Tag: இஸ்மத் சுக்தாய்

மரணம் நோக்கியதொரு பயணத்தில் ….! ( சிறுகதை ) / விஜயபத்மா .ஜி

ஜி. விஜயபத்மா

ஜி. விஜயபத்மா

நார்த் கரோலினா அருகில் உள்ள சார்லோட் நகரில் இருக்கும் முதியவர்களுக்கான வசிப்பிடத்தில் சுமார் 50 முதியவர்கள் வாழ்ந்து வருகிறார்கள் . சமூகத்தில் பெரிய வேலைகளில் இருந்து ஓய்வு பெற்ற அதிகாரிகள் , வசதியான மேல்தட்டு மக்கள் வசிக்கும் முதியோர் இல்லம் அது .

மூப்பு முதிர்ந்து மரணத்தை வரவேற்கும் மனதோடு வாழ்ந்து வரும் , அந்த முதியவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் அங்கு செய்யப் பட்டு இருந்தது .எந்த நேரத்தில் விருப்பப் பட்டாலும் நகரில் உள்ள பெரிய மால்களுக்கு அழைத்து செல்ல வாகன வசதி , மருத்துவ வசதி , எல்லா விதமான உடற்பயிற்சி கருவிகள் நிறைந்த உடற்பயிற்சி கூடம் தனியறை , பிரிட்ஜ் , மைக்ரோ ஓவன் டீ கெட்டில் போன்ற அத்தியாவசிய பொருட்களுடன் கூடிய சிறிய சமையல் வசதியுடன் ,கூடிய வசிப்பிடம் ,, உதவிக்கு வேலையாட்கள் என கவலையின்றி முதியவர்கள் வாழ வசதிகளுக்கு குறைவில்லாது பெரிய நிலப்பரப்பில் அமைக்கப் பட்டு இருந்தது. அங்கு வாழும் முதியவர்கள் அனைவருக்கும் துணி துவைத்து , சலவை செய்து கொடுக்க உதவியாளர்களுடன் அமைப்பும் ஏற்படுத்த பட்டு இருந்தது . . இங்கு வாழும் பெற்றோர்கள் குறித்து அவர்கள் குழந்தைகள் ஒருபோதும் கவலைப்படுவதில்லை .

குழந்தைகளுடன் ஒன்றாக வயதான காலத்தில் வாழ்ந்து கொண்டு , தங்களது சுதந்திரங்களை தொலைத்துக் கொண்டு வாழ இங்கு வாழும் முதிய பெற்றோர்களும் விரும்புவதில்லை . என்ன முற்போக்கு சிந்தனையுடைய பெரியவர்களானாலும் “தலைமுறை இடைவெளியை “சமாளிப்பது பெரிய நடைமுறை சிக்கல் என்பதை உணர்ந்து இருந்தார்கள் எனவே தங்களது குழந்தைகளுக்கு சிரமம் கொடுக்காமல் , அதே சமயம் மிச்சமிருக்கும் சொச்ச வாழ்வையும் , தங்களது விருப்பபடி சுதந்திரமாய் வாழ்வதையே இவர்க்ளும் விரும்பி வாழ்கிறார்கள் . எனவே இந்த முதியோர் இல்லம் எப்பொழுதும் கலகலப்பாகவும் மகிழ்ச்சி நிறைந்ததாகவும் இருக்கும் .

