.

இவ்வாறாக, மிக உஷ்ணமான சூரியன்கள் மின்னுகின்றன
கண்ணிமைகளுக்கு அடியில் கனத்த உறைபனியுடன்;
மேலும் ரத்தம் வழி நடத்துகிறது
நம்பகமான வசந்தக் காற்றை
உறைந்த உள்ளங்கைகளுக்கு இடையில்.
ஒவ்வொரு சாலைச் சந்திப்புகளிலும்
தெருவிளக்குகளால் ஆசிர்வதிக்கப்பட்டு
காதல் மௌனமாக வாக்குறுதி அளித்திருந்ததை விடவும் கூடுதலாக
முத்தப் பிரியாவிடைகளில்.

கடல் அலைகளுக்கும் பசுமை நிழலுக்கும் நடுவில்
பனிப்புயல்களுக்கு எதிராக நான் ஒரு கனவு வைத்திருக்கிறேன்.

௦௦௦


கூடுகை வரிசை

இரவுக்குப் பின் இரவு
காலத்தின் கூடுகை வரிசை
தொழிற்சாலையின் ஒருங்கு கூட்டும் வரிசை வேலைக்குப் பிறகு
வீட்டுக்குச் செல்லும் வரிசைகளில் நாங்கள் இணைகிறோம்
உயரே விண்மீன்கள் வானைக் கடப்பதற்குக் குழுமியிருப்பதைப் போல.
அதற்கும் மேலே
தொலைந்த நாற்றுகளின் ஒரு வரிசை.

விண்மீன்கள் தீர்ந்துவிட்டிருக்க வேண்டும்
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு
மேலும் பயணத் திட்டத்தில் மாற்றம் இல்லை
மேலும் சோகை பிடித்த நாற்றுகளில்
முழுமையும் நிறமும்
நிலக்கரிப்புகையில் மங்குகின்றன.
நமது பகிர்ந்து கொள்ளப்பட்ட வழக்க முறைகளால்
நான் இதை அறிவேன்.

விசித்திரமாக
என்னால் உணர முடியவில்லை
எனது சொந்த இருப்பை.
விசனம் அல்லது பழக்கம் காரணமாக நான் மாறிவிட்டிருக்கிறேன்
கிளைவிடும் மரங்கள் போல, விண்மீன் கூட்டங்கள் போல,
மிகப் பலவீனமாக இருக்கிறேன் கேள்வி எழுப்ப
இது தீர்மானிக்கிறது விதியை.
௦௦௦

விழுந்து கொண்டிருக்கும் இலைகள்

I

உருகிக் கொண்டிருக்கும் நிலா
ஒரு குளிர்ந்த கித்தானில் மிதக்கும்
ஒரு மெலிந்த பனிக்கட்டித் துண்டாக இருந்தது.
நீ என்னை வீட்டுக்கு நடக்க வைத்தாய்,
சிறிய பெருமூச்சுகளை வழி முழவதும்
விட்டுக் கொண்டு,
ஏமாற்றத்திலோ அல்லது துயரத்திலோ இல்லை.
நாம் ஒருபோதும் விவரிக்க முடிந்ததில்லை
இலைகள் நமக்குத் தரும் மனோநிலையை,
ஆனால் பிரிவுக்குப் பிறகு
வீழ்ந்து கொண்டிருக்கும் இலைகளில் உனது காலடியை நான் கேட்பேன்.

II

எல்லாத் திசைகளில் இருந்தும்
வசந்தம் எங்களிடம் குசுகுசுக்கிறது,
ஆனால் எங்கள் பாதங்களுக்குக் கீழே இலைகள்,
குளிர்காலக் குற்றத்தின் சாட்சியம்
ஒரு இருண்ட ஞாபகத்தைக் கிளறுகிறது.
ஆழ்ந்த அதிர்ச்சிகள்
நமது கண்களை ஒன்றையொன்று தவிர்க்கச் செய்கிறது,
ஆழ்ந்த பிரதிபலிப்புகள்
நமது எண்ணங்களை மீண்டும் சந்திக்க வற்புறுத்துகின்றன.

மரங்களில் ஆண்டு வட்டங்களைப் பதிக்கின்றன பருவங்கள்.
விழுந்து கொண்டும் தளிர்த்துக் கொண்டும் இருக்கும் இலைகள்
ஆயிரம் வரிகளை இயற்றுகின்றன.
ஆனால் ஒரு மரத்திடம் காலவரையறை அற்ற
ஒரே ஒரு பாட்டு மட்டுமே இருக்க வேண்டும்–
“வானத்திற்குள் சுதந்திரமாகப் பரவுவதற்காக
நான் ஒருபோதும் பூமியைவிட்டுப் போக மாட்டேன்.”

III

எனது ஜன்னலைத் தட்டி,
காற்று விவரிக்கிறது நீ எங்கிருக்கிறாய் என்பதை—
ஒரு கபொக் மரத்தின் அடியில் நீ நடந்து கொண்டிருக்கிறாய்
காற்று கீழே ஒரு பூக்களின் மழையை உதிர்க்கிறது:
வசந்த இரவுகள் பனியாலானவை,
நடுக்கங்கள் உனது இதயத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ளன.

திடீரென நான் உணர்கிறேன்: நான் ஒரு வீழ்ந்த இலை,
இருட்டிலும் சகதியிலும்—
காற்று ஒரு சாவுப் பாடலை இசைக்கும்போது
ஒரு பச்சை மென்கனவு அதன் முதல் சுவாசத்தை
என் உடலிலிருந்து எடுத்துக் கொள்ள நான் அமைதியாகக் காத்திருக்கிறேன்.

௦௦௦

உன்னைத் தேடுகிறேன்

எல்லைகள் அற்ற ஒரு தொங்கும் வண்ண ஓவியம்
விடையில்லாத ஒரு தூய அல்ஜிப்ரா கணக்கு.
ஓர் ஓரிழை யாழ், உணர்வு கிளறும் ஜெபமாலை
அது தாழ்வாரங்களில் சொட்டுகளாகத் தொங்குகிறது.
கடலின் அக்கரையை ஒருபோதும் அடைய முடியாத
ஒரு ஜோடித் துடுப்புகள்.

ஒரு மொட்டு போல அமைதியாய் காத்திருக்கிறேன்.
கொஞ்சம் தூரத்திலிருந்து உற்றுப் பார்க்கிறது அந்திச் சூரியன்.
ஒருவேளை ஒரு சமுத்திரம் எங்கேயோ ஒளிந்திருக்கலாம்,
ஆனால் அது வெளியே பாயும் போது—இரு கண்ணீர்த்துளிகள் மட்டுமே.

ஓ, ஓர் இதயத்தின் பின்னணியில்,
ஓர் ஆத்மாவின் ஆழ் கிணற்றில்.

ஒன்று அல்லது இரண்டு நிகழ்வுகளை நினைவுகூர்தல்

ஒரு கவிழ்க்கப்பட்ட வைன் கோப்பை.
நிலவொளியில் பயணிக்கும் ஒரு கல் பாதை.
நீலப் புல் நசுங்கிக் கிடக்கும் இடத்தில்
ஒரு புறக்கணிக்கப்பட்ட பல்வண்ண அஜலியா மலர்.

யூகலிப்டஸ் மரம் சுழல்கிறது.
உயரே விண்மீன்கள் ஒரு பல்வண்ணநோக்கியை நிறைக்கின்றன.
ஒரு துருப்பிடித்த நங்கூரத்தின் மேல்
கண்களில் பிரதிபலிக்கிறது மங்கிய வானம்.

ஒரு புத்தகத்தை உயர்த்திப் பிடித்து மெழுகுவர்த்தியைப் பொத்தினேன்
உதடுகளுக்கிடையில் ஒரு விரலுடன்
ஒரு முட்டையோட்டுக்குள் அமைதியாய் அமர்ந்திருக்கிறேன்,
பாதி ஒளி ஊடுருவும் ஒரு கனவை வைத்துக் கொண்டு.

ஒரு சிறிய ஜன்னலின் பாடல்

எழுது பொருட்களைக் கீழே வை,
திறந்த ஜன்னலுக்கு வா,
நான் ஒரு தீபத்தை உயர்த்திப் பிடித்திருக்கிறேன்
உனக்காக—
இந்த தூரத்திலிருந்து நீ என்னைப் பார்.

விடிந்து கொண்டிருக்கும் பூமியின் மேல் காற்று நடக்கிறது
வானத்தைத் துப்புரவாக கூட்டிப் பெருக்கி.
இரவு இன்னும் சேகரித்துக் கொண்டிருக்கிறது
அதன் உடைந்த துண்டுகளைத் தெருக்கள் நெடுக.
எல்லாப் பூக்களும் எல்லாப் பசுஞ்சிறு கிளைகளும்
சூரியனின் வேறொரு உறைபனியைச் சுவைக்கும்
கருஞ்சிவப்பு விடியல் தூரத்தில் இல்லை போல.

கடலின் வாசனை மலைகளுக்குப் பின்னால் சிக்குண்டு இருக்கிறது
அவை தொடர்ந்து
நமது இளமையைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்க முடியாது
மேலும் அவை நம்மை வெகுகாலம் தாமதிக்கச் செய்யவும் முடியாது.

