Category: 2015

மருத்துவ உதவிக்கான ஒரு கோரிக்கை

download (7)

நண்பர் சண்முகசுந்தரம் கோபிசெட்டிப்பாளையத்தைச் சேர்ந்தவர். ஆனால் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக பெங்களூருடன் தொடர்பு கொண்டிருந்தார். கோபிசெட்டிப்பாளையத்திலும் பெங்களூரிலுமாக மாறிமாறி வசித்துவந்தார். அவர் நீண்ட கால இலக்கிய வாசகர். வாசிப்பின் வழியாக சிற்றிதழ் சார்ந்த எல்லா எழுத்தாளர்களுடனும் நேரடி அறிமுகம் கொண்டிருந்தார். சிரித்த முகத்துடன் அன்புடன் பேசக்கூடியவர். உரையாடலில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். இலக்கியம், நாடகம், திரைப்படம் சார்ந்து பேசிக்கொண்டே இருக்க விருப்பம் கொண்டவர். பெருமாள் முருகன் தொகுத்த கொங்குநாட்டு வட்டாரச்சொல் வழக்ககராதியைப் பிரசுரித்த பெருமை அவருக்குண்டு. சமீபத்தில் எதிர்பாராத விதமாக நிகழ்ந்துவிட்ட ஒரு சாலைவிபத்தில் தலையில் படுகாயமுற்று கோவை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். மூளைப்பகுதியில் ரத்தம் உறைந்துபோயிருக்கிறது. ஓர் அறுவை சிகிச்சை முடிந்திருக்கிறது. இன்னும் அறுவை சிகிச்சைகள் செய்யவேண்டியிருக்கிறது. நண்பர் எளிய குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் மருத்துவச் செலவுக்கு பொருளுதவி தேவைப்படுகிறது. நண்பர்கள் தம்மால் முடிந்த உதவியைச் செய்யவேண்டும்.

சண்முக சுந்தரத்தின் சித்தியையும் அம்மாவையும் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்: 9980636945, 9445275042

அவர் சிகிச்சை பெற்றுவரும் மருத்துவமனையின் தொலைபேசி எண்: 95009 80128 / 0422 4001000/4001001

சண்முக சுந்தரத்தின் சித்தப்பாவின் பெயர் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள்

N. NAGARAJAN

CORPORATION BANK

IFSC : CORP0000403

SAVINGS BANK ACCOUNT NUMBER 040300101004616

NARASIPURAM BRANCH

COMBATORE – 641109

ரியோ டி ஜெனிராவுக்கு – ( போர்த்துகீசியம் ) : கான்சலோ எம். டவாரெஸ் Gonçalo M. Tavares ஆங்கிலம் : ஃபிரான்சிஸ்கோ வில்ஹெனா Francisco Vilhena – தமிழில் ச.ஆறுமுகம்

GoncaloMTavares2905

கான்சலோ டவாரெஸ் 1970ல் பிறந்தவர். 2001லிருந்து போர்த்துகீசிய மொழியில் சிறுகதைத் தொகுதிகள் மற்றும் பல நாவல்களை வெளியிட்டு வருகிறார். இலக்கிய மேதைகள் பலரும் புகழும் இவரது படைப்புகளைப் படித்துவிட்டு நோபல் விருதாளரான ஜோஸ் சரமாகோ பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

‘’போர்த்துகீசிய இலக்கிய வானில் வெடித்துக் கிளம்பியுள்ள கான்சலோ எம். டவாரெஸ் உண்மையான அசல் கற்பனைத் திறனோடு, மரபார்ந்த கற்பனையின் எல்லைகள் அனைத்தையும் உடைத்தெறிந்துவிட்டார். இத் திறன், அவருக்கே சொந்தமான மொழியுடன், துணிவார்ந்த கண்டறிதல்களுமாக இணைந்து பேச்சுவழக்கின் திறமையாகி – இன்று எழுதிக்கொண்டிருக்கும் இளம் போர்த்துகீசிய நாவலாசிரியர்கள் மீது எந்த அவதூறும் சொல்லாமல் – கான்சலோ எம். டவாரெஸுக்கு முன்னும், டவாரெஸுக்குப் பின்னும் எனக்குறிப்பிடப்படுவது மிகைப்படுத்துவதாகாது. அதற்கு முன்பாகவே நிகழ்ந்தாலும் நிகழாவிட்டாலும், இன்னும் முப்பதாண்டுகளுக்குள், அவர் நோபல் விருதினை வெல்வார் என நான் கணிக்கிறேன். என்னுடைய வாக்கு பலிக்கும் என்பதிலும் நான் நிச்சயமாக இருக்கிறேன். என் ஒரே வருத்தம், அந்த நேரத்தில் உடனிருந்து அவரைப் பாராட்டி உச்சி முகர்வதற்கு நான் இருக்க மாட்டேனேயென்பதுதான்.’’

தற்போது தமிழாக்கம் செய்யப்பட்டிருக்கும் படைப்பு போர்த்துக்கீசிய மொழியில் பப்ளிகோ என்ற பெயரில் வெளியாகிப் பின்னர் ஆங்கிலத்தில் அதன் மொழியாக்கம் To Rio De Janeira என்ற பெயரில் கிரந்தாவில் வெளியானது.

*********

என் தாய் மிகச்சரியாகச் சமைத்தாள்;

சோறு, சிவப்புக் காராமணி, உருளைக்கிழங்கு பொரியல்

ஆனால், அவள் பாடினாள்

அட்லியா ப்ராடோ
1

இரண்டு நபர்களுக்கிடையிலான சராசரி தூரம் அளக்கப்படுகிறது. அளவுநாடாக்கள் துளைத்துச் செல்பவை அல்ல, இருப்பினும் கண்கள் அளக்கின்றன, மதிப்பிடுகின்றன, அது அதிர்ச்சியடையச்செய்கிறது, ஆவலைத் தூண்டுகிறது. கண்கள் மட்டுமே உணர்வினை அளக்கும் கருவி, அது நிச்சயம் என்பது மட்டுமல்ல, மிகத் துல்லியமான ஒன்றாகவும் இருக்கிறது.

மற்றும் அது அங்கே மட்டும்தான் அப்படியிருக்கிறது : ரியோ டி ஜெனிராவில் மனிதர்களுக்கிடையிலான தூரம் குறைவானதாக இருக்கிறது, அதுவன்றியும் அது, மகத்தான விளைவுகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.

நான் ரியோ டி ஜெனிராவுக்குள் நடந்து செல்லும்போது, நகரும் மனிதத் திடல்களைக் காணுகிறேன். தோலின் நிறம் உண்மையிலேயே இல்லாமற்போகும் ஒரே நகரம் இதுதான், பிரேசிலிலும் கூட. மற்ற நகரங்களில் வெள்ளை மனிதன் ஒருவனும் கறுப்பு மனிதன் ஒருவனும் அருகருகாக நடக்கும்போது, அவர்கள் உறுதியான, மிக உயர்ந்த தோழமையிலிருந்தாலும் கூட, நான் கறுப்பு மனிதனையும் வெள்ளை மனிதனையும்தான் காண்கிறேன். ரியோவில் அப்படியில்லை. ரியோவில் மனிதர்களின் திட்டுகள் உள்ளன. இருவர் திட்டுக்குப் பிறகு, நால்வர் திடல், ஆறுபேர் கொண்ட மற்றொன்று, பெரும் முயற்சிக்குப் பிறகே, என்னால் நிறங்களை வேறுபடுத்திக் காண முடிகிறது. ( ஒரு தொழில்சாராக் கலை விமரிசகனைப் போல) அந்தத் திடல்களிலிருந்து ஒரு கறுப்பு மனிதர், ஒரு கலப்பின மனிதர் மற்றும் ஒரு வெள்ளை மனிதர் (எடுத்துக் காட்டுக்காக) வருகின்றனர் – அதுவும் பெரும் முயற்சிக்குப் பிறகு, பெரும்பான்மைச் செயற்கையாக நாம் அதனை உணர்கிறோம்.

அப்போது, இரண்டு நபர்களுக்கிடையிலான சராசரித் தூரம் : உலகிலேயே மிகக் குறுகியதாகிறது.

2

ரியோ டி ஜெனிராவில் மனிதர்கள் அருகருகாக நடப்பதில்லை, அவர்கள் தனிநபர் அதிகாரங்கள் குறித்தான புரிதல் மீது விடாமல் கேள்விக்கணைகள் தொடுக்கும் தடைகளற்று நகரும் பெருந்திரள் இயக்கத்தில் ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து நடக்கிறார்கள். கேரியோக்கா1 ஒருவரின் பாதமும் தலையும் ஒரே அச்சில் எப்போதும் நிற்பதில்லை. ரியோவிலுள்ள உடல்கள் சாய்ந்து நடக்கும் உயிரினங்களுடையவை, தலை ஒருபோதுமே பாதங்களின் மேலாக அமைவதில்லை – எப்போதுமே சற்று, அல்லது அதிகமாக, அல்லது மிக அதிகமாக இடது அல்லது வலது பக்கமாகச் சாய்பவை. தலை முதல் பாதம் வரையிலான நேர்கோடுகள் அங்கு இல்லை; வளைகோடுகள் மட்டுமே உள்ளன. அதுவும் மகிழ்ச்சியில் திளைப்பனவாக உள்ளன.

(ஒரு கேரியாக்கோவின் உடல் நேராக நிமிர்ந்து நிற்பதில்லை, படுத்திருக்கும்போதுங்கூட; எல்லாமே தற்காலிகமாகச் சாய்வதற்கு வளைந்துகொடுப்பதற்கு, ஆர்வத்தோடு முந்துவதாக உள்ளன.)

3

கேரியோக்கோ யாருடனும் நான் போர்க்கப்பல் விளையாடியதில்லை. ஆனால், நிச்சயமாக இங்கு, அந்த விளையாட்டுக்கு விதிகள் வேறாக இருக்கும். கப்பல்களை ஒரேநிலையில் அப்படியே நிலையாக நிறுத்திவைப்பதைப்பற்றி நினைக்கவே முடியாது: a4.d5,a5,d8. அவை ஒவ்வொன்றும் அவற்றின் சொந்த வழியிலிருந்து இன்னொன்றின் வழிக்குள் (குறைந்தபட்சம் மாலைநேரங்களிலாவது) நுழைந்துவிடும். தலை ஓரிடமும், பாதம் வேறிடமுமாக.

ரியோவில், ஒருவரை அசையாமல் நிமிர்ந்து அமருமாறு கேட்டுக்கொள்வது – அது குழந்தையாக இருந்தாலும் சரி, நன்கு வளர்ந்துவிட்ட ஒரு ஆண் அல்லது பெண்ணாக இருந்தாலும் சரி – அது சொற்களாலானதும் உடலளவிலானதுமான வன்முறையின் வடிவமேதான். அறிவான கேரியாக்கோ பெற்றோர் எவரும் அவர்களுடைய குழந்தைகளை அசையாமல் அமைதியாக இருக்குமாறு கற்றுக்கொடுப்பதில்லை; மாறாக அவர்கள் இயங்குதலின் சில வேகங்கள் மற்றும் தீவிரங்களைச் சுட்டிக் காட்டுகிறார்கள். இடதுபுறமாகவா, வலதுபுறமாகவா, மேலாகவா அல்லது கீழாகவா – என்பதுதான் கேள்வி.

எந்த அமைதியான மனிதனும் சொர்க்கத்தின் அரசுக்குள் (சொர்க்கத்தின் அரசு ரியோ டி ஜெனிரா மாதிரியான ஏதாவது ஒன்றாக இருந்தால்) நுழையமாட்டான்.

4

அது பூமியிலிருந்து அல்லது வனங்களிலிருந்து அல்லது மலைகளிலிருந்து அல்லது தண்ணீரிலிருந்து கிளைத்ததாகவே கூட இருக்கட்டும், ஆனால், உண்மையென்னவென்றால், ரியோ டி ஜெனிராவில் மனிதர்களிடம் நடப்பதை நடனத்திற்கு மிக அருகிலான ஒன்றாக, நடனத்தை பகுதிப் பாலுணர்வினதாக, பகுதி மந்திர அசைவுகள் அவற்றால் முடிகிற அளவுக்கு நட்சத்திரங்களின் இயல்பான போக்கினை (அல்லது, குறைந்த பட்சம், மற்றொரு மனிதனின் இயல்பான திசையினை) மாற்றுவதான, அதிகப்படியான ஒரு சக்தி பிறக்கிறது.

பருவகாலத்தின் மகத்தான சக்தியினை ஒவ்வொரு மனிதரும் ஒரு மின்கலத்தைப் போலச் சக்தியேற்றப்படுவதாக வைத்துக்கொண்டால், `ஏ` க்கும் `பி`க்கும் இடையே நூறு மீட்டரே கூட இருந்தாலும், அந்த வழி மிகச்சிறந்ததாகவும் நேரானதாகவும் இருந்தாலும்கூட, யாரும் `ஏ`யிடமிருந்து `பி`க்குச் (எந்தவொரு நோர்டிக் அல்லது ஜெர்மானியரும் போல) சென்றுவிடுவதில்லை. செல்வதில்லை; ஏ மற்றும் பி இடையே கேரியாக்கோ குதித்தும் பகுதி முழுவதுமாகவும் செல்கிறார்; துடிப்பான நடன நடையென்பது சக்தியை வெளிக்காட்டுவதாகும்: என்னிடம் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு சக்தி இருக்கிறது, நான் நேர்கோட்டில் நடக்கவேண்டிய அவசியமில்லை. இதுவே, முடிவில், பொதுவான கொடைப்பொருளாகிறது. நகரம் கொடுக்கிறது, உடல் திருப்பி அளிக்கிறது.

5

(ரியோ, என்னவோ, வக்கிரம் மற்றும் வன்முறை போன்ற மிகப்பெரும் முரண்பாடுகளுக்கிடையே சிக்கியிருக்கும், மிகப்பெரும் அவலங்கள் கொதித்துக்கொண்டிருக்கும் நகரம் தானென்றாலும், இப்போது, இந்தக் கணத்தில், அதன் ஆர்வத் தனித்தன்மையை, உற்சாகத்தைக் கொண்டாடுவோம்.)

முடிவாக நாம் இதைச் சொல்வோம்: மகிழ்ச்சி என்பது சக்தியற்றது. அல்லது நாம் இப்படிச் சொல்வோம் : திறமையின் மீது எப்போதுமே திண்ணமாக உறைந்த ஒரு துயரம் படிந்திருக்கிறது. திறமை துள்ளிக்குதிப்பதில்லை.

முடிவாக, ரியோ டி ஜெனிராவில் ஒருவர் புரிந்துகொள்வது என்னவெனில் மகிழ்ச்சி மட்டுமே ஒரு உயிரின் இசைவிணக்கமாகிறது. கடல், காடு, மலைகளுக்கு இணையாக மனித நிலையும் அனைத்து இயந்திரங்களுக்கும் முந்தையதாக உள்ளது.

ஒரு சதுர மீட்டர் பெருமகிழ்ச்சியின் விலை : நிர்ணயிக்கப்பட்ட அளவை அலகு

வயதான மாடுகளுக்குச் சோகக் கண்களா?

கடவுளின் தண்டனைக்குப் பெயர் துயரம்

மற்றும், துறவியாவதென்பது மகிழ்ச்சியிலிருந்தும் ஒதுங்கிக்கொள்வது.

இதுவே நான் விரும்புவது.

அட்லியா ப்ராடோ

குறிப்பு

கேரியாக்கோ – ரியோ டி ஜெனிராவின் உள்ளூர் மக்கள்

*****************

ஷேக்ஸ்பியரின் ரோமியோ ஜூலியட் ( அங்கம் -4. ) ஆங்கில வழி மொழியாக்கம் – சத்தியப்பிரியன்.

ROMEO-JULIET-Amber

அங்கம் -4.

காட்சி-1

லாரன்ஸ் பாதிரியாரின் வீடு.

லாரன்ஸ் பாதிரியாரும் பிரபு பாரிசும் நுழைகின்றனர்.

பாதிரியார் : என்னது வியாழக்கிழமையா? நேரம் மிகவும் குறைவாக இருக்கிறதே.

பாரிஸ் : என் வருங்கால மாமனார் அந்தநாளைத்தான் குறித்துள்ளார். அவர் வேகத்தை நான் தடுக்க மாட்டேன்.

பாதிரியார் : அந்தப்பெண் என்ன நினைக்கிறாள் என்று தெரியவில்லை. பாதை கரடுமுரடாக இருக்கும்போது பயணிப்பது சிறந்ததில்லை.

பாரிஸ் : டிபல்டின் மறைவிற்காக அவள் மனம் உடைந்து வருத்தத்தில் அழுது கொண்டே இருக்கிறாள். அவளிடம் போய்ப்பேசலாம் என்றால் அவள் கேட்கும் நிலையில் இல்லை. கண்ணீர் மிதக்கும் இல்லத்தில் காதல் தேவன் சிரிப்பதில்லை. அவர் தந்தை கூட அவள் இந்த அளவிற்கு சோகத்தில் ஆழ்வது தீங்கு என்றுதான் நினைக்கிறார். அதற்கு மாற்றாகத்தான் எங்கள் திருமணத்தை அவசர அவசரமாக நிச்சயித்திருக்கிறார். அவள் விடாமல் தனக்குத் தானே அழுது கொண்டிருக்கிறாள். அவளுக்கு துணையாக நான் இருந்தால் அவளுடைய இந்த வருத்தம் நீங்கும். இப்போது புரிகிறதா அவர் ஏன் இவ்வளவு அவசரப்படுகிறார் என்று ?

பாதிரியார் ( தனக்குள் ) இந்தத் திருமணம் ஏன் தாமதமாகிறது என்ற காரணம் எனக்குத் தெரியாமல் இருக்கவே பிரியப்படுகிறேன். ( உரக்க ) அதோ அவளே வருகிறாளே .

( ஜூலியட் உள்ளே வருகிறாள் )

பாரிஸ் : வரவேண்டும் என் சீமாட்டியே ! என் மணவாட்டியே!

ஜூலியட் : இவ்வாறு அழைப்பது ஒருவேளை என் திருமணத்திற்குப் பிறகு பிரபு.

பாரிஸ் : அந்த ஒருவேளை திருவேளை ஆவது வெகுதொலைவில் இல்லை. இதோ வரும் வியாழனன்று.

ஜூலியட் : என்னது ஒருவேளை திருவேளை என்று .

பாதிரியார் அது ஒன்றுமில்லை ஜூலியட் ஒரு உத்திரவாதத்திற்கு.

பாரிஸ் : எதற்கு இங்கு வந்திருக்கிறாய் ?பாதிரியாரிடம் பாவ மன்னிப்பு கேட்கவா?

ஜூலியட் : உண்மையைச் சொல்வதென்றால் நான் உங்களிடம்தான் பாவமன்னிப்பு கேட்கவேண்டும்.

பாரிஸ் : அவரிடம் நான் அவனைக் காதலிக்கவில்லை என்று மட்டும் மன்னிப்பு கோராதே.