அங்கு வசிப்போர் அனைவரும் காலையில் உடற்பயிற்சி , நடைப்பயிற்சி தியானம் எல்லாம் முடித்து விட்டு , அலுவலகத்திற்கு போவது போல் , நேர்த்தியாக உடையணிந்து சாப்பிட்டு மேஜைக்கு வருவார்கள் . அவர்களின் உடையில் , மிடுக்கும் , பணக்காரத்தனமும் மின்னும் . ஆனால் இவர்களுடன் ஒட்டாமல் எப்பொழுதும் தனிமையில் பூங்காவில் உட்கார்ந்து , குருவிகளுடன் பேசிக் கொண்டு இருப்பது , இல்லையென்றால் வராந்தாவில் ஏதோ சிந்தனையில் அங்கும் இங்கும் நடப்பது என தன் உலகத்தில் தனியே சஞ்சாரித்துக் கொண்டு இருப்பவர் பெர்னி டெக் வொர்த் மட்டுமே .89 வயதான பெர்னீ மூப்பின் அழுத்தமான பதிவுகளான முகச்சுருக்கங்களுடன் , வழுக்கைத் தலையுடன் குள்ளமாக இருப்பார் .அவர் உருவத்தை பார்க்கையில் , இவர் கண்ணாடியில் தன் உருவத்தை பார்க்கவே மாட்டாரோ என்றே தோன்றும் .

எப்பொழுதும் கலைந்த தலையுடன் கசங்கிய பேண்ட் மற்றும் வியர்வையுடன் கூடிய சட்டையும் அணிந்து கொண்டு கையில் ஒரு ஊன்று கோலுடன் , தேவையில்லாமல் அங்கும் இங்கும் நடந்து கொண்டு இருப்பார் இரவு சாப்பாட்டு நேரம் வரும் பொது மட்டும் சிறிது முக மலர்ச்சியுடன் காணப்படுவார். இரவு என்பது தனக்கான உலகில் சஞ்சரிக்கும் நேரம் என்று அவர் கருதுவது போலவே தோன்றும் ஏறக்குறைய பத்து வருடங்களாக இந்த முதியோர் இல்லத்தில் பெர்னீ வசித்து வருகிறார். அவருடைய அன்றாட செயல்களில் அன்றில் இருந்து இன்று வரை எந்த மாற்றமும் இல்லை

பெர்னீ , சார்லோட் உளவுத்துறையில் வேலை பார்த்ததாக சொல்வார்கள் . அவர் வேலையின் தன்மை காரணமாகவோ என்னவோ அவர் வாலிப வயதில் கூட யாரிடமும் மனம் விட்டு சிரித்து பேசியதில்லை என்றே அவரைத் தெரிந்தவர்கள் கூறும் தகவல்கள் . அவருடன் ஒன்றாக படித்த பள்ளித் தோழி மெர்லின் மட்டுமே பெர்னீயை புரிந்து கொண்டு தன் காதலை சொல்லி அவரை மணந்து கொண்டாள் . அறுபது வருடம் இருவரும் நிறைவான திருமண வாழ்வை வாழ்ந்தனர் . இந்த தம்பதிகளுக்கு இரு மகன்களும் , ஒரு மகளும் இருக்கிறார்கள்.

பெர்னீ எப்பொழுதும் தனிமை விரும்பி . வீட்டில் குழந்தைகளிடம் கூட அவ்வளவு கலகலப்பாக பேச மாட்டார். எப்பொழுதும் மெர்லினுடன் மட்டுமே பேசுவார் , பெரும்பாலும் அமைதியாக ஏதாவது புத்தகம் படித்துக் கொண்டோ , தோட்டத்தில் உலாவிக் கொண்டோ இருப்பது மட்டுமே அவரது வழக்கம் .

அவரது குழந்தைகளும் , அப்பா எப்பொழுதும் ஏதோ யோசனையுடனேயே இருப்பதால் தங்கள் தேவைகளுக்கு அம்மாவிடம் மட்டுமே செல்வது வழக்கம் . மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு அதிகாலையில் மெர்லின் தூக்கத்திலேயே மாரடைப்பில் இறந்து விட்டார் . அருகில் படுத்து இருக்கும் தனது மனைவி இறந்தது கூட தெரியாமல் வழக்கம் போல தோட்டத்தில் உலாவி விட்டு வந்து , அமைதியாக பேப்பர் பார்க்க அமர்ந்து விட்டார் பெர்னீ. நேரமாகி விட்டதே இன்னமும் அம்மா ஏன் எழுந்திருக்க வில்லை என்று அறைக்குள் சென்று பார்த்த , அவர்களது மூத்த மகன் தான் அம்மா இறந்து விட்டார் என்பதை அறிந்து டாக்டரை அழைத்தான் .

