Category: மொழிபெயர்ப்பு சிறுகதை

தூங்கும் அரசி ( The Sleeping Queen ) இத்தாலிய மொழி : இடாலோ கால்வினோ ( Italo Calvino ) / ஆங்கிலம் வழி தமிழில் ச.ஆறுமுகம்.

ஸ்பெயின் நாட்டினை ஒரு காலத்தில் நல்லவரும் நீதிமானுமாகிய மேக்சிமிலியன் ஆண்டுவந்தார். அவருக்கு வில்லியம், ஜான், குட்டி அந்தோணி என மூன்று மகன்கள் இருந்தனர். கடைக்குட்டியாகிய குட்டி அந்தோணிதான் அரசனின் அன்புக்குப் பாத்திரமான அப்பா பிள்ளையாக இருந்தான். நோய் ஒன்றின் தொடர்ச்சியாக அரசர் கண்பார்வையினை இழந்தார். நாட்டின் அனைத்து மருத்துவர்களும் வரவழைக்கப்பட்டுவிட்டனர்; ஆனாலும் எவருக்கும் நோய் தீர்க்கும் வழி தெரியவில்லை. மிகவும் வயதான முதிர்ந்த மருத்துவர் ஒருவர், “இந்த நோய் தொடர்பாக மருத்துவ அறிவு வளர்ச்சி குறைவாகவே உள்ளதால், குறிசொல்பவருக்குச் சொல்லியனுப்புங்கள்” என்றார். அதனால் நாட்டிலுள்ள குறிசொல்பவர் ஒருவர்விடாமல் அனைவரும் அழைக்கப்பட்டனர். அவர்கள் அவரவர் ஏடுகளைக் குடைந்தனர்; ஆனாலும் அவர்களில் யாரும் மருத்துவர்களைவிட விஷயஞானம் தெரிந்தவர்களாக இல்லை என்பதுதான் நிரூபணமானது. குறி சொல்பவர்களுடன் எல்லோருக்கும் அந்நியமான ஒரு மந்திரவாதியும் நுழைந்திருந்தான்.

எல்லோரும் அவரவர் கணிப்பினைக் கூறி முடித்தபின் மந்திரவாதி, “அரசர் மேக்சிமிலியன் அவர்களே, உங்களுக்கு நேர்ந்துள்ளது போன்ற பார்வை இழப்புகள் பலவற்றை நான் அறிவேன். இதற்குத் தீர்வு என்பது தூங்கும் அரசியின் நாட்டில் தவிர வேறு எங்கும் கிடைக்காது; அது அவளுடைய கிணற்றிலுள்ள தண்ணீர் மட்டும் தான்.” என்றான். அவன் வார்த்தைகளைக் கேட்டவர்களின் முகத்தில் வியப்பு மறையுமுன்பாகவே, அவன் மறைந்துவிட்டதுடன், அதன்பிறகு அவனைப்பற்றி வேறெந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
அந்த மனிதன் யாரென்று அறிய அரசர் மிகுந்த ஆவல்கொண்டார்; ஆனால் அவனை அதற்கு முன்பு பார்த்தவர்கள் ஒருவர் கூட இல்லை. குறிசொல்பவர்களில் ஒருவர் மட்டும் அவன் ஆர்மீனியா பக்கமுள்ள மந்திரவாதியாக இருக்கலாமென்றும் அவன் ஸ்பெயின் நாட்டுக்குள் மாயமந்திரம் மூலமாகத்தான் வந்திருக்கவேண்டுமென்றும் கூறினான்.

“அப்படியென்றால் தூங்கும் அரசியின் நகரமும் அந்தப்பக்கமாகத்தான் இருக்கலாமோ?” என வினவினார், அரசர். அவையோர்களில் முதியவர் ஒருவர், “தேடிப்பார்க்காதவரையில் அது எங்கிருக்கிறதென்று நாம் தெரிந்துகொள்ள இயலாது. நான் மட்டும் இளைஞனாக இருந்தால், சிறிதுகூடத் தாமதிக்காமல் இந்நேரம் தேடப்போயிருப்பேன்.” என்றார்.

மூத்த மகன் வில்லியம் உடனேயே ஒரு அடி முன்நகர்ந்து, ”அந்த நகரத்தைத் தேட யாரையாவது அனுப்பவேண்டுமென்றால், என்னை அனுப்புங்கள். முதல் மகனாகப் பிறந்தவன் வேறெல்லாவற்றையும் விடத் தந்தையின் உடல்நலத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பதுதான் மிகமிகப் பொருத்தமானது.” என்றான்.

“அன்பு மகனே,” என்றழைத்த அரசர், “ உனக்கு எனது நல்வாழ்த்துக்கள், பணம், குதிரைகள், இன்னும் உனக்கு என்னென்ன தேவையோ எல்லாவற்றையும் எடுத்துக்கொள். ஒரு மூன்று மாதங்களுக்குள் நீ வெற்றிவீரனாகத் திரும்பி வந்துவிட வேண்டுமென்றுதான் நான் எதிர்பார்க்கிறேன்.” என்றார்.
வில்லியம் அந்த நாட்டின் துறைமுகத்துக்குச் சென்று, பூதத்தீவில் மூன்று மணிநேரம் மட்டும் நங்கூரமிட்டு நின்றுவிட்டுப் பின்னர் ஆர்மீனியாவுக்குப் பயணத்தைத் தொடரும் கப்பல் ஒன்றில் ஏறினான்.

பூதத்தீவினைப் பார்த்துவிட்டு வரலாமேயென அவன் கரையிறங்கிச் சென்றான்; தீவுக்குள் வெறுமனே வேடிக்கை பார்த்துலவும்போது கவர்ச்சிகரமான ஒரு பெண்ணைச் சந்தித்ததோடு, மூன்று மணிநேரம் கடந்துபோனதை அறியாமலேயே அவள் பேச்சில் மயங்கியிருந்தான். கப்பல், குறித்த நேரத்தில் பாய்மரங்களை விரித்து, வில்லியம் இல்லாமலேயே துறைமுகத்தை விட்டுக் கிளம்பிச் சென்றது. அதற்காக முதலில் அவன் வருந்தினாலும் அந்தப் பெண்ணின் நட்பில் அப்பாவின் நோய் மற்றும் அவனது பயணத்தின் நோக்கம் எல்லாவற்றையும் மறந்தான்.

மூன்று மாதங்கள் கடந்த பின்பும் வில்லியம் வருவதான எந்த அறிகுறியும் தென்படவில்லை. அவன் இறந்திருப்பானோவென அரசர் அஞ்சத் தொடங்கினார். ஏற்கெனவே பார்வையின்றித் தவித்த அவரது வேதனையுடன் மகனை இழக்கும் துயரமும் சேர்ந்துகொண்டது. அவரை ஆறுதல்படுத்த நடு மகனான ஜான், அவனது மூத்த உடன் பிறப்பைத் தேடுவதோடு தண்ணீரையும் தேடிக்கொண்டுவருவதாகக் கூறினான். அரசர் அதற்குச் சம்மதித்தார்; ஆனாலும் முதல் மகனுக்கு நேர்ந்த கதியே இவனுக்கும் நேர்ந்துவிடக்கூடாதேயென பயப்படத்தான் செய்தார்.
பூதத்தீவின் அழகினை, ஜான் கப்பல் தளத்திலிருந்தவாறே கண்டான்.

இம்முறை கப்பல் பூதத்தீவில் முழுநாளும் நங்கூரமிட்டு நிற்பதாக இருந்தது. ஜான் கரையிறங்கிச் சென்று தீவினுள் சுற்றிப்பார்த்தான். வானவில்லைப் பழிக்கும் அனைத்து வண்ணங்களிலும் மீன்களைக் கொண்ட பளிங்கு நீர்க்குட்டைகளின் கரைகளில் ஊதாக் காய்களுடன் பச்சைப்பசேலெனத் துளிர்த்து நின்ற மிர்ட்டில், பசுமை மாறா சைப்ரஸ் மற்றும் லாரெல் மரங்களின் பூங்காவினுள் நுழைந்து அத்தனை அழகினையும் அவன் கண்களால் அள்ளினான். அங்கிருந்து நகரத்தின் அழகிய சாலைகள் மற்றும் தெருக்கள் வழியாக, மையத்தில் சலவைக்கல் நீரூற்று அமைந்த ஒரு சதுக்கத்திற்கு வந்து சேர்ந்தான். அந்தச் சதுக்கத்தைச் சுற்றியிருந்த நினைவுச்சின்னங்கள் மற்றும் கட்டிடங்கள் நடுவே தங்கம் மற்றும் வெள்ளித் தூண்களாலும் பளிங்குச் சுவர்களாலும் அமைந்து கதிரொளியில் தகதகத்துக்கொண்டிருந்த ஒரு மாபெரும் அரண்மனை உயர்ந்து நின்றது.

பளிங்குச் சுவர்களின் அந்தப்பக்கமாக அவனது உடன்பிறப்பு நடமாடியதை ஜான் கண்டுவிட்டான்.
”வில்லியம்,” எனக் கதறியவன். “இங்கே என்ன செய்கிறாய்? ஏன் வீட்டுக்கு வரவில்லை? நீ இறந்துவிட்டதாகவே நாங்கள் நினைத்தோம்!” எனக் கேள்விகளாய்ப் பொழிந்தான். அவர்கள் தழுவிக்கொண்டார்கள்.

அந்தத் தீவுக்குள் காலடி வைத்த மறுகணமே அங்கிருந்து வெளியேற அவனுக்கு எப்படி மனமில்லாமல் போனதென்றும் அங்கே கண்ணில் தெரிகின்ற அனைத்துக்கும் சொந்தக்காரியாகிய, அந்த அழகிய பெண் அவனை எப்படிக் கொண்டாடுகிறாளென்றும் வில்லியம் விவரித்தான். அந்தப் பெண்ணின் பெயர் லூகிஸ்டெல்லா என்றும் அவளுக்கு இசபெல் என்ற அழகான ஒரு தங்கை இருப்பதாகவும் கூறிய அவன், “உனக்கு அவளைப் பிடித்துவிட்டால், அவள் உனக்குத்தான்.” என்றான்.

சுருக்கமாகச் சொன்னால், பன்னிரண்டு மணி நேரம் கடந்தது; ஜான் இல்லாமலேயே கப்பல் புறப்பட்டுச் சென்றது. சிறிது வருந்திய அவன், பின்னர் அப்பா, அவருக்குத் தேவைப்பட்ட அதிசயத் தண்ணீர் என அனைத்தையும் மறந்து, அவனது அண்ணனைப் போலவே அந்தப் பளிங்கு மாளிகையின் நிரந்தர விருந்தினனாகிவிட்டான்.

மூன்று மாதங்கள் கடந்துவிட்டபின்னரும், இரண்டாவது மகன் குறித்து தகவல் ஏதும் தெரியாமற்போகவே, மொத்த அரசவையும் மோசமான நிகழ்வுகளை நினைத்துப் பயந்தது. அப்போதுதான் குட்டி அந்தோணி அவனது அண்ணன்களையும் தூங்கும் அரசியின் மந்திர நீரையும் தேடிப்புறப்படுவதாகத் துணிச்சலுடன் அறிவித்தான். “அப்படியானால் நீயும் என்னைவிட்டுப் பிரிந்துபோக நினைத்துவிட்டாயா?” என்ற அரசர். “கண்பார்வை இழந்து இடிந்துபோயுள்ள நான் என்னுடைய கடைசி மகனையும் இழக்கவேண்டுமா?” என விம்மினார். ஆனால், அரசர் தன் மூன்று மகன்களையும் நல்லபடியாக ஒருசேர மீண்டும் பார்ப்பதான நம்பிக்கையை அந்தோணி ஏற்படுத்தியதுடன் அந்த அதிசய நீரையும் கொண்டுவந்துவிடுவதாகக் கூறவும், முடிவில் ஒருவழியாக அவனது தந்தை, அவன் புறப்பட்டுச் செல்வதற்கு இசைந்தார்.

கப்பல் பூதத்தீவில் நங்கூரமிட்டது; இம்முறை கப்பல், அங்கு இரண்டு நாட்கள் தங்குவதாக இருந்தது. “ நீங்கள் கரையிறங்கிச் செல்லலாம்,” என அனுமதித்த கப்பல் தலைவன் அந்தோணியிடம்,” ஆனால், உரிய நேரத்துக்குள் திரும்பிவிடுங்கள்; ஏற்கெனவே தீவுக்குள் சென்று காணாமல் போய், எந்தத் தகவலும் தெரியாமலுள்ள அந்த இரண்டு இளைஞர்களைப் போல் நீங்களும் இங்கேயே தங்கிவிட விரும்ப மாட்டீர்களென்று நினைக்கிறேன்.” என்றான். அவனது அண்ணன்களைப் பற்றித்தான் கப்பல் தலைவன் குறிப்பிடுவதாக அந்தோணி புரிந்துகொண்டான்; அவர்கள் அந்தத் தீவுக்குள் தான் எங்கேயாவது இருக்கவேண்டுமென நினைத்துக்கொண்டான். அதனால் அவன் சுற்றிலும் பார்த்துத் தேடி, அவர்களைப் பளிங்கு மாளிகையில் கண்டுவிட்டான். அவர்கள் அவனைக் கட்டித் தழுவி, பூதத்தீவில் அவர்கள் தங்க நேர்ந்த விவரத்தை விவரித்தனர்.

”நாங்கள் இங்கே உண்மையிலேயே ஒரு சொர்க்கத்தில்தான் இருக்கிறோம்.” என்றனர், அந்த இருவரும். “ எங்கள் இருவருக்கும் அழகான பெண்கள் கிடைத்து விட்டனர். இந்தத்தீவின் எஜமானி எனக்கு; அவளுடைய தங்கை ஜானுக்கு. நீயும் எங்களோடு சேர்ந்துவிட்டால், எங்கள் பெண்களுக்கு தங்கை உறவில் இன்னொரு பெண் இருக்கிறாளென்றுதான் நினைக்கிறேன்……………..” என இழுத்தனர்.

ஆனால், அந்தோணி அவர்களின் பேச்சை வெட்டி மடக்கினான். “அப்பாவுக்கான உங்கள் கடமையை மறந்து, நீங்கள் சிந்திக்கும் திறனையே இழந்துவிட்டீர்களென்பது நன்றாகவே தெரிகிறது! தூங்கும் அரசியின் மந்திர நீரைக் கண்டுபிடிப்பது மட்டுமேதான் எனது குறிக்கோள். அந்த முடிவிலிருந்து வேறெதுவும் என்னைத் திசை திருப்பிவிட முடியாது.” “பணம், சொத்து, செல்வம், கேளிக்கை அல்லது அழகுப் பெண்கள் எதுவாக இருந்தாலும், அதுவேதான், என் முடிவு!” என்றான்.

அந்தோணியின் பேச்சினால் மறுபேச்சற்று அமைதியாகிப்போன அவனது உடன்பிறப்புகள் இருவரும் `ஹூம்` என வெறுப்புடன் விலகிச் சென்றனர். உடனேயே அந்தோணி, கணநேரமும் தாமதிக்காமல் கப்பலுக்குத் திரும்பினான். பாய்மரங்களில் பாய்களை ஏற்றி விரிக்கவும், துணைவழிக் காற்று, கப்பலை நேரடியாக ஆர்மீனியாவுக்குக் கொண்டுசேர்த்தது.

ஆர்மீனியன் மண்ணில் கால்வைத்ததுமே, அந்தோணி வழியில் கண்ட ஒவ்வொருவரிடமும் தூங்கும் அரசியின் நகரம் எங்கிருக்கிறதெனக் கேட்காத நபரே இல்லையென்றாலும், அதுபற்றி ஒருவர் கூடக் கேள்விப்பட்டிருக்கவில்லை என்பதுதான் உண்மைபோலத் தெரிந்தது. பல மாதங்கள் வீணாகக் கழிந்தன; பின்னர், மலை உச்சியில் வாழ்ந்த முதியவர் ஒருவரைப் போய்ப் பார்க்குமாறு வழிகாட்டினர். ”இந்தப் பூமியின் வயதளவுக்கு முதியவரான அவரது பெயர் ஃபார்பனல்லோ. அவருக்கும் அந்த நகரம் எங்கிருக்கிறதெனத் தெரியவில்லையெனில், வேறெவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பேயில்லை.”

அந்தோணி மலை உச்சிக்கு ஏறினான். நீண்ட தாடியுடன் மிகவும் தளர்ந்து போயிருந்த அந்த முதியவரை அவரது குடிசையில் கண்ட அந்தோணி அவரிடம் அவன் தேடும் விவரத்தைக் கூறினான். “அன்புள்ள இளைஞனே” என அழைத்த ஃபார்பனல்லோ, ‘’அந்த இடத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன்; ஆனால் அது மிகமிகத் தூரத்தில் இருக்கிறது. முதலில் ஒரு பெருங்கடலைத் தாண்ட வேண்டும்; அதற்கே ஒரு மாதம் ஆகிவிடும்; அந்தக் கடலில் பயணம் செய்வதன் அபாயங்களைப் பற்றிக் கூறிமுடியாது. அப்படியே அந்தக் கடலைப் பாதுகாப்பாகக் கடந்து முடித்துவிட்டாலும் அதைவிடப் பயங்கரமான அபாயங்கள் தூங்கும் அரசியின் தீவில் காத்திருக்கின்றன. அதன் பெயரே கூட பெரும் அவலத்தைக் குறிப்பதாக இருப்பதால் தான் அதைக் கண்ணீர்த்தீவு என்கிறார்கள்.” என்றார்.

ஒருவழியாகக் கடைசியில் திட்டவட்டமான தகவல் கிடைத்ததே என்ற மகிழ்ச்சியில் அந்தோணி பிரின்டிஸ்செ துறைமுகத்திலிருந்து கடல் பயணத்தைத் தொடங்கினான். பெருங்கடலைக் கடப்பது மிகவும் கடினமாக இருந்தது; பெரிய கப்பல்களையே கவிழ்த்துவிடுகின்ற பெரிய பெரிய துருவக் கரடிகள் அக்கடலில் நீந்திக்கொண்டிருந்தன. ஆனாலும் துணிச்சல் மிக்க வேட்டைக்காரனாகிய அந்தோணி அச்சமின்றி துருவக்கரடிகளின் கால் நகங்களில் சிக்காமல் கலத்தைச் செலுத்தி கண்ணீர்த்தீவுக்குச் சென்றடைந்தான். கைவிடப்பட்ட பாழிடம் போலத் தோற்றமளித்த துறைமுகத்தில் ஆள் இருப்பதான அரவம் எதுவுமே கேட்கவில்லை.

அந்தோணி அங்கிருந்து கிளம்பும்போது துப்பாக்கி ஏந்திய காவலர் ஒருவரைக் கண்டான்; ஆனால் அந்த மனிதர் முற்றிலும் அசைவற்று நின்றிருந்தார். அந்தோணி அவரிடம் வழி கேட்டபோதும் அவர் ஒரு சிலையைப் போல அசைவு ஏதுமின்றி அமைதியாக நின்றார். அடுத்து, அந்தோணி சுமைதூக்குவோர்களிடம் அவனது பெட்டி, படுக்கைகளை எடுத்துவருமாறு கூறினான்; ஆனால், அவர்களோ சுட்டுவிரலைக்கூட அசைக்கவில்லை; அவர்களில் சிலர் பெரிய டிரங்குப் பெட்டிகளை முதுகில் சுமந்து ஒரு காலை முன்தூக்கிய நிலையில் அப்படிக்கப்படியே நின்றனர்.

அந்தோணி நகருக்குள் நுழைந்தான். தெருவின் ஒரு பக்கத்தில் அவன் பார்த்த செருப்பு தைப்பவர் புதையரணக் காலணிக்குள்ளிருந்து நூலினை இழுத்த நிலையில் அப்படியே அமைதியாக எவ்வித அசைவுமின்றி நின்றார். அந்தத் தெருவின் இன்னொரு பக்கத்தில் ஒரு காப்பிக்கடைக்காரர், பெண் ஒருவருக்கு காபிக் கிண்ணத்தைக் கொடுக்கும் நிலையில் நிற்க, இருவரும் எவ்வித அசைவோ பேச்சோ இன்றி இருந்தனர். தெருக்கள், சாளரங்கள் மற்றும் கடைகளில் மக்கள் நிறைந்து தோன்றினர்; ஆனால் வெவ்வேறு நிலைகளில் செய்த மெழுகுச் சிலைகள் போன்று நின்றனர். , பூனை, நாய், குதிரை மற்றும் அனைத்து உயிரினங்களும் அவ்வவற்றின் பாதைகளில் அப்படிக்கப்படியே அசைவின்றி நின்றன.

உறைந்து போயிருந்த மவுனத்தின் நடுவே நகர்ந்த அந்தோணி அந்தத் தீவின் முந்தைய அரசர்களைப் போற்றி, அவர்கள் நினைவாக நிறுவப்பட்ட சிலைகள் மற்றும் கல்வெட்டுகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஒரு மிகப்பெரிய அரண்மனைக்கு வந்து சேர்ந்தான். அரண்மனை முகப்பில் ஏகப்பட்ட புள்ளிவிவரங்களுடன் மிகப்பெரிய தகவல் பலகை ஒன்று இருந்தது. அதில் தகதகக்கும் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருந்த தலைப்பு வாசகம் : இந்த பாரிமஸ் தீவினை ஆளுகின்ற, ஒளிமிக்க ஆன்மாக்களின் அரசியின் சமூகத்துக்கு.

”இந்த அரசி எங்கேதான் இருப்பாளோ?” என வியந்தான், அந்தோணி. “இந்த அரசியும் தூங்கும் அரசியும் ஒருவராகவே இருக்கலாமோ?” என்றும் நினைத்தான். அவன் பளிங்கினாலான படிக்கட்டில் ஏறி பல்வேறு தோற்றங்களில் அலங்கரிக்கப்பட்ட எண்ணற்ற கூடங்களையும் அவற்றின் வாயில்களில் சிலையாகக் கடவதென்ற சாபம் பெற்றது போலக் காத்து நின்ற படைத்துறையின் பாரம்பரிய ஆடையணிந்து ஆயுதம் தாங்கிய காவலர்களையும் கடந்து சென்றான். அரங்கம் போன்று விரிந்து பரந்த பெரிய அறை ஒன்றினுள் படிக்கட்டுகள் அமைக்கப்பட்ட மேடை ஒன்றின் மீது சுற்றிலும் விதானம் அமைந்த அரியணை வைரக்கற்கள் பதிக்கப்பட்ட தேசிய சின்னங்களைச் சுமந்து நின்றது.

தங்கத் தொட்டி ஒன்றில் வளர்ந்திருந்த திராட்சைக்கொடி ஒன்று அறையினுள் ஓடி விதானம் மற்றும் அரியணையையும் சுற்றிப் படர்ந்து திராட்சை இலைகளாலும் முற்றிய திராட்சைக்குலைகளாலும் அலங்கரித்தது. அது மட்டுமில்லை, தோட்டத்தில் வளர்ந்திருந்த அத்தனை வகைக் கனிமரங்களும் அளவு மீறிச் செழித்திருந்ததுடன் அந்த அறையின் சாளரங்களுக்குள் தங்கள் தங்கள் கிளைகளைத் திணித்து அறையினுள் நுழைந்திருந்தன. பொழுதெல்லாம் நடந்தே களைத்துப் பசியோடிருந்த அந்தோணி அந்தக்கிளைகளில் ஒன்றிலிருந்து ஆப்பிள் ஒன்றைப் பறித்துக் கடித்தான். அவ்வளவுதான், அவனது கண் பார்வை குறையத் தொடங்கிப் பின் முற்றிலுமாக மறைந்து போனது. “அய்யோ!” எனக் கதறிய அவன், “இனிமேல், மனிதர்களேயில்லாமல் சிலைகள் மட்டுமே நிறைந்துள்ள இந்த வினோத நாட்டுக்குள் எப்படி நடமாடுவேன்?” என அதிர்ந்துபோனான். தட்டுத் தடுமாறி நகர்ந்து நகர்ந்து அரண்மனையை விட்டு வெளியேறி நடந்த அவன் திடீரென்று ஒரு பள்ளத்துக்குள் கால் வைத்ததில் தடுமாற, அப்படியே கீழிறங்கிய அவனது உடல் தரையைத் தட்டியபோது அவன் தண்ணீருக்குள் முழுவதுமாக மூழ்கியிருந்தான். இரண்டு மூன்று உந்தல்களிலேயே தண்ணீருக்கும் மேலாக தலையை நீட்டிய அவன், உடனேயே பார்வை மீண்டுவிட்டதை உணர்ந்தான்.

அவன் ஒரு ஆழமான கிணற்றுக்குள் விழுந்திருந்தான். அவன் தலைக்கு மேலே ஆகாயம் தெரிந்தது. “ஓஹோ, அந்தக்கிணறு இதுதான்,” எனத் தனக்குத் தானே கூறிக்கொண்ட அவன், “மந்திரவாதி இதைத்தான் கூறியிருப்பான். அப்பாவின் கண்களைக் குணப்படுத்தும் தண்ணீர் இதுதான்; எப்படியாவது இதிலிருந்து வெளியேறி, கொஞ்சம் தண்ணீரையும் அப்பாவிடம் கொண்டுபோய்ச் சேர்த்துவிட வேண்டுமே.” என நினைத்தான். கிணற்றுச் சுவரில் கயிறு ஒன்று தொங்குவதைக் கண்டு, அதனைப் பிடித்து, ஏறி, வெளியே வந்தான்.

அது இரவு நேரமாக இருந்தது; அந்தோணி படுத்துத் தூங்குவதற்கு வசதியான இடம் ஏதும் கிடைக்குமாவெனச் சுற்றுமுற்றும் பார்த்தான். அரச பரம்பரைக்கென அழகுபடுத்தப்பட்ட ஒரு படுக்கை அறையினுள் அகன்ற ஒரு மெத்தைப் படுக்கையில் அழகுத் தேவதை போன்ற ஒரு பெண் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்ததைக் கண்டான். அந்தப் பெண்ணின் கண்கள் மூடியிருந்தன; அவளது முகத்தில் ஒளிர்ந்த அமைதியைக் கண்டதும், அவள் தூங்கிக்கொண்டிருக்கும் போதே சாபத்திற்காளாகி இருக்கவேண்டுமென்பதை அவன் புரிந்துகொண்டான்.

பளிச்செனத் தோன்றிய ஒரு சிந்தனையில், அவன் ஆடைகளைக் களைந்துவிட்டு, படுக்கையில் அவள் அருகிலேறிப் படுத்து, அவள் அறிந்துகொள்ள எந்தவொரு சிறு வாய்ப்பினையும் அளித்துவிடாமல் அந்த இரவினை மகிழ்ச்சியானதாக்கிக்கொண்டான். விடிந்ததும் படுக்கையிலிருந்து இறங்கிய அவன், அருகிலிருந்த மேசை மீது அவளுக்காக விட்டுச் சென்ற குறிப்பில் இப்படி எழுதியிருந்தான்: ”ஸ்பெயின் அரசர் மேக்ஸிமிலியனின் செல்வ மகன் அந்தோணி, என்றென்றும் நினைத்துப் பெருமகிழ்வு கொள்ளுமாறு இப்படுக்கையில் 203 ஆம் ஆண்டு, மார்ச் 23 இல் உறங்கினான்.” அவனது கண்பார்வையை மீட்டளித்த தண்ணீரைப் புட்டி ஒன்றில் நிறைத்து எடுத்துக்கொண்ட அந்தோணி, கண்பார்வையைக் குருடாக்கும் ஆப்பிள்களில் ஒன்றையும் பறித்துக்கொண்டு, வீட்டுக்குப் புறப்பட்டான்.

கப்பல் மீண்டும் பூதத்தீவில் நின்றபோது, அந்தோணி கரையிறங்கி, அவனது இரு அண்ணன்களையும் சென்று பார்த்தான். கண்ணீர்த் தீவின் அதிசயங்களையும் அழகிய ஒரு பெண்ணுடன் அங்கு ஒருநாள் இரவு முழுதும் படுத்துறங்கி மகிழ்ந்ததையும் அவன் அவர்களுக்குக் கூறினான். பின்னர், அவன் கண்பார்வையை அழிக்கும் ஆப்பிளையும் பார்வையை மீட்டெடுக்கும் தண்ணீரையும் அவர்களுக்குக் காட்டினான். சட்டெனப் பொறாமையில் விழுந்த அந்த இரண்டு அண்ணன்களும், அந்தோணிக்கெதிரான சதி ஒன்றினைத் தீட்டினர்; மந்திரத் தண்ணீர்ப் புட்டிக்குப் பதிலாக அதைப்போன்ற வேறு ஒரு புட்டியை வைத்துவிட்டு மந்திரத் தண்ணீரைத் திருடிக்கொண்டார்கள். பின்னர், அவர்களின் மனைவிகளை அரசரிடம் காட்டுவதற்காக அவனுடன் அவர்களும் வருவதாகக் கூறினர்.

மூன்று மகன்களும் நாட்டுக்குப் பத்திரமாகத் திரும்பிவந்ததில் அரசர் மேக்சிமிலியனின் மகிழ்ச்சியை எந்த வார்த்தைகளாலும் விவரித்துச் சொல்லிவிடமுடியாது. இதயம் மகிழ்ந்த பல்வேறு தழுவல்களுக்குப் பின், அரசர், “உங்களில் பெருவாய்ப்பு பெற்றவர் யார்?” எனக் கேட்டார். வில்லியமும் ஜானும் பேச்சிழந்தது போல் அமைதிகாத்தனர்; ஆனால், அந்தோணி பேசத் தொடங்கினான், “அப்பா, நான் தைரியமாகச் சொல்வேன், காணாமற்போன எனது அண்ணன்களைத் தேடிக் கண்டுபிடித்துத் திரும்ப அழைத்து வந்திருக்கிறேன். தூங்கும் அரசியின் நகருக்குள் சென்று உங்கள் கண்பார்வையை மீட்கும் தண்ணீரையும் கொண்டுவந்திருக்கிறேன். ஆச்சரியப்படத்தக்க இன்னொன்றினையும் நான் கொண்டுவந்திருக்கிறேன். அது எப்படி வேலைசெய்கிறதென்பதை இந்தக் கணத்திலேயே நான் உங்களுக்குக் காட்டப்போகிறேன்.” என்றான்.

ஆப்பிளை எடுத்து அம்மாவிடம் சாப்பிடுமாறு கொடுத்தான். அரசி அதனைக் கடித்ததுமே, பார்வை இழந்து, அலறினாள். `பயப்படாதீர்கள், அம்மா` என்ற அந்தோணி, தண்ணீர்ப்புட்டியை எடுத்து, ”இதில் ஒரு சொட்டுத் தண்ணீர் போதும், உங்கள் பார்வையோடு, வெகு நீண்ட காலமாகப் பார்வையற்றிருக்கும் அப்பாவின் பார்வையையும் மீட்டுவிடுவேன்” என்றான்.

ஆனால், புட்டியிலிருந்த தண்ணீர் அவனது அண்ணன்களால் மாற்றி, ஊற்றிய தண்ணீரென்பதால் அவளுக்குப் பார்வை கிடைக்கவில்லை. அரசி அழுதாள்; அரசர் வெறிகொண்டு உறுமினார்; அந்தோணியின் உடம்பு முழுதும் நடுங்கியது. அப்போது அந்த இரண்டு அண்ணன்களும் ஓரடி முன்வந்து, “அது ஏன் இப்படி நடந்ததென்றால், தூங்கும் அரசியின் மந்திர நீரை அவன் கண்டுபிடிக்கவில்லை. நாங்கள் தாம் கண்டுபிடித்தோம்; இங்கிருக்கிறது, பாருங்கள்.” என்றனர். அவர்களின் கண்களில் அந்தத் திருட்டுத் தண்ணீர் பட்டதும், முதியவர்களான அவ்விருவருக்கும் முன்னெப்போதும்போல் எல்லாவற்றையும் பார்க்க முடிந்தது.

அதைத் தொடர்ந்து, அங்கு ஒரு பெருங்கூத்தே நிகழ்ந்தது. அந்தோணி, அவனது உடன்பிறந்தவர்கள் இருவரையும் துரோகிகளென்றும் திருடர்களென்றும் திட்ட, அவர்களோ, அவனை மிக மோசமான பொய்யன் எனப் பதிலுக்குத் திட்டினர். அரசருக்கு அந்தத் தகராறில் தலையும் தெரியவில்லை, வாலும் புரியவில்லை; ஆனாலும், கடைசியில் அவர், வில்லியம், ஜான் மற்றும் அவர்களது மனைவிகள் பக்கம் சாய்ந்து, அந்தோணியிடம், “ பேசாதே, மானங்கெட்ட பிறவியே! உனக்கு என்னைக் குணப்படுத்தும் எண்ணம் இருந்ததில்லை என்பது மட்டுமல்ல, உன் அம்மாவின் கண்களையும் குருடாக்கத் துணிந்தாய்! காவலர்களே, இந்த நன்றிகெட்ட ஜென்மத்தை இப்போதே இழுத்துப் போய்விடுங்கள்! காட்டுக்குக் கொண்டுபோய் அவன் தலையை வெட்டியெறியுங்கள்! அவன் இதயத்தை மட்டும் என்னிடம் கொண்டுவந்து காட்டுங்கள்! இல்லை, இங்கேயே பத்துத் தலை உருளும்!” என்றார்.

அந்தோணி, திமிறி, அலற அலற, வீரர்கள் அவனை நகரத்திற்கு வெளியிலிருந்த ஒரு அடர்ந்த காட்டுப்பகுதிக்கு இழுத்துச்சென்றனர். ஆனாலும், அந்தோணி, எப்படியோ, அவனது கதையை அவர்களுக்குச் சொல்லி அவர்களின் இரக்கத்தைப் பெற்றுவிட்டான். அதனால் ஒரு அப்பாவியின் இரத்தத்தால் தங்கள் கரங்களைக் கறைப்படுத்திக் கொள்ளவேண்டாமென்று, நகரத்திற்கு எப்போதுமே திரும்பி வருவதில்லையென்று அவனிடம் சத்தியம் வாங்கிக்கொண்டு, அவனை விடுவித்தனர். விவசாயி ஒருவரிடம் பன்றி ஒன்றை வாங்கி, அங்கேயே கொன்று அதன் இதயத்தைக் கொண்டுவந்து அரசனிடம் காண்பித்தனர்.

அப்படியே ஒன்பது மாதங்கள் கழிந்தன; கண்ணீர்த்தீவில் தூங்கும் அரசி அழகான ஆண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தாள். அந்தப் பிரசவ வலியில் அரசி விழித்துவிடவே, பொறாமையால் மார்கன் லி ஃபே அவள் மீதிட்ட சாபம் அதோடு முறிந்து, முழு நகரமும் விழித்து மீண்டும் உயிர்பெற்றது. நிமிர்ந்த நிலையில் உறைந்து நின்ற படைவீரர்கள் தளர்வான நிலைக்கும், தளர்வான நிலையில் உறைந்தவர்கள் நிமிர்ந்த நிலைக்குமாக மாற, அரணக்காலணியில் நுழைத்த ஊசிநூலை இழுத்தவாறிருந்த செருப்புத்தைப்பவர் அந்த நூலை இழுத்து முடிக்க, காப்பிக்கடைக்காரர் அந்தப் பெண்ணின் காபிக்கிண்ணத்தில் காபியை நிரப்ப, சுமைதூக்கிய தொழிலளிகளுக்குத் தோள் வலிக்கவே, அவர்கள் தோள் மாற்றினர்.
அரசி கண்களைக் கசக்கிக்கொண்டே, “இந்தத் தீவுக்கு வழி கண்டுபிடித்து இவ்வளவு துணிச்சலோடு வந்து, இந்த அறையில் என்னோடு தூங்கி, அதன் மூலம் என்னையும் என் குடிமக்களையும் சாபத்திலிருந்து விடுவித்த அந்த வீரமகன் யாரென்றுதான் ஆச்சரியப்படுகிறேன்.’’ என்றாள்.

அப்போதுதான், அவளது பெருமைக்குரிய பணித்தோழிகளில் ஒருவள் இரவு மேசை மீதிருந்த குறிப்பினை அவளிடம் பணிந்து கொடுக்க, அங்கு வந்திருந்தவன், மேக்சிமிலியான் அரசரின் மகன் அந்தோணி என்பதைத் தெரிந்துகொண்டாள். உடனடியாகவே, அவள் அரசருக்கு அந்தோணியை எந்தத் தாமதமுமின்றிக் கண்ணீர்த்தீவுக்கு அனுப்பிவைக்குமாறும் இல்லையெனில் ஸ்பெயின் மீது அவள் போர் தொடுக்கப்போவதாகவும் எழுதியனுப்பினாள்.

கடிதம் வரப்பெற்றதுமே, அவர் வில்லியத்தையும் ஜானையும் அழைத்துக் கடிதத்தை வாசித்து அவர்களின் கருத்தினைத் தெரிவிக்குமாறு கூறினார். அவர்களில் யாருக்கும் என்ன சொல்வதென்று தெரியவில்லை. வெகுநேர அமைதிக்குப் பின், ஒரு பெருமூச்சினை வெளியிட்டுவிட்டு, வில்லியம் பேசத்தொடங்கி, “யாராவது ஒருவர் அரசியிடம் சென்று கேட்டு வராமல், இதுவெல்லாம் என்னவென்று நமக்குத் தெரியப்போவதில்லை. நானே நேரில் சென்று என்னவென்று கண்டுபிடிக்கிறேன்.” என்றான்.
மார்கன் லி ஃபேயின் சாபம் நீங்கப்பெற்றுவிட்டதால், துருவக்கரடிகளும் மறைந்துவிட, வில்லியத்தின் பயணம் எளிதாகவே இருந்தது. அவன் நேராகக் கண்ணீர்த்தீவு அரசியின் முன்பு போய், நான்தான் இளவரசன் அந்தோணி என்றான்.

இயல்பிலேயே சந்தேகப்பிராணியான அரசி, அவனைக் கேள்வி கேட்கத் தொடங்கினாள். “ நீங்கள் முதன்முறையாக இங்கு வந்திருந்த நாள் எது? இந்த நகரத்தை எப்படிக் கண்டுபிடித்தீர்கள்? அப்போது நான் எங்கு, என்னசெய்துகொண்டிருந்தேன்? அரண்மனைக்குள் உங்களுக்கு என்ன நேர்ந்தது? இப்போது நீங்கள் பார்ப்பவற்றில், முன்பு பார்க்காதவை என்னென்ன? ” அரசி கேள்விகளை அடுக்கிக்கொண்டே போனாள். வில்லியம் குழம்பி, திக்கித் தடுமாறவே, அரசிக்கு, அவன் பொய் சொல்கிறானெனத் தெரிந்துவிட்டது. அவள் அவனது தலையை வெட்டி, நகர வாயிலின் பெருவாயிற் கதவின் கம்பி ஒன்றில் குத்திக் காட்சிக்கு வைத்தாள். அதன் கீழே இப்படிப் பொறித்திருந்தது : நீங்கள் பொய் சொல்வீர்களானால், இப்படித்தான் சாவீர்கள்.

சிலகாலம் தூங்கிய அரசியிடமிருந்து, அரசர் மாக்சிமிலியான் அந்தோணியை உடனடியாக அனுப்பிவைக்கவில்லையெனில் அவரது நாடு, மக்கள், ஆட்சி அனைத்தோடும் சேர்த்து அவரையும் சாம்பலாக்கிவிட போர்ப்படை புறப்படத் தயாராக நிற்கிறதென இரண்டாவது கடிதம் அரசரிடம் வந்துசேர்ந்தது. அந்தோணியைக் கொலைசெய்ய ஆணையிட்டுவிட்டோமேயென, ஏற்கெனவே, பெரும் உள்வருத்தத்திலிருந்த அரசர், ஜானிடம், “இப்போது நாம் என்ன செய்வது? அந்தோணி இறந்துவிட்டானென்பதை அவளிடம் எப்படிக் கூறுவது? வில்லியத்துக்கு என்னவானது? அவன் ஏன் வீட்டுக்கு வரவில்லை?” எனக் கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுப் புலம்பினார்.

ஜான், அவனாகவே முன்வந்து, சிலகாலம் தூங்கிய அரசியைச் சென்று பார்ப்பதாகக் கூறினான். அவன் தீவுக்குச் சென்றதுமே, நகர நுழைவாயிலின் பெருங்கதவில் குத்தியிருந்த அவனது அண்ணன் வில்லியத்தின் தலையே அவனுக்குச் சொல்ல வேண்டியதையெல்லாம் சொல்விவிட்டது; அவன் பின்னங்கால் பிடரியில் பட, இருமடங்கு வேகத்தில் வீட்டுக்குத் திரும்பினான். ‘’அப்பா!” என்று அழைத்தவன், நம் கதை முடிந்தது! வில்லியம் அண்ணன் இறந்துவிட்டான், அவன் தலை நகரப் பெருவாயில் கதவில் குத்திவைக்கப்பட்டுள்ளது. நான் உள்ளே சென்றிருந்தால், எனக்கும் அதே கதியாகி, என் தலையும் அடுத்த தலையாக அதில் குத்தியிருக்குமென்றான்.

அவன் அருகிலேயே இருந்த அரசர் பெருந்துக்கத்துடன், ‘’வில்லியம் இறந்துவிட்டானா? வில்லியமுமா இறந்துவிட்டான்! இப்போது எனக்கு எல்லாமே வெட்ட வெளிச்சமாகிவிட்டது, அந்தோணி தப்பு ஏதும் செய்யவில்லை, எனக்கான தண்டனையாகத்தான் இப்படியெல்லாம் நடக்கிறது. உண்மையைச் சொல், ஜான், நான் செத்துப்போகும் முன்பாவது, உன்னுடைய கீழறுப்புத் துரோகச்செயலைச் சொல்லித்தொலை.” என்றார்.

எல்லாம் எங்கள் மனைவிகளால் வந்த வினையென்ற ஜான், ”தூங்கும் அரசியை நாங்கள் சென்று பார்க்கவேயில்லை; அந்தோணி கொண்டுவந்த மந்திர நீரை எடுத்துக்கொண்டு அதற்குப்பதிலாக சாதாரணத் தண்ணீர்ப் புட்டியை நாங்கள் மாற்றிவைத்தோம்.” என்றான்.

திட்டோ திட்டென்று திட்டி, அழுது, தலைமுடியைப் பிய்த்துக்கொண்ட அரசர், வீரர்களை அழைத்து, அந்தோணி புதைக்கப்பட்ட இடத்துக்குத் தன்னை அழைத்துச்செல்லுமாறு கூறினார். அரசரின் ஆணை, வீரர்கள் மத்தியில் பெருங்கலக்கத்தை ஏற்படுத்தியதைக் கவனித்த அரசருக்குப் புதிய நம்பிக்கை தோன்றியது. “அது எப்படி வேண்டுமானாலும் போகட்டும்! எனக்கு உண்மை தெரிந்தாக வேண்டும். நான் உங்களுக்கு அரச கட்டளையாகச் சொல்கிறேன், உங்கள் குற்றம் எதுவாக இருந்தாலும் இப்போதே மன்னித்துவிட்டேன்.” என்றார்.

உடம்பெல்லாம் நடுங்கிப்போய் நின்றுகொண்டிருந்த வீரர்கள், அந்தோணியைக் கொல்லச் சொன்ன அரசனின் ஆணைக்கு அவர்கள் கீழ்ப்படியவில்லையென்றும் அந்த ஆணை முழுவதுமாக மீறப்பட்டதென்றும் ஒப்புக்கொண்டனர். அவர்கள் பெரும் வியப்படையும்படியாக, அரசர் அவர்கள் ஒவ்வொருவரையும் கட்டிப் பிடித்து முத்தமிட்டு வாழ்த்தினார். உடனடியாகவே நகரம் முழுவதும், ஒரு தெரு முனை கூட விட்டுவிடாமல், அந்தோணியைக் கண்டுபிடிப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் வாழ்நாள் முழுவதற்கும் தேவையான அளவுக்கு வெகுமதி அளிக்கப்படுமென அறிவிக்கப்பட்டது.

வயதான அப்பாவும் அவரது அவையும் மகிழும்படியாக அந்தோணி வீட்டுக்கு வந்து, பின்னர், கண்ணீர்த்தீவுக்கான அவனது பயணத்தைத் தொடங்கினான். அங்கே அவனுக்கு மாபெரும் வீரனுக்கான வரவேற்பு அளிக்கப்பட்டது.

‘’அந்தோணி! என்னையும் என் நாட்டு மக்களையும் சாபத்திலிருந்து விடுவித்த அந்தோணி!” என்று உணச்சிவயப்பட்ட, அந்தச் சிலகாலம் தூங்கிய அரசி, “நீங்கள் தான் எனக்கு கணவர், இனிமேல் எனக்கு என்றென்றைக்கும் நீங்களேதாம் நிரந்த அரசர்!” என்றாள். அதற்குப் பின்னர் பல மாதங்களாகவே அந்தத் தீவில் கேட்டதெல்லாம் மகிழ்ச்சியின் பாடல்களாகவேயிருக்க, எல்லோரும் அதனை ”மகிழ்ச்சித் தீவு” என அழைத்தனர்.

•••

மரணத்தின் நிலைஎண் காதலுக்கும் மிகையானது. “Death
Constant
Beyond
Love” ஸ்பானியம் : காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் – 
 ஆங்கிலம் : கிரிகோரி ரபாஸா மற்றும் ஜே.எஸ். பெர்ன்ஸ்டீய்ன் – தமிழில் ச.ஆறுமுகம்

Gabriel
García
Márquez,


செனேட்டர் ஒன்சிமோ சான்ச்செஸ், அவரது வாழ்க்கைக்கான பெண்ணைக் கண்ட போது, அவரது மரணத்திற்கு ஆறுமாதங்களும் பதினொரு நாட்களுமே எஞ்சியிருந்தன. ஒருவித மாயத் தோற்றமுள்ள ஆளுநரின் ரோஜா1 என்ற கிராமத்தில்தான், அவர் அவளைச் சந்தித்தார். இரவில் சரக்குக் கடத்தல் கப்பல்களின் சொர்க்க பூமியாகவும் பகலில் பாலைவனத்திற்குள் உள்வாங்கிய உபயோகமற்ற கடற்கால் போலக் கடலைப்பார்த்தவாறு தோற்றமளிப்பதும் ஒன்றுக்கும் உதவாத நிலமும் திசைகளற்றதுமான அது, அப்படியிருப்பதனாலேயே நல் மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய எவராவது ஒருவர் அங்கே வாழ்வாரெனச் சிறிதளவுங்கூட யாருக்குமே, எந்தச் சந்தேகமும் துளிர்த்திருக்கவில்லை.

அதன் பெயர்கூட ஒரு வேடிக்கை தான்; எவ்வாறெனில் அந்தக் கிராமத்தில் அப்போதிருந்த ஒற்றை ரோஜாவுங்கூட, லாரா ஃபாரினாவைச் சந்தித்த அந்த மாலைப்பொழுதில் சான்ச்செஸ் அணிந்திருந்ததுதான்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை எப்போதும் அவர் மேற்கொள்கின்ற வாக்குச் சேகரிப்புப் படலத்தின்போது தவிர்க்க முடியாத நிகழ்வாக அங்கே நிறுத்தவேண்டியதானது. ஊர்வலக் கார்கள் காலையிலேயே அங்கு வந்து சேர்ந்திருந்தன. பின்னர், பொது நிகழ்ச்சியின்போது கூட்டம் திரட்டவும் கோஷங்கள் எழுப்பவுமான வாடகை இந்தியர்களை ஏற்றிக்கொண்டு லாரிகள் வந்தன. பதினோரு மணிக்குச் சிறிது முன்னதாக இசைக்குழு, தானாக உயரும் மேடையரங்கம் மற்றும் பரிவாரங்கள் ஏற்றிய ஜீப்புகள், நிர்வாகப் பணியாளர்கள் வசதிக்கான ஸ்ட்ராபெர்ரி சோடா நிற ஊர்தி அனைத்தும் வந்தன. செனேட்டர் ஒன்சிமோ சான்ச்செஸ் குளிர்வசதி மகிழுந்து ஒன்றினுள் தட்பவெப்பமற்றவராக.

வீறமைதியுடனிருந்தாலும், கதவைத்திறந்த உடனேயே `குப்பென` முகத்திலடித்த வெப்பக் காற்றில் அதிர்ந்துபோனதோடு அவரது உயர்வகைப் பட்டுச் சட்டை, நிறமற்ற ஒரு பிசுபிசுப்புத் திரவத்தில் ஊறியது போலாகி, அவருக்கு முன்னெப்போதுமில்லாதபடி வயதாகிவிட்டதான ஒரு உணர்வு ஏற்பட்டது. அவருக்கு உண்மையில் நாற்பத்திரண்டு வயது தான் ஆகியிருந்தது. கூட்டிங்ஙெனில்2 பெருமதிப்புடன் உலோகப் பொறியியல் பட்டம் பெற்றிருந்தார். அத்துடன் ஆர்வமுள்ள வாசிப்பாளராகவுமிருந்தார். அதற்காக விருது ஏதும் பெறவில்லையென்றாலும், லத்தீன் செவ்வியல் இலக்கியங்களை அவற்றின் மோசமான மொழிபெயர்ப்புகள் வழியாக, வாசித்தவராக இருந்தார். ஜெர்மானிய எழிலொளிப் பெண் ஒருவரை மணந்திருந்ததோடு, அவர் மூலம் ஐந்து குழந்தைகளையும் பெற்றிருந்தார். அவர்கள் எல்லோரும் வீட்டில் பெருமகிழ்ச்சியோடுள்ளனர். எப்படியானாலும் அடுத்த கிறித்துமசுக்கு முன் அவர் இறந்துவிடுவாரென ஒரு மூன்று மாதம் முன்பாக அவருக்குச் சொல்லப்படும் வரையில், அவரும் மகிழ்ச்சியாகவே இருந்தார்.

