Category: ஜனவரி

பஞ்சதந்திரம்: சிறு அறிமுகம்

download (8)

 

 

நாங்கள் புதுச்சேரியில் வசித்துவந்த போது டெல்லியில் இருந்துவந்த எழுத்தாள நண்பர் ஒருவர் வேலை மாற்றலில் புதுச்சேரிக்கு வந்தார்.  குடும்பத்துடன், அடிக்கடி அவர்களின் வீட்டிற்கு நாங்களும் எங்கள் வீட்டிற்கு அவர்களுமாக சந்தித்துக் கொள்வோம். (1984,85) அப்போது அவர்கள் ‘பஞ்சதந்திரம்’ என்னும் இந்தப் புத்தகத்தை எங்களிடம் கொடுத்தனர்.

பஞ்சதந்திரம் மிக அருமையான நூல் என்பதால் இதில் உள்ள பல விஷயங்கள் குறித்தும் நிறைய பேசி இருக்கிறோம். அப்போதெல்லாம் நூல் வெளியிடுவது என்பதெல்லாம் இல்லை. அந்தப் புத்தகம் அவர்களிடமிருந்து வந்த பின் எங்கள் வீட்டில் யார் கைகளிலாவது எப்போதும் இருந்து கொண்டே இருக்கும். அந்த அளவுக்கு ஆர்வத்தைத் தூண்டுவது பஞ்சதந்திரம். படிக்கத் தொடங்கியவுடன் அது உங்களை உள் இழுத்துக் கொண்டுவிடும். எந்தப் பக்கத்திலிருந்தும் படிக்கலாம்.

கதைகள் என்பதால் பஞ்சதந்திரம் குழந்தைகளுக்கான நூல் என்பதாக ஒரு தவறான எண்ணம் மனதில் பதியவைக்கப்பட்டுள்ளது. அவ்வாறு குழந்தை களுக்கானதாகப் பார்க்கப் படுவதும் ஓரளவுக்கு சரிதான் என்றாலும் கூட, அரசியல் தந்திரங்கள் நிறைந்த இந்த ‘பஞ்சதந்திரம்’ குழந்தைகளுக்கான கதையாக சிறு சிமிழில் அடைக்க முடியாதது. மேலும் குழந்தைகளுக்காக வடிவமைத்த பஞ்சதந்திரக் கதைகள் மிகவும் நீர்த்துப் போனதாக இருக்கிறது. எளிமைப் படுத்துவது என்பது வேறு, நீர்த்துப் போக வைப்பது என்பது வேறு.

பண்டிட் ஜ்வாலா பிரசாத் மிஸ்ரா 1910ம் ஆண்டு,  பஞ்சதந்திரத்தை சம்ஸ்கிருத ஸ்லோகங்களுக்கு ஹிந்தியில் உரை தந்து முதன் முதலாக பதிப்பித் திருக்கிறார். அதில் விஷ்ணு சர்மன் நீண்ட காலத்திற்கும் முன்னதாக நமது நாட்டில் வசித்தவர். அவருடைய இரண்டாம் பாடலான அறிஞர்களுக்கு வந்தனம் என்னும் ஸ்லோகத்தில் சாணக்கியரின் பெயர் இடம் பெற்றிருப்பதனால் அவர் சாணக்கியருக்கும் பின்னான காலத்தவர் என்கிறார்.  வெகு காலத்திற்கு முன்னதாகவே பஞ்சதந்திரம் செவிவழிக் கதைகளாக இருந்து வந்திருக்கிறது. கால ஓட்டத்தில் இந்தப் பஞ்சதந்திரம் வெளி நாட்டவர்களால் உயர்வாக உணரப்பட்டு, ஆசியா, அமெரிக்கா, ஐரோப்பியா ஆகிய நாடுகளில் பரவலாக அறியப்பட்டு இருக்கிறது.  விஷ்ணுசர்மன்  என்பது அவரது உண்மைப் பெயராக இருக்க வேண்டியதில்லை. நம் நாட்டில் பல நூல்களை எழுதிய அறிஞர்கள் தமது அடையாளத்தை வெளியிடுவது இல்லை.  எந்த இடத்தைச் சார்ந்தவர்கள், என்ன குலம், எந்தப்பகுதி, எந்த சந்தர்ப்பத்தில் எழுதப் பட்டது போன்ற எந்த அடையாளத்தையும் அவர்கள் சொல்வதில்லை. அது தேவை என்றும் அவர்கள் கருதியதில்லை. மகாபாரதம், ராமாயணம் போன்ற நூல்களை எழுதியவர்களின் பெயர்கள் கூட காரணப் பெயர்களாக இருக்கின்றன. அவர்களின் உண்மைப் பெயர் நமக்குத் தெரியாது. புற்றிலிருந்தவர் அதனால் வால்மீகி என்றும், வேதத்தை உரைத்தவர் என்பதால் வேதவியாசர் என்ற பெயராலும் நாம் அறிகிறோம் என்கிறார்  ஜ்வாலா ப்ரசாத் சர்மா.

பஞ்சதந்திரம்’ மற்றும் ‘ஹிதோபதேசம்’ ஹிப்ரூ, லத்தீன், கிரேக்கம், இத்தாலி,  ஜெர்மனி, பிரெஞ்சு, ஸ்பானிஷ், அரபி, பாரசீகம், துருக்கி, சீனா, உருது ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு நூலாகி இருப்பதாக 1910 லேயே ஜ்வாலா பிரசாத் சர்மா பதிவு செய்திருக்கிறார்.

ஒரு நவீன இலக்கியப் படைப்புப் போல, எதிர் எதிர் கண்ணாடிகளின் பிரதி பிம்பம் போல பஞ்சதந்திரக் கதை தொடங்குகிறது. மகிளாரூப்யம் என்ற நாட்டை ஆண்டு வந்தவன் அமரசக்தி. அவனது மூன்று மகன்களும் புத்தி சாதுர்யம் அற்றவர்கள். அவர்களுக்குப் பாடம் கற்பிக்க விஷ்ணுசர்மன் என்கிற எண்பது வயதான அறிஞர் அமர்த்தப்படுகிறார். நூலை எழுதியவரின் பெயரும் விஷ்ணுசர்மன். முட்டாள் அரசகுமாரர்களுக்குக் கதைகள் மூலம் பாடம் சொல்லித்தருகிறார். முதல் கதை நடைபெறும் இடத்தின் பெயரும் மகிளாரூப்யம்.

ஒரு மன்னன் தன் நாட்டின் பாதுகாப்பை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற அரசாட்சி முறை இந்நூலில் மிகத் தெளிவாக சொல்லப் பட்டிருக்கிறது. ஆரம்பத்திலேயே தலைவன், அவனது ஆட்சி என்பவை சொல்லப் பட்டு உள்ளன. சதுர்மண்டலாஸ்தானம், நால்வகைப் படை, அரசைக் காக்கும் கவசம் என பிரிந்து நிற்கும் விதத்தைத் தெளிவாக்குகிறது.

பிங்களகன் என்ற சிங்கத்திடம் மந்திரியாயிருந்த ஒரு நரியின் பிள்ளைகள் இருவர் என்று நகர்கிறது கதை. ‘சிங்கம் சாப்பிட்டு மிச்சமான ஆகாரம் நமக்கு இருக்கிறது. புத்திசாலிகள் அநாவசிய விஷயங்களில் தலையிடலாகாது’ என்று ஒரு நரி சொல்வதாய் வருகிறது. இந்த இடத்தில் இரண்டு விதமான விவரங்கள் இருக்கின்றன. அரசன் நேர்மையானவனாகவும், சுயகௌரவத்துடனும் இருப்பவனாக இருந்தாலும், அவரது அடுத்த வட்டத்தைச் சேர்ந்த மந்திரிகள் எதிர் மாறாகக் கிடைத்ததைச் சுருட்டிக் கொள்கிறார்கள் என்பது தெரியவருகிறது. எப்போதும் இப்படித்தான். நரி சுயமாக வேட்டை ஆடாது. வேட்டையாடிய உணவின் பகுதியை, விட்டுச் சென்றதை சாமர்த்தியமாகத் தின்று பசி ஆறும். விலங்குகளின் வாழ்க்கை முறையை நன்கு உணர்ந்து அதைப் பயன்படுத்தி வாழ்க்கையைச் சொல்லும் அரசியல் நிர்வாகம் இந்த முறையைப் பஞ்சதந்திரத்தில் முழுவதுமாகக் காணமுடிகிறது.

விலங்கினங்கள் பற்றிய ஆவணப் படங்களும், அதன் வாழ்க்கையைப் பற்றிய விவரங்கள் அடங்கிய புத்தகங்களும், ஊடகங்களும் இல்லாத அக்காலத்தில், நாம் கண்டறியும் விலங்கின வாழ்க்கையை மிக அழகாக நுட்பமாக மனித இனத்து குணாம்சங்களுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார் விஷ்ணுசர்மன். ராஜ தந்திரம், ஞானம், விவேகம் மட்டுமல்லாமல், உயிரினங்கள் பற்றிய தெளிந்த அறிவும் கொண்டவராய் இருந்திருக்கிறார் விஷ்ணுசர்மன்.

பிறருக்குத் தலை வணங்கிக் குழைந்து பேசும் வழக்கம் பிங்களகன் என்ற சிங்கத்திற்குக் கிடையாது. பொறுமையின்மை, கோபம், ஆக்ரோஷம், பரபரப்பு ஆகியவற்றைக் கொண்டு தன் காரியங்களைச் சாதித்து வந்தது. பயமின்றித் திரிவது, இச்சகம் பேசுவதை இகழ்வது, காலைப் பிடித்துக் கெஞ்சுவதை வெறுப்பது, மனக் கலக்கமின்றி இருப்பது இவைதான் சிங்கராஜனின் அடையாளங்கள். ஒரு அரசன் எப்படித் தலை நிமிர்ந்து நேர்மையாக சிங்கம் போல இருக்க வேண்டும் என்பது இதில் உணர்த்தப்படுகிறது. தற்கால அரசியல் போக்குகளின் எதிர்மறை நிலையிலிருந்துதான் கதை தொடங்கிறது.

புத்தகம் நெடுகிலும் வரும் பாத்திரங்கள், விலங்குகள், மனிதர்கள், அரசர்கள், குடும்பங்கள் எந்த நேரத்தில் (விலங்கு மனிதனாக, மனிதன் விலங்காக) எதுவாக எந்த தளத்தில் மாற்றம் கொள்கிறார்கள் என்பதை இடைவெளிக் கோடிட்டுப் பிரித்தறிய முடியவில்லை.

பஞ்சதந்திரம் முழுக்க முழுக்க அரசியல் தந்திர நூல். இன்றைய அரசியல் கூட்டணிகள், துரோகங்கள், பொய்கள், புரட்டுக்கள் இவை இந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது நினைவுக்கு வராமல் படிக்க முடியவில்லை. அதே சமயம் இதிலுள்ள ஸ்லோகங்கள் என்றென்றைக்குமாக மனித இனம் அறிந்துணர வேண்டிய பொன்மொழிகள். இந்த ஸ்லோகங்கள் ஆழமானவை. ஸ்லோகங்கள் சார்ந்த அனுபவங்கள் நமக்குக் கிட்டும் போது இன்னமும் ஆழமும், நெருக்கமும் அதிகமாகும்.

அவரவர் குணத்திற்கும் நிகழ்வுகளுக்கும் பொருத்தமானதாக கதாப்பாதிரங் களுக்கு பெயர்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவை காரணப் பெயர்கள். இடங்களின் பெயர்களும் அப்படியேதான். ஆனால் பெண் பாத்திரங்களின் பெயர்கள் ஆண்களின் பெயர்களுடன் சேர்ந்தே வருகின்றன. விலங்குகளில் பெண்ணினப் பெயர்களும் அப்படியே. பெண்ணின் பெயர்கள் ஓரிரு இடங்களில் வந்துள்ளன. மற்றபடி முதலையின் மனைவி, குரங்கின் மனைவி, அரசகுமாரி, ராணி, என்பதாகவே வருகிறது. பெண்கள், சாதிகள் பற்றி பஞ்சதந்திரத்தில் கூறியிருப்பது பொருத்த மற்றதாகவும் சற்றே கோபம் கொள்ள வைப்பதாகவும் இருக்கிறது. அரசியல் நிர்வாகம் பேசப்படுவதால் பெண்கள் பெயர்கள் தவிர்க்கப் பட்டிருக்கின்றனவா? மூல நூலாசிரியருக்குத்தான் தெரியும். இந்தகாலத்திலும் கூட, நிர்வாகத்திலும், அரசியலிலும் பெண்களின் பங்கு மிகக் குறைவுதான். அன்றைய கால கட்டத்தில் அரச பரிபாலனத்தில் பெண்களின் பங்கு அறவே இருந்திருக்காது. அவர்களின் நடமாட்டம் அந்தப்புரத்துடன் சரி.

பெண்களைப் பற்றி பஞ்சதந்திரம் சொல்லும் கருத்துக்கள், மாதிரிக்குச் சில கொடுக்கப்பட்டிருக்கின்றன.

மேலும்  ஸ்தீரிகள் விஷயம் தான் தெரிந்ததாயிற்றே ஒருத்தனோடு வம்பளப்பாள். இன்னொருத்தனைக் கனிவுடன் பார்ப்பாள். மூன்றாவனை மனதில் நினைத்துக் கொண்டே இருப்பாள். யாரைத்தான் பெண் திடமாகக் காதலித்தாள்’

‘எத்தனை கட்டைகள் போட்டாலும் நெருப்புக்குத் திருப்தி இல்லை.

எத்தனை நீரைக் கொட்டினாலும் சமுத்திரத்திற்குத் திருப்தி இல்லை.

எத்தனை ஜீவராசிகளைக் கொன்றாலும் யமனுக்குத் திருப்தி இல்லை.

எத்தனை ஆண்களைச் சேர்ந்தாலும் பெண்களுக்குத் திருப்தி இல்லை.’

இதுபோல இன்னமும் பல நூல் நெடுகிலும் இருக்கின்றன.

பஞ்சதந்திரத்தில் கடவுள் இடம் பெற்றதாகக் கூறமுடியாது. கடவுள் வாழ்த்து என்ற முதல் பாடல் உள்ளது. காளை மாட்டைப் பற்றிக்  குறிப்பிடும் பொழுது, சிவனுக்கு அது வாகனம் என்று வருகிறது. ‘தச்சனும் நெசவாளியும்’ என்கிற கதையில் நெசவாளி விஷ்ணு வேஷம் தரித்து அரசகுமாரியை சந்திக்கிறான், அதற்கு விஷ்ணுவினுடைய வாகனம் போல கருட வாகனத்தை தச்சன் செய்து கொடுக்கிறான் என்று வருகிறது. கடைசியில் அரசர்களுக்கிடையில் சண்டை ஏற்படும் பொழுது நெசவாளியை உண்மையான விஷ்ணு என்று நினைத்துக் கொண்டிருக்கும் அரசன், மாப்பிள்ளையிடம் உதவி கேட்கும் பொழுது விஷ்ணு வேஷம் தரித்தவன் தோற்றால் நமக்கு அவமானம் என்று விஷ்ணுவின் மனைவி லட்சுமி கருதுவதால், அந்தக் கணம் உண்மையிலேயே நெசவாளிக்கு சக்தி உண்டாகி எதிரியைத் தோற்கடிப்பதாக வருகிறது. கடவுள் வாழ்த்துடன் தொடங்குவது அந்தக்கால மரபு என்பதால் இந்த நூலும் கடவுள் வாழ்த்துடன் தொடங்குகிறது.

குழந்தைகளுக்கானது பஞ்சந்திரம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் நமக்கு பஞ்சதந்திரத்தில் குழந்தைகளே இடம் பெறவில்லை என்பது முரண் தானே. அரச குமாரர்கள் என்ற முட்டாள் சிறுவர்கள் நால்வரைத் தவிர நூல் நெடுகிலும் குழந்தைகளின் பங்கு இல்லை. அரசியலில் குழந்தைகள் இடம் பெறமுடியாது.

பஞ்சதந்திரத்தில் கடவுள் வாழ்த்துச் செய்யுளில் விஷ்ணுசர்மன் ப்ரம்மா, விஷ்ணு, கார்த்திகேயன், மழை, காலன், நெருப்பு, இந்திரன், சந்திரன், குபேரன், சரஸ்வதி, கடல், நான்கு வேதங்கள், மலை, காற்று, பூமி, வாசுகி முதலான பாம்புகள், நதி, அஸ்வினி குமாரர்கள், லட்சுமி, காஸ்யபரின் மனைவி, தேவர்கள், புனித நீரிடங்கள் (காசி முதலாவை), யக்ஞம் (திதிகள்), வசு (எட்டு திசை) முனிவர் (வியாசர் போன்ற) கோள்கள் (ஒன்பது கிரகங்கள்) எல்லாவற்றையும் கூறி எங்களைக் காப்பற்றுங்கள் என்று வேண்டுகோள் வைக்கிறார்.

அடுத்து தனக்கு முன்பு வாழ்ந்த அறிஞர்களுக்கு வந்தனம் சொல்கிறார். சுயமாய்த் தோன்றிய முனிவர், சுக்கிரன் வியாசர் பராசரர் போன்றவர்களுக்கும், சாணக்கியன் போன்று தனக்கு முன்னதாக நீதி சாஸ்திர நூல்கள் எழுதிய அனைவருக்கும் வணக்கம் சொல்கிறார்.

அரசியல் பாடங்களும், அன்றாட வாழ்க்கைப் பாடங்களும் கதைகள் மூலம் எளிதாக எடுத்துச் சொல்லப் படுகின்றன. இடையிடையே வரும் ஸ்லோகங்களில் நீதியும், இலக்கிய நயமும் இருக்கின்றன.

‘மித்ரர்களுக்கு உபகாரமும், சத்ருக்களுக்கு அபகாரமும்  செய்து (அரசனின்) புத்திமான்கள் அரசனைத் திருப்தி செய்கிறார்கள்.’

இன்றைய நாட்களில், சத்ருக்களுக்கு உபகாரம் செய்து அரசனின் பயத்தை அதிகரிக்கச் செய்து அருகில் அருகில் செல்கிறார்கள் அரசியல்வாதிகள்.