ஜூலியட் : அப்படி என்றால் உங்களிடம் அவனைக் காதலிக்கிறேன் என்று கோருகிறேன்.

பாரிஸ் : ஒப்புதல் வாக்கு கோருகிறாய் என்னை காதலிப்பதாக.

ஜூலியட் : அப்படி கோருவது என்றால் அது கண்டிப்பாக உங்கள் முகத்திற்கு நேராக அல்ல முதுகுக்குப் பின் நின்றுதான் கோர வேண்டியிருக்கும்.

பாரிஸ் : உன் முகம் கண்ணீரால் எப்படி இப்படி வாடி விட்டது பார்.

ஜூலியட் : இந்த விஷயத்தில் கண்ணீர் தோற்றுவிட்டது என்றுதான் கூறுவேன். அவை வருவதற்கு முன்பே என் முகம்வாடிதான் இருந்தது.

பாரிஸ் : இப்படி கூறுவதன் மூலம் கண்ணீரை விட உன் முகத்தை உன்னுடைய இந்த விமர்சனம்தான் மேலும் மோசமாக்குகிறது.

ஜூலியட் : அது பழிப்பதன்று; நிஜம். எதைச் சொன்னேனோ அது என் முகத்திற்குச் சொன்னேன்.

பாரிஸ் : உன் முகம் இனி என் முகம். அதை பழிக்க விடமாட்டேன்.

ஜூலியட் : இருக்கலாம். ஏன் என்றால் என் முகம் என்னுடையதல்ல. ( பாதிரியாரிடம் ) உங்களுக்கு என் ஒப்புதல் வாக்குமூலத்தைக் கேட்பதற்கு நேரம் இருக்கிறதா அருட்தந்தையே ! அல்லது மாலை நேர தொழுகைக்கு வரவா?

பாதிரியார் :உனக்கு ஒதுக்க நேரம் இருக்கிறது ஆழ்ந்த யோசனையுடைய பெண்ணே! ( பாரிசிடம் ) பிரபு தவறாக நினைக்கவில்லை என்றால் தாங்கள் விடை பெறலாம்.

ஜூலியட் : தெய்வ காரியத்தைத் தடுக்க நான் யார் ? ஜூலியட் வியாழன்று காலையில் உன்னை எழுப்புகிறேன்.( அவளை முத்தமிட்டு ) அதுவரையில் இந்த புனித முத்தம் போதும் உனக்கு. நான் வருகிறேன். ( மறைகிறான் ).

ஜூலியட் : ஹூஃப். கதவை மூடிவிட்டு என் அருகில் வந்து என்னுடன் சேர்ந்து கண்ணீர் விடுங்கள். எனக்கு நம்பிக்கையில்லை; தீர்வு இல்லை: மார்க்கமில்லை.

பாதிரியார் :ஜூலியட் உன் துக்கம் எனக்குத் தெரியும். என்ன செய்வது என்று என் மூளைக்கு ஒரு வழியும் தோன்றவில்லை. வரும் வியாழன்று நீ இந்தப் பிரபுவை மணக்க வேண்டியிருக்கும் என்ற செய்தியைக் கேள்விபட்டேன். அதைத் தடுக்க எந்த யோசனையும் என்வசம் இல்லை.

ஜூலியட் :கேள்விப்பட்டேன் என்று என்னிடமே கூறவேண்டாம் தந்தையே ! இதை தடுப்பதற்கு என்ன வழி என்று மட்டும் கூறுங்கள். அப்படி ஒரு வழியும் தோன்றவில்லை என்பது உங்கள் புத்திசாலித்தனம் என்றால் என் புத்திசாலித்தனத்தைக் கொஞ்சம் பாருங்கள் ( தனது இடுப்பில் மறைத்து வைத்திருந்த கத்தியை வெளியில் எடுக்கிறாள் ) இந்தக் கத்தியின் மூலம் நான் வழி தேடிக் கொள்கிறேன். உங்கள் கரங்களால்தான் எங்கள் இருவரையும் இணைத்து வைத்தீர்கள். உங்களால் ரோமியோவைப் பற்றிய இந்தக் கைகள் வேறு ஒருவனை பற்றுமேயானால் எனக்கு என்னை மாய்த்துக் கொள்வதைத் தவிர வேறு வழி தெரியவில்ல்லை. நீங்கள் அனுபவசாலி என்பதால் எனக்கு அறிவுரை கூறுங்கள். அல்லது ஒதுங்கி நின்று வேடிக்கை பாருங்கள். இந்த இக்கட்டிலிருந்து தப்பிக்க எனக்கு இந்தக் கத்தி போதும் தீர்ப்பெழுத. அறிவும், அனுபவமும் கொண்ட நீங்கள் தீர்க்க முடியாத இந்த வில்லங்கத்தை என்னுடைய கத்தி தீர்த்து விடும். வாய் திறந்து பதில் சொல்லுங்கள். உங்கள் வார்த்தைகளில் வழி இல்லையென்றால் மரணம் ஒன்றுதான் என் வழி.

பாதிரியார் :நில் பெண்ணே . ஒரு மார்கமிருக்கிறது. ஆனால் சிறிதளவும் நம்பிக்கையைக் கொடுக்காத அந்த மார்கத்தில் நடக்க அதீத நம்பிக்கை வேண்டும் . பாரிசை மணப்பதற்கு பதில் சாகத்துணிந்த உன்னால் சாவின் விளிம்பு வரை கொண்டு செல்லும் இந்த வழியில் உன்னால் பயணிக்க முடியும். அது ஒன்றுதான் உன்னுடைய அவமானத்தைத் துடைக்கும் வழி. மரணத்திற்கு நிகரான இந்த வழிதான் உன்னுடைய இப்போதைய அவமானத்திற்கு மாற்று. மரணத்துடன் மோதுவதே இதற்கு மார்க்கம். அதற்கு நீ துணிந்தாய் என்றால் உனக்கு நான் மருந்து தருகிறேன்.

ஜூலியட் : என்னைப் பாரிசை மணந்து கொள் என்று சொல்வதற்கு பதில் போர்க்களத்தில் பெரிய கோட்டையின் உச்சியிலிருந்து குதி என்று சொல்லுங்கள்; அல்லது கடுன்குற்றவாளிகள் வசிக்கும் பகுதியில் உள்ள வீதிவழியாக நடந்து விட்டுவரச் சொல்லுங்கள்; அல்லது கொடிய விஷ நாகங்கள் நிறைந்த புற்றினில் வசிக்கச் சொல்லுங்கள்; அல்லது கொடிய கரடிகள் நடுவில் என்னைக் கட்டி போடுங்கள்: துர்நாற்றம் வீசும் அழுகிய மனித உடல்களும், எலும்புக் கூடுகளும், தாடை எலும்புகள் இல்லாத மண்டை ஓடுகள் நிறைந்த ஒரு பிணவறையில் ஒரு இரவு முழுவதும் இருக்கச் சொல்லுங்கள்; அல்லது புதிதாக எழுப்பப்பட்ட கல்லறையைத் திறந்து புதிதாக புதைக்கப்பட்ட பிணத்தை கட்டி பிடித்து இருக்கச் சொல்லுங்கள். இது போன்ற செயல்களை கேட்ட மாத்திரத்க்தில் பயந்து அலறுபவள் நான். ஆனால் என் காதல் மணவாளனுக்காக இவற்றில் எதையும் செய்ய சித்தமாக இருக்கிறேன்.

பாதிரியார் : போதும் நிறுத்து. இனி சந்தோஷமாக உன் வீட்டிற்கு செல்லலாம். பாரிசை மணக்க சம்மதம் தெரிவித்த்து விடு. நாளை புதன்கிழமை. நாளை இரவு நீ உன்னறையில் தனியாக இருக்குமாறு உன்னை தயார் படுத்திக்கொள். உன் செவிலி உன்னுடன் இருக்க வேண்டாம். ( ஒருவிஷ மருந்து குப்பியை காட்டுகிறார் ) இதனை எடுத்துக் கொண்டு உன் படுக்கையறையில் ஏதாவது ஒரு பானத்துடன் கலந்து குடி. உன் நாடிகளில் ஒரு ஆழ்ந்த தூக்கம் பரவத் தொடங்கும். உன் நாடித் துடிப்பு மெல்ல அடங்கத் தொடங்கும். உன் உடல் சூடு தணிந்து மேனி குளிரத் தொடங்கும். உன் மூச்சு மெல்ல மெல்ல அடங்கத் தொடங்கும். இதழ்களின் இரத்தச் சிவப்பு சாம்பல் பூத்தது போல வெளுக்கத் தொடங்கும். உன் கண் இரப்பைகள் விழுந்து விடும். பகலின் வாசலை இரவு தட்டுவது போல மரணம் உன் உயிரைத் தட்டும். உன்னால் அசையமுடியாமல் போய் உன் உடல் பிணம் போல கிடக்கும். இந்த மரண நிலை உன் உடலில் மொத்தம் 42 மணிநேரம் நீடிக்கும். அதன் பிறகு உறக்கத்திலிருந்து எழுவது போல புத்துணர்வுடன் எழுவாய். மணமகன் உன்னை வியாழன் காலையில் உன்னை உன் படுக்கையறையில் எழுப்ப வரும்போது நீ இறந்து கிடப்பதைபோல இருப்பாய். நம் வழக்கப்படி உனக்கு புத்தாடை அணிவித்து உயர்தர மூடி திறந்திருக்கும் சவப்பெட்டியில் வைத்து கபுலெட் குடும்பத்தினருக்கு உரிய கல்லறைக்குக் கொண்டு செல்வார்கள். இதற்குள் நான் ரோமியோவிற்கு ஒரு வார்த்தை சொல்லி அனுப்புகிறேன். அவன் வருவான். நாங்கள் இருவரும் நீ எப்போது விழித்துக் கொள்வாய் என்பதை கவனித்துக் கொண்டிருப்போம். அன்றிரவே அவன் உன்னை மான்சுவாவிற்கு அழைத்துச் செல்வான். இது உன்னுடைய தற்போதைய சீர்கேட்டிலிருந்து காப்பாற்றும். இது உன் மன உறுதியைப் பொறுத்த விஷயம். இல்லை, நான் பயந்து நடுங்கி வாழப்போகும் ஒரு முட்டாள் பெண் என்றால் பிறகு நீ பேசியதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.

ஜூலியட் : கொடுங்கள் அந்த விஷக் குப்பியை. அச்சம் குறித்து எனக்கு கூறவேண்டாம். நான் எதற்கும் துணிந்து விட்டேன் இப்போது.

பாதிரியார் ( குப்பி ஒன்றை அவளிடம் தருகிறார். ) இந்தா . நீ கிளம்பு. இதே உறுதியுடனும் நம்பிக்கையுடனும் இரு. நான் ஒரு அருட்சகோதரனை அனுப்பி உன் ரோமியோவிற்குத் தகவல் அனுப்புகிறேன்.

ஜூலியட் : காதல் எனக்கு சக்தியளித்திருக்கிறது. சக்தி என் முயற்சியை வெற்றியடையச் செய்யும். வருகிறேன் அருட் தந்தையே.

( இருவரும் வெவேறு வழிகளில் மறைகின்றனர். )

திரை

காட்சி-2

திருவாளர் கபுலெட் இல்லத்தில் ஒரு கூடம்.

கபுலெட், திருமதி.கபுலெட், தாதி , ஒன்றிரண்டு வேலைக்காரர்கள் வருகின்றனர் .

கபுலெட் ( ஒரு பணியாளனிடம் ஒரு காகிதத்தை நீட்டுகிறார் ) இந்தப் பட்டியலில் இருப்பவர்கள் அனைவருக்கும் அழைப்பு அனுப்பு.

( முதல் பணியாளன் மறைகிறான் )

( இரண்டாவது பணியாளனிடம் ) தம்பி !எனக்கு திறமையான இருபது பரிசாரகர்களை ஏற்பாடு செய் .

இரண்டாவது பணியாள் : நான் கண்டிப்பாக மோசமான பரிசாரகர்களை அழைத்து வரமாட்டேன். நன்றாக சமைப்பார்களா என்பதை அவர்கள் கை விரல்களை அவர்களே நக்கி பார்க்க வைத்து கண்டு பிடித்துவிடுவேன்.

திருவாளர் கபுலெட் :அந்த முறையில் எப்படி கண்டுபிடிப்பாய் ?

இரண்டாவது பணியாளன் : சுலபம் ஐயா. எவன் ஒருவனுக்கு நன்றாக சமைக்கத் தெரியவில்லையோ அவனுக்கு தன் விரலை நக்க பிடிக்காது. எவன் ஒருவன் தன் கை விரலை தானே நக்க மறுக்கிறானோ அவன் ஒரு மோசமான சமையல்காரன். அவனை அழைக்க மாட்டேன்.

கபுலெட் : கிளம்பு நீ முதலில் ( இரண்டாவது பணியாளன் அகல்கிறான். ) இந்தத் திருமண நிகழ்ச்சிக்கு நாம் இன்னும் தயாராகவில்லை.( தாதியிடம் ) என்னது ஜூலியட் பாதிரியார் லாரன்சை பார்க்க போயிருக்கிறாளா ?

செவிலி : ஆமாம் நிஜம்தான் பிரபு.

கபுலெட் : அதுவும் நல்லதுதான். அருட்தந்தை எப்படியாவது அவள் மனதை மாற்றுவார். சரியான பிடிவாதக்காரி. ( ஜூலியட் உள்ளே நுழைகிறாள். )

செவிலி : பாருங்கள் அதோ அவள் பாவ மன்னிப்பு கேட்டு விட்டு முகத்தில் சந்தோஷத்துடன் வருகிறாள்.

கபுலெட் : தலைக்கனம் மிகுந்த பெண்ணே எங்கே சென்றுவிட்டு வருகிறாய் ?

ஜூலியட் : எங்கு என் தந்தை தாய் கூறுவதை கேட்டு நடக்காமல் இருப்பது பாவம் என்று கூறுவார்களோ அங்கு சென்றுவிட்டு வந்தேன். பாதிரியார் லாரன்ஸ் என்னை உங்கள் இருவர் பாதத்திலும் விழுந்து மன்னிப்பு கேட்கச் சொன்னார் ( அவள் இருவர் முன்பும் மண்டியிடுகிறாள் ) என்னை மன்னித்து விடுங்கள். மன்றாடிக் கேட்கிறேன். இந்தக் கணத்திலிருந்து இனி நீங்கள் சொல்வதை கேட்பேன்.

திருவாளர். கபுலெட் : நம் பிரவிற்கு சொல்லி அனுப்புங்கள். இங்கு நடந்ததைக் கூறுங்கள். நாளை காலையில் இந்த திருமணம் நிகழும்.

கபுலெட் : எனக்கு உன் மாற்றம் மிக்க மகிழ்ச்சியளிக்கிறது பெண்ணே. இது நல்லதற்குதான். எழுந்திரு. ( ஜூலியட் எழுந்திருக்கிறாள் ).இப்படித்தான் இது இருக்க வேண்டும். பிரபுவை இங்கு அழைக்க வேண்டும் கடவுள் சாட்சியாக இந்த வெனோரா நகரம் நமது பாதிரியாருக்கு மிகவும் கடன் பட்டிருக்கிறது.

ஜூலியட் : தாதிம்மா என் அறைக்கு வருகிறாயா? நாளை நான் அணிந்து கொள்ளவேண்டிய நகைகளையும் ஆடைகளையும் எடுத்து வைக்கலாம் வா என்னுடன்.

திருமதி.கபுலெட் : வியாழக்கிழமைதானே இன்னும் நேரம் இருக்கிறதே இப்பொழுதே எதற்கு ?

கபுலெட் :போ தாதி ஆவலுடன் போ. நாளை தேவாலயம் போகவேண்டும்.

( செவிலியும், ஜூலியட்டும் அகல்கின்றனர் )

திருமதி.கபுலெட் : நாளை மணநாளுக்கான மளிகை பொருட்கள் தேவையான அளவிற்கு இல்லை. பொழுதோ இருட்டத் துவங்கி விட்டது.

கபுலெட் : நான் பார்த்துக் கொள்கிறேன். முடுக்கிவிட்டால் போதும் எல்லாம் தன்னால் நடக்கும். நான் நிச்சயமாகச் சொல்கிறேன் மணவாட்டி. நீ ஜூலியட்டிடம் செல். அவளுக்கு வேண்டிய உதவிகளைச் செய்.நான் இன்றிரவு படுக்கைக்குச் செல்ல மாட்டேன். நான் தனியாக இருக்கிறேன். ஒரு குடும்பத்தலைவியின் பாத்திரத்தை இன்று ஒருநாள் நான் ஏற்றுக் கொள்கிறேன் . போ. ( திருமதி. கபுலெட் மறைகிறாள்).

ஹோ ! அப்பாடா ! அவர்கள் எல்லோரும் போய் விட்டார்களா ? நான் மெல்ல பிரபு பாரிசிடம் சென்று அவரை நாளைக்கு ஆயத்தபடுத்துகிறேன். என் மனம் ஆனதத்தில் நிரம்பி வழிகிறது. இந்தப்பெண் தனது சஞ்சலத்திருந்து இவ்வளவு சீக்கிரம் மீண்டு வருவாள் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.( கபுலெட் அகல்கிறார். ).

திரை.

காட்சி-3.

ஜூலியட் அறை. ஜூலியட்டும் செவிலியும் . ஜூலியட் கையில் ஓர் ஆடையுடன் நிற்கிறாள்.

ஜூலியட் : ஆமாம் இந்த ஆடை மிக அழகாக இருக்கிறது. நல்லது தாதிம்மா இன்றிரவு என்னை தனிமையில் இருக்க விடு. கடவுள் என்னை ஆசீர்வதிக்கட்டும். என் இரவு பிரார்த்தனையை செய்கிறேன். உனக்கே தெரியும் என் வாழ்க்கை எவ்வளவு சிக்கல்களும் பாவங்களும் நிறைந்ததென்று.( திருமதி.கபுலெட் நுழைகிறார் )

திருமதி.கபுலெட் : என் செல்லமே முனைப்பாக இருக்கிறாயா? என் உதவி தேவைப்படுமா என் கண்ணே?

ஜூலியட் :இல்லை அம்மா. நாளைய நிகழ்ச்சிக்கு தேவையான துணிமணிகளையும், அணிகலன்களையும் தேர்வு செய்து எடுத்து வைத்து விட்டோம். உனக்கு சந்தோஷம்தானே ? சரி இப்போது என்னை கொஞ்சம் தனிமையில் இருக்க அனுமதியுங்கள். பாவம் நீங்கள் ஒருவரே நாளை நடைபெறவிருக்கும் திடீர் மணவிழாவிற்கு ஒற்றை ஆளாக நின்று எல்லாவற்றையும் சமாளிக்க இயலுமா? இந்தத் தாதியையும் துணைக்கு அழைத்துக்கொள். என்னை சிறிது நேரம் தனிமையில் இருக்க விடுங்கள்.