எனக்கு வாக்குறுதியளி—கண்ணீர்கள் இல்லை
ஜன்னலுக்கு வா, என்னை சந்தி
நீ தனிமையில் இருப்பதாக உணர்ந்தால்.

ஒருவர் அடுத்தவரது துயரப் புன்னகையைப் பார்ப்போம்
போராட்ட ஆனந்தக் கவிதைகளைக் கைமாற்றிக் கொள்வோம்.


பரிசு

ஒரு குளத்தின் கனவை நான் கனவு காண்கிறேன்
அது வானத்தைப் பிரதிபலிக்க மட்டும் வாழவில்லை
ஆனால் கரை மேல் நிற்கும் வில்லோ மரங்களும் பால்வெட்சிச் செடிகளும்
என்னைக் குடிக்கட்டும்.
அவர்களது இலைச் சிரைகளுக்குள் நான் வேர்கள் வழியாகக் கிளைவிடுவேன்,
மேலும் அவை வாடுகையில் நான் வருந்தப் போவதில்லை
ஏனெனில் நான் என்னையே புகுத்தியிருக்கிறேன்
மேலும் வாழ்ந்துவிட்டிருப்பேன்.

சூரிய ஒளியின் ஆனந்தத்தோடு நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்
அதன் சுருக்கமான வாழ்க்கை, காலம் தாண்டும் ஒரு காவியத்தையே படைத்துவிடுகிறது
குழந்தைகளின் கண்மணிகளில்;
அது ஒரு சிறிய தீயாக, தங்கமயமாகத் தொடங்கும்,
மேலும் ஒரு மரகதப் பச்சைப் பாடலைப் பாடும்
முளைவிடும் விதைகளின் மத்தியில்.
நான் சாதாரணமாக இருக்கிறேன் ஆனால் ஏராளமாக
அது எனக்கு ஆழத்தைத் தருகிறது.

புலம்பெயரும் பறவைகளின் துயரத்தோடு மட்டுமே நான் புண்படுகிறேன்
எனது ஆழ்ந்த காதலை வசந்தம் மட்டுமே புரிந்துகொள்கிறது
அத்தகைய விரோதத்தையும் இழப்பையும் அது தாங்கிக் கொள்கிறது
ஒரு விட்டுவிட்டு மினுங்கும் வெதுமையான காலத்தை நோக்கிப் பறப்பதற்கு.
ஓ, இந்தக் கேடுகெட்ட சிறகுகள்
பாடலின் ஒரு தீவிரமான வரியைத் துடைத்தெறிந்துவிடும்
எல்லா ஆத்மாக்களையும் காலத்தையும் துளைத்தெடுக்க.

நான் உணரும் ஒவ்வொன்றும்
பூமியிலிருந்து கிடைத்த ஒரு பரிசே.

௦௦௦

ஷூ திங்

அசாமிய கவிதை மூலம் : நீலிமா தாகுரியா ஹக்- ஆங்கிலம் : பி.எம்.ரஸ்தான் – தமிழில் : தி.இரா.மீனா

சாம்பல் வீடு

சாம்பல்,சாம்பலால் மட்டுமே

நாங்கள் வீடுகளைக் கட்டுகிறோம்

ஜன்னல்கள் புகையால் உருவாக்கம் பெறுகின்றன.

காற்று உட்புகுவதில்லை,புகை மட்டும் தங்குகிறது

நம் இதயங்களைச் சுண்டியபடி.

உள்ளே போகிறோம் வெளியே வருகிறோம்

அக்னிக் கதவுகளின் மூலமாக

இரவு முழுவதும்

புகையின் இதயத்தை ஈரப்படுத்துகிறோம்

இரவில் மழை பெய்கிறது.

* * *
2
மாடுகள் சாம்பல் கொட்டகையில் வசிப்பதில்லை

அவை கயிறுகளை இழுத்துக் கொண்டு வயலுக்கு ஓடுகின்றன.

மாடுகளின் பரிதாபமான அலறல்

நாற்றுகளை நடுங்கச் செய்கின்றன.

நாற்றுகளும் அலறுகின்றன.

சொந்தக்காரர் தொலைந்து போனார்

கேட்க முடியாமல், பார்க்க முடியாமல்..

இருண்ட காற்று கிரீச்சிடுகிறது.

அனாதை அலறுகிறது…

எங்கள் வீடுகள் எரிக்கப்பட்டன.

சாம்பல் இப்போதுதான் ஒரு குழந்தையைப் பிரசவித்திருக்கிறது

அவனுடல் கரிக்கோலால் ஆனது

கண்கள் எரிகோல்

பாலை உறிஞ்சுவதற்கு பதிலாக அவன் புகையை உறிஞ்சுகிறான்.

சாம்பலின் குவியலிலிருந்து அவனைத் தூக்குவதற்கு,

எங்கள் கைகள் மிகக் குட்டையானவை

ஆம்,நாங்களும் புகை மனிதர்கள்தான் என்று

குறுகிய மூச்சு சொல்கிறது.

பஞ்சாபி கவிதைகள்: பஞ்சாபி கவிதை: மூலம் : மன்ஜித் திவானா ஆங்கிலம் : பி.எம்.ரஸ்தான் – தமிழில் : தி.இரா.மீனா

நினைத்துப் பார்

ஒருவருடைய பாதையை

ஒருவர் எப்படித் தேர்ந்தெடுப்பார்

என்று நினைத்துப்பார்,

சூரியனும் சந்திரனும்

கண்பாரவையற்றுப் போனால்..

ஒருவர் சாயும்போது

தான் எழுந்து விடுவோம் என்று

நாற்காலி அச்சப்படுமானால்

எப்படி ஒருவர் ஓய்வெடுக்க முடியும்?

இறுதிச் சடங்கு ஜூவாலைக்கும்

வேள்வியின் ஜூவாலைக்கும்

எந்த மாறுபாடும் இல்லையெனில்

ஒருவரால் என்ன செய்ய இயலும்?

ஆடைகளைக் களைந்தால்

மட்டும் ஒருவர்

நிர்வாணமாக முடியுமா?

நினைவுகளின் சேர்க்கை

எந்தப் பொட்டலங்களில் தங்கும்?

சகுந்தலையின் மோதிரத்தை

விழுங்கிய மீன்

கடலால் விழுங்கப்பட்டதே ,

கடலுக்கு ஒரு

விமோசனம் இருக்கிறதா?

காலம் காலமான கடவுள்

கடல் என்கின்றனர்

எனில் ஏன் என்

மூச்சு மூழ்குகிறது.

மனதின் கண்ணாடியை

நீ எப்படி மறந்தாய்,

எவ்வளவு காலம் பார்வையற்றவனாய்க்

நீ காட்சி தருவாய்?

படைப்பின் நான்கு முனைகளை

நீ உறுதியாகப் பற்றிக் கொண்டாலும்,

எல்லாமும் தண்ணீரைப் போல

உன் விரல்களினூடே நழுவும்…

என்றேனும் இதைப் பற்றிச் சிந்தித்திருக்கிறாயா?

*

பூமி

பூமி கண்ணாடி

மூலம்தான்

தங்கள் முகங்களை ஆத்மாக்கள்

அடையாளம் காண்கின்றன.

சங்க்ராம் ஜெனா – ஒடியா கவிதைகள் -nn தமிழில் : சுப்ரபாரதிமணியன்

1 நாடோடி

இங்கு, அங்கு, எங்கும்
நாடோடியின் பயணம் முடிவதேயில்லை.
சாலையின் இரு புறமும்
நதிகளைப் பார்க்கிறான்,
மலைகளை, வயல்களை, காடுகளை,
கிராமங்களை, மரநிழலை,
பகலில்
இரவில் நட்சத்திர ஒளியையும்
நடக்கும் போது, சாலை நீளும் போது
காலம் தொடரும் போது,
தனிமையில்
சிலசமயம் உறவினர்கள் கீழே விழுந்தும்
நிலத்தில் ஊன்றிய
மரங்கள், வீடுகளைப் போல்.

ஆனால் சக்கரங்கள் சுழல்கின்றன
புதிய முகங்களைப் பார்க்க,
புதியவர்களை,
உறவில் புதிய அத்தியாயங்களை.

கூட இருப்பது
தொடுகைக்கு
சாலைபோல் நினைவு
பனியின் இடையில்
சூர்ய உதயம் முதல் அஸ்தமனம் வரை
உன் இருப்பின்மையை
நான் சுமந்து கொண்டிருப்பது போல
இந்த வாழ்விலும், பிறகும்.

2 புலி

எனக்கு மூன்று வயது இருக்கும்போது
நான் உன்னை என் பாடப்புத்தகத்தில் பார்த்தேன்.
கண்கள் சிவந்திருக்க, வாய் திறந்திருக்க
மூன்றுமுறை பார்வை தவறிப் போனபின்புதான்
நான் உன்னை நேரடியாகப் பார்க்க முடிந்தது.