‘அரசர்கள், ஸ்திரீகள், கொடிகள் இவை மூன்றும் அருகில் எது இருக்கிறதோ அதைப் பற்றிக் கொள்கிறது’என்று விலங்கு மற்றும் செடி கொடி போன்ற  இயற்கையை சார்ந்தும் பலதும் பஞ்சதந்திரத்தில் இடம் பெற்றுள்ளன.

விஷ்ணுசர்மன் முட்டாள்களுக்குச் சொன்ன அறிவுரையை விட அதில் விரவிக் கிடக்கிற விஷ்ணுசர்மனின் புத்திசாலித்தனமும், சொல்ல வேண்டியதை மிக எளிய முறையில் சிறு சிறு சம்பவங்களாகக் கோர்த்துக் கொடுக்கும் முறையும் பிரமிப் பூட்டுவதாக இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட இவை, இன்றைக்கும் பொருத்தமாக இருப்பதால், இந்த நூல் நம்மை அதிசயத்தோடும் பார்க்க வைக்கிறது.

அரசியல் நிர்வாகம் பற்றிய கருத்துக்கள் இன்றைக்கும் பொருத்தமாக இருக்கின்றன.

அரசனிடம் நடந்து கொள்கிற மாதிரியே அரசனின் தாயார், ராணி, அரச குமாரன், முக்கிய மந்திரி, புரோகிதன், வாயில் காப்போன் ஆகியோரிடம் நடந்து கொள்ள வேண்டும் என்ற பொருள் தரும் இந்த ஸ்லோகத்திலிருந்து, அரசனுக்கு அருகிலிருக்கும் மனிதர்களை அனுசரித்துக் கொண்டு நற்பெயர் எடுத்துவிட்டால், மற்ற கதவுகள் விரைவில் திறக்கும் என்பதையும் அறியமுடிகிறது.

‘குத்தலும், ஏளனமுமாக அரசன் பேசும்போது யார் பதிலுரைப்பதில்லையோ, அவனை அரசன் விரும்புகிறான்’.

‘காலத்தில் பெய்த மழையால் ஒரு விதையிலிருந்து மற்ற விதைகள் முளைப்பது போல, வார்த்தைக்குக் கிடைக்கும் பதிலிலிருந்து மற்ற பேச்சுக்கள் முளைக்கின்றன.’

‘அரசன் விடாமல் சங்கடங்களில் மாட்டிக் கொண்டிருந்தால்தான் மந்திரிகளுக்கு சுகம்’

இது போன்ற ஸ்லோகங்கள் ‘நட்பு அறுத்தல்’ என்ற முதல் தந்திரத்தில் வருகின்றன.

இது போலவே பரவலாக ஐந்து தந்திரங்களிலும் அதற்கேற்றவாறு கதைகளும், அதனுள் மற்றொரு கிளைக் கதையும், என்று பின்னிப் பின்னி கதை சொல்லும் முறை, இன்றைய பின்நவீனத்துவம், மாஜிக்கல் ரியலிஸம் அன்றே கையாளப் பட்டுள்ளது என்பதைத் தெரிவிக்கிறது. இன்றைய அரசியல் கூட்டணிகளும் அக்காலத்தியவையே என்றும் சொவது போல உள்ளன.

அரசர்கள் நாடுகளை விழுங்குகிறார்கள்.

வைத்தியர்கள் நோயாளிகளை விழுங்குகிறார்கள்.

வியாபாரிகள் சரக்கு வாங்குபவர்களை விழுங்குகிறார்கள்.

பண்டிதர்கள் மூடர்களை விழுங்குகிறார்கள்.

 

……………………………….

எல்லோரையும் வேலை விழுங்குகிறது.’

இதுதானே வியாபாரம்?

இதுதானே அரசியல்?

பற்றற்றவன் அதிகார பீடத்தில் அமர மட்டான்.

புத்தியற்றவன் முகஸ்துதி செய்ய மாட்டான்.’

இந்த ஸ்லோகம், சூரியனுக்கும் குடிகாரனுக்குமான சிலேடை.

அரசனுக்கும், அவனுக்குக் கீழே உள்ளவர்களுக்குமான அரசியல் நிர்வாகம்.

அரசனின் அருகில் இருக்க வேண்டியவர்களுக்கான, அரசனின் குண தோஷங்களைக் கண்டு தனது இடத்தை நிர்ணயம் செய்ய வேண்டிய நிர்வாகம்.

கணவன், மனைவிக்கு இடையே ஏற்படும் குழப்பங்கள், அதைச் சீர் செய்யும் நிர்வாகம்.

ஆணுக்குத் தனியாகவும், பெண்ணுக்குத் தனியாகவும் நிர்வாக முறை.

பணத்தை சம்பாதிக்க நிர்வாகம்.

பணத்தை இழந்த பிறகு அடையும் வேதனையிலிருந்து வெளியேற நிர்வாகம்.

கிடைத்த இடத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், தொடரவுமான அரசியல்.

ஒருவன் அடைந்த இடத்திலிருந்து அவனைக் கிளப்பி, அந்த இடத்தைப் பிடிப்பதற்கான அரசியல்,

என்று எதிரெதிர் துருவங்களுக்குமான அரசியல் தந்திரங்களையும் பஞ்சதந்திரத்தில் விலாவாரியாக விஷ்ணுசர்மன், எடுத்தாளப்பட்ட ஸ்லோகங்கள் மூலமும், கதைகள் மூலமும் சொல்லியிருக்கிறார்.

ஆங்காங்கே சிலேடை இருக்கிறது. தூணுக்கும், மந்திரிக்குமான சிலேடை பாம்புக்கும் அரசனுக்குமான சிலேடை, சூரியனுக்கும் குடிகாரனுக்குமான சிலேடை போன்றவை இருக்கின்றன. மூல மொழியில் இருக்கும் இதன்  சிலேடைச் சுவையை அதில்தான் உணர முடியும்.

சம்ஸ்கிருத மொழியில் ஸ்லோகங்கள் கவிதை நடையில் உள்ளன. ஸ்லோகங்கள் எவற்றிலிருந்து எடுத்தாளப்பட்டவை என்பது தெரியவில்லை.

எல்லோரிடமும், எப்போதும் வியந்து சொல்லிக்கொண்டிருக்கும் பஞ்சதந்திரம்  பற்றியும், அதைப் பதிப்பிக்க வேண்டும் என்பது பற்றியும் என் நண்பர் ஹிந்து நடராஜனிடமும் சொன்னேன். அவர் பஞ்சதந்திரத்தை நிர்வாகவியல் கோணத்தில் விளக்கி புத்தகம் எழுதிக் கொண்டிருப்பதாகச் சொல்லிக் குறிப்புக்களைக் காண்பித்தார். தான் இதற்காக எடுத்துக்கொண்ட ஆதர நூலான சக்தி காரியாலயம் பதிப்பித்த அன்ன பூர்ணா ஈஸ்வரனின் மொழிபெயர்ப்பை நல்லி குப்புசாமி செட்டியாரிடமிருந்து வாங்கி ஜெராக்ஸ் எடுத்து பைண்ட் செய்து வைத்திருந்தார். உடனே அவரிடம் என் பதிப்புக்கு ஒரு அணிந்துரை கொடுக்க முடியுமா என்று கேட்டேன். என்னால் நம்பவே முடியவில்லை. இரண்டே நாட்களில் அதை எழுதி கணினியில் பதிவு செய்து அனுப்பியும் விட்டார். அணிந்துரைக்காக காத்திருந்த அனுபவம் உள்ளவர்களுக்கு இது ஒரு மாறுதல்.

பஞ்சதந்திரம் முழுக்க முழுக்க நிர்வாக அரசியல் என்று இந்தப் பதிப்பிற்கு அணிந்துரை கொடுத்துள்ள ஹிந்து ஆர். நடராஜன் சொல்கிறார். அரசியல் நிர்வாகம், நிர்வாக அரசியல் இரண்டும் கலந்த வாழ்க்கை முறை முக்கியமாக சாதாரண மக்களுக்கு என்றில்லாமல் ஆளும் அரசர்களுக்கும், தலைமை ஏற்று நடத்தும் முன் வரிசை மக்களுக்கும் சொல்லப்பட்ட (எல்லாமே எளிய கதைகள் மூலம் கொடுக்கப்பட்ட)  நீதி போதனை என்று நேரடியாக இல்லாமல் கொடுக்கப்பட்ட நூல் இது. வாழ்க்கையின் பாடங்கள் எல்லாம் எளிமையாகவும், நேர்த்தியாகவும்  தெளிவாகவும் சொல்லப்பட்டிருக்கின்றன. மொழிபெயர்ப்பு மிக எளிமையாகவும், மூலத்திற்கு மிக நெருக்கமாகவும் அழகாகவும் உள்ளது. சம்ஸ்கிருத மொழி அறிந்தவர்கள் மிகவும் புகழ்ந்து சொல்லக் கேட்டேன். அன்னபூர்ணா ஈஸ்வரனுக்கு நன்றி.

அரசியல், நிர்வாகம், இவற்றுடன் வாழ்வியலும் நிறைந்த பஞ்சதந்திரம் வெவ்வேறு தளங்களில் ஆராய்ச்சிக்கு இன்னமும் இடம் கொடுக்கிறது.

மேலும் சில விஷயங்களை இந்த முன்னுரையில் கூற வேண்டும். இன்டெர் நெட் பற்றிக் குறிப்பிடாமல், கணினியைப் பற்றிக் குறிப்பிடாமல் எதையுமே சொல்ல முடியாத காலம் இது. ஆங்கிலத்தில் வலைத்தளத்தில் பஞ்சதந்திரம் பற்றிய குறிப்புக் களைக் கண்டு மகிழ்ந்தேன். எத்தனை அழகழகான ஓவியங்கள். அவற்றிலிருந்து சிலவற்றை எடுத்து முகப்போவியமாகவும், பின் அட்டை ஓவியமாகவும் உள்ளே சில கருப்பு வெள்ளைப் படங்களாகவும் கொடுத்திருக்கிறோம்

எல்லாவகையிலும் பிரமிப்பையே கொடுத்த பஞ்சதந்திரம் எனக்கு அதிர்ச்சியையும் தந்தது. வலைதளத்தில் பஞ்சதந்திரம் என்று தமிழில் தட்டினால், கொட்டுவது கலஹாசன் நடித்திருக்கும் பஞ்சதந்திரம் திரைப்படம் மட்டுமே.  இனிமேல் மொழிபெயர்ப்பு பஞ்சதந்திரமும் தமிழில் இடம் பெற வேண்டும். மற்றபடி  ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருதம் என்று எல்லாவற்றிலும் விஷ்ணுசர்மனின் பஞ்சதந்திரம் பற்றிய தகவல்கள் கொட்டுகின்றன. பல்கலைக் கழகங்களில் (காசி போன்ற) இந்நூல் பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவை எத்தனை பிரதிகள் அச்சிடப்பட்டன, எத்தனை பதிப்புக்களைக் கண்டது என, எல்லா விவரங்களும் கிடைக்கின்றன. தமிழ் வலைத்தளமும் பஞ்சதந்திரம் பற்றிய முழுமையான தகவல்களைத் தரவேண்டும் என்பது என் விருப்பம். அச்சில் படிக்க விரும்பும் அனைவருக்கும் இந்நூலின் மறுபதிப்பு மகிழ்ச்சியைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.

சக்தி. வை. கோவிந்தன் கூறியிருப்பது போல சில வாசகங்கள் இக்காலத்திற்கு ஒவ்வாததாக இருக்கிறது. அதைக் கால மாறுதல் என்று எடுத்துக்கொள்ள வேண்டும். இருந்தாலும் சொல்லப்பட்ட காலத்தையும், யார், யாருக்காக எழுதியது என்பதையும் மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது. உள்ளதுஉள்ளபடி பதிப்பிப்பதே பதிப்பாளரின் கடமை. அதையே அவர் செய்தார். 1958 இல் பதிப்பித்த அன்னபூர்ணா ஈஸ்வரின் மொழிபெயர்ப்பு இன்றும் சிறப்பாக இருக்கிறது. தமிழ் மொழிபெயர்ப்புக்கு ஆதரமான பஞ்சதந்திரம்  பூர்ணபத்திரரின் சம்ஸ்கிருத  நூல்.

கணினியும், கைபேசியும் இல்லத தொடர்பு சாதனங்கள் அற்ற அக்காலத்தில் (இக்காலத்தில் கணினியின் அவ்வளவும் வேதவாக்கு என்று புகழ் பாடும் குழு ஒன்று இருக்கிறது.) இது தொடர்பான தகவல்களுக்காக அலைந்து, பாடுபட்டு, தகவல்ளைச் சேகரித்து, ஆதாரங்களுடன் வெளியிட்டிருக்கும் அவர் எவ்வளவு உழைத்திருப்பார்?  அவர் தமிழுக்கு, பதிப்பு உலகுக்குச் செய்த பணி அளவிட முடியாதது. பஞ்சதந்திரம் எந்த எந்த மொழிகளில் அக்காலத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளது என்ற தகவலையும் கொடுத்திருக்கிறார்.

எழுத்துப் பிழைகளே அற்ற, தரமான அச்சில், மலிவு விலையில், நல்ல தாளில், கெட்டி அட்டையில், வெளிவந்த சக்திகாரியாலப் பதிப்பு இன்றையப் பதிப்பாளர் களுக்கு ஒரு முன்னுதாரணம். ஓரிரு நூல்கள் வெளிவந்த உடனேயே  தான் மிகுந்த தமிழ்ச் சேவை செய்து களைப்படைந்து விட்டதாகவும், இந்தத் தமிழ் கூறும் நல்லுலகம் அதற்குத் தகுந்த அங்கீகாரத்தைத் தனக்குக் கொடுக்கவில்லை எனவும், அடுத்தவர்களின் எழுத்துக்கள் வெறும் குப்பை என்றும், பரிசுகள் குவியவில்லை என்றும் புலம்பும் எழுத்தாள, பதிப்பாளர்களிடையே , நம்மிடையே இப்படியும் சிலர் வாழ்ந்து சென்றிருக்கிறார்கள்.

நூலைப் பதிப்பிக்கத் தமிழ் வளர்ச்சித் துறையின் நிதி உதவிக்கு விண்ணப்பித் திருந்தேன். அதைத் தேர்வு செய்து எனக்கு ஊக்கம் அளித்த தமிழ் வளர்ச்சித் துறைக்கு நன்றி. ஐம்பத்து நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் அச்சிடப்பட்ட (1958) பழைய நூல், பழுப்பு நிறத்திற்கு மாறியிருந்த நூல். தொட்டால் பக்கங்கள் பொடிந்து உதிரும் நிலை. அதை தட்டச்சு செய்ய என் தோழி அமுதாவை அணுகிய போது மறுக்காமல், புத்தகத்திற்கு சேதாரம் விளைவிக்காமல் சரியான நேரத்திற்கு தட்டச்சு செய்து தந்தார். அமுதாவுக்கு நன்றி.

நூலாவதற்கு முன்பு பஞ்சந்திரம் பலரைச் சென்றடைந்தால் நன்றாக இருக்குமே என்று ‘திண்ணை’ இணைய இதழாசிரியர், நண்பர் ராஜாராமனை அணுகிய போது, தொடராகப்போட சம்மதித்துத் தொடராக இன்னமும் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். அவருக்கும் நன்றி.

பொருளிட்டுவதற்காக இதை மறுபதிப்பு செய்யவில்லை. தமிழில் தரமான நூல்கள் வெளியிட்டு லாபம் அடைந்ததாக வை.கோவிந்தன் காலத்திலும், தற்காலத்திலும் யாரும் உதாரணத்திற்குக் கூடக் கிடைக்க மாட்டார்கள். நூலக ஆணை இருந்தால்தான், நூல்கள் அடுத்தடுத்து வெளியிட பணமும், குடும்பத்தில் அனுமதியும், குழந்தைகளிடம் மரியாதையும் கிடைக்கும்.

சக்தி வை.கோவிந்தன் நூற்றாண்டில் இதை மறுபதிப்பு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

நன்றி.

க்ருஷாங்கினி

அக்டோபர் 2012.

 

சென்னை-47.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

2013 சென்னைப் புத்தக காட்சியில் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ள புத்தகங்கள்

download2013 ஆம் ஆண்டிற்கான புத்தக கண்காட்சி சென்னையில் ஜனவரி 11 இல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. வழக்கமான உற்சாகத்துடன் புத்தகங்களைத் தயாரிக்கிற பணிகளைப் பதிப்பாளர்கள் பரபரப்பாகச் செய்துகொண்டிருக்கிறார்கள். வழமைபோலவே சில புத்தகங்கள் அவசர அவசரமாக தாயராகிக் கொண்டும் ,வெளியிட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். இவ்வளவு பரபரப்புகளுக்கும் மத்தியில் சில நல்ல புத்தகங்கள் வந்த சுவடே தெரியாமல் போய் விடுகின்றன.

இந்த புத்தக கண்காட்சிக்கு வந்துள்ள அல்லது வரவுள்ள சில நல்ல புத்தகங்களை வாசகர்களுக்கு அடையாளம் காட்டும் விதமாக இங்கே ஒரு பட்டியல் வெளியிடலாம் என திட்டம்.

இதில் சில புத்தகங்கள் என் எதிர்பார்ப்பைவிட சிறப்பாக இருக்கலாம் அல்லது சுமாராக இருக்கலாம்,. ஆனால் மோசமாக இருக்காது என நினைக்கிறேன்.