திருமதி.கபுலெட் : அதுவும் சரிதான். நானும் தாதியும் கிளம்புகிறோம். நீ நன்றாக ஓய்வெடு. உனக்கு தூக்கம் அவசியம். ( திருமதி. கபுலெட்டும் தாதியும் அகல்கின்றனர்.. ).

ஜூலியட் : வந்தனம் போய்வாருங்கள். மீண்டும் நாம் எப்போது சந்திப்போம் என்பது அந்தக் கடவுளுக்குதான் வெளிச்சம்.. என் நாளங்களில் ஒருவித அச்சம் படர்வதை என்னால் உணரமுடிகிறது. வாழ்வின் வெப்பத்தை அது குளிரச் செய்து வருகிறது. ஓ ! அவர்களை உதவிக்கு அழைக்கிறேன்.தாதியம்மா ! அவளை அழைத்து என்ன பயன் ? நான் ஒற்றையாக சமாளித்துக் கொள்கிறேன். (விஷக் குப்பியை வெளியில் எடுக்கிறாள் ) வா குப்பியே. இந்த விஷம் வேலை செய்யாமல் போனால் என்ன செய்வது ? நாளை நான் மணம்புரிந்து கொள்ள நேரிடுமோ? ச்சே ச்சே ! அப்படி எதுவும் நேராது. அப்படி நேர்ந்தால் இது காப்பாற்றும் ( கத்தி ஒன்றை கீழே வைக்கிறாள் ). அவர் மணம்புரிந்து வைத்த ரோமியோவை விடுத்து நான் பாரிசை மணப்பது பிடிக்காமல் பாதிரியார் லாரன்ஸ் ஒருவேளை இந்த மருந்தில் நிஜமாகவே விஷம் கலந்திருப்பாரா? இருக்காது. இதில் நிச்சயம் விஷம் கலந்திருக்காது. பாதிரியார் நம்பத் தகுந்த மனிதர்தான். நான் கல்லறையில் சவப்பெட்டியில் கிடக்கும்போது என்னை மீட்க வரும் ரோமியோ சற்று தாமதமாக வந்து விட்டால்?.. அதற்குள் எனக்கு விழிப்பு வந்து விட்டால் ? …….. ஐயோ ! அது ஒரு அச்சமூட்டும் நினைப்பு. கல்லறையில் எப்படி கிடப்பது ? அங்கு சுவாசிக்க நல்ல காற்று இருக்குமா? ரோமியோ வரும்வரை என்னால் தாக்கு பிடிக்க முடியுமா? ரோமியோ வருவதற்குள் தாக்கு பிடிக்க முடியாமல் இறக்க நேரிட்டால்? சரி இறக்காமல் மயக்கம் தெளிந்து இருக்க நேரிட்டால் என்னை சுற்றி மரணமும் மௌனமும் இருளும் சூழ்ந்திருக்கும். அந்த நினைப்பே திகில் ஊட்டுவதாக உள்ளது. பல நூறு ஆண்டுகளாக இறந்த என் மூதாதையரின் பிணங்களின் எலும்புக் குவியல் புதைக்கப்பட்ட கல்லறைக்குள் நான். இளம்பிணனமான திபால்டின் உடலும் அங்கு கல்லறையில் மண்ணில் மக்கிக் கொண்டிருக்கும்.. மற்றவர்கள் சொல்வது போல இரவில் கல்லறையில் ஆவிகள் அலைந்து கொண்டிருக்குமோ? ஐயோ ஐயோ ! கண்டிப்பாக அப்படி எதுவும் இருக்காது. இல்லை இல்லை ! பிணநாற்றம் என்னை உறங்கவிடாமல் செய்து விடும். அங்கு எழும் ஓலங்களை கேட்க நேரிட்டால் பைத்தியம் பிடித்து விடாதா? குறித்த நேரத்திற்கு முன்பாகவே எனக்கு விழிப்பு வந்து விட்டால் இந்த திகில் ஊட்டும் விஷயங்களும் , அச்சமூட்டும் செயல்களும் என்னை பைத்தியம் ஆக்கிவிடாதா? பைத்தியம் பிடித்த நிலையில் என் மூதாதையர்களின் எலும்புகளை எடுத்து விளையாடத் தொடங்கி விட்டால்? டிபல்டை அவனுடைய மரணப் போர்வையிலிருந்து எழுப்பி விடுவேனோ ? இந்த விளையாட்டில் மறந்து போய் ஒரு மூதாதையரின் எலும்பினால் என் கபாலத்தை நான் பிளந்து கொண்டுவிட்டால் ? பார் நான் டிபல்டின் ஆவியைப் பார்க்க போகிறேன்.டிபல்டின் ஆவி ரோமியோவிற்காக காத்திருக்கும். பொறு டிபல்ட். பொறு ரோமியோ ! இதோ இந்த விஷமருந்து உங்களைத் தேடி நான் வருகிறேன்.

( நஞ்சு கலந்த மருந்தை உண்டுவிட்டு படுக்கையில் சாய்கிறாள். )

.திரை.

சகாயம் : தமிழகத்தின் கெஜ்ரிவால்? ( பள்ளி தொடர்பான சில விஷயங்கள் ) ( பகுதி 2 ) / அத்தியாயம் 31 / B.R. மகாதேவன்

download (5)

இன்று உலகம் விஞ்ஞானத்துறையில் பல உச்சங்களை எட்டியிருக்கிறது. சில நாடுகளில் எந்த நாளில் எந்தெந்த மணித்துளிகளில் எவ்வளவு மழை பெய்யும் என்பதைக்கூடத் துல்லியமாகச் சொல்லமுடிகிறது. வெனிஸ் போன்ற இடங்களில் ஊருக்குள் பெருவெள்ளம் வராமல் தடுக்க பெரும் தடுப்புகளை கடலுக்குள்ளேயே உருவாக்கியிருக்கிறார்கள். ஆனால், நாம் அந்த அளவுக்கு முன்னேறவில்லை. நம் வானிலை ஆய்வுகளின் வெற்றி சதவிகிதம் 50% கூடக் கிடையாது. மழை பெய்யும் என்று பத்து முறை சொன்னால் ஐந்து முறை பலிக்கும். ஐந்து முறை பொய்க்கும். முன்பைவிட இப்போது முன்னேறியிருக்கிறோம் என்பது உண்மையே. ஆனால், இன்னும் ரொம்பதூரம் இதில் பயணப்படவேண்டியிருக்கிறது

இந்த இழப்புக்கு மூன்றாவதும் மிகவும் முக்கியமானதுமான காரணம் செம்பரம்பாக்கம் ஏரியை ஆரம்பத்திலேயே திறக்காததுதான். இதற்குத் தீர்வு என்று எதையுமே சொல்ல முடியாது. மழை நிற்காமல் பெய்யும் என்று ஏரி நிர்வாகிகளோ அரசு இயந்திரமோ எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். பெய்த மழை நீரைத் தேக்கி வைத்துக்கொண்டால் கோடை காலத்தைச் சமாளிக்க உதவும் என்று நினைத்துத்தான் ஏரியை ரொம்பவிட்டிருப்பார்கள். இது மிகவும் நியாயமான எண்ணமே.

அதோடு முழுக் கொள்ளளவை எட்டியதும் திறந்துவிடத் தீர்மானித்தபோது அந்த ஏரியில் இருந்து வெளியேறும் நீரின் அளவை மட்டுமே கணக்கில் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே பெய்த மழையால் அனைத்து ஏரிகளும் ஆறுகளும் சாலைகளும் நிரம்பிவிட்டிருக்கும் நிலையைக் கணக்கில் கொள்ளவில்லை. அப்படியே கணக்கில் கொண்டிருந்தாலும் இனியும் திறக்காவிட்டால் ஏரி உடைந்துவிடும் என்ற நிலை வந்த பிறகு திறக்காமல் இருக்கவும் முடியாது. எனவே, ஏற்கெனவே வெள்ளக்காடாக இருந்த சென்னை நகரம் இந்த வெள்ளமும் சேர்ந்துவிடவே மூழ்கிவிட்டது.

உண்மையில் இந்த இழப்புக்கான காரணங்களை சதவிகிதக் கணக்கில் போட்டால் ஆக்கிரமிப்புகள் 30%, பெரு மழை 30% இருக்கும். செம்பரம்பாக்கம் ஏரியைத் திறந்ததுதான் 40% காரணம். ஒருவேளை அந்த ஏரியைத் திறக்காமல் இருந்திருந்து அது உடையாமலும் இருந்திருக்குமென்றால், இழப்புகள் பத்தில் ஒரு பங்காகக் குறைந்திருக்கும். ஆனால், இந்த இழப்புக்கு அந்த ஏரியின் நிர்வாகிகளையோ அரசி இயந்திரத்தையோ எந்த அளவுக்குக் காரணமாக்க முடியும். இப்படியான ஒரு நிகழ்வு தமிழர்களின் வாழ்க்கையிலேயே முதன் முதலில் நடந்திருக்கிறது. எந்தக் கடந்தகால அறிவும் இதைத் தடுத்திருக்க முடியாது. கிட்டத்தட்ட சுனாமி போன்ற பேரிழப்புதான். இனிமேல் இதுபோல் நடக்காமல் தடுக்க இந்த அனுபவம் தரும் பாடமே நமக்கு உதவும். மேலும் இப்படியான இயற்கைப் பேரிடர் இனி பத்து 15 ஆண்டுகளுக்கு வரவும் செய்யாது.

அடுத்த காரணம், வானிலை ஆய்வறிக்கையைப் பொருட்படுத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்திருக்கவேண்டும். இதிலும் அரசைக் குறை சொல்லிப் பலனில்லை. பி.பி.ஸி.தான் இந்த கன மழையை யூகித்துச் செய்து வெளியிட்டிருந்தது. நம் வானிலை மையங்கள் அப்படியான அழுத்தமான எச்சரிக்கையை வெளியிட்டிருக்கவில்லை. மேலும் நம் வானிலை ஆய்வறிக்கை குறித்து யாருக்குமே நல்ல அபிப்ராயம் கிடையாது. நமது தொழில்நுட்பத்தால் அவ்வளவுதான் முடியும். யாரையும் குறை சொல்லிப் பலனில்லை. ஒருவேளை இந்த வானிலை ஆய்வு நிபுணர்கள் ஆற்றின் கரைகளில் வசிக்கும் மக்களிடையே முகாமிட்டு தயவுசெய்து இடத்தைக் காலி செய்துவிடுங்கள் என்று காலில் விழுந்து மன்றாடியிருந்தால்கூட ஒருவரும் அதைப் பொருட்படுத்தியிருக்கமாட்டார்கள். எனவே வானிலை ஆய்வறிக்கையை அரசு இயந்திரம் தீவிரமாகப் பரிசீலிக்காததைப் பெரிய தவறாகச் சொல்லவே முடியாது. இப்படி ஒரு இழப்பு வந்தால்தான் இவையெல்லாம் நமக்குப் புரியும். ஹெல்மெட் போட்டுக் கொள்ளாமல் சென்றால் விபத்தில் உயிர் போகும் என்று தெரிந்த பிறகும் எத்தனை பேர் போட்டுக்கொள்கிறார்கள். அப்படி ஒரு விபத்தில் சிக்கி அடிபடுபவர் கூட அடுத்த ஒரு சிலமாதங்களுக்கு வேண்டுமானால் ஹெல்மெட் அணிந்துகொள்வாரே தவிர தொடர்ந்து அவரும் அணிந்துகொள்ளமாட்டார். அது மனித இயல்பு. அப்படியான மனிதர்களைப் பெருவாரியாகக் கொண்ட அரசும் அப்படித்தான் செயல்படும்.

தொடர் வறட்சி, தொடர் வெள்ளப் பாதிப்புகளில் இருந்து நாம் எந்தப் பாடத்தையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதை நிச்சயம் கண்டிக்கத்தான் வேண்டும். அது வேறு விஷயம். ஆனால், இது அவற்றில் இருந்து முற்றிலும் மாறுபட்ட இழப்பு. முன் வரலாறு இல்லாதது.

அடுத்ததாக, ஏரிகள் நிரம்பியதும் அதைத் திறந்துவிடுவதற்கு முன்பாக கரையோர மக்களைப் பாதுகாப்பான இடங்களுக்குப் போகச் சொல்லியிருக்கவேண்டும். இதைச் செய்யவில்லை. இதற்கான காரணம், முன்பே சொன்னதுபோல், நகரம் வெள்ளக்காடாகியிருப்பதைக் கணக்கில் கொள்ளாமல் ஏரி நீரின் அளவை மட்டுமே கணக்கில் கொண்டு செயல்பட்டதால் வந்த வினை. ஒரு தொட்டியின் கொள்ளளவு ஐநூறு லிட்டர் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் ஒரு 100 லிட்டர் கொள்ளளவுகொண்ட வாளியில் இருந்து நீரை அதில் ஊற்றத் தீர்மானிக்கிறீர்கள். தொட்டியின் கொள்ளளவு இதைவிட அதிகம் என்பதால் துணிந்து நீரை ஊற்ற முடிவெடுக்கிறீர்கள். ஆனால், அந்தத் தொட்டியோ ஏற்கெனவே 450 லிட்டர் நிரம்பிவிட்டிருக்கிறது. இதை நீங்கள் கணக்கில் கொள்ளாமல் 100 லிட்டர் வாளியை அதில் கவிழ்த்தால் தண்ணீர் வெளியே பாயத்தான் செய்யும்.

இப்போது 100 லிட்டர் வாளியைக் கவிழ்த்தவர் செய்தது தவறுதான். ஆனால், அவர் தொட்டி நிரம்பி வழிந்தால் ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அதைச் செய்தார் என்று சொல்ல முடியாது. உண்மையில் 100 லிட்டர் வாளி உடைந்தால் ஏற்படும் இழப்பைத் தடுக்கவே அவர் அந்த வாளி நீரை தொட்டியில் ஊற்றினார். அவருடைய செயல்தான் இழப்புக்குக் காரணம் என்றாலும் அந்த இழப்பை அவர் திட்டமிட்டு உருவாக்கியதாகச் சொல்ல முடியாது. அதுபோல், இந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தமது பகுதி பாதிக்கப்படாது என்ற நினைப்பில் இருந்தவர்களே. அவர்களைக் குறையாகச் சொல்லவில்லை. அவர்களுடைய மனநிலை அப்படியாக இருந்திருக்கிறது. 100 வருடங்களாக மூழ்காத சென்னை இந்த மழைக்கா மூழ்கிவிடப்போகிறது என்று மக்கள் நினைத்தார்கள். அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசும் அதுபோலவே நினைத்தது.

ஒருவேளை இப்படியான பாதிப்புகள் ஏற்படுமென்று தெரிந்தே அதைச் செய்தார்களா..? இப்படி நடந்திருக்கவும் வாய்ப்பு உண்டு. இந்திய வானிலை மையங்கள் மட்டுமல்லாமல் உலகளாவிய வானிலை மையங்களும் இந்த அபாய எச்சரிக்கையை விடுத்திருந்தன. அதன் பிறகும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை? ஏரியானது எந்த முன்னறிவிப்பும் இன்றி ஏன் திறந்துவிடப்பட்டது? அதாவது திறந்ததே தெரியாதவகையில் ரகசியமாக அந்த நடவடிக்கை ஏன் எடுக்கப்பட்டது? ஏரியைத் திறந்ததால் அல்ல… கன மழையினால்தான் சென்னை மூழ்கியது என்று சொல்லித் தப்பிக்கத் திட்டமிட்டார்களா..? கரையோர ஆக்கிரமிப்புகளை அகற்றக் கிடைத்த நல்ல வாய்ப்பு என்று நினைத்தார்களா..? நிவாரண உதவிகளைத் தந்து வாக்குகளை வென்றெடுக்க இயற்கையே தந்த நல் வாய்ப்பு என்று கருதிச் செயல்பட்டிருக்கிறார்களா..? நடந்தவை கை மீறி நடந்த தவறா… திட்டமிட்டுச் செய்யப்பட்டதா?

பிஹாரில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ள இழப்புகள் குறித்துக் கவலைப்பட்ட அப்துல்கலாம், ஒவ்வொரு ஆண்டும் நிவாரணமாகக் கொடுக்கும் தொகைக்கு பதிலாக, ஒரே தடவையில் கணிசமான தொகையை ஒதுக்கிச் சில நீர் மேலாண்மை நடவடிக்கைகளை எடுத்தால் வெள்ளத்தில் இருந்து நிரந்தரப் பாதுகாப்பு கிடைக்கும் என்று மாநில அரசுக்கு திட்டம் ஒன்றை அளித்ததாராம். அப்படிச் செய்துவிட்டால் ஆண்டுதோறும் அடித்து மாற்றப் போதிய பணம் கிடைக்காமல் போய்விடுமே என்று அந்தத் திட்டத்தை மாநில அரசு கிடப்பில் போட்டதாம்.

நம் ஊர்களில் முந்தைய காலங்களில் போடப்பட்ட சாலைகளில் இந்த அணுகுமுறையைப் பார்த்திருப்போமே. வருடா வருடம் செம்மண்ணையும் கல்லையும் கொட்டி சாலை என்ற பெயரில் எதையோ போடுவார்கள். ஒவ்வொரு மழையிலும் அது கரைந்து குண்டும் குழியுமாக ஆகும். மீண்டும் அடுத்த கோடையில் சாலையைப் போடுவார்கள். மழைக்காலத்தில் அது கரையும். இப்படி ஆண்டுதோறும் செலவிட்டால்தானே பஞ்சாயத்து தலைவரும் அவருடைய அல்லக்கைகளும் டாட்டா சுமோக்களில் ஊரை வலம்வர முடியும். எனவே, அரசியல்வாதிகள் பிரச்னைகளைத் தீர்க்க அல்ல… அவை தொடர்ந்து இருக்கவேண்டும் என்றே விரும்புகிறார்கள். ஈயம் பூசின மாதிரியும் இருக்கணும்… பாத்திரத்தின் ஓட்டை அடைபடவும் கூடாது. இதுதான் மூன்றாம்தர அரசியல்வாதிகளின் இலக்கு. எனவே, அவர்கள் இந்த வெள்ளத்தையும் தமது அரசியல் நலன்களுக்கு உகந்தவகையில் கையாண்டிருக்கக்கூடும்.

இதற்கு என்ன தீர்வு? மக்கள் நேர்மையான அரசியல்வாதிகளைக் கண்டுபிடித்து ஆதரவு தரவேண்டும். நேர்மையான அரசியல்வாதி என்ற பதம் இன்றைய சூழலில் ஏதோ முரண் தொடர் (ஆக்ஸிமோரான்) போலிருக்கிறது. காந்தி, காமராஜர், கக்கன் போன்றவர்கள் வாழ்ந்த சமூகத்தின் இன்றைய நிலை அதிலும் இத்தனை வேகமான வீழ்ச்சி என்பது அதிர்ச்சியையே தருகிறது. உண்மையில் அவர்கள்தான் விதிவிலக்குகள் போலிருக்கிறது. நம் சமூகம் என்றுமே நேர்மையாளர்களுக்கு ஆதரவானது அல்ல போலிருக்கிறது.