பொது ஊர்வலத்துக்கான முன்னேற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும்போது, அவருக்கென ஒதுக்கியிருந்த வீட்டில் ஒரு மணிநேரம் தனிமையில் ஓய்வுகொள்ள வசதியாக அமையுமாறு பார்த்துக்கொண்டார். உடலை ஏணையில்3 சாய்த்துக்கொள்ளும் முன், அந்தப் பாலைவனம் முழுவதிலும் உயிர்ப்புடன் வைத்திருந்த அந்த ரோஜாவைக் கண்ணாடித் தண்ணீர்த் தம்ளருக்குள் மிதக்கவிட்டு, அந்த நாளின் மீதிப்பகுதி முழுவதற்கும் அவருக்கு மீண்டும் மீண்டுமாகப் பரிமாறப்படவிருக்கும் வறுத்த ஆட்டிறைச்சியின் பாகங்களைத் தவிர்ப்பதற்காகவே, அவர் தன்னுடன் எடுத்து வந்திருந்த தானிய உணவினை மதிய உணவாக உண்டுமுடித்து, வலி ஏற்படும் முன்பாகவே நிவாரணம் தருமென மருத்துவர்கள் குறித்துக் கொடுத்த மாத்திரைகள் பலவற்றையும் அந்தந்த நேரத்துக்கு முன்பாகவே விழுங்கிவிட்டிருந்தார். பின்னர் மின்விசிறியை அவரது ஏணைக்கருகாக இழுத்துக்கொண்டு, தூங்கும்போது இறப்பு குறித்த நினைவினை ஏற்படுத்துகிற மனச்சிதறலைக் கட்டுப்படுத்துவதற்கான பெருமுயற்சியாக, அந்த ரோஜாவின் நிழலில் ஒரு பதினைந்து நிமிடத்துக்கு நிர்வாணமாகக் கைகால்களை நீட்டிக் கண்களை மூடிக் கிடந்தார். அவரது மருத்துவர்களைத் தவிர வேறு எவருக்கும் அவரது நேரம் குறிக்கப்பட்டுவிட்டிருந்த விவரம் தெரியாது. அவர், மீதி வாழ்க்கையையும் எந்த மாறுதலுமின்றி அப்படிக்கப்படியே வாழ்ந்து விடுவதென்றும், அந்த ரகசியத்தைத் தனக்குள்ளாகவே புதைத்துக் கொள்வதென்றும் தீர்மானித்திருந்தார்; அது, அவர் வாழ்ந்த வாழ்க்கை பெருமைக்குரியதென்பதால் அல்ல, மிகவும் கேவலமான ஒன்று என்பதால் தான்.

அன்று பிற்பகல் மூன்று மணிக்குப் பொதுமக்கள் முன் தோன்றுகையில் தன் விருப்புறுதிச் செயலாற்றலின் மீது சுய ஆளுமை கொண்டவராக, நன்கு ஓய்வெடுத்துச் சுத்தமான `மொரமொர` லினென் முழுக்காற்சட்டையும் பூப்போட்ட மேற்சட்டையும் அணிந்து வலிநிவாரண மாத்திரைகளால் மீட்டுக்கொண்ட உயிர்ப்புடன் தோன்றினார். மரண நினைப்பின் பாதிப்புகள் ஏற்படுத்தும் மனச்சிதைவுகள் மற்றும் உருச்சிதைவுகள் அவர் நினைத்ததை விட அதிகமாக எதுவுமில்லை. அதனாலேயே, பொதுக்கூட்ட மேடை மீது ஏறுகையில், நல்விருப்பம் தெரிவித்துக் கைகுலுக்க முண்டியடித்தவர்கள் மீது அவருக்குள் அலட்சியமான ஒரு வினோத எண்ணம் உருவானது. தொற்றுநீக்கியச் சிறுசிறு சதுரங்களான சூடுமிக்க வெடியுப்புப் படிகங்களை மிக அரிதாகவே கைகளில் தாங்குகிறச் செருப்பில்லாத இந்தியர்களுக்காக, வேறுநேரங்களில் போல, அவர் எந்த வருத்த உணர்வும் கொள்ளவில்லை. சரமாரிக் கைதட்டல்களைக் கோபம்மிக்க ஒரு ஒற்றைக் கையசைப்பின் மூலம் அமைதிப்படுத்திய அவர், வெப்பத்தைப் பெருமூச்சாக வெளியிட்டுக் கொண்டிருந்த கடல்மீது அசையாது பதித்த பார்வையோடு உடலசைவுகள் ஏதுமின்றி, சொற்பொழிவாற்றத் தொடங்கினார். முன்தீர்மானித்த, அவரது ஆழமான குரலில் அமைதியான நீரோட்டத்தின் ஒழுகுதன்மை இருந்ததென்றாலும், பலமுறை உருப்போட்டுத் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்துப் பழகிய பேச்சுத்திறன் உண்மையைச் சொல்லுந்தன்மையால் கைவரப்பெற்றதல்ல; மாறாக, மார்க்கஸ் அவ்ரேலியஸின் தீக்கதரிசனங்களின் நான்காவது நூலில், விதிவசத் தத்துவமென அவர் உரைத்துள்ளவற்றுக்கு நேர் எதிர்த்தன்மை கொண்டதாகும்.

அவரது அசையாத நம்பிக்கைகளுக்கு மாறாக, “நாம் இங்கே இயற்கையோடு போரிட்டுத் தோற்கடிப்பதற்காகக் கூடியிருக்கிறோம்.” எனத் தொடங்கிய அவர் “நமது சொந்த நாட்டிலேயே இனிமேலும் நாம் எடுப்பார் கைப்பிள்ளைகளாக, தண்ணீருக்கும் வழியற்ற மோசமான நிலையில் கடவுளும் கைவிட்ட அனாதைகளாக, நம் சொந்த மண்ணிலேயே நாடு கடத்தப்பட்டவர்களாக, அகதிகளாக இருக்கப்போவதில்லை. நாம் வேறு மாதிரியானவர்கள், பெருமக்களே, நாம் மேன்மைக்குரியவர்கள்; மகிழ்ச்சியான மக்கள்.” எனச் சொல்லி இடைநிறுத்தினார்.

அவருடைய சர்க்கஸ் வேலைகள் எல்லாவற்றிலும் ஒரேவிதமான பாவனை உத்தி இருந்தது. அவர் பேசப்பேச, இடையிடையே அவருடைய சேவகர்கள் காகிதப் பறவைகளைக் கொத்தாக அள்ளி வானவெளியில் வீச, அந்தச் செயற்கைப் பொருட்கள் உயிர் பெற்று மேடைத் தூண்களிடையே பறந்து கடலுக்குச் சென்றன. அந்தச் சமயத்தில் வேறு சிலர் பார வண்டிகளிலிருந்து கம்பளக் கூரை விரிப்புகள் மற்றும் அவற்றைத் தாங்கும் முட்டுக்கழிகளை உருவி மைதானத்தின் பின்புறமாக, அந்த வெடியுப்பு மண்ணில் நட்டு, இப்படியாக கண்ணாடிச் சாளரங்களுடன் கூடிய உண்மையான சிவப்புச் செங்கற்கட்டு வீடுகளென நம்பும்படியாக அட்டை முகப்புகளை உருவாக்கி, அதன் மூலமாக உண்மையான துன்ப வாழ்க்கைக் குடிசைகள் கண்ணில் படாதவாறு மறைத்துவிட்டனர்.
செனேட்டர், அவரது ஏமாற்று நாடகத்தினை அதிக நேரம் நீட்டிப்பதற்காக இரண்டு இலத்தீன் மேற்கோள்களைக் கூறி அவரது நீண்ட சொற்பொழிவினை நிகழ்த்திக்கொண்டிருந்தார்.

மழைபெய்விக்க எந்திரம், மேசை விலங்கு4களைப் பிரசவிக்கும் நகர்கருவி, வெடியுப்பு மண்ணிலும் காய்கறித் தாவரங்கள் மற்றும் சாளரத் தொட்டிகளில் கொத்தாகப் பல்வண்ண பான்சிகளையும் வளர்க்க விதவிதமான மகிழ்ச்சித் தைலங்கள் அனைத்தும் வழங்குவதாக உறுதியளித்தார். அவரது கற்பனை உலகம் கட்டிமுடிக்கப்பட்டதைக் கண்டதும், அவர் அதைநோக்கிக் கைநீட்டிச் சுட்டிக்காட்டினார். “ இப்படித்தான் நமது எதிர் காலம் இப்படித்தானிருக்கும், பெருமக்களே” என அவர் உரத்துக் கூவினார். ”பாருங்கள்! இப்படித்தான்!”

மக்கள் திரும்பிப் பார்த்தனர். வீடுகளின் பின்னால் தெரிவதாக அமைக்கப்பட்டிருந்த வண்ணத்தாள் கடற்கரை, அந்தச் செயற்கை நகரத்தின் மிக உயரமான வீட்டிற்கும் உயரத்தில் தெரிந்தது. இடம் விட்டு இடமாகக் கொண்டுசெல்லப்பட்டு, பல்வேறு இடங்களில் கண்ணைக் கவர்வதாக அமைக்கப்பட்டிருந்த அந்த அட்டை நகரம் ஒவ்வாத காலநிலையால் அரிக்கப்பட்டிருந்ததையும், அது இப்போது ஆளுநரின் ரோஜா கிராமத்தைப் போலவே தூசியும் தும்புமாக அழுக்கடைந்து கெட்டிருந்ததை செனேட்டர் மட்டுமே கவனித்தார்.
கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக நெல்சன் ஃபாரினா செனேட்டரை வரவேற்கப் போகாமலிருந்தான். முதல் மனைவியைப் பிடித்திழுத்து நான்காக வெட்டித்தள்ளிய அதே மருந்தாளுநக் கரங்களால் கட்டிக்கொண்ட இழைக்கப்படாத பலகை வீட்டின் தண்மைமிகுந்த வேனில் முகப்பு ஏணையில் நண்பகல் தூக்கத்தின் மிச்சமீதியாகப் புரண்டுகொண்டிருந்த அவன், செனேட்டரின் பேச்சினைக் கேட்டான்.

பேய்த்தீவிலிருந்து தப்பிவந்த அவன், ஏதுமறியாத மாக்கா5ப் பெருங்கிளிகள் ஏற்றப்பட்டிருந்த கப்பலில், பாரமாரிபோவில் கண்டுபிடித்து, அவள் மூலம் ஒரு மகளையும் பெற்றுக்கொண்ட, கடவுள் மற்றும் மதப் பழக்க வழக்கங்களில் அசட்டையான, அழகானக் கறுப்பினப் பெண்ணுடன், ஆளுநரின் ரோஜாவில் வந்திறங்கினான். பின்னர் சில காலத்திலேயே, அந்தப்பெண் இயற்கையான காரணங்களால் இறந்துவிட, அவள் முன்னவளைப் போல் துண்டு,துண்டுகளாகிக் காலிஃபிளவர் தோட்டத்துக்கு உரமாக்கப்படாமல், முழுமையாக, உள்ளூர்க் கல்லறைத் தோட்டத்தில் அவளது டச்சுப் பெயருடனேயே புதைக்கப்பட்டாள். அம்மாவின் நிறம் மற்றும் உருவ அழகோடு அப்பாவின் விரிந்த மஞ்சள் நிறக் கண்களையும் மகள் பெற்றிருக்க, உலகத்திலேயே மிகமிக அழகு மிக்க பெண் ஒருத்தியை வளர்த்துக்கொண்டிருப்பதாக, அவன் கற்பனையில் மிதக்க, அது வசதியான ஒரு நல்ல காரணமாக அமைந்தது.

செனேட்டர் சான்ச்செஸின் முதல் வாக்குச் சேகரிப்புப் பரப்புரையின் போது, அவரைச் சந்தித்ததிலிருந்தே, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க வசதியாகப் போலி அடையாள அட்டை ஒன்றினைப் பெற உதவுமாறு நெல்சன் ஃபாரினா, அவரைக் கேட்டுக்கொண்டிருந்தான். செனேட்டர் மிகுந்த நட்பும் நயமுமாக, ஆனால் உறுதியாக மறுத்துவிட்டார். ஆனாலும் நெல்சன் ஃபாரினா விட்டுவிடாமல் பல ஆண்டுகளாகவும் அவரைச் சந்திக்கிற ஒவ்வொரு முறையும் அவனது கோரிக்கையை வெவ்வேறு காரணங்களுடன் முன்வைத்துக்கொண்டேதானிருந்தான். ஆனால், இம்முறை அவன், கொதிக்கும் குடிசைக்குள் உயிரோடு அவியுமாறு சபிக்கப்பட்ட கடற்கொள்ளைக்கார ஏணையில் படுத்துக்கிடந்தான்.

அதிலும் கடைசிக் கைதட்டல்களை, அவன் கேட்டு, வேலிப்பலகைகளுக்கும் மேலாகத் தலையை உயர்த்திப் பார்க்கையில், ஏமாற்று நகரத்தின் பின்பக்கத்தை, கட்டடங்களுக்கான முட்டுக்கழிகள், மரச் சட்டங்கள், மறைவாக அமர்ந்து கடற்கரைத் தாளினை அசைத்து அசைத்து முன்தள்ளிக்கொண்டிருந்த வித்தைக்காரர்களைக் கண்டான். அவன் வெறுப்பேதுமில்லாமலேயே காறித் துப்பினான்.
“அடடா” ”இப்படித்தான் கறுப்பர்களின் அரசியல்” என பிரெஞ்சு மொழியில் கூறிக்கொண்டான்.

சொற்பொழிவுக்குப் பிறகு, வழக்கம்போல் செனேட்டர், இசைக்குழு மற்றும் மேடைப் பரிவாரங்களோடு கிராமத்துத் தெருக்கள் ஊடாக ஊர்வலமாக நடந்துவருகையில், அவரவர் பிரச்னைகளை அவரிடம் கூறுவதற்காக, மக்கள் அவரை. முற்றுகையிட்டனர். செனேட்டர் அவர்கள் கூறுவதைத் இன்முகத்துடன் நல்லபடியாகக் கேட்டதோடு, பெரிய அளவிலான எந்த உதவியும் செய்யாமலேயே அவர்கள் ஒவ்வொருவரையும் திருப்திப்படுத்த ஏதாவது ஒரு வழியை எப்போதுமே கண்டுகொண்டார். ஆறு குழந்தைகளுடன் குடிசையின் கூரை மேல் ஏறி நின்ற ஒரு பெண் அத்தனைக் கூச்சல் மற்றும் வாணவேடிக்கைகளுக்கு நடுவிலும் அவள் சொல்வதைக் கேட்குமாறு கவனம் ஈர்த்தாள்.

”நானொன்றும் பெரிதாகக் கேட்கவில்லை, செனேட்டர்!” எனத் தொடங்கிய அவள், “தூக்கில் தொங்கியவன் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக் கொண்டுவர, ஒரு கழுதை வேண்டும், அவ்வளவுதான்!” என முடித்தாள்.
ஒல்லிக்குச்சிகளான ஆறு குழந்தைகள் மீதும் கண்களை ஓடவிட்ட செனேட்டர், ‘உன் வீட்டுக்காரனுக்கு என்னாச்சு?” எனக் கேட்டார்.
”அரூபாத் தீவுக்கு அதிர்ஷ்டத்தைத் தேடிப் போனான், அவன்,” எனக் கேலியாகச் சொன்ன, அவள், “ அவன், அங்கே என்ன பார்த்தான் என்றால், வாயெல்லாம் வைரம் பதித்த பற்கள் கொண்ட ஒரு வெளிநாட்டுப் பெண்ணைத் தான்.”
அதைக் கேட்டதும் குபீரென ஒரு சிரிப்பு அலை எழுந்தது.

”சரி,” என அழுத்தமாகச் சொன்ன செனேட்டர், உடனடித் தீர்வாக, “நீ கேட்ட கழுதை உனக்குக் கிடைக்கும்.” என்றார்.

சிறிது நேரத்திலேயே அவரது உதவியாளர் ஒருவர் நல்ல உடற்கட்டுள்ள கழுதை ஒன்றை அந்தப் பெண்ணின் வீட்டுக்குக் கொண்டுவந்து நிறுத்தினார். அந்தக் கழுதை, செனேட்டரின் கொடை என்பதை எவரும் மறந்துவிட முடியாதபடி, அதன் பிட்டத்தில் அழியாத மையினால் பரப்புரை கோஷம் ஒன்று எழுதியிருந்தது. அந்தக் குறுகிய தெருவில் அவர் நடந்துசென்ற தூரம் முழுவதிலும் அவரது தாராளத்தைக் காட்டும் வேறு சில சிறுசிறு உதவிகளைச் செய்தார்; செனேட்டரின் நடைவலத்தைக் காண்பதற்கு ஏதுவாக, படுக்கையை இழுத்து வாசலுக்கருகே கிடத்தியிருந்த நோயாளி மனிதரின் வாயில் சிறிதளவு மருந்தினைக்கூட செனேட்டர் ஊற்றினார். கடைசி மூலையில், நெல்சன் ஃபாரினா அவரது ஏணைக்குள்ளிருந்து சாம்பல் படிந்தது போல் வெளுத்துச் சிடுசிடுத்த முகத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதை, வேலிப் பலகைகள் ஊடாகக் கண்டதும் செனேட்டர், அவராகவே அவனிடம் நலம் விசாரித்தார்; ஆனால், அவர் குரலில் நெருக்கம், நட்பு ஏதுமில்லை.

“ஹலோ, எப்படி இருக்கிறீர்கள்?”
நெல்சன் ஃபாரினா, ஏணையில் புரண்டு, அவனது சோகத் தோற்றத்தினை மேலுமாக வெளிப்படுத்தினான். ”உனக்குத் தெரியாததா என் கதை,” எனப் பிரெஞ்சில் கூறினான்.
நலம் விசாரிப்பினைக் கேட்ட அவனது மகள் வாசலுக்கு வந்தாள்; மலிவான, நிறம் மங்கி வெளிறிப்போன ஒரு குவாஜிரோ6 இந்திய ஆடை சுற்றியிருந்த அவள் தலையில் அழகுக்காக வண்ண வண்ண அம்புகள் செருகி, வெயில் பாதுகாப்பாக முகச்சாயம் பூசியிருந்தது; ஆனால், அப்படியான கோர நிலையிலும் இந்த உலகத்தில் அவளைப் போல் அழகாக வேறெந்தப் பெண்ணும் இருக்கமுடியாதென்ற எண்ணத்தைத் தோற்றுவிப்பதாகத் தானிருந்தாள்.

செனேட்டர் வாய்பிளந்தார். “அய்யோ, நான் செத்தேன்!” என, வியப்புப் பெருமூச்சிட்டார். “கடவுள் அற்புதத்திலும் அற்புதங்களை விளைவிக்கிறார்!”

அன்று இரவு நெல்சன் ஃபாரினா அவனது மகளை மிகமிக அழகான ஆடை அணிவித்து அவளை, செனேட்டரிடம் அனுப்பினான். செனேட்டர் தங்கியிருந்த வீட்டின் முன் தூக்க மயக்கத்திலும் வெக்கை தாங்காமல் தள்ளாடிக் கொண்டிருந்த துப்பாக்கி தாங்கிய இரு காவலர்களும் முன் கூடத்திலிருந்த ஒரே நாற்காலியில் அமர்ந்து காத்திருக்கச் சொன்னார்கள்.

செனேட்டர், அவரது சொற்பொழிவின் போது வெளியிட்ட விஷயங்களை மீண்டும் காய்ச்சி ஊற்றுவதற்காக ரோஜாவூரின் முக்கிய நபர்களை அழைத்து வந்து அவர்களோடு அடுத்த அறையில் பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் எல்லோரும் அந்தப் பாலைவனத்தின் மற்ற கிராமங்களில் அவர் சந்தித்த நபர்களைப் போலவே தோன்றியதில், செனேட்டரே அலுத்துச் சலித்து, சுற்றிச்சுற்றி முடிவற்று நீண்ட அந்த இரவு நாடகத்தில் சோர்ந்துபோனார். அவரது சட்டை வியர்வையில் ஊறி நனைந்துவிட, அதை அந்த அறையின் அதிகமான வெக்கையில் ஒரு மாட்டு ஈயைப் போல கிர்,கிர்ரென்று சத்தமிட்டுக்கொண்டிருந்த மின்விசிறியின் சூடான காற்று மூலம் அவர் உடம்போடேயே உலர்த்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

“நாம் என்னமோ, காகிதப்பறவைகளைச் சாப்பிடமுடியாதுதான்.” என்றார், அவர். ” உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும் அந்த நாளில் இந்த வெள்ளாட்டுப் புழுக்கைக்குவியல் மீது மரங்களும் பூக்களும் இருக்கும். அந்த நாளில் நீர் ஊற்றுகள் முழுவதும் புழுபூச்சிகளுக்குப் பதிலாக வரால் மீன்கள் துள்ளும். அன்று நீங்களோ, நானோ இங்கே செய்வதற்கு எந்த வேலையுமே இருக்கப்போவதில்லை. இப்போது நான் தெளிவாக, விளக்கிவிட்டேனா?”

யாருமே பதில் பேசவில்லை. பேசிக்கொண்டிருக்கும்போதே, செனேட்டர் நாட்காட்டியிலிருந்து ஒரு தாளைக் கிழித்து, அதைத் தன் கைகளாலேயே காகிதப் பட்டாம் பூச்சியாக அழகுபடுத்தினார். எந்த இலக்கும் இல்லாமல் அதை மின்விசிறிக் காற்றில் எறிய, அந்தப் பட்டாம் பூச்சி அறை முழுவதுமாகச் சுற்றிப் பின்னர் பாதி திறந்த கதவின் இடைவெளி வழியாக வெளியே சென்றது. மரண நினைவின் காரணமான ஓரளவு கட்டுப்பாட்டுடன், செனேட்டர் பேசிக்கொண்டே போனார்.

“அதனால், நான் உங்களுக்கு மீண்டும் மீண்டுமாகச் சொல்ல வேண்டியதில்லை; ஏனென்றால் உங்களுக்கே நன்றாகத் தெரியும்; நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதென்பது என்னைவிடவும் உங்களுக்குத் தான் லாபம். ஏனென்றால், இந்தக் கெட்டுக்கிடைத் தண்ணீரும் இந்திய வியர்வையுமாக நான் சலித்துப் போனேன். ஆனால் நீங்களோ அதைக் கொண்டு சம்பாதிக்கிறீர்கள். அந்த சம்பாத்தியத்தில் தானே வாழ்க்கையே ஓட்டுகிறீர்கள்.”
காகிதப் பட்டாம் பூச்சி வெளியே வந்ததை லாரா ஃபாரினா பார்த்தாள். அவள் மட்டுமே பார்த்தாள்; அந்த முன்கூடத்திலிருந்த இரண்டு காவலர்களும் துப்பாக்கியை அணைத்தவாறே படிக்கட்டுகளில் அமர்ந்து தூங்கினர். ஒருசில பல்டிகளுக்குப் பின் அந்தப் பெரியக் கல்லச்சுப் பட்டாம்பூச்சி முழுவதுமாக விரியத் திறந்து சுவரில் தட்டையாக அமர்ந்ததோடு அங்கேயே ஒட்டிக்கொண்டது. லாரா ஃபாரினா அதை நகத்தால் கிளப்பி எடுக்க முயற்சித்தாள். அடுத்த அறையில் எழுந்த கைதட்டல் ஒலியால் விழித்த காவலரில் ஒருவர் அவளது வீண் முயற்சியைக் கவனித்தார்.

“அது வராது. அது சுவரில் தீட்டிய வண்ணம்.” என்றார்.
கூட்டம் முடிந்து ஆட்கள் அறையைவிட்டு வெளியே வரத் தொடங்கியதும் அவள் மீண்டும் நாற்காலியில் அமர்ந்தாள். அறையின் வாசலில் தாழ்ப்பாள் மீது கைவைத்தவாறு நின்ற செனேட்டர், கூடம் காலியான போது தான் லாரா நிற்பதைக் கவனித்தார்.

“இங்கே என்ன செய்கிறாய்?”
“அப்பா சொல்லச் சொன்னாங்க.” எனப் பிரெஞ்சில் கூறினாள்.
செனேட்டர் புரிந்துகொண்டார். தூங்கிக்கொண்டிருந்த காவலர்களைக் கூர்ந்து பார்த்தாதுவிட்டுப் பின்னர், லாராவைக் கூர்ந்து நோக்கினார். அவளது அசாதாரணமான அழகு அவரது வலியை விடவும் அதிகமாக நினைப்பிலேறித் துன்புறுத்தவே, மரணம் தான் அவருக்கான முடிவை எடுக்கிறதெனத் தீர்மானித்தார்.

அவளிடம், “உள்ளே வா,” என்றார்.
லாரா ஃபாரினா அறையின் வாயிற்படிக்கு வந்து நின்றதும் அப்படியே பேச்சிழந்து சிலையாகிப் போனாள் : ஆயிரக்கணக்கான ரூபாய் நோட்டுகள் காற்றில் மிதந்து பட்டாம் பூச்சிகளாகச் சிறகடித்தன. செனேட்டர் மின்விசிறியை நிறுத்தியதும், காற்றில்லாமல் அந்தத் தாள்கள் அப்படிக்கப்படியே அறைகலன்களின் மீது வீழ்ந்து படிந்தன.

“பார்த்தாயா” எனச் சிரித்துக்கொண்டே, “ மலம் கூடப் பறக்கும்.” என்றார்.

லாரா ஃபாரினா அங்கிருந்த பள்ளிப்பையன் ஸ்டூல் மீது உட்கார்ந்தாள். அவள் மேனி வழவழப்பாக, ஆனால் திடமாக, கச்சா எண்ணெய் போல அதன் அடர்த்தியோடு அதே நிறத்திலிருந்தது. அவள் தலைமுடி இளம் பெண் குதிரையின் பிடரி மயிர் போலவும் அவளது பெரிய கண்கள் ஒளியை மிஞ்சும் பளபளப்புடனுமிருந்தன. செனேட்டர் அவள் பார்வையின் வழியே பயணித்துக் கடைசியில் அது ரோஜாவின் மீது படிந்திருப்பதைக் கண்டார். அந்த ரோஜா வெடியுப்பினால் வதங்கிப்போயிருந்தது.

“அது ரோஜா” என்றார், அவர். .
“ஆம்.” என்றவள், ஒருவித மருட்சியுடன், “ரியோஹாச்சா7 வில் அவை எப்படியிருக்குமெனப் படித்திருக்கிறேன்.”

இராணுவக் கட்டில் ஒன்றில் அமர்ந்த செனேட்டர், ரோஜாக்களைப் பற்றிப் பேசிக்கொண்டே அவரது சட்டைப் பொத்தான்களைக் கழற்றினார். அவரது மார்புக்குள் இதயம் இருக்கும் இடத்தின் மேலாக கோர்செய்ர்8 இதயம் துளைக்கும் அன்பு ஒன்று பச்சைகுத்தியிருந்தது. வியர்வையில் நனைந்த சட்டையைத் தரையிலெறிந்த அவர் லாராவிடம் அவரது புதையரணக் காலணிகளைக் கழற்ற உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
அவள் கட்டிலைப் பார்த்தவாறு குனிந்தாள். சிந்தனையிலிருந்து மீளாமலேயே, அவளைக் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்த அவர், அவள் காலணிக்கயிறுகளை அவிழ்க்கும்போது அவற்றில் எந்த ஒன்று அந்த மோதலில் அவக்கேட்டில் போய் முடியப் போகிறதோ என எண்ணினார்.

“நீ இப்போதும் ஒரு குழந்தைதான், “ என்றார், அவர்.
’’நீங்கள் நம்பவில்லையா?” என்ற அவள், ஏப்ரலில் எனக்கு பத்தொன்பது வந்துவிடும்.” என்றாள்.
செனேட்டர் ஆர்வமானார்.
”என்ன தேதி?”
“பதினொன்று.” என்றாள், அவள்.
செனேட்டர் சிறிது நல்லதாக உணர்ந்தார். `நம் இரண்டுபேருமே மேஷம்` என்றவர், சிரித்துக்கொண்டே, “அது தனிமையின் ராசி.” என்றார்.

லாரா அதில் கவனம் செலுத்தவில்லை; என்னவெனில் அவளுக்கு அந்தக் காலணிகளை என்ன செய்வதென்று தெரியவில்லை. செனேட்டருக்கு, அவருடைய பிரச்னையாக, லாராவை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஏனெனில் அவருக்கு இதுபோலத் திடீர் காதல் விவகாரங்களெல்லாம் பழக்கமில்லை. அதுவுமில்லாமல் தற்போது கையிலிருப்பதன் தொடக்கம் வெறுப்பில் தோன்றியதென்பது அவருக்குப் புரிந்தது. சிந்திப்பதற்குச் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளலாமென்றே, லாரா ஃபாரினாவைத் தன் கால் முட்டுகளுக்கிடையே இறுக்கமாகப் பிடித்து, அவளது இடுப்பினை அணைத்து, அப்படியே கட்டிலின் மீது மல்லாக்கச் சாய்ந்தார். அப்போதுதான் அவள் அவளது சட்டைக்குக் கீழே எதுவும் அணியாமல் நிர்வாணமாக இருந்தாளென்பதை உணர்ந்தார். அவளது உடல் காட்டு விலங்கின் முரட்டு வாசமொன்றை வெளிப்படுத்தியது; ஆனால், அவளது இதயம் பயத்தில் படபடக்க, அவளது மேனி கண்ணாடி வியர்வையால் நசநசத்தது.

“ என்னை யாருமே காதலிப்பதில்லை.” என அவர் பெருமூச்சிட்டார்.

லாரா ஃபாரினா ஏதோ சொல்ல முயன்றாள், ஆனால் வெறுமே மூச்சுவிட மட்டுமே அவளால் முடிந்தது. அவளுக்கு உதவுவதாக, அவர் அவளைத் தன் அருகாகச் சாய்த்துக்கிடத்திவிட்டு, விளக்கினை அணைக்க, அந்த அறை ரோஜாவின் நிழலுக்குள் மூழ்கியது. அவள் விதியின் கரங்களில் தன்னை ஒப்புக்கொடுத்தாள். செனேட்டர் அவளை, அவளது உடலுக்குள்ளாகவே தேட, அவரது கரங்களால் மெல்லத் தடவி, அதனை வெறுமே தொட்டார்; ஆனால், அவள் எந்த இடத்தில் கிடைப்பாளென அவர் எதிர்பார்த்தாரோ, அங்கே வழியை அடைத்துக்கொண்டு இரும்பு போல ஏதோ ஒன்று தட்டுப்பட்டது.

“அதற்குள்ளே போய், நீ என்ன வைத்திருக்கிறாய்?’ய எனக் கேட்டார், அவர்.
”பட்டைப் பூட்டு.” என்றாள், அவள்.
”என்ன எழவு!” எனக் கோபமாகக் கேட்டவர், அதற்கான பதிலை அவரே நன்கறிவாரென்றாலும், மீண்டும் கேட்டார், “ சாவி எங்கே?”
லாரா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

‘’அப்பா தான் வைத்திருக்கிறார்.” என அவள் பதில் சொன்னாள். “ அவரது நிலைமையைச் சரிசெய்வதாக எழுத்து மூலமான உறுதிமொழி ஒன்றை அவரது ஆட்களில் ஒருவரிடம் கொடுத்தனுப்பி, சாவியைப் பெற்றுக்கொள்ளுமாறு உங்களிடம் சொல்லச் சொன்னார்.”

செனேட்டர் அதிகப் பதட்டமானார். “தேவடியாத் தவளைப்பயல்,” என வெறுப்பின் உச்சத்தில் முணுமுணுத்தார். பின்னர் தன்னைச் சிறிது தளர்த்திக்கொள்வதற்காக கண்களை மூடிய அவர் இருளுக்குள்ளாகவே தனக்குள் மூழ்கினார். நினைவு வைத்துக்கொள், அவர் எண்ணிப்பார்த்தார், நீயோ அல்லது யாராக இருந்தாலும் மரணமடைவதற்கு நேரம் காலமில்லை, உன்பெயர் கூடத் தெரியாமல் போவதற்கும் நேரம், காலம் இல்லை.
நடுக்கம் குறையட்டுமெனக் காத்திருந்தார்.

பின்னர் அவர், “ எனக்கு, ஒரு விஷயம் சொல்லு. என்னைப்பற்றி என்ன கேள்விப்பட்டிருக்கிறாய்?” என்றார்.
”கடவுள் மேல் சத்தியமான உண்மையா, உங்களுக்கு வேண்டும்?”
”ஆம். கடவுள் மேல் சத்தியமான உண்மை.”
“நல்லது,” என நிறுத்திய லாரா ஃபாரினா, பின்னர், “ நீங்கள் மற்றவர்களை விட மிக மோசமானவர்; ஏனென்றால் நீங்கள் வேறுமாதிரி ஆள்.” எனக் கூறினாள்.

செனேட்டர் ஒன்றும் குழம்பிவிடவில்லை. நீண்ட நேரம் கண் மூடி அமைதியாக இருந்த அவர், கண்விழித்தபோது, அவரது பழைய இயல்புகள் அனைத்தும் மீளக் கைவரப்பெற்றவராகத் தோன்றினார்.

’ஆஹ், எப்படியான ஒரு இழவு,” அவர் ஒரு முடிவுக்கு வந்தார். அவளிடம், “ பொட்ட நாய்க்குப் பிறந்த உன் அப்பனிடம், அவன் நிலைமையை, நான் சரியாக்குவேனென்று போய்ச் சொல்.” என்றார்.

”வேண்டுமானால், நானே போய்ச் சாவியை வாங்கி வரட்டுமா?” என்றாள், லாரா ஃபாரினா.
செனேட்டர் அவளைக் கைகளில் பற்றினார்.
”சாவியை மறந்து, என்னுடன் சிறிது நேரம் தூங்கு. தனிமையிலிருக்கும்போது யாராவது ஒருவர் உடனிருந்தால் நல்லது.” என்றார், அவர்.

பின்னர், அவள் ரோஜாவை விட்டுக் கண்களை அகற்றாமலேயே அவரது தலையை அவளது தோளில் சார்த்திப் பிடித்தாள். செனேட்டர் அவளது இடுப்பைப் பிடித்துக்கொண்டு, அவளது காட்டு விலங்கு அக்குளில் முகம் புதைத்துத், திகிலுக்குள் மூழ்கினார். ஆறு மாதங்கள், பதினொரு நாட்களுக்குப் பின் அதே நிலையில் லாரா ஃபாரினாவுடனான தொடர்பு குறித்த பொதுவிவகார ஊழலினால் பெயர்கெட்டு, மதிப்பிழந்து, இறுதியில் சாகும்போது அவள் இல்லாமல் சாகிறோமே என்ற வெறியில் அவர் செத்துப் போனார்.

***

குறிப்புகள்

ஆளுநரின் ரோஜா – Rosal del Virrey – கிராமத்தின் பெயர்
கூட்டிங்ஙென் – Gootingen, ஜெர்மனியில் 1737 இல் தோற்றுவிக்கப்பட்ட புகழ்பெற்ற ஆய்வுப் பல்கலைக்கழகம்.
ஏணை – hammock, உறங்குவதற்காக அமைக்கும் தொட்டில் அமைப்பு.
மேசை விலங்குகள் – Table animals for playing. விளையாட்டுக்கான பொம்மை விலங்குகள்.
மாக்கா – Macaws கிளி வகையில் பல்நிறப் பெருங்கிளிகள்
குவாஜிரா – Guajira வெனிசுலா – கொலம்பிய எல்லையிலுள்ள தீபகற்பம் குவாஜிரா தீபகற்பம் எனவும் அப்பகுதியின் வாயூ பூர்வகுடிகள் குவாஜிரா இந்தியரென்றும் அழைக்கப்படுகின்றனர்.
ரியோஹாச்சா – Riohacha கொலம்பியாவில், ராஞ்சீரியா நதி கரீபியன் கடலில் கலக்கும் முகத்துவாரத்திலுள்ள நகரம்.
கோர்செய்ர் – Corsair கலிபோர்னியக் கணினி நிறுவனம்.

மூன்று நாய்கள் The Three Dogs / இடாலோ கால்வினோ / ச.ஆறுமுகப் பிள்ளை

இடாலோ கால்வினோ

ஒருகாலத்தில், ஒரு மகனும் மகளும் மட்டுமேயிருந்த வயதான உழவர் ஒருவர் இருந்தார். மரணத்துக்கான நேரம் வந்தபோது, அவர் அவர்களைப் படுக்கைக்கு அருகில் அழைத்து, ” என் அன்பான குழந்தைகளே, நான் இறக்கப்போகிறேன். கொட்டகையில் உள்ள மூன்று சிறிய பெட்டைச் செம்மறி ஆடுகளைத் தவிர உங்களுக்கென விட்டுச் செல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை. ஒன்றுசேர்ந்து இணக்கமாக வாழ முயற்சிசெய்யுங்கள், நீங்கள் ஒருபோதும் பசியோடு இருக்கவேண்டியிருக்காது.” என்றார்.

அவரது மரணத்துக்குப் பிறகு உடன்பிறப்புகள் இருவரும் ஒன்றாக வாழ்ந்தனர். சிறுவன் மந்தையைக் கவனித்தான்; சிறுமி வீட்டில் அமர்ந்து நூல்நூற்கவும் சமைக்கவுமாக இருந்தாள். ஒருநாள், சிறுவன் செம்மறிகளுடன் காட்டிலிருந்தபோது மூன்று நாய்களுடன் வந்த குள்ள மனிதன் ஒருவனைச் சந்தித்தான்.

”உனக்கு நன்னாள் வாழ்த்துக்கள், அன்புச் சிறுவனே!”
”உங்களுக்கு நன்னாள் வாழ்த்துக்கள்.”
‘’ஆஹா, உன் செம்மறிகள்தாம் எவ்வளவு அழகு!”
‘நீங்களுந்தாம் மூன்று அழகான நாய்கள் வைத்திருக்கிறீர்கள்!”

“ஒன்றினை வாங்க விருப்பமா?”
“எவ்வளவுக்கு?”
”சிறிய செம்மறிகளில் ஒன்றை எனக்குக் கொடு. என் நாய்களில் ஒன்றினை நான் உனக்குத் தருகிறேன்.”
“அதுசரி, என் அக்காள் என்ன சொல்வாளோ, தெரியவில்லையே?”

”அவள் என்ன சொல்லவிருக்கிறது? செம்மறிகளின் காவலுக்காக உண்மையிலேயே உனக்கு ஒரு நாய் தேவைப்படுகிறது!”

சிறுவன் அவனுக்குள்ளாகவே பேசிக்கொண்டபின், ஒரு செம்மறியை அந்த மனிதனிடம் கொடுத்துவிட்டு நாய் ஒன்றினைப் பெற்றுக்கொண்டான். நாயின் பெயரென்னவெனக் கேட்டபோது, அந்தக் குள்ள மனிதன், “இரும்புத் தகர்ப்பவன்” என்றான்.
வீட்டுக்குச் செல்லும் நேரம் நெருங்கியபோது, அவனது அக்காள் திட்டுவாளெனத் தெரிந்து பெரும் பதற்றத்துக்குள்ளானான். அவள் கொட்டகைக்குப் பால்கறக்கப்போய், இரண்டு பெட்டைச் செம்மறிகளும் ஒரு நாயும்தான் இருப்பதைக் கண்டு, பெருங்கூச்சலிட்டு, அவனை அடித்துத் துவைத்தாள்.
“ ஒரு நாயால் நமக்கு என்ன உபயோகமென்பதைத் தயவுசெய்து நீ எனக்குச் சொல்லேன் பார்ப்போம்! நீ மட்டும் நாளைக்கு மூன்று பெட்டை ஆடுகளையும் கொண்டுவரவில்லையென்று வை, நீ ரொம்பவும் வருத்தப்படவேண்டியிருக்கும்!”
ஆனால், அப்போதும் செம்மறிகளின் காவலுக்காக ஒரு நாய் தேவைதானென அவன் நினைத்தான்.
அடுத்த நாள் காலையில் அவன் அதே இடத்துக்குத் திரும்பிச்சென்றபோது இரண்டு நாய்களும் ஒரு ஆடும் வைத்திருந்த அந்தக் குள்ள மனிதனை மீண்டும் சந்தித்தான்.

”உனக்கு நன்னாள் வாழ்த்துக்கள், அன்புச் சிறுவனே!”
”உங்களுக்கு நன்னாள் வாழ்த்துக்கள்.”
”என்னுடைய பெட்டை ஆடு தனிமையில் மிகவும் வாடுகிறது.” என்றான், அந்த மனிதன்.
“அதேதான் என் நாய்க்கும்.” என்றான், சிறுவன்.
“அப்படியென்றால், இன்னொரு பெட்டை ஆட்டைக் கொடு, நான் உனக்கு இன்னொரு நாயைத் தருகிறேன்.”
“ஆஹா, நன்றாக இருக்கிறது! ஒரு செம்மறியைக் கொடுத்ததற்கே என் அக்காள் என்னைக் கொல்லத் தயாராக இருக்கிறாள்! இன்னொன்றையும் நான் விற்றால் அவள் என்ன செய்வாளெனக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்களேன்.”

“இங்கே பார், ஒரு நாயை வைத்து எந்த உபயோகமும் இல்லை. இரண்டு ஓநாய்கள் வந்தால் நீ என்னசெய்ய முடியும்?”
எனவே சிறுவன் இரண்டாவது பரிமாற்றத்துக்குச் சம்மதித்தான்.

“இதன் பெயரென்னவாம்?”
“சங்கிலிமெல்லுபவன்.”
அவன் மாலையில் இரண்டு நாய்களையும் ஒரு செம்மறியையும் கொட்டகையில் கட்டிவிட்டு வீட்டுக்குள் வந்தபோது, அவனது அக்காள், “மூன்று பெட்டை ஆடுகளையும் கொண்டுவந்தாயா?” எனக் கேட்டாள். அவளுக்கு என்ன பதில் சொல்லுவதென்று அவனுக்கு எதுவும் தெரியவில்லை.
”ஆமாம், அதற்காக நீ ஒன்றும் கொட்டகைக்கு வரவேண்டாம். நானே பால் கறந்துவிடுகிறேன்,” என்றான்.

ஆனால், அவளோ, அவளது கண்ணாலேயே அதைப் பார்த்தாக வேண்டுமென்றதன் விளைவாக அவன் இரவுக்கு உணவில்லாமல் படுக்கையில் போய் விழவேண்டியதாயிற்று. “நாளை இரவுக்கு மூன்று செம்மறிகளும் இங்கு வந்துசேரவில்லையானால், நான் உன்னைக் கொன்றேவிடுவேன்.” என்றாள், அந்த உடன்பிறப்பு.

மறுநாள், அவன் காட்டில் மேய்த்துக்கொண்டிருக்கும்போது அங்கு இரண்டு ஆடுகளுடனும் ஒரு நாயுடனும் அந்தக் குள்ள மனிதன் வந்தான்.

”உனக்கு நன்னாள் வாழ்த்துக்கள், அன்புச் சிறுவனே!”
”உங்களுக்கு நன்னாள் வாழ்த்துக்கள்.”
”இப்போது இந்த நாய் தனிமையில் சாகாமல் சாகிறது.”
“அப்படியேதான் என்னுடைய கடைசிச் செம்மறியும்.”
“செம்மறியை என்னிடம் தந்துவிட்டு நாயை எடுத்துக்கொள்.”

“இல்லை, உண்மையாகவே முடியாது. அப்படியொரு காரியத்தை வாயளவில்கூடச் சொல்லவே சொல்லாதீர்கள்.”
“உன்னிடம் இப்போது இரண்டு நாய்கள் இருக்கின்றன. மூன்றாவதாக ஒன்றை ஏன் வேண்டாமென்கிறாய்? அதையும் வாங்கிக்கொண்டால், இந்த உலகத்திலேயே அழகான மூன்று நாய்கள் உனக்குச் சொந்தமாகிவிடும்.”
“அதன் பெயரென்ன?”
”சுவர் பிளப்பவன்.”
”இரும்புத் தகர்ப்பவன், சங்கிலி மெல்லுபவன், சுவர் பிளப்பவன், என்னோடு வாருங்கள்.”
இரவு வந்ததும் வீட்டில் அவனது அக்காவைப் போய்ப் பார்க்க அவனுக்குத் தெம்பில்லை. “என் வழியை நானே சிறப்பாக அமைத்துக் கொள்ளமுடியும்.” என அவன் ஒரு முடிவுக்கு வந்தான்.

நாய்கள் பின்தொடர அவன் சிறிது தூரம் சென்றதும் மழை பெய்யத் தொடங்கியது. இரவோ வெகு நேரமாகிவிட்டது, எங்கே செல்வதென்று அவனுக்கு எந்தச் சிந்தனையும் இல்லை. நடுக்காட்டுக்குள் உயரமான சுற்றுச்சுவர்களுடன் முழுவதுமாக விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளிவீசிக்கொண்டிருந்த அழகிய அரண்மனை ஒன்றைக் கண்டு வேவு பார்த்தான். அதன் கதவை, அவன் தட்டியும்கூட யாரும் திறக்கவில்லை. அவன் மீண்டும் மீண்டுமாகக் கூப்பிட்டும் ஒருவர் கூடப் பதில்சொல்லவில்லை. பிறகுதான் அவன், சுவர் பிளப்பவனே, எனக்கு உதவிசெய்!” என அழைத்தான்.

அவன் வாயிலிருந்தும் வார்த்தைகள் வெளிவந்ததோ இல்லையோ, சுவர்பிளப்பவன் அதன் வலிமையான பாதங்களால் சுவரில் ஒரு பெரிய பொந்தினை ஏற்படுத்திவிட்டது.

சிறுவனும் நாய்களும் அதன் வழியாக உள்ளே சென்றுவிட்டனர்; ஆனால், அங்கே உறுதியான ஒரு பெரிய இரும்புக் கதவு இருந்தது. ‘இரும்புத் தகர்ப்பவனே, இப்போது உன் முறை!” என்று அவன் சொல்லவும் இரண்டே கடியில் இரும்புத் தகர்ப்பவன் இரும்புக் கதவினைத் தகர்த்தெறிந்தது.
அரண்மனைக் கதவு கனத்த ஒரு சங்கிலியால் கட்டப்பட்டிருந்தது. “சங்கிலி மெல்லுபவனே!” என அந்தச் சிறுவன் அழைக்கவும், அந்த நாயின் ஒரே கடியில் சங்கிலி தெறித்துக் கதவு திறந்தது.

நாய்கள் உள்ளே நுழைந்து படிகளில் ஏற, சிறுவனும் உடன் சென்றான். உள்ளே உயிருள்ள ஒரு ஜீவன் கூட கண்ணில் படவில்லை. கணப்பில் மிகுந்த ஒளியுடன் நெருப்பு எரிய, அருகிருந்த மேசை மீது அனைத்துச் சுவையான உணவுவகைகளும் இருந்தன. உண்பதற்காக அவன் மேசை முன்பாக அமர்ந்தபோதுதான் மேசையின் கீழ் மூன்று பெரிய கிண்ணங்களில் நாய்களுக்கான சூப் நிரப்பிவைக்கப்பட்டிருந்ததைக் கண்டான்.

அவன் உண்டுமுடித்ததும், மற்றொரு அறைக்குள் சென்றபோது, அது இரவுக்கான படுக்கை அறையாக மாற்றப்பட்டிருந்ததையும் அவன் படுக்கை அருகிலேயே நாய்களுக்கான மூன்று படுக்கைகள் இருந்ததையும் கண்டான். காலையில் அவன் எழுந்து பார்த்தால், அவன் வேட்டைக்குச் செல்வதற்காக, துப்பாக்கி, குதிரை அனைத்தும் தயாராக இருந்தன. அவன் காட்டுக்குச் சென்று வேட்டை முடித்து வீடு திரும்பியபோது விருந்துக்கான உணவு மேசையில் பரிமாறப்பட்டு படுக்கைகள் விரித்து, மொத்த வீடும் சுத்தமாகி அனைத்தும் ஒழுங்குபட்டிருந்தன.
அப்படியே பல நாட்கள் கழிந்தும், அவனது விருப்பங்கள் உடனுக்குடன்
நிறைவேற்றப்பட்டிருந்தாலும், அங்கே உயிருள்ள ஒரு ஜீவனைக்கூட அவன் ஒருபோதும் கண்டதில்லை. மொத்தத்தில் அவன் பெருமகிழ்வான ஒரு பிரபு வாழ்க்கையை அனுபவித்தான். பின்னர் அவன், அவனது உடன்பிறந்தவளைப்பற்றிச் சிந்தித்தான்; அவள் எவ்வளவு துன்பமும் துயரமும் மிக்க ஒரு காலத்தினைக் கடந்தாளென்பதைப்பற்றியெல்லாம் எந்தப் பேச்சுக்கும் இப்போது இடமிருக்காதென நினைத்த அவன், “அவளை என்னோடு இருக்கும்படியாக இங்கே அழைத்துவருவேன்.