எனக்கு ஒன்பது வயது இருக்கும் போது
நந்தன்டகன் மிருகக் காட்சி சாலையில்
உன்னைப் பார்த்தேன்.
இரும்புவேலிக்கு வெளியிலிருந்து
பார்வையாளர்கள் மீது அலட்சியப் பார்வையுடன்
ஒரு சிறு மரத்தடி நிழலில்
நீ தூங்கிக் கொண்டிருந்தாய்.

என் அப்பாவின் கைகளைப்பற்றிக்கொண்டு
நான் உன்னைப் பார்த்தேன்.

பல ஆண்டுகள் கடந்து விட்டன.
நான் ஐம்பதுகளின் மத்தியில்
இருந்தபோது ஒரு சர்க்கஸில்
காலரியில் உட்கார்ந்து கொண்டு
என் மகளின் கைகளைப் பிடித்துக் கொண்டு
உன்னை பார்த்தேன்
கட்டக்கில் மகாநதியின் கரையில்.

உன் நிறம் மினுங்கவில்லை
உன் வாயைத் திறந்த போது
சில பற்களைப் பார்க்க முடிந்தது
உன் கண்கள் களையிழந்திருந்தன.

பணிவான மாணவனைப் போல
உன் தலைவனின் கைத்தடியின் ஆணைக்கு
இணங்கி நடந்தாய்

கூட்டத்தின் கைதட்டலுக்கு
நீ தலையைக் குனிந்தாய்
உன் கண்களில் மினுக்கம் இல்லை
எங்களைப் போல நீ ஆகிவிட்டாயா?

3 குறி

குறியில்லாமல் ஏதாவது இடம் உண்டா?
சூரிய அஸ்மனத்திற்குப் பின் வானில்
மழைக்குப் பிறகு பூமியில்
துக்கத்திற்குப் பின் இதயத்தில்
வழிபாட்டிற்குப் பின் சிலையில்
புணர்ச்சிக்குப் பின் உடம்பில்.

குறியை அழிக்க முடிகிறதா?
அழித்தபின் மறைகிறதா?
இந்திரனின் குறி
அகல்யாவின் உடம்பில் ஆனது
கடம்பா மரத்தின் விளைவை
யமுனா கைக்கொண்டது
என் கவிதைகளின் பக்கங்களில்
உன் ரேகைக்குறி இருப்பது போல்.
மோதிரத்திற்காக சகுந்தலை தேடல்
பயனுள்ளது போல்
நதியில்
மீன்களின் கூட்டத்தில்
அரச சபையில்
யாரோடையதன் நகத்தை
சந்திரசேனா தேடியவகையில்,
ராதாவின் உடம்பில்
பல்குறிகள்…..

குறிகள் ஆன்மீகத்தின்
அயர்ச்சியில்லாமல்
நாம் குறிகளைத் தேடி எப்போதும்
காதலிப்பது முதல்
மரணத்தைச் சந்திப்பது வரை.

****

சிபிச்செல்வன் கவிதைகள் / ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு லதா ராமகிருஷ்ணன்

சிபிச்செல்வன்

12. BASEMENT

Standing at the mountain-base
I kept watching for a long time
The mountain was all tall and massive
I waited there itself
One can see the mountain from all sides
of our place
Viewing it from a distance
we won’t see its base.
But, the mountain-base never worried about it
It had no grievance at all of its absence
when I watch so.
In mountain-climbing
the base remains the start
and the close.

மலை யடிவாரம்

மலையடிவாரத்தில் வெகுநேரம் பார்த்திருந்தேன்
மலை மிக மிக உயரமாகத் தெரிந்துகொண்டிருந்தது
அங்கேயே காத்திருந்தேன்
ஊரின் எல்லாப் பக்கங்களிலிருந்தும்
மலையைப் பார்க்கலாம்
தொலைவிலிருந்து பார்க்கும்வேளை
மலையடிவாரம் தெரியாது
ஆனால் அதைப் பற்றி ஒரு நாளும் கவலைப்பட்டதில்லை மலையடிவாரம்
நான் பார்க்கும்போது அது இல்லையென்பதில் அதற்கு ஒரு நாளும் குற்றச்சாட்டு கிடையாது
மலையை ஏறத்தொடங்கும் ஆரம்பமும்
மலையடிவாரத்தில்தான்
மலையிலிருந்து இறங்கும்போது அதுதான் முடிவாகமுடிந்தும் நிற்கிறது
•••

13. THE CHILD IN ITS FATHER’S SHIRT

Getting inside its father’s shirt
The child was trying to become the father.
That the father is wearing the shirt of his child
which has grown along with the father
_ his friends make fun of him.
The son goes to office, wearing his father’s shirt.
Wearing his son’s trendy shirts the father tries to
Appear youthful.
The son who had worn his father’s shirt
Implies his desire to become a father.
Thus Time keeps enjoying
The father’s shirt
And that of the son
Turning all too hastily
Time-worn.

அப்பாவின் சட்டைக்குள் குழந்தை

நுழைந்து அப்பாவாக முயற்சித்துக்கொண்டிருந்தது
அப்பாவோடு வளர்ந்த குழந்தையின் சட்டையை அப்பா அணிந்துகொண்டிருப்பதாக
நண்பர்கள் பகடி செய்கிறார்கள்
அப்பாவின் சட்டையை மாற்றிப்போட்டுக்கொண்டு அலுவகம் போகிறன் பிள்ளை
பிள்ளையின் காலத்திற்கேற்ற பேஷன் சட்டைகளை உடுத்திக்கொண்டு இளமையின் மெருகை காட்டிக்கொள்ள விரும்புகிறார் அப்பா
அப்பாவின் சட்டையைப் போட்டுக்கொண்ட பிள்ளை
குறிப்பாலுணர்த்துகிறான் அப்பாவாக மாறவிரும்புவதை
இப்படியாக இந்த விளையாட்டை
ரசித்துக்கொண்டிருக்கிறது காலம்
அப்பாவின் சட்டையும்
பிள்ளையின் சட்டையும்
வேகமாக நைந்துகொண்டிருப்பதை
••

14. THE NOON-MAN’S SMOKY PLAY

A man keeps watching from beneath a towering over-bridge
The wagons going at so great a height;
also their hues and shades;
furthermore their varying speeds
The noon-man kept on watching
the cars that whizzed past along the roads
underneath the bridge
driving away the noon
in a hot chase
When he became bored
buying a cigarette from a roadside shop,
he lit it.
Inhaling the first smoke deeply,
relishing it
he blew it out.

The smoke taking its own time flew
and dispersed in the air.
Following that
commencing the game of
inhaling and exhaling smoke
when he was turning fatigued,
in the last curl of smoke blown out
the over-bridge vanishing,
in a few moments
the noon-man almost ran
terribly agitated.
He remained watching the traffic-police
blowing his whistle
and chasing him in hot pursuit.

மத்தியானவாசியின் புகை விளையாட்டு

உயரமான மேம்பாலத்தின் அடியிலிருந்து
ஒருவன் பார்த்துக்கொண்டிருக்கிறான்
உயரமாக போய்க்கொண்டிருந்த வாகனங்களை
மற்றும் அதன் வண்ணங்களை
மற்றும் அதன் வேகங்களை
பாலத்தின் கீழிருந்த சாலையிலும் மத்தியானத்தை விரட்டிக்கொண்டு போன கார்களையும் பார்த்தபடியே இருந்தான் அந்த மத்தியானவாசி.
சலிப்புற்ற ஒரு கணத்தில் சாலையோர பெட்டிக்கடையில் சில்லறைகொடுத்து ஒரு சிகரெட் வாங்கி கொளுத்தினான்.
முதல் புகையை ஆழ்ந்து இழுத்து ரசித்தவாறே
புகையை வெளியே ஊதினான்
புகை அதன் வேகத்தில் மெல்ல காற்றில் கலைந்தது
அடுத்தடுத்து புகையை இழுப்பதும்
அதை வெளியே ஊதுவதுமாக ஒரு விளையாட்டைத் தொடங்கி அதை அவனே சலித்துக்கொண்டிருந்தவேளையில்
கடைசியாக விட்ட சுருள் சுருளான புகையில்
மேம்பாலம் மறைய
சில கணங்களில்
பதட்டமாக விரைந்தான் மத்தியானவாசி.
போக்குவரத்துக் காவலர் வீசில் ஊதி அவனைப் பின்னாலேயே விரட்டிக்கொண்டு போவதைப் பார்த்தவாறேயிருந்தான் அவன்.
••••

THOSE WHO KEEP ON WASHING THEIR HANDS

In bathrooms
In the kitchen wash-basin
In toilets
and everywhere else
they have kept dettol solutions in bottles
As soon as you wake up in the morning
First you should wash the hands and then only
brush the teeth.
After attending to nature’s call at the loo
you should wash your hands with great caution
focusing on your utmost safety
then, after taking bath,
should squeeze the dettol soap-solution
and wash impeccably
Each time you should wash for twenty seconds.
First you should pour the solution in your palm
and spread and press it slowly oh softly
Then increase the speed, entwining your palms
tightly pressing against each other.
First wash the left palm with the right
and then the right with the left
Pressing, squeezing, wiping.
Then, repeat the exercise
upon the outer portion of the palms
From right to left and left to right;
Spare no spot but wipe hard in between the fingers
and on the rims and edges of nails.
Thus whenever there is time in a day
they go on washing their hands
trying to be clean to the core.
They keep cleaning the hands for ever.
Over and over
pouring water all over
saying that germs shouldn’t be there
they keep on butchering bacteria
and
fellow humans
washing their hands off…
all the time….
Oh my…..