எனினும், இன்றைய அரசியல்வாதிகளில் அல்லது சமூகப் பிரபலங்களில் மக்களுக்கு கூடுதல் நன்மை தர முடிந்தவர் யார், அப்படியான கட்சி எது என்பதை அலசிப் பார்த்து ஒரு முடிவுக்கு வரலாம். புது தில்லியில் ஆட்சியைப் பிடித்திருக்கும் கெஜ்ரிவால் இருட்டறையில் ஏற்றப்பட்ட தீபம் போல் வந்தார். ஆனால், சோனியா, ஷீலா தீட்சித் மீதான ஊழல் வழக்குகளில் அவர் காட்டும் சுணக்கம், ஊழலின் சக்கரவர்த்தியான லாலுவுடனான கைகோர்ப்பு என தொடர்ந்து அந்த தீபத்தில் இருந்து ஒளியைவிடக் கரும் புகையே அதிகம் வரத் தொடங்கியிருப்பதால் ஏற்கெனவே இருட்டாக இருந்த அறையில் மூச்சுமுட்டல்தான் அதிகரித்திருக்கிறது. அந்தவகையில் அண்ணா ஹசாரேயின் தியாகத்தின் மூலம் கிடைத்த நற்பெயரைத் தன் பக்கம் திருப்பிக்கொண்டு ஆட்சியைக் கைப்பற்றியிருக்கும் கெஜ்ரிவாலிஸம் முதல் கோணல் முற்றும் கோணலாக ஆகவே வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் அதிமுக, திமுகவுக்கு மாற்று சக்தியாக எந்தக் கருத்தியல் அல்லது யார் முன்னிலை பெற வாய்ப்பு இருக்கிறது?

இதற்கு தமிழகத்தின் பிரதான கருத்தியல் என்ன என்று பார்க்கவேண்டும். திராவிட அரசியல், தமிழ் பெருமிதம், நாத்திகம், சாதி எதிர்ப்பு என சொல்லிக்கொண்டாலும் இவற்றின் அடிநாதமாக இருந்ததெல்லாம் சூத்திர மேலாதிக்கமே. தமிழக அரசியல் இயக்கங்களின் இந்து எதிர்ப்பு என்பது வெறும் பேச்சளவிலான ஒன்றுதான். இஸ்லாமியப் பெரும்பான்மையோ கிறிஸ்தவப் பெரும்பான்மையோ இருந்திருந்தால் அவை இந்து சக்திகளை முற்றாக அழித்தொழித்துவிட்டிருக்கும். இந்து சூத்திரரின் அரசியலாக அது இருந்ததால்தான் திராவிட இயக்கத்தின் இந்து எதிர்ப்பு என்பது தமிழகத்தின் அரசுச் சின்னமாக இருக்கும் கோபுரத்தைக்கூட அசைக்க முடியாத அளவுக்கு பல் இல்லாத பாம்பாகவே இருந்தது. திருடன் கையில் சாவியைக் கொடு என்ற பழமொழிக்கு ஏற்ப திமுக கையில் ஆட்சியைக் கொடுத்திருக்கிறார்கள் தமிழக இந்துக்கள். திராவிட இயக்கத்தினர் பேசிய அசட்டு நாத்திகம் கூட வெறும் இந்து எதிர்ப்பு என்ற அளவில் சுருங்கியதால் அதை யாருமே பொருட்படுத்தவில்லை.

சாதி எதிர்ப்போ சாதி சமத்துவமோ திராவிட இயக்கத்தின் கொள்கையாக என்றுமே இருந்ததில்லை. அது பிராமண மேலாதிக்கத்தைப் பெயர்க்கும் போர்வையில் இடை நிலைசாதி மேலாதிக்கத்தையே கொண்டுவந்திருக்கிறது அப்படியானால், அந்த அளவுக்காவது அது ஒரு முற்போக்கான பங்கை ஆற்றியிருக்கிறது என்று சொல்லலாம் என்று பார்த்தால், அதற்கும் எந்த வழியும் இல்லாத நிலையே இருக்கிறது. ஏனெனில் பிராமண மேலாதிக்கம் அரசியல் தளத்தில் குறைந்திருக்கிறதே தவிர சமூகப் பொருளாதாரத் தளங்களில் அது கருக்குலையாமல் இருக்கவே செய்கிறது. மேலும் இடைநிலை சாதியினர் அப்படியொன்றும் ”பிராமணக் கருத்தியல்’களில் இருந்து விடுபட்டிருக்கவுமில்லை. ஆங்கில வழிக் கல்வி, பெரு வணிக ஆதரவு, தனியார் மயமாக்கம், விவசாய விரோத நடவடிக்கைகள் என எதை எடுத்துக்கொண்டாலும் பிராமண நலன் சார்ந்தே திராவிட இயக்கங்கள் செயல்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல் தலித்களுக்கு இந்த இடை நிலை சாதிகள் இழைத்துவரும் கொடுமைகள் பிராமணர்கள் செய்ததைவிடப் பல மடங்கு அதிகம்.

அப்படியாக திராவிட அரசியல் கொள்கைகள் எல்லாம் வலுவிழந்த அல்லது உருத்திரிந்த நிலையில் சூத்திர ஜாதி அரசியல் இப்போது எதை நோக்கி நகர்கிறது? அது பொருளாதார மேம்பாட்டை இலக்காகக்கொண்டு ஊழலற்ற நிர்வாகத்தை முன்னிறுத்துகிறதா? தமிழ் தேசியத்தை நோக்கி நகர்கிறதா? இந்து தேசியத்தை நோக்கி நகர்கிறதா? தலித் விரோதத்தை மையமாகக் கொண்டு இடைநிலை வன்முறை அரசியலாக ஆகிறதா?

download (6)

சகாயம் ஐ.ஏ.எஸ். ஊழலற்ற நிர்வாகத்தின் குறியீடாக இருக்கிறார். வைகோ, சீமான் போன்றோர் தமிழ் தேசியத்தின் குறியீடாக இருக்கிறார்கள். இந்து தேசியத்துக்குத் தலைவர் என்று சொல்லும் வகையில் யாரும் இல்லையென்றாலும் திமுக, அதிமுகவுக்கு மாறாக தேசியக் கட்சியான பாஜகவை வளர்த்தெடுக்கும் வாய்ப்பு மத்தியில் இருக்கும் மோதிக்கு இருக்கிறது. அவரோ பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிப்பதற்கு பதிலாக அதிமுகவின் தோளில் ஏறி அதைச் சாதித்துக் கொள்ளலாமென்று நினைப்பதுபோல் தெரிகிறது. அது மீண்டும் அதிமுக ஆட்சியையே கொண்டுவரும். பாட்டாளி மக்கள் கட்சியின் செயல்பாடுகளைப் பார்த்தால் இடைநிலை ஜாதி வன்முறை அரசியலை நோக்கிப் போவதுபோலவே தெரிகிறது. உத்தரபிரதேசத்து முலாயம் போல் ராமதாஸ் ஆகவிரும்புகிறார் என்றால் தமிழகத்தில் அவர் மேலும் தனிமைப்பட்டுத்தான் போவார்.

இந்த நிலையில் இந்த நான்கில் சகாயம் முதலமைச்சராவதே ஒப்பீட்டளவில் தமிழக மக்களுக்குக் கூடுதல் நன்மையைத் தரும். ஆனால், சாதிப் பிரச்னை, இட ஒதுக்கீடு, மதப் பிரச்னை, தமிழ் தேசியம், இந்திய தேசியம், ஈழப் பிரச்னை, அணு உலைகள், விவசாயம், கார்ப்பரேட் கம்பெனிகள், தாய் மொழிக் கல்வி என நம் மாநிலம் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் அவருடைய நிலைப்பாடு என்ன என்று நமக்குத் தெரியாது. இருந்தும் ஊழலற்ற நிர்வாகத்தை அவர் முன்வைக்கிறார் என்பது மிகுந்த நம்பிக்கை தரும் விஷயம். எந்தவொரு விஷயத்தையும் அதேபோல் நேர்மையாகக் கையாள்வாரா..?

உதாரணமாக, மதுரையில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் திருவிழாவில் அரசு அலுவலகங்கள் அந்தப் பணியில் ஈடுபடுத்தப்படும். ஒரு நேர்மையான முதலமைச்சராக அவர் இதைத் தடுக்கக்கூடும். இது நல்ல விஷயம்தான். அரசு என்பது எந்தவொரு மதத்துக்கும் சார்பாக நடக்கக்கூடாதுதான். ஆனால், அதே நேரம் ஹஜ் யாத்திரைக்கு மத்திய அரசு கொடுக்கும் மானியத்தை நிறுத்தவேண்டும் என்று வெளிப்படையாகச் சொல்வார் என்றால் உண்மையிலேயே அரசையும் மதத்தையும் பிரித்து வைக்க நேர்மையாக விரும்புகிறார் என்று புரிந்துகொள்ளமுடியும். கிறிஸ்தவப் பள்ளிகளில் நடக்கும் மத மாற்ற நடவடிக்கைகளை அவர் தடுக்க முன்வந்தார் என்றால் அவர் நியாயவானென்று புரிந்துகொள்ள முடியும். ஆனால், இந்து மதத்தை மட்டும் கட்டம் கட்டிச் செயல்பட்டால் அவர் திராவிட வெறுப்பு அரசியலின் நவீன நீட்சியாக மட்டுமே எஞ்சுவார். எனவே, அரசு ஒன்று அனைத்து மதங்களையும் ஆட்சிநிர்வாகத்தில் இருந்து பிரிக்க வேண்டும். அல்லது அனைத்தையும் உடன் அழைத்துச் செல்ல வேண்டும். ஏதாவது ஒரு மதத்தை மட்டும் ஓரங்கட்டுவது என்பது அரசின் நடவடிக்கையாக இருக்காது. அரசியல் நடவடிக்கையாக மட்டுமே இருக்கும்.

இந்த இடத்தில்தான் திராவிட ஈவேராயிஸத்துக்கு மாற்றாக இந்திய அம்பேத்கரிஸம் முக்கியத்துவம் பெறுகிறது. அம்பேத்கர் மதம் சார்ந்த விமர்சனத்தில் மிகவும் தெளிவானவராக நேர்மையானவராக இருந்தார். இந்து மதத்தை எவ்வளவு விமர்சித்தாரோ அதற்கு இணையாகவே கிறிஸ்தவத்தையும் இஸ்லாத்தையும் விமர்சித்தார். மக்கள் மீது அக்கறை கொண்ட ஒருவர் அப்படித்தான் அனைத்து அடிப்படைவாத இயக்கங்களையும் எதிர்த்தாகவேண்டும். ஒரு மதத்துக்கு எதிரியாகவும் இன்னொரு மதத்துக்கு அடிவருடியாகவும் இருந்தால் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது. உலக அளவில் கிறிஸ்தவர்களும் முஸ்லிம்களும் செய்ததை வைத்துமட்டுமல்ல, இந்தியாவில் அவர்கள் செய்ததையும் கணக்கில் கொண்டே அந்த மதங்களை அவர் எதிர்த்தார். கிறிஸ்தவ இயக்கங்கள் முன்னெடுத்ததாகச் சொல்லப்படும் கல்வி, மருத்துவ சேவைகள் எல்லாமே அடித்தட்டு மக்களுக்கு எட்டாதவகையில் இருந்ததை அவர் வெளிப்படையாக விமர்சித்திருக்கிறார். கிறிஸ்தவ கான்வெண்ட்கள்தான் நேற்றுவரை கூடுதல் கட்டணம் வசூலித்தவை. தாய்மொழிக் கல்வியை அழித்தவையும் அவையே. அதுபோல் இஸ்லாம் மீது அம்பேத்கர் வைத்த விமர்சனத்தைப் பெயரை நீக்கிவிட்டுப் படித்தால் ஆர்.எஸ்.எஸ். தலைவர் சொல்லியதுபோலவே இருக்கும். சில இடங்களில் அம்பேத்கர் அவர்களையும் மீறிச் சென்று இஸ்லாமியர்களை விமர்சிக்கிறார்.

இந்தியாவில் இந்து மதம் தான் பெரும்பான்மையில் இருக்கிறது. எனவே, பிற மதங்களின் குறைகளை இப்போது விமர்சித்தால் அது இந்து ஆதிக்க சக்திகளுக்கே உதவும் என்ற அரசியல் கூற்றில் நேர்மையும் இல்லை… உலகளாவிய அரசியல் தெளிவும் இல்லை. அம்பேத்கருடைய காலகட்டத்தில் இந்து மகா சபை, ஆர்.எஸ்.எஸ். என இந்து இயக்கங்கள் முழு வீச்சில் இயங்கிவந்தன. காந்திகூட ஒருவகையில் இந்து எழுச்சியையே பிரதிநிதித்துவப்படுத்திவந்தார். அப்படியிருந்தும் அம்பேத்கர் பிற மதங்களின் மீதான விமர்சனத்தை மிக நேர்மையாக இந்து சக்திகளைவிடப் படு தீவிரமாக முன்வைத்தார். ஏனென்றால், நாய்க்கு மாற்று ஓநாய்கள் அல்ல என்பது அவருக்கு நன்கு தெரியும். இஸ்லாமும் கிறிஸ்தவமும் எங்கோ இருக்கும் மதங்கள் அல்ல.. இந்தியாவில் வெகுவாகக் காலூன்றிவிட்டிருப்பதோடு இந்தியாவைக் கபளீகரம் செய்யத் துடிக்கும் மதங்களும்கூட.

வெளிப்படையான இஸ்லாமிய வன்முறைகள், தந்திரமான, கிறிஸ்தவ வன்முறைகள் இவற்றோடு ஒப்பிடுகையில் இந்து ஆதிக்க சக்திகளின் வன்முறைகள் வெகு மிதமானவையே. அமெரிக்க கிறிஸ்தவம் பூர்வகுடி செவ்விந்தியர்களை அடியோடு அழித்துவிட்டிருக்கிறது. ஆப்பிரிக்க நீக்ரோக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டிருக்கிறது. இன்றைய ஐ.எஸ்.ஐ.எஸோ இஸ்லாமியத் தீவிரவாதத்துக்குப் புதிய வரைமுறைகளை எழுதிக்கொண்டிருக்கிறது. இவற்றுக்கு முன்னால் இந்துக்களின் மிகப் புகழ் பெற்ற குஜராத் கலவரத்தை வைத்துப் பார்த்தால்கூட ஜப்பானிய சுமோக்களுக்கு முன்னால் நிற்கும் லில்லிபுட் போலத்தான் இருக்கும். கம்யூனிஸ மதம் சார்ந்து உருவான வன்முறைகளோடு ஒப்பிட்டால் ஒப்பீட்டு எந்திரமே ஸ்தம்பித்துத்தான் போகும். இந்தப் புரிதல் அம்பேத்கருக்கு இருந்தது. அதனால்தான் அவர் மதம் மாற முடிவெடுத்தபோது பவுத்தத்தைத் தேர்ந்தெடுத்தார்.

மாதவிலக்கு நாட்களில் கோவிலுக்குப் போவேன் என்று முழங்கும் பெண்ணியவாதிகள் அடிமைச்சின்னமான பர்தாக்களைக் கிழித்து எறிவேன் என்று துணிந்து சொல்லாதவரையில் அவர்கள் நேர்மையான போராளிகளே அல்ல. விநாயகர் சதுர்த்திக்குக் கடலில் கரைக்கப்படும் சிலைகளால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் மாசுபற்றி அக்கறைகொள்ளும் அரசியல்வாதி, தினம் தினமும் கார், பைக் பயன்படுத்துவதால் காற்று மாசுபடுவதைக் கடுமையாகக் கண்டிப்பவராகவும் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் இனிமேல் சைக்கிள்தான் பயன்படுத்தவேண்டும் என்று சொல்பவராகவும் இருக்கவேண்டும். ஒருவர் செய்யும் செயல் அவருடைய அரசியலின் நீட்சியாக முன்னெடுக்கப்படுகிறதா… சம்பந்தப்பட்ட விஷயம் சார்ந்து நேர்மையாக முன்னெடுக்கப்படுகிறதா என்பது மிகவும் முக்கியம். அந்தவகையில் ஊழலற்ற நிர்வாகத்துக்கு முன்னுரிமை தந்து, அனைத்து மதங்களையும் ஒரே தட்டில் வைத்துப் பார்ப்பார் என்றால் சகாயத்துக்கு ரத்தினக் கம்பளம் விரிக்கலாம். அதற்கான முன்னோட்டமாக, பேரிடர் நிவாரணப்பணிகளுக்கு அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளை நியமித்து அந்தக் குழுவுக்குத் தலைவராக சகாயத்தை நியமிக்க அரசை அனைவரும் வற்புறுத்தவேண்டும்.

மக்கள் நலக்கூட்டணி உண்மையில் விஜயகாந்தைச் சேர்த்துக் கொண்டதற்குப் பதிலாக சகாயத்தை முதல்வராக முன்னிறுத்தியிருக்கவேண்டும். இனியும்கூட அப்படிச் செய்ய நேரம் இருக்கிறது. தமிழ் தேசியவாதிகளின் புலிப் பாச, இந்திய விரோதக் கசடுகளை விடுத்து ஈழத் தமிழ் மக்களின் நலன் என்பதை மட்டும் உறிஞ்சிக்கொள்ளும் அன்னமாக சகாயம் செயல்படவேண்டும். கம்யூனிஸ்ட்களிடமிருக்கும் வன்முறைச் செந்நீரை விடுத்து பாட்டாளிவர்க்க நலன் என்ற பாலை மட்டும் உறிஞ்சவேண்டும். திருமாவளவனை அவருடைய சந்தர்ப்பவாத, இந்து விரோத அரசியலில் இருந்து பிரித்து சாதி இந்துக்களோடு கூடிய ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு அழைத்துவரவேண்டும். பூவோடு சேர்வதால் மணக்கும் நார்களாக அவர்களை ஆக்கவேண்டும். வராகங்களோடு சேரும் கன்றாக இவர் ஆகிவிடக்கூடாது..