இப்போதுதான் நான் பெரும் வசதிகளுடனிருக்கிறேனே அதனால் ஆடுகளைக் கொண்டுவராததற்காக அவள் என்னைத் திட்டும் பேச்சுக்கே இடமில்லை.”
அடுத்தநாள் காலையில் ஒரு பிரபுவைப் போல ஆடை அணிந்து, நாய்களுடன் உடன்பிறப்பின் வீட்டுக்குக் குதிரை மீதேறிச் சென்றான். வீட்டு வாயிற்படியில் அமர்ந்து நூல் நூற்றுக்கொண்டிருந்த அவன் உடன்பிறப்பு, தூரத்தில் அவனைப் பார்த்ததும், “ நம் வீடு நோக்கிக் குதிரையில் வருகிற இவ்வளவு அழகான ஒரு பிரபுவம்சத்து இளைஞன் யாராக இருக்கும்?” என வியந்தாள். ஆனால், அது அவளது தம்பிதானென்றும் அப்போதும் ஆடுகள் இல்லாமல் நாய்களை அழைத்துக்கொண்டு வருகிறானென்றும் தெரிந்ததும், அவளது வழக்கப்படியான வசைபாடும் ஆட்டத்தைத் தொடங்கினாள்.

“ஒரு நிமிஷம் பொறு!” என்ற அவளது உடன்பிறப்பு. “எதற்கு இப்படிக் கத்துகிறாய்? இப்போது நான் பெரும் வசதியுடன் வாழும் ஒரு பெருங்குடி மனிதன். உன்னை என்னோடு அழைத்துச் செல்லவே வந்திருக்கிறேன். இப்போது போய் அந்த மூன்று பெட்டைச் செம்மறிகள் நமக்கு எதற்கு? அவற்றால் நமக்கு என்ன உபயோகம் இருக்கப் போகிறது?” என்றான்.

அவன், அவளைக் குதிரை மீது ஏற்றி அரண்மனைக்கு அழைத்து வந்தான். அங்கே அவள் பெரும் வசதியுள்ள ஒரு சீமாட்டி ஆனாள். அவளுடைய எந்தவொரு சிறு விருப்பமானாலும் உடனடியாக நிறைவேற்றப்பட்டது. ஆனாலும், அந்த நாய்களின் மீதான வெறுப்பு அவளிடம் குறையவேவில்லை.

அவளது தம்பி வீட்டுக்கு வரும்போதெல்லாம் அந்தக் கடுகடுக்கும் பழைய முனகல்களை மீண்டும் தொடங்குவாள்.
அந்த மூன்று நாய்களுடனும் அவளது உடன்பிறப்பு வேட்டைக்குச் சென்றிருந்த ஒரு நாளில் அவள் தோட்டத்தில் வெறுமனே நடைபயின்ற போது தோட்டத்தின் முடிவிலிருந்த ஒரு மரத்தில் அழகிய ஆரஞ்சுக் கனி ஒன்றைக் கண்டாள். அதைப்பறிக்கும் நேரத்தில் அவளை அப்படியே விழுங்கத் தயாராக வாயைப் பிளந்துகொண்டு இராக்கதப் பாம்பு (டிராகன்) ஒன்று பாய்ந்து வந்தது.

அவள் வாய்விட்டுக் கதறி அழுதாள். உண்மையில் தோட்டத்துக்குள் அத்து மீறி நுழைந்தது அவளது தம்பிதானென்றும், அந்த இராக்கதப் பாம்பு யாரையாவது விழுங்கியே தீரவேண்டுமென்றால் அவளது தம்பியைத் தான் விழுங்கவேண்டுமென்றும் மன்றாடினாள். எப்போதும் அந்த மூன்று நாய்களுடன் இருக்கும் அவளது உடன்பிறப்பினை விழுங்க அதனால் இயலாதென்றது, அந்த இராக்கதப் பாம்பு. உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்காக, அவள் என்ன செய்யவேண்டுமென்று சொன்னால் அதன்படி செய்து அவளது உடன்பிறப்பினை அந்த இராக்கதப் பாம்பு விழுங்குவதற்கு ஏற்பாடு செய்வதாக அவள் சொன்னாள். அந்த மூன்று நாய்களையும் தோட்டத்தின் சுவருக்கு அப்பால் சங்கிலியால் கட்டிவைக்குமாறு அந்த இராக்கதப் பாம்பு கூறியது. அப்படியே செய்வதாக அவள் உறுதியளிக்கவும், அது அவளை விட்டுவிட்டது.

இளைஞன் வீட்டுக்கு வந்தபோது, அவனது உடன்பிறப்பு, நாய்களைப் பற்றிய பிலாக்கணத்தை மீண்டும் தொடங்கி, இனிமேலும் உணவுவேளையில் அந்த நாட்டு நாய்களின் நாற்றத்தைப் பொறுத்துக் கொள்ளப் போவதில்லையென்றாள். அதனாலேயே, அவளை எப்போதுமே எதிர்த்துப் பேசாமல் பணிந்துபோகும் அவளது உடன்பிறப்பு அவள் சொல்லியபடியே நாய்களை வெளியே அழைத்துச்சென்று சங்கிலியால் கட்டிவைத்தான். பின்னர் அவள், தோட்டத்தின் முடிவு எல்லையில் நிற்கும் மரத்திலிருந்து ஆரஞ்சுக்கனியைப் பறித்துவருமாறு சொல்லவும் அவனும் மறுபேச்சுப் பேசாமல் தோட்டத்துக்குப் போனான். அவன் ஆரஞ்சுக்கனியைப் பறிக்கும் நேரத்தில் அந்த இராக்கதப் பாம்பு பாய்ந்துவந்தது.

தன் உடன்பிறப்பால் வஞ்சிக்கப்பட்டிருப்பதை உணர்ந்த அவன், “இரும்புத் தகர்ப்பவனே! சங்கிலி மெல்லுபவனே! சுவர் பிளப்பவனே!” எனக் கூவியழைத்தான். அவ்வளவுதான், சங்கிலி மெல்லுபவன் சங்கிலியை அறுத்தெறிய, இரும்புத் தகர்ப்பவன் பெருவாயிற்கதவின்
இரும்புக்கம்பிகளைத் தகர்த்தெறிய, சுவர் பிளப்பவன் அதன் பாதங்களால் சுவரை இடித்துத் தள்ள, மூன்றுமாக அந்த இராக்கதப் பாம்பின் மீது பாய்ந்து துண்டு துண்டுகளாக்கித் துணுக்குகளாக்கின.
அந்த இளைஞன் அவனது உடன்பிறந்த அக்காளிடம் திரும்பிவந்து, “என்னைப்பற்றி நீ நினைப்பது அவ்வளவுதானா? அந்த இராக்கதப் பாம்புக்கு நான் இரையாக வேண்டுமென்றா நினைத்தாய்! உன்னோடு இனிமேல் ஒரு நிமிடம் கூட இருக்கமாட்டேன்.” என்றான்.

அவன் குதிரை மீதேறி, மூன்று நாய்களும் பின்தொடரச் சென்றான். இராக்கதப் பாம்பு ஒன்றால் விழுங்கப்படவுள்ள ஒரே மகளைக் கொண்ட ஒரு அரசனின் நாட்டுக்குள் அந்த இளைஞன் வந்து சேர்ந்தான். அவன் நேராக அரசனிடம் சென்று, அவனது மகளைத் திருமணம் செய்துதருமாறு கேட்டான். அரசனோ, “என் மகளை உனக்குத் தரமாட்டேன். “ என்றான். ”என் மகளை ஒரு பயங்கரப் பிராணி விழுங்கவிருக்கிறது. அதனிடமிருந்து நீ என் மகளை விடுவித்துவிட்டால், நிச்சயமாக அவள் உனக்குத் தான்.” என்றும் சொன்னான்.

”மிகவும் நல்லது, பெருந்தன்மைச் சமூகமே, எல்லாவற்றையும் என்னிடம் விட்டுவிடுங்கள்.” என்ற அந்த இளைஞன் அந்த இராக்கதப் பாம்பினைத் தேடிக்கண்டுபிடிக்க, அவனது நாய்கள் அதனைத் துண்டுதுண்டாக்கி எறிந்தன. வெற்றிவீரனாக அவன் திரும்பிவந்தபோது, அரசன் அவனது மகளை அவனுக்கு உரித்தாக்க மணநாள் உறுதிவிழா நிகழ்த்தினான்.

மணநாளும் வந்தது; முன் நடந்தவற்றையெல்லாம் மறந்து, மணமகன் ஆளனுப்பி, அவனது உடன்பிறந்தவளை அழைத்துவந்தான். அவளது பகை உணர்வோ முன்னிலும் கொழுந்துவிட்டு எரிந்தது. திருமணம் முடிந்ததும் அவள், ‘’ இன்றிரவுக்கு என் உடன்பிறப்பின் திருமணப் படுக்கையை நான்தான் தயாரிப்பேன்.” என அறிவித்தாள்.

எல்லோரும் அதனை உடன்பிறப்புப் பாசத்தின் அறிகுறியாக ஏற்று அவள்தான் படுக்கை தயாரிக்கவேண்டுமென்பதை ஒத்துக்கொண்டனர். அதன்பிறகு அவள் செய்ததோ, மணமகன் படுக்கும் பக்கமாகப் படுக்கை விரிப்பின் அடியில் மரம் அறுக்கும் கூரிய வாள் ஒன்றினை மறைத்து வைத்ததுதான். அன்று இரவில் அந்த உடன்பிறந்தவன் படுக்கையில் படுத்ததும் இரண்டு துண்டுகளாக வெட்டுண்டான். பெரும் துக்கத்துடன் அழுகை அரற்றல்கள் மத்தியில் மூன்று நாய்களும் பின்தொடர, சவப்பெட்டி தேவாலயத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பின்னர் அவர்கள் ஒரு நாய் வலப்பக்கமும் மற்றொன்று இடப்பக்கமுமாக மற்றொன்று தலைப்பக்கமாகவும் சவப்பெட்டிக்குக் காவலிருக்குமாறு மூன்று நாய்களையும் உள்ளே வைத்து தேவாலயக் கதவைப் பூட்டினர்.
எல்லோரும் போய்விட்டார்களென்று உறுதியாகத் தெரிந்ததும், அவற்றில் ஒன்று, ‘’நான் போய் அதை எடுக்கிறேன்.” என்றது.

“நான்தான் அதைச் சுமந்து வருவேன்.” என்றது மற்றொன்று.

‘’நான்தான் பூசிவிடுவேன்.“ என்றது மூன்றாவது நாய்.
ஆகவே நாய்களில் இரண்டு புறப்பட்டுச் சென்று, ஒரு களிம்பு ஜாடியை எடுத்துவந்தன. காவலுக்காக அங்கேயே தங்கிவிட்ட மூன்றாவது நாய் களிம்பினை எடுத்து வெட்டுப்பட்ட பகுதி முழுவதிலும் களிம்பினைத் தடவியது. இப்படியாக அந்த இளைஞன் உயிரோடிருக்கும்போது எப்படியிருந்தானோ, அப்படியே திரும்பவும் உயிர்பெற்று எழுந்தான்.
படுக்கையில் மரமறுக்கும் வாளினை மறைத்துவைத்தது யாரெனக் கண்டுபிடிக்கும்படி அரசன் ஆணையிட்டான். அந்தக் குற்றத்தைச் செய்தது, அந்த உடன்பிறந்தவள் தானெனத் தெரியவந்தபோது அவளுக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டது.

மணமக்கள் இருவரும் மகிழ்வோடிருந்தனர்; எல்லாவற்றுக்கும் மேலாக, அந்த வயதான அரசன் முதுமையில் சோர்ந்துவிட்டதால் அரசாட்சியை மருமகனிடமே ஒப்படைத்துவிட்டிருந்தான். ஆனாலும் ஒரு விஷயம் மட்டும் அந்த இளைஞனின் மகிழ்ச்சியில் உறுத்தும் கல்லாகவே இருந்தது. அந்த மூன்று நாய்களும் எந்தவொரு சிறிய தடயத்தையும் விட்டுவைக்காமல் அவனது நாட்டிலிருந்தும் மறைந்துவிட்டிருந்தன. அவன் கண்ணீராய்ப் பெருக்கினான்; ஆனாலும், முடிவில் இழப்பினைத் தலைவணங்கி ஏற்று, அவன் அமைதிகொள்ள வேண்டியதாயிற்று.

ஒரு நாள் காலையில், பழைய நட்பினைப் புதுப்பிக்கும் கோரிக்கை மற்றும் ஆவலுடன் மூன்று மதிப்புக்குரிய பெருந்தகை நபர்களை ஏற்றிக்கொண்டு மூன்று கப்பல்கள் நங்கூரமிட்டிருப்பதான நற்செய்தியைத் தூதுவர் ஒருவர் கொண்டுவந்தார். அந்த இளம் அரசனோ புன்னகைத்தான்; ஒரு எளிய நாட்டுப்புறச் சிறுவனாகவே வளர்ந்துவிட்ட அவனுக்கு முக்கியம் வாய்ந்த எவரொருவரையும் ஒருபோதும் தெரிந்திருந்ததில்லை. அதனாலேயே அவன் கணநேரமும் தாமதிக்காமல் அவனது நண்பர்களென உரிமை கோரும் நபர்களைப் பார்க்கவேண்டுமேயென அந்தத் தூதுவரோடேயே சென்றான்.

அவனைப் பேராரவாரத்துடன் வரவேற்ற அரசர்கள் இருவரையும் பேரரசர் ஒருவரையும் அவன் கண்டான். அவர்கள், “எங்களை நீங்கள் இன்னுமா தெரிந்துகொள்ளவில்லை?” என்றனர்.

“இல்லை, நீங்கள் என்னை வேறு ஆளாகத் தவறாகத்தான் நினைக்கிறீர்கள்,” என அவன் பதில் சொன்னான்.
”என்றென்றைக்கும் விசுவாசமான உங்கள் நாய்களை நீங்கள் மறக்கக்கூடுமென நாங்கள் நினைத்தேயிருக்கவில்லை!”

”என்ன?” அவன் வியந்துபோனான்.

“இரும்புத் தகர்ப்பவன், சங்கிலி வெல்லுபவன், சுவர் பிளப்பவன்? இப்படி மாறிவிட்டார்களா?”
”எங்களை ஒரு மந்திரவாதி நாய்களாக மாற்றிவிட்டான்; கிராமத்துப் பையன் ஒருவன் ஆட்சிக்கட்டிலேறும் வரையில் நாங்கள் எங்கள் உண்மை நிலைக்கு மாறமுடியாததாக இருந்தது. நாங்கள் உங்களுக்கு உதவியதைப்போலவே நீயும் எங்களுக்கு உதவியிருக்கிறாய்.

இப்போதிலிருந்து நாம் பிரிக்கமுடியாத நண்பர்களாகிவிட்டோம். என்ன நடந்தாலும் சரி, எப்போதும் உங்களுக்கு உதவிசெய்ய ஒரு பேரரசரும் இரு அரசர்களும் இருக்கிறார்களென்பதை எப்போதும் நினைவில்கொள்ளுங்கள்.”

பெரும் கொண்டாட்டங்களின் நடுவே அவர்கள் நகரில் சில நாட்கள் தங்கியிருந்தனர். பிரிவதற்கான நாள் வந்தபோது, ஒருவருக்கொருவர் நல்வாழ்த்துக்களையும் நல்விருப்பங்களையும் பரிமாறிக்கொண்டு அவர்கள் பிரிந்தனர். ஆக, அதன்பிறகு அவர்கள் எப்போதுமே மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். 
(ரொமாக்னா) (Romagna)

நேற்றையதினம் / ஹாருகி முரகாமி / தமிழில் / நர்மதாகுப்புசாமி

முரகாமி

முரகாமி

YESTERDAY

எனக்குத் தெரிந்தவரை பீட்டில்ஸின் ‘YESTERDAY ‘ பாடலை ஜப்பானிய வரிகளில் ( அதுவும் குறைந்தபட்சம் கான்ஸே பேச்சு வழக்கில் ) பாடிய ஒரே ஆள் கித்தாருதான். வழக்கமாக குளிக்கும்போது அவன் தனக்கேயுரிய பாணியில் பாடுவான்.

நேற்றையதினம்
என்பது நாளைக்கு இரண்டு நாள் முன்னர்,
இரண்டு நாட்களுக்கு பின்னர் உள்ள நாள்.
எனக்கு ஞபாகத்தில் உள்ளவரை இப்படித்தான் துவங்கும்.

ஆனால் நான் அதிகம் கேட்டதில்லை எனவே அது எவ்வாறு தொடரும் என்று உறுதியாக சொல்லமுடியவில்லை. ஏறக்குறைய துவக்கத்திலிருந்து முடிவு வரை கித்தாருவின் வரிகள் அர்த்தமற்று முட்டாள்தனமாக மூலத்திற்கு சற்றும் தொடர்பில்லாது இருக்கும்.

பரிச்சயமான அந்த அழகிய துயரார்ந்த மெல்லிசையும் துள்ளலான கான்ஸே பேச்சு வழக்கும் ஒன்றாக இணைந்திருப்பதை அவலச்சுவைக்கு நேரெதிராகச் சொல்லலாம். விநோதமான இணை , ஆக்கப்பூர்வமான அனைத்தையும் உறுதியாக மறுத்தல். குறைந்தபட்சம் எனக்கு அப்படித்தான் தோன்றியது. அப்படி தோன்றும் போது நான் தலையை உதறிக்கொள்வேன். சிரித்துக் கொள்வேன் ஆனால் அதேநேரம் அதில் ஒரு வகையான இறக்குமதி ஒளிந்திருக்கிறது என்று உணர்ந்திருக்கிறேன்.

டோக்கியோவின் ஒதாக்குவில் உள்ள டென்னென் சோஃபு வில் பிறந்து , வளர்ந்வனாயிருந்தாலும் நான் அறிந்தவரை கித்தாருவுக்கு ஏறக்குறைய த்வணி சுத்தமான கான்ஸே உச்சரிப்பு இருந்தது. நானோ கான்ஸேவில் பிறந்து வளர்ந்திருந்தாலும், பரிபூரணமான சுத்த ஜப்பானிய ( டோக்கியோ பாணி ) மொழியைப் பேசினேன். நாங்கள் இருவரும் நிச்சயமாக வினோதமான இணை.

நான் கித்தாருவை வஸேதா பல்கலை கழகத்தினருகே இருந்த காஃபி கடையில் பகுதிநேர வேலை செய்து கொண்டிருந்தபோதுதான் முதன்முதலாகச் சந்தித்தேன். நான் சமையலறையில் , கித்தாரு பரிசாகரனாக.. கடையின் ஓய்வு நேரத்தில் நாங்கள் இருவரும் நிறைய பேசுவோம். நாங்கள் இருவரும் இருபதுகளில் இருந்தோம். எங்கள் இருவரின் பிறந்தநாளும் ஒரு வார இடைவெளியில் இருந்தன.

‘ கித்தாரு என்பது ஒரு அரிதான கடைசிபெயர். ‘ என்றேன் ஒரு நாள்.

‘ ஆம். சரியாகத்தான் சொல்கிறாய்.‘ கித்தாரு தன்னுடைய தீவிர கான்ஸே உச்சரிப்பில் கூறினான்.

‘ Lotte பேஸ்பால் அணியின் பந்து எறிபவருக்கு இதேபெயர்தான். ‘

‘ எங்கள் இருவருக்கும் எவ்விதத்திலும் தொடர்பில்லை பெயரைத்தவிர, யார் கண்டார்கள் ? எங்காவது ஒரு பிணைப்பு இருக்கிறதோ என்னவோ ? ‘
நான் அப்போது வஸேதாவில் இலக்கியத் துறையில் இரண்டாமாண்டு மாணவனாக இருந்தேன். கித்தாரு நுழைவுத் தேர்வில் தோற்றுபோய் , பயிற்சி வகுப்பில் சேர்ந்து மீண்டும் கல்லூரியில் சேர திணறிக் கொண்டிருந்தான். உண்மையில் அவன் இருமுறை தேர்வில் தோல்வியடைந்திருந்தான். ஆனால் அவனது தோரணையிலிருந்து யாரும் அதை ஊகிக்கவே முடியாது. படிப்பில் அதிகம் கவனம் செலுத்துபவனைப் போல தோன்றவில்லை.

ஓய்வாக இருக்கும் போது அவன் நிறைய புத்தகங்கள் படித்தான் ஆனால் அவை தேர்வுக்கு சம்பந்தம் இல்லாத புத்தகங்கள் – ஜிமி ஹென்ட்ரிக்ஸின் வாழ்க்கை வரலாறு, Where Did The Universe Come From ? போன்றவை. பயிற்சி வகுப்புக்கு அவன் தினந்தோறும் டோக்கியோவில் இருக்கும் ஒட்டாவார்டிலிருந்து பயணித்து வருவதாக ஒரு நாள் கூறினான்.

‘ ஒட்டாவார்ட்‘ ? என்றேன் ஆச்சரியத்துடன். ‘ ‘ ஆனால் நீ கான்ஸேயிலிருந்து வருகிறாய் என்று நினைத்தேன் ‘

‘ இல்லவே இல்லை. டெனென்சோஃபுவில்தான் பிறந்து வளர்ந்தேன். ‘

இது நிஜமாகவே என்னை அதிர்ச்சியடைய வைத்தது.
‘ பின் எப்படி நீ கான்ஸே வட்டாரவழக்கில் பேசுகிறாய் ? “ என்று கேட்டேன்.

‘ அதை நான் வரவழைத்துக் கொண்டேன். அதைக் கற்றுகொள்வதற்காக என்னை தயார் செய்து கொண்டேன் ‘

‘ வரவழைத்துக் கொண்டாயா ? ‘
‘ ஆம். கடுமையாக படித்து வினைச்சொல், பெயர்சொல், உச்சரிப்பு – என முழு ஒன்பது கூறுகளையும், ஆங்கிலம் , பிரஞ்சு படிப்பதுபோலவே. கான்ஸேவுக்கு போய் பயிற்சியும் எடுத்துக் கொண்டேன். ‘

நான் மிகவும் கிளிர்ச்சியடைந்தேன். ஆக அந்நிய மொழிகளைப்போலவே கான்ஸே உச்சரிப்பையும் படிக்கும் மக்கள் இருக்கிறார்களா ? இது எனக்கு புதிதாக இருந்தது. டோக்கியோ எத்தனை பெரியது , அதில் எனக்குத் தெரியாத விஷயங்கள் எத்தனை உள்ளன என்று உணர்த்தியது.இது எனக்கு Sansbiro நாவலை நினைவூட்டியது, ஒரு உதாரண நாட்டுப்புற சிறுவன் ஒருவன் பெரிய நகரத்தைச் சுற்றி திரியும் கதை..

‘ குழந்தையாக இருக்கும் போதே நான் ஹான்ஷீன் டைகர்ஸின் தீவிர விசிறி.‘ கித்தாரு விளக்கமாக கூறினான். ‘ டோக்கியோவில் அவர்கள் எங்கு விளையாடினாலும் தவறாமல் போய்விடுவேன்.ஆனால் மைதானத்தில் ஹன்ஷீன் அணியின் இருக்கைகளில் அவர்களது ஜெர்ஸியை அணிந்து கொண்டு டோக்கியோ வட்டாரவழக்கில் பேசினால் என்னோடு அவர்கள் யாரும் சேரமாட்டார்கள், அந்தக் குழுவின் அங்கத்தினனாக இருக்கமுடியாதல்லவா ? புரிகிறதா ? எனவே நான் கான்ஸே வட்டார வழக்கை கற்க ஆரம்பித்தேன். அதற்காக நாயாக உழைத்தேன்.

‘ அதுவா உன் இலட்சியம் ? ‘ என்னால் அதை நம்பவே முடியவில்லை.

‘ ஆம். டைகர்கள் எனக்கு அவ்வளவு முக்கியம்.‘ என்றான் கித்தாரு. நான் பேசுவதெல்லாம் இப்போது கான்ஸே பேச்சு வழக்கைத்தான் பள்ளியில், வீட்டில், தூக்கத்தில் கூட. . என்னுடைய உச்சரிப்பு கிட்டதட்ட முழுமையானதுதான் இல்லையா ?

‘ நிச்சயமாக. நீ கான்ஸேயிலிருந்து வருகிறாய் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் உனது பேசுமுறை ஹன்ஷிகன் வகை இல்லை – கோப் வட்டாரம். அது நடுமையத்தில் பேசுவது போல் ஒலிக்கிறது – ஒசாகாவின் உள் நகரங்களில் உள்ளது போல், “

‘‘ நீ அங்குதான் வளர்ந்தாய் , இல்லையா ? உயர்நிலை பள்ளியில் கோடைவிடுமுறைகளில் ஒசாக்காவில் தெனோஜிக்குவில் நான் அங்கே ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். சிறந்த இடம். உயிரியல் பூங்கா உட்பட எல்லா இடத்திற்கும் நடந்தே செல்லலாம். “

‘‘ஒரு வீட்டில் தங்கியா ?‘‘ எனக்கு அது கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது.

‘ கான்ஸே பேச்சுவழக்கை கற்றுகொள்வதற்கு நான் படித்ததைப் போல் நுழைவுத்தேர்வுக்குப் படித்திருந்தால் இப்போது தோல்வியடைந்ததைப் போல் நான் தோல்வியடைந்திருக்கவே மாட்டேன்.‘
அவன் சொல்வதில் விஷயமிருக்கிறது, அவனது தன்னைத்தானே விமரிசித்துக் கொள்ளும் பாணியில் கூட ஒரு கான்ஸேத்தனம் இருந்தது.

‘ நீ எங்கிருந்து வருகிறாய் ? ‘ என்றான்.
‘ கான்ஸே. கோப்க்கு அருகில் ‘ என்றேன்.
‘ கோப்க்கு அருகிலா ? எங்கே ? ‘
‘ அஷியா ‘ என்றேன்.
‘ வாவ். அழகான இடம். துவக்கத்திலேயே ஏன் சொல்லவில்லை ? ‘

நான் விளக்கினேன். “ மக்கள் என்னை எங்கிருந்து வருகிறாய் என்று கேட்கும்போது நான் அஷியா என்பேன். அவர்கள் எப்போதும் என் குடும்பம் மிக வசதிபடைத்தது என்றே நினைக்கின்றனர். ஆனால் அஷியாவில் எல்லாவிதமான மக்களும் இருக்கின்றனர். என் குடும்பமும் அதில் ஒன்று. குறிப்பாக வசதியற்ற வகையில் சேர்ந்தது. என் தந்தை மருந்து கம்பெனியில் வேலைபார்த்தார் , அம்மா நூலக கண்காணிப்பாளர்.

எங்கள் வீடு சிறியது. பழுப்பு வண்ண கரோலா கார் ஒன்று உள்ளது. அதனால் யாராவது நான் எங்கிருந்து வருகிறேன் என்று கேட்டால் நான் எப்போதுமே ‘ கோப்க்கு அருகில் ‘ என்று விடுவேன். எனவே அவர்கள் என்னைப் பற்றிய முன்தீர்மானமான கருத்துக்களை ஏற்படுத்திக்கொள்ள மாட்டார்கள். ‘
‘ நண்பா நீயும் நானும் ஒரே மாதிரியாகத் தோன்றுகிறது.‘ என்றான் கித்தாரு. மேலும், ‘ என் முகவரி டென்னென் சோஃபு – உயர்மட்ட குடியிருப்பு – ஆனால் என் வீடு நகரத்தின் குப்பையான இடத்தில் இருக்கும். வீடும் குப்பையாகத்தான் இருக்கும். அதையெல்லாம் நாம் பெரிதுபடுத்தக் கூடாது- நீ பார்த்தால் என்ன இதுவா டேனென் சோஃபு ? . சகிக்கவில்லை.‘ என்று சொல்வாய். ஆனால் அதைப்பற்றி கவலைப் படுவதில் ஒரு பொருளுமில்லை.

அது வெறும் ஒரு முகவரி மட்டுமே. அதை நான் வேறுவிதமாக எதிர்கொள்வேன். கேட்பவர்களை நேராக முகத்தில் அடிப்பதுபோல் ‘ நான் டென் – னென் – சோஃபு விலிருந்து வருகிறேன். ‘ என்பேன். உங்களுக்கு அது மிகவும் பிடிக்குமா ? என்பது போல.
அவன் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது. அதன் பிறகு நாங்கள் நண்பர்களானோம்.

டோக்கியோவுக்கு வந்தவுடன் நான் ஏன் கான்ஸே பேச்சு வழக்கை சுத்தமாக விட்டேன் என்பற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. மேல்நிலை பள்ளியிலிருந்து தேர்ச்சியடையும் வரை உண்மையாகவே நான் ஒரு முறை கூட தரமான டோக்கியோ வழக்கில் பேசியதில்லை. ஆனால் டோக்கியோவில் முழுமையான ஜப்பானிய மொழியை சரளமாக பேச எனக்கு சரியாக ஒரு மாதமே போதுமானதாக இருந்தது.

இத்தனை விரைவாக என்னால் தகவமைத்துக் கொள்ள முடிந்தது எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. நான் ஒரு பச்சோந்தி என்பதை நானே உணர்ந்திருக்கவில்லை அல்லது எனது மொழித்தேர்ச்சி மற்றவர்களைக் காட்டிலும் மேம்பட்டதாக இருந்திருக்க வேண்டும். எப்படியிருப்பினும் நான் உண்மையில் ஒரு கான்ஸேகாரன் என்பதை யாரும் நம்பமாட்டார்கள்.
கான்ஸே பேச்சு வழக்கை நான் மாற்றிக் கொண்டதற்கு மற்றொரு காரணம் , நான் முற்றிலும் வேறொரு ஆளுமையாக மாற விரும்பியதுதான்.

கான்ஸேயிலிருந்து டோக்கியோவுக்கு கல்லூரி படிப்பிற்காக வந்த பிறகு புல்லட் ரயில் பயணம் முழுவதும் என்னுடைய பதினெட்டு வருட வாழ்க்கையையும் மீள்பார்வை செய்வதில் கழித்தேன். எனக்கு நிகழ்ந்தவையெல்லாவற்றையும் மிகுந்த மனஉளைச்சலாக உணர்ந்தேன். நான் அதிகப்படுத்திக் கூறவில்லை. அவற்றிலிருந்து எதையும் நினைவுகூர விரும்பவில்லை. அவை பரிதாபத்துக்குரியவை.

என் வாழ்க்கையைப் பற்றி நினைக்க நினைக்க எனக்கு என் மீதே வெறுப்பு வந்தது. அதனால் எனக்கு நல்ல நினைவுகளே இல்லை என்றில்லை, மிகச்சொற்பமாக இனிமையான அனுபவங்களும் இருக்கத்தான் செய்தன. ஆனால் அவற்றை சேர்த்துக் கொண்டாலும்கூட அவமானமும் வேதனையுமான சம்பவங்களே மிகுதியாக இருக்கும். நான் எப்படி வாழ்ந்து கொண்டிருந்தேன் எப்படி வாழ்க்கையை அணுகினேன் என்பதையெல்லாம் மிகவும் பாமரத்தனமாகவும், வருந்ததக்க வகையில் பொருளற்றதாகவும் இருந்தன. கற்பனை செய்யமுடியாத அளவுக்கு நடுத்தரவர்க்க குப்பை.. அவற்றை ஒன்றாகத் திரட்டி ஏதாவது ஒரு மேசை இழுப்பறையில் போட்டு மூடிவிட விரும்பினேன் அல்லது நெருப்பில் போட்டு கொளுத்தி , அவை எரிவதைக் காணவிரும்பினேன். ( அப்போது என்ன மாதிரியான புகை வெளிவரும் என்று தெரியவில்லை ) எது எப்படியிருந்தாலும் நான் எல்லாவற்றையும் விட்டொழித்து டோக்கியோவில் ஒரு புது வாழ்க்கையை , மாசுமருவற்று புது மனிதனாகத் தொடங்க விரும்பினேன்.

புதிய வாழ்க்கை புதிய சாத்தியங்களை முயன்று பார்க்க விரும்பினேன். கான்.ஸே பேச்சு வழக்கைத் ( அடையாளத்தையும் கூட ) நடைமுறையில் துறந்ததும் கூட அதை நிறைவேற்றிக்கொள்ளும் வழிமுறையே. ஏனெனில் இறுதி தேர்ந்தாய்வில் நாம் பேசும் மொழிதான் நாம் எவ்வகை மனிதர்கள் என்பதைக் கட்டமைக்கிறது. குறைந்தபட்சம் பதினெட்டு வயதில் எனக்கு அப்படித்தான் தோன்றியது.

‘ மனஉளைச்சலா ? எது மிகவும் மனஉளைச்சலைக் கொடுத்தது ? ‘
‘ நீயே எதையாவது கேள் ‘
‘ உன் இன மக்களுடன் நீ மகிழ்ச்சியாக இல்லையா ? ‘
‘ மகிழ்ச்சியாகத்தான் இருப்பேன். ஆனாலும் அது சங்கடமாகத்தான் இருக்கும். அவர்களோடு இருப்பதே மனஉளைவைக் கொடுக்கும்.‘

‘ நீ விசித்திரமானவன். இல்லையா ? ‘ என்றான் கித்தாரு. உனது இனமக்களுடன் இருப்பதில் உனக்கு என்ன சங்கடம்.? நான் எங்கள் இனத்தவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவழித்திருக்கிறேன்.‘
என்னால் உண்மையாகவே விளக்க முடியவில்லை. பழுப்புநிற கரோலா கார் இருப்பதால் என்ன குறைந்து விட்டது ?. எனக்கு புரியவில்லை. எங்கள் பகுதியில் சாலை குறுகலாக இருந்தது அதனால் என் பெற்றோர் வெறும் தோற்ற அழகிற்காக பணத்தை வீணடிப்பதை விரும்பவில்லை. அவ்வளவுதான்.

‘ என் பெற்றோர் நான் நன்றாகப் படிக்கவில்லை என்று நச்சரித்தனர். அது எனக்குப் பிடிக்காது. ஆனால் என்ன செய்யமுடியும் ? அது அவர்கள் கடமை. நாம் அதைப் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்‘ என்றான் கித்தாரு.

‘ நீ ரொம்ப ஜாலியான பேர்வழியில்லையா ? ‘
‘ உனக்கு தோழிகள் உண்டா ? ‘
‘ இப்போதைக்கு இல்லை ‘
‘ முன்னால் இருந்ததா ? ‘
‘ கொஞ்சநாள் முன்வரை ‘
‘ பிரிந்து விட்டீர்களா ? ’
‘ ஆம் ‘ என்றே.ன்.
‘ ஏன் பிரிந்தீர்கள் ? ‘
‘ அது பெரியகதை. இப்போது அதை ஞாபகப்படுத்த வேண்டாம் ‘
‘ அஷியாவைச் சேர்ந்த பெண்ணா ? ‘ என்றான் கித்தாரு.
‘ இல்லை அவள் அஷியாவைச் சேர்ந்தவளல்ல. ஷூக்குகாவா. அது அருகில்தான் இருக்கிறது ‘
‘ அவள் உன்னை எல்லாவற்றுக்கும் அனுமதித்தாளா ? ‘
நான் தலையை உதறிக் கொண்டேன். ‘ இல்லை. எல்லாவற்றுக்கும் அல்ல ‘

‘ அதனால்தான் பிரிந்துவிட்டாயா ? ‘
நான் யோசித்தேன். ‘ அதுவும் ஒரு காரணம்தான் ‘
‘ ஆனால் வாய்வழியாவது அனுமதித்தாளா ? ‘
‘ ஓரளவிற்கு ‘
‘ எது வரை ?“‘
‘அதைப்பற்றி பேச விரும்பவில்லை ‘ என்றேன்.
‘ இவைதான் நீ குறிப்பிட்ட ‘ மனஉளைச்சல் ‘ விஷயங்களா ?‘

‘ ம். ‘ என்றேன். நான் நினைவுப்படுத்த விரும்பாத வேறொரு விஷயம் கூட இருந்தது.
‘ நண்பா, சிக்கலான வாழ்க்கைதான் உன்னுடையது ‘ என்றான் கித்தாரு.

முதல்முறையாக கித்தாரு ‘ YESTERDAY ‘ பாடலை கேனத்தனமான வரிகளுடன் பாடியதை நான் கேட்டபோது அவன் டென் னென்சோஃபு வில் உள்ள அவனது வீட்டின்( ( அவனது விவரணை போல அத்தனை அசுத்தமான சுற்றுபுறமாகவோ , அசுத்தமான வீடாகவோ இல்லாமல், சாதாரண சுற்றுபுறத்தில் சாதாரண வீடாகவும் , பழையாயிருந்தாலும் , அஷியாவிலிருக்கும் எங்கள் வீட்டைவிட பெரியதாகவே எந்தவிதத்திலும் குறைசொல்லும்படியாக இல்லாமல் இருந்தது. கார்நிறுத்துமிடத்தில் நின்றிருந்த அடர்நீல கோல்ஃப் கார் கூட சமீபத்திய மாடல் என்பது தற்செயலாக தெரிந்தது. ) கித்தாரு எப்பொழுது வீட்டிற்கு வந்தாலும் எல்லாவற்றையும் உடனடியாக விசிறியெறிந்துவிட்டு குளிக்கச் சென்று விடுவான்.

குளியல் தொட்டிக்குள் இறங்கிவிட்டால் அங்கேயே இருப்பான். நான் ஒரு குட்டி ஸ்டூலை இழுத்துப் போட்டுக்கொண்டு பக்கத்திலிருக்கும் உடைமாற்றும் அறையில் உட்கார்ந்து கொண்டு இடையில் ஒரு அங்குலம் திறந்திருக்கும் கதவு வழியாக பேசிக்கொண்டிருப்பேன். அவனுடைய அம்மாவின் நச்சரிப்பிலிருந்து தப்பிக்க ஒரேவழி. அவளுடைய விசித்திர மகனைப் பற்றியும், படிப்பில் எந்தளவு அவன் கவனம் செலுத்தவேண்டும என்பது போன்ற புகார்கள்தான் அவற்றில் அதிகம் இருக்கும். அந்த சமயத்தில்தான் அவன் முட்டாள்தனமான வரிகளை எனக்காக ( அது எனக்காகத்தானா என்று உறுதியாக சொல்லமுடியாது ) பாடிக்காட்டுவான்.

‘ அந்த வரிகளில் அர்த்தமேயில்லை. அந்த YESTERDAY பாடலை நீ நக்கல் செய்வது போலத் தோன்றுகிறது. ‘“ என்பேன் அவனிடம்.
‘ ரொம்ப அறிவுக்கொழுந்து மாதிரி பேசாதே. நான் நக்கல் செய்யவில்லை., அப்படியே செய்தாலும் ஜான் முட்டாள்தனத்தையும் , வார்த்தை விளையாட்டையும் இரசிக்கக்கூடியவர் என்பது தெரியாதா ?
‘ ஆனால் YESTERDAY பாடலை எழுதி, இசை கோர்த்தது பால் அல்லவா ? ‘

‘ உனக்கு நிச்சயமாகத் தெரியுமா ? ‘
‘ நிச்சயமாக. ‘ என்று பிரகடனம் செய்தேன். பால்தான் அதை எழுதி கிட்டார் இசையுடன் ஒலிப்பதிவும் செய்தவர். அத்தோடு தந்திவாத்திய இசை இணைப்பாக பின்னாளில் சேர்க்கக்கப்பட்டது. ஆனால் மற்ற பீட்டில்ஸில் அது இல்லை. பீட்டில்ஸ் பாடலை அது மிகவும் மலினப்படுத்துவதாக கருதினர்.

‘ உண்மையாகவா ? எனக்கு அப்படிப்பட்ட விசேஷமான தகவல்கள் எல்லாம் தெரியாது ‘
‘ அதொன்றும் விசேஷமான தகவல் அல்ல.
எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான் ‘ என்றேன்.
‘ அதனாலென்ன. அவை வெறும் விவரங்கள்தான். ‘ கித்தாருவின் குரல் நீராவி பொதியலிலிருந்து அமைதியாக கூறியது- ‘ நான் என் வீட்டின் குளியலறையில் பாடுகிறேன். பாடல் பதிவு ஒன்றும் செய்யவில்லை. நான் எந்த காப்புரிமையையும் மீறவில்லை. அல்லது யாரையும் துன்புறுத்தவும் இல்லை. என் மீது புகார் கூற உனக்கு எந்த உரிமையுமில்லை. ‘

பிறகு அவன் குழுகுரல் வரிகளைப் பாட ஆரம்பித்துவிட்டான். பொதுவாக குளியலறையில் இருக்கும்போது ஒலிப்பது போல அவனது குரல் தெளிவாகவும் சப்தமாகவும் ஒலித்தது. குறிப்பாக உச்சஸ்தாயியில் சரியாகவே பாடினான். “ அவள் இருந்தாள் இங்கே / நேற்று வரை……………..‘ அல்லது அதுபோன்ற சிலவரிகள்.

அவன் மெதுவாக தண்ணீரை ஒரு பக்கவாத்தியம் போல் சிதறடித்தான். நான் அவனை குறுக்கீடு செய்திருக்கலாம் , அவனோடு பாடி அவனை உற்சாகப்படுத்தியிருக்கலாம். ஆனால் என்னால் அப்படி எதையும் செய்யமுடிந்ததில்லை. அங்கே உட்கார்ந்து கொண்டு , அவன் குளியல் தொட்டியில் மூழ்கியபடி இருக்கையில் ,பொழுதுபோக கண்ணாடி கதவுவழியாக பேசியபடி இருப்பது அத்தனை கேளிக்கையாக இருக்கவில்லை.

‘ எப்படி நீ இவ்வளவு நேரம் குளியல் தொட்டியில் இருக்கிறாய் ? நான் அப்படி அசையாமல் உட்கார முயன்று சோர்வடைந்திருக்கிறேன். உன் உடம்பு ஊறிப் போகவில்லையா ? என்று கேட்டேன்.
என்னால் குளியலில் இவ்வளவு நேரம் செலவழிக்க முடிந்ததில்லை. அசையாமல் உட்கார்ந்து ஊறிக்கொண்டிருக்க சலிப்பாக இருக்கும். ஒரு புத்தகத்தைப் படிக்கவோ , இசையை இரசிக்கவோ முடியாது , வெட்டியாகக் கிடப்பதைப் போல இருக்கும் ‘‘

‘ நான் குளியல்தொட்டியில் நீண்டநேரம் மூழ்கி கிடக்கையில் சகலவிதமான நல்ல யோசனைகளும் சரளமாக வரும் ‘ என்றான் கித்தாரு.

‘ அதாவது YESTERDAY ‘ பாடல்வரிகளைப் போலவா ? ‘
‘ ஆம். அதுவும் அவற்றில் ஒன்று ‘
‘ குளியல் தொட்டியில் நீண்ட நேரத்தை செலவழிப்பதற்கு பதில் நீ நுழைவுத் தேர்வுக்கு படிக்கலாமல்லவா ? ‘ என்று கேட்டேன்.

‘ ஜீஸஸ் , இப்படி காலை வாருகிறாயே ? என் அம்மாவும் இதே விஷயத்தைதான் சொல்வாள். இப்படியெல்லாம் சொல்லுமளவுக்கு உனக்கு வயதாகவில்லை அல்லவா ? அல்லது நீ தத்துவவாதியா ?‘

‘ ஆனால் நீ இரண்டு வருடங்களாக திணறிக்கொண்டிருக்கிறாய். உனக்கே அலுப்பாக இல்லையா ? ‘
‘ நிச்சயமாக. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்லூரியில் சேர்ந்து கலாட்டா செய்ய விரும்புகிறேன். அப்புறம் என் சிநேகிதியோடு சேர்ந்து உண்மையான டேட்டிங் போகவேண்டும் ‘
‘ அப்புறம் ஏன் கஷ்டப்பட்டு படிக்காமல் இருக்கிறாய். ? ‘

‘ ஆம். சரிதான். ‘ என்றான். மெல்லசொன்னான். ‘ அப்படி படிக்கமுடிந்தால் ஏற்கனவே செய்திருப்பேனே ‘

‘ கல்லூரி ஒரு அறுவை. உள்ளே நுழைந்தவுடன் நான் மிகவும் ஏமாந்துவிட்டேன். ஆனால் நுழையாவிட்டால் இன்னும் அறுவை ‘ என்றேன்.
‘ உண்மைதான். எனக்கு வேறுவழியில்லை ‘
‘ பின் நீ ஏன் படிக்க மாட்டேனென்கிறாய் ? ‘
‘ ஆர்வமின்மைதான் ‘ என்றான்.

‘ ஆர்வமா ? உன் சிநேகிதியோடு வெளியே போக வேண்டும் என்றெல்லாம் ஆர்வமில்லையா ? ‘
‘ அப்படித்தான் நினைக்கிறேன். பார் , அதைப் பற்றி சொன்னால் ரொம்ப நேரமாகும். விஷயம் என்னவென்றால் நான் எனக்குள்ளேயே இரண்டாக பிரிந்து இருக்கிறேன். புரியுதா ?

ஆரம்பப்பள்ளி காலத்திலிருந்தே கித்தாருவுடன் ஒன்றாக படித்த தோழி ஒருத்தி கித்தாருவுக்கு இருந்தாள். குழந்தைப்பருவ தோழி என்று சொல்லலாம். பள்ளியில் அவர்கள் ஒன்றாக ஒரே வகுப்பில் இருந்திருக்கின்றனர். ஆனால் மேல்நிலை படிப்பை முடித்தவுடன் கித்தாரு போல் இல்லாமல் அவள் ஸோஃபியா பல்கலை கழகத்தில் சேர்ந்துவிட்டாள். இப்போது அவள் பிரெஞ்சு இலக்கிய பாடத்தை முதன்மையாக எடுத்து படித்துக் கொண்டிருக்கிறாள் மேலும் டென்னிஸ் கிளப்பிலும் சேர்ந்திருக்கிறாள். அவளது புகைப்படத்தை காண்பித்திருக்கிறான், அசத்தலாக இருந்தாள். மிக அழகான உடல்வாகு , மிக உயிர்ப்பான முகம். ஆனால் அவர்கள் இருவரும் இப்பொழுதெல்லாம் அதிகம் சந்தித்துக் கொள்வதில்லை. அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ள வேண்டாம் என்று பேசி முடிவெடுத்திருந்தனர் . அப்போதுதான் கித்தாரு படிப்பில் முழுக்கவனம் செலுத்த முடியும். நுழைவுத்தேர்விலும் தேர்ச்சியடைய முடியும். அதை பரிந்துரைத்ததே கித்தாருதான். அவளும் சம்மதித்திருக்கிறாள்.

அதுதான் உன் விருப்பமென்றால் சரி என்றிருக்கிறாள். அவர்கள் தொலைபேசியில் அடிக்கடி பேசினர் ஆனால் வாரத்தில் ஒருமுறைதான் சந்தித்தனர் அவை கூட வழக்கமான ஊர்சுற்றல் இல்லாமல் ஒரு நேர்காணலைப் போல இருக்கும். ஒரு தேநீர் அருந்திவிட்டு இருவரும் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று பகிர்ந்து கொள்வார்கள். கைகளைப் பிடித்துக் கொண்டு ஒரு அவசர முத்தத்தைப் பரிமாறிக் கொள்வார்கள். இப்படித்தான் போய் கொண்டிருந்தது .

பழங்கால ஆசாமிகள்.
கித்தாருவை அழகன் என்று சொல்லமுடியாது ஆனால் இனிமையான தோற்றம் கெண்டவன். அவன் உயரமானவன் இல்லை ஆனால் கச்சிதமாக இருந்தான். அவனது சிகையும் உடையும் எளிமையாகவும் நவநாகரீகமாகவும் இருந்தன. அவன் வாயை திறக்காதவரை அவனை மிகவும் புத்திசாலியாகவும் நன்றாக வளர்க்கப்பட்ட நகரத்து இளைஞன் என்றும் நினைக்கத் தோன்றும். அவனும் அவன சிநேகிதியும் நல்ல இணையராக தோன்றினர். அவனது ஒரே குறைபாடு அவனது முகம், அது மிகவும் மென்மையானவன், நாசூக்கானவன், ஆளுமை குறைவானவன் அல்லது செறிவற்றவன் என்ற அபிப்பிராயத்தைத் தரும். ஆனால் அவன் வாயைத் திறந்தவுடன் இந்த ஒட்டுமொத்த நேர்மைறை விளைவுகள் எல்லாம் லேப்ரடார் ரிட்ரீவர் நாய் மணல் வீட்டைக் கிளறும்போது சிதறும் துகளைப்போல கலைந்துவிடும். கான்ஸே வட்டாரவழக்கில் சரளமாக , காதைத் துளைக்கும் கீச்சுக் குரலில் அவன் உச்சஸ்தாயியில் பேசுவதைக் கேட்பவர்கள் ஸ்தம்பித்து விடுவார்கள். அவனது தோற்றத்தின் பொருந்தாதத்தன்மை திணற வைக்கும். முதலில் எனக்கும் கூட அதுதான் சமாளிக்க சற்று கடினமானதாக இருந்தது.

“ ஹே, தனிமுரா சிநேகிதியில்லாமல் இருப்பது மிகவும் தனிமையாக இல்லையா ? கித்தாரு அடுத்தநாள் கேட்டான்.

‘ இல்லை என்று சொல்ல மாட்டேன் ‘ என்றேன்.
‘ அப்போ என் சிநேகிதியோடு வெளியே செல்வதைப் பற்றி என்ன நினைக்கிறாய் ? ‘
அவன் என்ன சொல்கிறான் என்று எனக்கு புரியவில்லை. “ என்ன சொல்கிறாய் ? அவளோடு வெளியே செல்வதா ? “

“ அவள் மிகச் சிறந்த பெண். அழகி, நேர்மையானவள், எல்லோரையும் போல் புத்திசாலி. நீ அவளோடு வெளியே செல். நீ வருத்தப்பட வேண்டியிருக்காது. அதற்கு நான் உத்திரவாதம் ‘
“ எனக்கு தெரியும் “ என்றேன். “ ஆனால் நான் ஏன் உன் சிநேகிதியோடு வெளியே போகவேண்டும். அது சரியாக இருக்காதே “

“ ஏன் என்றால் நீ நல்லவன். இல்லாவிட்டால் நான் பரிந்துரைக்கமாட்டேன் ““ என்றான் கித்தாரு. “
ஒன்றும் புரியவில்லை. (அவன் நம்புகிறார்போல ) நான் நல்லவனாக இருப்பதற்கும் அவனுடைய சிநேகிதியோடு வெளியே செல்வதற்கும் என்ன தொடர்பு என்று புரியவில்லை.