குளியலறைகளில்
சாப்பாட்டு அறை வாஷ்பேஸின்களில்
கழிவறைகளில் என எல்லாயிடங்களிலும்
கைகளைக் கழுவிக் கொள்வதற்காக நவீன டெட்டால் சோப்பு நீரை பாட்டில்களில் அடைத்து வைத்திருக்கிறார்கள்
காலையில் எழுந்ததும் முதலில் கைகளைக் கழுவிக்கொண்டுதான் பல் துலக்க வேண்டும்
கழிவறைகளில் காலைக்கடன்களை கழித்ததும்
கைகளைக் கழுவிக்கொள்ள வேண்டும்
பின் குளித்து முடித்ததும் ஒருமுறை அதீத பாதுகாப்பு கருதி கைகளில் டெட்டால் சோப்பு நீரை பிதுக்கி சுத்தமாக கழுவிக்கொள்ள வேண்டும்.

ஒவ்வொருமுறையும் இருபது நொடிகள் கழுவுதல் வேண்டும்
முதலில் உள்ளங்கையில் சோப்புநீரை விட்டு
மெதுவாக மிக மெதுவாக தேய்த்து
பின் வேகவேகமாக தேய்த்துவிடவும்
வலது கையிலிருந்து இடது கையையும்
இடது கையிலிருந்து வலது கையையும் தேய்க்கவும்
உள்ளங்கைகளை சுத்தமாக அழுத்தி தேய்க்கவும்
பின் கைகளின் மேற்புறத்தில் இதேபோல இடவலமாக வலஇடமாக தேய்க்கவும்
விரல்களுக்கிடையில் நகக்கண்களுக்கிடையில் என ஒரு இடம் விடாமல் தேய்க்கவும்
இப்படியாக ஒரு நாளின் வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம்
சுத்தம் சுத்தமென கைகளைக் கழுவிக்கொண்டேயிருக்கிறார்கள்.
கைகளைக் கழுவிக்கொண்டேயிருக்கிறார்கள் ஓயாமல்
கழுவிக்கொண்டேயிருக்கிறார்கள்.
கிருமிகள் ஒட்டிக்கொள்ளக்கூடாதென சொல்லியவாறே
ஓயாமல் கொல்கிறார்கள் பாக்டீரியாக்களை
மற்றும்
சக மனிதர்களை
ஓயாமல் கைகளைக் கழுவிக்..,,,,,

PHANTOM FOE

They were rehearsing boxing
From a corner I was watching it
They were punching at those in front.
The wrestlers
jumping and leaping to and fro,
front and back
rehearsing hard
would be forever
giving their make-believe foes
ferocious shadow-punches.
So early that morn
the playground was overcrowded.
With the nose broken
the trainer’s face turns bloody.
The other coaches come running
shouting that the practice is over
The foe escapes then, from there
on a fantasy flight.

பாவனை எதிரி

குத்துச்சண்டை பயிற்சியை மேற்கொண்டிருக்கிறார்கள்
ஒரு ஓரத்திலிருந்து அதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன்
முன்னால் இருந்தவர்களை நோக்கி
குத்திக்கொண்டிருக்கிறார்கள்
முன்னும் பின்னுமாக குதித்து
கடும் பயிற்சியை மேற்கொண்ட குத்துச் சண்டை வீரர்கள்
இப்போதும் அப்போதும்
எதிரிலில்லாத எதிரியை நோக்கி
குத்துகிறார்கள் பாவனையாக
அவ்வளவு அதிகாலையில் நிறைந்திருக்கிறது விளையாட்டு மைதானம்
மூக்குடைபட்டு இரத்தம் தெறித்து
வழிகிறது பயிற்சியாளனின் முகம்
பயிற்சி நிறைந்துவிட்டதாக கத்திக்கொண்டு ஓடிவருகிறார்கள்
மற்ற பயிற்சியாளர்கள்
அப்போது பாவனையாக தப்பித்து ஓடுகிறான்
எதிரி வீரன்
•••

சார்லஸ் புகவ்ஸ்கி – மொழிபெயர்ப்பு கவிதைகள் : ஆங்கிலம் : சார்லஸ் புகவ்ஸ்கி [ Charles Bukowski 1920 – 1994 ] – தமிழில் : தி.இரா.மீனா

சார்லஸ் புகவ்ஸ்கி

சார்லஸ் புகவ்ஸ்கி கவிதை ,சிறுகதை,நாவல் என்ற பன்முகம் கொண்ட படைப்பாளி. ’laureate of American lowlife ” என்று டைம் பத்திரிக்கையால் வர்ணிக்கப்பட்டவர். டி.ஹெச்.லாரன்ஸ்,ஹென்றி மில்லர், பியோதர் தஸ்தா யெவ்ஸ்கி, லி.பை ஆகியோர் இவரின் படைப்புலக முன்னோடிகள்.

**

புன்னகைக்கும் இதயம்
உன் வாழ்க்கை உன் வாழ்க்கைதான்
அதை மற்றவர்களுக்குச் சமர்ப்பிக்காதே.
கண்காணிப்புடன் இரு.
வெளிவர வழிகள் உண்டு.
எங்கோ வெளிச்சமிருக்கிறது.
அது போதிய வெளிச்சமாக இல்லாமலிருக்கலாம் ஆனால்
அது இருட்டை விரட்டுகிறது.
கண்காணிப்புடன் இரு.

கடவுளர்கள் உனக்கு வாய்ப்புகள் தரலாம்.
அவர்களை அறிந்து கொள்.
அவர்களை இணைத்துக் கொள்.
உன்னால் சாவை விரட்ட முடியாது ஆனால்
சில சமயங்களில் வாழ்வின் சாவை, உன்னால் துரத்தமுடியும்.
அதை அடிக்கடி செய்யக் கற்றுக் கொள்வதன் மூலம்,
அதிக வெளிச்சமுண்டாகும்.
உன் வாழ்க்கை உன் வாழ்க்கைதான்.
நீ வாழும்போதே தெரிந்துகொள்.
நீ அற்புதமானவன்
உனக்குள் களித்திருக்க கடவுளர்கள் காத்திருக்கின்றனர்

அதற்கு எதுவும் உதவமுடியாது
மனதிலிருக்கும் அந்த ஓரிடத்தை
என்றும் நிரப்பி விடமுடியாது
ஓரிடம்
மிகச்சிறந்த நேரங்களின் போதும்
மிகச்சிறந்த தருணங்களின் போதும் கூட

நமக்குத் தெரியும்
எப்போதையும் விட அது
நமக்குத் தெரியும்
மனதிலிருக்கும் அந்த ஓரிடத்தை
என்றும் நிரப்பி விடமுடியாது
நாம் காத்திருப்போம்
அந்த இடத்தில்.
ஓ, ஆமாம் ..

தனிமையில் இருப்பதை விட
மோசமான விஷயங்களுமுண்டு.
ஆனால் பெரும்பாலும் இதை உணர்வதற்குள்
பல தசாப்தங்களாகி விடுகின்றன

பெரும்பான்மை நேரங்களில்
நீங்கள் செயல்படும் போது
அது காலம் கடந்ததாகிறது
காலம் கடத்தலை விட
மிக மோசமானது எதுவுமில்லை.

எனில் இப்போது?
வார்த்தைகள் வந்து போய்விட்டன,
நான் நோயுற்றிருக்கிறேன்.
தொலைபேசி ஒலிக்கிறது,பூனை உறங்குகிறது.
லிண்டா சுத்தம் செய்கிறாள்.
நான் வாழ்வதற்காக காத்திருக்கிறேன்.
சாவதற்காக காத்திருக்கிறேன்.
துணிவைக் காட்ட வேண்டுமென்று விரும்புகிறேன்.
அது அசிங்கமான தீர்வு
ஆனால் வெளியிலிருக்கும் மரத்திற்குத் தெரியாது;
பின் மதியத்தின் சூரிய ஒளியில்
காற்றோடு அது அசைவதைப் பார்க்கிறேன்.
இங்கு பிரகடனம் செய்ய எதுவுமில்லை.
வெறும் காத்திருப்புத்தான்.
ஒவ்வொன்றும் அதைத் தனியாய் எதிர்கொள்கிறது.
ஓ, ஒருகாலத்தில் நான் மிகச் சிறியவனாக இருந்தேன்,
ஓ, ஒரு காலத்தில் நம்பமுடியாத அளவிற்குச்
சிறியவனாக இருந்தேன்!
கவிதை
சில நல்ல கவிதைகளை
எழுதுவதற்கு
நிறைய
விரக்தி,
அதிருப்தி மற்றும்
தெருட்சி
ஆகியவை உண்டாகின்றன.

