Category: மொழிபெயர்ப்பு

மொழிபெயர்ப்பு சிறுகதை – போக்கிரி – ஸையத் முஹம்மத் அஷ்ரஃப் தமிழில் – ராகவன் தம்பி

போக்கிரி

உருது மூலம் – ஸையத் முஹம்மத் அஷ்ரஃப்

ஆங்கிலம் வழித் தமிழில் – ராகவன் தம்பி

வெளிச்சம் சிறிது சிறிதாக அந்தப் பாதையில் இருந்து விலகத் துவங்கியிருந்தது. சூரியன் மறைந்து நீண்டநேரமாகி விட்டது போலத் தோன்றியது.    ஒருவேளை ஜீப் அந்தப் பாதையின்  செங்குத்தான வளைவைக் கடந்து,  வலப்புறமாகத் திரும்பி அடர்ந்த காட்டுப் பகுதியின் வாயிலில்  நுழைந்து விட்டதனாலும் அவர்களுக்கு அப்படித் தோன்றியிருக்கலாம்.     இன்ஜின் உறுமிக் கொண்டே இருந்தது.    பாதையின் ஓரத்தில், ஓவர்கோட் அணிந்திருந்த பெண்மணி ஒருத்தி அவர்களை நோக்கி வண்டியை நிறுத்துமாறு ஒரு கையால்  ஜாடை காண்பித்தாள்.  இன்னொரு கையில்  சிறுவன் ஒருவனின் கையைப் பற்றிக்  கொண்டு நின்றிருந்தாள்.

பிரேக்கை வலுவாக அழுத்தி   குலுக்கலுடன் ஜீப்பை நிறுத்தினான் நதீம்.  சக்கரங்கள் கிளப்பிய புழுதி   பெண்மணியின்  கால்களுக்கு   அடியில் தஞ்சம் புகுந்து அடங்கின.  சிறுவனின் முழங்கால் வரை புழுதி படிந்திருந்தது.   .

டாக்டர் வாக்கர், பின் சீட்டில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த  ரைஃபிளைக்  கையில் எடுத்துக் கொண்டு, ஏதோ அவசத்தில் இருப்பவர் போலப் பதறினார்.       வண்டியை ஏன் நிறுத்தினாய்?     டிஎஃப்ஓ சாஹிப்   இந்நேரம் கிளம்பி இருக்கலாம்.     நமக்காக அவர் எத்தனை நேரம்தான் காத்திருப்பார்?    ஏற்கனவே நேரம்   தள்ளிப் போய்விட்டது.  சீக்கிரம் வா” என்றார்.

ஆஸிஃப் வண்டியின் கண்ணாடி ஜன்னலை இறக்கி அந்தப் பெண்மணியையும்  சிறுவனையும் நன்கு உற்றுப் பார்த்தான்.  வண்டிக்குள் திரும்பிப் பார்த்து கேலியாக சிரித்தான்.  “கிளம்பியது என்னவோ ஒரு மதம் பிடித்த யானையை வேட்டையாடுவதற்கு.   ஆனால் நம்ம ஆட்கள் ஒரு பெண்ணைக் கண்டதுமே  ஹீரோக்களாகி விடுகிறார்கள்.”

ரஷீத் யோசனையில் மூழ்கிப்போனான்.   ஏதோ அர்த்தமற்ற தர்மசங்கடத்தில் மாட்டிக் கொண்டவனைப் போல, “வண்டியை விட்டு இறங்கி அந்தப் பெண்மணி யார், அவளுக்கு என்ன வேண்டும் என்று கேள்” என்று எரிச்சலுடன் சொன்னான்.

கதவை வேகமாகத் திறந்து   இறங்கியதும்  டிசம்பர் காற்று முகத்தில் சில்லென்று வீசியது.  அவளை நோக்கி நடந்தான் நதீம்.

“சைத்தான், கதவை மூடாமல் போய்விட்டான்” டாக்டர் வாக்கர் தனக்குள் முணுமுணுத்துக் கொண்டார்.    “இந்த வருஷம் குளிர்   மிகவும் அதிகமாக இருக்கிறது.  கண்டிப்பாக எங்காவது பனி பெய்து கொண்டிருக்க வேண்டும்” என்றார்.

நதீம் மீண்டும் வண்டிக்குள் ஏறிக் கதவை மூடிக் கொண்டான்.     திரும்பி மற்றவர்களைப் பார்த்தான்.  ஏதோ நினைவுக்கு வந்தது போல, கதவை மீண்டும் திறந்தான்.   கதவை மூடியதும் அந்தப் பெண்ணின் முகம் வாடிப்போனதை ரஷீத் கவனித்தான்.  மீண்டும் கதவு திறந்ததும் அவளுடைய முகவாட்டம் மாறியது.

“விஷயம் என்னவென்றால், அந்தப் பெண்மணி  தன்னிடம் பத்தாயிரம் ரூபாய் வைத்திருக்கிறாளாம்” என்று சொல்லி விட்டு நதீம் அமைதியானான்.  தான் சொன்னது யாரிடமும் எந்த விளைவையும்  ஏற்படுத்தவில்லை என்பதை அறிந்து அமைதியானான்.

என்னது? பத்தாயிரமா? யாருடைய பணம்?   இவள் எதற்குத் தன்னிடம் இத்தனை பெரிய தொகையை வைத்திருக்க வேண்டும்?  இந்தக் காட்டுப் பாதையில் அவ்வளவு பெரிய தொகையை  வைத்துக் கொண்டு என்ன செய்யப்போகிறாள்?”

டாக்டருடைய தொடர்ச்சியான கேள்விகளை இடை மறிப்பது போல   நதீம் சொன்னான், “பரவ்லி கிராமத்தின் லேவாதேவிக்காரர் அகர்வாலிடம் இருந்து அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டாளாம்.  கனடாவில் இருந்து இங்கு வந்திருக்கிறாள்.  லக்னோ சொந்த ஊராம்.  கனடாவில் இருந்தபோது இந்தப் பணத்தை அவள் அகர்வாலிடம் கொடுத்திருக்கிறாள்.  இந்தியா திரும்பிய பிறகு அந்தப் பணத்தை அவனிடம் இருந்து திரும்ப வாங்கிக் கொண்டிருக்கிறாள்.  இன்று இரவே அவளுக்கு லக்னோ போகவேண்டுமாம்.  அந்தப் பையன் அவளுடைய மருமகன்.  பெயர் ராஜூவாம். இன்று ஏதோ கடை அடைப்பாம்.  பேருந்துகள் எல்லாம் ஓடாது.  கிராமத்தை விட்டுக் கிளம்பிய போது இதுபற்றி அவளுக்குத் தெரிந்து இருக்கவில்லையாம்.  அவளுக்குக் கிராமத்துக்குத் திரும்பிப் போகவேண்டாமாம்.  ஏனென்றால் அங்கு ஒரு வீட்டில் கூட…

வண்டியின் பின்சீட்டில் டாக்டரின் உதவியாளன் ரமேஷ் உட்கார்ந்திருப்பதும் கையில் அவன் ஒரு ரைபிள் துப்பாக்கியை வைத்திருப்பதும் திடீரென்று கவனத்துக்கு வந்ததால் தன் பேச்சை சடாரென்று நிறுத்தினான்.

“நாம் அவர்களை பஹ்ரைச்சில் உள்ள ரேஞ்ஜர் அலுவலகம் வரை அழைத்துச் சென்று டிஎஃப்ஓ சாஹிப்பிடம் ஒப்படைத்துவிடுவோம்.  அவர்களிடம் பஹ்ரைச் பஸ் ஸ்டாண்டில் இந்த இரண்டு பேரையும்  இறக்கி விடச் சொல்வோம்”    முடிவில்லாத ஏதோ ஒரு பிரச்னைக்குத் தீர்வு சொல்வது போல டாக்டர் வாக்கர் அவசர அவரமாகச் சொன்னார்.

அங்கு நிலவிய பதட்டமான சூழல் ஒருவழியாக சற்றுத் தணிந்தது போலத் தோன்றியது.  அனைவரும் சற்று இறுக்கம் தளர்ந்து காணப்பட்டார்கள்.

டாக்டர் வாக்கர்   ரைஃபிளை எடுத்துக் கொண்டு பின்பக்கம் சென்று ஆஸிஃப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்.

நதீம் ஸ்டியரிங்கை ஒரு கையிலும் கதவை ஒரு கையிலுமாகப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.  “அங்கே ஏன் நின்று கொண்டிருக்கிறாய்? வண்டியில் ஏறிக்கொள்.  ஜீப்பில் உனக்கு இடம் ஏற்பாடு செய்து கொடுக்கிறோம். வா ஏறிக்கொள்” என்றான்.

இன்னொரு கதவை அவன் திறந்து விட்டான்.  பையனை முதலில் ஏற்றி விட்டுப் பிறகு படியில் கால்களை வைத்து எம்பி முரட்டுத்தனமாக ஜீப்பில் ஏறினாள் அந்தப் பெண்மணி.  குதிகால் உயர்ந்த பூட்டு அணிந்திருந்தாள்.  உள்ளே அவள் ஏறி உட்கார்ந்து தனக்கு வசதியான இடத்தை ஏற்படுத்திக் கொண்டதை எல்லோரும்  வைத்த கண் வாங்காது பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  சாலையின் விளிம்பில் அவள் நின்று கொண்டிருந்த போது இவர்களால்  சரியாகப் பார்க்க இயலவில்லை.  அருகில் பார்த்தால் இளமையுடன், கவர்ச்சியுடனும்  தன்னம்பிக்கை நிரம்பியவளாகவும் காட்சியளித்தாள்.  வெறும் பழங்களை மட்டுமே  விழுங்கி வளர்ந்தவளாக இருக்க வேண்டும் என்று நினைக்க வைப்பது போன்ற மிருதுவான கன்னங்கள் அவளுக்கு என்று நினைத்தான் நதீம்.  சொல்லப்போனால் மற்றவர்களும் அப்படித்தான் நினைத்தார்கள்.

அவள் தான் மறந்து விட்ட ஏதோ ஒன்றை நினைவுபடுத்திக் கொள்வது போல திடீரெனத் தன்னுடைய ஓவர்கோட்டைத் தடவிப் பார்த்துக் கொண்டாள்.  பிறகு   கோட்டைத் தன்னுடன் இறுக சேர்த்து அணைத்துக் கொண்டாள்.  பின்பக்கம்   திரும்பாமல் ஆங்கிலத்தில் மிகவும் மென்மையாகச் சொன்னாள், “மிக்க நன்றி”.  பிறகு ஏதோ சொல்ல மறந்தது போலவும் வலுவில் நினைவுபடுத்திக் கொள்வது போலவும் உருதுவில் தொடர்ந்தாள், “உங்கள் எல்லோருக்கும் நான் மிகுந்த நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்”.

சாலையின் இருபுறமும் வயல்கள் சூழ்ந்திருந்தன.  அங்கு கவிந்திருந்த கும்மிருட்டில்  அந்த வயல்களில் என்ன பயிர்கள் வளர்ந்திருக்கின்றன என்று அனுமானிக்க முடியவில்லை.  வனத்துறையின் செக் போஸ்டை அடைந்ததும் ஜீப்பின் வேகம் சற்றுத் தணிந்தது.

அங்கு வழியை மறித்தபடி வனக்காவல் சிப்பாய் நின்றிருந்தான்.  ஜீப் உமிழ்ந்த ஒளியில்  கண்கள் கூசின.   கண்களுக்கு மேல் கைகளை மறைகட்டி உள்ளே இருந்தவர்களைக் கூர்ந்து பார்க்க முயற்சித்தான்.     ஜீப்பை அடையாளம் கண்டு கொண்டு குறுக்குக்கம்பை உயரத் தூக்கினான். வாயிலைக் கடக்கும்போது ஆஸீஃப் சொன்னான்,     “வண்டியை நிறுத்து நதீம்”

“எப்போதும் இதேதான் உனக்கு.  இப்போதும் என்ன அதே வாசனையா?” என்றார் டாக்டர் வாக்கர்.

“ஆமாம்” என்றான் ஆஸீஃப் மென்மையான குரலில்.

ஜீப் நின்றதும் ஆஸீஃப் கீழே இறங்கினான். டாக்டர் வாக்கர் அவனைத் தொடர்ந்து இறங்கினார்.  திறந்திருந்த வாயிற்கதவு  வழியே வீசிய காற்று ஏதோ வேற்று கிரகத்தில் இருந்து வீசுவது போலத் தோன்றியது.  இப்போது அவர்கள் உண்மையாகவே அடர்ந்த காட்டுப் பகுதியில் இருந்தார்கள்.

ஆஸீஃபும் டாக்டர் வாக்கரும் ஜீப்பில் சாய்ந்து கொண்டு அவசர அவசரமாக சிகரெட்டை ஊதினார்கள்.  நதீமும் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்தான்.  இருள் அடர்ந்து சூழ்ந்திருந்த காட்டை உற்றுப் பார்த்தான்.  காற்றில் மிதக்கும் மென்மையான வாசத்தை உள்வாங்கிக் கொள்வதுபோல மூச்சை ஆழமாக உள்ளே இழுத்து நிதானமாக வெளியில் விட்டான்.  யானையின் காதுகள் போலப் பெரிதாகப் படர்ந்து வளர்ந்த இலைகள், பலவிதமான புல்வகைகள் எல்லாம் இந்தக் காட்டில்  வசிக்கும் பல்லாயிரக்கணக்கான விலங்கினங்களின் வாசனைகளுடன் ஒன்றிணைந்து வீசும் கலவையான வாசத்தை இங்கு  நுகரலாம் என்று நினைத்தான்.

இருட்டில்  கண்களுக்கு அத்தனை வேலை இருப்பதில்லை.  காட்டின் இருப்பினை அதன் வாசத்தால் மட்டுமே நுகர முடிந்தது.  இருளைக் கவ்வியிருந்த அடர்த்தியான நிசப்தம் சில கணங்களில்   அர்த்தங்கள் ஏதுமற்று இருப்பது போலவும் அடுத்த கணம் ஏதோ மிகப் பெரும் முக்கியத்துவம் வாய்ந்தது போலவும் மாறி மாறி ரூபம் கொண்டன.  அந்த ஆழ்ந்த நிசப்தத்தில் கனவுகள் ததும்பப் பறக்கும் பறவைகளின் மெல்லிய சிறகடிப்பு  அல்லது வனமிருகங்களின் மேய்ச்சல் ஒலி,  அல்லது, பறவைகள் ரீங்கரித்துப் பறக்கும் வெள்ளந்தியான   பறத்தலில் –   யாரும் எங்கும் எந்தவகையிலும்  காண இயலாத    ஒளிக்கீற்றுக்களைக்  காணமுடிந்தது.  சில நேரங்களில் ஒலிகள்   கூட பளீரென்ற  வெளிச்சப் புள்ளிகளாக மாறிவிடுகின்றன.

இவை அனைத்தையும் சிறுவன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான்.  முதலில் எந்தவிதமான சுவாரசியம் இல்லாமல் இருந்தவன், சிறிது நேரம் கழித்து லேசாக ஆர்வம் காண்பிக்கத் துவங்கினான்.    பிறகு எல்லாவற்றையும்  முழுகவனத்துடன்  உற்றுப்பார்க்கத் துவங்கினான்.

சில நேரங்களில் ஒலியே ஒளியாக மாறிவிடுகிறது என்று நதீம் நினைத்தான்.  அப்போது ஒளி, ஒலியாக மாறுமோ?  இந்த தர்க்கத்தை அதன் இறுதிக்கட்டம்  வரை எடுத்துச் செல்லவேண்டும் என்று நினைத்தான்.  இடையில், டாக்டர் வாக்கர் ஜீப்புக்குள் ஏறி உட்கார்ந்து “மிகவும் அழகான, அமைதியான காடு இது. இங்கே போய் அந்த மதம் பிடித்த காட்டு யானை எல்லோருக்கும் தொல்லை  கொடுத்துக் கொண்டிருக்கிறது” என்றார்.

மதம் பிடித்த யானையைப் பற்றிச் சொன்னதுமே அந்தப் பெண்மணியும்  சிறுவனும் தங்கள் இருக்கைகளுக்குத் திரும்பினார்கள்.  “வாக்கர் பாய், நீங்கள் எல்லோரும் எங்களுடன் இந்தக் காட்டில் பல நாட்கள் தங்கியிருந்தீர்கள்.  அப்போது எத்தனை மகிழ்ச்சியாக இருந்தது.  சென்ற சீஸன் போது நாம் ரேஞ்ஜர் அலுவலகத்தில் இருந்து கெர்வாண்டி வரை நிலவொளியில் நடந்தே சென்றோம்.     அப்போது இது போல வந்தவகையான  ஆபத்தும் இல்லாமல் இருந்தது. அங்கங்கு ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த மான்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே மணலில் படுத்திருப்போம். எத்தனை மகிழ்ச்சியாக இருந்தது இல்லையா?” என்றான் ரஷீத்

“திங்கட்கிழமைக்குப் பிறகு சூரியன் கூட இந்தக் காட்டுக்குள் நுழையமுடியாது” ரமேஷ் பின்பக்கத்தில் இருந்து திடீரெனக் கத்தினான்.

நதீம் கதவை மூடிக்கொண்டு இன்ஜின் சாவியைத் திருகினான்.     பெண்மணியுடன் மிகவும்  இறுக்கமாக நெருங்கி உட்கார்ந்திருந்தான் சிறுவன்.   அமைதியாக இருந்தாலும் அவன் உள்ளுக்குள் லேசாக அழுது கொண்டிருந்தது போலத் தோன்றியது.  ”என்ன ஆச்சு?” என்று சிறுவனிடம் கேட்டாலும் நதீமின் பார்வை  அவள்  மீதே பதிந்திருந்தது.

“யானையைப் பற்றி நீங்கள் பேசுவதைக் கேட்டு பயந்து விட்டான்” என்றாள்.  அவனை மேலும் தன் பக்கத்தில் இழுத்து இறுக்க அணைத்துக் கொண்டாள்.  “ஏதாவது யானை இங்கே போக்கிரித்தனம் பண்ணுகிறதோ?” என்று கேட்டாள்.

“ஆமாம்.  யானைகள் கூட்டத்தில் ஒரு தனி யானைக்கு மதம் பிடித்து போக்கிரித் தனம் செய்து கொண்டிருக்கிறது.  அந்தப் போக்கிரியைத்தான் நாங்கள் வேட்டையாடக் கிளம்பி இருக்கிறோம்.

சிறுவன், ஒடுங்கிப் போய் அவளுடைய இடுப்பை   இறுகப் பற்றியவாறு  நதீம் சொல்வதை கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.

வண்டி, ரேஞ்ஜர் அலுவலகத்தை நெருங்கியதும்,  மதம் பிடித்த போக்கிரி யானை பற்றியும் அது பல அப்பாவிகளை   கொடூரமாகக் கொன்றதையும், அதன் உடைந்து போன ஒரு கொம்பு பற்றியும், கிராமத்துக்காரன் ஒருவனின்  துப்பாக்கிக் குண்டினால் தெறித்துக் கோரமாகிப் போன   அதன் முதுகினைப்  பற்றியும் அவளிடம் சொல்லத் துவங்கினான் நதீம்.  மாவட்ட வனக்காவல் அதிகாரி இந்த விஷயங்களைத் தன்னுடைய தலைமை அதிகாரியின் கவனத்துக்கு எடுத்துச் சென்றதாகவும், அந்த யானையை மதம் பிடித்த போக்கிரியாக அறிவித்து அதனைக் கண்டதும் சுடுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையும், இப்போது அந்த யானையை சுட்டுக் கொல்வதற்கு டாக்டர் வாக்கருக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதையும் சொன்னான். முன்பெல்லாம் ஏதாவது அங்கங்கே ஓரிரண்டு சிறிய அளவில்தான்  சம்பவங்கள்  நிகழ்ந்து கொண்டிருந்தன.   பிறகு  அந்தப் போக்கிரி யானை இந்தப் பகுதியில் அட்டகாசம் செய்ய ஆரம்பித்தது.  இந்தப் பிரச்சினை சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்டது.  ஆனால், காடு மற்றும் அதில் வசிக்கும் மிருகங்கள் பற்றிய பிரச்னை மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வருவதால் இதுகுறித்த விவாதங்கள் பாராளுமன்றத்துக்கு மாற்றப்பட்டு அங்கும் பலமுறை மீண்டும் மீண்டும் தீவிரமாக விவாதிக்கப்பட்டது.

அந்த யானை ஏன் இன்னும் கொல்லப்படவில்லை என்று அவளுக்குப்   புரியவில்லை.  இந்தப் பிரச்னை துவங்கிய புதிதில், யானைகளின் கூட்டத்தில் இருந்து இந்தப் போக்கிரி  யானையைத் தனித்து அடையாளம் காணுவது சிரமமாக இருந்ததால் அப்போது ஒன்றும் செய்ய முடியவில்லை என்று நதீம் விளக்கினான்.  பிறகு அரசாங்கம் மற்றும் அதிகாரிகள் எல்லாவற்றையும்  இழுத்தடிக்கும்    மந்தமான அணுகுமுறையும் ஒரு காரணம் என்றான்.  இந்த அளவுக்குப் பரந்த வனாந்திரத்தில் அந்த யானையைத் தேடிக் கண்டுபிடிப்பதில் இருக்கும் சிரமத்தையும் சொன்னான்.

ரேஞ்ஜர் அலுவலகம் இன்னும் சற்று தூரத்தில் இருந்தது.  யானையை வேட்டையாடத் தேவையான நேரம் இருந்தது.  எல்லாவற்றுக்கும் மேலாக அந்தப் பெண்மணி மிகவும் அழகாக இருந்தாள்.  எனவே, இவை எல்லாவற்றையும் பின்னணியில் வைத்து பிரச்னையை மிகவும் தெளிவாகவும் விரிவாகவும் விளக்கிக் கொண்டிருந்தான் நதீம்.  அரசாங்கத்துக்கும் இது விஷயமாகத் தீவிரமாக நடவடிக்கை எடுப்பதில் பல தடைகள் இருந்தன. அதனால் சில வசதிகளுக்காக, தனியார் அமைப்புக்களிடமும் தனி மனிதர்களிடமும் இந்தக் காரியத்தை ஒப்படைத்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு,   யானை விஷயத்தையே எடுத்துக் கொண்டால், அந்தப் போக்கிரி யானையைக் கொல்லும் வேலையை முதலில் டிஎஃப்ஓ சாஹிப்புக்குத்தான் கொடுத்திருந்தார்கள்.  ஆனால் அரசு அதிகாரியாக இருப்பதால் இந்த வேலைக்கெல்லாம் அவர் தோதாக இருக்கமாட்டார் என்பதால் அவரை இதில் ஈடுபடுத்தவில்லை.  இந்தப் போக்கிரி யானையைக் கொல்லும் வேலை டிஎஃப்ஓ சாஹிப் பெயரில் இருந்தாலும்  மறைமுகமாகக் கொடுக்கப்பட்டிருப்பது டாக்டர் வாக்கர் மற்றும் ஆஸீஃப் இருவருக்கும்தான் என்பது, அரசாங்கத்தில் உள்ள எல்லா பெரிய தலைகளுக்கும் நன்றாகத் தெரிந்திருக்கிறது.

உரையாடலின் போக்கில் அவள்  தன்னைப் பற்றிய பல விஷயங்களை நதீமிடம்  சொன்னாலும் அதனை வண்டியில் உள்ள அனைவருக்கும் பொதுவாகச் சொல்வது போல இருந்தது.  தான் கடந்த பத்து வருடங்களாக கனடாவில் வசித்துக் கொண்டிருப்பதையும், அவளுடைய கணவர் அங்கு மருத்துவராக இருப்பதையும்     ஒவ்வொரு ஆண்டும் தன்னுடைய தாயாரைப் பார்க்கத் தான் லக்னோ வருவதையும் சொன்னாள்.  அவள் கனடாவுக்குச் சென்ற போது ராஜூ ஓராண்டுக் குழந்தையாக இருந்தான்.  இப்போது ஆறாம் வகுப்பில் படித்துக் கொண்டிருக்கிறான்.  பஹ்ரைச் மாவட்டத்தில் உள்ள பரௌலி கிராமத்துக்கு தனியாகப் போயிருக்கலாம்.  ஆனால் அம்மா தனியாகப் போகவேண்டாம்.  யாரையாவது கண்டிப்பாகத் துணைக்கு அழைத்துக் கொண்டு போகவேண்டும் என்று சொன்னதால்  இந்த ஆண்பிள்ளையை உடன் அழைத்துக் கொண்டு வரவேண்டியதாகப் போயிற்று.  தன்னுடைய மருமகனை புன்சிரிப்புடன் பெருமையாகப் பார்த்தாள்   மதம் பிடித்த யானையைப் பற்றிய அச்சம் இருந்ததால் மிகவும் சோகையாகப் புன்னகைத்தான் ராஜூ.   வழியில் நிலைமை சரியாக இல்லாததால் மாலைக்குள் வீடு திரும்ப வேண்டும் என்று அம்மா கண்டிப்பாக சொல்லியிருப்பதாக சொன்னாள்.

டாக்டர் வாக்கர் அருகில் இருந்த ரமேஷிடம் திடீரென்று ஏதோ தேவையற்ற விஷயம் ஒன்றை உரக்கப் பேசத் துவங்கியதால் இந்த இடத்தில் அவள் தன் பேச்சை சற்று நிறுத்திக் கொள்ள வேண்டியதாயிற்று.  டெராய் பகுதியில் பிரச்னைகள் துவங்கியதால் இரவு நேரங்களில் நெடுஞ்சாலைப் பயணத்தைத் தவிர்த்து வருவதாக ரமேஷ் சொன்னான்.  கடந்த ஞாயிற்றுக்கிழமை பிலிபித் மற்றும் பூரண்பூரில் ஒரு பேருந்தை நிறுத்தி…

சிறுவனிடம் தொடர்ந்து பேச்சுக் கொடுத்துக் கொண்டு அவனுடைய கவனத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தாள் அந்தப் பெண்.  அவளுக்கு வசதியாக இருக்கும் வகையில் அந்தப் பையனின் நம்பிக்கையை தன் பக்கம் ஈர்ப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தான் நதீம்.    ராஜூவின் நம்பிக்கையை வென்றது போலத் தோன்றியதும் அவள் சற்று இறுக்கம் தளர்ந்தாள்.  இது நதீமுக்கு மேலும் உற்சாகத்தை அளித்தது.  அவன் சிறுவனுடன் பேசுவதைத் தொடர்ந்தான்.

“அந்த மதம் பிடித்த யானையைக் கொல்ல நிறைய துப்பாக்கிகள் வேண்டும்”

“உங்க கிட்டே துப்பாக்கி இருக்கா?”

“இருக்கு,  இரண்டு துப்பாக்கிகள் இருக்கு.  துப்பாக்கியில் இருக்கும் புல்லட்டுகள் யானைகள் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதற்கு பெரிய அளவில் உள்ள துப்பாக்கி குண்டுகள் தேவை”

“துப்பாக்கிகளில் வேறுவேறு ரகங்கள் உண்டா?” என்று சிறுவன் கேட்டான்.

“ஆமாம்.  குண்டுகளின் எடை மற்றும் அவை வெளிச்செல்லும் வேகத்தைப்  பொறுத்து துப்பாக்கிகள் வித்தியாசப்படுகின்றன.   30 ஸ்பிரிங் ஃபீல்டு, 315 கார்பைன் போல”

நதீம், சிறுவனிடம் பேசிக்கொண்டிருந்தாலும், அவனுடைய உரையாடல் முழுக்க அவளை நோக்கியே இருப்பதை ரஷீத் உன்னிப்பாகப் பார்த்துக் கொண்டிருந்தான். அவளுடைய கவனத்தைத் தன்பக்கம் திருப்புவதற்காக நதீம் மேற்கொண்ட  முயற்சிகளையும் கவனித்தான்.

நதீம் சொல்லிக் கொண்டிருந்தான்.  “யானையைக் கொல்ல நாங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் துப்பாக்கி 375 மாக்ஸிம்.  இதன் புல்லட்டின் எடை மற்றும் அதன் வேகத்தின் விகிதத்துக்கு  இணையாக இந்த உலகில் வேறு எந்தத் துப்பாக்கியும் கிடையாது”

“விகிதம் என்றால்?” என்றான் சிறுவன்.

“விகிதம், விகிதம், அதாவது சரிசம விகித அளவில்…”

“ஆனால் விகிதம்னா கணக்கு இல்லையா?”

“கண்ணா, இதில் கிடைக்கிற அதே எடையும் வேகமும் மத்ததிலேயும் கிடைக்கணும் இல்லையா?” என்று சமாளித்தான் நதீம்.  சிறுவனின் கேள்வியில் அவன் சற்று தடுமாறிப் போயிருந்தது தெரிந்தது.

“யானையை சுடும்போது துப்பாக்கிக் குழாய் அடைத்துக் கொண்டால் என்ன செய்வீர்கள்?” என்று கேட்டான் சிறுவன்.

“தம்பி நல்ல விஷயமா  பேசுப்பா” என்று ஆஸிஃப் அவனை இடைமறித்தான்.

“அந்த மாதிரி சந்தர்ப்பத்தில் எங்கள் துப்பாக்கியால் யானையை சுட்டு விரட்டி விடுவோம்” என்றான் நதீம்.

“அது ஓடிப்போகலைன்னா?”

“பெருசா தீயைக் கொளுத்தி அதை விரட்டி விடுவோம்”

“தீ என்றால் யானைக்கு பயமா?

“இரவில் வெளிச்சத்துக்கு யானை பயப்படும்.  நதீம் பதில் சொல்வதற்கு முன்பு குறுக்கிட்டான்  ரஷீத்.

தீயைக் கொளுத்த உங்களிடம் ஏதாவது இருக்கிறதா?” என்று சிறுவன் கேட்டான்.

“ஆமாம் ஜனாப்.  எங்க கிட்டே இருக்கு” என்று சிரித்துக் கொண்டே சொன்னார் டாக்டர் வாக்கர்.   தீப்பெட்டியை எடுத்து சிறுவனிடம் ஆட்டிக் காண்பித்து,  சிகரெட் ஒன்றைப் பற்ற வைத்துக் கொண்டார்.

ராஜு அந்தத் தீப்பெட்டியை நீண்ட நேரமாகக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

உரையாடல் மீண்டும் சூடுபிடித்தது   மாவட்டம் முழுக்க  திருடர்களும் கொள்ளைக்காரர்களும் நிரம்பி இருப்பதாக அம்மா சொன்னதாவும் அதனாலேயே தான் மாலை இருட்டுவதற்குள் வீடு போய்ச் சேரவேண்டும் என்றும் அவள்  சொன்னாள்.

ஆங்கிலப் பத்திரிகைகளில் தான் எப்போதோ படித்த கதைகளையெல்லாம் அந்தப் பெண்மணியுடன்  பகிர்ந்து கொள்ளும் நோக்கில் தன்னுடைய நினைவுக்குக் கொண்டு வர முயற்சித்தான் நதீம்.  “இங்கிருந்து கனடாவில் குடியேறியவர்கள் படும் பாடு பற்றி அடிக்கடி பத்திரிகைகளில் வருகிறது.  அங்கு குடியேறிய  ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் அங்குள்ள முரட்டு தடியர்களால் எந்த அளவுக்கு சிறுமைப்படுத்தப் படுகிறார்கள் – வதைக்கப் படுகிறார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்” என்றான்.

‘சிறுமைப்படுவது’ என்ற வார்த்தையை ஏனோ கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே அழுத்தம் கொடுத்து அவன் சொன்னது போலத் தோன்றியது. அவன் கொஞ்சம் அத்துமீறுவது போலத் தோன்றியது அவளுக்கு. கொஞ்சம் தர்மசங்கடமாக உணர்ந்தாள்.  பிறகு நிதானமாகவும் விரிவாகவும் விளக்க முயற்சித்தாள்.  “இதுபோன்ற சம்பவங்கள் பொதுவாக லண்டனில்தான் அதிகமாக நடக்கும்.  கனடாவில் வேறுவகையான பிரச்சினைகள் இருக்கின்றன” அந்தப் பிரச்னைகள் பற்றிக் கொஞ்சம் விளக்கமாக சொல்ல ஆரம்பித்தாள்.

ஒருமாதிரி தர்மசங்கடத்துக்கு ஆளான நதீம், பேச்சை மாற்ற முயற்சித்தான்.  மதம் பிடித்த யானை எப்படி எல்லாம் நாசம் விளைவிக்கும் என்று ஆரம்பித்தான்.  இப்படி யானைகளுக்கு மதம் பிடிக்கும்போது காட்டைச் சுற்றியுள்ள கிராமங்களில் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. சாலைகளில் பணிபுரிகிறவர்கள், காடுகளில் புல் அறுக்கவும்,   சுள்ளி பொறுக்கி வாழ்க்கையை நடத்துகிற பெண்களுக்கும் பெரும் பிரச்சினை.  புல் அறுக்காமல் இருப்பதால் இந்தப் பகுதியில் புதர்கள் அடர்ந்து பெருகியிருக்கின்றன.  தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து இங்கு புல்லை அறுப்பதற்கு யார்தான் வருவார்கள்.   தேன் சேகரிப்பவர்கள் பாதிக்கப்படுகிறார்கள்.  விறகு வெட்டிகள் ஆண்டு முழுதும் வேலையின்றி கஷ்டப்படுவார்கள்.  இவை எல்லாவற்றை விட எங்களால் இப்போது மிருக வேட்டைகளுக்கு சுத்தமாகப் போகமுடிவதில்லை.  எந்த மரத்தின் பின்பக்கத்தில் இருந்து அல்லது எந்தப் புதரில் இருந்து அந்தப் போக்கிரி யானை தன்னுடய தும்பிக்கைகளைத் தூக்கிக் கொண்டு எங்களைத் தூக்கி நசுக்கி எறியக் காத்திருக்குமோ என்று பயத்துடனே நாங்கள் காட்டுக்குள்ளே வரவேண்டியிருக்கிறது” என்றான்.

ரேஞ்ஜர் அலுவலகத்தை அடைவதற்கு முன்பு ஒரு மரத்தூணில் ஆணியடித்து வைக்கப்பட்டிருந்த உலோகப் பலகையின் மீது வண்டியின் வெளிச்சம் பட்டது.  ஹிந்தியில் “யானைகள் கடக்கும் பாதை – ஜாக்கிரதை” என்று அந்த போர்டில் எழுதியிருந்தது.

ராஜூவும் அதனைப் படித்து விட்டு அவளை இன்னும் நெருக்கி உட்கார்ந்தான்.  நதீம் வண்டியின் விளக்குகளை அணைத்து விட்டு திடீரென்று பிரேக் போட்டு நிறுத்தினான்.  என்ஜினை அணைத்தபிறகு  அந்தக் காட்டுப் பகுதியின் அடர்ந்த நிசப்தம் பிரத்யேகமாகத் தெரிந்தது.

“யானைகள் நம்மைக் கடக்கின்றன” என்று குசுகுசுவென்ற குரலில் கூறினான் நதீம்.

அடர்த்தியான   இருளில் யானைகள் கூட்டமாகப் பாதையைக் கடந்து சென்று கொண்டிருந்தன.  காட்டிலும் ஜீப்புக்கு உட்புறமும் எங்கும்  நிசப்தம் பரவியிருந்தது.

சிறிது நேரத்துக்குப் பிறகு, என்ஜினை உயிர்ப்பித்து, நிஷான்கட் பகுதியின் ரேஞ்ஜர் அலுவலகத்தை அடையும் வரை வண்டியை மிகவும் வேகமாக ஓட்டினான் நதீம்.  ஜீப்பை நிறுத்தி விட்டு அவளையும் சிறுவனையும் உற்றுப் பார்த்தான்.  தங்களைக் கடந்து சென்ற யானைக்கூட்டத்தில் அந்தப் போக்கிரி யானை இல்லையென்றும் இந்த மந்தையின் யானைகள் அனைத்தும் மிகவும் சாதுவானவை என்றும் சொன்னான் நதீம்.  போக்கிரி யானை எப்போதுமே கூட்டத்தில் இருந்து தன்னைத் தனியாகவே வைத்திருக்கும்” என்றான்.

ரேஞ்ஜர் அலுவலகக் காம்பவுண்டில் குளிர்காயக் கொளுத்தியிருந்த தீயின் வெளிச்சத்தில் இவர்கள் அனைவரும் ஏதோ விசித்திரமான பிராணிகளைப் போலக் காட்சியளித்தார்கள்.  தீயின் ஜூவாலைகள் உயர்ந்து எரிந்த போது இவர்களின் நிழல்களும் கூடவே பெரிதாகின. ஜூவாலைகள் தணிந்துபோது நிழல்களும் சிறிதாயின.

ரேஞ்ஜர் அலுவலகத்தைக் காடு சூழ்ந்திருந்தது.  உயரமான மரங்களில் வெண்பனியும் நிசப்தமும் குடியிருந்தன.

ரேஞ்ஜர் அலுவலகத்தில் மூட்டப்பட்டிருந்த தீயைச் சுற்றிச் சிலர் குளிர் காய்ந்து கொண்டிருந்ததைப் பார்த்த ராஜூவின் முகத்தில் பழைய களை திரும்பி வந்ததைப் போலிருந்தது.  ஜீப்பை விட்டு இறங்கியபடி, “போக்கிரி யானைகள் எல்லாம் ஒன்றாகச் சேர்ந்து   தங்களுக்காக ஒரு கூட்டத்தை சேர்த்துக் கொள்ள முடியாதா? என்று நதீமைக் கேட்டான்.

இந்தப் பையன் ஏன் இப்படி விசித்திரமாக எல்லாம் யோசிக்கிறான் என்று எண்ணியபடியே வண்டியை விட்டு இறங்கிக் கதவை மூடினான் நதீம்.

ரேஞ்ஜ் ஆபீசர் கம்பீரமாக சீருடை அணிந்து    எல்லோருடனும் கைலுக்கிக் கொண்டிருந்தார்.

“உன்னுடைய மகனா?” என்று நதீமைக் கேட்டார்.

“இல்லை.  வழியில் பரௌலியில் இவர்களைப் பார்த்தோம்” என்று மீதிக் கதையையும் ஆபீசரிடம் சொன்னான்.

“அப்படியா?  எனக்குக் கிளம்புவதற்கு ரொம்ப நேரம் பிடிக்குமே.  டிஎஃப்ஓ சாஹிப் மோதிப்பூர் ரோடு வழியாக நேபாளம் போயிருக்கிறார்.   கஸ்டம்ஸ் அதிகாரிகள் எங்கள் ஆள் ஒருத்தனை அங்கே பிடித்து வைத்திருக்கிறார்களாம்.

பெண்மணியின்  முகம் வாடிப்போனது.

“பயப்படவேண்டாம்.  லக்னோவுக்கு ஒரு வயர்லெஸ் செய்தி அனுப்புகிறேன்.  நீங்கள் எல்லோரும் இங்கே பத்திரமாக இருக்கிறீர்கள் என்று அவர்கள் உங்கள் வீட்டுக்கு சொல்லி விடுவார்கள்.

“ஆனால் இவர்களை  வீட்டுக்கு எப்படித் திருப்பி அனுப்புவது?” என்று டாக்டர் வாக்கர் கேட்டார்.

“நீ ரேஞ்ஜர் வீட்டில் ஓய்வு எடுத்துக் கொள்ளலாம்.  அவருடைய மனைவி மிகவும் நல்ல பெண்மணி.  எங்கள் எல்லோரையும் தன் சகோதரர்களைப் போல எப்போதும் நடத்துவாள்” என்று அவளிடம் சொன்னான் நதீம்.

அவள் சற்றுத் தயங்கி நின்றாள்.  போக்கிரி யானையின் அட்டகாசத்தால்   மனைவி மக்கள் எல்லோரும் தன் மாமியார் வீட்டுக்குப் போயிருப்பதாகவும்  மாமனார் வந்து   மகளையும் பேரன்களையும் தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச் சென்று விட்டதாகவும் ரேஞ்ஜர் சொன்னார்.

ரேஞ்ஜர் அலுவலகத்தின் பழைய கட்டிடங்கள் முள்கம்பி வேலியால் சூழப்பட்டிருந்தது.  இரண்டு மோட்டார் சைக்கிள்களும் ஜீப்பும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.  அவற்றில் காட்டு இலாகா ஊழியர்கள், வேட்டைக்காரர்கள், உடன்வந்த பெண்மணி மற்றும் சிறுவன் ஆகியோர் உட்கார்ந்திருந்தார்கள்.  அவள் மிகவும் பதட்டத்துடன் காணப்பட்டாள்.  அழுவதற்குத் தயாராக இருப்பது போல முகத்தை வைத்துக் கொண்டிருந்தாள்.

“நேரமாகிறது” என்ற டாக்டர் வாக்கர், அங்கு சூழ்ந்திருந்த அமைதியைக் குலைத்தார்.  “சரி, இன்றைக்கு என்ன செய்தி?” என்று ரேஞ்ஜ் ஆபீசரைக் கேட்டார்.

“மோதிப்பூர் பிளாக்கில் பழைய கெஸ்ட் ஹவுஸ் பக்கத்தில் பிளாட் 1955ல்  இன்று புலித் தடங்கள் காணப்பட்டன” என்றார்.

“இன்று என்ன புலிவேட்டை ஆடப்போகிறீர்களா?” என்று சிரித்துக் கொண்டே கேட்டான் ஆஸீஃப்.

“அதெல்லாம் இல்லை.  என்ன விஷயம் என்றால் எல்லோரும் ஒருவகையான பயத்தில் இருக்கிறார்கள்.  இன்னும் அதிகமாக பயப்படுத்தினால் செத்தே போய்விடுவார்கள் போலிருக்கிறது.  அந்தப் போக்கிரி யானை வாட்ச்மேனை இழுத்துச் சென்று அடித்துத் துவைத்ததில் இருந்தே பயங்கரமாக பீதி கிளம்பி இருக்கிறது,  இன்று இந்த இடத்தை விட்டுக் கிளம்புவதற்கு முன்பு இந்தப் பீதிக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டுத்தான் போகவேண்டும்” என்றார் ரேஞ்ஜர்.

“அல்லாதான் எஜமானர்” என்றார் டாக்டர் வக்கர்.

“இப்போது என்னதான் தீர்மானித்து இருக்கிறீர்கள்?” என்று நதீமையும் பெண்மணியையும் கேட்டார் டாக்டர் வாக்கர்.

நதீம் பதில் ஒன்றும் சொல்லவில்லை.  ஒரு தீக்குச்சியைக் கொளுத்தி அதன் சிறிய ஜூவாலையை ராஜூவுக்குக் காட்டிக் கொண்டிருந்தான்.

அவள்  மிகவும் நிதானமாக, அதே நேரத்தில் உறுதியாகச் சொன்னாள், “என்னுடைய வீட்டுக்கு வயர்லெஸ் மூலமாக செய்தியை அனுப்புங்கள். தயவு செய்து எங்களையும் உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள்.  ரேஞ்ஜர் அலுவலகத்தில் எங்களைத் தனியாக விட்டுப் போகாதீர்கள்” என்றாள்.

“உண்மையாகவே யோசித்துத்தான் சொல்கிறாயா?  இந்த சின்னப் பையன் வேறு உன்னோடு இருக்கிறானே.  அந்த மதம் பிடித்த போக்கிரி யானையைப் பார்த்து நீங்கள் இருவரும் மிரண்டால் என்ன செய்வது?”

“என்ன நடக்குமோ அது நடந்துதான் தீரும்.  காட்டு மிருகங்களிடம் எனக்கு பயம் கிடையாது.  என்னுடைய கல்யாணம் ஆப்பிரிக்க மொழியில்தான் நடத்தி வைக்கப்பட்டது.  ஜிம்பாப்வே காட்டில் நானும் என் கணவரும் வேட்டையாடி இருக்கிறோம்.  அங்கே தான் தேனிலவுக்கும் போயிருந்தோம். பர்மிட் வாங்கி அங்கே போனோம். நானே ஒரு காட்டு எருமையை சுட்டுக் கொன்றிருக்கிறேன்”

இதைக் கேட்ட நதீம் சற்று மிரண்டு போனான்.

“அது சரி,  ராஜூ… என்று இழுத்தான்.

“அவன் என் பக்கத்தில் உட்கார்ந்து கொள்வான்” என்றாள்.

வண்டியின் பெட்ரோல் டாங்க் நிரப்பப்பட்டது.  காம்பவுண்டில் மூட்டப்பட்ட    தணப்பைச் சுற்றி  அனைவரும் உட்கார்ந்து கொண்டார்கள். சாண்ட்விச் சாப்பிட்டார்கள்.  டீ குடித்தார்கள்.  சிகெரட்டுகள் கொளுத்தப்பட்டன.  அலுவலகத்தின் ஓய்வு அறையைப் பயன்படுத்தினார்கள். ரைபிள்கள் மற்றும் துப்பாக்கிகளை சரிபார்த்துக் கொண்டார்கள்.

“இப்போதும் அதே உபாயத்தைத்தான் நாம் கையாளப் போகிறோம்.  கிட்டே நெருங்கினால் மட்டுமே துப்பாக்கியை உபயோகிப்போம்.  தூரத்தில் இருந்தால் வானைத்தை நோக்கிச் சுட்டு விரட்டி விடுவோம்.  அதனை நாம் காயப்படுத்தவோ, கொல்லவோ கூடாது.  காயப்பட்டால் அது என்ன செய்யும் என்று யாராலும் சொல்ல முடியாது” என்றார் டாக்டர் வாக்கர்.

ரமேஷூம் வனத்துறை ஊழியர்களும் ஜீப்பின் கண்ணாடியில் படிந்திருந்த பனியின் ஈரத்தை மும்முரத்துடன் துடைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் துடைக்கத் துடைக்க ஈரமாகும் அளவுக்குப் பனி அதிகமாக இருந்தது.

“சர்ச் லைட்டை சரிபார்த்தீர்களா?” டாக்டர் வக்கர் கேட்டார்.

“ஆச்சு” என்றான் ரமேஷ், துணியை உதறிக் கொண்டே.

“இந்தப் பனிதான் நிறையத் தொந்தரவு தரும்.  கண்ணாடியை மேலே ஏற்றினாலும் எப்படியாவது   உள்ளே நுழைந்துவிடுகிறது” என்றார் டாக்டர் வாக்கர்.

“வேறு வழியில்லை.    இன்று ஏன் இப்படிக் கொடூரமாகக் கொட்டுகிறது என்று தெரியவில்லை” என்று அலுத்துக் கொண்டான் நதீம்.

