Category: ஜனவரி

“மதுக்கோப்பையினுள் மிதக்கும் சிறுமலர் (அல்லது) அப்போது பாபுவின் அம்முவிற்கு வேறொரு பெயரிருந்தது…” – சம்பு…

கவிஞர் வே.பாபு

இன்றைய நவீன தமிழ்க் கவிதைச் சூழல் மொழியின் வளமார்ந்த சொற்களஞ்சியங்களிலிருந்து கட்டமைக்கப்படுவதாகவும், பிராந்தியம் சார்ந்த கலாச்சார மற்றும் பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துகிற ஒன்றாகவும், இதுகாறும் பாடப்படாத அல்லது பரவலான வாசக கவனத்திற்கு சென்றடையாத துண்டாடப்பட்ட வாழ்வு குறித்த பாடுகளை முன்வைப்பதாகவும், மொழியை அதன் ஆகிருதியை அறிந்துகொண்ட சிறு கர்வத்துடன் சொற்களை லேசாக ஒரு திருகுத் திருகி எம்பிக்குதிப்பதாகவும், நெருப்பென்றால் உதடுகள் வெந்து கருகுமளவுக்கு உஷ்ணத்தைச் சதா சுமந்து கொண்டிருப்பதாகவுமே நான் அவதானிக்கிறேன்.

இந்த மொழியை மெல்ல படுக்க வைத்து நீவிக் கொடுத்து அதன்மீது ஒரு ஜமுக்காளம் விரித்து ஏறி அமர்ந்து நேரடியாக விண்ணேகுகின்ற கவிதைகளைக் கண்டு சர்வ காலமும் நான் அச்சமுற்றே இருப்பதால் அங்கிருந்து அரவமின்றி ஒரு பேருந்தில் ஏறி ஏதோவொரு ஊரின் ஜனக்கூட்டத்தில் கலந்து விடுதலே எனது விருப்பமாக இருக்கிறது என்பதை ஒரு தகவலுக்காகச் சொல்கிறேன்.

இந்த மனநிலையிலிருந்து வே.பாபுவின் கவிதைகளை வாசிக்கும்போது அக்கவிதைகள் ஒரு வாசகனை தன் மீது இயல்பாக கரிசனம் கொள்ள வைக்கிற பண்புநலனை அகத்தே கொண்டிருப்பதாகவே படுகிறது. திருகலான அல்லது மிரட்சிகொள்ள வைக்கிற எந்தச் சொற்களையும் பாபுவின் கவிதைகளில் காண முடிவதில்லை.

எல்லா இடங்களிலும் செல்லுபடியாகாத ஆனால் எல்லாத் தருணங்களிலும் தனக்கு துணை நின்று வழிநடத்துகிற அன்புணர்ச்சியைத்தான் பாபுவின் கவிதைகள் ஏந்தி பிடிக்கிறது. நாயோ அல்லது பூனையோ அடிபட்டு இருளில் கிடக்கும் போது நில்லாமல் விரைந்து செல்கிற கெடுமனதை ஒரு கணம் நிறுத்தி ஒரு சிட்டிகை குற்றவுணர்ச்சியை நம்முள் விதைக்கிற எளிய கருணையை இக்கவிதைகள் சுமந்திருக்கின்றன.

பாபு சொல்லிப் பார்க்க முனைந்திருக்கும் நான்கைந்து அரசியல் கவிதைகளில் கூட கையில் இருக்கும் ஆயுதத்தை அவரால் கைநழுவியதுபோல் மெல்ல கீழே வைக்கத்தான் முடிகிறதே ஒழிய நான் கோபத்தில் இருக்கிறேன் என்று ஒருமுறை சத்தமாகச் சொல்லிவிட்டு அவரால் அமைதியாக முடிகிறதே ஒழிய வெஞ்சினத்துடன் ஆயுதத்தை பிறர் நெஞ்சின் மீது வீசுகிற கொடுமனம் பாபுவுக்கு இல்லை.

ஆனால் அன்பை யாசித்து உரையாடுகிற பாபுவின் கவிதைகளில் உறவு நிலைகளில் சிக்கல்கள் மேலெழும்போது ஒருபுறம் நிராதரவாக உணரும் மனம் விம்மி துடிக்கிறது. மறுபுறம் கையறு நிலையின் உச்சத்தில் மேன்ஷன் ஹவுஸ் பிராந்திக்குள் ஒருவன் குதித்து விடுகிறான். அவனால் அது மட்டுமே இயலுமானதாய் இருக்கிறது. வேறொரு கவிதையில் கையிலிருந்து நழுவிய ஆயுதத்தை இறுக்கிப்பிடித்து ஓங்கி எறிந்திருந்தால் எப்படி அது ஒருவரின் நெஞ்சைப் பிளந்து சென்றிருக்குமோ அந்த வேகத்துடன் அவன் மதுக்கோப்பையினுள் குதிக்கிறான். அதிலிருந்து எழுகிற அலை சமுத்திரக் கரையை உடைத்து சீறிப்பாய்கிறது. இலைகள், சருகுகள், செடிகள்,மரங்கள் பிறகு வனங்கள் என அனைத்தும் அந்த அலையில் மூழ்குகின்றன.

நிச்சலனம்…

மிக அமைதியான முகத்துடன் பிறகு அவன் தனது மருத்துவர் முன் அமர்ந்திருக்கிறான். தன்னை இவ்வுலகின் ஆகச்சிறந்த சுதந்திரவாதியென பிரகடனம் செய்கிறான். ” கூட யாரும் வரலையா” எனும் மருத்துவரின் சாதாரண கேள்வியில் உடைந்து நொறுங்குகிறான். அவனுக்கு வருகிற திருமண அழைப்பிதழைக் கையிலேந்தும் போது இறந்து போன வண்ணத்துப்பூச்சியை சில எறும்புகள் இழுத்துச் செல்கின்றன.அந்த உயிரற்ற உடல் நேர்குறியீடாகவே இருக்கின்றது.

அன்பினையும் துயரினையும் கையறு நிலையின் பரிதவிப்பையும் தத்துவத்தை நேர் நிறுத்தி கடக்க முனைகிற நகுலனின் கவிதையுலகம் பாபுவின் மனதுக்கு நெருக்கமாக இருக்கிறது. எனினும் பாபுவின் கவி மொழி உள்ளங்கை விரிக்கும்போது காற்றில் பறக்கிற இலவம்பஞ்சு மென்மையில் இருப்பது கவிதைகளைத் தனித்துக் காட்டுகிறது. அதனால்தான் இலட்சத்தில் ஒருவனுக்கு உதிரும் தருவாயில் கிடைத்த அபூர்வ மலரை அவன் காப்பாற்ற முனைவதுபோல் இந்தக் கவிதைகள் எங்கும் அந்த மொழியின் எளிமைக் கட்டமைப்பையும் தன்னுடைய அம்முவையும் மட்டுமே சுமந்துகொண்டு அலைகிறது பாபுவின் மனம்.

தனித்தனி கவிதைகளில் வாசிக்கும்போது “அம்மு” என்ற குறியீடு உருவாக்கிய வாசகப் புரிதலுக்கும் மொத்தமாக தொகுப்பாக வாசிக்கும்போது உருவாகிற அம்மு என்கிற பிம்பத்துக்கும் நடுவில் வாசகர்கள் கற்பிதம் கொண்டு கட்டமைக்கிற உறவு முற்றிலும் உணர்வு ரீதியிலானது. அது பாபு என்ற தனிமனிதனின் வாழ்வை கவிதையின் வேறொரு தளத்தில் வைத்துப் புரிந்துகொள்ள முடிகிற சாத்தியங்களையும் கொண்டிருக்கிறது.

கனவுகளிலும் கூடஅம்முவால் விழுங்கப்படுகிற ஒருவனாகவே பாபுவால் இருக்க முடிகிறது. மக்கள் திரளின் நடுவில் இசைத்து செல்லும் பார்வையற்ற குழல் விற்பவன் அம்மு வராத தினத்தை நிரப்பியே இசைக்கிறான். முன்பின் தெரியாத ஊரில் ஒரு மறக்கவியலாத பாடல் அவளின் நினைவைக் கிளர்த்திவிடுகையில் உலகம் ஸ்தம்பிக்கிறதோ இல்லையோ பாபு எனும் கவிஞன் அவ்விடத்தில் சிலையாக நின்று விடுகிறான். பிறகு அவசரமாக ஓடி வந்து நள்ளிரவு பேருந்தில் ஏறி அழுதபடியே பயணிக்கத் துவங்குகிறான். அம்மு அவனைச் சந்திக்க வராத தினமொன்று நினைவிலாடுகிறது.

பிறகு தன்னந்தனியனாக அந்த மதுப் பாட்டிலை ஏந்திப் பிடிக்கிறான். அம்முவாகி உரையாடத் தொடங்குகிறது அம் மதுப் பாட்டில். அவனது கோப்பையினுள் விழுகிற சிறு மலரும் அம்மு தான். இவ்வுலகின் எளிய உயிர்கள் அனைத்தும் அம்முவால் நிறைந்திருக்கிறது. அவளாலேயே எதிரும் புதிருமான நிகழ்வுகளும் நடந்தேறுகின்றன. அதிகாலை மலைப்பயணத்தில் ஒரு குளிர்ச்சியான முத்தம் போல் திடீரென பெய்கிற மழையில் அம்மு நிறைந்து வழிகிறாள்.

உத்திரத்தில் தொங்கிவிட கயிறு மாட்டுகையில்கூட கதவைத் தட்டியபடி மீட்சியாக அவளே வந்து நிற்கிறாள். இந்த பாழும் கவி மனதை வைத்துக்கொண்டு பாபு எங்கு தானோடி தொலைந்துவிட முடியும்?

பௌர்ணமி இரவு பாபுவிற்கு பிடித்தமானதாய் இருக்கிறது. அது சங்கர் இறந்த தினமாக இருக்கும்போது அந்த இரவை என்ன செய்வது அந்த இரவை என்ன செய்வது எனக் குமைந்து புலம்புகிறது அவனது மனம். அந்த இரவை மட்டுமல்ல எந்த இரவையும் எதனாலும் ஏதொன்றும் செய்துவிட முடியாதபடி ஒரு அன்பின் மாயச்சுழலுக்குள் நின்று பாபுவின் கவிதைகள் அறம் பாட முனைகின்றன. ஆனால் அந்த அறம் பாடலைக் கேட்பதற்கு நள்ளிரவு 1.40 க்கு வருகிற அலைபேசிக்கு நாம் தாமதியாமல் காது கொடுக்க வேண்டியிருக்கிறது.

அது வெறுமனே காது கொடுப்பது மட்டுமல்ல சடுதியில் போக நினைக்கும் ஓர் உயிரை, பிடித்து நிறுத்துவது.
அன்பின் விகசிப்புகளை ஆறாக்கண்ணீருடன் ஆதுரமாகப் பகிர்ந்து கொள்ள முயல்வதும் கூட.

தவிர அம்மு என்ற ஒரேயொரு
“ஒற்றைச் சொல்” இறந்து போனவனின் கண்களையும் ஒரு நொடியாவது திறந்து மூடச் செய்கிறதென்றால் அதன் வலிமை, பாபுவின் மனதில் அது சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் ஆகிருதியை என்னவென்று சொல்வது?

இந்த ஊரில் எத்தனையோ பாபுக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இசையின் நாத பாவங்களில் தன்னைக் கரைத்துக் கொண்டு சாக முனைகிற பாபுவிற்காக எத்தனையோ யமுனாக்களும் இங்கிருந்ததை நாம் வாசித்திருக்கிறோம்

கண்டதில்லை

ஆனால் பாபு என்கிற எளிய மனிதனின் கனவுகளாகவும் கவிதைகளாகவும் அவனது வாழ்வில் பிரித்தறிய முடியாத ஒரு பாதியாகவும் அம்மு நீக்கமற நிறைந்திருக்கிறாள். அதனாலேயே பாபு வாழ்ந்துகொண்டிருக்கிறான்.

இருபத்து நான்கு ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட பறவை அதனுடைய பதினெட்டாம் ஆண்டில் நம்தோளில் வந்தமர்வது யாருடைய துர்லபம் எனத் தெரியவில்லை. எல்லா இடங்களுக்கும் கூடவே வந்து குதியாளமிட்டு மலர்ச்சியை உணரச்செய்து ஒரு பலூன் வெடிக்கிற சிறு கணப்பொழுதில் அப்பறவை கைநழுவிச் செல்லும்போது உண்மையில் இந்த உலகம் தன் போக்கில் இயல்பாக சுற்றிவிட முடியுமா என்ன? பிறகு மலை உச்சியிலிருந்து கீழே விழுபவன் அவ்வளவு சுலபத்தில் தரைதட்டி விட முடியாமல் பூமி தன் சுழற்சியை அப்போது நிறுத்தி விடுகிறது தானே? பாபுவின் கவிதைகளில் அதுதான் நிகழ்கிறது. யாரும் யாருக்கும் ஆறுதலை சொல்லிக்கொள்ள இயலாதவாறு சுண்டு விரலைப் பற்றிக் கொண்டு காப்பாற்ற கோருகிற குரலை நாம் கேட்க முடிந்தால் பிறந்து 8 நாட்கள் ஆன சிறு மகவின் முன்பு பாபு அமர்ந்திருக்கிறான் என்று அர்த்தம்.

ஒரு கவிதைத் தொகுப்பிற்கான அறிமுகமாகவும் விமர்சனமாகவும் கவிதை வாசிப்பு குறித்த பகிர்தலாகவும் இதை நாம் கருத முடியாது. இனி பாபுவின் கவிதைகள் அடுத்த நகர்வுக்குச் செல்வதற்கு ஏதாவது சொல்ல நம்மிடம் மிஞ்சியிருப்பது வெறும் மௌனம்தான்.
பாபுவும் அடுத்த கட்டத்திற்கு சென்று விட்ட பிறகு ஒற்றைச் சொல்லும் நம் கைவசம் இல்லை.

மலர்ந்திருக்கும் தாமரை பூவை வேண்டுமானால் நம் மனக்கண் கொண்டு தேடி காணலாம்.அது மட்டுமே நம்மைக் கொஞ்சம் ஆசுவாசங்கொள்ளச் செய்யும்.

பாபுவின் கவிதைகளைப் பற்றி பேசுவதும் பாபுவை பற்றி பேசுவதும் வேறு வேறல்ல. ஏனெனில் பாபுவின் வாழ்வும் கவிதையும் ஏறத்தாழ ஒன்றாகவே இருப்பதால் நமக்கு பாரதூரமான அளவிற்கு பிரித்தறிய வேண்டிய அவசியமேதும் இல்லை.

மேலும் எனது இந்தச் சொற்கள் இத்தொகுப்பின் கவிதைகளின் மீது அழுந்தப்படிந்தவையாக இருப்பதைவிட பாபுவின் மீதாக இருப்பதொன்றும் ஆச்சரியமானதல்ல.

இந்தக் கவிதை தொகுப்பு நம் கைகளில் தவழ்கிறது.
ஆனால் நாம் அது பற்றிப் பேசும் போது நம் நெஞ்சத்திலிருந்து நம்மையறியாமல் பாபுவைப் பற்றியே பேசத் துவங்குகிறோம்.

ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு சேலத்திலிருந்து ஓசூர் வருகிற மதியநேர பாசஞ்சர் ரயில் வண்டியில்தான் முதன்முறையாக பாபுவின் கவிதைகளில் நிறைந்து கிடக்கும் அம்முவைச் சந்தித்தேன். அப்போது பாபுவும் உடனிருந்தார். அதுவொரு கோடை காலமாக இருந்தது. வழியெங்கும் இறங்கி ஓடியபடியும், சமயத்தில் தொப்பூர் மலைமுகட்டில் ஏறி நின்று பாபுவிற்குப் பழிப்புக் காட்டியபடியும் இன்னும் பலவாறான குறும்புகளுடன் அம்மு வந்துகொண்டிருந்தாள். நொடிக்கு நொடி அவளது உடைகளும் ஜடை அலங்காரங்களும்கூட மாறிக் கொண்டிருந்தன.ஒரு நொடி கையிலிருந்த’உயிர்மை’ இதழ் தவறி விழுந்தது. குனிந்து எடுத்துக் கொண்டேன்.

இன்னும்கூட அந்த காட்சிகள் நினைவிலாடுகின்றன. எனினும் இப்போது அந்த அம்முவின் முகம் சற்று மங்கலாகிப் போய் எனக்குத் துலங்க மறுக்கிறது.

ஆனாலும்,அப்போது அந்த மதியத்தில் நான் வாசித்த கவிதையில் இருந்த பாபுவின் அம்முவிற்கு வேறொரு பெயருமிருந்தது…

*** ***
(16 டிசம்பர் 2018 அன்று ‘தமுஎகச-ஒசூர் கிளை’ நடத்திய வே.பாபு நினைவேந்தல் நிகழ்வில் வாசிக்கப்பட்ட கட்டுரை.)

மாங் கே கவிதைகள் ( மூடுபனிக் கவிகள்-2 ) – தமிழில் சமயவேல்

நண்பர்களாகிய கவிஞர்கள் பெய் தாவோ மற்றும் மாங் கே இருவரும் சீனக் கலாச்சாரப் புரட்சிக்கு எதிராக, ஜின்டியன் (இன்று) என்னும் தலைமறைவு இதழை 1978 முதல் 1980 வரை கொண்டு வந்தார்கள். “மூடுபனி” இயக்கத்தின் படைப்பாளிகள் பலரும் இந்த இதழில் தொடர்ந்து எழுதினார்கள். சீன அரசால் ஜின்டியன் இதழ் தடை செய்யப்பட்டது. மாங் கேயும் பிற மூடுபனிக் கவிஞர்களைப் போலவே கிராமப்புறங்களுக்கு உடலுழைப்புக்கு அனுப்பப்பட்டார்.

1950ல் ஷென்யாங்கில் பிறந்த இவரது இயற்பெயர் ஜியாங் ஷிவீ. இவரது பல கவிதைத் தொகுப்புகளும் கட்டுரைத் தொகுப்புகளும் ஒரு நாவலும் சீன மொழியில் வெளியாகியுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு “அக்டோபர் சமர்ப்பணங்கள்” என்னும் தலைப்பில் 2018ல் ஜெஃபைர் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. மாங் கே சீனத்தில் வெற்றிபெற்ற அருவ ஓவியரும் ஆவார். தற்சமயம் பீகிங் புற நகரில் இருக்கும் சாங்சூவாங் என்னும் ஓவிய சிற்பக் கலைஞர்களின் குடியிருப்பில் வசித்து வருகிறார்.

வசந்த காலம்

இறந்து கொண்டிருக்கும் பூமிக்கு
சூரியன் தனது ரத்தத்தைத் தருகிறது.
பூமியின் உடலுக்கு உள்ளேயே
சூரியவொளி பாயுமாறு அது செய்கிறது
மேலும் இறந்தோரின் எலும்புகளில் இருந்து
பசிய இலைகளையும் கிளைகளையும் வளரச் செய்கிறது
நீங்கள் அதைக் கேட்க முடிகிறதா ?
இறந்த எலும்புகளின் கிளைகளே
பூக்களின் கிளிங் என சப்தமிடும் வைன் கோப்பைகள்.

௦௦௦

சூரியனில் இருக்கும் சூரியகாந்திப் பூக்கள்

நீங்கள் பார்க்கிறீர்களா?
சூரியனில் இருக்கும் அந்த சூரியகாந்திப்பூவை
அதைப் பாருங்கள்—அதன் தலை தாழ்ந்திருக்கவில்லை
மேலும் பின்புறமாக வளைகிறது.
அது அதன் தலையைச் சுற்றிலும் திருப்பிக் கொண்டிருக்கிறது
அதன் கழுத்தைச் சுற்றியிருக்கும் கயிற்றைக்
கடித்துத் துப்பப் போவது போல,
சூரியன் கைகளில் பிடித்திருக்கும் கயிறு அது.

நீங்கள் அதைப் பார்க்கிறீர்களா ?
சூரியகாந்தியின் உயர்த்திய தலையைப் பாருங்கள்
அதன் கண்கள் சூரியன் மேல் கோபத்தில் கனல்கின்றன
அதன் தலை பிரகாசிக்கிறது
சூரியன் மூடப்பட்டு இருக்கும் போது கூட.