அது எல்லோராலும்
எழுதப்படுவதற்கோ
அல்லது படிக்கப்படுவதற்கோ
இயலாதது.
இரக்கத்துடனிரு
எவ்வளவு காலாவதியானதாக
நகைப்புக்கிடமானதாக அல்லது அருவருக்கத்தக்கதாக
இருப்பினும்
மற்றவரின் அபிப்ராயங்களை
புரிந்து கொள்ள வேண்டுமென்று
நமக்கு கற்பிக்கப்பட்டிருக்கிறது.
அவர்களின் முழுத் தவறுகளையும்
அவர்களின் சேதமான வாழ்க்கையையும்
இரக்கத்தோடு ’பார்க்க வேண்டுமென்று ’
சொல்லப்பட்டிருக்கிறது.குறிப்பாக
அவர்கள் முதியவர்களாக இருந்தால்.

ஆனால் நாம் செய்யும் அனைத்திற்கும்
வயதுதான் மூலம்.
அவர்கள் முதுமையடைந்து விட்டனர்.
அவர்கள் பார்க்க மறுக்கின்றனர்,
முன்னிறுத்தலின்றி வாழ்ந்திருக்கின்றனர்

அவர்களின் தவறில்லையா?
யாருடைய தவறு?
என்னுடையதா?

அவர்களின் அச்சத்திற்கு பயந்து
அவர்களிடமிருந்து என் அபிபிராயங்களை
மறைத்துக் கொள்ள
உத்தரவிடப்படுகிறேன்
முதுமை குற்றமில்லை.
ஆனால்
வேண்டுமென்றே வீணாக்கப்பட்ட
வாழ்வு வெட்கத்திற்குரியது.
பல வாழ்வுகள் வேண்டுமென்றே வீணானதாக இருக்கின்றன.

——–

பூதக்கண்ணாடி ( கவிதைகள் ) / வே.நி.சூர்யா

வே.நி.சூர்யா

0
ஒரு தனித்தனியான ஆள் என்ன செய்வான்
தனியாக இருப்பான்
மேலும் தனியாக இருப்பான்
பின்பு தனித்தனியாக தன்னை உடைத்துப் போடுவான்
கடைசியிலும் தனியாக இருப்பான்
ஒரு நீர்த்துளி மெல்லச் சிரிக்கும்
இன்னொரு சிலந்திப்பூச்சியோ
அவனை சுற்றி வலைபின்னும்
மழைத்துளியின் கழுத்தில் கயிற்றை கட்டியிழுப்பதாக கனவு வரும்
அதற்குபிறகும் அவன் தனியாக இருப்பான்

0
அவனுடைய கண்ணீர் அனைத்தும் உப்பாயிற்று
அந்த உப்பை கொண்டு அவன் ஒரு மண்வெட்டி செய்தான்
அம்மண்வெட்டியை எடுத்துக்கொண்டு ஒரு கொடிய இரவில் தன்னைத்தானே
தோண்டத் தொடங்கினான்
அவனுக்கு பல இரவுகளுக்கு பிறகு ஒரு புதையல் கிடைத்தது:
இன்னும் நூறு மண்வெட்டி செய்யும் அளவுக்கு உப்பு

0
வெட்டவெளியில் தன்னைத்தானே எழுப்பிக் கொள்கிறது ஒரு கோவில்
காற்றில் ஒரு கோபுரம்
நீரால் ஒரு பிரகாரம்
சந்தேகமேயில்லை கோவில் கட்டப்பட்டாயிற்று
அங்கே அவனை
சிலையாக நிறுவுகிறது வாழ்க்கை
கறுப்பு மழை பொழிய
அந்தம் வந்து நடையை சாத்துகிறது
இனி
கோவில் வேகமாக பாழடையும்
அவனுடைய சிலை வெடித்து உடையும்
எதுவும் புரியாது வெளவால்களுக்கு

0
இறுதியாய் எதிலுமே இருட்டையே அவன் தேர்கிறான்
இருட்டும் மனமும் ஒன்றுதான் என்றாகின்றன அப்போது
உடனே தெரிகிறது
ஒரு முறிந்துபோன காதல்
இன்னும் தூரத்தில்
அவனுடைய பால்யம்
அதற்கும் தொலைவில்
பிறப்பதற்கு முன்பிருந்த இடம்
அங்கே சென்றாக வேண்டும் அவனுக்கு

0
அவன் தன்னை தனித்தனியாக கழட்டிபோட்டிருக்கிறான். இப்போதைக்கு அவனுக்கு இது ஓய்வு. கால்கள் இரண்டையும் கட்டி ஒரு துடைப்பத்தை செய்திருந்தான், அவன் ஒரு ஊன்றுகோல் செய்திருந்தால் கைகளில் கால்களை பிடித்துக்கொண்டு நடக்கும் மனிதனாக இருந்திருப்பான். கண்களை மிளகு டப்பாவினுள் போட்டு தொலைகாட்சி பெட்டிக்கு முன்பு மூடிவைத்திருந்தான், அநேகமாக இதற்குமுன் அவை வறட்டு இருமலில் அவதிப்பட்டிருக்கக்கூடும். குளிர்சாதனபெட்டியில் காதுகளை வைத்திருந்தான், ஏனென்றே தெரியவில்லை. சோபாவுக்கு அடியில் மூக்கை வைத்திருந்தான், ஒருவேளை ஈர மரக்கட்டையின் வாசனை பிடிக்குமோ என்னவோ. நீளமான நாக்கை சீனி டப்பாவினுள் புதைத்து வைத்திருந்தான், எறும்புகள் வந்துவிடக்கூடாது என்ற பிரார்த்தனை எறும்புக்கொல்லியாய் சுற்றி தூவப்பட்டிருந்தது. தலையை கால்பந்திற்கு அருகே வீசியிருந்தான். வியப்பாக உள்ளது இரண்டு கைகளையும் ஒரேசமயத்தில் யார் உதவியுமின்றி எப்படி கழட்டிவைத்தானென்பது, அவையிரண்டும் சமையலறையில் காஃபி போட்டுக் கொண்டிருக்கின்றன. தலையணையில் கழுத்தை வைத்து தூங்கிக் கொண்டிருக்கிறது அடியும் முடியுமில்லாத உடல். எவ்வளவு அழகாக ரத்தம் வடிந்துகொண்டிருக்கிறது தெரியுமா. எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறான் தெரியுமா

**

காலவரம்பற்ற கன்னிமைச் சொற்களின் ஒழுங்கின்மை — கவிதை / மொழிபெயர்ப்பு கவிதைகள்; மூலம் : தியோடர் ரோத்கே தமிழில் : தி.இரா.மீனா


–தியோடர் ரோத்கே
தியோடர் ரோத்கே ( Theodore Roethke1908-1963 ) அமெரிக்கக் கவிஞர்.தற்சோதனை ஒலிநயம்,புனைவாற்றல் கற்பனை என்பவை அவர் கவிதாம்சங்களில் சில வாகும்.கீட்ஸ், எலியட்,ஆடென் என்று அவரது போற்றுதலுக்குரிய கவிஞர் கள் இருப்பினும், மிக வெளிப்படையாகத் தன் அனுபவங்களையே பெரும் பான்மைக் கவிதைகளின் பாடுபொருளாக்கியது ரோத்கேயின் தனிச் சிறப்பு என்று விமர்சகர்கள் மதிப்பிடுகின்றனர். அவர் கவிதைகளை வரிசைப்படுத்திப் படிக்கும்போது வாசகன் எல்லாக் கவிதைகளிலும் குறிப்பிட்ட பாங்கும்,கருது பொருள்களும் தவிர்க்க முடியாது வெளிப்பட்டிருப்பதை உணரமுடியும். இயற் கைக்கு ஒத்த கலைசார்ந்த தொனி, பரிணாம வளர்ச்சி கருக்கள்,அழுத்தத்தின் பின்னணியிலான அனுபவங்கள் என்ற பார்வை தொடர்ந்து வெளிப்பட்டிருப் பதை அறியமுடியும்.இந்த வெளிப்பாடுகளால் அவரை முறைசார்பு கவிஞர் என்றோ சோதனை சார்பு, கவிஞர் என்றோ குறையேற்பு கவிஞர் என்றோ எதற்குள்ளும் அடையாளப் படுத்த முடியாமல் போகிறதெனவும், எல்லாம் ஒருங்குடைய கவிஞராக வெளிப்படுத்துவதாகவும் Simonetti குறிப்பிடுகிறார். The Waking, The Lost Son, The Far Field, Words for the Wind அவருடைய குறிப்பிடத் தக்க படைப்புகள். Pulitzer Prize, National Book Award ஆகியவை அவருக்குக் கிடைத்த குறிப்பிடத்தக்க சிறந்த விருதுகள்

ஓர் இருள் நேரத்தில்
ஓர் இருள் நேரத்தில் கண் பார்க்கத் தொடங்குகிறது,
நான் என் நிழலை ஆழமான சாயையில் சந்திக்கிறேன்;
நான் என் எதிரொலியை வனத்தின் எதிரொலியில் கேட்கிறேன்.
இயற்கைக் கடவுள் ஒரு மரத்திடம் அழுகிறது.
நாரைக்கும் சிறுகுருவிக்கும் மலை விலங்குகளுக்கும்
பாம்புகளின் குகைகளுக்கும் இடையில் வாழ்கிறேன்.
பித்துப் பிடித்தலென்பது சூழ்நிலைக்கான முரண்பாடுகளில்
ஆத்மாவின் பெருந்தன்மை? அந்த நாள் அக்னியில் எரிகிறது
பரிசுத்தமான மனத்தளர்ச்சியின் தூய்மை என்பது எனக்குத் தெரியும்
என் நிழல் ஒரு புழுங்கலான சுவற்றிற்கு எதிராகப் பொருந்தியிருக்கிறது
பாறைகளுக்கு இடையிலான இடம்-ஒரு குகையா,
அல்லது சுழலுகிற வழியா? எனக்குத் தெரிவது விளிம்புதான்.