தூரத்தில் இருந்து ஒரு வெளிச்சப்புள்ளி இவர்களை நோக்கி வந்தது.  அருகில் வந்து நின்ற மோட்டார் சைக்கிளில் இருந்து இருவர் இறங்கினார்கள்.  ஒருவனிடம் துப்பாக்கி இருந்தது.

துப்பாக்கி சுமக்காத இன்னொருவன் முன்னே நெருங்கி, “இங்கே ரேஞ்ஜர் சாஹிப் யார்?” என்று கேட்டான்.

நான்தான்” என்று சற்று பதட்டத்துடன் முன்வந்தார் ரேஞ்ஜர்.  நெருப்புக்கு அருகில் சற்று நெருங்கி நின்றிருந்ததால் அவருடைய நெற்றி வியர்வையால் நனைந்திருந்தது.  “போக்கிரி யானை ஏதாவது அசம்பாவிதமாக செய்துவிட்டதா?” என்று கேட்டார்.

“இல்லை சார்.  உங்கள் மாமனார் மற்றும் உங்கள் குடும்பத்தினர் பயணித்துக் கொண்டிருந்த ரயில் பெட்டி பிஜ்னூர் அருகில் தாக்கப்பட்டது என்று செய்தி வந்திருக்கிறது” என்று அந்த ஆள் தடுமாறிக் கொண்டே சொன்னான்.

தன்னுடைய குழந்தகளின் பெயர்களை சொல்லி கிறீச்சிட்டு பெரிய குரலில் அலறி அழுத் துவங்கினார் ரேஞ்ஜர்.

டாக்டர் வாக்கர் அவசரமாகக் குறுக்கிட்டார்.  “முழு செய்தியையும் கேட்போமே.  ஏம்பா, யாருக்காவது உயிருக்கு ஏதாவது ஆபத்து உண்டா?” என்று அவனைக் கேட்டார்.

“டெலிபோனில் எல்லா விஷயங்களையும் எங்களால் சரியாகக் கேட்க முடியவில்லை.  அடிக்கடி தொடர்பு துண்டித்துப் போனது” என்றான் இன்னொருவன்.

“கொள்ளைக்காரர்கள் ஏதாவது தாக்கினார்களோ?” என்று கலவரமான குரலில் கேட்டாள் பெண்மணி-
“தெரியாது.  போன் லைன் பழுதாகியிருக்கிறது என்று அவர்கள் சொன்னார்கள்.

“இப்போது இன்னொரு வகையான கஷ்டமும் சேர்ந்திருக்கிறது” என்றான் ஆஸீப்.

“டெராய் பிரச்னையாகவும் இருக்கலாம்” என்று சிறிது யோசனைக்குப் பிறகு ரஷீத் சொன்னான்.

பிஜ்னோரில் இருந்து டெராய் தூரம் அதிகம்.  ஆனால் உண்மையில் பிரச்னை இருக்கும் இடம் ரொம்ப அருகிலேயே இருக்கிறது” என்றான் நதீம்.

“எதையாவது யூகம் செய்து கொண்டிருப்பதில் என்ன பயன்?  நீங்கள் எல்லாம் ரொம்ப அதிகமாகப் பேசுகிறீர்கள்” என்று திடீர்க் கோபத்துடன் சீறினார் டாக்டர் வாக்கர்.  எல்லோரும் அவரையே பீதியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

தன்னை ஒருவாறு கட்டுப்படுத்திக் கொண்டு ரேஞ்ஜரிடம் போனார் டாக்டர் வாக்கர்.  “மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு பஹ்ரைச் போய்விடுங்கள்.  அங்கிருந்து பிஜ்னோரில் யாரையாவது தொடர்பு கொண்டு உண்மை நிலவரத்தை விசாரியுங்கள். வனக்காவலர் யாரையாவது கூட அழைத்துக் கொண்டு கிளம்புங்கள்.  நீங்களே வண்டியை ஓட்ட வேண்டாம் என்றார் டாக்டர்.

ரேஞ்ஜர் அங்கிருந்து கிளம்பிய பிறகு அந்த இடத்தில் நீண்ட நேரம் அமைதி நிலவியது.  யாரும் ஒன்றும் பேசவில்லை. கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த நெருப்பின் சடசடப்பு மட்டுமே தனித்துக் கேட்டது.    கைகளைத் தணப்புக்கு எதிரில் காட்டித் தேய்த்தவாறே சொன்னார் டாக்டர், “இப்போது எல்லாம், எங்கே பார்த்தாலும், அதாவது எல்லாப் பகுதிகளிலும்… எல்லா ஜனங்களிடையிலும்…” – ஓரிரு நிமிட அமைதிக்குப் பிறகு மீண்டும் சொன்னார், “ஆண்டவன் பெயரால் நாம் எந்த வேலையை செய்வதற்காக இங்கே வந்தோமோ அதைச் செய்ய ஆரம்பிக்கலாம் வாருங்கள்.  எல்லோரும் ஜீப்பில்   உட்காருங்கள்” என்றார்.

டாக்டர் வாக்கர் ஜீப்பின் முன்பக்கமாக ஏறி நதீம் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார்.  ஆஸீஃப், பெண்மணி, ராஜூ மற்றும் ரஷீத் பின் இருக்கையில் உட்கார்ந்து கொண்டார்கள்.  ரமேஷ் ஜீப்பின் கடைசியில் இருந்த ஒரு தனி இருக்கையில் உட்கார்ந்தான்.

.

ரமேஷையும் அவனிடம் இருந்த துப்பாக்கியையும் பார்த்து அந்தப் பெண்மணி லேசாகப் புன்னகைத்ததை கவனித்தான் ரஷீத். இவன் தன்னைப் பார்த்ததை கவனித்ததும் புன்னகைப்பதை நிறுத்தி முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டாள்.  துப்பாக்கியையும் அதை செங்குத்தாக ஏந்திக் கொண்டிருந்த ரமேஷையும் கள்ளத் தனமாகப் பார்த்துக் கொண்டான் ரஷீத்.

ரேஞ்ஜரின் மனைவியும் குழந்தைகளும் தாக்கப்பட்ட செய்தியைக் கேட்டதும் ரமேஷின் முகம் வெளுத்தும் இறுகியும் போனதை நினைத்துக் கொண்டான் ஆஸீஃப்.  ரேஞ்ஜர் அலுவலகத்தின் ஊழியன் ஒருவன், பிஜ்னோர் பகுதியில் ‘அது போன்ற கலவரங்கள்’ உருவாகி வருவதைப் பற்றி முனகியதையும் நினைத்துக் கொண்டான்.  இதனை ரேஞ்ஜர் அலுவலகத்தின் ஊழியன் யாராவது சொன்னானா?  அல்லது நதீம் சொன்னானா?  அல்லது உடன் இருந்த ஆடுமாடு மேய்க்கிறவர்கள் யாராவது சொன்னார்களா?  அவர்கள் அப்படிச் சொல்லவில்லை.  எனக்குத்தான் அப்படித் தோன்றியிருக்கிறதோ?  ஒருவேளை நானே சொல்லியிருக்கலாமோ?  ஆஸீஃபின் மூளை செயலற்று உறைந்தது.  ஜீப் உயிர் பெற்று உறுமிக் கிளம்பியது.

டாக்டர் வாக்கர்  துப்பாக்கியின் தோட்டாக்களை சரி பார்த்துக் கொண்டார்.  ரைபிளை தயார் நிலையில் வைத்துக்கொண்டு எச்சரிக்கையாக உட்கார்ந்து கொண்டார்.  ரஷீத்   ரைபிள்களில் ஒன்றை லோடு செய்து கொண்டு ஜன்னலுக்கு வெளியே கவனத்துடன் பார்வையைப் பதித்து பின்னே சாய்ந்து உட்கார்ந்து கொண்டான்.

“யாரும் சத்தம் எழுப்பக் கூடாது.  யானையின் காதுகள் மிகவும் கூர்மையானவை” என்று கிசுகிசுப்பான குரலில் சொன்னார் டாக்டர் வாக்கர்.

“அந்த இடத்துக்கு இன்னும் கொஞ்சம் தூரம்  போகவேண்டும்” என்றான் நதீம்.

“இருக்கட்டுமே.  இப்போது கொஞ்சம் அமைதியாக இருப்பதில் ஏதாவது பிரச்சினை இருக்கிறதா?

டாஷ்போர்டில் இருந்து ஒரு துணியை உடுத்து முன்பக்கக் கண்ணாடியைத் துடைத்தான் நதீம்.  ஆனால் கண்ணாடியின் வெளிப் பக்கம் பனி அடர்ந்திருந்தது.  வைப்பர் பரபரப்பாகக் கண்ணாடியைத் துடைத்தாலும் பனிமூட்டம் விலகவில்லை.  வண்டியின் ஹெட்லைட் துளைத்த இடங்களைத் தவிர வெளியில் அனைத்தும் பனிமூட்டத்தால் சூழப்பட்டிருந்தன.

“ஜன்னலைத் திறந்து வைத்தால் கண்ணாடிக்கு உள்ளே இருக்கும் பனி விலகிவிடும் என்றான் நதீம்.

“வேண்டாம்.  அப்படி செய்யக் கூடாது.  அது ஆபத்தானது என்றார் டாக்டர் வாக்கர், மிகவும் சிறிய குரலில்.

“பிறகு உள்ளே பனி சேர்ந்து பார்வையை சுத்தமாக மறைக்கும்.  நாம் வெளியில் எதையும் பார்க்க முடியாது” என்றான் ரஷீத்.

“நாம் இதை வைத்துக் கொண்டுதான் மேலே தொடரவேண்டும்” என்றார் டாக்டர் வாக்கர்.

”சுற்று முற்றும் பார்த்துவிட்டு ஆஸீஃப் சொன்னான், முன்பக்கமோ அல்லது பின்பக்கமோ கண்ணாடி வழியாகவோ எதையும் பார்க்க முடியவில்லையே…”

இந்தப் பக்கம் வெளிச்சம் இல்லை.  ஹெட்லைட் தகராறு பண்ணுகிறது.

“இன்னும் நாம் போகப்போக பனிமூட்டம் அதிமாகி விடும் என்று முணுமுணுத்தான் நதீம்.

“நதீம், வைப்பரைப் போடு” என்றார் டாக்டர்.

“அதெல்லாம் செய்தால் பேட்டரி காலியாகிவிடும்” என்று மறுத்தான் நதீம்.

மிகவும் மெதுவாக வண்டியை ஓட்டினான்.  ஹெட்லைட் வெளிச்சத்தில் அடர்ந்த பனிமூட்டம் புகை வளையங்களாக  சுருண்டு கொண்டிருந்தது.  பனியின் அடர்த்தியில் எதுவும் தெளிவாகத் தெரியவில்லை.

“அங்கு திரும்பி நிற்பது   சிறுத்தைக் குட்டியா?” பாதையை உற்றுப் பார்த்துக் கொண்டே டாக்டரிடம் கேட்டான் நதீம்.

“அது முயல்.  இந்தப் பனிமூட்டத்தில் எல்லாமே அதன் அளவுக்குப் பெரியதாகவே தெரியும்” என்றார் டாக்டர்.

ஜீப்  நெருங்கும் ஒலியைக் கேட்டு முயல் நின்று திரும்பிப் பார்த்தது.  அதன் கண்களில் ஹெட்லைட் வெளிச்சம் தெறித்தபோது தலையில் இரண்டு நீல விண்ண விளக்குகள் ஒளிர்ந்ததுபோலத் தோன்றியது.

“ஹை…   கண்களைப் பாருங்க… எப்படி மின்னுது” என்று கூச்சலிட்டான் ராஜூ.

“சும்மா இரு.  சத்தம் போடாதே…” என்று அவனைக் கடுமையாகக் கடிந்துகொண்டார் டாக்டர்.  பிறகு பின்பக்கமாகத் திரும்பி அவன் முதுகில் தட்டிக் கொடுத்தார்.

அந்தக் கணத்தில் ராஜூவைத் தவிர அந்த ஜீப்பில் உட்கார்ந்திருந்த அனைவரும் அவனை விநோதமாகப் பார்ப்பதை உணர்ந்தான் ரமேஷ்.  ஒவ்வொருவர் மீதும் தனித்தனியாக, மிகவும் கவனமாகப் பார்வைப் பதித்தான்.

ராஜூவைத் தவிர மற்ற அனைவரும், ரமேஷ் தங்களை விநோதமாகப் பார்ப்பதை உணர்ந்தார்கள்.  ஜீப்புக்குள் இருட்டாக இருந்தாலும் அவனுடைய கண்கள் எவ்வித பிரயாசையும் இல்லாமல் அவர்களைத் துளைத்துக் கொண்டிருந்தது போல இருந்தது.  ராஜூவைத் தவிர மற்ற அனைவரும் மிகவும் அசௌகரியமாக உணர்ந்தார்கள்.

ராஜூ தலையை உயர்த்தி மெல்லிய குரலில் கேட்டான், “ஆண்ட்டி, தரோகாஜியின் மனைவியையும் பிள்ளைகளையும் யார் கொன்றார்கள்?

நதீம் பிரேக்கை அழுத்தினான்.  ஜீப் குலுங்கி நின்றது.  விளக்கை அணைத்தான்.

“போக்கிரி நமக்கு நேர் எதிராக நிற்கிறது” அவனால் அடுத்த வார்த்தையைப் பேச முடியவில்லை.

அச்சம் சில்லென்ற குளிர்க்காற்றாய்   அவர்களின் முதுகுத் தண்டு வழியாக இறங்கியது.

“எந்தப் பக்கம் நிற்கிறது?” ரைபிளின் பாதுகாப்பு பட்டனை விடுவித்துக் கொண்டே மிகவும் கிசுகிசுப்பான குரலில் டாக்டர் கேட்டார்.  அவர் கேட்டது நதீமின் காதில் விழுந்திருக்குமா என்பதே சந்தேகம்தான் என்கிற வகையில் மிகவும் மெல்லிய குரலில் பதற்றத்துடன் கேட்டார்.

“வலதுமுனையில் இருந்து இடதுபுறமாக… அல்லது இடது மூலையில் இருந்தா… தெளிவாகத் தெரியவில்லை…”

“நதீம்… விளக்கைப் போடு.  வெளிச்சமே இல்லையே…  என்ன செய்வது இப்போது?”

விளக்கைப் போடுவதற்கு நதீம் முற்பட்டபோது ரமேஷ் பின்பக்கத்தில் இருந்து கிசுகிசுத்தான்.  “வண்டியின் பின்பக்கத்தை  ஒட்டி நிற்கிறது.

எல்லோரும் அச்சத்துடன் பின்புறம் திரும்பிப் பார்த்தனர்.  பெரிய கறுப்பு உருவம் ஒன்று வண்டியின் பின்பக்கமாக அசைவற்று நின்று கொண்டிருந்தது.

திடீரென்று ஆஸீஃப் டாக்டர் வாக்கரை நெருங்கி அவருடைய தோளை இறுகப் பற்றினான்.  “இதோ இங்கே இருக்கிறது. என்னுடைய ஜன்னலுக்கு அருகில்.  மிகவும் நெருக்கமாக”

எல்லோரும் அந்தக் கண்ணாடி ஜன்னல் வழியாக உற்றுப் பார்த்தார்கள். தெளிவற்ற கலங்கலான உருவம் ஒன்று அங்கு நின்றிருந்தது.  அவர்களுடைய இதயங்கள் படபடத்தன.

“தும்பிக்கையை இந்த ஜன்னல் மீது வைத்திருக்கிறது” ரஷீத் கிசுகிசுத்தான்.

எல்லோரும் ரஷீத் உட்கார்ந்திருந்த பக்கத்தை உற்றுப் பார்க்கத் துவங்கினார்கள்.

எல்லோரையும் அமைதியாக இருக்கும்படி நதீம் சைகை செய்தான்.  “என் பக்கமாக நின்றிருந்த போக்கிரி இப்போது அங்கே நிற்கிறது போலிருக்கிறது” என்று கிசுகிசுத்தான்.

“உன்னால் தெளிவாகப் பார்க்க முடிகிறதா?  குறி பார்த்து சுட முடியுமா?” டாக்டர் வாக்கர் கேட்டார்.

“அத்தனை தெளிவாகப் பார்க்க முடியவில்லை.  கண்ணாடியைப்  பனி மூடியிருக்கிறது.  இறக்கிப் பார்க்கட்டுமா?

“வேண்டாம்.  இறக்காதே.  கண்டிப்பாக இறக்காதே.  அப்படிச் செய்தால் நாம்   விடும் மூச்சுக் காற்றின் சத்தம் அதற்குக் கேட்கும்.

அவள், அச்சத்தால் வெளிறிப்போன     சிறுவனின் முகத்தைப் பார்த்தாள்.  அவன், அவளுடைய மடியில் முகத்தை இறுக்கப் புதைத்துக் கொண்டான்.  அவனை பதற்றத்துடன் பற்றியபடியே வண்டியில் இருந்த எல்லாக் கண்ணாடி ஜன்னல்களின் வழியாகவும் மிகவும் பிரயாசைப் பட்டு உற்று நோக்கினாள்.  கண்களை மூடி சில்லென்று முகத்தில் துளித்திருந்த வியர்வையைத் துடைத்தாள்.

“நம்மை நோக்கி மிகவும் மெதுவாக வந்து கொண்டிருக்கிறது” நடுக்கத்துடன் கூடிய குரலில் ரமேஷ் கிசுகிசுத்தான்.  தன்னுடைய மூக்கை கண்ணாடி ஜன்னலில் அழுத்திக் கொண்டு அப்படியே உறைந்திருந்தான்.  ஆஸீஃபும் ரமேஷூம் தங்கள் பக்கத்து ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

டாக்டர் அச்சமும் குழப்பமும் நிறைந்த குரலில், “கூட்டத்தில் ஒற்றை  தந்தம் உடைந்து போன யானை இருக்கிறதா என்று பாருங்கள். உடைந்த தந்தத்துடன் சுற்றுவதுதான் போக்கிரி யானை.  அது ஒன்று மட்டுமே ஆபத்தானது”

அடர்ந்த இருளின் வழியாக வெளியே அனைவரும் மிகவும் சிரமத்துடன் உற்றுப் பார்த்தார்கள்.  தங்கள் பக்கம் இருக்கும் யானைக்கு ஒரு தந்தம் உடைந்திருப்பதாக ஒவ்வொருவரும் சொன்னார்கள்.

“நிறைய போக்கிரிகள் இருக்கின்றனவா என்ன?” என்று தனக்குள்   ஆழ்ந்து போன சிந்தனையில் மூழ்கியவர்   போல  டாக்டர் வாக்கர் கேட்டார்

இருளில் அந்த யானையின் வெறி பிடித்த கண்களையும் உடைந்து தொங்கிய ஒற்றைத் தந்தத்தையும்,  ஆங்காரத்துடன் மேல்நோக்கி உயர்ந்த அதன் தும்பிக்கையையும் கண்டனர்.

டாக்டர் வாக்கர் வற்றிப் போன போன குரலில் கிசுகிசுத்தார், “யாரும் சுடாதீர்கள். இத்தனை யானைகளை நம்மால் கொல்ல முடியாது.  நாம் இப்போது  மதம் பிடித்த யானைகளால்  சூழப்பட்டிருக்கிறோம்.    கண்ணாடி ஜன்னல் மூடியிருப்பதால் அவற்றுக்கு நம்முடைய சத்தங்கள் கேட்காது.  இல்லையென்றால்   ஒரு நொடியில் நம்மை அவை நசுக்கித் தள்ளிவிடும்.
“இப்போது என்ன செய்யலாம்?” நதீம் மிகவும் பலவீனமாக ஒடுங்கிய குரலில் கேட்டான்.

கூச்சத்துடன் கூடிய வகையற்ற அச்சத்தை ஒவ்வொருவரும் உணர்ந்தார்கள்.

“இரவு விடியும் வரை நாம் காத்திருக்கலாம்” என்று அழுகை கலந்த குரலில் பெண்மணி சொன்னாள்.

சிறுவன்  தன்னுடைய பாக்கெட்டில் இருந்து எதையோ எடுத்து அதனை உள்ளங்கையில் வைத்து இறுக மூடிக் கொண்டு மயக்கம் அடைந்திராவிட்டால்… பெண்மணி சொன்ன வார்த்தை ஒருவேளை அவர்களுடைய  அச்சத்தைப் போக்கியிருக்கலாம்.

நதீம் மற்ற  யாரையும் பார்க்கவில்லை.  பின்புறமாகத் திரும்பி, கையை நீட்டி, அந்தச் சிறுவனின் மூடியிருந்த உள்ளங்கையைத் திறந்தான்.   அதனைப் பார்த்தான்.  ஒரு நிமிடம் யோசித்து விட்டு, சிறுவனின் உள்ளங்கையை மீண்டும் மூடிவிட்டுத் திரும்பிக் கொண்டான்.  மற்றவர்களைப் போலவே அவனும் தலையைக் குனிந்து கொண்டு அமைதியுடன், பொழுது விடிவதற்காகக் காத்திருந்தான்.

 

•••••••

சையத் முஹம்மத் அஷ்ரஃப் முன்னணி உருது படைப்பாளிகளில் குறிப்பிடத்தகுந்தவர்.  1992ல் நிகழ்ந்த பாப்ரி மஸ்ஜித் இடிப்பினைத் தொடர்ந்த கலவரத்தின் பின்னணியில் எழுதப்பட்ட கதை இது.  1993ல் எழுதப்பட்ட இந்தக் கதை இலக்கிய ஆர்வலர்களின் பரந்த கவனத்தை ஈர்த்தது.

•••

நன்றி- The Little Magazine.

மொழிபெயர்ப்பு – நேர்காணல் – ஆமி வால்ட்மன் – தமிழாக்கம் : ச.ஆறுமுகம்

நேர்காணல்

ஆமி வால்ட்மன்

தமிழாக்கம் : ச.ஆறுமுகம்

 

 

 

 

 

 

 

 

அமெரிக்க எழுத்தாளரான  ஆமி வால்ட்மனின் முதல் நாவல் The Submission 2011 ஆம் வருட முடிவில் பல்வேறு இதழ்களின் `ஆண்டுக்குரிய புத்தகங்கள்` வரிசையில் நேரடியாக இடம் பிடித்ததுடன் கார்டியன் இதழின் முதல் நூல் பரிசுக்கான வரையறுக்கப்பட்ட பட்டியலிலும் சேர்க்கப்பட்டிருந்தது. ப்ரேசில், இத்தாலி, ப்ரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, இந்தியா, தென் ஆப்பிரிக்கா, கனடா, ஜப்பான், போர்த்துக்கல், ஸ்வீடன், நார்வே, நெதர்லாந்து நாடுகளில், இந்த நாவல், அந்தந்த நாட்டுப் பதிப்புகளாக வெளியிடப்பட்டுள்ளன. அவரது புனைவுகள் அட்லாண்டிக், போஸ்டன் ரிவ்யூ, பைனான்ஸியல் டைம்ஸ் இதழ்களில் வெளியாகியுள்ளன. வால்ட்மன் ஒரு வெற்றிகரமான பத்திரிகையாளருமாவார். நியூயார்க் டைம்ஸ் இதழுக்கான செய்தியாளராக எட்டு ஆண்டுகள் பணி புரிந்தார். அட்லாண்டிக் இதழின் தேசியத் தொடர்பாளராகவும் இருந்தார். புது தில்லி கழகத்தின் இணைத் தலைவராக மூன்றாண்டுகள் பணியாற்றியவர். யேல் பல்கலைக்கழகப் பட்டதாரியான இவர், ராட்க்ளிஃப் இன்ஸ்டிட்யூட் ஆப் அட்வான்ஸ்ட் ஸ்டடீஸ், மற்றும் பெர்லினுள்ள அமெரிக்கக் கழகத்திலும் உறுப்பினராக இருந்தார். தற்போது குடும்பத்துடன் ப்ரூக்லின் நகரில் வசிக்கும் இவர் `த்ரீ மங்கீஸ் ஆன்லைன்` இதழுக்கு தி சப்மிஸன் நாவல், 9 / 11 புனைவுகள் மற்றும் இதழியலுக்கும் இலக்கியத்துக்குமான தொடர்புகள் குறித்து மின் அஞ்சல் மூலம் அளித்த பேட்டி. தமிழாக்கம் செய்து தரப்படுகிறது.

பேட்டி காணும் ஜேம்ஸ் மீக் அவர்களும் புகழ்பெற்ற பத்திரிகையாளர்தாம். 2008ல் வெளியாகி `ப்ரின்ஸ் மௌரீஸ் விருது` பெற்ற `We Are Now Beginning Our Descent` நாவலையும் சேர்த்து மொத்தம் நான்கு நாவல்களும் இரு சிறுகதைத் தொகுதிகளும் படைத்துள்ள தீவிர எழுத்தாளருமாவார். அவரது மூன்றாவது நாவலான `The People`s Act of Love (2005) ஸ்காட்டிஷ் கலைக் கழகத்தின் `ஆண்டுப் புத்தக விருதி`னையும் `ஒண்டாட்ஜி விருதி`னையும் பெற்றுள்ளதோடு இதுவரை இருபது மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட பெருமைக்கும் உரியது.  லண்டனில் பிறந்து ஸ்காட்லாந்தின் டண்டீயில் வளர்ந்தவர். 1985 லிருந்தே பத்திரிகைச் செய்தியாளராக இருக்கிறார். 1991 – 99ல் கார்டியன் பத்திரிகைக்காக சோவியத் ரஷ்யாவில் செய்தியாளராகப் பணியாற்றினார். 2004ல் ஈராக் போர், செச்சென் சிக்கல், கவுண்டனாமா குடாவில் கைதிகளுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகள் மற்றும் பிரிட்டன் செல்வந்தர்களின் வரிஏய்ப்பு, ஆகியவற்றில் அவர் ஆற்றிய செய்திப் பணிகளுக்காக  `பிரிட்டனின் அந்த ஆண்டுக்குரிய அயல்நாட்டுச் செய்தியாளர்“ என்ற விருது உட்படப் பல விருதுகள் பெற்றவர். தற்போது லண்டனில் வசிக்கிறார்.

`த்ரீ மங்கீஸ் ஆன்லைன்`  வெளியிட்ட பேட்டியின் முன்னுரை:

லெனின், கார்க்கியிடம் அவசியமான அவசரப்பணியென வற்புறுத்திய  `தொழில் மாற்றம்’ குறித்த கருத்தினை இந்தப் பூமியிலுள்ள அனைத்து எழுத்தாளர்களும், 12, செப்டம்பர்,  2001 அன்று விரிவாகக் கருதிப் பார்க்கத் தொடங்கியதாக, ஜூன் 2002ல் கார்டியன் இதழ் வெளியிட்ட (The Voice of the Lonely Crowd) `தனிமைப்பட்ட கூட்டத்தின் குரல்` கட்டுரையில், மார்ட்டின் ஆமிஸ், குறிப்பிடுகிறார். பயங்கரவாதிகளின், வெளிப்படையான 9 / 11 தாக்குதல் குறித்த உடனடிப் பின்விளைவான பொதுக்கருத்து, அந்தத் துயரத்தை புத்தகமோ, அல்லது திரைப்படமோ பிரதிபலித்தாலும் அது நம்பத்தக்கதாக இருக்காதென்பதோடு அதை உணர்த்துவதற்கு இதழியலும் பாரபட்சமற்ற மெய்மைத் தகவல்களும் தேவை என்பதுதான். இலக்கியக் கலை வடிவமான நாவல் இப்பணியைச் செய்வதற்குப் போதுமானதல்ல.

மேலும், பத்தாண்டுகளுக்கும் அதிகமாகக் கடந்துவிட்ட நிலையில் நமது இலக்கியப் பெருமக்கள்  படைத்துள்ள நாவல்கள், கதைகளுக்குள், சல்மான் ருஷ்டியின் `ஷாலிமார், தி, க்ளௌன்,` அப்டைக்கினுடைய `தி டெர்ரரிஸ்ட்,` அல்லது அமீஸின் ‘’முகமது அத்தாவின் கடைசி நாட்கள்’’ போன்றவற்றுக்குள் மூழ்கிப் பார்த்தால், அவை, நாவல்கள் என்ன செய்ய முடியுமோ அதை மட்டும்தான் செய்திருப்பதாகவோ, அல்லது அவை நமக்குள் ஒரு நுண்மாண் காட்சித் தெளிவினை புலப்படுத்தியிருப்பதாகவோ, அல்லது 9/11 க்குப் பிந்தைய உலகைப்பற்றி முன்பைவிட அதிகமான புரிதலை லாரன்ஸ் ரைட்டின் `தி லூமிங் டவர்` போல ஏற்படுத்தியிருப்பதாகவோ வாதிடுவது கடினம்.

ஒருவகையில் இவையெல்லாம்  முட்டாள்தனமானவை என்றாலும்கூட, நம்முடைய முந்தைய `பெருமக்க`ளைப் பார்க்கையில், ஏராளமான புனைவுப் படைப்பாளிகள் உலக வர்த்தகக் கழகத் தாக்குதல்கள் (மற்றும் அதைத் தொடர்ந்த ஆப்கன் மற்றும் ஈராக் போர்கள்) எழுப்பியுள்ள மிகப் பெரிய கேள்விகளைக் கையாண்டிருப்பதை அறிந்துகொள்ள இயலும். நான் படித்ததில் சிறந்த 9/11 நாவல்களில் ஒன்றான ஆமி வால்டனின் `தி சப்மிஸன்`, ஒரு அறிவார்ந்த நாவல். ( இதை 9/11 நாவல் என்று முத்திரை குத்துவதுகூட அவமானதுதான்.) ஏனெனில், அது, இதழியலுக்குப் பொருந்தும் பணியான,  விஷயங்களை விளக்குவதோடு மட்டும் நின்றுவிடாமல் துருவித்துருவிக் கண்டுபிடிப்பதையும் கேள்விகள் எழுப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆசிய அமெரிக்கரான கலைஞர் மாயா லின், உருவாக்கிய, வாஷிங்டனில் வியட்நாம் வீரர்களுக்கான நினைவுச் சின்னம் அமைப்பதற்கான வடிவமைப்பு, போட்டியில் வென்று அதற்கான குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றபோது எழுந்த உண்மையான வாதமுரண்பாட்டுச் சிக்கல்களை அடிப்படையாகக் கொண்டு `அதனாலென்ன?` என்ற முதல் கேள்வியுடன் நாவல் தொடங்குகிறது. ஒரு அமெரிக்க முஸ்லிம்,  9/11 தாக்குதலில் பலியானவர்களின் நினைவாக ஒரு சின்னம் அமைப்பதற்கான குழுவின் அங்கீகாரத்தைப் பெற்றாலென்ன? அந்த வடிவமைப்பு பண்பாட்டு அடிப்படையில் இரட்டைப்பண்போடு இருந்தாலென்ன? அரசியல் உள் நோக்கங்களும், பரபரப்பு தேடும் பத்திரிகைத்தனமும் அந்தக் குழுவோடு மோதினால் என்னவாகும்? இவற்றின் விளைவுகளான நாவல் விடுதலை, கருத்து வெளிப்பாட்டு உரிமை, பண்பாட்டு அடையாளம் ஆகியவற்றின் வரையறைகளுக்குள் புகுந்து வலுவான ஒரு தேடலை முன்வைக்கிறது. அது மட்டுமின்றி வாசித்தேயாக வேண்டுமென்ற கட்டாயத்தை ஏற்படுத்துகிறது.

பேட்டி:

தி சப்மிஸனை எழுதவேண்டுமென்ற  முடிவுக்கு ஏன் வந்தீர்களெனச்  சிறிது கூற முடியுமா? முதல்  நாவல் எழுதுபவர் 9/11 தாக்குதல் போன்ற ஒரு விஷயத்தைக் கையாள்வதென்பது மிகத்துணிச்சலான செயல் – அதுவும் நேரடியாகக் கையாள்வது; எழுதும்போது சந்தேகங்கள் தோன்றி அவதிக்குள்ளானீர்களா? இந்தப் பொருள் மிகவும் பரந்து விரிந்ததாயிற்றே என அல்லது மிகுந்த உணர்ச்சிகரமானதாயிற்றே என எந்த இடத்தில் உணர்ந்தீர்கள்?

முதல் முறையாக எழுதும்  நாவலாசிரியர் என்பதாலேயே நான் அதை எடுத்தாளலாமென எந்தக் கட்டுப்பாடுமின்றிப் பரவலாக உணர்ந்திருக்கலாம். வாசகர்கள் இதற்கு எந்தமாதிரியாக எதிர்வினையாற்றுவார்களென நான் கவலைப்படவில்லை; ஏனென்றால் இதை வாசிப்பவர்கள் இருப்பார்களென நான் எதிர்பார்க்கவில்லை. கலை மற்றும் புனைவுக்கு அப்பாற்பட்டதாக எந்த ஒரு விஷயமும் இருக்கமுடியுமென நான் நினைக்கவில்லை. அதனால் இந்த விவாதப்பொருள் கையாள்வதற்கு, மிக விரிவானதென்றோ அல்லது சிக்கல் விளைவிக்கும் ஒன்றென்றோ கருதிய நிலை எனக்கு எந்த நேரத்திலும் ஏற்படவில்லை. நிலம் அல்லது ஒரு நிகழ்வு `புனித`மாகக் கருதப்படுவதன்  பொருள் என்ன என்பது குறித்துத் தோண்டித் துருவி ஆய்வுசெய்வதும் கண்டுபிடிப்பதும் இந்த நாவல் நோக்கத்தின் ஒருபகுதி என்பதால், அந்தப் புனிதத்தன்மையால் பாதிக்கப்படுவதாக நான் ஒருபோதும் உணரவில்லை.

நாவலின் தொடக்க விதை – ஒரு அமெரிக்க முஸ்லிம் தயாரித்த வடிவமைப்பு தேர்வுசெய்யப்பட்ட சூழல் – ஒரு நண்பருடன் 9/11 நினைவுச் சின்னப் போட்டி மற்றும் ஆசிய அமெரிக்கரான மாயா லின் அது போன்ற வியட்நாம் போட்டியில் வெற்றி பெற்றபோதான அனுபவங்கள் குறித்த உரையாடலின் விளைவாக வெளிப்பட்டது. ஒரு 9/11 நாவலினை எழுத வேண்டுமென நான் ஒருபோதும் நினைத்ததேயில்லை. அதுபோன்று, வகைப்பிரிவுகளை படைப்பாளர்கள் எண்ணிப் பார்ப்பார்களாவென எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை. நாம் ஏற்கெனவேயே பல்வேறு முறை மீண்டும் மீண்டும் அனுபவித்துவிட்ட அந்தத் துக்க நாளின் துயரமான நிலையை மறுபடியும் கதையில் படைத்துக் காட்டுவதில் எனக்கு ஆர்வமில்லை. ஆனால், 9/11 நம்மை எங்கு நோக்கி இழுத்துச் செல்கிறதெனக் கவனிக்கிறேன்.

இதழியலுக்கும் புனைவு படைத்தலுக்குமான வேறுபாடுகள் தெளிவாகத் தெரிபவை; அது எழுத்தாளரை ஒரு துறை விஷயங்களை உருவாக்கவும், மற்றவரை அதை விலக்கிவைக்கவும் கோருகிறது. அப்படியானால் இரு இயல்களுக்குமான ஒப்புமைகள் என்னென்ன? நீங்களே மதிப்புக்குரிய இதழாழராகவும் நாவலாசிரியராகவும் இருப்பதால், இதழியலுக்கும் புனைவு படைத்தலுக்குமான ஒப்புமைகளாக நீங்கள் எவற்றைக் கருதுகிறீர்கள்?

இதழாழராக இருந்து புனைவுக்கு மாறியவராக, நான் அவற்றுக்கிடையிலான  வேறுபாடுகளின் எல்லைகளை வரையறுப்பதில் ஆர்வத்துடன்  இருந்தேன். ஆகவே, முதலில்  பிறிதொன்றைச் சுட்டிக்காட்ட  அனுமதியுங்கள்; இதழியலில்  நீங்கள் மெய்மைத் தகவல்களைத் திரட்டி ஒன்று சேர்த்து, எழுதுவதன் வழியாக நீங்கள் எங்கே செல்கிறீர்கள் என்பதை நீங்களே அறிவீர்கள். அதுவே, புனைவில், எழுதுவதன் மூலம் புதிய மெய்மைகளைக் கண்டடைவதற்கு அதிகமாக வழிசெய்கிறது; அதுவே எல்லாவற்றையும் முன்கூட்டியே நிரல்படுத்த முயற்சிக்கத் தேவையில்லை என்பதையும் சொல்கிறது. நம்மை அறியாமைக்கு ஒப்புக்கொடுப்பதிலிருந்தும் இருளுக்குள் மூழ்குவதிலிருந்தும் அவ்வப்போது சிறந்த எழுத்து உருவாகிறது என்பதை நான் உணர்வதற்கு வெகு காலம் பிடித்தது. மேலும், மொழியோடு விளையாடுவதற்கும் புனைவு அனுமதிக்கிறதென நான் கருதுகிறேன். புனைவற்ற படைப்புகளைத் தரும் எழுத்தாளர்கள் சிலர் இதைச் செய்கிறார்களென்றாலும் அவர்கள் விதிவிலக்குகளாக அமைந்தவர்கள். புனைவில் அதன் உள்ளடக்கம் எவ்வளவு முக்கியமாகிறதோ, அப்படியேதான், எழுதுவதன் வழிமுறையும் சொற்களின் தேர்வு மற்றும் அமைவிட ஒழுங்கும், அழகுற அமைக்கும் மொழியின் பாங்கும் முக்கியமாகிறது.

ஒப்புமைகளைப் பொறுத்தவரை, இரு இயல்களுமே உங்களை, அறிமுகமற்ற புதிய உலகங்களுக்குள், மனித அனுபவங்களென நீங்கள் புரிந்துள்ளவற்றை விரிவுபடுத்தவும்  அல்லது மாற்றுவதற்குமான வல்லமை வாய்ந்தவை. சிறந்த இதழியல் படைப்பின் வாசிப்பு நாவலைப்போலவே அமைகிறது. ஆனால், இதன் மறுதலை உண்மையானதென நான் கருதவில்லை.

நல்லதொரு சொல்லின் தேவைக்காக, நான் ஒரு தாராளவாதி. உங்கள் படைப்பு தாராளவாதிகளைக் கிண்டல் செய்தாலும், கதை  சொல்லப்படும் முறையில் ஒரு  தாராளவாதம் அமைந்திருப்பதாகவே  நான் காண்கிறேன். அதனாலேயே உங்கள் படைப்பினை நான் நேசிக்கிறேன். இது ஒரு நடுநிலையான முடிவு என்று கருதுகிறீர்களா? மாற்றங்களை விரும்பாத மரபுமுறை வாசகர்கள் (குறிப்பாக அமெரிக்க மரபாளர்கள்) இந்தப் படைப்புக்கு எந்தமாதிரி எதிர்வினையாற்றுவார்களெனக் கருதுகிறீர்கள்?

படைப்பின் அரசியலுக்குப்  பண்புவடிவம் கொடுப்பதை  நான் தவிர்க்கிறேன். ஏனென்றால்  எந்த வகையான பண்புருப்படுத்துவதும்  மிகக் குறுக்குவதான ஒன்றாக அமைகிறதென்பது என் எண்ணம். அது மட்டுமன்றி வாசக எதிர்வினைக்கு  எந்தவொரு வண்ணம் தீட்ட, அல்லது விதிமுறை வகுக்க நான் விரும்பவில்லை. நான் ஒரு தாராளவாதியாக இருப்பதாகவே ஆனாலும், தாராளவாதத்தின் எல்லைகளுக்குள்ளும் அதிக ஆர்வம் கொள்கிறேன்  – உதாரணமாக, ஏன் அது ஏராளமான அமெரிக்கர்களை ஈர்ப்பதில் தோற்றுப்போயிருக்கிறது என்பதைக் கண்டறியவும் இந்தப் படைப்பு  முனைகிறது. மேலும், அரசியல் நம்பிக்கைகள் அல்லது மாறுபட்ட கொள்கைகளுக்கும் மனித நடத்தைகளுக்கும் இடையிலான உராய்வுகளில் நான் ஆர்வம் கொள்கிறேன். அதனாலேயே முகமது கான் பாத்திரம், எத்தனையோ நற்பண்புகள் இருப்பினும், கொஞ்சமும் விட்டுக்கொடுக்காத கீழ்ப்படியாமை மற்றும் இலட்சிய வாதம் காரணமாக, அந்தப் பாத்திரத்தை அனுதாபத்தோடு அணுக விரும்பும் தாராளவாதிகளைக்கூட தயக்கம் கொள்ளச் செய்கிறது.

நாவலின் தலைப்பிலிருந்து அநேகமாக ஒவ்வொரு பக்கத்திலும் காணப்படும் விதவிதமான உருவகங்களிலிருந்து, உங்ளுக்கு கதை சொல்வதில் மட்டுமல்லாமல், அது எப்படிச் சொல்லப்பட வேண்டுமென்பதிலும் தீவிர ஆர்வமிருப்பது தெளிவாகிறது. ஒரு படைப்பாளர் என்ற முறையில் மொழி உங்களுக்கு எத்தகைய முக்கியம் வாய்ந்தது?

மிகுந்த முக்கியத்துவமுள்ளது. அதில் ஒரு பகுதி சுயநலம் தான், எழுதுவதில் கிடைக்கும் மகிழ்ச்சியின் பெரும்பகுதி அதில் கிடைப்பதுதான். அதுபோல, வாசிப்பதிலும் மகிழ்ச்சி கிடைப்பதாக நான் நம்புகிறேன். அதுமட்டுமின்றியும் புனைவின் பெரும்பகுதி வலிமை, மொழியின் செம்மைத்தேட்டம் வழியாகவே அமைகிறது. மொழிக்குள் குரல் இருக்கிறது. அந்தக்குரல் மூலம் தனிநபரின் ஒருமைத்தன்மையைத் வெளிப்படுத்த வழி கிடைக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, மொழியின் ஒலிநயத்தில், இசைத்திறமும் கவிதையின் வலிமையும் இருக்கிறது. அதில்தான் சங்கேதம், மீளச்சொல்லுதல், அருவம், மவுனம் போன்றவையெல்லாம் அநேகமாக ஆழ்மன நிலையில் செயல்படுகின்றன.

எல்லா எழுத்தாளர்களையும்  போலவே, நானும் வழக்கத்தில் நைந்துபோன சொற்றொடருக்கு இலக்காகும் போக்குதான். ஆனால் எப்போது என் தலைக்குள் அப்படியொரு சொல் நுழைகிறதோ, அப்போதே அதை முறுக்கித் திரித்துப் புதிதாக்குவதை விரும்புகிறேன். அது ஒரு வகையான ஆழ்குறிப்பாக, வேற்றுப்பொருள் வைப்பாகத் தோற்றம் கொண்டு, அந்த வழியில் புனைவு உங்களைச் சாதாரணத்தைக்கூடப் புதியதாகக் காணச்செய்கிறது, அல்லது பொதுச்செய்தியை, அதாவது அதிகமாகப் புழங்குகிற ஒன்றை, அல்லது உண்மையான இருப்பின் தன்மையைக்கூடக் கேள்விக்குள்ளாக்கிவிடுகிறது.

முகமது, அவர் தயாரித்த வடிவமைப்பு, மற்றும் அவரது  நோக்கம் குறித்து தெளிவுபடுத்த மறுப்பது இந்தப் படைப்பின் மைய நிகழ்வுகளில் ஒன்று. அந்த மறுப்பு நிலைக்கு நீங்கள் மதிப்பளிப்பதாகத் தோன்றுகிறது. அதை எந்தப் புரிதலில் குறிப்பிடுகிறேனென்றால், அவருடைய எண்ணங்கள் மீது நீங்கள் ஒருபோதும் எதனையும் வலியுறுத்தவில்லை, அல்லது, வாசகர்கள் அதனுள் முழுமையாக உள்நோக்கிப் பயணிக்கட்டுமென விட்டுவிட்டிருக்கிறீர்கள் என்பதற்கான அகச்சான்றுகள் தென்படுகின்றன. எனக்குத் தோன்றும் மற்றொன்று, (இதைப்போன்ற ஒரு கேள்வியை நாவலாசிரியர் டிம் வின்ட்டன் அவர்களிடமும் கேட்டிருந்தோம்) அதாவது, புதிர்நிலை மற்றும் ஐயுறவு நிலையினை முன்வைப்பதற்கு நாவல் என்ற கலைவடிவம்தான் மிகப்பொருத்தமானதாக அமைகிறது; காட்டாக, ஒருவகையில் பார்த்தால் திரைப்படங்கள் அதற்குப் போதுமானவையல்ல. இதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்களா?

முழுமையாக… நாவல்களுக்கொப்ப திரைப்படங்களுக்கு புதிர்நிலை சக்தி இல்லை என்பதை நான் ஒப்புக்கொள்ளவில்லையென்றாலும், அது வெவ்வேறு வழிகளில் செயல்படுகிறதென நினைக்கிறேன். புதிர்நிலையின் சக்தியைத் தெரிந்து அதனை நான் உயர்வாக மதிப்பதற்குக் கொஞ்சம் நாட்களாகின. ஒரு செய்தியாளராக, எல்லாவற்றையும் விவரித்துத் தெளிவாக வெளிப்படுத்துவதற்கு நான் நன்கு பழக்கப்பட்டுப் போயிருந்தேன். சப்மிஸனில் நான் ஏராளமாக அடித்துத் திருத்தி மீள எழுதியதெல்லாம், சீவி எறிந்ததும் ஒவ்வொன்றாகக் கழற்றி எறிந்ததும்தான், அதிலும் குறிப்பாக பாத்திரங்களின் உள்மனப்போக்கு நிலைகளை. முகமதுவைப் பொறுத்தமட்டில் ஓரளவுக்காவது புதிர்த்தன்மை இருக்கவேண்டுமென்ற நம்பிக்கைக்கு நான் வந்து சேர்ந்திருந்தேன். ஏனெனில்,  நாவலின் ஒரு பகுதி, நல்லெண்ண நம்பிக்கை பற்றியதாக இருக்கும்போது,  புதிர்த்தன்மைதான் படைப்பின் மைய நாடகத்தை – முகமது மீது அவர்கள் நம்பிக்கை கொண்டார்களா? இல்லையா? அப்படியானால், ஏன்? எனத் தீர்மானிப்பதை – வாசகரின் உள் மனத்தில் நிகழ்த்திப் பார்த்திடத் தூண்டுகிறது, அல்லது உந்துகிறது. நானும் உள்ளீடற்ற ரகசியங்கள் என்னும் கருத்தியலில் ஆர்வம் கொண்டிருந்தேன்; அதன் வாயிலாக, நாம், பல சிக்கலான காரணங்களால், சிலவேளைகளில், நம்பிக்கைக்குரிய தகவல்கள் மற்றும் உண்மைகளைக்கூட மறைக்கிறோம். அதன் மூலம், அவற்றை வெளியிடுவதால் ஏற்படும் விளைவுகளையும் தவிர்க்கிறோம். அந்தப் படைப்புக்குள் எனக்கே புதிராகத் தோன்றுகின்ற சில விஷயங்களும் இருக்கத்தான் செய்கின்றன.