இப்படியாக, மாணவர்களுக்கு ஒவ்வொரு அரசியல் தரப்பின் சாதக பாதகங்களை முழுமையாக அறிமுகப்படுத்தவேண்டும். நிவாரணப் பொருட்களில் ஜெயலலிதாவின் படத்தை படத்தை ஒட்டிய விஷயம் பற்றிச் சொல்லித்தரும்போது, அரசு இயந்திரம் முற்றாக முடங்கிவிட்டதாக எதிர்கட்சிகளும் ஊடகங்களும் ஒரே குரலில் முழங்கினார்கள். எனவே, தான் செய்த நிவாரணங்களைச் சொல்லிக் காட்டியாகவேண்டிய தேவை அரசுக்கு எழுந்தது என்ற அவர்கள் தரப்பு நியாயத்தையும் சொல்லித் தரவேண்டும். அப்படியானால் தமிழக அரசின் சின்னமான கோபுரம் சின்னத்தை ஸ்டிக்கர்களில் பயன்படுத்திக் கொள்ளவேண்டியதுதானே என்று ஒரு மாணவர் எதிர் கேள்வி எழுப்புவார். கோபுரத்தை முன்னிலைப்படுத்தினால் சிறுபான்மை அடிப்படைவாத அமைப்பினர் கோபம் கொள்வார்கள். அவர்கள் கோபம் கொள்ளாவிட்டால்கூட அவர்களுடைய ஆதரவாளர்கள் (ஆதரவாளர்களா… ஆதரவில் இயங்குபவர்களா? Benefactors or beneficiaries?) கோபப்படுவார்கள் என்று வேறொரு மாணவர் பதில் சொல்வார். அப்படியானால் அனைவரும் ஏற்கும் வகையில் இந்திய தேசியக் கொடியை ஸ்டிக்கராகப் பயன்படுத்தியிருக்கவேண்டியதுதானே என்று மாணவர்களே ஒரு தீர்வைக் கண்டடைவார்கள். இதற்கு ஒரு விஷயத்தின் அனைத்துக் கோணங்களையும் முன்வைப்பது அவசியம்.

வெனிஸில் ஓடும் தண்ணீர்தான் கூவத்திலும் ஓடுகிறது! ( பள்ளி தொடர்பான சில விஷயங்கள் ) ( பகுதி 1 ) / அத்தியாயம் 31 / B.R. மகாதேவன்

download

இன்றைய பள்ளிகள் சமுதாயத்திடமிருந்து வெகுவாகத் துண்டிக்கப்பட்டவையாக இருக்கின்றன என்பதுதான் அடுத்த முக்கிய பிரச்னை. ஒவ்வொரு பள்ளியும் அதன் சுற்றுவட்டாரத்தில் இருக்கும் மக்களின் பிரச்னைகளைத் தீர்க்க முன்வரவேண்டும். அது அவர்களுடைய கல்வியில் ஒரு பாடமாகவே இருக்கவேண்டும்.

உதாரணமாக, ஒரு பள்ளி அமைந்திருக்கும் ஊரில் ஆண்டுதோறும் விவசாயிகள் வறட்சியினால் பாதிக்கப்படுகிறார்கள் என்றால் அங்கு நீர்பாசன வசதிகளைப் பெருக்குவது எப்படி, வறண்ட நிலத்தில் என்னென்ன வழிகளில் விவசாயம் செய்ய முடியும், என்னென்ன பயிர்களைப் பயிரிட முடியும், வேறு என்னவிதமான தொழில்களை அங்கு செய்வதன்மூலம் அந்த மக்களுடைய வாழ்க்கைத்தரம் உயர முடியும் என தீர்வுகளைச் சொல்லும்வகையில் அந்த வட்டாரப் பள்ளிகளின் பாடத்திட்டமானது மாற்றி அமைக்கப்படவேண்டும்.

அந்த மாணவர்கள் அமெரிக்க ஐரோப்பிய வரலாறு, பற்றியோ செவ்வாய்க் கிரஹப் பாறைகளின் தன்மை பற்றியோ தெரிந்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை பென்சீனின் மூலக்கூறு வாய்ப்பாடு பற்றிப் படிக்கத் தேவையில்லை. சைன் தீட்டா காஸ்தீட்டா பற்றிப் படிக்க வேண்டிய அவசியம் இல்லை. தினமும் அவர்கள் நடந்துவரும் வானம் பார்த்த பூமியைப் பற்றிப் படித்தாகவேண்டும்.. உலகில் அதுபோன்ற வறண்ட பகுதிகளில் என்னென்ன விவசாய வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன, என்னென்ன பிற தொழில் வாய்ப்புகள் இருக்கின்றன என்று அந்தப் பள்ளி ஆசிரியர்களே ஒரு பாடத்தை வடிவமைத்துக் கொள்ளலாம். அதற்கான மதிப்பெண் என்பது ஒவ்வொரு மாணவன் சொல்லும் தீர்வும் அந்தச் சுற்றுவட்டார மக்களின் நெருக்கடிகளை எந்த அளவுக்கு தீர்க்கிறது என்பதன் அடிப்படையிலேயே இருக்கவேண்டும்.

இன்றைய சூழலை எடுத்துக்கொண்டால், தமிழகமே இந்த எல் நினோ மழையால் பெரும் பாதிப்புக்கு உள்ள்ளாகியிருக்கிறது. இதுபோல் ஒரு துயரம் இனிமேல் தமிழகத்துக்கு வரக்கூடாது என்ற நோக்கில் தமிழகத்து ஆசிரியர்கள் உடனடியாகப் புதிய பாடத்திட்டத்தை வடிவமைத்துக் கொள்ளவேண்டும். இந்த அரையாண்டுத் தேர்வுக்கான பிரதான பாடமாக அதையே வைத்துக் கொள்ளவேண்டும். வானிலை ஆய்வுகளில் கொண்டு வரவேண்டிய தொழில்நுட்ப மாற்றங்களில் ஆரம்பித்து அரசு மற்றும் அரசியல் கட்சிகள் சார்ந்து எடுக்கவேண்டிய சீர்திருத்தங்கள் வரை அனைத்தையுமே மாணவர்களுக்கு ஆசிரியர் கற்றுத்தரவேண்டும். எந்தவித அரசியல் கறைகளும் படியாத மூளைகளை உடைய பள்ளி மாணவர்கள் இவற்றுக்கு ஒரு தீர்வைக் கண்டு சொல்லும்வகையில் அவர்களைத் தயார்ப்படுத்த வேண்டும்.

இந்த மழை வெள்ளப் பாதிப்புக்கு உண்மையில் எது/எவை காரணம்?

download (4)

ஆறுகளின் கரையோரங்களில் வீடுகள் கட்டிக் கொண்டது, மழை நீர் கடலில் சேர்வதற்காக வெட்டப்பட்ட கால்வாய்களை ஆக்கிரமித்தது, ஏரி, ஆறு, கால்வாய்களைத் தூர் வாராமல் விட்டது, வானிலை மைய அறிக்கைகளைக் கணக்கில் கொண்டு முன்னெச்சரிக்கை எடுக்காதது, ஏரி நீரை எந்தவித எச்சரிக்கையும் இன்றித் திறந்துவிட்டது, நிவாரணப்பணிகளை அரசு இயந்திரம் ஒருங்கிணைக்க முன்வராதது, அத்தனை மழை நீரையும் வீணாகக் கடலில் கலக்கவிட்டது (இப்போது மழைநீரால் மூழ்கிய பயிர்கள் தொட்டுத்து வரும் கோடையில் நீரின்றி வாடி அதிலும் இழப்பை ஏற்படுத்தப் போகின்றன) என ஒவ்வொரு விஷயத்தையும் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த நிபுணர்களைக் கொண்டு கட்டுரையாக எழுதச் சொல்லவேண்டும் அல்லது அவர்களையே வகுப்பெடுக்க வைக்கவேண்டும்.

ஒவ்வொரு தலைப்பைப் பற்றியும் மாணவர்களுக்கு லேசாக அறிமுகம் செய்துவைத்தால் போதும். உதாரணமாக, நதியின் கரையில் உலகில் எங்குமே வீடுகள் இல்லையா என்ன… வெனிஸ் நகரம் முழுக்க முழுக்க நீருக்குள்தான் அமைந்திருக்கிறது. அங்கு மழை பெய்வதில்லையா… அங்கு வெள்ளப் பெருக்கு ஏற்படுவதில்லையா..? அப்படியானால் அங்கு என்னென்ன வழிமுறைகளில் வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன.. வெனிஸில் ஓடும் தண்ணீர்தானே கூவத்திலும் ஓடுகிறது? இந்தக் கேள்விகளை ஆசிரியர் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினாலே போதும். மாணவர்கள் வெனிஸ் நகரக் கட்டமைப்பு பற்றி நூலகங்களில் புத்தகங்களைத் தேடிப் படிக்க வேண்டும். வெனிஸ் நகரம் பற்றிய ஆவணப் படங்களைப் பார்க்கவேண்டும்.

கூவம் ஆறு நகரம் முழுவதையும் இணைத்தபடி செல்கிறது. ஒரு நகருக்குள் ஆறு பாய்வதென்பது மிகப் பெரிய வரம். நல்லதோர் வீணை கிடைத்து அதை நலங்கெடப் புழுதியில் எறிவதைப்போல் கூவத்தைச் சாக்கடை நதியாக ஆக்கிவிட்டிருக்கிறோம். இந்த வெள்ளத்தைவிட அது சாக்கடையாக இருப்பது மிகப் பெரிய அவலம். துயரம். உலகில் பெரும்பாலான பகுதிகளில் மக்கள் நாடோடிகளாக, காட்டுவாசிகளாக அலைந்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே அதாவது சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பாகவே நதிக்கரையில் அற்புதமான நகரத்தை அமைத்தவர்கள் சிந்து சரஸ்வதி சமவெளியில் வாழ்ந்த நம் முன்னோர்கள். அந்தப் புராதன நகரில் அமைந்திருந்த கழிவு நீர் கால்வாய் வசதிகளில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இன்றைய நவீன வாரிசுகளான நம்மிடம் இல்லை.

கூவம் உண்மையில் தமிழ் சமூகத்தின் மாபெரும் குறியீடாகக் காட்சியளிக்கிறது. மாபெரும் கலாசாரத்துக்குச் சொந்தக்காரர்களான தமிழ் சமூகத்தினர் இன்று இப்படி தேங்கிய குட்டையாக நாறும் கழிப்பறையாக வீழ்ந்துகிடப்பதை அந்த நதி குறிப்பால் உணர்த்துவதுபோல் இருக்கிறது. நதிகள் எல்லாம் கங்கையே என்று பழம் பெருமை பேசும் வலதுசாரிகளும் சரி… மேற்கத்திய மதிப்பீடுகளை இலக்காக முன்வைத்துச் செயல்படும் இடதுசாரி சக்திகளும் சரி… இரண்டுமே மாநகரின் தலைநகரில் ஓடும் சாக்கடை பற்றி எந்த அவமானமும் அக்கறையும் இல்லாமல் இருந்துவருகிறார்கள்.

இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் குடும்பங்களுக்கும் அண்டை அயலாருக்கும் நேர்ந்த துயரங்களில் ஆரம்பித்து கூவத்தைச் சுத்திகரிப்பதற்கான வழிகள் என்னென்ன என்பதுவரையிலான விஷயங்களே அரையாண்டுத் தேர்வுக்கான பாடமாக இருக்கவேண்டும். மாணவர்கள் சொல்லும் தீர்வுகளை அரசும் பேரிடர் மேலாண்மைக் குழுவும் கணக்கில் எடுத்துக்கொண்டு இதுபோன்ற துயரம் இனிமேல் நடக்காவண்ணம் முயற்சிகள் எடுக்கவேண்டும்.

உண்மையில் இந்த வெள்ளத்தை அடிப்படையாக வைத்து என்னென்ன பாடங்கள் தயாரிக்கலாம்.

இந்த பேரழிவுக்கு எது/எவை காரணம்…? இனிமேல் நடக்காமல் எப்படித் தடுப்பது? வானிலை ஆய்வுகளில் கொண்டுவரவேண்டிய தொழில்நுட்ப மாற்றங்கள் என்னென்ன? நகர நிர்மாணத்தில் கடைப்பிடிக்கவேண்டிய ஒழுங்குகள் எவை?

கூவம், அடையாறைச் சுத்தப்படுத்துவது எப்படி?

download (2)

வீடுகள், உடமைகள் இழந்தவர்களுக்கு எவ்வகையான உதவிகள் தேவை..? (உடனடி மற்றும் நீண்ட காலத் தேவைகள்) விளைநிலங்கள் நீரில் மூழ்கியவர்களுக்கு என்னென்ன உதவிகள் தேவை..? உடனடி மற்றும் நீண்டகாலத் தேவைகள்)

கிடைத்த உதவிகள், உதவி செய்த தன்னார்வ அமைப்புகள் பற்றிய விரிவான ஆவணப் பதிவு. வெள்ள நிவாரணத்தை வைத்து நடக்கும் அரசியல் அசிங்கங்கள்,

இந்திய அளவிலும் உலக அளவிலும் இதுபோல் நடந்த/நடக்கும் பேரிழப்புகள், அந்தந்த அரசுகள் எடுத்த/எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், நிவாரண நடவடிகைகள், பஞ்சாபில் காலி பேன் நதி மீட்டெடுப்புபோல் நடந்த சீர்திருத்த முயற்சிகள் என பல கோணங்களில் பாடங்கள் எடுக்கலாம்.

நமது லட்சியப் பள்ளியில் ஆசிரியர்கள் இப்படிச் செயல்படுவதாக வைத்துக்கொண்டு ஒவ்வொரு கேள்விக்கான விடைகளைப் பார்ப்போம். இந்த விஷயங்கள் ஓரிரு காட்சிகளாகப் படத்தில் இடம்பெறலாம் அல்லது விரிவாகவும் இடம்பெறலாம். எப்படியாயினும் அதற்குப் பின்னால் இருக்கும் அரசியலும் ஆராய்ச்சிகளும் விரிவாக மேற்கொள்ளப்பட்டாகவேண்டும். உதாரணமாக, தலைமை ஆசிரியர் அறையில் திருவள்ளுவர் படம் மாட்டப்பட்டிருந்தால் அது ஒரு விஷயத்தைச் சொல்லாமல் சொல்லும். அம்பேத்கரின் படம் மாட்டப்பட்டிருந்தால் அது வேறொரு விஷயத்தைச் சொல்லும். முத்துராமலிங்கரின் படம் மாட்டப்பட்டிருந்தால் அது வேறொரு விஷயத்தைச் சொல்லும். முத்துராமலிங்கரும் இம்மானுவேல் சேகரரும் கை குலுக்குவதுபோல் ஒரு படம் இருந்தால் அது வேறொரு விஷயத்தை அழுத்தமாக, அமைதியாகச் சொல்லும். இந்தக் காட்சி படத்தில் அரை நிமிடம் இடம்பெறுவதாகக் கூட இருக்கலாம். ஆனால், எந்தப் புகைப்படத்தை மாட்டுவது என்ற தீர்மானத்தை எடுக்க மிக விரிவான அலசல் தேவைப்படும். அதனால்தான் ஒவ்வொரு விஷயங்களும் இந்தத் தொடரில் விரிவாகப் பேசப்படுகின்றன.

அந்தவகையில், மழை வெள்ளம் பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம். இந்தப் பேரழிவுக்கு எது/எவை காரணம்? 1.நதி ஆக்கிரமிப்பு, 2.கன மழையால் ஏற்பட்ட வெள்ளம், 3.ஏரி நிர்வாகத்தில் ஏற்பட்ட குழறுபடி. இவையே பிரதான காரணங்கள்.

முதல் நிகழ்வுக்கு தமிழகத்தை இதுவரை ஆண்ட அதிமுகவும் திமுகவுமே காரணம். இரண்டாவது இயற்கைப் பேரிடர். இதற்கு யாரையும் குறை சொல்ல முடியாது. மூன்றாவது நிகழ்வுக்கு இன்றைய அதிமுகவே காரணம்.

இப்போது ஆட்சியில் இருப்பது அதிமுகதான் என்றாலும் ஆக்கிரமிப்புகள் திமுக ஆட்சியிலும் நடந்திருக்கின்றன. எனவே, அந்த ஆட்சியும் இதற்குக் காரணமே. இப்போது திமுக ஆட்சியில் இருந்திருந்தாலும் இழப்புகள் இதுபோல் இருந்திருக்கவே செய்யும். சன் டிவி போல் ஜெயா டிவிக்கு ஆளும் கட்சியின் மேல் அதிருப்தியைப் பெருக்கும் சாமர்த்தியம் இருந்திருக்காது. மேலும், திமுக அரசு இதுபோல் செயலற்ற நிலையில் இருந்திருக்கவும் செய்யாது. இப்போது முன்னெடுத்த அளவுக்குத் தீவிரமாக நிவாரணப்பணிகளில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள் என்றாலும் நிச்சயமாக ஜெயலலிதாவை விடப் பலமடங்கு அதிகமாக திமுக மக்களுக்கு ஆதரவாக நின்றிருக்கும். என்றாலும் இவையெல்லாம் இந்த ஆக்கிரமிப்புகளுக்கும் இழப்புக்கும் திமுகவும் காரணம் என்பதை ஒருபோதும் இல்லாமல் ஆக்காது.

download (1)

திமுக., அதிமுக ஆட்சிகள் காரணம் என்றால் அவர்களைத் தேர்ந்தெடுத்த மக்களும் சம அளவுக்குக் குற்றம் செய்தவர்களாகிறார்கள். அப்படியாக இது ஒரு கூட்டுக் குற்றம். விழிப்பு உணர்வு இல்லாத மக்கள் தவறான தலைவர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். தவறான தலைவர்கள் மக்கள் விரோதமான ஆட்சியை நடத்தியிருக்கிறார்கள். இதில் இருக்கும் வேடிக்கையான வேதனை என்னவென்றால், சாதிரீதியில் தலித்களும், வர்க்கரீதியில் கடைநிலையில் இருப்பவர்களும்தான் இந்த வெள்ளத்தினால் அதிகமும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதேநேரம் அவர்கள்தான் தவறான தலைவர்களைத் தேர்ந்தெடுப்பதில் முன்னணியில் இருக்கவும் செய்கிறார்கள். ஓரளவு விழிப்பு உணர்வு பெற்ற மக்கள் நிர்வாகத் திறமையும் சமூக அக்கறையும் கொண்ட ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று விரும்பினாலும் கடைநிலை மக்கள் அதை நடக்கவிடுவதில்லை. தொலைநோக்குப் பார்வையும் அரசியல் விழிப்பு உணர்வும் இல்லாத காரணத்தால், தமது தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்வதுபோல் மோசமான, திருந்தவே வாய்ப்பு இல்லாத அயோக்கியர்களையே அவர்கள் தமது பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்.

முள் செடியை நட்டு வளர்க்கும் விவசாயி ரோஜாக்களை எதிர்பார்க்க முடியாது. அந்த முட்கள் குத்தி அவன் ரத்த வெள்ளத்தில் மிதந்தால் யார்தான் காப்பாற்ற முடியும்? அரசியல் விழிப்பு உணர்வு என்பது அப்படியொன்றும் கம்ப சூத்திரம் இல்லை. தமது பிரச்னைகளுக்குத் தீர்வு என்ன… யார் அதைப் பேசுகிறார்கள். யார் செய்து தருவதாகச் சொல்லி ஏமாற்றுகிறார்கள் என்பதெல்லாம் அவர்களுக்குத் தெரியாததல்ல.

தேர்தலுக்கு வாக்குக் கேட்க வருபவரைப் பார்த்து தெருவில் ஓடும் சாக்கடையைச் சுத்தம் செய்துகொடு… சாலை வசதி செய்துகொடு, தெருவிளக்கைச் சரி செய்துகொடு, மழை பெய்தால் என்ன பாதுகாப்பு வேண்டுமோ அதைச் செய்துகொடு என்று நிபந்தனை விதிக்கவேண்டும். அல்லது அந்தத் தேவைகளைத் தாமே சரி செய்துகொள்ளத் தேவையான காசை கேட்டுப் பெற்றுக்கொள்ளவேண்டும். இலவச டி.வி, கிரைண்டர் வேண்டாம் என்று சொல்லவேண்டும்.