 

நாவல்கள்

 

த  கோணங்கி அடையாளம் பதிப்பகம்

ஆளண்டாப் பட்சி பெருமாள் முருகன் காலச்சுவடு பதிப்பகம்

காலகண்டம் எஸ்.செந்தில்குமார் உயிர்மை பதிப்பகம்

குன்னிமுத்து குமாரசெல்வா  காலச்சுவடு பதிப்பகம்

கிருஷ்ணப்பநாயக்கர் கௌமுதி நாகரத்தினம் கிருஷ்ணா சந்தியா பதிப்பகம்

முஸல்பனி தமிழவன் அடையாளம் பதிப்பகம்

 

சிறுகதைகள்

மச்சம் லக்ஷ்மி சரவணக்குமார் உயிர் எழுத்து பதிப்பகம்

சாபம் சல்மா காலச்சுவடு பதிப்பகம்

நானும் ஒருவன் சுரேஷ்குமார இந்திரஜித் காலச்சுவடு பதிப்பகம்

பெயரற்றது  சயந்தன் தமிழினி பதிப்பகம்

சம்பத் சிறுகதைகள் விருட்சம் பதிப்பகம் ( மறு பிரசுரம்)

என்.எச் 47 திருச்சி  அவிநாசி சாலை இளஞ்சேரல் கோவை

கவிதைகள்

என் பெயர் ஜிப்சி நக்கீரன் கொம்பு பதிப்பகம்

மெசியாவுக்கு மூன்று மச்சங்கள் கதிர்பாரதி புது எழுத்து பதிப்பகம்

நான் ஆத்மாநாம் பேசுகிறேன் ராணிதிலக் காலச்சுவடு பதிப்பகம்

நான்காவது சிங்கம் செல்வராஜ் ஜெகதீசன் காலச்சுவடு பதிப்பகம்

மீன்கள் துள்ளும் நடு நிசி நிலா ரசிகன் புது எழுத்து பதிப்பகம்

என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக் குருவி வா.மணிகண்டன் காலச்சுவடு பதிப்பகம்

மதுவாகினி ந.பெரியசாமி  அகநாழிகை பதிப்பகம்

 

 

மொழிபெயர்ப்பு நாவல்

பட்டு தமிழில் சுகுமாரான் காலச்சுவடு பதிப்பகம்

வழிப்பறிக் கொள்ளைக்காரன் சந்தியா பதிப்பகம்

டான்குவிக்ஸோட்டு சந்தியா பதிப்பகம்

லைப் ஆப் பை யான் மார்ட்டல் எதிர் பதிப்பகம்

நள்ளிரவின் பிள்ளைகள் சல்மான் ருஷ்டி எதிர் பதிப்பகம்

நேம் ஆப் தி ரோஸ் உம்பர்டோ ஈக்கோ எதிர் பதிப்பகம்

நுற்றாண்டு தனிமை போர்ஹே காலச்சுவடு பதிப்பகம் ( முன் வெளியீட்டு திட்டம்/ மார்ச் 2013)

இது ஒரு முழுமையான பட்டியல் அல்ல, பட்டியல் தொடரும்

 

 

 

 

 

 

மலைகள் இணைய இதழ் பற்றிய அறிவிப்பு

வணக்கம்

நண்பர்களே

மலைகள் இணைய இதழ்

தன்னுடைய 18 ஆவது இதழிலிருந்து ஒரு டாட் காமாகத் தனித்து இயங்கத் தொடங்கியிருக்கிறது.

இலக்கிய படைப்பாளிகள் மற்றும் வாசகர்களின் ஒத்துழைப்பில்லாமல் இது சாத்தியமில்லை.

தொடர்ந்து மலைகள் இதழுக்கு உங்களுடைய ஒத்துழைப்பாக நான் எதிர்பார்ப்பது

உங்களுடைய சிறந்த சிறுகதைகள்,கவிதைகள்,கட்டுரைகள்,மொழிபெயர்ப்புகள்,இசை பற்றிய கட்டுரைகள்,இலக்கிய நிகழ்வுகள் பற்றிய அறிவிப்புகள் போன்றவற்றை அனுப்புங்கள்

மலைகள் தொடர்ந்து உற்சாகமாக இயங்க உங்களடைய சிறந்த விமர்சன கருத்துகளையும் எழுதி அனுப்புங்கள். குறைகள் இருப்பின் சொன்னால் அவற்றை சரி செய்துகொண்டு மேலும் இதழை செழுமையாக்கலாம்.

ஆக்கபூர்வமான பணிகளுக்கு உங்களுடைய எல்லாவகையான ஒத்துழைப்புகளையும் நல்குங்குள்

தொடர்புகளுக்கு

 

சிபிச்செல்வன்

மலைகள்.காம்

இணைய இதழ் ஆசிரியர்

0892 555 44 67

sibichelvan@gmail.com

 

 

இஸ்லாமும் உளவியல் பகுப்பாய்வும் ஹெச்.ஜி.ரசூல்

download (6)

துனீசிய சிந்தனையாளர் பெதி பென்ஸ்லாமா தனது கப்ரிலா எம். கெல்லர் உடனான நேர்முகத்தில் இஸ்லாமிய உலகமும், உளவியல் பகுப்பாய்வு உலகமும் ஒன்றையொன்று விலக்கி வைத்துள்ளன என்பதாக குறிப்பிடுகிறார்.

கீழைதேய நாட்டினருக்கு சிந்தனை முறையில் உளவியல் பகுப்பாய்வு பெரியஅளவில் நிகழ்ந்திருக்கவில்லை. உளவியல் கல்வி என்பதையே அரபுநாடுகளின் பல்கலைக் கழகங்களிலும் பாடமாக வைக்கப்படவில்லை. முஸ்லிம் உலகம் உளவியல் பகுப்பாய்வை நிராகரிக்கிறது. இதற்கான காரணத்தை பென்ஸ்லாமா முன்வைக்கிறார்.

முதன்முதலில் விஞ்ஞான அடிப்படைகளைக் கொண்ட உளவியல் பகுப்பாய்வை கண்டுபிடித்து முன்வைத்தவர் சிக் மண்டு பிராய்டு. இவர் ஒரு யூதர் எனவே முஸ்லிம் உலகம் உளவியல் பகுப்பாய்வை முரண்பாட்டின் காரணமாகவும் அரபுலகம் யூத கோட்பாடுகள் அனைத்தையும் நிராகரிப்பு செய்கின்றன. உளவியல் பகுப்பாய்வு யூதம், இஸ்லாம் என அனைத்து சமயங்களையும் கேள்விக்கு உட்படுத்துகின்றன. உளவியல் பகுப்பாய்வை இஸ்லாம் நிராகரிப்பதற்கு இது இரண்டாவது காரணமாகும். மேலும் பல முஸ்லிம்கள் உளவியல் பகுப்பாய்வு கடவுள் மறுப்பை வெளிப்படுத்துவதாக எண்ணுகிறார்கள்.

மேற்கத்திய நாடுகளிலிருந்து கீழை நாடுகளின் மனநோய் பெரிதும் வேறுபடுகின்றது. ஒரு ஆளுமைக் கோட்பாடாக மனநோய்க்கு ஜின்களே காரணம் என்பது இஸ்லாத்தில் நம்பப்டுகிறது. எனவேஉளவியல் மருத்துவ சிகிச்சைக்கு பாதிக்கப்படுபவர்களை அழைத்துச் செல்வதில்லை. மாறாக இமாம்களிடத்தில் மந்திர சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இது ஒரு வழக்கமான சிகிச்சை முறையாக உள்ளது. மனநோயை ஒரு மருத்துவப் பிரச்சினையாகக் கருதாமல் அதிஇயற்கை நிகழ்வாக கருதுவதே இதற்குகாரணம். ஒரு மருத்துவரால் மட்டுமே மன அழுத்தக் குறைவுக்கு உரிய சிகிச்சை அளிக்கமுடியும்.

பிராயிடின் ஆய்வில் சமயம் ஒரு முக்கிய அம்சமாக உள்ளது. எனினும் இஸ்லாத்தை அவரது ஆய்வு வெகுவாக பாதிக்கவிக்கவில்லை. கிறிஸ்தவ, யூத சமயங்களுக்கு மாற்றாக ஒரிறைவாத சமயமாக இஸ்லாம் திகழ்வதே இதற்கான காரணமாகும்.

பிராயிடு சமய நம்பிக்கையை ஒரு கற்பிதம், கட்டமைக்கப்பட்டது என்கிறார். இந்த கட்டமைப்பு முற்றிலுமான நம்பிக்கை இழத்தலுக்கு பதிலாக உள்ளது. சமயம் நம்பிக்கை இழத்தலுக்கு மாறாக ஆறுதலையும், விடுதலையையும் வழங்குகிறது. கைவிடப்பட்ட நிலையிலிருந்து மீட்சியை உருவாக்கவும் அது முயல்கிறது என்கிறார்.

கடவுள் என்பது லட்சியப்படுத்தப்பட்ட தந்தையின் உருவம். அதுவே எதிர்பார்க்கப்படும் பாதுகாப்பையும், பாவங்களிலிருந்து விடுதலையையும் அளிக்கிறது எனவே தான் யூதர்கள் கடவுளைத் தந்தையாகவும், கிறிஸ்துவத்தில் கடவுளின் குமாரராகவும் கருதுகிறது. இதிலிருந்து இஸ்லாம் வேறுபடுகிறது. கடவுளுக்கும் தந்தையின் உருவத்திற்குமான தொடர்பை குரானில் எங்கும் காணமுடியாது. கடவுளை யாரும் பெற்றதுமில்லை, கடவுள் யாரையும் பெற்றதுமில்லை என்பதான கோட்பாட்டையே குர்ஆன் கூறுகிறது. கடவுளின் மனிதப் பிறப்புக்கு எந்தவித நேரடி தொடர்பும் கிடையாது. பிராயிடின் கருத்தாக்கத்திலிருந்து இஸ்லாம் வேறுபடும் இடமே இது (எனினும் அல்லாவை மனிதமைப்படுத்தும் விதமாகவே அளவற்ற அருளாளன், நிகரற்ற அன்புடையோன் என்பது போன்ற பல சொல்லாடல்களும், அல்லா ஆதமை படைத்து அதில் தன் உயிரை ஊதினான் என்பதுவும் குர்ஆனில் இடம் பெறும் ஹுவ என்ற சொல் அல்லாவை ஆண் தன்மையோடு அர்த்தப்படுத்துவதாகவும் மாற்று கருத்தோட்டங்களை சில இஸ்லாமிய அறிஞர்கள் முன்வைப்பதையும் இங்கே கவனப்படுத்த வேண்டியுள்ளது.)

இஸ்லாம் கோட்பாட்டு ரீதியாக மனித குலத்தின் உளவியல் தேவைகளோடு இயைந்து செயல்படுகிறது. குழந்தைத் தனமான தேவைகளிலிருந்து மக்கள் தங்களை விடுவித்து கொள்ளவும் செய்கிறது. ஒவ்வொரு குழந்தையும் குறிப்பாக ஒரு முஸ்லிம்குழந்தை தனது தந்தையையே கடவுளாக கருதுகிறது. ஆனால் இஸ்லாம் குழந்தையின் கடவுள்பற்றிய கருத்தை மறுக்கிறது. அரூபமாக புலன்களால் அறிய முடியாத கருத்துருவம் சார்ந்ததாக மாறுகிறது. மனித குலத்திலிருந்து கடவுள் விலக்கப்பட்டுவிடுகிறது. ஏனெனில் மனித இனத்தின் அடையாளத்தோடு ஒப்பிட முடிவதை நினைத்துப்பார்க்கவே முடியாது.

மிக தூரமான, அரூபமான கடவுள் இந்த பூமியில் தங்களின் தயவுக்கு ஏற்ப விடுதலையை வழங்குகிறது. இந்த விடுதலை ஒருவகையில் முழுமையாக தன்னிச்சையானதாகவும், மறுவகையில் மனித இனத்திற்கான அன்பையும், கருணையையும் வழங்கும் பொறுப்பினைக் கொண்டதாகவும் உள்ளது.

இந்த முதன்மைக் கருத்தே மரபுரீதியாக இஸ்லாத்தின் பிரதான கருத்தாகவும், இதுவே சமய அர்த்தப்படுத்துதல்களை வெளிப்படுத்தவும் வழிவகுக்கிறது. மாதிரியாக சமயத்திற்காக துறவுத்தன்மை மேற்கொள்வதையோ, நம்பிக்கையாளர்களை இவ்வுலக ஆசா பாசங்களிலிருந்து அந்நியப்படுத்தவோ இஸ்லாம் வற்புறுத்தவில்லை.

இரண்டாவது வகையில் அப்பாலைக் கடவுள் கொள்கை முஸ்லிம் உலக கண்ணோட்டத்தை பெரிதாக ஒன்று பாதிப்படையச் செய்வதில்லை. ஐரோப்பாவில் அடிக்கடி சொல்லப்படுவது கடவுளின் இறப்பு பற்றியே ஆகும். நீட்சே இதனை கிறிஸ்துவ பின்புலத்தில் வலியுறுத்துவார். கடவுளை மனிதமைப்படுத்துப்படுவதை இஸ்லாம் மறுக்கும் போது, கடவுள் வரலாற்றின் பகுதியாக மாறாத பொழுது கடவுள் எப்படி இறக்க முடியும். எனவே எங்கும் நிறைந்துள்ள மனித அன்பு மட்டும் இவ்வுலகின் அடிப்படையாக இல்லாமல், ஒவ்வொரு அசைவையும் கடவுள் கவனித்துக் கொண்டிருக்கிறான் என்பதே முஸ்லிம் உலகின் பிரதான கருத்தாக்கமாகும்.

எண்பதுகளின் துவக்கத்திலிருந்தே முஸ்லிம் உலகம் அதன் அடித்தளத்தையே அசையச்செய்யும் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டது. மரபுக்கும், நவீனமயமாதலுக்குமான இடைவெளியாகவே இது உருவாகியிருந்தது.

மரபு வழி சிந்தனையாளார்கள் புதிதாக எந்தவித விளக்கத்தையும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. இப்பிரச்சினையை சமரசப்படுத்தவும்கூட யாரும் முன்வரவும் இல்லை. அரபுநாடுகளில் ஜனநாயக சுதந்திரம் மறுக்கப்பட்டதும் இதற்கு காரணமாகும். அறிவுத்துறையினர் தலையிடமுடியாததும், சுதந்திரமான கருத்துரிமை மறுக்கப்பட்டதும் இதனிடையே இணைவுநிலை உருவாகாமைக்கு காரணமாகும். இந்த இடைவெளியே பெருத்த வேதனைகளை அனுபவமாக்கியது. இது பெரிய எதிர்பார்ப்புகளையும் சமயப்பழமைக்கு திரும்பினார்கள். தங்கள் கேள்விகளுக்கான பதில்களை அங்கு தேடினார்கள் இந்த சமயத்திற்கு திரும்புதலே நவீனமான உலகத்துடன் முரண்பாட்டிற்கான தற்காப்பு பதிலாக அமைந்தது. இந்த நிலையற்ற தன்மையே அடிப்படைவாதத்தின் பூர்வீகத்தை நோக்கிய தேடலின் விருப்பமாகவும் மாறியது. நவீனமயத்திலிருந்து தப்பித்தலாகவும் வெளிப்பட்டது.

நவீனமயம் முஸ்லிம்களை சமய எல்லைகளிலிருந்து மீறிச் செல்ல ஊக்குவிக்கிறது என்பதான கருத்தும் உண்டு. மாதிரியாக மிகக் குறைவான அளவு உடையணிந்த பெண்கள் தொலைக்காட்சியில் காண நேரிடுகிறது. இது தங்கள் சமயம் காலங்காலமாக பரிந்துரைத்த உடைவிதிகளுக்கு மாறாக இருக்கிறது என்பதான வெளிப்பாட்டுணர்வைத் தோற்றுவிக்கிறது. நம்பிக்கையாளர்கள், தாங்கள் தடுக்கப்பட்டவற்றை நடைமுறைப்படுத்துவதாக எண்ணுகிறார்கள். இந்த வகை குற்ற உணர்ச்சியின் சுமையால் அழுத்தப்பட்டு அது வலுவாக வளர்கிறது.

பிராய்டு சமயத்தை சமூகவாழ்வுக்கான முக்கியமான அடித்தளமாக கருதுகிறார். ஏனெனில் உணர்வுகளை கட்டுப்படுத்தி மக்களின் பொறுப்புணர்ச்சியை சமயம் ஆட்சிப்படுத்துகிறது.

இவ்வாறாக சமயம் ஒரு சமூகத்தின் இயக்கும் சக்தியாக மாறுகிறது தவறுசெய்தலுக்கான குற்ற உணர்ச்சியை தியாகப்படுத்துதலின் மூலம் சாதகமானதாக முயற்சிக்கிறது.

ஒரு பெண் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக்கப்படுவதினாலேயே தனது உடல் பாலியல் கவர்ச்சியை உருவாக்குவதாக இருக்கிறது என்கிற எண்ணத்தில் அவள் தனது உடலை திரையிட்டு மறைக்கிறாள். இதன் மூலமாக தனது உடல் ஆசைக்குரிய பொருள் என்பதிலிருந்து

விடுவித்துக் கொள்கிறாள். இதன் தீவிரமான மற்றொரு மாதிரி என்பதே வெடிகுண்டை கட்டிக் கொண்டு சாகும் தற்கொலைப்படை போராளிதன் வாழ்க்கையையே தியாகப்படுத்துதைக் கூறலாம்.

முதன்மை பிரதி :

Tunisian scholar Fethi Benslama,Islam and psychoanalysis,A Tale of mutual Ignorance.

Qantara. de E magazine.

கண்டராதித்தன் கவிதை

download (4)

 

கொடுங்கால் ரத்தக்காட்டேரியுடன்

நெடுநாள் பழக்கம் எனக்கு

சாமப் பூசைகளுக்கு தூபக்கால்  திருடித் தந்து

அதனுடன் சம்சார சினேகம்

பதிலுக்கு சேவல் பாடி,

தேங்காய் மூடிகளென உபசரிப்பும் அதம் பறக்கும்

எழுத்தூர் கபாலச்சாமிக்கு என்மேல்

வருத்தமென்று எனக்குத் தெரியாது

எக்சர்சைஸ் எடுபிடிகளைவைத்து என்னை

வெட்ட முடிவு செய்தார்

வெட்டுக்குத்து ரத்தமெல்லாம் நமக்கு

சகஜம்போல் பிடிபிடித்தேன்

நாலாம் நாள் நள்ளிரவின்  நடுச்சாமம்

கட்ட இது நல்ல நேரம் யாரைக்கட்ட என்றது                                                      

வைத்தவினை செய்வினையாகட்டும்

நீலி சூரியின் மாயை ஓய்ந்து போகட்டும்

இவர்களைக் கட்டு நீ என்றதும்

திகைத்த காட்டேரி கட்ட மறுத்தது.