இரவு இரண்டு மணிக்கே உயிர் பிரிந்து விட்டதாக டாகடர் சொல்லி விட்டு சென்றதும் , அதிர்ச்சியில் உறைந்து போய் அழக்கூட மறந்து மவுனமானார் பெர்னீ .. மெர்லின் இனி இந்த உலகில் தன்னுடன் இல்லை என்பதை அவர் மனம் நம்ப மறுத்தது அமைதியாக உறங்குவது போல் படுத்திருந்த , மனைவியின் அருகில் சென்று அமர்ந்து கொண்டு அவள் முகத்தையே பார்த்துக் கொண்டு , தன் கரங்களால் அவள் முகத்தை வருடிக் கொண்டே அமர்ந்து இருந்தார் பெர்னீ .அப்பாவின் இந்த செயல்களால் குழந்தைகள் மூவரும் , கலக்க முற்றனர். அம்மா இல்லாத வாழ்வை அப்பா எப்படி வாழப் போகிறார் என்று அவர்களுக்கு மிகவும் கவலையாக இருந்தது . ஆனால் நல்லவேளை , பெர்னீ வாழ்வின் யதார்த்தத்தை புரிந்து கொண்டார் . அமைதியாகத் தான் இனி என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்தார் தன் பெயரில் இருந்த பெரிய வீட்டை விற்று விட்டு , இந்த முதியோர் இல்லத்திற்கு குடி பெயர்ந்தார்.

ஆனால் பெர்னீ மற்ற முதியோர்களில் இருந்து மாறுபட்டவர். அவருக்கு வால்மார்ட்டில் சென்று தனக்குத் தேவையான ஷேவிங் லோஷன் , ஷாம்பூ ஆகியவற்றை வாங்குவதே மலை ஏறுவது போன்ற சாகச காரியம் என்று நினைப்பார். பெரும்பாலும் அனைவரும் வால்மார்ட் கிளம்பினால் கூடத் தனக்கு தேவையானதை வாங்கி வரச் சொல்லி விடுவார்.

மற்றவர்கள் அவரை கட்டாயப் படுத்தி கூப்பிட்டாலும் , எனக்கு சூப்பர் மார்க்கெட் உள்ளே நடக்க இயலாது என்பார் . நடக்க இயலவில்லை என்றால் சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் தான் மினி வண்டி கொடுக்கிறதே அதில் அமர்ந்து கொண்டு சுற்றி வரலாமே என்று கேட்டால் அதற்கும் ஏதாவது சாக்கு சொல்லி மறுத்து விடுவார்
முதியோர் இல்லத்திற்கு வந்து விட்டாலும் , பெர்னீ மாறவில்லை . யாருடனும் ஓட்ட மாட்டார் . எப்பொழுதும் தனியாகவே நடந்து கொண்டு இருப்பார் . அவருக்கு சிந்தனையில் அவர் வயது மறந்து போய் விட்டிருந்தது .அவரைப் பொறுத்தவரை மெர்லீன் மிகவும் அவசரமாக தன்னை விட்டு போய் விட்டதாக நினைத்தார் . மெர்லீன் குணத்தில் பெர்னீக்கு நேர் எதிர் . மிகவும் கலகலப்பானவர் .

விஜய் பத்மா

விஜய் பத்மா

எப்பொழுதும் அவளைச் சுற்றி நண்பர்கள் கூட்டம் இருந்துக் கொண்டே இருக்கும் . ஒருவரைப் பார்த்த முதல் அறிமுக நொடியிலேயே தனது கலகலப்பான பேச்சால் அவர்களைக் கவர்ந்து தனக்கு நட்பாக்கி கொள்வாள் . அவளுடன் இணைந்து செல்லும் போது கூட பெர்னீ , அமைதியாகவே இருபபார் . அவளுடைய நண்பர்களுடன் இவர் பேச மாட்டார் . அப்படியே இவருக்கு அறிமுகம் செய்து வைத்தாலும் , மறந்து விடுவார். அடுத்த முறை இவரை அவர்கள் பார்த்து அவர்களாகவே அடையாளம் கண்டு பேசினால் தான் உண்டு. .பெரும்பாலும் அடுத்த மனிதர்களுடன் பேசுவதையே தவிர்த்து , தனிமையாக இருப்பதே பெர்னி க்கு பிடித்த ஒன்று .