தேர்தல் நேரத்தில்தான் இப்படிச் செய்யமுடியும் என்றில்லை. அது முடிந்த பிறகும் பஞ்சாயத்துத் தலைவர், கவுன்சிலர், எம்.எல்.ஏ., எம்.பி. மட்டுமல்லாமல் ஒவ்வொரு துறைக்கும் நியமிக்கப்பட்டிருக்கும் அரசு அதிகரிகள் வரை அனைவரையும் சட்டையைப் பிடித்துக் கேள்வி கேட்கமுடியும். மக்கள் ஆட்சி என்பது அதுதான். இன்றைய அரசியல் அமைப்பில் அவை எல்லாவற்றுக்குமான வசதி வாய்ப்புகள் உண்டு. அதை முறையாகப் பயன்படுத்த வேண்டும். முக்கியமாகக் கடைநிலை மக்களிடையே ஒற்றுமை வேண்டும். வலையில் சிக்கிய பறவைகள் தப்பிக்க வேண்டுமென்றால் ஒன்றாகச் சிறகடித்தாகவேண்டும்.

இந்த மக்கள் செய்திருக்கும் இன்னொரு மிகப் பெரிய தவறு ஆற்றின் கரையிலும் உபரி நீர் கடலில் கலக்க உதவும் கால்வாய்களிலும் வீடுகளைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்த மழை வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களில் 90 சதவிகிதத்தினர் அப்படியான தவறுகளைச் செய்தவர்களே. உப்பைத் தின்றால் தண்ணீர் குடித்துத்தானே ஆகவேண்டும். இந்த முறைகேடான ஆக்கிரமிப்புக்கு அனுமதி கொடுத்த அரசும் தானே இதற்குக் காரணம் என்று சொல்வார்கள். ஒருவேளை ஏதேனும் ஒரு அரசு இவர்களை இந்த இடத்தில் இருந்து அப்புறப்படுத்த முயற்சி செய்திருந்தால் அமைதியாக அதை ஏற்றுக்கொண்டு போயிருப்பார்களா? இன்று அரசைக் குறை சொல்பவர்களும் அனைத்து எதிர்கட்சிகளும் வரிந்துகட்டிக் கொண்டு ஆக்கிரமிப்பாளர்களுக்கே ஆதரவாக நின்றிருப்பார்கள். இவ்வளவு ஏன்… இப்போது இத்தகைய பேரிடர் நேர்ந்தபிறகு அரசு அந்த மக்களை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இடம் ஒதுக்கித் தந்து போகச் சொன்னால் போவார்களா..? அதே இடத்தில் காரைவீடு கட்டித்தரச் சொல்லிக் கேட்பார்கள். மீண்டும் வெள்ளம் வந்தால் தெருவில் நின்று அழுவார்கள்.

அதுபோல், கடைநிலை மக்கள் சாராயத்துக்குச் செலவிடும் காசை மிச்சப்படுத்தினாலே போதும் அவர்களுடைய பல பிரச்னைகளை அவர்களே தீர்த்துக்கொண்டுவிட முடியும். குறைந்தபட்சம் அவர்களுடைய வசிப்பிடத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளவாவது முடியும். அனைத்துக்கும் அரசையும் அதிகாரவர்க்கத்தையும் பழி சொல்லிப் பலனில்லை. ஏனெனில் பாதிக்கப்படப்போவது எளிய மக்கள்தான். என் பசி தீர வேண்டுமென்றால் நான்தான் சாப்பிட்டாக வேண்டும். என் தலையில் ஏற்றப்பட்டிருக்கும் சுமையை நான்தான் இறக்கிவைத்தாகவேண்டும். பிரச்னை என்னவென்றால், மனித இனத்தின் ஆதாரமான இரண்டு குணங்கள்: சூழலுக்கு ஏற்பத் தன்னைத் தகவமைத்துக் கொள்வது, சூழலை மாற்றி அமைக்க முயற்சி செய்வது. இதில் எளிய மக்கள் முதலாவதையே பிரதானமாகக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பெருமழையினால் வீடுகளுக்குள் கொண்டுவரப்பட்ட சாக்கடைக் கழிவுகளைப் பார்த்துப் பலர் பதறுகிறார்கள். ஒரு சில நாட்களில் இவை அகற்றப்பட்டுவிடும். ஆனால், வாழ்நாள் முழுவதும் அந்தக் கழிவுகளின் நடுவிலேயே வாழும் மக்களும் இதே சென்னையில் கூவம், அடையாறு கரைகளில் இருக்கிறார்கள். அவர்கள் தமது வசிப்பிடத்தை ஏன் தூய்மைப்படுத்திக் கொள்வதில்லை? ஏனென்றால், அவர்கள் அந்த அசுத்தத்தை ஒரு பொருட்டாகக் கருதுவதேயில்லை. தமது வசிப்பிடத்தைத் தூய்மைப்படுத்திவிட்டால் அதில் வேறு பலர் வசிக்கவந்துவிடக்கூடும் என்று அஞ்சுகிறார்களோ என்னவோ. அசுத்தம் என்பது அவர்களுக்கு பலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கிறதுபோல.

ஒரு யாசகருக்கு அவருடைய அழுக்கான உடைகளும் தோற்றமும்தான் முதலீடு. அவருக்குக் கிடைக்கும் பணத்தை வைத்துத் தனது உடைகளைத் துவைத்துப் போட்டுக் கொண்டாலோ குளித்து பவுடர் போட்டுக்கொண்டு வந்து நின்றாலோ யாரும் காசு தரமாட்டார்கள். இந்த இடத்தில் வேறொரு கேள்வி வருகிறது. யாசகரின் அழுக்கான தோற்றத்துக்கு அவர்தான் காரணமா… அவர் அப்படி இருந்தால்தான் காசு தருவேன் என்று சொல்லும் சமூகம் காரணமா..? துறவிகளின் தோற்றத்தில் இருக்கும் பலருக்கும் சமூகம் கருணையுடன் உணவளிக்கத்தான் செய்கிறது. ஒரு யாசகர் நன்கு குளித்து உரிய மதச் சின்னங்களைத் தரித்து யாசகம் கேட்டால் தரத்தான் செய்கிறார்கள். எனவே, யாசகரின் அழுக்குத் தோற்றத்துக்குச் சமூகத்தைவிட அவரேதான் காரணம். அதுபோல் கூவம் நதிக்கரையில் வசிப்பவர்களும் தமது அழுக்குகளை கேடயமாகப் பயன்படுத்தாமல் தமது பகுதியைத் தூய்மைப்படுத்திக்கொள்ள முடியும்.

அந்தவகையில் கரையோரக் குடிசைவாசிகளின் பெரும்பாலான துயரங்களுக்கு அவர்களும்தான் காரணம். சரியான தலைவர்களைத் தேர்ந்தெடுக்காதது, முறைகேடான ஆக்கிரமிப்புகள், தம்மால் முடிந்த தீர்வுகளைக்கூட அமல்படுத்தாமல் இருப்பது, போதை வஸ்துகளுக்கு அடிமையாவது என பல தவறுகள் அவர்கள் பக்கம் இருக்கின்றன. அப்படியாக அரசு, மக்கள் என இரு தரப்பிலும் இருக்கும் தவறுகளுக்கு யாரோ ஒருவரை மட்டும் தண்டிக்கலாம் அதாவது இந்த அரசை வரும் தேர்தலில் தோற்கடிக்கலாம். அல்லது இந்தக் குடிசைவாசிகளை ஊருக்கு ஒதுக்குப்புறமாக இடம்பெயர்க்கலாம். அல்லது இருவரையும் தண்டிக்கலாம். ஆனால், இரண்டு தரப்பின் தவறையும் மன்னித்து இருவருக்கும் நன்மையும் செய்யலாம். வேறன்ன…. நம்மில் ஒருவர்தானே அவர்கள் இருவருமே. ஒட்டுமொத்த சமூகத்துக்கும் இந்தத் தவறுகளில் பொறுப்பு உண்டு அல்லவா..? அப்படி நம் பொறுப்பை உணர்ந்துகொண்டு இந்த சாபத்தை வரமாக மாற்றிக் கொள்ள முடியுமா? குழந்தைகள் முன்வைக்கும் தீர்வு அப்படியாகத்தானே இருக்கும்.

1. அந்த வீடுகளில் வசித்தவர்கள் அனைவருக்கும் சென்னையில் இருந்து 30-40 கி.மீ தொலைவில் இருக்கும் புற நகர் பகுதிகளில் அதைவிட வசதியான காற்றோட்டம் மிகுந்த குடிசைகளை அமைத்துத் தரவேண்டும் (சிமெண்ட் வீடுகள் வசதியின் அறிகுறி அல்ல). கூரை வீடுகள் என்றால் தீப்பற்றிவிடும் என்ற பயம் இருந்தால் ஆஸ்பெஸ்டாஸ் கூரைகள் போடலாம்.அவற்றின் மேலே பாகற்காய், அவரைக்காய் போன்றவற்றுக்கான சிறு படர் கொடிப் பந்தல்களை அமைத்து வெய்யிலில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

2. அவர்கள் வீடுகளில் இருந்த பொருட்கள் என்னவாக இருந்திருந்தாலும் ஒரு குடும்பத்துக்குத் தேவைப்படும் அடிப்படைப் பொருட்களான மின் விசிறி, ட்யூப்லைட்கள், கிரைண்டர், மிக்ஸி, ஸ்டவ் அடுப்பு, டி.வி. சைக்கிள் என அனைத்துமே அவர்களுக்குத் தரப்படவேண்டும்.

3. அந்தப் பகுதி குழந்தைகளுக்கு அரசுப் பள்ளிகளின் நல் அம்சங்களும் தனியார் பள்ளிகளின் நல் அம்சங்களும் இணைந்த பள்ளிகள் கட்டித்தரப்படவேண்டும்.

4. அதுபோல் அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் நல் அம்சங்கள் நிறைந்த மருத்துவமனைகளைக் கட்டித் தரவேண்டும்.

5. இடை மற்றும் கடை நிலை வேலைகளைச் செய்து வரும் அந்த மக்கள் பணியிடங்களுக்கு வந்து போக கேப் வசதி செய்து தரவேண்டும்.

6. அனைத்துக் குடும்பத்தினருக்கும் ஆடு, மாடு, கோழி போன்றவை தரப்படவேண்டும். அவற்றுக்கான புல்வெளிகள், தீவனப் பயிர்களுக்கான நிலம், மூலிகைத் தோட்டம் அமைத்துத் தரவேண்டும்.

7. ஒவ்வொரு வீட்டைச் சுற்றிலும் கீரை, மிளகாய், தக்காளி, மலர்ச் செடிகள் போன்ற சிறியவகைத் தாவரங்கள் பயிரிட சிறிய இடமும் சேர்த்துத் தரவேண்டும்.

இதற்கெல்லாம் நிறைய நிதி தேவைப்படும். மத்திய அரசிடம் கேட்டுப் பெறலாம்தான். ஆனால், வேறு எளிய வழிகளும் இருக்கின்றன. சாராய அதிபர்கள் இத்தனை ஆண்டுகாலம் அள்ளிக் குவித்திருக்கும் பணத்தில் இருந்து இந்த வீடுகளைக் கட்டித் தரச் சொல்லலாம். ஒருவகையில் இந்த மக்களிடமிருந்து அள்ளிச் சென்றது அவர்கள்தானே. அல்லது இந்த இழப்பை ஏற்படுத்திய கூவத்தைவைத்தே இந்த நிவாரணப் பணிகளுக்கான பணத்தை மீட்டெடுக்கலாம். அதற்கான எளிய வழி கூவத்தை வெனிஸ் ஆறுபோல் ஆக்குவதுதான்.
download (3)

1. முதலில், அடையாறு, கூவம் நதியின் கரைகளைப் பலப்படுத்தி ஆறுகளை ஆழப்படுத்தி சுத்திகரிக்கவேண்டும்.

2. உபரி நீரும் கழிவு நீரும் எளிதில் கடலில் கலக்க வழி செய்யவேண்டும். அல்லது கழிவு நீரைச் சுத்தப்படுத்தி குடிநீர் அல்லாத பிற தேவைகளுக்குப் பயன்படுத்தலாம். அதில் கிடைக்கும் சேற்றை உரமாக்கிக் கொள்ளலாம்.

3. ஆற்றின் கரைகளில் நடை பாதை, சைக்கிள் வழித்தடம் (மட்டுமே) அமைக்கவேண்டும்.

4. அந்த நடைபாதையில் பூங்காக்களும் அமைக்கவேண்டும்.

5. ஆறு, கால்வாய்களை நீர் வழிப் போக்குவரத்துக்கு ஏற்ற வகையில் இணைக்கவேண்டும்.

6. காஷ்மீர் கேரளா போல் படகுவீடுகள், கொடைக்கானல் போல் சுற்றுலா படகுகள் ஆகியவற்றுக்கு ஏற்பாடு செய்யவேண்டும்.

7. கரைகளை ஒட்டிய பகுதியில் நடைபாதைக்கும், சைக்கிள் தடத்துக்கும் போதிய இடம் விட்டதுபோக எஞ்சிய இடத்தில் திறந்தவெளி ஹோட்டல்கள், கடைகள் அமைக்கவேண்டும்.

8. கூவம்- அடையாறு இவற்றை மீட்டெடுத்து இத்தகைய வசதிகளைச் செய்து தர ஒரு தனி அமைப்பை நிறுவவேண்டும். தனியார் இதற்கு முன்வரும்பட்சத்தில் அரசு கொடுக்கும் மானியங்கள், சலுகைகள் போக ஐந்தாண்டுகளில் போட்ட முதலீட்டைவிட அதிகப் பணத்தை அவர்களால் ஈட்டிவிட முடியும். அதன் பிறகு அவர்கள் இந்த அமைப்பை அரசிடம் ஒப்படைத்துவிட வேண்டும்.

9. அந்த ஐந்தாண்டு காலத்தில் தங்களுக்குக் கிடைக்கும் லாபத்தில் 10% ஐ கூவம், அடையாறு கரைகளில் குடிசை அமைத்துத் தங்கியிருந்தவர்களுடைய நலனுக்குச் செலவிடவேண்டும்.

10.ஐந்தாண்டுகள் கழித்து அரசின் கைக்கு அந்த வருவாய் வரத் தொடங்கியதும் அவர்கள் முப்பது சதவிகிதத்தை அந்த மக்களின் நலனுக்குச் செலவிடவேண்டும்.

நம் சிறையின் சாவி நம் இடுப்பில்தான் இருக்கிறது.

கூவம் தங்கம் புதைந்திருக்கும் பூமி; அதை மலம் கழிக்கப் பயன்படுத்திவருகிறோம்.

சந்தன மரத்தை வெட்டி விறகாக்கி அடுப்பெரித்து வருகிறோம்

முப்போகம் விளையும் நெல் வயலைப் புதர் மண்ட வைத்திருக்கும் விவசாயி நாம்

அமுதத்தை விஷமாக்கி வைத்திருக்கிறோம்.

காம தேனுவைப் பொதி மாடாக்கி வைத்திருக்கிறோம்.

கற்பக விருட்சத்தின் கீழே சோம்பிப் படுத்திருக்கிறோம்..

((((((((((((())))))))))))))))

பொய்களைப் பரப்பாதீர்கள் / சீனிவாசன் ( லண்டன் )

download

உண்மையை விட பொய்களே அதிகமாகவும் விரைவாகவும் மக்களிடையே பரவுகின்றன.
இணையம் இல்லாத காலங்களில், எனக்குப் பல தபால் அட்டைகள் வந்தன. ஒரு
கோயிலில் நடந்த அதிசயத்தை விளக்கி, அதை 100 பேருக்கு அனுப்ப வேண்டும்.
அனுப்பவில்லையெனில் தீங்கு ஏற்படும் என்றும் பயமுறுத்துவர். பின்னர்,
மின்னஞ்சல் வந்த போது, பல வங்கிகளின் போலி வலைத் தளங்கள், கடவுச்சொல்
கேட்டு மின்னஞ்சல்கள் வந்தன. ஆப்பிரிக்காவின் பெரும் செல்வந்தர்கள் தமது
சொத்துகளுக்கு நம்மை வாரிசாக அறிவிக்க அனுமதி கேட்டு மின்னஞ்சல்
அனுப்புவர். வெளிநாட்டு வேலை, போலி சுற்றுலா அழைப்புகள் என பல்வேறு
பொய்கள் பரவின.

இப்போது முகநூலும், வாட்சப் போன்ற செயலிகளும் செய்திகளைப் பரப்புவதில்
பெரும்பங்கு வகிக்கின்றன, பெருமழை போன்ற சிக்கலான நேரங்களில் மக்களை
ஒருங்கிணைத்ததில் இவற்றின் சேவை மிகவும் போற்றத் தக்கது. அவசியதான
தகவல்களைப் பகிர்ந்து பல உயிர்களைக் காத்துள்ளன.

பிற நேரங்களில், செய்திகளைப் பகிர்வதில் மக்களைக்கு உள்ள ஆர்வம், அவை
உண்மையா, பொய்யா என ஆய்வதில் இருப்பதில்லை. எது கிடைத்தாலும் உடனே பகிர
வேண்டும் என்று பலருக்கும் கை அரிக்கும் என நினைக்கிறேன். இது மிகவும்
மோசமான ஒரு மனநிலை. பல செய்திகளைப் பார்க்கும் போது, மக்களுக்கு
மண்டையில் மூளையும் யோசிக்கும் திறனும் இருக்கிறதா என்றே சந்தேகம் வந்து
விடுகிறது.

சில உதாரணங்களைக் காண்போம்.

1. வாகன ஆவணங்கள்

உங்களிடம் வாகன ஆவணங்கள் இல்லாமல், போக்குவரத்துக் காவலரிடம் மாட்டிக்
கொண்டால், அவரிடம் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. 15 நாட்களில்
நீதிமன்றத்தில் ஆவணங்களைக் காட்டினால் போதும்.

இது பற்றி எனது காவல் துறை நண்பர்களிடம் விசாரித்தபோது, கிடைத்த தகவல்கள்.
இரு வாரங்களில் நீதிமன்றத்தில் ஆவணங்களைக் காட்டலாம். ஆனால் அதுவரை வண்டி
காவல் நிலையத்தில் தான் இருக்கும். இந்தத் தகவல் யாருக்கும் தெரிவதில்லை.
அரைகுறை செய்திகளை மட்டும் தெரிந்துகொண்டு, போக்குவரத்துக் காவலரிடம்
உங்கள் சட்ட அறிவை நிரூபிக்க வேண்டாம். காவலர் வண்டியைக் கொண்டு சென்ற
பின், அதன் சேதாரத்திற்கு யாரும் பொறுப்பேற்க மாட்டார்கள்.