எட்டி ஒட்டுக் கேட்டு

பெட்டிப்படுக்கைகளை

கட்டிமுடித்த கபாலச்சாமி

இருகூர்வரை நீட்டி விட்டார்

ஒரு கொட்டாவி.

( இசைக்கும்,இளங்கோ கிருஷ்ணனுக்கும்)

நூல்கள் வெளியீட்டு விழா

   

* திருப்பூர் படைப்பாளிகளின்  தொகுப்பு

“ பனியன் நகரம்“ 2013

 * சுப்ரபாரதிமணியனின் “ மாலு “ புது நாவல்

 

27/1/2013 ஞாயிறுகாலை 12.30 மணி* டி ஆர் ஜி ஹோட்டல், பல்லடம் சாலை, * தலைமை:     அரிமா கேபிகே செல்வராஜ்

* முன்னிலை: நேசனல் அருணாசலம்,டாப்லைட் வேலுசாமி,

சி.சுப்ரமணியன், சுதாமா  கோபாலகிருஷ்ணன்

சிறப்புரை:

கலாப்ரியா, வண்ணதாசன், ஞாநி, செல்வி,  சுப்ரபாரதிமணியன், சாமக்கோடாங்கி .ரவி,

            வருக என வரவேற்கும் திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம்

 

சுப்ரபாரதிமணியன் – மாலு (  நாவல் )     : ( உயிர்மை, ரூ 80)

திருப்பூர் படைப்பாளிகளின் 2013ம் ஆண்டுத் தொகுப்பு “ பனியன் நகரம் “ ,

( கனவு , ரூ 75)  * விழாவில் சலுகை விலையில் கிடைக்கும் ,

திருப்பூர் புத்தகக் கண்காட்சியின் ( ஜனவரி 25 –பிப்ரவரி 3 ) முக்கிய அரங்குகளில் கிடைக்கும்.( கனவு, 8/2635 பாண்டியன் நகர், திருப்பூர் 641 602 * 9486101003 )

முன்னதாக திருப்பூர் ஜோதிஜியின் “ டாலர் நகரம் “ நூல் வெளியீடு:விலை ரூ 200

திருப்பூர் அரிமா விருதுகள் 2013

திருப்பூர்  மத்திய அரிமா சங்கம்

 

 

திருப்பூர் அரிமா விருதுகள் 2013

      *    ரூ 25,000 பரிசு

 

ஆண்டுதோறும் சிறந்த குறும்பட விருது, பெண் எழுத்தாளர்களுக்கான ”சக்தி விருது” ஆகியவற்றை வழங்கி வருகிறது. கடந்த 2 ஆண்டுகளில் வெளிவந்த குறும்படங்கள், ஆவணப்படங்கள், பெண் எழுத்தாளர்களின் நூல்கள், திரைப்படம், குறும்படம் குறித்த புத்தகங்களை இரு பிரதிகள் அனுப்பலாம்.கடைசி தேதி ஏபரல் 15,2013 :

 

முகவரி: ( தலைவர், மத்திய அரிமா சங்கம், 38 ஸ்டேட் பாங்க் காலனி, காந்திநகர், திருப்பூர் 641 601 * 9443559215 * )

 

 

கொதிப்பு மோ யான் ஆங்கிலம் : ஹோவார்ட் கோல்டுபிளாட் தமிழாக்கம் : ச.ஆறுமுகம்.

download (1)

download

( மோ யான் சீனாவின் காவ்மி  பகுதியில் 1956ல் பிறந்தவர். 2012 ம் ஆண்டின் இலக்கியத்திற்கான  நோபல் பரிசினை வென்றவர். இக்கதை அவரது `ஷிஃபு,  ஒரு சிரிப்புக்காக நீ  எதை வேண்டுமானாலும் செய்வாய்` என்ற சிறுகதைத் தொகுப்பிலுள்ளது.)

பூமிக்கும் இறைவானத்துக்கும் வணக்கம் செலுத்தியபின், ஹாங்க்சீக்கு ஆவலை அடக்கமுடியவில்லை. கரிய நிறங்கொண்ட அவன் ஒரு தாட்டியான மனிதன். அவனது மணப்பெண்ணின் முகம் திரையிட்டு மறைக்கப்பட்டுள்ளது; ஆனால், அவளுடைய வடிவமைந்த, நீண்ட கைகளும், வில்லோ மர வழவழப்பில் இடுப்பும்,   வடக்கு ஜியாவ்சூ நகருக்குள் அவள்தான் அழகான பெண்களிலேயே மிக அழகானவள் எனச் சொல்லிக்கொண்டிருந்தன. நாற்பது வயதில் மோசமான பெரியம்மைத் தழும்பு முகத்துடன் ஹாங்க்சீ வடகிழக்கு காவ்மி நகரில் எல்லோரும் நன்கறிந்த பிரம்மச்சாரிகளில் ஒருவனாக இருந்தான். அவனுடைய வயதான தாய் அவனுக்கு யான்யானைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருந்தாள். பதிலாக, வடகிழக்கு காவ்மியின் உண்மையான அழகுப்பெண்களில் ஒருத்தியான அவன் தங்கை யாங்குவா, யான்யானின் மூத்த அண்ணனான ஒரு ஊமையைத் திருமணம் செய்யவேண்டும். தங்கையின் தியாகத்தால் நெகிழ்ந்து,  அவள் ஒரு ஊமைக்குக் குழந்தைகள் பெற்றுத்தர வேண்டுமேயெனக் குழப்பமான உணர்வுகள் மத்தியில், ஹாங்க்சீ மணப்பெண் மீதும் சிறிது பகையுணர்வு கொண்டான். ‘’டேய், ஊமையா, நீ மட்டும் என் தங்கையைச் சரியாக வைத்துக்கொள்ளவில்லையென்றால், நான் உன் தங்கையைப் பதம் பார்த்துவிடுவேன்.’’

 

 

மணப்பந்தலுக்குள் புதுப்பெண் நுழையும்போது நடுமதியம்  ஆகிவிட்டது. செங்கல் மேடையின் விளிம்பில் அமரும் மணப்பெண்ணை, `ஆ` வென யாரும் வாய்பிளந்து பார்த்துவிடக்கூடாதென வைக்கப்பட்டிருந்த இளஞ்சிவப்பு மறைப்புத் தட்டியில் குறும்புக்காரச் சிறுவர்கள் துளையிட்டு நிறைய ஓட்டைகளைச் செய்திருந்தனர். பக்கத்து வீட்டுக்காரி ஒருத்தி ஹாங்க்சீயின் தோளைத் தட்டி,’’ ஹேய், அம்மைத் தழும்பா, நீ, யோகக்காரன்தான்! உனக்குக் கிடைத்திருப்பது ஒரு சின்னத் தாமரை இளமொட்டு. அதனால், பார்த்துப் பதனமாக, வைத்துக்கொள்.’’ எனக் கிளுகிளுத்தாள். ஹாங்க்சீ அவனது காற்சட்டையைத் இழுத்துவிட்டுக்கொண்டு பல்லை இளித்தான். அவன் முகத்திலிருந்த தழும்புகள் சிவப்பாகத் தெரிந்தன.

 

 

சூரியன் வானத்தில் அசையாமல் நின்றிருந்தான். இரவாகட்டுமென ஹாங்க்சீ, முற்றத்தில் முன்னும் பின்னுமாக நடைபோட்டுக் கொண்டிருந்தான். அவன் அம்மா தடியை ஊன்றிக்கொண்டு, கூனிக்கூனி நடந்து வந்தவள், ‘’க்சீ, ஏதோ ஒன்று, எனக்குள் பயமாகவேயிருக்கிறது. என் மருமகள் ஓடிவிடாமல் பார்த்துக்கொள், கவனமாக இரு.’’ என்றாள். ‘’கவலைப்படாதே, அம்மா. யாங்குவா அங்கிருக்கும்போது, இது எங்கும் ஓடிவிடாது. இரண்டும் ஒரே நூலில் கட்டப்பட்ட வெட்டுக்கிளிகள். ஒன்றை விட்டுவிட்டு இன்னொன்று போய்விடமுடியாது.’’

 

 

அம்மாவும் மகனும் பேசிக்கொண்டிருக்கும்போது, புது மருமகள்  மணமேடைத்தோழிகள் இருவரோடு முற்றத்துக்குள் வந்தாள். ஹாங்க் சீயின் அம்மா மறுப்புக்குரலில், ‘’ஒரு புதுப்பெண் இருட்டு முன்பே மேடையை விட்டு எழுந்து கொல்லைப்புறம் போவதை, யாராவது கேள்விப்பட்டிருக்கிறார்களா? இது ஒன்றே போதும், இந்தக் கலியாணம் நிலைக்காது. அவள் ஏதோ செய்யப்போகிறாள், அப்படித்தான் நினைக்கிறேன்.’’ எனக் கிசுகிசுத்தாள். ஆனால், ஹாங்க்சீ, அம்மாவின் கவலையை ஒரு பொருட்டாகவேக் கருதவில்லை. மனைவியின் அழகில் சொக்கிப் போயிருந்தான், அவன். அவளுக்கு நீள முகம், அழகான புருவங்கள், சற்றுத் தூக்கலான மூக்கு, பீனிக்ஸ் பறவையைப் போலச் சாய்வான கண்கள். ஹாங்க்சீயின் முகத்தைப் பார்த்ததும், அவள் சிறிது நின்றாள்; அமைதியாக நீண்ட ஒரு கணத்தில் கிறீச்சென்று கத்தி, ஓட்டம் பிடித்தாள். மணமேடைத் தோழிகள் அவளைப் பற்றிப்பிடித்து இழுத்ததில், அவளுடைய சிவப்பு கவுன் கிழிந்து, உள்ளாடையாக அணிந்திருந்த சிவப்புக் கமிசோலின் முன்புறமும், ஒடுங்கிய கழுத்தும் பனிவெண்கைகளும் வெளித்தெரிந்தன. ஹாங்க் சீ அதிர்ந்துவிட்டான். அவனது அம்மா, கைத்தடியால் அவன் தலையிலேயே அடித்தாள்.   ‘’முட்டாள் பயலே, ஓடு, அவள் பின்னாலேயே ஓடுடா!’’ என்று கத்தினாள். அது அவனை அதிர்ச்சியிலிருந்தும் மீட்டது. அவன் அவளைப் பிடிக்க ஓடினான். யான்யானின் தலைமுடி அவிழ்ந்து பறவையின் வாலாகப் பரந்து விரிந்து நீண்டது. அவள் தெருவில் பறந்துகொண்டிருந்தாள்.

 

 

‘’அவளைப் பிடியுங்கள்!’’ ‘’அவளைப் பிடியுங்கள்!’’ என ஹாங்க்சீ கத்திக் கூச்சலிட்டான். அவன் கூச்சலில், வீடுகளுக்குள்ளிருந்த கிராமம் தேனீக்களாகத் தெருவில் மொய்த்துக் கூடியது. அதோடு, கடும் மூர்க்கமான, பத்துப் பன்னிரண்டு பெரிய, பெரிய நாய்கள் விடாப்பிடியாகக் குரைக்கத் தொடங்கின.

 

 

யான்யான் ஒரு சந்தில்  திரும்பினாள்; தெற்காகக் கோதுமைத் தாள்கள் காற்றில் சரிந்து, அவற்றின் கதிர்கள் பச்சைக் கடலில் அலைகளென அசைந்துகொண்டிருந்த வயல்களுக்கு ஓடினாள். இடுப்பளவுக் கோதுமைப் பயிரலைகளுக்குள்,  பசுமைக்கு முரணாகச் சிவப்பு உள்ளாடையும் பால்வண்ணக் கைகளுமாக அவள் வேகவேகமாக, ஒரு அழகான ஓவியம் உயிர்பெற்றோடுவது போல ஓடிக்கொண்டிருந்தாள்.

 

 

ஒரு புதுமணப்பெண் திருமணத்திலிருந்தும் ஓடுவதென்பது வடகிழக்கு காவ்மி நகரத்துக்கே அவமானம். அதனால் கிராமம் முழுவதும் பழியுணர்வோடு அவளைப் பிடிக்க எல்லாத் திசைகளிலும்  சூழ்ந்து துரத்தியது. நாய்களும் கூடவே துள்ளி விழுந்து பசும் அலைகளுக்குள் வளையம் கட்டின.

 

 

மனித வலை நெருங்க,நெருங்க யான்யான் கோதுமை அலைகளுக்குள் தலைகுப்புறப் பாய்ந்தாள்.

 

 

ஹாங்க்சீ  நிம்மதிப் பெருமூச்சு விட்டான். துரத்தியவர்கள் வேகம் குறைத்து, மேலும் கீழுமாக இளைத்தனர்; ஒருவரோடொருவர் கைகளைக்கோர்த்து, மீன் பிடிப்பவர்கள் வலையைச் சிறு வட்டமாகக் குறுக்குவது போலக் கவனமாக அடியெடுத்து முன் நகர்ந்தனர்.

ஹாங்க்சீக்குக் கோபம் தலைக்கேறியது. ஆனாலும், ‘’அவள் மட்டும்  கையில் கிடைக்கட்டும், அப்புறம் பாருங்கள், நான் கொடுக்கப்போகிற அடி, உதைகளை’’ என்று மட்டுமே நினைக்க முடிந்தது.

 

 

திடீரெனக் கோதுமை வயலுக்குள்ளிருந்து ஒரு சிவப்பு ஒளிக்கற்றை மேல்நோக்கி எழுந்ததும், கூட்டம்  திகைத்துக் குப்புற விழுந்தது. அந்த வட்டத்துக்குள்ளிருந்து, கைகளைச் சிறகசைத்து, இரு கால்களையும் ஒருசேர இணைத்து, ஒரு பிரமாண்ட வண்ணத்துப் பூச்சியைப்போலக் காற்றில், யான்யான் அழகாக மேலெழுவதை அவர்கள் கண்டனர்.

 

 

அவள் கைகளை அசைத்து, அசைத்து, அவர்களின் தலைக்கு மேல் வட்டமிட்டுப் பின்னர், பறக்கத் தொடங்கியதைக் கண்டதும், அவர்கள் களிமண் பொம்மைகளாக உறைந்துவிட்டனர். அவர்கள், அவளைத் தொடர்ந்து ஓடியிருந்தால் அவளின் நிழல் மீது கால்வைத்துச் செல்லுகிற மாதிரியில் அவள் மெதுவாகத்தான் பறந்தாள். அவர்களின் தலைக்கு மேலாக ஆறு அல்லது ஏழு மீட்டர் உயரத்தில்தான், ஆனால், அழகாக, அப்படியொரு அற்புத அழகோடு அவள் பறந்துகொண்டிருந்தாள். வடகிழக்கு காவ்மி நகரில் நடக்கும் எல்லாப் புதுமையும் போல இதுவுமொன்று என நீங்கள் நினைக்கலாம். ஆனால், அங்கும்கூட ஒரு பெண் வானத்தில் பறப்பதென்பது இதுதான் முதல்முறை.

அதிர்ச்சி ஒருவாறு நீங்கியதும், அவளைப்பிடிக்கும் முயற்சியை அவர்கள் மீண்டும் தொடங்கினர். அவள் நிழலின் பின்னாலேயே துரத்திச் சென்று, அவள் தரையிறங்கும்போது, பிடித்துவிடலாமென, சிலர் வீடுகளுக்கு ஓடி, மிதிவண்டிகளுடன் திரும்பிவந்தனர். வயல்களெங்குமாக மக்களின் கூச்சல் நடுவே, பறக்கும் அவளும் கீழே நின்றவர்களுமாக அவரவர் முயற்சியில் பெரும் நாடகம் நடிப்பது போலிருந்தது.

ஊர்மக்களோடு, வழிநடைப்பயணிகளும்  வானத்தில் நடந்த அந்தப் புதுமையான நிகழ்ச்சியைக்  காணக் கொக்குகளைப்போலக் கழுத்தைத் தூக்கி அண்ணாந்து  நின்றனர். பெண்ணின் பறத்தல், மனதைக் கவர்ந்து மயக்கம் தருவதாயிருந்தது. அவளைத் தொடர்ந்து தரையில் ஓடுபவர்கள், மேலே பார்த்துக்கொண்டே வயல் வரப்புகளில் ஓடியதில் தடுக்கி ஒருவர் மீது ஒருவராகச் சாயும் படையைப்போலச் சரிந்து விழுந்தனர்.

யான்யானோ, நகரின் கிழக்கோரத்துப் பழைய இடுகாட்டைச் சூழ்ந்து நின்ற பைன் மரத்தோப்புக்குள் போய்த் தரையிறங்கினாள். ஒரு ஏக்கர் பரப்பிலிருந்த அந்தக் கருநிறப் பைன் மரங்கள் வடகிழக்கு காவ்மி நகர முன்னோர்களின் புதைமேடுகளை ஒரு நூற்றாண்டுக்கும் மேலாகக் காவல் காத்துக்கொண்டிருந்தன. அந்த மரங்கள் வயதாகி மிகவும் முதிர்ந்தவை; நிமிர்ந்து நேராக வளர்ந்து உயர்ந்திருந்த அவற்றின் உச்சிக்கிளைகள் தாழப் பறக்கும் மேகங்களைக் கிழித்துக் கொண்டிருந்தன. அந்தப் பழைய இடுகாடும் கருநிற பைன் மரத்தோப்பும் சேர்ந்து நகரத்தின் அதிபயங்கரமான இடமாக, அதேசமயம், புனிதமான ஒன்றாகவும் இருந்தது. நகரத்தின் முன்னோர்கள் ஓய்வெடுக்கும் இடமென்பதால் புனிதமானது; பயங்கரம் ஏனென்றால், எல்லாப் பேய் நிகழ்ச்சிகளும் அங்குதான் நிகழ்ந்திருந்தன.