“ எரிக்காவும் நானும் இதுவரை எங்கள் மொத்தவாழ்க்கையையும் ஏறக்குறைய ஒன்றாக கழித்திருக்கிறோம். துவக்கத்திலிருந்தே பள்ளியில் ஒன்றாக இருந்திருக்கிறோம். நாங்கள் இயல்பாகவே இணையர்களாக இருந்திருக்கிறோம்
சுற்றியிருந்தவர்களும் , எங்கள் நண்பர்கள், எங்கள் பெற்றோர், எங்கள் ஆசிரியர்கள்,. அதை அங்கீகரித்திருந்தனர்.

கித்தாரு அதை நிரூபிப்பவன் போல கைகளை இறுக்கிக் கொண்டான்.
“ நாங்கள் இருவரும் ஒன்றாக கல்லூரிக்கு சென்றிருந்தால் மனமார்ந்த, மென்மையான வாழ்க்கையாக இருந்திருக்கும். ஆனால் நான் நுழைவு தேர்வில் இடறிப்போய் இப்போது இங்கிருக்கிறேன். ஏன் எதுக்கு என்றெல்லாம் தெரியவில்லை எல்லாமே மோசமாகிக்கொண்டே போகிறது. அதற்காக நான் யாரையும் குறைகூறவில்லை. எல்லாம் என் தவறு.


நான் மௌனமாக அவனை கவனித்துக்கொண்டிருந்தேன்.
‘ எனவே நான் ஒருவிதத்தில் இரண்டு கூறாகிவிட்டே.ன். “ என்றான் கித்தாரு. அவன் தன் கைகளை விடுவித்துக் கொண்டான்.
அவனையே இரண்டாக பிளந்து கொண்டானோ ? ‘ எப்படி ? “ என்று கேட்டேன்

‘அவன் தனது உள்ளங்கைகளைச் சிறிது நேரம் வெறித்தான். பிறகு சொன்னான். “ நான் என்ன சொல்கிறேன் என்றால் என்னுடைய ஒரு பகுதி துயரத்தில் இருக்கிறது புரிகிறதா ? அதாவது நான் எரிச்சலூட்டும் பயிற்சி வகுப்புக்குச் சென்று தலைவலிப்பிடித்த நுழைவுத் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கிறேன் எரிக்காவோ கல்லூரியில் பந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள்.

டென்னிஸ் விளையாடிக்கொண்டே , எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு புது நண்பர்கள் கிடைத்திருக்கலாம், எனக்குத் தெரிந்தவரை அவர்களோடு அநேகமாக டேட்டிங் போய் கொண்டிருக்கலாம் எனக்குத் தெரியும். அதையெல்லாம் நினைக்கையில் நான் பின்தங்கிவிட்டது போல் உணர்கிறேன். என் மனம் பனிமூட்டத்தில் உள்ளது நான் என்ன சொல்/கிறேன் என்று உனக்குப் புரிகிறதா ?

“ அப்படித்தான் எண்ணுகிறேன். “ என்றேன்.
“ ஆனால் என்னுடைய இன்னொரு பகுதி எப்படி இருக்கிறது தெரியுமா ?,,,,,,,,,,,,,,,,,,,நிம்மதியாக ? இதுபோலவே தொடர்ந்து இருந்தால் எந்த கஷ்டமும் இல்லாமல் நாங்கள் ஒரு அற்புதமான ஜோடியாக வாழ்க்கையில் பயணிக்கலாம். என்ன ஆகிவிடும் அதனால் ? அதுதான எங்களுக்கு இருக்கும் வாய்ப்பு .அப்படித்தான் நான் நினைக்கிறேன். உனக்குப் புரிகிறதா ? “

“ ஆம் ஆனால் இல்லை “ என்றேன்.
“அதாவது நாங்கள் கல்லூரியில் படித்துமுடித்து கல்யாணம் செய்து கொண்டு, அற்புதமான ஜோடிகளாக எல்லோரும் மகிழும்படி இரண்டு பிள்ளைகள் பெற்றுகொண்டு அவர்களை டெனென்சோஃபுவில் உள்ள நல்ல துவக்கப் பள்ளியில் சேர்த்து, ஞாயிறு கிழமைகளில் தமா ஆற்றங்கரைக்குச் சென்று ஓ ப்ளா டா ஓ ப்ளா……… டி …அந்த மாதிரி வாழ்க்கை அலுப்பூட்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் வாழ்க்கை அத்தனை எளிதாக , அத்தனை சந்தோஷமானதாக இருக்குமா என ஆச்சரியமாக இருக்கிறது. அதைவிட நாங்கள் இருவரும் பிரிந்து அவரவர் வழியில் கொஞ்சம் நேரம் போகலாமே…..பிறகு உண்மையிலேயே இருவரும் பிரிந்து இருக்கவே முடியாது என்று நினைத்தால் மீண்டும் சேரலாம்“

“ ஆக விஷயங்கள் எளிதாகவும், சுமுகமாகவும் இருப்பதே ஒரு பிரச்சனை என்கிறாய் அப்படித்தானே ? “
“ ஆம். அதைப் பொறுத்துதான் பிரச்சனையே “
விஷயங்கள் எளிதாகவும் சுமுகமாகவும் இருப்பதில் என்ன தவறு என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் அதைப்பற்றி யோசிப்பது மிகவும் குழப்பமாக இருந்ததால் அதை கைவிட்டேன். “ ஆனால் உன் சிநேகிதியோடு நான் ஏன் வெளியே செல்லவேண்டும் ? “ என்று கேட்டேன்

“ அவள் வேறு ஆண்களோடு செல்வதைக் காட்டிலும் உன்னோடு செல்வது நல்லது என்று நினைத்தேன். ஏனெனில் உன்னை நான் அறிவேன். மேலும் நீ என்ன நடந்தது என்ற தகவலை எனக்கு அவ்வப்போது சொல்லமுடியும் “

எரிக்காவை சந்திக்க விரும்பியதால் அதற்கு நான் ஒப்புக் கொண்டாலும் இந்த யோசனை சரிபட்டுவரும் என்று எனக்குத் தோன்றவில்லை. மேலும் அவளைப்போன்ற அழகான பெண் எதற்கு கித்தாருபோன்ற வினோதமானவனுடன் பழக விரும்புகிறாள் என்று அறிய விரும்பினேன். புதிய நண்பர்களிடையே இருப்பது எனக்கு எப்போதுமே சங்கோஜமாக இருந்தாலும் ஆர்வத்துக்கு குறைச்சலில்லை.

“ அவளோடு எந்தளவுக்குப் பழகியிருக்கிறாய் ? “
“ நீ உடலுறவைச் சொல்கிறாயா ? “
“ ம். எல்லாவற்றையும் முயன்றுவிட்டாயா ? “
கித்தாரு தலையை ஆட்டினான். “ என்னால் அது முடியவில்லை. அவளை குழந்தையிலிருந்தே தெரியும், புதிதாக தெரிந்து கொள்வதைப் போல் ஆடைகளைக் கழற்றி, அவளை தழுவி, கொஞ்சி, இதெல்லாம் ஒருவிதமான சங்கடம், இல்லையா ? “ அதுவே வேறு ஒரு பெண்ணாக இருந்தால் எனக்கு இந்தப் பிரச்சனை இருந்திருக்காது. ஆனால் அவளுடைய உள்ளைடையைத் தொடுவதை நினைப்பதே – ஏனென்று தெரியவில்லை – “

தவறாகத் “ தோன்றுகிறது. “புரிகிறதா ? “
எனக்குப் புரியவில்லை.
“ சொல்லப்போனால் நான் அவளது கையைப் பிடித்துக்கொண்டு முத்தம் கொடுத்திருக்கிறேன். ஆடைகளினூடே அவளது மார்பைத் தொட்டிருக்கிறேன். ஆனால் அதெல்லாம் எங்களை நாங்களே ஏமாற்றிக் கொள்வதைப் போல , விளையாடுவதைப் போல இருக்கும் , புரிகிறதா? ஏதோ சிறிது நாங்கள் முயற்ச்சித்தால்கூட அதற்கு மேல் முன்னேறுவதற்கான எந்த அறிகுறியும் இருக்காது. “

“ அறிகுறிகளுக்காக காத்திருப்பதைவிட எதையாவது செய்து நீதான் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கவேண்டும். இல்லையா ? “ பாலுணர்வு வேட்கை என்று அதைத்தானே சொல்கிறார்கள் ?
“ இல்லை, எங்கள் விஷயத்தில் அப்படி நடக்கவில்லை. அதை என்னால் விளக்கிச் சொல்லமுடியவில்லை.“ என்றான் கித்தாரு. “ உனக்கு எழுச்சி வரும்போது நீ நிஜமான ஒரு பெண்ணை கற்பனை செய்து கொள்கிறாய் இல்லையா ? “

“ அப்படித்தான் செய்வேன் “ என்றேன்.
“ ஆனால் என்னால் எரிக்காவை கற்பனை செய்யமுடியாது . அப்படி செய்வது ஏதோ தவறு போல் தோன்றும் , புரிகிறதா ? எனவே நான் வேறு யாராவது ஒரு பெண்ணை நினைத்துக் கொள்வேன். நிஜத்தில் அந்தளவுக்குப் பிடிக்காத வேறு யாரையாவது. இதற்கு என்ன சொல்கிறாய் ? “
நான் இதைப் பற்றி யோசித்தேன் ஆனால் எந்தத் தீர்மானத்திற்கும் வர இயலவில்லை. அடுத்தவர்களின் சுயமைதுன பழக்கம் எனக்கு அப்பாற்பட்டது.

என்னைப் பற்றியே என்னால் புரிந்து கொள்ளமுடியாத ஆழமான விஷயங்கள் உள்ளன.
“ எப்படியாவது நாம் முதலில் ஒன்றாக சந்திப்போம். நாம் மூவரும். “ என்றான் கித்தாரு. “ பிறகு இதைப் பற்றி யோசிப்போம். “

நாங்கள் மூவரும் , நான், கித்தாரு, அவனுடைய சிநேகிதி , அவளுடைய முழுப்பெயர் எரிக்கா குரித்தாணி. டெனென்ச்சொஃபுவின் ரயில்நிலையத்தின் அருகில் உள்ள ஒரு காபி ஷாப்பில் ஞாயிறு மதியம் சந்தித்தோம். அவள் ஏறக்குறைய கித்தாரு அளவிற்கு உயரமாக இருந்தாள். அழகான பழுப்பு நிறத்தில் இருந்தாள். சிறிய கைவைத்த இஸ்த்திரி போட்ட வெள்ளை மேல்சட்டையும், அடர்நீல குட்டைப்பாவாடையும் அணிந்திருந்தாள்.

மதிக்கத்தகுந்த உயர்குடி கல்லூரி பெண்ணின் பரிபூரண உதாரணமாக இருந்தாள். புகைப்படத்தில் இருந்ததைப்போலவே கவர்ச்சிகரமாக இருந்தாள். ஆனால் அவளை நேரில் பார்க்கும்போது அவளது அழகைவிடவும் எவ்வித பிரயாசையுமின்றி அவளிடமிருந்து ஒளிவீசிய உயிராற்றல்தான் என்னை மிகவும் கவர்ந்தது. அவள் கித்தாருவுக்கு நேரெதிராக இருந்தாள். அவளோடு ஒப்பிடுகையில் அவன் கொஞ்சம் ஒளி குன்றியவனாகத் தோன்றினான்.
கித்தாரு எங்களை அறிமுகப் படுத்தினான். எரிக்கா என்னை நோக்கி , “ அக்கி – குன்னுக்கு ஒரு நண்பன் இருப்பது பற்றி மகிழ்ச்சி. “ என்றாள் எரிக்கா குர்த்தாணி என்னிடம். கித்தாருவின் முதல்பெயர் அகியோஷி. இந்த உலகத்திலேயே அவள் ஒருத்திதான் அவனை அக்கி – குன் என்று அழைப்பவள்.

“ ரொம்ப மிகைப்படுத்தாதே. எனக்கு ஒரு டன் நண்பர்கள் இருக்கிறார்கள். “ என்றான் கித்தாரு.
“ இல்லை. உனக்கு கிடையாது. “ என்றாள் எரிக்கா. உன்னை மாதிரி ஆட்களுக்கு நண்பர்கள் இருக்கவே முடியாது. நீ டோக்கியோவில் பிறந்தவன் , இருந்தும் கான்ஸே பேச்சுவழக்கில் பேசுகிறாய். ஒவ்வொரு முறை நீ வாயைத் திறக்கும்போதும் ஹான்ஷின் டைகர்களேயோ ஷோகி படங்களை நினைத்தோ எரிச்சல் வரும். உன்னை மாதிரி ஒரு விசித்திரமான ஆளுக்கு எப்படி சாதாரணமானவர்களுடன் கலந்து பழகமுடியும் ? “

“ சரி அப்படி நீ சொன்னால் , இவன் கூட ஒரு விசித்திர மனிதன்தான். “ என்று கித்தாரு என்னைக் காண்பித்து சொன்னான். “ இவன் அஷியாவிலிருந்து வருகிறான். ஆனால் டோக்கியோ வழக்கில்தான் பேசுவான். “

“ அது ரொம்ப சாதாரணம் “ என்றாள் எரிக்கா. ‘ டோக்கியோவில் இருப்பவன் கான்ஸே வழக்கில் பேசுவதைக் காட்டிலும் இது சாதாரணம்தான் . “
“ நிறுத்து. இப்போது அது பண்பாட்டு வேறுபாடு.“ என்றான் கித்தாரு. “ பண்பாடுங்கள் எல்லாம் சமமானது. தெரியுமா. டோக்கியோ பேச்சுவழக்கு கான்ஸேயை விட எந்தவிதத்திலும் சிறந்தது இல்லை “

“ ஒருவேளை சமமாக இருக்கலாம், ஆனால் மேஜி உரிமை மீட்புக்குப் பிறகு டோக்கியோ மக்கள் பேசுவதுதான் நிலையான ஜப்பானிய மொழியாக உள்ளது. ப்ரான்னி மற்றும் சூயி யை யாராவது கான்ஸே வழக்கில் மொழிபெயர்த்திருக்கிறார்களா என்று கேட்கிறேன். “ என்று அழுத்திச் சொன்னாள் எரிக்கா.

“ அப்படி செய்தால் நான் அதை நிச்சயமாக வாங்குவேன் “ என்றான் கித்தாரு.
நான் கூட வாங்குவேன் என்றுதான் தோன்றியது ஆனால் அமைதி காத்தேன். என் வேலையைக் கவனிப்பதுதான் எனக்கு நல்லது.
“ எப்படியிருந்தாலும் அது பொதுவான அறிவுதான். “ என்றாள். “ நீ குறுகிய புத்தியுடையவன் அகி – குன் மேலும் பாரபட்சமானவன். “
“ குறுகிய புத்தி, பாரபட்சம் என்று எதைச் சொல்கிறாய் நீ ? என்னைப் பொறுத்தவரை பண்பாட்டு வேறுபாடுதான் மிக பயங்கரமான பாரபட்சம் “

அந்த விவாதத்தில் மேலும் ஆழமாகச் செல்லாமல் புத்திசாலித்தனமாக பேச்சை மாற்றினாள் எரிக்கா குரித்தாணி.
“ எங்கள் டென்னிஸ் குழுவில் அஷியாவிலிருந்து வந்த பெண் இருக்கிறாள். “ என்றாள் என்னை நோக்கி. “ எய்கோ சகுராய். உனக்கு அவளை தெரிந்திருக்க வாய்ப்பிருக்கா ? “

“ தெரியும். “ என்றேன். எய்கோ சகுராய் ஒல்லியான உயரமான, பெண். அவளுடைய பெற்றோர் பெரிய கோல்ஃப் பயிற்சி பள்ளியை நடத்திக் கொண்டிருந்தனர். விரைப்பான, தட்டையான மார்பும் கேலியாகத் தோன்றும் மூக்கும் கொண்டவள், அப்படியொன்றும் பெரிய அழகியுமல்ல. டென்னிஸ்ஸில் மட்டும்தான் அவள் சிறப்பாக இருந்தாள். அவளை மறுபடி பார்க்கவே மாட்டேன் என்று எண்ணியிருந்தால், அது விரைவில் நடந்துவிடும் போலிருக்கிறது .
“ இவன் மிகவும் நல்லவன், இதுவரை ஒரு தோழிகூட இல்லையாம். “ கித்தாரு எரிக்காவிடம் சொன்னான். அவன் என்னைப்பற்றிதான் கூறினான். “ பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கின்றான்.

நல்ல பழக்கவழக்கங்கள் கொண்டவன். எல்லா விஷயங்களும் தெரிந்து வைத்திருக்கிறான். கடினமான புத்தகங்களை வாசிக்கிறான். பார்த்தாலே தெரியும் மிகவும் ஒழுக்கமானவன், எந்த பயங்கர வியாதியும் கிடையாது. மிகத் தகுதியான இளைஞன் என்று சொல்வேன். “

“ அப்படியா “ என்றாள் எரிக்கா. “ எங்கள் கிளப்பில் அருமையான சில புதிய உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இவனை அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சியடைவேன்.“
“ வேண்டாம். நான் அதைச் சொல்லவில்லை. நீ இவனோடு வெளியே செல்வாயா ? நான் இன்னும் கல்லூரி சேரவில்லை எனவே முன்பு போல் உன்னோடு வெளியே வரமுடியாது. எனக்கு பதிலாக இவனோடு நீ வெளியே போகலாம் . அதனால் நான் கவலைபடாமல் இருக்கலாம் “

“ நீ கவலைபடாமல் இருக்கலாமா ? என்ன சொல்கிறாய் ? “ என்றாள் எரிக்கா.
“ நான் என்ன சொல்கிறேன் என்றால் நான் பார்க்கவே பார்ககாத வேறு பையன்களோடு நீ போவதை விட நான் நன்றாக அறிந்த இவனோடு நீ வெளியே சென்றால் எனக்கு பிரச்சனையில்லை.
எரிக்கா தான் காண்பதை நம்பமுடியாதவாறு கித்தாருவை வெறித்தாள். இறுதியாக அவள் பேசினாள், “ தனிமூரா – குன்னுடன் நான் வெளியே சென்றால் உனக்குப் பரவாயில்லை என்கிறாய். ஏனெனில் அவன் உண்மையிலேயே நல்ல பையன். நீ நிஜமாகவே அக்கறையுடன்தான் இந்த யோசனையைச் சொல்கிறாயா ? “

“ ஹே இது ஒன்றும் மோசமான யோசனையில்லை. அல்லவா ? அல்லது ஏற்கனவே நீ வேறு ஆளுடன் வெளியே போக ஆரம்பித்து விட்டாயா ? “
“ இல்லை. யாருடனும் போகவில்லை. “ எரிக்கா அமைதியான குரலில் சொன்னாள்.
“ பின் ஏன் நீ இவனோடு போக மறுக்கிறாய் ? அது ஒரு விதமான பண்பாட்டு பரிமாற்றமாக இருக்கலாம். “
“ பண்பாட்டு பரிமாற்றம் “ எரிக்கா திரும்பக் கூறினாள். என்னைப் பார்த்தாள்.
நான் சொல்லவேண்டியது எதுவும் இருப்பதுபோல தெரியவில்லை எனவே அமைதியாக இருந்தேன். காபி கரண்டியை கையில் எடுத்து அதன் அமைப்பை ஆராய்ந்து கொண்டிருந்தேன். எகிப்திய கோபுரத்தின் கலைப்பொருளை ஆராயும் அருங்காட்சியக காப்பாளர் போல.

“ பண்பாட்டு பரிமாற்றம் ? “ அப்படி என்றால் என்ன அர்த்தம் ? “ என்று எரிக்கா கித்தாருவைப் பார்த்துக் கேட்டாள் .
“ அதாவது ஒரு விஷயத்தை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கும்போது அது நமக்கு மோசமாக இருக்காது. “
“ ஒ இதுதான் பண்பாட்டு பரிமாற்றம் பற்றிய உனது கருத்தா ? “
“ ஆம், நான் சொல்லவருவது ,,,,,,,,,,,,,,,“
“ சரி , அக்கி குன் நீ விரும்பினால் செய்கிறேன். பண்பாட்டு பரிமாற்றமல்லவா . செய்கிறேன். “ என்று எரிக்கா குர்த்தாணி உறுதியான குரலில் சொன்னாள். அருகில் ஏதாவது பென்சில் இருந்தால்கூட அதை எடுத்து இரண்டாக உடைத்துப் போட்டிருப்பேன். நான்.

அவள் தேநீரை ஒரு மிடறு விழுங்கிவிட்டு கோப்பையை மீண்டும் தட்டில் வைத்துவிட்டு புன்னகை புரிந்தாள்.
“ அக்கி குன் சொல்லிவிட்டதால் நாம் டேட் போகலாம். வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

உனக்கு எப்போது ஓய்வு கிடைக்கும் ?
என்னால் பேசமுடியவில்லை. கடினமான நேரங்களில் சரியான சொற்களை உபயோகிக்க முடியாமல் போவது என்னுடைய பல பிரச்சனைகளுள் ஒன்று. இடத்தையும் மொழியையும் மாற்றுவதாலேயே அடிப்படை பிரச்சனைகள் தீர்ந்து விடுவதில்லை.
எரிக்கா அவளது கைப்பையிலிருந்து சிவப்பு நிற லெதர் நோட்டை திறந்து அவளது அட்டவனையை சோதித்தாள் “ இந்த சனிக்கிழமை சரிப்படுமா ?. “ என்று கேட்டாள்.

“ எனக்கு எந்தத் திட்டமும் இல்லை “ என்றேன்.
“ சனிக்கிழமை சரி. எங்கே போகலாம் ? “
“ அவனுக்கு திரைப்படங்கள் பிடிக்கும் “ என்றான் கித்தாரு. “ என்றாவது ஒரு நாள் திரைக்கதை எழுதுவதுதான் அவனுடைய கனவு , ஒரு திரைக்கதை பயிலரங்கில் சேர்ந்திருக்கிறான். “
“ அப்படி என்றால் திரைப்படத்திற்கே போகலாம். என்ன படம் என்று உன் முடிவுக்கே விடுகிறேன் தனிமூரா குன். எனக்கு பேய்படங்கள் பிடிக்காது. அதைத்தவிர எதுவாயிருந்தாலும் நல்லது.“

“ இவள் உண்மையிலேயே ஒரு பயந்தாங்கொள்ளி, என்றான் கித்தாரு என்னிடம். “ குழந்தைகளாக இருந்தபோது நாங்கள் கோராசென்னில் இருக்கும் பேய் வீட்டிற்கு சென்றிருக்கிறோம். அவள் என்னுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு,,,,,,“ என்ற போது
அவனை இடைமறித்து எரிக்கா “ படம் முடிந்தவுடன் நல்ல சாப்பாடு சாப்பிடலாம் ஒன்றாக “ என்றாள் . அவளது குறிப்பேட்டிலிருந்து ஒரு தாளைக் கிழித்து அதில் அவளது எண்ணை எழுதி என்னிடம் கொடுத்தாள்.

‘‘ இடத்தையும் நேரத்தையும் முடிவு செய்துவிட்டு என்னை கூப்பிடுகிறாயா ? “
என்னிடம் தொலைபேசி கிடையாது- ( அது செல்போன்கள் என்னவென்றே தெரியாத காலம் ) எனவே கித்தாருவும் நானும் வேலைசெய்யும் காபி ஷாப்பின் எண்ணை அவளிடம் தந்தேன். எனது கைகடிகாரத்தைப் பார்வையிட்டேன்.
“ மன்னிக்கவும் நான் கிளம்பவேண்டும் “ என்று என்னால் முடிந்தவரை இயல்பாக கூற முயன்றேன். “ நாளைக்குள் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது.“

“ அதை ஒத்திப் போடமுடியாதா? “ என்றான் கித்தாரு.
“ இப்போதுதானே வந்தோம். இன்னும் கொஞ்சநேரம் சில விஷயங்கள் பேசலாமே. இங்கே வலது கோடியில் ஒரு பெரிய நூடுல்ஸ் கடை உள்ளது. “
‘எரிக்கா எந்த அபிப்பிராயமும் சொல்லவில்லை. நான் எனது காபிக்கான தொகையை மேசைமேல் வைத்துவிட்டு எழுந்தேன். “ முக்கியமான அறிக்கை “ அதை என்னால் தவிர்க்கமுடியாது “ என்றேன். உண்மையில் அதொன்றும் அவ்வளவு முக்கியமில்லைதான்.

“ நான் நாளை அல்லது நாளை மறுநாள் உன்னை அழைக்கிறேன். “ என்றேன் எரிக்காவிடம்.
மிக அழகான புன்னகை ஒன்று இதழ்களில் அரும்ப. “ நான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன். “ என்றாள். அந்தப் புன்னகை நம்பமுடியாத அளவிற்கு இனிமையாக இருந்தது .

காபி ஷாப்பை விட்டு வெளியேறி இரயில் நிலையத்தை நோக்கி நடந்து போது என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறேன் என்று வியப்பாக இருந்தது. எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்ட பிறகு இப்படியெல்லாம் ஆகிவிட்டதே என்று வருந்துவது என்னுடைய தீர்க்கமுடியாத பிரச்சனைகளில் ஒன்று.
அந்தச் சனிக்கிழமை எரிக்காவும் நானும் ஷிபுயாவில் சந்தித்து ‘ நியூயார்க்கில் படமாக்கப்பட்டிருந்த வுடி ஆலன் படத்திற்கு சென்றோம்.

அவளுக்கு வுடிஆலன் பிடிக்கும் என்று எப்படியோ ஊகித்திருந்தேன்.

கித்தாரு நிச்சயமாக வுடிஆலன் படத்திற்கு கூட்டிபோயிருக்க மாட்டான் , அதிர்ஷ்டவசமாக அது ஒரு நல்லபடம். தியேட்டரை விட்டு வெளியே வரும்போது நாங்கள் நல்ல மனநிலையில் இருந்தோம்.
நாங்கள் சிறிது நேரம் அரையிருளான தெருக்களில் சுற்றி திரிந்தோம். பிறகு சகுராகாகோவில் ஒரு சிறிய இத்தாலியன் கடைக்குச் சென்று பிஸ்ஸாவும் சியாந்தியும் சாப்பிட்டோம். அது எளிய, நியாய விலை உணவகம். சன்னமான விளக்குகள் . மேசை மீது மெழுகுவர்த்திகள் , ( அந்நாட்களில் அநேக இத்தாலிய உணவகங்களிலும் மேசை மீது மெழுகுவர்த்திகளும், கட்டம்போட்ட மென்சனல் மேசைவிரிப்பும் இருந்தன. ) நாங்கள் எல்லா விஷயங்களையும் பேசினோம்.

இரண்டு கல்லூரி இரண்டாமாண்டு மாணவர்கள் முதல் டேட்டில் என்ன மாதிரி பேசுவார்கள் என்று நினைப்பீர்களோ அந்த மாதிரியான உரையாடல். அப்போது நாங்கள் பார்த்துவிட்டு வந்த படம், எங்கள் கல்லூரி வாழ்க்கை, பழக்கவழக்கங்கள். நான் எதிர்பார்த்ததைவிட எங்கள் பேச்சு இரசிக்கத்தக்கதாக இருந்தது.அவள் இரண்டு முறை சத்தமாக சிரிக்கக் கூட செய்தாள். நானே தம்பட்டம் அடித்துக் கொள்ள விரும்பவில்லை ஆனால் பெண்களை சிரிக்க வைப்பதில் எனக்குத் தனித்திறமை இருப்பதாகத்தான் தோன்றியது.

“ அகி குன் சொன்னான் நீ உனது பள்ளி தோழியிடமிருந்து சமீபத்தில்தான் பிரிந்து விட்டாயாமே ? “ என்று கேட்டாள் எரிக்கா
“ ம். நாங்கள் மூன்று வருடம் ஒன்றாக சுற்றினோம். ஆனால் துரதிர்ஷடவசமாக ஒத்து வரவில்லை.“
“ செக்ஸ் விஷயத்தில்தான உங்களுக்குள் ஒத்துவரவில்லை என்று அகிகுன் சொன்னான். அவள்……….. நீ………… எப்படி சொல்வது ? அதாவது நீ விரும்பிய படி நடந்துகொள்ளவில்லை என்று ? “
“ அதுவும் ஒரு காரணம் ஆனால் அது மட்டுமே இல்லை. நான் உண்மையிலேயே காதலித்திருந்தால் பொறுமையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நான் உண்மையிலேயே அவளை காதலிக்கவில்லை.“
எரிக்கா குரித்தாணி தலையை ஆட்டினாள்.

“ எல்லா விஷயமும் நடந்திருந்தாலுங்கூட நாங்கள் பிரிந்துதான் இருப்போம். “ என்றேன். அது டோக்கியோவிற்கு நான் இடம்பெயர்ந்த பிறகு வெளிப்படையாகவே அதிகமாகத் துவங்கியது. எங்களுக்குள் இடைவெளி ஏற்பட்டது. எதுவும் வேலைக்காகவில்லை. எல்லாமே தவிர்க்கமுடியாதவை. என்று நினைக்கிறேன்.
“ அது உனக்கு கஷ்டமாக இருந்ததா ? “ என்று கேட்டாள்.
“ என்ன கஷ்டம் ? “

“ நட்பாக இருந்துவிட்டு திடீரென்று அவரவர் வழியில் போனது “

“ சில நேரங்களில்.“ என்று உண்மையான பதிலைச் சொன்னேன்.

“ ஆனால் இது போன்ற கடினமான, தனிமை நிரம்பிய அனுபவங்கள் எல்லாமே நம்முடைய இளவயதில் அவசியமானதுதான். இவையெல்லாம் நாம் வளர்வதற்கான வழிமுறைகளின் ஒரு பகுதி இல்லையா ? “

“ அப்படியா நினைக்கிறாய் ? “
“ கடுமையான குளிர்காலத்தை தாங்கும் மரங்கள் வலிமையடையும் போது உள்ளே இருக்கும் வளர்ச்சி வளையம் கெட்டியாகிறது “
எனக்குள்ளே இருக்கும் வளர்ச்சி வளையத்தை கற்பனை செய்ய முயன்றேன். ஆனால் மரத்தின் வளையம் போல் இருக்கும் பௌம்குஹன் கேக் துண்டைத்தான் என்னால் கற்பனை செய்ய முடிந்தது.
“ இதுபோன்ற அனுபவங்கள் வாழ்க்கையில் தேவையானதுதான் என்பதை ஒப்புக் கொள்கிறேன். “ என்றேன். “ “ என்றாவது ஒருநாள் இவையெல்லாம் முடிவுக்கு வரும் என்று தெரிந்திருப்பதும் அதைவிட சிறந்தது “
அவள் புன்னகைத்தாள். “ கவலைப்படாதே . நீ விரைவில் நல்ல தோழியை சந்திப்பாய்.“
“ அப்படித்தான் நம்புகிறேன். “ என்றேன்.
எரிக்கா குரித்தாணி சிறிது நேரம் ஏதோ குழப்பத்தில் இருந்தாள். அந்த நேரத்தில் நான் பிஸாவை சாப்பிட்டு முடித்தேன்.

“ தனிமூரா குன், சில விஷயங்கள் குறித்து உன்னிடம் ஆலோசனைகள் கேட்கவேண்டும் , கேட்கலாமா ? “
“ நிச்சயம்.“ என்றேன். ஹா …. என்னிடம் என்ன இருக்கிறது ? சற்று முன்பு என்னை சந்தித்தவர்கள் கூட என்னிடம் முக்கியமான விஷயங்களைப் பற்றி அறிவுரை கேட்கிறார்கள். நான் அடிக்கடி சமாளிக்க வேண்டிய பிரச்சனைகளுள் இதுவும் ஒன்று. மேலும் எரிக்கா குரித்தாணி கேட்கபோகும் அறிவுரை மகிழ்ச்சியான விஷயமாயிருக்காது என்று வெகுநிச்சயமாகத் தெரியும்.

“ எனக்கு குழப்பமாயிருக்கிறது. “ என்று துவங்கினாள். தேடலில் இருக்கும் பூனையின் கண்களைப்போல் அவளது கண்கள் முன்னும் பின்னும் நகர்ந்தன.

“ நிச்சயம். உனக்கு இதைப்பற்றி ஏற்கனவே தெரிந்திருக்கும், அகி – குன் இரண்டு வருடங்களாக நுழைவு தேர்வுக்கு தயார் செய்து கொண்டிருந்தாலும் குறைவாகத்தான் படிக்கிறான். தேர்வுக்கான பயிற்சி வகுப்பையும் பலசமயம் அவன் புறக்கணிக்கிறான். எனவே அடுத்த வருடமும் அவன் நிச்சயம் தோல்வியடைந்துவிடுவான் என்று எனக்குத் தெரியும். தரம் குறைந்த பள்ளிகளில் இடம் தேடினால் அவனுக்கு ஏதாவது ஒன்றில் கிடைக்கலாம். ஆனால் அவன் மனதில் வஸீதாவைக் குறிவைத்திருக்கிறான். வஸீதா இல்லாவிட்டால் எதுவுமில்லை என்று முடிவு செய்திருக்கிறான். இப்படி யோசிப்பதே அர்த்தமில்லாதது என்று தோன்றுகிறது.

ஆனால் அவன் நான் சொல்வதையோ , அவன் பெற்றோர் சொல்வதையோ கேட்க மாட்டான். அது ஒரு விதமான வெறி போல் ஆகிவிட்டது. ஆனால் உண்மையிலேயே அதை அடையவேண்டுமென்றால் கடுமையாக உழைத்து படிக்கவேண்டும். அப்போதுதான் வஸீதா நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடையமுடியும். இல்லாவிட்டால் முடியாது,
“ அவன் ஏன் கஷ்டப்பட்டு படிப்பதில்லை ? “
“ அவன் அதிர்ஷ்டம் இருந்தால் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்று திடமாக நம்புகிறான். படிப்பதெல்லாம் ஒரு நேரவிரயம், அவனுடைய வாழ்க்கையின் விரயம் என்று நினைக்கிறான். இப்படி யோசிப்பதையே என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.“ என்றாள் எரிக்கா.

அது ஒருவிதமான புரிதல் என்று நினைத்தேன். ஆனால் என்னுடைய கருத்து எதையும் அவளிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.
எரிக்கா குரித்தாணி பெருமூச்சு விட்டு தொடர்ந்தாள். “ தொடக்கப் பள்ளியில் அவன் நிஜமாகவே நன்றாகப் படித்தான். எப்போதும் வகுப்பில் முதல் இடத்தில் இருப்பான். ஆனால் இடைநிலை வகுப்புக்கு வந்தவுடன் அவனது தரவரிசை சரியத்துவங்ககியது. அவன் ஒருவிதத்தில் குழந்தை மேதை. தினமும் விழுந்து விழுந்து படிப்பது அவனது ஆளுமைக்கு ஒத்துவராத விஷயம் . அதற்கு பதில் அவன் வெளியே போய் , பைத்தியக்காரத்தனமான செயல்களை செய்தான். நான் அதற்கு நேரேதிர். நான் எப்போதும் முதல் மாணவியல்ல. ஆனால் முட்டிமோதி வேலையை செய்து முடித்துவிட்டேன்.

நான் அதிகக் கஷ்டப்பட்டு படிக்காமலேயே முதல் முயற்சியிலேயே கல்லூரிக்குள் நுழைந்துவிட்டேன். ஒருவேளை எனக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்திருக்கலாம்.
அவள் மேலும் தொடர்நது, “ அகி – குன்னை எனக்கு மிகவும் பிடிக்கும். அவனிடம் பல அற்புதமான குணங்கள் இருக்கின்றன. ஆனால் சிலசமயம் அவனுடைய எண்ணங்களோடு என்னால் ஒத்துபோக முடிவதில்லை. இந்த கான்ஸே பேச்சு வழக்கையே எடுத்து கொள்ளேன் .

எதற்காக டோக்கியோவில் பிறந்து வளர்ந்த ஒருவன் கஷ்டப்பட்டு கான்ஸே பேச்சை கற்றுகொண்டு அதை பேசவேண்டும் ? எனக்கு புரிபடவேயில்லை. நிஜமாகவே புரியவில்லை. முதலில் அதை நகைச்சுவையாகத்தான் நினைத்தேன். ஆனால் அவன் அப்படி இல்லை. மிக தீவிரமாகத்தான் இருந்தான்.
“அவன் வித்தியாசமானவனாக , இதுவரை அவன் இருந்ததிலிருந்து முற்றாக வேறொரு ஆளாக இருக்க விரும்புகிறான் என்று நினைக்கிறேன். ‘ என்றேன்.
“ அதனால்தான் கான்ஸே பேச்சு வழக்கை மட்டும் பேசுகிறானா ? “

“ அடிப்படையிலேயே சமாளிக்க வேண்டிய விஷயம்தான் இது ஒப்புக் கொள்கிறேன் .“
எரிக்கா பிஸாவிலிருந்து ஒரு பெரிய அஞ்சல்தலையளவு துண்டை எடுத்துக் கடித்தாள். பேசுவதற்கு முன்பு யோசனையில் ஆழ்ந்தபடி அதை மென்றாள்.
“ தனிமூரா குன் கேட்பதற்கு யாருமில்லாததால் இதை உன்னிடம் கேட்கிறேன். நீ தவறாக நினைக்க மாட்டாயே “‘

“ நிச்சயம் இல்லை.“ என்றேன். வேறு என்ன சொல்லமுடியும் ? “
“ஒரு பையனும், பெண்ணும் நன்றாக ஒருவருக்கொருவர் தெரிநிதவர்கள் நீண்டநேரம் வெளியே சுற்றும்போது அந்தப் பையனுக்கு அந்தப் பெண் மீது உடல்ரீதியான ஈர்ப்பு ஏற்படுவது பொதுவான ஒரு விதி இல்லையா ? “ என்றாள்.
‘ பொதுவாகச் சொல்வதென்றால் ஆம் என்று சொல்வேன் “

“ அவன் முத்தத்திற்கும் மேல் முன்னேற விரும்புவான் இல்லையா ? “
“ பொதுவாக அப்படித்தான் “
“ நீயும் அப்படித்தானே நினைப்பாய் “
“ ஆம் “ என்றேன்.
“ ஆனால் அகி – குன் அப்படி இல்லை. நாங்கள் தனியாக இருந்தால்கூட அவன் அதற்கு மேல் முன்னேற மாட்டான். “

சரியான சொற்களை தேர்ந்தெடுக்க எனக்கு சிறிது நேரம் பிடித்தது. “ அது தனிப்பட்ட விஷயம் “ என்றேன் கடைசியில். “ தனக்குப் பிடித்ததைச் செய்வது ஒவ்வொருக்கும் வெவ்வேறு வழிகள் இருக்கலாம் . அது அந்த நபரைப் பொறுத்தது- கித்தாருவுக்கு உன்னை மிகவும் பிடிக்கும். அது தெரிந்ததே. ஆனால் உங்களது உறவு மிகவும் நெருக்கமும் சுமூகமுமாய் இருப்பதால் மற்றவர்களைப் போல் அவனால் விஷயத்தை அடுத்த கட்டத்திற்கு எடுதது செல்ல முடியாமல் இருக்கலாம். “
“ உண்மையாகவே நீ அப்படி நினைக்கிறாயா ? “
நான் தலையாட்டினேன். “ உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எனக்கு எதுவும் புரியவில்லை. இதுபோன்ற விஷயத்தை நான் எதிர் கொண்டதில்லை. இப்படி சாத்தியங்கள் இருக்கலாம் என்று சும்மா சொன்னேன்.


“ அவனுக்கு என் மீது சுத்தமாக பாலுணர்வு ஆசையே இல்லை என்று சிலநேரம் தோன்றுகிறது “
“ அவனுக்கு இருக்கிறது ஆனால் அதை ஒப்புக்கொள்வதில் சிறிது தயக்கம் இருக்கலாம். “
“ ஆனால் நமக்கு இருபது வயதாகிவிட்டது. ஏற்கனவே வளர்ந்தவர்கள். தயங்க வேண்டிய அவசியமில்லாத அளவிற்கு வளர்ந்துவிட்டோம் “
“ வயதுக்கேற்ற வளர்ச்சி விகிதம் என்பது நபருக்கு நபர் வேறுபடலாம் “ என்றேன்.

எரிக்கா அதைப்பற்றி யோசனை செய்தாள். அவளைப் பார்க்கையில் பிரச்சனைகளை எப்போதும் சமாளிப்பவள் போலத் தோன்றியது.
நான் தொடர்ந்தேன், “ கித்தாரு ஆத்மார்த்தமாக எதையோத் தேடுகிறான் என்று நினைக்கிறேன். அவனுக்கேயுரிய பாணியில், அவனுக்கேயுரிய வேகத்தில் , மிக நேர்மையாகவும், நேர்முகமாகவும். விஷயம் என்னவென்றால் , அது என்னவென்று அவன் இதுவரை கண்டறிந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. அதனால்தான் அவனால் முன்னேறிச் செல்ல முடியவில்லை. இது எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும். நீ எதைத் தேடுகிறாய் என்பதைப் புரிந்து கொள்ளாதவரை அதை அடைவது எளிதல்ல “

எரிக்கா தலையை உயர்த்தி நேராக என் கண்களுக்குள் வெறித்தாள். மெழுகுவர்த்தியின் சுடர் அவளது கரிய கண்களில் பிரதிபலித்தது. சிறிய துல்லியமான ஒளி. அது பேரெழிலாக இருந்தது. நான் பார்வையை திருப்பிக் கொள்ள வேண்டியிருந்தது.
“ உண்மையில் என்னைவிட உனக்குத்தான் அவனை நன்றாகத் தெரியும் “ நான் அழுத்திச் சொன்னேன்.
அவள் பெருமூச்செறிந்தாள்.
“ உண்மையில் நான் அகி – குன் தவிர வேறொரு பையனோடும் பழகிக்கொண்டு இருக்கிறேன். டென்னிஸ் கிளப்பில் எனக்கு ஒரு வருடம் முந்தையவன்.

இப்போது நான் மௌனமாக இருக்க வேண்டிய முறை .
“ நான் உண்மையிலேயே அகி – குன்னை விரும்புகிறேன். வேறு யாரையும் அதுபோல எப்போதும் நேசிக்க முடியும் என்று தோன்றவில்லை. அவனை விட்டு விலகி இருக்கும் போதெல்லாம் நெஞ்சில் ஒரு பயங்கர வலியை உணர்கிறே.ன். எப்போதும் ஒரே இடத்தில். அவனுக்காக மட்டும்தான் என் இதயத்தில் ஒர் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது- ஆனால் அதே சமயம் மற்ற விஷயத்தையும் முயன்று பார்க்கும் விருப்பமும், அனைத்துவிதமான மனிதர்களுடனும் பழக வேண்டும் என்ற உத்வேகமும் இருக்கிறது- இதை ஆர்வம் என்றோ, அறிந்துகொள்ள வேண்டும் என்ற தாகம் என்றோ எப்படி வேண்டுமானாலும் பெயரிட்டு கொள். நிறைய சாத்தியங்கள் உள்ளன . இது இயற்கையான உணர்ச்சி. ஆனால் இதை அடக்கிவைக்க முடியாது. நான் எப்படி முயற்சிக்கிறேன் என்பது பொருட்டல்ல.
வேலியைத் தாண்டி வளரும் செடி என்று எண்ணிக்கொண்டேன் .

“ குழப்பமாக இருக்கிறது என்று நான் சொன்னது இந்த விஷயத்தைதான். “ என்றாள் எரிக்கா குரித்தாணி.

“ இதுதான் விஷயமென்றால் நீ கித்தாருவிடம் இதை சொல்லிவிடவேண்டியதுதானே . நீ வேறொருவருடன் பழகும் விஷயத்தை மறைத்தால் பின்பு அவனே அதைக் கண்டுபிடித்து விட்டால் அவன் கஷ்டப்படுவான் . நீ அதை விரும்புவாயா ? “ என்று கூறினேன்.

“ ஆனால் அவனால் அதை , நான் வேறொருவருடன் பழகுகிறேன் என்ற உண்மையை ஏற்று கொள்ளமுடியுமா ? “
“ உனது உணர்வை அவன் புரிந்து கொள்வான் என்றுதான் நினைக்கிறேன். “
“ அப்படியா ? “
“ ஆம் “ என்றேன்.

அவளுடைய தடுமாற்றத்தை கித்தாரு புரிந்து கொள்வான் என்றுதான் தோன்றியது ஏனெனில் அவனும் அதேபோலத்தான் உணர்ந்தான். அவர்கள் இருவரும் ஒரே அலைவரிசையில் இருந்தனர். இருந்தாலும் உண்மையில் அவள் செய்வதை ( அல்லது செய்யப்போவதை ) அவன் அமைதியாக ஏற்றுகொள்வான் என்று முழுநம்பிக்கை இல்லை. அவன் அத்தனை உறுதியானவனாக எனக்கு தோன்றவில்லை. ஆனால் அவள் இரகசியமாக நடந்து கொண்டு அவனிடம் பொய் சொன்னால் இன்னும் சிக்கலாகிவிடும் என்று தோன்றியது.

எரிக்கா குரித்தாணி குளிர்சாதனத்தின் மென்காற்றில் துடிக்கும் மெழுகுவர்த்தியின் சுடரை மௌனமாக வெறித்தபடி இருந்தாள். ‘ எனக்கு அடிக்கடி ஒரே கனவு வருகிறது. நானும் அகி – குன்னும் கப்பலில் இருக்கிறோம். பெரிய கப்பல், நீண்ட பயணம். நாங்கள் இருவரும் ஒரு சிறிய கப்பலறையில் இருக்கிறோம். அது ஒரு பின்னிரவு. கப்பற் சாளரத்தின் வழியாக நாங்கள் முழு நிலாவைக் காண்கிறோம். ஆனால் அந்த நிலா தூய்மையான , ஸ்படிகம் போன்ற பனியால் ஆனது.

அதன் அடிப்பகுதி கடலில் மூழ்கியிருக்கிறது- அகி – குன் என்னிடம், “ அது நிலாவைப்போல இருக்கிறது, ஆனால் உண்மையில் அது எட்டு அங்குல தடிமனான பனிக்கட்டியால் ஆனது- எனவே காலையில் சூரியன் வரும்போது அது முழுதும் உருகிவிடலாம். எனவே வாய்ப்பு உள்ளபோதே அதை நன்றாகப் பார்த்துக் கொள். “ என்கிறான்.

இந்தக் கனவு பலமுறை வந்திருக்கிறது. அழகான கனவு. எப்போதும் அதே நிலா. எப்போதும் எட்டு அங்குல தடிமன். அடிப்பகுதி கடலில் மூழ்கி இருக்கும். நான் அகி – குன் மீது சாய்ந்து நிற்கிறேன். அந்த நிலா அழகாக மிளிர்கிறது. நாங்கள் இருவர் மட்டுமே இருக்கிறோம். வெளியே மென்மையான அலைகள் தவழ்கின்றன. ஆனால் ஒவ்வொரு முறை விழித்தெழும் போதும் தாங்கமுடியாத துக்கத்தை நான் உணர்வேன். பனியால் ஆன அந்த நிலவை எங்கேயும் கண்டதில்லை.“ என்றாள்.

எரிக்கா குரித்தாணி சிறிது நேரம் மௌனமாக இருந்தாள். பிறகு மீண்டும் தொடர்ந்தாள், “ நானும் அகி – குன்னும் அந்தப் பயணத்தை என்றென்றைக்கும் தொடர்ந்தால் எத்தனை அற்புதமாக இருக்கும் என்று தோன்றும். ஒவ்வொரு இரவும் நாங்கள் கதகதப்பாக இணைந்து கப்பற் சாளரம் வழியே அந்தப் பனி நிலாவை வெறித்துக் கொண்டிருக்கலாம். அடுத்தநாள் காலை நிலா உருகி பிறகு மீண்டும் இரவில் உதயமாகும். ஆனால் அதுவல்ல விஷயம். ஒருவேளை ஓர் இரவில் நிலா அங்கு இல்லாமல் போகலாம், அப்படி நினைக்கவே எனக்கு திகிலாக இருக்கிறது. அடுத்த நாள் எப்படிப்பட்ட கனவு வரும் என்று வியந்தேன்.. என் உடல் சுருங்குவதை நானே கேட்பதைப் போல் பயமாக இருந்தது. “

அடுத்தநாள் கித்தாருவை காபி அருந்தகத்தில் நான் சந்தித்தபோது எப்படி டேட் இருந்தது என்றான்.
“ நீ அவளுக்கு முத்தம் கொடுத்தாயா ? “
“ இல்லவே இல்லை “ என்றேன்.
“ கவலைப் படாதே , அப்படி செய்திருந்தால் நான் ஒன்றும் கோபப்பட மாட்டேன். “ என்றேன்.
“ அப்படியெல்லாம் நான் எதையும் செய்யவில்லை “
“ அவளது கையைக் கூட பிடிக்கவில்லையா ? “
“ இல்லை. பிடிக்கவில்லை “
“ பிறகு என்னதான் செய்தாய் ? “
“ நாங்கள் படம் பார்க்கப் போனோம். கொஞ்சம் சுற்றினோம். இரவு உணவு சாப்பிட்டோம். பிறகு பேசிக் கொண்டிருந்தோம். “ என்றேன்.
“ அவ்வளவுதானா ? “

“ முதல் டேட்டிங்கில் பொதுவாக அவசரப்பட மாட்டோமில்லையா ? “
“ அப்படியா ? நான் ஒழுங்கான டேட்டிங் சென்றதேயில்லை. எனவே எனக்குத் தெரியாது, “
“ ஆனால் அவளோடு இருப்பதை மிகவும் இரசித்தேன். அவள் மட்டும் என்னுடைய சிநேகிதியாக இருந்திருந்தால் அவளை என் கண்பார்வையை விட்டு அகல விடமாட்டே.ன். “
கித்தாரு அதை ஒப்புக் கொண்டான். அதைப் பற்றி ஏதோ சொல்ல நினைத்து அதைவிட நல்லதாக கேட்க யோசித்தான். “ பிறகு என்ன சாப்பிட்டீர்கள் ? “ எனக் கேட்டான்.