சாலைவிதிகளைப் பின்பற்றுவதும் வண்டி ஆவணங்களை வைத்திருப்பதும் நமது கடமை.
அதை மீறிவிட்டு, பின் கட்டணம் செலுத்தும்போது அதற்கான சட்டங்களை
முழுமையாகத் தெரிந்து கொள்ளுங்கள். அரைகுறை செய்திகளைப் பரப்பாதீர்கள்.

2. ஒரு நோய்வாய்ப்பட்ட குழந்தையின் படம்

இதைப் பகிர்ந்தால் வாட்சப் நிறுவனம், குழந்தையின் பெற்றோருக்கு, ஒவ்வொரு
பகிர்வுக்கும் 1 ரூபாய் அளிக்கும்.

வாட்சப்பில் 700 மில்லியன் பயனர்கள் ஒரு நாளில் 30 மில்லியன் செய்திகளைப்
பகிர்கின்றனர். ஒரு படத்தைப் பகிரும் செயலால், வாட்சப் நிறுவனம், எப்படி,
ஏன் பணம் தர இயலும்? பெரும் தொண்டு நிறுவனங்களால் கூட இப்படி செய்ய
இயலாதே. கொஞ்சம் கூட யோசிக்கவே மாட்டார்களா?

3. அஜித் குமார் 100 MB data pack இலவசமாத் தருகிறார்

இதைவிட அவருக்கு வேறு வேலை இல்லை பாருங்கள். யாரோ கோமாளி ஒருவர் கிளப்பிய
புரளியை, முட்டாள்கள் பலரும் பகிர்கின்றனர்.

4. திருநள்ளாறு சனி பகவான் கோயில் மகிமை

இந்தக் கோயிலின் மேலே செயற்கைக் கோள்கள் சில நிமிடங்கள் செயலிழந்து
விடுகின்றனவாம். நாசாவே கண்டுபிடிக்க முடியாமல் திணறும் அற்புதமாம்.

நாசாவின் இணையதளத்தில் இது பற்றிய அறிவிப்பு ஏதுமில்லை. இவ்வாறு
நாசாவுக்கே தெரியாத செய்திகளை அறிந்து மக்களிடையே பரப்பிய அதி புத்திசாலி
யார் என்று தெரியவில்லை.

••

இவை ஒரு சில உதாரணங்கள் மட்டுமே. இவை போல, பல நூறு பொய்கள் பரப்பப்பட்டு
வருகின்றன. யாரோ ஒரு சில புத்திசாலிகள், சிரித்துக் கொண்டே உருவாக்கும்
பொய்ச் செய்திகள், பல்லாயிரம் மக்களை முழு முட்டாள்கள் என நிரூபித்துக்
கொண்டே இருக்கின்றன.

எது கிடைத்தாலும் உடனே பகிரும் மனநோய் மக்களுக்கு இருக்கும் வரை, இது தொடரும்.

நீங்களும் இதுவரை முட்டாளாக இருந்திருக்கலாம். இனியாவது எதையும் பகிரும்
முன் சற்று யோசியுங்கள். செய்திகளின் உண்மைத் தன்மை பற்றி தேடத்
தொடங்குங்கள். கைக்குள்ளேயே இணையம் வந்து விட்ட பின்பும், தேடுவதற்கும்
உண்மையை ஆய்வதற்கும் சோம்பல் கொண்டு முட்டாளாகி விடாதீர்கள்.

நல்ல மூளையும், யோசிக்கும் திறனும் பெற்ற முழு மனிதராக மாற இன்றே முடிவு எடுங்கள்.

••••••••

வா.மு.கோமு கவிதைகள்

komu

1.

இனி ஒன்னையுஞ் செய்ய முடியாதென

ஊட்டுக்குள் அவசர சட்டம் போட்டாயிற்று.

பொறவுக்கு இருக்கும் புளியாமரத்தில்

முன்பு போல ஏறி ஆடப்பிடாதென சொன்னார்கள்.

தம்பிகளோடு கட்டுமாரு கட்டி சண்டையிடப்பிடாதென

சொல்லி வைத்தார்கள். –சாலையில் நடக்கையில்

பாதம் பார்த்து நடக்க வேணுமென ஓர்டர் போட்டார்கள்.

ரீவியில் காதல் பாட்டு ஓடுகையில் ரிமோட்டை

கிச்சனில் இருந்து அழுத்தினார்கள்.

கல்லூரிக்கு போனால் கண்ட கருமமும் வீடு

வந்து சேருமென பள்ளியோடு நிப்பாட்டினார்கள்.

பக்கத்து வீட்டு மாரிமுத்து பல்லைக் காட்டியதற்கு

பத்து நாள் சோச்சி கிடையாதென்றார்கள்.

நல்ல புருசன் வருவானென சாதகத்தை தூக்கினார்கள்!

நல்ல சோலி, நல்ல கொணமென நாப்பது வயசுக்காரனுக்கு

கழுத்து நீட்டச் சொன்னார்கள். நல்ல புருசன் குடிகாரனென்று

வாக்கப்பட்டு வந்த பொறவுதான் கண்டுகொள்ள முடிந்தது.

நல்லபுருசன் நல்லவிதமாய் சுடுகாடு போன பொறவு

ஊடு வந்து சேர்ந்த பொறவுதான் சொன்னார்கள்

புருசனைத் தின்னவ! என்று! –மாரிமுத்து பல்லை

மறுக்காவும் காட்டிய போது ஊட்டார் ஒன்னும்

சொல்லவே இல்லியே!

••••••••••••
2.

நீங்கொ என்னவேணா சொல்லிட்டுப் போங்கொ!

நா அதுக்கு மட்டும் எந்தாயிசிலியு ஒத்துக்க மாண்டேன்!

கெழக்கால ஊட்டு மயிலா அப்பிடித்தான

அதுக்கு ஒத்துட்டு ரோடாயிப் போயி கெணத்துல

உழுந்து செத்து ஆயிப்போச்சுல்லொ இப்ப

நாலு வருசம்? நாயம் வேணா எது வேணா பேசுங்கொ

கேட்டுக்கறேன்! என்னெய அங்கவா இங்கவா

அப்பிடி இருக்கலா இப்பிடி இருக்கலானு மட்டும்

கூப்புட்டு நச்சீட்டே இருக்காதீங்கொ!

••••••
3.

கெழவஞ் சொன்னா கிண்ணாரக்காரனுக்கு

ஏறாதுங்கறது செரியாத்தான போச்சப்புனு!

புள்ள போக்கு செரியில்லடா..

தன்னப்போல கெணத்து மேட்டோரம் நின்னு சிரிக்கா..

திடு திடுன்னு ஊட்டுக்குள்ள ஓடுறா…

செலுபோனு டப்பிய காதுல வச்சுட்டு கெழக்க போயிடறா..

சொம்புல தண்ணி கொண்டாளேன்னா

வெத்தல பாக்கு தட்டத்த எடுத்தாறா…

சாமத்துல வயித்துப் போக்குன்னு தெக்க போயிடறா…

மூனு மணி பஸ்ஸுக்கு போவறதுக்கு

பன்னண்டு மணியில இருந்து சிங்காரம் பண்டிக்கிறா…

தலை தலையா அடிச்சு சொன்னப்ப

எம்பட தங்கம் அப்பிடி எல்லா கெடையவே

கெடையாதுன்னு எம்பட வாயை அடெச்சே!

ரெண்டு நாளா புள்ளையக் காணமுன்னு இப்ப

ஊருக்காரவுனுகளுக்கு வதிலு சொல்லிட்டு இருக்கே!

ஏண்டா பையா.. புள்ள அந்த நிவங்கூடக்கீது

நிது பண்றதுக்கு நிந்த ஊருக்கு போயிட்டாளோ என்னுமொ?

•••••
4.

அது வழியா போறப்ப எல்லாம்

அந்த ரெண்டையு பாத்துட்டே தான்

போறேன் வர்றேன்! -ஆனா

ஒன்னையும் பண்ட முடியல!

000

ஒத்துக்கச் சொல்றதுக்கு தான்

போனு போட்டுட்டே இருக்கேன்!

ஒத்துக்கத்தான் மாண்டீங்கறா!

000

நல்ல பாட்டு பாடுறப்ப எல்லாம்

நின்னு கேட்டுட்டு தான் போலாம்னு

இருக்கும்! இப்ப லூசுப் பாட்டு

பாடுனாக்கூட கேட்டுத் தொலஞ்சுட்டு

தான் போனாப் போவுதுன்னு இருக்குது!

000

ஊத்துக்குளியில சந்தெ

புதங்கெழமைன்னு தான்

சுத்துப்பட்டுக்கே தெரியுமே!

நானும் போயி ஒருபொழுது

நின்னு பாத்தும் சாந்தாமணி

சந்தெக்கி வரலை!

000

கம்பெனிக்கி போற பிள்ளைங்கெல்லாம்

சனிக்கெழமெ கூலி நாளன்னிக்கி தான்

பீரு குடிக்குதுக! குடிச்சு முடிச்ச பொறவுதான்

ராமசாமிய திங்கக்கெழமெ காதோட

அப்பலீன்னா எம்பட பேர மாத்தி வச்சிக்கிறேன்னுதுக!

000

ஸ்கூட்டில போற ஆன்ட்டீக எல்லாரும்

திலுப்பூருல சந்து சந்தா படுத்துப் படுத்து

எந்திரிச்சுப் போவுதுக!

000

எப்பாச்சிம் ரயிலுக்கே போயிடலாமுன்னு

முடுவு பண்டி ஸ்டேசன்ல போயி

உக்காந்திருக்கப்பெல்லாம் ரயிலு

தாமசமாத்தான் வருன்றாங்க! சரி

போனாப் போச்சாதுன்னு வேடிக்க

பாக்கலாம்னா இங்கிலீசுலயே

பேசீட்டு டைட்டா பேண்ட்ட

போட்டுட்டு அக்காளுங்க அதுக்கும் இதுக்கும்

போறாங்க! இதுக்குத்தான் நா

பஸ்ஸுலயே போயிக்கறேங்கறேன்!

000

சாக்கனா கடையில சண்டைக் கட்டாதீங்க!

சரக்கு வாங்குறதுக்கு முண்டியடிக்காதீங்க!

ஓடுற வண்டியில ஓடி ஏறாதீங்க!

இன்னொருத்தன் ஓட்டீட்டு இருக்குறதை

நீங்களும் ஓட்டலாம்னு நினைக்காதீங்க!

000

உப்புத் தின்னவன் தண்ணி குடிக்கட்டும்.

செஸ்சு முடிச்சவன் கெஸ்சு வாங்கட்டும்!

000

வெசாழகெழமெ சந்தெக்கடுவுக்கு

கம்பெர்கட்டு வாங்கிக்கன்னு பத்துப் பீசா

குடுத்தனுப்புவா எங்கம்மா! பையத் தோள்ல

போட்டதீம் இன்னொன்னு சொல்லுவா!

அந்த ரோசாப்பு உண்டியல்ல காசு சேக்குறியா பையா?

புத்தர் போதி மரத்தடியில க்கோந்து ஞானம்

பெற்றார்னு அப்பிடியெல்ல படிச்சவன் நானு!

000

போடா! நீ என்ன பெரிய கல்ட்டியா?

பட்டியில பத்திருவது உருப்படி

இன்னிக்கிம் நிக்கிது பாத்துக்க! -இப்ப

ஓட்டீட்டு போனாலும் கையில காசு!

000

இவங்கப்பன் இவளெ பெத்ததீம்

செத்துப்போனான்னு தா ஒலவத்துக்கே தெரியுமே!

இவளெ நாலெழுத்து படிக்க வச்சி

நோம்பி நொடின்னா துணிமணி வாங்கி குடுத்து

சமஞ்சப்ப ஐநூறு பத்திரிக்க போட்டு நம்ம

வெசாலாச்சி மண்டவத்துல சீரு வெச்சு

கண்ணுல ஒருசொட்டு தண்ணி வரப்புடாதுன்னு

சீராட்டி கொஞ்சிக் கொஞ்சி அப்புடி வளத்தனாக்கும்!

அமுட்டையுஞ் செஞ்சு கடேசில மேலப்பாளத்தானத்தா

கட்டிக்குவேன்னு ஒத்தக்கால்ல நின்னாளே மவராசி!

சரி புள்ள ஆசப்படுதேன்னு அவங் குடிகாரன்னு தெரிஞ்சுமில்ல

அஞ்சு வவுனு போட்டு கட்டிக் குடுத்தேன்! அந்தப் பீத்தரெ

அதப்பண்டிக் கழட்டுறேன் இதப்பண்டி அவுக்குறேன்னு

உள்ளதீம் தொலச்சுட்டு பக்கத்தூட்டு சிங்காரி ஒருத்திய

இழுத்துட்டு போயிட்டானாம்! இவொ மடியில

ஒன்னோடவும் இடுப்புல ஒன்னோடவும் இங்க வந்து நிக்காளே!

ஏலே உங்கோயா என்ன இன்னமு கொமுறின்னு நெனச்சுட்டு

இங்க ஏறீட்டு வந்தியாளே? நிமுசம் நிக்கப்புடாது எம்பட வாசல்ல!

போயி நீயும் ஒருத்தனை இழுத்துட்டு கங்காணாத ஊருக்கு ஓடீரு!

000

If there are images in this attachment, they will not be displayed. Download the original attachment
-பாத்தியா திரும்பத் திரும்ப

நீ அங்கியே வந்து நிக்கறே!

-உலவ வாழ்க்கையே அங்கதான்மா

இருக்குது! அங்க வந்து நிக்காம

எங்க போயி நிப்பேன்?

-எல்லாரும் நீயும் ஒன்னா அப்ப?

-எல்லாரு மாதிரி தா இருக்கோணு

அப்ப உனுக்கு புடிக்கிலியா?

-பாத்தியா இப்பத்தான சொன்னேன்..

மறி வேதாளம் முருங்கெ

மரம் ஏறுது பாரு!

000

போனு பண்ண மாட்டியா?

நாங் கூப்புட்டாலும் எடுக்கறதேயில்ல!

நீ எப்பயும் கூப்புடறதே இல்ல!

இனிமே நாம கட் பண்ணிக்கலானு

சொல்லீறலாம்னு தா தோணுது!

அப்பிடி நா சொல்லீட்டா

என்னடா பண்ணுவே? அழுவியா?

எனக்கு தெரியு.. நீயாவுது அழுவுறதாவுது?

உட்டுது சனியின்னு போயிடுவே தானே?

போனு பண்ணித் தொலையிடா

கருமம் புடிச்சவனே! சாவடிக்கிறீடா!

000

-அப்பிடியே இது வழியா வந்தா

ஒரு எட்டு வீட்டுக்கு வந்துட்டு

போறது தானுங்கொ? ரோட்டுல

பாத்தாக்கூட மூஞ்சிய திலுப்பீட்டு

போயிடறீங்கொ? அப்புடி நானு

என்ன பண்ணிப் போட்டேன்னு

இப்புடியே பண்றீங்கொ?

முத்தங் குடுத்தது ஒரு தப்பா?

எப்பிடித்தா உலவத்துல இனி

நீங்கொ கலியாணம் பண்டி

மத்தவீக மாறி பொழைக்கப்

போறீங்கன்னு தெரியில எனக்கு!

சரி போச்சாது உடுங்கொ! வந்தா

ஒரு எட்டு நம்மூட்டுக்கு அவுரு

நைட்டு சிப்ட்டு போன நாள்ல வாங்கொ!

000

மேக்கால ஊட்டுல அந்த சுப்புரமணின்னு

ஒருத்தன் இருக்கானுங்கள்லோ! -அட

தெரியாத மாரியே பாப்பீங்கொ முழிச்சுட்டு!

அதானுங்கொ கோயலன்னிக்கி கூட மஞ்சத் தண்ணி

எம்பட மேல ஊத்தீட்டான்னு சொன்னன்லொ!

எப்போப் பாருங்கொ நானு தண்ணிக்கி

சேந்து கெணத்துக்கு போறப்ப எல்லாம்

என்னைய தின்னு போடறாப்லயே பாக்கானுங்கொ!

போயி நாலு மிதி அவனை மிதியுங்கொ!

சண்டையானாப் போச்சாது! உலவத்துலயே

இவந்தா பெரிய மம்மதக் குஞ்சுன்னு

நெனப்பு அவுனுக்கு இருக்குமாட்ட!

சொல்லச் சொல்ல காதுல போட்டுக்காம

போறதப்பாரு இது? இது கிட்டப் போயி

நாஞ் சொன்னம் பாரு! ஏலே! இன்னுமாளே

தண்ணி வாக்கே? ஸ்கூலுக்கு அப்பலையாவே

அததுக போயிருச்சு.. வா சீக்கிரம்!

000

If there are images in this attachment, they will not be displayed. Download the original attachment
-ஏய் சொல்லுப்பா!

வெளையாட்டுக்குத்தானே அப்பிடிச் சொன்னே?

எனக்கு அப்பும் தெரியும்

நீ சும்மா நாச்சிக்கித்தான் சொல்லீருப்பீன்னு!

வேற யாராச்சிம் எங்கிட்ட அப்பிடிச்

சொல்லீருந்தாங்கன்னு வச்சுக்கோ ஒரு பேச்சிக்கி..

அப்பிடியே வாயை கைய வுட்டு கிழிச்சிருப்பேன் தெரியுமா?

என்னையப் பாத்தா அப்பிடியான ஆளு

மாதிரியா தெரியுது?

இப்பச் சொல்லு நீ.. வெளையாட்டுக்குத்தான

அப்பிடிச் சொன்னே?

000

-அதென்னளே எப்பப் பாரு ஆளைக் கண்டா

வெடுக்குனு கொக்காணி காட்டுறாப்ல

என்னமோ பண்டீட்டே போறே?

பக்கத்து ஊட்டுக்காரின்னு ஒரு மருவாதிய

நாங்க தர்றோம்ல! நீ என்னுமோ நெப்டியூனுல

இருந்து நேரா எறங்கிவந்த எலியன் மாதிரி

என்னெக் கண்டெப்பெல்லாம் பண்டிக் காட்டுறே?

உம் புருசன் நோர்வேல வேல செஞ்சா எனக்கு

என்னாடி வந்துச்சு? உம்பிள்ளைக சுவீடன்ல

படிச்சா எனக்கு என்னாளே வந்துச்சு?

காசே இல்ல ஒரு ஐநூறு ரூவா குடுளே..

எம்பிருசன் சம்பளம் வந்ததீம் குடுத்துடறேன்னு

எவ்ளோ மருவாதியாக் கேட்டேன் உங்கிட்டே!

அதுக்கென்னமோ அப்பிடி ப்ளடி பெக்கர்ஸ்னு

சொல்றே? இல்லீன்னா இல்லைன்னு சொல்லு! வெறுஞ் சட்டி

தான் ஊட்டுல இருக்குதுன்னு சொல்லு!

நாங் கஞ்சி காச்சிக் கொண்டாந்து ஊத்துறேன்! எம்பட

டைகரை கட்டி வச்சி தான சோறு ஊத்துறேன்!