மவுனமாக மனிதர்களை வேடிக்கை பார்ப்பதே பெர்னீயின் வாடிக்கை மெர்லின் மரணத்திற்கு பிறகு , தன் மரணத்தை ஆவலுடன் எதிர்பார்த்து வாழும் முதியவராக எதிலும் பற்றில்லாமல் , வாழவேண்டுமே என்று வாழ்ந்து வருகிறார் பெர்னீ
மெர்லின் உயிருடன் இருக்கும் போது பெர்னீ அலுவலகத்தில் இருந்து வரும் முன்னரே சாப்பாட்டு மேஜையில் தயாராக உணவு இருக்கும் . அவர் சாப்பிடும் போது அருகில் அமர்ந்து , அவருக்கு தேவையானவைகளை கொடுத்து உபசரித்து , அவர் தூங்கும் வரை விழித்திருந்து உறங்குவாள் மெர்லீன் . அவள் உயிருடன் இருந்தபோது இது ஒரு மனைவியின் கடமை என்று நினைத்து இருந்த பெர்னீ , இன்று ஊன்று கோலுடன் சாப்பாட்டு மேஜைக்கு வரும்போது , உணவை பார்த்தாலே , மெர்லின் பரிமாறியது உணவல்ல ‘அன்பு’ என்று உள்மனம் சொல்ல கண் கலங்குவார் .

ஒவ்வொரு நாளும் கண்கலங்கி உணவு உண்ணும் அவரை ஏன் இப்படி கலங்குகிறீர்கள் என்று அந்த இல்லத்தில் வாழ்ந்த சக முதியோர்கள் ஒருபோதும் கேட்டதில்லை . அவரவர்க்கு அவரவர் வாழ்வும் , அருகி வரும் மரணமும் குறித்த கவலையில் ,பெர்னீயின் கண்ணீர் குறித்த அக்கறையை அவர்களை வெளிப்படுத்துவது இல்லை . அது மட்டும் கூட காரணமாக இருக்க முடியாது . ஒவ்வொரு வேளை உணவின்போதும் கலங்குவது பெர்னீயின் வழக்கம் எனும் போது அதை அவரது குணம் என்று அதற்கு முக்கியத்துவம் இல்லாது போயிற்று என்றும் கூறலாம் . பெர்னீயை அவருடன் வசிக்கும் சக முதிய நண்பர்களால் புரிந்து கொள்ள முடிவதே இல்லை , அவர் சாதாரணமாக யாரிடமும் பேச மாட்டார். பேசும்போது அடுத்தவர்கள் சொல்லும் கருத்தையோ , பதிலையோ காதில் வாங்கி கொள்ள மாட்டார். தனக்கு இன்னமும் வயதாகிவிட வில்லை . மனைவி மெர்லின் மிக விரைவில் காலமாகி விட்டார் என்ற அவரது நம்பிக்கையை யாராலும் மாற்ற முடியவில்லை .

அங்கு வசிக்கும் முதியவர்களில் பாதிபேர் பெர்னீயிடம் பேசுவதையே தவிர்ப்பார்கள் .இவர் நம் பேச்சை காதில் வாங்க மாட்டார் . அவருடன் நமக்கு என்ன பேச்சு என்று அவர்கள் எண்ணம் . ஆனால் பெர்னிக்கோ இவர்கள் எல்லோரும் வாழ்வில் நம்பிக்கை இழந்தவர்கள் . உணர்வில்லாத நரக வாழ்வை வாழ்கிறார்கள் . என் காதல் மனைவியின் நினைவுகளை அவர்களால் ரசிக்க முடியவில்லை .