நாவலின் குறிப்பிடத்தக்க  மற்றொரு அம்சம், கதைமாந்தர்களின் முழுப்பொருத்தமான செயல்பாட்டியக்கம் – சர்ச்சைக்கிடமான சிக்கலைச் சுற்றிலும் வெவ்வேறு அரசியல் பதவிகளில், வெறுமனே பக்கத்தை நிரப்புபவர்களாக இல்லாமல் ரத்தமும் சதையுமாக முழுமையான மனிதர்களை, அத்துணைச் செம்மையாகப் படைத்திருக்கிறீர்கள். உங்கள் பாத்திரங்களை நீங்கள் எந்த மாதிரியாகப் பார்க்கிறீர்கள்? வேடிக்கையான உருவகமாகச் சொல்வதென்றால், உங்களை அவர்களின் ரசிகராக (அவர்களை உற்சாகப்படுத்துபவராக)க் கருதுகிறீர்களா? அல்லது நடுநிலை தவறாமல் விதிமுறைகளைக் கண்டிப்புடன் கடைப்பிடிக்கும் நடுவராகவா? காட்டாக, அவர்களில் உங்களுக்குப் பிடித்தமானவரென்று யாராவது இருக்கிறார்களா?

ஒவ்வொரு கதைமாந்தருமே அவர்களின்  குறிப்பிட்ட பகுதியில்  நான் செயல்படும்போது, எனக்குப் பிரியமானவர்தான். அந்தவகையில் அது என்னை அடிக்கடி மாற்றிக்கொள்கிற ஒரு ரசிகராக்குவதாகக் கூறுவேன். ஒரு நாவலாசிரியரின் பணி என்ற வகையில் கதைமாந்தர் அனைவரோடும் – குறிப்பிட்ட சூழ்நிலையில் அவர்கள் உலகினை எப்படிக் கண்டாலும் – ஒரே  இணக்கநியாயத்துடன் இருக்கவேண்டுமென்றே உணர்கிறேன். என்னிடம் கதைமாந்தர்கள் குறித்து ஏமாற்றம் தெரிவித்த சில வாசகர்களும் இருக்கின்றனர்.  அஸ்மா தவிர வேறு எந்தப் பாத்திரமும் விரும்பத்தக்கதாக இல்லையென அவர்கள் உணர்கிறார்கள். நான் படித்த புனைவுகளின் மாந்தர்கள் விரும்பத்தக்கவர்களா, இல்லையா, என நான் ஒருபோதும் கணித்ததில்லை என்பது மட்டுமல்ல அப்படிக் கவனித்தது கூட இல்லை. அந்தக் கற்பனை மனிதர்கள் ஆர்வமூட்டுபவர்களாக, சிந்தனையைத் தூண்டுபவர்களாக இருக்கிறார்களா? என்பதில்தான் எனக்கு அக்கறை. மீளப் பார்க்கும்போது, சில பாத்திரங்கள் மற்றவற்றைவிட வெற்றிகரமாக அமைந்திருப்பதாகக் கருதுகிறேன். அது எப்படி? ஏன்? எனப்பரிசீலிப்பது, அடுத்த நாவல் குறித்த சிந்தனையிலிருக்கும் எனக்குப் பயனளிப்பதாகிறது. அவர்கள் குறித்து எழுதும்போது நான் ஒருவேளை வேறுமாதிரியாக உணர்ந்திருக்கலாமென்றாலும் அதனை நான் இப்போது எனக்கு நானே கூட ஒப்புக்கொள்ள விரும்பவில்லை.

இந்த விஷயங்களை  அத்தோடு விட்டுவிடாமல், நாவலின் முடிவு குறித்துச் சிறிது பேசுவோம். இந்தப் படைப்பு சமகால நிகழ்வுகளில் வேரூன்றி நிலைத்திருக்கும்போது, எதிர்காலத்துக்குத் தாவுவது ஒரு ஆர்வமூட்டுகிற, முன்னரைப் போலவே, துணிச்சலான தேர்வுதாம். ‘’ நாடு எப்போதும் போலத் தன்னைத்தானே திருத்திக்கொண்டு, முன்னேறிக் கொண்டிருக்கிறது, நடுநடுங்க வைத்த அந்த அதிர்ச்சியான காலம் அநேகமாக மறக்கப்பட்டுவிட்டது.’’ இது நம்பிக்கையா? அல்லது திடஉறுதித் தீர்மானமா?

ஒரு இறுக்கமானதும் மனநடுக்கத்தை ஏற்படுத்தியதுமான காலகட்டத்தில் நாவலின் பெரும்பகுதி அமைந்திருப்பதால், பாத்திரங்கள் அதனுள் சிறைப்பட்டவர்களாகிறார்கள். கதையின் முடிவில், அதனுள்ளிருந்தும் வெளியேறுவதற்கு, காலம் அவர்களது உட்புரிதலில் எந்தவகையில் ஒரு மாறுதலை ஏற்படுத்தும்? அல்லது ஏற்படுத்தாது? என்று உட்புகுந்து காண்பதை விரும்பினேன். அதோடு ஒரு தன்னிரக்கத்தை, அல்லது, குறைந்த பட்சம் செய்த பாவத்தை உணர்ந்து, வருந்துவதைப் போன்ற ஒரு நிலைமையை, எப்படித் தவிர்க்க முடியாமல் முதுமை வந்தடைகிறதோ, அது போல, அதனுள் கசியச் செய்ய விரும்பினேன். அது ஒரு இழப்பு குறித்த முடிவு – முதலாவதாக, நாவலையும் அதன் சம்பவங்களையும் எழவைத்த அந்தப் பெருநாசகரமான ஒன்று;  முடிவில் காணாமற் போனதானது – அல்லது, கதை மாந்தர்களாலேயே, தூக்கி எறியப்பட்டது – அதாவது தொடக்க இழப்பு அளித்த விழிப்பின் காரணமாக. நாவலின் முடிவில், பெருமளவு இல்லையென்றாலும் சிறிது மீட்சி இருக்கிறது; அதுவே சில வாசகர்களுக்கு திடமிக்க தேர்வாகத் தோன்றுகிறது. அதுவே, வாழ்க்கை நினைவுகளிலிருந்தும் நம்மை அவ்வப்போது நழுவவைப்பதான மகிழ்ச்சியும் நேர்த்தியும் மிக்க முடிவுகள் தேவையென, என்னை உணரச்செய்கிறது; பெருமளவுக்கு வாழ்க்கையை ஒத்திருப்பதாக உணரத்தக்க ஒரு முடிவினை நான் விரும்பினேன்.

அமெரிக்கா என வரும்போது, நான் மெய்மைநடப்புவாதியாகவும்  நல்லெண்ண நம்பிக்கைவாதியாகவும் இருக்கிறேன். நாம் எப்போதும்  தொடர்ச்சியாக, ஒரு குழுவினரை  அல்லது மற்றொரு குழுவினரை  விலக்குவதன் மூலமாக  அமெரிக்கர் என்பதற்கான வரையறையைக் குறுக்க முயற்சிக்கிறோம். இருந்தபோதிலும், மொத்தத்தில், அமெரிக்கா என்ற கருத்தாக்கம் – யாரொருவரும் அதைத் தாயகமாக்கிக் கொள்ளலாம், எல்லோருக்கும் உரிமையானது – மேலோங்கி வெற்றியோடு நிற்கிறது. இந்தநிலை வேறு மாதிரி அமையுமென நம்புவதற்கு எந்தக் காரணங்கள் இருப்பதாகவும் நான் நினைக்கவில்லை. தாக்குதலுக்குப்பின் இருபதாண்டுகள் தாண்டிவிட்டன; எல்லாம் நல்லதாகவே அமையும், என்ற காலகட்டத்தின் மீது பார்வையைச் செலுத்தும் ஏராளமான வாசகர்கள் எனக்கு இருக்கிறார்கள். நான் நிபுணத்துவம் படைக்கவில்லை, புனைகதை எழுதுகிறேன். ஆக, படைப்பினை மிக அதிகமான வரிக்குவரி வாசிப்பிற்கு எதிராக வாதிடுவேன். காலப்போக்கில் இது சரியாகிவிடுமென்றும் எண்ணுகிறேன்.

தன்னைத் தானே திருத்திக்கொள்வது  மற்றும் முன்னேறிச் செல்வது  என்ற செயல்படுமுறைக்கு கலை  மற்றும் இலக்கியம் எத்துணை முக்கியமென நீங்கள் கருதுகிறீர்கள்? 9/11க்குப் பிறகான பத்தாண்டுகளில், கலைத்துறை, அதிலும் குறிப்பாக இலக்கியத்தின் எதிர்வினை குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

சிலநேரங்களில், இலக்கியம் ஒரு எதிர்-நினைவுச்சின்னமென, நான் எண்ணுகிறேன். சராசரியான நினைவுச் சின்னங்கள் வெறும் இழப்பினை மட்டுமல்ல, வரலாற்றைக் கட்டமைக்கின்றன – 9/11 இனத்தில், நினைவுச்சின்னம் அந்த நாளைச்சுற்றிலும் ஒரு கட்டமைப்பினை ஏற்படுத்துகிறது. அந்தக் கட்டமைப்பினை உடைத்து, அதனோடு, அந்த நாளைத் தொடர்ந்து வரப்பெற்றவற்றிற்கு என்ன நிகழ்ந்ததென்பதை,   இணைக்க விரும்பினேன். நம்மால் உச்சபட்சமாக முடிகிற அளவுக்கு, முன்னேறிச் செல்வதற்கு, அது முக்கியமானதென இப்போதும் நினைக்கிறேன். நான் ஒரு முஸ்லிம் புத்தகக் கழகத்தினரைச் (அப்படியொன்றும் நீண்ட நாட்கள்  ஆகிவிடவில்லை,) சந்தித்த போது, நாட்டில் முஸ்லிம்களின் பிம்பத்தை உயர்த்துவதற்கு அல்லது அவர்கள் மீது ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களைக் குறைப்பதற்கு, என்னவிதமான அரசியல் நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொள்ள இயலுமென்பது குறித்துப் பேசிக்கொண்டிருந்தனர். ஒரு இளம் திரைப்படத் தயாரிப்பாளர், எழுந்து, பண்பாட்டு நடவடிக்கைகள் மூலமே சிறந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியுமென, அவர் நினைப்பதாகச் சொன்னதில் நான் உடன்படுகிறேன். மக்கள் எப்படிச் சிந்திக்கவேண்டுமென நீங்கள் கூறமுடியாது; ஆனால், கலை, அவர்களுடைய சிந்தனை எப்படிப்பட்டதாக இருக்கிறதென அவர்களைச் சிந்திக்குமாறு செய்ய இயலும்.

ஆகச்சிறந்ததான ஒரு 9/11-ன் பிற்கால நாவலை, நம் காலத்துப் `போரும் அமைதியும்` என ஒன்றைத் தேடுதல், தவறாகச் சென்றுள்ளதோ என நான் நினைக்கிறேன். நம் இலக்கிய உலகில் ஒன்றும், டால்ஸ்டாய்கள் அதிகமாக உலவிக்கொண்டிருக்கவில்லை. அதேநேரத்தில், முகிழ்த்து வந்திருக்கிற இலக்கியப் பதில்விளைவுகள், `போரும் அமைதியும்` அதன் காலத்தில் இருந்தது போலவே, எதிர்பாராததாக ஆனால், அசலாக இருக்கின்றன. ( நான் பார்த்த ஆற்றல்மிக்க 9/11-ன் பிற்காலப் படைப்புகளில், ஒன்று `Man on Wire` என்ற ஆவணப்படம் ஆனால், அது 9/11 பற்றியதே அல்ல. ஜெரார்டு ரிச்டரின் `செப்டம்பர்` ஓவியமும் மிகுந்த சக்தி வாய்ந்த ஒன்றென நான் கருதுகிறேன். முதல் பார்வையில் அது, எதைக்குறித்ததென்று நீங்கள் உணரும்வரையிலும், முழுக்க முழுக்க நாட்டுப்புற வாழ்க்கை சார்ந்ததாகவே தோன்றும்) பதில் விளைவுகளான இலக்கியங்கள் அனைத்தும் சேர்ந்து ஒரு முழுமையாக, மனித உடலைப்போல அமையலாம்; எல்லாமாகச் சேர்ந்த முழுமையான ஒன்று அதிக ஆர்வமூட்டுவதாக, அல்லது, தனித்தனி உறுப்புகளைக் காட்டிலும் முக்கியமானதாக அமைவதற்கு எல்லாவித வாய்ப்புகளும் உள்ளன. நான் 9/11 நூல்களில் பலவற்றைப் படிக்கவில்லை. எனக்குச் சொன்னவரையில், அவற்றில் சிலவற்றில் `மோனிக்கர் சரியாக முட்டி மோதவில்லை, குறிப்பாக ஆர்வமூட்டும் விதத்தில், என்றார்கள். (அதற்காக வேறு காரணங்களுக்காக அவை நல்ல புத்தகங்களாக ஆகாமற் போய்விடாது) எழுத்தாளர்களாக நாம் கொஞ்ச தூரம் விலகி இருப்பது தேவையாகிறது; ஒரு தேசமாக நாம் இன்னும் 9/11ன் விளைவுகளுக்குள்ளேயே இருக்கிறோம், ஏனெனில், ஒருபக்கம், நாம் இன்னும் போர் நடத்துவதில் இருக்கிறோம், இன்னொரு பக்கம், வீட்டுக்குள் என்றாலும் அரசியல் பதிலடிகளையும் நீதிமன்ற வழக்குகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. – எவ்வளவுக்கு சமரசம் செய்து கொள்ளவேண்டியிருக்கிறது என்பதை யோசிப்பதேயில்லை.

`ரும்பஸ்` இதழுக்கு  அளித்த ஒரு பேட்டியில்  ஐரிஷ் எழுத்தாளர் கோல்ம்  மெகான் (Colm MeCann), ‘’ ஒவ்வொரு  நாவலும் தோல்விதான். நீங்கள்  எதைச் சாதிக்க வேண்டுமென்று  உண்மையாக நினைத்தீர்களோ,  அதை ஒருபோதும் சாதிக்க  இயலாது. ஆற்றங்கரையில் நீங்கள்  கனவு கண்ட விஷயம், எழுதும்  மேஜைக்குத் திரும்பிச்  சாதித்ததாக ஒருபோதும்  இராது.’’ என்கிறார். ஒரு நாவலாசிரியராக நீங்கள், இதில் உடன்படுகிறீர்களா?

ஆம். அதில் மனமுடையச் செய்கின்ற துயரம்(!) ஒன்று இருக்கிறது அது  உங்கள் தலைக்குள் இருப்பதிலிருந்து தாளில் எழுதியிருப்பதற்கு ஒரு முழுமையான பாலம் அமைக்க இயலாமலிருக்கிற மொத்தச் செயல்பாடும் குறித்த துயரம். Jude the obscure ல் ஜூடு, தூரத்தில் மினுங்கிப் பிரகாசிக்கும் நகரங்களைக் கண்டு, அங்கு சென்றுசேர்ந்த போதெல்லாம் ஏமாறுவதைப் போன்றது. என்னுடைய அடுத்த நாவல் என் தலைக்குள் இருக்கிற ஒரு நகரம்; அழகும் நூறு விழுக்காடு முழுமையும் கொண்டது; ஆக, ஏமாற்றப்பட, மட்டுமே, எனக்கு விதிக்கப்பட்டுள்ளது. எனக்கு நானே சொல்லிக்கொள்கிற ஒரே விஷயம், வாசகர்கள் என் தலைக்குள் செல்ல எந்தப் பாதையும் இல்லை என்பதுதான். அவர்கள் தாளில் இருப்பதை மட்டுமே பெற முடியும். அவர்கள் ஏமாற்றமாகலாம், ஆனால், என்னைவிடவும் அதிகமாகப் பல வெவ்வேறு காரணங்களும் இருக்கலாம்.

. எழுத்தாளர்கள், எந்த வகையிலான பிற எழுத்தாளர்களை வாசிக்கிறார்கள் என்பதை அறிவதில் `த்ரீ மங்கீஸ்` எப்போதுமே ஆர்வம்கொண்டிருக்கிறது, ஆகவே உங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளர்கள் யார், யாரென்றும், அது எதனால் என்றும் உங்களைக் கேட்கலாமா?

என்னுடைய எல்லை மிக விரிந்து பரந்தது. ஜோசப் கான்ராட், கிரஹாம் க்ரீன், ஜோன் திதியன், டபுள்யு.ஜி. செபால்டு, ஆலிஸ் மன்றோ, ஜேன் ஆஸ்டின், வாலஸ் ஸ்டீவன்ஸ், எமிலி டிக்கின்ஸன்.  எல்லா நாவலாசிரியர்களும் விரும்புகிற மாதிரி எழுதுகின்ற காதரைன் போ என்ற பத்திரிகையாளர் ஒருவர்.

இறுதியாக, எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன? அடுத்த நூல் படைப்பிலிருக்கிறதா?

ஆம். அடுத்த நாவலுக்காக, வாசிப்பதும்  குறிப்பெடுப்பதுமான பணிகளில் இருக்கிறேன். அது, நினைவுகள் மற்றும் தன்விபரக்குறிப்புகளின் தன்மையைப் பொறுத்தே பெரும்பான்மை அமைகிறது;  போர், திருமணம் மற்றும் ஆஃப்கானிஸ்தானில் நமது தலையீடு தொடர்பானது.

Jude the obscure – தாமஸ் ஹார்டியின்  கடைசி நாவல்.

நன்றி :- www.threemonkeysonline.com <http://www.threemonkeysonline.com/>.

•••

மொழிபெயர்ப்பு கவிதை – அஜித் சி. ஹேரத் தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

  

– அஜித் சிஹேரத்

தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

 

சித்திரவதைக் கூடத்திலிருந்து

அடுத்த கணம் நோக்கி

எதிர்பார்ப்புக்களேதுமற்று பார்த்திருப்பதைத் தவிர

முதலாமவனாகவோ இறுதியானவனாகவோ

ஆவதற்கு நான் பிரார்த்தித்திருக்கவில்லை

எவ்வளவுதான் சிரம் தாழ்த்தி அமர்ந்திருந்தபோதிலும்

அவர்களது அன்பற்ற குட்டுக்களிலிருந்து

தப்பிக்கொள்ள முடியவில்லை

சித்திரவதைக் கூடத்தில் கழித்த முதல் மணித்தியாலத்திலேயே

எண்ணங்கள் காணாமல் போயின

துயர்தோய்ந்த இறந்த கால நினைவுகள்

உடல்சதையைச் சுழற்றும் மோசமான வேதனைகள்

மரண ஓலங்கள்

அசாதாரண உருவங்களோடு மனங்கவர் வர்ணங்கள்

பயங்கரக் கனவுகளிடையே உணர்வுகளைத் தூண்டுகின்றன

பயங்கரத்தைத் தவிர

இங்கிருப்பது

மனிதத்தன்மையில் கையேதுமற்ற நிலை

சித்திரவதைக் கூடத்தில் சந்திக்கக் கிடைக்கும்

ஒரே அன்பான தோழன்

மரணமே

அவனும்

எங்களது வேண்டுகோளை உதாசீனப்படுத்துகிறான்

நேற்றிரவு கொண்டு வரப்பட்ட யுவதியின்

குரல் படிப்படியாகத் தேய்ந்தழிகிறது

சேவல் கூவ முன்பு

மூன்றாவது முறையாகவும்

எவரையும் தெரியாதெனச் சொன்ன சகோதரி

காட்டிக் கொடுப்பதற்குப் பதிலாக

அச்சம் தரும் மரணத்தையும்

கெஞ்சுதலுக்குப் பதிலாக

சாபமிடுவதையும் தேர்ந்தெடுத்த சகோதரி

எனதிரு கண்களையும் கட்டியிருக்கும் துணித் துண்டு ஈர்த்தெடுத்த

இறுதிக் கண்ணீர்த் துளிகளை

சமர்ப்பித்தது உன்னிடமே

உற்சாகமூட்டும் மேலதிகக் கொடுப்பனவு

பகலுணவிற்காகக் கிடைத்த யோகட் கோப்பையின்

அடிவரையில் நக்கிச் சுவைத்த படைவீரன்

அதை எரிந்து மிதிக்கிறான்

அடுத்தது யார்

இங்கு வாழ்க்கை இதுதான்

இங்கு மரணம் எது?

முகமொன்றற்ற பிணமொன்று மற்றும்

தலைப்பொன்ற செய்தியொன்று மட்டும்

பட்டியலிடப்படாத வாழ்க்கை

பட்டியலிடப்படாத மரணத்தோடு

வந்து சேர்கிறது

பைத்தியக் கனவுகளோடு

நான் எத்தனை தடவை இங்கிருந்து தப்பித்துப் போயிருக்கிறேன்

எனினும் நான் இங்கேயேதான்

இந்தத் தெளிவு கூட

கண்டிப்பாகப் பயங்கரமானது

இங்கு படுகொலை செய்யப்பட்ட

அனேகருக்கு

மனித முகமொன்று இருந்தது

எனது இறுதிச் சாட்சியாக

எனக்குச் சொல்ல இருப்பது அது மட்டுமே

***

மொழிபெயர்ப்பு கவிதை- இந்திரன்- அந்த தொடக்கம் – வெரோனிகா வோல்கொவ் – மெக்சிகோ

அந்த தொடக்கம்

வெரோனிகா வோல்கொவ் / மெக்சிகோ

தமிழில்: இந்திரன்

 

 

 

 

 

 

1

காதலர்களுக்கு

காதலிப்பதற்காகவே கரங்கள் உள்ளன

அவர்களுக்கு கரங்கள் மட்டுமே உள்ளன.

கரங்கள் அவைதான் கால்கள் மற்றும் அவர்களின் உடம்புகளின் மீது

இறக்கைகள்

சதா தேடிக்கொண்டே இருக்கும் கரங்கள்

புதைந்த விழிகளுக்குப் பின்னே மூச்சுவிடும் மிருகங்கள்

உடம்பில் நெருப்பு மூட்டி விடும் விரல்கள்

மலர்களால் வருடப்படும் கிளைகள் அவை

மலர்கள் பறவைகள் மலர்கள் நெருப்புகள் மலர்கள் கரங்கள்

மின்னலின் எழுதுகையில் காணாமல் போகும் கரங்கள்

உடம்பின் சதையில் பயணப்படும் கரங்கள்

நட்சத்திரங்கள் விடியலைத் தொடுவதுபோல்

சூரியன் உதிப்பதுபோல்   உதய நட்சத்திரம் போல்

இரவைக் கிழிக்கும்

ரகசியமான கடவுள்களைப் போல.

2

உன் உடம்பிற்கும் என் உடம்பிற்கிற்குமிடையில்

உன் உடம்பின் அச்சுப்பதிவு

உன் விழி                            உன் உடம்பின் சத்தம்

உன் உடம்பின் மேற்கை

உனது பல்

உனது நாக்கு

உனது தொடை

எனது மொத்த தோலினால் உன் உடம்பின் வடிவத்தை

செவிமடுக்கிறேன்.

என் உடம்பிற்கும் உன் உடம்பிற்கும் இடையில்

உன் உடம்பின் இன்னொரு வடிவம்

தண்ணீர்        பனிக்கட்டியாக மாறுவதுபோல்

அல்லது திறந்த         தீநாக்குகளைப் போல்

உன் உடம்பு

என் உடம்பில் அழுகிறது

மேலும் நீ தளரவிடப்பட்ட வெறிக்கூச்சல்

சத்தம்போடும் நட்சத்திரம்

என் உடம்பில்   சதையின்  ஓசையெழாத அழுகை

சொல் அது நெருப்பல்லவா

தொலைதூர உலகங்களின் விதை

வினோதமான திடீரெனச் சம்பவித்த நசத்திரத்தின் அருகாமை?

3

நீ நிர்வாணம்

உனது மென்மை எல்லையற்றது

நீ என் விரல்களில் துடிக்கிறாய்

உனது மூச்சு உன் உடம்பிற்குள் பறக்கிறது

நீ

எனது கரத்திலிருக்கும் பறவையைப்போல்

ஆபத்திலிருக்கிறாய்

ஆசை மட்டுமே உன்னை ஆபத்திலிருக்க வைக்கிறது

இனந்தெரியாத வலியோடு நாம் ஒருவரை ஒருவர் தொட்டுக் கொள்கிறோம்

அந்த சரணாகதியில் நமக்குத் தெரியும்

பலியானவர்களை விட்டுத் தொலைப்பது.

ஒரு நாவைப் போன்ற இன்பம்

நம்மை நக்குகிறது       நம்மை விழுங்குகிறது

மற்றும் நமது விழிகள் எரிகின்றன தொலந்து போகின்றன.

மொழிபெயர்ப்பு சிறுகதை – கர்தார்சிங் துக்கல் – செஹர்ஜாத்

மொழிபெயர்ப்பு சிறுகதை – கர்தார்சிங் துக்கல் –

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

செஹர்ஜாத்

தமிழில்: நாணற்காடன்
செஹர்ஜாத் நகரத்தில் பிறக்கவில்லை. அதன் அம்மாவும், அதன் அம்மாவின் அம்மாவும் பிறந்த காட்டில் தான் அதுவும் பிறந்தது. ஆனால் செஹர்ஜாத் பளி நகரத்தில் இருந்தது.

விஷயம் இதுதான். எங்களின் நண்பரொருவர் வேட்டையாட அழைத்திருந்தார். அப்போது அவர் பேட் பகுதியில் நியமிக்கப்பட்டிருந்தார். நானும், என் மனைவியும் மிகுந்த விருப்பத்தோடும், பலத்த ஏற்பாடுகளோடும் நூற்றைம்பது மைல்கள் பயணித்துச் சென்றோம். நாள் முழுதும் சுற்றியலைந்ததில் பல விலங்குகள் கண்ணில்பட்டன. இருந்தாலும், சில சின்னஞ்சிறு புறாக்களைத்தவிர கைக்கு வேறொன்றும் அகப்படவில்லை. நாங்களும் மகிழ்ச்சியடைந்தோம். நகரத்தின் ஆரவாரத்திலிருந்து நீங்கி இரண்டு நாள்கள் ஆகிவிட்டிருந்தன. ஆனால், என் நண்பரான போலீஸ்காரரோ பெருத்த ஏமாற்றத்தோடு இருந்தார். நான்கு நாள்களுக்குப் பிறகு ஒரு சிப்பாய் வந்தான். அவனுடைய மடியில் மான்குட்டி ஒன்று இருந்தது. ”கேப்டன் ஐயா கொடுத்தனுப்பி இருக்கிறார்” என்று சொன்னான் அவன்.
என் மனைவி மான்குட்டியைப் பார்த்தும் மிகவும் மகிழ்ந்தாள்.
அதன் பிறகு குடும்பத்தில் அனைவரும் இந்தப் புதிய விருந்தாளியை உபசரிப்பதில் ஈடுபட்டனர். என் மனைவி எங்கிருந்தோ சலங்கையைக் கொண்டுவந்தாள். என் அம்மா அதற்கு சங்கிலி தேடத் தொடங்கினாள். நான் அதற்கு என்ன பெயர் வைக்கலாமென யோசித்துக்கொண்டிருந்தேன். பல பெயர்கள் பரிசீலிக்கப்பட்டன. இறுதியில் செஹர்ஜாத் என்ற பெயர் முடிவு செய்யப்பட்டது.
எங்கள் மகனின் பெயர் ஷெஹர்யார். மான்குட்டிக்கு நாங்கள் ஷெஹர்ஜாத் என பெயர் சூட்டிவிட்டோம்.ஷெஹர்யார்!செஹர்ஜாத்!
ஷெஹர்ஜாத் என் மகனை மிகவும் பிரியமாக்கிக் கொண்டது. தனது பெரிய கண்களால் மிகுந்த விருப்பத்துடன் மகனின் கன்னங்களை, முகத்தை, நெற்றியை என முழு அன்போடு பார்த்தது. அவன் முன்னால் ஆடியும் ஓடியும் சந்தோஷப்படுத்தியது. அவ்வப்போது கண்களை மூடிக்கொண்டு அவனருகில் வந்து திரும்பிச்செல்லும். அவனோ அதன் முதுகில் சட்டென்று ஏறி அமர்ந்துகொள்வான்.
ஷெஹர்ஜாத்துக்குக் குறைவின்றி  உபசரிப்பு கிடைத்தது. ஒரு குழந்தையைப்போல் அதை நாங்கள் பார்த்துக்கொண்டோம். அப்போதெல்லாம் எங்கள் வீட்டிற்கு அகதிகள் நிறையபேர் வருவதுண்டு. அவர்கள் ஷெஹர்ஜாத்தைப் பார்த்து வியப்பில் பிரமித்துப்போவார்கள்.
ஷெஹர்ஜாத் என்னுடன் அலுவலகம் வரத் தொடங்கியது. அதை அலுவலகத்தில் யாரும் தடுக்கவில்லை. என் மனைவி  மருத்துவமனைக்கு தனது மோட்டார்காரில் புறப்பட்டுவிட்டால் போதும், வண்டியின் முன்னும் பின்னும் சென்று வட்டமிட்டு காரின் சீட்டில்போய் அமர்ந்துகொள்ளும். இதைப்பார்த்து அனைவரும் சிரித்துவிடுவர். என் மகன் தாதிப்பெண்ணுடன் வெளியில் ஊர்சுற்றக்கிளம்பும்போதும், ஷெஹர்ஜாத் முன்னால் போய் அவனின் கைகளையும், தோள்களையும் முழுதுமாக நக்கத்தொடங்கிவிடும்.
எந்த வயல் குதித்துவிளையாட ஏற்றது, எந்த வயல் ஏற்றதில்லை என்பதையும் ஷெஹர்ஜாத் நன்கு அறிந்திருந்தது. கிணற்றில் நீரிறைக்கும் எந்திரத்தின் மேல் எதுவரை போகவேண்டும், எதற்கும் மேல் போகக் கூடாது என்பதும் ஷெஹர்ஜாத்துக்கு தெரிந்திருந்தது. இரவில் முற்றத்தில் அதைக் கட்டிவைக்கும் இடத்தை, ஷெஹர்ஜாத் அசுத்தம் செய்ததேயில்லை.
என் மனைவியின் மருத்துவமனையில் எல்லா நோயாளிக்கும் பிடித்தமானதாயிருந்தது ஷெஹர்ஜாத். மேலும், அதற்குத் தன் டாக்டர் எஜமானியுடன் வார்டில் ஒவ்வொரு படுக்கையாக சுற்றிவருவது மிகவும் பிடித்தமானதாயிருந்தது. ஒவ்வொரு நோயாளியிடமும் தட்டிக்கொடுக்க முதுகைக்காட்டி அவர்களின் அன்பைப் பெற்றுக்கொள்ளும். தொடக்கத்தில் என்னுடன் அலுவலகம் வந்துகொண்டிருந்தது. பிறகு அலுவலகம் வருவதை நிறுத்திக்கொண்டது. ஒரு நாள் வெளியே அலுவலக ஊழியர்கள் சிலர் பேசுவதைக்கேட்டேன்.
”ஐயாவின் மான்குட்டி இப்போதெல்லாம் வருவதில்லையல்லவா?”
”அதுவும் நல்லதுதான்”
”ஏன்”
”மேனேஜருக்கு மான்குட்டி வருவது பிடிக்காமல்தான் இருந்தது.”
இதைக்கேட்டு நான் மிகவும் திகைத்துப்போனேன். உண்மையில் இத்தனை நாள்களாக ஷெஹர்ஜாத் அலுவலகம் வரவேண்டுமென அடம் பிடிக்கவேயில்லை.
யாரேனும் விருந்தாளிகள் வந்துவிட்டால், நாங்கள் அனைவரும் ஒன்றுகூடி அமர்ந்துகொள்வோம். மெள்ள மெள்ள அடியெடுத்துவைத்து நாங்களிருக்கும் வட்டமான அறைக்கு ஷெஹர்ஜாத் வந்துவிடும். ஒவ்வொருவரையும் நேருக்கு நேராய் பார்க்கும். ஒவ்வொருவரின் கைகளையும் மோந்து பார்க்கும். ஒவ்வொருவரும் அதன் முதுகைத் தடவிவிடுவார்கள். அனைவரையும் மகிழவைத்து தானும் மகிழ்ச்சியடைந்த பின் இடத்தை காலி செய்துவிடும்.
இப்போது ஷெஹர்ஜாத் மிகவும் வளர்ந்துவிட்டது. ஷெஹர்ஜாத் எங்களது வீட்டிற்கு வந்து ஓராண்டுக்கும் மேலாகிவிட்டது. எவ்வளவு உயரமாக வளர்ந்துவிட்டது! எத்தனை வேகமாக ஓடுகிறது! எவ்வளவு உயரமாக எம்பிக் குதிக்கிறது! மேலும், இப்போதெல்லாம் அது பல தவறுகளும் செய்யத் தொடங்கிவிட்டது.  அடுத்தவர்களின் வயல்களில் மேய்ந்துவிட்டு வருவது வாடிக்கையாகிப்போனது. உழவர்களும் ஷெஹர்ஜாத் செய்த குற்றத்தை தூக்கிக்கொண்டு வந்துவிடுவார்கள். வீட்டிலிருக்கும் தீவனங்கள் யாவற்றையும் தின்றுவிட்டு பக்கத்து வயலை நாசமாக்குவது, பழச்செடிகளையும், பூச்செடிகளையும் அழிப்பது என அதன் அழிச்சாட்டியத்திற்கு அளவேயில்லை. யாரேனும் அதைப் பற்றி குறை கூறும்போது ஷெஹர்ஜாத் அவமானத்தில் தலைகுனிந்து குற்றவாளியைப்போல் நின்றுகேட்டுக்கொண்டிருக்கும்.  அதன்பின் சில நாள்கள் எங்கள் வீட்டையும், தோட்டத்து எல்லையையும் தாண்டி எங்கும் போகாது. பிறகு பழையபடி ஏதேனும் செய்துவிட்டு பிரச்சினையைக் கொண்டுவரும். குற்றத்தை ஒப்புக்கொள்வதுபோல் தலைகுனிந்து நின்றுகொள்ளும். நான், என் மனைவி மற்றும் வீட்டிலிருக்கும் அனைவரும் அதற்குப் புரியவைக்க முயல்வோம்.
ஷெஹர்ஜாத் நாங்கள் வசித்த காலனியில் ஒவ்வொரு வீட்டிலும் தனது நட்பை  உருவாக்கிவைத்திருந்தது. ஒவ்வொரு வீடும் ஷெஹர்ஜாத்துக்காக காத்திருந்தது. எல்லா வீட்டிற்கும் அது போய்வரும். ஒவ்வொரு வீட்டிலும் ஷெஹர்ஜாத்துக்கென ஏதாவது மிச்சம் வைக்கப்பட்டிருக்கும். ஷெஹர்ஜாத்தும் அவர்களின் உபசரிப்பை ஏற்றுக்கொண்டு அவர்களை சந்தோஷப்படுத்தும். எங்கள் வீடு நகரத்தை விட்டு வெளியே இருந்தது. அக்கம்பக்கத்தில் ஆறேழு வீடுகள்தாம் இருந்தன. அவற்றை விட்டுத் தாண்டினால் சாலை.சாலைக்குப் பக்கத்தில் நீதிமன்றங்களும் அதனருகில் தலைமைக் காவல் நிலையமும் இருந்தன. நகரமோ இன்னொரு பக்கமிருந்தது. இந்த ஐந்தாறு வீடுகளையொட்டியிருக்கும் வயல்களும், துப்பாக்கிப்பயிற்சி மைதானம் வரையிலுமாக ஷெஹர்ஜாத்துக்கு சுற்றித்திரிய இடமிருந்தது. இந்த சாலையையும், அந்த துப்பாக்கிப்பயிற்சி மைதானத்தையும் தாண்டி ஷெஹர்ஜாத் தனியாக சென்றதில்லை. இவற்றைத் தாண்டியிருக்கும் உலகம் பற்றி ஷெஹர்ஜாத்துக்கு கொஞ்சமும் தெரியாது.
வளர வளர அதன் போக்கிரித்தனமும் அதிகமாகிக் கொண்டிருந்தது. இது குறும்புதானா, இந்தக் குறும்பை ஏன் செய்யக்கூடாது என்பதைத் தெரிந்துகொண்டே அந்தக் குறும்பைச் செய்யும். குறும்பு செய்யும்போதெல்லாம், தலைகுனிந்து குறுகுறுத்து நிற்கும். செய்த தவறுக்கு வருத்தப்பட முகத்தில் ஒரு பாவனையை வைத்திருக்கும்.
இரவெல்லாம் ஷெஹர்ஜாத் ஓய்வெடுக்கும் அந்த முற்றம் எங்களின் படுக்கையறையை ஒட்டி இருந்தது.ஒரு நாள் இரவு அது அமைதியற்று இருப்பதைக் கண்டோம். உட்கார்வது, எழுவது, கதவில் போய் தலையை முட்டிக்கொள்வது, சங்கிலியை உடைக்க முயல்வது என அது அமைதியில்லாமல் இருந்தது.
ஷெஹர்ஜாத் அமைதியற்றுக் கிடந்த நாள்களில் அதை நாங்கள் பெரிதாகக் கண்டுகொள்ளவுமில்லை.
ஒருநாள் விடிந்ததும் நானும், என் மனைவியும் ஷெஹர்ஜாத்தைப் பார்க்கச் சென்றோம். ஷெஹர்ஜாத் தலை குனிந்து நின்றிருந்தது. முற்றத்துச் சுவரின் ஒரு பகுதி சிவப்புப்பொடி தெளித்து அசிங்கமாக இருந்தது. பார்ப்பதற்கு ஹோலி பண்டிகையின்போது பயன்படுத்தப்படும் பீச்சாங்குழலால் தெளிக்கப்பட்டதுபோல் இருந்தது. நான் பார்த்துவிட்டு அப்படியே திரும்பி வந்துவிட்டேன். என் மனைவிதான் சிப்பாய் ஒருவனின் மனைவியை அழைத்து முற்றத்தைக் கழுவ வைத்தாள். ஷெஹர்ஜாத்தை அவிழ்த்துவிட்டோம். அது வெளியே தோட்டத்தின் ஒரு பக்கமாய், மிதமான அந்த வெயிலில் ஆரஞ்சு மரத்தின் கீழே போய் படுத்துக்கொண்டது.
சில நாள்களுக்குப் பிறகு நாங்கள் வேலைக்காரர்கள் தங்கியிருந்த அறையை காலி செய்துவிட்டு, அதை ஷெஹர்ஜாத்துக்காக ஒதுக்கினோம். ஷெஹர்ஜாத் இரவெல்லாம் அவ்வறையில் இருக்கும். மனம் விரும்பினால்,பகலிலும்  தனது அறைக்குச் சென்று இளைப்பாறிக் கொள்ளும்.
பல நாள்கள் கழிந்தன.


இப்போதெல்லாம் ஷெஹர்ஜாத் விசித்திரமான வேடிக்கையொன்றை செய்து வருகிறது. எங்கள் படுக்கையறைக்குள் நுழைந்து ஒப்பனை மேசையின் நிலைக்கண்ணாடி முன் நின்றுகொண்டு மணிக்கணக்கில் தனது பிம்பத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறது. நின்று நின்று களைத்து விட்டால் அப்படியே நிலைக்கண்ணாடி முன்பு அமர்ந்து கொள்கிறது. ஷெஹர்ஜாத்தை வேறு எங்கும் காண முடியாவிட்டால், இந்த மேசையின முன்பு அமர்ந்திருக்கக் காணலாம். காதல் பித்து பிடித்தவனைப் போல் கண்சிமிட்டாமல் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டிருக்கும். மெள்ள மெள்ள அடியெடுத்து வைத்து கண்ணாடியின் பின்புறத்தில் எட்டிப் பார்க்கும். எதுவும் அங்கே தென்படாததால் மறுபடியும் திரும்பி வந்து கண்ணாடி முன்பு அமர்ந்து கொண்டு இமைக்க மறந்து கண்ணாடியையே பார்க்கத் தொடங்கிவிடும்.
இவ்வாறாக ஒரு நாள்  கண்ணாடி முன் அமர்ந்திருந்த ஷெஹர்ஜாத்தின் குரலை நாங்கள் கேட்டோம். முதன்முறையாக அது பேசியது. உள் நெஞ்சின் அடியாழத்திலிருந்து எழுமிய குரல் அது. அந்தக் குரலைக் கேட்டு எங்களுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. கண்ணீரில் நனைந்த குரல்வளையிலிருந்து எதையோ பேசியது.
பிறகு நாங்கள் அக்கண்ணாடியின் மேல் திரையிட்டு மூட ஆரம்பித்தோம். ஓரிருமுறை ஷெஹர்ஜாத் தேடித்தேடி வந்தது. பிறகு கண்ணாடி பற்றிய எண்ணத்தை கைவிட்டது. எப்போதும் கண்ணாடியின் மேல் திரை தொங்கவிடப்பட்டே இருந்தது.
மேலும் சில நாள்கள் கழிந்தன.
எதையோ தொலைத்துவிட்டது போல் எதுவும் பேசாமல் தனிமையில் மணிக்கணக்கில் பொழுதுகழித்தது ஷெஹர்ஜாத். ஏதேனும் சிந்தனையில் மூழ்கியே இருக்கும். நாங்கள் அதைக் கூப்பிட்டாலோ, என் மகன் அதை ஏதேனும் தொந்தரவு செய்தாலோ அது “என்னைத் தனியாக விடுங்கள்” என்று சொல்லிவிடும். அது ஏதேனும் ஞாபகத்தில் மூழ்கியிருக்கும்.
தோட்டத்தில் வருத்தத்தோடும் அமைதியாகவும் அமர்ந்திருக்கும். திடீரென கழுத்தை மேலே தூக்கிப் பார்க்கும். காதுகளை விறைப்பாக்கிக்கொள்வது ஏதோவொரு குரலைக் கண்டுகொள்வதற்கான முயற்சி போல தோன்றும். உயரமான இடத்திற்குப் போய் நின்றுகொண்டு தனது நீண்ட முகத்தை காற்றில் துழாவுவது, நறுமணத்தைத் தேடுவதைப்போல தோன்றும். சஞ்சலத்தோடு அது தனது நெற்றியை நடைபாதையின் வெல்வெட் போன்ற மண்ணில் போட்டுத் தேய்த்துக்கொள்ளும். தனது உடலை அடிமரத்தில் தேய்த்துக்கொள்ளும்.
சில நாள்களுக்குப் பின் ஷெஹர்ஜாத் முற்றிலும் பேசுவதை நிறுத்திக்கொண்டது. எங்கே உட்காராதோ அங்கே போய் உட்காருவது, எங்கே நிற்காதோ அங்கே போய் நிற்பது, எத்திசையில் போகாதோ அத்திசையில் போவது என அதன் நடவடிக்கைகள் மாறிவிட்டிருந்தன. காதுகளை விறைப்பாக்கி ஏதேனும் கேட்க முயலும். அதன் காதுகளுக்கு ஏதேனும்கேட்டாலும் கேட்காவிட்டாலும், எந்த திசையில் முகத்தை வைத்திருக்கிறதோ அதே திசையில் ஓடத்தொடங்கிவிடும். எங்கெங்கோ ஓடித்திரிந்துவிட்டு, மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கியபடி திரும்பி வரும்.
ஒரு நாள் வெளியே தோட்டத்தில் நாங்கள் உலவிக்கொண்டிருந்தோம். ஷெஹர்ஜாத் ஆரஞ்சு மரத்தினடியில்காதுகளை விறைப்பாக்கி எதையோ கேட்பதற்காக வெகுநேரமாய் நின்று கொண்டிருந்தது. திடீரென அது நகரத்தின் பக்கமாய் ஓடத்தொடங்கியது. ஷெஹர்ஜாத் நகரத்துச் சாலையில் ஓடுவதைப்பார்த்த என் மனைவி செய்வதறியாமல் திகைத்துவிட்டாள்.
”ஷெஹர்ஜாத்” அவள் அதைக் கூப்பிட்டாள்.
”ஷெஹர்ஜாத்” நானும் குரல் கொடுத்தேன்.
”நகரத்தின் பக்கம் போனபின் அது திரும்பி வராது. நகரத்து நாய்கள் அதைக் கடித்துச் சதையைப் பிடுங்கிவிடும்” என் மனைவி மிகவும் கவலையடைந்தாள்.
என் மனைவியின் கூப்பாட்டையும் என்னையும் பொருட்படுத்தாமல் ஏதோவொரு குரலைத் தேடி, அந்தச் சாலை வழியாக நகரத்தை நோக்கி ஓடிவிட்டது.
நான்கு மணி நேரத்திற்குப்பிறகு  மூச்சிரைத்தவாறு இரத்தம் சொட்டச்சொட்ட திரும்பி வந்தது அது. கழுத்தில் காயங்கள். அதன் உடலில் பல இடங்களில் காயங்கள். கால்களிலும் இரத்தம் வழிந்தோடியது. “ சொன்னபடியே ஆகிவிட்டது…அந்த நகரத்து நாய்கள்தாம்…” என்று சொல்லியவாறு என் மனைவி அதை அணைத்துக்கொண்டாள். அதன் காயங்கள் கழுவப்பட்டன. காயங்களுக்குக் கட்டு போடப்பட்டது. குடிப்பதற்கு அதற்கு பால் கொடுத்தோம். களைத்தும் வெகுவாக தளர்ந்துமிருந்த ஷெஹர்ஜாத் மாலை தொடங்கி இரவு முழுக்க அப்படியே கிடந்தது.
அடுத்த நாள் காலை நாங்கள் அதைப் பார்க்கச் சென்றோம். எங்களைப் பார்த்ததும் ஷெஹர்ஜாத் தனது அறையிலிருந்து குதித்தோடி வந்தது. மஞ்சள் வெயில் பரவியிருந்தது. மீண்டும் ஷெஹர்ஜாத்தின் காதுகள் விறைத்துக் கொண்டன.  மீண்டும் தனது நீண்ட முகத்தை தூக்கி நறுமணத்தைத் தேடி காற்றில் துழாவியது. அதன் உடம்பில் புதுத் தெம்பு வந்தது போலிருந்தது.
அது நாங்கள் பார்த்துக்கொண்டிருக்கும்போதே மீண்டும் கழுத்தைத் திருப்பிக்கொண்டு நகரத்தை நோக்கி ஓடத்தொடங்கியது. என் மனைவி மிகவும் துடித்துப்போனாள்.
”ஷெஹர்ஜாத்” அவள் அதைக் கூப்பிட்டாள்.
ஷெஹர்ஜாத் காதில் வாங்கியதா இல்லையா தெரியவில்லை.
”ஷெஹர்ஜாத் நகரத்து நாய்கள் உன்னைக் கடித்து சதையைப் பிடுங்கிவிடும்” அவள் அதைக் கூப்பிட்டாள்.
ஷெஹர்ஜாத் குன்றுமணியளவுகூட பொருட்படுத்தவில்லை. ஓடிகொண்டேயிருந்தது.
”ஷெஹர்ஜாத் திரும்பி வந்துவிடு. அந்த நாய்களால் உனக்கு ஏற்பட்ட நிலை தெரியவில்லையா ?”
ஷெஹர்ஜாத் சாலையைக் கடந்து ஓடிவிட்டது.
என் மனைவியின் இமைகளை மீறி இரு கண்ணீர் முத்துகள் அவளது கன்னங்களில் உருண்டோடின.
இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு ஷெஹர்ஜாத் மீண்டும் மூச்சிரைத்தவாறு, இரத்தம் சொட்டச்சொட்ட ஓடி வந்தது. கொஞ்சமும் இரக்கமில்லாத நாய்கள் மறுபடியும் கடித்துவிட்டன. அங்கங்கே இரத்தம் வழிந்தது. அங்கங்கே சதை கிழிந்து தொங்கின.
நேராக ஓடிவந்து என் மனைவியிடம் அடைக்கலமானது. அதன் நிலையைப் பார்த்து நாங்கள் மிகவும் பயந்துவிட்டோம். இது இனி தப்பிக்காது என நினைத்தோம். மருந்திட்டு கட்டு போடப்பட்டது. பால் புகட்டப்பட்டது. என் மனைவி அதை வாரி அணைத்துக்கொண்டாள். நான் அதை முத்தமிட்டுக் கொஞ்சினேன்.
ஷெஹர்ஜாத்தின் கண்களில் குற்றவுணர்வும், திகைப்பும், திக்கற்ற நிலையும் தென்பட்டன.
நாங்கள் அதை அதனறைக்கு அழைத்துச் சென்று ஓய்வெடுக்க வைத்தோம்.
மதிய உணவுக்குப்பின் நாங்கள் நடைபாதையில் நடந்து கொண்டிருந்தோம். வசந்த காலமது. எங்கள் தோட்டம் முழுக்க முழுக்கப் பூக்களைச் சுமந்திருந்தது. ஒவ்வொரு மரமும் துளிர்த்திருந்தது. சிறு கிளைகள் யாவும் பூத்திருந்தன.
நாங்கள் உலாவத் தொடங்கி வெகு நேரமாகிவிடவில்லை. ஷெஹர்ஜாத் தனது அறையை விட்டு வெளியேறி சாலையை நோக்கி போய்க்கொண்டிருந்தது. காதுகளை விறைத்தபடி, நீண்ட முகத்தை காற்றில் துழாவியபடி நறுமணத்தை தேடிச் சென்று கொண்டிருந்தது.
”இது மறுபடியும் நகரத்தை நோக்கிப் போகிறதே” என் மனைவி அரற்றத்தொடங்கினாள்.
”ஷெஹர்ஜாத்” அவளால் அமைதியாக இருக்கவும் முடியவில்லை. ஆயினும் பயனேதுமில்லை.
”ஷெஹர்ஜாத்” நானும்  திரும்பி வரச்சொல்லிக் கூப்பிட்டேன்.
ஷெஹர்ஜாத்துக்கு எங்கள் குரல் எவ்வித தாக்கமும் ஏற்படுத்தவில்லை. அது முன்பு போலவே ஓடி விட்டிருந்தது. நீதிமன்றங்கள், காவல் நிலையம் மற்றும் எங்கள் கண்களை விட்டும் மறைந்தது.
”இம்முறை இது திரும்பி வராது” சொல்லியபடி என் மனைவி கையிலிருந்த மலரைக் கீழே போட்டாள்.
மதிய உறக்கத்திற்குப் பிறகு நாங்கள் வெறுமனே படுத்திருந்தபோது வெளியே ஷெஹர்ஜாத்தின் சத்தம் கேட்டது.நாங்கள் எழுந்து வருவதற்குள் மூச்சிரைத்தவாறு ஷெஹர்ஜாத் படுக்கையறைக்குள்ளேயே வந்துவிட்டது. வேகமாக அடியெடுத்து அது என் மனைவியை நோக்கி வந்தது. அதன் பார்வை முன்னாலிருந்த நிலைக்கண்ணாடி மீது விழுந்தது. உடனே அதன் பாதங்கள் அப்படியே நிலைத்துவிட்டன. கண்ணாடியில் தனது பிம்பத்தைப் பார்த்ததும் அதன் முகம் மலரத் தொடங்கியது. ஏழு சொர்க்கங்களை அடைந்துவிட்டது போன்ற மகிழ்ச்சி அதன் முகத்தில். ஷெஹர்ஜாத் தனது நீண்ட முகத்தை கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தின் நீண்ட முகத்தோடு பொருத்தி வைத்தது. ஷெஹர்ஜாத்தின் துடிக்கும் உதடுகளும், பிம்பத்தின் துடிக்கும் உதடுகளும் சில கணங்கள் ஒன்றோடொன்று பொருந்தி நிலைத்திருந்தன. என்னை மறந்து, என் மனைவியை மறந்து, தனது காயங்களை மறந்து ஷெஹர்ஜாத் கண்ணாடியில் பிம்பமாக இருந்த தனது உருவத்திற்கு அன்பு செலுத்தியது. அதன் கால்களில் வலிமை குறைந்ததும் அப்படியே கீழே விழுந்தது. சற்றைக்கெல்லாம் அதன் உடல் குளிர்ந்து போனது. அதன் நீண்ட முகம் பிம்பத்தைப் பார்த்தபடியே விழுந்து கிடந்தது. அதன் ஒளியற்ற கண்கள் பிம்பத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தன.