 

 

அங்கிருந்த மரங்களிலேயே,  இடுகாட்டின் நடுமத்தியில் மிகமிக உயரமாக வளர்ந்திருந்த முதிர்ந்த மரத்தின் உச்சியில் போய் யான்யான் அமர்ந்திருந்தாள். அதுவும் அந்த மரத்திலேயே உயரமான உச்சிக்கிளையின் மெல்லிளந் தண்டு மீது, அவள் ஒரு நூறு பவுண்டு எடை கொண்டவளென்றாலும் அந்தத் தண்டு மிக எளிதாக அவளைத் தாங்கியிருந்தது.  அவளைப் பின்தொடர்ந்து  வந்தவர்கள் அங்கு நின்று மேல்நோக்கி அவளைப் பார்த்தனர். எல்லோருக்குமே அது மிகப்பெரிய ஆச்சரியம்தான்.

 

 

பத்துப் பன்னிரண்டுக்கும் மேற்பட்ட நாய்கள் தலையைத்தூக்கி, அந்தரத்தில் மிதக்கும் யான்யானை நோக்கிக் கூட்டமாகக் குரைத்தன. ‘’கீழே இறங்கு, இந்த நிமிடமே கீழே இறங்கி வா’’ என்று ஹாங்க் சீ கத்திக் கூப்பிட்டான்.

நாய்களின் குரைப்பும், ஹாங்க் சீயின் கத்தலும் செவிடன் காதுச் சங்காயின. யான்யான் எந்தக்குறிப்பும் காட்டாமல் காற்றுக்குத் தக்கபடி மேலும் கீழுமாக ஆடிக்கொண்டிருந்தாள்.

கீழே நின்ற கூட்டம், எதுவும் செய்ய இயலாமல் களைத்துப்போக, வீண்கூச்சலிடும் குழந்தைகள் மட்டும், ‘’ புதுப் பெண்ணே, ஹே! புதுப்பெண்ணே, எங்கே பார்ப்போம், இன்னும் கொஞ்சம் பறந்து காட்டு!’’ எனக் கத்தினர். யான்யான் கைகளை உயர்த்தினாள். ‘’ பற, பற, அவள் பறக்கப்போகிறாள்.’’ எனக் குழந்தைகள் கூப்பாடு போட்டுப் பரபரத்தனர். ஆனால், அவள் பறக்கவில்லை. மாறாகக் கூர்நகங்கள் போன்ற விரல்களால், தன் தலைமுடியைப் பறவைகள் இறகுகளைக் கோதிக்கொள்ளுமே, அது போல அளைந்து, சீவிக்கொண்டாள்.

 

ஹாங்க்சீ முழங்காலில்  மண்டியிட்டுப் புலம்பலும் ஒப்பாரியுமாக ஓலமிட்டான். ‘’ என் உயிருக்குயிரான ஊர்மக்களே, அண்ணன்களே, தம்பிகளே, சித்தப்பா, மாமா, பெரியப்பாக்களே, எனக்கு ஒரு மனைவி கிடைப்பது எவ்வளவு அபூர்வமென்று உங்களுக்குத் தெரிந்தது தானே. அவளைக் கீழே இறக்கிக் கொண்டுவருவதற்கு எனக்கு உதவி செய்யுங்கள்.’’

அப்போதுதான், அவனுடைய அம்மா  ஒரு கழுதையின் மீது அங்கு  வந்தாள். அந்தத் தள்ளாத வயதில், கழுதையின் முதுகிலிருந்து இறங்கத் தடுமாறித் தரையில் விழுந்து, வலியில் முனகிக்கொண்டே, ‘’ எங்கே? அவள் எங்கே? அவள் எங்கே போனாள்?’’ என்று கேட்டாள்.

 

ஹாங்க்சீ மர உச்சியைக்  காட்டி, ‘’ மேலே உட்கார்ந்திருக்கிறாள், பார்.’’ என்றான். கையைப் புருவங்களின் மேல் திரையாக வைத்து, தன் மருமகள் மர உச்சியில் எங்கே கூடுகட்டி அமர்ந்திருக்கிறாளென , மேல் நோக்கிப் பார்த்த அந்த முதியவள், ‘’பேய்! அவள் ஒரு பேயேதான்!’’ என்று அலறினாள்.

கிராமத் தலைவர் எஃகுமலை, ’’ அவள் மாயமந்திரக்காரியோ, இல்லையோ, அவளைக் கீழே இறக்க ஒரு வழி கண்டுபிடித்தாக வேண்டும். எல்லாவற்றையும் போல, இதையும் ஒரு முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்.’’ என்றார்.

‘’அண்ணா,’’ என அழைத்த முதியவள், ‘’தயவுசெய்து, நீங்களே பொறுப்பேற்று, நடத்துங்கள், ஏதாவது  செய்யுங்கள், உங்களைக் கெஞ்சிக் கெஞ்சிக்கேட்கிறேன்.’’ என்றாள்.

அதற்குப் பதிலாக, எஃகு மலை, ‘’ நாம் செய்யப்போவது, இதுதான். முதலில் அவளுடைய அம்மா, அண்ணன், யாங்குவா எல்லோரையும் இங்கே கூட்டிவரச்சொல்லி யாராவது ஒருவரை வடக்கு ஜியாவ்சூ நகருக்கு அனுப்புவோம். அவள் அப்படியும் கீழே இறங்காவிட்டால், யாங்குவாவைத் திரும்பிப் போகவிடாமல், இங்கேயே வைத்துக்கொள்ள வேண்டியதுதான். அடுத்துச் சிலரை வீட்டுக்கு அனுப்பி வில்,அம்புகள் செய்ய வேண்டும். கூடவே கொஞ்சம் நல்ல நீளமான கழிகளும் வெட்ட வேண்டும். அப்படியும் வேலையாகவில்லையென்றால்,  வேறென்ன செய்வது, அந்தக் கடினமான வழியில்தான்  அவளைக் கீழே கொண்டுவர வேண்டும். எப்படியிருந்தாலும் உள்ளூர் ஊராட்சிக்குச் சொல்லிவிடுவோம். அவளும் ஹாங்க்சீயும் கணவன், மனைவி என்பதால், திருமணச் சட்டங்களை அமுல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும். அப்புறம், ஹாங்க்சீ, நீ மரத்தடியிலேயே இருந்து கவனமாகப் பார்த்துக்கொள். யாராவது ஒருவரிடம் சேகண்டி கொடுத்தனுப்புகிறோம். ஏதாவது ஒன்று என்றால், ஒரே அடி, பொளித்துக் கிடத்தி விடு, இது, உயிர்ப்பிரச்னை. அவள் நடந்துகொள்கிற விதத்தைப் பார்த்தால், எனக்கு நிச்சயமாகத் தெரிகிறது, அவளுக்குப் பேய்தான் பிடித்திருக்கிறது. ஊருக்குள் போய் ஒரு நாயைக்கொல்ல வேண்டும்.   நமக்கு நாய் ரத்தம் வேண்டும். ஒருவேளை தேவைப்பட்டால், கைவசம் இருக்கவேண்டுமே.’’ என்றார்.

 

தயாரிப்பு வேலைகளைச் செய்ய, கூட்டம் தலைக்கொன்றாகப் பிரிந்தது. ஹாங்க் சீயின் அம்மா மகனோடேயே இருக்கப்போவதாகச் சொன்னாள். ஆனால் எஃகுமலை, ‘’ முட்டாள்தனமாகப் பேசாதே. இங்கே இருந்து நீ என்ன கிழிக்கமுடியுமென்று நினைக்கிறாய்? ஏதாவது அசம்பாவிதமானால், நீயும் நடுவில் மாட்டிக் கொள்வாய். வீட்டுக்குப் போய்ச் சேர்.’’ என்று கண்டிப்பும் கறாருமாகச் சொல்லிவிட்டார். மாறிப் பேசி வாதம் செய்வதற்கு எதுவுமில்லையென்று கண்ட அந்த முதியவள் அழுது, புலம்பிக் கழுதையின் மீது ஏறி, அந்த இடத்தை விட்டகன்றாள்.

 

இப்போது சந்தடியெல்லாம் ஓய்ந்து, அடங்கிவிட்டது. வடகிழக்கு காவ்மி நகரின் தைரியம் மிக்க ஆத்மாக்களில் ஒருவனான ஹாங்க் சீயால் அமைதியாக இருக்கமுடியவில்லை. கதிரவன் மேற்கில் மறைய, காற்று சுழன்றடித்து மரங்களுக்கிடையே ஊளையிட்டது. ஹாங்க் சீ தலையைத் தொங்கவிட்டு,  வலிக்கும் கழுத்தைத் தடவித் தேய்த்துக்கொண்டே அங்கிருந்த நடுகல் ஒன்றின் மீது அமர்ந்தான். அவன் சிகரெட்டைப் பற்றவைத்தபோது மேலிருந்து அதிபயங்கரச் சிரிப்பொன்று கேட்டது. அவனது மயிர்கள் குத்திட்டன; உடம்பெல்லாம் நடுங்கிப்போனது. தீக்குச்சியை உதறி அணைத்துவிட்டு, எழுந்து, சில அடிகள் பின்னோக்கி நடந்து மர உச்சியை நோக்கினான். ‘’ இந்தப் பிசாசு வேலைகளெல்லாம் என்னிடம் வேண்டாம். இரு. இரு. என்கையால் நன்றாக வாங்கப்போகிறாய், அதுவரைக்கும் இரு.’’ எனக் கறுவினான்.

 

மறைகின்ற கதிரவனின் பின்னணியில் யான்யானின் சிவப்புக் கமிசோல் தீப்பிடித்தெரிவதுபோல, அவள் முகம் தங்க முலாமிட்டது போலப் பளீரெனத் தோன்றியது. கூடுகளுக்குத் திரும்பிய காக்கைக்கூட்டமொன்றின் எச்சம் மழையென வீழ்ந்தது. பல எச்சங்கள் சூடாக அவன் தலை மீதே விழுந்தன. தரையில் காறித்துப்பிக்கொண்டே, அதிர்ஷ்டம் திரும்பிப் பாய்கிறதோ, என்னவோ, என நினைத்தான். பைன் மரத்தோப்பு  இருட்டாக உருமாறிக்கொண்டிருந்தது. வௌவால்கள் மரங்களுக்கிடையில் உள்ளும் வெளியுமாக  விர், விர்ரெனப் பறந்து திரியத் தொடங்கின. அப்போதுங்கூட, மரத்தின் உச்சி ஒளிமயமாக மிளிர்ந்துகொண்டிருந்தது. இடுகாட்டுக்குள் நரிகள் ஊளையிட்டன. அவனைப் பயம் மீண்டும் பற்றிக்கொண்டது.

 

தோப்புக்குள் எல்லா இடங்களிலும் ஆவிகள் இருந்ததை அவனால் உணர முடிந்தது; அவன் காதுகளில் விதவிதமான சத்தங்கள் விழுந்து, விழுந்து நிரம்பிக்கொண்டேயிருந்தன. அதிபயங்கரச் சிரிப்பு மீண்டும் மீண்டும் கேட்டது. அது ஒவ்வொருமுறை வெடிக்கும்போதும் அவனுக்கு மிக மோசமாக வியர்த்துக் கொட்டியது. கெட்ட ஆவிகளை நெருங்கவிடாமல் செய்ய, நடுவிரல் நுனியைக் கடிக்கவேண்டுமெனக் கேள்விப்பட்டிருந்ததை அவன் இப்போது நினைத்தான்; அப்படியே நறுக்கென்று கடித்தான். கடிபட்ட வேதனை, மூளையைச் சரிப்படுத்தியது.

 

கணநேரத்துக்கு முன்போல் பைன்மரத்தோப்பு அவ்வளவு இருட்டாக இப்போது இல்லையென்பதை அவன் கண்டான். கல்லறை மேடுகளின் வரிசைகளும் அவற்றின் தலைக்கற்களும் தனியாகத் தெரிந்தன. மறையும் சூரியக் கதிரொளியில் அடிமரங்கள் நீண்டு தெரிந்ததை அவனால் கண்டுகொள்ள முடிந்தது. குள்ளநரிக் குட்டிகள் சில கல்லறை மேடுகளுக்கிடையில் துள்ளித்துள்ளி விளையாடிக்கொண்டிருந்ததைத் தாய் நரி, புதர்களின் மறைவில் குனிந்து நின்று, கண்காணித்துக் கொண்டிருந்தது. அவ்வப்போது அது, பல்லைக் கடித்து, உறுமி அவனின் இருப்பையும் காட்டி எச்சரித்தது. அடுத்தாற்போல், அவன் வானத்தைப் பார்த்த போது, காகங்களால் சூழப்பட்டு, அசையாமல் அமர்ந்திருந்த யான்யானைக் கண்டான்.

 

இரண்டு மரங்களுக்கு நடுவிலிருந்து வெளுத்த ஒரு சிறு பையன் வெளிப்பட்டு, சேகண்டி, அதை அடிக்கிற மரக்கொட்டாப்புளி,  கைக்கோடரி, ஒரு பெரிய தட்டையான கேக் ஆகியவற்றை அவனிடம் கொடுத்தான். வில் அம்புகள் தயாரிப்பினை எஃகுமலை மேற்பார்வையிடுவதாகவும், வடக்கு ஜியாவ்சூவுக்கு ஆட்கள் போயிருப்பதாகவும் இரண்டு நகரியத் தலைவர்களுமே விஷயத்தை மிகவும் கடுமையானதாகக் கருதுவதாகவும் அவர்கள் விரைவிலேயே யாரையாவது அனுப்புவார்களென்றும் அந்தப் பையன் சொன்னான். அந்தத் தட்டையான கேக்கைச் சாப்பிட்டுப் பசியாறி, ஊக்கத்தோடிருக்க வேண்டும். ஏதாவது நிகழ்ந்தால், அவன் சேகண்டியைத் தட்டவேண்டும்.

 

அந்தப்பையன் கிளம்பிப் போனதும் ஹாங்க்சீ, சேகண்டியை நினைவுக்கல் மீது வைத்தான்; கைக்கோடரியை இடைவார்க் கச்சில் செருகிவிட்டு, கேக்கை மென்று விழுங்கத் தொடங்கினான். அதைத் தின்று தீர்த்தானோ, இல்லையோ, உடனேயே கோடரியை உருவிக் கையில் பிடித்துக்கொண்டு, ‘’ இப்போது நீ கீழே இறங்கி வரப்போகிறாயா, இல்லையா? இல்லையென்றால், இந்த மரத்தை வெட்டித் தள்ளிவிடுவேன்.’’ எனக் கத்தினான்.

 

யான்யானிடமிருந்து எந்தச் சத்தமும் இல்லை. அதனால், ஹாங்க்சீ கோடரியை ஓங்கி மரத்தில் புதைத்தான்; அது அவன் வேகத்தில் அதிர்ந்தது. மரமே ஆடியது. அப்போதும் யான்யானிடம் எந்த அசைவும் இல்லை. கோடரி ஆழத்தில் பதிந்துவிட்டது. அதை அவனால் இழுத்தெடுக்க முடியவில்லை.

 

அவள் செத்துவிட்டாளா? அவன் வியந்தான். இடைவாரை இறுக்கிக்கொண்டு, காலணிகளைக் கழற்றிவிட்டு, மரத்தின் மேல் ஏறத் தொடங்கினான். கரடுமுரடாக இருந்த மேற்பகுதி ஏறுவதற்கு எளிதாக இருந்தது. அவன் பாதித் தூரம் ஏறியதும் மேலே பார்த்தான். அவன் கண்ணுக்கு அப்பட்டமாகத் தெரிந்ததெல்லாம், தொங்கிக்கொண்டிருந்த அவளின் கால்களும், கிளைமேல் அவள் பிட்டமும் தான். இந்த நேரத்தில் உன்னோடு படுக்கையில் இருக்கவேண்டிய என்னை இப்படி மரம் ஏற வைத்துவிட்டாயே, எனக் கோபம் கொண்டான். கோபம் வலிமையாக மாற்றம் கண்டது. அடிமரம் ஒடுங்கிப் பலப்பல உறுப்புகளாகக் கிளைத்தன. அவனால் உச்சிமாடத்துக்கு எளிதாக ஏறமுடிந்தது. அதில் காலை வைத்து அவள் காற் பெருவிரலை பற்றிப்பிடிக்கவும் அவன் ஒரு நீண்ட பெருமூச்சினைக் கேட்டான்; கூடவே, மேலிருக்கும் கிளைகள் சலசலப்பதை உணர்ந்தான். தங்கத்தின் மின்னலொன்று பொன்வண்ணச் செதில், கார்ப் மீன் போலக் காற்றில் பாய்ந்தது. யான்யான் கைகளைக் காற்றில் அடித்து, அந்த உச்சி விதானத்திலிருந்தும் உயர்ந்தாள்; கைகால்கள் நான்காலும் அடித்து அவள் தலைமுடி நடுக்காற்றில் பறக்க, மற்றொரு மரத்தின் உச்சியில் போய் இறங்கினாள். கோதுமை வயலிலிருந்ததைவிட இப்போது அவளின் பறக்கும் திறமை அதிகப்பட்டிருப்பதை ஹாங்க் சீ கண்டான்.

 

அவள் புதிய மரத்தின் உச்சியிலும் முதல் மரத்திலமர்ந்த அதே மாதிரியில் அமர்ந்தாள். இளஞ்சிவப்புக் கதிர் மறைவை வியந்துநோக்கும் ஒரு புத்தம் புதிய ரோஜா மலரைப்போல அருமையான ஒரு தோற்றத்தை ஏற்படுத்தினாள். ‘’யான்யான், என் அன்பான மனைவியே, வீட்டுக்கு வா, என்னோடு சேர்ந்து வாழ். இல்லையென்றால், உன் ஊமை அண்ணனுடன் யாங்குவாவைப் படுக்கைக்குப் போகவிடமாட்டேன், ஆமா, ’’ எனக் கண்ணீர் பீறிடக் கூவினான்.