நீங்கள் அந்த சூரியகாந்தியைப் பார்க்கிறீர்களா ?
நீங்கள் பக்கத்தில் சென்று அதை நன்கு பார்க்க வேண்டும்
நீங்கள் கண்டுபிடிப்பீர்கள்
அதன் உயிர் பூமியுடன் பிணைக்கப்பட்டிருப்பதை.
நீங்கள் உணர்வீர்கள்
அதன் காலுக்கு அடியில் இருக்கும் பூமியை
நீங்கள் உணர முடியும்.
ஒரு கை நிறைய அள்ளுங்கள்
நீங்கள் ரத்தத்தைப் பிழிந்து எடுக்க முடியும்.

௦௦௦

இறந்த பிறகு கூட ஒருவர் வளர்ந்து முதிர்கிறார்

இறந்தவரின் நரைத்த முடி பூமியிலிருந்து வளர்கிறது
அது இறந்த பிறகு கூட ஒருவர் வளர்ந்து முதிர்கிறார் என்று என்னை நம்பச் செய்கிறது.

இறந்த பிறகு கூட, கொடுங்கனவுகள் உன்மேல் சீறிப் பாய்கின்றன;
இன்னும் நீ பயத்துடன் எழுகிறாய், பார்ப்பதற்காக உன் கண்களைத் திறக்கிறாய்.

முட்டையோட்டில் இருந்து வெளிப்படுகிறது இன்னும் ஒரு நாள்,
தரை மீது கிடக்கும் உணவை வேகமாகக் கொத்தத் தொடங்குகிறது

நீயே உனது சொந்தக் காலடி ஓசையையும் கேட்க முடியும்
மேலும் உனது கால்களின் சிரிப்பு; நீ விசனமடைகிறாய்.

மேலும் ஞாபகம் கொள், உனது தலை காலியாக இருக்கும் போதிலும்,
உனது நினைவில் இருக்கும் மக்கள் அழுகிப்போய்விட்ட போதிலும்.

நீ அவர்களைப் பாராட்ட முடியும், அதே போல உனது காதலியையும்
மேலும் இரு திடமான கரங்களால் அவளது முகத்தை ஏந்திக் கொள்,

ஒரு வைக்கோல்போர் மேல் அவளைப் படுக்க வை,
மேலும் அவளது அதிமதுர உடலை அவலட்சணமாக நீட்டும் அவளைக் கவனி.

எவ்வாறு காத்திருப்பது என நீ அறிவாய், சூரியவொளிக்காக எவ்வாறு காத்திருப்பது
என்றும் கூட
ஒரு கந்தல் வைக்கோல் பாய் போல காற்றால் ஊதி வெளியே எறியப்படுகிறாய்;

சூரிய அஸ்தமனத்துக்காக நீ காத்திருக்கிறாய், அது உன்னைத் தவிர்க்கிறது
ஒரு கொடூரமான மிருகத்தை நீ தவிர்க்கும் வகையில்,

உனது கரங்களில் அவளை அணைத்திருக்க உன்னை அவள் அனுமதித்திருக்கும் போது
நீ இரவுக்காகக் காத்திருக்கிறாய்
அவளை வருடிக் கொஞ்சவும் பரவசப்படுத்தவும் உன்னை அவள் சுலபமாக
அனுமதித்திருக்கிறாள்.

ஒருவேளை சோர்வு காரணமாக நீ படுத்துக் கொண்டு உனது கண்களை மூடிக்
கொள்ளலாம்
வானில் மிருகங்கள் குரைப்பதையும் சண்டையிடுவதையும் நீ கேட்பதற்காக.

மேலும் நீ கவலைப்பட முடியும்—ஒருவேளை ஓர் இரவு
வானத்தின் ரத்தம் பூமிக்குப் பீச்சியடிக்கும்;

ஒரு இறந்த முகத்திற்குத் துக்கம் அனுஷ்டிக்க இன்னும் நீ நிற்கக் கூடும்
அவனது கண்கள் உன்னை வெறித்துப் பார்க்கின்றன;

நீ இன்னும் நம்பிக் கொண்டிருக்கலாம் ஒருவர் என்றென்றும் வாழ்கிறார் என,
நீ ஒரு இரை இல்லை என

வறுக்கப்படுவதற்கும் விழுங்கப்படுவதற்கும்,
தாங்க முடியாத வலியை உணர்வதற்கும்.

நரைத்த முடி பூமியிலிருந்து வளர்கிறது,
இறந்த பிறகு கூட ஒருவர் வளர்ந்து மூப்படைகிறார் என என்னை நம்பச் செய்கிறது.

௦௦௦

திராட்சைத் தோட்டம்

ஒரு சிறிய திராட்சைத் தோட்டம்
எனது இனிய இல்லம்.

திடீரென இலையுதிர்காலக் காற்று உள் நுழைந்தது, கதவை கலகலவென ஆட்டியது
கண்ணீர்களின் திராட்சைகளால் எனது தோட்டத்தை நிரப்பியது.

வெகுகாலமாக முற்றத்தை இருளச் செய்திருந்த சுவர்களின் மேல்
ஒரு சில புறாக்கள் பயத்தில் சிறகடித்தன.

பயந்து போன குழந்தைகள், வீட்டுக்குப் பின்புறம் ஒரு மூலையில்
தங்களது அழுக்கு முகங்களை மறைத்துக் கொண்டன.

சுற்றிலும் சோம்பித் திரியும் நாய்கள் மறைந்து போயின
எங்கே என்று யாருக்குத் தெரியும்.

ஒரு கொத்து சிவப்புக் கோழிகள் ஒரு தூசிக் குளியலை வாரியடித்தன
எல்லா நேரமும் விடாமல் சதா கத்திக் கொண்டே இருந்தன.

திராட்சைப்பழங்கள் பூமியின் மேல் விழுவதை நான் கவனித்தேன்
வீழ்ந்த இலைகளின் மத்தியில் ரத்தம் ஓடிக் கொண்டிருந்தது.

பிறகு நாம் தேடிய அமைதி நமக்கு மறுக்கப்பட்டது,
நமது தினசரி சூரிய ஒளியும்.

சாலை மேல் நிலவு

i)

நிலவு என்னை வீட்டுக்கு நடத்திச் செல்கிறது
நான் அவளை நாளைக்குள் எடுத்துச் செல்ல விரும்புகிறேன்.
வழி நெடுகிலும் இந்த மௌன அமைதியில்…

ii)

மியாவ்…மியாவ் … மியாவ்,
தயவுசெய்து தொந்தரவு செய்யாதீர்கள்.
நீங்கள் மனிதரா,
அல்லது ஒருவேளை அதற்கும் மேல் நம்பத்தகுந்த வேறு ஏதேனுமா?

iii)

நிச்சயமாக,
மனிதராய் இருப்பதை விட பெருமைப்பட சிறந்த ஏதுமில்லை.
ஆனால் நீ?
நீ ஒரு பூனை.
மேலும் ஒரு பூனையார் ஒரு மாவோவை ஏறிட்டுப் பார்க்கலாம்.

iv)

நான் அவளை ‘நாளை’க்குள் கொண்டு செல்ல விரும்புகிறேன்.
எனினும், எப்படியாகினும் —
எந்த எண்ணமும் இல்லாமல் இருப்பதை விட ஒரு சிறிய எண்ணம் சிறந்தது.

v)

உண்மையில் வாழ்க்கை இந்த அதியற்புதம் தான்.
தூங்குங்கள்!

vi)

மேலே தனியாக வீணே மிதக்கிறது நிலா.
சரியாக அவள் அலைந்து மறைந்த போது,
என்னிடம் கொஞ்சங்கூட இல்லை.

௦௦௦

அக்டோபர் சமர்ப்பணங்களில் இருந்து

சமர்ப்பணங்கள்: 1972–1973

வாழ்க்கைக்கு
சிலநேரங்களில் நான் பள்ளத்தாக்கில் கத்துகிறேன்
பள்ளத்தாக்கு எனது குரலைத் திருப்பி அனுப்பும் போது
எனது குரல்
என் இதயச்தை அதிர்ச்சியடையச் செய்கிறது.

பையாங்டியானுக்கு
ஓ மாபெரும் நிலமே
எனது ஆசைகளை நீ கிளரச் செய்கிறாய்

ஒரு கவிக்கு
மயானத்தை நோக்கிப் பறந்து கொண்டிருக்கும் ஒரு கழுகு நீ

ஒரு பெண்ணுக்கு
காலம் மனித வர்க்கத்தைப் புரிந்துகொள்ள இயலாது
ஆனால் ஒரு அவசர சந்திப்பில்
வெதுமையைப் போன்ற ஏதோ ஒன்றை அவள் எனக்குக் கொடுத்தாள்

இரவுக்கு
எந்தப் பெண்ணும் ஒரு ஆணை மயக்கமுறச் செய்ய முடியாது
எந்த ஆணும் ஒரு பெண்ணைக் கர்ப்பமாக்க முடியாது

பிங்குக்கு, அவனது 18வது பிறந்த நாளில்
நோயுற்ற குழந்தையின் அகன்ற கண்களில்
போய் அழகைப் பற்றி கற்றுக் கொள்ளுங்கள்

கவிதைக்கு
குளிர்கிறது ஆனால் பெரும் கற்பனை
நீ மாற்றிக் கொண்டிருப்பது
எங்கள் வாழ்கைகளின் தனிமை

யாரோ ஒருவருக்கு
உலகம் மட்டும் போதுமானது

ஒரு நண்பனுக்கு
இந்த அதிகாரமற்ற கரங்கள்
சக்தி மிக்க முஷ்டிகளாகின்றன

குளிர்காலத்திற்கு
வாழ்க்கை
ஒரு தீக்குச்சியைப் போல பற்ற வைக்கிறது
வெதுவெதுப்பைத் தருவதற்கு
எரிப்பதற்கு
மேலும் எரிக்கப்படுவதற்கு

எனது 23வது பிறந்த நாளுக்கு
அழகு
ஆரோக்கியம்
நிறைய சிந்தனைகள்
௦௦௦
(1973)

சுபிட்சமுருகன் ஒரு வாசகப்பார்வை..! / நிஷாமன்சூர்

சரவணன் சந்திரன்

ஒரு கலைப் படைப்பை வாசிக்கும்போது வாழ்வனுபவங்கள் அல்லது புனைவுகள் மூலமாக உருவாகும் மாயவெளியானது வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் வேவ்வேறு விதமான கிளர்ச்சியை உண்டாக்கும். ஆனால் வாசகன் என்னவிதமான உணர்வுகளை அடைய வேண்டும் என்று படைப்பாளியே விவரிப்பதும் புளகாங்கிதம் கொள்வதும் படைப்பின் ஆன்மாவையே சிதைத்துவிடும்.

வழக்கமாக எந்த நூலை வாசிக்கும்போதும் நான் முன்னுரைகளையும் ஆசிரியர் உரையையும் வாசிப்பவன் அல்லன். ஆனால் சுபிட்ச முருகனில் எதோ ஒரு ஆர்வத்தில் வாசித்து விட்டேன்.

சுபிட்ச முருகனின் முன்னுரையில் இருக்கும் சரவணனின் கிளர்ச்சி படைப்பில் காணக் கிடைக்கவில்லை. ஒரு சாபம் உருவாக்கிய விளைவுகளும் அதன் வலிகளிலிருந்து மீண்டு சுபிட்சம் பெறும் ஒரு தலைமுறையின் பிரதிநிதியின் வாழ்வனுபவங்களுமே இந் நாவல்.

சமீபத்தில் ஒரு பெண்கள் கல்லூரியில் சுய இன்பம் செய்து பிடிபட்ட லிஃப்ட் ஆபரேட்டர் பற்றி, செய்திகளில் நாம் பார்த்திருப்போம். அவனது கூட்டாளிகள் பலர் இந்நாவலில் லூஸான பேண்ட்டின் பாக்கெட்டில் கைவிட்டவாறு நடமாடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த மனோ உணர்வுகளும் வாழ்வும் நமக்கு புத்தம்புதுசான ஆனால் விந்துத்துளிகளின் ஈரமேறிப் பூஞ்சைபடர்ந்து கவுச்சியடிக்கும் இன்னொரு உலகைக் காண்பிக்கின்றன.

ரோலக்ஸ் வாட்ச்சின் நாயகனின் ஆவி, சுபிட்ச முருகனின் நாயகனது தோள்களில் நிறைவேறாத காமதாகத்துடன் சவாரி செய்து கொண்டிருப்பதை நாவல் முழுவதும் காணமுடிகிறது. பொதுவாக எங்கெல்லாம் துறவுச் சிந்தனை மிகுதியாகத் தூண்டப்படுகிறதோ அங்கெல்லாம் தாகித்த காமப்புலன்களின் வறட்சியை நாம் உணரமுடியும். இன்னும் சொல்லப்போனால் காமமும் துறவும் ஒன்றுக்கொன்று மிகுந்த நெருக்கம் கொண்டவை. அந்நெருக்கத்தின் ஆழத்தை நாவலில் உணர்கிறோம்.

சூஃபிகள்,மஜ்தூபுகள்(சுய சிந்தனையற்று இறைவனில் மெய்மறந்த ஞானிகள்),சித்தர்கள் ஆகியோர் மனிதர்கள் யாவரையும் குற்றவாளி போல அணுகுவதில்லை. அதாவது இன்னொரு உயிர் துன்புறுத்தப்படாமல் இச்சை மிகுதியால் செய்த பாவங்களை அவர்கள் குற்றமாகவே கருதுவதில்லை. இன்னும் சொல்லப்போனால் அதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு குற்றவுணர்வோடு நிம்மதியின்றி அலையும் மனிதர்களின் குற்றவுணர்வை அகற்றி நெறிப்படுத்தவும் செய்வார்கள். “என் மகனுக்கு அதுதான் சந்தோசத்தைக் கொடுக்குதுன்னா போய்ட்டுதான் வாயேன்” என்று கூறிய ஒரு சூஃபியின் சொல் அக்காலத்தில் மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது.

சுபமங்களா இதழில் வந்த கவிஞர் விக்ரமாதித்யனின் கவிமூலம் தொடரில் தாயைப் பற்றிய ஒரு கவிதையில் இப்படி ஒரு வரி வரும்,
“தூக்கம் வரலேன்னா எதையாவது
குடிச்சுட்டுதான் படேன்” என்று அந்தத் தாய் சொல்லுவதாக.
இவ்விடத்தில் உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கும் மகனது மன சஞ்சலங்களை மதுதான் நீக்கி உறக்கத்தை அளிக்குமெனில் ஒருவாய் குடித்துவிட்டுத்தான் உறங்கட்டுமே என்கிற அக்கறையாக வெளிப்படும். கவிதையை எழுதியவர் வித்யாசாகர் என்று நினைவு.
ஞானிகளும் தாய்மணம் கொண்டவர்கள்தானே.
சுபிட்ச முருகனில் வரும் பழனி சித்தரும் அப்படித்தான்.

சரவணன் சந்திரனின் முன்னுரையை வாசிக்காமல் நேரடியாக நாவலுக்குள் நுழைவது வாசிப்பை மேம்படுத்தும். ஆனாலும் நாவலைப் பூரணப்படுத்தாத ஏதோ ஒன்று வாசித்து முடித்த பின்னர் உறுத்திக் கொண்டிருக்கிறது.ஒருவேளை அவை இன்னமும் அகற்றப்படாத நமது குற்றவுணர்வின் சிதிலங்களாகவும் இருக்கலாம்.

••

யுகங்களாய் தாபித்திருக்கும் திருமார்புவல்லி – குமாரநந்தன்

கவிஞர் ஸ்ரீ ஷங்கரின் திருமார்புவல்லி தொகுப்பின் கவிதைகளை முன்வைத்து…

பக்தி இலக்கிய காலத்திற்கு முன்னாள், தமிழ் கவிதைகளில் காமம் அவ்வளவு தீவிரமாய் ஒதுக்கப்படவில்லை. காதல், ஏக்கம், தனிமை, பிரிவு பசலை என எல்லாவற்றிலும் காமம் தொக்கி நிற்பதை ரசிக்க முடியும். காமம் என்கிற உணர்வை பண்பாட்டோடு சொல்லும் நேர்த்தியை அதில் காணலாம்.
பக்தி இலக்கிய காலத்திற்குப் பின், காதல், காமம் அருவருப்பான உணர்வாக மாறிவிட்டது. அல்லது காதல் என்பது உடல் சாராத புனிதப்படுத்தப்பட்ட ஒன்றாக மாற்றப்பட்டது. இந்த நிலை இன்று வரை தொடர்கிறது.

பக்தி இலக்கிய காலத்தின் வழிபாடு மற்றும் தெய்வீகம் என்பதான படிமங்களின் பின்புலம், சங்கப் பாடல்களின் மொழி மற்றும் செழுமையான வெளிப்பாடுகள், தலைவன் தலைவி மட்டுமே இருக்கின்ற காமம் என்கிற வேட்கை காதல் என்கிற உணர்வு உடல் என்னும் கொந்தளிப்பு ஆகியவற்றின் எண்ணிறந்த வண்ணக் காட்சிப் படிமங்களால் அரங்கேற்றப்படும் ஒரு நவீன நாடகம் தான் திருமார்பு வல்லி.
ஆதி கவித்துவ நிலையில் சமைக்கப்பட்டிருக்கின்றன இக்கவிதைகள். இவை காதல் கவிதைகள் என்று மட்டும் சொல்லிவிட முடியாது. அதற்கு அடுத்த உடல்களைக் கொண்டாடும் நிலை. ஆனால் காமத்தை மட்டும் பாடுவதல்ல. காமம் முழுவதையும் கவிதையால் நிரப்புவது. தன்னிலை மறந்து அதை கொண்டாடுவது. பிதற்றுவது. இக்கவிதைகள் அனைத்தும் காமத்தைப் பிதற்றுகின்றன. அல்லது அவ்வாறு பிதற்றுவதால் கவிதையின் அந்தஸ்தைப் பெறுகின்றன. எனவே கவிதையின் உலகம் பிளவுபடாமல் பலவாறாக பரந்து சிதறாமல் உயிர்த்துடிப்புடன் இருக்கிறது.

இந்த எல்லையைத் தாண்டினால் அது விரசமாகிவிடும் என்ற நிலை வரை இந்தக் கவிதைகள் செல்கின்றன.
அதனால் இவை ஒரு ஆண் அல்லது பெண்ணின் உடல் மிகவும் அந்தரங்கமாக காமத்தில் தவிப்பதைக் கொண்டாடும் நிலையில் உள்ளன. எனவே இதில் சோகம் தவிப்பு துயரம் இல்லை. அப்படி இருந்தாலும் அவை தலைக்கேரிய காமத்தின் பித்திலிருந்து உருவாகி பரவிச் செல்லும் உணர்வுகள்தான்.
கவிதைகளில் இந்தப் பித்துநிலை ஸ்தூலமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
இக்கவிதைகள் அனைத்தும் காமத்தின் பித்து நிலையில் தோன்றியவை தான்.
அந்தநிலை புத்தகமெங்கும் விரவியிருப்பதால், ஒவ்வொரு கவிதைக்கும் தனியாக அதற்கான மனநிலையை சமைக்க வேண்டிய அவசியம் இல்லாமல் போகிறது.
திருமார்பு வல்லி என்ற தலைப்பே அத்தகையதுதான். அது திரு நெஞ்சம் அல்ல திருமார்பு. வெறும் மார்பு அல்ல திருமார்பு இதுதான் இந்தக் கவிதைகளின் சாராம்சம்.

இக்கவிதைகள் அனைத்தும் காமத்தினால் உன்மத்த நிலையடைந்த ஒருவன் ஒருத்தியின் புலம்பல்களாக நினைவுகளாக இருக்கின்றன. அவர்களுக்குள் கூடல் ஏற்கனவே நிகழ்ந்துவிட்டது. இனியொன்று அதேபோன்ற உலகின் எந்த ஒன்றினோடும் ஒப்பிட முடியாத தங்களுக்கிடையேயான அந்த நிகழ்வுக்காக அவர்கள் தவித்திருக்கின்றனர்.