***
இந்தி மூலம்: கர்தார்சிங் துக்கல். KARTAR SINGH DHUGGAL
தமிழில்: நாணற்காடன்
இந்தி இலக்கிய உலகின் மிக முக்கியமான் ஆளுமையான திரு.கர்தார்சிங் துக்கல் அவர்கள் 1917 ல் பிறந்தவர். துக்கல் அவர்கள் ஆகாஷ்வாணி மற்றும் நேஷனல்புக் ட்ரஸ்ட் ஆகியவற்றின் இயக்குநராகப் பதவி வகித்தார். அதன் பிறகு சில ஆண்டுகள் திட்டக்குழுவின் ஆலோசகராகச் செயல்பட்டார். இந்தி இலக்கியத்திற்குஆற்றிய சேவைக்காக நடுவணரசு இவருக்கு1989 ல் பத்மபூஷன் விருதளித்தது. இவர் எழுதிய பலப் படைப்புகள், இவருக்குப் பலப் பரிசுகளைப் பெற்றுத்தந்துள்ளன.கதைகளுக்காக சாகித்ய அகாடமி விருதும், நாவல்களுக்காக இந்திய மொழி அமைப்பின் விருதும்,நாடகத்திற்காக காலிஃப் விருதும் இலக்கியத்திற்கு ஆற்றியசேவைக்காக சோவியத் லேண்ட் நேரு(sovieth land nehru award) விருதும் பெற்றுள்ளார்.

1993 ல் பஞ்சாப் சாகித்திய அகாதமி சிறந்த இலக்கியவாதி விருதும், 1994 ல் பஞ்சாப் பல்கலைக்கழகம் Doctor of Literature விருதும் அளித்து இவரைச் சிறப்பித்தன.எழுத்துக்காகவும், இலக்கியத்திற்காகவும் தனது முழுநேரத்தையும் அர்ப்பணித்துக்கொண்டவர் இவர்.

கர்தார்சிங் துக்கல்  ராஜ்யசபை உற்ப்பினராக இருந்தவர்.1989 ல் பத்மபூஷன் விருது பெற்ற எழுத்தாளர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்

மொழிபெயர்ப்பு சிறுகதை – டேவ் எக்கர்ஸ் – இன்னொன்று

,

 

 

 

 

 

 

 

 

 

மொழிபெயர்ப்பு சிறுகதை

– டேவ் எக்கர்ஸ்

 

தமிழில் ச.ஆறுமுகம்

 

இன்னொன்று

 

 

செய்தி கொண்டு செல்லும் ஆளாக, நான் எகிப்துக்கு எளிதாகச் சென்றிருந்தேன். நான் எடுத்துச் சென்றிருந்த கட்டினை விமான நிலையத்தில் ஒரு இளைஞனிடம் ஒப்படைத்ததோடு என் பொறுப்பு முடிந்து முதல்நாள் மதியமே விட்டுவிடுதலையாகி விட்டேன். கெய்ரோவில் தங்குவதற்கு அது மோசமான நேரமாக இருந்தது; அந்தக் காலகட்டத்தில் அங்கிருப்பது புத்திசாலித்தனமல்ல; எங்கள் நாட்டுக்கும் அந்தப் பகுதி முழுவதற்குமே அரசாங்க உறவுகள் கெட்டிருந்தன; ஆனாலும் நான் அங்கு வந்ததற்குக் காரணம், என் வாழ்க்கையின் அந்தக் கட்டத்தில், அங்கே ஒரு சன்னல் திறப்பு மட்டுமே, அது எத்தனை சிறியதாக இருந்தாலும் எந்த அளவுக்கு அதைரியமளிப்பதாக இருந்தாலும் நான் வெளியே —

நான் வேலைகளைச் செய்துமுடிக்கத் தொந்தரவளிக்கும் நினைவுகளைக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் பெரும் மன உளைச்சல், மனத்தளர்ச்சி என்ற வார்த்தைகளே எனக்குப் பொருத்தமானவையாக இருந்தன. அதனால் வழக்கமாக நான் விரும்புகிறவற்றில்கூட விருப்பமற்றிருந்தேன். ஒரு கிண்ணம் பாலைக்கூட என்னால் பெரும் தயக்கமின்றி அருந்தி முடிக்க இயலவில்லை. இருந்தாலும் நான் சிந்திப்பதையோ பெருத்த சிரமத்துடன் முன்செல்வதையோ நிறுத்திவிடவில்லை. அதன் காரணகாரியங்களை ஆராய்வது ஒன்றும் சுவாரஸ்யமாக இருக்கப்போவதில்லை.

நான் இருமுறை திருமணம் செய்திருந்தேன். என் நண்பர்கள் மத்தியில் நான் நாற்பது வயது கடந்தவன்.

எனக்கென்று தனி விருப்பங்கள் இருந்தன. எனக்கென வெளியுறவுத்துறையில் முடித்துக் கொடுக்கும் பணிகள் இருந்தன. அதற்காக என்னிடம் பணியாளர்கள் இருந்தனர். இவையெல்லாம் முடிந்து பல வருடங்களுக்குப் பின்னால், மே மாதம் ஏதோ ஒரு நாளில் எங்கள் அரசின் அறிவுறுத்தலையும் மீறி இலேசான வயிற்றுப்போக்கும் தனிமையுமாக, நான் எகிப்தில் இருப்பதை உணர்ந்தேன்.

அங்கே எனக்குப் பழக்கமாகாத புதுவகை வெப்பம், மிகுந்த புழுக்கத்தோடு மூச்சுத் திணறச் செய்வதாகவும் இருந்தது. சின்சின்னாட்டி, ஹார்ட்ஃபோர்ட் போன்ற தணுப்பான இடங்களிலேயே நான் வசித்திருந்தேன். அங்கேதான் மக்கள் ஒருவருக்கொருவர் வருந்துபவர்களாக, வருத்தம் தெரிவிப்பவர்களாக இருப்பதை நான் உணர்ந்தேன். எகிப்திய வெம்மையைச் சமாளித்து உயிர்வாழ்வது புத்துணர்ச்சி தருவதாக இருந்தது. அந்த வெயில் வாழ்க்கை என் எடையைக்குறைத்து, பிளாட்டினம் போல் உறுதியானவனாக ஆக்கியது. ஒருசில நாட்களிலேயே பத்து பவுண்ட் எடை குறைந்துவிட்டேன்; ஆனாலும் நான் நன்றாக இருப்பதாக உணர்ந்தேன்.

ஒரு சில வாரங்களுக்கு முன்புதான் லக்சாரில் சில பயங்கரவாதிகள் எழுபது சுற்றுலாப்பயணிகளைக் கொன்றிருந்தனர். அதனாலேயே எல்லோரும்  நடுக்கத்திலிருந்தனர். நியூயார்க்கில் எம்பயர் கட்டிடத்தில் இளைஞன் ஒருவன் சுட்டதில் ஒருவர் இறந்திருக்க, ஒரு சில நாட்களிலேயே நான் அந்தக் கட்டிடத்தின் உச்சிக்குச் சென்றிருந்தேன். நான் ஒன்றும் சிக்கல்களைத் தேடி வேண்டுமென்றே பின் தொடர்ந்து கொண்டிருக்கவில்லை; அப்படியானால் நான் என்ன இழவுக்குத்தான் போய்க்கொண்டிருந்தேன் _

ஒரு செவ்வாய்க்கிழமையில் நான் பிரமிடுகளின் அருகாகக் கண்களைச் சுருக்கித் தூசிப்படலத்தை நேசித்துக் கொண்டு நடந்துகொண்டிருந்தேன். அப்போதுதான் இரண்டாவது கறுப்புக் கண்ணாடியையும் தொலைத்திருந்தேன். கீஸே பீடபூமியில் கூவித்திரியும் வியாபாரிகள், உலகத்திலிருக்கின்ற உண்மையிலேயே மிகக் குறைந்த கவர்ச்சியுள்ள கவர்ச்சிக்காரர்களில் சிலரான அவர்கள், சின்னச்சின்ன விளையாட்டுப் புனித வண்டுகள், சூஃபி சாவிக்கொத்துச் சங்கிலிகள், (சூஃபி, கூஃபு, சியோப்ஸ் என்றெல்லாம் அழைக்கப்படும் ஒரு அரசர் அல்லது பார்ரோ எகிப்தை கி.மு.2589 – கி.மு.2566 வரை ஆண்டதாகவும் அவர் தான் உலக அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படும் கீஸா பிரமிடுகளைக் கட்டுவித்தவர் என்றும் நம்பப்படுகிறது. அவரது உருவம் பொறித்த சங்கிலிகள்), நெகிழிக் காலணிகள் என ஏதாவது ஒன்றை என் தலையில் கட்ட முயற்சித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பத்துப் பன்னிரண்டு மொழிகளில் இருபது வார்த்தைகளாவது பேசினார்கள்; என்னிடம் ஜெர்மன், ஸ்பானிஷ். இத்தாலி மற்றும் ஆங்கிலத்தில் பேசமுயன்றனர். நான் வாய்பேசாப்பாசாங்கில், வேண்டாமென்றேன். அவர்களுக்கு ஃபின்னிஷ் மொழி தெரிந்திருக்காதென்ற நம்பிக்கையில் ‘பின்லாந்து’ எனச் சொல்லும் வழக்கத்தை, மேற்கொண்டேன்.   ஒருவன்  ‘குதிரை சவாரி போகலாமா’ என அமெரிக்க ஆங்கிலத்தில் கேட்கும்வரை அப்படித்தான் இருந்தேன். அவன் ‘ர்’ எழுத்தை அப்படியொரு ஆபாசமாகக் கொக்கி போட்டு இழுத்தான். உண்மையில் அவர்கள் புத்திசாலியான வேசைமகன்கள். நான் ஏற்கெனவே அதிகபட்சச் செலவில் ஒரு சிறிய ஒட்டகச்சவாரி செய்திருந்தேன். அது ஒன்றுக்கும் உதவாததாக இருந்தது. நிதானமான நடைக்கு மேலான வேகத்தில் நான் ஒருபோதும் குதிரையை ஓட்டியதில்லையென்றாலும், நான் உண்மையில் குதிரை சவாரியை அப்போது விரும்பவில்லை. ஆனாலும் அவனோடு நான் நடந்தேன்.

‘’ பாலைவனத்தின் ஊடாக’’ என்று அவன், ஸ்விஸ் நாட்டு முதியவர்களை இறக்கிக்கொண்டிருந்த ஒரு வெள்ளிநிறச் சுற்றுலாப் பேருந்தைக் கடந்து, எனக்கு வழிகாட்டினான். நான் அவனைத் தொடர்ந்தேன். ‘’ நாம் போய்க் குதிரையை எடுப்போம். நாம் சிவப்புப் பிரமிடுக்கு சவாரி போவோம்’’ என்றான், அவன். நான் அவனைத் தொடர்ந்தேன். கடைசியாக, நான் கேட்காத கேள்விக்குப் பதிலாக, ‘’ உங்கள் குதிரையை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்.’’ என்றான்.

அந்தச் சிவப்புப் பிரமிடு தற்போதுதான் மீண்டும் திறந்ததாக, அல்லது திறக்கப்படவிருப்பதாகக் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் அதை ஏன் சிவப்பு என அழைக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. பாலையின் ஊடாகக் குதிரைச் சவாரி செய்ய நான் விரும்பினேன். இலேசான தவிட்டு நிறப் பற்களும் விரிந்த கண்களும் காவல் மீசையுமாக இருந்த அந்த ஆள் என்னைக் கொல்ல முயற்சிப்பானா என்று நான் தெரிந்துகொள்ள வேண்டும். என்னைக் கொல்ல விரும்பும் எகிப்தியர்கள் ஏகப்பட்டவர்கள் இருந்தார்கள். நான் சாகவேண்டுமென விரும்பிய யாருடனும் ஏதாவது ஒரு வழியில் இணைந்துகொள்ள நான் நிச்சயமாகத் தயாராக இருந்தேன். நான் தனியாக, அசட்டையாக, அதேநேரத்தில் எதையும் ஏற்றுக்கொள்ளும் மனநிலையில், ஆனால் சீக்கிரமே வெகுண்டெழுபவனாகவும் இருந்தேன். அப்போது நல்ல அழகிய நாட்களாக, நிகழ்பவை எல்லாமே மின்சாரம்போல் அதிர்ச்சியூட்டுவதாக இருந்தன. எகிப்தில் நான் பலராலும் கவனிக்கப்பட்டேன்; சிலர் ஊளையிட்டு உமிழ்ந்தார்கள்; மற்றவர்கள் அணைத்துக் கொண்டனர். ஒரு நாள், பாலத்தின் அடியில் வசிக்கும் நல்ல உடையணிந்த ஒருவர் எனக்கு இலவசமாக கரும்புச்சாறு தந்தார்; அமெரிக்க உறைவிடப் பள்ளி ஒன்றில் நான் ஆசிரியராக வேண்டுமென அவர் விரும்பினார். அவருக்கு என்னால் உதவ முடியாது. ஆனால் அது என்னால் நிச்சயமாக முடியுமென்று மக்கள் கூட்டம் நிறைந்த கெய்ரோவில், பழச்சாற்றுக் கடையின் முன்பு எல்லோரும் என்னை வெறுமையாக நோக்கிக் கொண்டிருக்கையில் என்னோடு உரக்கப்பேசிக்கொண்டிருந்தார். நான் அங்கே ஒரு நட்சத்திரமாக, வேற்று மதத்தினனாக, ஒரு பகை மனிதனாக, ஒரு பொருட்டாகக் கருதப்படாதவனாக இருந்தேன்.

கீஸேயில் அந்தக் குதிரைக்காரனுடன் – அவனிடம் எந்த வாடையுமில்லை – சுற்றுலாப் பயணிகள், பேருந்துகள், அனைத்துக்கும் அப்பால் பீடபூமியிலிருந்தும் இறங்கிக்கொண்டிருந்தேன். கடினப் பெரு மணல் மென்மணலாகியது. தரைக்கும் கீழே ஒரு குகையிலிருந்த ஒரு பழங்கால நபரைக் கடக்கும்போது, அவர் புகழ்பெற்ற நபரென்றும்,  அந்தக்குகையின் உரிமையாளரென்றும், அதனால் அவருக்கு `பகஷீஸ்` ஏதாவது தருமாறும் எனக்குச் சொல்லப்பட்டது. நான் அவருக்கு ஒரு டாலர் தந்தேன். குதிரைக்காரனும் நானும் தொடர்ந்து ஒரு மைல் தூரம் நடந்து பாலைவனம் ஒரு சாலையைச் சந்திக்கும் இடத்திற்கு வந்தபோது அவன் அவனுடைய கூட்டாளியை, அணிந்திருந்த நைந்துபோன சட்டையிலிருந்தும் வெடித்துவிடுவது போல் பருத்திருந்த அந்த மனிதனை அறிமுகப்படுத்தினான். அவனிடம் இரண்டு அரபுக் குதிரைகள் கறுப்பு நிறத்தில் இருந்தன.

அந்த இரண்டில் சிறிய குதிரை மீது நான் ஏறிக்கொள்ள அவர்கள் உதவி செய்தார்கள். அந்த மிருகம் எப்போதும் சுறுசுறுப்பாக ஆனால் அமைதியற்றிருந்தது. அதன் பிடரி மயிர் வியர்வையில் ஊறிச் சொதசொதவென்றிருந்தது. நான் அதற்கு முன்பு ஒரே ஒரு முறை மட்டுமே, அதுவும் சாலையோர நான்காவது ஜூலைக் கண்காட்சியின் போது, பாதி போதையில் குதிரையிலேறி நடைபாதையைச் சுற்றி ஒரே ஒரு சுற்று மட்டும் நடந்திருக்கிறேன் என்ற விவரத்தை அவர்களுக்குச் சொல்லவில்லை. அப்போது நான் என்னை ஒரு புதைபொருள் ஆராய்ச்சியாளராக எண்ணிக்கொண்டு அரிஜோனாவில் டைனோசர் எலும்புகளைக் கண்டுபிடிக்க முயன்றுகொண்டிருந்தேன். நான் ஏன் அப்படிச் செய்துகொண்டிருந்தேனென்று இப்போதும் எனக்குத் தெரியவில்லை.

‘’ஹிஷாம்’’ என்ற குதிரைக்காரன், அவனுடைய கைப்பெருவிரலால் மார்புக்குழியில் சுட்டிச் சுட்டி குத்திக்கொண்டான். நான் தலையாட்டினேன்.

நான் அந்தச் சிறிய கறுப்புக் குதிரையில் அமர்ந்தேன். நாங்கள் அந்தப் பருத்த குண்டு மனிதனை  விட்டுப் புறப்பட்டோம். ஹிஷாமும் நானும் புதிதாகப் பாவப்பட்டிருந்த அந்தக் கிராமியச் சாலையில் பண்ணைகளைக் கடந்து ஐந்து மைல் தூரத்துக்கு நிதானமாகத் துள்ளுநடையில் சென்றோம். வாடகை வண்டிகள் ஒலிப்பான்களை உரத்து ஒலித்துக்கொண்டு எங்களை விரைந்து கடந்தன. கெய்ரோவில் எப்போதும் வாகன ஒலிப்பான்களின் சப்தமே! ஓட்டுநர்கள் இடது கையாலேயே நன்கு ஓட்டிக்கொண்டு வலதுகையால் ஒலிப்பான்களில் அவர்களது உணர்வுகளின் ஒவ்வொரு நிலையையும் வெளிப்படுத்த முடிந்தது. நான் அமர்ந்திருந்த சேணம் சிறியதாக, எளியதாக இருந்தது. அது குதிரையில் எவ்வாறு பொருத்தப்பட்டுள்ளதென்றும் நான் எவ்வாறு அதனோடு இணைக்கப்பட்டுள்ளேன் என்றும் சிறிதுநேரம் காட்சிப்படுத்த முனைந்தேன். அது குதிரையின் ஒவ்வொரு எலும்பையும் தசையையும் குருத்தெலும்புப் பாளங்களையும் ஒருசேரக் கட்டுப்படுத்துவதை என்னால் உணர முடிந்தது. நான் அதன் கழுத்தை ஒரு அபிமானத்தோடு தட்டிக் கொடுத்தபோது அது என் கையை உதறித் தள்ளியது. அதற்கு என் மீது ஆர்வமில்லை.

நாங்கள் சாலையிலிருந்தும் திரும்பி ஒரு ஒடுக்கமான சந்தைக் குறுக்காகக் கடந்தபோது முடிவேயில்லாத பாலை எங்கள் முன் விரிந்தது. அதன் மாபெரும் கம்பீரத்தையும் இணங்கவைக்கும் தன்மையையும் சந்தேகப்பட்டிருந்த நான் அப்போது ஒரு வேசைமகனைப் போல் உணர்ந்தேன். அதன் மீது கால் வைக்கவே எனக்கு வெட்கமாக இருந்தது; ஒன்றன் மீது ஒன்றான வெல்வெட் அடுக்குகளால் அப்படியொரு கவனமாக அது உருவாக்கப்பட்டிருந்தது.

மணலில் குதிரையின் முதல் காலடி பட்டதுமே ஹிஷாம், ‘’ யெஸ்’’ என்றான். நான் தலையாட்டினேன்.

அப்படியே என் குதிரையைச் சவுக்காலடித்து, அவன் குதிரையைக் கத்தி விரட்டினான். சஹாராவில் ஒரு நான்குமாடிக் கட்டிட உயரத்துக்கிருந்த மணல் குன்றின் உச்சி நோக்கி நாங்கள் நான்கு கால் பாய்ச்சலில் விரைந்து கொண்டிருந்தோம்.

நான் நான்கு கால் பாய்ச்சலில் முன்னர் எப்போதும் சென்றிருந்ததே இல்லை. எப்படிச்  சவாரி செய்ய வேண்டுமென்றும் எனக்கு எதுவும் தெரியாது. என் குதிரையோ பறந்து கொண்டிருந்தது. அப்படிப் பறப்பதை அது விரும்பியது போலிருந்தது. முன்பு நான் ஏறியிருந்த குதிரை விடாமல் கடித்துக் கொண்டேயிருந்தது. இந்தக் குதிரை, ஓட்டத்துக்கு இசைவான ஒரு ஒழுங்கோடு தலையை முன்பக்கமாக நீட்டி, நீட்டிச் சென்றது.

நான் சேணத்தின் பின்னாக நகர்ந்து மீண்டும் முன்பக்கத்துக்கு உந்திக்கொண்டேன். லகானைக் கைக்குள்ளேய உருட்டி, இழுத்துக் குனிந்து குதிரையின் உடம்போடு ஒட்டிக்கொண்டேன். ஆனால் ஏதோ ஒன்று அல்லது எல்லாமே தவறாக இருந்தது. அனைத்துப் பக்கமும் நான் இடிபட்டுக் கொண்டிருந்தேன். அது, இத்தனை வருட அனுபவங்களில் அதிகமான வன்முறைக்குள் அகப்பட்டதாக இருந்தது.

நான் தத்தளிப்பதைக் கண்ட ஹிஷாம் வேகத்தைக் குறைத்தான். நான் நன்றியோடு நோக்கினேன். உலகம் அமைதியாக நகர்ந்தது. லகானை மீண்டும் கைக்குள் இழுத்துப் பற்றி, சேணத்தின் மீது என் இருப்பைச் சரிசெய்து, முன்பக்கமாகக் குனிந்தேன். குதிரையின் கழுத்தை மெல்லத் தட்டினேன். ஆனால் அதன் பற்களிலிருந்து நூலிழையில் தப்பித்தேன். அது என் விரல்களைத் தின்ன முயன்றுகொண்டிருந்தது. நான் மீண்டும் தயாராகிவிட்டதாக உணர்ந்தேன். இப்போது நான் கொஞ்சம் தெரிந்தவனாகிவிட்டேன். ஆனால் அடுத்த புறப்பாடு பயங்கரமாக இருந்தது; ஏனென்றால் அது அத்தனை திடீரென நிகழ்ந்தது.

‘’யெஸ்?’’ என்றான், ஹிஷாம்.

நான் தலையாட்டினேன். அவன் காட்டுமிராண்டித்தனமாக என் குதிரையை அடித்ததும் நாங்கள் தலைதெறிக்கப் பறந்தோம்.

முதலாவது மணல்குன்றின் உச்சிக்கு ஏறி முடித்தோம். அந்தக்காட்சி ஒரு வெற்றிவீரனுக்கேயானது பெருங்கடல்களுக்கு மேல் பெருங்கடல்களாகப் பல கோடி சாய்தளச்சரிவுகளாக விளிம்புகள்.. நாங்கள் குன்றிலிருந்தும் அதே பாய்ச்சலில் இறங்கி அடுத்ததில் ஏறினோம். குதிரை, அதன் வேகத்தைக் குறைக்கவே இல்லை. சேணம் என் முதுகுத்தண்டில் இடித்துத் தண்டித்துக்கொண்டேயிருந்தது. ஆசனவாய் கடுத்தது. நான் குதிரையின் ஓட்டத்தோடு ஒருமைப்பட்டிருக்கவில்லை. நான் முயற்சித்தேன்; ஆனால் நான் பின்தொடர்ந்துகொண்டிருந்த அந்தக் குண்டு மனிதனோ அல்லது வாடையற்றவனோ எந்த அசைவும் காட்டவில்லை. என்னுடைய முதுகுத் தண்டு சேணத்தின் மீது பயங்கர வேகத்தில் ஒரே விதமாக இடித்துக்கொண்டேயிருந்தது.  ஆனால், சீக்கிரமே வலி மரத்துப் போய் உணர்ச்சியற்று உருக்கி வார்த்தது போலானது., எனது ஆசனவாய் நூறு அடி உயரத்திலிருந்து என் மொத்த கனமும் தாங்க  ஒரு பளிங்குக் கல்லின் மீது மீண்டும் மீண்டும் விழுந்துகொண்டிருந்தது.

நான், ஹிஷாமிடம் நிறுத்துமாறு அல்லது வேகத்தைக் குறைக்குமாறு அல்லது என் முதுகுத்தண்டுக்கு ஓய்வு கொடுக்குமாறு சொல்லியிருக்கலாம்தான். எனக்குள் ஏதோ ஒன்று மீண்டும் சரிசெய்ய முடியாதபடி உடைந்துபோனதாக நான் நிச்சயமாக நம்பினேன். ஆனால், ஒய்வுக்கு வழியே இல்லை. என்னால் ஒரு வார்த்தை கூடப் பேசமுடியவில்லை. மூச்சினை உள்ளிழுக்க முடியாமல் தவித்தேன். சேணத்துக்கும் மேலாகத் தூக்கிக்கொண்டு உட்கார முயற்சித்தேன்; என்னால் குதிரையை நிறுத்தவும் முடியவில்லை. ஏனெனில் ஹிஷாமிடம் நான் வலிமையானவன் என்றும் எளிதில் விட்டுவிலகிவிடமாட்டேன் என்றும் காட்டிக்கொள்ள விரும்பினேன். அவன் அவ்வப்போது திரும்பி என்னை நோக்கிப் பார்வையை வீசும்போது, நான் கண்களைச் சிமிட்டி என் வலிமையையெல்லாம் திரட்டிப் புன்னகை காட்டினேன்.

சீக்கிரமே அவன் வேகத்தைக் குறைத்தான். சில நிமிடங்களுக்கு நிதான நடையிலேயே சென்றோம். என் முதுகுத்தண்டின் மீதான இடி நின்றது. வலி குறைந்தது. நான் மிகுந்த நன்றியோடு நோக்கினேன். எவ்வளவு முடியுமோ அவ்ளவுக்கு மூச்சுக் காற்றை உள்வாங்கினேன்.

ஹிஷாம், ‘’ யெஸ்’’ என்றான்.

நான் தலையாட்டினேன்.

அவன் என் குதிரையை மீண்டும் அடித்தான், நாங்கள் நான்குகால்களில் பாய்ந்தோம். வலி மீண்டும் தொடங்கியது, முன்னைவிடவும் அதிகமாகப் புதியபுதிய இடங்களில் எங்கெல்லாமோ சுருட்டிச் சுருட்டி  இழுத்து இடுப்பெலும்புகளில், அக்குள்களில், கழுத்தில், என்று புதியதாக வலி எழும்பியது. புதிதான இந்த வேதனையின் தன்மையை, உள்ளுக்குள்ளிருந்து வேலைசெய்யும் இந்தச் சதியை நான் புரிந்துகொண்டு ஒருவிதத்தில் அதை மகிழ்ச்சியாக எடுத்துக்கொண்டிருப்பேன்; ஆனால் அதன் திடீர்த் தாக்குல் என்னை அதிலிருந்தும் நான் தேவையான தூரத்துக்கு விலகுவதைத் தடுத்துவிட்டது.

இந்த எகிப்தியக் கிறுக்கனுக்கு ஈடாக என்னால் சவாரி செய்யமுடியுமென நான் நிரூபிக்க வேண்டிய தேவை எனக்கிருந்தது. இங்கே நாங்கள் இருவரும் சமமென்கிறபோது, நான் வேதனையை விழுங்கித்தான் தீரவேண்டும். நான் தண்டிக்கப்படலாம்; நான் அந்தத் தண்டனையை எதிர்பார்த்தேன்; அவன் விரும்பிய அளவுக்கு, எவ்வளவு நீண்ட நேரத் தண்டனை வழங்கினாலும், என்னால் அதைத் தாக்குப்பிடிக்க முடியும். நல்லதான அல்லது சரியற்ற நூறு காரணங்களுக்காக நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் வெறுத்தாலும் சகாராவின் குறுக்காக நாங்கள் இருவரும் சேர்ந்தே சவாரி செய்ய முடியும். ஆயிரக்கணக்கான வருடங்களாகத் தொடரும் சங்கிலித்தொடர்ச்சியில் நானும் ஒரு கண்ணிதான். எதுவுமே மாறிவிடவில்லை. எனக்கு ஏனோ இது சிரிப்பை வரவழைத்தது. வரலாற்றின் எந்தக் கட்டத்திலும் யாரும் செய்திருக்கக்கூடியதைப் போலவே நானும், சவாரி செய்தேன். ஏதோ நானும் அவனும் மணலும் குதிரையும் சேணமும் தான் என்பது போல – என்னிடம் வேறெதுவுமில்லை பித்தான்-திறப்பு வெள்ளைச் சட்டையும் அரைக் காற்சட்டையும் காலணிகளும் – கூடவே யேசு, நாம் எவ்வளவு தான் வெறுத்தாலும், நமக்கிடையேயான இடைவெளி எவ்வளவுதான் தவறாக இருந்தாலும், நாம்தான் உண்மையிலேயே உயரப் பறக்கிறோம்.

நான் மேலும் கவனித்துக்கொண்டிருந்தேன். குதிரையின் குளம்புகள் மணலைப் பறித்தன. குதிரை சுவாசத்தை இழுத்தது. நானும் மூச்சை இழுத்தேன். பிடரி மயிர் என் கைகளில் அடித்தது. என் கால்கள் முழுதுமாக மணல் பரந்து தெறித்தது. வெறுமையான என் கரண்டைக் காலில் துப்பியபடியே அந்த மனிதன் குதிரையோடு எப்படி இயங்குகிறானென நான் கவனித்துக் கொண்டிருந்தேன். குதிரை அதன் முழு வேகப் பாய்ச்சலில் பறந்துகொண்டிருக்க, இருபது நிமிடங்கள் தொடர்ந்து கிடைத்த இடிக்குப் பின்னால் ஏதோ ஓரிடத்தில் நான் கற்றுக்கொண்டேன். குதிரை என்னைத் தூக்கித்தூக்கிப் போடுவதை அனுமதிக்கும்போதே, ஒவ்வொரு முறையும் அப்படித் தூக்கிப்போடும் உயரத்தைக் குறைக்கும் நம்பிக்கையில் சேணத்துக்கு மேலாகத் தூக்கி உட்கார முயற்சித்துக்கொண்டிருந்தேன். ஆனால் வலியை மொத்தமாகவே இல்லாமல் செய்வதற்கான வழிகள் இருந்தன.

நான் கற்றுக் கொண்டேன். குதிரையின் ஓட்டத்தோடு இசைந்து இயங்கினேன். கடைசியாக அப்படி அந்தப் பாழாய்ப் போன குதிரையோடு முழுச் சமரசத்தில் கூட்டணியாகத் தலையை முன்பக்கமாக நீட்டிநீட்டி அசைத்துக்கொண்டு இசைவாக இயங்கத் தொடங்கியதும் வலி போய்விட்டது. குதிரையோடு குதிரையாகத் தாழ்ந்து, என் தலை அதன் பிடரிமயிருக்குள் மூழ்கியிருக்குமாறு பொருந்தி, நான் அந்தத் தெய்வீகமான முட்டாள் குதிரையை ஓட்டிக்கொண்டிருந்தேன். மேலும் நான் –

நான் மேற்கொண்டு எவ்விதக் கஷ்டமும் இல்லாமல் தொடர்வதை ஹிஷாம் கவனித்தான். நாங்கள் மேலும் வேகமாக ஓட்டினோம். தலைக்குமேலே முழு வெயிலோடு நாங்கள் சவாரி செய்தோம். ஒரு பெரிய காற்று எங்கள் முகத்தில் அடித்தபோது. இந்த உலகம் தாங்கிக்கொண்ட அத்தனை பெரிய போர்ப்படைகளிலும் நானும் இருந்து போராடியதாக உணர்ந்தேன். நீங்கள் கொல்ல விரும்பிய ஒரு மனிதனை எப்படி நேசிப்பீர்களோ அப்படியேதான், நான் பின்தொடர்ந்து சென்ற அந்த மனிதனை, நானும் நேசித்தேன். அவ்வாறு நான் அவன் மீது முழுமையான நேசம் கொண்டிருந்த நேரத்தில், அங்கிருந்த மணற்குன்றுகளிலேயே கொஞ்சம் முழுமை குறைந்த உச்சிகொண்டிருந்த ஒன்றுக்குள்ளிருந்து பிரமிடு ஒன்று எழும்பியது.

சிவப்புப் பிரமிடில் நாங்கள் அதன் பக்கவாட்டில் ஏறினோம். அதன் ஒவ்வொரு படியும் ஐந்து அடி உயரமுள்ள மிகப்பெரிய சதுரக் கற்கள்; ஒவ்வொன்றிலும் எம்பி எம்பி ஏறினோம். ஐம்பதடி உயரத்தில், நுழைவாயிலில் நின்ற அந்த மனிதன் பிரமிடின் நடுவில் அமைந்திருந்த உள் அறைக்குச் செல்லும் ஒரு சிறிய கறுப்பு நுழைவழியைச் சைகை மூலம் எனக்குக் காட்டினான். அவனைப் பின்தொடர்ந்து நான் இறங்கி உட்சென்றேன். வழி செங்குத்துச் சரிவாக, ஒடுங்கி இருட்டும், ஈரக் கசிவுமாக, எங்களைவிடப் பெருத்தவர்களுக்கானால் செல்லவே முடியாதபடிச் சிறியதாக இருந்தது. கீழே செல்வதற்கு வசதியாக ஒரு கயிறு தொங்கியது. நான் அதைப் பிடித்துக்கொண்டு இறங்கினேன்; அங்கே படிக்கட்டுகள் இல்லை. உள்ளே சுண்ணாம்பு நாற்றம் வீசியது. காற்று அடர்த்தியாக உள்ளிழுக்கக் கடினமாக இருந்தது. எனக்கு முன்னால் அந்த மனிதன் கையில் பிடித்திருந்த கைவிளக்கு ஒரு துண்டு வெளிச்சத்தை இருளிலிருந்தும் வெட்டியெடுத்திருந்தது.

சரிவின் அடிப்பகுதியில் நாங்கள் நின்றோம். இன்னொரு அறைவழிக்குத் திரும்பிச் சமதளத்தில் சென்று விரைவிலேயே ஒரு வாயிலைக் குனிந்து கடந்து, ஒரு கல்லாலான பெட்டிக்குள்ளே சென்றோம். அந்த அறை முழுக்க முழுக்க எந்த அலங்காரமும் இல்லாமல் உயர்ந்த கூரையுடன் மிகச் சரியான ஜியோமிதி அளவுகளில் இருந்தது. ஹிஷாம் அளவற்ற பெருமை பூரிக்க, அறையைச் சுற்றிக் கைகளை வீசி நின்றான். அவன் கைவிளக்கை அறையின் ஒருபக்கமாகக் கொண்டு சென்று ஒரு நீளமான கற்பெட்டியைக் காட்டி, ‘’ அரசரின் வீடு ‘’ என்றான். அது ஒரு கல்லறை. அதைத் தவிர்த்தால் அந்த அறை காலிதான்; ஏதேனும் அடையாளமோ, ஆபரணங்களோ, கட்டிட வேலைப்பாடுகளோ இல்லை. இதுபோன்ற அறைகள் பல நூற்றாண்டுகளாகத் தொடர்ச்சியாக முடிவேயின்றிக் கொள்ளையடிக்கப்பட்டு, இப்போது மிச்சமிருப்பது, வழவழப்பான வெற்றுச் சுவர்கள் மட்டுமே எவ்வித அடையாளங்களும் இல்லாமல் –

உள்ளிருந்த காற்று தூசி நிறைந்து கனத்திருந்தது. அங்கே நீண்ட நேரம் தங்கினால், நாங்கள் மூச்சமுட்டிச் செத்துவிடுவோமென நான் உணர்ந்தேன். அவன் என்னைக் கொல்ல முயல்வானா? கொள்ளையடிக்க? நாங்கள் தனியாகத்தான் இருந்தோம். நான் கவலைப்படாதிருந்தேன். அதற்குக் காரணங்கள் ஏதும் இல்லை. நாங்கள் அறைக்குள்ளேயே ஒருவரையொருவர் உறுத்து நோக்கிக் கொண்டோம். நாங்கள் இருந்த பெட்டி எங்களில் யாரையும் கவர்ந்து ஆழமான எண்ணம் எதையும் தோற்றுவித்துவிடவில்லை.  இருந்தபோதிலும் அந்த நிமிடம் இருவருமே மிகுந்த ஆவலும் பயமும் புனிதமும் ஆச்சரியமும் கலந்த ஒரு மரியாதை உணர்வோடிருப்பதாகப் பாசாங்கு செய்தோம். இந்த அறைகளுக்குள் அதிகமாக எதையும் எதிர்பார்க்க முடியாதென எனக்குத் தெரியுமென்றாலும், எனக்கு ஏமாற்றமாக இருந்தது. அந்த இடம் ஒருகாலத்தில் எப்படி இருந்திருக்குமென எனக்கு விரிவாகச் சொல்லத் தெரியவில்லை; ஆனால் அது எப்போதாவது ஏதாவதொன்றாக இருந்திருக்குமென்பதற்கு எந்தச் சான்றும் அங்கு இல்லை; ஆனால் இது, இந்த மணல் கோபுரம், இதன் மெய்மைத்தோற்றம் என்னைத் துயரம் கொள்ள வைத்தது. வெளித் தோற்றம் அத்தனை மாட்சிமையோடு, ஆனால் உட்புறம் அத்தனை வெறுமை. ஹிஷாம் விளக்கை அவன் முகத்துக்கு அருகாகப் பிடித்துக்கொண்டு என்னைக் கவனித்தான். அந்தக் குறைந்த வெளிச்சத்தில் அவன் என்னைத் தான் பார்த்தானா என்று எனக்கு நிச்சயமாகத் தெரியவில்லை.

அவன் உரத்துப் பெருமூச்செறிந்தான். அவன் முகத்தில் உணர்ச்சிகளின் ஊடான அசைவுகளில்  – செருக்கு, தன்முனைப்பு, சலிப்பு, எரிச்சல்.  நான் அங்கே இருக்க விரும்பும் வரை அவனும் இருந்தே ஆக வேண்டிய கடப்பாட்டு நிலை. நான் அங்கே மேலும் தாமதிக்க விரும்பவில்லை. ஆனால், மிகச்சிறிய அளவென்றாலும் கூட அவன் இம்சையைக் காண எனக்குப் பிடித்திருந்தது.

பிரமிடு எதன் வழியாக வானத்தைக் குடித்துக் கொண்டிருந்ததோ அந்தக் குறுகியச் சன்னல் ஒளியை நோக்கி நாங்கள் படிகளில் ஏறினோம். வெளியே வந்து மீண்டும் தரைப் பகுதியை அடைந்ததும் அவன் சொன்னான், ‘’ அங்கே இன்னொன்று இருக்கிறது.’’ நான் அதன் பெயரைக் கேட்டேன். அதை வளைந்த பிரமிடு என்பார்கள் என்று அவன் சொன்னான்.

நாங்கள் மீண்டும் குதிரைகளின் மீது அமர்ந்தோம்.

‘’ யெஸ்? ’’ எனக் கேட்டான், அவன்.

நான் தலையாட்டினேன். அவன் உள்ளங்கையால் என் குதிரையை ஓங்கி அடித்தான். சீக்கிரமே வெள்ளிநிற வானத்திற்கெதிராக ஒரு கறுப்பு ஆவியாக மாறிப்போன அவனை நான் பின்தொடர்ந்தேன். எங்கள் குதிரைகள் கோபத்திலிருந்தன; அவை மூச்சிறைத்து நீரியல் வெடிப்புகளாக நுரை கக்கின. ஹிஷாமுக்கு நான் எவ்வளவுதான் பணம் கொடுப்பதாக இருந்தாலும், அதற்காக மட்டுமே அவன் இதைச் செய்யவில்லையென நான் இப்போது உணரத்தொடங்கினேன். சிவப்புப் பிரமிடுக்குப் பிறகு எந்தவொரு நடைக்கும் என்னோடு கூலி பேச வேண்டுமேயென அவன் கவலைகொள்ளவில்லை. நாங்கள் நிகழ்த்திக் கொண்டிருப்பது வேறு ஏதோ ஒன்று; அதை நாங்கள் இருவருமே அறிந்திருந்தோம். அவன் என்னைக் கொல்லமாட்டான் என்பது எனக்கு இப்போது உறுதியானது. அவனுக்கு அப்படியொரு திட்டமே இல்லை; எனக்கென்ன திட்டமோ அதற்கும் அதிகமாக அவனிடம் எதுவுமில்லை.

ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, நாங்கள் வளைந்த பிரமிடில் இருந்தோம். இது பெரியது; ஆனால் பாதுகாப்பற்றது. போதாக்குறைக்கு வெளிச்சம் வேறு போய்விட்டது. நாங்கள் அதன் நுழைவாயிலுக்கு ஏறி உள்ளே இறங்கினோம். சிறிது நேரத்தில் மீண்டும் ஒரு புனித அறைக்குள் நாங்கள் இருப்பதை உணர்ந்தோம். அது இப்போது வெறுமையாக இருந்தாலும் அது ஒரு அரசியை அல்லது பார்ரோவை உள்ளே வைத்திருந்திருக்கும். அந்த மனிதனும் நானும் அந்தக் கனத்த காற்றைச் சுவாசித்துக்கொண்டு ஒருவர் மீது ஒருவருக்கு அல்லது எதன்மீதும் எவ்வித நேசமும் இல்லாமல் ஒருவரையொருவர் உறுத்து நோக்கினோம்.

என்ன எதிர்பார்த்தாய்? அவன் கண்கள் என்னைக் கேட்டன.

ஒரு மூட்டைப்பூச்சியைப் போலச் சாகமாட்டேனென்பதை அறிய விரும்பியதாக நான் சொன்னேன்.

ஒரு பேச்சுக்காகக் கொஞ்சம் வருத்தம் தெரிவித்தான், அவன். இந்த மனிதர்கள் இறந்தனர்; தைலங்கள்  தேய்த்துப் பாதுகாக்கப்பட்டனர்; திருடப்பட்டுவிட்டனர். அவர்களை மீண்டும் மீண்டும் மாற்றி மாற்றிப் பலரும் விற்றனர். அவர்களின் ஒவ்வொன்றையும், அவர்களின் எலும்புகள் முதற்கொண்டு எல்லாவற்றையும் தங்கத்துக்காக விற்றுவிட்டனர். நீங்களும் அப்படித்தான் இருந்திருப்பீர்கள்; அதற்கு மேலானதாக இருந்திருக்கப் போவதில்லை.

இந்தப் பிரமிடுகளுக்குள் செல்வதற்கு எந்தக் காரணமும் இல்லை என்றேன்.

இல்லை, உண்மையிலேயே இல்லைதான், என்றான் அவன்.

நாம் அதற்குள்ளே உட்புறத்தில் கற்றுக்கொள்ள எதுவுமேயில்லை, என்றேன் நான்.

எதுவுமில்லையென்று அவன் சொன்னான்.

இந்த அரசர்கள் நம்பிக்கையோடு இருந்திருந்தால், ஏன், இந்தக் கனத்த கற்களுக்குக் கீழே, இந்தப் பகட்டற்ற பெட்டிகளுக்குள் தங்களை மறைத்துக்கொள்ள வேண்டும்?

ஹா! ஆனால், அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்கவில்லை, என்றான் அவன்.

இது அதைத்தான் விளக்கமாய்ச் சொல்கிறதென்றேன், நான்.

நாங்கள் அங்கிருந்து புறப்பட்டு, பிரமிடின் வெளியில் அடிப்பக்கம் தரைக்கு வந்து மீண்டும் நின்றோம். நாங்கள் குதிரைகளில் ஏறியமர்ந்த போது இருட்டிவிட்டது. காற்றை முழுதும் அனுபவிப்பதற்காகக் கைகளைச் சுற்றிலுமாக வீசி ஊஞ்சலாட்டினேன்.

‘’வெளிப்புறம் இப்போது அருமை’’ என்றேன், நான்.

அவன் புன்னகைத்தான்.

‘’ அங்கே இன்னொன்று இருக்கிறது.’’ என்றான், அவன்.

‘’ எனக்கு அங்கே போக வேண்டும்’’ என்றேன், நான்.

‘’யெஸ்?’’

நான் தலையசைத்தேன். அவன் என் குதிரையை அடித்தான். நாங்கள் பறந்தோம்.

டேவ் எக்கர்ஸ் : சான் பிரான்சிஸ்கோவில் வசிக்கும் அமெரிக்க எழுத்தாளர், இதழாசிரியர், பதிப்பாளர். 12.03.1970ல் பிறந்தவர். இவரது தாயார் இரைப்பைப் புற்று நோயாலும், தந்தை நுரையீரல் புற்றுநோயாலும் 1991ல் மரணமடைந்தனர். கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட வேண்டியதாயிற்று. அவரது எட்டு வயதுத் தம்பியை அவரே வளர்த்து ஆளாக்கினார். அவரது சொந்த அனுபவங்களையே வாழ்க்கைக் குறிப்பாகச் சிறிது புனைவும் கலந்து A HEART BREAKING WORK OF STAGGERING GENIUS என்ற பெயரில் 2000 ல் வெளியிட்டார். அது அந்த ஆண்டில் அதிக விற்பனை படைத்துச் சாதனை புரிந்தது. மேலும் அந்த ஆண்டுக்குரிய புலிட்சர் பரிசு தேர்வுப்பட்டியலிலும் இடம் பெற்றது. MIGHT என்னும் இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தி வருகிறார். 2002ல் அவரது முதல் நாவல் You Shall Know Our Velocity வெளியானது. அவரது சிறுகதைகள் How We Are Hungry என்ற பெயரில் தொகுப்பாக வெளிவந்தது. 2005ல் Surviving Justice : America`s wrongfully convicted and exonerated என்ற பெயரில் மரண தண்டனை விதிக்கப்பட்டுப் பின்னர் முழுவதுமாகக் குற்றத்திலிருந்தும் விடுவிக்கப்பட்டவர்களின் பேட்டிகளை மற்றொரு மருத்துவருடன் சேர்ந்து வெளியிட்டார். அதே ஆண்டில் பிரௌன் பல்கலைக்கழகம் அவருக்கு டாக்டர் பட்டம் (Honorary Doctor of Letters) வழங்கி கவுரவித்தது. அவரது அடுத்த நாவல் What is What : The Autobiography of Valentino Achack Deng 2006 ல் வெளியானது. அது அந்த ஆண்டின் புனைவுகளுக்கான தேசிய புத்தகத் திறனாய்வுப் பரிசுக்கான தேர்வுப் பட்டியலிலும் இடம் பிடித்தது. ஆறு முதல் பதினெட்டு வயதானவர்களுக்கு எழுத்து மற்றும் பயிற்சிகள் அளிப்பதற்காக லாப நோக்கமற்ற நிறுவனம் ஒன்றை 826 Valencia என்ற பெயரில் ஏற்படுத்தி நடத்திவருகிறார். தனிநபர்களின் அசாதாரணச் சாதனைகளுக்காக வழங்கப்படும் Heinz award 2,50,000 டாலர்களுடன் 2007 செப்டம்பரில் அவருக்கு வழங்கப்பட்டது. 2008 ல் உட்னே ரீடர் இதழ் அவரை ‘’ உலகை மாற்றும் 50 திறமையாளர்கள்’’ பட்டியலில் ஒருவராகச் சேர்த்தது.

 

 

•••

 

தற்போது மொழிபெயர்க்கப்பட்டுள்ள அவரது சிறுகதை How we are Hungry என்ற தொகுப்பில்     “ ANOTHER” என்ற பெயரிலுள்ளது. எகிப்திய, பொதுவாக அரபியப் பகுதி முழுவதற்குமே அமெரிக்க அரசாங்க உறவுகள் சீர்கெட்ட நிலையில் அமெரிக்க இளைஞன் ஒருவன் எகிப்து நாட்டுக்குச் சென்று கெய்ரோவில் பிரமிடுகளைப் பார்வையிட வாடகைக் குதிரையில் குதிரைக் காரன் ஒருவனுடன் செல்கிறான். அந்த எகிப்தியக் குதிரைக்காரன் தன்னைக் கொல்ல விரும்புவான் என்ற அச்ச உணர்வோடு எதிர்மறை மனநிலையில் அமெரிக்க இளைஞன் பயணிக்கிறான். அந்த மனநிலையிலிருந்து படிப்படியாக இருவரும் ஒரே அலைவரிசைக்கு மாறுவதுதான் கதை. குதிரைச் சவாரி, சகாரா பாலைவனம், பிரமிடுகள் குறித்த படைப்பாளியின் பதிவுகள் ஆர்வமூட்டுபவை.

Naved Khan

1:04pm Oct 30

The Great Pyramids were built between 2650-2500. It is said that they were a tomb of Khufu. They are located in Giza, Egypt. The largest pyramid is 756 feet long on each side and 450 feet high. It is made up of 2,300,000 blocks, that each weigh two and a half tons. It took 20 years for 100,000 slaves to build it. It required 112 men to lift each separate block.
Men that were great thieves wanted to get the hidden treasure that was hidden in the tomb.They found a small square room called the Queen’s Chamber. It is a passageway. The Grand Gallery is another passageway to the King’s Chamber. It is 34 feet long, 17 feet wide, and 19 feet tall. After not finding the treasure, the men got angry and tried to destroy the tomb but stopped after taking out 30 feet of stone.
No one knows what happened to King Khufu and his treasure.
Some people think that it was just an observatory, but we can’t be quite sure because when people stated that, it was already over 2,000 years old. An astronomer observed a descending passageway above the Grand Gallery that could have been used for mapping the sky.
Now, except for parts of the Mausoleum and the Temple of Artemis, the Great Pyramids are the only things left standing of the 7 Ancient Wonders.

,

மொழிபெயர்ப்பு சிறுகதை- இருபதாவது பிறந்தநாளில் அவள் – ஹாருகி முரகாமி – தமிழில் ச.ஆறுமுகம்

இருபதாவது பிறந்தநாளில் அவள்

ஹாருகி முரகாமி

 

 

 

 

 

 

ஜப்பான் மொழியிலிருந்து ஆங்கிலத்துக்குப் பெயர்ப்பு : ஜே ரூபின்.

 

(திரு. ஹாருகி முரகாமி, பிறந்தநாள் கருவை அடிப்படையாகக் கொண்டுள்ள ஆங்கிலச் சிறுகதைகளில் அவருக்குப் பிடித்தமானவற்றைத் தொகுத்து ஜப்பானிய மொழியில் வெளியிடும் போது அவருடைய பங்களிப்பாக ஒரு கதையை ஜப்பானிய மொழியில் எழுதிச் சேர்த்துள்ளார். அந்தக்கதையை ஜே ரூபின்  Birthday Girl  என்ற பெயரில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். ஜப்பானிய மொழியில் தொகுத்ததைப் பின்னர் ஆங்கிலத்திலும் முரகாமியே பிறந்தநாள் கதைகள் என்ற பெயரில் வெளியிட்டுள்ளார். அத்தொகுப்பிலுள்ள இக்கதை அதற்கான முரகாமியின் அறிமுகத்துடன் இப்போது தமிழாக்கம் செய்யப்படுகிறது.)

 

முரகாமியின் அறிமுகம் :

உங்கள் இருபதாவது வயது பூர்த்தியான நாளில் (அல்லது இருபத்தொன்று, பல நாடுகளிலும் மிக முக்கியமான பிறந்தநாளாயிற்றே) நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்களென்று உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? என்னுடைய இருபதாவது பிறந்தநாளை நான் நன்கு ஞாபகம் வைத்திருக்கிறேன். ஜனவரி, 12, 1969 டோக்யோவில் (இப்போது அதை நம்பமுடியாவிட்டாலும்) இலேசான மேகமூட்டத்தோடு கூடிய பசுமையான ஒரு நாள். கல்லூரி விரிவுரைகள் கேட்டு முடித்தபின், ஒரு உணவு விடுதியின் பரிமாறும் பணியாளனாக மேஜைகளின் முன்பு காத்துநின்றேன். நான் அன்று விடுமுறையை விரும்பினேன். ஆனால் என் பணியைச்செய்யப் பதிலிநபர் எவரையும் கண்டுபிடிக்க இயலவில்லை. அந்தநாளில் கைகூடும் மகிழ்ச்சி, வரப்போகின்ற ஆண்டுகளுக்கு ஒரு நல்ல சகுனமாகக் (அந்தக் காலத்தில்) கருதப்பட்ட போதிலும், அந்த நாள் முடிகிறவரையிலும்கூட எனக்கு மகிழ்ச்சியாக எதுவுமே நடக்கவில்லை. என்னைப் போலவே இந்தக்கதையின் பிறந்தநாள் மங்கையும் இருபதாவது பிறந்தநாளைப் போலன்றித் தனிமையாக விடப்படுவது போலத் தோன்றுகிறாள். கதிரவன் சாய்கிறான்; மழை வேறு, பெய்யத் தொடங்கிவிட்டது. கிரேஸ் பாலீ சொல்வதைப்போல ‘’கடைசி நிமிடப் பெரும் மாற்றம்’’ ஏதேனும் அவளுக்காகக் காத்திருக்கிறதா?

 

அவளுடைய இருபதாவது பிறந்த நாளிலும் , அவள் வழக்கம் போலவே மேஜைகளின் முன் காத்துநின்றாள். அவள் எப்போதும் வெள்ளிக்கிழமைகளில் பணிசெய்பவள். ஆனால், அந்தக் குறிப்பிட்ட நாளில் ஏற்கெனவே திட்டமிட்டிருந்தபடியென்றால் அன்றைய இரவு அவளுக்குப் பணியில்லாமல் இருந்திருக்கும். இன்னொரு பகுதிநேரப் பெண் பணியாளர் அன்றைய இரவுப்பணியை மாற்றிக்கொள்ள இசைந்திருந்தார் : பின்னே பூசணிக்காய் நோச்சியையும் தீர வறுத்த கடற்பாசி உணவையும் வாடிக்கையாளர் மேஜைகளுக்குத் தடுமாறி எடுத்துச் செல்கையில், எரிச்சல்படும் சமையலரின் கூச்சலிலா இருபதாவது பிறந்தநாளைக் கொண்டாட முடியும்? ஆனால், அந்த மாற்றுப்பணியாளர் கடுமையான நீர்க்கோவையோடு, நிற்காத வயிற்றுப்போக்கும் 104 டிகிரி காய்ச்சலுமாகப் படுக்கையில் விழுந்து கிடந்தார். அதனால் கடைசிநேரத் தகவலில் அவள் வேலையைத் தொடர வேண்டியதாயிற்று.

 

மன்னிப்பு கோரிய அந்தத் திடீர் நோயாளியை இவள் சமாதானப்படுத்த முயற்சித்து, ‘’ அதற்காக நீங்கள் கவலைப் படாதீர்கள். இது என்னுடைய இருபதாவது பிறந்தநாள்தானென்றாலும் அதற்காக நான்  விசேஷமாக எதையும் திட்டமிட்டிருக்கவில்லை.’’ என்றாள்.

 

மேலும், உண்மையில் அதனால் அவளுக்கொன்றும் ஏமாற்றமில்லை. அதற்கு ஒரு காரணம், அவள் அந்த இரவில் யாரோடு இருந்திருப்பாளோ, அந்த நெருக்கமான நண்பனோடு சில நாட்களுக்கு முன்பு, கடுமையான வாக்குவாதம் செய்திருந்தாள். உயர்நிலைப் பள்ளிக் காலத்திலிருந்தே இருவரும் சேர்ந்துதான் வெளியில் சுற்றினார்கள். ஒன்றுமில்லாததிலிருந்துதான் வாக்குவாதம் தொடங்கியது. ஆனால், அதுவே எதிர்பாராத விதமாக மோசமான போட்டியாகிக் கசப்பாகப் போதும் போதுமென்ற அளவுக்கு வாய்ச்சண்டையாக நீடித்து, அவனோடிருந்த நெருக்கத்தைத் துண்டித்துக் கொள்வதென்று நிச்சயமாகிவிட்டாள். அவளுக்குள்ளிருந்த ஏதோ ஒன்று பாறையாக இறுகிக் கடைசியில் மாண்டுபோனது. அந்த வெடிப்புக்குப் பிறகு அவன் அவளைச் சந்திக்கவே இல்லை; அவளும் அவனைச் சந்திப்பதாக இல்லை.

 

அவள் வேலை செய்வது டோக்கியோவின் டோனி ரோப்பாஞ்சி மாவட்டத்திலுள்ள இத்தாலிய உணவுவிடுதிகளில் நன்கறியப்பட்ட ஒன்று. அறுபதுகளின் பிற்காலத்திலிருந்தே அது விடுதித்தொழிலைத் தொடர்ந்து செய்கிறது. அதன் சமையலும் உணவு வகைகளும் எதிர்பார்ப்பை மீறிச் சிறந்திருப்பதால் அதன் நற்பெயர் மிகவும் நியாயமானது. அதற்கு வழக்கமான வாடிக்கையாளர்கள் உண்டு. அவர்கள் எப்போதுமே ஏமாற்றப்பட்டதில்லை. உணவுக்கூடத்தில் அவசரத்தின் சிறு சுவடு கூடத் தெரியாத அளவுக்கு  அமைதியான, ஓய்வுச் சூழல் இருந்தது. அந்த விடுதி, இளைஞர் குழுக்களை மட்டுமல்ல, புகழ்பெற்ற நடிகர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட வயதான வாடிக்கையாளர்களையும் ஈர்த்தது.

 

அங்கு பரிமாறும் பணியாளர்கள் இருவர் முழுநேர அடிப்படையில் வாரத்தில் ஆறு நாட்களுக்குப் பணியாற்றினர். அவளும் இதரப் பகுதிநேரப் பணியாளர்களும் மூன்று நாட்கள் வீதம் மாற்றி மாற்றிப் பணிபுரிந்தனர். கூடவே, தள மேலாளர் ஒருவர் இருந்தார். மேலும், பதிவுகள் பராமரிக்கும் இடத்திற்கு மிகவும் மெலிந்த ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி,– அவர் அந்த விடுதி தொடங்கிய காலத்திலிருந்தே அங்கே காணப்படுகிறார் – சொல்லப்போனால், ஒரே இடத்தில் அமர்ந்து லிட்டில் டோரிட்டின் சோகம் மிக்க வயது முதிர்ந்த கதாபாத்திரம் போலத் தெரிந்தார். அவருடைய வேலைகள் இரண்டே இரண்டுதான் :வாடிக்கையாளர்களிடமிருந்து பணம் பெறுவதும் தொலைபேசிக்குப் பதிலளிப்பதும். தேவைப்படும்போது மட்டுமே பேசிய அவர் எப்போதும் கறுப்பு  ஆடையையே அணிந்திருந்தார். அவரைப்பற்றி விரும்பத்தகாத கடூரமான ஏதோ ஒன்று இருந்தது :  இரவு நேரத்தில் நீங்கள் அவரைக் கடலில் தூக்கிப்போட்டாலும் அவரை மோத வரும் எந்தப் படகையும் மூழ்கடித்துவிடுவார். (அவரா, சரியான கல்லுளி மங்கனாச்சே, மலையைக்கூட விழுங்கி ஏப்பம் விட்டுவிடுவாரே என்பது போன்ற தொடர்)

 

தள மேலாளர் அவரது நாற்பதுகளின் பிந்தைய வயதுகளில் இருக்கலாம். உயரமும் அகன்று விரிந்த தோள்களுமான உடலமைப்பு அவர் இளமையில் விளையாட்டு வீரராக இருந்திருக்க வேண்டுமென்று அமைதியாகச் சொல்கிறது; ஆனால் இப்போது தாடைகளிலும் அடிவயிற்றிலும் அதிகச் சதை பிடிக்கத் தொடங்கிவிட்டது. அவரது தலைமுடி குட்டையாகக் குத்திட்டு நிற்கும். அதுவும் உச்சந்தலையில் உதிரத் தொடங்கிவிட்டது.. மேலும் வயதாகிக்கொண்டிருக்கிற ஒரு பிரம்மச்சாரியின் வாசனை – செய்தித் தாள்களை இருமல் மருந்துப் புட்டியோடு சேர்த்து இழுப்பறையில் வைத்தது போன்றது  – அவரைப் பீடிக்கத் தொடங்கிவிட்டது. அதுபோன்ற வாசனையுள்ள பிரம்மச்சாரி மாமா ஒருவர் அவளுக்கு ஏற்கெனவே இருந்தார்.

 

மேலாளர் எப்போதும் கறுப்பு முழுநீளக் காற்சட்டையும் வெள்ளை உடுப்பும் `போ` கழுத்துப் பட்டையும் அணிந்திருப்பார். `போ` பட்டை என்றால் பொருத்திக்கொள்வதல்ல; உண்மையாகவே கையால் முடிச்சிடுகிற ஒன்று. அதைக் கண்ணாடி பார்க்காமலேயே மிகச் செம்மையாக முடிச்சிட அவரால் முடியும் என்பது அவர் தற்பெருமை கொண்டாடுகின்ற ஒன்றாக இருந்தது. அவருடைய வேலைகளை ஒவ்வொரு நாளும் திறம்படச் செய்தார். விருந்தினர்களின் வருகை மற்றும் புறப்பாடுகளை மேற்பார்வையிடுவது, முன்பதிவு அட்டவணைகளை மிகச் சரியாகப் பராமரிப்பது, வழக்கமான வாடிக்கையாளர்களைத் தெரிந்து அவர்களை இன்முறுவலோடு வரவேற்பது, ஏதாவது புகார்கள் வரப்பெற்றால் மிக்க மரியாதையோடு கேட்பது, ஒயின் வகைகள் குறித்து நிபுணத்துவக் கருத்து சொல்வது, மேஜைகளில் பரிமாறும் ஆண் மற்றும் பெண் பணியாளர்களின் வேலைகளைக் கண்காணிப்பது என்பவையெல்லாம் அவரது வேலைகளில் அடக்கம். விடுதி உரிமையாளருக்கு இரவு உணவினை நேரடியாகக் கொண்டுபோய்க் கொடுப்பதென்பது அவருடைய அன்றாடப்பணிகளில் மிகமிக முக்கியமான ஒன்றாக இருந்தது.

‘’விடுதி இருந்த அதே கட்டிடத்தின் ஆறாவது தளத்தின் ஒரு அறையில் உரிமையாளர் இருந்தார்.’’. என்றாள், அவள். ‘’ அது அவருடைய வசிப்பறையோ, அலுவலகமோ அல்லது அது மாதிரி ஏதோ ஒன்று.’’

 

எப்படியோ அவளும் நானும் இருபதாவது பிறந்த நாள் பற்றியதான பேச்சுக்கு வந்து சேர்ந்துவிட்டோம். அது எங்களுக்கு எப்படிப்பட்ட ஒரு நாளாக வந்து வாய்த்திருந்தது. அநேகமாக எல்லோருமே அவர்களின் இருபதாவது பிறந்த நாளை ஞாபகம் வைத்திருப்பார்கள். அவளுடையது பத்து வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்தது.

‘’இருந்தாலும், விடுதிக்குள் அவர் முகத்தைக் காட்டியதென்பது கிடையவே கிடையாது. அவரைப் பார்க்கிற ஒரே ஆள், மேலாளர் மட்டும்தான். உரிமையாளருக்கான இரவு உணவை அவரிடம் கொண்டு சேர்ப்பது அவருக்கே அவருக்கான, அவர் மட்டுமே செய்கிற வேலையாக இருந்தது. வேறு எந்தப் பணியாளருக்கும், உரிமையாளர், எப்படி இருப்பார் என்றுகூடத் தெரியாது.’’

 

‘’ஆக, அடிப்படையில், அந்த உரிமையாளர் அவருடைய சொந்த விடுதியிலிருந்தே ஹோம் டெலிவரி  பெற்றுக்கொண்டார்.’’

 

‘’ஆமாம். ரொம்பச் சரிதான்.’’ என்றாள், அவள். ‘’ ஒவ்வொரு இரவும் சரியாக எட்டு மணிக்கு மேலாளர் இரவு உணவை உரிமையாளர் அறைக்குக் கொண்டுபோக வேண்டும். அது விடுதியின் பரபரப்பான அலுவல் நேரம். திடீரென்று மேலாளர் காணாமல் போய்விடுவதென்பது எங்களுக்கு ஒரு பெரிய சிரமம். ஆனாலும் அதற்கு ஒரு தீர்வும் இல்லை. ஏனென்றால் எல்லாநாளும் அது அப்படித்தான் நடந்தது. விடுதிகளில் அறைப் பணிகளுக்காக உபயோகப்படும் தள்ளுவண்டி ஒன்றில் இரவு உணவை அடுக்கி வைப்பார்கள். மேலாளர் அதற்கென மரியாதை மிக்க ஒரு தோற்றத்தை முகத்தில் வரவழைத்துக் கொண்டு உணவுவண்டியை மின்னேற்றிக்குள் தள்ளிச்செல்வார்; பதினைந்து நிமிடங்களுக்குப் பிறகு வெறுங்கையோடு திரும்புவார். பிறகு ஒரு மணிநேரம் கழிந்ததும் மீண்டும் மேலே சென்று காலித்தட்டுகள், கிண்ணங்களோடு தள்ளுவண்டியை எடுத்து வருவார். ஒவ்வொரு நாளும் இப்படித்தான், கடிகாரத்தின் இயக்கம் போல. முதல் நாள் பார்த்தபோது இது எனக்கு ஒரு மாயமந்திர வித்தையாகத் தோன்றியது. ஏதோ ஒரு மதச்சடங்கு போல நிகழ்ந்தது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இருந்தாலும் கொஞ்ச நாட்களானதும் அது எனக்குப் பழகிப்போய்விட்டது; அப்புறம் அது வேறுமாதிரியாகத் தோன்றவில்லை.

உரிமையாளர் எப்போதுமே கோழிக்கறி தான் சாப்பிட்டார். செய்முறைப் பக்குவமும் உடன் உண்ணும் காய்கறிகளுந்தான் ஒவ்வொருநாளும் வேறுவேறாக இருக்கும். ஆனால், கோழிக்கறிதான், எப்போதுமே, பிரதானம். ஒரு இளம் சமையல்காரர் தினமும் ஒரே மாதிரியான வறுத்த கோழியை ஒரு வாரம் முழுவதும் எல்லா நாளிலும் அனுப்பிப் பார்த்தாராம்; உரிமையாளர் எந்தக் குறைபாடும் சொல்லவில்லையாம். அந்தச் சமையல்காரரே அதை அவளிடம் சொன்னார். ஒவ்வொரு சமையலரும் வெவ்வேறு பக்குவங்களில் சமைத்துக் காட்ட விரும்புவார் என்பது எப்போதும் உள்ளதுதான். ஒவ்வொரு புதிய சமையலரும் அவர் நினைக்கின்ற மாதிரியில் எல்லா பக்குவத்திலும் சமைக்க முயற்சிப்பது வழக்கந்தான். அவர்கள் சுவைமிக்க குழம்பு வகைகளைச் செய்வார்கள்; வெவ்வேறு முகவர்களிடமிருந்து கறியை வாங்குவார்கள்; ஆனால் அவர்களின்  முயற்சிகளுக்கெல்லாம் எந்த எதிர்வினைகளும் இல்லை. அவை கைவிடப்பட்ட குகைக்குள் எறியப்பட்ட கூழாங்கற்களாகவே ஆயின. அவர்கள் எல்லோருமே சலிப்பாகி அவரவர் முயற்சிகளைக் கைவிட்டு உண்மையிலுமே நல்ல தரமான கோழிக்கறி வகைகளை தினமும் அந்த உரிமையாளருக்கு அனுப்பினர். அவர்களிடம் எதிர்பார்க்கப்பட்டதும் அதுதானே.

 

நவம்பர், 17ல் அவளுடைய இருபதாவது பிறந்த நாளில் வழக்கம் போலவே வேலை தொடங்கியது. அன்று பிற்பகலிலிருந்தே விட்டுவிட்டுப் பெய்துகொண்டிருந்த மழை, மாலையின் தொடக்கத்தில் கனத்து, ஊற்றிக்கொண்டிருந்தது. ஐந்து மணிக்கு அன்றைக்கென்று சிறப்பாகத் தயாரிக்கப்பட்டிருந்த உணவு வகைகளைப் பற்றிய விளக்கம் கொடுப்பதற்காக மேலாளர் அனைத்துப் பணியாளர்களையும் ஒருசேர அழைத்தார். பரிமாறுபவர்கள் சிறு குறிப்புப் புத்தகம் போன்றவற்றையெல்லாம் பயன்படுத்தாமலேயே சிறப்பு உணவுகளின் பெயர்களை வார்த்தைக்கு வார்த்தை மனப்பாடமாக வியால் மிலனீஸ், மத்தி –  முட்டைக்கோஸ் – பாஸ்தா, கஷ்கொட்டை மௌஸ்ஸே என்று கடகடவென்று ஒப்பிக்கவேண்டும் . சிலவேளைகளில் மேலாளர் வாடிக்கையாளர் பாத்திரத்தை ஏற்று அவர்களைக் கேள்வி கேட்டு ஒரு வாய்மொழித் தேர்வே நடத்துவார். தொடர்ந்து பணியாளர்களுக்கான உணவு வழங்கப்படும். இந்த விடுதியில் பரிமாறும் பணியாளர்கள் வாடிக்கையாளர்களின் உத்தரவுகளைப் பெற்றுக் கொள்ளும்போது  இரைச்சலிடும் காலி வயிறோடு நிற்க வேண்டியதில்லை.

 

விடுதியின் கதவுகள் ஆறு மணிக்குத் திறக்கப்பட்டதென்றாலும் மழை காரணமாக விருந்தினர்கள் கொஞ்சம் கொஞ்சமாகவே வரத் தொடங்கினர். பல முன்பதிவுகளும் எளிதில் ரத்தாகின. தங்களின் ஆடைகள் மழையில் நனைந்துபோவதைப் பெண்கள் விரும்பவில்லை. மேலாளர் வாயை இறுக்க மூடிக் `கம்`மென்று சுற்றிச்சுற்றி வந்து நடைபயின்றார். பரிமாறுபவர்கள் உப்பு, மிளகுப்பொடிக் கிண்ணங்களை மீண்டும் மீண்டும் துடைத்துப் பளபளப்பாக்கி, அல்லது சமையலர்களோடு உணவுப் பக்குவங்கள் குறித்து அரட்டையடித்துக் கொண்டு, எப்படியோ நேரத்தைப் போக்கிக்கொண்டிருந்தார்கள். விருந்தினர் கூடத்தில் ஒரே ஒரு தம்பதி மட்டும் மேஜை முன் உட்கார்ந்து, மேற்கூரை ஒலிபெருக்கிகளிலிருந்து பெருகிக் கொண்டிருந்த யாழிசையை ரசித்துக் கொண்டிருந்ததை அவள் மேலோட்டமிட்டாள். வாடைக்காலத்தின் பிந்தியபருவத்தில் பெய்த மழையின் ஆழ்ந்த மணம் விடுதிக்குள்ளும் வந்துவிட்டது.

 

மேலாளர் உடம்புக்கு ஏதோ ஒரு மாதிரி இருப்பதாக உணரத் தொடங்கியபோது, ஏழரை மணி இருக்கும். திடீரெனச் சுட்டு வீழ்த்தப்பட்டதுபோல் வயிற்றை அழுத்திப் பிடித்துக்கொண்டு, அவர் ஒரு நாற்காலியில் சரிந்து, அப்படியே உட்கார்ந்தார். அவர் நெற்றியில் கனத்த ஒரு வியர்வை படர்ந்தது. அவர்,  ‘’எதுவானாலும்  மருத்துவமனைக்குப் போய்விடுவதுதான் நல்லதென்று நினைக்கிறேன்.’’ என்று முணுமுணுத்தார். அவரைப் பொறுத்தவரை உடம்புக்கு ஏதாவதென்பது ஒரு வழக்கமற்ற நிகழ்வு. பத்தாண்டுகளுக்கும் முன்பு அவர் இந்த விடுதியில் சேர்ந்ததிலிருந்து இதுவரையிலும் ஒருநாள் கூட அவர் பணிக்கு வராமல் நின்றதே இல்லை. அவர் இதுவரையிலும் நோய்வாய்ப்பட்டதோ அல்லது காயம்பட்டதோ இல்லையென்பது அவரது தற்பெருமைக்குரிய மற்றொரு விஷயமாக இருந்தது. ஆனாலும் இப்போது, வலி மிகுந்த அவருடைய முகச்சுழிப்பு அவர் மோசமான நிலையிலிருந்தாரெனக் காட்டுகிறது.

 

அவள் குடையைப்பிடித்துக்கொண்டு வெளியில் நின்று ஒரு வாடகைக் காரை அழைத்தாள். பரிமாறும் பணியாளர்களில் ஒருவர் பக்கத்து மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல அவரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு அவரோடு காரில் ஏறினார். வாடகைக் காரில் ஏறுமுன் மேலாளர், அவளிடம் கரகரத்த குரலில், ‘’ சரியாக எட்டு மணிக்கு அறை எண் 604க்கு நீங்கள் இரவு உணவைக் கொண்டு செல்லவேண்டும். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் அறையின் அழைப்பு மணியை அழுத்திவிட்டு, உங்கள் இரவு உணவு இங்கே இருக்கிறதென்று சொல்லி அங்கேயே வைத்துவிட்டு வந்துவிடுவதுதான்.’’ என்றார்.

 

அது, 604ஆம் எண் அறை, சரிதானே?’’ என்றாள், அவள்.

 

‘’எட்டு மணிக்கு.’’ என்றவர்,. ‘’மிகச்சரியாக டாணென்று அடித்ததும்’’ என்றும் திருப்பிச் சொன்னார். அவர் மீண்டும் முகத்தைச் சுழித்துக் கொண்டு ஏறியதும் கார் அவரைச் சுமந்து சென்றது.

மேலாளர் சென்ற பிறகும் மழை விட்ட பாடில்லை. வாடிக்கையாளர்கள் ஒருவர், இருவரென நீண்ட நேரத்துக்கொருமுறையாக வந்தனர். ஒரே நேரத்தில் ஒன்றிரண்டு மேஜைகளே நிறைந்திருந்தன. மேலாளரும் ஒரு பரிமாறும் நபரும் பணியில் இல்லாத நேரத்தில் இப்படி நிகழ்வதும் ஒருவிதத்தில் நல்லதுதான். முழுமையாக எல்லாப் பணியாளர்களும் வேலைக்கு வந்து எது வந்தாலும் சமாளிக்கமுடியும் என்கிற நாட்களில் கூட சில நேரங்களில் பரபரப்பாகிவிடுவது உண்டு. அதுவும் வழக்கமானதுதான்.

 

எட்டு மணிக்கு உரிமையாளருக்கான உணவு தயாரானதும், அவள் அறைப்பணி வண்டியைத் தள்ளி மின்னேற்றிக்குள் கொண்டுவந்து ஆறாவது தளத்துக்காக, உயரஉயரச் சென்றுகொண்டிருந்தாள்.  எப்போதும்போல அவருக்கான திட்டமிட்ட உணவுதான் : திறந்து மூடிய அரைப்புட்டி சிவப்பு ஒயின், மாச்சுருள்கள், வெண்ணெய், கோழிக்கறி – ஆவியில் வேகவைத்த காய்கறிகள், ஒரு சுடுநீர்க்குடுவையில் காப்பி. அந்தச் சிறு மின்னேற்றிக்குள் கோழிக்கறியின் அதிமசாலா மணம் நிறைந்தது. அது மழையின் வாசத்தோடும் கலந்தது. நனைந்த குடையோடு யாரோ ஒருவர் அந்த மின்னேற்றியில் அப்போதுதான் சென்றிருக்கவேண்டுமென்பதை மின்னேற்றியின் தளத்தில் சொட்டியிருந்த நீர்த்துளிகள் சொல்லாமல் சொல்லிக்கொண்டிருந்தன.

 

அவள் வண்டியை நடைக்கூடம் வழியாகத் தள்ளிக்கொண்டு 604 என எண்ணிடப்பட்டிருந்த அறையின் முன் நிறுத்தினாள். அவள் இருமுறைத் தன் நினைவைச் சரிபார்த்துக்கொண்டாள் : 604. இது அந்த அறைதான். அவள் தொண்டையைச் சரிசெய்துகொண்டு, கதவின் அருகிலிருந்த பொத்தானை அழுத்தினாள்.

எந்தப் பதிலும் இல்லை. முழுமையாக ஒரு இருபது நொடிகள் அங்கேயே நின்றாள். மணியை மீண்டும் அழுத்தலாமென நினைத்தபோது, கதவு உட்பக்கமாகத் திறந்தது. மெலிந்த வயதான மனிதர் ஒருவர் காட்சியளித்தார். அவளைவிடவும் அவர் ஒரு நான்கு அல்லது, ஐந்தங்குல உயரம் குறைவாக இருந்தார். அவர் ஒரு இருண்ட நிறத்தில் முழுநீளக் காற்சட்டையும் வெள்ளை உடுப்பும் கழுத்துப்பட்டையும் அணிந்திருந்தார். வெள்ளைச் சட்டை மீது உதிர்ந்த இலையின் நிறம் போன்ற பழுப்பு மஞ்சள் கழுத்துப் பட்டை தனியாக, எடுப்பாகத் தெரிந்தது. தலையில் படிய வாரிய நரைத்த வெண்முடிகளும் நன்கு அழுத்தித் தேய்க்கப்பட்ட சுத்தமான உடைகளுமாய் அவர் ஒரு அருமையான தோற்றத்தை வெளிப்படுத்தினார். அப்போதே ஏதோ ஒரு இரவுக்கூட்டத்துக்குச் செல்லவிருப்பது போன்று அவர் தோன்றினார். அவரது புருவங்களுக்கு மேலிருந்த நெற்றிச் சுருக்கங்கள் வானமண்டலத்திலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தில் தெரியும் பள்ளத்தாக்குகளைப் போலிருப்பதாக அவளை நினைக்கவைத்தன.

 

‘’ஐயா, உங்கள் இரவுச் சாப்பாடு’’, என்று கரகரப்புக் குரலில் சொன்ன அவள் மீண்டும் அமைதியாகத் தொண்டையைச் செருமிச் சரிசெய்துகொண்டாள். பதட்டமாகும்போதெல்லாம் அவள் குரல் கரகரத்துவிடுகிறது.

 

‘’இரவுச் சாப்பாடு?’’

 

‘’ஆமாம், ஐயா. மேலாளர் திடீரென்று உடல் நலம் சரியில்லாமலாகி விட்டார். இன்று அவரது இடத்துக்கு நான் வரவேண்டியதாகிவிட்டது. உங்கள் உணவு, ஐயா.’’

 

‘’ அப்படியா, அதுதானே பார்த்தேன்,’’ அநேகமாக அவருக்குள்ளேயே பேசிக்கொள்வதுபோலப் பேசிய அந்த வயதான மனிதர் கதவுக்குமிழின் மீதிருந்த கையை எடுக்காமலேயே. ‘’ உடம்பு சரியில்லையா? என்ன அவருக்கு? நீங்கள் சொல்லவில்லையே.’’ என்றார்.

 

‘’திடீரென்று அவருக்கு வயிறு வலிக்கத் தொடங்கிவிட்டது. அவர் மருத்துவமனைக்குப் போயிருக்கிறார்.  குடல்வாலில் கட்டி ஏற்பட்டிருக்குமோ என்று பயப்படுகிறார்.’’

 

‘’ ஆஹ், அது மோசமாயிற்றே,’’ என்ற அவர் நெற்றிச் சுருக்கங்களிடையே விரல்களை ஓடவிட்டுத் தேய்த்துக் கொண்டே, ‘’ எப்படியும் அது மிக மோசமானதுதான்.’’ என்றார்.

 

அவள் மீண்டும் தொண்டையைச் சரிசெய்துகொண்டு, ‘’ உங்களுடைய சாப்பாட்டை உள்ளே கொண்டு வரட்டுமா? ஐயா,’’ எனக் கேட்டாள்.

 

‘’ஆங், ஆமாம், அப்படித்தான்,’’ என்ற அந்த வயதான மனிதர், ‘’ஆமாமாம், இருந்தாலும் நீங்கள் விரும்பினால்தான். அது எனக்கு நல்லதாக இருக்கும்.’’ என்றார்.

 

நான் விரும்பினாலா? அவள் நினைத்தாள். என்ன ஒரு புதுமையாகச் சொல்கிறார். அப்படி விரும்புவதற்கு எனக்கு என்ன இருக்கிறது?

 

அந்த வயதான மனிதர் கதவை முழுமையாகத் திறந்தார். அவள் வண்டியை உள்ளே உருட்டினாள். காலணிகளைக் கழற்றி வைப்பதற்குக் கூட இடமின்றி அறையின் தளம் முழுதும் சாம்பல் நிற விரிப்பு போர்த்தப்பட்டிருந்தது. அந்த அப்பார்ட்மென்ட் முழுவதுமே வசிப்பிடமாக இல்லாமல் ஒரு பணி நடக்கும் இடமாகவே தோற்றமளித்தாலும் முன்னறை ஒரு பெரிய வாசிப்பு அறையாக இருந்தது. அதன் சன்னல், அருகிலுள்ள டோக்கியோ கோபுரத்தை, நோக்கிப் பார்த்தவாறு வெளியே திறந்திருந்தது. கோபுரத்தின் உருக்குக் கட்டமைப்பு, விளக்குகளால் எல்லைக்கோடிடப்பட்டிருந்தது. சன்னலின் அருகில் ஒரு பெரிய சாய்வு மேஜை இருந்தது. அதன் அருகில் கச்சிதமாக ஒரு சாய்வுமெத்தையும் அதன் இணை இருக்கையும் கிடந்தன. சாய்வுமெத்தையின் முன்பிருந்த பிளாஸ்டிக் தகட்டுறையிட்ட காபிமேஜையை அந்த வயதான மனிதர் சுட்டிக் காட்டினார். அதன் மீது உணவுவகைகளைப் பரப்பி சாப்பிடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்தாள் : வெள்ளை மடித்துணி மற்றும் கரண்டி முதலிய சில்வர்பொருட்கள், காபிக்குடுவையும் தம்ளரும், ஒயின் மற்றும் ஒயினருந்தும் கண்ணாடித் தம்ளர், மாச்சுருள், ரொட்டி மற்றும் வெண்ணெய், கோழிக்கறியும் காய்வகைகளும் இருந்த கிண்ணம்.

 

‘’ தாங்கள் தயவுகூர்ந்து வழக்கம்போலத் தட்டுகளை நடைக்கூடத்தில் வைத்துவிட்டால். அவற்றை எடுத்துக்கொள்ள ஒரு மணி நேரத்தில் நான் வந்துவிடுவேன், ஐயா.’’

 

அவருடைய உணவைப் பாராட்டத்தக்க விதத்தில் எடுத்து வைத்ததோடு அவளது வார்த்தைகளும் அவரைச் திருப்திப்படுத்தியதாகத் தோன்றியது. ‘’ஆமாம்,, அது சரி. உங்கள் விருப்பம் போல், அவற்றை நான் கூடத்தில் வைத்துவிடுகிறேன். வண்டியில்தான், ஒரு மணி நேரத்தில்.’’

 

நிச்சயமாக, நான் விரும்புவது அதுதான், என ஒரு கணம் உள்ளுக்குள் சொல்லிக்கொண்டாலும், சரி எனப் பதிலளித்தாள், அவள். ‘’ நான் உங்களுக்காக வேறு ஏதாவது செய்யவேண்டுமா, ஐயா.’’ என்றாள்.

 

‘’இல்லை, நான் அப்படி ஒன்றும் நினைக்கவில்லை,’’ என்று கணநேர யோசனைக்குப் பின் அவர் சொன்னார். அவர் பளிச்சென்று மின்னும்படி பளபளவென மெருகிடப்பட்ட  கறுப்புக் காலணிகளை அணிந்திருந்தார். அவை சிறியனவாக, ஆனால், கச்சிதமாகப் பொருந்தியிருந்தன. அவர் அலங்காரமாக உடையணிபவர் என்றும். அந்த வயதிலும், நிமிர்ந்து நேராக நிற்கிறாரே என்றும் அவள் நினைத்தாள்.

 

‘’ நல்லது ஐயா, அப்புறம், நான் என் வேலைக்குத் திரும்புகிறேன்.’’

 

‘’இல்லை, இல்லை, ஒரு நிமிடம் பொறுங்கள்.’’ என்றார், அவர்.

 

‘’ஐயா,’’

 

‘’மிஸ், எனக்காக ஒரு ஐந்து நிமிடம் ஒதுக்கமுடியுமென்று நீங்கள் கருதுவீர்களா? உங்களிடம் கொஞ்சம் பேசவேண்டியிருக்கிறது.’’

 

அவர் அப்படி இனிமையும் மென்மையுமாகக் கோரியது, வெட்கத்தில் அவளைச் சிவக்க வைத்தது.  ‘’ம்….அதற்கென்ன, எல்லாம் நல்லதற்குத்தான் இருக்குமென நினைக்கிறேன்.’’ என்ற அவள், ‘’ நான் சொல்ல வருவது, அது ஐந்து நிமிடங்கள் என்றால் தான்.’’ எதுவானாலும், அவர் அவளுடைய முதலாளி. ஒவ்வொரு மணி நேரத்துக்கும் அவர் சம்பளம் கொடுக்கிறார். அப்படி இருக்கும்போது அவள் நேரத்தைக் கொடுப்பதோ அல்லது அவர் எடுத்துக்கொள்வதோ என்பது ஒரு கேள்வியே இல்லை. மேலும் இந்த வயதான மனிதர் அவளுக்கு ஏதேனும் கெடுதல் செய்துவிடுபவராகத் தெரியவில்லை.

 

‘’அப்புறம், உங்களுக்கு என்ன வயது ஆகிறது?’’ அவர், கைகளைக் கட்டிக்கொண்டு மேஜை அருகில் நின்று  அவள் கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தவாறே கேட்டார்.

 

‘’ இப்போது எனக்கு இருபது’’ என்றாள்.

 

‘’ இப்போது இருபது,’’ என்று திருப்பிச் சொன்ன அவர் ஏதோ ஒரு வெடிப்பு வழியாகத் துருவிப் பார்ப்பதைப்போலக் கண்களைச் சுருக்கிக் கொண்டு, ‘’ இப்போது இருபது. எப்போதிலிருந்து?’’ என்று கேட்டார்.