 

அவனுடைய கூச்சல் ஒலி காற்றிலிருந்து மறையும் முன்பாகவே, பயங்கரமாகக் கிளை முறியும் சத்தமொன்று கிளம்பியது. அவன் நின்றிருந்த கிளை முறிந்து, அவனை ஒரு மாமிசப் பிண்டம் போல் தரையில் வீழ்த்தியது. சதசதத்து, அழுகிக்கொண்டிருந்த பைன்மர ஊசியிலைக் குப்பை மேல் நீண்ட நேரம் விழுந்துகிடந்த அவன் முட்டுக்காலிட்டு, மெல்ல எழுந்து, சில தப்படிகள் தள்ளாடி, ஒருவாறாக, அடிமரத்தில் சாய்ந்து நின்றான். எதிர்பார்த்த வலியும் வேதனையும் தவிர வேறொன்றும் இல்லை. எலும்புகள் எதுவும் முறியவில்லை; அவன் சரியாக இருப்பதாகத்தான் தோன்றியது. அவன் மேல்நோக்கிப் பார்த்து, யான்யானைத் தேடினான். வானத்தில் நிலவைக் கண்டான். அது தண்மை பொருந்திய கதிர்களை பைன் கிளைகளில் வடிகட்டி கல்லறை மேட்டின் ஒரு பகுதியில் இங்கும், தலைக்கல்லின் ஒரு மூலையில் அங்குமெனச் சில இடங்களில் பாசியடர்ந்த ஏதாவதொரு  புதர் மீதெனப் படுமாறு செய்து விளையாடிக்கொண்டிருந்தது.  மரத்தின் உச்சியில் இரவுக்கென அமர்ந்திருக்கும் ஒரு பெரிய பறவையென யான்யான் நிலவொளியில் நனைந்துகொண்டிருந்தாள்.

 

பைன் தோப்புக்கப்பாலிருந்து  யாரோ அவன் பெயரைச் சொல்லி அழைத்தனர். அவனும் பதிலுக்குக்  கத்தினான். சேகண்டி நினைவுக்கல் மீதிருந்தது நினைவுக்கு வந்து அதை எடுத்துக்கொண்டான். ஆனால், அதை அடிக்கும் கொட்டாப்புளியை எங்கு தேடியும் கிடைக்கவில்லை.

 

பெருத்த ஒலி கிளப்பும்  ஒரு கூட்டம்  பைன் மரத் தோப்புக்குள் அரிக்கன் விளக்குகள், கைமின் விளக்குகள், மின்னல்விளக்குகளோடு  நுழைந்து,  மரங்களின் இடைவெளிகளில் வெளிச்சத்தைப் பாய்ச்சி, நிலவின் கதிர்களைப் பின்னுக்குத்தள்ளி, வந்துகொண்டிருந்தது.

 

அந்தக் கூட்டத்தில் அவன் தங்கை யாங்குவாவோடு யான்யானின் வயதான தாயாரும், ஊமைச் சகோதரனும் தெரிந்தனர். எஃகுமலை, வில், அம்புகளை முதுகில் தொங்கவிட்டிருக்கும் ஏழெட்டு திடகாத்திர மனிதர்களோடு வந்துகொண்டிருப்பதை ஹாங்க் சீ கண்டான். மற்றவர்கள் நீளக்கழிகளை வைத்திருந்தனர். சிலர் வேட்டைத் துப்பாக்கிகளோடு வந்தனர். வேறு சிலர் பறவை பிடிக்கும் வலைகளைக் கூடக் கொண்டுவந்தனர். மங்கிய பழுப்புநிற ஆலிவ் சீருடையும் இடுப்பில் ஒரு அகன்ற தோல்வார்க் கச்சும் அதில் செருகிய ஒரு கைத்துப்பாக்கியுமாக ஒரு அழகான இளைஞனும் வந்துகொண்டிருந்தான்.  ஹாங்க் சீ அவனைக் காவல்துறையின் உள்ளூர்க் காவலராக அடையாளம் கண்டுகொண்டான்.

 

ஹாங்க்சீயின் முகத்திலிருந்த சிராய்ப்புகளையும் வீக்கங்களையும் கண்ட எஃகுமலை,  ‘’ இது ஏன்? எப்படி?’’ எனக் கேட்டார்.

 

‘’ அது ஒன்றுமில்லை,’’ என்றான், அவன்.

 

‘’அவளை எங்கே?’’ என்று  ஆத்திரம் பொங்கக் கேட்டாள், யான்யானின் தாயார்.

 

யாரோ ஒருவர் மரத்தின் உச்சியை  நோக்கி மின்னல் விளக்கை  உயர்த்தி, அவள் முகத்தின்  மீது நேராகப் பிரகாசிக்குமாறு  பிடித்தார். உச்சிக்கிளைகள் சலசலப்பதை எல்லோரும் கேட்டனர். பின்னர், அந்த மரத்திலிருந்து ஒரு இருண்ட நிழல் சத்தமின்றி மற்றொரு மரத்தின் உச்சிக்குத்  நழுவிச் சென்றதைக் கண்டனர்.

 

‘’ அட, விபச்சாரி மகன்களா!’’ யான்யானின் தாயார் திட்டித் தீர்த்தாள். ‘’ எனக்குத் தெரிந்துவிட்டது. என் மகளைக் கொன்றுவிட்டீர்கள். இந்தக் கிழட்டு விதவையையும்  அவளின் ஆதரவற்ற மகனையும் ஏமாற்றுவதற்காக இப்படிக் கதை கட்டுகிறீர்கள். ஒரு பெண்பிள்ளை எப்படி ஒரு ஆந்தை மாதிரிப் பறக்க முடியும்?’’

 

‘’ அமைதி, அமைதியாகுங்கள், அத்தை,’’ என்றார், எஃகுமலை. ‘’ எங்கள் கண்ணாலேயே பார்த்ததனால்தான் நம்புகிறோம்; இல்லாவிட்டால், நாங்களும் உங்களைப்போல, நம்பியிருக்கமாட்டோம் தான். உங்களை ஒரு விபரம் கேட்க வேண்டும், உங்கள் மகள் எப்போதாவது, ஆசான்கள் யாரிடமாவது பாடம் படித்தாளா? அசாத்திய வித்தை ஏதாவது கற்றாளா? மாய மந்திரக் காரிகளோடு இருந்தாளா? இந்த மாந்த்ரீகம், பேய், பிசாசு ஓட்டுபவர்கள்? அந்த மாதிரிக் கேட்கிறேன்.’’

 

‘’ என் மகள் எந்த ஆசானிடமும் படிக்கவில்லை.’’ என்றாள், யான்யானின் தாயார், கொதிப்புடன். ‘’ அவள் எந்த வித்தையும் படிக்கவில்லை. மாய மந்திரக்காரிகள், பேய்பிசாசு ஓட்டுபவர்களோடு நிச்சயமாக அவளுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது. அவளைக் கண்ணுக்குள்ளேயே வைத்து வளர்த்தேன். அவள் பெரியவளாகும்வரை  ஒருநாள்கூட என் பார்வை அங்கிங்கு என்று எங்கும் போனதில்லை. அவளும் என் சொல்லைத் தட்டியது கிடையாது. நான் என்ன சொன்னேனோ அதைத்தான் செய்தாள். என் அக்கம் பக்கத்துக்காரர்களெல்லாம், ஒரு நல்ல பெண் உனக்கு மகளாகக் கிடைத்திருக்கிறாளென்றுதான் சொல்வார்கள். அப்படி ஒரு அருமையான பெண் ஒரு பகற்பொழுது தான் உங்கள் வீட்டில் இருந்திருக்கிறாள், இப்போது, பாருங்கள், கழுகாக மாறி மர உச்சியில் இருக்கிறாள். எப்படி? எப்படி? இப்படி ஆனது? நீங்கள் அவளை என்ன செய்தீர்களென்று கண்டுபிடிக்காமல் விடமாட்டேன், ஆமா, ஓயமாட்டேன். என்னுடைய யான்யானை என்னிடம் ஒப்படைக்காத வரையில், உங்களுக்கு யாங்குவா கிடைக்க மாட்டாள். ஆமாம், அவளை நான் தரமாட்டேன்!’’

 

‘’போதும், கலகமெல்லாம் போதும், வயதான அத்தையே,’’ என்ற காவலர், ‘’மரத்து உச்சியையே பார்’’ எனச்சொல்லிவிட்டு, பளீர் விளக்கை மர உச்சியில் தெரிந்த நிழலை நோக்கியிருக்குமாறு பிடித்தார்; பின் ஒருமுறை அணைத்து, ஒளிக்கதிர் யான்யானின் முகத்தில் விழுமாறு விளக்கைத் திருப்பினார். அவள் கைகளை ஒருமுறை சிறகசைத்ததிலேயே காற்றில் எழும்பி மற்றுமொரு மரத்தின் உச்சிக்குத் தாவியமர்ந்தாள்.

 

‘’ அவளைப் பார்த்தீர்களா?, வயதான அத்தையே,’’ என்று அந்தக் காவலர் கேட்டார்.

 

‘’ ஆமாம்.’’ என்றாள், யான்யானின் தாயார்.

 

‘’ அது உங்கள் மகள்தானா?’’

 

‘’ ஆமாம், என் மகள்தான்.’’

 

‘’அவளைக்  கீழே இறங்கி வருமாறு நீங்கள்  சொன்னால், கேட்பாள்.       அவசியப்படாமல் கடும் நடவடிக்கைகள்  வேண்டாமேயென்று பார்க்கிறோம்.’’ என்றார், காவலர்.

 

யான்யானின் ஊமைச் சகோதரன் உற்சாகத்தில் கீச்சிட்டு, அவன் தங்கையின் பறத்தல் அசைவுகளைப் போலச்செய்து காண்பிப்பதாகக் கைகளைச் சிறகசைத்துக்கொண்டிருந்தான்.

 

யான்யானின் அம்மா கண்ணீர்  விட்டுப் புலம்பினாள். ‘’ போன  பிறவியில் என்ன செய்தேனோ தெரியவில்லை, இப்போது என் தலையில் இப்படி வந்து விடிந்திருக்கிறது.’’

 

‘’சும்மா அழுது ஆர்ப்பாட்டம் பண்ணாதே, வயதான அத்தையே. அங்கேயிருந்து உன் மகளைக் கீழே இறக்குகிற வழியைப் பார்.’’ என்றார், காவலர். ’’ அவள் எப்போதுமே மன உறுதியான பெண். நான் சொல்வதை அவள் கேட்பாளோ, என்னமோ, கேட்காமலும் போகலாம்.’’ என்று சோகமாகக் கூறினாள், யான்யானின் அம்மா.

 

‘’அடக்கம், பணிவு பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருக்க நேரம் இல்லை, வயதான அத்தையே, அவளைக் கீழே வா என்று கூப்பிடுங்கள்.’’என்றார், காவலர்.

 

தள்ளாடும் சிறிய கால்களால்  மெல்ல நடந்து, யான்யானின் அம்மா, அவள் மகள் தொற்றி அமர்ந்திருந்த  மரத்துக்கு நகர்ந்து தலையைப் பின்னுக்கிழுத்து  அண்ணார்ந்து நோக்கிக் கண்ணீரோடு, ‘’ யான்யான், நல்ல பிள்ளை இல்லையா, அம்மா சொல்வதைக் கேளும்மா. தயவுசெய்து இறங்கி விடு. எனக்குத் தெரியும், உன்னை மோசம் செய்துவிட்டதாக நீ நினைக்கிறாய். ஆனால், அதற்கு ஒன்றும் செய்ய முடியாதம்மா. நீ இறங்கி வரவில்லையென்றால், நம்மால் யாங்குவாவை இருத்திக்கொள்ள முடியாது. அப்படி மட்டும் நடந்துவிட்டதென்றால் அதோடு நம் குடும்பம் அவ்வளவுதான், முடிந்துவிடும்….’’ அந்த வயதான தாயார் `ஓ`வென அழுது, அடிமரத்தில் தலையை முட்டி முட்டிப் புலம்பினாள். பறவை தன் சிறகுகளைச் சிலிர்த்துக்கொள்வதுபோன்று ஒரு கீறல் சப்தம் மர உச்சியிலிருந்து கீழிறங்கியது.

 

‘’ பேசாமல் இருங்களேனய்யா,’’ எனக் காவலர் உறுமினார்.

 

ஊமை, கைகளை மேலே தூக்கி அசைத்து, அவன் தங்கையை நோக்கிக் கிறீச்சிட்டான்.

 

‘’யான்யான்,’’ என அழைத்த ஹாங்க்சீ, ‘’ நீ இப்போதும் மனுஷிதான், இல்லையா? உன்னிடம் துளியாவது மனிதநேயமென்று ஒன்று மிச்சமிருந்தால், உடனே இறங்கிவிடு.’’ என்றான்.

 

யாங்குவாவும் சேர்ந்து அழுதாள். ‘’ அண்ணி, தயவுசெய்து வந்துவிடுங்கள். இந்த உலகத்தில் நாம் இரண்டு பேருமே கஷ்டப்படுபவர்கள்தான். என் அண்ணன் அசிங்கமாக இருக்கிறான், ஆனால் அவனால் பேச முடியும். ஆனால், உங்கள் அண்ணனோ, ஊமை…. தயவுசெய்து வந்துவிடுங்கள்……. இதெல்லாம் நமக்கு விதி…..’’ என்றாள், அவள்.

 

யான்யான் மீண்டும் காற்றில் மிதந்து, கூட்டத்திற்கு  மேலாக வானில் வட்டமிட்டாள். குளிர்ந்த பனித்துளிகள் தரையில் விழுந்தன, அது அவளது கண்ணீராகவும் இருக்கலாம்.

 

‘’ வழியைவிட்டு விலகி  நில்லுங்கள்,  அவளுக்கு இடம் விடுங்கள். அவள் தரைக்கு  வரட்டும்,’’ என்று அதிகாரக்குரலில் மிரட்டலாகச் சொன்னார், எஃகுமலை.

 

அந்த வயதான தாயையும், யாங்குவாவையும் தவிர எல்லோரும் சில அடிகள் பின்வாங்கினர்.

 

ஆனால், எஃகுமலை எதிர்பார்த்தது போல விஷயம் அவ்வளவு எளிதாகிவிடவில்லை; காற்றில் வட்டமிட்டபின், யான்யான் மீண்டும் மர உச்சியிலேயே அமர்ந்துவிட்டாள்.

 

நிலவு மேற்கு வானுக்குள் நழுவியது. இருள் மேலும் மேலும் அடர்ந்துகொண்டிருந்தது. தரையில்  நின்றிருந்தவர்களைக் குளிர் தாக்கத் தொடங்கியது. அவர்களுக்கிடையில் சோர்வும் தலைதூக்கியது. ‘’ ஏது, அந்தக் கடினமான வழியில்தான் இதை முடிக்கமுடியும் போலத் தெரிகிறது.’’ என்றார், காவலர்.

 

எஃகுமலை, ‘’ எனக்கு என்ன கவலையென்றால், இந்தக் கூட்டம் அவளைத் தோப்பிலிருந்தும் விரட்டிவிடுமோ என்பதுதான். இந்த இரவுக்குள் நாம் அவளைப் பிடிக்க முடியவில்லையென்றால், மிகமிகக் கடினமாகிவிடும்.’’ என்று விசனப்பட்டார்.

 

‘’ நான் என்ன நினைக்கிறேனென்றால், ‘’ என்ற காவலர், ‘’ அவளால் நிரம்பத் தூரத்துக்குப் பறக்க முடியாது. அதனால், அவள் தோப்பை விட்டு வெளிவந்துவிட்டால், அவளைப் பிடிக்க எளிதாக இருக்கும்.’’ என அவர் யோசனையைக் கூறினார். ‘’ அவள் குடும்பம் நம்முடைய திட்டத்துக்கு ஒத்துவரவில்லையென்றால் என்ன செய்வது?’’ என்றார், எஃகுமலை.

 

‘’ விஷயத்தை என்னிடம் விட்டுவிடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்.’’ என்றார், காவலர்.

 

அவர் நகர்ந்து சென்று  இளைஞர்கள் சிலரிடம், அந்த ஊமையையும், அவன் அம்மாவையும்  தோப்புக்கு வெளியே அழைத்துச்  செல்லுமாறு கூறினார். அந்த வயதான தாய் இயல்பு மீறிக் கத்தி அழுதுகொண்டிருந்தாலும் அவள் எதிர்ப்பெதுவும் காட்டவில்லை. ஆனால், ஊமை, மறுத்து, உறுமினாலும், பளபளக்கும் கைத்துப்பாக்கியை எடுத்துக் காவலர் காட்டியதும் அமைதியாகச் சென்றுவிட்டான். இப்போது அங்கே நின்றிருந்தவர்கள், காவலர், எஃகுமலை, ஹாங்க்சீ, வில், அம்பு சுமந்திருந்த இருவர், தவிர வேறிரண்டு இளைஞர்களுந்தான். அந்த இளைஞர்களில் ஒருவன் நீளக்கழி ஒன்றை வைத்திருந்தான். இன்னொருவன் கையில் வலை இருந்தது.

 

‘’துப்பாக்கிச் சத்தம் கூட்டத்தைக் கூட்டிவிடும். அதனால், வில், அம்புகளைக் கொண்டு பார்த்துக் கொள்வோம்.’’ என்றார், காவலர்.

 

‘’ எனக்குப் பார்வை வேறு சரியில்லை. என்னால் இதைச் செய்ய முடியாது. இதைச் செய்ய வேண்டிய ஆளும் நான் இல்லை. என் குறி கொஞ்சம் தப்பிவிட்டாலும் அவள் இறந்துவிடலாம். அதனால் ஹாங்க்சீதான் இதைச் செய்ய வேண்டும்.’’ என்று சொல்லிக்கொண்டே வில்லையும் நன்கு கூர் தீட்டிய அம்பு ஒன்றையும் ஹாங்க்சீயிடம் கொடுத்தார், எஃகுமலை. அதை வாங்கிக்கொண்ட ஹாங்க்சீ சிந்தனையில் ஆழ்ந்து வெறுமனே நின்றான். அவர்கள் அவனை என்ன செய்யச் சொல்கிறார்களென்று உறைத்ததும் திடீரென்று, ‘’ என்னால் முடியாது’’ என்றான். ‘’ என்னால் முடியாது, நான் செய்ய மாட்டேன். அவள் என்னுடைய மனைவி. இல்லையா? என் மனைவி.’’ என்று சொல்லிக்கொண்டிருந்தான்.

 

‘’ஹாங்க்சீ’’ என அழைத்த எஃகுமலை, ‘’ முட்டாள் தனமாகப்  பேசாதே! உன் கைக்குள் இருந்தால், உன் மனைவிதான். ஆனால், மரத்தில் தொற்றிக் கொண்டிருந்தால், அது ஏதோ ஒரு வினோதப் பறவை.’’ என்றார்.