ஒத்த உணர்வில்லாத , என்னை புரிந்து கொள்ளாத இவர்களுடன் எனக்கென்ன பேச்சு . என்று அமைதியாக அவர்களை கடந்து செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தார். ஆனால் பெர்னீ உளவுத் துறையின் பெரிய அதிகாரியாக வேலை பார்த்தவர் என்றாலும் , மெர்லீனின் அன்பான பாதுகாப்பில் ஒரு குழந்தையைப் போல வாழ்ந்து விட்டார். அவருக்கு மனதிற்கு ஆறுதல் தரும் துணை ஒன்று தேவை பட்டது . மெர்லீன் நீ ஏன் இறந்தாய் ? உனக்கு என் மேல் அக்கறை இல்லை . அக்கறை இருந்து இருந்தால் நீ என்னை விட்டு போயிருக்க மாட்டாய் என்ற அவரது தனிமைப் புலம்பல் காற்றில் கரைந்து போனது .

அவரது அன்பிற்கான ஏக்கம் , தொட்டத்து குருவிகளும் , காற்றும் மட்டுமே அறிந்தது . மற்றவர்களுக்கு அவர் இன்னமும் தன்னை ஆபீசர் என்று நினைத்துக் கொண்டு அந்த திமிரிலேயே இருக்கிறார் என்பதே அவரைக் குறித்த மதிப்பீடு .
அந்த முதியோர் இல்லத்திற்கு , ஜேக் என்பவர் புளோரிடாவில் இருந்தும் , பிராம்டனில் இருந்து ஹெலனும் புதிய வரவாக வந்தனர். இதில் ஜேக் அப்படியே பெர்னீ போல் , யார் பேசுவதையும் காது கொடுத்து கேட்க மாட்டார் . தான் சொல்வதே சரி என்று வாதிடுவார் . ஹெலன் தன்னை சுற்றிய சூழல் எப்பொழுதும் அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காக போராடுவாள் . அது என்ன மாயமோ , பெர்னீக்கு இவர்கள் இருவரையும் பிடித்து போயிற்று . இந்த மூவரும் எப்பொழுதும் ஒன்றாக திரிவதை வழக்கமாக கொண்டனர்.இவர்கள் சாப்பிட வருமுன் தாங்கள் சாப்பிட்டு விட்டு சென்று விட வேண்டும் என்று மற்ற முதியவர்கள் அவசரமாக சாப்பிட்டு சென்று விடுவார்கள் . ஏனெனில் சாப்பிடும் போது ஏதாவது கருத்தை பெர்னீ முன் வைப்பதும் , அதை கொஞ்சம் கூட ஏற்று கொள்ளாமல் ஜேக் பேசுவதும் , இருவருக்கு இடையில் வார்த்தை தடித்து சண்டையாகி விடக் கூடாது என்று ஹெலன் தன் குரலை உயர்த்தி கத்தி பேசி இருவரையும் அடக்குவது வாடிக்கையானது .

இவர்களுக்குள் தர்க்கம் ஏற்படும் போது ஏதோ மார்க்கெட் உள்ளே இருப்பது போல் ஒரே கூச்சலும் , குழப்பமுமாக இருக்கும் .மற்றவர்கள் தெறித்து ஓடி விடுவார்கள்
அன்றும் அப்படித்தான் ஜேக் , பெர்னீயிடம் “நீங்கள் நல்ல ஆரோக்கியமாகத் தானே இருக்கிறீர்கள் ? பின் ஏன் எப்பொழுதும் ஒரு ஊன்று கொலை கையில் பிடித்து கொண்டு நடக்கிறீர்கள் ? தினமும் எங்களுடன் நடை பயிற்சி செய்யலாமே , முடிந்த அளவில் உடற் பயிற்சி செய்யலாமே என்றார் அதற்கு பெர்னீ , “நீண்ட காலம் வாழ விருப்பம் உள்ளவர்கள் செய்யும் வேலை அது . எனக்கு அது தேவையில்லை .