நீ
பௌர்ணமி அல்லது முழு நிலவு
எனது பரவசமும்தான்
மேலும்
வளர்ந்து வரும் மாம்பிஞ்சு
இன்னும் ஓடுடைத்திராத
சூலுற்றிருக்கும் ஒரு மொழி
நான்தான் அதை மிழற்றும் பிள்ளை
மேலும் ஆனாய்
இந்த உலகின் ஒரே அற்புதமாக
நீ என்பது
அனைத்துப் பருவங்களையும் தீண்டிச் செல்வது
எனத் தொடரும் ஒரு கவிதையில் நீ என்பதை கவிஞரால் முழுமையாக வரையறை செய்யவே முடியவில்லை. தன்னுடைய கவித்திறனை மொழியை முழு வீச்சில் பிரயோகித்தும் அது நடக்கவில்லை என்பதுபோல் அவ்வளவு பிரமாண்டமாய் இருக்கிறது அந்த நீ.
சங்கப் பாடல்களில் தலைவியின் ஊடலைத் தீர்க்க தலைவன் சொல்லும் மொழிகளில் நாடகம் இருக்கும்.
ஆனால் அன்பின் ஏகாந்தம் என்கிற இந்த கவிதை இப்படி முடிகிறது
விருப்புறுதி காட்டி நீ சினந்தது போதும்
கொன்றை அரண் சூழ்ந்த ஏகாந்தம் காத்துக் கிடக்கிறது
முதுவே
வேக்கை கொண்ட யாக்கைகளின் பாய்வில்
இத்திணையானது
நம் அன்பில் வெதுவெதுக்கட்டும்
அப்போது
நீலத்தில் இரைந்த கற்கள் மினுங்குவதைப் பார்த்தபடி
பூச்சிகளின் இசைக்கோலங்களில்
காலமற்றுக் கிடப்போம்

சங்கப் பாடல்களின் மொழியைப் பற்றிக் கொண்டு இக்கவிதைகள் ஒரே பாய்ச்சலில் இங்கு வந்து விழுகின்றன.
இப்படியான ஒரு சித்திரத்தை தரும் இக்கவிதைகளில், பூமி மீது பேச்சிழப்பு என்ற கவிதை வேறென்றாக இருக்கிறது.
அக்கவிதை கடற்கரையில் நிகழ்கிறது. அது ஒரு சுற்றுலா தளம். அங்கே இணைஞர்கள் தங்கள் இணைகளோடு மணக்கும் உடல்களோடு உலாவுகின்றனர். அப்போது தலைவன் முன் இருக்கும் உலகின் ஒரே கடமை தன்னை அசுவாசப்படுத்திக் கொள்வதுதான். காமத்தால் கட்டி இழுத்துச் செல்லப்படுதல், அதை அடைவதன் மூலம் அதிலிருந்து விடுதலையடைதல் போன்ற உணர்வுகளை இந்த அசுவாசப்படுத்தக் கொள்ளுதல் என்கிற சொற்பிரயோகம் பிரதிபலிக்கிறது. கவிதையின் கடைசி வரி இப்படி முடிகிறது. தூரப்பாடலில் அலையும் ஒருத்தியோடு நனைந்தபடி தொலைவாகிக் கொண்டிருக்கிறேன்.

கவிதைகளில் குறிஞ்சி நிலமும் அதன் கூடலும் கூடல் நிமித்தமும் பின்புல ஓவியமாய் இருக்கின்றன.
கடமான்கள் அதிகம் திரிகின்ற
வெண்டாமரைப் பொய்கையை
கடந்துவிட்டாயா பெருவடிவே
வா
நறுமணக் கொங்கைகளின்
நிழலுக்கு
யுகங்கள் தாபிக்கின்றன.
என்று சொல்வதன் மூலம் தலைவன் பல ஆயிரம் ஆண்டு காலமாய் தன் மொழி வெவ்வேறு விதமாய் மாறினாலும், தன் கவிதை வெவ்வேறு விதமாய் மாறினாலும் மாறாத தாகத்தோடு மாறாத காமத்தோடு சாசுவதமான குறிஞ்சி நில மரத்தடியில் தாபித்திருக்கும் சித்திரம் தோன்றுகிறது.

அசையில் நுரைத்துப் படர்த்திய எச்சிலோடு
வெம்மையையும் மேய்ச்சலையும் நோக்கி
தொடங்கிய அதன் பயணம்
தேவியைன்
பாத கமலத்தை அடைந்தேவிட்டது.

கூடல் நினைவுகளை எந்நேரமும் அசைபோடுதலின்றி வேறு எதையும் செய்யாத செய்ய முடியாத அவன் மாடாகிறான்.
அந்த அசையில் நுரைத்துப் படர்கிறது காமமாகிய எச்சில்
அந்த எச்சிலின் ஊறலோடு, வெம்மையையும் மேய்ச்சலையும்
நோக்கி அதன் பயணம் தொடங்குகிறது.
வெம்மை காமத்தினால் உடல் அடையும் பரவசமாகவும், மேய்ச்சலை கலவியாகவும் உணரும்போது காதல் காமம் களவி யாவும் வேறொரு தளத்துக்கு சென்றுவிடுகின்றன. அதில் நிகழ்கால காமத்தில் இருக்கும் வக்கிரம், துரோகம், குற்றவுணர்வு எதுவும் இல்லை.
ஒன்றிரண்டைத் தவிர இந்தக் கவிதைகள் அனைத்தும் ஒரே கவிதையாக உள்ளன. எனவே, இதில் இந்தக் கவிதை சிறப்பாக இருக்கிறது. இந்த கவிதை சுமாராக வந்திருக்கிறது என அடையாளப்படுத்த முடியவில்லை.
இக்கவிதைகள் ஒரு சம்பிரதாயத்துக்காக வெவ்வேறு கவிதைகளாய் அடையாளப் படுத்தப்பட்டிருப்பதாகத் தான் எனக்குத் தோன்றுகிறது. பாடித் தீர்க்க முடியாத ஒரு கவிதையில் விழுந்து இன்பத்தில் உழல்கிறோம். காமத்தின் முடிவற்ற உறவுகளை அது குறித்த நினைவுகளை ஏக்கங்களை புலம்பல்களை பக்கங்களெங்கும் கேட்கிறோம்.
அவற்றுக்கான வார்த்தைகள் எல்லாம் ஒரு தாந்திரீக சடங்கின் குறியீடுகளாக மாறியுள்ளன. அவற்றை மாற்று வார்த்தைகளைக் கொண்டு விரித்துச் சொன்னால் அவை ஆடை ஆபரணங்கள் புனைந்த ஒரு தேவதையை மந்தை நடுவே நிறுத்தி துகிலுரிந்ததான வக்கிரமாக எஞ்சிவிடும்

மாறாக அக்கவிதையின் சொற்களை அப்படியே சொல்வதுதான் அதற்கான ஆகச் சிறந்த விளக்கமாக இருக்க முடியும்
சில கவிதைகளின் சில வரிகளைப் பார்ப்போம்.
உனது அதரங்கள் புரளும் காலத்தில் தொடர்ந்த
பெரு இயக்கத்தின் பின்
வந்தடைந்த
சிவப்பு ஆதாளைச் செடியில் வழியும்
சாறு கொண்டு துடைத்த
ஒளிரும் கொழுமையான மென் கன்னங்களில்
அளைகிறேன்
தலைக்கேசம் பிய்த்துக் குழறுகிறாய் பொம்மி

மென்சூட்டில் தொடங்கிப் பதறும் உடல்களோடு
புளித்த மதுவில் மிதக்கும் நாவைப் பகிர்ந்து கொண்டோம்
ஆடை விலக்கி
உன்னில் முகிழ்த்திருந்த இளஞ்சிவப்பு திராட்சைகளை
உண்ணத் தந்தாய்
உனது நயனங்கள்
அப்போது தான் பிறந்த நிறத்தில் மின்னின
மேலும்
நீ அழைத்துச் சென்ற பாதை அடைந்த சமவெளியில்
தடாகமொன்று கசிந்தபடியிருக்க
அதில்
நீங்கவியலா எருதென
விம்மும் தாமரை இதழ்களை உண்டபடி கிடந்தேன்.

கவித்துவமும், மொழியும் விளையாடும் இக்கவிதைகளில் காலத்தின் பிரக்ஞை கண்டு கொள்ளாமல் விடப்பட்டிருப்பதன் நுட்பத்தை புரிந்து கொள்ள முடியும் காலப் பிரக்ஞை என நான் குறிப்பிடுவது சம காலக் கவிதைகள் அதன் வெளிப்பாடுகள் ஆகிவற்றிலிருந்து எதையும் தன்னுடையதாக மாற்றிக் கொள்ளாத தனக்கேயான சொற்கள் தனக்கே உண்டான மொழி தனதான கவிதைகளாய் இக்கவிதைகள் இருக்கின்றன.
மேலும் நாஸ்டால்ஜிக் தன்மையின் வாசமும், வரலாற்றுக் காலம் போன்ற மயக்கமும் ஏற்பட்டாலும் கவிதையின் காலம் நிகழ்காலத்தின் வேறானதாய் இல்லை. ஏனென்றால் மனிதனின் ஆதி உணர்வு காலத்தின் பாற்பட்டதல்ல அல்லவா?

***

ஏசல் ( சிறுகதை ) – சே. தண்டபாணி தென்றல்

ஆறாம் வகுப்பின் ஐந்தாம் பிரிவேளை மிகவும் கலகலப்பாக இருந்தது. சிலர் அங்குமிங்கும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தனர்.பலர் தன்னுடைய புத்தகப் பையில் டீச்சருக்குத் தெரியாமல் ஒளித்து வைத்திருந்த அஞ்சாங் கற்களை எடுத்து வகுப்புக்குள்ளேயே விளையாடத் துவங்கினர். இத்தனைக்கும் அது ஓடுகளால் வேயப்பட்ட ஆதி காலக் கட்டிடம்.

எல்லாரின் சந்தோசங்களிலும் பங்கெடுத்துக் கொண்டதற்குச் சாட்சியாக அக்கட்டிடமும், அவர்களுடன் சேர்ந்து சிரிப்பதைபோலவே உள் பகுதியில் ஒளிவீசிக் கொண்டிருந்தது. ‘வெளிச்சம் வரவில்லை’ என்ற அண்மைக்கால தலைமை ஆசிரியரின் வேண்டுகோளுக்கு இணங்க சில ஓடுகளைக் களைந்துவிட்டு கண்ணாடியைப் பதித்திருந்தனர். ஒவ்வொரு கண்ணாடியும் ஒரு வாயைப் போலவே ஒளிப்பற்களால் சிரித்துக் கொண்டிருந்தது.

பசங்க இன்னும் ஒரு படிக்கு மேலே போய், உயரத்தில் தொங்கவிட்டிருந்த கடிகாரத்தில் தாங்கள் செய்த காகித ராக்கெட்டை நிலை நிறுத்துவதில் சிலர் வெற்றியும் சிலர் தோற்று, மீண்டும் முடியும் என்ற உறுதியில் விடாமல், ராக்கெட் விட்ட வண்ணம் இருந்தனர்.கூடியிருந்த சிறு வட்டங்களில் அருணாவின் வட்டமும் மும்மரமாக அஞ்சாங்கல் விளையாடிக் கொண்டிருந்தது. மோகனா பக்கத்துக் கூட்டத்தில் இருந்து வந்து அவர்களுடன் அமர்ந்தாள். மொத்தம் ஐந்து பேர் இருந்த வட்டம் , தற்போது ஆறாகிப் போனது.முதலில் கவிதா ஆடத் துவங்கியிருந்தாள். இரண்டாவது ஆட்டம். கவிதா அப்படியொன்றும் நன்றாக அஞ்சாங்கல் விளையாடத் தெரிந்தவள் அல்ல. தன்மீது கடன் விழாமல் பார்த்துக் கொள்வாள்.

பொதுவாக கவிதாவுக்கும் ஷோபனாவுக்கும் தான் போட்டியாக இருக்கும். இருவரும் ஒரேமாதிரி திறமை பெற்றவர்கள் என்பதாகக் கூட இருக்கலாம். ஐந்து கற்கலும் சிப்பிகளில் இருந்து வெளிவந்த முத்துக்களைப் போலவே இருந்தன. மீதம் இருந்த பானுவும், ஜாஸ்மினும் சுத்த மோசம், ஒரு ஆட்டத்தை தாண்டுவதற்குள்ளே பலமுறை அலுங்கள் செய்து விடுகிறார்கள். ஆனால் இந்த ஐவர்களில் அருணா அப்படிப்பட்டவள் அல்ல. அவளின் முறை வந்துவிட்டால் அடுத்தவரிடம் கல் போகக் குறைந்தது கால் மணி நேரமாவது ஆகிவிடும்.

ஒருவர் மட்டும் இருக்க வைத்துவிட்டுத் தண்ணீர் பிடிக்கவோ? சிறுநீர் கழிக்கவோ சென்று விடுவார்கள். சில சமயம் அவர்கள் ஆடி அசைந்து வந்த பின்பும் கூட அருணா நிக்காமல் ஆடிக்கொண்டே இருப்பாள்.

“உனக்குனு தனியா அஞ்சு கல்லு கொண்டு வந்து நாங்களே கொடுக்கறோம். இவத்தையே நீயும் ஆடு அப்பறம் நாங்க இந்த அஞ்சு கல்ல மாத்தி மாத்தி வெளையாடிக்கறோம்.”
பலமுறை கூறும் ஷோபனா இம்முறையும் அருணாவை விட்டு வைக்கவில்லை.இப்போது மோகனாவை வரவேற்பதில் ஷோபனா ஈடுபட்டிருந்தாள். கூடவே அருணாவிடம்

“ இப்பப் பாத்துக்க உனக்கு வந்த போட்டிய? இவ கிட்ட உன் பருப்பு வேகாது பாத்துக்க?” .அவளின் அம்மா, பக்கத்து வீட்டுக்காரியிடம் பேசும் அதே பாணியில் இருந்தது ஷோபனாவின் பேச்சு .அவ்வட்டம் சற்று உடைந்து மோகனாவுக்கு வழிவிட்டது. இப்போது இரண்டாவது ஆட்டத்தில் கவிதா கோட்டை விட்டிருந்தாள். கற்கள் அனைத்தும் ஷோபனாவை அடைந்தன.ஷோபனா ஆடத் துவங்கினாள்.
“நேத்திக்கு அருணா வீட்டுக்குப் போனீங்க போல?”
இதுவரைக்கும் சும்மா இருந்த ஜாஸ்மின் இந்தச் சிறு குண்டை அக்கூட்டத்தில் அதும் அப்போது வெடிப்பாள் என்று யாருக்கும் தெரியவில்லை.

தெரியாத ஒவ்வொரு நிமிடத்திலும் ஓராயிரம் சுவாரசியங்கள் பொதிந்திருக்கிறது தானே. இவ்வளவு நேரமாக மோகனாவின் மனதை உறுத்திக் கொண்டிருந்த ஒரு விஷத்தை படக் என்று போட்டு உடைத்தாள்.அருணாவுக்கு பகீர் என்றிருந்தது. அன்று மாதத்தின் முதல் வாரமாக இருந்திருக்கலாம். ரேசன் கடையில் சக்கரையாவது கிடைத்திருக்கும் என்று கூடத் தோன்றியது. வெளியில் சொல்லவில்லை. கடைசி ஆட்டத்தில், யாருக்குக் கடன் வரும் என எல்லோரும் பார்க்க, ஷோபனாவின் குட்டிப் புறங்கையின் மேல் ஒரு கற்களும் நிற்கவில்லை. அச்சமயம் அருணா மோகனாவைக் கொஞ்சம் முறைத்துப் பார்த்ததை, நல்ல வேளை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை.

பங்குனி மாசம்.கிராமம் முழுதுக்கும் அப்போது கோணப் புளியங்கா சீசன். மோகனாவின் வீடு துளுக்கங் காட்டில் இருக்கிறது. அருணாவின் வீடு இரண்டு கிலோமீட்டர் தள்ளி புளிக்காரங்காட்டில் இருக்கிறது. அங்கிருந்து வரும் ஐந்தாம் வகுப்பு ஹம்ஷினிதான் இதற்கெல்லாம் காரணம் .

“அருணா அக்கா வீடு இருக்குள்ள அதா? எங்க ஊடு தாண்டிக் கொஞ்ச தூரம்? அங்க இருக்குது பெருசானா கோணப் புளிய மரம். துளி கூடத் தெவுக்காது. எம்முட்டு வேணாத் திங்கலாம் கொஞ்சங் கூட விக்கவே விக்காது.”

உடன் படிக்கும் ரஞ்சனியிடம் கூறிக் கொண்டிருந்தது, எப்படியோ அந்தப் பக்கம் போன மோகனாவின் காதில் விழுந்து விட்டது. அன்று இரவு முழுவதும் மோகனாவுக்குத் தூக்கமே வரவேயில்லை. தெவுக்காத கோணப் புளியங்காய்கள் ஆசை எலிகளாக மாறி அவளின் தூக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொறித்துக் கொண்டிருந்தன. அதிகாலை ஐந்து மணியாகிவிட்டது . சமைக்க எழுந்த அம்மாவை மோகனா உடனே கேட்டு விட்டாள் .

“பாத்து பத்திரமாப் போகணும், கூட மனோஜையும் கூட்டிட்டுப் போ.?”
மனோஜ் மோகனாவின் அத்தை பையன். எட்டு வைக்கும் துரத்தில்தான் வீடும் இருக்கிறது. இப்போது மோகனாவுக்கு துக்கம் கண்ணைத் திருகிக் கொண்டு வந்தது. மோகனாவின் அம்மா கை வண்ணத்தில், காஸ் அடுப்பில் காப்பி கொதித்துக் கொண்டிருந்தது. இன்னும் சில மணி நேரங்களில் மில்லுக்கு நைட் சிப்ட் சென்றிருக்கும் அப்பாவும் வந்து விடுவார்.

அன்று மாலை நேரம், கதிரவன் காலையில் இருந்து விரித்த ஒளித் தோகையை மெல்ல மேற்கில் இறக்கிக் கொண்டிருந்தான். பள்ளியில் இருந்து விருகு விருகுன்னு வந்த மோகனா பையைத் தூக்கி எறிந்துவிட்டு மனோஜ் வீட்டிற்கு நடையைக் கட்டினாள். மனோஜும் அதே ஆறாம் வகுப்பை அதே ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில்தான் படிக்கிறான். மோசம் ஒன்றும் இல்லை. தேர்ச்சி அடையும் அளவுக்கான பதில்கள் ஒவ்வொரு தேர்விலும் மனோஜின் விடைத் தாள்களில் இருக்கின்றன. மோகனாவின் கேட்டலுக்கு மனோஜின் வீட்டில் ஆட்சேபனை ஏதும் தெரிவிக்கவில்லை. மனோஜின் ஆயா ஒரு நிபந்தனை மட்டும் வைத்தார்..?
“பொழுது எறங்கரக்குள்ள வீடு வந்துரு ராசா?”
“ம்ம் சரி ஆயா?”

அவனும் கிளம்பிவிட்டான். இருவரும் அந்தப் பழைய ரோட்டில் ஏறத் துவங்கினர். எந்தக் காலத்தில் போடப்பட ரோடோ அது. வறண்டு கிடக்கும் சாணிகளைப் போல அங்கங்கு பெயர்ந்து கிடந்தன. மாதேஸ்வரன் கோவில் ஏத்தம் ஏறுவதற்குள் இருவருக்கும் போதும் போதும் என்றாகிவிட்டது. இருந்தாலும் இனிக்கும் கோணப் புளியங்காய்க் கனவு அவற்றையெல்லாம் மறத்துப் போக வைத்து விட்டது.இன்னும் கொஞ்சந்தூறந்தான். இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கூறிக் கொண்டனர். ஒரு வழியாக இருவரும் புளிக்காரங் காட்டை அடைந்தனர்.