அது மாரி நெனச்சுட்டு போறேன்! ஆளும் அவ சூட்டும்!

ஏண்டி இருக்கியா ஊட்டுல? வெளிய வாடி மொத!

இன்னிக்கி நீயா நானான்னு பாத்துடலாம்? துளி

உம்பட மண்டையில ஒட்டீட்டு இருக்குற மசுத்தையும்

இணுங்கிப் போடறேன் இணுங்கி இன்னிக்கி!

சாமீ! பள்ளியோடத்துல இருந்து வந்துட்டியா?

மூஞ்சியப் பட்டீல கழுவீட்டு போயி

உக்கோந்து பஜ்ஜி தின்னு சாமி! அம்மா உனுக்கு

பஜ்ஜி சுட்டு தட்டத்துல மூடி வெச்சிருக்கேன்!

நானு சித்த நேரம் அவொ கூட சண்டெக் கட்டீட்டு வர்றேன்!

000

வேலணையூர்-தாஸ் கவிதைகள் ( அறிமுகப் படைப்பாளி ) இலங்கை

Stitched Panorama

கடலினைக்கீறுதல்
—-

கடலினை கீறத்தொடங்குகிறேன்
நீலத்தில் தோய்ந்தெழுகிறது துாரிகை
கரையில் இருந்து தொடங்குவதா! நடுக்கடலில்ஆரம்பிப்பதா!
முடிவில்இருந்து தொடங்குவதா
கடலின் முடிவென்பது இன்னொரு கரையா
கரையிலே நிற்கிற என்னை கட்டி இழுக்கிறது அலை
நீலமாய் எழுகிற நீர் தலையில் வெள்ளைப்பூவாய் அலை
ம் நான் கீற தொடங்கிவிட்டேன்
நீலமாய் தொடங்கிய கடல் பச்சையாகி கறுக்கிறது
கடலை கீறுவதற்கு கரையும் வானமும் அலைகளும் சில நட்சத்திரங்களும் போதுமென்றிருந்தேன்
கீற கீற விரிகிறது கடல்

கணநேரமும் அமைதின்றி ஆடுகிற அசைவை
கரை மணலை தழுவி தழுவி மீளும் ஒயாச் செயல் முறையை
அது மடியில் தாங்கியிருக்கும் கோடி உயிரின் புதிர் வாழ்வை
இரவில் அதன்அழகை பகலில் அதன் ஜொலிப்பை
எல்லையயாய் விரிகிற வானின் பேரழகை
கீற கீற விரிகிறது கடல்

கடலின் தனிமையை தவிப்பை மகிழ்வை
கொத்தளிப்பை அழுகையை கீறுகிறேன்
தற்கொலை செய்தோர் கனவுகளை
அவர்தம் இறுதிப் பெருமுச்சை
வரைகிறே ன்
அமைதியாய் இருக்கிறது கடல்

போர்க்கடலில் வெடித்து சிதறிய வீரர்
முகத்தில் இருந்த விடுதலையை கீற தொடங்குகிறேன்
மூசி எழுகிறது கடல்
நான் மூழ்கிக்கொண்டிருக்கிறேன்.

•••••••••

அம்மாப்பூனை.

—–

மியா மியா அந்த பூனைதான் கத்துகிறது

இப்போதெல்லாம் இந்த பூனை கத்தம் போது

மனம் பரபரக்கிறது

மியா மியா என்பது நிலா நிலா என

அம்மா அழைப்பது போலிருக்கிறது

அம்மா இறந்து நான்கு வருடங்களாகி விட்டது

அண்மையில் நினைவு தினம் வேறுவருகிறது

இப்போது இந்த பூனை

என்னை மிகவும் பாதிக்கிறது.

மனிதர்க்கு மறுபிறவிகள் உண்டாமே

சில வேளை இந்த பூனை அம்மாவாக இருக்குமோ

மியா மியா—— நிலா நிலா பூனை கத்தியபடி

வருகிறது அம்மா இருந்த அறையில் இருந்து

நான் கவனமாக பார்க்கிறேன்

அதன் கண்களில் தெரிவது

அம்மாவின் வாஞ்சையா

நேற்றும் நான் துாங்க ஆரம்பிக்கம் போது

மியா மியா நிலா-நிலா

கத்திகொணடே வந்ததது

அம்மாவும் இப்படித்தான்

நான் துாங்க ஆரம்பிக்கிற வேளையில் கூப்பிடுவா

அப்படி இருக்குமா அம்மாதான் இந்த பூனையா

மனம் பதைக்கிறது அப்படியானால்

இந்த குளிரிலே வெளித்திண்ணையில் தானே

இரவு முழுதும் கிடந்தது

நேற்று சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது

ஒடி வர அகப்பையால் அடித்தேனே

நான் அம்மாவை அடித்தேனா

இப்போது தெற்குவாசல் கதவருகில்

போய் இருக்கிறது பூனை

அம்“மாவும் அனேக நேரங்களில் அங்குதான் இருப்பாள்

அப்படியானால் இது அம்மாவா–

அம்மா அன்பானவள் மிகவும் நல்லவள்

ஏன் மயிலாக புறாவாக அல்லது எனது மகளாக

பிறந்திருக்ககூடாது

இது பிரமை நான் இவ்வளவு படித்தும் வீணாக குழம்புகிறேன்

மனதைதேற்றிக்கொண்டு

வேலைக்கு செல்ல படிகளில் இறங்குகிறேன்

வாசலில் போய் நிற்கிறது பூனை

அம்மாவம் இப்படிதான் நான் வேலைக்கு போகுகும்போது

வாசலில் சென்று சகுனம் பார்ப்பா….

அம்மா நீ———

•••••••••••••

கரடிப்பொம்மை

—–

சுகி ஒரு கரடிப்பொம்மை வாங்கி வந்தாள்

அதனுடைய மென்மையும் அழகும்

கைகளுக்கு வந்தவுடன் ஏனோ ஒரு

தாய்மையின் உணர்வை தொற்ற வைக்கிறது

அதை எடுத்த அணைத்து கொள்ள வேண்டும் போல் இருக்கிறது

தலையை தடவிக்கொடுக்கிறேன்

கன்னங்களோடு சேரத்துக்கொள்கிறேன்

அதை ஏனோ சடமான பொருளாக எண்ணத்தோன்றவில்லை

உணர்வு ரீதியான பிணைப்பு எப்படி இது எற்படுகிறது

அதன்வடிவம் மென்மையாக செய்யப்ட்ட விதம்

எமது குழந்தைமைகளை மீட்டுவிடுகிறதா

நாம் எமது குழந்தைகள் மேல் செலுத்திய

அன்பு இன்னும் மீதமாய் இருக்கிறதா

அன்பு என்பது என்ன அது உயிர்கள் மேல்

மட்டும் தான் தோன்றுமா

அன்பு என்பது நமது எண்ணங்கள் தானா

இப்போது கரடிபொம்மை தவறி விழுந்’து விடுகிறது

பதறி எடுகி’க்கிறேன் தலை தடவுகிறேன்

”கரடிகுக்கு நோகுதா” கேட்கிறேன்

”நீங்க சுகியிடம் போகாதேங்கோ

என்னோட இருங்கோ” கொஞ்சுகிறேன்

அதை கரடி என்றுசொல்ல மனது சங்கடப் படுகிறது

கரடியை கரடி என்று சொல்லாமல்

வேறு எப்படிச்சொல்வதாம்

இரவு சுகியின் அறையை கடந்து போகுகும்போது பார்க்கிறேன்

கரடியை கட்டி பிடித்தபடி சுகி துாங்கிகொண்டிருக்கிறாள் .—-

•••••••••••

கதைகதையாம் /10 மரத்தில் மறையும் யானை: – அ.ராமசாமி

download (7)

ஒன்றை இன்னொன்றாக ஆக்குவது உருவாக்குபவரது வேலை. எதை உருவாக்குகிறோம் என்ற உணர்வோடு தொடங்கினாலும் இன்னொன்றின் அடிப்படைக்கூறுகளின் மீது ஏற்படும் தற்காலிக விருப்பம் உருவாக்கியதை இன்னொன்றுபோலக் காட்டிவிடும். சாதாரண மனிதர்கள் ஒவ்வொருவரும் அதைச் செய்து பார்த்தவர்கள் தான். நிதானமான ஒருநாளில் அல்லது கொண்டாட்ட மனநிலையில் தன் மகளை மகனாக ஆக்கிப் பார்க்க விரும்பும் அம்மா, அரைக்கால் சட்டையொன்றை அணிவித்து கையில் ஒரு தடியைக் கொடுத்து விரைப்பாக நடக்கச் சொல்வாள். அந்த நாளின் நினைவு மறையாத அந்தப் பெண் பின்னாளில் ஆண்களுக்கான வேலைகள் என நினைக்கும் காவல்துறை, ஓட்டுநர்கள் போன்ற பணிகளை மேற்கொள்ளும்போது நினைவுபடுத்துவதுண்டு.உண்மையில் அப்படியான வேலைகள் இல்லை. அதன் மறுதலையாக ஆண் பிள்ளைகளுக்கு பொட்டுவைத்துப் பெண்ணாக்கிப் பார்ப்பதுமுண்டு.

ஆக்கிப் பார்க்கும் வேலையை எழுத்தாளர்களும் செய்கிறார்கள். கதையைக் கவிதையாக்குவதும், நாடகத்தைக் கவிதையில் எழுதுவதும் அப்படி நடப்பதுதான். ஒன்றின் அடிப்படை அடையாளத்தை இன்னொன்றிற்குள் வைப்பதன் மூலம் அதனைச் செய்துவிட முடியும். கவிதையின் அடிப்படை வெளிப்பாட்டுக் கூறு ஒலி இடைவெளி. கவிதை மரபானாலும் புதுசானாலும் ஒருவித ஒலியிடைவெளியை – இசைரூபத்தைக் கொண்டதாகவே இருக்கிறது. அதேபோல கதையின் அடிப்படைக் கூறு சொல்லுதல். நாடகத்தின் அடிப்படைக்கூறு உரையாடல். சொல்லுதலை முதன்மையாகக் கொண்ட கதையில் உரையாடலை வெளிப்பாட்டுக் கருவியாக ஆக்குகின்ற போது நாடகக் கதையாகத் தோன்றுவதைத் தவிர்க்கமுடியாது. இந்தமாதக் காலச்சுவடில் வந்துள்ள அ.முத்துலிங்கத்தின் கதை அப்படி ஆகியிருக்கிறது.

சாதாரண உரையாடல், நாடகத்தின் உரையாடலாக மாற்றுவது இரண்டு கதாபாத்திரங்களின் முரண்பாட்டு நிலை தான். முரண்பாட்டு அடையாளம் நாடகத்தில் பலவிதமாக உருவாக்கப்படும். மேடையைப் பற்றிய விவரிப்பாகத் தரப்படும் [ ] அடைப்புக்குறி விவரணையேகூட அந்த முரண்பாட்டை உண்டாக்கிவிடும். தேர்ந்த நாடக ஆசிரியர்கள் நாடகத்தொடக்கத்தின் விவரணையில் அதைச் செய்திருப்பதை வாசித்திருக்கிறேன். அ.முத்துலிங்கமும் தேர்ந்த நாடக எழுத்தாளரைப் போல விவரணக்காட்சி ஒன்றைத் தருகிறார் என்று சொல்ல நினைத்தேன். ஆனால் அவரது கதைத் தலைப்பே முரண்பாட்டை முன்வைக்கும் வேலையைச் செய்கிறது பிறகு புரிந்தது. தலைப்பு: சிப்பாயும் போராளியும் ( காலச்சுவடு, டிசம்பர், 2015, பக்.39-45).

”ராணுவவீரன் போராளியின் தலையில் குறிவைத்துக் கைத்துப்பாக்கியின் விசையை இழுத்தான். அது வெடிக்கவில்லை. பின்னுக்குக் கைகள் கட்டப்பட்ட நிலையில் போராளி முழங்கால் இட்டிருந்தான்”
என்று தொடங்கி நீண்டதொரு உரையாடலாய் விரிகிறது அ.முத்துலிங்கத்தின் கதை. அங்கிருந்து ஆரம்பிக்கும் உரையாடல் முதலில் எதிரி என்பதிலிருந்து நகர்ந்து இணக்கம் கொண்டவர்களாக மாறப்போகும் ஓர் உச்சநிலையை நோக்கி நகர்கிறது. அந்நகர்வின் பகுதியை மட்டும் இங்கே வாசிக்கலாம்.

’நீ என் எதிரி. உன்னை எப்படி நான் கருணையுடன் பார்ப்பேன்?’

‘ ஏன் முடியாது. நான் உன்னை என் மகன்போல பார்க்கிறேனே. போகப்போக உன் நடை, பாவனை எல்லாம் என் மகனையே நினைவூட்டுகின்றன. அதுசரி. உன் காதலியின் பெயர் என்ன சொன்னாய்?

‘நான் சொல்லவில்லையே, என் பெயரே உனக்குத் தெரியாது. காதலி பெயரை எப்படி சொல்லியிருப்பேன்’

‘சரி, உன் காதலியின் பெயரைச் சொல்’

‘ இன்னும் சில நிமிடங்களில் சாகப்போகிறாய். என் காதலியின் பெயரைத் தெரிந்து என்ன பிரயோசனம்? சரி பரவாயில்லை. உனக்கு ஒன்று சொல்வேன். என் பெயரை மாற்றிப்போட்டால் காதலியின் பெயர் வந்துவிடும். இந்தப் புதிரை உடைக்க முயற்சித்தபடியே நீ இறந்துபோகலாம்..ஆ.. விசை சரிவந்து விட்டது’.

’சரி. சரி மகனே. மகிழ்ச்சி. மகிழ்ச்சி. நான் உன்னை மகனே என்று அழைக்கலாமா?

‘ அழை. அதனால் ஒரு மாற்றமும் வந்துவிடாது. நான் உன்னை அப்பா என்று அழைக்கவேண்டும் என்று எதிர்பார்க்காதே. சீக்கிரம். உன் ஆசையைச் சொல்.

கதை மொத்தமும் உரையாடல் தான். ஒருவேலை போராளியின் அன்பான பேச்சில் மயங்கி, சிப்பாய்க்குள் இருக்கும் கருணைமனம் உயிர்பெற்றுவிடுமோ என நினைக்கும்போது எதிர்பார்ப்பைக் குலைத்து எதிர்முடிவு வைக்கிறார். முடிவு இப்படி இருக்கிறது:

‘ பேசாதே. பேசாதே. பேசாதே.’

‘ஏன் உன் கைநடுங்குகிறது. பதறாதே. என் கண்களைப் பார். துப்பாக்கியின் குறி எங்கேயெல்லாமோ அலைகிறது. என் நெஞ்சுக்கு நேராகப் பிடித்துச் சுடு. மறுபடி வேலை செய்யவில்லையா? விசையை இழு.

‘ ஆ. பறிக்காதே! என் துப்பாக்கியை தா. துப்பாக்கியைத் தா. என்னை சுட்டுவிட்டாயே அப்பா’

‘ முட்டாளே என் மனைவியின் தலைமுடியை நான் வாரவேண்டும். நீ என் மகனா? செத்துப் போ. இது போர்”

தொடக்கம், வளர்ச்சி, உச்சம், எதிர்நிலை முடிவு எனக் கச்சிதமாக அமையக்கூடிய ஓரங்க நாடகம். இப்போதுள்ள வடிவமே கூட இயக்குநருக்கு உதவும் ஒரு நிகழ்த்துப்பிரதியாகவே இருக்கிறது.
நாடக எழுத்துக்குத் தமிழ் இதழ்களில் அதிகம் இடமில்லை என்பதால் சிறுகதை என்று அனுப்பியிருக்கிறார் அ.முத்துலிங்கம் என்றே தோன்றுகிறது. சிறுகதை என்றால் வாசிப்பவர்கள் கூட நாடகம் என்றால் வாசிக்காமல் விலகிப்போய்விடுவார்கள் என்பதுதான் தமிழ் வாசிப்பு மனநிலை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். நாடகங்களைத் தேடிப்படிக்கும் எனக்கு அ.முத்துலிங்கம் நாடகத்தைச் சிறுகதையாக ஆக்கியிருக்கிறார் என்றே தோன்றியது.
((((((((((((())))))))))))))))))

குமரகுரு கவிதைகள்

download (1)

வறண்ட காலமும், இல்லா நீரும்…

இரண்டு கரைகளுக்கும் நடுவில்

இல்லாமல் போன ஆறு

எங்கே போய் இருக்கும்

இந்த வறண்ட காலத்தில்

***

நீர் பறவையே!

நீ வலசைக்கு எங்கே சென்றாய் ?

வரும்போது உந்தன் நீர் குஞ்சுகளையும் சுமந்து வா!

கருணையற்ற நாங்கள்

உன் நீர் குஞ்சுகளையும் உறிஞ்ச வேண்டும்…

****

வற்றி போன ஆற்றை போல

வற்றிய வயிறுகளை சுமந்திருக்கும்

குழந்தைகளிடம் நிரம்பி கிடக்கிறது

வற்றாத கண்ணீர்…

*****

இல்லா நீரை குடித்து கொண்டிருக்கிறது

வெயில்

அதன் கொடிய நாவால் உரியப்படுகிற

மரங்களின் பசியத்தின் ஈரம் உலர்ந்து

காணலாக தெறித்து கிடக்கிறது எங்கும்

பசிக்கும் பொழுதுகளில் மட்டும் சாப்பிட பழகு வெயிலே!

****

வெடித்த நிலங்கள்தான் இந்த வறண்ட காலத்தின்

பாதம்

அது நடந்து போகும் வழியேதான் நீரும்

சென்றிருக்குமோ?

*****

ஆற்றின் நடுவில் படுத்து கிடக்கிறேன்

இல்லாநீர் என் மீது தவழ்ந்து போகிறது

அதன் சில்லிட்ட ஈரத்தின் மீது

கைகளால் சலசலக்கிற உதிர்ந்த இலை

இப்போது தூசுகளின் நடுவில் கிடக்கிறது

நொறுங்கிடும் சருகாக!

*****

அனல் நிறைந்த காற்று அலைந்து கொண்டிருக்கும்

சுடு நாளில்

வெயில் விரட்ட நடந்து கொண்டிருக்கும்

பைத்தியக்கார முதியோன்

நடக்க முடியாமல் உயிரை இழுத்து வருகிறான்…

அவன் பிழியும் வியர்வை ஈரம்

குடிநீராகும் எறும்புக்கு….

***

மூடியிருக்கும் ஊற்றுக்குள்ளிருந்து

ஈசல் போல் நீர் பறக்காதா

என்று ஏங்கி காத்திருக்கிறார்கள் பல்லியைப் போல்

******
\
நீரின்றி அமையாது உலகு!

நீரற்று கிடக்கும் இவ்வரண்ட காலத்தின்

வசந்த கால நினைவுகளில்

இருக்கிறது சேமிக்கப்படாத தண்ணீர்.

நீரின்றி அமையாது உலகு!

************