நான் பீஸாவைப் பற்றியும் சியாந்தி பற்றியும் சொன்னேன்.
“ பீஸாவும் , சியாந்தியுமா ? “ அவன் ஆச்சரியமான தொனியில் கேட்டான். “ அவளுக்கு பீஸா பிடிக்கும் என்றே எனக்கு தெரியாது. நாங்கள் நூடுல்ஸ் கடைக்கும், மலிவான உணவகங்களுக்கும்தான் செல்வோம். ஒயினா ? அவள் குடிப்பாள் என்று எனக்குத் தெரியவே தெரியாதே. “
கித்தாரு மதுவைத் தொட்டதேயில்லை.

“ அவளைப் பற்றி நீ அறியாத பல விஷயங்கள் இருக்கலாமோ என்னவோ ? “ என்றேன்.
டேட் பற்றிய அவனது எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தேன். வுடி ஆலன் படம் பற்றி ( அவனது வற்புறுத்தலால் முழுக் கதையையும் சொன்னேன் ) உணவைப் பற்றி ( எவ்வளவு கட்டணம் வந்தது ? பகிர்ந்து கொண்டோமா இல்லையா ? ) அவள் என்ன ஆடை அணிந்திருந்தாள் ? (வெள்ளை நிற பருத்தி ஆடை, கூந்தலை சேர்த்து கட்டியிருந்தாள் ) என்னவிதமான உள்ளாடை அணிந்திருந்தாள் ( அது எனக்கு எப்படி தெரியும் !!! ) நாங்கள் என்ன பேசினோம் ? ( அவள் வேறு ஒரு பையனுடன் பழகுவதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. போலவே பனி நிலா கனவு பற்றியும்.
“ நீங்கள் இருவரும் அடுத்த டேட் பற்றி எப்போது தீர்மானித்தீர்கள் ? “
“ இல்லை. செய்யவில்லை, “ என்றேன்.

“ ஏன் இல்லை ? உனக்கு அவளைப் பிடித்திருக்கிறது அல்லவா ? “
“ அவள் அற்புதமானவள். ஆனால் இது போல் எங்களால் தொடரமுடியாது. அவள் உன்னுடைய தோழி. சரியா ? அவளை முத்தமிட்டால் பரவாயில்லை என்று சொல்கிறாய். ஆனால் என்னால் அப்படி செய்யமுடியாது “

கித்தாரு ஆழமாக யோசித்தான். “ உனக்கு ஒரு விஷயம் தெரியுமா ? நான் உயர்நிலை பள்ளியை முடிக்கும் வரை மனநல மருத்துவரிடன் சிகிச்சை பெற்று வந்தேன். என் பெற்றோர், ஆசிரியர்கள் எல்லோரும் அறிவுறுத்தினார்கள். ஏனென்றால் நான் அவ்வப்போது சில காரியங்களை செய்து கொண்டிருந்தேன். அவை சராசரியான விஷயங்களல்ல தெரியுமா ? ஆனால் என்னைப் பொருத்தவரை மருத்துவரைப் பார்ப்பது பிரயோஜனமற்றது.

மருத்துவர்கள் எந்த கன்றாவியையும் செய்வதில்லை. தனக்கு எல்லாம் தெரியும் என்பது போல நம்மைப் பார்ப்பார்கள். பிறகு நம்மையே பேசவைத்து கேட்டு கொண்டிருப்பார்கள். அதை நானே செய்வேனப்பா. “ என்று முடித்தேன்.

“ நீ இன்னமும் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறாயா ? “
“ ஆம். மாதத்திற்கு இருமுறை. என்னைக் கேட்டால் வீண் செலவு என்பேன். எரிக்கா உன்னிடம் இதைப் பற்றி சொல்லவில்லையா ? “
நான் இல்லை என்று தலையாட்டினேன்.
“ உன்னிடம் உண்மையைச் சொல்கிறேன். என்னுடைய எண்ணங்களில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் சாதாரணமான விஷயங்களை சாதாரணமாகத்தான் செய்கிறேன். ஆனால் மற்றவர்கள் நான் விசித்திரமாகச் செய்வதாகச் சொல்கிறார்கள்.“
“ ஆம் சில விஷயங்கள் நீ செய்வது சாதாரணம் இல்லை. “என்றேன்.
“ எது போல ? “

“ உன்னுடைய கான்ஸே பேச்சு போல. டோக்கியோவிலிருந்து வந்த ஒருத்தனுக்கு படித்து கற்றுக் கொள்வது, அதுவும் இத்தனை கச்சிதமாக. “
“ நீ சொல்வது சரிதான். அது கொஞ்சம் அசாதாரணம்தான். “ என்று கித்தாரு ஒப்புக் கொண்டான்
“ அது மற்றவர்களுக்கு கொஞ்சம் பயத்தை ஏற்படுத்தும்.“
“ ம் இருக்கலாம் “

“ சாதாரண மக்கள் இத்தனை மெனக்கெட மாட்டார்கள். “
“ ஆம். நீ சொல்வது சரிதான்.“
“ ஆனால் என்னைப் பொருத்தவரை நீ செய்வது அசாதாரணமாக இருந்தாலும் அது யாரையும் துன்புறுத்தவில்லை என்றுதான் சொல்வேன். “
“ இதுவரை இல்லை “

“ அப்புறம் என்ன தவறு அதில் ? “ அந்தச் சமயத்தில் நான் கொஞ்சம் நிதானம் இழந்துவிட்டேன். ( எதற்காக , யார் மீது என்று தெரியவில்லை ) என் குரல் தொனி சற்று கரகரப்பாக பிசிறடித்ததை என்னால் உணர முடிந்தது. “ இதில் தவறிருப்பதாக யார் சொன்னது ? நீ யாரைப்பற்றியும் இப்போது கவலை படவில்லையென்றால் பிறகென்ன ? இதற்கு பிறகு நடக்கப்போவதை யார் அறிவார் ?நீ கான்ஸே பேச்சு வழக்கை பேச விரும்பினால் பேசு.

நுழைவுத் தேர்வுக்கு படிக்க விருப்பமில்லை. படிக்காதே. எரிக்கா குரித்தாணியின் உள்ளாடைக்குள் கையை நுழைக்க விரும்பவில்லையா ? யார் உன்னை செய்யச் சொல்கிறார்கள் ? இது உன் வாழ்க்கை. உனக்கு என்ன பிடிக்கிறதோ அதை நீ செய். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை மற. “
கித்தாரு வாயைப் பிளந்து வியப்பில் என்னை வெறித்துப் பார்த்தான். “ தனிமூரா உனக்கு ஒன்று தெரியுமா ? நீ நல்லவன்.

சில நேரங்களில் கொஞ்சம் மிகையாகவே சாதாரணமானவன் என்றாலும் கூட. “
“ என்ன செய்யப்போகிறாய் நீ ? நம் ஆளுமையை சும்மா நாம் மாற்றிக் கொள்ளமுடியாது “ என்றேன்.
“ சரியாகச் சொன்னாய். நமது ஆளுமையை நாம் மாற்றிக் கொள்ள முடியாது. அதைத்தான் நான் சொல்ல விரும்புகிறேன். “

“ ஆனால் எரிக்கா அருமையான பெண். உன் மீது உண்மையாகவே அக்கறை கொண்டவள். நீ என்ன செய்தாலும் அவளை மட்டும் விட்டு விடாதே…. அவளைப் போன்ற அற்புதமான பெண்ணை மீண்டும் நீ காணமுடியாது “ என்றேன்.
“ எனக்குத் தெரியும். நீ சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் வெறும் தெரிந்து வைத்திருப்பதால் மட்டும் எனக்கு பயனில்லை “ என்றான் கித்தாரு.
“ ஹே. அதைச் சொல்லிக்காட்ட மட்டும் மற்றவருக்கு வாய்ப்பு தரலாமா ? “

இரண்டு வாரங்கள் கழித்து , கித்தாரு காபி ஷாப் வேலையை விட்டு நின்றுவிட்டான். வேலையை விட்டான் என்பதைவிட சட்டென்று மறைந்துவிட்டான் . தொடர்பு கொள்ளவும் இல்லை , விடுப்பு எடுத்துக்கொள்வதாகக் கூட எதுவும் தெரிவிக்க இல்லை. மேலும் இது நடந்தது பரபரப்பான வேளை. எனவே கடை முதலாளி எரிச்சலுற்றார். கித்தாரு “ மிகவும் பொறுப்பற்று “ நடந்து கொண்டான் என்று அவர் எண்ணினார். அவனுக்கு ஒருவாரச் சம்பள பாக்கி இருந்தது ஆனால் அதைப்பெற்றுக் கொள்ள கூட அவன் வரவேயில்லை. கடை முதலாளி அவனது முகவரி எனக்குத் தெரியுமா என்று கேட்டார். நான் தெரியாது என்று சொல்லிவிட்டேன். அவனது தொலைபேசி எண்ணோ , வீட்டு முகவரியோ எனக்குத் தெரியாது. எனக்கு தெரிந்ததெல்லாம் பொதுவாக டெனென்சோஃபுவில் அவனது வீடு எங்கே இருக்குமிடமும் எரிக்கா குரித்தாணியின் தொலைபேசி எண்ணும்தான்.

கித்தாரு வேலையை விடுவதைப் பற்றி என்னிடம் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை, அதன் பிறகு என்னைத் தொடர்பும் கொள்ளவில்லை. அவன் அப்படியே மறைந்து போனான். அது என்னைக் காயப்படுத்தியது என்று சொல்லலாம். நாங்கள் நல்ல நண்பர்கள் என்றுதான் நினைத்திருந்தேன். அப்படியெனில் இதுபோல் முற்றிலும் முறித்துக் கொண்டு சென்றது கஷ்டமாயிருந்தது. டோக்கியோவில் எனக்கு வேறு நண்பர்களும் கிடையாது.

ஒருவிஷயம்தான் எனக்கு உறுத்தலாகவே இருந்தது. மறைந்து போவதற்கு இரண்டுநாள் முன்னர் கித்தாரு அவனது வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தான் என்பதே. நான் அவனிம் பேசியபோது அவன் அதிகம் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. அதன் பிறகு அவன் மறைந்து போனான். எரிக்கா குரித்தாணிக்கு போன் செய்து அவனது இருப்பிடத்தைக் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் ஏனோ தலையிட விரும்பவில்லை. அவர்கள் இருவருக்கிடையே நடந்தது எதுவாயினும் அது அவர்களுடைய சொந்த விஷயம் என்று கருதினேன். நான் அதுவரை செய்ததற்கும் மேலாக இன்னமும் தலையை நுழைப்பது எனக்கு நல்லதல்ல. ஏனோ எனக்கான குறுகிய சின்ன உலகத்துக்கு மீண்டும் திரும்ப வேண்டியிருந்தது-

இவையெல்லாம் நடந்தபிறகு எனக்கு ஏனோ சில காரணங்களினால் என் பழைய சிநேகிதியைப் பற்றி நினைக்கத் துவங்கினேன். கித்தாருவையும் எரிக்காவையும் பார்த்தபோது எனக்கு என்னவோ போல் இருந்தது. என் நடத்தைக்கு மன்னிப்பு கோரி நீண்ட கடிதம் ஒன்றை எழுதினேன். நான் அவளிடம் இன்னும் இதமானவனாக நடந்து கொண்டிருக்கலாம். ஆனால் அவளிடமிருந்து பதில் ஏதும் வரவேயில்லை.
நான் எரிக்கா குரித்தாணியை உடனடியாக அடையாளம் கண்டு கொண்டேன்.

இரண்டேமுறைதான் அவளைப் பார்த்திருக்கிறேன். இப்போது பதினாறு வருடங்கள் கழிந்துவிட்டன. ஆனால் அவள்தான் அதில் சந்தேகமேயில்லை. அவள் இப்போதும் அழகாக அதே உயிர்ப்புடன், துடிப்பான பாவத்துடன் இருந்தாள். கருப்பு லேஸ் உடையும் , கருப்பு குதியுயர்ந்த காலணிகளும், மெல்லிய கழுத்தைச்சுற்றி இரட்டைவட முத்துமாலையும் அணிந்திருந்தாள். அவளும் என்னை ஞாபகம் வைத்திருந்தாள். நாங்கள் அகாஸிவில் உள்ள ஒரு உணவகத்தில் ஒயின் விருந்திற்கு வந்திருந்தோம். அது கருப்பு டை விழா. நான் அந்த விழாவிற்கு கருப்பு உடையும் , கருப்பு டையும் அணிந்து சென்றிருந்தேன். அந்த விழாவை நடத்தும் நிறுவனத்தின் பிரதிநிதி அவள். அந்த வேலையை தெளிவாகச் செய்து சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருந்தாள்.

நான் அங்கே ஏன் சென்றிருந்தேன் என்ற காரணங்களைச் சொல்லத் தொடங்கினால் ரொம்ப நேரம் பிடிக்கும்.
“ தனிமூரா குன் நாம் டேட்டிங் சென்றுவந்த அந்த இரவுக்குப் பின் ஏன் நீ என்னைத் தொடர்பு கொள்ளவே இல்லை. ? நாம் இன்னும் நிறையப் பேசவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். “ என்றாள்.
“ நீ என் தகுதிக்கு மீறி அழகாய் இருந்ததனால் “ என்றேன்.

அவள் புன்னகைத்தாள். “ கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அது முகப்புகழ்ச்சியாக இருந்தாலும் கூட “
“ என் வாழ்வில் யாரையும் நான் முகப்புகழ்ச்சி செய்ததேயில்லை. “ என்றேன்.
அவள் ஆழமாக புன்னகைத்தாள். ஆனால் நான் சொன்னது பொய்யோ முகப்புகழ்ச்சியோ இல்லை. நான் முழுஈடுபாட்டுடன் ஆர்வம் காட்டமுடியாத அளவுக்கு அவள் பேரழகாக இருந்தாள் , அப்போதும் இப்போதும். அவளது புன்னகை நிஜமேயல்ல எனுமளவுக்கு அற்புதமாக இருந்தது.

“ நீ வேலை செய்துகொண்டிருந்த காபிஷாப்பை தொடர்புகொண்டு கேட்டேன். ஆனால் நீ அங்கே வேலை செய்யவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.“ என்றாள்.
“ கித்தாரு போனபிறகு அந்த வேலை முற்றிலும் சலிப்பாகி போனது- எனவே இரண்டு வாரங்கள் கழித்து நானும் வேலையை விட்டுவிட்டேன்.
எரிக்காவும் நானும் கடந்த பதினாறு வருடங்களாக நாங்கள் வாழ்ந்து வந்த எங்களது வாழ்க்கையை சுருக்கமாக மீள்பார்வை செய்து கொண்டோம். கல்லூரிக்குப் பிறகு என்னை ஒரு பதிப்பகத்தார் குத்தகைக்கு எடுத்திருந்தார். ஆனால் மூன்று வருடங்களில் அதிலிருந்து வெளியேறி அதன்பிறகு எழுத்தாளனாகவே இருந்து கொண்டிருக்கிறேன்.

இருபத்தேழு வயதில் நான் திருமணம் செய்து கொண்டேன். ஆனால் இதுவரை குழந்தைகளில்லை. எரிக்கா திருமணமே செய்துகொள்ளவில்லை. “ என்னைக் கடுமையாக வேலை வாங்குகிறார்கள். அதனால் திருமணம் செய்துகொள்ளக் கூட நேரமில்லை.“ என்றாள் வேடிக்கையாக. இத்தனை வருடங்களில் அவளுக்கு கணக்கற்ற காதல் விவகாரங்கள் இருந்திருக்கலாம் என்று ஊகித்தேன். அவளைப் பற்றிய ஏதோ ஒன்று , அவளிடம் இருந்து பிரகாசிக்கும் ஒளிவட்டம் அதை எனக்கு உறுதிசெய்தது. கித்தாருவைப் பற்றி முதலில் பேச்சை எடுத்தது அவள்தான்.

‘ அகி – குன் இப்போது டென்வரில் சுஷி சமையல் கலைஞகனாக வேலை செய்து கொண்டிருக்கிறான். “ என்றாள்.
“ டென்வர் “
“ டென்வர் , கொலராடோ. அவன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் எனக்கு அனுப்பியிருந்த கடிதத்தின் படி. “
“ ஏன் டென்வர் ? “

“ எனக்கு தெரியாது. அதற்கு முன் வந்த கடிதம் சீட்டலில் இருந்து வந்தது. அங்கேயும் சுஷி சமையல் கலைஞனாகத்தான் இருந்தான். அது ஒரு வருடத்திற்கு முன். அவன் திடீர் திடீர் என்று கடிதங்கள் அனுப்புவான். எப்போதும் இரண்டு வரிகள் கிறுககப்பட்ட கடிதங்கள். சில நேரங்களில் அவனது விலாசத்தைக் கூட குறிப்பிட்டிருக்க மாட்டான்.
“ சுஷி சமையல் கலைஞனா ? அப்படியென்றால் அவன் கல்லூரிக்கே போகவில்லையா ? என்று நான் முனுமுனுத்தேன்.

அவள் தலையாட்டினாள். “ கோடை விடுமுறையின் முடிவில் என்றுதான் நினைக்கிறேன், நுழைவுத்தேர்வுக்கு படிப்பதை நிறுத்திக் கொள்ளப்போவதாக அவன் திடீரென்று அறிவித்தான். தொடர்ந்து அதையே முயன்று கொண்டிருப்பதால் நேரம் விரயமாவதாக சொன்னான். அதன் பிறகு அவன் ஒசாகாவில் ஒரு சமையல் வகுப்பில் சேர்ந்தான். உண்மையில் அவன் கான்ஸே சமையலைக் கற்று கொண்டு கோஷின் விளையாட்டு அரங்கத்தில் நடக்கும் விளையாட்டுக்கு செல்ல விரும்புவதாகக் கூறினான். அது ஹன்ஷின் டைகர் அரங்கம். நான் அவனிடம் , “ இது மாதிரியான ஒரு முக்கிய விஷயத்தை முடிவு செய்யும்போது என்னைக் கேட்காமல் எப்படி செய்கிறாய் ? என் கதி என்ன ? என்று கேட்டேன்.

“ அதற்கு அவன் என்ன சொன்னான் ? “ என்றேன்.
அவள் எதுவும் சொல்லவில்லை. உதட்டைக் கடித்துக் கொண்டாள். ஏதோ சொல்ல வருவதைப் போலிருந்தாள். ஆனால் பேசினால் அழுது விடுவாள் என்று தோன்றியது- தனது நுட்பமான கண் ஒப்பனையை கலைக்க விரும்பாதவளாய் கண்ணீரை அடக்க பிரயத்தனப் பட்டாள். நான் சட்டென பேச்சை மாற்றினேன்.

ஷிபுயாவில் இத்தாலியன் உணவகத்திற்கு நாம் சென்றிருந்தபோது மலிவான சியாந்தியை அருந்தியது நினைவிலிருக்கிறது. இப்போது நம்மை கவனி. முதல்தரமான நாபா ஒயினைச் சுவைக்கிறோம். விதியின் வினோத திருப்பம் “
“ நினைவிருக்கிறது. “ என்றாள் தன்னைக் கட்டுப்படுத்தியவாறு. “ நாம் வுடி ஆலன் படம் பார்த்தோம். என்ன படம் அது ? “ என்றாள்.
நான் சொன்னேன்.

“ அற்புதமான படம் அது “
நானும் ஒப்புக்கொண்டேன். நிச்சயமாக வுடி ஆலனின் ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்று “
“ டென்னிஸ் கிளப்பில் உன்னோடு சுற்றிக் கொண்டிருந்த இளைஞனோடு எல்லாம் சுமுகமாக போனதா ? “ என்று கேட்டேன்.
அவள் தலையாட்டினாள். “ இல்லை, நான் நினைத்திருந்தபடி அவனோடு இணக்கமாக இருக்கமுடியவில்லை. ஆறுமாதம் சுற்றியபின் நாங்கள் பிரிந்து விட்டோம். “
“ நான் ஒரு கேள்வி கேட்கலாமா ? மிகவும் தனிப்பட்ட விஷயம் “ என்றேன்.

“ நிச்சயம். என்னால் பதில் சொல்லமுடியும் என்றுதான் தோன்றுகிறது “
“ உன்னை கஷ்டப்படுத்தும் நோக்கத்தில் கேட்கவில்லை.“
“ முடிந்தவரை சொல்கிறேன்.“
“ அவனோடு நீ உறவு வைத்துக் கொணடாய் இல்லையா “
எரிக்கா ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தாள். அவளது கண்ணம் சிவந்தது.

“ இப்போது ஏன் அதைக் கிளறுகிறாய் ?“
“ நல்ல கேள்வி. நீண்ட நாட்களாக என் மனதில் இருந்தது. ஆனால் கேட்க சங்கோஜமாக இருந்தது , மன்னித்துவிடு. “

எரிக்கா தலையை மெல்ல ஆட்டிக்கொண்டாள். “ இல்லை. எனக்கு ஒன்றும் கஷ்டமில்லை. ஆனால் இதை எதிர்பார்க்கவில்லை. அதெல்லாம் நீண்ட வருடங்களுக்கு முன்பு. “

நான் அறையைச் சுற்றிலும் பார்த்தேன். சம்பிரதாய உடைகளில் மக்கள் அங்காங்கே காணப்பட்டனர் விலையுயர்ந்த ஒயின் புட்டிகளிலிருந்து கார்க்குகள் தெறித்தன. ஒரு பியானோகாரி “ Like Someone In Love “ யை வாசித்துக்கொண்டிருந்தாள்.
“ ஆம் என்பதுதான் என் பதில், நான் பலமுறை அவனோடு உறவு வைத்துக் கொண்டேன் ‘ என்றாள் .
. “ ஆர்வம், இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் . “ என்றேன்.

அவள் சாடையாகச் சிரித்தாள், “ நீ சொல்வது சரி. ஆர்வம், இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் “ என்றாள்.

“ அப்படித்தான் நாம் நமது வளர்ச்சி வளையங்களைப் பெருக்கிக் கொள்கிறோம். “
“ அதை அப்படியும் சொல்லலாம். “ என்றாள்.
“முதல் டேட்டிங்கிற்கு நாம் ஷிபியாவுக்கு சென்று வந்த உடன்தான் நீ அவனுடன் முதல்முறையாக படுக்கையை பகிர்ந்து கொண்டிருப்பாய் என்று நினைக்கிறேன். “

அவள் தனது மனதின் நினைவடுக்குகளைப் புரட்டினாள். “ அப்படித்தான் நினைக்கிறேன். அதற்கு ஒரு வாரத்திற்கு பிறகு. அந்த நிமிடங்களை நான் நன்றாக நினைவு வைத்திருக்கிறேன். “ அந்த மாதிரி “ அனுபவம் அதுதான் முதல் முறை. “
“ கித்தாரு வெகு விரைவிலேயே அதைமோப்பம் பிடித்திருப்பானே “ என்றேன் அவளது கண்களுக்குள் வெறித்தபடி.

அவள் கீழே குனிந்து அவளது கழுத்திலிருந்த முத்தாரத்திலிருந்து ஒவ்வொரு முத்தாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். எதையோ நினைத்துப் பெருமூச்சு விட்டாள். “ ஆம் நீ சொல்வது சரி. அகி குன்னுக்கு மிக உறுதியான உள்ளுணர்வு உண்டு “

“ ஆனால் உனக்கு அப்படி இல்லை போலிருக்கிறது “
அவள் தலையாட்டினாள். “ துரதிர்ஷ்டவசமாக நான் அந்த அளவிற்கு புத்திசாலியில்லை. நான் புரிந்து கொள்ள நிறைய நாட்கள் வேண்டியிருந்தது. எப்போதும் நான் சுற்றுவழியில்தான் செல்கிறேன்.“
அதைத்தான் நாம் எல்லோருமே செய்கிறோம்.

முடிவற்ற சுற்றுவழியைத் தெர்ந்தெடுக்கிறோம். என்று அவளிடம் சொல்லவிரும்பினேன். ஆனால் மௌனமாக இருந்தேன். பழமொழிகளை உளறுவது என் பிரச்சனைகளில் ஒன்று-

“ கித்தாருவுக்கு திருமணமாகிவிட்டதா ? “
“ எனக்குத் தெரிந்து இல்லை. அல்லது என்னிடம் தனக்கு திருமணம் ஆனதை சொல்லாமல் விட்டிருக்கலாம். ஒருவேளை நாங்கள் இருவரும் எப்போதுமே திருமணம் செய்து கொள்ளும் இரகமே இல்லை போல. “ என்றாள் எரிக்கா.
“ அல்லது இரண்டுபேரும் சுற்றிவளைத்து செய்துகொள்வீர்களோ என்னவோ ? “

“ இருக்கலாம் “
“ நீங்கள் இருவரும் சந்தித்து மீண்டும் ஒன்றிணைவது நடைமுறை சாத்தியத்திற்கு அப்பாற் பட்டதா ? “
அவள் முறுவலித்தாள். கீழே குனிந்தாள். தலையை உதறிக்கொண்டாள். அந்த செய்கைக்கு என்ன பொருள் என்று சொல்ல முடியவில்லை ஒரு வேளை சாத்தியமில்லை என்பதாக இருக்கலாம். அல்லது அதைப் பற்றி யோசிப்பதே பொருளற்றது என்பதாக இருக்கலாம்.

“ நீ இப்போதும் அந்த பனி நிலா பற்றி கனவு காண்கிறாயா ?“ என்று கேட்டேன்.
அவள் தலையை உயர்த்தி என்னை உற்று பார்த்தாள். மிக அமைதியாக , மெதுவாக ஒரு புன்முறுவல் அவளது முகத்தில் படர்ந்தது. முற்றிலும் இயல்பான கபடமற்ற புன்னகை.
“ என் கனவை ஞாபகம் வைத்திருக்கிறாயா ? “ என்று கேட்டாள்.

“ சில காரணங்களுக்காக ஞாபகம் இருக்கிறது “
“ இருந்தாலும் அது இன்னொருவரின் கனவு இல்லையா? “
“ கனவுகள் தேவையிருந்தால் கடனாக கொடுக்கவோ வாங்கவோ கூடிய விஷயம் “ என்றேன். உண்மையில் சிலநேரங்களில் இதுபோல பழமொழிகளை மிகைப்படுத்தி விடுகிறேன். “
“ அருமைமான கருத்து “ என்றாள். அவனது புன்னகை அவள் முகத்தை மேலும் அழகாக்கியது.
யாரோ அவள் பெயரைச் சொல்லி என் பின்னாலிருந்து அழைத்தார்கள். அவள் தனது வேலையை கவனிப்பதற்காக திரும்பவேண்டிய நேரம் வந்துவிட்டது .

விடைபெற்று கொள்ளும் முன் கூறினாள் “ அந்தக் கனவு அதற்கப்புறம் வருவதேயில்லை.“ . “ ஆனால் எல்லா குறிப்புகளும் இன்னும் நினைவிருக்கிறது. “
அவள் சட்டென திரும்பி நடந்தாள். பெண்கள் அறைக்குச் சென்று மஸ்காராவை சரிசெய்யக் கூடும் என்று நான் கற்பனை செய்து கொண்டேன்.
நான் காரில் திரும்புகையில் ரேடியோவில் பீட்டில்ஸின் “ Yesterday “ பாடல் ஒலித்தது. கித்தாரு குளியலறையில் , முனுமுனுத்த பைத்தியக்காரத் தனமான வரிகளை நினைக்காமல் இருக்க முடியவில்லை. வினோதமான அந்த வரிகளை சில காலம் வரை நினைவில்வைத்திருந்தேன், ஆனால் எனது ஞபாகம் மெல்ல தேய்ந்து இறுதியில் அவற்றை முழுவதும் மறந்துபோனேன்.

இப்போது நினைவிலிருப்பதெல்லாம் சிதறல்கள்தான். அது கித்தாரு பாடிய வரிகள் என்று என்னால் உறுதியாக சொல்லமுடியாது. காலம் செல்லச்செல்ல நினைவு தவிர்க்கமுடியாதபடி தானே மறுகட்டமைப்பு செய்து கொள்கிறது-

நான் இருபது வயதாக இருக்கும்போது டைரி எழுதவேண்டும் என்று முயன்றிருக்கிறேன். ஆனால் என்னால் முடிந்தததில்லை. அந்நாட்களில் என்னைச் சுற்றி நடந்த பல விஷயங்களை அரிதாகவே என்னல் நினைவு வைத்துக் கொள்ள முடிந்தது. அப்பொழுதே அவற்றை ஒரு குறிப்பேட்டில் தனியாக எழுதிவைத்தால்தான் உண்டு. அவற்றில் பல ஹா! இதை எழுதவேண்டும் என்று நினைக்கும் படி இருந்ததில்லை. பலமான எதிர்காற்றில் கண்களை விரியத் திறந்துகொண்டு மூச்சு திணறியபடி கடந்து சென்றதுதான் நான் செய்ய முடிந்தவை.

ஆனால் ஆச்சிரியப்படும் வகையில் , எனக்கு கித்தாருவை நன்றாக நினைவிருக்கிறது. நாங்கள் சிலமாதங்களுக்குத்தான் நண்பர்களாக இருந்தோம். இருந்தாலும் ஒவ்வொரு முறை Yesterday பாடலை கேட்கும் போதெல்லாம் அவனுடன் சம்பந்தப்பட்ட காட்சிகளும், உரையாடல்களும் என் மனதில் துல்லியமாக நினைவுக்கு வருகிறது. அவனுடைய டெனென்சோஃபு வீட்டு குளியலறையில் தொட்டியில் ஊறிக்கொண்டே நாங்கள், ஹன்ஷின் டைகர்கள் மட்டையடிக்கும் வரிசை, பாலுணர்வின் கூறுகளில் உள்ள சில சிக்கல்கள், நுழைவுத் தேர்வுக்கு படித்து மூளை எப்படி மரத்து சலிப்படைகிறது, டெனென்சோஃபு தொடக்கப் பள்ளியின் வரலாறு, கான்ஸே பேச்சுவழக்கின் உணர்ச்சிவளம் பற்றியெல்லாம் பேசுவோம். எரிக்காவுடன் சென்ற அந்த விசித்திரமான டேட் எனக்கு நினைவிருக்கிறது.

இத்தாலிய உணவகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்ட மேசையில் எரிக்கா எதை வெளிப்படையாகக் கூறினாளோ அது கூட நினைவிருக்கிறது. இதெல்லாம் நேற்றுதான் நடந்தது போலு தோன்றுகிறது. ஞாபகங்களை மீட்டெடுக்கும் சக்தி இசைக்கு இருக்கிறது. சிலநேரங்களில் மிக உக்கிரமாக வலிக்குமளவிற்கு.

ஆனால் என் இருபது வயதை நானே திரும்பிப்பார்க்கையில் எனக்கு நினைவிலிருப்பதெல்லாம் பெரும்பாலும் நான் தனியாகவும், தனிமையாகவும் இருந்ததுதான். என் உடலையும் ஆன்மாவையும் கதகதப்பாக்கும் காதலி யாரும் இருந்ததில்லை , மனம்விட்டு பேச நண்பர்களும் இருந்ததில்லை. தினசரி என்ன செய்யவேண்டும் என்ற திட்டம் எதுவும் இருந்ததில்லை. எதிர்காலத்தைப் பற்றிய பார்வையும் இருந்ததில்லை.

பெரும்பான்மையான நேரங்களில் நான் எனக்குள்ளேயே ஆழ்ந்து , ஒடுங்கி இருந்தேன். சிலநேரங்களில் ஒருவாரம் வரை கூட யாரிடமும் பேசாமல் கடந்திருக்கிறேன். அப்படிப்பட்ட வாழ்க்கை ஒரு வருடம்வரை தொடர்ந்தது- நீண்ட நெடும் வருடம். குளிர்ந்த உறைந்த அந்த மகிழ்ச்சியற்ற காலக்கட்டம் என்னுள் விலைமதிப்பு மிக்க வளர்ச்சி வளையங்களை ஏற்படுத்தியிருக்குமா என்பதை என்னால் உறுதிபட சொல்லமுடியவில்லை.

அந்நாட்களில் ஒவ்வொரு நாளும் கப்பலறை சாளரம் வழியே பனியாலான நிலாவை வெறித்துக் கொண்டிருப்பதைப் போல உணர்ந்திருக்கிறேன். படிகம் போன்ற எட்டு அங்குல தடிமனில் உறைந்த நிலா. ஆனால் என்னருகில் எவருமில்லை. நான் நிலாவை , அதன் சில்லென்ற எழிலை பகிர்ந்து கொள்ள யாருமற்று தனியாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

Yesterday
என்பது நாளைக்கு இரண்டு நாள் முன்னர்,
இரண்டு நாட்களுக்கு பின்னர் உள்ள நாள்.
டென்வரில் ( அல்லது ஏதோ ஒரு தொலைதூரத்து ஊரில் ) கித்தாரு மகிழ்ச்சியாக இருப்பான் என நான் நம்புகிறேன். அவன் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறானா என்று கேட்பது கொஞ்சம் அதிக பட்சம்தான். குறைந்தபட்சம் ஆரோக்கியமாகவும் , அவனது அனைத்து தேவைகளும் பூர்த்தியடைந்திருக்கும் என்று நம்புகிறேன். என்ன மாதிரியான கனவுகளை நாளைய தினம் கொண்டுவருமென்பதை யாரும் அறிந்திருப்பதில்லை என்பதால்

முரகாமி

லிடியா டவிஸ் குறுங்கதைகள் / தமிழில் : சமயவேல்

கவிஞர் சமயவேல்

lydia davis

தலை, இதயம்

தலை அழுகிறது.

இதயத்திற்கு உதவ தலை முயற்சிக்கிறது.

தலை இதயத்திடம் சொல்கிறது இது எப்படி, மீண்டும்:

நீ நேசிப்பவர்களை நீ இழந்துவிடுவாய். அவர்கள் எல்லோரும் போய்விடுவார்கள்.

ஆனால் பூமியும் கூடப் போய்விடும், ஏதோ ஒருநாள். பிறகு, இதயம் ஆறுதலாக உணர்கிறது.

ஆனால் தலையின் சொற்கள் இதயத்தின் காதுகளில் நெடுங்காலம் அங்கேயே இருப்பதில்லை.

இதயத்திற்கு இது மிகவும் புதியது.

அவைகள் திரும்ப எனக்கு வேண்டும், இதயம் சொல்கிறது.

இதயத்திடம் இருப்பதெல்லாம் தலை மட்டுமே.

தலையே, உதவு. இதயத்திற்கு உதவு.

குழப்பத்தின் உதாரணங்கள்

1

எனது ஹோட்டல் அறையை ஒட்டி இருக்கும் குளியலறையின் தரை மேல் நான் உட்கார்ந்திருக்கிறேன். அனேகமாக விடிந்துவிட்டது மேலும் குடிப்பதற்கு என்னிடம் மிக அதிகமாக இருந்திருந்தது, அதனால் குறிப்பிட்ட எளிய விஷயங்களும் என்னை ஆழமாக ஆச்சர்யப்படுத்தியது. அல்லது அவைகள் எளிமையானவை அல்ல. ஹோட்டல் மிக அமைதியாக இருக்கிறது. எனக்கு முன்னால் டைல்ஸ்கள் மேல் உள்ள எனது பாதங்களை நான் பார்க்கிறேன் மேலும் யோசிக்கிறேன்: அவை அவளது பாதங்கள். நான் எழுந்து நின்று கண்ணாடியில் பார்க்கிறேன் மேலும் யோசிக்கிறேன்: அங்கு அவள் இருக்கிறாள். அவள் உன்னைப் பார்த்துக்கொண்டு இருக்கிறாள்.

பிறகு நான் புரிந்துகொண்டேன் மேலும் என்னிடமே கூறுகிறேன்: இது உனக்கு வெளியில் இருந்தால் நீ அவள் என்று கூற வேண்டும். உனது பாதம் அங்கு அதிகம் இருந்தால், அது உன்னிடமிருந்து அங்கே வெளியில் இருக்கிறது, அது அவளது பாதம். கண்ணாடியில், உனது முகத்தைப் போன்ற ஏதோ ஒன்றைப் பார்க்கிறாய். அது அவளது முகம்.

02

ஒரு சிறிய மின்சாரத் துண்டிப்பில், எனது சொந்த மின்சாரம் துண்டிக்கப்பட்டுவிட்டது போல நான் உணர்கிறேன் மேலும் நான் சிந்திக்க இயலாமல் ஆகியது. மின்சாரத் துண்டிப்பு நான் செய்திருந்த எனது வேலையை மட்டும் அழிக்கவில்லை ஆனால் எனது சொந்த ஞாபகத்தின் ஒரு பகுதியையும் அழித்திருக்கிறது என நான் அஞ்சுகிறேன்.

04

அங்கு அவனது வலது கால் எனது வலது கால் மேல், எனது இடது கால் அவனது வலது கால் மேல், அவனது இடது கை எனது முதுகுக்கு அடியில், எனது வலது கை அவனது தலையைச் சுற்றி, எனது வலது கை அவனது வலது கைக்குக் குறுக்காக, மேலும் எனது வலது கை அவனது இடது நெற்றிப்பொட்டைத் வருடிக் கொண்டிருந்தது. இப்பொழுது எந்த உடம்பின் எந்தப் பாகம் என்னுடையது மேலும் எந்தப் பாகம் அவனுடையது என்பதைக் கூறுவது கடினமாக ஆகிறது.

நான் அவனது தலையை உரசுகிறேன் என்னுடையதின் மேல் அழுந்தியிருப்பதால், அவனது மயிரிழைகள் அவனது மண்டையோடு மேல் உரசுவதை நான் கேட்கிறேன் எனது சொந்த மயிரிழைகள் எனது சொந்த மண்டையோட்டின் மேல் உராய்வது போல, இப்பொழுது நான் அவனது காதுகளைக் கொண்டு தான் கேட்பதைப் போல, மேலும் அவனது தலைக்கு உட்புறம் இருந்து.

05

நான் போகும் போது ஒரு குறிப்பிட்ட புத்தகத்தை எடுத்துச் செல்ல தீர்மானித்திருந்தேன். நான் களைப்புடன் இருக்கிறேன் மேலும் அது ஒரு சிறிய புத்தகம் என்றாலும் அதை நான் எப்படிக் கொண்டு போவேன் என்று யோசிக்க முடியவில்லை. போவதற்கு முன்பு நான் அதை வாசிக்கிறேன், மேலும் வாசித்தேன்:

அவள் எனக்குக் கொடுத்த மங்கிய பித்தளைக்குள் வார்க்கப்பட்ட டஜன் கணக்கிலான பூக்களுடன் கூடிய புராதன வளையல். இப்பொழுது நான் நினைக்கிறேன் நான் வெளியே செல்லும் போது எனது மணிக்கட்டைச் சுற்றி நான் புத்தகத்தையும் அணிந்து கொள்ள முடியும் என்று.

இவளது அம்மாவின் அம்மா

1

அங்கு இவள் அன்பானவளாக இருக்கும் நேரங்கள் உண்டு, ஆனால் அங்கு இவள் அன்பானவளாக இல்லாமல் இருக்கும் நேரங்களும் உண்டு, அவனிடம் அல்லது அவர்கள் எல்லாரிடமும் இவள் கொடுமையாகவும் இரக்கமற்றும் இருக்கும் போது, மேலும் அது அப்போது இவளுக்குள் இருக்கும் இவளது அம்மாவின் விசித்திரமான ஆவி என்பதை இவள் அறிந்திருந்தாள்.

அங்கு இவளது அம்மா அன்பானவளாக இருந்த நேரங்கள் உண்டு, ஆனால் இவளிடம் அல்லது அவர்கள் எல்லாரிடமும் அவள் கொடுமையாகவும் இரக்கமற்றும் இருந்த நேரங்களும் அங்கு இருந்தன, மேலும் அது அப்போது இவளது அம்மாவுக்குள் இருந்த இவளது அம்மாவுடைய அம்மாவின் விசித்திரமான ஆவி என்பதை அவள் அறிந்திருந்தாள். இவளது அம்மா கூறினாள், சில சமயங்களில் இவளது அம்மாவின் அம்மா அன்பானவளாக இருந்து வந்தாள், அவளை அல்லது அவர்கள் எல்லாரையும் பரிகாசம் செய்தாள், ஆனால் அவளும் கூட கொடுமையாகவும் இரக்கமற்றும் இருந்து வந்தாள். மேலும் அவளை அல்லது அவர்கள் எல்லாரையும் பொய் சொல்வதாகக் குற்றம் சாட்டினாள்.

2

இவளது அம்மாவின் அம்மா, இரவில், பின்னிரவில், அழுவதும் அவளது கணவரை மன்றாடுவதும் வழக்கமாக இருந்தது. இதை இவளது அம்மா, இன்னும் ஒரு இளம்பெண், படுக்கையில் இருப்பவள் கேட்டுக் கொண்டிருந்தாள். இவளது அம்மா, அவள் பெரியவளாகிய போது, அழவும் அவளது கணவரை மன்றாடவும் இல்லை, அல்லது படுக்கையில் படுத்துக் கொண்டு கேட்கக் கூடிய இடத்தில் அவளது மகள் இல்லை. பின்னாளில் அவளது மகள், இவள் பெரியவளாகிய போது, இவளது அம்மாவின் அம்மாவைப் போல இரவில், பின்னிரவில் அழுதாளா, இவளது கணவரைக் கெஞ்சி மன்றாடினாளா இல்லையா என்று. இவளது அம்மாவால் தெரிந்து கொள்ள முடியவில்லை, ஏனெனில் அவளால் கேட்க முடியாது.

000

காதல்

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து போன ஒருவனின் மேல் ஒரு பெண் காதல் கொண்டாள். அவனது கோட்டுகளைத் துவைப்பது, அவனது மைக்கூடைத் துடைத்து வைப்பது, அவனது தந்த சீப்பை அழுக்கெடுப்பது எல்லாம் அவளுக்குப் போதவில்லை: அவனது புதைகுழி மேல் ஒரு வீட்டைக் கட்டவும் இரவுக்கு மேல் இரவு ஈர நிலவறையில் அவனோடு உட்கார்ந்திருக்கவும் வேண்டி இருந்தது.

உருமாற்றம்

அது சாத்தியம் இல்லை, எனினும் அது நிகழ்ந்தது; மேலும் திடீரென இல்லை, ஆனால் மிக மெதுவாக, ஒரு அதிசயம் அல்ல, ஆனால் ஒரு மிக இயற்கையான விஷயம், அது சாத்தியமற்றது எனினும். எங்கள் நகரத்தில் உள்ள ஒரு பெண் ஒரு கல்லாக மாறிவிட்டாள். ஆனால் அதற்கு முன்பும் கூட அவள் ஒரு சாதாரணமான பெண்ணாக இருந்திருக்கவில்லை என்பது தான் உண்மை: அவள் ஒரு மரமாக இருந்தாள். இப்பொழுது ஒரு மரம் காற்றில் அசைகிறது. ஆனால் செப்டம்பர் முடிவதற்கு அருகில் ஏதோ ஒருசமயம், இனிமேலும் அவள் காற்றில் அசையாமல் இருக்கத் தொடங்கினாள். பல வாரங்களுக்கு அவள் கொஞ்சம் கொஞ்சம் அசைந்தாள். பிறகு அவள் அசையவே இல்லை. அவளது இலைகள் விழுந்த போது அவை திடீரென, மேலும் பயங்கர சப்தத்துடன் விழுந்தன.

அவை கூழாங்கற்கள் மீது மோதின மேலும் சில சமயங்களில் உடைந்து சிதறின மேலும் சில சமயங்களில் முழுமையாக இருந்தன. அவை விழுந்த இடத்தில் அங்கு ஒரு தீப்பொறி இருந்திருக்கும் மேலும் அவைகளுக்குப் அருகில் கொஞ்சமாக ஒரு வெள்ளைப் பொடி கிடந்தது. மக்கள், நானில்லை எனினும், அவளது இலைகளை சேகரித்தார்கள் மேலும் அவற்றை அடுப்பங்கரை மாடத்தில் போட்டு வைத்தார்கள். ஒவ்வொரு அடுப்பங்கரை மாடத்திலும் கல் இலைகள் கொண்ட ஒரு நகரம் அங்கே ஒருபோதும் இருந்ததில்லை. பிறகு அவள் சாம்பல் நிறத்தில் மாறினாள்: முதலில் நாங்கள் அதை ஒரு ஒளியென்று நினைத்தோம்.

சுருக்கம் விழுந்த நெற்றிகளோடு, எங்களில் இருபது பேர் ஒரே நேரத்தில் ஒரு வட்டமாக அவளைச் சுற்றி நின்று எங்கள் கண்களுக்கு நிழலூட்டுவோம், தாழ்த்தப்பட்ட எங்கள் தாடைகள்–மேலும் எங்களிடையே நாங்கள் கொண்டிருந்த ஒரு சில பற்கள், பார்ப்பதற்கான ஏதோ ஒன்றாக அது இருந்தது—மேலும் அது, அந்த நாளின் நேரம் அல்லது மாறிக்கொண்டிருக்கும் பருவம் அவளை சாம்பல் நிறத்தில் காணுமாறு செய்துவிட்டது என்று கூறினோம். ஆனால் விரைவில் அது தெளிவாகிவிட்டது, இப்பொழுது இவள் வெறும் சாம்பல் நிறம், அதே தான், இனிமேல் இவள் பெண்ணில்லை என்றும் இப்பொழுது இவள் வெறும் ஒரு மரம் என்றும் பல ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் ஒத்துக் கொண்ட அதே வழியில்.

ஆனால் ஒரு மரம் என்பது ஒரு விஷயம் மேலும் ஒரு கல் என்பது இன்னொரு விஷயம். சாத்தியமற்ற விஷயங்களில் கூட, நீங்கள் ஒத்துக்கொள்ளக் கூடியதற்கும் இங்கு ஒரு எல்லை இருக்கிறது.

௦௦௦

டார்வின் கொன்ற சிறுவன் ஆர்த்ரா கே எஸ். (1st year Mass Media Communication) தமிழில் : ஸ்ரீபதி பத்மநாபா

ஆர்த்ரா கே எஸ்.

ஸ்ரீபதி பத்மநாபா

( ‘This preservation of favourable variations and rejection of injurious variations ,I call

Natural selection ,or the Survival of the fittest ‘-Charles Darwin)

ஆஜானுபாகு எழுந்தபோது குறுபாகு கண்களிரண்டையும் இறுக்கி மூடிப் படுத்துக்கொண்டிருந்தான்.

’நேரமாச்சு’ ஆஜானுபாகு அவனைத் தொட்டு எழுப்பினான். குறுபாகு எழுந்திருக்கும் எண்ணமில்லாமல் ஒதுங்கிப் படுத்தான். முந்தைய நாள் இரவு எதுவும் சாப்பிட்டிருக்கவில்லை. குறுபாகு கண் திறந்தான். விருப்பம் இருந்தாலும் இல்லையென்றாலும் திங்கட்கிழமை முதல் ஐந்து நாட்கள் பள்ளிக்குப் போய்த்தான் ஆகவேண்டும்.

அவர்கள் யூனிஃபார்முக்குள் நுழைந்தார்கள். ஆஜானுபாகு குறுபாகுவின் கையைப் பிடித்து வேகமாக நடந்தான். பள்ளிப் பேருந்து காத்து நின்றது. இருவரும் இருக்கைக்குப் பின்புறமுள்ள கம்பியைப் பிடித்து ஒதுங்கி நிற்பார்கள். தலையை நிமிர்த்தி எட்டிப் பார்த்து சாலையில் பாயும் வண்டிகளை எண்ணுவார்கள். இருவரில் யாருக்கு அதிக எண்ணிக்கை வருகிறதோ அவனுக்கு வெற்றி. இப்படியாக நாட்கள் பள்ளியிலும் பள்ளிப் பேருந்திலும் படுக்கையிலும் தீர்ந்துகொண்டிருக்கின்றன.

இப்படியிருக்கையில் ஆஜானுபாகுவின் கைகள் நீளமாகத் துவங்கின. கால்களும் கூட . குறுபாகு ஆச்சரியப்பட்டான்.

ஒருமுறை டீச்சர் சொல்லியிருந்தார்கள். செல்கள்தான் வளர்ச்சியின் அடிப்படைப் புள்ளி என்று. குறுபாகு ஆஜானுபாகுவிடம் கேட்டான். ”கைகளும் கால்களும் எப்படி வளருது?”

’செல்கள் பிரிந்து வளரும்போது” – ஆஜானுபாகு சொன்னான்.