பாதி சுவர் வைத்து மேலே பனை ஓலையால் வேய்ந்த வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த பெரிய கோணப் புளிய மரம், ஹம்ஷினி சொன்னதைப் போலவே அது அருணாவின் வீடுதான் என்பதை மோகனாவுக்கு உணர்த்தியது. இருவரும் வேகவேகமாக நடந்தனர். கோணப்புளிய மரத்திற்குச் செல்லும் தடம் அருணாவின் பங்காளி வீட்டு வழியாகச் செல்கிறது. இந்தப் பங்காளிகள் மற்ற பங்காளிகளுக்கு ஒன்றும் சளைத்தவர்கள் அல்ல. பகையாளிகள் என்பது நாளடைவில் மருவிப் பங்காளி ஆகியிருக்க வேண்டும். வாயில்தான் சக்கரை, மற்றபடி நெஞ்சு முழுதும் விரவியிருக்கும் வஞ்சகம், அருணாவின் அம்மாவுக்கே வெளிச்சம். பங்குனியின் மத்தியம். மொப்புக் காயில் மரமே காயாகிக் கிடந்தது. மனோஜ் எப்படியோ ஒழித்து வைத்திருந்த கொக்கியைக் கண்டு எடுத்துவிட்டான்.

வெடித்துச் சிவந்து கிடந்த காய்களை மட்டும் அவனது கண்களும், கொக்கியும் வில்லும் , அம்பையும் போலக் குறி பார்த்தன. கொக்கி கொஞ்சம் வளத்தியாக இருந்தது மனோஜுக்கு வசதியாகப் போனது. மூங்கில் குச்சியில் இறுக்கிக் கட்டப்பட்ட அந்தக் கம்பி சரமாரியாக சிவந்து கிடந்த காய்களை மண்ணை நோக்கி வீழ்த்தின. முதல் காயைப் பிளந்து பார்த்த மோகனாவின் கண்களில் துளிர்த்த ஆச்சர்யம் முகம் முழுதும் பரவியது.
பொதுவாக கோணப் புளியங்காய் முத்துகள் வெண்மையாக இருப்பவை. அதற்கு முற்றிலும் எதிர்மாறாக சிவப்பு நிறத்தில் மோகனாவின் கைகளில் இருந்தன.

“இந்தா மனோஜ்”
அவ்வளவு புதையலிலும் மனோஜை மோகனா மறந்து போய் விடவில்லை. முத்தில் இருந்த விதைகளை உதிர்த்துவிட்டு வாய்க்குள் போட்டனர். சர்க்கரையை விடவும் கொஞ்சம் அதிகமாகவே இனிக்க, இருவர் முகத்திலும் ஒரே மகிழ்ச்சி. மனோஜ் கொக்கிகளால் இழுத்து, வேண்டிய மட்டும் தள்ளினான். எல்லாத்தையும் அள்ளி காகிதத்தில் நிரப்பிய மோகனா முக்கால் காகிதம் நிரம்பியதையும் கவனிக்கவில்லை. மனோஜ்தான்,
“போதும் ஒரே நாள்ல மொட்டை அடிச்சுட வேண்டாம்” என்று கொக்கியை வைத்தான். அப்போது தான் அருணாவின் அம்மா வசந்தி வட்டல் சொம்பு வெலக்கர பக்கமாக காபித்தண்ணிச் சட்டி கழுவ வந்திருந்தாள். அருணா உள்ளே உட்கார்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள்.

“தங்கோ..”
“தங்கோ..”
“ம்ம் சொல்லுமா ..”
“வெளில வந்து பாரு… உன் சோட்டாலுக மாதிரி தெரிது.”
வெளியில் வந்த அருணாவை இருவரும் ஒருசேரப் பார்த்தனர். அதற்குள் அருணாவின் அம்மா,
“அட மச மசன்னு நிக்காம வாங்கப்பா காபி குடிச்சிட்டுப் போலாம்”
“ம்ம் வரங்க ம்மா”
அந்தக் குடிசைக்குள் இருவரும் நுழைந்தனர். விறகை எடுக்க வசந்தி அவசர அவசரமாகச் சென்றாள்.

“நேத்துப் பேஞ்ச அடமழைல எல்லா வெறகும் நனைஞ்சி தொலச்சிருச்சு..சரி இன்னிக்காச்சும் வெட்டாப்பு வுட்டுத் தொலையும்னு பாத்தாக்க.. மூடம் பொட்டு பொழப்புக்கு முக்காடு போட்டுருச்சு”

எனப் புலம்பியவரே வசந்தி பாதி காய்ந்தும், காயாத விறகுகளையும் எடுத்துச் சென்றாள். மண் அடுப்பில் எல்லாவற்றையும் வைத்தாயிற்று. தீக்குச்சியை உரைத்து உரைத்துப் பார்க்கிறாள்.. பாழாப் போனது பத்துவனா என்கிறது. இதற்குமேல் கொஞ்சம் சீமெண்ணையை ஊற்றிவிட்டு, உரைத்து நீட்டியதும் குப் என்று பத்திக் கொண்டது.

மோகனாவின் ஏசல் அருணாவின் மனதை கீறிக் கிழித்துக் கொண்டிருந்தது. “இவளும், இவங்கம்மாவும், போயும் போயும் அந்த சப்பக் காப்பிய வெய்க்குறாங்கங்க வெய்க்குறாங்கங்க அவ்ளோ நேரமா’
நான்காவது ஆட்டத்தில் அருணா போட்ட ஐந்து கற்களில் இரண்டு கற்கள் ஒன்றை ஒன்று முட்டிக் கொள்ளும் இடைவெளியில், மிக நெருக்கமாக விழுந்தன. அடுத்து தன் முறைதான் வரும் என்ற நம்பிக்கையில்

“அய்…அய் இப்ப அலுங்கீடுமே” ..என்று குதூகலித்தாள் மோகனா . பெரு விரலையும் ஆள்காட்டி விரலையும் ஒன்று சேர்த்து கிளாசைப் பிடிப்பது போல லாவகமாக அருணா கற்களை எடுத்ததும் மோகனாவின் முகத்தில் ஈ ஆடவில்லை. அருணா தொடர்ந்தாள். மோகனாவின் மீது ஆயிரம் ஆயிரமாகக் கடன்கள் ஏறிக் கொண்டே போயின.

•••

மரணத்தின் நிலைஎண் காதலுக்கும் மிகையானது. “Death
Constant
Beyond
Love” ஸ்பானியம் : காப்ரியேல் கார்சியா மார்க்வெஸ் – 
 ஆங்கிலம் : கிரிகோரி ரபாஸா மற்றும் ஜே.எஸ். பெர்ன்ஸ்டீய்ன் – தமிழில் ச.ஆறுமுகம்

Gabriel
García
Márquez,


செனேட்டர் ஒன்சிமோ சான்ச்செஸ், அவரது வாழ்க்கைக்கான பெண்ணைக் கண்ட போது, அவரது மரணத்திற்கு ஆறுமாதங்களும் பதினொரு நாட்களுமே எஞ்சியிருந்தன. ஒருவித மாயத் தோற்றமுள்ள ஆளுநரின் ரோஜா1 என்ற கிராமத்தில்தான், அவர் அவளைச் சந்தித்தார். இரவில் சரக்குக் கடத்தல் கப்பல்களின் சொர்க்க பூமியாகவும் பகலில் பாலைவனத்திற்குள் உள்வாங்கிய உபயோகமற்ற கடற்கால் போலக் கடலைப்பார்த்தவாறு தோற்றமளிப்பதும் ஒன்றுக்கும் உதவாத நிலமும் திசைகளற்றதுமான அது, அப்படியிருப்பதனாலேயே நல் மாற்றத்தைக் கொண்டுவரக்கூடிய எவராவது ஒருவர் அங்கே வாழ்வாரெனச் சிறிதளவுங்கூட யாருக்குமே, எந்தச் சந்தேகமும் துளிர்த்திருக்கவில்லை.

அதன் பெயர்கூட ஒரு வேடிக்கை தான்; எவ்வாறெனில் அந்தக் கிராமத்தில் அப்போதிருந்த ஒற்றை ரோஜாவுங்கூட, லாரா ஃபாரினாவைச் சந்தித்த அந்த மாலைப்பொழுதில் சான்ச்செஸ் அணிந்திருந்ததுதான்.

நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை எப்போதும் அவர் மேற்கொள்கின்ற வாக்குச் சேகரிப்புப் படலத்தின்போது தவிர்க்க முடியாத நிகழ்வாக அங்கே நிறுத்தவேண்டியதானது. ஊர்வலக் கார்கள் காலையிலேயே அங்கு வந்து சேர்ந்திருந்தன. பின்னர், பொது நிகழ்ச்சியின்போது கூட்டம் திரட்டவும் கோஷங்கள் எழுப்பவுமான வாடகை இந்தியர்களை ஏற்றிக்கொண்டு லாரிகள் வந்தன. பதினோரு மணிக்குச் சிறிது முன்னதாக இசைக்குழு, தானாக உயரும் மேடையரங்கம் மற்றும் பரிவாரங்கள் ஏற்றிய ஜீப்புகள், நிர்வாகப் பணியாளர்கள் வசதிக்கான ஸ்ட்ராபெர்ரி சோடா நிற ஊர்தி அனைத்தும் வந்தன. செனேட்டர் ஒன்சிமோ சான்ச்செஸ் குளிர்வசதி மகிழுந்து ஒன்றினுள் தட்பவெப்பமற்றவராக.

வீறமைதியுடனிருந்தாலும், கதவைத்திறந்த உடனேயே `குப்பென` முகத்திலடித்த வெப்பக் காற்றில் அதிர்ந்துபோனதோடு அவரது உயர்வகைப் பட்டுச் சட்டை, நிறமற்ற ஒரு பிசுபிசுப்புத் திரவத்தில் ஊறியது போலாகி, அவருக்கு முன்னெப்போதுமில்லாதபடி வயதாகிவிட்டதான ஒரு உணர்வு ஏற்பட்டது. அவருக்கு உண்மையில் நாற்பத்திரண்டு வயது தான் ஆகியிருந்தது. கூட்டிங்ஙெனில்2 பெருமதிப்புடன் உலோகப் பொறியியல் பட்டம் பெற்றிருந்தார். அத்துடன் ஆர்வமுள்ள வாசிப்பாளராகவுமிருந்தார். அதற்காக விருது ஏதும் பெறவில்லையென்றாலும், லத்தீன் செவ்வியல் இலக்கியங்களை அவற்றின் மோசமான மொழிபெயர்ப்புகள் வழியாக, வாசித்தவராக இருந்தார். ஜெர்மானிய எழிலொளிப் பெண் ஒருவரை மணந்திருந்ததோடு, அவர் மூலம் ஐந்து குழந்தைகளையும் பெற்றிருந்தார். அவர்கள் எல்லோரும் வீட்டில் பெருமகிழ்ச்சியோடுள்ளனர். எப்படியானாலும் அடுத்த கிறித்துமசுக்கு முன் அவர் இறந்துவிடுவாரென ஒரு மூன்று மாதம் முன்பாக அவருக்குச் சொல்லப்படும் வரையில், அவரும் மகிழ்ச்சியாகவே இருந்தார்.

பொது ஊர்வலத்துக்கான முன்னேற்பாடுகள் நடந்துகொண்டிருக்கும்போது, அவருக்கென ஒதுக்கியிருந்த வீட்டில் ஒரு மணிநேரம் தனிமையில் ஓய்வுகொள்ள வசதியாக அமையுமாறு பார்த்துக்கொண்டார். உடலை ஏணையில்3 சாய்த்துக்கொள்ளும் முன், அந்தப் பாலைவனம் முழுவதிலும் உயிர்ப்புடன் வைத்திருந்த அந்த ரோஜாவைக் கண்ணாடித் தண்ணீர்த் தம்ளருக்குள் மிதக்கவிட்டு, அந்த நாளின் மீதிப்பகுதி முழுவதற்கும் அவருக்கு மீண்டும் மீண்டுமாகப் பரிமாறப்படவிருக்கும் வறுத்த ஆட்டிறைச்சியின் பாகங்களைத் தவிர்ப்பதற்காகவே, அவர் தன்னுடன் எடுத்து வந்திருந்த தானிய உணவினை மதிய உணவாக உண்டுமுடித்து, வலி ஏற்படும் முன்பாகவே நிவாரணம் தருமென மருத்துவர்கள் குறித்துக் கொடுத்த மாத்திரைகள் பலவற்றையும் அந்தந்த நேரத்துக்கு முன்பாகவே விழுங்கிவிட்டிருந்தார். பின்னர் மின்விசிறியை அவரது ஏணைக்கருகாக இழுத்துக்கொண்டு, தூங்கும்போது இறப்பு குறித்த நினைவினை ஏற்படுத்துகிற மனச்சிதறலைக் கட்டுப்படுத்துவதற்கான பெருமுயற்சியாக, அந்த ரோஜாவின் நிழலில் ஒரு பதினைந்து நிமிடத்துக்கு நிர்வாணமாகக் கைகால்களை நீட்டிக் கண்களை மூடிக் கிடந்தார். அவரது மருத்துவர்களைத் தவிர வேறு எவருக்கும் அவரது நேரம் குறிக்கப்பட்டுவிட்டிருந்த விவரம் தெரியாது. அவர், மீதி வாழ்க்கையையும் எந்த மாறுதலுமின்றி அப்படிக்கப்படியே வாழ்ந்து விடுவதென்றும், அந்த ரகசியத்தைத் தனக்குள்ளாகவே புதைத்துக் கொள்வதென்றும் தீர்மானித்திருந்தார்; அது, அவர் வாழ்ந்த வாழ்க்கை பெருமைக்குரியதென்பதால் அல்ல, மிகவும் கேவலமான ஒன்று என்பதால் தான்.

அன்று பிற்பகல் மூன்று மணிக்குப் பொதுமக்கள் முன் தோன்றுகையில் தன் விருப்புறுதிச் செயலாற்றலின் மீது சுய ஆளுமை கொண்டவராக, நன்கு ஓய்வெடுத்துச் சுத்தமான `மொரமொர` லினென் முழுக்காற்சட்டையும் பூப்போட்ட மேற்சட்டையும் அணிந்து வலிநிவாரண மாத்திரைகளால் மீட்டுக்கொண்ட உயிர்ப்புடன் தோன்றினார். மரண நினைப்பின் பாதிப்புகள் ஏற்படுத்தும் மனச்சிதைவுகள் மற்றும் உருச்சிதைவுகள் அவர் நினைத்ததை விட அதிகமாக எதுவுமில்லை. அதனாலேயே, பொதுக்கூட்ட மேடை மீது ஏறுகையில், நல்விருப்பம் தெரிவித்துக் கைகுலுக்க முண்டியடித்தவர்கள் மீது அவருக்குள் அலட்சியமான ஒரு வினோத எண்ணம் உருவானது. தொற்றுநீக்கியச் சிறுசிறு சதுரங்களான சூடுமிக்க வெடியுப்புப் படிகங்களை மிக அரிதாகவே கைகளில் தாங்குகிறச் செருப்பில்லாத இந்தியர்களுக்காக, வேறுநேரங்களில் போல, அவர் எந்த வருத்த உணர்வும் கொள்ளவில்லை. சரமாரிக் கைதட்டல்களைக் கோபம்மிக்க ஒரு ஒற்றைக் கையசைப்பின் மூலம் அமைதிப்படுத்திய அவர், வெப்பத்தைப் பெருமூச்சாக வெளியிட்டுக் கொண்டிருந்த கடல்மீது அசையாது பதித்த பார்வையோடு உடலசைவுகள் ஏதுமின்றி, சொற்பொழிவாற்றத் தொடங்கினார். முன்தீர்மானித்த, அவரது ஆழமான குரலில் அமைதியான நீரோட்டத்தின் ஒழுகுதன்மை இருந்ததென்றாலும், பலமுறை உருப்போட்டுத் திரும்பத் திரும்பச் சொல்லிப் பார்த்துப் பழகிய பேச்சுத்திறன் உண்மையைச் சொல்லுந்தன்மையால் கைவரப்பெற்றதல்ல; மாறாக, மார்க்கஸ் அவ்ரேலியஸின் தீக்கதரிசனங்களின் நான்காவது நூலில், விதிவசத் தத்துவமென அவர் உரைத்துள்ளவற்றுக்கு நேர் எதிர்த்தன்மை கொண்டதாகும்.

அவரது அசையாத நம்பிக்கைகளுக்கு மாறாக, “நாம் இங்கே இயற்கையோடு போரிட்டுத் தோற்கடிப்பதற்காகக் கூடியிருக்கிறோம்.” எனத் தொடங்கிய அவர் “நமது சொந்த நாட்டிலேயே இனிமேலும் நாம் எடுப்பார் கைப்பிள்ளைகளாக, தண்ணீருக்கும் வழியற்ற மோசமான நிலையில் கடவுளும் கைவிட்ட அனாதைகளாக, நம் சொந்த மண்ணிலேயே நாடு கடத்தப்பட்டவர்களாக, அகதிகளாக இருக்கப்போவதில்லை. நாம் வேறு மாதிரியானவர்கள், பெருமக்களே, நாம் மேன்மைக்குரியவர்கள்; மகிழ்ச்சியான மக்கள்.” எனச் சொல்லி இடைநிறுத்தினார்.

அவருடைய சர்க்கஸ் வேலைகள் எல்லாவற்றிலும் ஒரேவிதமான பாவனை உத்தி இருந்தது. அவர் பேசப்பேச, இடையிடையே அவருடைய சேவகர்கள் காகிதப் பறவைகளைக் கொத்தாக அள்ளி வானவெளியில் வீச, அந்தச் செயற்கைப் பொருட்கள் உயிர் பெற்று மேடைத் தூண்களிடையே பறந்து கடலுக்குச் சென்றன. அந்தச் சமயத்தில் வேறு சிலர் பார வண்டிகளிலிருந்து கம்பளக் கூரை விரிப்புகள் மற்றும் அவற்றைத் தாங்கும் முட்டுக்கழிகளை உருவி மைதானத்தின் பின்புறமாக, அந்த வெடியுப்பு மண்ணில் நட்டு, இப்படியாக கண்ணாடிச் சாளரங்களுடன் கூடிய உண்மையான சிவப்புச் செங்கற்கட்டு வீடுகளென நம்பும்படியாக அட்டை முகப்புகளை உருவாக்கி, அதன் மூலமாக உண்மையான துன்ப வாழ்க்கைக் குடிசைகள் கண்ணில் படாதவாறு மறைத்துவிட்டனர்.
செனேட்டர், அவரது ஏமாற்று நாடகத்தினை அதிக நேரம் நீட்டிப்பதற்காக இரண்டு இலத்தீன் மேற்கோள்களைக் கூறி அவரது நீண்ட சொற்பொழிவினை நிகழ்த்திக்கொண்டிருந்தார்.

மழைபெய்விக்க எந்திரம், மேசை விலங்கு4களைப் பிரசவிக்கும் நகர்கருவி, வெடியுப்பு மண்ணிலும் காய்கறித் தாவரங்கள் மற்றும் சாளரத் தொட்டிகளில் கொத்தாகப் பல்வண்ண பான்சிகளையும் வளர்க்க விதவிதமான மகிழ்ச்சித் தைலங்கள் அனைத்தும் வழங்குவதாக உறுதியளித்தார். அவரது கற்பனை உலகம் கட்டிமுடிக்கப்பட்டதைக் கண்டதும், அவர் அதைநோக்கிக் கைநீட்டிச் சுட்டிக்காட்டினார். “ இப்படித்தான் நமது எதிர் காலம் இப்படித்தானிருக்கும், பெருமக்களே” என அவர் உரத்துக் கூவினார். ”பாருங்கள்! இப்படித்தான்!”

மக்கள் திரும்பிப் பார்த்தனர். வீடுகளின் பின்னால் தெரிவதாக அமைக்கப்பட்டிருந்த வண்ணத்தாள் கடற்கரை, அந்தச் செயற்கை நகரத்தின் மிக உயரமான வீட்டிற்கும் உயரத்தில் தெரிந்தது. இடம் விட்டு இடமாகக் கொண்டுசெல்லப்பட்டு, பல்வேறு இடங்களில் கண்ணைக் கவர்வதாக அமைக்கப்பட்டிருந்த அந்த அட்டை நகரம் ஒவ்வாத காலநிலையால் அரிக்கப்பட்டிருந்ததையும், அது இப்போது ஆளுநரின் ரோஜா கிராமத்தைப் போலவே தூசியும் தும்புமாக அழுக்கடைந்து கெட்டிருந்ததை செனேட்டர் மட்டுமே கவனித்தார்.
கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக நெல்சன் ஃபாரினா செனேட்டரை வரவேற்கப் போகாமலிருந்தான். முதல் மனைவியைப் பிடித்திழுத்து நான்காக வெட்டித்தள்ளிய அதே மருந்தாளுநக் கரங்களால் கட்டிக்கொண்ட இழைக்கப்படாத பலகை வீட்டின் தண்மைமிகுந்த வேனில் முகப்பு ஏணையில் நண்பகல் தூக்கத்தின் மிச்சமீதியாகப் புரண்டுகொண்டிருந்த அவன், செனேட்டரின் பேச்சினைக் கேட்டான்.