எனக்கு சீக்கிரம் வயதாகி நான் இறப்பதையே விரும்புகிறேன் . அதனால் தான் என் உடைகளில் கூட நான் கவனம் செலுத்துவது இல்லை” என்றார். அதற்கு ஹெலன் ,’ எல்லோரும் மரணத்தை நோக்கிய பயணத்தில் தான் இருக்கிறோம் .அதற்காக , இருக்கும் வரை ஆரோக்கியமாக வாழ வேண்டாமா ?” என்கிறாள் . பெர்னீ ” உங்கள் எண்ணங்களை என் மேல் திணிக்க நினைக்காதீர்கள் “ என்று கூறி விட்டு அந்த இடத்தை விட்டு அகன்று விடுகிறார் . சக முதியோர்கள் அவர்களிடம் வந்து,” நாம் எது சொன்னாலும் , அவர் வேறு விதமாகத்தான் சிந்திப்பார் . நாங்கள் எத்தனையோ முறை சொல்லி விட்டோம் . யோகா , உடற்பயிற்சி செய்வது நல்லது என்று அவர் கேட்பதாக இல்லை . அவரை திருத்த முடியாது விட்டு விடுங்கள்” என்று சிரிக்கின்றனர் . ஹெலன் “அது எப்படி முடியும் ? நான் அவரை திருத்தி காண்பிக்கிறேன்” என்று சவால் விடுகிறாள் . ஆனால் அவளால் முடியவில்லை . அன்றைக்கு இரவு சாப்பாட்டு அறைக்கு பெர்னீ வரவில்லை . ஜேக் , ஹெலன் மிகவும் கவலையாகி இல்ல உதவியாளரிடம் கேட்கின்றனர். அதற்கு அவர் , அவருக்கு உடல் நிலை சரியில்லை டாக்டரை பார்த்து விட்டு அறைக்கு சென்று விட்டார் . உணவை அறையிலேயே கொடுத்து விட்டேன் . இந்நேரம் தூங்கி இருப்பார் என்று கூறுகிறார் . ஜேக் , ஹெலன் இருவரும் பெர்னீயை சென்று பார்க்க விரும்பினாலும் , உடல் நிலை சரியில்லாதவரை தொந்தரவு செய்ய விரும்ப வில்லை .

மறுநாள் காலையில் இருவரும் நடைபயிற்சி கூட செல்லாமல் பெர்னீயின் அறைக்கு செல்கின்றனர் . அங்கு பெர்னீ கால், கைகளில் அடிபட்டு கட்டு போடப்பட்ட நிலையில் சோர்வாக இருக்கிறார் “என்ன நடந்தது ? எங்கு விழுந்தீர்கள் ?” என்று இருவரும் பதட்டத்துடன் கேட்க அவர் எதுவும் சொல்லாமல் மவுனமாக இருக்கிறார். அவர் முகத்தில் வெட்கமும் குற்ற உணர்வும் இருக்கிறது . அவர்கள் கேள்விக்கு பதில் சொல்லாமல் , எனக்கு சோர்வாக இருக்கிறது .நான் ஓய்வெடுக்க வேண்டும் என்கிறார் . இருவரும் பதில் பேசாமல் அறையை விட்டு வெளியேறுகின்றனர்.
இருவருக்கும் பெர்னீக்கு என்ன ஆனது என்று தெரிந்து கொள்ளும் ஆவல் இருந்தாலும் , அது எப்படி தெரிந்து கொள்வது என்று புரியவில்லை . இருவரும் பேசிக் கொண்டே உடற்பயிற்சி அறைக்கு சென்றனர். அங்கு ட்ரெட்மில் எனப்படும் நடைப்பயிற்சி சாதனம் பழுது பார்த்து கொண்டு இருக்கின்றனர். ஜேக் அவர்களிடம் “என்ன ஆச்சு ? பழுதாகி விட்டதா ? என்று கேட்க , அங்குள்ள பயிற்சியாளர் “உங்களுக்கு விஷயம் தெரியாதா ?” எனக் கேட்க இருவரும் விழிக்கின்றனர்
.”நேற்று உங்கள் நண்பர் இரகசியமாக வந்து நான் இல்லாத போது நடை பயிற்சி இயந்திரத்தில் ஏறி , விவரம் புரியாமல் , ஏதேதோ பட்டனை அழுத்தி , இயந்திரம் வேகமாக ஓடி , அவர் விழுந்து அடிபட்டு விட்டார். அவர் விழுந்தது கூட பெரிதில்லை . இதை வெளியில் யாரிடமும் சொல்லி விடாதீர்கள் என்று வலியுடன் முனகினார் பாருங்கள் அதுதான் ஹைலைட் . அவருக்கு திடீர்னு என்ன ஆச்சு . உடற்பயிற்சி எல்லாம் ஆரம்பித்து சுமார்ட்டாக முயற்சிக்கிறார் ?” என்று சிரித்தபடியே பயிற்சியாளர் கேட்க இருவருக்கும் நம்பவே முடியவில்லை .