 

‘’நல்லது. இப்போதுதான் எனக்கு இருபது ஆகியிருக்கிறது,’’ என்றாள், அவள். ஒரு கணம் தயங்கிப் பின்,  ‘’ இன்றுதான் எனக்குப் பிறந்த நாள், ஐயா.’’ என்றாள்.

 

என்னவோ மிகப்பெரிய அளவில் விளக்கமளிக்கவிருப்பது போலத் தாடையைத் தேய்த்துக்கொண்டே, “”அப்படியா?’’ என்றவர், ‘’ இன்று, மிகச்சரியாக, இன்றைக்குத்தான் உங்களின் இருபதாவது பிறந்தநாள், இல்லையா?’’ என்றும் கேட்டார்.

 

அவள் அமைதியாகத் தலையாட்டினாள்.

 

‘’உங்கள் வாழ்க்கை இன்றைக்கு மிகச்சரியாக இருபது வருடங்களுக்கு முன்புதான் தொடங்கியது.’’

 

‘’ஆமாம் ஐயா, அதுதான் உண்மை.’’ என்றாள்.

 

‘’ ஓ! எனக்குத் தெரிகிறது, புரிகிறது.’’ என்றார். ‘’அது அற்புதமானது. நல்லது, அப்படியானால், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்’’

 

‘’மிக்க நன்றி, மிக்க நன்றி’’ என்றாள். பிறகுதான், அவளுக்கு, இன்று முழுவதற்குமேகூட முதல் முறையாக ஒருவர் பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வது இப்போதுதானென்று அவளுக்குள் தோன்றி உதித்தது. அநேகமாக, அவளது பெற்றோர் ஒய்ட்டாவிலிருந்து அழைத்திருந்தால், வேலையெல்லாம் முடிந்து அவள் வீட்டுக்குப் போய் அவளது பதிலளிக்கும் கருவியைத் திறந்து பார்த்தால் அவர்களின் வாழ்த்துச் செய்தியை அவள் பார்க்கலாம்.

 

‘’நன்று, நன்று. இது நிச்சயமாகக் கொண்டாடப்படவேண்டிய ஒன்று.’’ என்ற அவர், ‘’ வாழ்த்தும் சடங்காகக் கொஞ்சம் குடிக்கலாமே, நாம் இந்தச் சிவப்பு ஒயினை அருந்தலாம்.’’ என்றார்.

 

‘’மிக்க நன்றி ஐயா, ஆனால், அது என்னால் முடியாது. நான் இப்போது பணியிலிருக்கிறேன்.’’

 

‘’ஓ, ஒரு சின்ன மிடறு அளவுக்கு, ஒரு வாய் உட்கொள்வதால் என்னவாகிவிடும்? அதெல்லாம் சரிதானென்று நான் சொல்லிவிட்டால், உங்களை யாரும் குறைசொல்ல மாட்டார்கள். கொண்டாட்டத்தின் அடையாளமாக ஒரு சிறியப் பகிர்வு, அவ்வளவுதான்.’’

 

அந்த வயதான மனிதர் ஒயின் புட்டியின் மூடியைத் திறந்து ஒயின் கோப்பையில் அவளுக்காகச் சிறிது ஒயினைச் சரித்தார். பின் கண்ணாடிக் கதவுகளிட்ட மாடத்திறப்பிலிருந்து ஒரு சாதாரணத் தம்ளரை எடுத்து அதில் அவருக்காகக் கொஞ்சம் ஒயினை ஊற்றினார்.

 

‘’இனிய பிறந்தநாள்’’ என்று வாழ்த்திய, அவர்,’’ பயன்மிக்க ஒரு செல்வ வாழ்க்கை வாழ்வீர்களாக; இருண்ட நிழல்கள் எதுவும் அதன் மீது விழாமலிருக்கட்டும்’’ என்றார்.

 

அவர்கள் மதுக்கிண்ணங்களை உரசிக்கொண்டார்கள்.

 

இருண்ட நிழல்கள் எதுவும் அதன் மீது விழாமலிருக்கட்டும் : அவரது வார்த்தைகளை அவள் அமைதியாக உள்ளுக்குள் மீண்டும் சொல்லிக்கொண்டாள். அவளுடைய பிறந்தநாள் வாழ்த்தாக அவர் ஏன் அப்படியொரு வழக்கமற்ற தொடரைத் தேர்வுசெய்தார்?

 

மிஸ், வாழ்க்கையில் ஒரே ஒருமுறை மட்டுமே உங்கள் இருபதாவது பிறந்தநாள் வருகிறது. அது ஒரு மாற்றிக்கொள்ளமுடியாத அதாவது  மீண்டும் நிகழமுடியாத ஒரு நாள்.’’

 

‘’ ஆமாம் ஐயா, அதை நான் அறிவேன்.’’ என்ற அவள் கோப்பையில் இதழ் பதித்து மிகுந்த எச்சரிக்கையோடு  ஒரு மிடறு ஒயினை மட்டும் எடுத்துக்கொண்டாள்.

 

‘’ இங்கே, இப்போது, உங்களுக்கேயான சிறந்த ஒரு நாளில், நீங்கள் ஒரு கருணைமிக்க தேவதையைப் போல் எனக்கான உணவை எடுத்து வரும் தொல்லையை மேற்கொண்டிருக்கிறீர்கள்.’’

 

‘’நான் என் கடமையைச் செய்கிறேன், அவ்வளவுதான், ஐயா.’’

 

‘’இருந்தாலும்,’’ என்ற அந்த வயதான மனிதர் அவரது தலையை ஒருசில முறை வேகமாக அசைத்துக்கொண்டார். ‘’ இருந்தாலும், இளமையான, அன்புள்ள, மிஸ்.’’

 

அந்தச் சாய்வு மேஜை அருகிலிருந்த ஒரு தோல் நாற்காலியில் அவர் அமர்ந்து, அவளைச் சாய்வு மெத்தையில் அமருமாறு  கையைக் காட்டி அசைத்தார். அவள் முன்னெச்சரிக்கையோடு அந்தச் சாய்வு மெத்தையின் விளிம்பில் ஒயின் கோப்பையும் கையுமாக உட்கார்ந்தாள். மூட்டுகளை ஒருங்கமைத்து, உடுப்பினை இழுத்து விட்டுக்கொண்டு மீண்டும் தொண்டையைச் செருமி சரிசெய்தாள். சன்னல் கதவில் மழைத்துளிகள் கோடிழுப்பதை அவள் பார்த்தாள். அறையில் வினோதமான ஒரு அமைதி நிலவியது.

 

‘’இன்று உங்கள் இருபதாவது பிறந்த நாள் இப்போதுதான் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அதிலும் எல்லாவற்றுக்கும் மேலாக இந்த அற்புதமான சுவையான உணவை நீங்கள் எனக்காகக் கொண்டு வந்திருக்கிறீர்கள்.’’ நிலைமையை மீண்டும் உறுதிசெய்வது போல அவர் பேசினார். பின்னர் அவர் அவரது தம்ளரை மேஜையின் உயரமான இடத்தில் கொஞ்சம் அழுத்தமாக ஓசை எழும்படியாக வைத்தார்.  ‘’இது ஒரு வகையான எல்லாம் கூடிவந்த நல்ல நேரம் என்று நீங்கள் நினைக்கவில்லையா?’’

 

முழுவதுமாக ஏற்காவிட்டாலும் அவள் எப்படியோ ஒரு தலையசைப்பைச் செய்துவைத்தாள்.

 

‘’அது ஏனென்றால்’’ என்று உதிர்ந்த இலை நிறக் கழுத்துப்பட்டையின் முடிச்சினைத் தொட்டவாறே, அவர் சொன்னார், ‘’உங்களுக்கு ஒரு பிறந்தநாள் பரிசு கொடுப்பது முக்கியமென நான் உணர்கிறேன். ஒரு சிறப்பு வாய்ந்த பிறந்த நாள் என்றால் ஒரு நினைவுப் பரிசு இருக்கவேண்டும்.’’

 

குழம்பிப் போன அவள் தலையசைத்து மறுத்து,’’இல்லை, இல்லை, ஐயா, தயவுசெய்து இன்னொரு முறை அப்படி நினைக்கவேண்டாம். அவர்கள் சொன்னதன்படியே நான் உங்களுக்கான உணவை எடுத்து வந்தேன்.’’

 

அந்த வயதான மனிதர் உள்ளங்கைகள் இரண்டையும் அவளை நோக்கி விரித்து நீட்டி, இரு கரங்களையும் உயர்த்தினார்.’’ அப்படி இல்லை, மிஸ், நீங்கள் அதனை வேறுமாதிரி நினைக்காதீர்கள். நான் உங்களுக்குக் கொடுக்க நினைக்கும் பரிசு தொட்டு உணரக்கூடிய ஒரு பொருளல்ல, விலைபெறுமானமுள்ள எதுவுமல்ல. இன்னும் எளிமையாகச் சொல்வதென்றால்’’ அவர் கைகளைச் சாய்வு மேஜை மீது வைத்துக்கொண்டு மெதுவாக, ஆனால் நீண்ட ஒரு மூச்செடுத்தார். தொடர்ந்து, ’’உங்களைப் போன்ற ஒரு அழகிய இளம் தேவதைக்கு என்ன செய்ய வேண்டுமென்று நான் நினைக்கிறேன் என்றால், உங்கள் விருப்பம் ஒன்றை நிறைவேற்றுவது, உங்கள் வேண்டுதலை  நனவாக்குவது. நீங்கள் எதை, எதை வேண்டுமானாலும் எதற்கு வேண்டுமானாலும் ஆசைப்படலாம் – அப்படியொரு வேண்டுதல் உங்களுக்கிருப்பதாக நினைத்துக்கொள்ளுங்களேன்.’’

 

‘’ ஒரு வேண்டுதலா?’’ தொண்டை வறள, அவள் கேட்டாள்.

 

‘’ மிஸ், உங்களுக்கு நிகழ வேண்டுமென்று அல்லது வாய்க்க வேண்டுமென்று எதையாவது விரும்புங்கள். உங்களுக்கு ஏதேனும் ஒரு ஆசை இருந்தால் – ஒன்றே ஒன்று, அதை நான் உண்மையாக்கித் தருவேன். அப்படிப்பட்ட ஒரு பிறந்தநாள் பரிசுதான் நான் உங்களுக்குக் கொடுக்கக் கூடியது. ஆனால், நீங்கள் மிக கவனமாக அதைப்பற்றிச் சிந்தனை செய்து கொள்ளுங்கள். ஏனென்றால் நான் ஒன்றே ஒன்றுதான் தரமுடியும்.’’ அவர் ஒற்றை விரலை உயர்த்திக் காட்டினார். ‘’ஒன்று மட்டும் தான். அதைச் சொன்னபிறகு உங்கள் மனதை மாற்றிக்கொண்டு அதை வேண்டாமென்று சொல்லக்கூடாது.’’

 

அவளுக்கு என்ன சொல்வதென்று வார்த்தைகளே கிடைக்கவில்லை. ஒரு வேண்டுதல்? காற்றின் சவுக்கடியால் மழைத்துளிகள் சன்னல் கதவைத் தட்டி ஒழுங்கற்று ஒலித்துக்கொண்டிருந்தன. அவள் அமைதியாக இருந்த நேரம் முழுவதும் அவர் எதுவும் பேசாமல் அவள் கண்களுக்குள்ளேயே பார்த்துக்கொண்டிருந்தார். நேரம் அதன் ஒழுங்கற்ற துடிப்பை அவள் காதுகளுக்குள் பதித்தது.

 

‘’ நான் ஏதாவதொன்றுக்கு ஆசைப்பட்டு வேண்டிக்கொள்ள வேண்டும், அது நிறைவேற்றப்படும், அப்படித்தானே?’’

 

அவள் கேள்விக்குப் பதிலளிக்காமல், இன்னும் சாய்வு மேஜை மீதே கைகளை அருகருகே வைத்திருந்த அவர் வெறுமனே புன்னகைத்தார். ஆனால், அவர் அதை மிகவும் இயற்கையாக, நேசத்தோடு செய்தார்.

 

‘’ உங்களுக்கு ஒரு வேண்டுதல் உள்ளதா, மிஸ், அல்லது அப்படி எதுவும் இல்லையா? அவர் மிக மென்மையாக வினவினார்.

 

‘’இப்படித்தான் உண்மையிலேயே நிகழ்ந்தது’’, என்ற அவள் என்னை நேராகப் பார்த்துக்கொண்டிருந்தாள். ‘’நான் ஒன்றும் இதை இட்டுக்கட்டிச் சொல்லவில்லை.’’ என்றாள்.

 

‘’ஆமாம், இருக்காது’’ என்றேன், நான். அவள் ஒன்றுமில்லாததைக் கதையாகத் திரிக்கும் ரகத்தைச் சேர்ந்தவளல்ல. ‘’ஆக…..கடைசியில் நீங்கள் ஒரு வேண்டுதலைச் சொன்னீர்களா?’’

 

அவள் கொஞ்ச நேரம் என்னையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டுச் சிறிதாக ஒரு பெருமூச்சினை வெளியிட்டாள். ‘’ என்னைத் தவறாகப் புரிந்து கொள்ளாதீர்கள்.’’ என்றாள். ‘’நானே அவரை நூறு சதவீதம் ஏற்புடையவராகக் கருதியிருக்கவில்லை. நான் சொல்வது, இருபதாவது வயதில் நீங்கள் மேற்கொண்டும் தேவதைக்கதை உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்க முடியாது. இது அவருடைய கிண்டலுக்கான அடிப்படையாக இருக்குமானால், அப்படி இருந்தாலும் நான் அங்கேயே அப்போதே ஒரு பதிலடி கொடுக்கவேண்டியிருந்தது. அவர் ஒரு வயதான கிழவராக இருந்தாலும் அவர் கண்களில் ஒரு மினுக்கம் தெரிந்தது. அதனால் நான் அவரோடு ஒரு விளையாட்டை நடத்தத் தீர்மானித்தேன். என்ன இருந்தாலும் அன்று என்னுடைய இருபதாவது பிறந்தநாள் : அந்த நாளில் சாதாரண நிகழ்வாக இல்லாமல் ஏதாவது இருக்கவேண்டுமென நான் எண்ணினேன். அதை நம்புவதா அல்லது நம்பாமலிருப்பதா என்பது ஒரு கேள்வியல்ல.’’

 

நான் எதுவும் சொல்லாமல் தலையாட்டினேன்.

 

‘’ எனக்கு நிச்சயமாகத் தெரியும், நான் எப்படி உணர்ந்தேனென்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியும். என்னுடைய இருபதாவது பிறந்தநாள் எந்த ஒரு சிறப்பு நிகழ்வுமில்லாமல் யாருடைய வாழ்த்துமில்லாமல், ஒரு முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. அன்று நான் செய்துகொண்டிருந்ததெல்லாம் விருந்தினர் மேஜைகளுக்கு டோர்ட்டெலினியை அன்கோவி சாஸுடன் எடுத்துச் சென்றதுதான்.

 

நான் மீண்டும் தலையசைத்தேன். ‘’கவலைப்படாதீர்கள் எனக்குப் புரிகிறது’’ என்றேன், நான்.

 

‘’அதனால் நான் ஒரு வேண்டுதலைச் சொன்னேன்.’’

 

அந்த வயதான மனிதர் பார்வையை அவள் மீதே பதித்திருந்தார். எதுவும் பேசவில்லை. அவரது கைகள் அப்போதும் சாய்வு மேஜை மீதே இருந்தன. அந்த மேஜையில் இன்னும் கணக்குப் பேரேடுகள், எழுதுபொருட்கள், ஒரு நாட்காட்டி,பச்சைநிற மேற்தட்டுடன் கூடிய ஒரு விளக்கு ஆகியனவும் இருந்தன. அவற்றின் இடையே கிடந்த அவரது கரங்களும் ஏதோ ஓரிணை மேஜைப் பொருட்கள் போலவே தோற்றமளித்தன. கண்ணாடியின் மீது மழை அப்போதும் தொடர்ந்து அடித்துக்கொண்டிருந்தது. தெறித்த துளிகளின் வழியே டோக்கியோ கோபுர விளக்குகளின் வெளிச்சம் வடிகட்டித் தெரிந்தது.

 

அந்த வயதான மனிதரின் நெற்றிச் சுருக்கங்கள் மேலும் கொஞ்சம் ஆழமாகின. ‘’ அதுவா உங்கள் வேண்டுதல்?’’

 

‘’ஆமாம்,’’ என்ற அவள் ‘’அதுதான் என் விருப்பம்,’’ என்றாள்.

 

‘’உங்கள் வயதுப் பெண்ணுக்கு இது கொஞ்சம் அபூர்வமானதுதான்,’’ என்றார், அவர். .கூடவே, ‘’நான் வேறு மாதிரி ஏதாவது இருக்குமென்று எதிர்பார்த்தேன்.’’ என்றும் சொன்னார்.

 

’’ இது நன்றாகயில்லையென்றால், வேறு எதையாவது விரும்பி வேண்டிக்கொள்கிறேன்.’’ என்ற அவள், தொண்டையைச் சரிசெய்துகொண்டாள். ‘’ எனக்கொன்றுமில்லை. நான் வேறு எதையாவது யோசித்துப் பார்க்கிறேன்’’. என்றாள்.

 

‘’இல்லையில்லை,’’ என்று கைகளை உயர்த்திக் கொடிகளைப்போல அசைத்துக்கொண்டு சொன்னார். ‘’இதில் எதுவும் தவறு இல்லை. எதுவுமே இல்லை. இது எனக்குச் சிறிது ஆச்சரியமாக இருக்கிறது, மிஸ், உங்களுக்கு வேறு எதுவும் இல்லையா? அதாவது அழகு, நேர்த்தி, கூர்த்த மதி, பணம், இது மாதிரி ஏதாவது? ஒரு சாதாரணப் பெண் கேட்கும் எது போலவும் நீங்கள் ஆசைப்படாமலிருப்பது ஒருவகையில் சரிதான்’’.

 

அவள் பொருத்தமான வார்த்தைகளைத் தேடிச் சில கணங்கள் தாமதித்தாள். அந்த வயதான மனிதர் எதுவும் பேசாமல் வெறுமனே காத்திருந்தார். அவரது கைகள் இரண்டும் மீண்டும் இணைந்து சாய்வுமேஜையின் மீது படுத்துக்கிடந்தன.

 

‘’ ஒருவகையில் சரிதான், நான் இன்னும் அழகாக, இன்னும் நேர்த்தியாகக் கூடுதல் அறிவுள்ளவளாக, அல்லது பணக்காரியாக ஆசைப்பட்டு வேண்டிக்கொள்ளலாம்தான். ஆனால் அதுபோல ஏதாவதொன்று உண்மையில் எனக்குக் கிடைத்துவிட்டால் எனக்கு என்ன நிகழுமென்று என்னால் கற்பனைகூடச் செய்யமுடியவில்லை. அவை என்னால் கையாள்வதற்கும் அதிகப்படியானவையாகத்தான் அமையும். வாழ்க்கை என்பது எது பற்றியதானதென உண்மையில் நான் இன்னும் அறியாதவளாகத்தான் இருக்கிறேன். அது எப்படிச் செயல்படுகிறதென எனக்குத் தெரியவில்லை.’’

 

‘’ம்..ஹூம். ம்….’’ என்ற அந்த வயதானவர் கைவிரல்களை ஒன்றுசேர்ப்பதும், பிரிப்பதுமாக மீண்டும் மீண்டும் செய்துகொண்டிருந்தார், ‘’ம்..ஹூம். ம்….’’

 

‘’அப்படியானல், எனது வேண்டுதல் சரியானதுதானா?’’

 

‘’ ம்… அப்படியுந்தான்,’’ என்றவர், ‘’ அந்தவகையில் சரிதான். அதனால் எனக்கு எந்தத் தொந்தரவும் இல்லை.’’ என்றார்.

 

அந்த வயதானவர் திடீரெனக் கண்கள் திறந்தது திறந்தபடியே வெட்டவெளியில் ஏதோ ஒரு புள்ளியை நோக்கினார். அவரது முன் நெற்றியின் சுருக்கங்கள், இன்னும் ஆழமாகின : அவை சிந்தனைகளின் அடர்த்தி மிகுதியால் அவரது மூளைக்குள் ஏற்பட்ட மடிப்புகளாகத்தான் இருக்கவேண்டும். அவர் எதையோ – ஒருவேளை காற்றில் மிதந்து கீழிறங்கும் கண்ணுக்குத் தெரியாத எல்லாவற்றையும் வெறிப்பது போலிருந்தார். அவரது இரு கரங்களையும் அகல விரித்து, நாற்காலியிலிருந்தும் சிறிது எழும்பி, உள்ளங்கைகள் இரண்டையும் ஒன்று சேர்த்து மிகமெல்லிய ஓசையில் தட்டிக்கொண்டார். மீண்டும் நாற்காலியில் அமர்ந்து, நெற்றிச் சுருக்கங்களை அமைதிப்படுத்துவதுபோல் அவற்றின் மீது விரல் நுனிகளை மெதுவாக ஓடவிட்டு, மீண்டும் அவளை நோக்கி மெல்லிய புன்முறுவலுடன் திரும்பினார்.

 

‘’ அது நிகழ்ந்துவிட்டது.’’ என்றார், அவர். ‘’ உங்கள் வேண்டுதல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.’’

 

‘’ ஏற்கெனவேயா?’’

 

‘’ஆமாம், அதில் பிரச்னை எதுவும் இல்லை. அழகு மங்கையே, உங்கள் வேண்டுதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுவிட்டது, இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் இப்போது உங்கள் பணிக்குத் திரும்பலாம். கவலைப்பட வேண்டாம்,  நான் வண்டியைக் கூடத்தில் நிறுத்திவிடுகிறேன்.’’

 

அவள் மின்னேற்றியை அழுத்தி விடுதிக்கு இறங்கினாள். இப்போது வெறுங்கையோடு, ஏதோ ஒருவகைப் புதிர்த்தன்மைகொண்ட மென்மையான ஒன்றின் மீது நடப்பது போலவும் எல்லாத் தொந்தரவுகளும் விலகிவிட்டது போலவும் உணர்ந்தாள்.

 

‘’ நீங்கள் நன்றாகத்தான் இருக்கிறீர்களா? இந்த உலகத்திலேயே இல்லாதது போலத் தோன்றுகிறீர்கள்?’’ என்று அவளை விட இளையவரான அந்தப் பரிமாறும் பணியாளர் கேட்டார்.

 

அவள், அவருக்கு ஒரு இரண்டுங்கெட்டான் புன்னகையைப் பரிசளித்து, தலையைக் குலுக்கி அசைத்துக்கொண்டாள். ‘’ ஊம்… ,அப்படியா? உண்மையாகவா? இல்லை, நான் நன்றாகத்தான் இருக்கிறேன்.’’

 

‘’ உரிமையாளரைப் பற்றிச் சொல்லுங்கள். அவர் என்ன மாதிரி இருக்கிறார்?’’

 

‘’ எனக்கும் தெரியாது. நான் அவரைச் சரியாகப் பார்க்கவில்லை.’’ என்று பேச்சை முறிக்கும் பாவனையில் சொன்னாள்.

.

ஒரு மணி நேரம் கழித்து வண்டியைக் கொண்டுவரச் சென்றாள். அது கூடத்தில் நின்றது. பாத்திரங்கள் அதனதன் இடத்தில் இருந்தன,. கோழிக்கறியும் காய்கறிகளும் பறந்து சென்றிருப்பதைப் பார்க்கவே, அவள் மூடியைத் தூக்கினாள். ஒயின் புட்டியும் காப்பிக் குடுவையும் காலியாக இருந்தன. 604 ஆம் எண் அறையின் கதவு உணர்ச்சிகள் எவற்றையும் வெளிப்படுத்தாமல் மூடியவாறே இருந்தது. அந்தக் கதவு எந்தக் கணத்திலும் திறந்துவிடும் என்பது போன்ற உணர்வுடன் அதையே சிறிது நேரம் வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். ஆனால், அது திறக்கவேயில்லை. அவள் வண்டியை மின்னேற்றியில் ஏற்றித் தளத்துக்கு இறக்கி, பாத்திரம் கழுவும் இயந்திரத்துக்கு உருட்டிவந்தாள். சமையல்காரர், தட்டின் மீது பார்வையை வீசினார். எப்போதும் போலக் காலியாக இருந்தது. வெறுமனே தலையை ஆட்டிக்கொண்டார்.

 

‘’திரும்பவும் அந்த உரிமையாளரை நான் பார்க்கவே இல்லை.’’ என்றாள், அவள். ‘’ ஒருதடவை கூடப் பார்க்கவில்லை. மேலாளருக்குச் சாதாரண வயிற்றுவலிதான் வந்திருந்தது. அவர் மீண்டும் பணிக்குத் திரும்பிவிட்டார். மறுநாளிலிருந்து அவரேதான் உரிமையாளருக்கான உணவைக் கொண்டுசென்றார். புது வருடம் பிறந்ததும் நான் அந்த வேலையை விட்டுவிட்டேன். பிறகு, அந்தப் பக்கம் நான் தலை காட்டியதே இல்லை. அது ஏனென்று எனக்குத் தெரியாது. அங்கே போகாமலிருப்பதே நல்லதென்று, முன்னெச்சரிக்கை போல ஏதோ ஒரு உள்ளுணர்வு  என்று வைத்துக்கொள்ளுங்களேன்.’’

 

அவள், தன் சிந்தனையில் மூழ்கிக் காகிதத்தட்டு ஒன்றைச் சுழலவிட்டு விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தாள். ‘’ என்னுடைய இருபதாவது பிறந்த நாளில் எனக்கு நேர்ந்ததெல்லாம் ஏதோ ஒருவகையான மாயை அல்லது கனவில் நிகழ்ந்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.. அதாவது, அது எப்படியென்றால், எனக்கு நிகழ்ந்தனவெல்லாம் உண்மையிலேயே நிகழாதவை போன்ற உணர்வை ஏற்படுத்த ஏதோ ஒன்று எனக்கு நிகழ்ந்தது போன்றது. ஆனால் அது, எனக்கு நிச்சயமாகத் தெரியும், அது நிகழ்ந்ததுதான்.  604 -ம் எண் அறைக்குள் இருந்த சாய்வுமேஜை, நாற்காலி முதல் எல்லாச் சாமான்கள் பொருட்கள்ள் மட்டுமல்ல, சின்னச் சின்ன அழகுப்பொருட்களின் பிம்பங்களையும் என்னால் இப்போதுகூடச் சரியாகச் சொல்லமுடியும். அங்கே எனக்கு நேர்ந்தவை எல்லாம் உண்மையாக நிகழ்ந்தவை மட்டுமல்ல, அவை எனக்கு மிக முக்கியமானவையாகவுங்கூட இருக்கின்றன.

 

நாங்கள் இருவரும் சிறிது நேரம் அமைதியாக அவரவர் பானங்களை அருந்திக்கொண்டு எங்கள் தனியான எண்ணங்களில் மூழ்கியிருந்தோம்.

 

‘’நான் உங்களை ஒரு விஷயம் கேட்டால் தவறாக எடுத்துக் கொள்ளமாட்டீர்களே?’’ நான் கேட்டேன்.       ‘’ இன்னும் குறிப்பாகச் சொல்வதென்றால், இரண்டு விஷயங்கள்.’’

 

‘’ம்.. மேலே, மேலே செல்லுங்கள். எதுவானாலும் நேரடியாகக் கேளுங்கள்,’’ என்றவள், ‘’ அந்த நேரத்தில் நான் என்ன வேண்டிக்கொண்டேன் என்று கேட்க விரும்புகிறீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் முதல் விஷயம் அதுவாகத்தான் இருக்கும்.’’ என்றாள்.

 

‘’ ஆமாம், ஆனால், அதைப்பற்றி நீங்கள் பேசவிரும்பவில்லை போல் தெரிகிறதே.’’

 

‘’அப்படியா?’’

 

நான் தலையாட்டினேன்.

 

அவள் காகிதத்தட்டைக் கீழே வைத்துவிட்டு, தூரத்தில் தெரியும் எதையோ கூர்ந்து நோக்குவது போல் கண்களைச் சுருக்கினாள். ‘’ என்ன வேண்டிக்கொண்டீர்கள் என்பதை யாரிடமும் சொல்லக்கூடாதென்று உங்களுக்குத் தெரிந்திருக்குமே, இல்லையா?.’’

 

‘’நான் ஒன்றும் கிண்டிக் கிளறி அதை வெளியே இழுத்துவிடப் போவதில்லை. இருந்தாலும் அது உண்மையில் நிறைவேறியதா என்று தெரிந்துகொள்ள விரும்புகிறேன், அவ்வளவுதான். அதுமட்டுமல்ல, உங்கள் வேண்டுதல் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும், அப்படி ஒரு வேண்டுதலைச் செய்து கொண்டதற்காக பின்னால் எப்போதாவது வருத்தம் கொண்டீர்களா, இல்லையா? வேறு எதையாவது வேண்டிக்கொண்டிருந்திருக்கலாமே என்று எப்போதாவது வருத்தப்பட்டீர்களா?’’ என்றேன், நான்.

 

‘’முதல் கேள்விக்கான பதில் ஆமாம் என்பதுதான், இல்லையென்றும் சொல்லலாம். நான் வாழவேண்டிய நாட்கள் இன்னும் நிறைய மீதி இருக்கிறதே. அது முடிவில் எப்படியாகுமென்று எனக்குத் தெரியவில்லை.’’

 

‘’ஆக, அந்த வேண்டுதல் நிறைவேற இன்னும் காலம் இருக்கிறது என்கிறீர்கள்.’’

 

‘’ நீங்கள் அப்படியும் சொல்ல முடியும். காலம் அதன் முக்கிய பணியினைச் செய்யவிருக்கிறது.’’

 

‘’ குறிப்பிட்ட சிலவகை உணவுத் தயாரிப்பின்போது ஏற்படுமே அது போல் என்கிறீர்கள்.’’

 

அவள் ஆமோதித்துத் தலையசைத்தாள்.

 

நான் அது பற்றி ஒரு கணம் சிந்தித்தேன். ஆனால் என் மனத்தில் தோன்றியதெல்லாம் மலைக்கத்தக்க அளவில் மிகப்பெரிய அப்பம் ஒன்று அடுப்பில் மெல்லிய நெருப்பில் மெதுவாக வெந்துகொண்டிருப்பதான ஒரு பிம்பம் மட்டுமே.

 

‘’ சரி, எனது இரண்டாவது கேள்விக்கான பதில்?’’

 

‘’மறுபடியும் என்ன இருக்கிறது, அதில்?’’

 

‘’ நீங்கள் வேண்டிக்கொண்ட அதைப்போய்த் தேர்ந்தெடுத்தோமேயென்று எப்போதாவது வருந்தினீர்களா?’’

 

சில கணங்கள் அமைதியாகக் கடந்தன. என் பக்கம் திரும்பிய அவளது கண்கள் வெறுமையாகத் தோற்றமளித்தன. அவள் இதழ்களின் ஓரங்களில் மினுங்கிய வறண்ட புன்னகையின் நிழல், அவளின் விட்டேற்றியான மனநிலையை ரகசியமாக உணர்த்தியது.

 

‘’இப்போது, எனக்கு என்னைவிட மூன்று வயது மூத்த ஒரு கணக்காயருடன் திருமணமாகியிருக்கிறது. இரண்டு குழந்தைகள், ஒரு பையனும் பெண்ணும். அயர்லாந்து வேட்டை நாய் ஒன்று வைத்திருக்கிறோம். எனக்கென்று அவ்டி கார் இருக்கிறது. நான் என்னுடைய தோழிகளோடு வாரம் இருமுறை வரிப்பந்து விளையாட்டயர்கிறேன். இப்படியான ஒரு வாழ்க்கையை இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.’’

 

‘’ எங்கேயோ போய்விட்டீர்கள்.’’ என்றேன், நான்.

 

‘’ என்னுடைய அவ்டியின் முட்டுத்தாங்கியில் கூட இரண்டு இடங்களில் அடிபட்டிருக்கிறது.’’

 

‘’ஹே, முட்டுத்தாங்கிகள் அடிபடுவதற்கென்றே உருவாக்கப்பட்டவை.’’

 

‘’ ஆஹா, இது எழுதி ஒட்ட வேண்டிய ஒரு, அருமையான தொடர்.’’ என்றாள், அவள். ‘’ முட்டுத்தாங்கிகள் அடிபடுவதற்காகவே இருக்கின்றன.’’

 

அவள் அதைச் சொன்ன போது நான் அவள் இதழ்களையே பார்த்துக்கொண்டிருந்தேன்.

 

‘’ நான் சொல்ல முயற்சிப்பது இதுதான்.’’ என்ற அவள் காது மடலைச் சொறிந்துகொண்டே இன்னும் மென்மையாகச் பேசினாள். அது மிக அழகாக அமைந்த ஒரு காது மடல். ‘’ ஜனங்கள் என்ன வேண்டுகிறார்கள் என்பதோ, அதற்காக எவ்வளவு முயற்சிக்கிறார்கள் என்பதோ ஒரு பொருட்டே இல்லை; அவர்கள் அவர்களாகவே இருப்பதைத் தவிர வேறு எதுவாகவும் ஆகிவிடமுடியாது.’’

 

‘’ இதுவும் ஒட்டி வைக்க வேண்டிய, இன்னொரு அருமையான தொடராக இருக்கிறதே,’’ என்றேன், நான். ‘’ எவ்வளவு உயரப் போனாலும், ஜனங்கள், அவர்களாக இருப்பதைத் தவிர வேறு எதுவாகவும் ஆக முடியாது.’’

 

அவள் மகிழ்ச்சியின் உச்சமாகச் சத்தமாகச் சிரித்தாள். துயரத்தின் நிழல் காணாமற் போயிற்று.

 

அவள், தன் முழங்கை மூட்டினைக் கம்பியின் மீது வைத்தவாறே என்னைப் பார்த்தாள். ‘’ என்னிடம் சொல்லுங்கள், என் நிலைமையில் நீங்கள் இருந்திருந்தால், அப்போது நீங்கள் என்ன வேண்டிக்கொண்டிருந்திருப்பீர்கள்?’’

 

‘’ அதாவது, இருபதாவது பிறந்தநாளின் இரவில் என்கிறீர்கள்.’’

 

‘’ஹூம், ம்..ம்’’

 

நான் அதுபற்றி யோசிக்கச் சிறிது அவகாசம் எடுத்துக் கொண்டேன். என்றாலும் எல்லாவற்றையும் சேர்த்து ஒரே வேண்டுதலாக என்னால் சொல்ல முடியவில்லை.

 

‘’என்னால் எதையும் யோசிக்க முடியவில்லை.’’ என்று தோல்வியை ஒப்புக்கொண்டேன். ‘’ என்னுடைய இருபதாவது பிறந்தநாளிலிருந்து வெகுதொலைவுக்கு வந்து விட்டேனில்லையா?’’

 

‘’ உண்மையில், நீங்கள் எதையுமே நினைக்கமுடியாது. இல்லையா?’’

 

நான் தலையாட்டினேன்.

 

‘’ஒன்று கூடவா இல்லை?’’

 

‘’ ம்… ஒன்று கூட இல்லை.’’

 

அவள், என் கண்களுக்குள் ஊடுருவிக்கொண்டே, ‘’ அது ஏனென்றால், நீங்கள் உங்கள் வேண்டுதலை ஏற்கெனவே நிறைவேற்றி முடித்துவிட்டீர்கள்.’’ என்றாள்.

 

தமிழாக்கம் ; ச.ஆறுமுகம், வேலூர்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

. .

. .

 

 

 

 

மொழிபெயர்ப்பு சிறுகதை -மரம் – ஹெச். பி. லவ்க்ராஃப்ட் – தமிழில்: ஜெயந்தி சங்கர்

மரம்

ஹெச். பி. லவ்க்ராஃப்ட்

தமிழில்: ஜெயந்தி சங்கர்

 

 

 

 

 

 

அர்காடியாவிலிருக்கும் மேனலஸ் மலையின் பசுமையான சரிவிலிருக்கும் பாழடைந்த மாளிகையினருகில் ஓர் பிரமாண்ட ஆலிவ் மரம் நின்றது. முன்னொரு காலத்தில் உன்னதச் சிற்பங்களுடன் அழகாக இருந்து இப்போது பல்லிளிக்கும் மலையோர மாளிகையைப் போலவே சீந்துவாரற்று அண்மையிலேயே இருந்தது ஒரு கல்லறை. முறுக்கிய முரட்டு வேர்கள் கல்லறையின் மூலையிலிருந்து கிளம்பி கிரேக்கப் பளிங்கினாலான தரையை வெடித்து வெளியே வந்தது போல அசாதாரணமாக வளர்ந்திருந்தது அது. அதன் உருவம் வெறுக்கத் தக்கதாக இருந்தது. கோணிக் கொண்டிருந்த கிளைகளூடே மங்கலாய் நிலாக் காயும் இரவுகளில், விலங்குமில்லாத மனிதனுமில்லாத விகார உருக்கொண்ட விலங்கைப் போலிருந்த அம்மரத்தைக் கடக்கும் எளிய அவ்வட்டாரவாசிகள் மிக அஞ்சினர். வறிய இடையர்கள் முதல் சீமான்கள் வரை மேனலஸ் மலையில் திரிவோர் ஏராளம். ஆனால், கிட்டத்தட்ட எல்லோருமே விந்தை மனிதர்கள். ஆனால், அண்மையிலிருந்து ஒரு குடிசையில் வாழ்ந்த வயதேறிய தேனிப் பண்ணையாள் என்னிடம் முற்றிலும் வேறொரு கதையைச் சொன்னார்.

பல வருடங்களுக்கு முன்பு அந்த மாளிகை புதியதாகவும் பொலிவுடனுமிருந்தது. அதில் காலோஸ் மற்றும் ம்யூஸைட்ஸ் என்று இரண்டு சிற்பிகள் வாழ்ந்தனர். லிடியாவிலிருந்து ந்யாபோலிஸ் வரை அவர்களுடைய திறமையின் புகழ் பரவியிருந்தது. இருப்பினும், ஒருவர் கூட அதிக திறமையாளர் காலோஸை விட ம்யூஸைட்ஸ் என்றோ ம்யூஸைட்ஸை விட காலோஸ் என்றோ சொல்லத் துணிந்ததில்லை. காலோஸ்ஸின் சிலை கோரிந்த்தின் ஆலயத்தில் நின்றது. ம்யூஸைட்ஸ்ஸின் கற்சிலையோ பார்தெனன் அருகே இருக்கும் ஏதென்ஸ்ஸின் தூணில் இருந்தது.  மக்கள் திரண்டு சென்று காலோஸ் மற்றும் ம்யூஸைட்ஸ்ஸுக்கு தத்தமது மரியாதைச் செலுத்தினர். அவ்விருவரிடைய திறமைகளிடையே இருந்த போட்டிகள் எதுவும் பாதிக்காத அவர்களுடைய நட்பைக் கண்டு மிக வியந்தனர்.

காலோஸ் மற்றும் ம்யூஸைட்ஸ் இதமான இணக்கத்துடன் வாழ்ந்திருந்தாலும் இருவருடைய இயல்பும் முற்றிலும் வெவ்வேறானது. பண்டை கிரேக்கத்தின் டேஜியா மாநகரில் நடப்பது போல இரவின் இருளைக் களியாடிக் கொண்டாடுபவர் ம்யூஸைட்ஸ். அதே வேளையில், காலோஸ் வீட்டிலேயே முடங்கியிருப்பார்  அல்லது அடிமைகளின் பார்வையிலிருந்து முற்றிலும் ஒளிந்து ஆலிவ் மரத்தினடியின் ஒதுக்கிடங்களில் தனித்திருப்பார். மனதிற்குள் மின்னும் காட்சிகளைக் கண்டவாறு அங்கே தியானத்திலிருப்பார். அவரது அந்த தியான மெய்ப்பாடு பின்னாளில் நிரந்தரத் துவத்துடனான பளிங்கு உருக்கொண்டது. காலோஸ் இறந்து மறைந்தோரிடம் உரையாடினார் என்று வேலையற்றோர் கூறினர். அவரது சிலைகள் எல்லாமே அவ்வனதேவதைகள் மற்றும் வனதெய்வங்கள் தாம் என்று நம்பினர். எந்தவொரு மனிதரையும் முன்மாதிரியாகக் கொண்டவரில்லை காலோஸ் என்றும் கூறினர்.

ம்யூஸைட்ஸ் காலோஸ் மற்றும் ம்யூஸைட்ஸ்ஸின் புகழ் மிகவும் பரந்து விரிந்திருந்தது. இல்லையென்றால்,  ஸைராக்யூஸ்ஸின் டைரண்ட் தன் நகருக்கென்று ஆசையாகத் திட்டமிட்டிருந்த டைசேயின் விலைமதிப்பற்ற சிலையைப் பற்றிப் பேசத் தனது அதிகாரிகளை அனுப்பியிருப்பாரா ? சிலைகள் மிகப்பெரிய அளவில் நிகரற்ற வேலைப்பாடுகளுடன் இருக்க வேண்டும் என்றார். பயணிகளின் குறிக்கோளாகவும் தேசத்தின் அதிசயமாகவும் கூட இருக்க வேண்டும். யாருடைய வேலை பரந்த அங்கீகாரத்தைப் பெறுகிறதோ அவருக்கு சிந்தைக்கு அப்பாற்பட்ட உயர்வு உறுதியாகிறது. இதற்காக காலோஸ் மற்றும் ம்யூஸைட்ஸ் இருவரும் அழைக்கப் பட்டனர். அவ்விருவரிடையேயான சகோதரத்துவம் நிறைந்த அன்பு பரவலாகியிருந்தது. குயுக்தி நிறைந்த டைரண்ட் தன் போக்கில் ஒரு முடிவெடுத்தார். ஒருவரிடமிருந்து இன்னொருவர் திறன்களை மறைத்துக் கொள்ளாமல் உதவியும் ஆலோசனையும் கொடுக்க வேண்டும்.  ஒப்பற்றதும் அரிதானதுமான இச்சேவையில் உருவாகும் அழகிய இச்சிலைகளில் சிறந்தது உலகக் கவிகளின் அனைத்துக் கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டதாக இருக்கும். கவிஞர்களின் ஒப்புமையற்ற உயரிய கற்பனைகளை இருளுக்குள் தள்ளும் வல்லமை பெற்றதாக இருக்கும். இருவரும் டைரண்ட்யின் யோசனையை மகிழ்வுடன் ஏற்றனர். அடுத்து வந்த நாட்களில் அடிமைகள் உளிகளின் ஒலியைத் தொடர்ந்து கேட்க முடிந்தது. காலோஸ்ஸும் ம்யூஸைட்ஸ்ஸும் ஒருவர் மற்றவரிடம் தத்தமது சிற்பங்களை ஒளிக்கவில்லை. ஆனால், அவரவர் சிற்ப வேலையே அவர்கள் நேரத்தை முற்றிலும் விழுங்கித் தின்றது. அவர்களை யாரும் தொந்தரவு செய்யவில்லை. உலகம் தொடங்கிய ஆதிகாலத்திலிருந்து சிறைப்படுத்தப்பட்ட முரட்டுப் பாறைக்குள்ளிருந்து இரண்டு புனித உருவங்களும் கைதேர்ந்த செதுக்குதல்கள் மூலம் வெளியேறியது போலிருந்தன. அதைக்காண அப்போது அங்கு யாருமில்லை.

இரவில், ம்யூஸைட்ஸ் ‘டேஜியா’ விருந்துக் கூடத்தை அடைந்த போது காலோஸ் தன்னந்தனியாக ஆலிவ் மரத் தோப்பில் திரிந்தார். காலம் கடந்த போது முன்பு பளீரென்று ஒளிர்ந்த ம்யூஸைட்ஸ்ஸில் ஒருவித தளர்ச்சியைக் கண்டனர் மக்கள். காண்பதற்கு விநோதமாக இருந்தது. கலையுலகின் ஆகப் பெரிய அங்கீகாரத்தைப் பெறக் கூடிய ஓர் அற்புதத் தருணத்தில் இப்படியும் ஒருவரை மனவழுத்தம் முழுக்க ஆட்கொள்ளுமா என்று தமக்குள் பேசிக் கொண்டனர். பல மாதங்கள் கடந்தோடின. இருந்தாலும், ம்யூஸைட்ஸ்ஸின் இருண்ட முகத்தில் சூழலின் பதட்டத்துக்குப் பொருத்தமாக எதுவுமே தோன்றவில்லை.

ஒருநாள், ம்யூஸைட்ஸ்ஸே காலோஸ்ஸின் நோய் குறித்துப் பேசினார். அதன் பிறகு, யாரும் அவரது சோகத்தைக் கண்டு வியக்கவில்லை. சிற்பிக்கு நண்பரிடமிருந்த நெருக்கம் மிக ஆழமாகவும் புனிதமாகவும் கொண்டது. அதைத் தொடர்ந்து எல்லோரும் காலோஸ்ஸின் சிற்பத்தைக் காணச் சென்றனர். அனைவரும் காலோஸ்ஸின் முகத்தில் விரவிருந்த வெளுப்பையும் காணத் தவறவில்லை. அவரைச் சுற்றி நிலவிய ஓர் ஆனந்த நிச்சலம் ஒருவித மாயவுணர்வை ஏற்படுத்தியது. அவ்வுணர்வு ம்யூஸைட்ஸ்ஸின் பார்வையை விட தீவிரமாக இருந்தது. அவரது மனப்பதட்டம் மிகவும் அதிகமாக இருந்தது. எல்லா அடிமைகளையும் ஒருபுறந்தள்ளிவிட்டுத் தானே சேவையாற்றும் நோக்கில் தன் நண்பர் முன் குனிந்து பணிந்தார். தடித்த திரைச் சீலைகளுக்குப் பின்னால் ஒளிந்திருந்தன முடிவடையாத டைச்சேயின் இரண்டு சிற்பங்கள். சமீபத்தில் அரிதாகவே நோயாளியாலும் அவரது விசுவாச சேவையாளராலும் தொடப்பட்ட  முற்றுப்பெறாத சிற்பங்கள்.