பேய்த்தீவிலிருந்து தப்பிவந்த அவன், ஏதுமறியாத மாக்கா5ப் பெருங்கிளிகள் ஏற்றப்பட்டிருந்த கப்பலில், பாரமாரிபோவில் கண்டுபிடித்து, அவள் மூலம் ஒரு மகளையும் பெற்றுக்கொண்ட, கடவுள் மற்றும் மதப் பழக்க வழக்கங்களில் அசட்டையான, அழகானக் கறுப்பினப் பெண்ணுடன், ஆளுநரின் ரோஜாவில் வந்திறங்கினான். பின்னர் சில காலத்திலேயே, அந்தப்பெண் இயற்கையான காரணங்களால் இறந்துவிட, அவள் முன்னவளைப் போல் துண்டு,துண்டுகளாகிக் காலிஃபிளவர் தோட்டத்துக்கு உரமாக்கப்படாமல், முழுமையாக, உள்ளூர்க் கல்லறைத் தோட்டத்தில் அவளது டச்சுப் பெயருடனேயே புதைக்கப்பட்டாள். அம்மாவின் நிறம் மற்றும் உருவ அழகோடு அப்பாவின் விரிந்த மஞ்சள் நிறக் கண்களையும் மகள் பெற்றிருக்க, உலகத்திலேயே மிகமிக அழகு மிக்க பெண் ஒருத்தியை வளர்த்துக்கொண்டிருப்பதாக, அவன் கற்பனையில் மிதக்க, அது வசதியான ஒரு நல்ல காரணமாக அமைந்தது.

செனேட்டர் சான்ச்செஸின் முதல் வாக்குச் சேகரிப்புப் பரப்புரையின் போது, அவரைச் சந்தித்ததிலிருந்தே, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்க வசதியாகப் போலி அடையாள அட்டை ஒன்றினைப் பெற உதவுமாறு நெல்சன் ஃபாரினா, அவரைக் கேட்டுக்கொண்டிருந்தான். செனேட்டர் மிகுந்த நட்பும் நயமுமாக, ஆனால் உறுதியாக மறுத்துவிட்டார். ஆனாலும் நெல்சன் ஃபாரினா விட்டுவிடாமல் பல ஆண்டுகளாகவும் அவரைச் சந்திக்கிற ஒவ்வொரு முறையும் அவனது கோரிக்கையை வெவ்வேறு காரணங்களுடன் முன்வைத்துக்கொண்டேதானிருந்தான். ஆனால், இம்முறை அவன், கொதிக்கும் குடிசைக்குள் உயிரோடு அவியுமாறு சபிக்கப்பட்ட கடற்கொள்ளைக்கார ஏணையில் படுத்துக்கிடந்தான்.

அதிலும் கடைசிக் கைதட்டல்களை, அவன் கேட்டு, வேலிப்பலகைகளுக்கும் மேலாகத் தலையை உயர்த்திப் பார்க்கையில், ஏமாற்று நகரத்தின் பின்பக்கத்தை, கட்டடங்களுக்கான முட்டுக்கழிகள், மரச் சட்டங்கள், மறைவாக அமர்ந்து கடற்கரைத் தாளினை அசைத்து அசைத்து முன்தள்ளிக்கொண்டிருந்த வித்தைக்காரர்களைக் கண்டான். அவன் வெறுப்பேதுமில்லாமலேயே காறித் துப்பினான்.
“அடடா” ”இப்படித்தான் கறுப்பர்களின் அரசியல்” என பிரெஞ்சு மொழியில் கூறிக்கொண்டான்.

சொற்பொழிவுக்குப் பிறகு, வழக்கம்போல் செனேட்டர், இசைக்குழு மற்றும் மேடைப் பரிவாரங்களோடு கிராமத்துத் தெருக்கள் ஊடாக ஊர்வலமாக நடந்துவருகையில், அவரவர் பிரச்னைகளை அவரிடம் கூறுவதற்காக, மக்கள் அவரை. முற்றுகையிட்டனர். செனேட்டர் அவர்கள் கூறுவதைத் இன்முகத்துடன் நல்லபடியாகக் கேட்டதோடு, பெரிய அளவிலான எந்த உதவியும் செய்யாமலேயே அவர்கள் ஒவ்வொருவரையும் திருப்திப்படுத்த ஏதாவது ஒரு வழியை எப்போதுமே கண்டுகொண்டார். ஆறு குழந்தைகளுடன் குடிசையின் கூரை மேல் ஏறி நின்ற ஒரு பெண் அத்தனைக் கூச்சல் மற்றும் வாணவேடிக்கைகளுக்கு நடுவிலும் அவள் சொல்வதைக் கேட்குமாறு கவனம் ஈர்த்தாள்.

”நானொன்றும் பெரிதாகக் கேட்கவில்லை, செனேட்டர்!” எனத் தொடங்கிய அவள், “தூக்கில் தொங்கியவன் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக் கொண்டுவர, ஒரு கழுதை வேண்டும், அவ்வளவுதான்!” என முடித்தாள்.
ஒல்லிக்குச்சிகளான ஆறு குழந்தைகள் மீதும் கண்களை ஓடவிட்ட செனேட்டர், ‘உன் வீட்டுக்காரனுக்கு என்னாச்சு?” எனக் கேட்டார்.
”அரூபாத் தீவுக்கு அதிர்ஷ்டத்தைத் தேடிப் போனான், அவன்,” எனக் கேலியாகச் சொன்ன, அவள், “ அவன், அங்கே என்ன பார்த்தான் என்றால், வாயெல்லாம் வைரம் பதித்த பற்கள் கொண்ட ஒரு வெளிநாட்டுப் பெண்ணைத் தான்.”
அதைக் கேட்டதும் குபீரென ஒரு சிரிப்பு அலை எழுந்தது.

”சரி,” என அழுத்தமாகச் சொன்ன செனேட்டர், உடனடித் தீர்வாக, “நீ கேட்ட கழுதை உனக்குக் கிடைக்கும்.” என்றார்.

சிறிது நேரத்திலேயே அவரது உதவியாளர் ஒருவர் நல்ல உடற்கட்டுள்ள கழுதை ஒன்றை அந்தப் பெண்ணின் வீட்டுக்குக் கொண்டுவந்து நிறுத்தினார். அந்தக் கழுதை, செனேட்டரின் கொடை என்பதை எவரும் மறந்துவிட முடியாதபடி, அதன் பிட்டத்தில் அழியாத மையினால் பரப்புரை கோஷம் ஒன்று எழுதியிருந்தது. அந்தக் குறுகிய தெருவில் அவர் நடந்துசென்ற தூரம் முழுவதிலும் அவரது தாராளத்தைக் காட்டும் வேறு சில சிறுசிறு உதவிகளைச் செய்தார்; செனேட்டரின் நடைவலத்தைக் காண்பதற்கு ஏதுவாக, படுக்கையை இழுத்து வாசலுக்கருகே கிடத்தியிருந்த நோயாளி மனிதரின் வாயில் சிறிதளவு மருந்தினைக்கூட செனேட்டர் ஊற்றினார். கடைசி மூலையில், நெல்சன் ஃபாரினா அவரது ஏணைக்குள்ளிருந்து சாம்பல் படிந்தது போல் வெளுத்துச் சிடுசிடுத்த முகத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதை, வேலிப் பலகைகள் ஊடாகக் கண்டதும் செனேட்டர், அவராகவே அவனிடம் நலம் விசாரித்தார்; ஆனால், அவர் குரலில் நெருக்கம், நட்பு ஏதுமில்லை.

“ஹலோ, எப்படி இருக்கிறீர்கள்?”
நெல்சன் ஃபாரினா, ஏணையில் புரண்டு, அவனது சோகத் தோற்றத்தினை மேலுமாக வெளிப்படுத்தினான். ”உனக்குத் தெரியாததா என் கதை,” எனப் பிரெஞ்சில் கூறினான்.
நலம் விசாரிப்பினைக் கேட்ட அவனது மகள் வாசலுக்கு வந்தாள்; மலிவான, நிறம் மங்கி வெளிறிப்போன ஒரு குவாஜிரோ6 இந்திய ஆடை சுற்றியிருந்த அவள் தலையில் அழகுக்காக வண்ண வண்ண அம்புகள் செருகி, வெயில் பாதுகாப்பாக முகச்சாயம் பூசியிருந்தது; ஆனால், அப்படியான கோர நிலையிலும் இந்த உலகத்தில் அவளைப் போல் அழகாக வேறெந்தப் பெண்ணும் இருக்கமுடியாதென்ற எண்ணத்தைத் தோற்றுவிப்பதாகத் தானிருந்தாள்.

செனேட்டர் வாய்பிளந்தார். “அய்யோ, நான் செத்தேன்!” என, வியப்புப் பெருமூச்சிட்டார். “கடவுள் அற்புதத்திலும் அற்புதங்களை விளைவிக்கிறார்!”

அன்று இரவு நெல்சன் ஃபாரினா அவனது மகளை மிகமிக அழகான ஆடை அணிவித்து அவளை, செனேட்டரிடம் அனுப்பினான். செனேட்டர் தங்கியிருந்த வீட்டின் முன் தூக்க மயக்கத்திலும் வெக்கை தாங்காமல் தள்ளாடிக் கொண்டிருந்த துப்பாக்கி தாங்கிய இரு காவலர்களும் முன் கூடத்திலிருந்த ஒரே நாற்காலியில் அமர்ந்து காத்திருக்கச் சொன்னார்கள்.

செனேட்டர், அவரது சொற்பொழிவின் போது வெளியிட்ட விஷயங்களை மீண்டும் காய்ச்சி ஊற்றுவதற்காக ரோஜாவூரின் முக்கிய நபர்களை அழைத்து வந்து அவர்களோடு அடுத்த அறையில் பேசிக்கொண்டிருந்தார். அவர்கள் எல்லோரும் அந்தப் பாலைவனத்தின் மற்ற கிராமங்களில் அவர் சந்தித்த நபர்களைப் போலவே தோன்றியதில், செனேட்டரே அலுத்துச் சலித்து, சுற்றிச்சுற்றி முடிவற்று நீண்ட அந்த இரவு நாடகத்தில் சோர்ந்துபோனார். அவரது சட்டை வியர்வையில் ஊறி நனைந்துவிட, அதை அந்த அறையின் அதிகமான வெக்கையில் ஒரு மாட்டு ஈயைப் போல கிர்,கிர்ரென்று சத்தமிட்டுக்கொண்டிருந்த மின்விசிறியின் சூடான காற்று மூலம் அவர் உடம்போடேயே உலர்த்தும் முயற்சியில் ஈடுபட்டார்.

“நாம் என்னமோ, காகிதப்பறவைகளைச் சாப்பிடமுடியாதுதான்.” என்றார், அவர். ” உங்களுக்கும் தெரியும், எனக்கும் தெரியும் அந்த நாளில் இந்த வெள்ளாட்டுப் புழுக்கைக்குவியல் மீது மரங்களும் பூக்களும் இருக்கும். அந்த நாளில் நீர் ஊற்றுகள் முழுவதும் புழுபூச்சிகளுக்குப் பதிலாக வரால் மீன்கள் துள்ளும். அன்று நீங்களோ, நானோ இங்கே செய்வதற்கு எந்த வேலையுமே இருக்கப்போவதில்லை. இப்போது நான் தெளிவாக, விளக்கிவிட்டேனா?”

யாருமே பதில் பேசவில்லை. பேசிக்கொண்டிருக்கும்போதே, செனேட்டர் நாட்காட்டியிலிருந்து ஒரு தாளைக் கிழித்து, அதைத் தன் கைகளாலேயே காகிதப் பட்டாம் பூச்சியாக அழகுபடுத்தினார். எந்த இலக்கும் இல்லாமல் அதை மின்விசிறிக் காற்றில் எறிய, அந்தப் பட்டாம் பூச்சி அறை முழுவதுமாகச் சுற்றிப் பின்னர் பாதி திறந்த கதவின் இடைவெளி வழியாக வெளியே சென்றது. மரண நினைவின் காரணமான ஓரளவு கட்டுப்பாட்டுடன், செனேட்டர் பேசிக்கொண்டே போனார்.

“அதனால், நான் உங்களுக்கு மீண்டும் மீண்டுமாகச் சொல்ல வேண்டியதில்லை; ஏனென்றால் உங்களுக்கே நன்றாகத் தெரியும்; நான் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதென்பது என்னைவிடவும் உங்களுக்குத் தான் லாபம். ஏனென்றால், இந்தக் கெட்டுக்கிடைத் தண்ணீரும் இந்திய வியர்வையுமாக நான் சலித்துப் போனேன். ஆனால் நீங்களோ அதைக் கொண்டு சம்பாதிக்கிறீர்கள். அந்த சம்பாத்தியத்தில் தானே வாழ்க்கையே ஓட்டுகிறீர்கள்.”
காகிதப் பட்டாம் பூச்சி வெளியே வந்ததை லாரா ஃபாரினா பார்த்தாள். அவள் மட்டுமே பார்த்தாள்; அந்த முன்கூடத்திலிருந்த இரண்டு காவலர்களும் துப்பாக்கியை அணைத்தவாறே படிக்கட்டுகளில் அமர்ந்து தூங்கினர். ஒருசில பல்டிகளுக்குப் பின் அந்தப் பெரியக் கல்லச்சுப் பட்டாம்பூச்சி முழுவதுமாக விரியத் திறந்து சுவரில் தட்டையாக அமர்ந்ததோடு அங்கேயே ஒட்டிக்கொண்டது. லாரா ஃபாரினா அதை நகத்தால் கிளப்பி எடுக்க முயற்சித்தாள். அடுத்த அறையில் எழுந்த கைதட்டல் ஒலியால் விழித்த காவலரில் ஒருவர் அவளது வீண் முயற்சியைக் கவனித்தார்.

“அது வராது. அது சுவரில் தீட்டிய வண்ணம்.” என்றார்.
கூட்டம் முடிந்து ஆட்கள் அறையைவிட்டு வெளியே வரத் தொடங்கியதும் அவள் மீண்டும் நாற்காலியில் அமர்ந்தாள். அறையின் வாசலில் தாழ்ப்பாள் மீது கைவைத்தவாறு நின்ற செனேட்டர், கூடம் காலியான போது தான் லாரா நிற்பதைக் கவனித்தார்.

“இங்கே என்ன செய்கிறாய்?”
“அப்பா சொல்லச் சொன்னாங்க.” எனப் பிரெஞ்சில் கூறினாள்.
செனேட்டர் புரிந்துகொண்டார். தூங்கிக்கொண்டிருந்த காவலர்களைக் கூர்ந்து பார்த்தாதுவிட்டுப் பின்னர், லாராவைக் கூர்ந்து நோக்கினார். அவளது அசாதாரணமான அழகு அவரது வலியை விடவும் அதிகமாக நினைப்பிலேறித் துன்புறுத்தவே, மரணம் தான் அவருக்கான முடிவை எடுக்கிறதெனத் தீர்மானித்தார்.

அவளிடம், “உள்ளே வா,” என்றார்.
லாரா ஃபாரினா அறையின் வாயிற்படிக்கு வந்து நின்றதும் அப்படியே பேச்சிழந்து சிலையாகிப் போனாள் : ஆயிரக்கணக்கான ரூபாய் நோட்டுகள் காற்றில் மிதந்து பட்டாம் பூச்சிகளாகச் சிறகடித்தன. செனேட்டர் மின்விசிறியை நிறுத்தியதும், காற்றில்லாமல் அந்தத் தாள்கள் அப்படிக்கப்படியே அறைகலன்களின் மீது வீழ்ந்து படிந்தன.

“பார்த்தாயா” எனச் சிரித்துக்கொண்டே, “ மலம் கூடப் பறக்கும்.” என்றார்.

லாரா ஃபாரினா அங்கிருந்த பள்ளிப்பையன் ஸ்டூல் மீது உட்கார்ந்தாள். அவள் மேனி வழவழப்பாக, ஆனால் திடமாக, கச்சா எண்ணெய் போல அதன் அடர்த்தியோடு அதே நிறத்திலிருந்தது. அவள் தலைமுடி இளம் பெண் குதிரையின் பிடரி மயிர் போலவும் அவளது பெரிய கண்கள் ஒளியை மிஞ்சும் பளபளப்புடனுமிருந்தன. செனேட்டர் அவள் பார்வையின் வழியே பயணித்துக் கடைசியில் அது ரோஜாவின் மீது படிந்திருப்பதைக் கண்டார். அந்த ரோஜா வெடியுப்பினால் வதங்கிப்போயிருந்தது.

“அது ரோஜா” என்றார், அவர். .
“ஆம்.” என்றவள், ஒருவித மருட்சியுடன், “ரியோஹாச்சா7 வில் அவை எப்படியிருக்குமெனப் படித்திருக்கிறேன்.”

இராணுவக் கட்டில் ஒன்றில் அமர்ந்த செனேட்டர், ரோஜாக்களைப் பற்றிப் பேசிக்கொண்டே அவரது சட்டைப் பொத்தான்களைக் கழற்றினார். அவரது மார்புக்குள் இதயம் இருக்கும் இடத்தின் மேலாக கோர்செய்ர்8 இதயம் துளைக்கும் அன்பு ஒன்று பச்சைகுத்தியிருந்தது. வியர்வையில் நனைந்த சட்டையைத் தரையிலெறிந்த அவர் லாராவிடம் அவரது புதையரணக் காலணிகளைக் கழற்ற உதவுமாறு கேட்டுக்கொண்டார்.
அவள் கட்டிலைப் பார்த்தவாறு குனிந்தாள். சிந்தனையிலிருந்து மீளாமலேயே, அவளைக் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்த அவர், அவள் காலணிக்கயிறுகளை அவிழ்க்கும்போது அவற்றில் எந்த ஒன்று அந்த மோதலில் அவக்கேட்டில் போய் முடியப் போகிறதோ என எண்ணினார்.

“நீ இப்போதும் ஒரு குழந்தைதான், “ என்றார், அவர்.
’’நீங்கள் நம்பவில்லையா?” என்ற அவள், ஏப்ரலில் எனக்கு பத்தொன்பது வந்துவிடும்.” என்றாள்.
செனேட்டர் ஆர்வமானார்.
”என்ன தேதி?”
“பதினொன்று.” என்றாள், அவள்.
செனேட்டர் சிறிது நல்லதாக உணர்ந்தார். `நம் இரண்டுபேருமே மேஷம்` என்றவர், சிரித்துக்கொண்டே, “அது தனிமையின் ராசி.” என்றார்.

லாரா அதில் கவனம் செலுத்தவில்லை; என்னவெனில் அவளுக்கு அந்தக் காலணிகளை என்ன செய்வதென்று தெரியவில்லை. செனேட்டருக்கு, அவருடைய பிரச்னையாக, லாராவை வைத்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஏனெனில் அவருக்கு இதுபோலத் திடீர் காதல் விவகாரங்களெல்லாம் பழக்கமில்லை. அதுவுமில்லாமல் தற்போது கையிலிருப்பதன் தொடக்கம் வெறுப்பில் தோன்றியதென்பது அவருக்குப் புரிந்தது. சிந்திப்பதற்குச் சிறிது நேரம் எடுத்துக்கொள்ளலாமென்றே, லாரா ஃபாரினாவைத் தன் கால் முட்டுகளுக்கிடையே இறுக்கமாகப் பிடித்து, அவளது இடுப்பினை அணைத்து, அப்படியே கட்டிலின் மீது மல்லாக்கச் சாய்ந்தார். அப்போதுதான் அவள் அவளது சட்டைக்குக் கீழே எதுவும் அணியாமல் நிர்வாணமாக இருந்தாளென்பதை உணர்ந்தார். அவளது உடல் காட்டு விலங்கின் முரட்டு வாசமொன்றை வெளிப்படுத்தியது; ஆனால், அவளது இதயம் பயத்தில் படபடக்க, அவளது மேனி கண்ணாடி வியர்வையால் நசநசத்தது.