 

‘’ நீங்கள் எல்லாம்,’’ என்று எரிச்சல்பட்ட காவலர், ‘’ உங்களால் எந்த ஒரு காரியத்தையாவது செய்ய முடியுமா? வெறுமனே சும்மா நின்று,  `ஆ`, `ஊ` வென்று கத்திக்கொண்டுதான் இருப்பீர்கள். வில்லை என்னிடம் கொடுங்கள்.’’ என்று சிடுசிடுத்தார்.

 

அவர் துப்பாக்கியை இடுப்பு  உறைக்குள் செருகிவிட்டு வில், அம்பை எடுத்து மரத்தின் உச்சியில் தெரிந்த, அந்த உருவமைப்பினைக் குறிபார்த்து, ஒரு அம்பினை எய்தார். `சதக்` என்ற மெல்லிய சப்தம், அவர் இலக்கைத் தாக்கிவிட்டாரென்பதைத் தெரிவித்தது. மரத்தின் உச்சி சலசலத்தது. அவர்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போதே, அடிவயிற்றில் தாக்கிய அம்புடன், யான்யான் நிலவொளியில் உயர்ந்து எழுந்தாலும், அருகிலிருந்த சற்றுஉயரம் குறைந்த மரத்தின் உச்சியில் வேகமாக விழுந்தாள். அவளால் நீண்ட நேரத்துக்குச் சமநிலையைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லையென்பது தெளிவாகத் தெரிந்தது. காவலர், மற்றொரு அம்பை எடுத்து வில்லில் பொருத்திக் குட்டையான பைன் மரத்தின் உச்சியில் கைகால் பரப்பிக்கிடந்த யான்யானைக் குறிவைத்து, ‘’ வா, கீழே இறங்கு!’’ எனக்கத்தினார். அந்தச் சப்தம்  மறையுமுன்னரே அவரது அம்பு வில்லிலிருந்தும் பறந்தது. வலியின் கத்தல் கேட்டது; யான்யான் தலைகீழாக விழுந்தாள்.

 

‘’ அட வேசிப்பயல்களா,’’ என அலறிய ஹாங்க்சீ, ‘’ என்  மனைவியைக் கொன்றுவிட்டீர்களே, பாவிகளா…..’’ எனக் கத்தினான்.

 

தோப்பிலிருந்தும் அகன்றிருந்தவர்கள்  அரிக்கன்களோடும் கைமின் விளக்குகளோடும் வந்தார்கள். ‘’ அவள் செத்துவிட்டாளா?’’ பெருத்த ஆவலோடு கேட்டவர்கள், ‘’ அவள் உடம்பில் இறகுகள்  இருக்கின்றதா?’’ என்றனர்.

 

எதுவும் பேசாமல், எஃகுமலை  நாய் இரத்தமிருந்த வாளியை எடுத்து, யான்யானின் உடல் மீது வாரியடித்தார்.

 

Source: www.ou.edu/uschina/newman/MoYan.Soaring.DoubleSidedBooklet.pdf

 

ஒரு தேவதையின் வாழ்க்கை குமார நந்தன்

images
ஊருக்கு அருகில்  நதி வளைந்திருந்தது. மெளனத்தின் வெளியிலிருந்து
காட்சியாய்ப் பெருகும் நதி சில சமயங்களில் ஒரு இசைக் கருவியைப்  போல
ஒலித்துப் பரவியது. வெண்ணிலா கோரைப் புதருக்கருகில்
குளித்துக்கொண்டிருந்தாள். கல்லில் மஞ்சளை உரைத்து  தன் முகத்தில்
கொஞ்சமும்  நதியின் முகத்தில் கொஞ்சமும்  பூசினாள். ஏதோ ஒரு பறவை
மீனுக்காக சொரவானம் அடித்தது. அதிகாலையின் காட்சிகள்  வேகமாக
மாறிக்கொண்டிருப்பதை  கவனித்து கரையேறினாள். உடம்பில்  சேலையை சுற்றி
துண்டை தலையில்  முடிந்தாள். குடத்தில் நீரை மொண்டு கொண்டு கிளம்பினாள்.
பெரிய மர  வேலிக் கதவை விலக்கிக்  கொண்டு உள்ளே போனாள். தோட்டத்தில்
பூசனிக்கொடி சீராக இலைகளைப்  பரப்பியிருந்தது. இடதுபுறமிருந்த  அவரைப்
பந்தலில் அவரைக்  காய்கள் சடைபிடித்து தொங்கிக்  கொண்டிருந்தன. தண்ணீர்
குடத்தை  இறக்கி வைத்துவிட்டு பூட்டைத்  திறந்து குடத்தை எடுத்துக்
கொண்டு உள்ளே போனாள்.
வெய்யில்  கிளம்பும்போது சமையல்  வேலையை முடித்திருந்தாள்.
தலைத்துண்டை அவிழ்த்து  முடியைத் தட்டினாள். ஈரம்  இன்னும் இருந்தது.
காதோரங்களில்  காலெடுத்து நீர் சடையாகக்  கட்டினாள். கொஞ்சம் பவுடர்
பூசி நெற்றியிலும் வகிட்டிலும்  குங்குமம் வைத்துக்கொண்டாள். சாமி படத்து
விளக்குக்கு  எண்ணெய் விட்டு ஏற்றினாள்.

 

வாசலில்  சைக்கிள் மணி சத்தம்  கேட்டது. ராஜா உள்ளே வந்தான்.
“உக்காரு ராஜா சாப்பாடு  எடுத்துகிட்டு வறேன்” என்றுவிட்டுப்  போய்
தூக்கில் சாப்பாடும்  சின்ன தூக்கில் குழம்பும்  இன்னொரு சின்ன தூக்கில்
ரசமும் கிண்ணத்தில் காயும்  போட்டுப் பையில் அடுக்கிக்  கொண்டு வந்தாள்.
ராஜா அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் தலையைக் குனிந்துகொண்டாள்.

 

“சாப்பாடு போட்டு வச்சிட்டம்பா எடுத்துகிட்டுப்போ” என்றாள். “எப்படி
உங்களால இவ்வளவு அமைதியா இருக்க முடியுது” என்றான். அவள் எதுவும்
பேசவில்லை. ” அவர நீங்க எதுவுமே கேக்க மாட்டீங்களா” என்று தொடர்ந்தபோது
அவள் சங்கடமாக நெளிந்தாள். “கேக்காம என்ன ராஜா நீ எடுத்துகிட்டுக்
கிளம்பு நேரமானா உன் முதலாளி கத்துவாரு”. என்றாள் “கத்திட்டுப் போறாரு.
இப்படி கேவலப்பட்டு இவரு கூட நீங்க பொழைக்கத்தான் வேணுமா? எனக்கு பாக்கவே
ரொம்ப கஷ்டமா இருக்குது. பேசாம நீங்க உங்க அம்மா வீட்டுக்குப் போயிடுங்க
அப்பத்தான் உங்களோட அருமை இவருக்குத் தெரியும்” என்றான்.

 

“சரி போலாம் நீ கெளம்பு” என்றாள். அவனுக்கு துக்கம் தாங்க
முடியாததாய் இருந்தது. “அவரு பண்ற வேலையை நெனைச்சி நீங்க
அழுதுகிட்டிருந்தாக்கூட எனக்குப் பெரிசா ஒண்ணும் தெரியாது. ஆனா இவ்வளவு
அமைதியா சிரிச்சிகிட்டு இருக்கறீங்க பாத்தீங்களா அதைப் பாத்தாதான்
எனக்குத் தாங்க முடியல” சொல்லிக்கொண்டே அவன் சைக்களை எடுத்துக்கொண்டு
கிளம்பினான்.

 

அவளுக்கு  சிரிப்பாய் இருந்தது.துவைக்கின்ற  துணிகளை அள்ளி மூட்டை கட்ட ஆரம்பித்தாள் இங்கே  ஆற்று
நீரில் துணி துவைப்பதைவிட   உலகத்தில் இன்பமான விசயம்  வேறு இருக்குமா
என்று  அவளுக்குத் தெரியவில்லை.  அங்கே அவள் அம்மா வீட்டில்  பாத்ரூம்
கக்கூஸ்  ரூம் எல்லாம் ஒன்றேதான் துணியும்  அதிலேயே துவைக்க வேண்டும்.
அங்கே துணி துவைப்பதைப்  போல ஒரு நரகம் வேறு  இல்லை. அம்மா வாசல் படியையே துணி துவைக்கும் கல்லாய்  பாவித்துத் துவைப்பாள். இவளுக்கு அப்படி
முடியாது. இங்கே துணிகளை அள்ளிக்  கொண்டு போனால் ஆறு. மேலே  வானம்
பக்கத்தில் கோரை. கரையில் ஆலமரம். கிளையில்  கிளிகள். குருவிகளின் சத்தம்
நதியின் சத்தம். விட்டால்  அவள் வாழ்க்கை முழுவதும்  துணி துவைத்துக்
கொண்டிருப்பாள். வெய்யில் படாத குத்துக்  கல்லில் உட்கார்ந்துகொண்டு
துணியை ஒவ்வொன்றாய் எடுத்து  நனைத்து கல்லில்  போட்டாள். அவளுக்கு ராஜாவை
நினைத்தால் சிரிப்பாய் வந்தது. இவர் இவளை விட்டுவிட்டு வேறு ஒருத்தியை
வைத்திருக்கிறாராம். அப்பாவை நினைத்துக்கொண்டாள் அப்பாவை விடவா?…
சாராய கடையில் உண்டான பழக்கத்தில் அல்லவா தன்னை இவருக்கு கல்யாணம்
பண்ணிக் கொடுத்தார். ஆனாலும் அவளுக்கு எதுவும் துக்கமாய் தெரியவில்லை.
அவன் அவளை அடிப்பதில்லை. ஒருவகையில் அவளுக்கு சந்தோசமாகத்தான்
இருக்கிறது. ராத்திரியில் அவளை அவன் தொந்தரவு செய்வதில்லை. சாப்பிட்டு
முடித்ததும் கொஞ்ச நேரம் திண்ணையில் உட்கார்ந்திருப்பான். பிறகு
சலித்துப் போனவன் போலவும் காலாற நடந்தால் பரவாயில்லை என்பது போலவும்
திண்ணையை விட்டு இறங்கி நடக்க ஆரம்பிப்பான். திரும்பி வர இரண்டு மணி
நேரம் அதற்கு மேலும் ஆகும். இவள் அதுவரைக்கும் காத்திருக்க மாட்டாள்.
சாப்பாட்டைப் போட்டுச் சாப்பிட்டுவிட்டு படுத்துக் கொள்வாள். ஒருநாள்
அவள் தனியாக உட்காரந்து தின்று கொண்டிருப்பதைப் பார்த்து ராஜா
கதறிவிட்டான். “இப்படி சாப்பிடும்போது கூட துணைக்கி இல்லாம போயிட்டாரே
ஏன் நீங்க சாப்பிடற வரைக்கும்தான் பொறுமையா இருந்துட்டு அப்புறம் போகக்
கூடாதா?” அவர் செண்பகத்து வீட்டுக்குப் போய்விட்டதாக ராஜா சொன்னான்.
தனியாக தின்பதில் அவளுக்கு அப்படி ஒன்றும் விசேசமான துக்கம் இல்லை. சின்ன
வயசில் இருந்து அவள் அப்படித்தான் தின்று கொண்டிருக்கிறாள்.
இந்த வீடு  அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.  பழைய காலத்து வீடு
இரண்டு  பக்கமும் சதுரமான திண்ணை. நடுவில் படி வைத்து உயரமான  வாசல்.
ஆளோடி  உள்ளே  ஒரு ஊரையே அடைக்கலாம்  போன்ற விசாலமான முற்றம்  சுற்றிலும்அறைகள் முற்றத்தைத்தாண்டி  சமையல் கட்டு. அதற்குப்  பிறகும் அறைகள். வலது
பக்கம்  அறைகள் இடது பக்கம் அறைகள்  நெல் காய வைக்கும் கலம்  தண்ணீர்
தொட்டி பின்புறம்  மாடு கட்டும் கட்டுத்தரை. கிணறு தோட்டம் சுற்றுச்சுவர்
புறக்கடை வாசல். அவன்  கடைக்குப் போய்விட்டால்  அவள் ஒவ்வொரு அறையாக
சுற்றிக் கொண்டிருப்பாள். ஏதோ கனவைப் போல இருக்கும்.  இங்கே வந்த பின்
அவளுக்குத்  தன்னுடைய வீட்டுக்குப்  போகவே பிடிக்கவில்லை.
•        •          •
வெண்ணிலாவின்  கல்யாண கோலம்தான் ராஜாவின்  கண்ணில் மங்காமல்
இருந்தது. எல்லா வேலைகளிலும் எல்லா  சிந்தனைகளிலும் எல்லா  செயல்களிலும்
அவன் அதைப்  பார்த்துக் கொண்டே இருந்தான்.  அப்போது அவனுக்கு ஏற்பட்ட
துக்கம் இன்னும் வடியாததாய்  தேங்கி நிற்கிறது. சில  சமயம் அது அவனுக்கே
புரிவதில்லை  எனக்கு எதற்காக அவ்வளவு  துக்கம் வரவேண்டும். பெண்வீடு
பார்க்கப் போகும்போது  அவன் வரவில்லை மாது வாடா  என்றுதான் சொன்னான்.
இவன்  தான் போகவில்லை. இப்படி  இருக்கும் என்று அப்போது  கொஞ்சம் கூட
நினைத்துப்  பார்க்கவில்லை. ஒருவேளை  அப்போது அவன் போயிருந்தால்  எல்லாமே
வேறு விதமாக  அமைந்திருக்கும். வெண்ணிலாவைப்  பெண் பார்க்கப் போகும்போது
தானும் கூடப் போவதாகவும்  அவளைப் பார்த்தவுடன் மாதுவைப்  பற்றி அவள்
வீட்டில்  சொல்லி அந்தக் கல்யாணத்தைத்  தடுத்து நிறுத்துவதாகவும்  கற்பனை
செய்தான் இந்தக்  கற்பனையை இப்போது எதற்காக  செய்கிறோம் என்றும்
நினைத்துக்கொண்டான். ஆனால் வெண்ணிலாவின் அப்பா  ஒரு சாராயக் கடையில்
வெண்ணிலாவை மாதுவுக்குக்  கட்டித்தருவதாய் உறுதி  தந்திருந்ததும் அவன்
மனதில்  ஒரு ஓரத்தில் தெரிந்துதான்  இருந்தது. தையல் கற்றுக்கொள்ளப்  போன
இடத்தில் வெண்ணிலாவின்  அப்பாவுடன் உண்டான பழக்கத்தில்  அவளைத்
தட்டிக்கொண்டு  வந்துவிட்டான்.

 

வெண்ணிலாவுக்கும்  இவனுக்கும் கல்யாணம் ஆவதைப்  போலக்கூட கற்பனை
ஓடியது. குழந்தைகள் இருப்பதைப்போல  இரண்டு பேரும் ஊருக்குப்  போவதைப் போல
என்னென்னவோ  மனதில் அதுபாட்டுக்கு  ஓடிக்கொண்டிருந்தது. ஒரு  விசயத்தை
அவன் நன்றாக  கவனித்துக்கொண்டான். வெண்ணிலாவைப்  புணர்வதைப்போல மட்டும்
நினைவுகள் வரவில்லை. நினைத்துப்  பார்த்தால் கூட முடியவில்லை.
வலுக்கட்டாயமாக நினைத்துப்  பார்த்தால் கூட காட்சி  திடமில்லாமல்
அழிந்துவிடுகிறது. ஒருவேளை இதனால்தானோ மாது  செண்பகத்தைத் தேடிப்
போய்விடுகிறான்.

 

ஆற்றின்  சத்தம் வானத்திலிருந்து  ஒலிப்பதைப் போல மிகமெதுவாக
ஒலித்துக்கொண்டிருந்தது.ராஜாவுக்குப் பக்கத்தில்  தவளை ஒன்று எட்டிக்
குதித்துக்  கரையேறியது.
மாதுவின் டெய்லர்கடை  இன்று லீவு.லீவானாலும்  வீட்டில்
இருக்கமாட்டான்.செண்பகத்தை கூட்டிக்கொண்டு  எங்காவது வெளியில்
போயிருப்பான்.இந்த வெண்ணிலா மாதிரி  ஒரு அப்பாவிப் பெண்ணை  அவன் இதுவரை
பார்த்ததில்லை.  எல்லாம் அவளுக்கு முன்னால்தான்  நடக்கிறது. அவள் எதுவுமே
கேட்பதில்லை. அவள் வீட்டிலிருந்து  சொந்தம் என்று யாரும்
கல்யாணத்திலிருந்து வந்து  எட்டிப் பார்க்கவில்லை.
அவனுக்கு திரும்பவும்  ஒரு முறை வெண்ணிலாவைப்  பார்க்கவேண்டும் போல
இருந்தது.ஆனால் வெகுநேரம் ஆற்றங்கரையிலேயே  படுத்திருந்தான். இருட்டு
கட்டுவதும் வானத்தில்  நட்சத்திரங்கள் பூப்பதும்  கூட அவன் கவனத்தில்
இல்லை.  வெகுகாலம் வரை அப்படியே  படுத்திருந்துவிட்டு எழுந்தான்.
வீட்டுக்குப் போக மனசே  இல்லை. இயந்திர கதியில்  நடந்தான். வழியில்
வெண்ணிலாவின்  வீட்டைப் பார்த்ததும்  வேலிப் கதவைத் தள்ளிக்கொண்டு  உள்ளே
போனான்.