இன்றைக்கு பெர்னீயிடம் விஷயத்தை கேட்காமல் விடுவதில்லை என்று சப்தம் செய்து கொண்டு இருவரும் பதினோரு மணிக்கு பெர்னீயின் அறை நோக்கி செல்கின்றனர். அப்பொழுது சூப்பர் மார்க்கெட் போக விரும்பும் முதியோர்களுக்காக வண்டி புறப்பட தயாராக இருக்கிறது .பெர்னீ மிகவும் ஸ்டைலாக ஓடி வண்டியில் ஏறுகிறார். ஏறும் போது அவர் சிறிது தடுமாற வண்டியில் இருந்து ஒரு கரம் அவரை பிடித்து ஏற்றுகிறது . ஜேக் , ஹெலன் இருவரும் தங்கள் கண்களையே நம்ப இயலாமல் பார்த்து கொண்டு இருக்க வண்டி சென்று விடுகிறது .
இரவு சாப்பிட்டு மேஜையில் ஜேக் , ஹெலன் இருவரும் பெர்னீக்காக காத்து இருக்கின்றனர். பெர்னீ அவர்கள் அருகில் எதுவும் பேசாமல் அமர்கிறார் . ஹெலன் , “பெர்னீ எங்களை கூப்பிட்டு இருந்தால் , உனக்கு நடை பயிற்சிக்கு நாங்கள் உதவி செய்து இருப்போம்ல . ஏன் இப்படி செய்தாய் ? என்று கேட்க அவர் தலை குனிந்தபடியே , “எனக்கு முதல் அனுபவம் அதனால் அந்த பட்டன்கள் சரிவர புரியவில்லை . அடுத்த முறை இந்த தவறு நிகழாது ” என்கிறார் .

“அதுசரி . நீ வால்மார்ட் சென்று பொருட்கள் வாங்க போவதை ஏன் எங்களிடம் சொல்ல வில்லை .நீ எப்பொழுதும் போக மாட்டாய் அல்லவா ? நீ உன் தனிமையை விட்டு எங்களுடன் வெளியில் வர வேண்டும் என்று தானே நாங்களும் விரும்புகிறோம் . அதற்கு தானே இத்தனை நாட்களாக நாங்கள் இருவரும் உன்னிடம் விவாதம் செய்கிறோம் ? ஏன் இப்படி செய்கிறாய் ? நீ எங்களிடம் எதையோ மறைக்கிறாய் ..என்ன அது ?” ஜேக் பெர்னீயிடம் கத்துகிறார் . பெர்னீ பதில் எதுவும் பேசாமல் அமைதியாக சாப்பிடுகிறார் . மூவரும் ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளாமல் , அமைதியாக சாப்பிட்டு விட்டு வராந்தாவில் நடந்து வருகின்றனர்.
அப்பொழுது வராந்தாவில் அழகிய பெண் ஒருத்தி தன் சக்கர நாற்காலியில் அமர்ந்து தோட்டத்தை நோக்கி சென்று கொண்டு இருக்கிறாள் .