“ என்னை யாருமே காதலிப்பதில்லை.” என அவர் பெருமூச்சிட்டார்.

லாரா ஃபாரினா ஏதோ சொல்ல முயன்றாள், ஆனால் வெறுமே மூச்சுவிட மட்டுமே அவளால் முடிந்தது. அவளுக்கு உதவுவதாக, அவர் அவளைத் தன் அருகாகச் சாய்த்துக்கிடத்திவிட்டு, விளக்கினை அணைக்க, அந்த அறை ரோஜாவின் நிழலுக்குள் மூழ்கியது. அவள் விதியின் கரங்களில் தன்னை ஒப்புக்கொடுத்தாள். செனேட்டர் அவளை, அவளது உடலுக்குள்ளாகவே தேட, அவரது கரங்களால் மெல்லத் தடவி, அதனை வெறுமே தொட்டார்; ஆனால், அவள் எந்த இடத்தில் கிடைப்பாளென அவர் எதிர்பார்த்தாரோ, அங்கே வழியை அடைத்துக்கொண்டு இரும்பு போல ஏதோ ஒன்று தட்டுப்பட்டது.

“அதற்குள்ளே போய், நீ என்ன வைத்திருக்கிறாய்?’ய எனக் கேட்டார், அவர்.
”பட்டைப் பூட்டு.” என்றாள், அவள்.
”என்ன எழவு!” எனக் கோபமாகக் கேட்டவர், அதற்கான பதிலை அவரே நன்கறிவாரென்றாலும், மீண்டும் கேட்டார், “ சாவி எங்கே?”
லாரா நிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

‘’அப்பா தான் வைத்திருக்கிறார்.” என அவள் பதில் சொன்னாள். “ அவரது நிலைமையைச் சரிசெய்வதாக எழுத்து மூலமான உறுதிமொழி ஒன்றை அவரது ஆட்களில் ஒருவரிடம் கொடுத்தனுப்பி, சாவியைப் பெற்றுக்கொள்ளுமாறு உங்களிடம் சொல்லச் சொன்னார்.”

செனேட்டர் அதிகப் பதட்டமானார். “தேவடியாத் தவளைப்பயல்,” என வெறுப்பின் உச்சத்தில் முணுமுணுத்தார். பின்னர் தன்னைச் சிறிது தளர்த்திக்கொள்வதற்காக கண்களை மூடிய அவர் இருளுக்குள்ளாகவே தனக்குள் மூழ்கினார். நினைவு வைத்துக்கொள், அவர் எண்ணிப்பார்த்தார், நீயோ அல்லது யாராக இருந்தாலும் மரணமடைவதற்கு நேரம் காலமில்லை, உன்பெயர் கூடத் தெரியாமல் போவதற்கும் நேரம், காலம் இல்லை.
நடுக்கம் குறையட்டுமெனக் காத்திருந்தார்.

பின்னர் அவர், “ எனக்கு, ஒரு விஷயம் சொல்லு. என்னைப்பற்றி என்ன கேள்விப்பட்டிருக்கிறாய்?” என்றார்.
”கடவுள் மேல் சத்தியமான உண்மையா, உங்களுக்கு வேண்டும்?”
”ஆம். கடவுள் மேல் சத்தியமான உண்மை.”
“நல்லது,” என நிறுத்திய லாரா ஃபாரினா, பின்னர், “ நீங்கள் மற்றவர்களை விட மிக மோசமானவர்; ஏனென்றால் நீங்கள் வேறுமாதிரி ஆள்.” எனக் கூறினாள்.

செனேட்டர் ஒன்றும் குழம்பிவிடவில்லை. நீண்ட நேரம் கண் மூடி அமைதியாக இருந்த அவர், கண்விழித்தபோது, அவரது பழைய இயல்புகள் அனைத்தும் மீளக் கைவரப்பெற்றவராகத் தோன்றினார்.

’ஆஹ், எப்படியான ஒரு இழவு,” அவர் ஒரு முடிவுக்கு வந்தார். அவளிடம், “ பொட்ட நாய்க்குப் பிறந்த உன் அப்பனிடம், அவன் நிலைமையை, நான் சரியாக்குவேனென்று போய்ச் சொல்.” என்றார்.

”வேண்டுமானால், நானே போய்ச் சாவியை வாங்கி வரட்டுமா?” என்றாள், லாரா ஃபாரினா.
செனேட்டர் அவளைக் கைகளில் பற்றினார்.
”சாவியை மறந்து, என்னுடன் சிறிது நேரம் தூங்கு. தனிமையிலிருக்கும்போது யாராவது ஒருவர் உடனிருந்தால் நல்லது.” என்றார், அவர்.

பின்னர், அவள் ரோஜாவை விட்டுக் கண்களை அகற்றாமலேயே அவரது தலையை அவளது தோளில் சார்த்திப் பிடித்தாள். செனேட்டர் அவளது இடுப்பைப் பிடித்துக்கொண்டு, அவளது காட்டு விலங்கு அக்குளில் முகம் புதைத்துத், திகிலுக்குள் மூழ்கினார். ஆறு மாதங்கள், பதினொரு நாட்களுக்குப் பின் அதே நிலையில் லாரா ஃபாரினாவுடனான தொடர்பு குறித்த பொதுவிவகார ஊழலினால் பெயர்கெட்டு, மதிப்பிழந்து, இறுதியில் சாகும்போது அவள் இல்லாமல் சாகிறோமே என்ற வெறியில் அவர் செத்துப் போனார்.

***

குறிப்புகள்

ஆளுநரின் ரோஜா – Rosal del Virrey – கிராமத்தின் பெயர்
கூட்டிங்ஙென் – Gootingen, ஜெர்மனியில் 1737 இல் தோற்றுவிக்கப்பட்ட புகழ்பெற்ற ஆய்வுப் பல்கலைக்கழகம்.
ஏணை – hammock, உறங்குவதற்காக அமைக்கும் தொட்டில் அமைப்பு.
மேசை விலங்குகள் – Table animals for playing. விளையாட்டுக்கான பொம்மை விலங்குகள்.
மாக்கா – Macaws கிளி வகையில் பல்நிறப் பெருங்கிளிகள்
குவாஜிரா – Guajira வெனிசுலா – கொலம்பிய எல்லையிலுள்ள தீபகற்பம் குவாஜிரா தீபகற்பம் எனவும் அப்பகுதியின் வாயூ பூர்வகுடிகள் குவாஜிரா இந்தியரென்றும் அழைக்கப்படுகின்றனர்.
ரியோஹாச்சா – Riohacha கொலம்பியாவில், ராஞ்சீரியா நதி கரீபியன் கடலில் கலக்கும் முகத்துவாரத்திலுள்ள நகரம்.
கோர்செய்ர் – Corsair கலிபோர்னியக் கணினி நிறுவனம்.

லோலாயம் ( சிறுகதை ) – சே. தண்டபாணி தென்றல்

“அந்த சாரு எது கேட்டாலும் தர மாட்டீங்கறாரு?”

இதைச் சொன்ன சிந்துவின் முகத்தில் வெறுப்பும் விரக்தியும் ஒரு சேரக் குடிகொண்டிருந்தது. சிந்து என்றில்லை யார் சென்றாலும் இது நடக்கும் என்பது தெரிந்ததுதான். எல்லாத்துக்கும் காரணம் அந்த தலையாய அயோக்கியன் குமரேசன். நான் பிறந்த வருடத்தில் இருந்து, லேப் அட்டெண்டராக குப்பை கொட்டி வருகிறான் என்பதில் இருந்தே ஏமாற்றுவதில் எவ்வளவு அனுபவமும், கெட்டிக்காரத் தனமும் வாய்ந்தவன் என்பதை ஒருவாறு ஊகிக்கலாம்.

எல்லாம் நான் முன்னால் படித்த கல்லூரிப் பேராசிரியர்களைச் சொல்ல வேண்டும்?யுனிவெர்சிட்டி நல்லா இருக்கும் அருண்குமார் . அதிலும் குறிப்பாக ஹச் ஓ டி .. நான் எண்டரன்ஸ் எழுதி கிடைக்கல எல்லா யுனிவெர்சிட்டிய விடவும் இது ரொம்ப நல்லா இருக்கும்.சொன்னவர்களை என்ன சொல்ல பாவம் அவர்கள் இங்கு படித்ததில்லை. நமது ஆசை அல்ல. ஆசிரியரின் கனவு என்று எழுதி முதல் இடம் கிடைத்தது அதிர்ஷ்டம்தான். அதுவே எவ்வளவு துரதிஷ்டம் என்பது மெல்ல மெல்லப் புரிந்தது.

இப்போது டி.என்.ஏ பிரித்து எடுத்தல் ப்ராக்டிக்கல். டிப்ஸ் இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது. பீனால் வேறு, பாதாளத்தில் கிடந்தது. குறைந்தது ஐம்பது மில்லி லிட்டராவது வேண்டும் . அதைதான் வாங்கி வர சிந்துவிடம் சொல்லி இருந்தேன். இருப்பதை எடுத்து வைத்துக் கொண்டிருந்த நேரத்தில் டிப் வந்தால் அப்படியே விரைவில் முடித்து விடலாம் என்று நான் போட்ட மனக் கணக்கில் தேக்கம் அடைந்தது பின்புதான் தெரிந்தது.

“அருண் அப்படியே டிப் பாக்ஸும் வாங்கீட்டு வாடா? இது ஜீவிதா . அதில்லாம பிப்பெட்ல சரியா எடுக்க முடியல? ம்ம் சரி வேற யாருக்காச்சும் எதாவது தேவைப்படுதா?”
கிடைக்காது என்று தெரிந்தும் வகுப்புத் தலைவன் என்ற முறையில் முன்னின்று கேட்டுக் கொண்டேன். அது அவர்களுக்கும் தெரிந்திருக்கும் போலும் . யாரும் எதுவும் கேட்கவில்லை. வகுப்புத் தலைவன் என்பதைத் தாண்டி இப்படிக் கேட்கக் காரணம் அந்த கையாலாகாத குமரேசன் தான்.

“தம்பி எல்லாத்தையும் ஒரே வாட்டி டிஸ்கஸ் பண்ணி எழுதீட்டு வாங்க? என்ன பிரக்டிகல் என்ன எக்ஸ்பெரிமென்ட்? தனி தனியா ? கொடுக்க முடியாது.இல்லன மட்டும் இவன் அள்ளி கொடுத்துருவான் பாரு? கிள்ளிக் கொடுகரக்கே ஆயிரத்து எட்டு புலம்பு புலம்புவான்.”
இதற்கு முன்னால் படித்த கல்லூரி இதற்கு முற்றிலும் எதிர் மாறாக இருந்தது. சதீஸ் அண்ணா.தங்கமானவர் பல முறை நோட்டில் எழுதியதே கிடையாது. வேண்டுமென்பதை சொல்லிக்கொண்டு எடுத்துக் கொள்வோம்.

அப்படித்தான் செய்முறைத் தேர்வுக்கு முந்தைய நாள் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைக்க இரவு எட்டு மணி ஆகிவிட்டது, எனக்கே பாவமாகப் போய்விட்டது. சொற்ப சம்பளம் வாங்கும் அவரே அதுவரைக்கும் காத்திருந்தார் . பக்கத்துக்கு லேபில் இருந்த சம்பத் சார்கூடக் காத்திருந்தார்.இங்கு ஐந்து மணியா. தம்பி அருண்
இந்தாங்க சாவி எல்லாத்தையும் பூட்டி சீக்கிரம் சாவியக் கொடுங்க?
ஆமா இங்க ஒரு வெங்காயமும் இல்ல. அப்பறம் எதுக்கு இந்த பாதுகாப்புன்னுதா எனக்கும் தெர்ல. மொதல்ல இந்த குமரேசன் நாயி கெமிக்கல் ரூம்க்கு வர்றதே இல்ல. சதீஸ் அண்ணா அங்க தா உட்காந்துட்டு இருப்பாரு. ஆனா இங்க டேபிள் மட்டும் இருக்கு. குமரேசன் ஆபீஸ்ல ஜம்முனு உட்காந்துக்கரன். ஒரு வேலை அங்கே ஏ.சி இல்லை என்பதால் கூட இருக்கலாம். அடுத்து அந்த நாய் காலைத் தூக்கி யூ டுப் பார்க்க கிடைத்தது ஈ லைப்ரரி. பருவக் கட்டணத்தை எங்களிடம் வாங்குவது இந்தமாதிரி சம்பந்தம் இல்லாதவர்களின் பொழுது போக்கத்தான் என்பதை உணர்கையில் கோபம் என் தலைக்கேறியது .

“நீ வேணாப் பாரு கார்த்தி .. எதுனா பெருசா பண்ணனும் டா ..
உன்னால என்ன பண்ண முடியும்
அடேய் உன் வயசு, அவன் அனுபவம்
எத்தன பசங்களப் பாத்துருப்பான் . எத்தன வில்லத்தனம் பன்னிருப்பான். ஒன்னும் பண்ண முடியாது டா? வேண்ணா”..! நீண்ட நேர யோசனைக்குப் பிறகு கார்த்திக் ராஜா
“இனிமேல் இந்தப்பக்கம் யாரும் வராம தடுக்கலாம்.. அதா என்னால முடிஞ்சது நான் அப்டித்தா வேற பக்கம் போகச் சொல்லிச் சொன்னேன்.இதைய கடைசி விருப்பமா வைக்க சொல்லி சொன்னேன்.நல்ல வேல யாரும் வரல.”

இதைச் சொன்ன கார்த்திக் ராஜா கொஞ்சம் நிம்மதிப் பெரு மூச்சு விட்டன. ஆமால இதுவும் நல்ல ஐடியாவாத்தான் இருக்கு . யோசித்துக் கொண்டே அலுவலகத்தை நோக்கி நடந்தேன்.மாடியில் ஒரு புறம் லேபும், அதற்கு எதிர் புறமாக கெமிக்கல் அறையும் இருப்பது தப்பித் தவறிக் கூட நல்லது என்று சொல்லிவிட முடியாது. கெமிக்கல் அறைக்கு நேர் வழி கிடையாது.துறை அலுவலகம் வழியாக சுற்றித்தான் வர இயலும்.

கிரீச்.. கிரீச் …
கதவைத் திறந்து கொண்டு நுழைந்தேன். வெள்ளாமைக் காட்டை மேய்ந்த எருமை மாதிரி குமரேசன் தின்றுவிட்டும், சக அலுவலக வாசிகளுடன் உரையாடிக் கொண்டும் இருந்தான்.
சார் டிப்ஸ் , அப்புறம் பாக்ஸ். கொஞ்சம் பீனால்.
கொஞ்சம் தயங்கிய பாவணையில் கேட்டேன்.. அவனுக்கே அவனிடம் மட்டும்தான் மரியாதை கொடுக்க பழகியிருந்தோம். முதுகலை சேர்ந்து முதல் தடவை அண்ணா என்று அழைத்ததில் எனக்கும் கார்த்திக்கும் ஒரு சேர ஒரே பதிலை அவன் சொல்லியிருந்ததில் வியப்பேதும் இல்லை..

“தம்பி என்ன அண்ணானு கூப்டற..சார்னு கூப்டு..கொஞ்சம் மிரட்டும் தொனி
ம்ம்..சரிங்க சார் “
இருவருமே ஒரே பதிலைத்தான் கூறியிருக்கிறோம் என்பது பிற்பாடுதான் தெரிய வந்தது.
“ம்ம் வாங்க அருண் எடுத்து தர்றேன்.. என்னடா எலி திடீர்னு அம்மணத்தோட போகுது” என்பது அப்போது எனக்குத் தெரியாமல் போயிற்று.

சில நிமிடங்களிலேயே இரண்டு டிப் பாக்ஸ்கள் என் கைகளை அடைந்தன. கடைசி ரேக்கில் இரண்டு பீனால் பாட்டில்கள் இருந்ததைப் பார்த்தேன். பீனால் மட்டும் இல்ல தம்பி . இரண்டு முழுப் பாட்டில்களை அலமாரிக்குள் மறைத்து விட்டான்.

“தேங்க்ஸ் சார் .
ம்ம் பரவல பா எல்லா உங்களுக்கு தான்..”
வேக வேக மாக நடந்த நான் லேப் நோக்கித் திரும்பும் முன்
“தம்பி ஒரு நிமிஷம்
ம்ம் சொல்லுங்க சார்
என்றி போட்ருங்க அருண் குமார்
ம்ம்ம். சரிங்க சார்..
இந்தாங்க என்ட்ரி நோட் ..”
கடமையில் இம்மியும் தவறாதவன் போன்று காட்டிக் கொண்டான்..யோக்கிய வேஷமிட்ட அயோக்கியன்.
பெறப்பட்டது என்று ஆங்கிலத்தில் எழுதி கையெழுத்தை தமிழில் இட்ட வேகத்தில் கிளம்ப எத்தனித்தபோது
தம்பி ஒரு நிமிஷம் அதே கூற்று அதே ஆசாமியிடம் இருந்து வந்தது.
கோபம் கொஞ்சம் கொஞ்சமாக கொப்பளிக்க முகத்தைக் கடுப்பாக்கிக் கொண்டு சற்றே திரும்பினேன்.

சார் கிட்ட சைன் வாங்கி கொடுத்துட்டுப் போங்க
நோட்டை வாங்கியவாறே ஹச்.ஒ.டி அறையை நோக்கினேன்.. வழக்கம் போல மடிக்கணினியில் மூழ்கி இருந்தார்.. சிறிது நேரம் கழித்துக் கையசைத்தார்.. உள்ளே சென்றதும் சார் சைன் என்றேன்.
‘ம்ம்’ என்று வாங்கியதும் அறையில் இன்னொரு குரல் கேட்டது.
“சார் இவங்க காட்டன ரீ யூஸ் பண்றதே இல்லிங்க” சார். நான் நுழைகையில் ஏற்பட்ட சிறு சந்தில் இந்த நாய் எப்படி நுழைந்தது என்று தெரியவில்லை. தனக்கான கடியை ஹச்.ஓ.டி மூலம் கடிக்க ஆரம்பித்தது.

அதுவரை சாந்தசொரூபியாக இருந்த துறைத் தலைவர் தைய தக்க என்று குதிக்க ஆரம்பித்தார்.

“என்னப்பா சொல்ற
நான் அமரிக்கால இருந்தப்போ அவங்க காட்டன கருப்பாகுற வரைக்கும் மறுபடி மறுபடி யூஸ் பண்றாங்க தெர்யுமா?” என்றதும் என் மூஞ்சியை ஏறிட்டு நோக்கினார்.
அப்படியே தாங்க சார் டிப்ஸையும் .
அடுத்த கடி குரல் வலையாக இருந்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இருக்கவில்லை.

உடனே நான் சுதாரித்துக் கொண்டு
சார் இப்பதான் முதல் தடவை இந்த வருஷம் சேர்ந்ததுக்கு அப்பறம் வாங்குறோம். இனிமேல் தான் சார் மறுபடியும் பயன்படுத்த முடியும் என்று பெரிய பல்பாக கொடுத்தேன்..

அதை சமாளிக்கும் விதத்தில் நான் உங்கள சொல்லல அருண் குமார் .பொதுவா சொல்றேன். இது குமரேசன் சார்
அதற்குள் அவர் சைன் போட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து நோட் என்னிடம் வந்திருந்தது. நானும் கிளம்ப அயத்தமானபோது தற்பெருமையில் ஆய்வே இல்லாமல் பட்டம் வாங்கிய துறைத் தலைவர்,

நாங்கெல்லா படிக்குறப்ப டி.என்.ஏ இருக்கா இல்லையானு பாக்க அகார் தா யூஸ் பண்ணுவோம். அகார் என்பது பதினொன்றாம் வகுப்பில் வளர்தளம் என்று அழகுத் தமிழில் குறிப்பிடப் பட்டிருக்கும். நேராக பதினொன்றாம் வகுப்பிற்கு தாவுவதால் பெரும்பாலும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எசே என்றவரின் மனைவி முதன்முறையாக இதை ஐஸ் கிரீம் தயாரிக்கும் பொது பார்த்து தெரிந்து கொண்டார். மஞ்சள் வர்ண பவுடர். திரவத்தை கட்டியாக்கும் தன்மை கொண்டது.