ஒரு நிலையான சூறாவளியின் தொடர்புகள்!
ஓர் இரவு பொங்கி வழியும் பறவைகளுடன், ஒரு கந்தை நிலா,
கடும்பகலில் இரவு மீண்டும் வருகிறது!
ஒரு மனிதன் தான் யாரென்பதைக் காணத் தொலைவில் போகிறான்-
கண்ணீரற்ற நீண்ட இரவில் சுயத்தின் இறப்பு
எல்லா இயற்கையானவடிவங்களும் இயற்கைக்கு மாறாகச் சுடர் விடுகின்றன

இருள்,என் விளக்கையும் ,என் விருப்பத்தையும் இருளாக்குகிறது.
என் ஆன்மா சூட்டில் தவிக்கும் கோடைக்கால ஈயாய்
நிலைவிட்டத்தில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது.நான் எந்த நான்?
ஒரு விழுந்த மனிதன் ,நான் அச்சத்திலிருந்து எழுகிறேன்.
மனம் மனதிற்குள் போகிறது, கடவுள் மனம்,
ஒன்று ஒன்றேதான், கிழியும் காற்றில் சுதந்திரமாய்.

இன்னொரு முறை , அந்தச் சுற்று
எது உயர்ந்தது, கூழாங்கல் அல்லது குளம்?
எது அறியமுடிவது? அறிய முடியாதது.
என் மனச்சாட்சி ஒருமலையை நோக்கி ஓடுகிறது.
இன்னும்! ஓ, இன்னும் மறைவற்றதாக
நான் இப்போது என் வாழ்க்கையைப் போற்றுகிறேன்
பறவையுடன்,தொடரும் இலையுடன்,
மீனுடன் , வேட்கையான நத்தையுடன்,
பார்வை எல்லாவற்றையும் மாற்றுகிறது.
நான் வில்லியம் பிளேக்குடன் நடனமாடுகிறேன்.
காதலுக்காக, காதலுக்கான காரணமாக
நாம் நடனமாடும்போது , நடனமாடும் போது
எல்லாம் ஒன்றாகிறது.

சரியான விஷயம்

இயலுமெனில் மற்றவர்கள் புதிரை கண்டறியட்டும்.
கைதிகள் அனுமதிப்பின் வாழ்க்கை அதன் போக்கில் அமையும்
சந்தோஷமான மனிதனுக்கு சரியான விஷயமே நடக்கிறது.
பறவை வெளியே பறக்கிறது,மீண்டும் உள்ளே வருகிறது;
மலை பள்ளத்தாக்காகிறது, இன்னமும் அப்படி;
இயலுமெனில் மற்றவர்கள் புதிரைக் கண்டறியட்டும்.
கடவுள் வேர்களை ஆசீர்வதிக்கிறார்! -உடலும் ஆன்மாவும் ஒன்றுதான்!
சிறியது மிக உயரியதாகிறது, உயரியது சிறியதாகிறது;
சந்தோஷமான மனிதனுக்கு சரியான விஷயமே நடக்கிறது.
இரவின் குழந்தை சூரியனில் பாய முடியும்,
அவனிருப்பு தனிதான் அது எல்லாமாகவும்;
சந்தோஷமான மனிதனுக்கு சரியான விஷயமே நடக்கிறது
அல்லது, சுயஅழிவு மற்றவர்களை அச்சுறுத்துறுத்தும் போது
அவன் திட வடிவாய் இன்னமும் அமர்ந்தபடி ,
தனக்குண்டான புதிருக்குள் அமிழ்கிறான்

இரவு மெதுவாக ஊடுருவும் போது நிலை மாறுகிறது
தன் விருப்பங்களை சரணடையச் செய்து தன்னை மறைக்கிறான்
புதிர் இல்லாதவரை ;செய்ய முடிவதும் எதுவுமில்லை
சந்தோஷமான மனிதனுக்கு சரியான விஷயமே நடக்கிறது .

கணக்கிடுதல்
எல்லா லாபங்களும் மறைந்து விட்டன; சுலபமான
ஆதாயத்தின் பயன் பதுக்குதல்,ரகசியத் தொகை
இப்போது அச்சம் தருகிற லக்கம் பழைய வலி என்று
எங்கள் வீட்டைத் தாறுமாறாகத் திருப்பியிருக்கிறது
அழிவுக்கான காரணத்தைத் தேடுகிறோம்,கூட்டல்,
கழித்தல் என்று எங்களை அடமானம் வைக்கிறோம்;
அட்டையை நாங்கள் எவ்வளவு உரசித் தேய்த்தாலும்,
விழுந்த பிழையை எங்களால் அடையாளம் காணமுடியவில்லை

ஏழைகளை அபகரிக்கும் நாணயமாய்
அந்தக் குறைபாடு எங்களை அடையாளப்படுத்தும்;
நாங்கள் தேடுவது எதுவெனில் ஒரு வழிச்
சவாரிதான்,பாதுகாப்பிற்கான ஒரு வாய்ப்பு:

ரோத்கேயின் சில மேற்கோள்கள்:
எல்லா மலர்களும் ,ஆழமான வேர்களில் ஒளியைத் தேக்கியிருக்கின்றன
கவிதையின் அழகான கால வரம்பில்லாத கன்னிமை கொண்ட சொற்களின் ஒழுங்கின்மையால் நான் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறேன்
நான் என்கிறது சுயம் :நான் குறைந்தவன் என்கிறது மனம்;நீ எதுவுமற்றவன் என்கிறது ஆன்மா
கட்புலம் என்னை வெளியேற்றுகிறது.நான் நிழலில் கரைந்து போகிறேன்.

எமிலி டிக்கன்சன் கவிதைகள் : தமிழில் ;தி.இரா.மீனா :

கவிஞர் எமிலி டிக்கன்சன்

அமெரிக்க கவிஞரான எமிலி டிக்கன்சனின் [Emilie Dickinson ] கவிதைகள் அவர் வாழ்ந்த காலகட்டத்தின் கவிதை மரபுகளை மீறி புதிய வடிவங்களோடு அமைந் தவை.பெரும்பான்மைக் கவிதைகள் மரணம் ,மரணமின்மை பற்றிய ஆழ மான சிந்தனைகளைப் பிரதிபலிப்பவை .மிகச் சிறிய வரிகளைக் கொண்டு அமைந்திருக்கும் அவருடைய கவிதைகளில் காணப்படும் அதிக அளவு நிறுத்தற் குறியீடுகள் கவிதை உலகிற்குப் புதிதானது;புதுப்பொருள் தருவது என்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.” வாழ்க்கை, காதல்,மரணம்.இயற்கை,நட்பு என்று அவருடைய கவிதைகளுக்கான பார்வை தனித்துவம் வாய்ந்ததாக இருந்தது. எமிலியின் கவிதைகளுக்கு தலைப்புகள் தேவையில்லை. அவரு டைய வரிகளே தொகுப்புகளாகப் பேசும் தன்மை கொண்டவை” என்று சிறந்த விமர்சகர் எஸ்தர் லொம்பார்டி [ Esther Lombardi ]குறிப்பிடுகிறார்.
நான் இறக்கும் போது ஓர் ஈயின் சலசலப்பைக் கேட்கிறேன்
நான் இறக்கும் போது ஓர் ஈயின் சலசலப்பைக் கேட்கிறேன்
சூறாவளியின் மேலிழுப்புக்கிடையில்
காற்றின் அமைதியைப் போல
அறையின் அமைதி.

சுற்றியிருந்த கண்கள் அழுது வரண்டு
விலகாமல் மூச் திரட்டி
கடைசித் தொடக்கத்திற்கு-
அறையில் சாட்சியாய்—

என் பங்கிற்கானதாக இருக்கிற
ஒதுக்கித் தரகூடிய – என் விருப்பமான
நினைவுச் சின்னத்தை –தந்துவிட்டேன்
அப்போது ஓர் ஈ குறுக்கீடாக

நீலமாக -நிச்சயமின்றி -தடுமாற்ற சலசலப்பு-
ஒளிக்கும் எனக்குமிடையே-
ஜன்னல்கள் தோற்றுப் போக –பிறகு
பார்ப்பதற்கு என்னால் பார்க்க முடியாமல் போனது.