ஆஜானுபாகுவின் செல்கள் வேகமாகப் பிரிந்து வளர்ந்து நீண்டு வருகின்றன என்று குறுபாகுவுக்குத் தோன்றியது. என் செல்கள் வளர்வதற்கு மறந்துபோய்விட்டன போலும். அவற்றுக்கு நினைவு வரும்போது நானும் ஆஜானுபாகுவைப் போலப் பெரியவனாக வளர்வேன் என்று குறுபாகு எண்ணினான்.

பெயர்கள் ஆங்கில எழுத்து வரிசையில் அடுக்கி வைத்த பதிவேட்டில் ஆஜானுபாகுவும் குறுபாகுவும் அடுத்தடுத்து இருந்தார்கள்.

ஒரு நாள் அசெம்ப்ளியில் வரிசையாய் நிற்கும்போது PET டீச்சர் வந்து ஆஜானுபாகுவின் முன்னால் ஒரு கை தூரத்தில் நின்றிருந்த குறுபாகுவை முன்னால் கொண்டுபோய் நிறுத்தினார். உயரத்தின் ஆரோகண வரிசையில் அசெம்ப்ளி மறு உருவாக்கம் செய்யப்பட்டுக்கொண்டேயிருந்தது. அப்படியாக 760 நாட்கள் முடிந்தபோது குறுபாகு வரிசையின் முதல் ஆளாய் நின்றான். ஆஜானுபாகுவுக்கு வரிசையின் கடைசிக்கு பதவி உயர்வு கிடைத்தது.

ஒன்பதாம் வகுப்பு வந்தபோது ஆஜானுபாகு குறுபாகுவைவிட இரண்டு மடங்கு உயரமாகி இருந்தான். இரண்டு விகிதங்களில் இரண்டு உயரங்களில் ஒரே சாயலுள்ள இரண்டு முகங்கள்.

அன்று முதல்தான் ஏகப்பட்ட கண்கள் தன்னைப் பார்த்துக்கொண்டிருப்பதை குறுபாகு புரிந்துகொண்டான். பள்ளிக்கூடத்திலும் வெளியேயும் கண்களின் எண்ணிக்கை பெருகியது. உருண்ட கண்கள், சிறிய சீனக் கண் உள்ளவர்கள்… சிலர் தனக்கு மட்டும் புன்சிரிப்பை அளித்துப் போவது போல குறுபாகுவுக்குத் தோன்றியது.

ஒன்பதாம் வகுப்பில் வைத்துத்தான் நிறைய தியரிகளையும் விதிகளையும் கேள்விப்படத் துவங்கினார்கள். அது மட்டுமல்லாது, ஒன்பதாம் வகுப்பை அடையும்போது குழந்தைகள் பெரியவர்களாகிறார்கள் என்கிற ஒரு பொதுவான எண்ணமும் வந்துசேர்கிறது.

ஆதார் கார்டில் உள்ள பெயருக்கு அப்பால் பலப்பல பெயர்களில் அறியப்படுவர்கள்தான் ஆசிரியர்கள். காலங்களினூடே பெயர்கள் மாறி மாறி வருகின்றன. ஒன்பதாம் வகுப்பு மாணவர்களின் ‘STD’ ஆகிறார் பயாலஜி மேடம். ‘STD’ என்றால் ‘ஸ்டாண்டேர்ட்’.

பள்ளியின் மிக அழகான பெண். உயரமும் உடம்பும் சரி அளவில். கோதுமை நிறம். ’பயாலஜி கற்றுத்தர மிகத் தகுதியானவர்’ – மாணவர்கள் ரகசியமாகக் கூறிக்கொண்டார்கள். முன்பு அவரை சாண்டல் சோப்பின் விளம்பரத்தில் நடிக்க அழைத்தார்கள் என்றும் அவர் போகவில்லை என்பதும் கதைகளில் ஒன்று. நல்லதாகத்தான் போயிற்று, போயிருந்தால் பெரிய நடிகையாகி இருப்பார். பெரிய ரசிகர் கூட்ட்த்திடையே மூச்சு முட்டியிருப்பார்…. அதிர்ஷ்டவசமாக அப்படியெல்லாம் நிகழவில்லை. தன் முன்னால் அடங்கி அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கு உயிர்களைப் பற்றிய அறிவியல் கற்றுக்கொடுப்பதுதான் அவர் தன்னில் கண்ட கடமை. பரிணாம சித்தாந்தகளையும் உடலின் ரகசியங்களையும் கற்றுக்கொடுக்கிறார் அவர்.

வகுப்பில் எல்லோருக்கும் பயாலஜியிடம் ஒரு காதல் இருக்கிறது. குறுபாகுவுக்கும் ஸ்டேண்டர்ட் மேடத்திடம் காதலும் அதற்கு மேல் மரியாதையும் உண்டு. அதற்குப் பின்னால் ஆஜானுபாகு மட்டும் அறிகிற ஒரு கதையும் இருக்கிறது. அதை ஆஜானுபாகு இவ்வாறு நினைவுகூர்கிறான்:

’சுதந்திரத்தைக் கொண்டாடுகிற ஒரு ஆகஸ்ட் 15 அன்று மிட்டாயை நாவில் இனிக்கவைத்து கொடிகளை எண்ணி நடக்கிறபோதுதான் பள்ளி வாகனம் எங்களை ஏற்றிக்கொள்ளாமல் போய்விட்டதை அறிகிறோம். சுதந்திரமாக தனியார் பேருந்தில் ஏறிவிட்டோம். இடம் இல்லை. பயங்கரக் கூட்டம். நான் கையை நீட்டி மேல் கம்பியைப் பிடித்துக்கொண்டேன். குறுபாகு என்னைப் பிடித்துக்கொண்டான். பேருந்தின் ஆட்ட்த்திலும் நெரிசலிலும் சிக்கித் தவிக்கும் குறுபாகுவை அந்தப் பேருந்தில் இருந்த ஸ்டேண்டேர்ட் டீச்சர் பார்த்து, கை தொட்டு அழைத்து, மடியில் அமர்த்திக்கொண்டார். குறுபாகு மூச்சுகூட விடாமல் அசையாமல் 5 நிமிடங்கள் அவர் மடியில் குறுகி அமர்ந்திருந்தான், பாவம்.’

அந்தக் கதை இப்படி முடிகிறது.

அன்று இரவு குறுபாகு உறக்கம் வரும்வரை யோசித்தான்.

‘எதற்காக ஸ்டேண்டேர்ட் என்னை மடியில் உட்கார வைத்தார்? ஒன்பதாம் வகுப்பு படிக்கிற பையன் மடியில் உட்காரலாமா? அப்படியானால் ஆஜானுபாகுவை ஏன் அமர்த்தவில்லை?’

குறுபாகு அன்றும் உறங்கவில்லை. உறங்காத குழந்தையைப் போல ஓங்கி அழுது யாரையும் எழுப்பாமல், ஆஜானுபாகுவின் அருகில் கண்கள் திறந்து படுத்திருந்தான்.

அன்று அவன் தன் குறையில் இருக்கிற வசதிகளைப் பற்றிப் புரிந்துகொண்டான்.

அப்படியிருக்கும்போதுதான் டார்வின் அரங்கத்தில் நுழைகிறார். பயாலஜி வகுப்பில்தான் சார்லஸ் டார்வின் என்கிற அறிவியல் அறிஞரைப் பற்றி குறுபாகு முதன்முதலில் கேள்விப்படுகிறான். (Survival of the fittest). இயற்கையில் தகுதி உள்ளவை நிலைநிற்கும் என்றும் மற்றவை இருப்பிற்கான போராட்டத்தின் முடிவில் வம்சம் இழந்து போகுமென்றும் அவர் சொல்கிறார். இன்று நம்மைச் சுற்றி இருக்கும் உயிர்களெல்லாம் இருப்பிற்கான போராட்டத்தில் வெற்றி பெற்றவர்கள்தான்.

குறுபாகு ஆஜானுபாகுவிடம் கேட்டான் – பூமியில் நிலைநிற்பவை எல்லாம் பூமியை வென்றவர்களா? இல்லை. மனிதன் எல்லாவற்றையும் எளிமைப்படுத்திவிட்டான். ஹோமோசாப்பியன்ஸ் என்கிற உயிர்த் தொகுதி, இயற்கையின், தெரிந்தெடுப்பதற்கான குத்தகை உரிமையை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது. மனிதன் எல்லோருக்கும் வாழ்வதற்கான உரிமையை உறுதி செய்கிறான். மனிதன் பெரிய மனசுக்காரன். நோயாளியும் ஆரோக்கியவானும், புத்தி உள்ளவனும் இல்லாதவனும், திறனாளிகளும் மாற்றுத் திறனாளிகளும், குள்ளனும் குள்ளமல்லாதவனும் பூமியில் வாழலாம். மனிதனின் விதிகள் இயற்கையின் விதிகளை வென்றுவிட்டது.

ஆஜானுபாகு ஸ்மாலும்(S) மீடியமும்(M) லார்ஜும்(L) கடந்து எக்ஸ்ட்ரா லார்ஜுக்குள்(XL) நுழைந்துவிட்டான். குறுபாகு தன் கைகளைப் பார்த்தான். அவை நீளமாவதே இல்லை. ஆஜானுபாகுவின் செல்களைப் போலப் பிரிந்து வளர்வதில்லை. தன் செல்கள் பிரியவும் வளரவும் மறந்துபோய் விட்டன.

துணிக் கம்பெனிகள் கைவிட்டுவிட்ட தன் உடலின் நிர்வாணத்தை மறைக்க, டெய்லர்கள் வம்ச நாசம் அடைந்துவிட்ட இந்த ஊரில், குழந்தைகளின் உடைகளைத்தான் அவன் அணிய வேண்டியிருக்கிறது. பல நிறங்களிலும் டிசைன்களிலும் உருவாக்கப்பட்ட துணிகள் குறுபாகுவின் உடலில் அந்நியப்பட்டுக் கிடந்தன.

குறுபாகு ஆஜானுபாகுவைப் பார்த்தான். ஒரே பாத்திரத்தில் உண்டாக்கப்பட்டவர்கள். ஒரே நேரத்தில் பூமிக்கு வந்தவர்கள். ஒரே மாதிரி வளர்ந்தவர்கள்.

குறுபாகுவுக்கு தன்னை மடியில் அமரவைத்த டீச்சரிடமும் ஸிம்பதி அளித்த கண்களிடமும் வளராத செல்களிடமும்…. அப்புறம், மனிதன் தோற்கடித்த இயற்கையிடமும் இறுதியாய் டார்வினடமும் கோபம் வந்தது.

ஆஜானுபாகு உறங்கிக்கொண்டிருந்தான். குறுபாகு உறங்கவில்லை. கண்களில் அழுத்தம் அதிகமாகிக்கொண்டு வருவதை உணர்ந்தான். ஒரூ நீண்ட கனவிற்கான உள் அழைப்பு வந்தது. அங்கே குறுபாகு தனியாக இருந்தான். காட்டின் நடுவில், இருளில், இரண்டு கண்கள் ஒளிர்கின்றன. ஒரு செந்நாய் கூர்மையான பற்களைக் காட்டியபடி நின்றுகொண்டிருக்கிறது. குறுபாகு ஆஜானுபாகுவைத் தேடினான். யாரும் இல்லை. குறுபாகு பயப்படவில்லை. அழவில்லை. செந்நாயுடன் போரிட்டான். கூர்மையான கல்லை எடுத்துக் குத்தினான். உருளைக் கல்லெடுத்து எறிந்தான். செந்நாய் மயக்கமுற்றுக் கீழே விழுந்தது. குறுபாகு ஓடினான்… திரும்பிப் பார்க்காமல் பயத்தை மறைத்துக் கொண்டு ஓடினான். எங்கேயும் யாரும் இல்லை. காடு தீரும் வரை ஓடினான்.

தான் நிர்வாணமாயிருப்பதை அறிந்து காட்டின் முடிவில் தளர்ந்து போய் அமர்ந்தான். இதற்கு அப்பால் நகரம்தான். அங்கே யாரும் தன்னைத் தாக்க வரமாட்டார்கள். குறுபாகு நிர்வாணத்தை மறந்து நகரத்தை நோக்கி நடந்தான்.

நகரம் அவனுக்கு முன்னால் வரிசையாய்க் காத்திருக்கிறது. ஆஜானுபாகுவைப் போல உயரமாக, பெரிதாக உள்ளவர்கள் அவனுடைய குறுகிய கைகளையும் மெலிந்த கால்களையும் அவமதிப்புடன் உற்றுப் பார்க்கிறார்கள். STD மேடத்தைப் போன்ற ஒரு பெண்மணி கண்ணீர் வடிக்கிறார்கள். அவர்களில் ஒரு ஆள் திடீரென்று ஓடி வந்து குறுபாகுவைப் பிடித்து ஒரு மரப்பலகையில் படுக்க வைத்தான். அவர் குறுபாகுவின் கைகளையும் கால்களையும் பிடித்து இழுத்து நீட்டத் துவங்கினார். குறுபாகு வலியால் துடித்து உரக்க அழுதான். யாரோ குறுபாகுவின் வளர்ச்சி குன்றிய குறியைப் பிடித்து அழுத்தினார்கள். குறுபாகு ஓங்கி அலறினான். அவர்களின் கூர்மையான பற்கள் அவனுடைய மிருதுவான தோலில் அழுந்தி இறங்கின. குறுபாகு தான் வெற்றிபெற்றுவிட்டதாகக் கூச்சலிடவில்லை.

அடுத்த நாள் காலையில் இரண்டு சுவர் எழுத்துகளுக்குக் கீழே இரண்டு பேர் கிடந்தார்கள்.

இரண்டு சித்தாந்தங்கள் தீப்பிடித்து எரிந்தன. வலுவுள்ளவன் வாழ்கிறான் (survival of the fittest). வலுவில்லாதவன் மரணமடைகிறான் (death of an unfit).

டார்வின் மேல் வழக்குத் தொடரப்பட்ட்து. பல பயங்கரமான சம்பவங்களுக்கு பின்னணியாக இருப்பது டார்வினின் சித்தாந்தம்தான் என்று கூறப்பட்டது. கல்வித்திட்டத்திலிருந்து டார்வினின் பரிணாமக் கொள்கை நீக்கம் செய்யப்பட்டது. ஆதியிலே வார்த்தை இருந்தது என்றும் அந்த வார்த்தை தேவனிடத்தில் இருந்தது என்றும் அந்த வார்த்தை தேவனாயிருந்தது என்றும் அருளிச் செய்யப்பட்டது.

ஆஜானுபாகு உறக்கத்திலிருந்து எழுந்தான். இன்று திங்கட்கிழமை.

****

வீட்டிலிருந்து கடிதம் ( சிறுகதை ) : ஜமைக்கா கின்கெய்ட் தமிழில்: சமயவேல்

Jamaica Kincaid

நான் பசுக்களில் பால் கறந்தேன், நான் வெண்ணெய் கடைந்தேன், நான் பாலடைக்கட்டியைப் பத்திரப்படுத்தினேன், ரொட்டி சுட்டேன், தேநீர் தயாரித்தேன், குழந்தைகளுக்கு உடைகள் போட்டுவிட்டேன்; பூனை மியாவ் என்று கத்தியது, நாய் குரைத்தது, குதிரை கனைத்தது, எலி கிறீச்சிட்டது, ஈ ரீங்கரித்தது, ஒரு குவளைக்குள் வசிக்கும் தங்கமீன் அதன் தாடைகளை விரித்தது; கதவு பலமாக அடித்து மூடியது, படிகள் கிரீச்சிட்டன, குளிசாதனப்பட்டி ஹம் ஒலி எழுப்பியது, திரைச்சீலைகள் அலைந்து உயர்ந்தன, அடுப்பிலிருந்து எரிவாயு உஸ் என்று சீறியது, உறைபனியால் கனத்த மரக்கிளைகள் ஒடிந்து கூரை மேல் விழுந்தன; எனது இதயம் தட்! தட்! என்று சப்தமாகத் துடித்தது, தண்ணீரின் மிகச்சிறிய மணிகள் எனது மூக்கின் மேல் துளிர்த்தன, எனது முடி துவண்டது, எனது இடுப்பு மடிப்புகளை வளர்த்தது, நான் எனது தோலை உதிர்த்தேன்; உதடுகள் நடுங்குகின்றன, கண்ணீர் வழிகிறது. கன்னங்கள் ஊதிவிட்டன, வயிற்றுக்குள் வலி புரள்கிறது; நான் ஊர்ப்பக்கம் போனேன், எனது கார் பழுதாகி நின்றது, நான் திரும்ப நடந்தேன்; படகு கிளம்பியது, அலைகள் விட்டுவிட்டு எழுந்தன, அடிவானம் கவிழ்ந்திருந்தது, துறைமுகத் தளம் சிறிதாகிக் கொண்டே போனது. காற்று பயமூட்டியது, சில தலைகள் குலுங்கின, சில கைக்குட்டைகள் படபடத்தன. இழுப்பறைகள் மூடப்படவில்லை, குழாய்கள் ஒழுகின, பெயிண்ட் உரிந்திருந்தது, சுவர்கள் கீறல் விட்டிருந்தன, புத்தகங்கள் குலைந்து கிடந்தன, தரை விரிப்பு இனியும் வெளியே சமதளத்தில் கிடக்காது; நான் எனது உணவைச் சாப்பிட்டேன், ஒவ்வொரு கவளத்தையும் முப்பத்து இரண்டு முறைகள் மென்றேன், நான் கனமாக விழுங்கினேன், எனது குதிங்கால் குணமாகிவிட்டது; அங்கு, ஒரு இரவு இருந்தது, அது இருட்டாக இருந்தது, அங்கு ஒரு நிலவு இருந்தது, அது பூரணமாக இருந்தது, அங்கு ஒரு படுக்கை இருந்தது, அது தூக்கத்தைப் பிடித்து வைத்திருந்தது, அங்கு அசைவு இருந்தது, அது விரைவாக இருந்தது, அங்கு ஒரு உயிர் இருந்தது, அது அசையாமல் நின்றது, அங்கு ஒரு வெளி இருந்தது, அது நிறைந்திருந்தது, பிறகு அங்கு எதுவுமே இல்லை; ஒரு மனிதன் வாசலுக்கு வந்து கேட்டான், “குழந்தைகள் இன்னும் தயாராகவில்லையா? அவர்கள் தங்களது அம்மாக்களின் பெயர்களைக் கொண்டிருப்பார்களா? அடுத்தற்குப் பிறகு வரும் திங்கட்கிழமை எனது பிறந்தநாள் வருகிறது என்பதை ஒருவேளை நீ மறந்துவிட்டாயோ? என்னைப் பார்க்க நீ மருத்துவ மனைக்கு வருவாயா?”; நான் எழுந்து கொண்டேன், நான் உட்கார்ந்தேன், நான் மீண்டும் எழுந்து கொண்டேன்; கடிகாரம் மெதுவாக ஓடியது, தபால் தாமதமாக வந்தது, மதியம் குளுமையாக மாறியது; பூனை அவனுடைய கோட்டை நக்கியது, நாற்காலியைக் கிழித்துக் குதறியது, மூடியிருக்காத ஒரு இழுப்பறையில் படுத்துத் தூங்கியது; நான் ஒரு அறைக்குள் நுழைந்தேன், எனது தோல் நடுங்குவதை உணர்ந்தேன், பிறகு மறைந்தது, நான் ஒரு மெழுகுவர்த்தியைப் பொருத்தினேன், ஏதோ நகர்வதை நான் பார்த்தேன், நிழல், எனது சொந்தக் கையாக இருப்பதை நான் அறிந்து கொண்டேன், நான் என்னையே ஒரு பொருளாக இருப்பதாக உணர்ந்தேன்; காற்று கடினமானதாக இருந்தது, வீடு ஆடியது, தோல்மூடிய விதைகள் செழித்து வளர்ந்தன, பாலூட்டிகள் போன்ற ஊர்ந்து செல்லும் ஜந்துகள் மறைந்தன ( சொர்க்கம் மேலே இருக்க வேண்டுமா? நரகம் கீழிருக்கிறதா? ஆட்டுக் குட்டிகள் இன்னும் சாதுவாகக் கிடக்கின்றனவா? சிங்கம் கர்ஜிக்கிறதா? ஓடைகள் எல்லாம் தெளிவாக ஓடுகின்றனவா? பின்னர் நாம் ஒருவரை ஒருவர் ஆழமாக முத்தமிட்டுக் கொள்ளலாமா?); தீபகற்பத்தில் சில புராதனக் கப்பல்கள் நங்கூரமிட்டு நிற்கின்றன, வயலில் எருமை அசையாமல் நிற்கிறது, கிராமத்தில் சிறுத்தை அதன் இரையைத் துரத்துகிறது; கட்டிடங்கள் உயரமாக இருக்க வேண்டும், கட்டுமானங்கள் திடமுடன் இருக்க வேண்டும், படிக்கட்டுகள் வளைந்து வளைந்து இருக்க வேண்டும், அறைகளில் சிலநேரங்களில் அங்கொரு பிரகாசம் இருக்க வேண்டும்; தொப்பிகள், தொப்பி-தாங்கி மேலேயே இருக்க வேண்டும், கோட்டுகள் கொக்கிகளிலேயே இறந்து தொங்க வேண்டும், பூங்கோரைகள் பூக்கப் போவது போலத் தோன்றும்—அவைகளின் நறுமணம் தோற்கடித்துவிடும் என்பதை நான் அறிவேன்; பூமி அதன் அச்சில் சுழல்கிறது, அச்சு கற்பனையானது, பள்ளத்தாக்குகள் மலைகளுடன் உரையாடும், மலைகள் கடலுடன் உரையாடும், கடல் உலர் நிலங்களோடு உரையாடும், உலர் நிலங்கள் இப்பொழுது கைகால்கள் தரிக்கப்பட்ட பாம்புகளுடன் உரையாடும்; நான் ஒரு மனிதனைப் பார்த்தேன், அவன் ஒரு போர்வைக்குள் இருந்தான், நான் ஒரு துடுப்புப் படகில் உட்கார்ந்திருந்தேன், எனக்காக அவன் இனிமையாய் விசிலடித்தான், நான் எனது கண்களைச் சுருக்கிக் கொண்டேன், அவன் எனக்கு சைகை செய்தான், வா இப்பொழுது; நான் திரும்பினேன், நான் என்ன செய்கிறேன் என்பதை அறியாதவள் போல நான் துடுப்பைச் செலுத்தி வெளியேறினேன்.

௦௦௦௦௦௦ .

இரவில் ( சிறுகதை ) : ஜமைக்கா கின்கெய்ட் – தமிழில் : சமயவேல்

ஜமைக்கா கின்கெய்ட்

இரவில், நடுநிசிக்குச் செல்லும் வழியில், இரவு, மிகச்சிறிய மிடறுகளாக வகுக்கப்படாத ஒரு இனிப்புப் பானமாக இருந்தபோது, நடுநிசி, நடுநிசிக்கும் முன்பு இப்போது என்பது அங்கு இல்லாதபோது, அல்லது நடுநிசிக்குப் பின்பு இப்போது, சில இடங்களில் இரவு உருண்டையாக இருந்தபோது. சில இடங்களில் தட்டையாக, மற்றும் சில இடங்களில் ஒரு ஆழத்துளை போல, விளிம்பில் நீலநிறத்தில், உட்புறம் கறுப்பாக, இரவுக்-கழிவுத் துப்புரவாளர்கள் வருகிறார்கள்.

அவர்கள் வரவும் போகவும், ஈரத்தரை மேல் வைக்கோல் காலணிகளுடன் நடந்து கொண்டிருக்கிறார்கள். வைக்கோல் காலனிகளுக்குள் இருக்கும் அவர்களது பாதங்கள் ஒரு கிறுக்குகிற சப்தத்தை எழுப்பின. அவைகள் எதையும் சொல்வதில்லை.

இரவுக்-கழிவுத் துப்புரவாளர்களால் மரங்களில் ஒரு பறவை நடப்பதைப் பார்க்க முடியும். அது ஒரு பறவை இல்லை. அது தனது தோலைக் கழற்றியிருந்த பெண், அவளது ரகசியப் பகைவர்களின் ரத்தத்தைக் குடிக்கப் போய்க் கொண்டிருக்கிறாள். அது ஒரு பெண், மரத்தால் செய்யப்பட்ட ஒரு வீட்டின் ஒரு மூலையில் தனது தோலை விட்டுவிட்டு வந்திருப்பவள். அது ஒரு பெண், அவள் நியாயமானவள் மற்றும் செம்பருத்திகளின் தேனீக்களைப் புகழ்கிறவள். அது ஒரு பெண், அவள், ஒரு நகைச்சுவையாக, தாகமாக இருக்கும்போது ஒரு கழுதையைப் போலக் கனைக்கிறாள்.

அங்கு ஒரு சிள்வண்டு சப்தமிடுகிறது, அங்கு ஒரு தேவாலயத்தின் மணியோசை கேட்கிறது, அங்கு இந்த வீடு கிறீச்சிடும் சப்தம், அந்த வீட்டின் மற்றும் பிற வீடுகளின் கிறீச்சிடல், அவை தரைக்குள் நிலைத்து இருப்பதால் கிறீச்சிடுதல்கள். அங்கு தூரத்திலிருந்து ஒரு வானொலியின் ஒலி—ஒரு மீனவர் மெரெங்க்யூ1 இசையைக் கேட்டுக் கொண்டிருந்தார். அங்கு ஒரு மனிதன் தூக்கத்தில் குறட்டைவிடும் சப்தம்: அங்கு அவனது குறட்டையால் வெறுப்படைந்த பெண் கத்தும் சப்தம். அங்கே அந்த ஆள் அந்தப் பெண்ணைக் கத்தியால் குத்தும் சப்தம்,

தரையை மோதும் அவளது ரத்தத்தின் சப்தம், பாதுகாவலர் திரு.ஸ்ட்ராஃபி அவளது உடலை வெளியே எடுத்துச் செல்லும் சப்தம். அங்கே இறப்பிலிருந்து மீண்ட அவளது ஆவி, குறட்டை விடும் வழக்கமுள்ள ஆளைப் பார்த்துக் கொண்டிருக்கும் சப்தம்; அவனுக்கு எப்போதும் ஒரு காய்ச்சல் அடித்துக்கொண்டே இருந்தது. அங்கு ஒரு பெண் கடிதம் எழுதிக் கொண்டிருக்கும் சப்தம்; அங்கு வெள்ளைத் தாளில் அவளது பேனா முள் எழுதும் சப்தம்; அங்கு மண்ணெண்ணெய் விளக்கு மங்கிக் கொண்டிருக்கும் சப்தம்; அங்கு அவளது தலை வலித்துக் கொண்டிருக்கும் சப்தம்.

மழை விழுந்து கொண்டிருக்கிறது தகரக் கூரைகளில், மரங்களில் உள்ள இலைகளில், முற்றத்தில் இருந்த கற்களின் மேல், மணல் மேல், தரை மேல். இரவு சில இடங்களில் ஈரமாகவும் சில இடங்களில் வெதுவெதுப்பாகவும் இருக்கிறது.

அங்கு திரு.ஹிஸார்டு இருக்கிறார், முழுவதும் பூத்திருக்கும் ஒரு செடார் மரத்தின் அடியில் நின்றுகொண்டு, அந்த நேர்த்தியான வெள்ளை சூட்டை அணிந்திருந்தார், அதற்குள் அவர் புதைக்கப்பட்ட நாளில் இருந்த அதே புத்தம் புதியதாக அது இருந்தது. வெள்ளை சூட் இங்கிலாந்திருந்து பழுப்பு நிற பொட்டலத்தில் வந்தது: “ஏற்பு: திரு.ஜான் ஹிஸார்டு,” மற்றும் இத்யாதி இத்யாதி. திரு.ஹிஸார்டு மரத்துக்குக் கீழே நிற்கிறார், அவரது நேர்த்தியான சூட்டை அணிந்துகொண்டு மற்றும் அவரது கையில், முழுவதும் ரம் நிரம்பிய ஒரு கோப்பையைப் பிடித்தவாறு—அவர் இறப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன்பு அவர் கையில் பிடித்திருந்த, முழுக்க ரம் நிரம்பிய அதே கோப்பை—மற்றும் அவர் வாழ்ந்து வந்த வீட்டைப் பார்த்துக் கொண்டு.

இப்பொழுது வீட்டில் வசிக்கும் மனிதர்கள், திரு.ஹிஸார்டு அவரது அருமையான சூட்டை அணிந்து கொண்டு மரத்துக்கு அடியில் நிற்பதை அவர்கள் பார்க்கும் போது, பின்வாசல் வழியே நடக்கிறார்கள். திரு.ஹிஸார்டு அவரது அக்கார்டியனைத் தேடுகிறார்; அவரது பாதத்தை அவர் தாளமிட்டுத் தட்டிக் கொண்டே இருக்கும் சீரை வைத்து உங்களால் கூறமுடியும்.

௦௦௦௦௦௦

எனது கனவில் ஒரு குழந்தை பிறந்து கொண்டிருப்பதை நான் கேட்க முடிகிறது. நான் இதன் முகத்தைப் பார்க்க முடிகிறது, ஒரு கூர்ந்த குட்டி முகம்—மிக அருமை. நான் இதன் கைகளைப் பார்க்க முடிகிறது—மிக அருமை, மீண்டும். இதன் கண்கள் மூடியிருக்கின்றன. இது சுவாசிக்கிறது, குட்டிக் குழந்தை. இது சுவாசிக்கிறது. இது ஆட்டுக்குட்டி போலக் கத்துகிறது, குட்டிக் குழந்தை. இது ஆட்டுக்குட்டி போலக் கத்துகிறது. குழந்தையும் நானும் இப்பொழுது புல்வெளியை நோக்கி நடந்து கொண்டிருக்கிறோம். குழந்தை அதன் மென்மையான இளஞ்சிவப்பு உதடுகளால் பசும்புல்லைச் சாப்பிடுகிறது. அம்மா எனது தோள்களைத் தொட்டு என்னை உலுக்குகிறார். எனது அம்மா கூறுகிறார், “ குட்டிப் பெண்ணே, குட்டிப் பெண்ணே.” நான் எனது அம்மாவிடம் கூறுகிறேன், “ஆனால் இது இன்னும் இரவாக இருக்கிறதே.” அம்மா கூறுகிறார், “ ஆமாம், ஆனால் நீ உனது படுக்கையை மீண்டும் நனைத்துவிட்டாய்.” மற்றும் எனது அம்மா, இன்னும் இளமையாக இருப்பவர், இன்னும் அழகாக, மற்றும் இன்னும் இளஞ்சிவப்பு உதடுகளுடன் எனது ஈரமான நைட்கவுனைக் கழற்றுகிறார், படுக்கையிலிருந்து ஈரமான விரிப்பை அகற்றுகிறார். எனது அம்மாவால் எலலாப் பொருள்களையும் மாற்ற முடியும். எனது கனவில் நான் இரவில் இருக்கிறேன்.

“மலைகளில் இருப்பது என்ன வெளிச்சங்கள்?”

“மலைகளில் உள்ள வெளிச்சங்களா? ஓ, அது ஜப்லெஸ்ஸி2.”

“ஒரு ஜப்லெஸ்ஸி! ஆனால் ஏன்? ஜப்லெஸ்ஸி என்பது என்ன?”

“எதுவாகவும் மாற முடிகிற ஒரு ஆள் அது. ஆனால் அவர்களது கண்கள் காரணமாக அவர்கள் உண்மையில்லை என்பதை நீ கூறிவிட முடியும். அவர்களது கண்கள் விளக்குகள் போல ஒளிரும், உன்னால் பார்க்க முடியாதவாறு மிகப் பிரகாசமாக இருக்கும். அதைக் கொண்டு தான் அது ஒரு ஜப்லெஸ்ஸி என்று உன்னால் கூற முடியும். அவைகளுக்கு மலைகளில் ஏறவும் ஊர்சுற்றித் திரியவும் பிடிக்கும். ஒரு அழகான பெண்ணைப் பார்க்கும்போது நன்கு கவனமாக இருக்க வேண்டும். ஒரு ஜப்லெஸ்ஸி எப்போதும் ஒரு அழகான பெண்ணைப் போல இருக்க முயற்சிக்கிறது.”

௦௦௦௦௦௦

ஒருவரும் எப்போதும் என்னிடம் சொல்லியதில்லை, “எனது அப்பா, ஒரு இரவுக்-கழிவுத் துப்பரவாளர், மிக அருமையானவர் மற்றும் மிக அன்பானவர். அவர் ஒரு நாயைக் கடக்கும்போது அதற்கு ஒரு உதையை அல்ல, மெல்லத் தட்டிக் கொடுக்கிறார். அவருக்கு ஒரு மீனின் எல்லாப் பாகங்களும் பிடிக்கும் ஆனால் தலையை விசேஷமாகப் பிடிக்கும். அவர் மிக ஒழுங்காக சர்ச்சுக்குச் செல்கிறார் மற்றும் அவர், அவருக்குப் பிடித்தமான பாட்டான “ஒரு பலமான கோட்டை எங்கள் பரமபிதா”வை ஊழியக்காரர் அறிவிக்கும்போது எப்போதும் சந்தோஷமடைவார். இளஞ்சிவப்பு சட்டைகளையும் இளஞ்சிவப்பு கால்சராய்களையும் அணிவதற்கு அவர் விரும்புவார் ஆனால் அந்த நிறம் ஒரு ஆணுக்குரியதல்ல என்பதுவும் அவருக்குத் தெரியும், ஆகையால் பதிலாக, அவருக்குப் பிடிக்கவே பிடிக்காத அடர்நீலத்தையும் பழுப்பையும் அணிகிறார். அவர் எனது அம்மாவை ஒரு நீண்ட காலத்திற்கு முன்பு இங்கே பேருந்து என்ற மாறுவேடத்தில் அலைவதில் சந்தித்தார், இன்னும் அவர் விசிலடிப்பதை விரும்புகிறார்.

ஒருமுறை ஒரு பேருந்தைப் பிடிக்க ஓடுகையில் அவர் கீழே விழுந்து அவரது மணிக்கட்டு உடைந்து, ஒரு வாரம் மருத்துவமனையில் இருக்க வேண்டியாகியது. இது அவரை மிகப் பரிதாபகரமாக ஆக்கியது, ஆனால் அவரது வெள்ளைக் கட்டில் அருகில் நானும் அம்மாவும் மஞ்சள் ரோஜாக்களின் கொத்தோடு நின்று குனிந்து அவரைப் பார்த்துப் புன்னகைப்பதைக் கண்ட போது அவர் ஒரு சிறிது உற்சாகம் அடைந்தார். பிறகு அவர் கூறினார், “ ஓ, என்னோட, ஓ, என்னோட.” அவர், எனது அப்பா, இரவுக்-கழிவுத் துப்புரவாளர். ஒரு பெரிய சீமைநூக்கு மரத்தடியில் ஒரு பெரிய கல்லின் மீது உட்கார்ந்து, சோற்றாலும் ரத்தப் பொரியலாலும் நிரப்பப்பட்ட மிருகங்களின் குடல்களைச் சாப்பிட்டுக் கொண்டும் ஜிஞ்சர் பீரை அருந்திக் கொண்டும் குழந்தைகள் விளையாட்டுக்-கிரிக்கட் ஆடுவதைப் பார்த்துக் கொண்டிருப்பதையே அவர் மிக அதிகம் விரும்புகிறார்.

அவர் என்னிடம் இதைப் பல முறை கூறியிருக்கிறார்: “என் அன்பே நான் மிக அதிகம் செய்ய விரும்புவது,” மேலும் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருகிறார். அவர் எப்பொழுதும் தாவரவியல் புத்தகங்களை வாசித்துக் கொண்டிருகிறார் மேலும் ரப்பர் தோட்டங்களையும் ரப்பர் மரங்களையும் பற்றி மிக அதிகம் தெரிந்து வைத்திருக்கிறார்; ஆனால் இது நான் விளக்க முடியாத ஒரு ஆர்வம், ஏனெனில் அவர் எப்போதும் பார்த்திருக்கிற ஒரே ஒரு ரப்பர் மரம், தாவரவியல் பூங்காவில் விசேஷமாக வளர்க்கப்பட்ட ஒன்று தான். எனது பள்ளிக் காலணிகள் வசதியாகவும் பொருத்தமாகவும் இருக்கிறதா என அவர் பார்த்துக் கொள்கிறார். இரவுக்-கழிவு மனிதரான எனது அப்பாவை நான் நேசிக்கிறேன். இரவுக்-கழிவு மனிதரான எனது அப்பாவை எனது அம்மா நேசிக்கிறார்.

ஒவ்வொருவரும் அவரை நேசிக்கிறார்கள் அவரைப் பார்க்கும் போதெல்லாம் கையசைக்கிறார்கள். அவர் மிகவும் அழகு, தெரிந்து கொள்ளுங்கள், பெண்கள் அவரை இரண்டு முறை பார்ப்பதை நான் கண்டிருக்கிறேன். விசேஷ தினங்களில் இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்ட ஒரு பழுப்பு மென்கம்பளித் தொப்பியை அணிகிறார். மேலும் ஒரு பழுப்பு தோல் சூவையும் அணிகிறார் அதுவும் இங்கிலாந்திலிருந்து வரவழைக்கப்பட்டது. சாதாரண நாட்களில் வெறும் தலையுடன் செல்கிறார். அவர் என்னை அழைக்கும்போது நான் கூறுகிறேன், ‘ஆமாம், அய்யா.’ எனது அம்மாவின் பிறந்த நாளில் அவர் எப்பொழுதுமே ஒரு புது உடைக்கான ஏதாவது அருமையான துணியை வாங்கிப் பரிசளிக்கிறார். அவர் எங்களுக்கு மகிழ்ச்சி உண்டாக்குகிறார், எனது அப்பா, இரவுக்-கழிவுத் துப்புரவாளர், மேலும் அவர் வாசித்திருக்கும் சர்க்கஸ் என்னும் ஏதோ ஒன்றுக்கு ஒருநாள் எங்களை அழைத்துச் செல்வதாக அவர் வாக்குறுதி அளித்திருக்கிறார்.”

௦௦௦௦௦௦

இரவில் பூக்கள் கூம்பிக் கனத்துப் போகின்றன. செம்பருத்திப் பூக்கள், தீக்கொன்றைப் பூக்கள், பட்டன் பூக்கள், வானவில் பூக்கள், வெண்தலைப் புதர்ப் பூக்கள், லில்லிகள், கத்தாழைப்புதர்ப் பூக்கள், ஆமை இலந்தைப்புதர் மேல் உள்ள பூக்கள் முள்ளு சீத்தாமரத்தில் இருக்கும் பூக்கள், சீத்தாப்பழ மரம் மேல் இருக்கும் பூக்கள், மாமரத்தின் மேல் இருக்கும் பூக்கள், கொய்யா மரத்தின் மேல் இருக்கும் பூக்கள், செடார் மரத்தின் மேல் இருக்கும் பூக்கள், அழுகிய குதிங்கால் மரம் மேல் இருக்கும் பூக்கள், டம்ப் மரப் பூக்கள், பப்பாளி மரப் பூக்கள், எங்கெங்கும் கூம்பியும் கனத்தும் போன பூக்கள் வெறுத்துவிட்டன.

எவரோ ஒருவர், ஒரு கூடை செய்து கொண்டிருக்கிறார், எவரோ ஒருவர் செய்து கொண்டிருக்கிறார் ஒரு பெண் ஒரு உடை அல்லது ஒரு பையன் ஒரு சட்டை, எவரோ ஒருவர் அவளது கணவருக்கு நாளைக்கு கரும்பு வயலுக்கு எடுத்துச் செல்வதற்காக மரவள்ளிக்கிழங்கு சூப் செய்து கொண்டிருக்கிறார், எவரோ ஒருவர் அவரது மனைவிக்கு ஒரு அழகிய சீமைத்தேக்குப் பெட்டி செய்கிறார், எவரோ ஒருவர் ஒரு மூடிய கதவுக்கு வெளிப்புறம் ஒரு நிறமற்ற பொடியைத் தூவிக் கொண்டிருக்கிறார் எவரோ ஒருவருடைய குழந்தை இறந்து பிறக்குபடியாக, எவரோ ஒருவர் பிரார்த்தனை செய்கிறார் வெளிநாட்டில் செழிப்பாக வாழும் கெட்ட குழந்தை நல்லதாக மாறும் என்று மேலும் புதிய துணிகள் நிரம்பிய ஒரு மூட்டையை அனுப்புகிறார், எவரோ ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கிறார்.

௦௦௦

இப்பொழுது நான் ஒரு இளம்பெண், ஆனால் ஒருநாள் நான் ஒரு பெண்ணையே திருமணம் செய்வேன்—முட்புதர் போல் அடர்ந்த முடியும் பழுப்பு நிறக் கண்களும் கொண்ட ஒரு சிவப்புத்-தோல் பெண், மிகப்பெரிய ஸ்கர்ட்களை, அவற்றுக்குள் எனது தலையை எளிதாகப் புதைக்க முடியும், அணிபவள் அவள்.இந்தப் பெண்ணை நான் திருமணம் செய்து கொள்ள விரும்புவேன் மேலும் கடலுக்கு அருகில் உள்ள ஒரு மண் குடிசையில் அவளோடு வாழ்வேன். மண் குடிசைக்குள் இரண்டு நாற்காலிகள், ஒரு மேஜை, மண்ணெண்ணெய்யில் எரியும் ஒரு தீபம், ஒரு மருந்துப் பெட்டி, ஒரு பானை, ஒரு படுக்கை, இரண்டு தலையணைகள், இரண்டு விரிப்புகள், ஒரு முகம்பார்க்கும் கண்ணாடி, இரண்டு சாஸர்கள், இரண்டு சாப்பாட்டுத் தட்டுகள், இரண்டு முட்கரண்டிகள், இரண்டு குடி-நீர்த் தம்ளர்கள், ஒரு சீனக்களிமண் பானை, இரண்டு தூண்டில்கள், எங்கள் தலைகள் மேல் சுடும் சூரியனை மறைக்கும் இரண்டு வைக்கோல் தொப்பிகள், நாங்கள் மிகக் குறைவாகப் பயன்படுத்தும் பொருட்களை வைப்பதற்காக இரண்டு டிரங்குப்பெட்டிகள், ஒரு கூடை, வெற்றுத் தாள்கள் கொண்ட ஒரு நோட்டுப்புத்தகம், பன்னிரண்டு வெவ்வேறு நிற மெழுகுப் பென்சில்கள் நிரம்பிய ஒரு பெட்டி, ஒரு பிரவுன் காகிதத் துண்டில் சுற்றப்பட்ட ஒரு ரொட்டி, ஒரு நிலக்கரிப் பானை, ஒரு துறைமுகத் தளத்தில் நிற்கும் இரண்டு பெண்களின் படம் ஒன்று, அதே இரண்டு பெண்கள் தழுவிக் கொள்ளும் ஒரு படம், அதே இரண்டு பெண்கள் குட்பை சொல்லிக் கையசைக்கும் ஒரு படம், குச்சிகள் நிரம்பிய ஒரு தீப்பெட்டி. ஒவ்வொரு நாளும் இந்த சிவப்புத்-தோல் பெண்ணும் நானும் காலை உணவுக்கு ரொட்டியும் பாலும் சாப்பிடுவோம், புதர்களில் ஒளிந்து கொண்டு எங்களுக்குப் பிடிக்காத ஆட்கள் மேல் பசுஞ் சாணிக் கட்டிகளை எறிவோம், தென்னை மரங்களில் ஏறி தேங்காய்களைப் பறிப்போம், நாங்கள் பறித்த தேங்காய்களின் நீரைக் குடித்து தேங்காயைத் தின்போம், கடலில் கற்களை எறிவோம், ஜான் காளை முகமூடிகளை அணிந்து கொண்டு பள்ளியிலிருந்து வீடு திரும்பும் பாதுகாப்பற்ற குழந்தைகளைப் பயமுறுத்துவோம், மீன் பிடிக்கப் போய் எங்களுக்குப் பிடித்தமான நான்கே நான்கு மீன்களை மட்டும் இரவு உணவுக்கு வறுப்பதற்காக பிடித்து வருவோம், இரவு உணவில் வறுத்த மீனுடன் சேர்த்து உண்பதற்காக பச்சை அத்திப்பழங்களைத் திருடுவோம். ஒவ்வொரு நாளும் நாங்கள் இதைச் செய்வோம்.

ஒவ்வொரு இரவும் இந்தப் பெண்ணுக்காக நான் ஒரு பாடலைப் பாடுவேன்; சொற்களை எனக்குத் தெரியாது இன்னும், ஆனால் மெட்டு இருக்கிறது என் தலைக்குள். நான் மணக்க விரும்பும் இந்தப் பெண் பல விஷயங்களை அறிவாள், ஆனால் என்னை அழச் செய்வதற்கு ஒருபோதும் கனவு காணாத விஷயங்களைப் பற்றி மட்டும் எனக்குக் கூறுவாள்; மேலும் ஒவ்வொரு இரவும், மேலும் மேலும் என்னிடம் எதையாவது கூறுவாள் அது தொடங்குகிறது, “நீ பிறப்பதற்கு முன்னால்.” இதைப் போன்ற ஒரு பெண்ணையே நான் மணந்து கொள்வேன், மேலும் ஒவ்வொரு இரவும், ஒவ்வொரு இரவும் நான் முழுவதுமாக மகிழ்ச்சியாய் இருப்பேன்.

௦௦௦௦௦௦

குறிப்புகள்:

Merengue music…19ம் நூற்றாண்டின் மத்தியில் டொமினிகன் குடியரசில் தோன்றிய இசை லத்தீன் அமெரிக்க இசையாக மாறியது. அமெரிக்காவுக்குப் பரவி இன்று உலகம் முழுவதும் தெரிந்த பிரபல இசையாக இருக்கிறது.

Jablessee…கரீபிய நாட்டுப்புறக் கதைகளில் வரும் ஒரு பெண் பேய். அழகிய பெண் வடிவில் வரும் இதன் பக்கத்தில் செல்பவர்கள் இதன் கால்களில் பிளவுபட்ட குளம்புகளைக் காண முடியும். ஆனால் அதற்குள் அவர்கள் சிக்கிவிடுவார்கள்.
. . .

துண்டிக்கப்பட்ட தலையின் கதை ( முகம்மத் பர்ராடா – தமிழில் : கார்த்திகைப் பாண்டியன்

கார்த்திகைப் பாண்டியன்

முகம்மத் பர்ராடா (1938)

மொராக்கோவின் பழமைவாய்ந்த நகரமான ஃபெஸ்ஸில் பாரம்பரியமிக்க ஆனால் வறுமையில் உழன்றதொரு குடும்பத்தில் பிறந்தவர். புனைகதை எழுத்தாளர் மற்றும் விமர்சகர். இளமைக்காலத்தில் பிரெஞ்சு ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து தேச விடுதலைக்காகப் போராடினார்.

1975-ல் அராபிய இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பல வருடங்கள் ரபாத் நகரின் கிங் முகம்மது பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய பின் பாரிஸ் நகருக்குக் குடிபெயர்ந்தார். 1976-ல் மொரோக்கோ எழுத்தாளர்கள் கூட்டமைப்பின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய முதல் சிறுகதைத் தொகுப்பான Flaying Skins 1979-ல் வெளியான பிறகு புதினங்களையும் எழுதத் தொடங்கினார். அன்பு, கோபம் மற்றும் விசுவாசம் ஆகியவற்றை விரிவாகப் பேசிய பர்ராடாவின் The Game of Forgetfulness (1993) ஒரு அற்புதமான, சுயசரிதைத்தன்மையுடனான நாவல். The Fleeting Light (1993), Roses and Ashes (2000), Woman of Forgetfulness (2001) ஆகியவை இவருடைய மற்ற முக்கியமான ஆக்கங்கள்.

***

என் ரத்தம் நடைபாதையில் வழிந்தோடியது. வாளால் ஒரே வீச்சில் வெட்டி வீழ்த்தியதைப்போல, உடலை விட்டுப் பிரிக்கப்பட்டது என் தலை. பேருந்தோ பாரவண்டியோ ஏறிப்போகும்படி, தார்ச்சாலையின் மீது கைவிடப்பட்டதாக, எனது உயிரற்ற உடல் அங்கே கிடக்க நேர்ந்தது எனக்குள் வலித்தது. உடலைத் தூக்கும்படி என் கைகளுக்கு ஆணையிட முயற்சி செய்தேன், ஆனால் இனிமேலும் என்னுடைய கட்டளைகளுக்குக் கட்டுப்படும் நிலையில் அவை இல்லை என்பதை உணர்ந்தேன். எனது தமனிகளும் சிரைகளும் தரையின் மேல் ஒரு காட்டு நீரூற்றைப் போல பீய்ச்சியடித்தன, ஏதொவொரு செந்நிற ஊற்றினை நிர்மாணிக்கும் அரசாங்கப்பணியை விரைந்து முடிக்க விரும்புவதைப்போல குருதிக்கறை தரையில் பரவியது.

கடந்து சென்றவர்கள் தங்கள் பாதையில் போனார்கள், அவர்களின் பார்வை சிதறிக்கிடந்த என் குருதியின் மீது படிந்து மீண்டது. ரத்தத்தெறிப்புகளை வெறுமனே கடந்து போன அவர்கள் திரும்பிக்கூடப் பார்க்கவில்லை. ஒரு முதியவர் முணுமுணுப்பதைக் கேட்டேன். “அடக் கடவுளே!” (ரத்தச்சகதிக்குள் கால் வைத்து தனது காலணிகளை அவர் அழுக்காக்கிக் கொண்டிருந்தார்).
எனக்குள் மகிழ்ச்சி வெள்ளமெனப் பெருக்கெடுத்துச் செல்லும்முன் என்னைக் கொன்றவனை நான் கவனிக்கவே இல்லை: துண்டிக்கப்பட்ட எனது தலையால் இன்னும் அசையவும் பேசவும் முடிந்தது. என் கண்கள் முன்னும் பின்னுமாக அலைந்தன. என்ன செய்வது? இந்த வினோதமான சங்கதியை அவசரக்குடுக்கைகள் யாரேனும் கண்ணுற்று, இறந்த உடலோடு எனது தலையையும் சேர்த்து ஏதாவதொரு மௌனமான குழிக்குள் போட்டு மூடுவதற்கு முன்னால், இந்த வெட்டுப்பட்டத் தலையை வைத்துக்கொண்டு நான் என்னதான் செய்வது?