நாங்கள் இதற்குப் பதிலாக வழக்கம் போல் அகரோஸ் பயன்படுத்திக் கொண்டிருந்தோம். இதனை மேலும் நிருபிக்கும் வகையில் ஆமாங்க சார் நான் சிங்கபூர்ல இருக்குறப்ப கூட தேய் யூஸ் எ டைனி சிலைட்
அவர்கள் பொதுவாகவே சிக்கனத்தில் கரை கண்டவர்கலாம். அதைதான் சக அறிவியல் விஞ்ஞானியும் நாசுக்காக சூளுரைத்தார். இந்த தெரு நாய் எப்போது நுழைந்தது என்று தெரியவில்லை. ஒரு வேளை ஓசி காபிக்கு நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு வந்திருகக் கூடும்.

வேறு வழியில்லாமல் செயற்கையாக சிரிப்பை வரவழைத்துக் கொண்டு..

ஓகேங்க சார் என்றேன். இப்படி சிக்கனம் பேசுபவர்கள் ஏனோ பருவக் கட்டணத்தைக் கருத்தில் கொள்வதே இல்லை. தெரியாமல் தான் கேக்குறேன். பணத்திற்கு பதிலாக வர்ண நகலை ஏற்றுக் கொள்வார்களா? அது மட்டும் ஒனத்தியா? சொளையா பதினாறாயிரம் வெறும் ஆறு மாசத்துக்கு
நாங்க சிக்கனமா இருக்கணுமாம்.. யார் வீட்டு மொதல எந்த வீட்டு நாய் திங்கிறது.இதற்கும் மேல் அங்கு நின்றால் கெட்ட வார்த்தையோ? ஓங்கி அறையக் கை நீண்டு விடுமோ? என்ற அச்ச மேலீட்டினால் விடை பெற எண்ணி
தேங்க் யூ சார் என்றேன் .. பாத்து பத்ரமா யூஸ் பண்ணுங்க.. சிக்கனக் கடவுள் மாறியே சீன் போடவேண்டிது. மனதிற்குள் புலம்பியவரே படக் என்று கதவைத் திறந்து கொண்டு விறுவிறுவென்று கிளம்பினேன். பின்னால் வந்த குமரேசைனை ஒரு விநாடி கோபம் சூடிய முகத்தால் முறைத்துவிட்டு லேப் நோக்கிச் சென்றேன்.

அடுத்தநாள் காலை தலையெல்லாம் டிம் என்றிருந்தது. எல்லாரும் பேசுகிறார்கள் எனக்கு மட்டும் கேட்கவில்லை. விடுதியின் அறையில் இருந்து பக்கத்தில் இருக்கும் காட்டிற்குள் நடந்தேன். இன்னும் வகுப்பிற்கு செல்ல ஒரு மணி நேரம் இருக்கிறது. மீண்டும் ஹச் ஓடி.. முதல் ஆண்டின் கடைசி நாள் தனது ஆய்வகத்திற்கு மாணவர்கள் வந்து வேலை செய்யவேண்டும் என்பதற்காக பேசிய பெருமைகள் காதைக் குடைந்தன.

கார்த்திக் ராஜாவிடம் சொன்னால் ..
அப்புடி என்னத்த கிளுச்சுட்டன் ..ஒரு வேல வாங்கித் தர வக்கில்ல
அதுக்குள்ள வேர்ல்ட் பேமஸ் ஆம்..
அவன் சொல்வதும் சரிதான்.

சூரியன் கொஞ்சம் என்னருகில் இருந்தான். கதிர்க் கேசத்தை வருடியவரே ஏதேதோ வந்து போனது. சட்டென ஞாபகம் வர எப்படியும் கிளம்பி டி.என்.ஏ இன்று கிடைத்து விடும் என்கிற நினைப்பில் துறை நோக்கி நடக்கத் துவங்கினேன்.துறை ஒரே பரபரப்பாக இருந்தது. இப்போது தான் நியாபகம் வந்தது நேற்று சிந்து சொன்னதை மறந்து விட்டது. நேராக கெமிக்கல் ரூம் நோக்கி நடந்தேன். அதிசயமாகத் திறந்திருந்தது. பேரதிசயமாக உள்ளே யாரும் இருக்கவில்லை. அவசர அவசரமாக யாராவது வந்துவிடுவார்களோ எனும் நோக்கில் திறந்தேன். இரண்டு பீனால் பாட்டில்களும் காலியாக இருந்தன.

••

ஷூ திங் கவிதைகள்(“மூடுபனிக் கவிகள்” ) / ( சீனக் கவிதைகள் ) / ஆங்கிலம் வழியாக தமிழில் : சமயவேல்

ஷீ திங்

சீனத்தில் இருபதாம் நூற்றாண்டின் இரண்டாம் அரைப்பகுதியின் முன்னணிக் கவிஞர்களில் ஒருவரான ஹோங் பெய்யுவின் புனை பெயரே ஷூ திங். 1952ல் பிறந்த இவர், சீனத்தின் கலாச்சாரப் புரட்சியின் போது, இவரது அப்பாவின் சித்தாந்த இணக்கமின்மை காரணமாக, இவரது பதின்ம வயதில் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டு கிராமப்புறத்துக்கு அனுப்பப்பட்டார். சிமெண்டுத் தொழிற்சாலையிலும் டெக்ஸ்டைல் மில்லிலும் பணி புரிய வைக்கப்பட்டார். இந்தச் சமயத்தில் அங்கீகாரமற்ற மேற்கத்தியக் கவிதைகளின் தாக்கத்தால், ஷூ திங், கவிதைகள் எழுத ஆரம்பித்தார். கவிதையில், அரசு நிர்ணயித்த “சமூக யதார்த்த”த்திற்குப் புறம்பாக மனித உணர்ச்சிகளையும் பிரக்ஞையையும் சோதனை செய்யும் விதமாக உருவான “மூடுபனிக் கவிகள்” என்று அழைக்கப்பட்ட இளம் கவிகளின், எழுத்தாளர்களின் குழுவில் ஷூ திங்கும் இணைந்தார். “மூடுபனி” இயக்கத்தின் தலைமறைவு இதழான ஜின்டியன் (இன்று) இதழில் 1979லிருந்து இவரது படைப்புகள் வெளிவரத் தொடங்கின. அதிகாரம் ஜின்டியன் இதழை மூடி, சித்தாந்த இணக்கமின்மை விசாரணையைத் தொடங்கியது. கொஞ்ச காலம் ஷூ திங் எழுதாமல் இருந்தார். ஆனால் அதிகாரம் அவரது படைப்புகளில் திருப்தியடைந்து, அவரைச் சீன எழுத்தாளர்கள் கூட்டமைப்பில் உறுப்பினராக்கியது. இவர் 1980களில் இருமுறை தேசியக் கவிதை விருதைப் பெற்றார். இவரது கவிதைகள் சில:


ஒருவேளை—
–ஒரு கவியின் தனிமைக்கான பதில்

ஒருவேளை நமது இதயங்களுக்கு
வாசகர்கள் எவரும் இல்லாமல் போகலாம்
ஒருவேளை நாம் தவறான சாலையில் பயணித்திருக்கலாம்
எனவே நாம் தொலைதலில் முடிகிறோம்.

ஒருவேளை நாம் விளக்குகளை ஒவ்வொன்றாக ஏற்றுகிறோம்
அவற்றைப் புயல்கள் ஒவ்வொன்றாக ஊதி அணைக்கின்றன
ஒருவேளை இருட்டுக்கு எதிராக நாம் நமது உயிர்-மெழுகுவர்த்தியை ஏற்றுகிறோம்
ஆனால் எந்த நெருப்பும் உடலுக்கு வெதுமையூட்டுவதில்லை.

ஒருவேளை நமது கண்ணீர்களை வெளியேற்றியவுடன்
நிலம் உரமிடப்பட்டுவிடும்
ஒருவேளை நாம் சூரியனைத் துதிக்கையில்
நாமும் சூரியனால் துதிக்கப்படுகிறோம்.
ஒருவேளை நமது தோள்களின் மேல் இருக்கும் குரங்கின் கனம் கூடக் கூட
நாம் மேலதிகமாக நம்புகிறோம்.
ஒருவேளை அடுத்தவர்களின் துயரங்களை மட்டுமே நாம் எதிர்க்க இயலும்
நமது சொந்த துரதிர்ஷ்டங்களுக்கு மௌனமாகவே இருக்கிறோம்.

ஒருவேளை
இந்த அழைப்பு மறுக்க முடியாததாக இருப்பதால்
நமக்கு வேறு எந்த வாய்ப்பும் இல்லை.
௦௦௦


ஒரு தீவின் கனவு

நான் எனது சொந்த அட்சரேகையில் இருக்கிறேன்
எனது புலம்பெயர் கனவுகளுடன்—

வெள்ளை மூடுபனி.
பனிச் சாலைகள்.
ஒரு கனத்துத் தொங்கும் மணி
ஒரு சிவப்பு அரண்மனைச் சுவரின் பின்னால்
அசைவற்ற அந்தியைக் கிழித்துக் கொண்டிருக்கிறது.

ஓ, நான் ஒரு செர்ரி சிற்றோடையைக் காண்கிறேன்
அதன் நடனமிடும் உடையைத் திறந்து கொண்டு
ஒரு பெருமழைக்குப் பிறகு;
நான் இளம் பைன் மரங்களைக் காண்கிறேன்
தங்கள் தலைகளை ஒன்றோடொன்று முட்டிக்கொள்கின்றன
ஓர் உரையாடலை உருவாக்க;
மேலும் மணற்புயலிலும் பாடல்கள் கேட்கின்றன
ஒரு பீச்சியடிக்கும் நீரூற்று போல.

இவ்வாறாக, மிக உஷ்ணமான சூரியன்கள் மின்னுகின்றன
கண்ணிமைகளுக்கு அடியில் கனத்த உறைபனியுடன்;
மேலும் ரத்தம் வழி நடத்துகிறது
நம்பகமான வசந்தக் காற்றை
உறைந்த உள்ளங்கைகளுக்கு இடையில்.
ஒவ்வொரு சாலைச் சந்திப்புகளிலும்
தெருவிளக்குகளால் ஆசிர்வதிக்கப்பட்டு
காதல் மௌனமாக வாக்குறுதி அளித்திருந்ததை விடவும் கூடுதலாக
முத்தப் பிரியாவிடைகளில்.

கடல் அலைகளுக்கும் பசுமை நிழலுக்கும் நடுவில்
பனிப்புயல்களுக்கு எதிராக நான் ஒரு கனவு வைத்திருக்கிறேன்.

௦௦௦


கூடுகை வரிசை

இரவுக்குப் பின் இரவு
காலத்தின் கூடுகை வரிசை
தொழிற்சாலையின் ஒருங்கு கூட்டும் வரிசை வேலைக்குப் பிறகு
வீட்டுக்குச் செல்லும் வரிசைகளில் நாங்கள் இணைகிறோம்
உயரே விண்மீன்கள் வானைக் கடப்பதற்குக் குழுமியிருப்பதைப் போல.
அதற்கும் மேலே
தொலைந்த நாற்றுகளின் ஒரு வரிசை.

விண்மீன்கள் தீர்ந்துவிட்டிருக்க வேண்டும்
ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு
மேலும் பயணத் திட்டத்தில் மாற்றம் இல்லை
மேலும் சோகை பிடித்த நாற்றுகளில்
முழுமையும் நிறமும்
நிலக்கரிப்புகையில் மங்குகின்றன.
நமது பகிர்ந்து கொள்ளப்பட்ட வழக்க முறைகளால்
நான் இதை அறிவேன்.

விசித்திரமாக
என்னால் உணர முடியவில்லை
எனது சொந்த இருப்பை.
விசனம் அல்லது பழக்கம் காரணமாக நான் மாறிவிட்டிருக்கிறேன்
கிளைவிடும் மரங்கள் போல, விண்மீன் கூட்டங்கள் போல,
மிகப் பலவீனமாக இருக்கிறேன் கேள்வி எழுப்ப
இது தீர்மானிக்கிறது விதியை.
௦௦௦

விழுந்து கொண்டிருக்கும் இலைகள்

I

உருகிக் கொண்டிருக்கும் நிலா
ஒரு குளிர்ந்த கித்தானில் மிதக்கும்
ஒரு மெலிந்த பனிக்கட்டித் துண்டாக இருந்தது.
நீ என்னை வீட்டுக்கு நடக்க வைத்தாய்,
சிறிய பெருமூச்சுகளை வழி முழவதும்
விட்டுக் கொண்டு,
ஏமாற்றத்திலோ அல்லது துயரத்திலோ இல்லை.
நாம் ஒருபோதும் விவரிக்க முடிந்ததில்லை
இலைகள் நமக்குத் தரும் மனோநிலையை,
ஆனால் பிரிவுக்குப் பிறகு
வீழ்ந்து கொண்டிருக்கும் இலைகளில் உனது காலடியை நான் கேட்பேன்.

II

எல்லாத் திசைகளில் இருந்தும்
வசந்தம் எங்களிடம் குசுகுசுக்கிறது,
ஆனால் எங்கள் பாதங்களுக்குக் கீழே இலைகள்,
குளிர்காலக் குற்றத்தின் சாட்சியம்
ஒரு இருண்ட ஞாபகத்தைக் கிளறுகிறது.
ஆழ்ந்த அதிர்ச்சிகள்
நமது கண்களை ஒன்றையொன்று தவிர்க்கச் செய்கிறது,
ஆழ்ந்த பிரதிபலிப்புகள்
நமது எண்ணங்களை மீண்டும் சந்திக்க வற்புறுத்துகின்றன.

மரங்களில் ஆண்டு வட்டங்களைப் பதிக்கின்றன பருவங்கள்.
விழுந்து கொண்டும் தளிர்த்துக் கொண்டும் இருக்கும் இலைகள்
ஆயிரம் வரிகளை இயற்றுகின்றன.
ஆனால் ஒரு மரத்திடம் காலவரையறை அற்ற
ஒரே ஒரு பாட்டு மட்டுமே இருக்க வேண்டும்–
“வானத்திற்குள் சுதந்திரமாகப் பரவுவதற்காக
நான் ஒருபோதும் பூமியைவிட்டுப் போக மாட்டேன்.”

III

எனது ஜன்னலைத் தட்டி,
காற்று விவரிக்கிறது நீ எங்கிருக்கிறாய் என்பதை—
ஒரு கபொக் மரத்தின் அடியில் நீ நடந்து கொண்டிருக்கிறாய்
காற்று கீழே ஒரு பூக்களின் மழையை உதிர்க்கிறது:
வசந்த இரவுகள் பனியாலானவை,
நடுக்கங்கள் உனது இதயத்திற்கு வெளியே வைக்கப்பட்டுள்ளன.

திடீரென நான் உணர்கிறேன்: நான் ஒரு வீழ்ந்த இலை,
இருட்டிலும் சகதியிலும்—
காற்று ஒரு சாவுப் பாடலை இசைக்கும்போது
ஒரு பச்சை மென்கனவு அதன் முதல் சுவாசத்தை
என் உடலிலிருந்து எடுத்துக் கொள்ள நான் அமைதியாகக் காத்திருக்கிறேன்.

௦௦௦

உன்னைத் தேடுகிறேன்

எல்லைகள் அற்ற ஒரு தொங்கும் வண்ண ஓவியம்
விடையில்லாத ஒரு தூய அல்ஜிப்ரா கணக்கு.
ஓர் ஓரிழை யாழ், உணர்வு கிளறும் ஜெபமாலை
அது தாழ்வாரங்களில் சொட்டுகளாகத் தொங்குகிறது.
கடலின் அக்கரையை ஒருபோதும் அடைய முடியாத
ஒரு ஜோடித் துடுப்புகள்.

ஒரு மொட்டு போல அமைதியாய் காத்திருக்கிறேன்.
கொஞ்சம் தூரத்திலிருந்து உற்றுப் பார்க்கிறது அந்திச் சூரியன்.
ஒருவேளை ஒரு சமுத்திரம் எங்கேயோ ஒளிந்திருக்கலாம்,
ஆனால் அது வெளியே பாயும் போது—இரு கண்ணீர்த்துளிகள் மட்டுமே.

ஓ, ஓர் இதயத்தின் பின்னணியில்,
ஓர் ஆத்மாவின் ஆழ் கிணற்றில்.

ஒன்று அல்லது இரண்டு நிகழ்வுகளை நினைவுகூர்தல்

ஒரு கவிழ்க்கப்பட்ட வைன் கோப்பை.
நிலவொளியில் பயணிக்கும் ஒரு கல் பாதை.
நீலப் புல் நசுங்கிக் கிடக்கும் இடத்தில்
ஒரு புறக்கணிக்கப்பட்ட பல்வண்ண அஜலியா மலர்.

யூகலிப்டஸ் மரம் சுழல்கிறது.
உயரே விண்மீன்கள் ஒரு பல்வண்ணநோக்கியை நிறைக்கின்றன.
ஒரு துருப்பிடித்த நங்கூரத்தின் மேல்
கண்களில் பிரதிபலிக்கிறது மங்கிய வானம்.

ஒரு புத்தகத்தை உயர்த்திப் பிடித்து மெழுகுவர்த்தியைப் பொத்தினேன்
உதடுகளுக்கிடையில் ஒரு விரலுடன்
ஒரு முட்டையோட்டுக்குள் அமைதியாய் அமர்ந்திருக்கிறேன்,
பாதி ஒளி ஊடுருவும் ஒரு கனவை வைத்துக் கொண்டு.

ஒரு சிறிய ஜன்னலின் பாடல்

எழுது பொருட்களைக் கீழே வை,
திறந்த ஜன்னலுக்கு வா,
நான் ஒரு தீபத்தை உயர்த்திப் பிடித்திருக்கிறேன்
உனக்காக—
இந்த தூரத்திலிருந்து நீ என்னைப் பார்.

விடிந்து கொண்டிருக்கும் பூமியின் மேல் காற்று நடக்கிறது
வானத்தைத் துப்புரவாக கூட்டிப் பெருக்கி.
இரவு இன்னும் சேகரித்துக் கொண்டிருக்கிறது
அதன் உடைந்த துண்டுகளைத் தெருக்கள் நெடுக.
எல்லாப் பூக்களும் எல்லாப் பசுஞ்சிறு கிளைகளும்
சூரியனின் வேறொரு உறைபனியைச் சுவைக்கும்
கருஞ்சிவப்பு விடியல் தூரத்தில் இல்லை போல.

கடலின் வாசனை மலைகளுக்குப் பின்னால் சிக்குண்டு இருக்கிறது
அவை தொடர்ந்து
நமது இளமையைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்க முடியாது
மேலும் அவை நம்மை வெகுகாலம் தாமதிக்கச் செய்யவும் முடியாது.

எனக்கு வாக்குறுதியளி—கண்ணீர்கள் இல்லை
ஜன்னலுக்கு வா, என்னை சந்தி
நீ தனிமையில் இருப்பதாக உணர்ந்தால்.

ஒருவர் அடுத்தவரது துயரப் புன்னகையைப் பார்ப்போம்
போராட்ட ஆனந்தக் கவிதைகளைக் கைமாற்றிக் கொள்வோம்.


பரிசு

ஒரு குளத்தின் கனவை நான் கனவு காண்கிறேன்
அது வானத்தைப் பிரதிபலிக்க மட்டும் வாழவில்லை
ஆனால் கரை மேல் நிற்கும் வில்லோ மரங்களும் பால்வெட்சிச் செடிகளும்
என்னைக் குடிக்கட்டும்.
அவர்களது இலைச் சிரைகளுக்குள் நான் வேர்கள் வழியாகக் கிளைவிடுவேன்,
மேலும் அவை வாடுகையில் நான் வருந்தப் போவதில்லை
ஏனெனில் நான் என்னையே புகுத்தியிருக்கிறேன்
மேலும் வாழ்ந்துவிட்டிருப்பேன்.