 

கதவைத் தட்டினான்.  மணி ராத்திரி எட்டு. இந்த  நேரத்தில் இங்கே
வந்து  கதவைத் தட்டுவதை வெண்ணிலா  கோவித்துக் கொள்வாளா என்று
சங்கடமாகவும் இருந்தது.திரும்பலாம் என்று நினைத்தான்  ஆனால் அதற்குள்
வெண்ணிலா  கதவைத் திறந்துவிட்டாள்.  “என்ன ராஜா இந்த நேரத்துல  நீ
எங்கியும் போலயா?” என்று  உள்ளே வரச் சொன்னாள். “அண்ணன்  இன்னும் வரலையா
அண்ணி.?” “ இன்னும் வரலை காலையில  எந்திரிச்சிப் போனாரு. “உங்களுக்குப்
போர் அடிக்கலையா?” “இல்லையே வீட்டையெல்லாம் கூட்டி வாரினேன். தோட்டத்தை
சுத்தம் பண்ணினேன். நேரம் போனதே தெரியலை” என்று சிரித்தாள். “தோட்டத்துல
கொஞ்சம் மொளகா செடி போடலாம்னு இருக்கேன்.”  “அண்ணன நீங்க ஒண்ணுமே கேக்க
மாட்டீங்களா” என்றான். அவளுக்கு சட்டென கோபம் வந்தது “என்ன நீ எப்பப்
பாத்தாலும் அண்ணன ஒண்ணுமே கேக்க மட்டீங்களான்னுகிட்டே இருக்க?” என்றாள்.
அவனுக்கு முகம் பொக்கென்று போய்விட்டது. “எனக்கு ஒரு பிரச்சனையும் இல்ல
ராஜா” என்றாள். மெளனமாக கிளம்பினான். “சாப்டுட்டுப் போ ராஜா” என்றாள்.
அவன் ஏதோ கவனத்தில் இருப்பதைப் போல வெளியே வந்தான். மாது வாசலில்
ஏறிக்கொண்டிருந்தான். இவனுக்கு குப்பென்று வியர்த்தது. “என்ன ராஜா இந்த
நேரத்துல இங்க என்ன பண்ணிகிட்டிருக்க?” என்றான். “சும்மாதான் இந்தப்
பக்கமா வந்தேன். அப்பிடியே நீங்க இருக்கீங்களான்னு பாத்தேன்.”
என்றுவிட்டு முகத்தைப் பார்க்காமல் வேகமாகக் கிளம்பினான்.

 

“எதுக்கு  இவன் இந்த ஓட்டம் ஓடறான்?”  என்று கொண்டே உள்ளே வந்தான்.
“என்னமோ தெரியலை அண்ணன்  வந்துச்சான்னு கேட்டான். இன்னும் இல்லைன்னேன்.
உங்களுக்குப்  போர் அடிக்கலையான்னு கேட்டுகிட்டிருந்தான்.
சாப்டுப்போப்பான்னேன். இல்லண்ணினுட்டு  கிளம்பிட்டான்”. என்றவள்
சாப்டீங்களா என்றாள். உம்  என்றவனிடம் “சாப்பாடு சேத்தி  செஞ்சிட்டனே
ராத்திரி  நேரமாதானே வந்துட்டீங்க  இங்கியே வந்து சாப்பிடக்  கூடாதா?”
என்றாள். அவன்  எதுவும் சொல்லவில்லை. “ராஜா  என்ன சொன்னான்?” என்றான்.
அவள் “ஒண்ணும் சொல்லலியே” என்றாள்.  அவன் பதட்டத்தோடு வேகமாக  போன
காட்சியே மாதுவின்  மனதுக்குள் மீண்டும் மீண்டும்  வந்துகொண்டிருந்தது.

 

ராஜாவுக்கு  தூக்கமே வரவில்லை. சரியாக  அந்த நேரத்தில்தான் மாது
வரவேண்டுமா என்று நினைக்க  நினைக்க சங்கடமாய் இருந்தது.தன்னைத் தேடி
வந்து அடித்தாலும்  பரவாயில்லை.வெண்ணிலாவை  ஏதாவது செய்துவிடுவானோ  என்று
பயமாய் இருந்தது.ஏற்கனவே அவளுக்குக் கஷ்டம்  தன்னால் மீண்டும் இப்படி
ஒரு கஷ்டமா என்று நினைக்க  நினைக்க ஒரே தலைவலியாய்  இருந்தது. காலையில்
கடைக்குப்  போனதும் தானே வெளிப்படையாக  “அண்ணிய ஏதும் சந்தேகப்பட்றாதீங்க
அண்ணே அவங்க பாவம் நீங்க  இப்பிடி இருக்கீங்களேன்னு  பரிதாபப் பட்டுதான்
சும்மா  பாக்கப் போனேன் அவிங்க  பாவம்னே” என்று சொல்லிவிடலாம்  என்று
இருந்தான். ஆனால்  ராத்திரியில் அவளைப் போட்டு  அடித்துவிட்டால் என்ன
செய்வது என்கிற நினைப்பே  பெரும் துன்பமாய் இருந்தது. இப்போதே போய்
பார்க்கலாமா  என்று யோசித்தான். ஆனால்  நிலமை சந்தேகத்திற்கிடமில்லாமல்
சிக்கலாகிவிடும் என்று  பல்லைக் கடித்துக்கொண்டு  கட்டிலில் கிடந்தான்.

 

அவனால் முடியவில்லை  தூக்கம் வராதது மட்டுமல்ல.  வெண்ணிலாவை மாது
அடித்துக்கொண்டிருப்பதைப்  போலவே காட்சிகள் அவன்  மனதுக்குள் பேயாட்டம்
போட்டன. ஒருவேளை அவளை அடித்துத்  துரத்தியிருப்பானோ அல்லது  கொன்று
போட்டுவிடுவானோ  அப்படியெல்லாம் எதுவும்  நடந்திருக்காது கண்டவங்களையும்
கண்ட நேரத்திலயும் வீட்டுக்குள்ள  ஏத்தாதே அப்படின்னு சொல்லிட்டு
விட்டிருப்பான் என்று  மனம் ஒரு பக்கம் ஓயாமல்  சொல்லிக்கொண்டும்
இருந்தது. ஆனால் அந்தப் பேச்சு  ஒரு விநாடிகூட அவன் மண்டையில்
உறைக்கவில்லை. மாதுவைப்  பார்த்து அவன் காலில்  விழுந்து வெண்ணிலாவை
சந்தேகப்  படவேண்டாம் என்று கேட்டுக்கொண்டால்தான்  தனக்கு நிம்மதி என்ற
நினைவு அவனைக் கட்டிலில்  படுக்க விடாமல் புரட்டிக்கொண்டே  இருந்தது.

 

எழுந்து  வெளியே வந்தான். இளம்  காற்று வீசியது. தேய்பிறை  நிலா
வானத்தில் ஏங்கோ  கிடந்தது. ஆற்றுத் தண்ணீர்  போகும் சத்தம் இப்போது
துல்லியமாய் இங்கே வரைக்கும்  கேட்கிறது. அந்த அகாலம்  அவனுக்கு ஏனோ
புல்லரிப்பாய்  இருந்தது. மரங்களின் மெல்லிய  அசைவுகள் அவன் இதற்கு  முன்
இப்படி ஒரு கோலத்தில்  ஊரைப் பார்த்ததே இல்லை.  இந்த நேரம் இப்படியே
இருந்துவிடாதா என்று நினைத்தான். இரண்டு வீதி தாண்டி மாரியம்மன்
கோயிலைத் தாண்டி வடக்கே  செல்லும் ரோட்டின் கோடியில்  மாது வீடு மெல்லிய
நிலா  வெளிச்சத்தில் நாடகத்  திரை ஓவியம் மாதிரி தெரிந்தது.  மருத
மரத்தில் கோட்டானின்  சத்தம் இருந்திருந்தார்போலக்  கேட்கவும் அவன் உடல்
வெட்டி நிமிர்ந்தது. என்ன  பயங்கரமான குரல். இந்த  நேரத்தில் கோட்டான்
எதற்காகக்  கத்துகிறது. ஒருவேளை தான்  நினைத்ததைப்போல… அவனுக்குக்
கண்கள் கலங்கின. அழவேண்டும்  போல இருந்தது. வெண்ணிலாவின்  காலில்
விழுந்தும் மாதுவின்  காலில் விழுந்தும் கதறவேண்டும்  போல இருந்தது.
வேகவேகமாய்  நடையை எட்டிப் போட்டான். வீட்டை சுற்றிக்கொண்டுபோய்
புறக்கடைப் பக்கத்தின்  சிறிய சுவரைத் தாண்டிக்  குதித்து உள்ளே வந்தான்.
ஏதாவது அறையில் வெளிச்சம்  தெரிகிறதா என்று பார்த்துக்கொண்டே வந்தான்.
படுக்கை அறை எந்தப் பக்கம் என்று தெரியவில்லை. தேடிக்கொண்டே வந்தான்.
திடீரென்று யாரது என்ற கணீர் குரலில் கால்கள் வெலவெலத்துவிட்டன. அவன்
ஓடிப் போய்விடலாமா என்று திரும்பினான். மீண்டும் நில்லு என்று அதட்டும்
மாதின் குரல். அவன் நின் று தலையைக் குனிந்துகொண்டான். திடீரென்று
அப்போதுதான் தான் செய்த காரியத்தின் அபத்தம் புரிந்தது. சாயந்திரம் அவன்
வீட்டிலிருந்து போனதைக்கூட மாது சாதாரணமாக எடுத்துக்கொள்வான். ஆனால் இதை
மூளையே இல்லாதவன் கூட சாதாரணமாய் எடுத்துக்கொள்ள முடியாது. கடவுளே
எனக்குப் புத்தி ஏன் இப்படி மழுங்கிப்போனது. ஆள் வரும் ஓசை கேட்டது. அவன்
தலையை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. ஒரு பயங்கரமான கதறலை மிகக்
கட்டுப்படுத்தி வெளியேற்றிக்கொண்டிருந்தான். கிட்டே வந்ததும் பொதேரென
மாதுவின் காலில் விழுந்து இரண்டு கால்களையும் சேர்த்துக்
கட்டிக்கொண்டான். “அண்ணே என்ன வெட்டிப் போட்று. அண்ணி நல்லவங்க அவிங்கள
ஒண்ணும் செஞ்சிடாதே.” மாது கொத்தாக அவன் உச்சி முடியைப் பிடித்துத்
தூக்கினான். அவன் கண்கள்  ஓநாயினுடையதைப் போல மின்னின. அவனை முகத்தருகே
இழுத்து காறித் துப்பினான். ராஜாவுக்கு அப்போதே செத்துவிட்டதைப் போல
இருந்தது. “எச்சக்கலை நாயே எம்பொண்டாட்டி காஞ்சி கெடக்கறா ராத்திரியில
வந்தா தூக்கிக் காட்டுவான்னு நாக்கத் தொங்கப் போட்டுகிட்டு வந்தியா”
என்றான். ராஜா கையெடுத்துக் கும்பிட்டான். “வீட்டுப் பக்கமாவது கடப்
பக்கமாவது உன்னப் பாத்தேன் செருப்புலயே அடிச்சி கொன்னுறுவேன்
ஓடிப்போயிடு”. என்னக் கொன்னாலும் பரவாயில்ல வெண்ணிலா அண்ணிய ஒண்ணும்
பண்ணிடாதீங்க என்று சொல்ல நினைத்தான். அவனால் எதுவும் பேச முடியவில்லை.
வெளியே போக கொல்லைப் பக்கமாகத் திரும்பினான். “திருட்டு நாயே அங்க எங்க
போற இப்பிடிப் போ” என்று மாது முன்வாசலைக் காட்டினான்.

 

அவ்வளவு  குளிர்ந்த காற்றிலும்  ராஜாவுக்குப் புழுக்கமாய்
இருந்தது. தனக்குள் எந்தப்  பேய் புகுந்துகொண்டு இப்படி  ஒரு செயலை
செய்வித்தது  என்று நினைத்துக்கொண்டான். இனி என்ன வெண்ணிலாவின்  பெயர்
இந்த ஜென்மத்தில் மாற்ற முடியாத அளவுக்குக் கெட்டுவிட்டது. தான் கொஞ்சம்
பொறுமையாய் இருந்து காலையில் மாதுவைப் பார்த்துப் பேசியிருக்கலாம் என்று
இப்போது தோன்றியது. இந்த எண்ணம் ஏன் அப்போது ஒரு முறை கூட வரவில்லை என்று
புரியவில்லை. இப்போதுதான் தன்னுடைய முகத்தின் மீது மாதுவின் எச்சிலின்
நாற்றம் அடிப்பதைக் கவனித்தான். லுங்கியைத் தூக்கி முகத்தைத் துடைத்தான்.
அப்படியும் நாற்றமடித்தது இனி ஒரு காலத்திலும் அந்த நாற்றத்தைத் தன்னால்
துடைத்து விட முடியாது என்று நினைத்துக்கொண்டான்.

 

வெண்ணிலா  காலையில் மஞ்சளைப் பூசிக்  குளித்து மஞ்சள் நிறச்
சேலையைச் சுற்றிக்கொண்டு  வந்து சமையல் வேலையை  ஆரம்பித்தாள்.
தெருக்கோடியில்  வழக்கத்திற்கு மாறாக ஒரே  ஆரவாரமாய் கேட்டது. கதவைச்
சாத்திக் கொண்டு தெருப்  பக்கம் போனாள். நீலாக்காவின்  வாசலில் நின்று
கொண்டு  என்னக்கா என்று விசாரித்தாள். “உங்க வீட்டுக்காரரோட  தையல்
கடையில வேல செய்யறானே  ராஜா அவன் தூக்குப் போட்டுகிட்டு  செத்துட்டானாம்.
ராத்திரி  என்ன நேரம் தொங்குனானோ  இப்பத்தான் பாத்திருக்காங்க  ஒரே
கோராமையா இருக்குதாம்  நான் போய் பாக்க மாட்டேன்  சாமி நீயும் போயி
பாத்திடாத  வயசுப்புள்ள எதாவது ஆயிரப்  போவுது. வீட்டுக்குப் போ.”
என்றாள். வெண்ணிலாவுக்கு  அழுகையாய் வந்தது. “என்ன  ஆச்சாங்கா எப்பப்
பாத்தாலும்  எங்கிட்ட ஐயோ அண்ணி அண்ணன  ஒண்ணுமே கேக்க மாட்டிங்களான்னு
மாஞ்சி மாஞ்சி போவானே  ராத்திரி கூட வீட்டுக்கு  வந்து இப்பிடி தனியா
கெடக்கறீங்களேன்னு ஆத்தாமையா  பேசுனானே நா ஒரு எட்டுப்  பாத்துட்டு
வந்துடறேன்”. என்று திரும்பினாள் “ஐயோ  கண்ணு வேண்டாம் சொன்னா  கேளு.
நாக்கத் தள்ளிகிட்டு  ஒரே கோரமா தொங்கரானாம்  நீ வேற அங்கியெல்லாம்
போவாத இனிமே எங்க போனாலும்  கொஞ்சம் சாமி துண்ணூரு  நெத்தியில
வெச்சிகிட்டுப்  போ தெரியுதா” என்றாள்.

 

சமைக்கும்  வரைக்கும் அவளுக்கு அதே  நினைவாய் இருந்தது. பத்து
மணிக்கு மேல் மாது ஆற்றிலிருந்து  குளித்த கையோடு வந்தான். “ஏங்க எழவு
வீட்டுக்குப்  போயிட்டு வந்தீங்களா” என்றாள்.  அவன் எதுவும் பேசவில்லை.
எதனாலங்க என்றாள் அவன் எதுவும் சொல்லவில்லை. சோற்றைப் போட்டு வைத்தாள்.

 

“ஏங்க நா ஒரு எட்டுப் போயி பாத்துட்டு வந்துட்டுமா” என்றாள். “சவத்த
ஆஸ்பித்திரிக்கி எடுத்துகிட்டுப் போயிட்டாங்க சாயந்திரம் ஆயிரும்
வந்தபின்னால வேணா போயி தலைய காட்டிட்டு வா” என்றான். சாப்பிட்டுவிட்டு
உடனே கிளம்பிவிட்டான். அழுக்குத் துணிகளை அள்ளிக் கட்டிக்கொண்டு
சாயந்திரம் ராஜாவின் சவம் வருவதற்குள் போய் துவைத்துக்கொண்டு வந்து
விடலாம் என்று வீட்டைப் பூட்டிக்கொண்டு ஆற்றுக்குக் கிளம்பினாள்
வெண்ணிலா.

***

 

 

ஷாஅ கவிதைகள்

images

 

 

கவிதை 1

 

 

எத்தனை புயல்

 

அத்தனை மணல் உரசி நிற்கும்

 

வெள்ளை காணாத சுவர்

 

கீழே

 

கவிழ்ந்தும் கவிழாமலும்

 

கரும்பானையொன்று

 

எப்பொழுதும் மத்தியானமாக இருக்கும்

 

ஒரு உச்சிப்பொழுதில்

 

பானைக்குள் எட்டிப்பார்த்தேன்

 

அங்கே இருளில்லை

 

எல்லாம் இருட்டாக இருந்தது

 

அடியாழத்தில்

 

உருவிய வாள்போல்

 

முதல் வீரனின் வானம் பளிச்சிட

 

தலை நிமிர்த்தி

 

அண்ணாந்து பார்க்கிறேன்

 

நூறு நூறு ஆண்டுகள்முன்

 

இத்தலைமேல் படிந்த

 

அதே வெயில்

 

 

 

-ஷாஅ

 

 

 

கவிதை 2

 

 

 

 

 

மைதானத்தில் கால் வைத்ததில்லை

 

குறுக்கே நடந்து செல்ல அனுமதியுமில்லை

 

ஆனால் எப்பொழுதும்

 

ரசிகனாக இருக்கிறேன்

 

குதூகலமாக அரங்கத்தில் அமர்ந்து கொள்கிறேன்

 

எல்லோருடனும் சேர்ந்து

 

உற்சாகமாக ஆட்டம் போடுகிறேன்

 

பிடித்த அணி ஜெயிக்கவேண்டும்

 

தோற்றுப்போனால்

 

அவன் சரியில்லை

 

இவன் சரியில்லை

 

வசை கொஞ்சம் பாடித் தீர்த்தபடியே

 

ஆட்டம் என்றால் அப்படித்தான்

 

வரும் போகும்

 

என்னை நானே தேற்றிக்கொள்கிறேன்

 

ஒருநாளும் எப்படி

 

விளையாடுவது எனக் கற்றுக் கொள்ளாமலே

 

திரும்பிப் போகிறேன்

 

ஒவ்வொரு இருக்கையிலும்

 

ஒரு கிழிந்த சீட்டு

 

 

 

.**