மருத்துவர்கள் மற்றும் உற்ற நண்பர்களின் மேற்பார்வையிருந்தும் விளக்க முடியாத புரிந்து கொள்ளவே முடியாத வகையில் காலோஸ் அப்பட்டமாகச் சோர்வடைந்தபடியே இருந்தார். அடிக்கடி தான் மிகக் காதலித்த ஆலிவ் தோப்புக்குத் தூக்கிக் கொண்டு போக வேண்டினார். அமானுஷ்யங்களுடன் உரையாட விரும்புவது போல அங்கே தன்னைத் தனியே விட்டுவிடவும் சொன்னார். தன்னைக் கண்டுகொள்ளாமல் அமானுஷ்யங்கள் மீது ஈடுபாடு கொண்டிருக்கிறாரே என்று கொடகொடவென்று கண்ணில் கண்ணீர் பெருகினாலும் அவர் சொன்னது போலவே ம்யூஸைட்ஸ் நடந்தார். இறுதியில், முடிவு நெருங்கியது. நிதர்சனத்தை மறந்து காலோஸ் பேச ஆரம்பித்தார். மௌஸோலஸ்ஸுடையதை விட மிக அழகான கல்லறைத் தோட்டம் உருவாக்குவதாக அழுதவாறே ம்யூஸைட்ஸ் உறுதியளித்தார். ஆனால், பளிங்குக் கற்களின் புகழ் போதுமே என்று காலோஸ் அவரைக் கடிந்து கொண்டார். இறக்கும் தருவாயிலிருந்தவருக்கு ஒரேயொரு எண்ணம் தான் மனதில் இருந்தது. அவரது அடக்க இடத்தில் ஆலிவ் மரச் சுள்ளிகளைத் தன்னுடைய தலைக்கு அருகில் சேர்த்துப் புதைக்க வேண்டும் என்று விரும்பினார். ஓர் இரவில் ஆலிவ் தோப்பின் இருளில் தனித்து உட்கார்ந்திருந்தார்.  அப்போது தான் காலோஸ் இறந்தார். சொற்களுக்கப்பாற்பட்ட அழகில் அமைந்தது அவரது பளிங்குக் கல்லறை. ம்யூஸைட்ஸ் தன் அருமை நண்பருக்காகவே செதுக்கி உருவாக்கியிருந்தார். மறைந்த காலோஸ்ஸால் மட்டுமே எலிஸியம்மின் மேன்மைகளுக்கிணையான அது போன்ற நேர்த்திமிகு சுவர் சிற்பங்களைச் செதுக்க முடியும். மறக்காமல் காலோஸ்ஸின் தலைக்கருகில் தோப்பிலிருந்து ஆலிவ் மரச்சுள்ளிகளையும் புதைத்திருந்தார் ம்யூஸைட்ஸ்.

சோகத்தில் தவித்த ம்யூஸைட்ஸ்ஸின் முதல் ஆக்ரோஷ வெளிப்பாடாக டைசேயின் சிலையைச் செதுக்குவதில் தன் முழுமனதையும் செலுத்தினார். எல்லாப் புகழும் இனி அவருக்கானது.  ஆனால், யாருடைய திறனும் ஸைராக்யூஸ்ஸின் டைரண்ட்க்கு இனி வேண்டாம். காலோஸ்ஸுடையதும் வேண்டாம்; ம்யூஸைட்ஸ்ஸினுடையதும் வேண்டாம். ம்யூஸைட்ஸ்ஸின் உணர்ச்சிப் பிரவாகத்திற்கு ஒரு வடிகாலாகவே அமைந்தது அவரது அந்தக் கடும் உழைப்பு. ஒவ்வொரு நாளும் சீராக உழைத்தார். முன்பெல்லாம் மிகவும் ரசித்த தனது நிதானத்தைக் கூட மறந்திருந்தார். மாலைவேளைகளை நண்பரின் கல்லறைக்கருகில் செலவிட்டார். அங்கு உறங்கியவரின் தலைப்பக்கத்திலிருந்து சின்னஞ்சிறிய ஆலிவ் குறுத்து துளி விட்டிருந்தது. இதன் வளர்ச்சியும் உருவமும் மிகவும் விநோதமாக இருந்தது. அதைக் கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் வாயைப் பிளந்தனர். ம்யூஸைட்ஸ்ஸுக்கோ மிகுந்த சுவாரஸியமும் விரட்டப்பட்டது போன்றதுமான உணர்வேற்பட்டது.

காலோஸ்ஸின் மரணத்திற்குப் பிறகு மூன்றாண்டுகள் ஓடிவிட்டன. டைரண்ட்க்கு ஒரு தூதுவரை அனுப்பினார் ம்யூஸைட்ஸ். டேஜியாவின் கூடுமிடத்தில் பிரமாண்ட சிலை முடிக்கப்பட்டதென்ற வதந்தி உலவியது.  கல்லறைக்கருகில் வளர்ந்த மரம் உலகின் அனைத்து ஆலிவ் மரங்களையும் விஞ்சும்படியான அதிசயிக்கத் தக்க பிரமாண்டங்களைத் தொட்டபோது ஒன்றை கவனித்தனர். ஒரேயொரு கிளை மட்டும் அலாதியான வழக்கத்திற்கும் அதிகமான எடையில் முறுக்கிக் கொண்டு,  ம்யூஸைட்ஸ் பணியாற்றிய மேல்மாடியைத் தொட்டது. ம்யூஸைட்ஸ்ஸின் சிற்பத்தைக் காண வந்த அதே அளவில் இந்த பெரிய மரத்தைக் காணவும் மக்கள் தொடர்ந்து வந்தனர். இந்நிலையில் ம்யூஸைட்ஸ் தனியாக இருக்க வேண்டியிருக்கவில்லை. அவர் எண்ணிக்கையில் கூடிக்கொண்டு போன பார்வையாளர்களைப் பொருட்படுத்தவில்லை. சொல்லப்போனால், சிற்பப் பணி முடிந்திருக்கும் இவ்வேளையில் தனித்திருக்கவே அவர் மிக அஞ்சினார். மெல்லிய மலைக் காற்று தோப்பில் நின்ற மரங்களூடே, கல்லறை மரத்தைத் தழுவியவாறே பெருமூச்சு விட்டபடி வீசியது. விவரிக்க முடியாத தெளிவற்ற அதன் ஓசைகள் விசித்திரமாக இருந்தது.

வானம் இருண்டிருந்தது. டைரண்ட்டின் தூதுவர்கள் டேஜியாவுக்கு வந்தனர். அவர்கள் வந்தது டைசேயின் பிம்பத்தைச் ரசிக்கவும் ம்யூஸைட்ஸ்ஸுக்கு அழியாத கௌரவத்தைக் கொணரவும் என்று எல்லோரும் அறிந்திருந்தனர். ஆகவே, அவர்களுக்கு ப்ரோசெனோய்யால் கோலாகல வரவேற்பு கொடுக்கப்பட்டது. இரவு கடந்த போது மேனலஸ் மேட்டின் மீது அட்டாகாசப் புயலொன்று அடித்தது. நல்லவேளை ஊருக்குள் வந்து சேர்ந்தோம் என்று தூதுவர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அரசர் டைரண்ட்டின் உழைப்பையும், ஏற்பாட்டையும், அவரது தலைநகரின் ஜொலிப்பையும், ம்யூஸைட்ஸ் அரசருக்காக வடித்திருந்த சிலையையும் கண்டு களித்தபடியே அவை குறித்து அளவளாவினர். ம்யூஸைட்ஸ்ஸின் நல்லியல்புகளையும் டேஜியா மக்கள் பேசினர். மறந்த நண்பர் மீது அவருக்கிருந்த மறையாத அன்பைப்பற்றியும் கலைக்காக அவருக்குக் கிடைத்த அனைத்து அங்கீகாரங்களும் எப்படி அவரைச் சமாதானப் படுத்தத் தவறின என்றெல்லாம் கதைத்தனர். அவரிடத்தில் காலோஸ் இருந்திருந்தால், கண்டிப்பாக அவ்வங்கீகாரங்களை பெருமிதத்தோட எடுத்து அலங்காரமாகப் பூண்டிருப்பார். காலோஸுக்கருகில் வளர்ந்து நின்ற மரத்தைப் பற்றியும் அவர்கள் பேசினர். புயல் காற்று விகார ஒலியெழுப்பிக் கத்திய போது ஸைராக்யூஸ் மற்றும் அர்காடியா மக்கள் எல்லோரும் ஐயோலோஸ்ஸைத் தொழுது வேண்டினர்.

சூரியக் கிரணங்கள் ஒளிர்ந்த காலையில் டைரண்ட்டின் தூதுவர்களை மலைச் சரிவில் இருந்த சிலையில் இருப்பிடத்துக்கு ப்ரோசெனோய் அழைத்துச் சென்றார். ஆனால், இரவுக் காற்று அங்கே பல விநோதங்களை நிகழ்த்தியிருந்தது. உயிரற்ற அக்காட்சியில் அடிமைகள் அழுதபடி நின்றனர். ம்யூஸைட்ஸ் மிக ஆசையாசையாக கனவு கண்டு உழைத்து உருவாக்க ஆரம்பித்திருந்த பளிங்குக் கூடத்தை அங்கே காணோம்.  மிக அழகாக உருவாகவிருந்த ஆடம்பரக் கூடத்தின் எளிய தாழ்வார அடித்தளத்தையும் சிதைவுகளையும் கண்டபடியே செய்வதறியாதிருந்தனர். புதிய மரத்தின் பெரிய கிளையின் கீழே பளிங்கில் உருவாகியிருந்த கவிதை காணச்சகிக்காத இடிபாடுகளாகக் குவிந்திருந்தது. சிதைந்து கிடந்த பிரமாண்டத்தின் முன்னால் டேஜியாவின் மக்களும் வெளியூர் மக்களும் அதிர்ந்து சமைந்தனர். மானுடத்தின் விநோத மனத்தைப் பிரதிபலித்த அந்த மரம் வஞ்சம் தீர்த்த நிம்மதியுடன் நின்றது. அதன் முறுக்கிய பருமனான வேர்கள் செதுக்குருவங்கள் கொண்ட காலோஸ்ஸின் கல்லறையை நோக்கி நெளிந்து வளைந்து அடியாழம் சென்றது.

விழுந்து கிடந்த கட்டத்தின் இடிபாடுகளைக் கலைத்துத் தேடிய மக்களுக்கு அச்சமும் அதிர்ச்சியும் மேலுமதிகரித்தது. ஏனெனில், மென்மையுள்ளம் கொண்ட ம்யூஸைட்ஸ்ஸையும் டைசேயின் பிரதிமையையும் காணோம். ஒரு சிறு அடையாளத்தைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை. இடிபாடுகளில் வெறும் குழப்பமும் களேபரமும் தான் கிடந்தன. இரண்டு நகரின் பிரதிநிதிகளும் மிகவும் ஏமாற்றமடைந்திருந்தனர். இனி தன் ஊருக்குக் கொண்டு போக  சிலை இல்லை என்ற சிந்தனையை ஸைராக்யூஸ் மக்களால் சகிக்கவே முடியவில்லை. டேஜியா மக்களோ தமக்கென்று பெருமிதப்பட இனியொரு கலைஞன் இல்லை என்று வருந்தினர். ஆனால், ஸைராக்யூஸ் மக்களுக்கு ஏதன்ஸ்ஸில் கவர்ச்சிமிகு சிலை ஒன்று கிடைத்தது.  ம்யூஸைட்ஸ்ஸின் நல்லியல்புகள் மற்றும் நட்பைப் போற்றும் விதத்தில் டேஜியா மக்கள் கூடுமிடத்தில் பளிங்கு ஆலயத்தை எழுப்பி ஆறுதலடைந்தனர்.

இன்னமும் நிற்கிறது காலோஸின் கல்லறையிலிருந்து கிளம்பி வளர்ந்தோங்கிய ஆலிவ் மரம். சில இரவுகளில் காற்றடிக்கும் போது கிளைகள் ஒன்றுடன் ஒன்று உரசி, “ஓய்டா, ஓய்டா, தெரியுண்டா, தெரியுண்டா”, என்று மீண்டும் மீண்டும் சொல்வதாக தேனிப் பண்ணையாள் சொன்னார்.

ஹெச். பி. லவ்க்ராஃப்ட்

ஹெச். பி. லவ்க்ராஃப்ட் – (1890-1937) ஆகஸ்ட் 20 ஆம் தேதி அமெரிக்காவின் ரோட் தீவில் பிறந்தார். பிள்ளைப்பருவத்தில் பிஞ்சிலேயே பழுத்தவராக இருந்திருக்கிறார். இவரது ஆரோக்கியம் மிகவும் மோசமாக இருந்தது. பெற்றோர் மனநிலை பாதிக்கப்பட்டு இறந்திருந்தனர். உயர்நிலைக் கல்வியை முடிக்கவேயில்லை என்பதை நினைத்து தன் மரணம் வரை வருந்தினார். பதினைந்து வயது நிரம்புவதற்கு முன்பே இருமுறை நரம்புத்தளர்ச்சியால் பாதிக்கப்பட்ட இவர் சிறுவயது முதலே ஆத்திகராக இருந்தவர். ஹார்மோனிகா போன்ற zobo என்ற இசைக்கருவியை இசைப்பார். நவீன திகில் மற்றும் பேய்க் கதைகளின் முன்னோடியாக உலகளவில் அறியப்பெறும் இவர் 16 வயது முதல் ‘Providence Tribune’ நாளிதழில் வானியல் துறை சார்ந்த பத்திகள் எழுதினார். 1908 முதல் 1923 வரை Weird Tales  போன்ற பல சிற்றிதழ்களில் கதைகள் எழுதிக் கிடைத்த சொற்ப வருவாயில் வாழ்ந்தார். அவர் வாழ்ந்த காலங்களில் அவரது கதைகள் அப்படிப் பெரிதாய் ஒன்றும் பொருளீட்டி விடவில்லை. தன்னை விட 7 வயது மூத்த Sonia Haft Shifirkin Greeneயை மணம் முடித்தார். நிறைய பயணங்களை மேற்கொண்ட இவர் Robert E. Howard, Frank Belknap Long போன்ற பல எழுத்தாளர்களோடு நட்பு கொண்டிருந்தார். பேய்கள், மாந்திரிகங்கள், அமானுஷ்யங்கள், பேசவே முடியாத தீய சக்திகள், காலமும் வெளியும் சீரற்றுக் கண்டபடி இருக்கும் கற்பனையுலகங்கள் ஆகியவை இவரது எழுத்துக்களின் முக்கிய கூறுகள். கிறுக்குத் தனங்கள் மிகக் கொண்டவர். சிறிய சோர்வோ எரிச்சலோ இல்லாமல் தொடர்ந்து 36 மணிநேரம் விழித்திருப்பார். கெடுவுக்குள் எழுதி முடிக்கவென்று ஒரு முறை 60 மணிநேரம் உறங்காமல் விழித்திருந்தார். இரோவின்ஸில் மார்ச் 15ஆம் தேதி கடும் வறுமையில் இறந்தார். பத்தாண்டுகளுக்குப் பிறகு, அவரது எழுத்துக்கள் தீவிர கவனத்தைப் பெற ஆரம்பித்தன. பின்னாளில் அலையென எழுந்த கற்பனாவாதம் மற்றும் அறிவியல் புனைவுகள் மீது இவரது எழுத்துக்கள் பெருந்தாக்கத்தை ஏற்படுத்தின. அவரது கதைகள் சேகரிக்கப்பட்டு The Outsider and Others (1939) and Haunter of the Dark and Other Tales (1951) உள்ளிட்ட பல தொகுப்புகளாக பிரசுரமாகின. இவரது கற்பனையான மிஸ்கடோனிக் பல்கலைக்கழகம் இவரது அனைத்துக் கதைகளிலும் வருகிறது. அந்தப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் நெக்ரோனோமிகோன் என்ற தீய கதாப்பாத்திரம் இருக்கிறது. இதே பாத்திரம் எட்டாம் நூற்றாண்டைக் களமாகக் கொண்ட ‘The Mad Arab’ உள்ளிட்ட நிறைய கதைகளில் வரும். நவீன புனைவாளர்களான Stephen King, John Carpenter, Robert Bloch, Clive Barker and Anne Rice போன்றவர்களுக்கு முன்மாந்திரியாக அமைந்தவர். தன் வாழ்நாளில் 40,000-100,000 கடிதங்கள் வரை எழுதி 20ஆம் நூற்றாண்டில் ஆக அதிக கடிதங்கள் எழுதியவர் என்றறியப் பெறுகிறார். “உலகிலேயே மிகவும் கருணை மிகுந்ததொரு விஷயம் என்று நான் நினைப்பது மனித மனத்தால் எல்லாவற்றையும் தொடர்பு படுத்திக் கொள்ள முடியாதது தான். பரந்து விரிந்து கிடக்கும் முடிவின்மை எனும் கருங்கடலில் இருக்கும் சின்னஞ்சிறிய அறியாமைத் தீவில் வாழ்கிறோம் நாம். அதிக தூரம் பயணப்படக் கூடாதென்பது தான் நமக்கு விதிக்கப் பட்டது”, என்று இவர் கூறியது மிகப் பிரபல மேற்கோளாக இன்றைக்கும் சுட்டப்படுகிறது. ‘மரம்’ சிறுகதை இவரது துவக்ககாலங்களில் (1920) எழுதப்பட்டு அக்டோபர் 1921ல் முதன்முறையாகப் பிரசுரமானது.

ஜெயந்தி சங்கர்

 

 

மொழிபெயர்ப்பு – காலம்- மீண்டும் ஆங்கிலத்தில்: டிம் மாலெ தமிழில்: சித்தன் பிரஸாத்

காலம்- மீண்டும்

ஆங்கிலத்தில்: டிம் மாலெ

தமிழில்: சித்தன்  பிரஸாத்

 

 

 

 

 

 

 

 

நாம் சந்திப்பதற்கு  முன்னாலேயே, நீ உன்னுடைய நாட்குறிப்பைக் காட்டியிருந்தாய்.

 

திடீரென உன் வாழ்க்கையிலிருந்து விலகிக் கொள்ளுவதென்கிற என் தீர்மானத்தினால், நீ எந்த அளவுக்கு குழப்பமடைந்திருப்பாய்  என்பதை என்னால் ஊகிக்க முடிகிறது. அந்த அளவுக்கு இந்த சம்பவங்களின் வரிசைக் கிரமம் குறித்து நான் குழப்பமடைந்திருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். மீண்டும் மீண்டும் எல்லாவற்றைக் குறித்தும் என் தலைக்குள்  போட்டு உருட்ட, சகலமும் கலந்து கந்தர்கோலமாகிக் கிடக்கிறது என்கிற உணர்வை என்னால் உதறித் தள்ள இயலவில்லை. இதெல்லாம்  ஒரு காரணமா என்று உனக்குத் தோன்றலாம்.. ஆனால், எனக்கு இந்தக் காரணம் போதுமானது. எனக்குப் புரியவில்லை அதனால் நான் உன்னிடமிருந்து விலகிப் போகவிருக்கிறேன்.

நாம் சந்திப்பதற்கு  முன்னால் நீ உன் நாட்குறிப்புப் புத்தகத்தைக் காட்டினாய்… பின்னர் உன் வரவேற்பறையின்  மரப்பலகை வேய்ந்த தரையில்  நாம் புணர்ந்தோம். செடிகளின்  வழியே வடிகட்டப்பட்டு உள்ளிறங்கிய  சூரிய ஒளியும், உள்ளே தேநீர் கெட்டிலில் நீராவி பெருகும் சப்தமும் இன்னமும் என் நினைவின் தடத்தில் உள்ளது.

பிறகு கட்டிலின்  கால்பகுதியில் நின்றவாறு  நம் மகன் நீ எங்கே போய்விட்டாய் எனக் கேட்டான்.

“ எனக்கும் தெரியல…. சீக்கிரமே திரும்பிடுவான்னு நினைக்கிறேன்” என்றேன்.

இன்று நான் உனது படிப்பறைக்குள் சென்றேன். அதை நீ ஒரு கூடமாக மாற்றியிருந்திருப்பதைக் கண்டேன். நாம் எடுத்துக்கொண்ட ஒவ்வொரு புகைப்படச் சுருளின் முதல் புகைப்படமும் அங்கு எங்கோ இருக்கிறது. ஒவ்வொன்றையும் என்னால் தேதிவாரியாக நாள் கணக்கில் சுட்ட முடிந்தது, நமக்குள் இதுவரை நடந்திராதவற்றையும் கூட என்னால் சுட்டிக் காட்ட முடிந்தது. கண்களைக் குருடாக்கும் வெள்ளை ஒளியினால் ஒவ்வொன்றும் ஓரளவுக்கு மறைக்கப்பட்டு, ஆனந்த நினைவுகளின் கலப்பட குழப்பமாக இருக்கும் அவை முடிவற்று சென்று கொண்டே இருந்தன. ஒரு ஆணிகள் இருந்த குடுவையை கவிழ்த்து விட்டேன். அவற்றை குனிந்து எடுக்க முயற்சி செய்ய, மிக உயரத்திலிருந்து கிழே பார்க்கும் போது ஏற்படும் தலைச் சுற்றலினால், அம்முயற்சியை கைவிட்டுத் திரும்ப வேண்டியதாயிற்று.

 

உன் வீட்டு அடித்தளத்தில்  மிக மூர்க்கமாக நாம் புணர்ந்து  கொண்டிருந்த போதுதான் நீ முப்பரிமாணத்துடன் சேர்ந்த  காலம் உள் அடக்கிய நான்காவது  பரிமாணமான ஸ்பேஸ்டைம் குறித்து சொன்னாய். எதிர்காலம் என்பதும் நிகழ்காலத்தைப் போலவே உண்மையானது என்றாய். நீ எதிர்காலத்தில் இல்லை என்பதற்காக எதிர்காலம் என்பது உண்மையில்லாததாகி விடாதென்றாய். நீ லண்டனில் இருக்கும் போது பாக்தாத் இருப்பதென்பது உண்மையென்பதைப் போலத்தான் அதுவும் என்றாய். தனிமனிதக் காலம், மடங்கும் விண்வெளி, பால் வெளியில் ஒரு புள்ளியிலிருந்தும் காலத்தின் ஒரு கணத்திலிருந்தும் புறப்படும் ஒரு ஒளிவீச்சு செல்லும் பாதையான காலக் கூம்பு என்றெல்லாம் பேசினாய். குளிரில் உன் மூச்சு ஏற்படுத்தும் மூட்டத்தையும், உன் முலைகளின் அசையும் விததையும் தவிர வேறு எதுவும் எனக்குப் புரியவில்லை. திடீரென நாம் மேலும் கீழும் இயங்கும் கண்காட்சி தொடர்வண்டியென ஆனோம். நீ கிரீச்சிட்டுக் கொண்டிருந்தாய். எக்காலத்திலும் இதே போன்றுதான் இருக்கப் போகிறது என்று நீ கத்தினாய். பலூன் வியாபாரியின் கைகளிலிருந்து பலூன்கள் விடுபட்டு வானத்தில் கம்பீரமாக மிதக்கத் தொடங்கின.

அது அழகாக அமைந்திருந்தது.

 

10101010

நீ உன்னை அறிமுகப்படுத்திக்  கொண்ட பிறகு, நாம் நம்முடைய பரிச்சயத்தைப் புதுப்பித்துக் கொண்டோம். எதற்காக நீ ஒரு ’டிரைவ்-இன்’-னை தேர்வு செய்தாயெனக் கேட்டேன். நீ உன் மனதாழத்தில் இரண்டாம் வரிசை திரைப்படங்களின் மீது ஒரு கனிந்த ஆர்வம் வைத்திருப்பதாகத் தெரிவித்தாய். அவற்றின் உள்ளார்வ அக்கறை மீது தனக்கு ஒரு ஈர்ப்பு இருப்பதாகக் கூறினாய். மிகுதியான பணமுதலீட்டுடன் தயாரிக்கப்படும் திரைப்படங்கள் நம்மிடம் இப்போதெல்லாம் தூண்டத் தவறிவிட்ட கற்பனையை இவை தூண்டுவதாகச் சொன்னாய். அந்த வகையில் பார்க்கும் போது, எவ்வளவுதான் மனச் சோர்வை ஏற்படுத்தினாலும், அறிவியல் புனைக் கதைகள் நிச்சயமாக ஒரு எதிர்காலம் உண்டு என்று நம்பிக்கை கொண்டுள்ளன. நாம் அரங்கில் இருந்தோம். நம் முன்னால் முதலீட்டாளர்கள் கூடியிருந்தனர். அவர்களிடம் நீ உன் இயந்திரத்தைப் பற்றி விரிவுரையாற்றிக் கொண்டிருந்தாய். அவர்கள் தலையசைத்து புன்னகைத்துக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு நீ சொல்லுவது எதுவும் புரியவில்லை என்றாலும், நிபுணர்கள் உன் இயந்திரத்தின் பயன்பாட்டைப் பற்றி விரிவாக ஏற்கெனவே நம்பிக்கையுடன் பரிந்துரைத்திருந்தனர். என்னத்தான் ஆனாலும் இது போர்காலம் அல்லவா! காப்பி படுமோசமாக இருந்தது. நான் என் இருக்கையில் அமர்ந்து தவித்துக் கொண்டிருந்தேன். நீ அங்கு பிரகாசித்துக் கொண்டிருந்தாய். எந்திரம் பழுதாகிப் போனால் என்னவாகும் என்பதை அங்கிருந்த எவருக்கும் கேட்பதற்குக் கூட தோன்றவில்லை.

 

இன்று அடுக்களையின் தரையில் ஒரு முட்டையின் பகுதிகள் தாமாகவே வந்து  கூடிக் கொண்டிருந்த்தைக் கண்டேன். முட்டையின் இறுதிப் பகுதி வந்து ஒட்டிக் கொள்ளும் போது ஒருவித் ‘ப்ளக்’ என்கிற சப்தமெழுப்பியது. பின்னர், அது காற்றில் மேலே மேலே எழும்பி அடுக்களை மேடையில் சென்று இருந்து கொண்டது. தலைக்கு மேலே ஒரு ஹெலிகாப்டர் சப்தமெழுப்பியபடி பறந்து சென்றது. நம் மகன் உள்ளே வந்து தான் பயப்படுவதாகச் சொன்னான். அவனிடம் என்ன சொல்லுவதென்றே எனக்குத் தெரியவில்லை. யுத்தம் தொடங்கிவிட்டது. எப்போது எப்ப்டி அது முடிவுறும் என்று யாராலும் சொல்ல முடியாது.

நீ இந்த கடிதத்தை வாசித்தபோது உன் முகத்தில்  தோன்றிய உணர்வுகள் எனக்கு நினைவுக்கு வருகிறது. “ நாம் இப்படியானதொரு  வாழ்க்கை வாழ வேண்டியவர்களில்லை” என்று நான் கடித்தின் இறுதி வரியாக முடித்திருந்தேன். அது உன் கண்களோரத்தில் நீர் கோர்க்க வைத்தது.  நீ நம் மகனிடம் திரும்பி நான் சென்றுவிட்டேன் என்பதை விவரிக்க முயற்சித்தாய். ஆனால் நீ எப்படி விவரிக்க முடியும்? ஒரு குழந்தைக்கு ‘சென்றுவிட்டார்’ என்பதை எவ்வாறு புரியும்படி சொல்ல முடியும்? பிறகு நாம் நட்சத்திரங்களுக்குக் கீழே படுத்திருந்தோம். வாணவேடிக்கைகள் ஆரம்பமான வேளையில் நீ என்பால் சரிந்து என்னை முதன்முதலாக முத்தமிட்டாய். சோளப்பொறியைப் போன்று வாசமளித்தாய். நீ ஒரு புதிய கணவனை தேர்ந்து கொண்டதற்கு நான் உன்னை கடிந்து கொள்ள முடியாதுதான்.

நீ இறுதியாகத் திரும்பி வந்த போது இன்னும் இளமையாக  இருந்தாய். நம் இருவருக்குமே அது தாங்கிக் கொள்ளவியலாததாக இருந்தது என்று நான் நினைக்கிறேன். ஒரே விதமான நினைவுகளை நாம் அதன் பிறகு பகிர்ந்து கொள்ளவில்லை. நீ என்னை அணைத்துக் கொண்டு, நீ பெரிதாக ஒன்றும் மாறியிருக்கவில்லை என்பது ஒரு பொருட்டல்ல என்று சொன்னாய். ஆனால் நம் இருவருக்குமே இப்போது அது உண்மையல்ல என்று தெரியும் என்று நான் நினைக்கிறேன். காலம் மனிதர்களை மாற்றியது. அப்படித்தான் அது செயல்படுகிறது.

       0101010101

இன்று நான் அடித்தளத்திற்குச்  சென்று இயந்திரத்தைப் பார்த்தேன். நீ அதன் இயக்கத்தைத் துவக்கி  வைத்த நாள் இப்போதும் என்  நினைவிலிருக்கிறது. நீ பத்திரிகை நிருபர் கூட்டத்தின் முன்பாக நம் மகனுடனும் அருகில் உன் புதிய கணவனுடனும் நின்று கொண்டிருந்திருப்பாய். காலம்,மரணம் இவற்றின் சர்வாதிகாரம் குறித்தும், அவற்றின் மீது அறிவியல் பெரும் வெற்றியைக் குறித்தும், அது நம்மை எவ்வாறு விடுதலை செய்தது என்பதைக் குறித்தும் நீ உன் சொற்பொழிவை ஆற்றுவாய். ஆனால், உனதுள்ளே, இதை பார்ப்பதற்கு அவர் என்னுடன் இருந்தால்…., என்று யோசித்தவாறு இருப்பாய். இது எனக்கு உறுதியாகத் தெரியும். காரணம், நாம் சந்திப்பதற்கு முன்பே நீ உன் நாட்குறிப்புப் புத்தகத்தை எனக்குக் காட்டியிருந்தாய். நீ இந்த நாள் குறித்தும் அதில் எழுதியிருந்தாய். எப்படி உன்னால் எழுதாமலிருக்க முடியும் ? இது உன் வாழ்க்கையில் ஒரு முக்கியமான நாளல்லவா? நீ எங்களை பகைவனிடமிருந்து காத்து யுத்தத்தை நிறுத்தியிருக்கிறாய்.  இதை நிறுத்துமாறு நீ என்னிடம் கேட்டாய். நான் ஒன்றும் செய்வதற்கில்லை.கடந்த காலத்தைப் போலவே எதிர்காலமும் உண்மையான ஒன்றுதான். இனிமேல் முன்பு என்பதோ பின்பு என்பதோ கிடையாது.  உன் காரணமாகத்தான் , அவ்வாறு ஒருபோதும் இருந்ததில்லை.

நாம் இப்படியானதொரு  வாழ்க்கை வாழ வேண்டியவர்களில்லை

•••

மொழிபெயர்ப்பு _ நேர்காணல் – ரேமண்ட் கார்வர் – தமிழில்: ஜி.குப்புசாமி

மொழிபெயர்ப்பு _ நேர்காணல் – ரேமண்ட் கார்வர் – தமிழில்: ஜி.குப்புசாமி

உலகின் தலைசிறந்த சிறுகதைகள் என்ற பெயரில் எத்தனை தொகுப்புகள் வந்தாலும் அவற்றில் தவறாமல் இடம் பெற்றுவிடுகிற பெயர் ரேமண்ட் கார்வர். 1938ல் அமெரிக்காவின் ஓரிகன்னில் கிளாட்ஸ்கனீ என்ற ஊரில் பிறந்தவர். அமெரிக்காவின் தரத்தில் கீழ் மத்திய வர்க்கத்தைச் சேர்ந்த இவரது வாழ்க்கை மணவாழ்க்கைச் சிக்கல்களாலும் மதுப்பழக்கத்தாலும் கொந்தளிப்பாகவே இருந்தது.

எவ்வளவு பிரச்சனைகள் இருந்த போதிலும் அவரிடமிருந்த இலக்கிய மேதமை பற்பல அற்புதமான, காலத்தால் அழியாத சிறுகதைகளை படைத்து வந்தது. வர்ணனையற்ற கதை சொல்லும் பாங்கு, நேரடியான விவரிப்புகள், தீவிர உணர்ச்சிபாவத்தைக் கோரும் இடங்களில் கூட மிகக்குறைவான சொற்களில் அதீதமான அழுத்தம் கொண்டிருக்கும் வரிகள் என இவரது சிறுகதைகள் 1970களில் ஒரு புதிய அமெரிக்க இலக்கிய எழுச்சியை சிறுகதைகளில் கொண்டுவந்தது. ரிச்சர்ட் ஃபோர்டு, டோபியாஸ் உல்ஃப் போன்ற எழுத்தாளர்களை இவரது பாணியில் எழுத, பின்பற்ற வைத்த ‘மினிமலிஸம்’ என்ற புதிய வகை எழுத்துக்கு ஆதாரமாக அமைந்தது இவரது சிறுகதைகள்.

*

உங்கள் ஆரம்பகால வாழ்க்கை எப்படியிருந்தது? எது உங்களை எழுத வேண்டுமென்று ஆக்கியது?

கிழக்கு வாஷிங்டனிலிருந்த யாகிமா என்ற சிற்றூரில் வளர்ந்தேன். அங்கிருந்த மர இழைப்பகத்தில் அப்பா பணியாற்றி வந்தார். இரம்பங்களை சாணைத் தீட்டுகிற வேலை. அம்மா ஒரு கடையில் எழுத்தராக, உணவு பரிமாறுபவராக என்னென்னவோ வேலை பார்த்து வந்தார்.  இல்லாவிட்டால் வீட்டில் இருப்பார். எந்த வேலையிலும் நீண்ட காலம் இருந்ததில்லை. அவளது ‘நரம்புக்கோளாறு’ பற்றி வீட்டில் ஒரு  பேச்சு இருந்தது ஞாபகத்தில் இருக்கிறது. சமையலறையில் அங்கணத்துக்கு அடியிலிருந்த அறையில் அம்மா ஒரு விசேஷமான ‘நரம்பு மருந்து’ வைத்திருந்தார். ஒவ்வொரு நாள் காலையிலும் இரண்டு கரண்டியளவுக்கு எடுத்து அருந்துவார். அப்பாவின் நரம்பு மருந்து விஸ்கி. அதே அறையில் அவரும் ஒரு குப்பியை வைத்திருப்பார். அல்லது வெளியே மரக்கொட்டகையில் வைத்திருப்பார். அதை ஒருமுறை எடுத்து சுவைத்துப் பார்த்துவிட்டு வெறுத்துப்போய் இந்தக் கருமத்தை எப்படி குடிக்கிறார் என்று குமட்டலெடுத்தேன். வீடு என்பது ஒரு சிறிய இரண்டு படுக்கையறை வீடாகத்தான் இருந்தது. சிறுவயதில் பல வீடுகளுக்கு மாறியிருக்கிறோம். எல்லாமே மற்றுமொரு சிறிய இரண்டு படுக்கையறை வீடுகள்தான். யாகிமாவில் சந்தை கூடுமிடத்தில் இருந்த வீடுதான் என் ஞாபகத்தில் நான் இருந்த முதல் வீடு. அதில் கழிப்பறை வெளியே தனியாக இருந்தது.

அந்த காலகட்டம் 1940களின் கடைசி. அப்போது எனக்கு எட்டு அல்லது பத்து வயதிருக்கும். அப்பா வேலையிலிருந்து திரும்பி வரும்போது பேருந்து நிறுத்தத்தில் அவருக்காகக் காத்திருப்பேன். பெரும்பாலும் நேரம் தவறாமல் சரியாக வந்து இறங்கிவிடுவார். ஆனால் இரண்டு வாரங்களுக்கொருமுறை வழக்கமான பேருந்தில் வந்து இறங்கமாட்டார். அடுத்த வண்டிக்காக காத்துக்கொண்டு நிற்பேன். அதிலும் வரமாட்டார். அதற்கு அர்த்தம், மர இழைப்பகத்திலிருந்து அவர் நண்பர்களோடு குடிக்கச் சென்றிருக்கிறார் என்பதுதான். அப்போதெல்லாம் அம்மாவும், நானும், என் குட்டித்தம்பியும் சாப்பாட்டு மேஜையில் இரவு உணவுக்காக உட்காரும்போது கவிகிற இருண்மையும் அவநம்பிக்கையும் இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது.

எது உங்களை எழுத வைத்தது?

என் அப்பா சிறுவனாக இருந்தபோது நடந்த கதைகள், அவருடைய அப்பா, தாத்தா பற்றியெல்லாம் எண்ணற்ற கதைகளை எனக்கு சொல்லியிருக்கிறார் என்பதைத்தான் ஒரே காரணமாக என்னால் கூறமுடியும். என் அப்பாவின் பாட்டனார் உள்நாட்டுப் போரில் பங்கெடுத்திருக்கிறார். அவர் இரண்டு  தரப்புகளுக்காகவும் போரிட்டிருக்கிறார்! அவர் ஒரு கட்சி மாறி. அவர் போரிட்டு வந்த தெற்குத் தரப்பு போரில் பின் வாங்கத் தொடங்கியதும், வடக்குத் தரப்புக்கு மாறி ஒன்றியப் படைகளுக்காக போரிடத் தொடங்கியிருக்கிறார். அப்பா இந்தக் கதையைச் சொல்லும்போது விழுந்து விழுந்து சிரிப்பார். அவருக்கு இதில் ஏதும் தப்பிருந்ததாகத் தெரியவில்லை. எனக்கும் அப்படித்தான் என்று  நினைக்கிறேன். அப்பா சொல்லும் கதைகள் துணுக்குகளாகத்தான் இருக்கும். நீதி போதனைகள் இருக்காது. காட்டில் அலைந்தது, நாரை வேட்டை, காட்டெருதுகளைத் தேடிப் பார்த்தது. அவருடன் இருப்பதும் இந்தக் கதைகளைக் கேட்பதும் பேரானந்தமாக இருக்கும். எப்போதாவது அவர் வாசித்துக் கொண்டிருப்பதிலிருந்து எதையாவது படித்துக்காட்டுவார். ஙூச்ணஞு எணூஞுதூ-வெஸ்டர்ன்களாகத்தான் அவை இருக்கும். பள்ளிப் பாடப்புத்தகங்களையும் பைபிளையும் அடுத்து நான் பார்த்த கெட்டி அட்டை நூல்கள் அவைதான். இது அடிக்கடி நிகழ்வதல்ல. மாலை நேரங்களில் படுக்கையில் சாய்ந்தபடி ஜேன் கிரே நூல்களை வாசித்துக் கொண்டிருப்பதைப் பார்த்திருக்கிறேன். தனி ஒதுக்கிடம் என்று எதுவுமற்ற எங்கள் வீட்டில் அது ஓர் ஒதுக்கமான செயலாக எனக்குப்பட்டிருக்கிறது. அவருக்கென்றிருக்கும் ஓர் அந்தரங்கமான பகுதி அது என்று உணரமுடிந்தது. அதை என்னால் புரிந்து கொள்ளவோ, அதைப்பற்றி தெரிந்து கொள்ளவோ முடிந்ததில்லை. ஆனால் அவர் அப்படி ஒதுக்கமாக இருந்தபடி தனிமையில் புத்தகம் வாசித்துக் கொண்டிருப்பதில் அவரது அந்தப்பகுதி புலப்படும். அவரது இந்தப் பகுதியில், அவரது இந்த செய்கையில் எனக்கு ஓர் ஆர்வம் ஏற்பட்டது. அவரிடம் சென்று என்ன வாசிக்கிறார் என்று கேட்டிருக்கிறேன். அவர் வாசித்துக் கொண்டிருந்த பகுதி எதுவோ அதிலிருந்து சில வரிகளை உரக்க வாசித்துவிட்டு, “ஜூனியர், நீ போய் வேறு ஏதாவது செய் என்பார்.” செய்வதற்கு  பல விஷயங்கள் அப்போது இருந்தன. எங்கள் வீட்டிலிருந்து அதிக தூரத்தில் இல்லாத ஆற்றுக்காலில் மீன்பிடிக்கச் செல்வேன். அதன் பிறகு வாத்துக்களை வேட்டையாடவும், மேட்டுநில ஆட்டங் களையும் தொடங்கினேன். அந்நாட்களில் வேட்டையாடுவதும், மீன்பிடிப்பதும் தான் கிளர்ச்சியூட்டுபவையாக இருந்தன. என் உணர்வுபூர்வ வாழ்க்கையில் அதுதான் பாதிப்பையும் உண்டாக்கியிருந்தது. அதைத்தான் எழுதவிரும்பினேன். அந்நாட்களில் நான் வாசித்தவை எப்போதாவது வரலாற்று நாவல்களும், மிக்கி ஸ்பில்லேன் மர்மக் கதைகளையும் தவிர குணீணிணூtண் அஞூடிஞுடூஞீ ச்ணஞீ Oதtஞீணிணிணூ ஃடிஞூஞு, ஊடிஞுடூஞீ – குtணூஞுச்ட் என்றே இருந்தன. நான் பிடிக்க முயன்று தப்பித்துப் போன மீனைப்பற்றி, அல்லது நான் பிடித்த மீனைப்பற்றி, இந்த இரண்டில் எதைப்பற்றியோ  நீளமாக எழுதி என் அம்மாவிடம் கொடுத்து தட்டச்சு செய்துத்தரச் சொன்னேன். அவருக்கு தட்டச்சு செய்யத் தெரியாது. ஆனாலும் ஒன்றை வாடகைக்கு எடுத்து, நாங்கள் இருவரும் மாறி மாறி, கோரமாக தட்டச்சு செய்து அதை அனுப்பி வைத்தோம். நான் வாங்கும் வேட்டை விளையாட்டு இதழின் முகப்பில் இரண்டு விலாசங்கள் இருந்தன. அவற்றில் எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த விலாசத்திற்கு அதை அனுப்பினோம். கடைசியில் அது திரும்பி வந்துவிட்டது. ஆனாலும் பரவாயில்லை. நான் எழுதிய ஒரு பிரதி வெளியுலகை அடைந்து விட்டது. என் அம்மாவைத் தவிர வேறு யாரோ அதனைப் படித்துவிட்டார்கள்; அது போதும் என்றிருந்தது. அப்புறம்  ஙிணூடிtஞுணூண் ஈடிஞ்ஞுண்t-ல் ஒரு விளம்பரம் பார்த்தேன். புகழ்பெற்ற எழுத்தாளர் ஒருவரின் புகைப்படத்தைப் போட்டு, அவர் அந்த பால்மர் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆதர்ஷிப் என்ற எழுத்துப்பயிற்சி நிலையத்தை வளரும் எழுத்தாளர்களுக்கு பரிந்துரை செய்வதாக வெளியாகியிருந்தது. அது எனக்குப் பொருத்தமாக இருக்குமென்று தோன்றியது. மாதத்திற்கு 20 டாலரோ, பதினைந்து டாலரோ கட்டணமாக, மூன்று வருடத்திற்கோ அல்லது முப்பது வருடங்களுக்கோ பயிற்சி என்று போட்டிருந்தது. வாராவாரம் தனிப்பட்ட முறையில் பயிற்சி இருந்தது. சில மாதங்கள் தொடர்ந்தேன். பிறகு எனக்கு போரடித்துவிட்டது என்று நினைக்கிறேன். பயிற்சிக்கு செல்வதை நிறுத்திவிட்டேன். வீட்டில் இருப்பவர்களும் கட்டணம் செலுத்தவில்லை. பிறகு ஒரு நாள் பால்மர் இன்ஸ்டிட்யூட்டிலிருந்து ஒரு கடிதம் வந்தது. மீதமுள்ள மொத்த தொகையையும் செலுத்திவிட்டால் பயிற்சியை நிறைவு  செய்திருப்பதாக சான்றிதழ் வழங்கப்படும் என்றிருந்தது. இது நியாயமான விஷயம்தானே! எப்படியோ என் பெற்றோர்களிடம் நைச்சியமாகப் பேசி தொகையை செலுத்திவிட்டேன். என் படுக்கையறை சுவரில் அந்த சான்றிதழை மாட்டிவைத்தேன். ஆனால் என் உயர்நிலைப் பள்ளிக் காலம் முழுக்கவும், படிப்பு முடிந்ததும் மர இழைப்பக வேலைக்குத்தான் அனுப்பப்படப் போகிறேன் என்று நினைத்திருந்தேன். அப்பா செய்கிறார்போல நானும் வேலை பார்க்க வேண்டுமென்ற ஆசை ரொம்ப நாட்களாக இருந்தது. பள்ளியை முடித்ததும் என்னை வேலையில் சேர்த்துக் கொள்ள அப்பா அவருடைய ஃபோர்மேனிடம் கேட்டுக் கொண்டிருந்தார். எனவே மர இழைப்பகத்தில் ஆறு மாதங்கள் வேலை செய்திருப்பேன். ஆனால் முதல் நாளே அந்த வேலை எனக்குப் பிடிக்காமல் போய்விட்டது. வாழ்க்கை முழுக்க இந்த வேலையையை செய்து கொண்டிருக்க முடியாது. ஆனால் ஒரு கார், கொஞ்சம் துணிமணிகள் வாங்குவதற்குத் தேவையான அளவு சேமித்த பிறகு வேலையை உதறிவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று அந்த ஆறு மாதங்களும் கடுமையாக உழைத்தேன்.

ஆனால் எந்த காரணத்திற்காகவோ கல்லூரியில் சேர்ந்துவிட்டீர்கள் இல்லையா? உங்கள் மனைவி கல்லூரியில் சேரும்படி ஊக்குவித்தாரா? அவரும் கல்லூரிக்குச் சென்றதால் நீங்களும்  செல்ல வேண்டியிருந்ததா? அப்போது உங்களுக்கு என்ன வயதிருக்கும்? உங்கள் மனைவிக்கும் சின்ன வயதாகத்தான் இருந்திருக்கும்.