“ நம்பிக்கை “ சிறகுகளுடன் கூடிய சாதனம்
“நம்பிக்கை” என்பது சிறகுகளோடு
ஆத்மாவில் உறைந்திருக்கும் சாதனம்
வார்த்தைகளின்றி சுருதியாய் இசைக்கும்
அது ஒரு நாளும் நிற்காதது.

புயலென்பது கடுந்துயர் தருவது –
வெம்மையை ஏற்படுத்துவது-
சிறுபறவையை குழப்பியதெனினும்
கடுங்காற்றில் அது மிக இனிமையாய் இசைக்கும்.

நான் சில்லிப்பான நிலத்தில் அதைக் கேட்டிருக்கிறேன்-
மிகு பலமான கடலிலும்.
எனினும் -ஒரு போதும் – உச்சநிலையிலும்
என் சிறுதுகளைக்கூட அது கேட்டதில்லை.
அந்த ஆத்மா அவளுடைய சமூகத்தை தேர்ந்தெடுக்கிறது—

அந்த ஆத்மா அவளுடைய சமூகத்தை தேர்ந்தெடுக்கிறது—
பிறகு –கதவுகளை மூடிக் கொள்கிறது-
ஆத்மா தவிர அவளுக்கு வேறு
வெளிப்பாடு இல்லாது போகிறது.

அவளுடைய தாழ்வான கதவை-
கடக்கும் ரதங்களை அவள் நோக்குகிறாள்.
பேரரசன் மண்டியிட்டு அவளுக்காக வந்தானெனினும்
நகர்வின்றி அவள்—

போதிய ஒன்றைத் தேர்ந்தெடுத்த பிறகு
தனது கவனிப்பிற்கான அடைப்பான்களை
கல்லாய் மூடிக் கொள்கிறாள்–
எனக்கு அவளைத் தெரியும்.

நீண்ட வேதனைக்குப் பிறகு சம்பிரதாயமான உணர்வு வருகிறது
நீண்ட வலிக்குப் பிறகு சம்பிரதாயமான உணர்வு வருகிறது
சமாதியைப் போல நரம்புகள் சடங்கானதாக இருக்கிறது
தொய்வற்ற இதயம் கேட்கிறது’
ஐயோ! ’வலியை பொறுத்துக் கொண்டவன அவனா? ”
’நேற்றா, அல்லது பல நூற்றாண்டுகளுக்கு முன்பா?’

நிலத்தின் மரப்பாதையில் சுற்றி
அல்லது ஆகாயத்தில்
அல்லது வழக்கத்தில் பொருட்டின்றி
பாதங்கள் இயந்திர கதியில் சுற்றிவருகின்றன
ஒரு படிகத்தின் திருப்தியோடு ,கல்லைப் போல.

எல்லை கடந்து வாழ்ந்திருக்கும்
உறைந்த மனிதர்களாய் ,
பனியை நினைவுகூர்ந்து
முதலில் – குளிர்- பிறகு மதி மயக்கம்- பிறகு கைவிடுதல் என்று
இது கனமான நேரம்

கோபாலகிருஷ்ண அடிகா (1918-1992) / மூலம் : கோபாலகிருஷ்ண அடிகா ஆங்கிலம் : சி.பி.ரவிகுமார் / தமிழில் : தி.இரா.மீனா

கோபாலகிருஷ்ண அடிகா (1918-1992)

மொகேரி கோபாலகிருஷ்ண அடிகா கன்னட கவிதை உலகில்” நவ்யா’ இலக்கிய இயக்கத்தின் முன்னோடி. ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகாலம் இலக்கிய உலகைப் படைப்புகளால் பெருமைப்படுத்தியவர். ஆங்கிலப் பேரா சிரியர், முதல்வர் என்று முக்கிய பொறுப்புகள் வகித்தவரெனினும் சாட்சி பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்து கன்னட இலக்கியத்தை பெரும்பான்மை மக்களுக்கு அறிமுகம் செய்து வைத்தவர் என்ற போற்றுதலுக்கு உரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.மண்ணின் வாசனே, அனந்தே, பூமி கீதா, வர்த்த மானா,பாவதரங்கா ஆகியவை அவருடைய படைப்புகளில் சிலவாகும்.

மூலம் : கோபாலகிருஷ்ண அடிகா

ஆங்கிலம் : சி.பி.ரவிகுமார்

தமிழில் : தி.இரா.மீனா

விமர்சகர்

நான் ஏறிய உயரத்திற்கு நிழல்போல நீயும் ஏறினாய்,
தாழ்வு ஆழங்களில் நான் குதித்து நகர்ந்தேன்,
உன் சிறகுகளை என்னுடைய சிறகுகளோடு உராய்ந்தபடி
நீயும் நான் பறக்கும் தொடுவானத்தில் பறக்கிறாய்.
என்னைப் போல புதிய எல்லைகளை தேடுகிறாய் ;
இன்னமும் நீ தனியாகவே நிற்கிறாய் ,
தீண்டப்படாமல், உன்னைப் பரத்தியபடி,
மேலே ,கீழே , சுற்றி வானத்தை ஊடுருவியபடி
நிலத்தைத் துளையிட்டபடி

தலையிலிருந்து கால்வரை நான் என்னைத் திறந்து கொண்டேன்.
உள்ளிடத்தை உப்பால் நிரப்பினேன்

காயங்களைத் ஆற்றிக்கொண்டேன்
நிலத்தடிக்குப் போய் காட்டேரியானேன்
மேலே வந்து சூரியனை நோக்கிக் குதித்து ,
சிறகுகளை எரித்துக் கொண்டேன்,
மண்ணில் விழுந்தேன்.
அந்த இடத்தைச் சுற்றி குகை அமைத்துக்கொண்டேன்
அந்தக் குகையின் கும்மிருட்டானேன்
பதினான்கு வருடங்கள் போராடினேன்,கசந்து போனேன்
பழுத்து, நெருப்பைப் போல வெடித்தேன்,
சிற்குகள் மீண்டும் கிடைத்தது , காணும் சிறகாக ஒன்றும்
காணாததாக மற்றொன்றும்.
இசைவானவனாக மாறிக் கொண்டிருந்தேன்.
ஸ்தூலத்திலிருந்து சுருக்கத்திற்கு
சுருக்கத்திலிரு!ந்து உண்மைக்கு ––இவை எல்லாமும்
உன்னாலும் பார்க்கப்பட்டிருக்கிறது,
என்றாலும் நிழலைப் போல
இன்னமும் நீ முழுமையாக , இடையீடின்றி…

நீ மனக்கண்ணில் எழுகிறாய்; நீ வெளியே இல்லை,
ஆனால் எனக்குள் இருக்கிறாய்;
சோதித்து ,அளந்து,எடைபோட்டு,சரிபார்த்து—இவையெல்லாம்
உன் பணிகள்.நான் உறங்கும் போது ஊசியால் குத்தினாய்
எனக்குள் வீங்கியிருந்த தேவையற்ற
காற்றை வெளியேற்றினாய்.
நீ உள்ளிருக்கும் நிழலா?அல்லது,
சித்ரகுப்தனின் ஒரு தூதனா?
உணர்ச்சியுள்ள எந்த விலங்கும் செய்ய விரும்புகிற
அலைந்து திரிதலுக்கு நீ என்னை அனுமதிக்கவில்லை.

நீ என்னை இரங்கலுக்குட்படுத்தினாய், இரங்கலால் என்னை எரித்தாய்,
சரி ,தவறு என்ற சக்கரத்தில் என்னைப் பிடித்துக் கொண்டாய்
என்னை அவமதித்து,தெருக்களில் இழுத்துச் சென்று கொன்றாய்,
கொன்றதன் மூலம் எனக்குப் புத்துணர்ச்சி தந்தாய்,
நீ ,ஒரு சனி, ஒரு அட்டைப் பூச்சி, இருப்பினும் ஒரு சினேகிதன் .என் ஆசான்.
உன் கண்கள்

உன் கண்கள் .அவை வித்தியாசமானவை, உன் கண்கள் !

அவைகளின் தங்க இழையில் என்னிதயம் சிக்கிக்கிடக்கிறது.

அவற்றின் நீலவானில் என்நெஞ்சு பறக்கிறது.

பனியின் வெண்மைக்கிடையில்

ஒளிரும் நீலக்கற்களா அவை ?

அல்லது வெண்தாமரையின் கருவறையிலிருந்து

எட்டிப் பார்க்கும் ஒரிரு குழந்தை தேனீக்களா?

உன் இதயக் கடைசலிலிருந்து தெறிக்கும் திவலைகளா?

ஒவ்வொன்றிலும் இத்தனை காதலை நிரப்பிக் கொண்டும்

எப்படி அவைகளால் இவ்வளவு பேசமுடிகிறது?

உன் கண்கள் .அவை வித்தியாசமானவை, உன் கண்கள் !

அவற்றின் நினைவுகளில் மூழ்கி

என் இதயம் தனிப்பயணியாகிறது

என் செந்தாமரை

வழிப்போக்கர்களுக்காக, பிரகாசமாக செந்தாமரை

இன்று மலர்ந்திருக்கிறது என்ன நறுமண விருந்து !

காற்று, தேனீக்கள், அல்லது மெலிதான திவலை

விருந்திற்கு அழைப்பு வேண்டுமா, என்ன?