சூரிய ஒளியின் ஆனந்தத்தோடு நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன்
அதன் சுருக்கமான வாழ்க்கை, காலம் தாண்டும் ஒரு காவியத்தையே படைத்துவிடுகிறது
குழந்தைகளின் கண்மணிகளில்;
அது ஒரு சிறிய தீயாக, தங்கமயமாகத் தொடங்கும்,
மேலும் ஒரு மரகதப் பச்சைப் பாடலைப் பாடும்
முளைவிடும் விதைகளின் மத்தியில்.
நான் சாதாரணமாக இருக்கிறேன் ஆனால் ஏராளமாக
அது எனக்கு ஆழத்தைத் தருகிறது.

புலம்பெயரும் பறவைகளின் துயரத்தோடு மட்டுமே நான் புண்படுகிறேன்
எனது ஆழ்ந்த காதலை வசந்தம் மட்டுமே புரிந்துகொள்கிறது
அத்தகைய விரோதத்தையும் இழப்பையும் அது தாங்கிக் கொள்கிறது
ஒரு விட்டுவிட்டு மினுங்கும் வெதுமையான காலத்தை நோக்கிப் பறப்பதற்கு.
ஓ, இந்தக் கேடுகெட்ட சிறகுகள்
பாடலின் ஒரு தீவிரமான வரியைத் துடைத்தெறிந்துவிடும்
எல்லா ஆத்மாக்களையும் காலத்தையும் துளைத்தெடுக்க.

நான் உணரும் ஒவ்வொன்றும்
பூமியிலிருந்து கிடைத்த ஒரு பரிசே.

௦௦௦

ஷூ திங்

நெருப்பில் எரிந்த மலர் ( சில்வியா ப்ளாத் ) மணிக் குடுவை / தமிழில் விஜிய பத்மா

அமெரிக்க கவிஞர் மற்றும் நாவலாசிரியர் சில்வியா ப்ளாத் தனது சுய சரிதையான “மணி குடுவை (The Bel Jar) என்ற புதினத்தால் உலகளவில் அறியப்பட்டவர். பெண் விடுதலை சார்ந்த சிந்தனைகளை கொண்ட சில்வியாவிற்கு அவர் சார்ந்த சமூகமும், அவர் சந்தித்த காதலும் அத்தனை ஏற்புடையதாக இல்லை.சில்வியாப்ளாத்1950இல் ஸ்மித் கல்லூரியில் உதவித்தொகை பெற்று கல்வி பயின்ற காலக்கட்டத்தில் அமெரிக்க சமூகம் முற்போக்கு சிந்தனைகளில் மிகவும் பின்தங்கியதாக இருந்தது.இதனால் சில்வியாவிற்குசமூகம் கொடுத்த நெருக்கடிகள் தாங்க இயலாததாக இருந்தது. மேலும் அவரது காதல் வாழ்க்கை மிக கசப்பானதொரு அனுபவமாக மனதில் குழப்பங்களை விளைவிக்கஒருக்கட்டத்தில்மனநிலை பாதிக்கப்பட்டு சில்வியா பிளாத் தன் முகத்தை சமையல் எரிவாயுவில் காண்பித்து தற்கொலைக்கு முயன்றார்.அதன்பின் மனநல மருத்துவ சிகிச்சை பெற்று குணமடைந்து மீண்டும் தனது கல்வியை தொடர,1955இல் பட்டம் முடித்தார். பின்னர் பிரிட்டிஷ் கவிஞரான டெட் ஹுகஸைச் சந்தித்த சில்வியா அவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் அவரது திருமண வாழ்வும் தோல்வியிலேயே முடிந்தது.நிறைவில்லாத திருமண வாழ்வுசில்வியாவை உச்சக்கட்ட மனச்சிதைவு நோய்க்கு ஆளாக்கியது.இப்படியானதனது உளவியல் சார்ந்த மனக்குழப்பங்களையும், உணர்வுகளையும்அப்படியே “மணிக்குடுவை“ என்ற நாவலாக எழுதிவிட்டு, ஆறுமாதம் கழித்து 1963ஆம் ஆண்டில் மன உளைச்சல் அதிகரித்து தற்கொலை செய்துகொண்டார்.சில்வியாவின் உண்மைகள் நிரம்பிய இந்நாவல் அமெரிக்காவில் வெளியிடப்படக்கூடாது என்ற சில்வியாவின்தாயின் வேண்டுகோளை ஏற்று அமெரிக்க அரசு இந்நாவலை 1971ஆம் ஆண்டு வரை தடை செய்திருந்தது.ஆனால் உலகம் முழுவதும் தி பெல் ஜார் (மணிக்குடுவை)நாவல்மிகப்பெரியபாராட்டைப்பெற்றதும் அமெரிக்காஅரசு அந்ததடையை நீக்கியது.

மணிக்குடுவை (தி பெல் ஜார்)நாவல் மற்றும் அவரது கவிதைத் தொகுதிகள் கொலோசஸ் மற்றும் ஏரியல் ஆகியவற்றிற்காக மரணத்திற்குப் பிறகு இலக்கியத்திற்காக வழங்கப்படும் உயரிய விருதான ப்ளாட் புலிட்சர் 1982ஆம் ஆண்டுவழங்கப்பட்டது.மிக உயர்ந்த ஆங்கில நடையில் நிறைய குறியீடுகளும், உண்மை உணர்வுகளின் பிரதிபலிப்பும், ஒரு இளம் பெண்ணின் மனக்குழப்பங்களையும் வெளிப்படையாக எழுதப்பட்ட தி பெல் ஜார் (மணிக்குடுவை) இதுவரை ஆறு உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நாவலை உள்வாங்கி அதன் உயிர்ப்பின் சாரம் கெடாமல் தமிழில் மொழிபெயர்க்க வேண்டுமானால், நாமும் நாவலாசிரியரின் பித்து மனநிலைக்கு சென்று புரிந்து கொண்டுதான் மொழிபெயர்க்க இயலும். இதனை மிக அருமையாக ஜீவன் கெடாமல் உயரிய நடையில் மொழிபெயர்த்துள்ளார் மொழிபெயர்ப்பாளர் ஜி.விஜயபத்மா. காலதாமதமாக வந்தாலும் தமிழ் மொழிபெயர்ப்பு இலக்கியத்தில் சில்வியாபிளாத்தின் மணிக்குடுவை எனும் சுயசரிதம் மிக முக்கியமான நாவலாக கவனிக்கப்படும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை. புதினத்தை வெளியிடுவதில் நாதன் பதிப்பகம் அகம் மிக மகிழ்கிறது.

அஜயன் பாலா
பதிப்பாசிரியர்.

பல்லக்குத் தூக்கிகளுக்கு வயது 30 / அ.ராமசாமி

1988, டிசம்பர் 31 இல் ஒருநாள் கலைவிழா ஒன்றை நடத்திடத் திட்டமிட்டது மதுரை நிஜநாடக இயக்கம். அதே ஆண்டில் மதுரையில் மூன்று நாள் நவீன நாடக விழா ஒன்றையும் நடத்திய அனுபவம் நிஜநாடக இயக்கத்திற்கு இருந்தது. நாடகவிழாவும் ஒருநாள் கலைவிழாவும் மதுரைக்குப் புதுசு. தமிழ்நாட்டிற்கே புதுசு என்று கூடச் சொல்லலாம். அக்கலைவிழாவிற்குப் பின்புதான் திருவண்ணாமலை தொடங்கித் திருப்பரங்குன்றம், சென்னை எனப் பல இடங்களில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் (கலைஞர்கள்) சங்கம் கலைவிழாக்களை நடத்தியது.

புரிசை, சுபமங்களா நாடக விழாக்களுக்கும் நிஜநாடக இயக்க நாடகவிழாக்களே முன்னோடி. மைய அரசின் சங்கீத நாடக அகாடெமி நடத்தும் மண்டல நாடக விழாக்களிலும் தேசிய நாடக விழாக்களிலும் கலந்துகொண்டு நாடக விழாக்களைப் பார்த்திருந்த அனுபவத்தோடு பெங்களூர், புதுடெல்லி போன்ற நகரங்களிலும் நடந்த கலைவிழாக்களையும் பார்த்த அனுபவத்தில் ஏற்பாடு செய்யப்பெற்ற விழாக்கள் அவை. அந்த விழாக்களை ஏற்பாடு செய்த காலகட்டத்தில் நான் நிஜநாடக இயக்கத்தின் செயலாளராக இருந்தேன்.

டிசம்பர் 31, ஒருநாள் கலைவிழாவில் மேடை நாடகம், கவிதா நிகழ்வு, நவீன ஓவியர்களின் கண்காட்சி, கிராமப்புற ஆட்டங்கள் எனப் பலவற்றைக் கலந்து தரலாம் என முடிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் நிகழ்ச்சிகள் முடிவுசெய்யப்பெற்றன. நிஜநாடக இயக்கத்தின் நாடகங்களோடு அதிகம் செலவில்லாமல் பக்கத்தில் இருக்கும் நாடகக் குழுவின் நாடகங்களைக் கூட இணைத்துக் கொள்ளலாம் என்று முடிவுசெய்யப்பட்து. நிஜநாடக இயக்கத்தில் உறுப்பினராக இல்லாத நண்பர்கள் நான் வாடகைக்கிருந்த வீட்டின் வாசலிலும் மாடியிலும் கூடிப் பேசுவோம். திறனாய்வுப்பார்வை, அரசியல், சினிமா, ஓவியம், எழுத்து எனப் பலவற்றை விவாதிக்கும் அந்த நண்பர்களைக் குழுவாக்கி ஒரு நாடகம் போடலாம்; அதற்காக ஒரு நாடகப் பிரதியைத் தேடலாம் என்ற நோக்கில் பல நாடகங்களைக் குறித்து விவாதித்தோம்.

நிஜநாடக இயக்கத்தில் செயல்பட்டுக்கொண்டே இன்னொரு நாடகக் குழுவைத் தொடங்கலாமா? என்றெல்லாம் யோசிக்காமல் அவ்விழாவில் ஒரு நாடகத்தை நிகழ்த்த வேண்டும் என்பதற்காகச் சுதேசிகள் என்றொரு நாடகக்குழுவைத் தொடங்கினோம். அக்குழு மேடையேற்றுவதற்காகப் பல நாடகப்பிரதிகள் பரிசீலிக்கப்பட்டன. பாதல் சர்க்கார், விஜய் டெண்டுல்கர் என இந்திய நாடகாசிரியர்களோடு பெர்ட்டோல்ட் ப்ரெக்ட், எட்வர்ட் ஆல்பி போன்ற இடதுசாரிகளின் நாடகப் பெயர்கள் எங்களால் உச்சரிக்கப்பெற்றது. விவாதிக்கப்பெற்றன. அந்தப் பரிசீலனையின்போது புதியதாகவே நாடகங்கள் எழுதுவது பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம்.

நண்பர்களின் உரையாடல் வட்டத்தில். பல சிறுகதைகள் ‘நாடகீயத் தன்மைகள்’ கொண்டனவாக இருக்கின்றன என்று சொல்லிவிட்டு, உதாரணமாகப் பல்லக்குத்தூக்கிகள் கதையின் நாடகீயத்தன்மையை விளக்கிச் சொன்னேன். சொன்னவிதம் நண்பர்களுக்குச் சரியெனப்பட்டதால் என்னையே எழுதும்படி வற்புறுத்தினார்கள்; எழுதினேன். படித்தோம். சில திருத்தங்கள் செய்யப்பட்டன. அப்படித்தான் நான் நாடக ஆசிரியரானேன்.

அதிகமான நிகழ்வுகளை அடுக்கும் வடிவமல்ல. குறைவான நிகழ்வுகளை முன்பின்னாக அடுக்குவதன் மூலம் தன் வடிவத்தை உருவாக்கிக்கொள்வது சிறுகதை. சிறுகதை வடிவத்தில் கதைசொல்லியாக ஒரு பாத்திரம் கதைக்குள்ளோ, அல்லது வெளியிலோ இருக்கும். அதனைக் கண்டறிந்து தூக்கிவிட முடிந்தால் நாடகப்பிரதியுருவாக்கத்தின் பாதிவேலை முடிந்துவிடும். பல்லக்குத் தூக்கிகளில் அதைத்தான் செய்தேன்.

பல்லக்குத்தூக்கிகளைப் பற்றிய வருணனை, சித்திரிப்பு மூலம் அவர்களைப்பற்றியதொரு விலகல்நிலைக் கருத்துக்களை உருவாக்குவனாகக் கதைசொல்லியின் பாத்திரம் ஒன்றைச் சுந்தர ராமசாமியின் கதையில் பார்க்கலாம். அதன் மூலம் வாசகர்களின் வாசிப்புத்தளத்தை முடிவுசெய்யும் கதைசொல்லியின் அதிகாரத்துவத் தன்மை கதைக்குள் ஊடாடும் தன்மையை உணரலாம்.

அதனைக் கண்டறிந்து தூரப்படுத்தியபின், 1990 களின் நிகழ்வுகளைக் குறிக்கும் சில குறியீட்டுச் சொற்களை உரையாடலில் சேர்த்தபோது நாடகப்பிரதி முழுமையானது. அத்தோடு நாடகத்திற்குள்ளோ அல்லது வெளியிலோ ஒருவித முரணிலையை உருவாக்க வேண்டும். பாத்திரங்கள் சார்ந்த முரணென்றால், அது அகமுரணாக அமையும், வெளியிலிருக்கும் ஏதோவொன்றொன்றால் புறமுரணாகத் தோன்றும். நவீன நாடகங்கள் என்ற வகைப்பாட்டில் பெரும்பாலும் புறநிலை முரண்களே முக்கியத்துவம் பெறும். பல்லக்குத் தூக்கிகளின் உரையாடலின் வழி உருவாக்கப்பட்ட அந்த நபர் நாடகத்தில் தோன்றா முரணை உருவாக்குவதன் வழிப் புறநிலை முரணைக் குறியீடாக உருவாக்கிவிடுபவராக ஆக்கப்பட்டார்.

சிறுகதையை எழுதிய சுந்தரராமசாமிக்கு நாடகப் பிரதியை அனுப்பிவைத்து மேடையேற்றத்துக்கு வரும்படி அழைத்தோம். வருவார் என்பதுபோல முதலில் தகவல்கள் வந்தன. ஆனால் “பல்வலி. மேடையேற்றத்திற்கு வர இயலவில்லை” என்று கடிதம் ஒன்றை அனுப்பினார். பின்னர் ஒரு நேர்ப்பேச்சில், சிறுகதையை அப்படியே நாடகமாக்க வேண்டும் என்று அவசியமில்லை; நீங்கள் அப்படிச் செய்யவில்லை என்பதாகச் சொன்னார். அப்படி ஆக்கப்பட வேண்டும் என்று நினைத்த அவரது நண்பர்கள் நாடகத்தைப் பார்த்துவிட்டு அவரோடு பேசியிருந்தார்கள் என்பதை உணர முடிந்தது.

நிஜநாடக இயக்கத்தின் ஒருநாள் கலைவிழாவின்போது குப்தா அரங்கின் நிகழ்வில் பல்லக்குத் தூக்கிகளை மேடையில் நிகழ்த்தவில்லை.

செவ்வகச் சட்டகத்தில் நடித்துக் காட்டும் முறையில் தயாரிக்கவும் இல்லை. தரைத்தளத்தில் மூன்றுபக்கமும் பார்வையாளர்கள் அமர்ந்திருந்த வடிவத்தில் நிகழ்த்தப்பெற்றது. குறியீட்டு அர்த்தங்கள் கொண்ட ஆடைகள், நாடகப் பொருட்கள், பல்லக்கின் விதானக்கொடியின் வண்ணம் போன்றனவற்றை இந்திய/ உலக அரசியல் நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி விமரிசனம் எழுதினார் இடதுசாரி விமரிசகர் ந.முத்துமோகன். சோவியத் யூனியனில் பெரிஸ்த்ரேய்காவின் அறிமுகம் நடந்த காலகட்டம் அது. மார்க்சீயக் கட்டமைப்புகள் மீதான விமர்சனம் உலகம் முழுவதும் எழுந்து கொண்டிருந்தது.

நாடகத்தில் நடிகர்களாகப் பங்கேற்றவர்களின் பின்னணி, சிறுகதையை எழுதிய சுந்தர ராமசாமியின் அரசியல் ஆகியவற்றோடு சேர்த்து ந.முத்துமோகன் பல்லக்குத் தூக்கிகளை மார்க்சிய எதிர்ப்பு நாடகமாக முன்வைத்தார். ஆனால் அந்தப் பிரதி பல இட துசாரி அமைப்புகளின் மேடையில் பார்வையாளர்களைச் சந்தித்தது என்பது நடைமுறை முரண்.முதல் மேடையேற்றத்தைத் தொடர்ந்து மதுரையின் கல்லூரிகள் சிலவற்றில் சுதேசிகளே நிகழ்த்தியது. சுதேசிகள் நாடகக் குழுவின் உறுப்பினர்களில் ஒருவரான சுந்தர் காளியைத் தனது தொலைக்காட்சித் தொடர் ஒன்றில் நடிகராக அறிமுகப்படுத்திய ஞாநி அந்த நாடகத்தை முக்கியமான திருப்பமாகப் பயன்படுத்தினார்.

அறந்தை நாராயணனின் கதையைத் தழுவி எடுக்கப்பெற்ற விண்ணிலிருந்து மண்ணுக்கு என்னும் அந்தத் தொடரின் உச்சநிலைக் காட்சியாகப் பல்லக்குத்தூக்கிகள் அமைந்தது. உளவியல் மருத்துவரும் நாடக இயக்குநருமான ருத்ரன் தனது மருத்துவச் செயல்பாட்டின் பகுதியாகப் பல்லக்குத்தூக்கிகளைத் தயாரித்தார். திருவண்ணாமலையில் இயங்கிய இடதுசாரி நாடக குழுவான தீட்சண்யா போன்றனவும் அந்நாடகத்தைத் தயாரித்தது.
நாடகப்பிரதியை அச்சிட்டுக் கொள்ளலாமா? என்று கேட்டபோது சுந்தராமசாமி மறுப்பெதுவும் சொல்லவில்லை. மூன்று நாடகங்களைக் கொண்ட நாடகங்கள் விவாதங்கள் நூலின் 25 பிரதிகளை வாங்கிக்கொண்டுபோய் சிங்கப்பூரில் நாடகங்கள் இயக்கும் அவரது நண்பர் இளங்கோவனிடம் வழங்கினார். அவரும் பல்லக்குத்தூக்கிகளை மேடையேற்றினார்.

பாண்டிச்சேரிக்குப் போன பின்பு அங்கு உருவான கூட்டுக்குரல் நாடகக்குழு வழியாகவும் கல்பாக்கம், பாண்டிச்சேரி, கடலூர், தஞ்சாவூர், பண்ருட்டி எனப் பல நகரங்களில் மேடையேற்றியிருக்கிறேன். புதுவை இளவேனில் எடுத்த சுந்தர ராமசாமியின் நிழற்படக் காட்சியை ஒட்டிச் சென்னை அல்லயன்ஸ் ப்ரான்சே அரங்கில் ஒருமுறை நிகழ்த்தப்பெற்றது. அந்த மேடையேற்றத்தைப் பார்க்கவாவது சு.ரா. வருவார் என எதிர்பார்த்தேன். அது நடக்கவில்லை. சில ஆண்டுகளுக்கு முன்பு (2015) இலங்கையின் விபுலானந்தா அழகியல் கற்கைநெறிப் பள்ளி மாணவர்கள் தங்களின் பாடத்திட்டப் பகுதியாகப் பல்லக்குத் தூக்கிகளை மேடையேற்றியிருக்கிறார்கள். தமிழில் உருவாக்கப்பெற்ற நவீன நாடக ப்பிரதிகளில் அதிகமாக குழுக்களாலும் அதிகமான இயக்குநர்களாலும் மேடையேற்றப் பட்ட நாடகப்பிரதி பல்லக்குத்தூக்கிகள் எனச் சொல்வது மிகையான கூற்றல்ல.

•••