கண்களை மூடி, ஒரு யோகா குருவைப்போல ஒற்றைப்புள்ளியில் எனது கவனத்தைக் குவித்தேன், நான் வாழ்ந்த அடையாளத்தின் மீதமாகக் கிடந்த அனைத்தின் மீதும். நான் முணுமுணுத்தேன்: “கடவுளே, தூரமாக.. வெகுதூரம் என்னைக் கூட்டிச் செல்லும்படியாக சிறகுகளைக் கொடு. இப்படியாக நான் பிழைத்திருப்பேன், ஒரேயொரு நாள் என்றாலும் பரவாயில்லை.”
இறுதி வார்த்தையை நான் முடிக்கும் முன்னரே, என் தலை சீராகக் காற்றில் உயர எழும்பத் தொடங்கியது.. சிறகுகளின் தேவையின்றி! வேகமாக மேலேறிச் சென்று தெற்கில் விரைந்தேன்.

மேலேயிருந்து பார்க்கையில், ரபாத் நகரம் எனக்கு ஒரு பாம்புக்குழியைப் போலத் தெரிந்தது, ஒரு குகையைப் போல, அழுக்கான நரியைப் போல, துருப்பிடித்த வாளைப் போல, கடலால் வெளித்தள்ளப்பட்ட கடற்பாம்பைப் போல, தேனீக்கள் இல்லாத தேன்கூட்டைப் போல, தேய்ந்து மொட்டையான ஒரு பாறையின் தலைப்பகுதியைப் போல…

இருமுறை நான் பெருமூச்செறிந்தேன். என் கன்னங்களைக் கொத்திய சூரியவெப்பத்தால் தூண்டப்பட்டு தொடர்ந்து சென்றேன். பறவைகள் கூட்டத்தின் நடுவே நான் பறந்தபோது என்னிடமிருந்து அவை விலகிப் போயின, வெட்டப்பட்ட மனிதனொருவன் பறந்து வருவதைப் பார்த்ததால் அதிர்ச்சியடைந்து, தங்கள் கூடுகளை நோக்கி அலையலையாகப் பறந்து சென்றன..

திகைக்கச்செய்யும் வேகத்தில் காற்றைக் கிழித்து நான் முன்னேற, கடல் என் பார்வையிலிருந்து மறைந்தது. ரகசியங்கள் ஏதுமின்றி, சிதைவுகள் எதுவுமில்லாமல் உலகம் எனக்குக் கீழே விரிவதைக் கண்டேன். ஆனால் என் மூளையை ஒரு கேள்வி குடைந்து கொண்டேயிருந்தது: “துண்டிக்கப்பட்ட தலையே, அலைச்சல்களெல்லாம் தீர்ந்து மீண்டும் பூமிக்குத் திரும்பும்போது நீ என்ன செய்வாய்?” என்னால் முடிந்த மட்டும் பறக்கும் வேகத்தைக் கட்டுப்படுத்தினேன், காற்றுப்புழையைப் போல என் மூக்கு உள்ளிழுத்துக் கொண்ட காற்று கழுத்தின் நரம்புகளின் வழியாக வெளியேறிப் போக, என் வேகம் இரட்டிப்பானது. பறத்தலின் மீது அப்பாஸ் இப்ன் ஃபிர்னாஸ்1 கொண்டிருந்த ஆர்வத்தின் ரகசியம் எனக்குப் புரிய ஆரம்பித்தது: வழமையான சங்கதிகளின் மேல் நாம் வைத்திருக்கும் மதிப்பு உயர வேண்டுமெனில் பூமியை நாம் பிரிந்திருக்க வேண்டும். நமக்கிருக்கும் சக்திகளின் மீது பரிபூரண நம்பிக்கையோடு நாம் வாழும் சமயங்களிலெல்லாம் தினசரி வாழ்க்கை தனது கவிதைகளை மீட்டெடுக்கிறது. என்னால் பறக்கவும் பார்க்கவும் பேசவும் சாத்தியப்படும் வரை எனது உடலை இழந்ததைப் பற்றி நான் வருந்தப் போவதில்லை. நம்புங்கள், உள்ளம் தெளிவாக இருந்தது, எனது அறிவாற்றலும் இரண்டு மடங்கு துலக்கமுற்றதாக.. உணர்வுநிலைகள் மேலோங்கி பித்துநிலையின் எல்லையில் நின்றிருந்தன. நான் யோசித்தேன், இந்த சக்திகளை சோதித்துப் பார்க்க வேண்டும்.. பார்வையில் தென்படுகிற முதல் மனிதக்கூட்டத்தின் முன்னால் நான் தரையிறங்குவேன்: அது ஜமி’ அல்-ஃபனா2வின் நிலமாயிருந்தால் அங்கிருக்கக்கூடிய தர்வீஷுகள், கதை சொல்லிகள் மற்றும் ஏமாற்று வித்தைகாரர்கள் ஆகியோரிடம் நான் விவாதம் புரியலாம்.

சதுக்கத்தில் நின்றிருந்த மனிதர்களின் தலைக்கு மேல் நான் சுற்றி வந்தேன், அவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்கான ரீங்கரிப்பு சத்ததோடு. முகங்கள் ஆச்சரியத்தில் மேல்நோக்கித் திரும்பின. விரல்களும் குரல்களும் உயர்ந்தன: “ஒரு மனிதனின் தலை அங்கு பறந்து கொண்டிருக்கிறது” என யாரோ அலறினார்கள்.
பலவிதமான மனிதர்களைக் கொண்டிருந்ததொரு கூட்டம் என்னைச் சூழ்ந்து கொண்டது. நேரத்தை நானும் வீணடிக்கவில்லை – அவர்களோடு உரையாடுகிற எனது விருப்பம் கட்டுக்கடங்காததாக மாறியிருந்தது.

“இழிந்த மனிதர்களே,” என்றேன். “உண்மைகளை மறந்து மூடநம்பிக்கைகளைப் பற்றிக்கொண்டு இங்கே இன்னும் எதிர்பார்ப்போடு நீங்கள் காத்திருக்கிறீர்கள். உண்மை உங்கள் கண்களைக் கூசச்செய்யும், எனவேதான் ’அந்தர்3, ஸெய்த்4 மற்றும் வக் வக்5 என்னும் நிலம் போன்ற கட்டுக்கதைகளில் உங்களை நீங்களே மயக்கத்தில் அமிழ்த்திக் கொள்கிறீர்கள். கனவு காண்கிறீர்கள். அழகான ஹௌரிக்களைப் பற்றிய கனவுகளை, அபரிமிதமான அவர்களின் மார்புகள் உங்களுக்குள் கொழுந்து விட்டெரியும் இச்சையைத் தூண்டுகின்றன, உங்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்வதாக அவர்கள் உறுதியளிக்கிறார்கள் – ஆனால் நிதர்சனத்தில் பசி, தோல்வி மற்றும் அடக்குமுறை என யாவற்றையும் உங்களின் காமம் மூடி மறைக்கிறது.”
“என் பாவப்பட்ட மக்களே, துருப்பிடித்த கதவுகளைத் தட்டித்திறக்கவும் கிஞ்சித்தும் கருணையற்ற இதயங்களை அசைத்துப் பார்க்கவும் நான் வந்திருக்கிறேன், அப்படியாவது உங்களின் மௌனத்தை உடைத்தெறிவீர்கள் என நம்புகிறேன், உண்மையை உரக்கச் சொல்லுங்கள், நிதர்சனத்தையும் உங்களுடைய இயலாமைகளையும் எதிர்கொள்ளுங்கள், பிறகு அது வளர்ந்திடும், விருத்தியடையும், இறுதியில் எழுந்து நிற்கும், ஆயிரம் கைகளைக் கொண்ட ஒரு அரக்கனாக..”

இடிமுழக்கத்தின் வேகத்தோடும் அதீத பதற்றத்தோடும் வார்த்தைகள் என் வாயிலிருந்து வெடித்துக் கிளம்பின. எனக்குள் சேமித்திருந்த அனைத்தையும் சொல்ல விரும்பினேன், இதற்கு முன்னால் வெளிப்படையாக நான் பேச அனுமதிக்கப்பட்டிராத அனைத்தையும். மக்கள் வாயடைத்துப் போனவர்களாக கேட்டுக் கொண்டிருந்தார்கள். சிலருக்கு நான் சொன்னது புரியவில்லை, விகாரமாய்த் தென்பட்ட ஒரு பைத்தியக்காரனின் தலை தங்களுக்கு அறிவுரை சொல்வது பற்றி சிலர் முணுமுணுத்தார்கள். அவர்களுடைய நாடகங்களை நான் விஞ்சிவிட்டேன் என்பதைப்போல தர்வீஷுகள் என்னை நோக்கி வந்தார்கள்.

அவர்கள் சொன்னார்கள், “மேற்பகுதி கழன்று விழுந்து விட்ட பறக்கும் தட்டாக இருக்கக்கூடும்.”

“அல்லது அவர்கள் அனுப்பிய பதிவு செய்த பேச்சால் நிரப்பப்பட்ட ஒரு இயந்திரத்தலையாகவும் இருக்கலாம்.”

“எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், நம்மை அசிங்கப்படுத்தவும் வம்பிழுக்கவும் செய்கிற யாரையும் நம்மால் பொறுத்துக் கொள்ளவியலாது!”

மக்கள்திரளின் கவனத்தை என்னிடமிருந்து தர்வீஷுகள் தட்டிப் பறிக்கும் முன்பாக நான் கூட்டத்திடம் திரும்பினேன், “உங்களில் எத்தனை பேருக்கு வேலையில்லை? இதற்கு யார் காரணமென்று எப்போதாவது உங்களை நீங்களே கேட்டுப் பார்த்திருக்கிறீர்களா? உடலளவில் திடகாத்திரமாக இருந்தாலும் ஏன் மனதுக்குள் முதுமையடைந்தவர்களாக மாறிப் போனீர்கள்? பழங்கதைகளிலும் மூடநம்பிக்கைகளிலும் ஏன் உங்களைத் தொலைக்கிறீர்கள்? சூரியன் வாட்டியெடுக்கும் இந்த பாழ்நிலத்தில் ஏன் சிறிய அப்பத்துண்டுகளும் பாம்பின் மூளைகளும் பஞ்சத்தால் இறந்த பூனைகளின் அழுகிப்போன மாமிசமும் போதுமென்று வெறுமனே பிழைத்துக் கிடக்கிறீர்கள்?”

“வேலைகளுக்காக நீங்கள் போராடியதை நானறிவேன்.. ஆனால் என்ன நடந்தது? மாபெரும் நெடுஞ்சாலை ஒன்றை அமைப்பதில் உங்களைப் பணியமர்த்துவதாக அவர்கள் வாக்களித்தார்கள்.. ஆனால் அந்த அதியற்புத நெடுஞ்சாலையில் பறக்கப்போகும் வாகனங்களின் உரிமையாளர்களுக்கும் உங்களுக்கும் நடுவேயுள்ள இடைவெளியை என்ன செய்வது? நடைபிணங்களை அரவணைத்துக்கொள்ளும் ஒரு ராட்சதக் கல்லறைக்குள் நாம் இப்போது நிற்கிறோம். “நல்ல குடிமகன்கள்” என்கிற பாத்திரத்தை ஏற்று நடித்துக் கொண்டேயிருப்பதில் நீங்கள் திருப்தியடைய விரும்புகிறீர்களா, பொதுவிலும் பிறகு தனிப்பட்ட முறையிலும், இதைச் சொல்லித்தான் கடவுளைக் கொண்டாடவும் அவருடைய நன்மைகளுக்கும் ஆசிர்வாதங்களுக்கும் நன்றி சொல்லவும் செய்கிறார்கள்; யாருடைய அதிகாரத்தின் முன் நீங்கள் மண்டியிடுகிறீர்கள்? வளம்பொருந்திய இந்நிலத்தில் துயரங்களுடன் வாழ்வதில் நீங்கள் நிம்மதி கொள்கிறீர்களா?”

“…கேடுகெட்ட மனிதர்களாகிய நீங்களெல்லாம் அபு அல்-தர்தா6 பற்றி அல்-திர்மிதி7 சொன்ன வார்த்தைகளைப் போன்றவர்கள்: ‘எனது மக்களில் சிறந்தவர்கள் யார் என்று சொன்னால் அது நம் வரலாற்றின் தொடக்கத்திலும் அதன் முடிவிலும் வாழ்ந்தவர்கள் மட்டுமே; இவையிரண்டுக்கும் நடுவில் வாழ்ந்தவர்களில் பலரும் வெற்றுத்துயர்தான்’. உங்களில் பலரும் அதுபோன்ற வெற்றுத்துயர்தான்.”

கூட்டம் முணுமுணுக்கத் தொடங்கியது.
“இந்தத் துண்டிக்கப்பட்ட தலை மிகவும் அதிகமாகப் பேசுகிறது.”
“நாம் நமது துயரங்களுக்கு மத்தியிலும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம்; ஏன் அவன் நமது கவலைகளை தட்டியெழுப்பி மறந்திருக்கும் சில காயங்களை மறுபடியும் திறக்க வேண்டும்? ஆளுனரின் உளவாளிகள் எங்கே? பிரச்சினைக்குரிய இந்த மனிதனைப் பற்றி புகார் கொடுக்காமல் ஏன் அவர்கள் தாமதிக்கிறார்கள்?”

மற்ற குரல்கள் நம்பிக்கையோடு குறுக்கிட்டன, “தன்னுடைய தடவாளங்களையெல்லாம் வெடித்துத் தள்ளுவதற்கான நேரத்தை அவர்கள் அவனுக்குத் தருகிறார்கள். அதன் பிறகே அவர்கள் தீர்மானிப்பார்கள், வந்திருப்பவன் தனியாக வந்திருக்கும் உளவாளியா அல்லது வேறெந்த அந்நியதேசமும் பயிற்சி தந்து இவனை அனுப்பியிருக்கிறதா என்பதை.”

மற்றொரு குரல்: “ஆனால் அவன் பயப்படவில்லை – கவனி, அவனுடைய தொண்டை வெட்டப்பட்ட பிறகும் உண்மைகளைத்தான் சொல்கிறான் – குறைந்தபட்சம் அவன் பொய் சொல்லவில்லை.”
முகங்களை ஆராய்ந்து திருப்தியாகப் புன்னகைத்தவாறே வட்டத்தின் நடுப்பகுதியை நோக்கி மெல்ல நான் நகர்ந்தேன், ஏனெனில் உணர்ச்சிகளைத் தொலைத்தவர்களாயிருந்த இந்த மனிதக்கூட்டத்தை கடைசியாக விவாதிக்கும் இடத்துக்கு நகர்த்தியிருக்கிறேன், மேலும் சில புதிய ராகங்களைக் கவனிக்கவும் வைத்திருக்கிறேன்.

திடீரென்று அந்தக் கூட்டம் சற்றே விலகி சில தீயணைப்பு வீரர்களுக்காக வழிவிட்டது. காவலர்கள் சூழ்ந்திருக்க, நீளமானதொரு இரும்புக்கம்பத்தில் இணைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான வலையை அவர்கள் சுமந்து வந்தார்கள்.

மேலேயிருந்து அந்த வலை என் மீது விழுவதைப் பார்த்து சத்தமாகச் சிரித்தேன்; நான் எதிர்க்கவில்லை. என்னுடைய சிரிப்பைப் பார்த்து அனைவரும் அதிர்ந்து நின்றார்கள். சூழலின் விசித்திரத்தன்மை அதிகரித்துக் கொண்டே போக கொதித்துப் போயிருந்த மக்களின் குரல்கள் உயர்ந்தன, மேலும் அடுத்து என்ன செய்வதென்பதை விவாதித்ததில் அவர்களுடைய குழப்பங்களும் அதிகரித்தன.
காவலர்களின் தலைவன் அலறுவதை நான் கேட்டேன், “அவனைத் தொடாதீர்கள்! நச்சுப்பொருட்களும் வெடிமருந்துகளும் அவனது உடலில் பொருத்தப்பட்டிருக்கலாம்! கூண்டுக்குள் அவனை அடைத்த பிறகு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லலாம்!”

இரும்புக் கூண்டிலிருந்து வெளியே பார்த்தபோது தலையின் பாரம் குறைந்திருந்ததை உணர்ந்தேன், ஒரு பலகையின் மீது வைத்து தீயணைப்பு வீரர்கள் அந்தக் கூண்டைத் தங்களுடைய தோள்களில் தூக்கிக் கொண்டிருந்தார்கள். எனக்குப் பின்னால் கூட்டம் ஊர்வலமாக நடக்கத் தொடங்கியது, ஆனால் காவலர்கள் அவர்களை விரட்டியடித்தார்கள். என்னால் முடிந்தமட்டும் பலமான குரலில் நான் கத்தினேன், “சென்று வருகிறேன்! உங்கள் உரிமைகளைக் கேளுங்கள்! கறியும், கோழிக்கறியும், பழரசமும் வேண்டும் எனக் கேளுங்கள், திருப்தியான உடலுறவும் கூட! கேளுங்கள் – உடன் உங்களுடைய சுயத்தையும் கேள்விக்கு உட்படுத்துங்கள்!”
பதிலுக்கு குரல்கள் ஆர்ப்பரித்தன, “அவனைப் பேச விடுங்கள்.. வெறுமனே பேசுவதற்காகவெல்லாம் எந்தத் தண்டனையும் தர முடியாது.. அவன் அருமையானதொரு உரையை வழங்கியிருக்கிறான்.. எப்போதிருந்து இந்த அரசாங்கம் வார்த்தைகளைக் கண்டு பயப்படத் தொடங்கியது?”

வாகனத்துக்குள் மறையுமுன் நான் அலறினேன், “என்னை வெளிப்படையான விசாரணைக்கு உட்படுத்த வேண்டுமென்று கேளுங்கள்!”

என்னுடைய வழக்கு மிகச்சிக்கலானது என்கிற சங்கதி ஆளுனரின் அலுவலகத்தில் தெளிவானது. வல்லுநர்களும் ஆலோசகர்களும் நீதிபதிகளும் என எல்லோரும் குழம்பிப் போயிருந்தார்கள்: புத்தகங்களோ அல்லது தந்திரங்களோ அல்லது உளத்திட்பமோ எதுவும் அவர்களுடைய உதவிக்கு வரவில்லை.

வெண்ணிறப் பட்டுக் கையுறைகள் அணிந்து ஆளுனர் உள்ளே நுழைந்தார். கண்ணியமும் அரசியல் செயல்திறனும் கொண்டதொரு மனிதனின் பாத்திரத்தை வரித்துக்கொண்டு அவர் என்னிடம் கேட்டார், “புரட்சியைத் தூண்டும் செயலென்று இதைச் சொல்லலாம்தானே, துண்டிக்கப்பட்ட தலையே? மக்களைக் குழப்புவதற்காக நீ வெளியிலிருந்து வந்திருக்கிறாய்; உன்னுடைய பகற்கனவுகளையும் கம்யூனிசப் பசப்புரைகளையும் மக்களிடம் சொல்லியிருக்கிறாய்.. சட்டத்தை நீ அறிய மாட்டாயா?”

விவாதத்தை வளர்க்க விரும்பாத காரணத்தால் நான் வெறுமனே பதில் சொன்னேன், “நான் எனது உடலைத் தேடி வந்தேன், அது தெற்கில்தான் இருப்பதாக எனக்குச் சொல்லப்பட்டது.”

“ஆக நீ மிகவும் தந்திரமானவன் என்று அறிகிறேன், ஜமி அல்-ஃபனாவில் உன்னுடைய நடவடிக்கைகள் பற்றிய ஆய்வறிக்கைகள் அப்படித்தான் சொல்கின்றன, இந்த சூழ்ச்சிவலைக்குள் எப்படி நீயாக வந்து சிக்கிக்கொண்டாய்?”

“மக்கள்திரள் எனக்குள் குதூகலத்தை உண்டாக்குகிறது: மனிதர்கள் அற்புதமான ரகசியங்களைத் தங்களுக்குள் ஒளித்து வைத்திருக்கும் நத்தைக்கூடுகளைப் போன்றவர்கள் என்றே எப்போதும் உணர்ந்து வந்திருக்கிறேன் – அவர்களை எப்போதும் சோம்பலின் ஆழ்துயிலில் அமிழ்த்தி வைத்திருக்க வேண்டுமென்பதில் ஏன் நீங்கள் இத்தனை கவனமாயிருக்கிறீர்கள்? என்னுடைய நாக்கைத் தவிர எதுவும் என்னிடம் மீதமிருக்கவில்லை, ஆகவே எனக்கு நானே சொல்லிக் கொண்டேன், ‘துள்ளிக் கொண்டேயிருக்கும் இந்தச் சின்னஞ்சிறு சதைத்துண்டினைக் கொண்டு நம்மால் பெரிதாக என்ன சாதித்து விட முடியுமென்பதைப் பார்க்கலாம்.’”

“நீ நெருப்புடன் விளையாடுகிறாய்.”

“மரணம் கூட என்னை ஊடுருவிப் போனதேயொழிய என்னை வெல்ல முடியவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.”

நேர்த்தியான இளைஞனொருவன் அவசரமாக உள்ளே நுழைந்து ஆளுனரின் காதுகளில் கிசுகிசுத்தான். ஆளுனர் என் பக்கமாகத் திரும்பிக் கேட்டார், “உனக்கென்று தனிப்பட்ட கோரிக்கைகள் எதுவும் இருக்கிறதா?”

“மக்களிடம் பேசுவதற்காக ஒரு மன்றம்.”

“கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இப்போது உன் மீதான விசாரணையைத் தொடங்குவோம்.”

“நான் ஏற்கனவே இறந்து போனவன்.”
அவர் உடனே புன்னகைத்தார், எனக்கான சரியான தீர்வைக் கண்டுபிடித்து விட்டவரைப் போல.

“இந்த வழக்கைப் பொறுத்தவரை, உன்னை விசாரிக்க இறந்துபோன எங்களுடைய நீதிபதிகளில் ஒருவரை அழைத்து வருவோம்.”
காத்திருந்தவாறே, கூண்டுக்குள் நான் தனியாயிருந்தேன். அவ்வப்போது மகிழ்ச்சியான கரகோஷங்களின் எதிரொலிகள் என் காதுகளை எட்டின: “துண்டிக்கப்பட்ட தலை நீடூழி வாழ்க!”
எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று எனக்குத் தெரியவில்லை. கண்களைத் திறந்து பார்த்தபோது, கூண்டை நோக்கித் திருப்பி நிறுத்தியிருந்த பாவொளி விளக்குகளிலிருந்து, ஒளிக்கற்றைகள் என் மீது வெள்ளமெனப் பாய்வதைக் கண்டு திடுக்கிட்டேன்.

காலடிச்சத்தங்கள் தொடர்ச்சியாகக் கேட்டன, பகட்டான ஆடைகளிலும் அலங்காரங்களிலும் மின்னிய மாபெரும் மனிதர்களின் கூட்டத்தால் அந்த அரங்கம் வேகமாக நிரம்பியது. குரூரமும் பதற்றமும் நிரம்பிய அதே சிரிப்பு ஆளுனரின் முகத்தில் மெல்லக் கவிந்து பரவியது. அனைவரையும் அமைதியாக உற்றுப்பார்ப்பதை நான் தொடர்ந்தேன். சிறிது நேரம் கழித்து ஒரு பலத்த குரல் அறிவித்தது, “மேன்மைக்கும் மரியாதைக்கும் உரிய பில்-பாக்தாதி பாஷா, துண்டிக்கப்பட்ட தலையின் வழக்கில் தீர்ப்பு சொல்வதற்காக அவருடைய கல்லறையை விட்டு வெளியேறி வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்.”

இத்தகைய எண்ணப்போக்கே எனக்கு கிச்சுகிச்சு மூட்டியது. மகிழ்ச்சி பொங்க சத்தமாகச் சிரித்தேன். குறைந்தபட்சம் தங்களுடைய இயலாமையைச் சரிக்கட்ட என்ன செய்ய வேண்டுமென்பதாவது அவர்களுக்குத் தெரிந்திருக்கிறது. மூதாதையர்களின் அறிவு நிச்சயம் இவர்களின் கேவலமான புத்தியைக் காட்டிலும் சிறந்ததாகத்தான் இருக்கும். மோசமில்லை. அரசாங்க நீதிபதி என்ன சொல்லப்போகிறார் என்பதைக் காத்திருந்து பார்ப்போம்.

என்னுடைய குற்றம் பற்றி அவரிடம் என்ன சொல்லப்பட்டது என்பது எனக்குத் தெரியாது, அல்லது மக்களுக்குத் துரோகம் செய்த அவருடைய ஐந்தாம்படை மகனைச் சுதந்திர தினத்தன்று கட்டி இழுத்துச் சென்றுக் கொன்றதாகவும் பட்டியலில் சேர்த்துச் சொல்வார்களோ என்றெல்லாம் நான் தேவைக்கதிகமாக சிந்திக்கவுமில்லை. என்னுடைய புலன்களும் எச்சரிக்கையுணர்வும் மிகக் கூர்மையாகி ஒரு உச்சத்தைத் தொட்டபிறகு உரையாடல் விளையாட்டுகளைத் தொடரவோ பரிகாச உணர்வைக் கைக்கொள்ளவோ என்னால் முடியவில்லை. பறத்தலுக்கான ஆர்வம் எனக்குள் மீண்டும் கிளர்ந்தது, ஆபத்தை உணர்ந்த முதல் தருணத்தில் அங்கிருந்து தப்பிச் செல்லாமல் போனதற்காக என்னை நானே நொந்து கொண்டேன்.

பில்-பாக்தாதி பாஷா தனது தாடியை தடவிக் கொடுத்தார், விரல்களை அதன் வெண்ணிற மயிர்களினூடாக அலைய விட்டபடி. சுதந்திரத்துக்குப் பிறகானதொரு அரசாங்கத்துக்குத் தன்னுடைய சேவையை வழங்க முடிந்ததில் மிகுந்த மகிழ்ச்சியோடிருப்பவராக அவர் தென்பட்டார். இறுதியில் தீர்க்கத்தோடு தனது தீர்ப்பை அவர் வழங்கினார்:

“ஏற்கனவே உடலை நீங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்து விட்டீர்கள் – எனவே இந்தத் தலையையும் அதன் உடம்பிடம் கொண்டு போய் சேர்த்து விட்டு இதன் நாவை வெட்டி விடுங்கள்.”
குறிப்பு: துண்டிக்கப்பட்ட தலையின் கதை இங்கே முடிவுறுகிறது. தெளிவாகச் சொல்வதென்றால், அடுத்ததாக துண்டிக்கப்பட்ட நாவின் கதை வரவேண்டும்: என்றாலும், இந்த வழிமுறை எல்லோருக்கும் தெரிந்த ஒன்றுதான், நாம் அனைவருமே இதை அனுபவித்திருக்கிறோம் அல்லது அனுபவித்துக் கொண்டிருக்கிறோம், இந்தக் குறிப்பிட்ட தருணத்தையும் மற்ற பொதுவான சங்கதிகளையும் வித்தியாசப்படுத்தக்கூடியது என்று எதுவுமில்லை. ஆகவே, மன்னித்துக் கொள்ளுங்கள், கதை இங்கே முற்றுப்பெறுகிறது.

குறிப்புகள்:

1. அப்பாஸ் இப்ன் ஃபிர்னாஸ் – இஸ்லாமிய ஸ்பெயின் என்றழைக்கப்பட்ட அண்டலூசியாவைச் சேர்ந்த அறிஞர், கவிஞர் மற்றும் விஞ்ஞானி (கி.பி. 810 – 887). பறத்தலைப் பற்றிய ஆராய்ச்சிகளில் ஈடுபாடு கொண்டிருந்தார். பறவைகளின் சிறகுகளாலான ஆடைகளையும் இறக்கைகளையும் உடலில் பொருத்திக்கொண்டு செங்குத்தான பாறைகளிலிருந்து குதித்துப் பறக்க முயற்சித்திருக்கிறார்.

2. ஜமி’ அல்-ஃபனா – மொராக்கோவின் மர்ரகேஷ் நகரில் இதே பெயரைக் கொண்ட சதுக்கத்தினருகே அமைந்திருக்கும் பிரதான மசூதி.

3. ’அந்தர் – ஏமேனில் வாழ்ந்த சரித்திரப் புகழ்பெற்ற கவிஞர் அந்தரா இப்ன் ஷத்தாத் பற்றிய குறிப்பு இது. அவருடைய வீரத்துக்காகவும் தைரியத்துக்காகவும் உடன்பிறந்தாரின் பிள்ளையான ஆப்லா மீது கொண்டிருந்த அன்புக்காகவும் போற்றப்பட்டவர். கருப்பினத்தைச் சேர்ந்தவர், அபிசீனிய அடிமைப் பெண்ணொருத்திக்கு மகனாகப் பிறந்தார், தொடக்கத்தில் அவமானப்படுத்தப்பட்டாலும் அவருடைய வீரதீர செயல்களும் தைரியமும் அவரது இனக்குழுவான ‘ஆப்ஸின் முன்னேற்றத்துக்கு உதவின. பிற்காலத்தில், அவருடைய பெயரைக் கொண்டு மாபெரும் கதையாடல்கள் உருவாகின, உண்மையான சரித்திரத்தோடு பல்வேறு புனைவுகளும் சேர்ந்து அவரொரு மகாபுருஷராகச் சித்தரிக்கப்பட்டார்.

4. ஸெய்த் – வடக்கு ஆப்பிரிக்காவுக்குக் குடிபெயர்ந்த பானு ஹிலால் என்கிற இனக்குழுவைச் சேர்ந்த அபு ஸெய்த் அல்-ஹிலாஹ் பற்றிய குறிப்பு. இங்கும், அராபிய வாய்மொழிக்கதைகளில், அவருடைய வீரதீர சாகசங்களைப் பற்றிய ஏராளமான கதைகள் சொல்லப்படுகின்றன.

5. வக் வக் – ஆயிரத்தோரு அரேபிய இரவுகளில் குறிப்பிடப்படும் பழம்பெரும் தீவு. மனிதர்களின் சக்திக்கு அப்பாற்பட்டதாகவும், மாயமந்திரங்களின் உதவியின்றி யாரும் அங்கு செல்ல முடியாதென்றும் சொல்லப்படுகிறது.

6. அபு அல் தர்தா – எட்டாம் நூற்றாண்டு ஈராக்கில் வாழ்ந்த துறவி

7. அல் திர்மிதி – கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற பெர்சிய அறிஞர் அபு ‘ஐசா அல்-திர்மிதி பற்றிய குறிப்பு. நபியின் வார்த்தைகளைக் குறிப்பெடுக்கும் ஹடித்தைச் சேகரித்தவர்.

கோப் நகருக்கு ஒரு நடைப்பயணம் A Walk to Kobe ஜப்பானியம் : ஹாருகி முரகாமி Haruki Murakami – ஆங்கிலம் : பிலிப் காப்ரியேல் Philip Gabriel – தமிழில் – . ச.ஆறுமுகம்.

arumuga pillai1

கோப் நகரில் நிகழ்ந்த நிலநடுக்கப் பேரழிவுக்குப் பின் இரண்டு ஆண்டுகள் கழிந்து, மே, 1997 இல் அந்த நகரின் மையத்திலிருக்கும் சான்னோமியாவுக்கு நிஷினோமியாவிலிருந்து ஓய்வான ஒரு தனிமை நடையாகச் செல்லும் எண்ணம் எனக்குள் திடீரென எழுந்தது. அந்த நேரத்தில் நான் வேலைக்காக க்யோட்டோவிலும் அப்படியே தொடர்ந்து நிஷினோமியாவிலும் தங்கவேண்டியதாயிருந்தது. வரைபடத்தில் அங்கிருந்து மேற்குத்திசையில் கோப் நகர், சுமார் பதினைந்து கி.மீ தூரமெனத் தெரிந்தது. அது ஒன்றும் மிக எளிதில் கடக்கக்கூடிய கல்லெறி தூரமாக இல்லையெனினும் துன்புறுத்தக்கூடிய அளவுக்கு நெடுந்தூரமும் இல்லை என்பது மட்டுமின்றி நானும் ஒரு தன்னம்பிக்கைமிக்க நடைப்பயிற்சியாளராக இருந்தேன்.

நான் க்யோட்டோவில் தான் பிறந்தேனென்றாலும் மிகக் குறுகிய காலத்திற்குள்ளாகவே என் குடும்பம் நிஷிமோனியாவின் ஊரகப் பகுதியான ஷூகுகாவாவுக்கு இடம்பெயர்ந்திருந்தது. அங்கிருந்தும் அதிகக் காலமாகும் முன்னரே கோப் நகரை ஒட்டியுள்ள ஆஷியாவுக்கு நகர்ந்தோம். அங்குதான் எனது பதின்வயதுப் பருவத்தின் பெரும்பகுதியும் கழிந்தது.

எனது உயர்நிலைப்பள்ளி, நகருக்கு மேலாக இருந்த குன்றுப்பகுதியிலிருந்ததால், நல்ல ஒரு மகிழ்ச்சியாக நேரத்தைக் கழிக்க நினைக்கும்போது, இயல்பாகவே நான் கோப் நகரின் மையப்பகுதி அதிலும் குறிப்பாக சான்னோமியா வட்டத்திற்கே வரவேண்டியிருந்தது. ஒசாகா மற்றும் கோப் நகருக்கு இடையிலான பகுதியைக் குறிப்பிடுகிற ஒரு ஹன்சின்-கான் பையனாகவே மாறிப் போயிருந்தேன். அந்தக் காலத்தில் என்றில்லை, இப்போதுங்கூடத்தான், இளைஞர்கள் வளர்வதற்குச் சிறப்பான ஒரு இடமாக, அதுவே இருக்கிறது. அமைதியான, எவ்விதப் பரபரப்புமற்ற ஒரு விரியத் திறந்த இளைப்பாறுகை உணர்வோடிருந்த அது பெருங்கடல், மலை மற்றும் அருகிலிருந்த ஒரு பெரிய நகரம் ஆகியவற்றாலும் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தது. நான், இசைநிகழ்ச்சிகளுக்குச் செல்வதையும் பழைய புத்தகக்கடைகளில் மலிவான காகித அட்டைப் பதிப்புகளைத் தேடிப்பிடிப்பதிலும், ஜாஸ் இசைச் சிற்றகங்களில் நேரத்தைச் செலவிடுவதையும், ஆர்ட் தியேட்டர் கில்டு புது அலைப் படங்களைப் பார்த்து மகிழ்வதையும் விரும்பிச்செய்தேன். அந்த நேரத்தில் எனக்கு மிகமிகப் பிடித்தமான ஆடை எது? விஏஎன் VAN ஜாக்கெட் என்ற உயர் வட்டக் கழுத்து, முழுக்கைச் சட்டை தான்.
ஆனால், அதன்பின், நான் கல்லூரிப் படிப்புக்காக டோக்கியோவுக்குச் செல்ல நேர்ந்து, திருமணமாகி, வேலைசெய்யவும் தொடங்கியதோடு எப்போதாவது ஒசாகாவுக்கும் கோப் நகருக்கும் இடைப்பட்ட அந்த நீட்டு நிலப்பகுதிக்குப் போய்வந்துகொண்டுதானிருந்தேன். நான் அங்கே சென்றாகவேண்டிய அவசியமும் இருந்ததுதான்; ஆனால் அங்கே செய்யவேண்டியிருந்த வேலையைச் செய்து முடித்ததுமே, அதிவேக புல்லட் தொடரிக்குள் தாவிப் புகுந்து நேராக டோக்கியோ நோக்கித் தலைநீட்டிவிடுவேன். அப்போது எனது வாழ்க்கை பரபரப்பாக இருந்ததோடு, வெளிநாட்டிலும் நெடுநாட்கள் தங்கியிருக்க நேர்ந்தது. அதில் எனக்கேயான சொந்தக் காரணங்களும் பலவாக இருந்தனதாம். சிலர் அவர்களது சொந்த ஊருக்குத் தொடர்ச்சியாகக் காந்தம் போல் ஈர்க்கப்பட்டுப் போவதும் வருவதுமாக இருக்கும் போது, வேறுசிலரோ ஒருபோதும் திரும்பிச் செல்லவே முடியாதென்று நினைக்கலாம். அநேக விஷயங்களிலும் விதிதான் இரண்டு குழுக்களையும் பிரிப்பது போலத் தோன்றினாலும் அந்த நிலத்தின் மீதான உங்கள் உணர்வு எவ்வளவு வலுவான பிடிப்புள்ளதாக இருந்தாலும் அதில் நீங்கள் எதுவுமே செய்துவிட முடியாது. விரும்பியோ விரும்பாமலோ நான் அந்த இரண்டாவது குழுவைச் சேர்ந்தவனாகவே எனக்குத் தோன்றியது.

என்னுடைய பெற்றோர் ஆஷியாவில் பல ஆண்டுகளாக வசித்தவர்கள்; ஆனால், 1995 ஜனவரியில் ஹான்சின் நிலநடுக்கம் தாக்கியதில் அவர்கள் வசித்த வீடு மேற்கொண்டு தங்குவதற்கியலாதபடியாகிவிட்டதால், அவர்கள் உடனடியாக டோக்கியோவுக்குக் குடிபெயர்ந்தனர். அப்படியாக, நான் எனக்குள்ளாகவே சேர்த்து வைத்திருந்த (எனது விலைமதிப்புமிக்க பொக்கிஷங்கள்) நினைவுகளெல்லாம் ஒருபுறமிருக்க, எனக்கும் ஹான்சின் பகுதிக்கும் உண்மையான எந்தத் தொடர்பும் இல்லாமலாயிற்று. வெட்டொன்று துண்டிரண்டாகப் பேசினால், அது, மேற்கொண்டும் என்னுடைய சொந்த ஊராக இல்லைதான். ஆனால், அந்த இழப்பின் ஆழத்தினை எனது நினைவுமையம் கழன்று விலகி, மங்கி மறைவதாக உணர்ந்தாலும், எனக்குள் அது கிறீச்சிடுவதை என் செவிகளால் கேட்கிறேன். உலக்கையால் இடிபடுவது போலொரு வலி.

அதுவேதான், அங்கே நான் கண்டுகொள்ள விரும்பியதைக் காண்பதற்கான அக்கறையும் விழிப்புமான தேடலுக்காகவே கால் நடையாக நடந்து செல்லவேண்டுமென என்னைத் தூண்டிய காரணமாக இருக்கலாம். எனது சொந்த ஊருடன் எல்லாத் தொடர்புகளையும் முழுவதுமாகவே இழந்துவிட்டுள்ள எனக்கு, அது இப்போது என்னவாகத் தெரிகிறதென்பதைத் தெரிந்துகொள்ள விரும்பினேனாகவுமிருக்கலாம். எனது நிழல் அல்லது நிழலின் நிழலுருவத்தில் எவ்வளவு பகுதியினை அங்கு நான் கண்டுகொள்ளப் போகிறேன்?

நான் வளர்ந்த அந்த நகரில் ஹான்சின் நிலநடுக்கத்தின் தாக்கம் எந்த அளவுக்கு இருந்ததென்பதை என் கண்களால் உணர விரும்பினேன். நிலநடுக்கத்திற்குப் பின் கோப் நகருக்கு நான் பலமுறை சென்றபோது, அழிபாட்டு மிகுதியினைக் கண்டு அதிர்ந்துபோயிருந்தேன். ஆனால், இப்போது, ஒரு இரண்டாண்டுகளுக்குப் பிறகு, நகரம் ஒருவழியாக எழுந்து, தன்னை நிலைநிறுத்திக்கொண்ட வேளையில், என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை – இந்த உச்சபட்ச வன்முறை நகரத்திடமிருந்து எவ்வெவற்றைத் திருடிச் சென்றிருக்கிறது, அதன் சுவடுகளாக எது எதை விட்டுச் சென்றிருக்கிறதென்பதை – என் கண்ணால் காண விரும்பினேன். இப்போதிருக்கிற நானாகிய எனக்கும் அந்த நகருக்கும் ஏதோ ஒரு சிறிதளவு தொடர்பாவது இருந்தேயாகவேண்டுமென நான் நம்பினேன்.

நடப்பதற்கேயான ரப்பர் மெத்தையிட்ட காலணிக்குள் பாதம் புதைத்து, தோளில் முதுகுப்பை ஒன்றும் சிறிய ஒளிப்படக்கருவி ஒன்றுமாக நிஷினோமியா தொடரி நிலையத்தில் இறங்கி, மேற்குநோக்கி ஓய்வாக என் நடையினைத் தொடங்கினேன். நல்ல வெயிலும் கண்கள் கூசுமளவுக்கு ஒளியாகவுமிருந்ததால் நான் குளிர் கண்ணாடி அணிந்திருந்தேன். நிலையத்திலிருந்து வெளியேறுவதற்கான தெற்கு வாயிலுக்கு அருகிலுள்ள அங்காடிப்பகுதிக்குத் தான் முதலில் வந்தடைந்தேன். தொடக்கப்பள்ளியில் படிக்கும்போது, எனது மிதிவண்டியில் பொருட்கள் வாங்குவதற்காக அங்கு வருவது வழக்கமாயிருந்தது. நகர நூலகம் அருகிலேயே இருக்கவே, நேரம் கிடைத்தபோதெல்லாம் நான் அங்குசென்று கையில் கிடைத்த, வயதுவந்த பருவத்தினருக்கான புத்தகங்கள் முழுவதையும் கரைத்துக் குடித்தேன். அங்கே, அருகிலேயே இருந்த ஒரு கைவினைப் பொருட்கள் கடையிலிருந்துதான் நெகிழி மாதிரிகளை வாங்கிக் குவித்திருந்தேன். ஆக, அந்த இடம் எனக்குள் மாபெரும் நினைவுப் பேரலைகளைத் தோற்றுவிப்பதாயிருந்தது.

நான் இங்கே வந்து நீண்ட காலமாகிவிட்டிருந்தது. மேலும் அங்காடிப்பகுதி முன்பிருந்தது தெரியாத அளவுக்கு நிறையவே மாறிப்போயிருந்தது. அந்த மாற்றத்தில் காலத்தினால் ஏற்பட்ட சாதாரண மாற்றம் எவ்வளவென்றும் நிலநடுக்கப் பேரழிவினால் ஏற்பட்டது எவ்வளவென்றும் உண்மையாகவே என்னால் சொல்லமுடியவில்லை. ஆனாலும், நிலநடுக்கம் விட்டுச் சென்ற அழிவின் வடுக்கள் தெளிவாகவே தெரிந்தன. கட்டிடங்கள் நொறுங்கிவிழுந்த இடங்களில், இப்போது ஏகப்பட்ட பற்கள் காணாமற்போன குழிகள் போல அங்கங்கே மனைகள் காலியாகக் கிடக்க, அவற்றுக்கிடையில் ஒரு தொடர்பினை உருவாக்குவதுபோல தொழிற்கூடத் தயாரிப்புகளான, தற்காலிக கட்டிடங்கள் அமைந்திருந்தன. சிமென்ட் தெருக்கள் முழுவதும் அதல பாதாள வெடிப்புகளாகக் கிடந்தன. வேனிற்காலப் புல், பூண்டுகள் காலி நிலங்களைச் சுற்றி வளைத்துப் படர்ந்து வளர்ந்திருந்தன. பயங்கரப் பேரழிவுக்கான தடயங்கள் சுற்றிலும் எல்லாவிடத்திலுமாகப் பரந்து கிடக்க, அப்பகுதி முழுவதும் தொல்லியல் கால எச்சங்கள் போலத் தெரிந்தது. உலகிற்கு அதிகமாகக் காட்டப்பட்டு, நிலநடுக்கத்திற்குப் பின் வேகவேகமாக மறுசீரமைக்கப்பட்ட கோப் நகரத்தின் மையப்பகுதியோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது, காலி இடங்கள் அவற்றின் மவுனம் நிறைந்த ஆழக்குழிகளுடன் எனக்குள் மிகப் பெரிய சோகத்தையும் மனச்சோர்வினையும் தோற்றுவித்தன. இது, நிஷிமோனியா அங்காடிப் பகுதிக்கு மட்டுமேயான உண்மை நிலை என்பதில்லை; கோப் நகரினைச் சுற்றி இது போல அநேகப் பகுதிகள் இது மாதிரியான காயங்கள் மற்றும் வடுக்களுடன் இருக்கலாம்; ஆனால் அவையனைத்துமே அநேகமாக மறக்கப்பட்டுவிட்டன.
அங்காடிப்பகுதியைத் தாண்டிப் பிரதானத் தெருவின் மறுபக்கமாக எபிசு கோவில் உள்ளது. வளாகத்துக்குள்ளேயே அடர்ந்த காட்டினையுடைய அது, ஒரு மிகப்பெரிய கோவில். நான் சிறு பையனாக இருந்தபோது என் நண்பர்களுடன் விரும்பி விளையாடிய அந்த இடத்தை இப்போது தெரிகிற இடிபாடுகளுடன் காணும்போது தாங்கமுடியாத வலி ஏற்படுகிறது. ஹான்சின் நெடுஞ்சாலையின் பெருங்கல் விளக்குத் தொடர் வரிசையில் பெரும்பாலான கம்பங்களும் அவற்றின் தலைப்பகுதியான விளக்குகளை இழந்துவிட்டன. அவற்றின் தலைகள் கூரியவாளால் வெட்டிச் சாய்க்கப்பட்டது போல் தரையில் சிதறிக்கிடந்தன. தலையற்ற கம்பங்கள், ஒரு கனவின் மிச்சம் மீதி போல, எவ்விதப் பயனும் நோக்கமுமற்ற கற்சிலைகளின் வரிசையாக, நீண்ட அமைதியில் உறைந்துபோய் நிற்கின்றன.

நான் சிறுவனாக இருந்தபோது ஷ்ரிம்ப் இறால்கள் பிடிக்கிற (அது ஒரு எளிய தொழில்நுட்பம்: காலிப்புட்டிக்குள் இரையாக நூடுல் மாவினை வைத்து, புட்டியின் கழுத்தில் ஒரு நூல்கயிற்றினைக் கட்டித் தண்ணீருக்குள் அமிழ்த்தும் போது இறால்கள் இரைக்காக புட்டிக்குள் வரும். அதன்பின், நான் புட்டியை இழுத்து எடுத்துக்கொள்வேன்) குளத்தின் குறுக்காக இருந்த கற்பாலம் இடிந்து அதன் இடிபாடுகள் அப்படிக்கப்படியே கிடந்தன. குளத்து நீர் கறுப்படைந்து, சேறாகிக்கிடக்க, காய்ந்த பாறைகளின் மீது குஞ்சு குளுவான் முதல் வயது முதிர்ந்தன வரையிலுமான பல்தரப்பட்ட ஆமைகள் கால்களைப் பரப்பியவாறே வெயில் காய்ந்துகொண்டிருந்தன. அவற்றின் மூளைகளுக்குள் நிச்சயமாக, எந்தச் சிந்தனையுமிருந்திருக்காதென்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பயங்கரப் பேரழிவுக்கான தடயங்கள் சுற்றிலும் எல்லாவிடத்திலுமாகப் பரந்து கிடக்க, அப்பகுதி முழுவதும் தொல்லியல் கால எச்சங்கள் போலத் தோன்றியது. அந்த அடர் காடுகள் மட்டும் தான் சிறுவயதிலிருந்தே என் நினைவிலிருந்தபடியாக, அப்படியே இருண்டு எந்த மாறுதலுமின்றிக் காலத்தை வென்று நின்றன.

கோவில் மைதானத்தில் இளவேனிற்கால வெயிலில் அமர்ந்து சுற்றுப்புறத்தை மீண்டுமாக நாலாபுறமும் சுற்றி நோக்கி என் கண்ணில் படுவனவற்றோடு உடன்பட்டுச் சிந்திக்க முயற்சித்துக்கொண்டிருந்தேன். காட்சிப்பரப்பினை எவ்வளவு இயற்கையாக உள்வாங்கி அதனை மனத்தாலும் நினைவாலும் ஒப்புக்கொள்ள இயலுமோ அந்த அளவுக்கு உள்வாங்கிக் கொண்டிருந்தேன். அந்தக்காலத்தில் நான் எப்படியிருந்தேனென நினைவுகொள்ள முயற்சித்துக்கொண்டிருந்தேன். நீங்கள் நினைப்பது போலவே தான் இவையெல்லாம் நீண்டநேரமாக நிகழ்ந்துகொண்டிருந்தன.