பொன் கதிர்களால் கிச்சுகிச்சு மூட்டப்பட்டு

தண்ணீர் களிப்புடன் தெறித்துக் கொள்கிறது

எத்தனை வழிகளில் நான் இவற்றை காதலிக்க முடியும்?

தேனீ சுறுசுறுப்பாக வழிகளைக் கணக்கிடுகிறது….

தாமரை நாணுகிறது:

இதழ்கள் கருஞ்சிவப்பாகின்றன.

கவனி! அவனுடைய ஏழு குதிரைகள் பூட்டியதேர்

கிழக்கு வானத்தில் ஊடுருவுகிறது..

அவனுடைய ஒவ்வொரு லட்சக் கணக்கான கைகளிலும்

சிக்கலான காதலின் வலைப் பின்னலைச் சுமக்கிறான்.

அந்தத் தாமரை மகிழ்வுக்குள்ளானது.

தேனீக்களின் ரீங்காரம் தேய்ந்தது;

அது எப்படியோ வெளிறிப் போனது

தன்னைச் சுற்றியுள்ள தேனீக்களை அவள் புறக்கணிக்கிறாள்

என் செந்தாமரை கதிரவனுக்காகக் காத்திருக்கிறாள்,

நாளைய கனவு கதிரவனின் உருவமாகுமா?

பேட்டி :

யு.ஆர்.அனந்தமூர்த்தி கோபாலகிருஷ்ண அடிகாவின் மாணவரும், விமர்சக ருமாவார். அவர் அடிகாவோடு நிகழ்த்திய பேட்டியின் சில முக்கியமான பகுதிகள் இங்கே.இது ’உதயவாணி ’என்னும் கன்னட தீபாவளி சிறப்பிதழில் 1980 வெளிவந்துள்ளது.எந்த மொழிக் கவிஞனுக்கும் ஆர்வமூட்டுவதான பார் வையை யு.ஆர். மற்றும் அடிகா வெளிப்படுத்தியிருப்பது குறிப்பிடத் தக்கது.

யு.ஆர்: உங்கள் இளம்பருவத்து நினைவுகளையும்,அனுபவங்களையும் அடிப் படையாகக் கொண்டே உங்கள் பெரும்பாலான கவிதைகளின் வெளிப் பாடுள்ளது. ஏன் அப்படி ?உங்களைக் கவிதை எழுதத் தூண்டிய ஓரிரு சமபவங்களைச் சொல்ல இயலுமா?

அடிகா: உங்களுடைய கேள்விக்கான பதில் சுலபமானதில்லை.ஆனால் அந்த பதிலைத் தேடுவதும் பொருத்தமானதுதான். குழந்தையின் ஆவலான பார் வைக்கு முன்னால் உலகத்திலிருக்கும் எல்லாமும் புதியதாகவும், மலர்ச்சி யானதாகவுமிருக்கும்.குழந்தையின் மனம் மெழுகுப் பந்து போன்றது.அதில் உலக அனுபவங்கள் கண்ணுக்குத் தெரியாத வகையில் பதிவாகிவிடும்.அவை பின்னாளில் சரியான நேரத்தில் வெளிப்படும்.இது எல்லா மனித உயிர்களுக் கும் பொருந்தும்.இளம்பருவத்தின் அனுபவத் தொகுப்புகள் யாருடைய [கவிஞன்] மனதிலும் புதிய கோணத்தை கறபனைகளோடு உருவாக்கும்.இந்த அனுபவங்களும்,கற்பனைகளும் சாதாரண கருத்து என்பதை மீறி காலவெளி கடந்தவையாகின்ற அந்த உணர்வில் வெளியானவைதான் என்னுடைய சில சிறந்த கவிதைகள்.இளம்பருவ அனுபவங்களை குறைவாகவோ ,கூடுதலா கவோ மதிப்பீடு செய்வதென்பது சிறிது கடினமானதுதான்.நான் இப்போது அந்த நாட்களை நினைக்கும் பொழுது உடனடியாக கேட்க முடிவது –காக்கை யின் அலகில் சிக்கிக் கொண்டு தப்பிக்கப் போராடும் தவளையின் குரல் தான்.அந்த தவளையை காப்பாற்றத் தவறிவிட்ட வேதனையில் நெஞ்சு துடித்ததைக் கேட்க முடிகிறது.மழைக்குப் பின்னால், சம்பிரதாயம் போல வீட்டின் மிக அருகிலிருந்த குளத்தில் நூற்றுக்கணக்கான தவளைகள் குரல் கொடுத்ததைப் பார்த்தும்,கேட்டும் கழிந்த நாட்கள்… இது போல பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.எதுவும்முக்கியமானதோ,முக்கியமற்றதோ இல்லை. ஒவ்வொரு சம்பவமும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் எனக்கு முக்கியமா னதாகத் தெரிந்திருக்கிறது.

யு.ஆர் :உங்களின் தொடக்க காலக் கவிதைகளில் நகரக் குறியீடும், பிற்காலக் கவிதைகளில் கிராமம்சார் வெளிப்பாடும் உள்ளது போலத் தெரிகிறதே! இதற்குக் காரணம் உங்களின் கிராமம் சார்ந்த இளம்பருவத் தாக்கம் எனலாமா? ? மொழித் தடை [கன்னடம்] என்பதற்கு இதில் பங்குண்டா?

அடிகா: இந்தியச் சுதந்திர காலகட்டத்தில் நாங்கள் [கவிஞர்கள் மற்றும் படைப்பாளிகள் ] உடனடி கடந்த காலவெளிப்பாட்டிற்கு முதன்மை தந்தது உண்மைதான்.நாங்கள் நகர்ப்புற குறியீட்டுத் தளைகளிலிருந்து தப்பிக்க முயன்றோம். என் தொடக்க காலக் கவிதைகளில் கவனக் குறைவாக நான் நகர்ப்புறக் குறியீடுகளைப் பயன்படுத்தியிருக்கிறேன்.அன்று மேற்கத்திய நாகரி கம் சார்ந்த ஆங்கிலக் கவிதைகளின் தாக்கம் அதிகமிருந்தது என்பதையும் நான் ஒப்புக் கொண்டாக வேண்டும்.எப்படியிருப்பினும், கவிதை எழுதுவதென் பது ஒருவரின் வாழ்வுச் சூழல் என்பதை மட்டும் உள்ளடக்கியதில்லை. இலக் கிய உணர்வுநிலை என்பது வாழ்க்கையின் பன்முகத்தன்மையை அறிவதும், அடையாளம் காட்டுவதும் மட்டுமின்றி ,மாறுபட்ட ,உயர்ந்த அகம்சார் அனுபவங்களின் தேடலுமாகிறது.

யு.ஆர்: மக்கள் ஏற்கும் முறையில் , அணுகுவதற்கு எளிதான வகையில் கவிதைகள் எழுத வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

அடிகா: நீங்கள் மக்கள் என்று சொல்லும் போது உடனடியாக எழும் கேள்வி ’எந்த மக்கள்’ என்பது. எந்தக் கலையும் எவருக்கும் எளிதல்ல. பொது ஜனங் களை விட்டு விடுவோம்.படித்தவர்கள்,அறிவாளிகள் என்று நாம் சொல்பவர் களில் பலர் கலையின் மீது அவ்வளவு ஈடுபாடு இல்லாதவர்களாகவோ அல்லது கலையுணர்வே அற்றவர்களாகவோ இருப்பதை நாம் பார்க்கவில் லையா? கவிதைகளில் வெளிப்படும் எளிய அனுபவங்கள் எளிமைத் தன் மையை வெளிப்படுத்துவதும் முக்கியமானது.அதே நேரத்தில் மிகச் சிக்கலான அனுபவங்களை காட்டும்போது அந்த வெளிப்பாடு அதிநவீனம் சார்ந்த நிலை யில் அமைவதும் முக்கியமானது.

அணுகுவதற்கு எளிமையான நிலையில் இருப்பதுதான் கவிதை என்று சொல்வது எப்படித் தவறானதோ அது போலவே கடினமாக இருந்து புரிந்து கொள்ளமுடிவதுதான் கவிதை என்று சொல்வதும் – இரண்டும் தவறுதான். இலக்கியத்தில் ஒலிநயம் என்ற தளையை உடைத்துக் கொண்டு வருவது மிக அவசியமானது. வடிவத்தை ஆழமாக புரிந்து கொண்டவரால் அது முடியும்.

தளையை உடைப்பதென்பது ’கட்டுத் தளர்வான செய்யுளை’ உருவாக்கும் வேட்கையல்ல.நம்மைப் புதிய வடிவில் அமைத்துக் கொள்ள நாம் ஓர் இறுக்கமான வடிவத்தை உடைத்து இன்னொன்றை உருவாக்குகிறோம் அவ்வளவுதான்.இன்றைய சூழலில் நாம் – கவிஞர்கள் மக்கள் அணுகும் வகையிலான படைப்புகளைத் தரும் வகையி லான பொறுப்பிலிருக்கிறோம்.

•••

நன்றி :உதயவாணி –கன்னடம் தீபாவளிச் சிறப்பிதழ் –1980