அவளது பொன்னிற கூந்தல் காற்றில் பறந்து அவள் கண்களை சுற்றி வட்டமிட , அவள் அவற்றை புறங்கையால் ஒதுக்கி விடுகிறாள் .அவள் கண்கள் நீல நிறத்தில் நிலவொளியில் மின்னுகின்றன. அவளுக்கு சுமார் அறுபது வயது இருக்கலாம் . ஆனால் ஐம்பது வயது பெண்ணிற்கு உரிய வனப்பு அவள் உடலில் இருந்தது . ஒருமுறை பார்த்தால் மீண்டும் பார்க்க தூண்டும் அழகுடன் அவள் இருந்தாள் . இவர்கள் மூவரும் அவளை கடந்து செல்லும் போது பெர்னீயின் முகம் சட்டென்று புத்துணர்ச்சி பெற்று பொலிவாக மாறுவதை ஹெலன் கவனிக்கிறாள் . அவள் ஜேக்கிற்கு ஜாடை காட்ட ஜேக் பெர்னீயின் பரபரப்பை பார்த்து சிரிக்கிறார். ஜேக்கும் ஹெலனும் ஒருவரை ஒருவர் பார்த்து அர்த்தத்துடன் சிரித்து கொள்ள , உலக நினைவையே மறந்து பெர்னீ அந்த பெண்ணை பார்க்கிறார். அந்த பெண்ணும் , பெர்னீயை பார்த்து சிரித்தபடி , “ஹாய் .என்கிறாள் . பெர்னீ உடனே அவள் அருகில் சென்று ” ஹாய் லியோனா நான் உங்களை தோட்டத்திற்கு அழைத்து செல்லவா ? என்று கேட்ட படி , ஜேக்கையும் , ஹெலனையும் பார்த்து , நாளை சந்திக்கலாம் என்று கூறி விட்டு லியோனாவின் சக்கர நாற்காலியை தள்ளி கொண்டு தோட்டத்திற்கு செல்கிறார் .ஜேக்கும் , ஹெலனும் அவரவர் அறைக்கு திரும்பியபின் ஜன்னல் வழியே பார்த்தால் உலக மறந்து பெர்னீயும் , லியோனாவும் ஒருவரை ஒருவர் கட்டி கொண்டு தோட்டத்தின் புல்வெளியில் படுத்துக்கொண்டு நிலவை ரசித்துக் கொண்டு இருந்தனர்.

இருபத்து நாலு மணிநேரமும் நாம் மூவரும் ஒன்றாகத்தானே இருந்தோம் . இது எப்படி நிகழ்ந்தது ? பெர்னீக்கு , லியோனா எப்படி அறிமுகம் ஆனார் ? என்று ஜேக்கும் , ஹெலனும் தங்களுக்குள் விவாதித்து மண்டையை போட்டு உடைத்துக் கொண்டனர். அவர்களுக்கு விடை தெரியவில்லை .ஆனால் ஒன்று மட்டும் அவர்களுக்கு புரிந்தது . எந்த வயதிலும் காதல் மனிதனை வசியப் படுத்தி , இறகை போல் இலேசாக்கி விடுகிறது . அது ஒரு மேஜிக் என்பது
காலையில் சாப்பிட்டு அறைக்கு சுறுசுறுப்பாக , நன்கு சலவை செய்ய பட்ட டிசர்ட் , மற்றும் கசங்காத ஜீன்ஸ் பேண்ட்டும் அணிந்து கொண்டு ஸ்டைலாக பெர்னீ வந்தார். ஜேக்கிடம் ‘வாழ்க்கை மிகவும் அர்த்தமுள்ளது . அது பல அழகிய தருணங்களை உள்ளடக்கியது .” என்கிறார் .ஜேக்கும் , ஹெலனும் தங்களுக்குள் சிரித்துக் கொண்டே , ‘ ஆம் காதல் மிக அற்புதமானது . அது மனிதனுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது . அது ஒரு மேஜிக் ” என்கின்றனர் . பெர்னீ வெட்கத்துடன் தலை குனிந்து சிரிக்கிறார் .