2

நிஷிமோனியாவிலிருந்து சுகுகாவாவுக்கு மெல்ல நகர்ந்தேன். அப்போது மதியமாகியிருக்கவில்லையென்றாலும் சுறுசுறுப்பான நடையினால் எனக்கு வியர்க்கத் தொடங்கும் அளவுக்கு வெயில் கடுமையாகவே இருந்தது. நான் எங்கிருக்கிறேனேனத் தெரிந்துகொள்ள எனக்கு வரைபடமெதுவும் தேவைப்படவில்லைதான்; ஆனால், தனித்தனியான தெருக்களை என்னால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. இந்தத் தெருக்களின் வழியாக நூற்றுக்கணக்கான முறை போயும் வந்துமிருப்பேன். ஆனாலும் இப்போது எனக்கு எதுவுமே தெரியவில்லை. அவற்றை எதனால் என்னால் நினைவுகொள்ள இயலவில்லை? அது புரியாத புதிராகத்தானிருந்தது. அறைகலன்கள் அனைத்தும் மாற்றி வைக்கப்பட்ட வீட்டுக்குள் நுழைந்துவிட்டது போல திக்குத்தெரியாத ஒரு குழப்பத்தை உணர்ந்தேன்.

அதன் காரணத்தை நான் விரைவிலேயே புரிந்துகொண்டேன். வழக்கமாகக் காலியாகக் கிடக்கும் மனைகள் காலியாக இல்லாமலும் தற்போது காலியாகக் கிடக்கும் மனைகள் முன்னர் அப்படி இல்லாமலுமாக – ஒளிப்பட அசலும் நகலும் ஒன்றுக்கொன்று இடம் மாற்றிக்கொண்டதால்தான் அப்படி. அநேக நேர்வுகளிலும் முன்னர் காலிமனைகள் தற்போது குடியிருப்புகளாகவும் மற்றவை வீடுகளாக இருந்து நிலநடுக்கத்தால் இடிந்துவிட்டனவுமாக இருந்தன. இந்த முன்னர் மற்றும் பின்னர் பிம்பங்களும் நகரம் எப்படி இருந்ததென எனக்குள்ளிருந்த கற்பனை நினைவுகளுமாகச் சேர்ந்து ஏற்பட்ட ஒரு ஒருங்கிணைந்த விளைவுதான் அது..
சுகுகாவா அருகிலிருந்த நான் வசித்த பழைய வீடு இல்லாமலாகி, அதில் நகர வீடுகளின் வரிசை ஒன்று வந்து அமர்ந்திருந்தது. அதோடு, உயர்நிலைப்பள்ளி அருகிலிருந்த மைதானமும் நிலநடுக்கத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் கட்டிய தற்காலிக வீடுகளால் நிறைந்திருந்தது. இந்தத் தொழிற்கூடத் தயாரிப்புகளான தற்காலிகத் தங்குமிடங்களில் வசிப்பவர்கள் அவர்களது சலவைத்துணிகள் மற்றும் படுக்கை விரிப்புகளை நானும் எனது நண்பர்களும் வழக்கமாக தளப்பந்து விளையாடிய இடத்தில் தொங்கவிட்டு, அது நெருக்கம் மிகுந்த ஒரு அடைக்கப்பட்ட வெளியாகத் தோற்றமளித்தது. கடந்த காலத்தின் சுவடுகளைக் காண என்னாலான மட்டும் முயற்சித்தும், அநேகமாக எதுவுமே அங்கில்லை. ஆற்றில் ஓடும் நீர் முன்பு போலவே தெளிவும் சுத்தமுமாக இப்போதும் பாய்கிறது; ஆனால், ஆற்றின் இருகரைகளும் கான்கிரீட் கொண்டு அழகுறக் கட்டப்பட்டிருந்த தோற்றம் எனக்குள் வித்தியாசமான ஒரு தனியுணர்வினையே தோற்றுவித்தது.

கடலை நோக்கிச் சிறிது நேரம் நடந்த நான் உள்ளூர் சூஷி (பொங்கல் மாதிரியான ஜப்பானிய அரிசிக் கலவை உணவு) கடை ஒன்றில் போய் நின்றேன். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை பிற்பகலாக இருக்கவே, அவர்கள் வழக்கம்போல் ஏற்கெனவே பெறப்பட்ட வெளியிடக் கேட்புகளுக்கு உணவு வழங்குவதில் அவசரமும் பரபரப்புமாக இருந்தனர். வெளியிடத்திற்கு வழங்குவதற்காக உணவினை எடுத்துச் சென்ற இளம் உதவியாளன் நெடுநேரமாகத் திரும்பிவரவில்லை. உரிமையாளருக்கோ தொலைபேசி அழைப்புகளுக்குப் பதில் சொல்லவே சரியாக இருந்தது. அது, ஜப்பானில் நீங்கள் எல்லாவிடங்களிலும் காண்கிற மாதிரியான ஒரு காட்சியேதான். பீரை உறிஞ்சி,உறிஞ்சிச் சுவைத்துக்கொண்டும் தொலைக்காட்சியை அரைப்பார்வை பார்த்துக்கொண்டுமாக, நான் கேட்டிருந்த உணவுக்காக, காத்திருந்தேன். ஹையோகோ மாநில ஆளுநர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் யாரோ ஒருவருடன் நிலநடுக்கத்துக்குப் பிறகான மறுகட்டுமானப் பணிகள் எவ்வாறு போய்க்கொண்டிருக்கின்றன என்பது பற்றி உரையாடிக்கொண்டிருந்தார்.

அவர் என்னதான் பேசினாரென்பதைக் குறிப்பாக இப்போது நினைவுக்குக் கொண்டுவர முயற்சிக்கிறேன் ஆனால், அவற்றில் ஒரு வார்த்தையைக்கூட என் வாழ்க்கை முழுவதிலுங்கூட நினைவுக்குக்கொண்டுவரமுடியாது போலிருக்கிறது.
நான் சிறுவனாயிருக்கும்போது ஆற்றின் கரைமீது ஏறியதும், பார்வைக்கு எந்தத் தடையுமில்லாமல் கடல், நேருக்கு நேராக என் கண் முன்பாக விரிந்து கிடக்கும். கோடையில் நான் அங்கே நீச்சலுக்குச் செல்வது வழக்கம். நான் பெருங்கடலினை நேசித்ததோடு நீச்சலையும் நேசித்தேன். நான் மீன் பிடிக்கவும் சென்றிருக்கிறேன் என்பதோடு, என் நாயை நாள்தோறும் அங்கே நடைப்பயிற்சிக்கு அழைத்துச்சென்றுமிருக்கிறேன். சிலநேரங்களில் அங்கே எதுவுமே செய்யாமல் வெறுமனே அமர்ந்திருக்க விரும்புவேன். சிலநேரங்களில் இரவில் வீட்டைவிட்டும், கம்பி நீட்டி நண்பர்களுடன் கடலுக்குச் சென்று, ஒதுங்கிய மரக்கட்டைகளைச் சேகரித்துத் தீ வளர்த்ததும் உண்டு. கடலின் வாசத்தை, அதன் நெடுந்தொலைவு முழக்கத்துடன், அது கொண்டுவருகிற எல்லாவற்றையும் நேசித்தேன்.

ஆனால், இப்போது அங்கே கடல் இல்லை. மலைகளை வெட்டி, அனைத்துக் கல், மண் குப்பைகளையும் லாரிகள் மற்றும் கன்வேயர் பெல்ட் மூலம் கொணர்ந்து கொட்டியிருக்கின்றனர். கடலும் மலையும் அருகருகிலிருக்கவே, இப்பகுதி அப்படியான ஒரு கட்டுமானப்பணிக்கு மிகப் பொருத்தமானது. மலைகள் இருந்த இடத்தில் அழகான சிறுசிறு குடியிருப்புக் குழுமங்கள் முளைத்துள்ளதோடு, உரக்குழிகள் இருந்த இடங்களிலும் அழகழகான குடியிருப்புகள் எழுந்துள்ளன.

இப்போது எனக்கு டோக்கியோ அருகிலுள்ள கனகாவா மாநிலத்தின் கடற்கரை நகரமொன்றில் ஒரு சொந்த வீடு உள்ளது. டோக்கியோவிற்கும் அதற்குமாகப் போய்வந்து பயணித்துக்கொண்டிருக்கிறேன். கெடுவாய்ப்போ அல்லது மிகக் கெடுவாய்ப்போ, நான் சொல்லியே ஆகவேண்டும், இந்த கடல்புர நகரம் எனது சொந்த ஊரினை, எனது சொந்த ஊரினைவிடவும் அதிகமாக நினைக்கச்செய்கிறது. அப்பகுதியில் பசுமை மலைகள் மற்றும் ஒரு அற்புதமான நீச்சல் கடற்கரை அமைந்திருக்கிறது. இவற்றை என்னால் முடிந்த அளவுக்குச் சிறப்பாக என்னுள் பத்திரப்படுத்திவைக்க விரும்புகிறேன். ஏனென்றால் இயற்கை நிலக்காட்சியை ஒரு முறை இழந்துவிட்டால், அது முற்றும் இழந்ததுதான். மனிதர்களால் ஏற்படுத்தப்படும் வன்முறை மட்டும் ஒருமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டாலுங்கூட, மறுபடியும் அதனைச் சரிசெய்துவிடமுடியாது.

ஆற்றின் கரைகளைத் தாண்டி, கோரோய்ன் கடற்கரை விடுதியாக இருந்த பகுதி மேற்கூரையிடப்பட்ட வசதியான ஒரு நீர்நிலை அல்லது குளமாக அமைக்கப்படுவதற்காக மேடுறுத்தப்பட்டிருந்தது. நீர்ப்பலகையாளர்கள் காற்றோடு நீர்ப்பாய்ச்சலில் செல்ல அவர்களால் முடிந்த அளவுக்கு முயன்றுகொண்டிருந்தனர். மேற்கில் ஆஷியா கடற்கரையாக இருந்த பகுதியில் உயரமாக எழுந்த அடுக்ககக் குடியிருப்புக் கட்டிடங்கள் எண்ணற்ற, பெரும்பெரும் ஒற்றைப் பெருங்கற்பாறை வரிசைகளாக நிற்கின்றன. கடற்கரையில் பெரும்பெரும் வேகன் கார்கள் மற்றும் சிறு வேன்களில் வந்திருந்த சில குடும்பங்கள் வெளியிடங்களில் சமைத்துக் கொதிக்கக் கொதிக்கச் சாப்பிடுவதற்கான எரிவாயுக் குடுவை பொருத்திய அடுப்புகளைப் பயன்படுத்திக்கொண்டிருந்தனர். அப்படியான வெளிவட்டாரச் செயல்பாடுகள். அவர்கள் இறைச்சி, மீன் மற்றும் காய்கறிகளை அடுப்பில் வாட்டி வதக்கிக்கொண்டிருக்க, அதிலெழுந்த வெண்புகைத் திரள் பெரும் தீப்பந்தம் ஒன்று வானத்தை நோக்கி எரிவதுபோலப் பெருத்த அமைதியோடு அந்த மகிழ்ச்சியான ஞாயிற்றுக்கிழமை மாலையில் எழுந்துகொண்டிருந்தது.
வானத்தில் ஒரு துளி மேகத்தைக்கூடக் காணமுடியவில்லை. அது ஒரு மிகச் சரியான மே மாதக் காட்சி. காங்கிரீட் கரை மீது உறைந்த சிலையாக, வழக்கமான, உண்மையான கடலை நினைத்துக்கொண்டு எல்லாவற்றையும் கண்ணால், பார்த்துக்கொண்டு, மெதுமெதுவாக, அமைதியாகக் காற்றுப் போகும் ரப்பர் சக்கரம், அதன் உண்மை இருப்புணர்வினை இழந்துகொண்டிருப்பது போல் அமர்ந்திருந்தேன்.
இந்த அமைதியான காட்சியின் மத்தியில் வன்முறையின் சுவடுகள் புலப்படுவதை மறுக்க முடியாது. அப்படித்தான், அது எனக்குத் தோன்றியது. அந்த வன்முறை இயல்புகளின் ஒரு பகுதி நேரடியாக நமது பாதங்களின் கீழ் மறைந்திருக்க, மறுபகுதி நமக்குள்ளாகவே மறைந்துள்ளது. ஒன்று மற்றதன் உருவகமாக இருக்கிறது. அல்லது அவை ஒன்றுக்கொன்று இடம் மாறிக்கொள்பவை எனலாம். அங்கேயே படுத்துத் தூக்கத்தில் ஒரே கனவினைக் காணும் ஓரிணை விலங்குகள்.

சிற்றாறு ஒன்றினைக் குறுக்காகக் கடந்து, ஆஷியாவுக்குள் சென்றேன். எனது பழைய இளநிலை உயர்பள்ளியை, நான் வசித்த வீட்டினை, விரைந்து கடந்து ஆஷியா தொடரி நிலையத்துக்கு வந்தேன். அங்கிருந்த ஒரு சுவரொட்டி விளம்பரம் அன்றைய தினமே பிற்பகல் இரண்டு மணிக்கு ஒசாகாவிலுள்ள கோஷீன் மைதானத்தில் ஹான்சின் புலிகள் மற்றும் யாகல்ட் குருவிகள் தளப்பந்தாட்டக் குழுக்களுக்கிடையே ஒரு விளையாட்டுப் போட்டி நடக்கவிருப்பதாக அறிவித்தது. அதைப் பார்த்ததும் அங்கு போகவேண்டுமென்ற தீவிரம் எனக்குள் ஏற்பட்டது. சட்டெனத் திட்டங்களை மாற்றித் தொடரிக்குள் குதித்தேறிப் புகுந்தேன். போட்டி அப்போதுதான் தொடங்கியிருக்கும், ஆகவே நான் இப்போது அங்கு சென்றால், மூன்றாவது இன்னிங்ஸ் தொடக்கத்துக்குள் அங்கு போய்ச் சேர்ந்துவிடலாமென நான் எண்ணிக்கொண்டேன். நடையினை மறுநாள் மீண்டும் தொடங்கிக்கொள்ளலாம்.

கோஷீன் அரங்கம், நான் சிறுவனாக இருந்தபோதிருந்ததைவிடச் சிறிது மாறியிருந்தது. காலக் கோளாறில் தடுமாறி விழுந்தது போல், அந்தச் சூழலுக்கு நான் வேற்றாள் போன்ற ஒரு வலுவான ஏக்கவுணர்வினை – சொற்றொடரில் ஒரு தலைகீழ் மாற்றமென்பதை, ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும் – உணர்ந்தேன். அங்கே மாறியிருந்த ஒரே விஷயம் புள்ளிகள் நிறைந்த சுங்கடி ஆடையணிந்து, கால்ப்பிஸ் என்னும் மோர்ப் புட்டிகளைத் தோளில் சுமந்து கூவி விற்கும் விற்பனையாளர்கள் இல்லாததும் (அது, மேற்கொண்டு இவ்வுலகத்தில் கால்ப்பிஸ் அருந்துகிறவர்கள் அதிகம் இல்லை எனச் சொல்வதுபோலத் தோற்றமளிக்கிறது) அரங்கத்தின் வெளியே ஸ்கோர்ப் பலகை மின்னியல் அறிவிப்பாகியிருப்பதும் (அதுவும் பகலில் மங்கலாகி சரியாகத் தெரிவது கடினமாக இருக்கிறது)தான். ஆனால் விளையாட்டுக்களத்தின் அழுக்குப்படிந்த தோற்றம் முன்பு போல அப்படியே, புல்லின் பசுமை நிறம் போல மாறாதிருக்க. ஹான்சின் ரசிகர்களும் எப்போதும் போலவே புகழ்பெற்ற தீவிரத்துடனிருந்தனர். நில நடுக்கங்கள், புரட்சிகள், போர் மற்றும் நூற்றாண்டுகள் வரலாம், போகலாம்; ஆனால், ஹான்சின் ரசிகர்கள் நிரந்தரமானவர்கள்.

ஹான்சின் வெற்றி 1 – 0 ஆக இருக்க, விளையாட்டு, கவாஜிரி மற்றும் டகாட்சு இருவருக்கிடையிலான பிட்சர் தனிப்போட்டியாக மாறிப்போனது. ஒற்றை ஓட்ட வித்தியாசமென்பது பரபரப்பான போட்டியாக இருக்குமென நீங்கள் நினைக்கலாம்; ஆனால் அது அப்படியில்லாதது மட்டுமல்ல, எந்தவிதமான கற்பனை நீட்சிக்கும் இடமில்லாததாக இருந்தது. ஏதாவது ஒன்றைச் சொல்வதென்றால், சிறப்பு எதுவுமில்லாத ஒரு போட்டியாக இருந்தது. இன்னும் வெட்டவெளிச்சமாக்கிச் சொல்வதென்றால், பார்ப்பதற்குத் தகுதியில்லாத ஒரு போட்டி, அவ்வளவுதான். அதுவும் அரங்கத்திலிருந்தும் தூரமான இருக்கைகளில் அமர்ந்திருக்கும் எங்களைப் போன்றவர்களுக்குச் சொல்லவேண்டியதேயில்லை. வெயில் கடுமையாகக் கடுமையாக, அகோரமாகத் தாகமெடுத்தது. என்னிடம் குளிர்ந்த பீர்கேன்கள் சில இருக்கவே, நீங்கள் கணிப்பதுபோலவே, அந்தத் திறந்தவெளி இருக்கையிலேயே கண்ணயர்ந்து விட்டேன். விழித்துப் பார்த்தபோது எதுவும் புரியாமல் பரக்கப் பரக்க விழித்தேன். (இதென்ன எழவு? எங்கிருக்கிறேனென்று வியந்துகொண்டேன்) பேரொளி விளக்கு வெளிச்சத்திலேற்பட்ட நிழல்கள் என் திசையை நோக்கி, என்னைத் தொட்டுவிடுவதாக நீண்டிருந்தன.

3

கோப் நகரில் ஒரு சிறிய ஓட்டலில் அறையெடுத்து நுழைந்துகொண்டேன். அங்கு வந்திருந்தவர்கள் பலரும் குழுக்களாக வந்திருந்த இளம் பெண்களாக இருந்தனர். நான் சொல்கிற மாதிரியான ஓட்டல் எதுவென நீங்கள் விளங்கிக்கொண்டிருப்பீர்களென நினைக்கிறேன். மறுநாள் காலை ஆறு மணிக்கு எழுந்து கூட்டமில்லாத நேரத்துத் தொடரியைப் பிடித்து ஆஷியாகவா நிலையத்துக்குச் சென்று அங்கிருந்து எனது சிறுநடைப் பயணத்தை மறுபடியுமாகத் தொடங்கினேன். அதற்கு முந்தின நாள் போலில்லாமல், வானம் மேகங்களால் மூடப்பட்டு, காற்று கொஞ்சம் குளிராக இருந்தது. செய்தித் தாளின் வானிலை அறிக்கை, பிற்பகலில் கண்டிப்பாக மழைபெய்யுமென தன்னம்பிக்கையோடு முன்கணித்திருந்தது. ( அவர்கள் சரியாகத்தான் சொல்லியிருந்தார்கள். மாலையில் நான் முழுவதுமாக நனைந்துவிட்டிருந்தேன்.)

சன்னோமியா தொடரி நிலையத்தில் நான் வாங்கிய காலைச்செய்தித் தாளில் சூமா நியூ டவுன்( மலையைச் செதுக்கி வீழ்த்தி அமைக்கப்பட்ட இதுவும் ஒரு புது இடமென நினைக்கிறேன். நான் அதைப்பற்றிக் கேள்விப்படவேயில்லை) பகுதியில் இரண்டு இளஞ்சிறுமிகள் மீது நடத்தப்பட்டிருந்த வன்முறை குறித்து முழுவிவரம் இருந்தது. அவர்களில் ஒருத்தி இறந்துவிட்டாள். காவல் துறையினர் இதனை எப்போதாவது நடக்கின்ற ஒரு தாக்குதலென்றும் எந்தத் தகவலும் கிடைக்கவில்லையென்றும் தெரிவிக்கின்றனர். குழந்தைகளுடன் வசிக்கும் குடியிருப்பாளர்கள் மிகவும் பயந்துபோயிருக்கின்றனர். இது கோப் நகரில் நடந்த பதினொரு வயதுச் சிறுவன் ஜன் ஹேஸ் பயங்கரக் கொலைக்கும் முந்தியது. எந்தவகையில் பார்த்தாலும், தொடக்கப்பள்ளிக் குழந்தைகளைக் குறிவைத்து நடத்தப்படும் தாக்குதல் மிகப் பயங்கரமானதும் கொடூரமானதும் அர்த்தமற்ற செயலுமாகும். நான் செய்தித்தாள்களை எப்போதாவது தான் படிப்பதால் எனக்கு இந்தத் தாக்குதல் பற்றிக்கூடத் தெரிந்திருக்கவில்லை.

உண்மை விவரம் புரிந்துகொள்வதாக இன்னும் ஆழமாக அந்தச் செய்தி வரைவின் சொற்றொடர்களுக்கிடையிலாகக் கிடைத்த வழக்கம் மீறிய அடிக்குரலினையும் உணர்ந்ததை இப்போது நினைவுகொள்கிறேன். எனக்குள் சட்டென்று தோன்றிய எண்ணத்தில் செய்தித்தாளை மடித்துவைத்தேன். வாரப் பணிநாள் ஒன்றின் மத்தியில் தான் மட்டுமாகச் சுற்றித் திரியும் ஒரு மனிதன் மிகவும் சந்தேகத்திற்குரியவனாகத் தோன்றுதல் இயல்புதானே. புதுப்பிக்கப்பட்ட வன்முறையின் இந்த நிழல் இங்கே என்னை அந்நியனாக நான் உணர்ந்த உணர்வுக்கு அடிக்கோடிடுவதாக இருந்தது. தனக்குத் தொடர்பில்லாத இடத்தில் நுழைந்துவிட்ட வேண்டாத விருந்தாளியாகத்தான் நானிருந்தேன்.

மலையடிவாரத்தில் தண்டவாளப் பாதைக்கு இணையாகச் செல்லும் பாதையில் நடந்த நான் மேற்கில் எனது வழியில் சிறிது பிரிந்து சென்று முப்பது நிமிடங்களில் ஆஷியாவுக்குள் நுழைந்துவிட்டேன். அது, வடக்கிலிருந்து தெற்காக நீளுகின்ற ஒரு அகலம் குறைந்த நகரம். கிழக்காகவோ, மேற்காகவோ நடந்தால் விரைவிலேயே நீங்கள் நகரத்துக்கு வெளியே வந்துவிடுவீர்கள். சாலையின் இரு பக்கமும் இங்கும் நிலநடுக்கத்துக்குப் பின்னர், காலியாக விடப்பட்ட மனைகள் மற்றும் ஒரு பக்கமாகத் திரும்பியிருந்த குடியிருப்பு வீடுகள் காலிசெய்யப்பட்டும் கிடந்தன.

ஹன்சின்- கான் பகுதியின் அடி மண் டோக்கியோவைப் போலில்லாமல் வேறுபட்டிருக்கிறது. அது ஒரு மணற்பாங்கான மலைப்பகுதி. அதனாலேயே நிலம் மென்மையானதாகவும் வெண்மையானதாகவுமிருக்கிறது. அதனாலேயே காலி மனைகள் அதிகமும் அப்படிக்கப்படியே விடப்பட்டுள்ளன. அந்தப் பகுதி கோடைகாலப் பசுமைக் களைப்பூண்டுகளால் நிறைந்து கண்ணுக்குத் தெரிகிற முரணோடிருந்தது. எனக்கு நெருக்கமான ஒருவரின் உடலில் அறுவைசிகிச்சையால் ஏற்பட்ட பெரிய நீண்ட தழும்போடு அதனை ஒப்புமைப்படுத்திக் காட்சிப்படுத்தவே, அக்காட்சி என் உடம்புக்குள் கத்தியால் குத்தியது போல் வலியேற்படுத்தியது. காலத்தோடு அல்லது நிலத்தோடு இணைந்ததாக இல்லை, அந்த வலி.
இயல்பாகவே அங்கு களைகள் மூடிய காலி மனைகள் அதிகமாகவே இருந்தன. பல கட்டுமானத் தளங்களையும் நான் கண்டேன் தான். இன்னும் ஒரு ஆண்டுக்கும் குறைவான காலத்துக்குள்ளாகவே அங்கே புதிதாகக் கட்டப்பட்ட வீடுகளின் வரிசைகள் நிறையவே அதிகமாகி, அந்த இடத்தை என்னால் அடையாளம் கண்டுபிடிக்க முடியாதபடி மாறிவிடுமென நினைத்துக்கொண்டேன். புத்தம் புதிய கூரைத் தள ஓடுகள் வெயிலின் காலை ஒளியில் பளபளவென மின்னிக்கொண்டிருந்தன. அப்புறமென்ன, அங்கிருந்த நிலக் காட்சிக்கும் ஒரு மனிதனாக எனக்குமிடையில் பொதுவாக எதுவுமே இருக்கப் போவதில்லை. (அநேகமாக எதுவுமிருக்காது). எங்களுக்கிடையில் (அநேகமாக) வலுக்கட்டாயப் பிளவு ஒன்றினை வெளிப்படுத்தி, நில நடுக்கம் என்ற பெயரில் ஒரு மாபெரும் பேரழிவுக் கருவி நிற்கிறது. நான் வானத்தை அண்ணாந்து நோக்கி, மெல்லிய மேகமூட்டத்துடன் கூடிய காலைக் காற்றினை உள்ளிழுத்து வெளியிட்டுவிட்டு, என்னை இப்படியான ஒரு மனிதனாக உருவாக்கிய இந்த மண்ணைப் பற்றியும் இந்த மண் உருவாக்கிய மனிதனைப் பற்றியும் நினைத்துப் பார்த்தேன். நம்மால் கட்டுப்படுத்த முடியாத பல்வகைப்பட்ட விஷயங்கள் தாம் எத்தனையெத்தனை, ஹூம்.

அடுத்த நிலையமான ஒகமோட்டோ நிலையத்துக்குப் போனதும் ஒரு காபியகத்தில் – எப்படிப்பட்டதாகயிருந்தாலும் பரவாயில்லை – நின்று, அவர்களின் காலை உணவில் ஒரு செட் கொண்டுவருமாறு சொல்லவேண்டுமென நினைத்தேன். அன்று காலையிலிருந்தே எதனையும் நான் சாப்பிட்டிருக்கவில்லை. ஆனால், அப்போது எந்த காபிக்கடையும் திறந்திருக்கவுமில்லை. அது ஒரு நகரம் மாதிரியான, அந்த வகைப்பட்ட ஊரல்லவென்று நான் நினைத்துக்கொண்டேன். வேறுவழியில்லாமல் சாலை ஓரமாகத் தென்பட்ட லாசன்ஸ் கடையில் கலோரிமேட் எனர்ஜி பார் ஒன்றை வாங்கி, பூங்கா ஒன்றின் நீளிருக்கை ஒன்றில் அமர்ந்து, அமைதியாகத் தின்று முடித்து ஒரு கேன் காபியை விழுங்கி, அதனைக் கீழே இறக்கினேன். அந்தப் பயணத்தில் அதுவரையில் நான் கண்டவற்றைக் குறிப்பெடுத்துக்கொள்வதில் அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டேன். ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு எமிங்வேயின் கதிரும் உதித்தது நாவலின் காகித அட்டைப் பதிப்பினை எனது பையிலிருந்தும் உருவி, விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கினேன். உயர்நிலைப்பள்ளியிலிருக்கும் போது அந்த நாவலை வாசித்திருக்கிறேன்தான், ஓட்டல் படுக்கையிலிருக்கும்போது எதேச்சையாக எடுத்து வாசிக்கத் தொடங்கிய நான் கதைக்குள் முழுவதுமாக என்னை இழந்துவிட்டேன். அது எப்படிப்பட்ட ஒரு மிகச் சிறந்த நாவலென்பதை அதுவரையில் எப்படி நான் உணராமற் போனேனென்பது எனக்கு இப்போதும் வியப்பாகத்தான் இருக்கிறது. அந்தப் புரிதலுணர்வு வித்தியாசமான ஒரு உணர்ச்சியைத் தோற்றுவித்தது. என் மனம் அப்போது வேறெங்கோ அலைந்திருக்கவேண்டுமென இப்போது நினைக்கிறேன்.
அடுத்த நிலையமான மைக்கேஜிலும் காலை உணவுச் சேவை எதுவும் காணப்படாததால் நான் அமைதியாக தொடரிப்பாதை வழியாகவே களைப்பும் ஆவி பறக்கும் ஸ்ட்ராங் காபி மற்றும் வெண்ணெய் தடவி வாட்டப்பட்ட கனத்த ரொட்டித் துண்டுகளின் கனவுமாக நடையைத் தொடர்ந்தேன். முன்பு போலவே கணக்கற்ற காலி மனைகளையும் கட்டுமானத் தளங்களையும் நான் கடந்தேன். என் பக்கமாக வழுக்கிச் சென்ற பல மெர்சிடெஸ் பென்ஸ் இ கிளாஸ் சேடன்கள் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கோ தொடரி நிலையத்துக்கோ செல்வதாக நானாகவே கற்பனை செய்துகொண்டேன். அந்த மகிழுந்துகளில் எந்தவொரு சிறு கறையோ அல்லது கீறலோ இல்லை. சின்னங்களில் எந்தப் பொருளுமில்லாதது போலவே காலத்தின் நகர்வுக்கும் எந்த நோக்கமும் இல்லை. எல்லாவற்றுக்குமே நிலநடுக்கத்துடன் அல்லது வன்முறையுடனும் எந்தத் தொடர்புமில்லை. அநேகமாக அப்படித்தான்.

ரோக்கோ தொடரிநிலையம் முன்பாக மீச்சிறு சலுகை ஒன்றினை எடுத்துக்கொண்டு, மெக்டொனால்டு விற்பனையகத்துக்குள் நுழைந்து முட்டை மெக்மஃபின் செட் ஒன்று ( 360 யென்) கொண்டுவருமாறு சொல்லி, கடல் உறுமுவதைப் போல என் வயிற்றுக்குள் ஊளையிட்டுக்கொண்டிருந்த பசியை ஒருவழியாகச் சாந்தப்படுத்த முடிந்தது. முப்பது நிமிடங்கள் இடைவேளை எடுத்துக்கொள்வதெனத் தீர்மானித்தேன். அப்போது காலை மணி ஒன்பதாக இருந்தது. 9.00 மணிக்கு மெக்டொனால்டுக்குள் நுழைந்த நான் மிகப்பெரிய கற்பனையும் உண்மையுமான மெக்டொனால்டு சாம்ராஜ்யத்துக்குள் ஈர்க்கப்பட்டுவிட்டதாக உணர்ந்தேன். அல்லது தன்னுணர்விழந்த ஒரு பெருநிலையின் பகுதியாகிவிட்டிருந்தேன். ஆனால், உண்மையாகவே என்னைச் சுற்றியிருந்த எல்லாமே எனது சொந்த தனி ஆளுமை இயல்புதான். நல்லதற்கோ அல்லது கெட்டதற்கோ அந்தத் தனிநபருணர்வு, தற்காலிகமாகவேனும் செல்வதற்கு வேற்றிடம் எதுவுமில்லாதிருந்தது.

அவ்வளவு தூரத்தை நான் சமாளித்துக் கடந்து வந்திருந்தேன்; அதனாலேயே எனது பழைய உயர்நிலைப்பள்ளிக்குச் செல்லும் ஏற்றப்பாதையில் ஏறிவிடுவதெனத் தீர்மானித்தேன். என் நெற்றியில் மெல்லிய வியர்வைப்படலமொன்று துளிர்த்தது. பள்ளி நாட்களில் நான் எப்போதுமே முழுவதுமாக நிறைந்த பேருந்தில் தான் பள்ளிக்கு வந்தேன். ஆனால், இப்போது அதே சாலையில் எனது சொந்த வியர்வையில் நடக்கிறேன். மலைச் சரிவுகளை வெட்டிச் சரித்து உருவாக்கிய பரந்த விளையாட்டு மைதானத்தில் மாணவிகள் அவர்களது உடற்பயிற்சி வகுப்பின் பகுதியாக கைப்பந்து விளையாடிக்கொண்டிருந்தனர். சுற்றிலுமாக, எப்போதாவது கேட்கும் மாணவிகளின் கூக்குரல் ஒலியைத் தவிர வேறு நிலச் சப்தம் ஏதுமின்றி அமைதி நிலவியது. அது அப்படியொரு முழுமையான உறைநிலை போன்றிருக்கவே, நான் செல்லக்கூடாத ஏதோ ஒரு வெளிக்குள் தடுக்கி விழுந்துவிட்டதாக உணர்ந்தேன். ஏன் அப்படியான ஒரு முழு அமைதி?

மிகவும் குறைவான ஒளியுடன் தூக்கக் கலக்கத்திலிருந்த கோப் துறைமுகத்தை நோக்கிப் பார்த்ததோடு, கடந்த காலத்தின் எதிரொலி எதையாவது கேட்டுவிடலாமென்ற நம்பிக்கையில் கவனமாகக் காது கொடுத்தும் நான் எதையுமே பெற்றுவிடவில்லை. வெறுமனே மவுனத்தின் குரல்!. அவ்வளவுதான். ஆனால், நீங்கள் என்னதான் செய்துவிட முடியும்? முப்பது ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்தவற்றைப் பற்றியல்லவா நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக! என்னால் நிச்சயமாகச் சொல்வதற்கு ஒரு விஷயமிருக்கிறது : வயதாக, வயதாக மனிதன் தனிமையாகிறான். இது எல்லோருக்குமான உண்மை. ஆனால், அது தவறானதாக இருக்காது. நான் என்ன சொல்கிறேனென்றால், நம்முடைய வாழ்க்கை என்பது நம்மைத் தனிமைக்குப் பழக்கப்படுத்த உதவுவதற்கான தொடரான ஒரு படிநிலைகளைத் தவிர வேறொன்றுமில்லையென்கிறேன். அப்படியானதாக இருக்கும்போது புகார் சொல்வதற்கோ குறைப்பட்டுக்கொள்வதற்கோ எந்தக் காரணமும் இல்லை. அது மட்டுமில்லாமல் நாம் யாரிடம் போய், எந்த வகையில் புகார் சொல்ல முடியும்? அல்லது குறைப்பட்டுக்கொள்ள முடியும்?

4

நான் எழுந்து, உயர்நிலைப் பள்ளியிலிருந்து வெளியே வந்து அந்த நீண்ட சரிவில் ஆர்வமற்ற ஒரு உணர்வோடு கீழே இறங்கத் தொடங்கினேன். நான் சிறிது களைப்புற்றிருந்தேன். நான் புல்லெட் தொடரிகள் மட்டுமே நிற்கும் ஷின் கோப் நிலையத்திற்கு, இடையில் எங்கும் நிற்காமல் எனது நடையைத் தொடர்ந்தேன். அங்கிருந்து எனது இலக்கான சன்னோமியாவுக்கு ஒரே மூச்சில் போய் இறங்கிவிடலாம்.

எனக்குக் கூடுதல் நேரம் கிடைக்கவே, முழுமையான ஒரு ஆர்வத்தில் தொடரி நிலையத்திற்கு அருகில் புதிதாகத் திறக்கப்பட்டிருந்த மாபெரும் வகை ஓட்டலான புதிய கோப் ஓரியண்ட் ஓட்டலுக்குள் சென்றேன். கபே முன்புற இருக்கைப் பகுதியிலிருந்த சாய்மெத்தையில் சாய்ந்து அமர்ந்து, கடைசியில், அந்த நாளில் நான் விரும்பிய முதல் தரக் காபி ஒன்று கிடைக்கப்பெற்றேன். என்னுடைய முதுகுப் பையைத் தாழ்த்தி, எனது குளிர் கண்ணாடியைக் கழற்றி, ஆழ்மூச்சு எடுத்து என் கால்களுக்கு ஒரு ஓய்வினை அளித்தேன்.

அங்கிருந்த வசதிகளை நான் பயன்படுத்தும் தேவை எழுந்திருப்பதாக எனக்குத் தோன்றவே, காலையில் ஓட்டலிலிருந்து வந்தபின்பு முதல் முறையாக அப்போதுதான் போய் என்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு வந்தேன். பின்னர் நான் சாய்ந்து அமர்ந்து, மீண்டுமொரு காபி கொண்டுவருமாறு சொல்லிவிட்டுச் சுற்றிலுமாக ஒரு நோட்டமிட்டேன். ஓட்டல், துறைமுகம் அருகிலிருந்த பழைய கோப் ஓரியண்டல் ஓட்டலின் (நிலநடுக்கத்தினால் மூடப்பட்ட, அருமையான இதம் மிகுந்த ஒரு ஓட்டல்) உலகங்களோடும் அதற்கப்பாற்பட்டும் பயங்கரமாகப் பெரிதும் பரந்த வெளியோடிருந்தது. இந்தப் புதிய ஓட்டலைப் பரந்த வெளியுடையதென அழைப்பதைக்காட்டிலும் பாலைவனம் மாதிரியானதெனக் கூறுவதுதான் உண்மைக்கு மிக அருகிலானதாக இருக்கும். அது போதுமான பிணங்கள் இல்லாத பிரமிடு போன்ற வகையானது. நான் வெறுமனே விளையாட்டுக்காகச் சொல்லவில்லை; நான் தங்க விரும்பாத இடமாக அது இருந்தது.
ஒரு சில மாதங்களுக்குப் பின்னர், அந்த அதே லவுஞ்சில் யகூசா தொடர்பான துப்பாக்கிச்சூடு நடந்து இரண்டு பேர் கொல்லப்பட்டனர். அதுபோல் அந்த இடத்தில் ஏதாவதொன்று நடக்குமென்று எனக்குத் தெரிந்துகொள்வதற்கு எந்த வழியுமில்லைதான் என்றபோதிலும் மீண்டும் ஒருமுறை காலம் எங்களைப் பிரித்த இடைவெளிக்குப் பின் அதைக்கடந்துசெல்லுதல் நிகழ்ந்தபோதும் வன்முறையின் நிழல் ஒன்று படிந்தது.. நீங்கள் அதைத் தற்செயல் எனக்கூறினாலும், அது இயற்கைக்குப் புறம்பான ஒன்றாக எனக்குத் தோன்றியது. அது கடந்தகாலம், நிகழ்காலம்மற்றும் எதிர்காலமென எல்லாமே முன்னும் பின்னுமாக மின்னி ஒருங்கிணைந்து என் மீதாகக் கடந்துசென்றன.
எதனால் நாம் அப்படியான ஒரு கட்டவிழ்த்துவிடப்பட்ட, தொடர் வன்முறைக்கு இலக்காக்கப்படுகிறோம்? இந்தச் சிறு நடைப்பயணத்திற்கு நான்கு மாதங்களுக்குப் பின்னர், என் மேசையில் அமர்ந்து இந்த வார்த்தைகளை எழுதும்போது வியந்துகொள்வதைத்தவிர என்னால் வேறெதுவும் செய்ய இயலவில்லை. கோப் பகுதியைச் சிறிது அப்பால் தள்ளிவைத்துவிட்டாலுங்கூட, வன்முறையின் ஒரு நடவடிக்கை நமக்கு விதிக்கப்பட்டதென்பது போல ( உண்மை நடப்பிலோ அல்லது உருவகமாகவோ) ஒன்று மற்றொன்றுக்கு இட்டுச் செல்வதாக உணர்கிறேன். இதற்கு ஏதாவதொரு வகைப்பட்ட தலைமுறைத் தவிர்ப்பு முறைகள் ஏதும் இருக்கின்றனவா?

நான் அமெரிக்காவில் வசித்துக்கொண்டிருந்தபோது ஹான்சின் நிலநடுக்கம் தாக்கியது. அதற்கு இரண்டு மாதங்களுக்குப் பின், டோக்கியோ சுரங்க வழியில் சாரின் விஷவாயுத் தாக்குதல் நிகழ்ந்தது. நான் இதனை ஒரு சம்பவங்களின் தொடராகத் தெரிவதாகவே பார்த்தேன். அந்தக் கோடையில் நான் ஜப்பானுக்குத் திரும்பியதும் சாரின் தாக்குதலில் உயிர் பிழைத்தவர்களைப் பேட்டி காணத் தொடங்கினேன். ஒரு ஆண்டுக்குப் பின் நான் Underground அண்டர் கிரவுண்ட் வெளியிட்டேன். அந்தப் புத்தகத்தில் நான் எதைத் தேடினேன், எதைப்பற்றி எழுத விரும்பினேனென்றால் – நான் உண்மையிலேயே எதைப்பற்றி மேலும் அதிகமாகத் தெரிந்துகொள்ள விரும்பினேனோ அதனை, நமக்குள்ளேயே ஒளிந்திருக்கிற நமது சமூகத்தின் வன்முறையினைப் பற்றித்தான். உள்மறைந்திருக்கிற சாத்தியக்கூறாக நிறைந்துள்ள வன்முறையினைப் பற்றியும் வன்முறை வடிவமாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்கிற அந்தச் சாத்தியக்கூறு பற்றியும், அது உள்ளிருக்கிறதென்பதை மறக்க முயலுகிற நம் எல்லோரையும் பற்றியும் தான். அதனாலேயே, நான், தாக்கியவர்களை அல்லாமல் பாதிக்கப்பட்டவர்களை நேர்காணல் காணத் தேர்ந்தெடுத்தேன்.

நிஷிமோனியாவிலிருந்து கோப் நகருக்கு நான் அமைதியாக நடந்த இரு நாட்களிலும் இந்தச் சிந்தனைகளே என் மூளைக்குள் சுழன்றுகொண்டிருந்தன. நிலநடுக்கத்தின் நிழலினூடாகவே எனது பாதையை வகுத்துக்கொண்ட நான் எனக்குள்ளாகவே கேட்டுக்கொண்டிருந்தேன் : சுரங்க வழியில் நிகழ்ந்த சாரின் விஷவாயுத் தாக்குதல் முழுவதுமாக எதைப்பற்றியது? அதே நேரம் சாரின் விஷவாயுத் தாக்குதலின் நிழல்களினூடாக நான் என்னை இழுத்துச் சென்றபோது, நான் வியந்துகொண்டேன் : ஹான்சின் நிலநடுக்கம் என்பது என்ன? அந்த இரண்டு நிகழ்வுகளும் என்னைப் பொறுத்தவரையில் தனித்தனியானதல்ல; ஒன்றினைப் பற்றி ஆய்வுசெய்வது இன்னொன்றினை வெளிப்படுத்த உதவக்கூடும். இது ஒரே நேரத்திலான உடலியல் மற்றும் உளவியல் சிக்கல். மறுதலையாகச் சொல்வதெனில் உளவியலே உடலியல். அவை இரண்டினையும் இணைக்கின்ற இணைப்புச் சந்தியினை நானே உருவாக்கிக்கொள்ளவேண்டியுமிருந்தது.

இதோடு இன்னும் அதிகமான சிக்கல் நிறைந்த மற்றொரு கேள்வியையும் இணைத்துக்கொள்ள முடியும்: இது குறித்து நான் என்ன செய்ய இயலும்?

சொல்வதற்கு வருத்தமாக உள்ளது, இந்தக் கேள்விகளுக்கு இன்னும் நான் ஒரு தெளிவான தர்க்கபூர்வமான பதிலினைக் கண்டுபிடிக்கவில்லை. என்னால் எந்த ஒரு இறுதியான முடிவுக்கும் வர இயலவில்லை. இந்தக் கருத்துமுனையில் நான் செய்யக்கூடியதெல்லாம் என்னுடைய நிச்சயமற்ற உரைநடை மூலம், எனது சிந்தனைகள் ( என் பார்வையும் கால்களும்) என்னை வழிநடத்திச்செல்லுகிற உண்மையான பாதையில் ஒரு எதிரிடைக்கலமாகச் சேவைசெய்ய இயலும். நீங்கள் இதைப் புரிந்துகொள்வீர்களென நம்புகிறேன். எல்லாவற்றுக்கும் மேலாக, நான், எனது கால்களை, எனது உடலை, படிப்படியாக, நின்றும் நிதானித்தும் செய்கிற உடலியல் நடைமுறை மூலம் மட்டுமே முன்னேறுகிற வகையைச் சேர்ந்தவனாக இருக்கிறேன். இது அதிக காலம் பிடிக்கிற ஒன்று. மிக அதிகமாகவே காலம் பிடிக்கும். அது மிகமிகத் தாமதமாகிவிடாதென்றும் நான் வெறுமனே நம்பிக்கைகொள்கிறேன்.

இறுதியில் நான் சன்னோமியாவுக்குத் திரும்பி வந்து சேர்ந்தேன். இதற்கிடையில் என் உடலில் நாற்றம் பிடிக்கத் தொடங்கிவிட்டது. உங்கள் காலை நடையைவிடக் கொஞ்சம் அதிகத் தூரம் அவ்வளவுதான். ஓட்டல் அறையில் வெந்நீர்க்குளியல் எடுத்துக்கொண்டேன். என் தலைமுடியைக் கழுவி முடித்து, குளிர்பெட்டியிலிருந்து குளிர்ந்த மினரல் நீர்ப்புட்டி ஒன்றை எடுத்து அதிலிருந்த நீரை விழுங்கினேன். எனது பையிலிருந்து புதிய ஆடைகளை எடுத்து மாற்றிக்கொண்டேன். கடற்படை நீல போலோ சட்டை, நீலப் பருத்தி மேற்கோட்டு மற்றும் பெய்கு சினோஸ். என் கால்கள் சிறிது வீக்கம் கொண்டிருந்தாலும் நான் அதுபற்றிச் செய்துகொள்வதற்கு எதுவும் இல்லை. என் தலைக்குள் தீர்வாகாமல் இருண்டு கிடக்கும் தெளிவற்ற கேள்விகளை வெளித்தள்ள இயலாமலிருப்பது போன்றது தான் அது.

நான் செய்வதற்கான காரியமெனக் குறிப்பாக எதுவும் இல்லாததால், என் கண்ணில் பட்ட டாம் க்ரூய்ஸ் நடித்த ஒரு திரைப்படத்திற்குச் சென்றேன். அது ஒன்றும் அவ்வளவு நன்றாகப் போன படமல்லவென்றாலும் மிக மோசமானதாகவும் இல்லை. நான் நேரத்தைக் கடத்துவதாக ஓய்வாக உட்கார்ந்திருந்தேன். என் வாழ்க்கையின் இரண்டு மணி நேரம் இப்படியாக நல்லபடியாகவுமில்லாமல் மோசமாகவுமில்லாமல் கடந்தது. மாலை வரும்போது நான் திரையரங்கினை விட்டு வெளிவந்து, மலையை நோக்கி ஒரு சிறிய உணவுவிடுதிக்கு நடந்தேன். கவுண்டரில் அமர்ந்து கடலுணவு பிட்சாவும் ஒரு திரா பீரும் கொண்டுவரச் சொன்னேன். நான் ஒருவன் தான் தனக்குத் தானே பரிமாறிக்கொள்ளும் வாடிக்கையாளனாக இருந்தேன். ஒருவேளை அது எனது கற்பனையாகவுமிருக்கலாம்; ஆனால் அங்கிருந்த எல்லோருமே மகிழ்ச்சியாக இருப்பதாகத்தான் தோன்றியது. இணையர்கள் நிறைவோடிருப்பதாகத் தோன்ற, ஆண்களும் பெண்களுமாக ஒரு குழுவினர் உரக்கக் கூவிச் சிரித்தனர். சில நாட்கள் அப்படித்தான் நிகழும்.

அவர்கள் எனக்கு அளித்த கடலுணவு பிட்சாவில் `நீங்கள் உண்டு மகிழவிருக்கும் இந்த பிட்சா எங்கள் உணவுவிடுதியால் தயாரிக்கப்பட்ட 958,816 ஆவது பிட்சா` என அறிவிக்கின்ற ஒரு துண்டுச் சீட்டும் இணைக்கப்பட்டிருந்தது. எனக்கு அந்த 958,816 ஐப் புரிந்துகொள்ள இயலவில்லை. அதிலிருந்து நான் என்ன மாதிரியான தகவல் தெரிந்துகொள்ளவேண்டுமென எதிர்பார்க்கிறார்களோ தெரியவில்லை.

நான் இளைஞனாக இருந்தபோது எனது பெண் தோழியோடு இங்கு வந்து சில குளிர்ந்த பீர்களை விழுங்கியதோடு இது மாதிரி எண்கள் குறித்த துண்டுச் சீட்டு கோர்த்த, புத்தம் புதிதாகத் தயாரித்த பிட்சாக்களையும் உண்டிருக்கிறேன். நாங்கள் எங்கள் எதிர்காலம் பற்றிப் பேசிக்கொண்டிருப்போம். அப்போது நாங்கள் செய்துகொண்ட உறுதிகளில் ஒன்றுகூட உண்மையாகவில்லை. ஆனால், அது நீண்ட நெடு, நெடுங்காலத்துக்கு முன். அது இங்கே கடல் இருந்த காலம். அது இங்கே மலைகள் இருந்த காலம்.
அதற்காக இப்போது கடலும் மலைகளும் இங்கில்லை என்பதல்ல. அவை இருக்கத்தான் செய்கின்றன. நான் சொல்வது வேறு கடல், வேறு மலைகள். இப்போது இங்கிருப்பவற்றிலிருந்தும் வேறுபட்டவை. என்னுடைய இரண்டாவது பீரை உறிஞ்சிக்கொண்டே, எனது காகித அட்டைப் பிரதியான `கதிரும் எழுகிறது` நூலை எடுத்துத் திறந்து நான் விட்ட இடத்தைக் கண்டுபிடித்துத் தொடர்ந்தேன். இழந்துபோன ஒரு தலைமுறையின் இழந்த கதை. அவர்களது உலகத்துக்குள் விரைவாகவே ஈர்க்கப்பட்டேன்.

அந்த உணவுவிடுதியைவிட்டு நான் கிளம்பும்போது முன் கணித்தபடியே மழை பெய்து நான் நனைந்தேன். முழுவதுமாக நனைந்து எலும்புகளுங்கூட ஊறிப்போயின. ஆனால், இந்த இடத்தில் ஒரு குடை வாங்குவதென்பது பெரும் பிரச்னையே.

****
.