எனக்கு பதினெட்டு. அவளுக்கு பதினாறு. கர்ப்பமாக வேறு இருந்தாள். வாஷிங்டனில் வாலா வாலா என்ற இடத்திலிருந்த எபெஸ்கோபாலியன் பிரைவேட் ஸ்கூலில் படிப்பை முடித்திருந்தாள். சமயப் பாடங்கள், ஜிம்னேஸிய உடற்பயிற்சிகள் என்றெல்லாம் படித்துவிட்டு இயற்பியலையும், இலக்கியத்தையும், அயல் மொழிகளையும் படித்திருந்தாள். அவள் லத்தீன் படித்திருக்கிறாள் என்று கேள்விப்பட்டு அரண்டு போனேன். யோசித்துப் பாருங்கள், லத்தீன்! அந்த காலகட்டத்தில் கல்லூரியில் சேரவேண்டுமென்று அவளுக்கு மிகவும் ஆசையிருந்தது. ஆனால் குடும்பத்தையும் நடத்திக்கொண்டு, கையில் காசில்லாமல், அவள் ஆசையை நிறைவேற்றுவது கஷ்டமாக இருந்தது. ஆம், கையில் ஒரு காசு கிடையாது. அவள் குடும்பத்திலும் பணம் இல்லை. அவள் ஸ்காலர்ஷிப்பில்தான் பள்ளிக்குச் சென்றிருந்தாள். அவள் அம்மாவுக்கு என்மேல் உண்டான வெறுப்பு இருக்கிறதே …, இப்போதும் என்னை அடியோடு வெறுக்கிறார். அவள் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயில்வதாக திட்டமிருந்தது. ஆனால் அவளை நான் கர்ப்பமாக்கிவிட்டேன். திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தத் தொடங்கிவிட்டோம். முதல் குழந்தை பிறந்தபோது அவளுக்கு வயது பதினேழு. இரண்டாவது பிறந்தபோது பதினெட்டு. நான் என்ன சொல்வதற்கு இருக்கிறது? எங்களுக்கு இளமைப்பருவம் என்பதே இருக்கவில்லை. எங்களுக்கு செயல்படுத்தத் தெரியாத பொறுப்புகளில் நாங்களே வலுக்கட்டாயமாக சிக்கிக் கொண்டு விட்டோம். இருந்தாலும் எங்களால் முடிந்தளவுக்கு உழைத்தோம். சும்மா சொல்லக் கூடாது, நன்றாகவே உழைத்தோம். அவள் கல்லூரியை முடித்தாள். எங்களுக்கு திருமணமாகி பனிரெண்டு அல்லது பதினான்கு வருடங்கள் கழித்து ஸான் ஹொஸே மாநிலத்தில் அவளது பி.ஏ.வைப் பெற்றாள்.

அந்தக் கடினமான ஆரம்ப வருடங்களில் எழுதிக் கொண்டிருந்தீர்களா?

இரவு நேரங்களில் வேலைபார்த்துவிட்டு பகல் நேரங்களில் கல்லூரிக்குச் சென்றேன். எல்லா நேரமும் உழைத்துக்கொண்டேயிருந்தோம். குழந்தைகளை வளர்க்கவும், வீட்டுச் செலவுகளுக்காகவும் அவளும் ஒரு தொலைபேசி நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். பகல் நேரங்களில் குழந்தைகள் ஆயா ஒருத்தியுடன் இருக்கும். கடைசியில் எனது பி.ஏ. பட்டப்படிப்பை  ஹம்போல்ட் மாநிலக் கல்லூரியில் முடித்தேன். எல்லா சாமான்களையும் மூட்டையாக காரின் மேல் வைத்துக் கட்டிக் கொண்டு அயோவா நகரத்துக்குச் சென்றோம். டிக் டே என்ற ஹம்போல்ட் கல்லூரி ஆசிரியர் ஒருவர் அயோவா எழுத்தாளர் பட்டறையைப் பற்றி சொல்லியிருந்தார். அவர் எனது கதை ஒன்றையும் மூன்று, நான்கு கவிதைகளையும் அங்கே டான் ஜஸ்டிஸ் என்பவருக்கு அனுப்பியிருந்தார். அவர்தான் அயோவாவில் ஐநூறு டாலர் மானியம் கிடைப்பதற்கு காரணமாக இருந்தார்.

ஐநூறு டாலர்தானா?

அவ்வளவுதான் அவர்களிடம் இருப்பதாகச் சொன்னார்கள். அந்த நேரத்தில் அதுவே அதிகம் போலத் தெரிந்தது. ஆனால் அயோவாவில் பயிற்சியை முடிக்கவில்லை. தொடர்ந்து இருந்தால் இரண்டாவது வருடத்தில் மேலும் அதிகமாகத் தருவதாகச் சொன்னார்கள். ஆனால் எங்களால் சமாளிக்க முடியவில்லை. ஒரு நூலகத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். மணிக்கு ஒரு டாலரோ இரண்டு டாலரோ கொடுத்தார்கள். என் மனைவி உணவு பரிமாறுபவளாக பணியாற்றினாள். பட்டப்படிப்பை முடிக்க மேலும் ஒரு வருடம் பிடிக்கும் போலிருந்தது. ஆனால் முடியவில்லை. எனவே கலிபோர்னியாவுக்கு குடிபெயர்ந்தோம். இம்முறை ஸாக்ராமென்டோ. மெர்ஸி மருத்துவமனையில் இரவுக்காவலராக வேலை கிடைத்தது. மூன்று வருடங்கள் அந்த வேலையில் இருந்தேன். அது நல்ல வேலை. இரவில் இரண்டு அல்லது மூன்று மணி நேரங்களுக்குத்தான் வேலை இருக்கும். ஆனால் எட்டு மணி நேரத்துக்கு ஊதியம் கிடைத்தது. சில வேலைகளைச் செய்து முடித்துவிட்டால் வீட்டுக்குப் போய்விடலாம். முதல் இரண்டு வருடங்களுக்கு ஓரளவு ஒழுங்கான நேரத்தில் படுக்கைக்குச் செல்லவும், காலையில் எழுந்து எழுதவும் முடிந்தது. குழந்தைகள் ஆயாவோடு இருக்கும். என் மனைவி வேலைக்குச் சென்று விடுவாள்-வீடு வீடாகச் சென்று பொருட்களை விற்பது-எனக்கு ஏராளமாக நேரம் கிடைத்தது. இது கொஞ்ச காலத்திற்கு ஒழுங்காகச் சென்றது. அப்புறம் ராத்திரி வேலை முடிந்ததும் குடிக்கச் செல்வது வழக்கமாகிவிட்டது. இது 1967 அல்லது 1968ஆக இருக்கலாம்.

முதல் கதை எப்போது பிரசுரமானது?

கலிபோர்னியாவில் ஹம்போல்ட் மாநிலக்கல்லூரியில் இளங்கலை மாணவனாக இருந்தபோது. ஒருநாள் என் சிறுகதை ஒன்று ஒரு பத்திரிகையிலும், கவிதை ஒன்று இன்னோர் இதழிலும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கடிதங்கள் வந்தன. அற்புதமான தினம் அது! வாழ்க்கையின் ஆகச்சிறந்த நாட்களில் ஒன்று. நானும் என் மனைவியும் ஊர் முழுக்கச் சென்று அந்தக் கடிதங்களை நண்பர்களிடம் காட்டினோம். எங்கள் வாழ்க்கைக்குத் தேவையாக இருந்த ஓர் அர்த்தத்தை, உயிர்ப்பை அது எங்களுக்குத் தந்தது.

பிரசுரமான முதல் கதை, கவிதை எவ்வெவை?

கச்ண்tணிணூச்டூ என்ற கதை. அது ‘வெஸ்டர்ன் ஹியுமானிடீஸ் ரெவ்யூ’வில் பிரசுரமானது.  அது ஒரு நல்ல இலக்கிய இதழ். உடா பல்கலைக்கழகத்தால் இன்றுவரை வெளிவந்து கொண்டிருக்கிறது. அக்கதைக்காக சன்மானம் எதுவும் எனக்கு அவர்கள் வழங்க வில்லை. அதைப்பற்றி எனக்கு அக்கறை இல்லை. கவிதையின் தலைப்பு  கூடஞு ஆணூச்ண்ண் கீடிணஞ். அது அரிசோனாவிலிருந்து வெளிவந்த ‘டார்கெட்ஸ்’ என்ற இதழில் வெளிவந்தது. அந்த இதழ் இப்போது நின்றுவிட்டது. என் கவிதை வெளியான அதே இதழில் சார்லஸ் புகோவ்ஸ்கியின் கவிதையும் பிரசுரமாகி யிருந்தது. எனக்குப் பெருமையாக இருந்தது. அப்போது அவர் என்னுடைய ஆதர்சமாக இருந்தவர்.

உங்கள் நண்பர் ஒருவர் என்னிடம் சொல்லியிருக்கிறார். உங்கள் படைப்பு முதன்முதலில் வெளிவந்த இதழை அன்று கட்டிப்பிடித்துக் கொண்டேதான் தூங்கினீர்களாமே?

ஓரளவுக்கு உண்மை. அது இதழ் அல்ல, புத்தகம். ‘சிறந்த அமெரிக்கச் சிறுகதைகள்’ தொகுப்பு ஆண்டுதோறும் வருமே, அதில் என் கதை ஙிடிடூடூ ஙுணித கடூஞுச்ண்ஞு ஆஞு கிதடிஞுt கடூஞுச்ண்ஞு? தேர்வாகியிருந்தது. அது அறுபதுகளின் பிற்பகுதி. மார்த்தா ஃபோலி அத்தொகுப்பை தொகுத்து வந்தார். அக்கதை சிகாகோவிலிருந்து வெளிவந்த ‘டிசம்பர்’ என்ற பிரபலமில்லாத ஒரு சிற்றிதழில் வெளிவந்திருந்தது. அத்தொகுப்பு எனக்கு தபாலில் வந்தபோது அதை எடுத்துக் கொண்டே படுக்கைக்குச் சென்றேன். வெறுமனே புரட்டிப்புரட்டிப் பார்த்து பரவசப்பட்டுக் கொண்டிருந்தேனேயொழிய படிக்கவில்லை. அப்படியே தூங்கிவிட்டேன். மறுநாள் எழுந்து பார்த்தபோது என் பக்கத்தில் என் மனைவியோடு அந்தப் புத்தகமும் இருந்தது.

‘தி நியூயார்க் டைம்ஸ் புக் ரெவ்யூ’ இதழில் நீங்கள் எழுதிய ஒரு கட்டுரையில், நாவல்கள் எழுதாமல் சிறுகதைகள் மட்டும் எழுதுகிறீர்கள் என்பதைப் பற்றி குறிப்பிடும்போது ‘அந்தக் கதையை இப்போது சொல்வது மிகவும் அயர்ச்சியை உண்டாக்கும்’ என்று எழுதியிருந்தீர்கள். அந்தக் கதையை இப்போது சொல்ல விருப்பமா?

‘மிகவும் அயர்ச்சியை உண்டாக்கக்கூடிய அந்தக் கதை’யில் சொல்வதற்கு இனிமையற்ற விஷயங்கள் பல இருக்கின்றன. இந்த விஷயங்களில் சிலவற்றை ஊடிணூஞுண் கட்டுரையில் பிறகு எழுதியிருக்கிறேன். அக்கட்டுரையில், ஓர் எழுத்தாளன் என்பவன் இறுதியில் அவன் என்ன எழுதியிருக்கிறான் என்பதை வைத்துத்தான் மதிப்பிடப்படுகிறான். அப்படித்தான் இருக்கவும் வேண்டும் என்று எழுதியிருந்தேன். அசாதாரணமான சூழ்நிலையில் அப்படி எழுத நேர்ந்தது. என்னை யாரும் எழுத்தாளனாக வேண்டுமென்று கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால் உயிரையும் விட்டொழிக்க முடியாமல், சாப்பாட்டு மேஜையில் எதையாவது வைத்து சாப்பிடுவதற்காக மளிகை சாமான்களை வாங்குவதற்கும், குடும்பத்தை நடத்துவதற்கும், அதே நேரத்தில் என்னை ஓர் எழுத்தாளனாக நினைத்துக் கொண்டு எழுதுவதற்கு கற்றுக் கொள்வதற்கும் ரொம்பவும் கடினமாக இருந்தது. பல வருடங்களாக ஏதேதோ குப்பை வேலைகளையெல்லாம் பார்த்துக் கொண்டே குழந்தைகளையும் வளர்த்துக் கொண்டு, எழுதவும் முயற்சி செய்து கொண்டிருந்த பிறகு, சீக்கிரம் எழுதி முடிக்க முடிகிற விஷயங்களை மட்டுமே நான் எழுத வேண்டும், அ தையும் அவசரகதியில் செய்து முடிக்கவேண்டுமென்பது உறைத்தது. ஒரே ஒரு கதைக்கருவை வைத்துக்கொண்டு இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு நாவலை எழுதுவதற்கு எனக்கு வசதி கிடையாது. எதையாவது எழுதி, உடனே பணம் கைக்கு வந்தாக வேண்டும். அடுத்த வருடமோ அல்லது மூன்று வருடங்கள் கழித்தோ கிடைக்கிற சன்மானம் அல்ல. அதனால்தான் சிறுகதைகளும் கவிதைகளும் மட்டுமே எழுதுகிறேன். நான் விரும்பியிருக்கக்கூடிய வகையில் என் வாழ்க்கை அமையவில்லை என்பதை உணரத் தொடங்கினேன். எழுத விருப்பம் இருந்தும், அதற்கு நேரமோ இடமோ கிடைக்காத விரக்தி எப்போதுமே மலையளவு குவிந்திருந்தது. வெளியே சென்று காருக்குள் உட்கார்ந்து மடியில் பேடை வைத்துக்கொண்டு எழுதுவேன். பிள்ளைகள் வளர்ந்த வயதில் இருந்த காலகட்டம் அது. நான் எனது பின் இருபதுகளில் அல்லது ஆரம்ப முப்பதுகளில் இருந்தேன். அப்போதும் கடும் பஞ்சத்தில்தான் இருந்தோம். ஒரு திவால் நோட்டீஸ் வந்திருந்தது. அவ்வளவு வருடம் கடுமையாக உழைத்ததற்கு பலனாக ஒரு பழைய காரும், ஒரு வாடகை வீடும், புதிய கடன்காரர்களும்தான் காட்டுவதற்கு இருந்தார்கள். சோர்வும் தளர்ச்சியும் முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. ஆன்ம ரீதியாக நான் துடைத்தழிக்கப் பட்டிருந்தேன். ஆல்கஹால் ஒரு பெரிய சிக்கலாக உருவாகியது. ஏறக்குறைய முற்றிலுமாக தோற்று முழுநேரக் குடிகாரனாக மாறிவிட்டேன். இந்தப் பகுதியைத் தான் ‘மிகவும் அயர்ச்சியை உண்டாக்கும்’ என்று குறிப்பிட்டிருந்தேன்.

இந்தக் குடிப்பழக்கத்தைப்பற்றி மேலும் கொஞ்சம் பேசமுடியுமா? மிகப்பல எழுத்தாளர்கள், அவர்கள் ஆல்கஹாலிற்காக இல்லாவிட்டாலும், அளவுக் கதிகமாகக் குடிக்கிறார்கள்.

மற்ற தொழில்களில் இருப்பவர்களை விட எழுத்தாளர்கள் அதிகமாகக் குடிக்கிறார்களா? இருக்காது. உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். குடியைப் பற்றி பேசும்போது கற்பனைப் பழங்கதைக் கோவை ஒன்று கூடவே வந்துவிடுகிறது. ஆனால் என் விஷயத்தில் அதெல்லாம் பொய். நான் அபரிமிதமாகக் குடிக்கத் தொடங்கியது எப்போதென்றால், வாழ்க்கையில் எனக்காக, என் எழுத்துக்காக, என் மனைவி குழந்தைகளுக்காக ஆசைப்பட்டது எதுவுமே நடக்கப் போவதில்லை என்று தெரிந்தபோதுதான். இது விநோதம்தான். யாரும் திவாலாகிப் போவதற்காகவே, ஓர் ஆல்கஹாலிக்காக, ஓர் ஏமாற்றுக்காரனாக, ஒரு பொய்யனாக ஆகும் நோக்கத் துடனே வாழ்க்கையைத் தொடங்குவதில்லையே!

*****

நீங்கள் குடிப்பதை நிறுத்தி எவ்வளவு காலமாகிறது?

1977ம் வருடம், ஜுன் இரண்டு. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், நான் குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வந்ததைச் சொல்ல பெருமையாகவே இருக்கிறது. நானும் வாழ்க்கையில் உருப்படியாக எதையோ செய்திருக்கிறேன். நான் ஒரு மீண்டெழுந்த ஆல்கஹாலிக். குடிப்பதை ஒரேயடியாக நிறுத்திவிடவில்லை. ஆனால் நான் குடிகாரனாக இல்லை.

உங்கள் கதைகள் எங்கிருந்து வருகின்றன? நான் குறிப்பாகக் கேட்பது குடி சம்பந்தப்பட்ட கதைகளைப் பற்றி.

நான் அதிகமும் ஆர்வம் கொண்டிருக்கும் கதைகளில் நிஜ உலகத்தோடு தொடர்பு கொண்ட வரிகள் இருக்கும். என் கதைகளில் எதுவும் உண்மையில் நடந்தவையல்ல. ஆனால் எப்போதுமே, சில அம்சங்கள், என்னிடம் சொல்லப்பட்ட அல்லது நான் பார்த்த விஷயங்கள்தான் என் கதைகளை ஆரம்பிப்பவையாக இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். “அந்த கிருஸ்துமஸ்தான் நீ எங்களுக்கு நாசமாக்கப் போவதிலேயே கடைசி கிருஸ்துமஸ்!” நான் குடிபோதையில் இருந்த போது கேட்ட வாசகம் இது. ஆனால் ஞாபகத்தில் வைத்திருந்தேன். அதன் பின், பல வருடங்கள் கழித்து, குடிப்பழக்கம் விலகித் தெளிந்திருந்த போது அந்த ஒரு வரியை வைத்துக் கொண்டு, மற்ற விஷயங்களை கற்பனை செய்து, அவை நடந்திருக்கக்கூடும் என்ற அளவுக்கு நுட்பமாகக் கற்பனை செய்து ஒரு கதையை உருவாக்கினேன்- அ குஞுணூடிணிதண் கூச்டூடு. ஆனால் என்னைக் கவரும் கதைகள் என்பவை, அது தல்ஸ்தோய் கதைகளோ, செகாவ், பேரி ஹன்னா, ரிச்சர்ட் ஃபோர்ட், ஹெமிங்வே, ஐஸக் பேபல், ஆன் பீட்டி அல்லது ஆன் டைலர் யார் எழுதியதாக இருந்தாலும் ஓரளவுக்கு சுயசரிதைத் தன்மை கொண்டிருப்பவைதாம். குறைந்தபட்சம் ஒரு தொடர்புக் கண்ணியைக் கொண்டிருக்கும் கதைகள். நெடுங்கதைகளோ, சிறுகதைகளோ அவை வெறும் காற்றிலிருந்து உதிப்பவையல்ல. ஜான் சீவரோடு உரையாடிக் கொண்டிருந்தபோது நடந்த சம்பவம் நினைவுக்கு வருகிறது. அயோவா சிடியில் சில நண்பர்களோடு உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது சீவர் ஒன்றை குறிப்பிட்டார். அவர் குடும்பத்தில் ஒரு நாள் இரவு ஏதோ சண்டை. அடுத்த நாள் காலை சீவர் குளியலறைக்குள் நுழைந்த போது, அவர் மகள் குளியலறைக் கண்ணாடியில் “அன்புள்ள அப்பா, எங்களை விட்டுப் போகாதீர்கள்” என்று லிப்ஸ்டிக்கால் எழுதியிருந்ததைப் பார்த்திருக்கிறார். இதை அவர் சொல்லிக் கொண்டிருக்கும் போது எங்களோடு இருந்த ஒருவர், “உங்கள் கதைகளில் இதை கவனித்திருக்கிறேன்” என்றார்.  சீவர், “இருக்கலாம். நான் எழுதுவது எல்லாமே சுயசரிதைத் தன்மை கொண்டவைதான்” என்றார். வாஸ்தவத்தில் அது அப்பட்டமான உண்மையல்லதான். ஆனால் நாம் எழுதும் எல்லாவற்றிலும், ஏதோ விதத்தில் சுயசரிதை கலந்திருக்கிறது. என் கதைகளை ‘சுயசரிதைக் கதைகள்’ என்று சொன்னால் அதிகம் அலட்டிக் கொள்ளமாட்டேன். உங்கள் வாழ்க்கைக் கதைகளை புனைகதையாக மாற்றும் போது  நீங்கள் செய்வதைப் பற்றிய பிரக்ஞை முழுசாக இருக்க வேண்டும். மிகுதியான தைரியமும், அபாரமான திறமையும் கற்பனையும், உங்களைப் பற்றி எல்லாவற்றையும் சொல்லக்கூடிய விருப்பார்வமும் இருக்க வேண்டும். உங்களுக்குத் தெரிந்ததைப்பற்றி இளவயதில் எழுதும்போது, உங்களுடைய சொந்த ரகசியங்களை விட அதிகமாக வேறு என்ன உங்களுக்குத் தெரிந்திருக்கப் போகிறது? நீங்கள் ஓர் அபூர்வமான எழுத்தாளராக, மிகமிகத் திறமையான எழுத்தாளராக இருந்தாலொழிய ‘என் வாழ்க்கைக் கதையை’ ஒவ்வொரு பாகங்களாக எழுதிக் கொண்டே போவது மிகவும் அபாயகரமான செயலாக இருக்கும்.கதைகளில் அதிகமும் சுயசரிதைத் தன்மையை புகுத்திவிடுவது பல எழுத்தாளர்களுக்கு இச்சையாகவே இருக்கிறது. அதில் பெரிய அபாயம் இருக்கிறது என்றே சொல்வேன். கொஞ்சம் சுயசரிதை, நிறைய கற்பனை என்பதுதான் சிறந்தது.

உங்கள் பாத்திரங்கள் வாழ்க்கைப் போராட்டத்தில் உழன்று கொண்டு இருப்பவர்கள்தானே?

அவர்கள் முயன்று கொண்டிருப்பவர்கள் என்று நினைக்கிறேன். ஆனால் முயல்வதும் வெற்றியடைவதும் இருவேறு விஷயங்களல்லவா? சில வாழ்க்கைகளில் மனிதர்கள் எப்போதுமே வெற்றிபெறுகிறார்கள். அப்படி நடக்கும் போது அது பிரம்மாண்ட மாகத்தான் இருக்கிறது. ஆனால் மற்ற வாழ்க்கைகளில் மனிதர்கள், அவர்கள் செய்ய விரும்புவது சின்ன விஷயமோ, பெரிய விஷயமோ பெரும்பாலும் வெற்றி பெறுவதில்லை. இந்த வாழ்க்கைகளைத்தான், வெற்றியடையாத மனிதர்களைத்தான் எழுத வேண்டியிருக்கிறது. என் நேரடியான, மறைமுகமான சொந்த அனுபவங்கள் பெரும்பாலும் இவர்களைப் பற்றியாகத்தான் இருக்கிறது. பெரும்பாலான என் பாத்திரங்களுக்கு அவர்களுடைய செயல்கள் பொருட் படுத்தத்தக்கதாக, வெற்றி ஈட்டித்தருபவையாக இருக்க வேண்டு மென்றுதான் ஆசையென்று நினைக்கிறேன். ஆனால் பெரும்பாலானவர்களைப் போல, அவர்களும் அது நிறைவேறாத ஆசையென்பது புரிந்துவிட்ட ஸ்திதியை அடைந்து விட்டிருக்கின்றனர். இது ஒன்றும் மென்மேலும் சுமையை ஏற்றிக் கொண்டேயிருப்பதாக இல்லைதான். ஒரு காலத்தில் உயிரைக் கொடுத்தாவது நிறைவேற்ற வேண்டுமென்று நினைத்த விஷயங்கள் இப்போது உப்புப் பெறாதனவாக இருக்கும். அவர்களது வாழ்க்கைதான் அவர்களுக்கு ஆறுதல் அளிக்க முடியாததாக இருக்கிறது. வாழ்க்கைகள் உடைந்து நொறுங்கிக் கொண்டிருப்பதை அவர்கள் பார்க்கின்றனர். எல்லாவற்றையும் சரிசெய்துவிடத்தான் அவர்கள் முயற்சிக்கின்றனர், ஆனால் முடிவதில்லை. வழக்கமாக அது அவர்களுக்கும்  தெரிந்திருக்கிறது என்று நினைக்கிறேன். அதன் பிறகு அவர்களால் அதிகபட்சம் எது முடியுமோ அதைச் செய்கின்றனர்.

உங்களுடைய எழுதும் வழக்கங்கள் எப்படி? எப்போதுமே ஏதாவது ஒரு கதையை உருவாக்கிக் கொண்டிருப்பீர்களா?

எழுதும்போது தினமும் எழுதுகிறேன். அது நிகழும்போது அற்புதமான அனுபவமாகவே இருக்கிறது. ஒருநாள் அடுத்த நாளின் வாலைப் பிடித்துக் கொண்டு செருகிக் கொள்ளும். சில நேரங்களில் என்ன கிழமை என்பதே தெரியாது. கொஞ்ச காலமாக பயிற்றுவிக்கும் பணியில் ஈடுபட்டிருப்பதால் எழுதாமல் இருக்கிறேன். இதைப் போன்ற காலகட்டங்களில் நான் இதுவரை ஒரேயொரு வார்த்தையைக்கூட எழுதியிருக்காததைப் போலவும், எழுத விருப்பமே இல்லாததைப் போலவும் தோன்றும். கெட்ட பழக்கங்கள் குடியேறும். இரவில் வெகுநேரம் விழித்திருந்து, நெடுநேரம் தூங்குவேன். ஆனால் பரவாயில்லை. பொறுமையுடன் இருக்கவும், என் நேரத்திற்காக காத்திருக்கவும் கற்றுக்கொண்டேன். பல வருடங்களுக்கு முன்பே அதை நான் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. பொறுமை. நான் விட்டு விட்டு எழுதுகிறவன். எழுதத் தொடங்கினால் பத்து, பனிரெண்டு அல்லது பதினைந்து மணி நேரங்களுக்கு தொடர்ச்சியாக எழுதுவேன் ஒவ்வொரு நாளும். இதை நான் ரசித்து செய்வேன். இந்த வேலை நேரத்தில் பெரும்பாலும் ரிவைஸ் செய்வதும், திரும்ப எழுதுவதுமே நடக்கும். ஒரு கதையை எழுதி முடித்துவிட்டு அதைத் திரும்பத் திரும்பத் திருத்தி எழுதுவதைவிட மகிழ்ச்சியளிக்கக்கூடிய காரியம் எனக்கு வேறெதுவுமில்லை. நான் எழுதுகிற கவிதைகளையும் அப்படித்தான் திருத்தித் திருத்தி எழுதிக் கொண்டேயிருப்பேன். முதல் முறை எழுதி முடித்தவுடனேயே பிரசுரத்திற்கு அனுப்பி வைக்கிற அவசரம் கிடையாது. சிலமுறை மாதக்கணக்கில் வீட்டிலேயே வைத்திருப்பேன். ஒரு பகுதியை எடுத்துவிட்டு, இன்னொன்றை புகுத்தி, பின் திரும்ப எல்லாவற்றையும் மறுபடியும் எழுதி … முதல் வரைவை எழுதி முடிக்க அதிக நேரமாகாது. வழக்கமாக ஒரே அமர்வில் எழுதி முடித்துவிடுவேன். அதைத் திரும்பத்திரும்ப திருத்தி எழுதுவதில்தான் நேரம் கழியும். ஒரே கதையை இருபது அல்லது முப்பது வரைவுகள் கூட திருத்தி எழுதியிருக்கிறேன். எந்தக் கதையையும் பத்து, பனிரெண்டு முறைக்கு குறைவாக எழுதி முடித்ததில்லை. எனக்கு தல்ஸ்தோயின் ஞ்ச்டூடூஞுதூ ப்ரூஃப்களை பார்த்தது ஞாபகத்துக்கு வருகிறது. கதைகளைத் திரும்பத்திரும்ப திருத்தி எழுதுவதை அவர் விருப்பத்தோடு செய்தாரா என்பது எனக்குத் தெரியாது. ஆனால் போரும் அமைதியும் நாவலை எட்டுமுறை திருத்தி யெழுதியிருக்கிறார். அதற்கப்புறமும் திருத்தங்கள் செய்திருக்கிறார். முதல் வரைவில் படுமோசமாக எழுதுகிறோம் என்ற குற்றவுணர்வில் இருக்கும் என்போன்ற எழுத்தாளர்களுக்கு தல்ஸ்தோயைப்பற்றி கேள்விப்படும்போது ஆறுதலாக இருக்கிறது.

நீங்கள் ஒரு கதையை எழுதும்போது நிகழ்வதை விளக்குங்கள்.

ஏற்கனவே நான் குறிப்பிட்டதைப்போல முதல் வரைவை வேகமாக எழுதி முடித்துவிடுவேன். பெரும்பாலும் கையால் எழுதுவதுதான் வழக்கம். சில நேரங்களில் எனக்கு மட்டும் புரியும் படியாக சுருக்கெழுத்தில் ஓரத்தில் குறிப்புகள் எழுதி வைப்பேன் – திருத்தியெழுதும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள். சில காட்சிகளை முடிக்காமலேயே விட்டு வைப்பேன், சிலவற்றை எழுதாமல் விட்டுவைப்பேன். சில காட்சிகளை பிற்பாடு நுட்பமாக எழுத வேண்டியிருக்கும். எல்லாவற்றையும் நுட்பமான கவனத்தோடுதான் எழுத வேண்டியிருக்கும் என்றாலும் நான் சொல்வது, சில காட்சிகளை இரண்டாவது, மூன்றாவது வரைவு வரை எழுதாமல் விட்டு வைப்பேன். முதல் வரைவில் கதையின் அவுட்லைன். கதை எப்படி அவிழ்கிறது என்பதெல்லாம் முடிவாகிவிடும். அந்த கைப்பிரதியைப் பின்பு தட்டச்சு செய்வேன். அங்கிருந்து அந்தக் கதை இறுதி வடிவம் எடுப்பதற்கான நீண்ட பயணம் தொடங்கும். முதல் வரைவை தட்டச்சு செய்ததும் அதனைத் திருத்தி எழுதுவேன் – சில பகுதிகளை வெட்டி, சில பகுதிகளை புதிதாகச் சேர்த்து, மூன்று அல்லது நான்கு வரைவுகளுக்குப்பிறகு உண்மையான வேலை அப்புறம்தான் வருகிறது. கவிதைகள் விஷயத்திலும் அப்படித்தான். கவிதைகள் நாற்பது, ஐம்பது வரைவுகள் வரை செல்லும். டொனால்ட் ஹால் அவர் கவிதைகளை நூறுமுறைக்கு மேல் திருத்தி எழுதுவதாக என்னிடம் சொன்னார். உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?

நீங்கள் எழுதுபவற்றில் எந்தளவுக்கு கடைசியில் வெட்டி எறிந்து விடுகிறீர்கள்?

ஏராளமாக. முதல் வரைவு நாற்பது பக்கங்களுக்கு வந்தால், கடைசி வரைவில் பெரும்பாலும் பாதியளவுக்குத்தான் மீந்திருக்கும். வெறுமனே வெட்டி எறிந்து விடுவதும் சுருக்கி யெழுதுவதும் மட்டுமல்ல. புதிதாகவும் எழுதிச் சேர்ப்பேன். வார்த்தைகளை உள்ளே செருகுவதும்,  வெளியே எடுத்தெறிவதும் நான் சந்தோஷமாகச் செய்கிற விஷயம்.

உங்களை பாதித்த இலக்கிய ஆளுமைகளைப் பற்றி சொல்ல முடியுமா?

எர்னெஸ்ட் ஹெமிங்வே அவர்களில் ஒருவர். அவரது ஆரம்பக் காலக் கதைகள். நான் அதிகம் மதிக்கும் எழுத்தாளர் செகாவ். செகாவ்வை யாருக்குத்தான் பிடிக்காது? அவரது சிறுகதைப் பற்றி மட்டும் சொல்கிறேன், நாடகங்களையல்ல. தல்ஸ்தோய். அவரது சிறுகதைகள், குறுநாவல்கள் அனைத்தும். அப்புறம் அன்னா கரீனினா. ‘போரும் அமைதியும்’ அல்ல. அது மிகமிக மெதுவான நாவல்.

தல்ஸ்தோய்தான் ஆகச்சிறந்த படைப்பாளி. ஐஸக் பேபல், ஃபிளானெரி ஓ கானர், ஜேம்ஸ் ஜாய்ஸின் ‘டப்ளினர்ஸ்’. ஜான் சீவர். மேடம் பொவாரி. அப்டைக்கின் கூணிணி ஊச்ணூ tணி எணி. கடந்த இரண்டு வருடங்களில் அற்புதமான எழுத்தாளர்கள் சிலரை வாசித்தேன். டோபியாஸ் உல்ஃபின் ஐண tடஞு எச்ணூஞீஞுண ணிஞூ Nணிணூtட அட்ஞுணூடிஞிச்ண Mச்ணூtதூணூண் அபாரமான தொகுப்பு. Mச்து குஞிடணிtt, ஆணிஞஞடிஞு அணண Mச்ண்ணிண, ஏச்ணூணிடூஞீ கடிணtஞுணூ, ங.கு. கணூடிஞிடஞுtt. பல வருடங்களுக்கு முன் செகாவ் அவருடைய நண்பருக்கு எழுதியிருந்த கடிதத்தை வாசித்தேன். அதில் அவர் எழுதியிருந்தார்: நண்பரே, நீங்கள் அசாதாரணமான மனிதர்களைப் பற்றியும், அவர்கள் சாதிக்கின்ற அசாதாரணமான, மறக்க முடியாத சாதனைகளையும் பற்றித்தான் எழுதவேண்டுமென்பதில்லை. அந்தக் கடிதத்திலும் அவரது வேறு பல கடிதங்களிலும் அவர் எழுதியிருந்தவற்றையும், அவரது கதைகளையும் வாசித்தபிறகு என் பார்வையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு மக்ஸீம் கார்க்கியின் ஒரு நாடகத்தையும் கதைகளையும் படித்ததும், அவை செகாவ் சொல்வதை உறுதி செய்வதாக இருந்தன. ரிச்சர்ட் ஃபோர்ட் இன்னுமொரு நல்ல எழுத்தாளர். பிரதானமாக அவர் ஒரு நாவலாசிரியர் என்றாலும் மிக நல்ல சிறுகதைகளையும் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். அவர் என் நண்பரும்கூட. என் நண்பர்களில் சிலர் நல்ல எழுத்தாளர்கள், சிலர் சுமாரான எழுத்தாளர்கள்.

அதைப்போன்ற சந்தர்ப்பங்களில் என்ன செய்வீர்கள்? உங்கள் நண்பர்களில் ஒருவர் மோசமான கதை ஒன்றை எழுதி பிரசுரமாகியிருந்தால் எப்படி அதைக் கையாளுவீர்கள்?

அந்த நண்பர் என் கருத்தைக் கேட்டாலொழிய பேசமாட்டேன். அவர் கேட்கக்கூடாது என்றே விரும்புவேன். ஆனால் கேட்டுவிட்டால், அது உங்கள் நட்பை பாதிக்காத வகையில் சொல்லி சமாளிக்க வேண்டியதுதான். உங்கள் நண்பர்கள் நன்றாக எழுதவேண்டுமென்றுதான் விரும்புவீர்கள், ஆனால் சில நேரங்களில் ஏமாற்றமாக இருக்கும்போது உங்களுக்கும் வருத்தமாகத்தான் இருக்கும். உங்களால் எதுவும் செய்யவும் முடியாது.

இப்போதும் கவிதை எழுதுகிறீர்களா?

ஏதோ கொஞ்சம். நிறைய எழுதத்தான் விரும்புகிறேன். ஆறுமாதங்களாக எதுவும் எழுதாவிட்டால் எனக்கு பதற்றமாகிவிடும். நான் இனிமேல் கவிஞன் இல்லையோ, என்னால் இனி கவிதையே எழுத முடியாதோவென்று பயப்படத் தொடங்கி விடுவேன். அப்போதுதான் உட்கார்ந்து சில கவிதைகளை எழுத முயற்சி செய்வேன். வரப்போகும் வசந்த காலத்தில் வெளிவரவிருக்கும் எனது ஊடிணூஞுண் தொகுப்பில் எனது முக்கியமான கவிதைகள் எல்லாமும் இருக்கின்றன.

கவிதை எழுதுவதும், சிறுகதை எழுதுதலும் ஒன்றிற்கொன்று எந்தவகையில் உதவிக் கொள்கின்றன?

இப்போதெல்லாம் இல்லை. நீண்ட காலமாக கவிதை எழுதுவதிலும், கதைகள் எழுதுவதிலும் சமமான ஆர்வம் கொண்டிருந்தேன். எந்த இதழை எடுத்தாலும் முதலில் கவிதைகளை வாசித்து விட்டுத்தான் கதைகளுக்கு வருவேன். இறுதியில் நான் ஒரு தேர்வைச் செய்ய வேண்டியிருந்தது. கதைகள் பக்கம் ஒதுங்கிவிட்டேன். அதுதான் என்னைப் பொறுத்தவரை சரியான தேர்வுகூட. நான் ஒன்றும் ‘பிறவி’க் கவிஞன் அல்ல. ‘பகுதிநேர கவிஞன்’ மட்டும்தான். கவிஞனாகவே இல்லாதிருப்பதைவிட இது மேலானதுதான், இல்லையா?

நீங்கள் வளர்ந்ததெல்லாம் அமெரிக்காவின் மேற்கு கரையோரம், வாஷிங்டனில். அங்கே இருந்தபோது உங்களால் நன்றாக எழுத முடிந்ததா? அல்லது இப்போது கிழக்கே இடம் பெயர்ந்து வந்த இடத்தில் எழுத முடிகிறதா? நான் கேட்க வருவது உங்கள் எழுத்துக்கு ‘வட்டார உணர்வு’ என்பது எவ்வளவு முக்கியம் என்பதைத் தெரிந்துகொள்வதற்காக.

ஒரு காலத்தில் என்னை ஒரு குறிப்பிட்ட இடத்தைச் சேர்ந்த எழுத்தாளன் என்றே நினைத்து வந்திருக்கிறேன். மேற்குக் கரையிலிருந்து வரும் எழுத்தாளன் என்பது எனக்கு முக்கியமாக இருந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை. இது நல்லதா கெட்டதா என்று தெரியவில்லை. எங்கெங்கோ சுற்றி, ஏதேதோ ஊர்களில் வாழ்ந்து, புலம் பெயர்ந்தவன் போல எனக்கு இப்போது ‘வேரூன்றிய இடம்’ என்றே இல்லாததைப் போல உணர்கிறேன். எந்த ஒரு குறிப்பிட்ட இடத்தையாவது களமாக வைத்து பிரக்ஞைபூர்வமாக எழுதியிருக்கிறேனென்றால் அந்த இடம் வடமேற்கு பசிபிக்காகத்தான் இருக்கும். குறிப்பாக என் முதல் தொகுப்பின் கதைகள் அப்படித்தான் இருந்தன. வட்டார உணர்வோடு எழுதுகிற ஜிம் வெல்ஷ், வாலஸ் ஸ்டெக்னர், ஜான் கீபிள், வில்லியம் ஈஸ்ட்லேக், வில்லியம் கிட்டரெட்ஜ் போன்றவர்களை மதிக்கிறேன். நீங்கள் குறிப்பிடுவதைப் போல பல எழுத்தாளர்கள் இருக்கின்றனர். ஆனால் பெரும்பான்மையான எனது கதைகள் குறிப்பிட்ட பிராந்தியத்தை மையமாகக் கொண்டிருப்பவையல்ல. அவை எங்கு வேண்டுமானாலும், இங்கே ஸைராக்யூஸில், டக்ஸானில், ஸாக்ராமென்டோவில், ஸான் ஹொஸேவில், ஸான் பிரான்சிஸ்கோவில், வாஷிங்டனில் கூட நிகழலாம். எப்படியிருந்தாலும் எனது பெரும்பாலான கதைகள் வீட்டுகுள்ளேயேதானே நடக்கின்றன!

எந்த விஷயத்தில் உங்கள் கதைகள் வாசகர்களை பாதிக்குமென்று நினைக்கிறீர்கள்? உங்கள் எழுத்து யாரையாவது மாற்றும் என்ற நம்பிக்கை இருக்கிறதா?

உண்மையிலேயே தெரியவில்லை. சந்தேகமாக இருக்கிறது. பெரிய அளவில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது, சின்ன அளவில் கூட ஏற்படுத்தாது என்றே நினைக்கிறேன். கலை என்பதே ஒரு பொழுதுபோக்கு வடிவம்தானே? படைப்பாளி, நுகர்வோர் இருவருக்குமே ஒருவகையில் பில்லியர்ட்ஸ் ஆடுவதைப் போல, சீட்டாடுவதைப் போல, அல்லது பவுலிங் போல – ஆனால் கொஞ்சம் உயர்ந்த தரத்திலான கேளிக்கை. இலக்கிய வாசிப்பில் ஓர் ஆன்ம செறிவூட்டம் இருப்பதில்லை என்று சொல்லவில்லை. ஆம், இருக்கிறதுதான். ஒரு பீத்தோவன் கான்ஸெட்டோவை கேட்பதோ அல்லது வான்கோவின் ஓவியத்தின் முன்னால் நின்று அதை அனுபவிப்பதோ, அல்லது பிளேக்கின் கவிதையை வாசிப்பதோ, பிரிட்ஜ் ஆடுவதைவிட, பேஸ்பால் ஆடுவதைவிட அலாதியான அனுபவத்தை ஏற்படுத்தும் என்பது எனக்குத் தெரியும். கலை என்பது எதனெதற்கென்று வரையறுக்கப் பட்டிருக்கிறதோ அவையனைத்திற்குமானதுதான். ஆனால் கலை என்பது ஓர் உயர்நிலை கேளிக்கையும் கூட. இப்படி நான் நினைப்பது தவறா? எனக்குத் தெரியவில்லை. எனது இருபதுகளில் ஸ்ட்ரின்ட்பெர்க்கின் நாடகங்கள், மேக்ஸ் பிரிஷ்ஷின் நாவல், ரில்கேவின் கவிதை, இரவு முழுக்கக் கேட்டுக்கொண்டிருக்கும் பார்தோக்கின் சங்கீதம், ஸிஸ்டைன் தேவாலயம், மைக்கேலாஞ்சலோ சிற்பங்கள் பற்றிய தொலைக்காட்சி நிகழ்ச்சி இவற்றை யெல்லாம் படித்து, கேட்டு, பார்த்துவிட்டு இந்த அனுபவங்களினால் என் வாழ்க்கை மாறித்தான் போகப்போகிறது என்று நம்பியிருக்கிறேன். இந்த அனுபவங்கள் என் வாழ்க்கையையே புரட்டிப்போடப் போகிறது. இதை தவிர்க்கவே முடியாது என்று மேற்கண்ட  ஒவ்வொரு நிகழ்வின்போதும் தோன்றியிருக்கிறது. நான் ஒரு மாறுபட்ட மனிதனாக மாறத்தான் போகிறேன் என்று நிஜமாகவே நினைத்திருக்கிறேன். ஆனால் வெகு சீக்கிரமே, என் வாழ்க்கை எந்த விதத்திலும் மாறப்போவதில்லை என்பது புரிந்தது. என்னால் பார்க்கக்கூடிய, உணரக் கூடிய எந்த விதத்திலும். அப்போதுதான் கலை, இலக்கியப் பணியை எனக்கு நேரம் இருந்தால், அதற்கு வசதி இருந்தால், எடுத்துக் கொள்ளலாம்; கலை என்பது ஓர் ஆடம்பரம்; அது என்னையோ என் வாழ்வையோ மாற்றப் போவதில்லையென்று எனக்குப் புரிந்தது. கலையால் எதையும் சாதிக்க முடியாது என்றகொடூரமான நிதர்சனம் எனக்கு உண்டானது அப்போதுதான். ‘கவிஞர்கள் என்பவர்கள் இவ்வுலகத்தின் அறிவிக்கப்படாத சட்டமியற்றுநர்கள்’ என்ற ஷெல்லியின் அபத்தத்தை ஒரு நிமிடம் கூட நம்பமாட்டேன். என்ன ஒரு நம்பிக்கை! ஐசக் டினேசன்  ஒவ்வொரு நாளும் எந்த நம்பிக்கையும், எந்த விரக்தியும் இல்லாமல் ஏதோ கொஞ்சம் எழுதுவதாகச் சொன்னது எனக்கு பிடித்திருக்கிறது. அவர்கள் வாழும் உலகத்தைப் பற்றியோ, அல்லது அவர்களைப் பற்றியோ மனிதர்கள் கொண்டிருக்கும் எண்ணங்களை ஒரு நாவல், அல்லது நாடகம், அல்லது ஒரு கவிதை நூல் மாற்றிவிடும் என்ற நாட்களெல்லாம் – அப்படியெல்லாம் எப்போதாவது இருந்ததா என்ன? – போய்விட்டன. ஓரு குறிப்பிட்ட வகையான மக்களைப் பற்றி எழுதப்படுகிற கதைகள், அவர்கள் வாழ்க்கை முறை பற்றி நாம் ஏற்கனவே தவறாகப் புரிந்து வைத்திருப்பதை மாற்றக்கூடும். என்னைப் பொறுத்தவரை அவ்வளவுதான் சாத்தியமென்று நினைக்கிறேன். கவிதையைப் பொறுத்த மட்டில் வேறு விதமானது என்றுதான் தோன்றுகிறது. என் மனைவி டெஸ் கல்லஹருக்கு அவள் எழுதிய கவிதைகளைப் படித்துவிட்டு, மலையிலிருந்து குதித்து, அல்லது தண்ணீரில் மூழ்கி தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் விலகியிருக்கிறது என்று கடிதங்கள் வந்திருக்கின்றன. அது வேறு விஷயம். நல்ல புனைகதை என்பது ஒரு உலகத்திலிருந்து செய்தியை மற்றொன்றுக்கு ஓரளவுக்கு எடுத்துச் செல்வது மட்டுமே. ஆனால் இலக்கியம் ஒருவரது அரசியல் சாய்வை, அல்லது அரசியல் அமைப்பையே மாற்றிவிடுமா, அல்லது திமிங்கிலங்களை பாதுகாக்கவும் ரெட்வுட் மரங்களை வெட்டாதிருக்கவும் செய்யப்படும் பிரச்சாரங்களுக்கு உதவக் கூடுமா என்றெல்லாம் தெரியவில்லை. இலக்கியம் எதையும் செய்ய வேண்டாம். அதைப் படைக்கின்ற எழுத்தாளனுக்கு அது அளிக்கின்ற உன்னதமான பரவசமும், வாசிப்பவனுக்குள் நுழைந்து நிரந்தரமாகத் தங்கிவிடப்போகிற இன்பமும் மட்டுமே இலக்கியத்தின் அழகு. இந்தப் பரவச ஜ்வலிப்புகள், எவ்வளவு மங்கலாக இருந்தாலும், தொடர்ந்து விடாமல் பிரகாசித்துக் கொண்டிருந்தாலே போதும்.

***

நன்றி

பவா.செல்லதுரை, வம்சி                                                                        

.